Wednesday, November 06, 2024

சிறுமையடையும் சிங்கக்குட்டிகள்

 'ஆதவன்' 💚நவம்பர் 13, 2024. 💚புதன்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,375

"சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது." ( சங்கீதம் 34 : 10 )

உலகத்தில் நமது பலம் செல்வாக்கு இவற்றை நாம் முழுவதுமாக நம்பிவிடாமல் தேவனைச் சார்ந்து வாழவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.  சிங்கம் மிகவும் பலம் வாய்ந்த விலங்கு. காட்டுக்கே அது ராஜா. ஆனால் அப்படி பலமுள்ளதாக இருப்பதால் எப்போதும் அவற்றுக்குத் தேவையான உணவு கிடைத்துவிடுவதில்லை. சிலவேளைகளில் உணவு கிடைக்காமல் அவை அலைந்து திரியும். அவற்றின் குட்டிகளும் பட்டினியால் வாடும். 

இதனையே தாவீது ராஜா கண்டு இன்றைய தியான வசனத்தில்  உவமையாகக் கூறுகின்றார். தனது அனுபவத்தில் கண்டு உணர்ந்ததையே  அவர் கூறுகின்றார். இன்று நாம் பணபலம், அதிகார பலம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் இவற்றையே நிரந்தரம் என நம்பிக்கொண்டு வாழ்வோமானால் இவை அழியும்போது நாம் தாழ்த்தப்பட்டுப்போவோம். ஆம்,  இன்று சிங்கத்தைப்போல வாழ்ந்தாலும் பலமுள்ள சிங்கத்தின் குட்டிகள் பட்டினியால் வாடுவதுபோல வாடிப்போவோம் என்கின்றார். 

ஆனால் நாம் கர்த்தரைத் தேடுபவர்களாக வாழும்போது நமக்கு எந்த நன்மையும் குறைந்துபோகாது. இன்று பல முற்காலத்துத் திரைப்பட பிரபலங்களைக் குறித்து அடிக்கடி பத்திரிகைகளில் நாம் வாசிக்கின்றோம். பெயரும், வசதியும் குறைவில்லாமல் வாழ்ந்திருந்த அவர்கள் இன்று ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வகையற்றவர்களாக இருப்பதை நாம் வாசிக்கின்றோம். மட்டுமல்ல, பல முன்னாள்  பிரபலங்களின்  பிள்ளைகள் இன்று பிச்சையெடுத்துக்கூட வாழ்கின்றனர்.  ஆம், "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது".

தமிழக அமைச்சராக இருந்த ஒருவரது மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வெறும் 5,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலைபார்ப்பதை ஒருமுறை கண்டேன். மட்டுமல்ல, அந்தப் பணத்தையும் குடித்துச்  சீரழித்து நல்ல குடும்ப வாழ்க்கையும் இல்லாமல் இருப்பதைக் கண்டேன். சிங்கத்தின் குட்டிதான்; ஆனால் இன்று தாழ்ச்சியடைந்து விட்டது. 

சக்கரியா தீர்க்கத்தரிசி மூலம் கர்த்தர் நமக்குக் கூறுகின்றார், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 ) என்று. மகனே, மகளே பணம், பதவி போன்ற பலமும் பராக்கிரமுமல்ல, மாறாக கர்த்தரை நம்பி வாழ்வாயானால் அவரது ஆவியினால் உன்னைக் குறைவில்லாமல்  நடத்த முடியும் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

எனவே நாம் இன்று நல்ல நிலையில் சிங்கம்போல இருந்தாலும், நமக்கு பணம், பதவி, செல்வாக்கு மிக இருந்தாலும் நாம் நமது நம்பிக்கையை அவற்றின்மேல் வைத்திடாமல் கர்த்தர்மேல் வைக்கக் கற்றுக்கொள்வோம். அப்படி அவரையே நம்பி வாழ்வோமானால் நமக்கு எந்த நன்மையும் குறைவுபடாமல் அவர் காத்துக்கொவார். மட்டுமல்ல, நமது சந்ததிகளும் ஆசீர்வாதமாக வாழ்வார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

No comments: