Friday, November 01, 2024

அப்பத்தினாலே மாத்திரமல்ல

 'ஆதவன்' 💚நவம்பர் 09, 2024. 💚சனிக்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,371

"மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" ( லுூக்கா 4 : 4 )

இயேசு கிறிஸ்து நாற்பதுநாள் உபவாசமிருந்து பசித்திருக்கும்போது  அவரைச் சோதிக்கும்படி சாத்தான் அவரிடம் கற்களை அப்பமாக மாற்றும்படி கூறியது. அதாவது, உமக்குத்தான் வல்லமை இருக்கிறதே அப்படி இருக்கும்போது நீர் ஏன் பசியினால் வாடவேண்டும்? இந்தக் கற்களை அப்பங்களாக மாற்றி உண்ணும் என்றது. சாத்தானுக்கு மறுமொழியாக இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். 

இந்த வசனம் பழைய ஏற்பாட்டு நூலிலிருந்து இயேசு எடுத்துக் கூறுவதாகும். உபாகமம் நூலில், "அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." ( உபாகமம் 8 : 3 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

நாம் இன்று உலக வாழ்க்கையில் மற்றவர்களைவிட சிறுமைப்பட்டவர்களாக இருக்கலாம்.  உலக செல்வங்கள் மற்றவர்களைப்போல் நமக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் நமக்கு மேலான ஆவிக்குரிய அனுபவங்களைத் தருவதற்கு தேவன் இந்தச் சிறுமையை நமக்கு அனுமதித்திருக்கலாம். உலக செல்வங்கள் மட்டும் இந்த உலகத்தில் நாம் நல்ல வாழ்க்கை வாழ போதுமானவையல்ல, மாறாக தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்  நம்மை உயிரூட்டவேண்டியது அதைவிட அவசியம்.  

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாளில் நான் ஜெபித்து வேதம் வாசிக்கும்போது தேவன் உபாகமம் 8 ஆம் அதிகாரத்தை எனக்கு வாக்குத்தத்தமாகத் தந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாளில் இதனை மறுபடியும் நினைவூட்டினார்.  "உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக." ( உபாகமம் 8 : 2 ) எனும் வார்த்தைகளை வாசிக்கும்படி கூறி எனது சிறுமைக்குக் காரணத்தை எனக்குத் தெளிவுபடுத்தினார். 

பின்னர், "உன்னுடைய பின்னாட்களில் உனக்கு நன்மைசெய்யும் பொருட்டு..." ( உபாகமம் 8 : 15 ) இவைகளைச் செய்கிறேன் என்று கூறினார்.   "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்பதனையும்,  வேதாகமமும் தேவனுடைய வார்த்தைகளும் 100% மெய்யானவை என்பதனையும்  நான் அனுபவத்தில் உணரும்படியாக தேவன் இப்படிச் செய்தார்.  "நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." எனும் வார்த்தையின்படி கிறிஸ்தவர்களாக இருந்தாலும் நானும் எனது தாய் தந்தையரும் அதுவரை அறியாத உயிருள்ள மன்னாவாகிய கிறிஸ்துவை நான் அனுபவிக்கும்படிச் செய்தார். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய நமது கஷ்டமான வாழ்க்கைச் சூழல்களே பல வேத சத்தியங்களை நாம் அனுபவித்து உணர உதவும்.  அப்பமாகிய உலகச் செல்வங்களல்ல; தேவனது வாயிலிருந்து புறப்படும்  வார்த்தைகளே நம்மை பிழைக்கச்செய்யும். சாத்தான் இயேசு கிறிஸ்துவிடம் கூறியதுபோல கற்களை அப்பமாக்கும் திடீர் ஆசீர்வாதம் நமக்குத் தேவையில்லை. அவரது வார்த்தைகளை உணவாக உட்கொள்ளும் ஆசீர்வாதமே மேலான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

No comments: