Sunday, November 10, 2024

வெள்ளியும் பொன்னும் விடுவிக்காது

 'ஆதவன்' 💚நவம்பர் 20, 2024. 💚புதன்கிழமை             வேதாகமத் தியானம் - எண்:- 1,382

 

"கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை," ( எசேக்கியேல் 7 : 19 )

கர்த்தருடைய இறுதி நியாயத்தீர்ப்பு நாளையே இன்றைய தியான வசனத்தில் சினத்தின் நாள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நியாயத்தீர்ப்பு நாளில் நாம் உலகினில் சேர்த்துவைத்துள்ள நமது செல்வங்கள் நம்மை விடுவிக்காது என்கின்றார் கர்த்தர். 

இந்த உலக வாழ்க்கையில் நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தைக்கொண்டு உலகிலுள்ள அநியாய நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடலாம். இன்று பல ஊழல் அரசியல் தலைவர்கள் அதனைத்தான் செய்கின்றார்கள். பெரிய பெரிய ஊழல்வாதிகளெல்லாம் நீதிபதிகளுக்கு கையூட்டுக் கொடுத்து எளிதில் விடுதலைப்பெற்று சிறைக்குத் தப்பிவிடுகின்றனர். 

ஆனால் சத்திய நியாயாதிபதி கிறிஸ்துவின் முன்னால் நாம் நிற்கும்போது இப்படிச் செய்து தப்பிவிடமுடியாது. ஆம், அவரது சினத்தின் நாளிலே நமது வெள்ளியும் பொன்னும் நம்மை விடுவிக்கமாட்டாது; அவைகளால் அப்போது நமது  ஆத்துமா திருப்தியாக்குவதும் இல்லை. காரணம் தேவன் கைக்கூலி வாங்குபவரல்ல. "உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல." ( உபாகமம் 10 : 17 )

நாம் நியாயத்தீர்ப்பு நாளில் தப்பவேண்டுமானால் உலகத்தில் பொன்னையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பதைவிட நாம் செய்யும் நற்செயல்கள்மூலம், பரிசுத்த வாழ்க்கையின் மூலம் பரலோகத்தில் நமது செல்வத்தைச் சேர்த்துவைக்கவேண்டும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார்,  "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை." ( மத்தேயு 6 : 19, 20 )

ஆம், அன்பானவர்களே, கோடி கோடியாக சேர்த்துவைக்கும் பொருள் இந்த உலகத்தில் வேண்டுமானால் நமக்குக் கைகொடுக்கலாம் ஆனால் தேவனுக்குமுன் நாம் நிற்கும்போது அவற்றால் ஒரு பயனும் இல்லை. இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 )

பூச்சியும் துருவும் அழிக்காத, திருடர்களால் திருடமுடியாத பரலோக  செல்வத்தை நாம் சேர்த்துவைக்கும்போது அவையே நமது இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் நமக்குக் கைகொடுக்கும். அப்போது நரகத்துக்குத் தப்பும் நமது ஆத்துமாவும் திருப்தியாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                                      

No comments: