Wednesday, August 31, 2022

ஆண்டவரது வசனமே கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்

 ஆதவன் 🖋️ 583 ⛪ செப்டம்பர் 02,  2022 வெள்ளிக்கிழமை

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. ஏனெனில் இதனை இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு கட்டளையாகக் கூறினார். "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரே  தவிர மதம் மாற்றுவதில்லை. ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர வலுக்கட்டாயமாக எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான். அதாவது அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். எனவே எந்த மனிதனும் இறுகி நியாயத் தீர்ப்பில் தப்பிட  முடியாது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.

கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                

Tuesday, August 30, 2022

எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்

 ஆதவன் 🖋️ 582 ⛪ செப்டம்பர் 01,  2022 வியாழக்கிழமை

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 3 )

இன்று பெரும்பாலும் மக்கள், அதுவும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள், தங்கள் எதிர்காலங்களை அறிந்துகொள்ளவும், தற்போதைய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் ஊழியர்களைத் தேடி ஓடும் அவலம் உள்ளது. இது பணம் சம்பாதிக்கும் எண்ணமுள்ள ஊழியர்களுக்குச் சாதகமாக உள்ளது. இதுவே இன்றைய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாகவும் இருக்கின்றது.

நமது தேவன் பாரபட்சம் காட்டும் தேவனல்ல. எல்லோரையும் ஒரேபோல அன்பு செய்யும் தெய்வம் அவர். குறிப்பிட்டச் சிலருக்கு தேவன் சில காரியங்களை வெளிப்படுத்தலாம். அது அவர்கள் தேவனோடு கொண்டுள்ள உறவைப் பொறுத்ததே தவிர வேறு அதிசயமல்ல. தேவனோடுள்ள இந்த உறவை எல்லோரும் பெறலாம், பெறவேண்டுமென்று தான் தேவனும் விரும்புகின்றார். தேவனோடு உறவுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அப்படி வாழும் எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்.  

இப்படி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருவோமானால், இன்றைய வசனம் கூறுவதுபோல அவர் நமக்குப் பதில் தந்து நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பார். 

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்றவுடன் அது நம்மால் முடியாது என்று பலரும் திகைக்கின்றனர். எனவேதான் இவர்கள் தற்காலிக விடுதலைவேண்டி ஊழியர்களை நாடுகின்றனர். பெரும்பாலான தீர்க்கதரிசன ஊழியர்கள் தங்களை தேவனோடு நெருங்கிய உறவுள்ளவர்கள் எனக் காட்டிக்கொள்ளவேண்டி போலியான அல்லது வேதத்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டு மக்களைக் கவர்கின்றனர். 

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து மக்களுக்குச் சுகம் அளிக்குமுன் பல இடங்களில் முதலில், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றுதான் கூறுகின்றார்.  அதாவது நாம் நமது பிரச்சனைகளையும் நோய்களையும் பிரதானமாகப் பார்க்கின்றோம், ஆனால் தேவனோ நமது பாவங்களையே பிரதானமானதாகப் பார்க்கின்றார். 

ஆனால் இன்றைய எந்த ஊழியக்காரனும் இதனை மக்களுக்குச் சொல்வதுமில்லை, மக்களது பாவங்களை உணர்த்திக் கொடுப்பதுமில்லை. அவர்களே பாவங்களில் மூழ்கியிருப்பதால் அதுபற்றி மக்களிடம் தைரியமாக எடுத்துக்கூற அவர்களது மனச் சாட்சியே அவர்களைக் குத்துவதும் இப்படிக் கூறாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். எனவே இவர்கள் கூறுவது தேவ வாக்கு என நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான் தேவன் கூறுகின்றார், "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 16 )

இந்த வசனத்தை வாசிக்கும்போது எந்த தீர்க்கதரிசியையும் நாம் நம்பவேண்டாம் என்று பொருளாகின்றது. ஆனால், உண்மையான தீர்க்கதரிசிகளும் உள்ளனர். (அவர்கள் விசுவாசிகளிடம் பணம் பறிக்கும்  திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள்) அவர்கள் கூறுவது தேவனோடு உறவுகொண்டு வாழும் விசுவாசிகளுக்கு தேவன் ஏற்கெனவே கூறிய வார்த்தைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

அன்பானவர்களே, தீர்க்கதரிசன ஊழியர்களைத் தவிர்த்து, தேவனுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து, இன்றைய வசனம் கூறுவதுபோல,  அவரை நோக்கிக் கூப்பிடுவோம், அப்பொழுது அவர் நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு  எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                               

வேதாகம முத்துக்கள் - ஆகஸ்ட் 2022

 வேதாகம முத்துக்கள் - ஆகஸ்ட் 2022


                    - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 




ஆதவன் 🖋️ 551 ⛪ ஆகஸ்ட் 01, 2022 திங்கள் கிழமை 

"நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 26,27 )

இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையினைக் குறித்துக் கூறும்போது இதனைச் சொல்கின்றார். நோவாவின் நாட்களில் பூமியில் அக்கிரமம் பெருகி இருந்தது.   "தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்." ( ஆதியாகமம் 6 : 12 ) எனவே, தேவன் தான் உருவாக்கிய மக்களை அழிக்க சித்தம்கொண்டார்.

ஆனால் தேவனுக்குமுன் உத்தமனாய் நடந்த நோவாவுக்கு கடவுளின் கண்ணில் தயவு கிடைத்தது. எனவே உலகினைத் தான் அழிக்கும்போது அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றிட மரத்தால் ஒரு பேழை செய்யுமாறு கூறுகின்றார். நோவா பேழை செய்யும்போது அதனைப் பார்த்தவர்கள் அவனைக் கேலி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவனை நம்பவில்லை, மனம் திரும்பவுமில்லை. புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள், இயல்பான தங்கள் வாழ்வைத் தொடர்ந்தார்கள். ஆனால் எல்லோரும் இறுதியில் அழிவுற்றனர். 

இதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து இன்னொரு உதாரணமும் சொல்கின்றார், "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்." ( லுூக்கா 17 : 28 )

இங்கும் லோத்து தனது மருமக்களிடம் சென்று வரவிருக்கும் அழிவினைக் கூறி எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதனை கேலியாக எண்ணினர். "அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது." ( ஆதியாகமம் 19 : 14 )

அன்பானவர்களே, இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி கூறினால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்கூட நம்புவதில்லை, நம்பினாலும் தங்கள் குணங்களை மாற்றி தேவனிடம் உண்மையாய் மனம்திரும்பி வருவதில்லை. 

நோவா காலத்திலும் லோத்துவின் காலத்திலும் வந்த அழிவைவிடப் பெரிய அழிவு கிறிஸ்துவின் வருகைக்குமுன் வருவது உறுதி. உலக ஆசீர்வாதங்களைப் போதிக்கும் போதகர்களை மேன்மையாகவும் கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி போதிக்கும் ஊழியர்களை கேலியாகவும் எண்ணி நமது ஆத்துமாவை பாதாளத்துக்குள் தள்ளிடாமல் எச்சரிக்கையாய் இருந்து மனம் திரும்புவோம். 


ஆதவன் 🖋️ 552 ⛪ ஆகஸ்ட் 02, 2022 செவ்வாய்க்கிழமை

"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன் உண்டு. நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதேதான் நமது வாழ்வில் நமக்கு நடக்கும். பிறரது பாவங்களை மன்னிக்கும்போது தேவன் நமது பாவங்களை மன்னிக்கின்றார். இயேசு கிறிஸ்து இதனையே தனது ஜெபத்திலும் நமக்குக் கற்றுத்தந்துள்ளார்.

இந்த உலகினில் நமது தற்போதைய நிலைமையினைக்கண்டு பிறர் பரிகசிக்கலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது தேவன் நம்மைப் பரிகசிக்கப்பட விடமாட்டார்.  நாம் விதைப்பது நமது வாழ்வில் நிச்சயமாக நமக்குத் திருப்பித் தரப்படும்.

இன்று ஒருவேளை நீங்கள் வசிக்கும் ஊரில், வேலைபார்க்கும் இடத்தில நீங்கள் அற்பமாக எண்ணப்பட்டுக் கேலிசெய்யப்படலாம். அதற்காக வருந்தி மனமடிந்து போகவேண்டாம். நாம் தேவனுக்குமுன் உண்மையாய்ச் செய்யும் காரியங்களை அவர் கனப்படுத்துவார்.  இதற்கு பல சாட்சிகளை  நாம் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  

ஒரு அரசு அலுவலகத்தில் தனக்குக் கீழ்  உண்மையாய் வேலைசெய்த ஒருவர்க்கு எதிராகச் செயல்பட்டார் ஒரு உயர் அதிகாரி. அவரை வேலையிலிருந்து துரத்தவேண்டும் அல்லது வேறு எங்கோ ஒரு வானாந்தரமான கிராமத்துக்கு பணிமாற்றம் செய்து அனுப்பவேண்டும் என்று செயல்பட்டார். அந்த உண்மையான மனிதரோ அமைதியாக இருந்தார். ஆனால் ஆட்சி மாறியபோது அந்த உயர் அதிகாரி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் வகித்துவந்த பதவி அமைதியான அந்த உண்மையுள்ள மனிதனுக்குக்  கிடைத்தது.   

அப்போஸ்தலரான பவுல்  கூறும்போது தொடர்ந்து எழுதுகின்றார், "பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்." ( 2 கொரிந்தியர் 9 : 6 )

விதைக்கின்ற காலத்துக்கும் அறுவடை காலத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. விதைக்கும் காலம் கடினமானது, செலவு தரக்கூடியது. அதுபோல நமது வாழ்க்கையும் துன்பங்கள், கேலிகள், அவமதிப்புக்கள் என்ற கடினமான விதைப்பின் காலமாக இப்போது இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் யோவான் ஸ்நானன் கூறியதுபோல அறுவடைநாள் ஒன்று  உண்டு. அப்போது கோதுமைகள் களஞ்சியத்தைச் சென்றடையும் பதர்களோ அக்கினியில் சுட்டெரிக்கப்படும். (லூக்கா 3:17)

இதனையே நாம் சங்கீதத்தில் வாசிக்கின்றோம், "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்." ( சங்கீதம் 126 : 5, 6 )


ஆதவன் 🖋️ 553 ⛪ ஆகஸ்ட் 03, 2022 புதன்கிழமை

"நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்." ( லுூக்கா 22 : 32 )

தலைமை அப்போஸ்தலர் பேதுருவைச் சாத்தான் சோதிக்க கிறிஸ்துவிடம் அனுமதிகேட்டபோது இயேசு கிறிஸ்து பேதுருவை நோக்கிக் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். 

கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மக்களுக்கு அறிவிக்குமுன் நாம் முதலில் கிறிஸ்தவ விசுவாசத்தில் பலப்படவேண்டியது அவசியம். அல்லாவிட்டால் நமது சுவிசேஷ அறிவிப்புகள் எதார்தத்தைவிட்டு விலகி சாதாரண ஒரு அரசியல்வாதியின் பேச்சுபோல ஆகிவிடும்.

நமது விசுவாசத்தை சீர்குலைக்க சாத்தான் பல்வேறு வகைகளில் முயலுவான். அவற்றை முதலில் நாம் மேற்கொள்ளும் பலமடைந்தவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்துவோடு இரவும் பகலும் உடனிருந்து அவரோடு உண்டு குடித்து வாழ்ந்த பேதுருவையே சாத்தான் சோதிக்க முயலுவானென்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 11 12 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, பேதுருவுக்காக இயேசு  கிறிஸ்து வேண்டுதல் செய்ததுபோல நாமும் வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். அத்துடன் அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆவிக்குரிய போர் ஆயுதங்கள் ( எபேசியர் 6 : 14-17 )நம்மிடம் மழுங்கிப்போகாமல் சரியாக இருக்கின்றதா என்றும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

இப்படி நாம் குணப்பட்டபின்பு அடுத்தவரைக் குணப்படுத்த சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் மாயக்காரர்களாகவே இருப்போம். நாம் அறியாத கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க முயலும் சாதாரண மதவாதியாகவே இருப்போம். இயேசு கிறிஸ்து கூறிய பின்வரும்  வசனம் மனம் திரும்பாமல் இருந்துகொண்டு பிறருக்கு சுவிசேஷம் பிரசங்கிப்பவர்களுக்குப்  பொருந்தும்.

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." ( மத்தேயு 7 : 5 )

நம்மை நாமே சோதித்துப்பார்த்து மாய வாழ்க்கையை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு கிறிஸ்துவை அறிவிக்கும் பணியினைத் தொடர்வோம். அப்போது மட்டுமே நாம் அறிவிக்கும் கிறிஸ்துவை பிறர் ஏற்றுக்கொள்வர். 


ஆதவன் 🖋️ 554 ⛪ ஆகஸ்ட் 04, 2022 வியாழக்கிழமை

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )

எத்தனை அற்பமானவர்களாக இருந்தாலும் அவர்களை கர்த்தர் பயன்படுத்த முடியும். அதுபோல நாம் எவ்வளவு பலவீனர்களாக இருந்தாலும் கர்த்தர் நம்மைப் பலவான்களாக மாற்றிட முடியும்.

மீதியானியர் கைகள் இஸ்ரவேலர்மேல் பலத்திருந்த காலம் அது. மீடியானியர்கள் இஸ்ரவேலர்களது உடைமைகளையும் அவர்களது விளைச்சல்களையும் கொள்ளையிட்டனர். இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு இரட்சகன் கிடையமாட்டானா என்று ஏங்கிய காலம். அப்போது கிதியோன் தனது கோதுமைப் பயிரை அறுவடைசெய்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான். 

மீதியானியர்கள் வந்து அதனைக் கொள்ளையடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆலையின் அருகிலேயே வைத்து அதனைப் போரடித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் கர்த்தருடைய தூதன் வந்து நின்று, "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

அன்பானவர்களே, கிதியோன்போல நாமும் நம்மைப் பலவீனர்கள் என எண்ணி இதுபோல தேவையில்லா காரியங்களுக்காக பயந்துகொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய கரம் நம்மோடு இருப்பதால் நாம் பலசாலிகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். கர்த்தர் நம்மோடு இருப்பதால், நமக்கு இருக்கின்ற பலமே நமது எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமானது. 

எனவேதான் கர்த்தர் கிதியோனைப்பார்த்து, "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும் என்று கூறியுள்ளாரே?

ஆனாலும் கிதியோன் தனது அற்ப நிலைமையை எண்ணியதுபோல நாமும்  கர்த்தரிடம் பேசலாம், "ஆண்டவரே, நான் பலவீனமல்லவா? எனது குடும்பம், எனது தொழில், எனது வருமானம், எனது உடல்நிலை எல்லாமே மோசமானதாக அல்லவா இருக்கின்றது? நான் எப்படி இந்தப் பிரச்சனைகளைச்  சமாளிப்பேன்?" ஆனால் கர்த்தர் கிதியோனிடம் கூறியது எதனையும் பார்க்காதே. நான் உன்னோடு இருக்கின்றேன் என்பதுதான்.

"அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )

அன்பானவர்களே, எத்தனைப் பெரிய பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் நாம் அவற்றை மேற்கொள்ள முடியும். காரணம் கர்த்தர் சொல்கின்றார், " நான் உன்னோடேகூட இருப்பேன்"


ஆதவன் 🖋️ 555 ⛪ ஆகஸ்ட் 05, 2022 வெள்ளிக்கிழமை

"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் இது முற்றிலும் சரியென்று கூறிட முடியாது. காரணம் நியாயமான ஆசைகளும் உண்டு. அப்படி எந்த ஒரு ஆசையும் இல்லையானால் ஒருவர் உலகினில் வாழவேமுடியாது. மேலும் ஆசையே நம்மை இந்த உலகினில் நல்ல செயல்கள் செய்யவும் பல வேளைகளில் காரணமாக இருக்கின்றன. பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிசெய்த விஞ்ஞானிகளின் ஆசையின் விளைவுகள்தான்.

பண உதவிசெய்து ஒரு ஏழையை படிக்கவைக்கவேண்டுமென்று பலர் எண்ணுகின்றனர். இது அநியாயமான ஆசையே. கிறிஸ்துவுக்கு உண்மையான ஊழியம் செய்யவேண்டுமென எண்ணுவது பலரது ஆசை. அன்னை தெரேசா பல தொழுநோயாளிகளைத் தொட்டு உதவினார். இதுவும் கிறிஸ்து கூறியதைப்போல எல்லோரையும் சகோதரர்களாக பார்க்கவேண்டுமென்ற ஆசையால்தான். ஆவிக்குரிய மனிதர்கள் பரலோகத்தை அடைய எண்ணுவதும் ஆசைதான். 

ஆனால் பவுல் அப்போஸ்தலர் இங்கு வித்தியாசமாகத் தெளிவாகக் கூறுகின்றார்,  "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" என்று. இதுவே சரியான கருத்தாக இருக்க முடியும். ஏனெனில் பண ஆசை உள்ள பணவெறியன் எந்தக் கொடூரச் செயலையும் செய்யத் தயங்கமாட்டான்; மேலும் பணத்தைச் சேர்க்கவேண்டுமெனும் வெறியில் எந்த அவலட்சணமான செயலையும் துணிந்து செய்வான். இதனால் பல்வேறு இக்கட்டுகளிலும்  மாட்டிக்கொள்கிறான். 

மிகப்பெரிய மரியாதைக்குரிய பதவிகளில் இருக்கும் சிலர் அற்பத்தனமான பண ஆசையால் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்து பணம் சம்பாதித்துவிட்டு இறுதியில் ஏதோ சந்தர்ப்பத்தில் போலீஸ் ரெய்டு, வருமான வரி அதிகாரிகளது விசாரணை, சிறைவாசம் என சிக்கிக்கொள்வதும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்வதும் இல்லையானால் அந்த மனவேதனையில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவதும் நாம் இந்த உலகினில் காணக்கூடிய நிலைமைதான். 

ஆனால், பவுல் அடிகள் இங்குக் கூறுவது விசுவாசிகளைக்குறித்து. கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு ஆவிக்குரிய வாழ்வு வாழும் சிலர் பண ஆசையால் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என்கின்றார். விசுவாசிகள் மட்டுமல்ல பல ஊழியர்களும் இப்படிப் பண ஆசையில் சிக்கி தங்கள் ஊழியத்தையும் ஆவிக்குரிய வாழ்வையும் இழந்து தங்கள் ஆத்துமாக்களை உருவ குத்திக்கொண்டிருக்கிறார்கள். 

நியாயமான முறையில், தேவன் நமக்கு உலகினில் அளித்துள்ள வேலைகளின் படியும், தனியாகத்  தொழில் செய்வோமென்றால், அரசு விதிகளுக்குட்பட்டும்  நாம் சம்பாதிக்கவேண்டும்.  நமது குடும்ப எதிர்கால தேவைகளுக்கு அந்தப்பணத்தில் சேர்த்துவைப்பதில் தவறில்லை. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நாம் பண வெறியர்களாக மாறிவிடக்கூடாது. 

என்னிடம் பணம் இருகிறது, யாரும் என்னை ஒன்றும் செய்ய முடியாது; என்னிடம் பணம் இருக்கிறது நான் நினைத்ததைச் செய்வேன்; என்னிடம் பணம் இருக்கிறது எனவே எவனையும் நான் மதிக்கத் தேவை இல்லை.  இந்தப் பணத்தால்  சொத்துக்குமேல் சொத்து வேண்டும்,   அதிகாரத்தைப் பெறவேண்டும்.......இத்தகைய எண்ணங்களே பண வெறியன்  கொண்டுள்ளது. நம்மிடம் இத்தகைய குணங்கள் இருந்தால் நாம் கிறிஸ்தவர்களும் அல்ல, கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டுள்ளேன் என்று நாம் கூறுவதும் பொய். அப்படியானால் பவுல் கூறுவதுபோல  நாம் விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே நம்மைக் குத்திக்கொண்டிருக்கிறோம் என்றே பொருள். 


ஆதவன் 🖋️ 556 ⛪ ஆகஸ்ட் 06, 2022 சனிக்கிழமை

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை தேவன் அதிசயிக்கத்தக்கதாக விடுவித்து அற்புதமாக வழிநடத்தி கானான் தேசத்துக்குள் கொண்டுவந்து சேர்த்தார். அவர்கள் வழியில் சந்தித்த எல்லா இக்கட்டுகளினின்றும் விடுவித்தார்; அவர்களது தேவைகளைச் சந்தித்தார்; எதிரிட்டுவந்த ராஜாக்களை முறியடித்தார். ஆம், மேகத்தூணாகவும் அக்கினித் தூணாகவும் இருந்து அவர்களை வழிநடத்தினார். 

இதேபோல இன்று புதிய ஏற்பாட்டுக்கால மக்களான நம்மையும் தேவன் நடத்துகின்றார். பரம கானானுக்குள் நம்மைக்கொண்டு சேர்த்திட நமக்குத் துணையாளரான பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார்.  

"நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்" என்று பழைய ஏற்பாட்டுக்கால மக்களுக்குத் தேவன் கூறியதுபோல இயேசு கிறிஸ்து நமக்கும் வாக்களித்துள்ளனர்: "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்." ( யோவான் 16 : 7 ) என்று கூறியதுடன் அந்த ஆவியானவர் நமக்கு என்னச் செய்வார் என்றும் இயேசு கூறினார்.

"அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 )

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய பயணத்தில் அன்று இஸ்ரவேல் மக்கள் சந்தித்ததுபோல நாமும் பல எதிரிகளைச் சந்திக்கின்றோம். பாவம், கிறிஸ்துவை விட்டு நம்மைப் பிரிக்க நமக்கு நேரிடும் துன்பங்கள்,  அந்தகார ஆவிகளின் தொல்லைகள் போன்றவை நமது ஆவிக்குரிய வாழ்வை அதன் இலக்கை அடைந்திட தடையாக உள்ளன. இவை அனைத்திலிருந்தும் நம்மை விடுவித்துக் காத்து நாம் நடக்கவேண்டிய வழியைக் காட்டுவதே பரிசுத்த ஆவியானவர்தான். 

தேற்றரவாளரான ஆவியானவர் நமது  நடுவில் நிலைகொண்டிருப்பதால் நாம்  பயப்படத் தேவையில்லை. அவர் உலக முடியுமட்டுமுள்ள எல்லா மனிதர்களையும் வழிகாட்டி நடத்துகின்றார். ஆனால் மக்களது மனக் கண்களும் செவிகளும் அவரைக் கண்டுகொள்ளமுடியாமல் மந்தமாக இருக்கின்றன.

எனவே, ஆவிக்குரிய நாம்; அவரை வாழ்வில் கண்டுகொண்டுள்ள நாம், ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு நேரிடும் துன்பங்களை எண்ணிக் கலங்கிடவேண்டாம். "நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 


ஆதவன் 🖋️ 557 ⛪ ஆகஸ்ட் 07, 2022 ஞாயிற்றுகிழமை

"உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." ( நீதிமொழிகள் 28 : 20 )

சாதாரண ஆசீர்வாதம், பரிபூரண ஆசீர்வாதம் இவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை அறியாததால் இன்று பலரும் பொய்பேசி அலை கின்றனர். உலகின் பொருளாதார ஆசீர்வாதங்களே மெய்யான ஆசீர்வாதம் எனப் பலரும் எண்ணிக்கொள்கின்றனர். எனவே இதனை அடைந்திட பொய்வழியையும் குறுக்கு வழியையும் நாடுகின்றனர். 

"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்."  (நீதிமொழிகள் 10 : 22 ). இதனையே இன்றைய வசனம், "ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." என்று கூறுகின்றது. 

ஆம், கர்த்தர் தரும் ஆசீர்வாதம் பூரண ஆசீர்வாதம்; வேதனையில்லாத ஆசீர்வாதம். எந்தத் தகப்பனும் தாயும் தங்கள் பிள்ளைகளுக்கு அருமையான உணவையும் நஞ்சையும் ஒரேநேரம்  கொடுக்கமாட்டார்கள். அதுபோலவே கர்த்தர் ஆசீர்வாதத்தையும் கலக்கத்தையும்  துன்பத்தையும் ஒருசேரக் கொடுக்கமாட்டார். 

பொய் பேசுவதால் அதிக பொருள்கள் கிடைக்கலாம். ஏனென்றால் அவை இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய சாத்தானின் கரங்களில் உள்ளன. அவன் பொய்யனும் பொய்க்கு தந்தையுமாக இருப்பதால் (யோவான் 8 : 44) பொய்யர்களுக்கு அதிக ஆசீர்வாதங்களைக் கொடுக்கின்றான். ஆனால் இதனை அறியாத பலரும் பொய் வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். 

ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரித்துக் குறுக்கு வழியில்  செயல்படுவதைவிட,  கர்த்தரது கரங்களுக்குள் அடங்கி அவரது கற்பனைகளின்படி நாம் வாழும்போது மெய்யான ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும். ஒருவேளை நாம் உலகம் வைத்துள்ள இலக்குப்படியான செல்வந்தனாக இல்லாமல்போகலாம், ஆனால், பரிபூரண ஆசீர்வாதம் எனும் மெய் சமாதானம் நமது ஆத்துமாவுக்குக்  கிடைக்கும்.    

மட்டுமல்ல, கர்த்தருக்குள் உண்மையாய் இருந்து நாம் உலகினில் வாழ்வோமானால் நித்திய ஜீவனுக்குப் பங்காளியாகின்றோம். ஆம், "...................நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 10 ) என்று வாக்களித்துள்ளார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே, இந்த உலகினில் உண்மையுள்ளவர்களாய் வாழ்ந்து கர்த்தர் தரும் பரிபூரண ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வோம்.


ஆதவன் 🖋️ 558 ⛪ ஆகஸ்ட் 08, 2022 திங்கள்கிழமை

"முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்." ( கொலோசெயர் 1 : 21 )

கிறிஸ்துவால் மீட்கப்படுவதற்குமுன் நாம் அவருக்கு அந்நியராகவும் நமது கெட்டச் செயல்களால் அவருக்கு எதிரிகளாகவும் இருந்தோம். இப்போது நாம் மீட்கப்பட்டுள்ளதால் அவருக்கு உரியவர்களானோம். இது எப்படி நடந்தது என்றால், அவருடைய மாம்ச சரீரத்தில் அவர் அடைந்த மரணத்தினால் நடந்தது. 

கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் கொண்டுவந்த மிகப்பெரிய பலன் இதுதான்.  அவரோடு ஒப்புரவாகி அவரை அப்பா என அழைக்கும் பேறுபெற்றோம் நாம்.

கிறிஸ்துவின் இந்த மிகப்பெரிய இரட்சிப்பை பிரசித்திப்படுத்தி அனைவரும் இதனைப் பெற்றுகொள்ளச்செய்வதே சுவிசேஷ அறிவிப்பு. நாம் கேட்டு அறிந்த சுவிசேஷத்தினால் இந்தப் பேற்றினை பெற்றுள்ளோம். எனவே அப்போஸ்தலனான பவுல் தொடர்ந்து அடுத்த  வசனத்தில் கூறுகின்றார்:-

"நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்." ( கொலோசெயர் 1 : 22 )

ஆதாவது நாம் கேட்டு விசுவாசித்த இந்த சுவிசேஷத்தினைவிட்டு அசையாமல் உறுதியாய் இருக்கவேண்டும். அப்படி இருப்போமானால் நாம் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் அவருக்குமுன் நிற்போம். 

அன்பானவர்களே, உலகத் தேவைகளுக்காக ஜெபிப்பதைவிட, "ஆண்டவரே, உமக்குமுன் நான் பரிசுத்தனாகவும் குற்றமற்றவனாகவும் இருக்க கிருபை புரியும் என்று ஜெபிப்பதே தேவன் விரும்புவது."

பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதாலோ, ஆலய காரியங்களுக்காக அல்லும்பகலும் அலைவதாலோ, ஜெபக் கூட்டங்களில் தவறாமல் பங்கு பெறுவதாலோ  நாம் அவருக்குமுன் நிலை நிற்கமுடியாது. ஏனெனில் கிறிஸ்துவுக்கு அந்நியராயும் தமது துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்துகொண்டும் ஒருவர் மேற்படி காரியங்களைச் செய்யமுடியும். 

கிறிஸ்து மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே  இப்பொழுதும் நம்மை ஒப்புரவாக்குவார் எனும் விசுவாசத்துடன் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு   அவரோடு ஒப்புரவாவோம். 


ஆதவன் 🖋️ 559 ⛪ ஆகஸ்ட் 09, 2022 செவ்வாய்க்கிழமை

"என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?"( யோபு 31 : 1 )

இன்றைய வசனம் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் சிந்தனைக்குரிய வசனம். இன்று காதல் எனும் பெயரில் வெறும் இனக்கவர்ச்சியால் இளைஞர்களும் இளம் பெண்களும் சீரழிந்துகொண்டிருக்கின்றனர். காரணம், அவர்கள் தங்கள் கண்களால் காண்பவை தங்களுக்கு பூரண நன்மைதரும் என்று எண்ணுகின்றனர். வெளி அழகினைப் பார்த்து தங்கள் உள்ளங்களை எதிர்பாலரிடம் பறிகொடுத்து பலவேளைகளில் அல்லல்படுகின்றனர்.

இங்கு பக்தனான யோபு தேவனோடு ஒரு உடன்படிக்கைபண்ணிவிட்டார். அவர் தன் கண்களால் அழகிய பெண்களையல்ல, தேவனைக் காண்பதிலேயே தனது ஆர்வத்தைக் கொண்டிருந்தார். அதனால் பரிசுத்தமான பார்வை தனக்கு வேண்டும் என உடன்படிக்கைபண்ணிக்கொண்டார். அதனால் தேவனைப் பார்ப்பேன் என உறுதியாக நம்பினார். அவரது எண்ணமெல்லாம் அதுவாகவே இருந்தது.  ஒரு இளைஞனும்  இளம் பெண்ணும் காதலால் சோர்ந்துபோவதுபோல யோபு தேவனின் நினைவால் சோர்ந்துபோனார். 

எனவேதான் அவர் கூறுகின்றார், "அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது." ( யோபு 19 : 27 )

அவரது அந்த ஆசை வீணாகவில்லை. தேவன் அவருக்குத் தரிசனமானார். "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது." ( யோபு 42 : 5 )

அன்பானவர்களே, உலக மனிதர்களிடம் காதல் கொண்டு அலைவோமானால், "அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?" ( யோபு 31 : 2 ) கிடைக்காது. 

இளைஞர்களுக்கு மட்டுமல்ல,  பெரியோர்களுக்கும் இது பொருந்தும். இன்று ஆபாச படங்களும் வீடியோ காட்சிகளும் எளிதில் காணக்கிடைப்பதால் பெரியோர்களும்கூட இவற்றின் கவர்ச்சியில் கவரப்பட்டு பாவத்தில் விழுகின்றனர். 

நமது கண்களை நாம் யோபுவைபோல பரிசுத்தத்தை மட்டுமே காணவேண்டுமென்று  உடன்படிக்கைபண்ணுவோம். யோபுவுக்கு வெளிப்பட்டதுபோல தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். அத்தகைய பரிசுத்த வாழ்க்கைவாழ பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவியும் செய்வார். 


ஆதவன் 🖋️ 560 ⛪ ஆகஸ்ட் 10, 2022 புதன்கிழமை

"நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" ( யோபு 31 : 33 )

ஆதாம் பாவம் செய்ததுமட்டுமல்ல, அதனை வெளிப்படையாக தேவனிடம் அறிக்கையிடத் தவறிவிட்டான். அவன் தனது பாவத்துக்கு ஏவாளைக்  காரணம் காட்டினான். அத்துடன் தேவனையும் ஒரு காரணமாக் கூறினான். "என்னுடன் இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருச்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்." (ஆதியாகமம் 3:12). அதாவது அந்த ஸ்திரீயை நீர் எனக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் அவள் அந்தக் கனியை எனக்குத் தந்திருக்கமாட்டாள்; நான் புசித்திருக்கமாட்டேன் என்று பொருளாகின்றது. 

இங்கு யோபு தனக்கு அதிகப்படியான துன்பம் வந்ததால், நான் ஆதாமைப்போல என் பாவத்தை ஒளித்துவைத்தேனோ? எனக்கு ஏன் இந்தத் துன்பம் என்று கேட்கின்றார். 

இன்று பலரும் இதுபோலத் தங்களது  துன்பத்துக்குக் கரணம் தங்களது பாவங்கள் என்று எண்ணலாம்.  ஆனால் எப்போதும் அப்படியல்ல,  உலகினில் எல்லோருக்குமே துன்பங்கள் வரத்தான் செய்யும். ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நாம் சோதனையை மேற்கொள்ளும் பெலனை தேவன் நமக்குத் தருவார். 

"மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

ஆனால், நாம் யோபு தன்னை ஆராய்ந்து பார்த்துக்  கூறியதுபோல நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம்.  நாம் நமது பாவங்களை ஆதாமைபோல மறைத்து வைத்துள்ளோமா என்று எண்ணிப்பார்ப்போம். காரணம், வேதம் கூறுகின்றது, "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." (நீதிமொழிகள் 28:13)

பிறருக்கு எதிராக நாம் செய்த செயல்கள், பேசிய பேச்சுக்கள், நீதியற்ற செயல்கள், ஆபாச பேச்சுக்கள், எண்ணங்கள், என வொவ்வொன்றாக எண்ணி தேவனிடம் அறிக்கையிடுவோம். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" என்று சாபம் கூறுவதுபோல கூறும் வசனத்துக்கு நடுங்குவோம். நாம் வாழ்வடைய வேண்டுமானால் பாவ மன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலையும் வேண்டும். 

ஆண்டவரே, "நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" என்று தேவனிடம் நாமும் கேட்போம். நமது பாவங்களை அவரே நமக்கு உணர்த்தித் தருவார். 


ஆதவன் 🖋️ 561 ⛪ ஆகஸ்ட் 11, 2022 வியாழக்கிழமை

"யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்" ( ஓசியா 1 : 7 )

இன்றைய வசனத்தில் வில், பட்டயம், யுத்தம், குதிரை, குதிரை வீரர்கள் என்று பலத்தைக் குறிக்கும் பலவித வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக்கால போர் ஆயுதங்கள் இவை.   இவை குறிப்பாக மனிதர்களது பலத்தைக் குறிக்கின்றன. 

இன்று நம்மிடம் ஒருவேளை மிகுதியான செல்வம் இருக்கலாம், நல்ல உடல்நலம்,  நல்ல பதவி, நாம் கட்டளையிட்டவைகளை உடனடியாக நிறைவேற்ற அதிகப்படியான வேலையாட்கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் தேவனுக்குமுன் ஒன்றுமில்லாதவையே. இவை நமக்குப் பாதுகாப்பு என்று எண்ணிக்கொண்டு இறுமாப்போடு வாழ்வோமானால் ஒன்றுமில்லாத இல்பொருள் ஆகிவிடுவோம். 

இதனால்தான் சங்கீத ஆசிரியர், "இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது." ( சங்கீதம் 33 : 17 ) என்று கூறுகின்றார். பணத்தையும் பதவியையும் நம்பி, நமது வாழ்வு இந்த உலகினில் நிரந்தரம் என எண்ணி வாழ்ந்த அரசியல் தலைவர்களின் முடிவினை நாம் பார்த்துள்ளோம். 

கர்த்தர் ஒருவரைப் பாதுகாத்திடவும், உயர்த்திடவும் உலக மனிதர்கள் தேவை எனக் கருதும் இவை எதுவுமே தேவையில்லை. அவர் நினைத்தால் ஒருவனைப் புழுதியிலிருந்து கோபுர உச்சிக்கு கொண்டுசெல்லமுடியும். ஆம், கர்த்தர் கூறுகின்றார், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன்.

ஆம், அதனால்தான் "என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது." ( சங்கீதம் 62 : 7 ) என்கின்றார் தாவீது. 

அன்பானவர்களே, நல்ல வேலை இல்லையே, நல்ல வீடு வாசல், பொருளாதார வசதி, உடல் பெலன் இல்லையே என்று எண்ணிக் கவலை வேண்டாம். எந்த நிலையிலும் தேவன் ஒருவரை உயர்த்த முடியும். அவர், வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் இரட்சிக்கிறவர் அல்ல. கர்த்தராகிய தேவனே நம்மை இரட்சிக்கிறவர். 

பார்வோனது பலத்த சேனைகளும் போருக்குப் பழக்கப்பட்டக் குதிரைகளும் தேவ மனிதனாகிய மோசேயின்முன் நிற்கமுடியவில்லை. காரணம், தேவன் அவரோடிருந்தார்.

பெருமை பாராட்டுபவர்கள் பெருமை பாராட்டிக்கொண்டிருக்கட்டும். நாம் கர்த்தரை அறிந்துள்ளோம் என்பதே நமக்கு மேன்மை. அவர் நம்மை ஏற்றகாலத்தில் உயர்த்துவார்.  

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." ( சங்கீதம் 20 : 7 )


ஆதவன் 🖋️ 562 ⛪ ஆகஸ்ட் 12, 2022 வெள்ளிக்கிழமை

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." ( பிலிப்பியர் 3 : 14, 15 )

கிறிஸ்தவ வாழ்க்கையைப் பவுல் அப்போஸ்தலர் பந்தயத்துக்கு ஒப்பிட்டு பேசுவதை நாம் பல இடங்களில் பார்க்கலாம். உதாரணமாக, ஓட்டப்பந்தயம் ( 1 கொரிந்தியர் 9 : 24 ) மல்யுத்தம் ( 2 தீமோத்தேயு 2 : 5 ) என்று குறிப்பிடுகின்றார். 

எந்தவிதப் பந்தயமாக இருந்தாலும் அதற்குப் பரிசுப்பொருள் இருக்கும். அதுபோல கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பரிசுப்பொருள் நித்திய ஜீவன்.  அதனையே இங்கு பரம அழைத்தலின் பந்தயப்பொருள் என்று பவுல் குறிப்பிடுகின்றார். அதுவே கிறிஸ்தவர்களின் இலக்கு. அந்த இலக்கை அடைந்திட அதனை நோக்கி நமது பந்தயத்தைத் தொடரவேண்டும்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரன் ஒருவன் ஓடும்போது தனக்கு அருகே ஓடிக்கொண்டிருக்கும் மற்றவீரனையோ அல்லது ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தையோ பார்த்துக்கொண்டு ஓடினால் அவன் வெற்றிபெற முடியாது. ஓடுபவனது கண்கள் எப்போதும் இறுதி இலக்கை நோக்கியே இருக்கவேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 

"பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 ) என்கின்றார். ஆனால், கிறிஸ்தவ ஓட்டப்பந்தயத்தில் பரிசு ஒருவருக்குமட்டும் உரியதல்ல. சரியானபடி ஓடுபவர்கள் எல்லோரும் பரிசினைப் பெறுவார்கள். 

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து கூறுகின்றார், "நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்."  அதாவது நாம் தேறின கிறிஸ்தவர்கள் என்றால் இந்த சிந்தனை கொண்டவர்களாக  இருப்போம். தேறாத கிறிஸ்தவர்கள் என்றால், உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்து வெறும் மதவாதியாகவே இருப்போம்.

மதவாதி நிலையிலிருந்து நாம் ஆன்மீகவாதியாக மாறும்போது மட்டுமே   நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்களாகவும் அவர் கூறிய நித்திய ஜீவனை அடைந்திடவேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்களாகவும் நாம் மாறமுடியும். நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பது நமது மனச்சாட்சிக்குத் தெரியும்.

அன்பனவர்களே, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடரும் மக்களாக நம்மை மாற்றிடுவோம். கிறிஸ்து நம்மை மெய்யான ஆசீர்வாதத்தினால் நிரப்புவார். 


ஆதவன் 🖋️ 563 ⛪ ஆகஸ்ட் 13, 2022 சனிக்கிழமை

"அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )

இன்றைய தியான வசனம் மாற்கு 6:56 ன் இறுதிப்பகுதியாகும். இந்த வசனம் முழுமையாகக் கூறுவது, "அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )

இந்தப்பகுதியில் இயேசுவின் உடலையும் அவரது ஆடைகளையும் தொட்டுக் குணமடைய மக்கள் அவரிடம் நெருங்கினார்கள் என்று கூறுகின்றது. இயேசு கிறிஸ்து வெறும் உடல் சுகத்தை மட்டும் அளிக்க வரவில்லை. ஆத்தும சுகமளித்து நித்திய ஜீவனை அளிக்கவே அவர் வந்தார். 

இப்படி கிறிஸ்துவை ஆத்தும ரீதியாகத் தொட்டு குணமடைந்தவர்களே அவரது சீடர்களும் மற்றும் பலரும். சீடர்கள் தவிர பல உதாரணங்கள் வேதத்தில் உண்டு. 12 சீடர்கள் தவிர அவரைப் பின்பற்றிய அநேக சீடர்கள்,  சகேயு, மகதேலேனா மரியாள், சிலுவைக் கள்ளன் ஒருவன்,   அரிமத்தேயா யோசேப்பு, 10 குஷ்டரோகிகளில் ஒருவன் போன்றவர்கள். உடல் ரீதியாக அவரைத் தொட்டவர்கள் உடல் சுகம் அடைந்தார்கள்.  ஆத்தும ரீதியாகத் தொட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆத்தும சுகம் அடைந்தார்கள். 

இன்று நாம் இயேசு கிறிஸ்துவை எதற்காகத் தொடுகின்றோம்?  சரீர சுகத்துக்காக, பிரச்சனைகளிலிருந்து விடுபட, ஆசீர்வாதம் பெற என பல காரணங்களுக்காக இருக்கலாம். தவறல்ல; ஆனால் அத்துடன் நமது தொடுதலை நாம் நிறுத்திவிடக் கூடாது. அவரை ஆத்தும மீட்பராக எண்ணித் தொடவேண்டும். 

இன்று  கிறிஸ்துவுக்காக சாட்சி கூறும் பலரது சாட்சியங்கள் உடல் ரீதியாக இயேசுவைத் தொட்ட சாட்சிகளே.  இயேசு செய்த அற்புதங்களைக்  கண்டு அவர்மூலம் மீட்பு உண்டு என்று விசுவாசிப்பதைவிட உலகத் தேவைகளால் திருப்தியாவதையே பலரும் விரும்பினர். எனவேதான் இயேசு அவர்களுக்கு, "நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". ( யோவான் 6 : 26 ) என்றார். 

அன்பானவர்களே, நாம் அப்பம் உண்டு திருப்தியானதால் அல்ல, திருப்தியான மறுமை வாழ்வளிக்கும் மீட்புக்காக அவரைத் தொடும்படித் தேடுவோம். அப்படித் தேடித் தொடும்போது நமது ஆத்தும மீட்பு எனும் அதிசயத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு அவரைத் தொடும்போது "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  5 : 13 )


ஆதவன் 🖋️ 564 ⛪ ஆகஸ்ட் 14, 2022 ஞாயிற்றுக்கிழமை

"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." ( 1 யோவான்  1 : 3 )

அப்போஸ்தலரான யோவான் இயேசு கிறிஸ்துவை அதிகம் அன்புச்செய்தவர். கிறிஸ்துவின் அன்பை முழுமையாகச் சுவைத்தவர் அவர். பிதாவோடும் குமாரனான இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியமாக இருந்ததுபோல கிறிஸ்துவை அறிந்த அனைவருமே அப்படி ஒரு ஐக்கியமான உறவில்  இருக்கவேண்டுமென விரும்பினார்.  

எனவேதான், நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். என்று கூறுகின்றார். இதுவே இந்த நிருபத்தை அவர் எழுதுவதற்குக் காரணம். பிதாவோடும் குமாரனான கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவர்களாக இருப்பதற்கு என்ன வழி என்பதே இந்த நிருபத்தின் மைய சிந்தனை. 

யோவான் தான் எழுதிய நற்செய்தியிலும் இதுபோல தான் எழுதிய நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார். "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." ( யோவான் 20 : 31 )

நாம் அனைவரும் கிறிஸ்துவை விசுவாசிப்பதன்  மூலம் நித்திய ஜீவனை அடைய வேண்டும்; பிதாவோடும் குமாரனான இயேசு கிறிஸ்துவோடும் எப்போதும் ஐக்கியமாக இருக்கவேண்டும் என்பதே யோவானின் ஆசை.  இயேசு கிறிஸ்துவும் தனது ஜெபத்தில் இதனைத்தான் வேண்டினார். 

"அவர்களெல்லாரம் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17 : 21 )

மேலும், "............நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 )

அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசைபட்டுக் கூறிய அதே கருத்தினைத்தான் அவரது அன்புச் சீடர் யோவானும் கூறுகின்றார். 

இன்று நமது ஆசை விருப்பங்கள் என்ன ? கர்த்தரோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டுமென விரும்புகின்றோமா அல்லது அவரிடம் உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்து பெற்றுக்கொண்டு அவரது ஐக்கியமில்லாமல் நித்திய ஜீவனை இழந்துபோக விரும்புகின்றோமா?

"எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." என்று உறுதிபடக் கூறி அதற்கேற்ற வாழ்க்கை வாழ முயலுவோம்.


ஆதவன் 🖋️ 565 ⛪ ஆகஸ்ட் 15, 2022 திங்கள்கிழமை

"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

இன்று நாம் நமது நாட்டின் விடுதலை நாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். விடுதலை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் ஒருவர் விடுதலை அடைந்திட வேண்டுமானால் முதலில் தான் ஒரு அடிமை என்பதனையும் விடுதலை கிடைக்கும்போது என்னென்ன உரிமைகள் கிடைக்கும் என்பதனையும் உணர்ந்திருக்கவேண்டும். இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தபோது மகாத்மா காந்தியும் இதரத் தலைவர்களும் இந்த விழிப்புணர்வைதான் மக்களுக்கு அளித்து அவர்களைப் போராடத் தூண்டினர்.  

இப்படியே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருந்தது. பாவ இருளின் பிடியில்,  நித்திய ஜீவன் ஒன்று உண்டு எனும் உணர்வில்லாமல் அடிமைப்பட்டிருந்த மக்களை பாவத்திலிருந்து விடுவித்து விடுதலை அளிக்கக் கிறிஸ்து வந்தார். ஆனால் அதனை கிறிஸ்து அறிவித்தபோது யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. "நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர்?" ( யோவான் 8 : 33 ) என்று இயேசுவிடம் வாதிட்டனர்.  

"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று தெளிவாகக் கூறினார். பாவ அடிமை நிலையிலிருந்து விடுதலை அடைந்திட நாம் பாவத்துக்கு அடிமை என்பதனையும் அதிலிருந்து விடுதலை அடைந்திடவேண்டுமெனும் எண்ணமும் நமக்கு இருக்கவேண்டும். நமது பாவங்கள் நம்மை அடிமைப்படுத்தியிருப்பதனை உள்ளன ஆன்மாவோடு உணரவேண்டும். 

".............எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே." ( 2 பேதுரு 2 : 19 ) என எழுதுகின்றார் தலைமை அப்போஸ்தலர் பேதுரு. பாவம் நம்மை ஜெயித்துள்ளதானால் நாம் பாவத்துக்கு அடிமைகள்தான். 

அன்பானவர்களே, எந்த பாவம் நம்மை மேற்கொண்டுள்ளது என்பதனை நிதானமாக எண்ணிப்பார்ப்போம். பண வெறியாக இருக்கலாம், விபச்சார பாவங்கள், எண்ணங்கள், பிறரை அற்பமாக எண்ணி அவமதித்தல், பொய், கோள் சொல்லுதல், மாய்மால பேச்சுக்கள்.....என வொவொன்றாய் எண்ணிப்பார்ப்போம். நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள பாவத்தை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிடுவோம். 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."( 1 யோவான்  1 : 9 )

".......இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 )

மெய்யான விடுதலையினை இயேசு கிறிஸ்துவின்மூலம் பெற்று விடுதலை வாழ்வை அனுபவிப்போம். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்."

ஆதவன் 🖋️ 566 ⛪ ஆகஸ்ட் 16, 2022 செவ்வாய்க்கிழமை

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )

கிறிஸ்து காட்டும் மீட்பின் வழி குறுகிய வழி. அதாவது அது சிலுவை சுமக்கும் வழி. செழிப்பு, பகட்டு, ஆடம்பரம் என இவற்றையே விரும்பி வாழ்ந்துகொண்டே கிறிஸ்துவின் ராஜ்யத்திலும் நுழைய விரும்புகின்றனர் பலர். எனவேதான் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்துவின் குறுகிய வழியில் நுழையவேண்டுமானால் நாம் சில ஒறுத்தல்கள், தியாகங்கள் செய்யவேண்டியதும்   சிலுவைகள் சுமக்கத் தயாராக இருக்கவேண்டியதும்  அவசியம். 

கிறிஸ்துவே வழி என்றும், நமது பாவங்களை நிவர்த்திசெய்யும் கிருபாதார பலி கிறிஸ்துவே என்றும், பிதா ஒருவரே பிதாவுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்றும் பல வசனங்கள் கிறிஸ்துவே நித்திய ஜீவனுக்கான வழியென்பதை வேதத்தில் உறுதிப்படக் கூறுகின்றன. இதனை விசுவாசித்து எந்த துன்பம் வந்தாலும் அவரையே பற்றிக்கொண்டு வாழ்வதே இடுக்கமான வழியில் பிரவேசிக்க பிரயாசைப்படுதல்.

ஆனால் இன்று பலரும் கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டாலும், குறுகிய வாசல் வழியாய் நுழைய விரும்பாமல் வேதம் கூறும் வழியினைவிட்டு வேறு விசாலமான வழியாக நுழைய முயலுகின்றனர். தங்களுக்கு என  கிறிஸ்துவைவிட்டு வேறு மத்தியஸ்தர்களை உருவாக்கி அவர்களைத்  தேடி ஜெபிக்கின்றனர்; கிறிஸ்துவின் போதனையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி தங்கள் தவறை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர்.

 எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்." ( யோவான் 10 : 1 ) கிறிஸ்துவை நமது தகப்பனாக எண்ணினோமானால் அவரிடம் நேரடியாக நம்மால் நெருங்கிட முடியும். அவர் கூறும் போதனைகளின்படியும் அவர் காட்டும் வழிகளிலும்  வாழ முடியும். 

இன்று மக்களது மனநிலையினை அறிந்த பல ஊழியர்கள் இடுக்கமான வாசலை விசாலமானதாக மாற்றிட முயலுகின்றனர். எனவே, கிறிஸ்து கூறாத உபதேசங்களைக் கூறி மக்களைக் கவருகின்றனர். கவர்ச்சிகர ஆசீர்வாத திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றனர். கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் வலியைவிட இது எளிதாக இருப்பதால் மக்கள் இந்த ஊழியர்கள் காட்டும் விசாலமான வழியில் நுழைகின்றனர்.

மேலும் சில சபைகள், கிறிஸ்து கூறாத; வேதாகமம் கூறாத,  வேறு மத்தியஸ்தர்களை மக்களுக்கு அறிமுகம்செய்து அவர்களிடம் பரிந்துபேசி ஜெபிக்க மக்களை பழக்கியுள்ளனர் ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் என்று இயேசு தெளிவாகக் கூறியிருந்தும் இந்தக் கள்ளவழி பலருக்கும் பிடித்தமானதாகஇருக்கின்றது. ஆனால் அது அழிவுக்கான வழி என்பதனை அறியாதிருக்கின்றனர். 

"நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." ( யோவான் 10 : 9 )

அன்பானவர்களே, செழிப்பான மேய்ச்சலைக் கண்டடைய வேண்டுமானால் நாம் கிறிஸ்துவையே பின்பற்றி இடுக்கமான வாயில் வழியாய் நுழைந்திட பிரயாசைப்படவேண்டும். 

புனிதர்கள், பரிசுத்தவான்கள் என நாம் போற்றக்கூடிய அனைவரும் இப்படி இடுக்கமான வழியில் நுழைந்தவர்கள்தான். அவர்களது வாழ்க்கை வரலாறுகள் அவர்கள் எப்படி கிறிஸ்துவை நேசித்தார்கள் என்பதை நமக்கு விளக்கும். அதைப்போல நாம் வாழ அழைக்கப்படுகிறோமேத் தவிர அவர்களை பரிந்துரையாளர்களாக கொள்வதற்கல்ல. 

கிறிஸ்துவையே நேசிப்போம்; அவரையே பின்பற்றுவோம்; இடுக்கமான அந்த வழிதான் இரட்சிப்படையவும் நல்ல மேய்ச்சலைக் கண்டடையவும் வழி. 

ஆதவன் 🖋️ 567 ⛪ ஆகஸ்ட் 17, 2022 புதன்கிழமை

"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 24 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவங்களைப் போக்கிட பாவ நிவாரணப்பலி செலுத்தவேண்டியிருந்தது. மிருகங்களைக் கொன்று அவற்றின் இரத்தத்தினால் மக்கள் பாவ நிவாரணம் பெற்றனர். அனால் இன்று புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு கிறிஸ்து தனது சுய இரத்தத்தைச் சிந்தி  பாவ நிவாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இன்றைய வசனம்,  இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை, "ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம்" என்று கூறுகின்றது.  ஆபேலினுடைய இரத்தம் தன்னைக் கொலை செய்த தனது சகோதரனுக்காக தேவனைநோக்கி மண்ணிலிருந்து முறையிடுகிற இரத்தம். இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். காயீனிடம் தேவன் பேசும்போது, "...என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது."( ஆதியாகமம் 4 : 10 ) என்றார். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனைநோக்கிக் கூப்பிட்டு தனது சகோதரன் செய்த துரோகத்துக்காக முறையிட்டது. ஆனால் இயேசு  கிறிஸ்துவின் இரத்தம் அதனைவிட நன்மையானவைகளைப் பேசுகின்ற இரத்தம். அது தன்னை ஏற்றுக்கொண்டு தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களுக்காக பரிந்து பேசுகின்ற இரத்தம். 

ஆபேலினுடைய இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டது. ஆனால், இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தைச் சிந்தி நேரடியாக பிதாவின் சந்நிதியில் நுழைந்து நமக்காகப் பரிந்துபேசுகின்றார். "வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்."( எபிரெயர் 9 : 12 ) எனவேதான் இது ஆபேலினுடைய இரத்தம்  பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாக இருக்கின்றது.  

"என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்." ( 1 யோவான்  2 : 1 ) என்று யோவான் குறிப்பிடும் இந்த மேலான நிலையை இயேசு கிறிஸ்துதத் தனது இரத்தத்தைச் சிந்தி அடைந்தார். 

ஆம் அன்பானவர்களே, நாம் இன்று ஆபேலினுடைய இரத்தம் பேசியத்தைவிட மேலான இடத்திலிருந்து மேலானவைகளைப் பேசும் கிறிஸ்துவின் இரத்தத்தினிடம் வந்து சேர்ந்துள்ளோம். அந்த இரத்தத்தால் நம்மைக்  கழுவி பூரணப்படுத்த அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கின்றார். அவருக்கே நம்மை ஒப்புக்கொடுத்து மேலான ஆவிக்குரிய அனுபவத்தைப் பெற்று மகிழ்வோம். 


ஆதவன் 🖋️ 568 ⛪ ஆகஸ்ட் 18, 2022 வியாழக்கிழமை

"மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்." ( ஏசாயா 1 : 3 )

இன்றைய மனிதர்களது நிலைமையை உணர்ந்து தேவன் கூறிய வார்த்தைகளைப்போல இன்றைய தியான வசனம் இருக்கின்றது. அதாவது, ஏசாயா காலத்தில் வாழ்ந்த மக்களைப்போலவே இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் மனிதர்கள் இருக்கின்றனர் என்பது புரிகின்றது.

தான் உருவாக்கிய மாடு, கழுதை போன்ற மிருகங்களைவிட மனிதன் தரம்தாழ்ந்து விட்டதை தேவன் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றார். மாட்டுக்கும் கழுதைக்கும் கூட தனது எஜமான் யார் என்பதும் அவனது விருப்பம் என்ன என்பதும் தெரிந்திருக்கிற்றது. ஆனால் இந்த மக்கள் எந்த உணர்வுமில்லாமல் இருக்கின்றனர் என்கின்றார் தேவன். 

முதலில், இந்த ஜனத்துக்கு அறிவில்லை என்றும் பின்னர் உணர்வுமில்லை என்கின்றார் தேவன். அறிவு இருக்குமானால் தேவனை அறிந்திருப்பான். ஐந்தறிவு உள்ள மாடு, கழுதைகளுக்கே தங்கள் எஜமானனைத் தெரிந்திருக்கின்றது. இந்த மக்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், இந்த உலகத்தில் பலரும் ஒவ்வொரு கடவுளை வழிபடுகின்றனர். ஆனால் அவர்கள் வழிபடும் கடவுளைப்பற்றியே அவர்களுக்குத் தெரியவில்லை.  

வண்டி மாடுகளைக் கவனித்துப்பார்த்தால் ஒனறு புரியும். அந்த மாடுகள் வண்டியில் பூட்டுவதற்கு வண்டியோட்டி வண்டியைத் தூக்கியவுடன் தானாகத் தலையைத் தாழ்த்தி வண்டியில் பூட்டிட உதவிடும். ஆம், அந்த மாடுகளுக்கு வண்டியோட்டியையும் அவன் தன்னை என்ன செய்ய விரும்புகின்றான் என்பதும் தெரிந்திருக்கின்றது.  இதுபோல நாம் தேவனையும் அவர்  நம்மை என்னக்  காரியத்துக்கு பயன்படுத்த விரும்புகின்றார் என்பதையும் அறிந்திருக்கவேண்டும்.

வண்டி மாடுகளைப்பற்றி இன்னும் ஒரு குறிப்பு. வண்டியோட்டி வெளியூர்களுக்கு வண்டியைக் கொண்டு சென்று, திரும்பி வீட்டிற்கு வரும்போது வண்டியோட்டி வண்டியில் படுத்துத் தூங்குவான். ஆனால் அந்த மாடுகள் சரியான பாதையில் நடந்து வண்டியோட்டியின் வீட்டினைச் சென்று சேரும். ஆம், மாடுகள் தன் எஜமானனை அறிந்துள்ளன.

அன்பானவர்களே, மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறிந்திருக்கும்போது அறிவுள்ள நாம் அறிவில்லாமலும், தேவனைப்பற்றிய உணர்வில்லாமலும் இருக்கலாமா? 

இன்று உலகத்தில் மக்கள் சகலவித அநியாயங்களினால் நிறைந்து வாழ்வதற்குக் காரணம் தேவனை அறியாமலும் அவரைப்பற்றிய உணர்வும் இல்லாமல் வாழ்வதால்தான். இதனை, "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்கxxxxxxxxxxxxxxளைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்" (ரோமர் 1:28) எனக் கூறுகின்றார் பவுல். 

மாடுபோலவும் கழுதைபோலவும் வாழாமல் கர்த்தரை அறியும் அறிவில் வளர்ந்து பரிசுத்தமானவர்களாக வாழ்வோம். 


ஆதவன் 🖋️ 569 ⛪ ஆகஸ்ட் 19, 2022 வெள்ளிக்கிழமை

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 )

இந்த உலகத்தில் உயிருள்ள பொருட்கள் உயிரில்லாத பொருட்கள் என பல்வேறு பொருட்கள் உள்ளன. உயிருள்ள பொருட்கள் உணவு உட்கொள்ளும், வளரும்,  தனது இனத்தைப் பெருக்கச்செய்யும், பலன்தரும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஆனால், உயிரில்லாதவை எதனையும் செய்யாது. கிடந்த இடத்தில கிடக்கும்.

ஒரு கல், வீட்டிலுள்ள மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் ஒரு இடத்தில எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் மற்றவர்கள் அதனை மாற்றினாலொழிய அதே இடத்தில்தான் கிடக்கும்.

இன்றைய வசனத்தில் தேவன் குமாரன் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத வாழ்க்கை என்பதனைக்  கூறுகின்றார். அதாவது குமாரனான இயேசு கிறிஸ்து ஒருவனுக்குள் இல்லையானால் அவன் உயிரில்லாத பொருளுக்குச் சமம் என்கின்றார். 

கிறிஸ்து இல்லாத மனிதன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியடைந்தவன் போலவே தெரிவான். பொருளாதாரத்திலும், பதவியிலும் கிறிஸ்து இல்லாத மனிதன் செழிப்படைந்தவன்போலத் தெரிவான். ஆனால், கிறிஸ்துவின் ஜீவன் உள்ளவன் வெளிப்பார்வைக்கு வளர்ச்சியில்லாதவன் போலத் தெரிந்தாலும்   உள்ளான தேவனுக்கேற்ற வளர்ச்சி பெற்றவனாக வாழ்வான். 

குமாரனில்லாத மனிதன் உயிரற்ற பொருள்போல, வளர்ச்சியற்றவனாக, தன்னைக்கொண்டு மற்றவர்களுக்கு பலனில்லாமல், கனிகொடுக்கும் ஒரு வாழ்க்கை இல்லாமல், பாவ உணர்வில்லாதவனாக இருப்பான்.  

இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கும்போது அவர் நமக்குள் வருகின்றார். நமது பாவங்களை மன்னித்து நம்மைத் தனக்கு ஏற்புடையவன் (ள் ) ஆக்குகின்றார். இப்படி தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் ஜீவனுள்ளவர்கள் ஆகின்றோம். 

உயிரில்லாத பொருட்கள் ஒரே இடத்தில கிடக்கும்போது அவை துரு ஏறி கெட்டுப்போகலாம், மரப் பொருட்கள் என்றால் உளுத்துப் போகலாம். ஆனால், நமக்குள் குமாரனான கிறிஸ்து வரும்போது நாம் பெலனுள்ளவர்கள் ஆகின்றோம். அந்த பலத்தால் இந்த உலகத்தை ஜெயித்தவர்களாக மாறுகின்றோம். "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" ( 1 யோவான்  5 : 5 ) என்று கேள்வி எழுப்புகின்றார் யோவான். 

அன்பானவர்களே, நாம் ஜீவனுள்ளவர்களாக உலகத்தில் வாழ்ந்து கனிகொடுப்பவர்களாக, மற்றவர்களுக்கு பயன்தருபவர்களாக வாழவே அழைக்கப்பட்டுளோம். இப்படி வாழும்போது நாம் உலக மக்களின் பார்வைக்கு அற்பமாகத் தெரிந்தாலும், தேவனது பார்வையில் வலுவானவர்களாக, இந்த உலகத்தை ஜெயிப்பவர்களாக இருப்போம். 


ஆதவன் 🖋️ 570 ⛪ ஆகஸ்ட் 20, 2022 சனிக்கிழமை

"....................உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்." ( லுூக்கா 4 : 8 )

கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைச்செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம், அவரே நம்மை உண்டாக்கியவர். அவரே நமக்காகத் தனது இரத்தத்தைச் சிந்தி இரட்சிப்பை ஏற்படுத்தியவர். எனவே, "அவர் ஒருவருக்கே" என்பது அவரைத்தவிர வேறு எதனுக்கும் உன் உள்ளத்தில் அவருக்கு இணையான இடத்தைக் கொடாதே என்பதாகும்.

இன்றைய வசனத்தை இயேசு கிறிஸ்து சாத்தானை நோக்கிக் கூறினார். "நீர் என்னைப் பணிந்துகொண்டால் இந்த உலகத்தின் மேலுள்ள அதிகாரம், மாட்சிமை எல்லாவற்றையும் உமக்குத் தருவேன்" என்று பிசாசு இயேசு கிறிஸ்துவிடம் கூறியபோது அதற்கு இயேசு கிறிஸ்து பதிலாக இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார். 

சாத்தானை இயேசு இந்த உலகத்தின் அதிபதி என்றும் கூறியுள்ளார். (யோவான் 14:30) இன்று பெரும்பாலான மக்கள் உலக ஆசீர்வாதங்களைத் தேடி ஓடுகின்றனர். அவை கிடைக்கும்போது கர்த்தர் தந்ததாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் எப்போதுமே இது சரியல்ல. சாத்தானும் நம்மை செல்வத்தினால் நிரப்பமுடியும். 

நாம் கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யவேண்டும் என்று கூறுவது வெறுமனே கோவிலுக்குச் சென்று தேவனை ஆராதிப்தையல்ல. மாறாக,  நமது செயல்பாடுகள் கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று பொருள். பணம், பதவி, பகட்டு இவைகளுக்காக தேவனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கர்த்தரை புறக்கணித்து சாத்தானை ஆராதிப்பதாகும். 

வெளிப்பார்வைக்கு நாம் கர்த்தரை ஆராதிப்பதுபோலத் தெரியலாம், ஆலயங்களுச்  சென்று ஆராதனைகளில் கலந்துகொள்ளலாம். ஆனாலும் நமது செயல்பாடுகளும் நமது இருதயமும் தேவனுக்கு நேராக இல்லையானால், நாம் சாத்தானை வழிபடுபவர்கள் தான்.   

இன்று அரசியலிலும் தொழில்களிலும் பல கிறிஸ்தவர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் எல்லோரும் தேவனை மட்டுமே ஆராதிப்பவராங்களோ, அவருக்கு மட்டுமே மகிமைச் செலுத்துபவர்களோ அல்ல. 

ஆனால் செல்வமுள்ள பலர் கர்த்தரை உண்மையாய் ஆராதித்துள்ளனர். அவர்களது செல்வம் அவர்களது ஆராதனைப் பொருளாக  இல்லாமல் கர்த்தரே அவர்களது ஆராதனைக்குரியவராக  இருந்தார்.  ஆபிரகாம், செல்வந்தனான யோபு, அரசனான தாவீது, எசேக்கியா போன்றார்கள் தங்கள் செல்வத்தையும் பதவியையும் ஆராதிக்காமல் தேவனையே ஆராதித்தவர்கள். அதாவது, பதவி, செல்வம் இருந்தாலும் முதல் முன்னுரிமையை தேவனுக்கே கொடுத்து வாழ்ந்தனர். 

செல்வத்தைத் தேடி, புகழ் பெருமையைத் தேடி நாள் முழுவதும்  ஓடி  பெயருக்கு ஆலையம் சென்று ஆராதிப்பது அவர் ஒருவருக்கே ஆராதனை செலுத்துவதல்ல. மாறாக, செல்வம் புகழ் இருக்கிறதோ இல்லையோ, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்" என்று யோபு கூறியதுபோல விசுவாசத்துடன் அவருக்கு உத்தமமான ஒரு வாழ்க்கை வாழ்வது.  

இத்தகைய ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது வாழ்வில் எல்லாவற்றிலும் முன்னுரிமையைக் கர்த்தருக்கு கொடுப்போம். இதுவே அவரை மகிமைப்படுத்துவது. நம் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்து வாழ்வோம். 


ஆதவன் 🖋️ 571 ⛪ ஆகஸ்ட் 21, 2022 ஞாயிற்றுக்கிழமை

"என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்". ( மத்தேயு 21 : 13 )

ஏசாயா மற்றும் எரேமியா தீர்க்கதரிசிகளின்கூற்றுக்களை இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் மேற்கோள் காட்டிப்  பேசுகின்றார். என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்பது ஏசாயா கூறியது.  ( ஏசாயா 56 : 7 ) 

ஆனால், இந்த ஆலயத்தில் தேவனுக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழாதவர்களும் வெறும் பகட்டுக்காகவும், மற்றவர்கள்முன் தங்களை நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவும் வந்து தங்களது பொல்லாப்புகளுக்கு மனம் வருந்தாமல்  வழிபாடுசெய்கின்றனர். இதனையே எரேமியா கூறினார்:- 

"நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று...........................என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? " ( எரேமியா 7 : 9 - 11 )

திருடர்கள் தாங்கள் கொள்ளையடித்தப் பொருட்களை குகைகளில் பதுக்கி வைப்பதுபோல தங்களது பொல்லாப்புக்களை மக்களது பார்வையில் படாமல் மறைத்துவைக்க கோவிலை ஒரு பதுங்கு பாசறையாகக் கொண்டுள்ளனர் பலர்.

நீதியற்ற செயல்கள், ஏமாற்று, பித்தலாட்டம், போன்ற செயல்களைச் செய்துவிட்டு ஆலயங்களில் முன்னுரிமைபெறுவதும் பெறுவதற்குத் துடிப்பதும் கோவிலைக் கள்ளர்குகை ஆக்குவதுதான். 

இந்த வசனம் நமது உடலான ஆலயத்துக்கும் பொருந்தும். புதிய ஏற்பாட்டில் நாமே ஆலயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது உடலே பரிசுத்த ஆவியின் ஆலயமாய் இருக்கின்றது. (1 கொரிந்தியர் 3:16 மற்றும் 6:19) இந்த உடலான ஆலயத்தை பரிசுத்தமாய்க் காத்திடவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

நமது உடலால் நாம் தேவனுக்கு ஏற்பில்லாத அவலட்சணமான காரியங்களைச்  செய்யும்போது நாம் ஆலயத்தைக் கள்ளர்குகை ஆக்குகின்றோம். விபச்சாரம், வேசித்தனம், தேவனுக்கு ஏற்பில்லாத சிற்றின்ப காரியங்களில் மூழ்கிவிடும்போது நாம் நமது உடலான ஆலயத்தைக் கள்ளர் குகை ஆக்குகின்றோம்.  

பரிசுத்த ஆவியானவர் வந்து தங்கவேண்டிய ஆலயத்தில் பிசாசின் செயல்பாடுகள் நிறையும்போது, பொய்யனும் பொய்க்குப்  பிதாவுமாகிய பிசாசின் பொக்கிஷங்களால் நமது உடலான ஆலயத்தை நிரப்புகின்றோம்.

இன்றைய வசனம் இதனைத்தான் கூறுகின்றது. எரேமியா கூறுவதுபோல, திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று கூறிட முடியாது.

அன்பானவர்களே, ஆலயத்துக்குப் போகும்போது நமது நிலைமையை எண்ணிப்பார்ப்போம். நமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். முதலில் நமது உடலான ஆலயத்தை தேவனுக்கு ஏற்புடையதாக மாற்றுவோம். வெளிவேடமான ஆலய ஆராதனை தேவனுக்கு ஏற்புடையதல்ல. நமது உடலும் நாம் செல்லும் ஆலயமும் கள்ளர் குகை அல்ல எனும் உண்மை எப்போதும் நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழ முடியும்.


ஆதவன் 🖋️ 572 ⛪ ஆகஸ்ட் 22, 2022 திங்கள்கிழமை

"அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்." ( எரேமியா 13 : 16 )

தேவனில்லாத வாழ்க்கை,  தேவனைத் தேடாத வாழ்க்கை எப்போதும் அமைதியும் ஆறுதலும் தருவதாக இருக்காது. காரணம், அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்போதே வாழ்வில் அந்தகார இருள் ஏற்படலாம். நல்ல ஒரு காரியம் நடக்கும் என எண்ணி எதிர்பாத்திருக்கும்போது அந்தகார இருள் ஏற்பட்டு வாழ்க்கையின் மகிழ்ச்சி போய்விடலாம். ஆனால், கர்த்தருக்குக் காத்திருப்பவர்களுக்குத் திட நம்பிக்கை உண்டு. 

இன்றைய வசனம் தேவனைத்  தேடி அவருக்கேற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.  

நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். 

ஒரு பேரிடர் வருவதற்குமுன் மக்களைக் காப்பாற்ற இந்த உலகில் அரசாங்கம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்கின்றது. மட்டுமல்ல, தனது நாட்டு மக்களுக்கு அவர்கள்  என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. கடந்த கொரோனா காலத்தில் அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகளை நாம் அறிவோம்; அரசு செய்த முன்னேற்பாடுகளை நாம் அறிவோம். மருத்துவ மனைகளில் அதிக அளவில் படுக்கைகளும், மருந்துகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. 

இதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் சில தயாரிப்புகளைச் செய்யவேண்டியது அவசியம். பெரிய இடர்பாடாக நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன்,  இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம்  தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். நமது வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஒரு மகிமையான வாழ்வு வாழவேண்டியது அவசியம்.

கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது வாழ்வில் துன்பமே வராது என்று அர்த்தமல்ல, ஆனால் துன்பத்தோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் தேவன் உண்டாக்குவார் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 10:13)

ஆனால், துன்மார்க்கமாய் வாழ்ந்து, தேவனை மறந்த்து அவருக்கு மகிமைச் செலுத்தாமல் வாழும்போது  எரேமியா கூறுவதுபோல பல்வேறு இடர்கள் நம்மை நெருக்கித் துன்புறுத்தும்.  

அன்பானவர்களே, தேவ வசனத்துக்கு நடுங்குவோம். கேடான சம்பவங்கள் வாழ்வை வருத்துமுன் கர்த்தருகேற்ற மகிமையை அவருக்குச் செலுத்தி பரிசுத்தமான வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 


ஆதவன் 🖋️ 573 ⛪ ஆகஸ்ட் 23, 2022 செவ்வாய்க்கிழமை

"வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார்." ( மத்தேயு 13 : 33 )

நமக்கு மோர் புளிக்கவைப்பதைப்பற்றி நன்கு தெரியும்.  பாலைக் காய்ச்சி அப்படியே ஆறவைத்தால் அது கெட்டுப்போகும். எதற்கும் பயன்படாமல் நாற்றமெடுத்துவிடும். மாறாக அதனோடு சிறிது உறைமோரை (புளித்த மோர்) விட்டுவைத்தால் அது மறுநாளில் நல்ல தயிராகக்கிடைக்கும்.  இதுபோலவே ஆப்பம் சுடுவதற்கும் நாம் முந்தின நாளிலேயே அது புளிப்பதற்கு சிறிது சோறு, பழம் இவற்றைச் சேர்க்கின்றோம். இதுபோல ஏற்கெனவே புளித்த மாவினை புதுமாவுடன் சேர்ந்து புளிக்கவைக்கலாம்.   

மாவானது புளிக்கவைக்கும்போதுதான் ஏற்ற பலனைத் தரும். இட்லி, தோசை மாவை நாம் முந்தின நாளே ஆட்டி புளிக்கவைத்து பயன்படுத்துகின்றோம். இங்கு இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தை புளித்த மாவுக்கு ஒப்பிடுகின்றார். 

நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் நம்மிடம் புளிப்புத் தன்மை இருக்கவேண்டும். அதாவது, தேவ சுபாவங்கள் இருக்கவேண்டும். அப்படி  நம்மிடம் இருக்கும் புளிப்பு நம்மைமட்டும் சுவையூட்டுவதாக இல்லாமல், எப்படி புளித்த மாவு தன்னோடு இருக்கும் மற்ற மாவினையும்  புளிப்புள்ளதாக மாற்றுகின்றதோ அதுபோல நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் புளிப்புள்ளவர்களாக மாற்றும். இதுவே கிறிஸ்துவின் ராஜ்யத்தை அறிவித்தல். 

வேதாகமத்தில் புளிப்பு பாவத்துக்கு உவமையாகவும் கூறப்பட்டுள்ளது. "ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." ( 1 கொரிந்தியர் 5 : 8 ) என்கின்றார் பவுல் அடிகள்.

அப்போஸ்தலரான பவுல் புளிப்பைத் தவறான உபதேசத்துக்கும் ஒப்பிட்டுள்ளார். தவறான கிறிஸ்தவ உபதேசம் மொத்த சபையினையும் பாழாக்கிவிடும். "புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்." ( கலாத்தியர் 5 : 9 ) என்கின்றார் அவர். 

நல்ல புளிப்பு ஆப்பமாவு, உறைமோர் போல நன்மை தரும். கெட்ட புளிப்பு பனங் கள் போல கேடுண்டாக்கும். 

அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் நாம்  இந்த நாட்டில் குறைவான எண்ணிக்கையில்  இருந்தாலும்,  சரியான புளிப்புள்ளவர்களாக இருப்போமானால், கிறிஸ்து கூறுவதுபோல நாம் மற்றவர்களையும் நம்மைப்போல புளிப்புள்ளவர்களாக மாற்றி பரலோக ராஜ்யத்துக்கு உரிமையானவர்களாக மாற்று முடியும். ஆனால், பாவம், தவறான போதனை எனும் புளிப்பு இருக்குமானால் நமது ஆன்மாவையே இழந்துவிடுவோம்.

இந்திய நாட்டிற்கு வந்த மிஷனெரிகள் நல்ல புளிப்பைக் கொண்டு வந்ததால் நமது நாடு அதனைப்பெற்று இன்றும் அதன் பலனை அனுபவித்துவருகின்றது. நாமெல்லோரும் கிறிஸ்தவர்களாக இன்று இருப்பது அவர்கள் கொண்டுவந்த நல்ல புளிப்பினால்தான். நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு கிறிஸ்துவின் புளிப்பினை அளித்துச் சுவையூட்டுவோம் 


ஆதவன் 🖋️ 574 ⛪ ஆகஸ்ட் 24, 2022 புதன்கிழமை

"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்." ( லுூக்கா 6 : 49 )

எந்த ஒரு கட்டிடத்துக்கும் அஸ்திவாரம்தான் பிரதானம். கட்டிடத்தின் உயரம் , அதாவது எத்தனை மாடி கட்டப்போகின்றோம் என்பதன் அடிப்படையிலேயே அஸ்திபாரம் போடுகின்றோம். பலமாடி கட்டிடங்களுக்கு மிக ஆழமான அஸ்திபாரம் இடப்படுகின்றது. வேர் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல அஸ்திபாரங்கள்   கட்டிடத்தைத் தாங்கிப்பிடிக்கின்றன. 

இதுபோலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கின்றது. நாம் எவ்வளவு ஆழமாக கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு பலப்படுகின்றோமோ அவ்வளவு சிறப்பாக நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்கும். ஆம், கிறிஸ்துவே நமது ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரம்.

"என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. அதாவது அவரது வார்த்தைகளைக் கேட்கவேண்டும்; அவற்றின்படி செய்யவேண்டும். அப்படி இல்லையானால் நாம் மணல்மேல் வீடு கட்டுபவர்களாக இருப்போம்.

அஸ்திபாரமில்லாமல் மணல்மேல் வீடு கட்டுவது அறிவுகெட்டத் தனமல்லவா? கிறிஸ்துவை உண்மையாய் அறிவிக்கும் ஊழியர்கள்தான் சரியான அஸ்திபாரம் போடுபவர்கள். இப்படிப்   "போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது." ( 1 கொரிந்தியர் 3 : 11 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல் அடிகள். 

மேலும் அவர் கூறுகின்றார், "எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்." ( 1 கொரிந்தியர் 3 : 10 )

அதாவது கிறிஸ்துவை அஸ்திபாரமாகக்கொண்டு ஒவ்வொருவரும் கட்டலாம். அவரவருக்குத்  தேவன் அளித்தக் கிருபையின்படி நமது ஆவிக்குரிய வாழ்வை நாம் கட்டவேண்டும். ஆனால் எக்காரணம்கொண்டும் நமது அஸ்திபாரத்தைவிட்டு விலகிடாமல் கட்டவேண்டும். சிலர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வின் ஒருபகுதியைச் சிறப்பாகக் கட்டுவார்கள்; மறுபகுதி அஸ்திபாரமில்லாத பகுதியாக இருக்கும்.

ஒரு வீட்டின் ஒருசில அறைகள்மட்டும் பலமான அஸ்திபாரத்துடனும் மற்றப்பகுதிகள் அஸ்திபாரமில்லாமலும் இருந்தால் ஆபத்தல்லவா?

எனவே அன்பானவர்களே,  கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை விட்டு விலகிடாமல் உறுதியாக அவர்மேல் நமது ஆவிக்குரிய வாழ்வைக் காட்டுவோம். அப்போதுதான் தேவன் அதனைப் பரிசோதித்துப் பார்க்கும்போது நமக்கு ஏற்ற கைமாறு கிடைக்கும். 


ஆதவன் 🖋️ 575 ⛪ ஆகஸ்ட் 25, 2022 வியாழக்கிழமை

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான்  4 : 10 )

உலகத்திலுள்ள எல்லா மதத்தினரும் தங்கள் தங்கள் தெய்வத்தினை அன்பு செய்கின்றார்கள். அப்படி அன்பு செய்வதால்தான் அந்தத் தெய்வங்களுக்கு வழிபாடுகளும் பல்வேறு சடங்குகளும் செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் நாமும் இப்படியே இருப்போமானால் நமக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது.

ஒருவரை நாம் முழுமையாக அன்பு செய்யவேண்டுமானால் முதலில் அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கவேண்டும். அவர் நம்மை அன்புசெய்வது நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இந்த உலகத்திலேகூட காதல் உணர்வைப் பாருங்கள், காதலிக்கும் இருவரும் (உண்மையான காதலர்கள்) ஒருவரைப்பற்றி மற்றவர் நன்கு அறிந்திருப்பார்கள். தனது காதலன் அல்லது காதலி தன்னை அன்புசெய்வதை அறியாவிட்டால் அதில் அர்த்தமே இருக்காது. அந்தக்  காதல் முழுமையானதாகவும்  இருக்காது. 

ஒருவர் தான் வணங்கும் தெய்வத்தை இந்த பரஸ்பர அன்புணர்வில்லாமல் வணங்கி வழிபடுவது அர்த்தமில்லாதது. எந்த அன்புணர்வும் இல்லாத ஒரு ஜடப்பொருளை ஒருவர் உண்மையாய் அன்புசெய்வது எப்படி சாத்தியமாகும்?  நாமும் இதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உண்மையான அன்பு செலுத்தவேண்டுமானால் முதலில் அவர் நம்மை அன்பு செய்ததும், அவர் நமது பாவங்களை மன்னித்து மீட்டுக்கொண்டதும், அனுபவபூர்வமாக நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

கணிதத்தில் கூறப்படும் வெறும் வாய்ப்பாடுபோல, "கிறிஸ்து எனக்காக இரத்தம் சிந்தியுள்ளார், கிறிஸ்து எனது பாவங்களை மன்னித்துள்ளார்"  என்று வெறுமனே கூறுவதல்ல. அனுபவப்பூர்வமாக அந்தப் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெற்றுகொள்ளும்போது மட்டுமே அவரது அன்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும்.  

கிறிஸ்துவின்மேல் உண்மையான அன்பு ஏற்படும்போது நாம் பிற மதத்தினர் தங்கள் தெய்வத்திற்குச் செய்வதுபோல இயேசு கிறிஸ்துவின் படத்துக்கு மாலை, பூ, வாசனைத் திரவியங்கள் என  மரியாதை செய்யமாட்டோம். அவரது அன்பு நமக்குள்ளே  இருந்து நம்மை மனதளவில் அவர்மேல் அன்பு பெருக்கச்செய்யும். இந்த அனுபவம் இல்லையானால் நாம் இன்னும் இரட்சிப்பு அனுபவம் பெறவில்லை என்றே பொருள். காதலிக்கும் எவரும் தங்கள் காதலரின் படத்துக்கு மாலை, பூ அகர்பத்தி ஏற்றி அன்பை வெளிப்படுத்துவதில்லையே ?. 

ஆம், அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. பிற மத்தினருக்கும் கிறிஸ்தவர்களுக்குமுள்ள வித்தியாசம் இதுதான். வேறு எந்த உலக தெய்வங்களும் தங்களை வழிபடும் மக்களுக்காக உயிர் தியாகம் செய்யவில்லை.

அன்பானவர்களே, நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு கிறிஸ்துவின் இந்த உன்னத மீட்பு அனுபவத்தை அவரிடம் வேண்டுவோம். 

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்ததினால்தான்  அன்பு உண்டாயிருக்கிறது. அவரது அன்புக்கு நாம் பிரதிபலன் காட்டவேண்டாமா?  ஆம், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான்  5 : 3 ) 


ஆதவன் 🖋️ 576 ⛪ ஆகஸ்ட் 26, 2022 வெள்ளிக்கிழமை

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்." ( சங்கீதம் 113 : 7 )

பொதுவாக இந்த உலகத்தில் அரசாங்கமோ அல்லது பெரிய பெரிய தொழில் நிறுவனங்களோ தங்களுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது மிகத் திறமையானவர்களையே தேர்வுசெய்வார்கள். ஆனால் நமது தேவன் திறமையில்லாதவர்களையும், எதுவும் இல்லாதவர்களையும், அற்பமும் குப்பையுமானவர்களையும் தேர்ந்தெடுத்து தனக்கு ஏற்றவர்களாக மாற்றி பயன்படுத்துகின்றனர்.  

"உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். இப்படி அற்பமானவராக இருந்து உயர்த்தப்பட்டவர்தான் தாவீது. "தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்." ( சங்கீதம் 78 : 70 )

"கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்." ( சங்கீதம் 78 : 71 )

அன்பானவர்களே, இன்று இதனை வாசிக்கும் பலர் தங்களை இந்த உலகம் அற்பமாக எண்ணுவதாக எண்ணிக் கலங்கலாம். ஆனால், இன்றைய தியானத்துக்குரிய வசனம்  நாம் அப்படி எண்ணிக் கலங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுரு, யோவான், யாக்கோபு இவர்களைத்தான் இயேசு கிறிஸ்து தெரிந்துகொண்டு  வல்லமையாகப் பயன்படுத்தினாரேத்  தவிர, அந்தக்காலத்தில் இருந்த செல்வந்தர்களையோ, படிப்பறிந்த அறிஞர்களையோ அல்ல. 

இப்படி தேவன் பயன்படுத்துவதற்குக் காரணங்கள்  உண்டு. ஒன்று, இல்லாமையில், நொறுக்குதலில் வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பிலேயே தாழ்மைக்குணம் இருக்கும். தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை அளிக்கின்றார்.  மேலும்,  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 52 ) என்று வாசிக்கின்றோம். தாழ்மைக்குணமே  தேவன் விரும்புவது.

இரண்டாவது காரணம், திறமையானவர்கள் திறமையாய்ச் செயல்படுவது இயற்கை. ஆனால் ஒன்றுக்கும் உதவாத திறமையற்றவர்கள் சிறப்பாகச்  செயல்படுவதில்தான் தேவனது வல்லமை வெளிப்படுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நம்மில் பெருமை வந்துவிடாமல் காத்துக்கொள்வோம்.  பெருமை என்பது பிசாசின் குணம். அந்தக் குணமுள்ளவர்களை தேவன் பயன்படுத்தவோ உயர்த்தவோ முடியாது. எனவே, தாழ்மை குணத்தை மட்டும் நம்மைவிட்டு விலகிடாமல் காத்துகொண்டு வாழ்வோம். கர்த்தர் நம்மை நிச்சயமாக பயன்படுத்துவார்; ஆட்டுத் தொழுவதிலிருந்த தாவீதை அரியணையிலேற்றி அழகுபார்த்ததுபோல நம்மையும் உயர்த்தி அழகுபடுத்துவார்.  தற்போதைய நமது தாழ்ந்த நிலையே நாம் உயர்த்தப்படுவதற்கான முதல் நிலை. 

ஆம், நமது தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தேவன் கூறிய வார்த்தைகள் பொய்க்காது. 


ஆதவன் 🖋️ 577 ⛪ ஆகஸ்ட் 27, 2022 சனிக்கிழமை

"கர்த்தராகிய இயேசுவின் உயிர்தெழுதலைகுறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்கள் எல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது". (அப்போஸ்தலர் 4:33)

நாம் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்கவேண்டுமானால், கர்த்தரது பூரண கிருபையால் நாம் நிரம்பியிருக்கவேண்டியது அவசியம். கிருபையோடு நாம் கிறிஸ்துவை அறிவிக்கும்போதுதான் அது மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

பூரண கிருபை என்பது அற்புதங்கள் செய்யக்கூடிய சக்தி என்று பலரும் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது முற்றிலும் சரியல்ல. பூரணகிருபை என்பது நாம் பரிசுத்தமாக வாழ உதவும் தேவனது அன்பு உதவி. மட்டுமல்ல, பூரண கிருபை மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும். அது, நமது பேச்சு, செயல்களில் தேவன் நம்மை வித்தியாசப்படுத்தியிருப்பதை  மற்றவர்கள் உணரச்செய்யும்.   

இப்படிப் பூரண கிருபையோடு அந்தியோகியாவில் பிரசாங்கம் செய்த சீடர்களை அங்கிருந்த மக்கள்  வித்தியாசமாகக் கண்டதால் அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர். அதாவது கிறிஸ்தவர்கள்  பெயர் கிறிஸ்துவின் உபதேசத்தின்படி வாழ்ந்த மக்களுக்கு மற்றவர்கள் அளித்தப் பெயர். "அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று". ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 11 : 26 )

இது எப்படிச் சாத்தியமாயிற்று என்றால் தேவனது பூரண கிருபை அவர்கள்மேல் இருந்ததால்தான். 

இன்று நாம் வொவொருவரும் வேதாகமத்தைத் தூக்கிக்கொண்டு கிறிஸ்துவை அலைந்துதான் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. நாம் இருக்கும் இடத்தில, வாழும் ஊரில், சமுதாயத்தில் கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவர்களாக வாழ்ந்தாலே போதும். 

அனால் பல கிறிஸ்தவ சபைகளில் சில ஊழியர்கள் சமூக பணியாற்றுவதே கிறிஸ்துவின் பணி எனத் தவறான போதனைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். முதலில் நாம் பரிசுத்தமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். சமூக பணியை ஊழல் அரசியல்வாதியும் செய்யலாம், ஊழல் தொண்டு நிறுவனங்களும் செய்யலாம். 

சமுதாயப் பணி  செய்து ஆயிரக்கணக்கான மக்களால் பாராட்டப்பட்டாலும் நமது சொந்த ஆத்துமாவை இழந்தோமானால் அதனால் பலனில்லை.  ஆம், ஒருவன் உலகமனைத்தையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தனது சொந்த ஆத்துமாவை இழந்தால் அதனால் பயனென்ன? என்று இயேசு கிறிஸ்து கேட்கவில்லையா? 

"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 )

ஆம் அன்பானவர்களே, அப்போஸ்தலர்கள்போல மிகுந்த பலமான சாட்சிகளாக நாம் வாழ தேவனதுகிருபையினை வேண்டுவோம். தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடும்போம். அப்போது கர்த்தர் நம்மை நிறைவாய் ஆசீர்வதிப்பார். 


ஆதவன் 🖋️ 578 ⛪ ஆகஸ்ட் 28, 2022 ஞாயிற்றுக்கிழமை

"பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்." ( சங்கீதம் 51 : 16, 17 )

மனம் திரும்புதல் இல்லாத பலிகள் கர்த்தருக்கு ஏற்புடையதல்ல என்று இன்றைய வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. நொறுங்குண்ட எளிய இதயத்திலிருந்து வரும் வேண்டுதல்கள் பலிகளைப் பார்க்கிலும் மேலானவை. தனது அனுபவத்திலிருந்து இதனை உணர்ந்துகொண்டதால் தாவீது இந்த வார்த்தைகளைப்  பேசுகின்றார்.  

பழைய ஏற்பாட்டுக்காலத்தில்;  காளைகளும், எருதுகளும், ஆடுகளும் பலியிடபட்டக் காலத்தில் தாவீது இதனைக் கண்டுகொண்டது தேவனது கிருபையால்தான். 

நியாயப்பிரமாண காலத்துப் பலிகள் செல்வாக்கு மிக்கவர்களால் தங்களது அந்தஸ்து பகட்டை வெளிப்படுத்தப் பலவேளைகளில் செலுத்தப்பட்டன. "இத்தனை ஆடு மாடுகளை பலி செலுத்தினேன்" என்று கூறுவது சில மக்களுக்குப் பெருமையாக இருந்தது. ஆம், உண்மையான தேவ அன்பு இல்லாமல் சமூகத்தில் தங்களது பெருமையை நிலைநாட்டவும், பிறர் தங்களைப் புகழவேண்டும் எனும் உள்நோக்கம் கொண்டவையாகவும் பலிகள்  மாறிவிட்டன. 

எனவேதான் தாவீது கூறுகின்றார், "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." ( சங்கீதம் 34 : 18 ) . அதிகமான ஆடு மாடுகளைப்  பலி செலுத்தியவர்களையல்ல, மாறாக நொறுங்கிய உள்ளமுள்ளவர்களுக்கும் நறுங்குண்ட ஆவியுள்ளவர்களுக்கும் கர்த்தர் சமீபமாக இருந்து அவர்களை இரட்சிக்கின்றார்.


இயேசு கிறிஸ்துவும் கூறினார், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 )

அன்பானவர்களே, இன்றும் பல மனிதர்கள் திருந்தாமல் தங்கள் பெருமைகளையும் பண, பதவி அந்தஸ்தையும் ஆலயங்களில் வெளிக்காட்டுவதை பல இடங்களில் நாம் காண முடியும். தேவன் ஒன்றுமில்லாதவரோ, நாம் கொடுத்துதான் நிறைவடைய வேண்டியவரோ அல்ல. அதிகமான பொருட்களை ஆலயங்களுக்குச் செலுத்துவதால் தேவன் நமது பாவங்களை மன்னிக்கப்போவதுமில்லை. 

நமது உள்ளங்கள் உடைக்கப்படவேண்டும்; ஐயோ..நான் இப்படிபட்டப் பாவத்தைச் செய்துவிட்டேனே என உள்ளம் குத்தப்பட்டு உள்ளத்தில் நமது ஆவியில் வேதனைப்படவேண்டும். அதனை தேவன் விரும்புகின்றார். பலர் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறாமல் இருக்கக் காரணம் உள்ளத்தில் பெருமைகொண்டு, தங்கள் ஆவிக்குரிய நிலைமையை உணராமல் இருப்பதால்தான். 

அன்பானவர்களே, தேவன் பலியையும் காணிக்கைகளையும்  விரும்புகிறதில்லை. மாறாக அவர் விரும்புவது  நொறுங்குண்ட ஆவிதான். தவறான சிந்தனைகளோ செயல்பாடுகளோ நம்மிடம் இருந்திருக்குமேயானால் மெய் மனஸ்தாபத்துடன் தேவனிடம் திரும்புவோம். 

நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தைத் தேவன் புறக்கணிப்பதில்லை. 


ஆதவன் 🖋️ 579 ⛪ ஆகஸ்ட் 29, 2022 திங்கள்கிழமை

"துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்." ( சங்கீதம் 18 : 3 )

நமது தேவன் ஒருவர் மட்டுமே துதிக்கத் தகுந்தவர். நமது தேவன் துதிகளின் மத்தியில் வாசம்செய்யும் தேவன். கர்த்தரைத் துதிக்கும்போது நாம் பெரிய ஆசீர்வாதங்களைப் பெறலாம். ஜெபிக்க முடியாத சூழ்நிலைகள், எந்த வார்த்தையும் வரதா மனம் வெறுமையாக இருக்கும் சூழ்நிலைகள் இப்படிப்பட்ட நேரங்களில் வெறுமனே ஸ்தோத்திரம் செய்தாலே போதும். 

நமக்கு எதிராகச் செயல்படுபவர்களையும் எதிர்த்து நிற்கும் பிரச்சனைகளையும் தேவனை நோக்கி ஸ்தோத்தரித்து நாம் முறையிடும்போது தேவன் மாற்றி நம்மை விடுவிப்பார். "என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்." ( சங்கீதம் 18 : 17 ) என்கின்றார் தாவீது. 

நாம் முதல்முதல் நோக்கிப்பார்க்கவேண்டியது கர்த்தரது முகத்தைத்தான். ஆனால், இன்று பெரும்பாலான மக்களும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும்போது முதலில் நோக்கிப் பார்ப்பது தங்களுக்குத் தெரிந்த நல்ல பதவிகளில் உள்ளவர்களைத்தான். நமது பிரச்சனைக்கு இவர்மூலம் தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்பி தங்களுக்குத் தெரிந்த பதவியில் உள்ளவர்களையும் அல்லது தெரிந்தவர்கள் மூலம் அரசியல் தலைவர்களையும் உதவிக்கு நாடுகின்றனர். 

ஆனால் இது எப்போதும் கைகொடுப்பதில்லை. மேலும் பலரும் கொடிய நோய்க்களால் அவதிப்படும்போது கர்த்தரைத் தேடுகின்றனர். அவரது ஊழியர்களைத் தேடி ஓடுகின்றனர். தாங்கள் வெறுத்து ஒதுக்கும் கிறிஸ்தவ சபைப் பிரிவு ஊழியர்களையும் இப்படிப்பட்ட இக்கட்டான வேளைகளில் ஜெபிக்க அழைக்கின்றனர்.  பல வேளைகளில் விடுதலையும் பெறுகின்றனர்.

அன்பானவர்களே, நமது தேவன் துதிக்குப் பயப்படும் தேவன் என்று வசனம் சொல்கின்றது. அதாவது பரிசுத்த வாழ்க்கை வாழும் ஒருவர்  துதிக்கும்போது அது நமக்கு ஏதாவது உதவி செய்துதான் ஆகவேண்டும் என்று தேவனைப்  பயமுறுத்துகின்றதாம். "கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?" ( யாத்திராகமம் 15 : 11 )

தேவனுக்கு ஏற்புடைய ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழும்போது நமது துதிகள் நறுமண தூபப் புகையாக எழும்பி தேவனை அடைந்து அவர் நமக்கு உதவிசெய்யத் தூண்டுகின்றது. எனவேதான் சங்கீதக்காரன், "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று கூறுகின்றார். 

இப்படித் துதிப்பது நம்மைத் துன்பங்களுக்குத் தப்புவித்து மட்டுமல்ல நமது ஆவிக்குரிய மற்றும் உலக காரியங்களிலும் நாம் சிறப்படைய வழியாக இருக்கின்றது. சங்கீதம் 136 துதியின் சங்கீதம் என்று சொல்லப்படுகின்றது. ஜெப தியானத்தோடு அதனை வாசிக்கும்போது நமக்குப் புத்துணர்ச்சியும், தேவன்மேல் மிகப்பெரிய விசுவாசமும் ஏற்படும்.  

ஆம், துதித்தலே கர்த்தருக்கு ஏற்புடைய செயல். இப்படிக் கர்த்தரை நோக்கித் துதித்துக் கூப்பிடும்போது நம் சத்துருக்களுக்கு (அதாவது பிரச்சனைகளுக்கு)   நீங்கலாகி இரட்சிக்கப்படுவோம்.  துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது.


ஆதவன் 🖋️ 580 ⛪ ஆகஸ்ட் 30, 2022 செவ்வாய்க்கிழமை

"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே". (ஏசாயா 48:17)

நம் தேவனாகிய கர்த்தர் வெறுமனே நாம் ஆராதிக்கும் ஒரு உருவமோ உயிரற்றவரோ அல்ல. நம்மிடமிருந்து ஆராதனையையும் புகழ்ச்சியையும் பெறுவதில் குறியாக இருபவரல்ல. மாறாக,  நாம் அவரைப்போல பரிசுத்தராகவும் அவரது சாயலாக மாறவும் நமக்கு உதவுபவர். இன்றைய வசனத்தில் அதனைத்தான் கூறுகின்றார், "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று. 

அவரது வழி நடத்தலுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். மனிதர்களது உபதேசங்கள் கொஞ்சகாலம் கைகொடுக்கலாம். அல்லது மனிதர்கள் வேதாகம வசனங்களுக்கு வெல்வேறு அர்த்தம் சொல்லி நம்மை நம்பவைக்கலாம். ஆனால், கர்த்தரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நம்மை அவர் ஜீவவழியில் நடத்துவார். 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்."( சங்கீதம் 32 : 8 ) என்று வாசிக்கின்றோம். நடக்கவேண்டிய வழியைக் காண்பிப்பதோடு ஆலோசனையும் சொல்வேன் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.

இஸ்ரவேல் மக்களை தேவன் அக்கினித் தூணினாலும் மேகத் தூணினாலும் வழிநடத்தினார். அந்த அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் அவர்களைச் சரியாக வழிநடத்தியது. அந்த வழி நடத்தலுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து பயணம் செய்ததால் தான் எதிரி ராஜாக்களை முறியடித்து கானான் தேசத்தில் நுழைய முடிந்தது. இதனை நாம் யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கலாம். 

"வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்." ( யாத்திராகமம் 40 : 36, 37 )

ஆம், பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம்  நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தர்  அவரே. இந்த உலகத்தில் வாழ்ந்த பல பரிசுத்தவான்களும் இப்படி தேவ வழிநடத்துதலின்படி நடந்து வாழ்வில் வெற்றிபெற்றவர்கள்தான்.

ஜார்ஜ் முல்லர் எனும் தேவ மனிதனது வாழ்க்கை வரலாற்றினை வாசித்தபோது அவர் எப்படி அனைத்துக் காரியங்களுக்கும் தேவ வழிநடத்துதலை எதிர்பார்த்து வாழ்ந்தார் என்று அறிய வியப்பாக இருந்தது. பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை எந்த உதவியுமின்றி தேவ வழிநடத்துதலின்படி அவர் காப்பாற்றி நடத்தினார். ஒவ்வொரு நாளிலும் தேவனது வழிநடத்துதல் அவரையும் அவரது ஆசிரமத்துக் குழந்தைகளையும் வாழ வைத்தது. 

அன்பானவர்களே, நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறலாம், ஆலயப் பணிகள் செய்ய உழைக்கலாம் ; ஆனால், தேவனோடு நமக்குத் தனிப்பட்ட உறவு இல்லையானால் எல்லாம் வீண்தான். அவரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போதுதான் தேவனது அருகாமையையும் அவர் நம்மை வழிநடத்துவதையும் வாழ்வில் கண்டுணர முடியும். 

"கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி."( நீதிமொழிகள் 6 : 23 ) எனும் வசனத்துக்கிணங்க தேவ கட்டளைகளின்படி வேத வெளிச்சத்தில் நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஜீவவழியில் அவர் நம்மை நித்தம் வழி நடத்திடுவார். 


ஆதவன் 🖋️ 581 ⛪ ஆகஸ்ட் 31,  2022 புதன் கிழமை

"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 2 )

வாழ்வில் கனி கொடுக்கும் அனுபவமே கிறிஸ்தவ அனுபவம். கனிகளால்தான் மரத்தை அறிய முடியும் என்று இயேசு  கிறிஸ்து கூறினார். கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி," ( பிலிப்பியர் 1 : 10 ) என்று எழுதுகின்றார். 

ஆவியின் கனிகளைப்பற்றி பவுல் அடிகள், "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்."( எபேசியர் 5 : 9 ) என்கின்றார். மேலும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 )

ஆனால், இப்படிக் கனி கொடுக்கும் வாழ்க்கை வலி தரக்கூடியது, சிறு வேதனை தரக்கூடியது. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்" என்று. மரங்களை கவ்வாத்து செய்வது பற்றி விவசாயிகளுக்குத் தெரியும்.  நன்றாக காய்க்கக்கூடிய பழ மரங்கள் இன்னும் அதிகக்  கனிகள் கொடுக்கும்படி அவற்றின் சிறு சிறு ஊடு கிளைகளை வெட்டி அகற்றி சுத்தம் செய்வார்கள். இப்படிச் சுத்தம் செய்யும்போது அந்த மரங்கள் மேலும் அதிகக் கனிகளைக் கொடுக்கும். இதனைத்தான் இயேசு கிறிஸ்து, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." என்று கூறுகின்றார். 

இப்படி மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றும்போது மரங்களுக்கு வலிக்கும். மரங்கள் அந்த  வலியைத் தாங்கித்தான் ஆகவேண்டும். அப்படித் தங்கும்போதுதான் அதிகக் கனிகளை அவை கொடுக்க முடியும். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஏற்ற வாழ்வு வாழ விருப்புபவர்களுக்குத் துன்பங்கள் வருவதற்கு இதுதான் காரணம். ஆனால், இது அதிகக் கனிகொடுக்க உதவியாக இருக்கும்.

இன்றைய வசனம் மேலும் கூறுகின்றது, "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்"  என்று. அதாவது கனியற்ற வழக்கை வாழ்வோமென்றால் மரத்திலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளைப்போல நாம் வெட்டி எறியப்படுவோம். அதாவது கிறிஸ்துவுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் அற்றவர்களாக மாறிவிடுவோம். அப்படி வெட்டப்பட்டக் கிளைகள் வெய்யிலில் காய்ந்து உலர்ந்துவிடுவதுபோல நமது வாழ்க்கையும் உலர்ந்த வாழ்க்கையாக மாறிவிடும். வெட்டி எறியப்பட்டு உலர்ந்த கிளைகள் எரிப்பதற்குத்தான் பயன்படும். 

அன்பானவர்களே, நாம் ஆவிக்குரிய கனிகள் உள்ளவர்களாக மாறும்போதுதான் மற்றவர்கள் நம்மூலம்  கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியும்.  எனவே ஆவிக்குரிய வாழ்வில் துன்பங்கள்  வரும்போது நாம் சோர்ந்துபோய்விடக்கூடாது. தேவன் நம்மைச் சுத்திகரிக்கின்றார் என்பதே அதன் பொருள். இந்தச் சுத்திகரிப்பு நம்மில் மேலும் அதிகக் கனிகள் தோன்றிட வகை செய்யும்.

கனியற்றவர்களாக செழிப்புடன் வாழ்ந்து அறுப்புண்டு போவதைவிட வேதனைகளைத் தாங்கி கனிகொடுப்பவர்களாக நிலைத்திருப்பது ஏற்றதல்லவா? கிறிஸ்துவோடு நிலைத்திருக்கும்போதே நாம் கனி கொடுக்க முடியும். 

மேலும், அவரில் நிலைத்திருப்பது மட்டுமல்ல, கிறிஸ்து நம்மைச் சுத்திகரிக்க இடம்கொடுப்போம். அந்தச் சுத்திகரிப்பு வேதனை தருவதாக  இருந்தாலும் தேவன்  வேதனையோடுகூட அதனைத் தாங்கத்தக்க பலத்தையும் தருவார்.