'ஆதவன்' 💚நவம்பர் 11, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,373
"பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்." ( 2 கொரிந்தியர் 7 : 1 )
நமது தேவன் எதிலும் முழுமையை விரும்புகின்றவர். அதனையே இங்கு பூரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவிக்குரிய வாழ்வில் பூரணம் என்பது நாம் தேவனைப்போல பரிசுத்தமாவது. நாம் அதனை நோக்கியே பயணிக்கவேண்டும். அதற்கான வழியாக அப்போஸ்தலரான பவுல், "மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு" என்று குறிப்பிடுகின்றார். அதாவது நாம் உடலளவிலும் ஆத்தும அளவிலும் சுத்தமாக இருக்கவேண்டும்.
உடலளவில் சுத்தம் என்பது கிறிஸ்த வாழ்வில் வெறுமனே தினமும் சோப்புப்போட்டு குளிப்பதைக் குறிப்பிடவில்லை. அப்படி உலகிலுள்ள எல்லோரும் குளிக்கின்றனர். இங்கு மாம்சத்திலுள்ள அழுக்கு நீங்கும் குளியலைக்குறித்துக் கூறப்பட்டுள்ளது. "களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( ரோமர் 13 : 13, 14 ) என்று வாசிக்கின்றோம். முதலில் இத்தகைய அழுக்கு நம்மைத் தாக்காமல் காத்துக்கொள்ளவேண்டும்.
வெறும் ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொள்வது மட்டுமல்ல, உள்ளான மனிதனில் நாம் தூய்மையானவர்களாக வாழவேண்டியது அவசியம். இவை அனைத்தும் நம்மில் செயல்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்து இயேசுவின்மேல் அசைக்கமுடியாத விசுவாசம் இருக்கவேண்டியது அவசியம். அப்படி விசுவாசம் கொண்டு "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான் 1 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி உடல் சுத்தத்தைப் பேணுவதுமட்டுமல்ல, தொடர்ந்து, மனம்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் பெறவேண்டியது அவசியம். அது மாம்சஅழுக்கு நீங்குவதற்கு ஒரு அடையாளம். மேலும் அது கிறிஸ்துவோடு நாம் செய்துகொள்ளும் நல்மனசாட்சியின் உடன்படிக்கை என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. "ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. " ( 1 பேதுரு 3 : 21 )
என்கின்றார்.
தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியுடன் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம் கொள்ளும்போதுதான் நம்மில் பரிசுத்தம் ஏற்படமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், " அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்." ( 1 யோவான் 3 : 3 ) நாமும் அவர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கைக் கொண்டு பாவ மன்னிப்பைப்பெற்று, அதனை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையான ஞானஸ்நானத்துடன் அவரைப்போல பூரணம் அடைந்திடுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment