Saturday, November 16, 2024

விசுவாச மார்க்கத்தாரே ஆபிரகாமின் சந்ததி

 'ஆதவன்' 💚நவம்பர் 24, 2024. ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,386


"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்". (கலாத்தியர் 3:29)

சுதந்திரவாளி,  சுதந்திரம் எனும் வார்த்தைகளை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். இது முறையே உரிமையுடையவன், உரிமை எனும் அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தியான வசனம் கூறுகின்றது, நாம் கிறிஸ்துவுக்கு உரிமையுடையவர்களாக இருப்போமானால் நாமே ஆபிரகாமின் சந்ததி. வாக்குத்தத்தங்களுக்கு உரிமையுள்ளவர்கள். 

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார்  அதுவே அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆம் அன்பானவர்களே, தேவன் நமது நீதிசெயல்களைப்பார்த்து நம்மை இரட்சிப்பதில்லை. மாறாக அவர்மேல்கொள்ளும் விசுவாசத்தால் நாம் இரட்சிக்கப்படுகின்றோம். "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 6, 7 )

கிறிஸ்தவ மார்க்கமே விசுவாச மார்க்கம்தான். கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை மீட்படையச் செய்கின்றது. மட்டுமல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆபிரகாமுக்குப் பலித்ததுபோல கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் நமக்கும் பலிக்கின்றது. "................................அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது." ( ரோமர் 4 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்" என்று. நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாகும்போது நாமே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கின்றோம். மட்டுமல்ல, அந்த வாக்குறுதியின்படி நாம் உரிமைக் குடிமக்களாகின்றோம். 

அடிமைக்கும் உரிமைக் குடிமகனுக்கும் வித்தியாசமுண்டு. அடிமைகளாக நாம் இருப்போமானால் கிறிஸ்துவிடம் நமக்கு உரிமைகள் எதுவும் இல்லாதவர்களாக இருப்போம். "அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 30 )

நாம் அடிமைகளாக புறம்தள்ளப்படாமல் இருக்கவேண்டுமானால் நாம் விசுவாசத்தால் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியம். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருப்போம். எனவே கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாக வாழ்வோம். பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரது வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாற முயலுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

No comments: