'ஆதவன்' 💚நவம்பர் 01, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,363
"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதன் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்." (யோவான் 3:8)
ஆவிக்குரிய அனுபவத்துடன் ஒருவர் வாழ்வதை காற்று வீசுவதற்கு ஒப்பிட்டு இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து பேசுகின்றார்.
வெளிப்பார்வைக்கு மற்ற மனிதர்களைப்போல இருந்தாலும் பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தவர்களது எண்ணங்களும் செயல்பாடுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். காற்று எங்கிருந்து வருகின்றது எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாததுபோல் அதனை நாம் அறிய முடியாது. இதனைத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, ஒன்றைப்பற்றி நாம் முழுவதுமாக அறியவேண்டுமானால் அதுவாக நாம் மாறினால் மட்டுமே முடியும். உதாரணமாக, சாலையோரம் படுத்திருக்கும் மாடு, அல்லது நம்மைநோக்கி வரும் நாய் அல்லது எந்த மிருகமாக இருந்தாலும் அந்த மிருகங்களின் எண்ணம் நமக்குத் தெரியாது. அவை உண்ணும் உணவுகள், அவற்றின் சுவை எதுவுமே நமக்குத் தெரியாது. மிருகங்களின் எண்ணங்களும் சுவைகளும் மனிதர்களிலிருந்து வித்தியாசமானவை. நாமும் அவைகளைப்போல ஒரு மிருகமாக மாறினால்தான் அதனை நம்மால் முற்றிலும் அறிய முடியும்.
இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், " மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்?அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 11 ) என்று கூறுகின்றார். "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8 : 5 ) என்று கூறுகின்றார்.
எனவே நம்மைப் புரிந்துகொள்ளாத சிலர் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமது செயல்பாடுகளைக் குறித்து குறைகூறலாம். ஆனால் நாம் கவலைப்படத் தேவையில்லை. தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான் என்று கூறியுள்ளபடி தேவனுடைய ஆவிக்குரிய சித்தப்படி வாழ்பவனையும் உலக மனிதர்கள் அறிய முடியாது. சொந்த குடும்பத்தினர்கூட அறிய முடியாது.
சமாதானத்தையுண்டாக்க வந்த இயேசு கிறிஸ்து "பிரிவினை உண்டாகவே வந்தேன்" என்றும் கூறுவதை ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் புரிந்துகொள்ள முடியாது. ஆம், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 35, 36 ) என்றார் இயேசு கிறிஸ்து. இதற்குக் காரணம் ஒரே வீட்டினுள் இருந்தாலும் ஆவியில் பிறந்தவர்களும் மற்றவர்களும் மனதளவில் பல காரியங்களில் பிரிந்தவர்களாகவே இருப்பார்கள்.
ஆவிக்குரிய வழிகளை அறியவும் தேவ வழியில் நடக்கவும் உண்மையான மனதுடன் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுக்கும்போதுதான் இந்தப் பிரிவினை முடிவுக்குவரும். அதுவரை காற்று இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் தெரியாததுபோல நமது நடவடிக்கைகளின் உண்மைத்தன்மை தேவனுக்கு மட்டுமே தெரிவதாக இருக்கும். இதன் அடிப்படையிலேயே தேவன் மனிதர்களை நியாயம் தீர்ப்பார்.
"நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24 : 15 ) என்று உறுதியெடுத்து அனைவரும் ஆவிக்குரிய அனுபவத்தினுள் வரும்போது மட்டுமே வீட்டிலுள்ள இந்தப் பிரிவினை மறையும். அதுவரை காற்றினைப்போல நாமும் மற்றவர்களுக்குப் புரியாதவர்களும் புரிந்துகொள்ள முடியாதவர்களுமாகவே இருப்போம்.
'ஆதவன்' 💚நவம்பர் 02, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,364
"நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." ( சங்கீதம் 119 : 49, 50 )
தேவனுக்குள் விசுவாசம்கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது தேவன் நமக்குச் சில வார்த்தைகளைத் தருவார். அவை அந்தச் சூழ்நிலையில் நாம் நம்பமுடியாதவையாக இருந்தாலும் அவர் அவற்றை நிச்சயமாக நமது வாழ்வில் நிறைவேற்றுவார். ஆனால் தேவன் நமக்கென்று ஒரு வாக்குறுதியைத் தரும்போது பொறுமையாகக் காத்திருக்கவேண்டியது அவசியம். காரணம் தேவன் கூறிய உடனேயே அதனை நிறைவேற்றுவதில்லை. ஆனால் அவற்றை நாம் நம்பவேண்டும்.
ஆபிரகாமுக்குத்தேவன் அளித்த வாக்குறுதி நிறைவேற அவர் 25 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. "அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்" ( ரோமர் 4 : 17 ) என்று கூறினாலும் சூழ்நிலை நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் ஆபிரகாம் தேவனை நம்பினார். "அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்." ( ரோமர் 4 : 19 ) என்று வாசிக்கின்றோம்.
மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்." என்று நாம் தேவனிடம் விண்ணப்பம் செய்யவேண்டியதும் அவசியம். வேதனையோடு நாம் ஜெபிக்கும்போது "அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." என்று இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நமது இக்கட்டு, சிறுமையான காலங்களில் அந்த வாக்குறுதிகளே நமக்கு ஆறுதலாகவும் நம்மை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும்.
உலக ஆசீர்வாதத்துக்குரிய வாக்குத்தத்தங்கள் மட்டுமல்ல, மேலான ஆவிக்குரிய வாக்குத்தத்தங்களும் நமக்கு உண்டு. இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது." ( 2 பேதுரு 1 : 4 ) என்று கூறுகின்றார்.
கிறிஸ்துவைப்போல நாம் திவ்ய சுபாவம் உள்ளவர்களாக வேண்டும் எனும் வாக்குத்தத்தத்தை நாம் உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளும்போது பேதுரு கூறுவதுபோல நாம் இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி வாழமுடியும்; பரிசுத்தமாக முடியும். நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும் என்று ஜெபிப்போம். அதுவே நமது சிறுமையில் (உலக சிறுமையோ ஆவிக்குரிய சிறுமையோ) நமக்கு ஆறுதலாகவும் நம்மை உயிர்ப்பிப்பதாகவும் இருக்கும்.
தேவ வாக்குறுதிகளை உறுதியாக நம்புவோம்; ஏற்றுக்கொள்வோம்.
'ஆதவன்' 💚நவம்பர் 03, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,365
"இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 10 : 12 )
ஆவிக்குரிய வாழ்வு நாம் மிகவும் கவனமாக வாழவேண்டிய வாழ்வாகும். நமது வாழ்வு நம் பார்வைக்குச் சரியான வாழ்வாகத் தெரியலாம் அதற்காக நாம் முற்றிலும் சரியானவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது. நமது ஆவிக்குரிய வாழ்வை நாமே சுய சோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். இதனாலேயே அப்போஸ்தலரான பவுல், "தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்." என்று கூறுகின்றார். நிற்பதுபோலத் தெரிந்தாலும் ஒருவேளை நாம் விழுந்து விடலாம், அல்லது விழுந்து கிடக்கலாம்.
இதனை அப்போஸ்தலரான பவுல் இஸ்ரவேலரின் வாழ்வைக்கொண்டு நமக்கு விளக்குகின்றார். எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் அனைவரும் செங்கடல் நீரினால் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஞான போஜனத்தைப் புசித்தார்கள், ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள் அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். ( 1 கொரிந்தியர் 10 : 5 ) என்கின்றார்.
இதுபோலவே இன்று பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாம் ஞானஸ்நானம் பெற்றிருக்கலாம், கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் பானம் செய்பவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை என்று கூறியுள்ளபடி தேவன் நம்மிடமும் பிரியமில்லாதவராக இருக்கலாம்.
இஸ்ரவேலரிடம் தேவன் பிரியமாய் இல்லாமல் இருக்கக் காரணம் அவர்களது இச்சை, புசித்தல், குடித்தல், (அதாவது உணவுமீது அதிக ஆசை - உலக ஆசைகள் என்று நாம் பொருள்கொள்ளலாம் ) விக்கிரக ஆராதனை, வேசித்தனம், கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்தல், முறுமுறுத்தல் என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். "இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது." ( 1 கொரிந்தியர் 10 : 11 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். அன்பானவர்களே, தயவுசெய்து வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 10 : 1- 12 வசனங்களை வாசித்துத் தியானியுங்கள்.
இஸ்ரவேலர் அதிகமான பேர்களிடத்தில் தேவன் பிரியமாயில்லாமலிருக்கக் காரணமான மேற்படி கூறப்பட்ட இச்சை, புசித்தல், குடித்தல், விக்கிரக ஆராதனை, வேசித்தனம், கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்தல், முறுமுறுத்தல் போன்ற குணங்கள் நம்மிடம் இருக்குமானால் நாமும் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் அப்பத்தையும் இரத்தத்தையும் பானம் செய்பவர்களாக இருந்தாலும் நிற்கிறவர்களல்ல, விழுந்துவிட்டவர்களே.
எனவே மேற்படி தகாத செயல்கள் நம்மிடம் இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்ள முயலுவோம். தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றபடி நாமும் எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவை மட்டுமே வாழ்வில் நேசிப்போம்.
'ஆதவன்' 💚நவம்பர் 04, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,366
"இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்." ( யாக்கோபு 5 : 7 )
நமக்கு எதிராகச் செயல்படும் மக்களுக்கு; அதிகாரத்துக்கு நாம் எதிர்த்து நிற்காமல் கர்த்தரது நியாயத்தீர்ப்பு வரும்வரை பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது இன்றைய தியான வசனம். எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதற்கு விவசாயியை உதாரணமாகக் காட்டுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.
விவசாயி விதையை விதைத்தவுடன் அதன் பலன் அவனுக்குக் கிடைக்காது. மாறாக அவன் பயிர் விளைவதற்கான பராமரிப்பைச் செய்யவேண்டும். அத்துடன் தேவனது பராமரிப்பும் தேவை. தேவனது பராமரிப்பையே முன்மாரி, பின்மாரி என்று கூறுகின்றார் யாக்கோபு. விதை விதைப்பதற்கு முன்பு மழை பெய்யவேண்டியது அவசியம். அதனையே முன்மாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபோல பயிர் வளரும்போது அதற்கு ஏற்றகாலத்தில் நீர் கிடைப்பதற்கும் மழை தேவை. அதுவே பின்மாரி. விவசாயி இந்த இரு மழையையும் எதிர்பார்த்துப் பொறுமையாகக் காத்திருக்கின்றான்.
இந்தப் பொறுமை அறுவடைநாளில் அவனுக்கு ஏற்ற பலனைத் தருகின்றது. இன்றைய தியான வசனத்தின் முன்வசனங்களில் அப்போஸ்தலராகிய யாக்கோபு செல்வந்தர்கள் தங்களுக்குக் கீழானவர்களுக்குச் செய்யும் கேடுகளைக் குறித்துச் சொல்கின்றார். அதாவது "இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது." ( யாக்கோபு 5 : 4 ) என்கின்றார். மேலும் தொடர்ந்து, நீதிமானை அநியாயமாக ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து கொலை செய்தீர்கள் என்கின்றார்.
இப்படி உங்களுக்கு எதிராகச் செய்யும் கொடுமைகளை அனுபவிக்கும்போது நீங்கள் ஒரு விவசாயி பொறுமையாக முன்மாரிக்கும் பின்மாரிக்கும் காத்திருப்பதுபோல பொறுமையாகக் காத்திருங்கள் என்கின்றார் யாக்கோபு. "நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே." ( யாக்கோபு 5 : 8 ) ஆம், கர்த்தரின் நாள் சமீபமாக இருக்கின்றது. அவர் வந்து உங்களுக்கு ஏற்ற பலனைத் தருவார்.
அதற்காக எல்லாவற்றுக்கும் நாம் அடிமைகள்போல இருக்கவேண்டுமென்று பொருளல்ல, மாறாக நம்மால் சிலவேளைகளில் நமது எதிர்ப்பை வாயினால் சொல்லக்கூடிய நிலைகூட இல்லாமல்போகலாம். உதாரணமாக, இன்று பல வேளைகளில் நாம் அதிகாரம் கையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் பேசமுடியாதவர்களாக இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலைகளில் நாம் மேலே பார்த்த விவசாயியைப்போல பொறுமையாக தேவன் செயல்பட காத்திருக்கவேண்டும். அப்படி நாம் காத்திருக்கும்போது தேவன் நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார்.
"இதோ, பொறுமையாய் இருந்தவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 ) அதாவது அப்படி நாம் காத்திருக்கும்போது யோபு பெற்றதைப்போல ஆசீர்வாதம் நமக்கு நிச்சயம் உண்டு. பதில்பேச முடியாத நெருக்கடியான அநியாயத்துக்கு எதிராகப் பொறுமையாகக் காத்திருப்போம்.
'ஆதவன்' 💚நவம்பர் 05, 2024. 💚செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,367
"தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே." ( ரோமர் 11 : 29 )
இன்றைய தியான வசனம் தேவனுடைய அளப்பரிய கிருபையினையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றது. தேவன் தனது பணியாளர்கள், விசுவாசிகள் இவர்களுக்குச் சில தனிப்பட்ட வரங்களைக் கொடுத்து அழைத்துத் தனது பணியில் அமர்த்துகின்றார். ஆனால் மனித பலவீனத்தால் அவர்கள் தேவனுக்கு எதிரானச் செயல்களைச் செய்தாலும் உடனேயே தேவன் அந்த வரங்களை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வதில்லை. அவர்களை அழைத்த அழைப்பை மாற்றுவதில்லை.
மூன்றாம் நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளிடம் ஒரு குணம் உண்டு. தங்களது தோழர் தோழியரிடம் நட்பாகப் பழகும்போது சில அன்பளிப்புகளை அவர்களுக்குள் கொடுத்து மகிழ்வார்கள். ஆனால் ஏதேனும் காரணங்களால் அவர்களுக்குள் சண்டை வரும்போது, "நான் உனக்குத் தந்த அந்த பென்சிலை அல்லது பேனாவைத் திருப்பித்தந்துவிடு....நீதான் என்னோடு பேசமாட்டியே" என்று கொடுத்தப் பொருள்களைத் திருப்பிக் கேட்பார்கள்.
ஆனால் இந்தக் குணம் வளர வளர மாறிவிடுகின்றது. வளர்ந்தபின்னர் நாம் பலவேளைகளில் நண்பர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றோம். பிறந்தநாள், திருமணநாள், புத்தாண்டுநாள் போன்றவற்றுக்கு பரிசுகள் வழங்குகின்றோம். ஆனால் ஏதோ காரணத்தால் நமக்குள் தகராறு வந்துவிடுகின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்போது நாம் குழந்தைகளைப்போல, " நான் சென்ற ஆண்டு உன் பிறந்த நாளுக்கு வாங்கிக்கொடுத்த புடவையைத் திருப்பித் தந்துவிடு" என்று கேட்பதில்லை.
இதுபோலவே தேவனும் இருக்கின்றார். வரங்கள் என்பது தேவன் தனது அடியார்களுக்கு வழங்கும் பரிசு (Gift of God). எனவே, நாம் சில தவறுகள் செய்துவிடுவதால் உடனேயே அவர் சிறு குழந்தைகளைப் போல அவற்றை உடனேயே திருப்பி எடுத்துவிடுவதில்லை. இதுபோல, நம்மை அவர் ஒரு குறிப்பிட்ட ஊழிய காரியம் நிறைவேற்றிட அழைத்திருக்கின்றார் என்றால் அந்த அழைப்பையும் அவர் உடனேயே கைவிட்டுவிடுவதில்லை.
ஆனால் தொடர்ந்து தேவனுக்கு எதிராக நாம் செயல்பட்டுக்கொண்டே இருப்போமானால் நமது வரங்கள் சாத்தானால் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு தேவ ஊழியம் சாத்தானின் ஊழியமாக மாறிவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
நாம் ஒருவேளை தேவனைவிட்டுப் பிரிந்திருந்தால் கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. காரணம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, அவர் அழைத்த அழைப்பு மாறாதது. எனவே அவரிடம் நமது மீறுதல்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டும்போது நாம் இரக்கம் பெறுவோம்.
ஒருமுறை பேதுரு ஆண்டவர் இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டார். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 21, 22 ) என்றார். மனிதர்களாகிய நம்மையே ஏழெழுபதுதரம் மன்னிக்கச் சொன்ன தேவன் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளாமலிருப்பாரா? நமது வாழ்வில் தவறியிருந்தால், மாறாத கிருபை வரங்களும், அழைப்பும் தரும் தேவனிடம் தயக்கமின்றி திரும்புவோம்.
'ஆதவன்' 💚நவம்பர் 06, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,368
"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2 : 14 )
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்து பாடுபட்டு மரித்ததன் நோக்கத்தை நினைவூட்டுகின்றார்.
அதாவது, நாம் ஏற்கெனவே செய்த பாவங்கள் அக்கிரமங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்மை அவரது சொந்த மக்களாக மாற்றவேண்டும் என்பதே தேவனின் பிரதான நோக்கம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமேயே அவரது இவ்வுலக தந்தை யோசேப்புக்கு இது அறிவிக்கப்பட்டது. "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" ( மத்தேயு 1 : 21 )
இதனையே பவுல் அப்போஸ்தலர் தனது சீடனான தீமோத்தேயுவுக்கும் கூறினார். "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது" ( 1 தீமோத்தேயு 1 : 15 ) என்று.
இன்றைய தியான வசனம் மேலும் கூறுகின்றது, பாவங்களை நீக்கி நம்மைச் சுத்திகரிப்பது மட்டுமல்ல, "நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று. அதாவது நாம் அவர்மேல்கொண்ட பக்தியால் வைராக்கியத்துடன் நற்செயல் செய்யவேண்டும். அதாவது, நாம் நல்லது செய்யவேண்டுமானால் முதலில் நாமே நல்லவர்களாக மாறவேண்டும். இப்படி மாற்றிடவே கிறிஸ்து உலகினில் வந்தார்.
வெறுமனே நல்லது செய்வதால் ஒருவர் நல்லவராக முடியாது. காரணம் ஒருவன் துன்மார்க்கமாகச் சம்பாதித்தப் பணத்தைக்கொண்டு நல்ல செயல்களைச் செய்து தொடர்ந்து அதே துன்மார்க்கத்தில் விழுந்து கிடக்கலாம். துன்மார்க்கமாகச் சம்பாதித்தப் பணத்தினால் நன்மைகள் செய்து மக்களது ஆதரவையும் அன்பையும் பெறலாம். "கொடை வள்ளல்" என்று பெயர் பெறலாம்; இப்படி இந்த உலகத்தையே ஒருவன் தனக்கு ஆதாயமாக்கிக்கொள்ளலாம். ஆனால், "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்கின்றார் இயேசு கிறிஸ்து.
ஆம், பாவத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு நல்லது செய்வதில் அர்த்தமில்லை. உலக மார்க்கங்கள், "நல்லது செய்து நல்லவனாய் இரு" என்று கூறுகின்றன. ஆனால் கிறிஸ்துவோ, "நல்லது செய்யுமுன் நீயே நல்லவனாய் இரு" என்கின்றார்.
இப்படி நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்டு நாம் தொடர்ந்து இந்த உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதற்கு நம்மைத் தகுதிப்படுத்தவே கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார். ஆம் அன்பானவர்களே, வெறுமனே நல்லது செய்வதால் நம்மை நாமே நல்லவர்கள் என்று எண்ணி வாழ்ந்து ஏமாந்துபோகக்கூடாது. முதலில் நாம் மாறவேண்டும். இதனையே "நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கிய முள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. முதலில் கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டு நாம் சுத்திகரிக்கப் படவேண்டும்; பின்னர் நற்செயல்கள் செய்யவேண்டும்.
கிறிஸ்து உலகினில் வந்த நோக்கம் நம்மில் நிறைவேறிடத் தகுந்தவர்களாக வாழ்வோம். நமது மீறுதல்கள், பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம். நல்லவர்களாய் வாழ்ந்து நாம் நற்செயல்கள் செய்ய அவரே நமக்கு உதவிடுவார்.
'ஆதவன்' 💚நவம்பர் 07, 2024. 💚வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,369
"துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்." ( ஏசாயா 26 : 10 )
தேவன் தனது இரக்கத்தின் பெருக்கத்தினால் அனைத்து மக்களுக்கும் சில நன்மைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார். எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவனுக்கு மட்டுமே நான் நன்மைகள் செய்வேன் என்று அவர் கூறவில்லை. இப்படி தேவன் அனைவருக்கும் நன்மைகளைச் செய்வதால் துன்மார்க்க வாழ்க்கை வாழ்பவர்கள் நீதி வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவதில்லை. இப்படி அவர்கள் தேவ கிருபையை புறக்கணிக்கிறார்கள்.
துன்மார்க்கன் இப்படி நன்மைகளைப் பெறும்போது அது தனது "அதிஷ்ட்டம்" (luck) என்று கூறிக்கொள்கிறான். அல்லது தான் வணங்கும் ஏதோ ஒரு தெய்வத்தின் கருணை என்று சொல்லிக்கொள்கிறான். ஆனால் தொடர்ந்து தனது துன்மார்க்கச் செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். இதனையே, தேவன் "துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்" என்று இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார்.
இன்று உலகினில் வாழும் உலக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான மக்களும் நீதிமான்களல்ல, மாறாக தேவனது கிருபையினால் இந்த ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கின்றனர். இத்தகைய மனிதர்களை எவ்வளவு பெரிய நீதியைக் கடைபிடிக்கும் நாட்டில் கொண்டு வாழவைத்தாலும் அவர்கள் தொடர்ந்து அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறார்கள்.
இன்று உலகின் பணக்கார நாடுகளில் வாழும் மக்கள் நல்ல செலவச் செழிப்புடன் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வதில்லை. செழிப்புடன் வாழ்கின்றனர் அவ்வளவே. இப்படி இவர்களுக்குத் தேவன் தயைசெய்திருந்தாலும் அவர்கள் தேவ நீதியை அறிந்துகொள்ளவில்லை. கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதே போகிறார்கள். ஆம் அன்பானவர்களே, உலக ஆசீர்வாதம் என்பது மட்டுமே தேவனை அறியவும் நமது துன்மார்க்கத்தைவிட்டு நாம் திரும்பிடவும் உதவாது. துன்மார்க்க மனம் உள்ளவன் எவ்வளவு நல்ல நிலையில் வாழ்ந்தாலும் தேவ நீதியை அறியாதவனாகவே இருப்பான்.
இன்றும் நாம் உலகினில் பல ஏழை மனிதர்கள் நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கின்றோம். லட்சக்கணக்கான பணத்தை ஒருவர் ஆட்டோவில் தவறவிட்டுச் சென்றதை ஏழை ஆட்டோ ஓட்டுநர் அப்படியே கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தைச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்ததை வாசித்திருப்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் அரசு பதவியில் இருந்து மாதம் எழுபதாயிரம் எண்பதாயிரம் மாதச் சம்பளம் வாங்கும் மனிதன் ஏமாற்றும் லஞ்சமும் வாங்கி பொருள் குவிக்கிறான்.
தேவனது தண்டனை உடனேயே கிடைக்காததால் தவறு செய்பவர் தன்னை தேவனுக்கேற்றவர் என எண்ணிக்கொள்ளவேண்டாம். என்பதையே இன்றைய தியான வசனம் அறிவுறுத்துகின்றது. ஆம், தேவன் தயைசெய்தாலும் அத்தகைய மனிதன் நீதியைக் கற்றுக்கொள்ளான்; தொடர்ந்து அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான் என்பதே உண்மை. கிறிஸ்துவின் வருகையில் இத்தகைய மனிதர்கள் அழுது புலம்புவார்கள்.
'ஆதவன்' 💚நவம்பர் 08, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,370
"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்". ( லுூக்கா 16 : 31 )
இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து கூறிய கெட்ட குமாரன் (ஊதாரி மைந்தன்) உவமையில் வரும் செல்வந்தனை நோக்கி ஆபிரகாம் கூறியதாக நாம் வாசிக்கின்றோம்.
இந்த உலகத்தில் பலர் எதனையும் கண்ணால் கண்டால்தான் நம்புவோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும் கூறிக்கொள்கின்றனர். ஆனால் எல்லாவற்றையும் கண்டுதான் நம்புவோம் என்று வாழ்வோமானால் இறுதியில் உண்மையை அறியாதவர்களாகவே வாழ்ந்து மடியவேண்டியதிருக்கும். இது தவறு என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
கிறிஸ்தவர்களில் பலர் இப்படி இருக்கின்றனர். பல ஆவிக்குரிய சத்தியங்களை முழு மனதுடன் இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்படி வேதம் கூறும் பல சத்தியங்களையும் நம்பமுடியாத அதிசயம் நடந்தால்தான் நம்புவோம் எனக் கூறுவது மரித்தவர்கள் எழுந்து இந்த உலகத்தில் வந்து கூறினால்தான் நம்புவோம் என்று கூறுவதுபோல்தான் உள்ளது. இந்த உவமையில் வரும் செல்வந்தன் அப்படி வாழ்ந்தவன்தான். வேதம் கூறும் பல்வேறு காரியங்களை வாசித்து அறிந்தவன்தான். ஆனால் அவன் அவற்றை நம்பி ஏற்றுக்கொண்டு தன்னைத் திருத்திக்கொள்ளவில்லை.
இன்றும் கிறிஸ்துவால் இப்படி மரித்து உயிரோடு எழுப்பப்பட்டவர்கள் பலர் சாட்சி கூறியுள்ளனர். தங்களது மரித்த அனுபவத்தைக் குறித்து எழுதியுள்ளனர். ஆனால் அந்தச் சாட்சியையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவை புத்தி பேதலித்தவர்களின் உளறல்களாகவே பலரால் பார்க்கப்படுகின்றன. ஆம் அன்பானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களை விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளாமல் தேவையற்ற நிபந்தனைகளை விதிப்பவர்கள் இயேசு கிறிஸ்து இந்த உவமையில் கூறுவதுபோல மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்.
இதுபோலவே, ஆவிக்குரிய நாம் கூறும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு அனுபவங்களை கிறிஸ்தவர்களில் பலர்கூட நம்புவதில்லை; ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் பாரம்பரியம். தங்களது சபையில் கற்பிக்கப்பட்ட பாரம்பரிய முறைமைகள் இவற்றை நம்பாதபடி அவர்களைத் தடுக்கின்றன. அப்போஸ்தலரான பவுல், "நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்." ( ரோமர் 8 : 24, 25 ) என்று கூறுகின்றார்.
இதுவரை உண்டிராத ஒரு புதுவித பழத்தை நாம் உண்ணும்போது அதனை இதுவரைச் சுவைத்திராத மற்றவர், "இந்தப்பழம் நல்லா இருக்காது......நாம் ஏற்கெனவே சாப்பிடும் பழங்கள் இதனைவிடச் சுவையாக இருக்கும்" என்று கூறுவாரானால் அவரைப்போன்ற அறிவிலி இருக்கமாட்டான். ஆவிக்குரிய அனுபவம் இல்லாதவர்கள் ஆவிக்குரிய மக்களைப்பார்த்து கூறுவது இதுபோலவே இருக்கின்றது. "எங்கள் சபையில் இல்லாததா உங்கள் அனுபவத்தில் இருக்கப்போகிறது?" என்கின்றனர்.
ஆம், இயேசு கிறிஸ்து கூறுவதுபோல, "மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்" தேவன் எழுதிக்கொடுத்துள்ள வேதாகமத்தை முற்றிலும் நம்பாதவர்கள் எந்த வித மேலான ஆவிக்குரிய அனுபவங்களை அதனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கூறினாலும் நம்பமாட்டார்கள்.
'ஆதவன்' 💚நவம்பர் 09, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,371
"மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" ( லுூக்கா 4 : 4 )
இயேசு கிறிஸ்து நாற்பதுநாள் உபவாசமிருந்து பசித்திருக்கும்போது அவரைச் சோதிக்கும்படி சாத்தான் அவரிடம் கற்களை அப்பமாக மாற்றும்படி கூறியது. அதாவது, உமக்குத்தான் வல்லமை இருக்கிறதே அப்படி இருக்கும்போது நீர் ஏன் பசியினால் வாடவேண்டும்? இந்தக் கற்களை அப்பங்களாக மாற்றி உண்ணும் என்றது. சாத்தானுக்கு மறுமொழியாக இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார்.
இந்த வசனம் பழைய ஏற்பாட்டு நூலிலிருந்து இயேசு எடுத்துக் கூறுவதாகும். உபாகமம் நூலில், "அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." ( உபாகமம் 8 : 3 ) என்று நாம் வாசிக்கின்றோம்.
நாம் இன்று உலக வாழ்க்கையில் மற்றவர்களைவிட சிறுமைப்பட்டவர்களாக இருக்கலாம். உலக செல்வங்கள் மற்றவர்களைப்போல் நமக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் நமக்கு மேலான ஆவிக்குரிய அனுபவங்களைத் தருவதற்கு தேவன் இந்தச் சிறுமையை நமக்கு அனுமதித்திருக்கலாம். உலக செல்வங்கள் மட்டும் இந்த உலகத்தில் நாம் நல்ல வாழ்க்கை வாழ போதுமானவையல்ல, மாறாக தேவனது வார்த்தை நம்மை உயிரூட்டவேண்டியது அதைவிட அவசியம். தேவனது வார்த்தைகளே நம்மை உயிரூட்டுவனவாக பலவேளைகளில் அமைகின்றன.
2007 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாளில் நான் ஜெபித்து வேதம் வாசிக்கும்போது தேவன் உபாகமம் 8 ஆம் அதிகாரத்தை எனக்கு வாக்குத்தத்தமாகத் தந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் நாளில் இதனை மறுபடியும் நினைவூட்டினார். "உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக." ( உபாகமம் 8 : 2 ) எனும் வார்த்தைகளை வாசிக்கும்படி கூறி எனது சிறுமைக்குக் காரணத்தை எனக்குத் தெளிவுபடுத்தினார்.
பின்னர், "உன்னுடைய பின்னாட்களில் உனக்கு நன்மைசெய்யும் பொருட்டு..." ( உபாகமம் 8 : 15 ) இவைகளைச் செய்கிறேன் என்று கூறினார். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்பதனையும், வேதாகமமும் தேவனுடைய வார்த்தைகளும் 100% மெய்யானவை என்பதனையும் நான் அனுபவத்தில் உணரும்படியாக தேவன் இப்படிச் செய்தார். "நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்." எனும் வார்த்தையின்படி கிறிஸ்தவர்களாக இருந்தாலும் நானும் எனது தாய் தந்தையரும் அதுவரை அறியாத உயிருள்ள மன்னாவாகிய கிறிஸ்துவை நான் அனுபவிக்கும்படிச் செய்தார்.
ஆம் அன்பானவர்களே, இன்றைய நமது கஷ்டமான வாழ்க்கைச் சூழல்களே பல வேத சத்தியங்களை நாம் அனுபவித்து உணர உதவும். அப்பமாகிய உலகச் செல்வங்களல்ல; அவரது வார்த்தைகளே நம்மை பிழைக்கச்செய்யும். சாத்தான் இயேசு கிறிஸ்துவிடம் கூறியதுபோல கற்களை அப்பமாக்கும் திடீர் ஆசீர்வாதம் நமக்குத் தேவையில்லை. அவரது வார்த்தைகளை உணவாக உட்கொள்ளும் ஆசீர்வாதமே மேலான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்.
'ஆதவன்' 💚நவம்பர் 10, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,372
"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்." ( மாற்கு 12 : 17 )
ஆவிக்குரிய வாழ்க்கை என்பது நாம் தேவனுக்குமுன்பாக உண்மையுள்ளவர்களாக இருப்பது மட்டுமல்ல, இந்த உலக வாழ்க்கையிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருப்பதாகும். வரிகொடுப்பது, அதிகாரிகளை மதிப்பது, நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது என அனைத்துக் காரியங்களிலும் நாம் கீழ்ப்படிந்து உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.
தானியேல் இப்படித்தான் வாழ்ந்தார். ராஜா உட்பட அனைவரும் தானியேலின் ஜெப வாழ்க்கைமட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்தது என்று எண்ணிக்கொண்டனர். எனவேதான் சிங்கக் கெபியினுள் போடப்பட்ட தானியேலிடம் ராஜா, "தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்." ( தானியேல் 6 : 20 )
ராஜாவுக்குத் தானியேலின் ஜெப வாழ்க்கைதான் முக்கியமாகத் தெரிந்திருந்தது. ஆனால் ராஜாவுக்குத் தானியேல் கூறும் பதில், "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." ( தானியேல் 6 : 22 ) அதாவது, ஜெபித்ததால் மட்டுமல்ல; மாறாக, தேவனுக்குமுன் நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன் அதுபோல ராஜாவுக்கு எதிராகவும் (உலக வாழ்க்கையிலும், அரசாங்க காரியங்களிலும்) நான் நீதிகேடுசெய்யவில்லை. எனவே தேவன் என்னைச் சிங்கங்களுக்குத் தப்புவித்தார் என்கிறார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஒழுங்காக வரியைச் செலுத்திவந்தார். வரி வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து வரிகேட்டபோது அதை அவர் இயேசு கிறிஸ்துவிடம் வந்து கூறினார். அவருக்கு இயேசு, "நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்." ( மத்தேயு 17 : 27 ) ஆம், ஆவிக்குரியவர்கள் மற்றவர்களுக்கு இடறலாக இருக்கக்கூடாது.
அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." ( ரோமர் 13 : 7 ) என்று கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, அதிகநேரம் ஜெபிப்பதும், ஆலயங்களில் ஆராதனைகளில் கலந்துகொள்வதும், ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதும் மட்டும் ஆவிக்குரிய வாழ்க்கையல்ல; மாறாக உலக காரியங்களிலும் நாம் உண்மையுள்ளவர்களாக, பிறரை ஏமாற்றாமல், நேர்மையாகத் தொழில் செய்து, அரசாங்க சட்டதிட்டங்களை மதிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம். தானியேல் கூறுவதுபோல, "தேவனுக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை" என்று வாழ்வதுதான் ஆவிக்குரிய வாழ்க்கை. இத்தகைய ஒரு வாழ்க்கை வாழும்போதுதான் தேவன் நம்மையும் பலருக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவார்.
'ஆதவன்' 💚நவம்பர் 11, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,373
"பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்." ( 2 கொரிந்தியர் 7 : 1 )
நமது தேவன் எதிலும் முழுமையை விரும்புகின்றவர். அதனையே இங்கு பூரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவிக்குரிய வாழ்வில் பூரணம் என்பது நாம் தேவனைப்போல பரிசுத்தமாவது. நாம் அதனை நோக்கியே பயணிக்கவேண்டும். அதற்கான வழியாக அப்போஸ்தலரான பவுல், "மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு" என்று குறிப்பிடுகின்றார். அதாவது நாம் உடலளவிலும் ஆத்தும அளவிலும் சுத்தமாக இருக்கவேண்டும்.
உடலளவில் சுத்தம் என்பது வெறுமனே தினமும் சோப்புப்போட்டு குளிப்பதைக் குறிப்பிடவில்லை. அப்படி உலகிலுள்ள எல்லோரும் குளிக்கின்றனர். ஆனால் கிறிஸ்த வாழ்வில் உடலளவில் சுத்தம் என்பது பாவமில்லாமல் உடலைப் பேணுவத்தைக் குறிக்கின்றது. "களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( ரோமர் 13 : 13, 14 ) என்று வாசிக்கின்றோம். முதலில் இத்தகைய அழுக்கு நம்மைத் தாக்காமல் காத்துக்கொள்ளவேண்டும்.
வெறும் ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொள்வது மட்டுமல்ல, உள்ளான மனிதனில் நாம் தூய்மையானவர்களாக வாழவேண்டியது அவசியம். இவை அனைத்தும் நம்மில் செயல்படவேண்டுமானால் முதலில் கிறிஸ்து இயேசுவின்மேல் அசைக்கமுடியாத விசுவாசம் இருக்கவேண்டியது அவசியம். அப்படி விசுவாசம் கொண்டு "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான் 1 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி உடல் சுத்தத்தைப் பேணுவதுமட்டுமல்ல, தொடர்ந்து, மனம்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் பெறவேண்டியது அவசியம். அது மாம்சஅழுக்கு நீங்குவதற்கு ஒரு அடையாளம். மேலும் அது கிறிஸ்துவோடு நாம் செய்துகொள்ளும் நல்மனசாட்சியின் உடன்படிக்கை என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. "ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. " ( 1 பேதுரு 3 : 21 ) என்கின்றார்.
தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியுடன் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம் கொள்ளும்போதுதான் நம்மில் பரிசுத்தம் ஏற்படமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், " அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்." ( 1 யோவான் 3 : 3 ) நாமும் அவர்மேல் அசைக்கமுடியாத நம்பிக்கைக் கொண்டு பாவ மன்னிப்பைப்பெற்று, அதனை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையான ஞானஸ்நானத்துடன் அவரைப்போல பூரணம் அடைந்திடுவோம்.
'ஆதவன்' 💚நவம்பர் 12, 2024. 💚செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,374
"தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 )
நாம் தேவனை வெறுமனே வழிபடுகின்றவர்களாய் இராமல் அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வழிபடவேண்டியது அவசியம். இந்த உலகத்தில் நாம் பல அதிகாரிகள், உயர் பதவியில் உள்ளவர்கள், அமைச்சர்கள் முதலானோரைப் பற்றி அறிந்திருக்கின்றோம். அவர்களுக்கு மரியாதை செலுத்துகின்றோம், சில காரியங்களுக்காக அவர்களை அணுகுகின்றோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துவிட்டுப் பின்னர் மறந்துபோகின்றோம்.
இதுபோலவே நம்மில் பலரும் தேவனது காரியத்தில் இருக்கின்றனர். ஆலயங்களுக்குச் சென்று ஆராதிப்பது, ஜெபிப்பது, வேதம் வாசிப்பது, போன்ற காரியங்களைச் செய்கின்றனர். அதனால் தேவனை அறிந்திருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." என்று.
தேவனை நாம் தனிப்பட்ட விதத்தில் அறியாதிருந்தால் கேடான சிந்தனைகளும் செயல்பாடுகளும்தான் நம்மில் இருக்கும். இதனையே அவர் தேவனை அறியாதவர்கள் செய்யும் காரியங்களாகப் பட்டியலிட்டுக் கூறுகின்றார். அதாவது, தேவனை அறியாவிட்டால், சகலவித அநியாயம், வேசித்தனம், துரோகம், பொருளாசை, குரோதம், பொறாமை, கொலை, வாக்குவாதம், வஞ்சகம், வன்மம், புறங்கூறுதல், அவதூறுபண்ணுதல், தேவபகை, அகந்தை, வீம்பு, பொல்லாதவைகளை யோசித்துப்பிணைத்தல், பெற்றாருக்குக் கீழ்ப்படியாமை, பாவ உணர்வில்லாமை, உடன்படிக்கைகளை மீறுதல், சுபாவ அன்பில்லாமை, இணங்காமை, இரக்கமில்லாமை. ( ரோமர் 1 : 29 - 31 ) இவைகள் நம்முள் இருக்கும் என்கின்றார்.
வெறுமனே தேவனை ஆராதித்துக்கொண்டு மட்டுமே இருப்போமானால் மேலே குறிப்பிட்டப் பாவ காரியங்கள் நமக்குள் இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரை அறியும்போது இந்தக் காரியங்கள் நம்மைவிட்டு அகலும். இன்றைய தியான வசனம் கூறுகின்றது அவரை அறியாத காரணத்தால், அல்லது அவரை அறியவேண்டும் எனும் எண்ணம் இல்லாத காரணத்தால் அவரே இத்தகைய இழிவான காரியங்கள் செய்யும்படி அவர்களை ஒப்புக்கொடுத்தார் என்று.
அன்பானவர்களே, நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அடையும்போது நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாகவும் அவரது ஆவியின் பிரமாணத்துக்கு உட்பட்டவர்களாகவும் வந்துவிடுகின்றோம். வேதம் கூறும் கட்டளைகள் (நியாயப்பிரமாணம்) மற்றும் பாவங்களை நாம் மேற்கொண்டுவிடுகின்றோம்.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று கூறுகின்றார். இது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதனையும் பின்வருமாறு விளக்குகின்றார்:- "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 )
ஆம் அன்பானவர்களே, கட்டளைகளால் செய்ய முடியாததை தாமே நமக்காகச் செய்து முடிக்கும்படி கிறிஸ்து பலியானார். எனவே, அவரது இரத்தத்தால் பாவங்கள் கழுவப்படும் அனுபவத்துக்குள் வரும்போது மட்டுமே நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாகவும் பாவங்களுக்கு விலகினவர்களாகவும் வாழமுடியும். இல்லாவிட்டால் நாம் தகாதவைகளைச் செய்து கேடான சிந்தைக்கு உட்பட்டவர்களாகவே இருப்போம்.
'ஆதவன்' 💚நவம்பர் 13, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,375
"சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது." ( சங்கீதம் 34 : 10 )
உலகத்தில் நமது பலம் செல்வாக்கு இவற்றை நாம் முழுவதுமாக நம்பிவிடாமல் தேவனைச் சார்ந்து வாழவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. சிங்கம் மிகவும் பலம் வாய்ந்த விலங்கு. காட்டுக்கே அது ராஜா. ஆனால் அப்படி பலமுள்ளதாக இருப்பதால் எப்போதும் அவற்றுக்குத் தேவையான உணவு கிடைத்துவிடுவதில்லை. சிலவேளைகளில் உணவு கிடைக்காமல் அவை அலைந்து திரியும். அவற்றின் குட்டிகளும் பட்டினியால் வாடும்.
இதனையே தாவீது ராஜா கண்டு இன்றைய தியான வசனத்தில் உவமையாகக் கூறுகின்றார். தனது அனுபவத்தில் கண்டு உணர்ந்ததையே அவர் கூறுகின்றார். இன்று நாம் பணபலம், அதிகார பலம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் இவற்றையே நிரந்தரம் என நம்பிக்கொண்டு வாழ்வோமானால் இவை அழியும்போது நாம் தாழ்த்தப்பட்டுப்போவோம். ஆம், இன்று சிங்கத்தைப்போல வாழ்ந்தாலும் பலமுள்ள சிங்கத்தின் குட்டிகள் பட்டினியால் வாடுவதுபோல வாடிப்போவோம் என்கின்றார்.
ஆனால் நாம் கர்த்தரைத் தேடுபவர்களாக வாழும்போது நமக்கு எந்த நன்மையும் குறைந்துபோகாது. இன்று பல முற்காலத்துத் திரைப்பட பிரபலங்களைக் குறித்து அடிக்கடி பத்திரிகைகளில் நாம் வாசிக்கின்றோம். பெயரும், வசதியும் குறைவில்லாமல் வாழ்ந்திருந்த அவர்கள் இன்று ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வகையற்றவர்களாக இருப்பதை நாம் வாசிக்கின்றோம். மட்டுமல்ல, பல முன்னாள் பிரபலங்களின் பிள்ளைகள் இன்று பிச்சையெடுத்துக்கூட வாழ்கின்றனர். ஆம், "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது".
தமிழக அமைச்சராக இருந்த ஒருவரது மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வெறும் 5,000 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலைபார்ப்பதை ஒருமுறை கண்டேன். மட்டுமல்ல, அந்தப் பணத்தையும் குடித்துச் சீரழித்து நல்ல குடும்ப வாழ்க்கையும் இல்லாமல் இருப்பதைக் கண்டேன். சிங்கத்தின் குட்டிதான்; ஆனால் இன்று தாழ்ச்சியடைந்து விட்டது.
சக்கரியா தீர்க்கத்தரிசி மூலம் கர்த்தர் நமக்குக் கூறுகின்றார், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 ) என்று. மகனே, மகளே பணம், பதவி போன்ற பலமும் பராக்கிரமுமல்ல, மாறாக கர்த்தரை நம்பி வாழ்வாயானால் அவரது ஆவியினால் உன்னைக் குறைவில்லாமல் நடத்த முடியும் என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
எனவே நாம் இன்று நல்ல நிலையில் சிங்கம்போல இருந்தாலும், நமக்கு பணம், பதவி, செல்வாக்கு மிக இருந்தாலும் நாம் நமது நம்பிக்கையை அவற்றின்மேல் வைத்திடாமல் கர்த்தர்மேல் வைக்கக் கற்றுக்கொள்வோம். அப்படி அவரையே நம்பி வாழ்வோமானால் நமக்கு எந்த நன்மையும் குறைவுபடாமல் அவர் காத்துக்கொள்வார். மட்டுமல்ல, நமது சந்ததிகளும் ஆசீர்வாதமாக வாழ்வார்கள்.
'ஆதவன்' 💚நவம்பர் 14, 2024. 💚வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,376
"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( மாற்கு 10 : 14 )
இன்று நவம்பர் 14 ஆம் நாள் நாம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். குழந்தைகளைப் பொதுவாக எல்லோருக்கும் பிடிக்கும். நாம் அவற்றின் அழகையும் கள்ளமற்ற பேச்சுக்களையும் ரசிக்கின்றோம். இதைவிட நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குழந்தைகளை அதிகம் நேசித்தார். சிறு குழந்தைகளை அவர் தொட்டு ஆசீர்வதிக்கவேண்டுமென்று குழந்தைகளை அவரிடம் கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினர். அவர்களைப்பார்த்து இயேசு கூறியதே இன்றைய தியான வசனம்.
இன்றைய தியான வசனத்தில் அவர் தேவனுடைய ராஜ்ஜியம் குழந்தைகளுக்குரியது என்று கூறாமல் அப்படிப்பட்டவர்களுடையது என்று கூறுகின்றார். அதாவது, குழந்தையைப்போன்ற மனதை உடையவர்களே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கத் தகுதியானவர்கள் என்கின்றார். காரணம், குழந்தைகளிடம் கள்ளம் கபடம் கிடையாது, அவர்களுக்கு ஏமாற்றத் தெரியாது, பொய் தெரியாது, வஞ்சனை கிடையாது, மேலும் வளர்ந்தவர்கள் செய்யும் பல பாவ குணங்கள் கிடையாது.
பொதுவாக நாம் குழந்தைகளிடம், "நீ வளர்ந்து பெரியவன் ஆகும்போது யாராகவேண்டுமென்று விரும்புகின்றாய்?" என்று கேட்பதுண்டு. சிலர், நீ இன்னரைப்போல வரவேண்டும் என்று சிலத் தலைவர்களைக் குறிப்பிட்டுக் குழந்தைகளிடம் "அவரைப்போல வரவேண்டும்" எனச் சொல்வதுண்டு. இப்படி மனிதர்கள் நாம் பெரியவர்களை குழந்தைகளுக்கு முன்மாதிரியாகக் காட்டுகின்றோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பெரியவர்களுக்கு குழந்தைகள்தான் முன்மாதிரி என்கின்றார். பெரியவர்கள் குழந்தைகளை முன்மாதிரியாகக்கொண்டு வாழவேண்டும் என்கின்றார் அவர்.
குழந்தைகளின் இன்னொரு குணம் எதனையும் நம்புவது. பெரியவர்கள் நாம் கூறுவதைக் குழந்தைகள் அப்படியே நம்பும். அதுபோல நாம் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்து சந்தேகப்படாமல் குழந்தைகள் நம்புவதுபோல நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனையே இயேசு கிறிஸ்து, "எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உஙகளுக்குச் சொல்லுகிறேன்." ( மாற்கு 10 : 15 ) என்று கூறுகின்றார்.
இன்று மனிதர்களாகிய நாம் மூளை அறிவால் பலவற்றைச் சிந்திக்கின்றோம். ஆனால் தேவன் மூளை அறிவினால் அறியக்கூடியவரல்ல. அவரை நாம் விசுவாசக் கண்கொண்டு பார்த்து விசுவாசிக்கவேண்டும். "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்". ( மாற்கு 9 : 23 ) என்று கூறவில்லையா? ஆம் அன்பானவர்களே, சிறு குழந்தையைப்போல வேத வசனங்களையும் வேத சத்தியங்களையும் நாம் விசுவாசத்தால் ஏற்றுக்கொண்டு வாழவேண்டியதே கிறிஸ்தவ வழிகாட்டுதல்.
இன்று நமக்கு அறுபது, எழுபது அல்லது அதற்கும் மேலான வயதாகியிருக்கலாம். ஆனால் நாம் இந்த வயதை மறந்து கிறிஸ்துவுக்குள் மறுபடி பிறக்கவேண்டியது அவசியம். மறுபடி பிறந்து குழந்தையின் குணங்களைத் தரித்துக்கொள்ளவேண்டியது அவசியம். எனவேதான் இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் கூறினார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 3 : 3 )
கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்போது நாம் மறுபடி பிறக்கின்றோம். குழந்தைகளாகின்றோம். நமது பழைய பாவங்களை அவர் மன்னித்து நம்மைப் புதிதாக்குகின்றார். எனவே நமது பாவங்கள் மீறுதல்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்; குழந்தைகளாக புதுப்பிறப்பெடுப்போம். அப்போது நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமில்லாதவர்களாக இருப்போம்.
'ஆதவன்' 💚நவம்பர் 15, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,377
"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 16 )
இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் தேவன் குறிப்பிட்ட நாட்களைக் குறித்துள்ளார். நமது இந்த உலக வாழ்க்கையின் அடிப்படையிலேயே நமது மறுவுலக வாழ்க்கை அமையும். மேலும், இந்த உலகம் பொல்லாத உலகமாய் இருக்கின்றது. நமது ஆன்மாவை பாவத்துக்கு நேராக இழுத்து அதனைத் தீட்டுப்படுத்த உலகினில் பல காரியங்கள் உண்டு. இவை அனைத்தையும் நினைவில்கொண்டு நாம் நமக்குத் தேவன் கொடுத்துள்ள காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.
எனவே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் மதியற்றவர்களைப்போல வாழாமல் நம்மைக்குறித்த தேவச் சித்தம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 4;3) என்று வாசிக்கின்றோம்.
எனவே, பரிசுத்தராகவேண்டும் எனும் எண்ணம் சிறிதளவும் இல்லாமல் வாழ்வது, தேவனைக்குறித்த எண்ணமில்லாமல் வாழ்வது, பாவத்திலேயே மூழ்கி ஆவியில் மரித்த வாழ்க்கை வாழ்வது போன்ற செயல்கள் நமக்குக் கொடுக்கப்பட்டக் காலத்தை வீணாக்குவதாகும். "ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து" ( எபேசியர் 5 : 14, 15 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.
ஆம் அன்பானவர்களே, எனவே நாம் நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு மாணவன் தேர்வுக்குத் தயாராகும்போது எவ்வளவு கவனமுடன் இருப்பான் என்பது நமக்குத் தெரியும். அதுபோல காலத்தை வீணாக்கும் மாணவன் இறுதியில் எப்படி தேர்வு முடிவு வெளியாகும்போது வெட்கப்பட்டு அவமானம் அடைவான் என்பதும் நமக்குத் தெரியும். எனவே நாம் நமது ஆவிக்குரிய காரியங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட அழைக்கப்படுகின்றோம்.
நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய கால ஓட்டத்தில் நாம் முன்னேறிச்செல்ல நமது சுய இச்சைகளும், நமது நண்பர்களும், நமது உடன் பணியாளர்களும் மட்டுமல்ல நமது மனைவியோ கணவனோகூட தடையாக இருக்கலாம். இந்தத் தடைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.
தேவன் எப்போது வருவார் என்றோ, நமது இறுதி நாட்கள் எப்போது வருமென்றோ நமக்குத் தெரியாது. ஆனால் ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்று தேவன் விரும்புவதால் ஒவ்வொருவருக்கும் தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கின்றார். "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) எனவே நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.
'ஆதவன்' 💚நவம்பர் 16, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,378
"சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ( ஏசாயா 41 : 17 )
நமது தேவன் எளிமையும் சிறுமையுமானவர்களை மறந்துவிடுபவரல்ல. மாறாக மற்ற அனைவரையும்விட அவர்களை அவர் அதிக அக்கறையுடன் கவனிக்கின்றார். தாவீது ராஜா இதனை அனுபவபூர்வமாக அறிந்திருந்தார். அவரது குடும்பத்தில் அவர் அற்பமானவராக இருந்தார். எளிமையான ஆடுமேய்ப்பவனாக வாழ்ந்தார். ஆனால் அவரைத்தான் தேவன் இஸ்ரவேலின் ராஜாவாக உயர்த்தினார். இந்த அனுபவத்தில் அவர் கூறுகின்றார், "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை." ( சங்கீதம் 9 : 18 )
இதனையே இன்றைய தியான வசனத்தில், "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்" என்று தேவனும் கூறுகின்றார். அதாவது எந்த மனித உதவியும் கிடைக்காமல் வெய்யில் காலத்தில் தண்ணீரைத் தேடி அலைந்து நாவறண்டு போனவன்போல அலையும் சிறுமையானவர்களை நான் கைவிடாதிருப்பேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது மலைப் பிரசங்கத்தில், "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்றும் "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 10 ) என்றும் கூறவில்லையா?
தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போதும் துன்பம் நமது வாழ்வில் தொடர்கதையாக இருக்குமானால் நாம் பாக்கியவான்கள். நமக்குத் தேவன் ஆறுதல் தருவார். அதுபோல அநியாயமாக நாம் உலக மனிதர்களால் நெருக்கப்படும்போது, நமக்கு இந்த உலகத்தில் நீதி கிடைக்காமல் போகும்போது நாம் பாக்கியவான்கள் என்கின்றார்.
இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ஏழைகளும், நீதி மறுக்கப்பட்டவர்களும் உண்டு. ஆனால் ஏன் எல்லோரையும் தேவன் அப்படி உயர்த்தவில்லை என நீங்கள் எண்ணலாம். காரணம் என்னவென்றால், தேவனது பார்வையில் எல்லோரும் தேவனுக்கேற்ற நீதி வாழ்க்கை வாழ்பவர்களல்ல; தேவனுக்காக காத்திருப்பவர்களுமல்ல. இன்றைய தியான வசனம் தேவனுக்கேற்ற வழக்கை வாழ்பவர்களைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றது. வேதாகம வசனங்களை நாம் எப்போதும் ஆவிக்குரிய கண்ணோட்டத்திலேயே பார்க்கப் பழகவேண்டும். உலக அர்த்தம்கொண்டு பார்ப்போமானால் அவை பார்வைக்குப் பைத்தியக்காரத்தனம்போலத் தெரியலாம்.
ஆம் அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் இன்று ஒருவேளை இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளதுபோல சிறுமையும் எளிமையுமானவர்களாகத் தண்ணீரைத் தேடி (உலக மக்களது உதவியைத்தேடி) அது கிடையாமல், தாகத்தால் நாவு வறண்டவர்களாக இருக்கலாம். ஆனால், தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்பவர்களென்றால் கர்த்தராகிய ஆண்டவர் உங்களைப்பார்த்துக் கூறுகின்றார், "கர்த்தராகிய நான் உங்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் உங்களைக் கைவிடாதிருப்பேன்". கலங்காதிருங்கள்.
'ஆதவன்' 💚நவம்பர் 17, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,379
"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )
நாம் ஒரு சமூகமாக வாழ்வதால் பொதுவாக நம்மில் அனைவரும் பல காரியங்களில் மற்றவரைச் சார்ந்து வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எவர் துணையும் எனக்குத் தேவையில்லை என்று நாம் உலகினில் வாழ முடியாது. இன்றைய தியான வசனம் மனுஷனையும் பிரபுக்களையும் நம்பக்கூடாது என்று கூறவில்லை. மாறாக, அவர்களை நம்புவதைவிடவும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று கூறுகின்றது.
சில காரியங்களில் நமக்கு சிலர் உதவுவதாக உறுதி கூறியிருப்பார்கள்; வாக்களித்திருப்பார்கள். ஆனால் நாம் அதனையே நம்பி இருப்பதைவிட கர்த்தர்மேல் பற்று உள்ளவர்களாக நாம் வாழவேண்டும். காரணம், நமக்கு உதவுவதாக வாக்களித்தவர்களது எதிர்காலம் நமக்குத் தெரியாது. உதாரணமாக, வசதியுள்ளவர்களாக இருந்து நமது குழந்தைகளின் கல்விக்கு இறுதிவரை உதவுவதாக வாக்களித்த மனிதன் ஏதோ காரணங்களால் பொருளாதாரத்தில் நலிவுற்றுப் போய்விடலாம். அல்லது ஒருவேளை திடீரென்று இறந்துபோகலாம்.
மட்டுமல்ல, மனிதர்களது குணங்கள் எப்போது மாறும் என்று நாம் சொல்லமுடியாது. எனவேதான் வேதம் கூறுகின்றது, "நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்." ( ஏசாயா 2 : 22 ) என்று. அதாவது, நாம் மனிதர்களது தயவு உதவி இவற்றைப் பெறவேண்டுமானாலும் தேவனது கிருபை நமக்கு அதிகமாகத் தேவையாக இருக்கின்றது. எனவேதான் இன்றைய தியான வசனம், "கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்" என்று இருமுறை கூறுகின்றது.
ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்களைப் போன்றவரல்ல. "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" ( எண்ணாகமம் 23 : 19 ) என்று தேவனைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். மட்டுமல்ல, உலகினில் கர்த்தரால் கூடாத காரியமென்று எதுவுமில்லை. "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? " ( ஆதியாகமம் 18 : 14 )
எனவே, மனிதர்களிடம் நாம் உதவியையும் தயவையும் பெற்றாலும் அவர்களை முற்றிலும் சார்ந்து வாழாமல் அவர்கள்மூலம் நமக்கு உதவும் தேவனையே நாம் சார்ந்துகொள்ளவேண்டும். காரணம், "அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ." ( தானியேல் 2 : 21 ) எனவே எந்த எதிர்மறையான சூழ்நிலையிலும் அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வல்லவராய் இருக்கின்றார்.
யார் நமக்கு உதவுவதாக வாக்களித்தாலும் அதனை நாம் தேவ பாதத்தில் வைத்து ஜெபிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் தேவன்மேல் உறுதியான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். மனிதர்களது வாக்குறுதிகள் மேல் முழு நம்பிக்கைவைக்காமல் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்போம். ஒரு வழி அடைந்தாலும் அவரால் மறுவழி திறக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் அவரால் நமக்கு உதவிட முடியும்.
'ஆதவன்' 💚நவம்பர் 18, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,380
"ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். " ( லுூக்கா 19 : 2, 3 )
ஒரு மனிதனின் ஆர்வத்தைப்பொறுத்தே ஒன்றினை அவன் பெற்றுக்கொள்கின்றான். உலக காரியங்களானாலும் ஆவிக்குரிய காரியமானாலும் இதுவே உண்மையாக இருக்கின்றது. ஒரு பொருளை விரும்பாத அல்லது அது குறித்து எந்த ஆர்வமுமில்லாதவனிடம் அந்தப் பொருளைக் கொடுத்தால் அவனுக்கு அதன் மதிப்புத் தெரியாது.
ஆம் அன்பானவர்களே, நமக்கு நமது முன்னோர்கள் தேவனைப்பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கலாம், வேதாகமத்தை வாசிக்கும்போது தேவனைப்பற்றி பல செய்திகளை வாசித்திருக்கலாம், நம்மை வழிநடத்தும் குருக்கள், பாஸ்டர்கள் தேவனைப்பற்றி கூறியிருக்கலாம். ஆனால் அது முக்கியமல்ல, நாம் தனிப்பட்ட முறையில் அவரை அறிந்திருக்கின்றோமா என்பதே முக்கியம். அப்படி நாம் அவரை அறிய அதிக கடின முயற்சி எடுக்கவேண்டிய அவசியமில்லை. இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய சகேயு போன்ற மனமிருந்தால் போதும்.
சகேயு பணத்துக்காகவோ, உலக ஆசீர்வாதத்துக்காகவோ, நோய் நீங்குவதற்காகவோ அவரைத் தேடவில்லை. மாறாக "அவர் எப்படிப்பட்டவரோ" என்று அறியும்படித் தேடினான். இப்படி நாமும் இயேசு கிறிஸ்துவை வாழ்வில் தேடினால் அவரைத் தனிப்பட்ட முறையில் இரட்சகராக அறிந்துகொள்ளமுடியும். அவனது இருதய ஆர்வத்தை அறிந்த இயேசு அவன் ஏறியிருந்த அத்திமரத்தடியில் வந்து அவனை நோக்கிப்பார்த்தார்.
"என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்." ( ஏசாயா 65 : 1 ) எனும் வசனத்தின்படி அவரைப்பற்றி எதுவும் விசாரித்து அறியாத, அவரை வாழ்வில் தேடாத சகேயு அவரைக் கண்டுகொண்டான். ஒரே காரணம் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அறிய ஆர்வம் கொண்ட அவனது மனதின் ஆசை.
அன்பானவர்களே, வேதாகமத்தை வாசிக்கும்போது அல்லது நல்ல பிரசங்கங்களைக் கேட்கும்போது, அல்லது பரிசுத்தவான்களது அனுபவங்களைக் கேட்கும்போது இவற்றை நாமும் வாழ்வில் அனுபவிக்கவேண்டும், இவர்கள் கூறும் இந்த இயேசு எப்படிப்பட்டவரோ எனும் எண்ணம் நமக்கு உண்மையிலேயே இருக்குமானால் அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்ளலாம். நான் ஏற்கெனவே பல தியானங்களில் குறிப்பிட்டபடி தேவன் தன்னை யாரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு அவரை அறியவேண்டுமெனும் சிறிதளவு ஆர்வமிருந்தாலும் அவருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்.
இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடிய சகேயுவைப்போல அவரை வாழ்வில் பார்க்க ஆசைகொண்டு தேடுவோமானால் அவன் கண்டுகொண்டதுபோல அவரை நாம் தனிப்பட்ட முறையில் கண்டுகொள்வோம். மட்டுமல்ல, அவன் கண்டதுபோல மெய்யான மன மாற்றத்தையும் காண்போம். "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." ( லுூக்கா 19 : 9 ) என்று கூறியதுபோல அவர் நம்மைப்பார்த்தும் கூறி நம்மையும் ஏற்றுக்கொள்வார்.
'ஆதவன்' 💚நவம்பர் 19, 2024. 💚செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,381
"நாங்கள் தந்திரமானக் கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." ( 2 பேதுரு 1 : 16 )
கிறிஸ்தவர்களாக இருந்தாலும்கூட பலர் வேதத்தில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்களை உறுதியாக நம்புவதில்லை. சில குருக்கள்கூட பல வேதாகமச் சம்பவங்களுக்கும் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களுக்கும் வேறு அர்த்தம் கற்பிக்கின்றனர்.
விடுதலை இறையியல் என்ற தப்பறையில் மூழ்கி வாழும் குருவானவர் ஒருவர் பிரசங்கத்தில் இயேசு அப்பங்களைப் பலுக்கச்செய்தது அற்புதமல்ல; மாறாக, அது பகிர்தலை விளக்க கூறப்பட்ட சம்பவம் என்று கூறினார். அன்று இயேசு பிரசங்கித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பலரிடமும் அப்பமும் மீன்களும் இருந்தன. ஆனால் எவரும் உணவு இல்லாத மற்றவர்களோடு அதனைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் முதலில் அந்தச் சிறுவன் தன்னிடம் இருந்ததைக் கொடுத்தவுடன் மற்றவர்களும் தங்களிடம் இருந்ததைக் கொடுக்க முன்வந்தனர். இப்படிச் சேகரித்த அப்பங்களை 12 கூடைகளில் நிரப்பினார்கள். இதுபோலவே தங்களிடம் குவிந்து கிடக்கும் செல்வத்தை அனைவரும் பகிர்ந்துகொடுத்தால் நாட்டில் இல்லாமை நீங்கிவிடும் என்று பிரசங்கித்தார்.
இப்படி முட்டாள்த்தனமாக கிறிஸ்தவ குருக்களே பிரசங்கித்தால் விசுவாசி எப்படி இருப்பான் என்று சிந்தித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட அறிவிலிகளுக்குத்தான், "நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." என்று இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்.
தொடர்ந்து இதனை உறுதிப்படுத்த அவர் கூறுகின்றார், "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்." ( 2 பேதுரு 1 : 17, 18 )
ஆம் அன்பானவர்களே, வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள சத்தியங்களைத் தங்களுக்கு ஏற்பத் திரித்துக் கூறுபவர்கள் ஒருபோதும் சத்தியத்தை அறிந்துகொள்ளமுடியாது. மட்டுமல்ல, இயேசு கூறுகின்றார், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் இயந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்." ( மத்தேயு 18 : 6 ) என்று.
வேதாகம சத்தியங்களை எழுதியுள்ளபடி விசுவாசிப்போம். அப்போதுதான் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோலவும் அவர் கண்டுகொண்டதுபோலவும் தேவனுடைய மகத்துவத்தை நாமும் கண்ணாரக் காணமுடியும்.
'ஆதவன்' 💚நவம்பர் 20, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,382
"கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதனால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை," ( எசேக்கியேல் 7 : 19 )
கர்த்தருடைய இறுதி நியாயத்தீர்ப்பு நாளையே இன்றைய தியான வசனத்தில் சினத்தின் நாள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நியாயத்தீர்ப்பு நாளில் நாம் உலகினில் சேர்த்துவைத்துள்ள நமது செல்வங்கள் நம்மை விடுவிக்காது என்கின்றார் கர்த்தர்.
இந்த உலக வாழ்க்கையில் நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தைக்கொண்டு உலகிலுள்ள அநியாய நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடலாம். இன்று பல ஊழல் அரசியல் தலைவர்கள் அதனைத்தான் செய்கின்றார்கள். பெரிய பெரிய ஊழல்வாதிகளெல்லாம் நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து எளிதில் விடுதலைப்பெற்று சிறைக்குத் தப்பிவிடுகின்றனர்.
ஆனால் சத்திய நியாயாதிபதி கிறிஸ்துவின் முன்னால் நாம் நிற்கும்போது இப்படிச் செய்து தப்பிவிடமுடியாது. ஆம், அவரது சினத்தின் நாளிலே நமது வெள்ளியும் பொன்னும் நம்மை விடுவிக்கமாட்டாது; அவைகளால் அப்போது நமது ஆத்துமா திருப்தியாக்குவதும் இல்லை. காரணம் தேவன் கைக்கூலி வாங்குபவரல்ல. "உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல." ( உபாகமம் 10 : 17 )
நாம் நியாயத்தீர்ப்பு நாளில் தப்பவேண்டுமானால் உலகத்தில் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பதைவிட நாம் செய்யும் நற்செயல்கள்மூலம், பரிசுத்த வாழ்க்கையின் மூலம் பரலோகத்தில் நமது செல்வத்தைச் சேர்த்துவைக்கவேண்டும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை." ( மத்தேயு 6 : 19, 20 )
ஆம், அன்பானவர்களே, கோடி கோடியாக சேர்த்துவைக்கும் பொருள் இந்த உலகத்தில் வேண்டுமானால் நமக்குக் கைகொடுக்கலாம் ஆனால் தேவனுக்குமுன் நாம் நிற்கும்போது அவற்றால் ஒரு பயனும் இல்லை. இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 )
பூச்சியும் துருவும் அழிக்காத, திருடர்களால் திருடமுடியாத பரலோக செல்வத்தை நாம் சேர்த்துவைக்கும்போது அவையே நமது இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் நமக்குக் கைகொடுக்கும். அப்போது நரகத்துக்குத் தப்பும் நமது ஆத்துமாவும் திருப்தியாகும்.
'ஆதவன்' 💚நவம்பர் 21, 2024. 💚வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,383
"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்." ( பிரசங்கி 10 : 1 )
பரிமளத்தைலம் இனிமையான நறுமணம் கொண்டது. இன்றும் ஜெருசலேம் திருப்பயணம் செல்பவர்கள் பரிமளத்தைலத்தை வாங்கி வருவதுண்டு. சாதாரண நறுமணப் பொருட்களைவிட பரிமளத்தைலம் வித்தியாசமான நறுமணம் கொண்டது. ஆனால் இந்த நறுமணத்தைலம் அதனுள் ஈக்கள் விழுமானால் கெட்டு நாறிப்போகும். இதனையே பிரசங்கி மதிகெட்டச் செயல் புரிபவனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.
நாம் சிறப்பான பட்டங்கள் பெற்றிருக்கலாம், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர்களாக இருக்கலாம், ஆனால் நாம் மதிகெட்டத்தனமாக ஒரு சிறிய செயலைச் செய்துவிட்டாலும் அது நமது பெயர் நாறிப்போகச் செய்துவிடும்.
நல்ல பெயரும் புகழும் கொண்ட ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரைக்குறித்து அறிவேன். அவர் பல பட்டங்கள் பெற்றவர். மட்டுமல்ல நல்ல இரக்ககுணம் கொண்டவர். பலருக்கும் உதவக்கூடியவர். அந்தக் கிராமத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அனைவரும் அவரை மதித்து ஊரில் நடக்கும் எந்த கூட்டத்திலும் அவரை முன்னிலைப்படுத்தி வந்தனர். இந்தப் பேராசிரியர் நமது ஊருக்குக் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர். ஆம், அந்தப் பேராசிரியரின் பெயர் உண்மையிலேயே பரிமளத்தைலம்போல நறுமணமானதாக இருந்தது.
ஆனால் ஏதோ ஒரு சூழலில் அந்தப் பேராசிரியர் அந்த ஊரிலுள்ள கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் ஒருமுறை தகாத உறவு கொண்டுள்ளார். அதனை அவர் யாருக்கும் தெரியாது என்று எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்துவிட்டார். அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவள் தனது கர்ப்பத்துக்கு இவர்தான் காரணம் என்று இந்தப் பேராசிரியரைக் கைகாட்டினார். ஊர் மக்களால் அதனை நம்ப முடியவில்லை. இவரா? ..இவரா? என்று வாய் பிளந்து கூறினர்.
அந்தப் பேராசிரியரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. திருமணமான மகன், மகள் அவருக்கு உண்டு. பேரக்குழந்தைகள் உண்டு. இதுவரை அவரது மருமக்கள் அவரைக்குறித்து பெருமைபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று எல்லோரும் அவரை அற்பமாகப் பார்த்தனர். அவரால் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை; அவரால் இந்த அவமானத்தைத் தாங்கமுடியவில்லை. அன்று இரவோடு இரவாக தற்கொலைசெய்து தனது வாழ்வை முடித்துக்கொண்டார்.
செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் என இன்றைய தியான வசனம் சொல்வதுபோல சொற்பமான மதிகெட்டச் செயல் அந்தப் பேராசிரியரை அழிவுக்குநேராகக் கொண்டு சென்றுவிட்டது.
ஆம் அன்பானவர்களே, இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடாமல் நம்மை நாம் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். நமது சுய முயற்சியால் நல்லவராக வாழ முயலும்போது இத்தகைய மதிகேடுகள் நமது வாழ்வில் வந்துவிடலாம். எனவே நாம் தேவனையும் அவரது ஆவியின் வல்லமையையும் நம்பி வாழவேண்டியது அவசியம். சொற்ப மதியீனமும் நம்மைக் கெடுக்காமல் அவர் மட்டுமே நம்மைக் காப்பாற்றி நடத்த முடியும்.
'ஆதவன்' 💚நவம்பர் 22, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,384
"அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்." ( மத்தேயு 26 : 49, 50 )
இன்றைய தியான வசனம் கெத்சமெனி தோட்டத்தில் இயேசுவைக் கைதுசெய்ய பிரதான ஆசாரியனும் மூப்பர்களும் திரளான மக்களும் யூதாஸ் இஸ்காரியாத்தோடு வந்தபோது நடந்த சம்பவத்தைக் குறிக்கின்றது.
இந்த யூதாஸ் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவன்தான்; அவரைபற்றியும் அவர் செய்த அற்புதங்களையும் கண்ணால் பார்த்தவன்தான். இப்போதும் அவன் இயேசுவை வாழ்த்தவே செய்தான், அவரை முத்தமிட்டான். இந்தச் சம்பவம் அவன் வெளிப்பார்வைக்கு இயேசு கிறிஸ்துவோடு வாழ்பவனாக இருந்தாலும் உண்மையில் அவரோடு வாழவில்லை என்பதையே குறிக்கின்றது.
இந்த சம்பவங்கள் நம்மை நாமே நிதானித்துப்பார்க்கவும் நம்மைத் திருத்திக்கொள்ளவும் அறிவுறுத்துகின்றது. ஆம் அன்பானவர்களே, இந்த யூதாசைபோலவே நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆலய ஆராதனைகளில் பல ஆண்டுகள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ளோம் என்று கூறிக்கொள்கின்றோம். யூதாஸ் அவரைப் புகழ்ந்ததுபோல அவரை நமது நாவினால் துதிக்கின்றோம். அவரது சிலுவையை முத்தமிடுகின்றோம்.
ஆனால் இயேசு கிறிஸ்து யூதாஸிடம் கேட்டது போல நம்மிடம், "சிநேகிதனே / சிநேகிதியே என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று கேட்டால் என்ன பதில் கூறுவோம்? இதுவே நாம் சிந்திக்கவேண்டியது. நம்மில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித மக்களும் இந்தக் கேள்விக்கு ஏதாவது ஒரு உலக ஆசீர்வாதம் சம்பந்தமான பதிலையே கூறுவார்கள். ஆனால் இந்தக் கேள்விக்கு யூதாஸ் எந்தப்பதிலும் கூறவில்லை.
நாம் உண்மையில் எதற்காக இயேசு கிறிஸ்துவைத் தேடுகின்றோம்? எதற்காக அவரிடம் வந்து அவரை முத்தம் செய்கின்றோம். உலக ஆசீர்வாதங்களை மட்டுமே நாடி நாம் அவரிடம் வருவோமானால் நாமும் யூதாசைப் போன்றவர்களே. ஆம் அவன் முப்பது வெள்ளிக்காசு கிடைக்கும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவரை வாழ்த்தி முத்தமிட்டான். நாம் அவனைப்போல அறிவிலிகளாக இருக்கக்கூடாது.
நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறவேண்டும் எனும் ஆர்வத்தில் அவரிடம் வருவோமானால் நாம் அவரை வாழ்வில் நம்முள் பெற்று அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் யூதாசைப் போலவே அவரை முத்தமிட்டு நெருங்குகின்றவர்களாகவே இருப்போம்.
"சிநேகிதனே / சிநேகிதியே என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று நம் ஒவ்வொருவரிடமும் இயேசு கிறிஸ்து இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்.
'ஆதவன்' 💚நவம்பர் 23, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,385
"அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்." ( யோவான் 4 : 42 )
இன்று கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் பொதுவாக இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையே பெரிதாகக் கூறிக்கொண்டு வாழ்கின்றனர். அன்றும் இதுபோலவே அவரதுபின்னே சென்ற திரளான மக்களில் பலரும் அவர் செய்த அற்புதங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவுமே சென்றனர். எனவே அவர்களில் பலரும் அவரை ஆத்தும இரட்சகராக கண்டுகொள்ள முடியவில்லை.
ஆனால் இதற்கு மாறாக, அவரது அற்புதங்களையல்ல, அவரது வாயின் வார்த்தைகளை நாம் வாசித்து உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். இப்படியே சமாரியா மக்கள் அவரை உலக இரட்சகராக அறிந்துகொண்டனர். அதனையே அவர்கள் இன்றைய தியான வசனத்தில் "அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்." என அறிக்கையிடுகின்றனர். அதாவது, அற்புதங்களைக் கண்டு அல்ல மாறாக, அவருடைய உபதேசத்தைக் கேட்டு அறிந்துகொண்டோம் என்கின்றனர்.
யூதர்கள் சமாரியர்களை அற்பமாக, தீண்டத்தகாதவர்களாக எண்ணினார். ஆனால் அந்தச் சமாரியர்கள்தான் இயேசுவின் வார்த்தைகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவரை உலக இரட்சகராகக் கண்டுகொண்டனர். ஆனால் அவரது வல்ல செயல்களைக் கண்டும் அவரது வார்த்தைகளைப் புறக்கணித்த யூதர்களில் பலரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தன்னை நம்பவேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் வல்ல செயல்கள் பல செய்தார்.
நான் சொல்வதை நம்புங்கள் அல்லது நான் செய்யும் வல்ல செயல்கள் அற்புதங்களைக் கண்டாவது என்னை நம்புங்கள் என்றார் அவர். "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்றார்.
ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவிடம் அற்புதங்களையும் அதிசயங்களையும் எதிர்பார்த்து அவரிடம் வருவதைவிட அவரது வார்த்தைகளை அறியும் ஆர்வமுள்ளவர்களாகவும் அவற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவர்களுமாகவும் வாழவேண்டியது அவசியம். இறுதிநாளில் அவர் தனது வசனத்தின்படியே நியாயம்தீர்ப்பார். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12: 48) என்றார் இயேசு.
உலக ஆசீர்வாதங்களைக் கண்டு அனுபவிக்க ஓடிய பெரும்பாலான யூதர்களைப்போல அல்லாமல் அவருடைய உபதேசத்தை கேட்டு அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசித்த சமாரியர்களைப்போல நாமும் மாறவேண்டியதே நாம் செய்யவேண்டியது. அப்போதுதான் நல்ல சமாரியன் இயேசு என்றும் நம்மோடு இருப்பார்.
'ஆதவன்' 💚நவம்பர் 24, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,386
"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்". (கலாத்தியர் 3:29)
சுதந்திரவாளி, சுதந்திரம் எனும் வார்த்தைகளை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். இது முறையே உரிமையுடையவன், உரிமை எனும் அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தியான வசனம் கூறுகின்றது, நாம் கிறிஸ்துவுக்கு உரிமையுடையவர்களாக இருப்போமானால் நாமே ஆபிரகாமின் சந்ததி. வாக்குத்தத்தங்களுக்கு உரிமையுள்ளவர்கள்.
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார் அதுவே அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆம் அன்பானவர்களே, தேவன் நமது நீதிசெயல்களைப்பார்த்து நம்மை இரட்சிப்பதில்லை. மாறாக அவர்மேல்கொள்ளும் விசுவாசத்தால் நாம் இரட்சிக்கப்படுகின்றோம். "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 6, 7 )
கிறிஸ்தவ மார்க்கமே விசுவாச மார்க்கம்தான். கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை மீட்படையச் செய்கின்றது. மட்டுமல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆபிரகாமுக்குப் பலித்ததுபோல கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் நமக்கும் பலிக்கின்றது. "................................அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது." ( ரோமர் 4 : 16 ) என்று வாசிக்கின்றோம்.
எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்" என்று. நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாகும்போது நாமே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கின்றோம். மட்டுமல்ல, அந்த வாக்குறுதியின்படி நாம் உரிமைக் குடிமக்களாகின்றோம்.
அடிமைக்கும் உரிமைக் குடிமகனுக்கும் வித்தியாசமுண்டு. அடிமைகளாக நாம் இருப்போமானால் கிறிஸ்துவிடம் நமக்கு உரிமைகள் எதுவும் இல்லாதவர்களாக இருப்போம். "அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 30 )
நாம் அடிமைகளாக புறம்தள்ளப்படாமல் இருக்கவேண்டுமானால் நாம் விசுவாசத்தால் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியம். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருப்போம். எனவே கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாக வாழ்வோம். பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரது வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாற முயலுவோம்.
'ஆதவன்' 💚நவம்பர் 25, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,387
"கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்." ( சங்கீதம் 71 : 1 )
நாம் வாழ்வில் சிறுமை அடையும்போது நமது உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் வெட்கமடைந்து போகின்றோம். அவர்களோடு நம்மால் சகஜமாக பழகமுடிவதில்லை. இதற்குக் காரணம் ஒன்று நமது மனநிலை இன்னொன்று நமது சிறுமையைப்பார்த்து மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணுவதும் நடத்துவதும். சிலர் வெளிப்படையாகவே சிறுமையானவர்களை அற்பமாக நடத்துவதுண்டு. சிலவேளைகளில் நமது பிள்ளைகளின் வாழ்க்கையை; அவர்களது வேலைவாய்ப்பற்ற நிலைமையை அல்லது அவர்களது திருமணத் தோல்விகளைக் குறிப்பிட்டு நம்மை வெட்கப்படும்படியான பேச்சுக்களை நாம் கேட்க நேரிடும்.
இத்தகைய அற்பமடையும் சூழ்நிலை இன்றைய சங்கீத ஆசிரியருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் கூறுகின்றார், "தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்." ( சங்கீதம் 71 : 11 ) ஆம், இவனது வாழ்க்கை இவ்வளவுதான்; இனி இவன் முன்னேறப்போவதில்லை என்று கூறிக்கொள்கின்றனர்.
ஆனால் இத்தகைய சிறுமையடைந்தவர்களைப் பார்த்துத் தேவன் கூறுகின்றார், "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்" ( ஏசாயா 61 : 7 ) ஆம் அன்பானவர்களே, தேவனையே நாம் சார்ந்து வாழும்போது நமது வெட்கத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு பலனும் மகிழ்ச்சியும் நமக்குத் தேவன் தருவார். இன்று நீங்கள் இப்படி வெட்கப்பட்டு மற்றவர்களைவிட்டுத் தனித்து வாழ்கின்றீர்களா? கவலைபடாதிருங்கள்.
அப்போஸ்தலரான பவுல் அடிகளுக்கு இந்த நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்த நம்பிக்கையில் அவர் கூறுகின்றார், "நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்..." ( 2 தீமோத்தேயு 1 : 12 ) ஆம், நாம் விசுவாசித்திருக்கின்றவர் யார் என்பது நமக்குத்தெரியும். அவரும் நம்மைப்போல ஒடுக்கப்பட்டும் வெட்கப்பட்டும் அவமானத்துக்கும் உள்ளானவர்தான். அவருக்கு நமது நிலைமை நன்கு தெரியும்.
"அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; .." ( ஏசாயா 53 : 3 ) புறக்கணிக்கப்படும் நம்மைவிட்டுச் சிலர் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்வதுபோல நமது ஆண்டவராகிய இயேசுவை அவரது அற்பமான நிலையில் கண்டவர்கள் முகங்களைத் திருப்பிக்கொண்டனர்.
"அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." ( ஏசாயா 53 : 7 )
ஒடுக்கப்பட்டு வெட்கமடையும்போது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்போல அமைதியாக நம்பிக்கையுடன் இருப்போம். நமது வெட்கப்படுதல் நிரந்தரமல்ல; காரணம், நாம் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவோம். அவர் ஒருபோதும் நம்மை வெட்கத்திலேயே அமிழ்ந்துபோக விடமாட்டார்.
'ஆதவன்' 💚நவம்பர் 26, 2024. 💚செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,388
"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை." ( மாற்கு 13: 31)
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவன் பூமியையும் வானத்தையும் வானிலுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் பூமியிலுள்ள ஊரும் பிராணிகள், பறவைகள், மிருகங்கள் புற்பூண்டுகள் இவற்றையெல்லாம் படைப்பதையும் ஒவ்வொன்றையும் படைத்து அவை நல்லதெனக் கண்டார் என்றும் வாசிக்கின்றோம். இறுதியாக அவர் மனிதனைப் படைத்தார்.
ஆனால் அப்படி அனைத்தையும் படைத்து நல்லதெனக் கண்ட தேவன் அவை அனைத்தும் அழித்து ஒழிக்கப்படும் என்கின்றார். ஆம், "அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்." ( மாற்கு 13: 24, 25) அதாவது இவை அனைத்தும் அழிக்கப்பட்டு ஒழிந்துபோகும் என்று வாசிக்கின்றோம்.
வானம், அவர் பார்த்துப்பார்த்து உண்டாக்கி நல்லதெனக்கண்ட பூமி இவை அனைத்தும் அழிக்கப்படும். ஆனால், அவரது வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை என்கின்றார். வார்த்தை என்பது தேவனைக் குறிக்கின்றது. இதனை நாம் யோவான் நற்செய்தியில், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1: 1) என வாசிக்கின்றோம்.
ஆதியிலே வார்த்தையாக இருந்தவர்தான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இதனையும் அப்போஸ்தலரான யோவானே "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1: 14) என்று குறிப்பிடுகின்றார். அதாவது அவர் உருவாக்கியவை அனைத்தும் அழிக்கப்படும் ஆனால் வார்த்தையான அவரே நிலைத்திருப்பார்.
அன்பானவர்களே, நாம் இன்று பூமியில் சொத்துசுகங்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றோம். ஆனால் பூமியும் வானமும் அழிக்கப்படும்போது இவையும் அழிக்கப்படும். ஆனால் வார்த்தையான அவர் மட்டும் நிலைத்திருப்பார். நாம் அவரோடு இணைந்த வாழ்வு வாழ்வோமானால் அவர் நிலைத்திருப்பதுபோல நாமும் அவரோடு நிலைத்திருப்போம். இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்." ( யோவான் 6: 57) என்று கூறினார்.
இயேசுவைப் புசிப்பது என்பது அவரை நமது உள்ளத்தில் முழுமையாக ஏற்றுகொல்வதைக் குறிக்கின்றது. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு இணைந்த வாழ்க்கை வாழும்போது நாம் அவரைப் புசிக்கின்றோம். அவர் எத்தனை இனிமையானவர் என்பதனை வாழ்வில் ருசிக்கின்றோம். மட்டுமல்ல, அவர் நிலைத்திருப்பதுபோல நாமும் அவரோடு நிலைத்திருப்போம். இதற்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பிதாவிடம் ஜெபித்துவிட்டார். "...........நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17: 24)
அவரைத் தனிப்பட்ட முறையில் வாழ்வில் ஏற்றுக்கொண்டு ருசிக்க முயலுவோம். அப்போது, வானமும் பூமியும் ஒழிந்தாலும் ஒழியாத வார்த்தையான தேவனோடு நாமும் ஒழியாமல் நிலைத்திருப்போம். இதுவே நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு.
'ஆதவன்' 💚நவம்பர் 27, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,389
"என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை..." ( யோபு 27: 2, 3)
மனிதர்களில் பலர் உண்மையும் நேர்மையுமான வாழ்க்கை வாழ்ந்தாலும் துன்பங்கள் தொடரும்போது, "நான் நல்லவனாக வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களைப்போல் நானும் தவறான காரியங்களில் ஈடுபட்டால் என்ன?" என்று தங்களுக்குள் எண்ணுவதும் சிலவேளைகளில் தவறான காரியங்களில் ஈடுபடுவதும் உண்டு.
ஆனால் இன்றைய தியான வசனத்தைக் கூறும் யோபு அனுபவித்தத் துன்பங்களை நாம் அறிவோம். அனைத்துச் செல்வங்களையும், குழந்தைகளையும், உடல் நலத்தையும் இழந்து உயிர் மட்டும் உடம்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும்போது அவர் கூறுகின்றார், "என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை..." அதாவது, என்னதான் துன்பங்கள் வந்தாலும் நான் தேவனுடைய காரியங்களில் உண்மையாகவே இருப்பேன் என்கிறார்.
யோபு இப்படியான மனநிலை உள்ளவராக இருந்ததால்தான் யோபு முதல் அதிகாரத்தில் முதல் வசனமாகக் கூறப்பட்டுள்ளது, "ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." ( யோபு 1: 1) என்று. உத்தமன், சன்மார்க்கன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று யோபுவைப்பற்றி நாம் வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே யோபு இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்ததால்தான் இறுதியில் தான் இழந்தவை அனைத்தையும் இரண்டுமடங்காய்ப் பெற்று அனுபவித்தார். "கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்." ( யோபு 42: 12) என்று கூறப்பட்டுள்ளது.
தேவனுக்குமுன் நாம் உண்மையும் உத்தமுமாக வாழும்போது தேவன் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதற்கு யோபு நமக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றார். யோபுவைபோல நாமும் "என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை..." என உறுதியெடுக்கவேண்டும்; அதனைச் செயலில் காண்பிக்கவேண்டும்.
மற்றவர்களை எப்படி வாழ்கின்றார்கள் என நாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நமது வாழ்வின் தாழ்மையைக் காரணம் காட்டி நேர்மை தாவறவேண்டியதில்லை. யோபுவைபோல வாழ முயற்சியெடுப்போம். "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." ( நீதிமொழிகள் 28: 20) என்று வேதம் கூறுகின்றது.
"இன்றைய தியான வசனத்தை நமது வாழ்வாக்க முயற்சியெடுப்போம். நமது உதடுகள் தீமை சொல்லாமலும் நமது நாவு கபடம் பேசாமலும் இருக்கட்டும்.
"உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்." (சங்கீதம் 34:13)
'ஆதவன்' 💚நவம்பர் 28, 2024. 💚வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,390
"அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்." ( சங்கீதம் 91 : 14 )
இன்றைய தியான வசனம் நாம் அனைவருமே அதிகம் வாசித்துள்ள 91 ஆம் சங்கீத வசனமாகும். இன்றைய இந்த தியான வசனத்தில் இரண்டு காரியங்களைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது கர்த்தரை அறிதல் மற்றும் அவர்மேல் வாஞ்சையாய் (பற்றுதலாய்) இருத்தல்.
முதலில் நாம் அவரை அறிந்தவர்களாக இருக்கவேண்டும். அறிதல் என்பது பெயரளவில் அவரது பெயரையும் அவர் செய்யும் அற்புதங்களையும் அறிவதல்ல; மாறாக தனிப்பட்ட முறையில் நாம் நமது வீட்டிலுள்ள அப்பா, அம்மா அல்லது கணவன், மனைவி இவர்களைக்குறித்து அறிந்திருப்பதைப்போல அவரை அறிவதைக் குறிக்கின்றது.
நமக்கு நமது அப்பா அம்மாவுக்கு என்ன உணவு பிடிக்கும், என்ன செய்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை அறிந்திருக்கின்றோம். இதுபோல ஒரு கணவனும் மனைவியும் தங்களது வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள்ள குடும்ப மற்றும் தனிப்பட்டப் பிரச்னைகளைக்குறித்து ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்வார்கள். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது.
இதுபோல நாம் தேவனோடுள்ள உறவில் இருப்பதுதான் அவரை அறிதல். தேவன் நாம் என்ன செய்வதை அதிகம் விரும்புவார், அவரை மகிழ்ச்சிப்படுத்த நாம் என்ன செய்யவேண்டும், நமது பிரச்சனைகள் துன்பங்கள் மட்டுமல்ல, நமது மகிழ்ச்சியான தருணங்கள் இவை அனைத்தையும் நாம் அவரோடு பகிர்ந்துகொள்வது இவை தேவனை நாம் அறிந்திருந்தால் நமக்குள் இருக்கும். இப்படி தேவனை நாம் அறிந்தவர்களாக இருக்கவேண்டும். மேலும் இது, தேவனது பெயரை அறிவதையல்ல, மாறாக அவரை நமது உள்ளத்தில் அனுபவித்து அறிவதைக் குறிக்கின்றது.
மட்டுமல்ல, "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்." ( 1 யோவான் 2 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேவ கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடப்பது அவரை நாம் அறிந்துள்ளோம் என்பதனை வெளிப்படுத்தும். குறிப்பாக தேவனது அன்புக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது. "பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." (1 யோவான் 4:7,8)
இரண்டாவது காரியம் அவர்மேல் வாஞ்சையாய் இருத்தல் அல்லது பற்றுதலாய் இருத்தல். பலரும் தேவன்மேல் பற்றுதலாய் இருப்பது என்பதை ஆலயங்களுக்குச் செல்வதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது மட்டுமல்ல, மாறாக, என்ன துன்பங்கள் வந்தாலும் யோபுவைபோல தேவன்மேலுள்ள விசுவாசத்தில் தளர்ந்திடாமல் அவர்மேல் தொடர்ந்து அன்புகூர்ந்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்படிவது. "ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்" (1 பேதுரு 2:19) என்கின்றார் பேதுரு.
ஆம் அன்பானவர்களே, இப்படி நாம் வாழ்வோமானால் "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்." என்று இன்றைய தியான வசனம் கூறுவதுபோல அவர் நம்மை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவித்து உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார்.
'ஆதவன்' 💚நவம்பர் 29, 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391
"மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்." (1 யோவான் 2 : 16)
இந்த உலகத்தில் நம்மை அதிகம் பாவத்துக்குள்ளாக்கும் காரியங்கள் சிலவற்றை அப்போஸ்தலரான யோவான் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என அவைகளை வகைப்படுத்திக் கூறுகின்றார். ஆம், இவைகளே நம்மைப் பாவத்துக்கு நேராக இழுத்துச் செல்கின்றன. இச்சை என்பது எதன்மேலாவது நாம் கொள்ளும் அதிகப்படியான ஆசையைக் குறிக்கின்றது.
மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை இவையே ஏதேனில் ஆதாம் ஏவாள் பாவம் செய்யக் காரணம். "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3: 6) என்று வாசிக்கின்றோம். அதாவது அவர்களது கண்களும் கனியை உண்ணவேண்டும் எனும் உடல் ஆசையும் அவர்களைப் பாவத்தில் வீழ்த்தியது.
இன்றும் மனிதர்கள் செய்யும் பல பாவ காரியங்களுக்கு கண்களும் இத்தகைய உடல் ஆசைகளும்தான் காரணமாக இருக்கின்றன. அடுத்ததாக இன்றைய தியான வசனம் கூறும் பாவம், "ஜீவனத்தின் பெருமை". அதாவது தனது வாழ்க்கையைக்குறித்த பெருமை. கண்களால் கண்டதை உடல் அனுபவித்தபின் அதனை மேலும் சேர்த்து வைக்கிறான் மனிதன். இது அவனுக்கு அதிகாரத்தையும் "தான்" எனும் அகம்பாவ பெருமையையும் கொடுக்கின்றது. மற்றவர்களை அவமதித்து அற்பமாக எண்ணத் துவங்குகின்றான். எனவேதான் அப்போஸ்தலரான யோவான் இவையெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, மாறாக அவைகள் உலகத்தினால் உண்டானவைகள் என்று கூறுகின்றார்.
அப்படி அவை உலகத்தினால் உண்டானவை ஆதலால் அவைகள் நிரந்தரமல்ல. காரணம், இந்த உலகமே நிரந்தரமல்ல பின் எப்படி இந்த நிரந்தரமில்லாத உலகத்தால் உண்டானவை நிரந்தரமாக இருக்க முடியும்? எனவேதான் அவர் தொடர்ந்து கூறுகின்றார், "உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்." (1 யோவான் 2 : 17)
இப்படி நாமும் இவற்றுக்கு அடிமைகளாக வாழ்வோமானால் கண்களின் இச்சைக்கும் மாம்சத்தின் இச்சைக்கும் அடிமைகளான ஆதாமும் ஏவாளும் மேலான தேவ தொடர்பை இழந்ததுபோல நாமும் தேவனது ஐக்கியத்தை இழந்துவிடுவோம். "எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது." ( ரோமர் 8: 7) மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை மேற்கொண்டு ஆவியின் சிந்தையின்படி வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
மாம்சசிந்தையை மேற்கொண்டு ஆவியின் சிந்தைபடி வாழும்போதுதான் நாம் மெய்யான சமாதானத்தையும் நித்திய ஜீவனையும் பெற்று மகிழ முடியும். ஆம், "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்." ( ரோமர் 8: 6)
'ஆதவன்' 💚நவம்பர் 30, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,392
"இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்." ( யோவான் 6 : 9 )
தேவனுடைய அளப்பரிய வல்லமையினை உணராமல் சூழ்நிலைகளை மட்டுமே பார்த்து பலவேளைகளில் நாம் கலங்கிவிடுகின்றோம். அல்லது நமக்கு இருக்கும் அற்பமான வருமானத்தைக்கொண்டு எப்படி இந்த உலகத்தில் மற்றவர்களைப்போல் நாமும் வாழ முடியும்? என ஏக்கத்துடன் நமக்குள் கேள்வி கேட்டுக்கொள்கின்றோம். இதுபோலவே பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா எண்ணிக்கொண்டு கூறுவதே இன்றைய தியான வசனம்.
இயேசு போதித்து முடித்தபின் அந்தப் போதனையைக் கேட்கக் கூடியிருந்த மக்களை பசியோடு அனுப்ப விரும்பாமல் அவர்களுக்கு உணவளிக்க விரும்பினார். "இந்த மக்களுக்கு பசியை ஆற்றிட நாம் எங்கே சென்று உணவு கொள்ளலாம்? என்று சீடர்களைப்பார்த்து கேட்டார். அப்போது அவருடைய சீடராகிய பிலிப்பு, "இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கினாலும் இவர்களுக்கு உணவளிக்க அது போதாதே!!" என்றார். அதனைத் தொடர்ந்து இன்னொரு சீடரான அந்திரேயா இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, இதுபோலவே பலவேளைகளில் நாமும் கலங்கி நிற்கின்றோம். அந்திரேயா கூட்டத்தைப் பார்த்து மலைத்து, "ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?" என்று கூறியதுபோல நாமும், ஐயோ எனக்கு இவ்வளவுதானே வருமானம் வருகின்றது, எனக்குச் செலவுகள் அதிகம் இருக்கின்றதே என்று நமது செலவுகளைப் பட்டியலிட்டுப் பார்க்கின்றோம். 'இத்தனைச் செலவுகளைச் சமாளிக்க இந்த வருமானம் எம்மாத்திரம்?' என ஏங்குகின்றோம்.
ஆனால் அதே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் ஐயாயிரம் மக்களது பசியைத் தீர்த்ததுமல்லாமல் சாப்பிட்டு முடித்தபின் மிச்சமாக பன்னிரண்டு கூடைகளை நிரம்பச் செய்தது.
இந்த அதிசயம் நடைபெறக் காரணம் ஒரு சிறுவன். இதுகுறித்து சாது சுந்தர்சிங் அவர்களுக்குத் தேவன் வெளிப்படுத்தினதை அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:- 'அந்தச் சிறுவன், "நான் இயேசுவின் பிரசாங்கத்தைக் கேட்கச் செல்கிறேன்" என்று தன் தாயிடம் கூறியபோது அவள் அவனுக்கு இந்த உணவை ஏற்பாடுசெய்து கொடுத்து அனுப்பியிருந்தாள். அங்கு அன்று அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பலரிடம் உணவுகள் இருந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். இந்தச் சிறுவன் மட்டும் ஆர்வத்துடன் தனது உணவைக் கொடுக்க முன்வந்தான்.' ஆம் அன்பானவர்களே, நமக்கு உள்ளது குறைவாக இருந்தாலும் அந்தக் குறைவிலிருந்து நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நமது தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்திப்பார்; மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நம்மை ஆசீர்வாதமாக மாற்றுவார்.
அன்று எலியாவுக்கு அப்பம் கொடுத்த சாறிபாத் விதவை வேறு எதுவுமில்லாதவள். கையிலிருந்த கடைசி மாவில் அப்பம்சுட்டு சாப்பிட்டுவிட்டு நானும் மகனும் பசியால் சாகத்தான் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவள். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அவள் அந்த அப்பத்தை எலியாவுடன் பகிர்ந்துகொண்டாள். ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டாள். (1 இராஜாக்கள் 17: 10 - 16)
"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்." ( லுூக்கா 6 : 38 )
No comments:
Post a Comment