Thursday, November 07, 2024

காலத்தைப் பயன்படுத்திக்கொள்வோம்

 'ஆதவன்' 💚நவம்பர் 15, 2024. 💚வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,377


"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 16 )

இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் தேவன் குறிப்பிட்ட நாட்களைக் குறித்துள்ளார். நமது இந்த உலக வாழ்க்கையின் அடிப்படையிலேயே நமது மறுவுலக வாழ்க்கை அமையும். மேலும், இந்த உலகம் பொல்லாத உலகமாய் இருக்கின்றது. நமது ஆன்மாவை பாவத்துக்கு நேராக இழுத்து அதனைத் தீட்டுப்படுத்த உலகினில் பல காரியங்கள் உண்டு. இவை அனைத்தையும் நினைவில்கொண்டு நாம் நமக்குத் தேவன் கொடுத்துள்ள காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) என்கின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் மதியற்றவர்களைப்போல வாழாமல் நம்மைக்குறித்த தேவச் சித்தம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 4;3) என்று வாசிக்கின்றோம். 

எனவே, பரிசுத்தராகவேண்டும் எனும் எண்ணம் சிறிதளவும் இல்லாமல் வாழ்வது, தேவனைக்குறித்த எண்ணமில்லாமல் வாழ்வது, பாவத்திலேயே  மூழ்கி ஆவியில் மரித்த வாழ்க்கை வாழ்வது போன்ற செயல்கள்   நமக்குக் கொடுக்கப்பட்டக் காலத்தை வீணாக்குவதாகும். "ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து" ( எபேசியர் 5 : 14, 15 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம் அன்பானவர்களே, எனவே நாம் நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ள வேண்டும். ஒரு மாணவன் தேர்வுக்குத் தயாராகும்போது எவ்வளவு கவனமுடன் இருப்பான் என்பது நமக்குத் தெரியும். அதுபோல காலத்தை வீணாக்கும் மாணவன் இறுதியில் எப்படி தேர்வு முடிவு வெளியாகும்போது வெட்கப்பட்டு அவமானம் அடைவான் என்பதும் நமக்குத் தெரியும். எனவே நாம் நமது ஆவிக்குரிய காரியங்களில் அதிக அக்கறையுடன் செயல்பட அழைக்கப்படுகின்றோம். 

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய கால ஓட்டத்தில் நாம் முன்னேறிச்செல்ல நமது சுய இச்சைகளும், நமது நண்பர்களும், நமது உடன் பணியாளர்களும் மட்டுமல்ல நமது மனைவியோ கணவனோகூட தடையாக இருக்கலாம். இந்தத் தடைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.  

தேவன் எப்போது வருவார் என்றோ, நமது இறுதி நாட்கள் எப்போது வருமென்றோ நமக்குத் தெரியாது. ஆனால் ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்று தேவன் விரும்புவதால் ஒவ்வொருவருக்கும் தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கின்றார்.   "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) எனவே  நமக்குக் கொடுக்கபட்டக் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

No comments: