இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, November 14, 2024

நாமும் சமாரியர்களைப்போல மாறுவோம்

 'ஆதவன்' 💚நவம்பர் 23, 2024. 💚சனிக்கிழமை              வேதாகமத் தியானம் - எண்:- 1,385


"அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்." ( யோவான் 4 : 42 )

இன்று கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் பொதுவாக இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையே பெரிதாகக் கூறிக்கொண்டு வாழ்கின்றனர். அன்றும் இதுபோலவே அவரதுபின்னே  சென்ற திரளான மக்களில் பலரும் அவர் செய்த அற்புதங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவுமே சென்றனர். எனவே அவர்களில் பலரும் அவரை ஆத்தும இரட்சகராக கண்டுகொள்ள முடியவில்லை. 

ஆனால் இதற்கு மாறாக, அவரது அற்புதங்களையல்ல, அவரது வாயின் வார்த்தைகளை நாம் வாசித்து உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். இப்படியே சமாரியா மக்கள் அவரை உலக இரட்சகராக அறிந்துகொண்டனர். அதனையே அவர்கள் இன்றைய தியான வசனத்தில் "அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்." என அறிக்கையிடுகின்றனர். அதாவது, அற்புதங்களைக் கண்டு அல்ல மாறாக, அவருடைய உபதேசத்தைக் கேட்டு அறிந்துகொண்டோம் என்கின்றனர்.   

யூதர்கள் சமாரியர்களை அற்பமாக, தீண்டத்தகாதவர்களாக எண்ணினார்.  ஆனால் அந்தச் சமாரியர்கள்தான்  இயேசுவின் வார்த்தைகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவரை உலக இரட்சகராகக் கண்டுகொண்டனர். ஆனால் அவரது வல்ல செயல்களைக் கண்டும் அவரது வார்த்தைகளைப் புறக்கணித்த  யூதர்களில் பலரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தன்னை நம்பவேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் வல்ல செயல்கள் பல செய்தார். 

நான் சொல்வதை நம்புங்கள் அல்லது நான் செய்யும் வல்ல செயல்கள் அற்புதங்களைக் கண்டாவது என்னை நம்புங்கள் என்றார் அவர். "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவிடம் அற்புதங்களையும் அதிசயங்களையும் எதிர்பார்த்து அவரிடம் வருவதைவிட அவரது வார்த்தைகளை அறியும் ஆர்வமுள்ளவர்களாகவும் அவற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவர்களுமாகவும் வாழவேண்டியது அவசியம்.  இறுதிநாளில் அவர் தனது வசனத்தின்படியே நியாயம்தீர்ப்பார். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 ) என்றார் இயேசு. 

உலக ஆசீர்வாதங்களைக் கண்டு அனுபவிக்க ஓடிய பெரும்பாலான யூதர்களைப்போல அல்லாமல் அவருடைய உபதேசத்தை கேட்டு அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசித்த சமாரியர்களைப்போல நாமும் மாறவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  அப்போதுதான்  நல்ல சமாரியன் இயேசு என்றும் நம்மோடு இருப்பார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

No comments: