Sunday, August 28, 2022

நம்மை அவர் ஜீவவழியில் நடத்துவார்

 ஆதவன் 🖋️ 580 ⛪ ஆகஸ்ட் 30, 2022 செவ்வாய்க்கிழமை

"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே". (ஏசாயா 48:17)

நம் தேவனாகிய கர்த்தர் வெறுமனே நாம் ஆராதிக்கும் ஒரு உருவமோ உயிரற்றவரோ அல்ல. நம்மிடமிருந்து ஆராதனையையும் புகழ்ச்சியையும் பெறுவதில் குறியாக இருபவரல்ல. மாறாக,  நாம் அவரைப்போல பரிசுத்தராகவும் அவரது சாயலாக மாறவும் நமக்கு உதவுபவர். இன்றைய வசனத்தில் அதனைத்தான் கூறுகின்றார், "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று. 

அவரது வழி நடத்தலுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். மனிதர்களது உபதேசங்கள் கொஞ்சகாலம் கைகொடுக்கலாம். அல்லது மனிதர்கள் வேதாகம வசனங்களுக்கு வெல்வேறு அர்த்தம் சொல்லி நம்மை நம்பவைக்கலாம். ஆனால், கர்த்தரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நம்மை அவர் ஜீவவழியில் நடத்துவார். 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்."( சங்கீதம் 32 : 8 ) என்று வாசிக்கின்றோம். நடக்கவேண்டிய வழியைக் காண்பிப்பதோடு ஆலோசனையும் சொல்வேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.

இஸ்ரவேல் மக்களை தேவன் அக்கினித் தூணினாலும் மேகத் தூணினாலும் வழிநடத்தினார். அந்த அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் அவர்களைச் சரியாக வழிநடத்தியது. அந்த வழி நடத்தலுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து பயணம் செய்ததால் தான் எதிரி ராஜாக்களை முறியடித்து கானான் தேசத்தில் நுழைய முடிந்தது. இதனை நாம் யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கலாம். 

"வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்." ( யாத்திராகமம் 40 : 36, 37 )

ஆம், பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம்  நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தர்  அவரே. இந்த உலகத்தில் வாழ்ந்த பல பரிசுத்தவான்களும் இப்படி தேவ வழிநடத்துதலின்படி நடந்து வாழ்வில் வெற்றிபெற்றவர்கள்தான்.

ஜார்ஜ் முல்லர் எனும் தேவ மனிதனது வாழ்க்கை வரலாற்றினை வாசித்தபோது அவர் எப்படி அனைத்துக் காரியங்களுக்கும் தேவ வழிநடத்துதலை எதிர்பார்த்து வாழ்ந்தார் என்று அறிய வியப்பாக இருந்தது. பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை எந்த உதவியுமின்றி தேவ வழிநடத்துதலின்படி அவர் காப்பாற்றி நடத்தினார். ஒவ்வொரு நாளிலும் தேவனது வழிநடத்துதல் அவரையும் அவரது ஆசிரமத்துக் குழந்தைகளையும் வாழ வைத்தது. 

அன்பானவர்களே, நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறலாம், ஆலயப் பணிகள் செய்ய உழைக்கலாம் ; ஆனால், தேவனோடு நமக்குத் தனிப்பட்ட உறவு இல்லையானால் எல்லாம் வீண்தான். அவரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போதுதான் தேவனது அருகாமையையும் அவர் நம்மை வழிநடத்துவதையும் வாழ்வில் கண்டுணர முடியும். 

"கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி."( நீதிமொழிகள் 6 : 23 ) எனும் வசனத்துக்கிணங்க தேவ கட்டளைகளின்படி வேத வெளிச்சத்தில் நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜீவவழியில் அவர் நம்மை நித்தம் வழி நடத்திடுவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                 

No comments: