Friday, November 08, 2024

மனிதர்களை நம்புவதைவிட...

 'ஆதவன்' 💚நவம்பர் 17, 2024. ஞாயிற்றுக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,379



"மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )

நாம் ஒரு சமூகமாக வாழ்வதால் பொதுவாக நம்மில் அனைவரும் பல காரியங்களில் மற்றவரைச் சார்ந்து வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. எவர் துணையும் எனக்குத் தேவையில்லை என்று நாம் உலகினில் வாழ முடியாது. இன்றைய தியான வசனம் மனுஷனையும் பிரபுக்களையும் நம்பக்கூடாது என்று கூறவில்லை. மாறாக, அவர்களை நம்புவதைவிடவும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று கூறுகின்றது. 

சில காரியங்களில் நமக்கு சிலர் உதவுவதாக  உறுதி கூறியிருப்பார்கள்; வாக்களித்திருப்பார்கள். ஆனால் நாம் அதனையே நம்பி இருப்பதைவிட கர்த்தர்மேல் பற்று உள்ளவர்களாக நாம் வாழவேண்டும். காரணம், நமக்கு உதவுவதாக வாக்களித்தவர்களது எதிர்காலம் நமக்குத் தெரியாது. உதாரணமாக, வசதியுள்ளவர்களாக இருந்து நமது குழந்தைகளின் கல்விக்கு இறுதிவரை உதவுவதாக  வாக்களித்த மனிதன் ஏதோ காரணங்களால் பொருளாதாரத்தில் நலிவுற்றுப் போய்விடலாம். அல்லது ஒருவேளை திடீரென்று இறந்துபோகலாம்.  

மட்டுமல்ல, மனிதர்களது குணங்கள் எப்போது மாறும் என்று நாம் சொல்லமுடியாது. எனவேதான் வேதம் கூறுகின்றது, "நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்." ( ஏசாயா 2 : 22 ) என்று. அதாவது, நாம் மனிதர்களது தயவு உதவி இவற்றைப் பெறவேண்டுமானாலும் தேவனது கிருபை நமக்கு அதிகமாகத் தேவையாக இருக்கின்றது.  எனவேதான் இன்றைய தியான வசனம், "கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்" என்று இருமுறை கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்களைபோன்றவரல்ல. "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?" ( எண்ணாகமம் 23 : 19 ) என்று தேவனைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். மட்டுமல்ல, உலகினில் கர்த்தரால் கூடாத காரியமென்று எதுவுமில்லை. "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? " ( ஆதியாகமம் 18 : 14 ) 

எனவே, மனிதர்களிடம் நாம் உதவியையும் தயவையும் பெற்றாலும் அவர்களை முற்றிலும் சார்ந்து வாழாமல் அவர்கள்மூலம் நமக்கு உதவும் தேவனையே நாம் சார்ந்துகொள்ளவேண்டும். காரணம்,  "அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ." ( தானியேல் 2 : 21 ) எனவே எந்த எதிர்மறையான சூழ்நிலையிலும் அவர் நமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வல்லவராய் இருக்கின்றார். 

யார் நமக்கு உதவுவதாக வாக்களித்தாலும் அதனை நாம் தேவ பாதத்தில் வைத்து ஜெபிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் தேவன்மேல் உறுதியான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். மனிதர்களது வாக்குறுதிகள் மேல் முழு நம்பிக்கைவைக்காமல் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்போம்.  ஒரு வழி அடைந்தாலும் அவரால் மறுவழி திறக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் அவரால் நமக்கு உதவிட முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

No comments: