'ஆதவன்' 💚நவம்பர் 26, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,388
"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை." ( மாற்கு 13 : 31 )
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவன் பூமியையும் வானத்தையும் வானிலுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் பூமியிலுள்ள ஊரும் பிராணிகள், பறவைகள், மிருகங்கள் புற்பூண்டுகள் இவற்றையெல்லாம் படைப்பதையும் ஒவ்வொன்றையும் படைத்து அவை நல்லதெனக் கண்டார் என்றும் வாசிக்கின்றோம். இறுதியாக அவர் மனிதனைப் படைத்தார்.
ஆனால் அப்படி அனைத்தையும் படைத்து நல்லதெனக் கண்ட தேவன் அவை அனைத்தும் அழித்து ஒழிக்கப்படும் என்கின்றார். ஆம், "அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்." ( மாற்கு 13 : 24, 25 ) அதாவது இவை அனைத்தும் அழிக்கப்பட்டு ஒழிந்துபோகும் என்று வாசிக்கின்றோம்.
வானம், அவர் பார்த்துப்பார்த்து உண்டாக்கி நல்லதெனக்கண்ட பூமி இவை அனைத்தும் அழிக்கப்படும். ஆனால், அவரது வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை என்கின்றார். வார்த்தை என்பது தேவனைக் குறிக்கின்றது. இதனை நாம் யோவான் நற்செய்தியில், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) என வாசிக்கின்றோம்.
ஆதியிலே வார்த்தையாக இருந்தவர்தான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இதனையும் அப்போஸ்தலரான யோவானே "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று குறிப்பிடுகின்றார். அதாவது அவர் உருவாக்கியவை அனைத்தும் அழிக்கப்படும் ஆனால் வார்த்தையான அவரே நிலைத்திருப்பார்.
அன்பானவர்களே, நாம் இன்று பூமியில் சொத்துசுகங்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றோம். ஆனால் பூமியும் வானமும் அழிக்கப்படும்போது இவையும் அழிக்கப்படும். ஆனால் வார்த்தையான அவர் மட்டும் நிலைத்திருப்பார். நாம் அவரோடு இணைந்த வாழ்வு வாழ்வோமானால் அவர் நிலைத்திருப்பதுபோல நாமும் அவரோடு நிலைத்திருப்போம். இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்." ( யோவான் 6 : 57 ) என்று கூறினார்.
இயேசுவைப் புசிப்பது என்பது அவரை நமது உள்ளத்தில் முழுமையாக ஏற்றுகொல்வதைக் குறிக்கின்றது. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு இணைந்த வாழ்க்கை வாழும்போது நாம் அவரைப் புசிக்கின்றோம். அவர் எத்தனை இனிமையானவர் என்பதனை வாழ்வில் ருசிக்கின்றோம். மட்டுமல்ல, அவர் நிலைத்திருப்பதுபோல நாமும் அவரோடு நிலைத்திருப்போம். இதற்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பிதாவிடம் ஜெபித்துவிட்டார். "...........நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 )
அவரைத் தனிப்பட்ட முறையில் வாழ்வில் ஏற்றுக்கொண்டு ருசிக்க முயலுவோம். அப்போது, வானமும் பூமியும் ஒழிந்தாலும் ஒழியாத வார்த்தையான தேவனோடு நாமும் ஒழியாமல் நிலைத்திருப்போம். இதுவே நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment