'ஆதவன்' 💚நவம்பர் 12, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,374
"தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 )
நாம் தேவனை வெறுமனே வழிபடுகின்றவர்களாய் இராமல் அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வழிபடவேண்டியது அவசியம். இந்த உலகத்தில் நாம் பல அதிகாரிகள், உயர் பதவியில் உள்ளவர்கள், அமைச்சர்கள் முதலானோரைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோம், சில காரியங்களுக்காக அவர்களை அணுகுகின்றோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துவிட்டுப் பின்னர் மறந்துபோகின்றோம்.
இதுபோலவே நம்மில் பலரும் தேவனது காரியத்தில் இருக்கின்றனர். ஆலயங்களுக்குச் சென்று ஆராதிப்பது, ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, போன்ற காரியங்களைச் செய்கின்றனர். அதனால் தேவனை அறிந்திருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." என்று.
தேவனை நாம் தனிப்பட்ட விதத்தில் அறியாதிருந்தால் கேடான சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் நம்மில் இருக்கும். இதனையே அவர் தேவனை அறியாதவர்கள் செய்யும் காரியங்களாகப் பட்டியலிட்டுக் கூறுகின்றார். அதாவது, தேவனை அறியாவிட்டால், சகலவித அநியாயம், வேசித்தனம், துரோகம், பொருளாசை, குரோதம், பொறாமை, கொலை, வாக்குவாதம், வஞ்சகம், வன்மம், புறங்கூறுதல், அவதூறுபண்ணுதல், தேவபகை, அகந்தை, வீம்பு, பொல்லாதவைகளை யோசித்துப்பிணைத்தல், பெற்றாருக்குக் கீழ்ப்படியாமை, பாவ உணர்வில்லாமை, உடன்படிக்கைகளை மீறுதல், சுபாவ அன்பில்லாமை, இணங்காமை, இரக்கமில்லாமை. ( ரோமர் 1 : 29 - 31 ) இவைகள் நம்முள் இருக்கும் என்கின்றார்.
வெறுமனே தேவனை ஆராதித்துக்கொண்டு மட்டுமே இருப்போமானால் மேலே குறிப்பிட்டப் பாவ காரியங்கள் நமக்குள் இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை அறியும்போது இந்தக் காரியங்கள் நம்மைவிட்டு அகலும். இன்றைய தியான வசனம் கூறுகின்றது அவரை அறியாத காரணத்தால், அல்லது அவரை அறியவேண்டும் எனும் எண்ணம் இல்லாத காரணத்தால் அவரே இத்தகைய இழிவான காரியங்கள் செய்யும்படி அவர்களை ஒப்புக்கொடுத்தார் என்று.
அன்பானவர்களே, நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அடையும்போது நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாகவும் அவரது ஆவியின் பிரமாணத்துக்கு உட்பட்டவர்களாகவும் வந்துவிடுகின்றோம். வேதம் கூறும் கட்டளைகள் (நியாயப்பிரமாணம்) மற்றும் பாவங்களை நாம் மேற்கொண்டுவிடுகின்றோம்.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று கூறுகின்றார். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதனையும் பின்வருமாறு விளக்குகின்றார்:- "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 )
ஆம் அன்பானவர்களே, கட்டளைகளால் செய்ய முடியாததை தாமே நமக்காகச் செய்து முடிக்கும்படி கிறிஸ்து பலியானார். எனவே, அவரது இரத்தத்தால் பாவங்கள் கழுவப்படும் அனுபவத்துக்குள் வரும்போது மட்டுமே நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாகவும் பாவங்களுக்கு விலகினவர்களாகவும் வாழமுடியும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
No comments:
Post a Comment