'ஆதவன்' 💚நவம்பர் 10, 2024. ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,372
"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்." ( மாற்கு 12 : 17 )
ஆவிக்குரிய வாழ்க்கை என்பது நாம் தேவனுக்குமுன்பாக உண்மையுள்ளவர்களாக இருப்பது மட்டுமல்ல, இந்த உலக வாழ்க்கையிலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். வரிகொடுப்பது, அதிகாரிகளை மதிப்பது, நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது என அனைத்துக் காரியங்களிலும் நாம் கீழ்ப்படிந்து உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.
தானியேல் இப்படித்தான் வாழ்ந்தார். ராஜா உட்பட அனைவரும் தாலியேலின் ஜெப வாழ்க்கைமட்டுமே அவருக்கு வெற்றியைத் தந்தது என்று எண்ணிக்கொண்டனர். எனவேதான் சிங்கக் கெபியினுள் போடப்பட்ட தானியேலிடம் ராஜா, "தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்." ( தானியேல் 6 : 20 )
ராஜாவுக்குத் தானியேலின் ஜெப வாழ்க்கைதான் முக்கியமாகத் தெரிந்திருந்தது. ஆனால் அதற்குத் தானியேல் கூறும் பதில், "சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்." ( தானியேல் 6 : 22 ) அதாவது, ஜெபித்ததால் மட்டுமல்ல மாறாக, தேவனுக்குமுன் நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன் அதுபோல ராஜாவுக்கு எதிராகவும் நான் நீதிகேடுசெய்யவில்லை. எனவே தேவன் என்னைச் சிங்கங்களுக்குத் தப்புவித்தார் என்கிறார் தானியேல்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் ஒழுங்காக வரியைச் செலுத்திவந்தார். வரி வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து வரிகேட்டபோது அதை அவர் இயேசு கிறிஸ்துவிடம் வந்து கூறினார். அவருக்கு இயேசு, "நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்." ( மத்தேயு 17 : 27 ) ஆம், ஆவிக்குரியவர்கள் மற்றவர்களுக்கு இடறலாக இருக்கக்கூடாது.
அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." ( ரோமர் 13 : 7 ) என்று கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, அதிகநேரம் ஜெபிப்பதும், ஆலயங்களில் ஆராதனைகளில் கலந்துகொள்வதும், ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதும் மட்டும் ஆவிக்குரிய வாழ்க்கையல்ல; மாறாக உலக காரியங்களிலும் நாம் உண்மையுள்ளவர்களாக, பிறரை ஏமாற்றாமல், நேர்மையாகத் தொழில் செய்து, அரசாங்க சட்டதிட்டங்களை மதிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம். தானியேல் கூறுவதுபோல, "தேவனுக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை" என்று வாழ்வதுதான் ஆவிக்குரிய வாழ்க்கை. இத்தகைய ஒரு வாழ்க்கை வாழும்போதுதான் தேவன் நம்மையும் பலருக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்