Saturday, August 26, 2023

வேதாகம முத்துக்கள் - ஆகஸ்ட் 2023

 


                        - சகோ . எம். ஜியோ பிரகாஷ் 


ஆதவன் 🔥 916🌻 ஆகஸ்ட் 01, 2023 செவ்வாய்க்கிழமை

"நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்." ( பிலிப்பியர் 3 : 20 )

மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களின் விருப்பத்தினை அப்போஸ்தலராகிய பவுல் அடிகள் இன்றைய வசனத்தில் விளக்குகின்றார்.  இந்த உலகம் நாம் தற்காலிகமாக வாழ நமக்குக்  கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நூறு வயதுவரை ஒருவேளை நாம் இங்கு வாழலாம். ஆனால் நாம் நித்திய நித்திய காலமாய் வாழப்போவது பரலோகக் குடியிருப்பில்தான்.  அங்கிருந்து வந்து  நம்மை அழைத்துச் செல்லவிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் காத்திருக்கின்றோம்.

அப்படி அவர் வரும்போது நமது அற்பமான உடல்களை தனது மகிமையான உடலின் சாயலுக்கு ஒப்பாக மறுரூபமாக்குவார். இதனையே, "அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3 : 21 ) என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல் அடிகள்.

ஆனால், உலக ஆசைத் தேவைகளுக்காக இயேசு கிறிஸ்துவிடம் ஜெபிப்பவர்கள் இதனை உணர்வதில்லை. அவர்களுக்குத் தங்கள் உலகத் தேவைகளே போதும். மகிமையான காரியங்கள் அவர்களுக்குத் தூரமானவை.  

இப்படி உலக ஆசீர்வாதங்களையும் உலக காரியங்களையும் போதிப்பவர்கள் மக்களை வஞ்சிக்கிறவர்கள். ஆனால், இன்று இத்தகைய வஞ்சனைதான் பல  கிறிஸ்தவ ஊழியர்களாலும் செய்யப்படுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர் களாயிருக்கிறார்கள்." ( ரோமர் 16 : 18 ) என்று கூறுகின்றார்.

அன்பானவர்களே, நாம் மேலானவைகளை நாடுபவர்களாக வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். வேதாகமம் எழுதப்பட்டதன்  நோக்கமும் அதுதான். உலக ஆசீர்வாதங்களைத் தருவதற்கு இயேசு கிறிஸ்து உலகினில் வந்து இரத்தம் சிந்திடத் தேவையில்லை. எனவே, தங்கள் வயிற்றுக்கே ஊழியம்செய்யும் வஞ்சிக்கிற அந்திக் கிறிஸ்துவின் போதனைகளைப்  பிரசங்கிக்கும் ஊழியர்களை விட்டு விலகி வாழ்வதே நாம் செய்யவேண்டியது. 

இந்த உலகமும்  இந்த உலகத்திலுள்ள அனைத்தும் அழிந்துபோகும். இவை அனைத்தும் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக வாழ்பவர்கள் மட்டுமே கிறிஸ்துவோடு சேர்க்கப்பட்டு பரலோக இன்பத்தை அனுபவிப்பார்கள். நமது வாழ்க்கை அத்தகைய வாழ்க்கையாக அமைந்திட வாழ்வதே முக்கியம். அந்த நாளுக்கு நாம் ஆவலோடு காத்திருக்கவேண்டும் என்கிறார் அப்போஸ்தலரான பேதுரு. 

"கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்." ( 2 பேதுரு 3 : 10- 12 )

மறுமைக்காக எழுதப்பட்ட வேத வசனங்களை மறுமைக்கான ஆசையுடன் வாசிப்பதும் அவைகளின்படி நடப்பதுமே கடமை. வேத வசனங்களின்படி நமது வாழ்கையினைச் சீர்படுத்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருப்போம்.

  
ஆதவன் 🔥 917🌻 ஆகஸ்ட் 02, 2023 புதன்கிழமை

"ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.  அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதன் அணுக்களத்தனையாகவும் இருக்கும்..." ( ஏசாயா 48 : 18, 19 ) 

தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. 

தேவனது கட்டளைகளுக்குச் செவிசாய்க்கும்போது முதலாவது நமக்குக் கிடைப்பது தேவ சமாதானம். அந்த சமாதானம் நதியைப்போல இருக்கும் என்று கூறுகின்றது. நதியானது அமைதலான தண்ணீரால் நிறைந்திருப்பதைப்போல ஜீவ நதியான ஆவியானவரின் சமாதானம் உண்டாயிருக்கும். இரண்டாவது நமது நீதியுள்ள வாழ்க்கை கடலின் அலைகளுக்கு ஒப்பாக முடிவில்லாமல், அவை இரவும் பகலும் முடிவின்றி இருப்பதுபோல முடிவில்லா நீதியாக இருக்கும். 

மூன்றாவதாக, ஆபிரகாமுக்குத்  தேவன் ஆசிகூறியதுபோல நமது சந்ததி கடற்கரை மணல்போலவும் அணுத்துகள்களைப்போல  எண்ணமுடியாததாகவும்  இருக்கும். மேலும் நமது பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும். 

இன்று பலரிடமும் இல்லாத ஒன்று மெய் சமாதானம். திரளான செல்வங்களும், சொத்து, சுகங்கள், புகழ் இவை இருந்தாலும் மன சமாதானம் இல்லாமல் போகுமானால் நமது அனைத்துச் செல்வங்களும் வீணானவையே. இந்த சமாதானம் தேவனது கட்டளைகளுக்குக் கீழ்படியும்போது கிடைக்கின்றது. 

இன்று பலருக்கும் தேவனது கட்டளைகளுக்கும் தாங்கள் சார்ந்துள்ள சபைகளின்  கட்டளைகளுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காரணம், சபையின் கட்டளைகளே பிரதானமாகப் போதிக்கப்படுகின்றன. இந்தக் கட்டளைகள் பொதுவாக மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. மதத் தலைவர்களால் உருவாக்கப்பட்டவை. தங்களது சபை பிரிவில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை அவை. ஆனால் இவை தேவனது கட்டளைகளுக்கு முரணானவையாக இருந்தால் நாம் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. 

அன்பானவர்களே, நாம் தேவனுடைய கற்பனைகளுக்குச் செவிகொடுத்து கீழ்ப்படிவது அவரை அன்புகூருவதற்கு அடையாளமாகும். சபையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது தேவனை அன்புகூருவதல்ல.  அப்போஸ்தலரான யோவான்,  "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான் 5 : 3 ) என்று குறிப்பிடுகின்றார்.  நாம் தேவனிடம் மெய்யாகவே அன்புகூருவோமானால் நம்மை அறியாமலேயே அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திடுவோம். 

ஒட்டுமொத்தமாக தேவன் இன்றைய வசனம் மூலம் கூறுவது, தேவனிடம் அன்புகூருவது என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும். அப்படிக் கீழ்ப்படியும்போது தேவ சமாதானமும், தேவ நீதியும் நம்மை நிரப்பும். நமது சந்ததி ஆசீர்வதிக்கப்படும். நமது பெயர் என்றும் நிலைத்திருக்கும்.  

   

ஆதவன் 🔥 918🌻 ஆகஸ்ட் 03, 2023 வியாழக்கிழமை

"மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7, 8 )

"வினை விதைப்பவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என தமிழ் பழமொழி ஒன்று உண்டு.  ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இதுவே நடக்கும் என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்.  நாம் எதனைச் செய்கின்றோமோ அதற்கேற்ற பலனைத்தான் நாம் பெற முடியம். 

உலகத்தேவைகளுக்காக மட்டுமே உழைத்தல் ; ஆவிக்குரிய காரியங்களுக்காக உழைத்தல் எனும் இரண்டு காரியங்களை பவுல் அப்போஸ்தலர் விளக்குகின்றார். உலக காரியங்கள் அழிவுக்குரியன.  அவற்றுக்காக ஜெபிப்பதும் உழைப்பதும்  ஆதாம் செய்ததுபோன்ற செயல். ஆதாம் விலக்கப்பட்டப் பழத்தின் அழகிலும் அதன் கவர்ச்சியிலும் மயங்கி நித்திய ஜீவனை தவறவிட்டான்.  இதுபோலவே நாமும் உலக ஆசீர்வாதங்களையே பெரிதாக எண்ணி அவற்றுக்காகவே ஜெபித்து வாழ்வோமானால் நிலையில்லாத உலக பொருட்கள் அழிவதுபோல ஆத்தும அழிவை அடைவோம். 

நாம் நித்தியஜீவனுக்காகவே அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உழைப்போமானால் நித்திய ஜீவனுக்கு உரிமையுள்ளவர்களாவோம். 

ஆவிக்குரிய காரியங்களுக்கு உழைத்தல் என்பது வெறுமனே ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்வதல்ல. எல்லாவித ஆவிக்குரிய செயல்களையும்  கடைபிடித்தாலும் நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழாதவர்களாக இருந்தால் நாம் உலகத்துக்குரியவர்களே.  தேவன்மேலுள்ள பூரணமான அன்போடு நாம் செயல்படும்போதுதான் நாம் ஆவிக்குரியவர்களாக மாறமுடியும்.  பூரண அன்பு நம்மை இயல்பிலேயே நல்லவர்களாக மாற்றிவிடும். 

இது எப்படியென்றால்,  நாம் நினைத்து நினைத்து சுவாசிப்பதில்லை.  நம்மை அறியாமலேயே நாம் சுவாசிக்கின்றோம்.  அதுபோல ஆவிக்குரிய செயல்பாடுகளும் நம்மில் இயற்கையிலேயே வந்துவிடும். இப்படி வாழும்போது நாம் ஆவிக்கென்று விதைக்கின்றவர்கள் ஆகின்றோம்.

பொதுவாக கண்ணால் காணக்கூடியவை உலகத்துக்குரியவை. ஆவிக்குரியவைகளோ நாம் காண முடியாதவை.  எனவே, உண்மையான நமது ஆவிக்குரிய செயல்பாடுகள் நமக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரிவதாக இருக்கும். உலகத்துக்கு நாம் சாதாரண மனிதர்கள் போலவே இருப்போம். 

"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்" ( யோவான் 3 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து கூறுவதுபோல நாம் ஆவியினால் பிறந்துள்ளது உண்மையானால் பிறர் கணிக்கமுடியாத ஆவிக்குரியவற்றையே  விதைப்போம்; நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்வோம்.

    

ஆதவன் 🔥 919🌻 ஆகஸ்ட் 04, 2023 வெள்ளிக்கிழமை

"அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்." ( லுூக்கா 21 : 4 )

காணிக்கையளித்தல் குறித்து இயேசு கிறிஸ்து கூறிய இன்றைய சித்தனை நமக்கு ஒரு படிப்பினையாகும். பொதுவாக அனைவருமே அதிக காணிக்கைகளை ஆலயத்துக்கு அளிப்பவர்களை மேலானவர்களாகக் கருதுகின்றனர். ஆலய கட்டுமானங்கள், ஆலய விரிவாக்கம், ஆலயத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய என காணிக்கைகள் வசூலிக்கும்போது இந்த கீழ் மேல் மனநிலை வெளியரங்கமாகத் தெரியும். 

மேலும் ஆலயங்களில் ஒரே நபர் பத்து லட்சம் அல்லது  ஒருகோடி காணிக்கை அளிக்கும்போது அந்தச் செய்தி பத்திரிகைகளில் சிறப்பாக வெளியிடப்படுகின்றது. ஆம், இதுதான் மனிதர்கள் பார்வை. மனிதர்கள் தங்கள் மனநிலைக்கேற்ப அதிகம் கொடுப்பவர்களை மேலானவர்களாகக் கருதுகின்றனர். 

ஆனால் தேவனது பார்வை வேறு. அவர் மனிதர்களின் உள்ளான மனநிலையினை அறிகின்றவர். இந்த அண்டசராசரங்களையே படைத்த தேவன் அற்ப மனிதர்களது பணத்தால் மயங்குபவரல்ல. காரணம், வெள்ளியும் பொன்னும் அவருடையது. ஆம், "வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( ஆகாய் 2 : 8 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பார்வை இதுவாக இருந்ததால் அவர் இரண்டு காசு காணிக்கைச் செலுத்திய ஏழை விதவையின் காணிக்கையினை சிறப்பாகக் கூறுகின்றார். நமது ஆலயங்களில் இதற்கு மாறாகச் சில வேளைகளில் ஆலய வளர்ச்சிக்காக பணம் சேகரிக்கும்போது ஒரு சில ஏழை வீடுகளைத் தவிர்த்துவிடுகின்றனர். காரணம் அங்கு சென்றால் நூறு அல்லது இருநூறு ரூபாய்தான் கிடைக்கும். அது பெரிய ஆலயப்  பணிக்குத் தேவையற்ற  அற்பமான பணம் என எண்ணிக்கொள்கின்றனர். 

நம்மைப் பாதிக்கும்படி கொடுப்பதே அன்புடன் கொடுப்பது. கோடிக்கணக்கான சொத்துசுகங்களை வைத்திருப்பவர் பல ஆயிரங்களைக் காணிக்கையாகக் கொடுப்பதைவிட அடுத்தநாள் செலவுக்கு மட்டுமே இருக்கும் சொற்ப பணத்தில் ஐம்பது ரூபாய் கொடுப்பது மேலானது. 

சிலருக்கு ஆலயத்துக்கும் தர்ம காரியங்களுக்கும்  அதிக காணிக்கை கொடுக்க மனதில் ஆர்வமிருக்கும் ஆனால் கொடுப்பதற்குப் பணமிருக்காது. இத்தகைய நிலையில் அந்த மனிதன் தான் கொடுக்க விரும்பியதைக் கொடுக்க இயலாவிட்டாலும் தேவனது பார்வையில் அது கொடுக்கப்பட்டகாகவே அவரால் அங்கீகரிக்கப்படும். இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்." ( 2 கொரிந்தியர் 8 : 12 ) என்கின்றார். 

அன்பானவர்களே, மன உற்சாகத்துடன் கர்த்தருக்குக் கொடுப்போம். தேவன் காணிக்கைகளையோ தசமபாகக் காணிக்கையையோ  கண்டிப்பாக நம்மிடம் கேட்டு கொடுக்காவிட்டால் சபிப்பவரல்ல; அப்படிக் கொடுத்தவுடன் அவர்களை ஆசீர்வதிப்பவருமல்ல. இருதய சுத்தத்தோடு, விருப்பத்தோடு, நம்மைப் பாதிக்குமளவுக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த ஏழை விதவைக் கொடுத்ததைப்போல காணிக்கை அளிப்போம். ஆம், அந்த விதவை ஆசீர்வாதத்தை எதிர்பார்த்துக் காணிக்கைக்  கொடுக்கவுமில்லை; அப்படிக் கொடுத்ததால் அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள் என்று கூறப்படவுமில்லை.  

ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகள் போதிக்கும் தவறான போதனைகளுக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்வோம்.



ஆதவன் 🔥 920🌻 ஆகஸ்ட் 05, 2023 சனிக்கிழமை

"இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.' ( யோவான் 8 : 21 )

இன்றைய வசனம் யூதர்களைநோக்கி இயேசு கிறிஸ்து கூறியது. யூதர்கள் தாங்கள் நம்பியிருந்த முறைமைகளின்படி தேவனைத் தேடிக்கொண்டு பல்வேறு வழிபாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தேடிக்கொண்டிருந்த மேசியா அவர்களிடையே வந்திருந்தும் அவர்களால் அவரை அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தன்னை அறிந்துகொள்ளவேண்டுமென்று இயேசு கிறிஸ்து பல்வேறு போதனைகளையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து தன்னை தேவனுடைய குமாரனென்று வெளிப்படுத்தினார். ஆனால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இதற்குக் காரணம் இருள் நிறைந்த அவர்களது உள்ளம் ஒளியான அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இதனையே இயேசு கிறிஸ்து, "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3 : 19 ) என்று குறிப்பிட்டார். எது அந்த ஆக்கினைத் தீர்ப்பு? "உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்று கூறியுள்ளதுதான் அந்த ஆக்கினைத் தீர்ப்பு. 

மெய்யான தேவனை விட்டுவிட்டு அவரைத்தேடி எங்கெங்கோ அலைவது தேவையற்ற செயல். அப்படி அலைவதால் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்காது. மாறாக பாவத்தின் விளைவாக நமது  ஆத்துமா செத்து அழியும்.  

அன்பானவர்களே, இன்று இயேசு கிறிஸ்து கூறுவது யூதர்களுக்கு மட்டுமல்ல, அவரை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவரை வாழ்வில் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளாமல் வாழும் அனைவருக்குமே பொருந்தும். காரணம், பாவத்திலிருந்து விடுதலைபெற கிறிஸ்துவுக்கு நம்மை அர்பணிப்பதைத் தவிர வேறு எந்தப் பரிகாரமும் இல்லை. நமது பாவங்களுக்காக இரத்தம் சிந்தியது அவர்தான்.  "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

கிறிஸ்துவைத் தேடுவது என்பது அவரை நமது உள்ளத்தில் வரவேற்பது. "இயேசுவே உம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் அறிய விரும்புகின்றேன்"  என்று முழு மனதுடன் வேண்டும்போது  அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக்கொண்டிருப்போமானால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டவர்களாகவே இருப்போம். மேலான ஆவிக்குரிய காரியங்களையே நாடுவோம். 

அப்படி இல்லாமல் உலகத்தேவைகளுக்காகவே  அவரைத் தேடிக்கொண்டிருப்போமானால், "நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது." என யூதர்களுக்குக் கூறிய வார்த்தைகளையே நமக்கும் கூறுவார். 


ஆதவன் 🔥 921🌻 ஆகஸ்ட் 06, 2023 ஞாயிற்றுக்கிழமை

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 3 )

அன்பானவர்களே, பரலோக ராஜ்ஜியத்தின் ரகசியங்களை தேவன் மறைவாகவே வைத்திருக்கின்றார். தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் தனது அன்பர்களுக்கு அவற்றை வெளிப்படுத்திக் கொடுக்கின்றார். வேதாகம வசனங்களும் பரலோக சாயலானவைகளே. அவற்றின் முழு பொருளையும் அறிந்திட ஒருவர் இறையியல் கல்லூரியில் சென்று படிக்கவேண்டியதில்லை. தேவனோடு இணைந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்திக் கொடுக்கின்றார்.

இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் பலரும் படிப்பறிவில்லாத மீனவர்கள்தான்.  ஆனால் அவர்கள் எழுதியுள்ள நிரூபங்கள் ஆச்சரியப்படவைக்கின்றன. அவர்கள் எழுதிய இறையியல் கருத்துக்களின் பொருள் முற்றிலும் விளங்க வேண்டுமானால் நாமும் அவர்களைப்போல பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். 

நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்ந்து அவரை நோக்கிக் கூப்பிடும்போது ஆவிக்குரிய வெளிப்பாடுகளை நமக்குத் தருவார். இதனையே, "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." என்கிறார் பரிசுத்தரான கர்த்தர். 

இதையே நாம் ஏசாயா 45 ஆம் அதிகாரத்திலும் வாசிக்கின்றோம். "வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்." ( ஏசாயா 45 : 4 ) உலக இச்சையுள்ள மனிதர்கள் இதற்கு உலக அர்த்தம்கொண்டு தேவனை நம்பும்போது இத்தகைய  ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என எண்ணி இதனை வாக்குத்தத்தமாகப் பிடித்துக்கொண்டு ஜெபிக்கின்றனர்.   

பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களும் ஆவிக்குரிய மேலான வெளிப்பாடுகளும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. காரணம் பலரும் அவற்றை விரும்புவதில்லை. ஆர்வமில்லாத ஒருவனிடம் மேலான பொருளைக் கொடுத்தாலும் அவன் அதன் மதிப்பை உணரமாட்டான். 

இயேசு கிறிஸ்துவை பலர் தேவனுடைய குமாரனென்றும் மேசியா என்றும் விசுவாசித்துப் பின் சென்றாலும் அவர்கள் எல்லோரும் மேலான பரலோக ரகசியங்களை அறிந்துகொள்ளவில்லை. ஆம், சீடத்துவ வாழ்க்கைவாழ ஒப்புக்கொடுத்து வாழ்பவர்களுக்கே அவை அருளப்படும்.  இதனையே இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்குக் கூறினார், "பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை." ( மத்தேயு 13 : 11 )

அன்பானவர்களே, முதலில் இந்த மேலான ரகசியங்களை அறியவேண்டுமெனும் ஆர்வம் நமக்கு வேண்டும். உலக ஆசீர்வாதங்களுக்கல்ல, இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நாம் தேவனை நோக்கிக் கூப்பிடவேண்டும். அப்போது நாம் அறியாததும் நமது அறிவுக்கு எட்டாததுமான காரியங்களை தேவன் நமக்கு வெளிப்படுத்தித் தருவார். 

வசனங்களுக்கு உண்மையான விளக்கமோ அர்த்தமோ தெரியாத ஊழியர்களையும் குருக்களையும் நம்பிக் கொண்டிருந்தோமானால் நாம் எதனையும் அறியமுடியாது. நமது வாழ்கையினைச் சீர்படுத்திக்கொண்டு உண்மையான ஆர்வத்துடன் தேவதை நோக்கிக் கூப்பிடும்போது அவர் நமக்குப் பதில்   கொடுத்து,  நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.  



ஆதவன் 🔥 922🌻 ஆகஸ்ட் 07, 2023 திங்கள்கிழமை

"அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்." ( யோவான் 3 : 30 )
"He must increase, but I must decrease." ( John 3 : 30 )

இந்த உலகத்தில் மனிதர்கள் எல்லா இடத்திலும் தங்கள் முன்னிலையில் இருக்கவேண்டுமென்று விரும்புகின்றனர்.  ஆலய காரியங்களில்கூட தாழ்ச்சியோ பொறுமையோ இல்லாமல் தானே எல்லா இடத்திலும் முன்னிலையில் இருக்கவேண்டுமென்று விரும்பிச் செயல்படுகின்றனர். ஆனால் இத்தகைய மனிதர்கள் தேவனது பார்வையில் அற்பமானவர்களே. 

நாம் நம்முள் தேவன் பெருகுவதை மட்டுமே விரும்பவேண்டும். நாளுக்குநாள் ஆவிக்குரிய வாழ்கையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இது எப்போது முடியும்? நம்மை நாம் தாழ்த்தும்போது. அதனையே இன்றைய வசனத்தில் யோவான் ஸ்நானன் கூறுகின்றார். நான் சிறுகவேண்டும்; அவர் பெருகவேண்டும்.  நாம் சிறுகச் சிறுக அவர் நம்மில் பெருகுவார். 

இயேசு கிறிஸ்துவும் "தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்" ( லுூக்கா 14 : 11 ) என்று கூறினார். 

மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது நமக்குள் இந்தத் தாழ்மை குணம் உருவாகின்றது. கிறிஸ்துவைப்போன்ற தாழ்மை. அவர் தேவனுடைய ரூபமாய் இருந்தும் அதனை மேன்மையாகக் கருதாமல் தன்னைத்தான் தாழ்த்தி மனித சாயலானார்.  இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 5- 7 ) என்று கூறுகின்றார். 

இப்படி அவர் தன்னைத் தாழ்த்தியதால், "பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 11 )

அன்பானவர்களே, இந்த அண்டசராசரங்களையே படைத்து ஆட்சிசெய்ய்யும்  தேவகுமாரனாகிய கிறிஸ்து தான் படைத்த அற்ப மனிதர்கள் கைகளால் பாடுபட்டு மரிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்ததுதான் மேலான தாழ்மை. இத்தகைய தாழ்மையுள்ள தேவன் ஒன்றுக்கும் உதவாத அற்ப மனிதன் காட்டும் பெருமையை எப்படிச் சகிப்பார்? 

கிறிஸ்துவுக்குள் இருந்த தாழ்மை நமக்குள் வரும்போதுதான் அவரை மேலும் மேலும் அறியமுடியம். நாம் அமைதியாக இருப்பதை உலக மனிதர்கள் பார்த்து நம்மைக் கையாலாகாதவன், கோழை என்று பட்டம் சூட்டலாம். ஆனால் தேவன் எல்லாவற்றையும் அறிவார். எனது ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்ப காலத்திலேயே இதனை தேவன் எனக்கு உணர்த்தி  இந்த வசனத்தை  உறுதிப்படுத்தினார்.  இது அமைதியாக பொறுமையாக இருப்பதன் மேன்மையை எனக்கு உணர்த்தியது.  ஆம், நமது பொறுமை, தாழ்மை குணத்தால்  நம்முள் அவர் பெருகவும் நாம்  சிறுகவும் வேண்டும்.



ஆதவன் 🔥 923🌻 ஆகஸ்ட் 08, 2023 செவ்வாய்க்கிழமை

"நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5 : 10 )

முற்காலத்தில் நாம் நமது பாவ பழக்கவழக்கத்தால் தேவனைவிட்டு விலகி அவருக்குச் சத்துருக்களாக இருந்தோம்.  அப்படி சத்துருக்களாய் இருந்த நம்மை அவர் தனது இரத்தத்தால் ஒப்புரவாக்கினார். ஆம், நாம் பாவங்களற்று இருக்கவேண்டுமானால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படவேண்டும்.

இதனையே அப்போஸ்தலரான யோவான்,  "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."  ( 1 யோவான்  1 : 7 ) என்று கூறுகின்றார். இப்படிப் பாவங்கள் கழுவப்படும் நாம் அவரோடு ஒப்புரவாக்கபடுக்கின்றோம். 

இந்தப் பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெறுவதுதான்  நாம் மீட்பு அனுபவம் பெறுவதற்கு முதற்படி.  பாவ மன்னிப்பு என்பது வேறு, பாவத்திலிருந்து விடுதலை எனது வேறு. பாவத்திலிருந்து விடுதலை பெறுவதே இரட்சிப்பு அல்லது மீட்பு. இதனையே இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே" என்று கூறுகின்றார். 

அதாவது நாம் முதலில் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அவரோடு  ஒப்புரவாக்கப்படுகின்றோம் , பின்னர் பாவத்திலிருந்து முழு விடுதலை பெற்று இரட்சிக்கப்படுகின்றோம். பாவத்திலிருந்தும் பாவ பழக்கவழக்கத்திலிருந்தும் முழு விடுதலை பெறுவதே இரட்சிப்பு. 

இதனையே பவுல் ஆவியின் பிரமாணம் என்று கூறுகின்றார். அந்த ஆவியின் பிரமாணமே நம்மைப் பாவம் மரணம் என்பவற்றிலிருந்து விடுதலையாக்கும். "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 )

"மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) அதாவது, பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தையம் பெறும்போது கிறிஸ்து நமக்குள் இருந்து செயல்புரிகின்றார். எனவே நமது உடலானது பாவத்துக்கு மரித்து நமது ஆவியானது அந்த நீதியினால் அழிவுக்குத் தப்பி ஜீவனுள்ளதாக இருக்கும். இல்லையானால் நாம் ஆவியில் மரித்தவர்களாக இருப்போம்.  

அன்பானவர்களே, இந்த கிறிஸ்துவின் பாவ மன்னிப்பையும் மீட்பினையும் பெறும்போதுதான் நாம் ஆவிக்குரியவர்கள்.  இந்த அனுபவங்களைப் பெற்றால் மட்டுமே பாவத்தை மேற்கொண்டு நாம் வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கை வாழமுடியும். 



ஆதவன் 🔥 924🌻 ஆகஸ்ட் 09, 2023 புதன்கிழமை

"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." ( எபிரெயர் 13 : 8 )

இன்றைய வசனம் நாம் அடிக்கடி கேட்டுப் பழக்கப்பட்ட வசனம். ஆனால் இந்த வசனத்தை விசுவாசிக்கும்போது நம்மில் அது மிகப்பெரிய மாற்றத்தினைக் கொண்டுவரும். நான் இந்த வசனத்தை விசுவாசித்து மன உறுதியும் ஆறுதலும் அடைந்துள்ளேன். 

நேற்று, அதாவது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செயலாற்றிய வல்லமையின் செயல்களை எண்ணிப்பாருங்கள். ஆபிரகாம், மோசே, யோசுவா, தாவீது இன்னும் பலருடன் இருந்து அவர் வல்லமையாய்ச், சேனைகளின் கர்த்தராய் இருந்து செயல்பட்டார்.  அப்போஸ்தலர்களுடன் இருந்து   அவர் வல்லமையாய்ச் செயல்பட்டதை அப்போஸ்தலர்ப்பணி புத்தகத்தில் வாசிக்கின்றோம்.  அந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்று எப்படி அவர்களுடன் இருந்து செயல்பட்டாரோ அப்படியே இன்றும் மாறாதவராக இருக்கின்றார். 

அன்பானவர்களே, இந்த வசனத்தை உறுதியாய் நம்பி அவரிடம் நாம் உரிமையுடன் வேண்டலாம். நேற்று உள்ளதுபோலவே மாறாதவராக அவர் இருப்பதால் இன்றும் நம்மில் அவர் அதேபோலச் செயல்புரியமுடியும். இன்று மட்டுமல்ல, என்றும் அவர் மாறாதவர் என்று கூறப்பட்டுள்ளது. நமதுகுழந்தைகள், பேரக்குழந்தைகளோடும் அவர் இருந்து நேற்று செய்ததுபோன்ற வழிநடத்துதலையும் அற்புதங்களையும் செய்ய முடியும்.  

என்னை ஆரம்பகாலத்தில் ஆவிக்குரிய வாழ்வில் வழிநடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் அவர்கள் தேவன் அழைத்த அழைப்புக்கேற்பத்  தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊழியத்துக்கு வந்தவர். ஆனால் வந்தவுடன் தேவன் அவரை ஆசீர்வதிக்கவில்லை. மிகவும் வறுமையில் வாடினார். ஒருமுறை அவரது ஒரே வேஷ்டி சட்டயைத் துவைக்க சோப்புவாங்கக் கூட அவரிடம் பணமில்லை.  மாலையில் அவர் ஒரு கூட்டத்தில் பேசவேண்டும். ஆனால் அவரிடம் மாற்று ஆடை இல்லை. அப்போது வேதனையுடன் வீட்டு வராண்டாவில் அமர்த்தபடி ஜெபித்துக்கொண்டிருந்தார். 

"ஆண்டவரே, நீர் என்னை ஊழியத்துக்கு அழைத்ததால்தானே நான்  வேலையையே விட்டுவிட்டு வந்தேன் ...என்னை இப்படிப் பிச்சைக்காரன்போல ஆக்கிவிட்டீரே? என்றபடி வேதனையுடன் ஜெபிக்க அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடித்தது. கையிலிருந்த துண்டால் கண்ணீரைத் துடைக்கவும் ஏதோ "டப் " எனும் ஓசையுடன் விழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது அவர்முன் ஒரு சோப்புக்கட்டி கிடந்தது. வேப்பமரத்தில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. ஆம், அன்று எலியாவுக்குக்   காகத்தின்மூலம் உணவளித்த தேவன் இன்றும் மாறாதவராக இருப்பதை உணர்ந்துகொண்டார். 

மேற்படி சம்பவத்தை அவர் வெளியில் பிரசங்கத்தில் சொல்வது கிடையாது. காரணம் அது பெருமை பேசுவதுபோல ஆகிவிடும் என்பதால் கூறமாட்டார். நானும் எனது நண்பரும் அவருடன் தனிப்பட்ட முறையில் பலமணிநேரம் பேசுவதுண்டு. அப்போது இத்தகைய அற்புதங்களை கூறுவார். இது எங்களது விசுவாசத்தை வளர்க்க உதவியது. 

அன்பானவர்களே, இதே வசனத்தை உறுதியுடன் பிடித்துக்கொள்ளுங்கள். வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடியும். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவாகவே இருக்கிறார். 

        

ஆதவன் 🔥 925🌻 ஆகஸ்ட் 10, 2023 வியாழக்கிழமை

"நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள்." ( யோவான் 8 : 38 )

மேசியாவை எதிர்பார்த்திருந்த யூதர்கள் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு  கிறிஸ்து பிதாவாகிய தேவனிடம் தான் கண்டதையும் கேட்டதையும் மக்களுக்கு அறிவித்தார். ஆனால் யூதர்கள் பலரும் அவரது போதனையினை ஏற்றுக்கொள்ளாமல் தங்களது துன்மார்க்க செயல்களிலேயே நிலைத்திருந்தனர். 

எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களிடம், "நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள்." என்று குறிப்பிட்டார்.  யூதர்களுக்குத் தங்களை ஆபிரகாமின் புதல்வர்கள் என்று கூறிக்கொள்வதில் ஒரு பெருமை இருந்தது. ஆனால் அவர்கள் செயல்கள் ஆபிரகாமின் செயல்கள்போல இல்லை.  

அவர்கள் பெரும்பாலும் உண்மையில்லாதவர்களாக, கொலைபாதக எண்ணமுடையவர்களாக  இருந்தனர். எனவேதான் அவர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக் கூறினார். "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை." ( யோவான் 8 : 44 )

பிசாசு "பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8 : 44 ) என்று கூறினார் இயேசு கிறிஸ்து. அன்பானவர்களே, நாமும் இன்று நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் நமது செயல்களையும் எண்ணங்களையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். பொய்யும் மனித கொலைபாதக எண்ணங்களும் நமக்குள் இருக்குமானால் நாமும் பிசாசின் மக்களே. 

நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றோமென்றால்  இயேசு தனது  பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுவதைப்போல நாமும் நமது தந்தையாகிய கிறிஸ்துவிடம் கண்டத்தைச் சொல்வோம். அவர் செய்ததுபோலவே செய்வோம். அதுவே சாட்சியுள்ள வாழ்க்கை.

அன்பானவர்களே, நமது பேச்சையும், செயல்களையும் எண்ணிப்பார்ப்போம். நாம் கிறிஸ்துவை ஆராதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு பொய்யும் பித்தலாட்டமுமான வாழ்க்கை வாழ்கின்றோமென்றால் நாம் இவற்றுக்குத் தகப்பனாகிய பிசாசானவனால் பிறந்தவர்கள். 

கிறிஸ்து எப்படித் தனது தந்தையிடம் கேட்டதையும் கண்டதையும் பூமியில் செய்தாரோ அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றவே அழைக்கப்பட்டுள்ளோம். எனவே அவர் நமக்கு மாதிரி காட்டியபடி வாழ்வோம். 

       

ஆதவன் 🔥 926🌻 ஆகஸ்ட் 11, 2023 வெள்ளிக்கிழமை

"எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 )

வேதாகமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குத்தத்தங்கள் உள்ளன. இவை அனைத்துமே தேவன் மனிதர்களுக்கு அளித்தவை. வாக்குமாறா தேவனைப்போல இந்த வசனங்களும் மாறாதவை. ஆனால் நம்மில் பலரும் இந்த தேவ வாக்குத்தத்தங்கள் பலன் தருமா எனும் சந்தேகத்தோடுஇருக்கின்றோம். அல்லது சிலவேளைகளில் நம்மில் தெளிவில்லாததால் இந்த தேவ வார்த்தைகளை மேம்போக்காக நம்பி அவை நம்மில் பலிக்காததால் சோர்ந்துபோய்விடுகின்றோம். 

 தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்று இருக்கின்றது என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது அவை பொய் சொல்வதில்லை. பின் ஏன் இவை நமது வாழ்வில் பலிப்பதில்லை?

அன்பானவர்களே, தேவன் மாறாதவர்தான்; ஆனால் நாம்தான் அந்த வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்கத் தகுதியில்லாதவர்களா பலவேளைகளில் மாறிவிடுகின்றோம். இதற்குக் காரணம் நாம் வேதாகமத்தை  நமக்கு ஏற்றபடி நமக்கேற்ற சிந்தனையில் வாசிப்பதுதான். 

எல்லா தேவ வாக்குறுதிகளுமே ஒரு நிபந்தனையுடன்தான் இருக்கும். வேதாகமத்தை வாசிக்கும்போது அந்த நிபந்தனை வாக்குறுதி வசனத்தின் முன்போ அல்லது பின்னரோ வரும். ஆனால் நாம் அந்த நிபந்தனைகளை மறந்துவிட்டு அல்லது தவிர்த்துவிட்டு  வாக்குறுதிகளை மட்டும்  பற்றிக்கொள்கிறோம். 

உதாரணமாக, "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) எனும் தேவ வாக்குறுதியை நம்மில் பலரும் நமது ஜெபங்களில் மேற்கோள்காட்டி ஜெபிக்கின்றோம். ஆனால் இதற்கு இரண்டு வசனங்களுக்குப்பின் ஒரு நிபந்தனை கூறப்பட்டுள்ளது. 

"என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக." ( யோசுவா 1 : 7 ) அதாவது மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படி நடந்தால் உனக்கு இந்த வாக்குறுதி பலிக்கும் என்கிறார் தேவன். 

புதிய ஏற்பாட்டிலும் விசுவாசம் எனும் நிபந்தனை பல வாக்குறுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்." ( ரோமர் 10 : 9, 10 ) 

ஆனால் இந்த வசனத்தின்படி "கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்' என்று கூறும் அனைவரும் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுவதில்லை. காரணம், அவர்கள் முழு மனதுடன் அறிக்கையிடாமல் வெறுமனே இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று கூறிவிட்டு இதர மனிதர்கள், புனிதர்கள், சூழ்நிலைகளின்மேல் நம்பிக்கைவைக்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் தேவ வார்த்தைகளுக்கும் அவைகூறும் நிபந்தனைகளுக்கும்  முற்றிலும் உட்படும்போது மட்டுமே தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருந்து நமக்குப் பலிக்கும். 

  

ஆதவன் 🔥 927🌻 ஆகஸ்ட் 12, 2023 சனிக்கிழமை

"உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." ( ஏசாயா 41 : 13 )

பல்வேறு இக்கட்டுகள் துன்பங்கள் நம்மை வாட்டும்போது நமக்கு ஆறுதல் தரும் தேவ வார்த்தைகள் வேதத்தில் பலவுண்டு. இந்த வார்த்தைகள் ஒரு தகப்பனும் தாயும் குழந்தைகளுக்கு ஆறுதலும் தேறுதலும் தருவதுபோல் நமக்கு மன அமைதியைத் தருகின்றன.  இன்றைய தியானத்துக்குரிய வசனம் அத்தகையதே. 

சிறு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது தாயோ தகப்பனோ அவற்றின் கைகளைப்பிடித்துக் கூட்டிச் செல்வார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அது மிகப்பெரிய பாதுகாப்பு உணர்வினைத் தரும். அன்பானவர்களே, பிரச்சனைகள், பாடுகள், துன்பங்களைக்கண்டு அஞ்சவேண்டாம். "நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்" என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துச் செய்த அற்புத அதிசயங்களை எண்ணிப்பாருங்கள். அந்த வல்லமைமிக்க கைகள் வெறுமையான தண்ணீரை சுவையான திராட்சை ரசமாக மாற்றிய கைகள். குருடர், செவிடர்கள், முடவர்களை   சுகமாக்கிய கைகள், பிசாசுகளைத் துரத்திய அதிகாரமிக்கக் கைகள். மரித்தவர்களை உயிருடன் எழுப்பியகைகள், ஐந்து அப்பங்களால் ஐயாயிரம் மக்களுக்கு பசியாற்றியகைகள். துன்பத்தால் சோர்ந்துபோன மக்களை அரவணைத்த அன்புக்கைகள். அந்தக் கைகளால் நமது வலது கையைப் பிடித்து அவர் நம்மை நடத்துவேன் என்கின்றார்.  

"யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்." ( ஏசாயா 41 : 14 ) ஆம், தேவனின் பார்வையில் நாமெல்லோரும் அற்பமான பூச்சி போன்றவர்கள். மக்கள் மத்தியில் நாம் ஒரு சிறு கூட்டமே. இந்திய மக்கள்தொகையில் நாம் வெறும் 2% தான். நம்மைப்பார்த்துத் தேவன் இந்த வசனங்களால் ஆறுதல் தருகின்றார்.

அற்பமான நமது கைகளைப் பிடித்து நடத்துவது மட்டுமல்ல, அப்படி அவர் நடத்தும்போது நாம் வலுவுள்ளவர்களாகின்றோம். அவர் வெறுமனே நமது கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. மாறாக, "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்." ( ஏசாயா 41 : 15 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். எனவே நம்மை எவரும் எதிர்த்து நிற்க முடியாது.

ஆனால் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. திருவிழாக்களுக்கோ கண்காட்சிகளுக்கோ குழந்தைகளை கைகளை பிடித்து அழைத்துச்செல்லும்போது சிலவேளைகளில் அங்கு இருக்கும் விளையாட்டுப் பொருட்களைப்பார்த்து அவை வேண்டுமென்று குழந்தைகள் அடம்பிடித்து அழும். வாங்கிக்கொடுக்காவிட்டால் என்ன சொன்னாலும் கேட்காது. சிலவேளைகளில் நமது கைகளை உதறிவிட்டு தரையில் உட்கார்ந்து அந்தப் பொருளை வாங்கித் தராவிட்டால்  வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும். நாமும் இதுபோலவே சிலவேளைகளில் உலக இச்சைகளுக்காக தேவ கரத்தை உதறிவிடுகின்றோம்.

தேவனது கரம்பிடித்து நடக்கும்போது நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து அவரது காலம் வரும்வரைக் காத்திருக்கவேண்டியதும் அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 ) எனக் கூறுகின்றார்.

அன்பானவர்களே, குடும்பத்திலோ, ஊரிலோ, நமது சமூகத்திலோ ஒருவேளை நாம் புறக்கணிக்கப்பட்டவர்களாக, மதிப்பில்லாதவர்களாக  இருக்கலாம். அல்லது உலகத் துன்பங்கள், நோய்கள் நம்மை நெருக்கிச் சோர்வடையச் செய்திருக்கலாம், ஆனால் நாம் அஞ்சிடவேண்டாம். அண்டசராசரங்களையே படைத்து  ஆளும் வல்லமைமிக்க தேவ கரம் நம்மைப் பிடித்துள்ளது எனும் விசுவாசத்தோடு நமது வாழ்வைத் தொடருவோம்.  

"பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்." என்கிறார் உன்னதமான தேவன். 



ஆதவன் 🔥 928🌻 ஆகஸ்ட் 13, 2023 ஞாயிற்றுக்கிழமை

"உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்." ( லுூக்கா 21 : 34 )

தனது இரண்டாம் வருகையினைக்குறித்து இயேசு கிறிஸ்து கூறியவையே இன்றைய தியான வார்த்தைகள். இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகைக்குச் சில முன்னடையாளங்களை  மக்களுக்கு எடுத்துக் கூறினார். அப்படிக் கூறிவிட்டு இறுதியில் இன்றைய வசனத்தைக் கூறினார். 

இந்த வசனம் பெருந்திண்டி , அதாவது உணவுமேல் அளவுக்கதிக ஆசைகொண்டு உண்பது. அதிக ஆசைகொண்டு உணவுக்காக ஓடுவது. போஜனப்பிரியம் என்று இதனைக் கூறுவர்.  அடுத்து, வெறிகொள்ளுதல்  (குடிவெறி, காமவெறி, போன்றவெறிகொள்ளுதல்)  மூன்றாவது,  உலக ஆசைகளை எண்ணி அவைகளுக்காக மட்டுமே ஓடுவதும் கவலைகொண்டு அலைவதும். இவைபோன்ற காரியங்களில் நாம் ஈடுபட்டிருப்போமானால் நாம் நினையாத நேரத்தில் அவரது வருகை இருக்கும். அதனால் இவைபோன்ற காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள் என்கின்றார். அதாவது, இவைகளைத் தவிர்த்து வாழ்வோருக்கு அவர் தனது வருகைக்குமுன் அறிவிப்புக் கொடுப்பார். 

இன்று சில விருந்துகளில்  உணவுக்காக சிலர் அளவுக்கதிக ஆசைகொண்டு ஓடுவதையும் கிடைத்தவை அனைத்தையும் உண்டுவிடவேண்டும் என்று விரும்புவதையும் நாம் காணலாம். காரணம் பெருந்திண்டி எனும் போஜனப்பிரியம். இது பெரிய பாவங்களில் ஒன்றாக வேதத்தில் குறிப்பிடப்படுகின்றது.

ஆண்டவரது வருகையைக் குறித்து அதிகம் வெளிப்படுத்தியவர் தானியேல் தீர்க்கத்தரிசி. இந்தத்  தானியேல் இயேசு கூறியதுபடி உணவு விஷயத்தில் கவனமாக இருந்தார். பாபிலோன் ராஜா தான் உண்ணும் ராஜ உணவுகளை தானியேலுக்கும் அவரது மூன்று நண்பர்களுக்கும்  அளிக்க முன்வந்தும் தானியேலும் அவரது நண்பர்களும் அவைகளை மறுத்து பருப்பும் காய்கறி உணவுமே தங்களுக்குப் போதும் என்று உணவு விஷயத்தில் அடக்கமாக இருந்தார்கள்.  இதனை, "தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்." ( தானியேல் 1 : 8 ) என்று வாசிக்கின்றோம். 

அப்படி அவர்கள் சாதாரண உணவுகளை உண்டபோதும் ராஜ உணவினை உண்டவர்களைவிட முகக்களையும் உடல் செழுமையும் உள்ளவர்களாக இருந்தனர்.  ஆம், "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

அன்பானவர்களே, ராஜ உணவினையும்  திராட்சை ரசத்தையும் தவிர்த்து உலக ஆசை இச்சைகளைத் தவிர்த்து பரிசுத்தமாய்த் தன்னைக் காத்துக்கொண்ட தானியேலுக்கு பல மறைபொருட்களைத் தேவன் வெளிப்படுத்தினார்.  "இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்." ( தானியேல் 1 : 17 )

இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் நமக்கும் அறிவுரையாகக் கூறுகின்றார். "உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்குக் காத்துக்கொள்ளுங்கள்" என்று.  அப்போது கிறிஸ்துவின் வருகைக்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆவதுமட்டுமல்ல, வருகை குறித்த எச்சரிப்பையும் முன்னமே பெறுவோம்.  கர்த்தரது வார்தைக்குச் செவிகொடுப்பது நமது ஆத்துமாவுக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றதாயிருக்கிறது. மருத்துவர்களும் இன்று உணவைக் குறைத்து வாழ்வது ஆரோக்கியம் என்றுதான் கூறுகின்றனர். 

இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து நமது ஆத்துமாவையும் உடலையும் காத்துக்கொள்வோம். 


ஆதவன் 🔥 929🌻 ஆகஸ்ட் 14, 2023 திங்கள்கிழமை
 
"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ? ( யாக்கோபு 2 : 19, 20 )

நாம் அனைவருமே பொதுவாக தேவனை விசுவாசிக்கின்றோம். அப்படி விசுவாசிப்பதால்தான் ஆலயங்களுக்கு வருகின்றோம், தேவனுக்கு அஞ்சி சில காரியங்களைச் செய்யாமல் தவிர்க்கின்றோம், வேதாகமத்தை வாசிக்கின்றோம், அவரிடம் ஜெபிக்கின்றோம். இத்தகைய விசுவாசம் நல்லதுதான். ஆனால் இந்த விசுவாசம் மேலான விசுவாசமல்ல என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

காரணம், பிசாசுகளாலும் ஆலயங்களுக்கு வரமுடியும். தேவ சந்நிதியில் பிசாசுகளும் வந்து நின்றதை நாம் யோபு புத்தகத்தில் வாசிக்கின்றோம் (யோபு 1:6, மற்றும் யோபு 2:1).  இயேசு கிறிஸ்துவையே சோதித்தது சாத்தான். மேலும் நமக்குத் தெரிவதைவிட வேத வசனங்கள் பிசாசுகளுக்கு அதிகம் தெரியும். இயேசு கிறிஸ்துவை சாத்தான் சோதித்தபோது வேத வசனங்களையே பயன்படுத்தினான் (மத்தேயு 4:1-11) ஆனால், பிசாசுகள் இயேசுவைக் கண்டு நடுநடுங்கின. காரணம் பிசாசுகளுக்கு தேவனைப்பற்றியும் அவரது பரிசுத்தத்தைப் பற்றியும்  வல்லமை பற்றி அதிகம் தெரியும். காரணம் ஆதியில் அவரோடு இருந்து பின்னர் பாதாளத்தில் தள்ளப்பட்டவைகள்தான் பிசாசுகள் (எசேக்கியேல் 28).

எனவே, நாமும் வெறுமனே தேவனை நம்புகிறேன் என்று கூறிக்கொண்டு சில பக்தி முயற்சிகளை மட்டும் செய்துகொண்டிருந்தால் போதாது. கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தைச் செயலில் காண்பிக்கவேண்டியது அவசியம். இல்லையானால் கிறிஸ்துவை அறியாத மக்கள் பிற தெய்வங்களை வழிபடுவதுபோல நாமும் கிறிஸ்துவை வழிபடுபவர்களாகவே இருப்போம். 

கிறிஸ்துமேலுள்ள நமது விசுவாசம் செயலாக வெளிப்படும்போது நாமும் கிறிஸ்துவைப்போல மாறுகின்றோம்.   அதாவது கிறிஸ்துவின்மேல் உண்மையான விசுவாசம் வைக்கும்போது நாம் நீதிசெயல்கள் செய்யாமல் அவர்மேல்வைக்கும் நமது விசுவாசத்தினால் பாவத்திலிருந்து விடுலை பெறுகின்றோம்; நீதிமானாக்கப் படுகின்றோம்.   பாவத்துக்கு விலகிடும் நாம் ஆவியின் பிரமாணத்துக்குள் வந்துவிடுகின்றோம்.  

இதனையே, "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.  அன்பானவர்களே, இத்தகைய அனுபவத்தைப் பெற்று கிறிஸ்துவுக்களுள் வாழ்வதுதான் விசுவாச வாழ்க்கை. வெறுமனே கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஆலயங்களுக்குச் செல்வதல்ல; அவர் பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார் எனும் விசுவாசம். 

இந்த விசுவாசமும் பாவத்திலிருந்து விடுதலையும்  பிசாசுகளுக்குக் கிடையாது. எனவேதான் இன்றைய வசனம், "தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ? என்று கேள்வி எழுப்புகின்றது. ஆம், நமது விசுவாசம் செயலாகவேண்டும்.

மேலும் இந்த விசுவாசச் செயல்கள் நம்மிடம் இல்லையானால் நாம் செத்தவிசுவாசம் கொண்டவர்கள் என்கின்றது வேதம். ஆம்,  "அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது." ( யாக்கோபு 2 : 26 ) எனவே உயிருள்ளவர்களாகிய நாம் நமது விசுவாசத்தைச் செயலில் காண்பிப்போம். அதற்கு, முதலில் கிறிஸ்து இயேசுவின் ஆவியின் பிரமாணத்துக்குள் நம்மை உட்படுத்திக்கொள்வோம்.

      

ஆதவன் 🔥 930🌻 ஆகஸ்ட் 15, 2023 செவ்வாய்க்கிழமை

"சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"( யோவான் 8 : 32 )

இன்று நமது நாடு தனது எழுபத்தாறாவது சுதந்திரத்தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. சுதந்திரம் என்றாலே  மகிழ்ச்சிதான். கூண்டிலேயே அடைபட்டிருக்கும் பறவையைத் திறந்துவிடும்போது அது மகிழ்ச்சியுடன் வானில் சிறகடித்துப் பறக்கின்றது. 

இன்று மனிதர்கள் நாம் நம்மை அறியாமலேயே  சமூக ஊடகங்களின் அடிமைகளாக இருக்கின்றோம். இதனால் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகள் அனுபவித்த பல்வேறு மகிழ்ச்சிச் செயல்பாடுகளை இன்றைய குழந்தைகள் இழந்துவிட்டனர்.  

விடுதலை அடையவிரும்புகின்றவன் முதலில் தான் அடிமை என்பதை உணரவேண்டும். அப்போதுதான் அதிலிருந்த விடுதலை பெறவேண்டுமெனும் ஆவல் அவனில் உருவாகும். நமது சுதந்திர போராட்டத் தலைவர்கள் இதனையே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். நாம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருக்கின்றோம். அவர்களிடமிருந்து நாம் விடுதலைபெறும்போது நமது நாடு எப்படி மேம்பாடடையும் என்று பிரச்சாரம் செய்து மக்கள் உணர்வுகளைத் தூண்டி எழுப்பினர்.  

இதுபோலவே மனிதர்களது ஆவிக்குரிய மகிழ்ச்சியானது பாவத்துக்கு அடிமையானதால் இல்லாமல் போய்விட்டது. ஆனால், பாவத்தைப்பற்றியும் பாவத்திலிருந்து விடுதலை பெறும்போது நமக்குக்  கிடைக்கும் மகிழ்ச்சி குறித்தும் மனிதர்கள் உணர்வில்லாமல் இருக்கின்றனர். இந்த உணர்வும் பாவத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமெனும் எண்ணமும் உருவாகும்போதுதான் நாம் பாவ விடுதலை பெறமுடியும். 

பொதுவாக நாம் சுதந்திரவான்கள் போலத் தெரிந்தாலும் நாம் பாவத்துக்கு அடிமையானவர்களே. இதனையே இயேசு கிறிஸ்து, "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று குறிப்பிட்டார். 

பாவ அடிமைத்தனத்தில் இருந்துகொண்டு நாம் மெய்யான ஆன்மீக உணர்வுகளைப்  பெறமுடியாது. தேவனோடுள்ள உறவினையும் அதன் மேன்மையையும் அறியமுடியாது. பெயரளவுக்கு ஆலயங்களுக்குச் சென்று வந்துகொண்டிருக்கலாம். ஆனால் நாம் வழிபடும் தேவனோடு நமக்கு எந்தத் தொடர்பும் இருக்காது.  தேவனோடுள்ள உறவே விடுதலையையும்   மகிழ்ச்சியையும் அளிக்கும். 

இன்றைய வசனம் சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று கூறுகின்றது. அந்த சத்தியம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்று அவர் கூறவில்லையா? நமது பாவங்களுக்குத் தனது இரத்தத்தால் பரிகாரம் செய்தவர் அவரே. எனவே அவர்தான் நம் பாவங்களை மன்னிக்கவும் பாவத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கவும் முடியும். ஆம், "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

இப்படிப் பாவ மன்னிப்பைப் பெறும்போது நாம் அவரது பிள்ளைகளாகின்றோம்; நாம் அடிமைகளல்ல. பிள்ளைகளுக்குரிய சுதந்திரம் நமக்குக் கிடைக்கின்றது.  "அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்." ( ரோமர் 8 : 15 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம் அன்பானவர்களே, சத்தியமான கிறிஸ்துவை நாம் அறியவேண்டும். கிறிஸ்துவைப் பற்றிய வரலாறையும் அவரது புதுமைகளையுமல்ல; அவரை நமது ஆத்தும இரட்சகராக  அறியவேண்டும். அப்படி அறியும்போது, அந்தச் சத்தியமான கிறிஸ்து நம்மை மெய்யாகவே பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்குவார். 

  

ஆதவன் 🔥 931🌻 ஆகஸ்ட் 16, 2023 புதன்கிழமை

"ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்." ( எபிரெயர் 12 : 28 )

இந்த உலகத்து அரசாங்கங்கள் அழிந்துபோகக்கூடியன. எத்தனையோ மகா பேரரசுகள் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவை எதுவுமே இன்றுவரை நிலைநிற்கவில்லை. ஆம், உலக ராஜ்ஜியங்கள் அழிந்துபோகக்கூடியன. அனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வாக்களித்ததோ அழிவில்லாத நித்திய ராஜ்ஜியம். 

கண்களால் நாம் காணக்கூடாத நித்திய ராஜ்யத்தின் ராஜாவாக கிறிஸ்து இருக்கின்றார். "நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. " ( 1 தீமோத்தேயு 1 : 17 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

இந்த அழிவில்லாத ராஜ்யத்தை சுதந்தரிக்கவேண்டுமானால் நாம் பரிசுத்த வாழ்வு வாழவேண்டியது அவசியம். ஏனெனில் அசுத்தமும் தீட்டும் உள்ளவைகள் அந்த நித்திய ராஜ்யத்தினுள் நுழைய முடியாது. "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 )

இத்தகைய பரிசுத்தவான்களுக்கான அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. நாம் எல்லோருமே பொதுவாக தேவனுக்கு  ஆராதனை செய்கின்றோம்.  ஆனால் அது தேவனுக்குப் பிரியமான ஆராதனையா என்று  நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. எனவே நாம் தேவனுக்குப் பிரியமான ஆராதனை செய்து இந்த உலகத்தில் வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. எது தேவனுக்குப் பிரியமான ஆராதனை என்பதனை அப்போஸ்தலரான பவுல் அடிகள் பின்வருமாறு கூறுகின்றார்;- 

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

நமது உடல் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது (1 கொரிந்தியர் 6:19) எனவே நமது உடலை அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்படி நாம் உடலை பரிசுத்தமாகக் காத்துக்கொள்வது தேவனுக்கேற்ற ஆராதனையாயிருக்கிறது. அப்படி நாம் நமது உடலைப்  பரிசுத்தமாக காத்துக்கொள்ளும்போது அசைவற்றதும் நிலையானதுமான நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாகின்றோம்.  அதற்கேற்ற கிருபையை அவர் நமக்குத் தந்து வழிநடத்திட வேண்டுவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.



ஆதவன் 🔥 932🌻 ஆகஸ்ட் 17, 2023 வியாழக்கிழமை

"நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.," ( பிரசங்கி 12 : 1 )

மனிதர்கள் பொதுவாக ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது, பக்திச் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை  முதிர்ந்த வயதுக்குரிய செயல்பாடுகள் என்று எண்ணிக்கொள்கின்றனர். இளம் வயது, வாலிப வயது இவை இன்பமாக நாம் வாழக்கொடுக்கப்பட்டுள்ள நாட்கள் எனப் பலரும்  எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இன்றைய வசனம்  "நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை" என்று அறிவுறுத்துகின்றது. 

மேலும் துன்பங்கள் வரும்போது மட்டுமே கடவுளைத் தேடுவது, துன்பமான ஆண்டுகள் வாழ்வில் தொடரும்போது கடவுளை நினைப்பது என்று நாம் வாழாமல் வாலிப வயதிலேயே கடவுளைத் தேடுபவர்களாக வாழவேண்டும் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. இதனையே, "தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்" என்று கூறப்பட்டுள்ளது. 

நம்மிடம் நன்கு பழுத்த மாம்பழம் இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அந்தப் பழத்தை நன்றாக சுவைத்துத் தின்றுவிட்டு அதன் கொட்டையோடு ஒட்டியுள்ள கழிவுப் பகுதியை மட்டும் யாருக்காவது கொடுப்போமா? ஆம், இப்படியே நம்மில்  பலரும் இருக்கின்றோம். உடல் ஆரோக்கியமாக,  திடமாக இருக்கும்போது எத்தனையும்பற்றி கவலைப்படாமல் நன்றாக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு உடல் நலிந்து, நோயுற்று வாடியபின்பு கடவுளை நாடி அவருக்குத் தங்களை ஒப்படைக்கலாம் என்று முயலுகின்றோம்.  

அன்பானவர்களே, இன்றைய வசனத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது,  "மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை." ( பிரசங்கி 12 : 7 ) என்று கூறப்பட்டுள்ளதைப்  பார்க்கின்றோம். அதாவது, மண்ணான நமது உடல் தான் முன்பு இருந்த மண்ணுக்குத் திரும்புமுன்னும், நம்முடைய ஆவி தேவனிடம் திரும்புமுன்னும் நமது வாலிப வயதில் தேவனைத் தேடவேண்டும்.

வாலிப வயதில் தேவனைத் தேடுவதால் நாம் பாவ பழக்கங்களுக்குத் தப்பி பரிசுத்தமாக வாழமுடியும். யோசேப்பின் வாழ்க்கையைப் பாருங்கள், போத்திபாரின் மனைவி தன்னோடு அவனைப் பாவம்செய்ய பலமுறை அழைத்தபோதும் "........நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி" ( ஆதியாகமம் 39 : 9 ) என்று கூறி யோசேப்பு தன்னைக் காத்துக்கொண்டான். அப்போது அவனுக்கு இருபது அல்லது இருபத்துமூன்று வயதுகள்தான் இருந்திருக்கும். இதற்குக் காரணம், தேவனோடுள்ள அவனது தனிப்பட்ட உறவு. அந்த இளம் வயதிலேயே அவன் தனது வாழ்க்கையில் தேவனை முன்னிறுதிப் பார்த்தான். அதனால் கர்த்தர் யோசேப்போடு இருந்தார் என்று நாம் வாசிக்கின்றோம் (ஆதியாகமம் 39:2) 

எனவே தேவனைத் தேடுவதற்கு முதிர்ந்த வயதுவரைக் காத்திருக்கவேண்டியது அவசியமில்லாதது. வாலிப வயதில் கர்த்தரைத் தேடும்போது நம்மை அவர் அதிக நாட்கள் பயன்படுத்த முடியம். மட்டுமல்ல, வாலிபத்தின் பாவ காரியங்களுக்கு விலகி பரிசுத்தமாய் வாழ முடியும். நமக்கு இப்போது வயதாகியிருந்தாலும் நமது குழந்தைகள், பேரக்குழந்தைகளை கர்த்தரை வாலிப வயதில் தேடுபவர்களாக வளரச்செய்திடுவோம்.


ஆதவன் 🔥 933🌻 ஆகஸ்ட் 18, 2023 வெள்ளிக்கிழமை

"எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்." ( ஏசாயா 26 : 13 )

இந்த உலகத்தில் நம்மைப் பல உலக செல்வங்கள் ஆளுமைசெய்கின்றன. பணம், புகழ், அதிகாரம், இவைபோன்றவை நமது மனதை ஆட்சிசெய்கின்றன. இவைகளே நம்மை ஆளும் ஆண்டவன்மார்கள்.  எவையெல்லாம் நம்மை அடிமைப்படுத்தியுள்ளனவோ அவையெல்லாமே நமது ஆண்டவன்மார்கள்தான். இவைகளது அதிகாரத்துக்கு நாம் உட்பட்டவர்களாக இருப்போமானால் நம்மை தேவன் முழுமையாக ஆட்சி செய்ய முடியாது. அதாவது நாம் நம்மைக்குறித்த தேவனது திட்டத்துக்கு உட்படமுடியாது. 

தேவன் தனது மக்கள் தனது அதிகாரத்துக்கு மட்டுமே கீழ்ப்படித்தவர்களாக வாழவேண்டுமென்று விரும்புகின்றார். எனவே அவரே இஸ்ரவேல் மக்களை ஆண்டு வழிநடத்தினார். ஆனால் இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றியுள்ள மக்களை ஆளும் அரசர்களைப்போல தங்களுக்கும் ஒரு ராஜா இருக்கவேண்டுமென்று விரும்பினர். அவர்கள் தீர்க்கதரிசியாகிய சாமுவேலிடம் சென்று நாங்களும் மற்ற மக்களைப்போலவே இருப்போம்; எங்களை ஆட்சி செய்ய எங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தித்தாரும் என்று கேட்டார்கள். ( 1 சாமுவேல் 8 : 5)

இஸ்ரவேல் மக்களது இந்தக் கோரிக்கை சாமுவேலுக்குத் தகாத ஒரு செயலாகத் தெரிந்தது. எனவே அவர் தேவனிடம் இதுகுறித்த வேதனையோடு விண்ணப்பம் செய்தார். "அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." ( 1 சாமுவேல் 8 : 7 ) என்றார். ஆம்,கர்த்தர் நம்மை ஆளுவதை விட்டுவிட்டு  மற்ற மக்கள் வாழ்வதுபோல நாம் வாழ்வதை தேவன் விரும்புவதில்லை. எனவேதான்  "நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." என்று சாமுவேலுக்கு தேவன் பதிலளித்தார். 

அன்பானவர்களே, நமது தேவனே "நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்..." ( 1 தீமோத்தேயு 6 : 15 ) எனவே நாம் அவரைத் தவிர இந்த உலகச் செல்வங்களோ, அதிகாரங்களோ, புகழோ நமது இருதயத்தை ஆட்சி செய்யாதபடி பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியமாயிருக்கிறது. 

தேவன் நம்மை அடிமைகளாக அல்ல; உரிமைக் குடிமக்களாக வாழ அழைக்கிறார். அவர் இருப்பதுபோல நாமும் இருக்கவேண்டும் என விரும்புகின்றார். இந்த உலகக் கவர்ச்சிகள் நம்மை ஆளவிடாமல் கர்த்தர் மட்டுமே நம்மை ஆளும்படி நம்மை அவருக்கு ஒப்படைக்கும்போது நம்மை அவரைப்போல உயர்த்துவார். ஆம், "நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 21 ) என்கிறார் பரிசுத்தரான கர்த்தர்.

அன்பானவர்களே, இதுவரை கர்த்தரையல்லாமல் வேறே உலக  ஆண்டவன்மார் நம்மை ஆட்சி செய்யும்படி ஒருவேளை நாம் அனுமதித்திருக்கலாம். ஆனால் இன்னும் நாம் அப்படி இருத்தல் கூடாது. இனி அவரை மட்டுமே சார்ந்து அவருடைய பெயரைப் மட்டுமே பிரசித்தப்படுத்துவோம். 


ஆதவன் 🔥 934🌻 ஆகஸ்ட் 19, 2023 சனிக்கிழமை

"இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை." ( ரோமர் 3 : 20 )

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் மோசே வழியாக பல கட்டளைகளைக் கொடுத்திருந்தார். அந்தக் கட்டளைகள் மனிதர்களின் நல்வாழ்வுக்காகவும் தேவனுக்குன் நிற்கத்தக்கத் தகுதியுள்ளவர்களாக அவர்களை மாற்றிடவும் கொடுக்கப்பட்டவை. இந்தக் கட்டளைகள் அனைத்தும் பொதுவாக, "செய்யாதிருப்பாயாக", "செய்யாதே",    "நினைப்பாயாக" என அறிவுரை கூறுவனவாக இருக்கும். அதாவது இந்தச் செயல்கள் பாவம்; எனவே நீ இப்படிச் செய்யாதிருப்பாயாக என்று  இவை கூறுகின்றன. எனவே இந்தச் சட்டங்கள் மூலம் நாம் எவை எவை பாவம் என்று அறிந்துகொள்கின்றோம். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் பொது மொழிபெயர்ப்பில் அழகாக பின்வருமாறு கூறுகின்றது:- "ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகின்றது." எனவே, "நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்." ( ரோமர் 2 : 13 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

ஆனால் பொதுவாக இன்று கிறிஸ்தவர்கள் இந்தச் சட்டங்களையும் கற்பனைகளையும் தெரிந்து வைத்துள்ளார்களேத் தவிர இவற்றின்படி செயல்படுகின்றார்களா என்பது கேள்விக்குறியே. காரணம்,  மனிதனது சுய பலவீனம். நாம் பலவீனர்களாக இருப்பதால் பல்வேறு கட்டளைகளை மீறிவிடுகின்றோம். இதனை நிவர்த்திசெய்து நமக்கு உதவிடவே கிறித்து இயேசு உலகினில் வந்து பாடுகள் பட்டார்  என நாம் வாசிக்கின்றோம். 

இதனையே, "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) எனக் கூறப்பட்டுள்ளது.

அதாவது இன்றைய வசனம் நமக்குக் கூறுவது, கட்டளைகள் என்பவை வெறுமனே எவை எவை பாவம் என்பதை மட்டும் நமக்கு உணர்ந்துகின்றது. உதாரணமாக நாம் சாலையில் செல்லும்போது சிக்னல் பகுதிகளில் சிகப்பு, பச்சை, ஆரஞ்சு விளக்குகள் எரிந்து நம்மை எச்சரிக்கும். அவைகளைக் கவனித்து நாம் செல்லவேண்டும். இல்லையானால் விபத்துதான் ஏற்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு சிறந்த ஓட்டுநராக இருந்து வாழ்க்கைச் சாலையில்  பாதுகாப்பாக நாம் பயணிக்க உதவிடுவார். 

அதனையே வேதாகமம் ஆவியினால் நடத்தப்படுதல் என்று கூறுகின்றது. "ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல." ( கலாத்தியர் 5 : 18 ) ஆம் , பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்திடும்போது நாம் கட்டளைகளுக்குக் கீழ்பட்டவர்களல்ல; மாறாக அவருக்கு ஆட்பட்டவர்கள். 

ஆம் அன்பானவர்களே, பாவத்தை அறிகிற அறிவு மட்டுமே நியாயப்பிரமாணத்தினால் வருகிறது. எனவே, திருச்சட்டம் சார்ந்த செயல்களால் நாம் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகின்றது. எனவே நம்மை நாம் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்கு ஒப்புவிக்கவேண்டும். அப்படி  ஆவியினால் நடத்தப்படுவோமானால் நாம் திருச்சட்டத்துக்குக்  (நியாயப்பிரமாணத்திற்குக்)  கீழ்ப்பட்டவர்களல்ல.



ஆதவன் 🔥 935🌻 ஆகஸ்ட் 20, 2023 ஞாயிற்றுக்கிழமை

"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." ( சங்கீதம் 119 : 11 )

கர்த்தருடைய வேதத்தை நாம் நேசித்து வாசிக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, நாம் தேவனுடைய வேதத்தை வாசிக்கும்போதுதான் தேவனது வார்த்தைகளை நாம் அறியமுடியும். அப்படி அறியும்போதுதான் நாம் அவற்றை பாதுகாக்க முடியும். 

இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு அவரது வார்த்தைகளை தனது இருதயத்தில் வைத்து வைத்தேன் என்கின்றார். அதாவது தேவனது வார்த்தைகள்மேலிருந்த அன்பால் அவரது வார்த்தைகளை இருதயத்தில் பாதுகாத்து வைத்துள்ளேன் என்கின்றார். 

இன்று மனிதர்களாகிய நாம் நமது இருதயத்தில் எவற்றை சேமித்து வைக்கின்றோம்? தேவையற்ற வார்த்தைகள், திரைப்படப் பாடல்கள், பிறர் நம்மைப்பற்றி கூறிய தகாத வார்த்தைகள் இவற்றைத்தான் பெரும்பாலும் சேர்த்து வைக்கின்றோம். இப்படி நமது இருதயம் தேவையற்ற பொருட்களால் நிரப்பும்போது அவைதான் நம்மிடமிருந்து வெளிவரும். 

இதனையே, "நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." ( லுூக்கா 6 : 45 ) என்றார் இயேசு கிறிஸ்து.   தேவையற்றவைகளால் நமது இருதயம் நிரப்பும்போது தேவையற்ற வார்த்தைகளை நமது வாய் பேசும்.

உலக செல்வங்களை நாம் பணப்பெட்டியில் சேகரித்து வைக்கும்போது நமது உலக காரியங்களுக்கு அவை உதவுவதைப்போல தேவனுடைய வார்த்தைகளை நாம் இருதயமாகிய பெட்டகத்தில் சேர்த்து வைப்போமானால் நாம் பாவம்செய்யாதபடிக்கு அவை நமது ஆத்துமாவுக்கு காவலாக அமையும்.  ஆனால் ஒன்று, உலக செல்வங்கள் அழிந்துபோகலாம், திருட்டுப்போகலாம் ஆனால் நமது இருதயங்களில் சேர்த்து வைத்த தேவ வார்த்தைகள் என்றுமே அழிவுறாது.

அன்பானவர்களே, இன்றைய தியான வசன அதிகாரத்தின் துவக்கத்தில் சங்கீத ஆசிரியர், "கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்." ( சங்கீதம் 119 : 1 - 3 ) என்று கூறுகின்றார். அதாவது, கர்த்தரது வேதத்தின் சாட்சிகளைக் கவனித்து வாழ்வோமானால், நாம் அநியாயம் செய்யாமல் அவரது வழிகளில் நடகிறவர்களாக இருப்போம். 

நாம் தினசரி வேதாகமத்தை வாசிக்கவேண்டியதன் அவசியம் இதனால்தான். நாம் அவற்றை வாசிக்க வாசிக்க அவை நமது இருதயத்தில் பதியும். நாம் தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, அந்த வார்த்தைகள் நம்மைக் காத்துக்கொள்ளும். தினசரி வேதாகமத்தை வாசிக்கும்போது நாம் மேலும் மேலும் மெருகடைந்து பரிசுத்தமாகின்றோம்.  



ஆதவன் 🔥 936🌻 ஆகஸ்ட் 21, 2023 திங்கள்கிழமை

"அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?" ( லுூக்கா 16 : 11 )

மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சொந்தமாக பலத் தொழில்  நிறுவனங்கள் இருந்தன. அவருக்கு ஒரேஒரு சிறிய மகன் இருந்தான். அவனுக்குப் பத்து அல்லது பதினோரு வயதுதான் இருக்கும். மனைவி அதிகம் படிப்பறிவில்லாதவள். நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவரது வாழ்வில் கொடிய நோய் பெரிய இடியாகத் தாக்கியது.  மருத்துவர் அந்தத் தொழிலதிபரிடம், "நீங்கள் முன்புபோல அதிகம் உழைக்கக்கூடாது......உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மேலோட்டமாக தொழிலைக் கவனித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுரைக் கூறினார். 

மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய அவர் பல்வேறு முறையில் சிந்தித்துவிட்டு ஒரு முடிவுடன் தனது அலுவலகத்துக்குச் சென்றார். அனைத்து முக்கியப்  பணியாளர்களையும் அழைத்து   அவர்களுடன் பேசி, மருத்துவர் கூறிய அறிவுரையின்படி அவர்களில் ஒருவரை நிறுவனத்துக்குத் தலைவராக ஏற்படுத்தப் போவதாகக் கூறினார். அங்கிருந்த பலர் அவர் தங்களைத்தான் பொறுப்பில் அமர்த்துவார் என எண்ணிக்கொண்டனர். 

ஆனால் அந்தத் தொழிலதிபர் அந்தப் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவரிடம் வெறும் பன்னிரெண்டாயிரம் மாதச் சம்பளம் பெறும் கணக்கியல் துறை ஊழியர் ஒருவரை அந்தப் பொறுப்புக்குத் தான் ஏற்படுத்தப்போவதாக அறிவித்தார். எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். 

ஆம், அந்த மனிதரின் உண்மை, நேர்மை, கடின உழைப்பை அந்த நிறுவன உரிமையாளர் பல்வேறு சமயங்களில் கவனித்துள்ளார். அவரால்தான் தனது நிறுவனங்களையும் தன்னையும் ஏமாற்றாமல்  உண்மையாக நடத்திடமுடியும் என்று அவர் நிதானித்திருந்தார். வெறும் பன்னிரெண்டாயிரம் மாதச் சம்பளம் பெற்றுவந்த அந்த நபர் ஒரே நாளில் மிக உயர்ந்த பதவியை அடைந்தார். மிக அதிக சம்பளம், தனி வீடு, கார், உதவியாளர்கள் என அவர் அந்த முதலாளியால் உயர்த்தப்பட்டார். காரணம் அவரிடமிருந்த உண்மை. 

இதனையே இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து "அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?" என்று கூறுகின்றார். ஆம், உலகப் பொருட்களில் உண்மையாயிருந்த அந்த மனிதனிடம் பெருமைமிகு பதவி ஒப்படைக்கப்பட்டது.

மொர்தெகாயின் உயர்வுக்குக்  காரணம் அவரது உண்மை. வாயில்காப்போனாக இருந்தபோதும் அந்தப் பொறுப்பில் உண்மையாயிருந்தார். ராஜாவைக் கொலைசெய்ய முயன்றவர்களை ராஜாவுக்கு அடையாளம் காட்டினார். தனது மக்களுக்காக உண்மையாய் நின்றார். எனவே அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார். (எஸ்தர் 10:3)

அன்பானவர்களே, எந்தக் குறைந்த மாதச் சம்பளத்தில் வேலைப்பார்த்தாலும் செய்யும் வேலைக்கு உண்மையுள்ளவர்களாக நாம் இருந்தால் உயர்த்தப்படுவோம். காவல் துறையில் வேலைபார்ப்பவர்கள் அதிகம் கையூட்டு பெறுகிறார்கள் எனும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அந்தக் காவல்துறையிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் உண்டு. இப்படி உண்மையுள்ளவர்கள் எல்லோரும் பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள் என்று நான் கூறவில்லை; மாறாக உண்மையாக இருக்கும்போது குடும்பத்தில் தேவ ஆசீர்வாதம் நிச்சயமாகத் தங்கும். 

அநீதியான உலகப்பொருளைப்பற்றி உண்மையாக இருப்போமானால் தேவன் நம்மை நம்பி மெய்யான பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை ஒப்புவிப்பார். தேவன் தனது மக்களைக்  கண்டுகொள்ளாமல் விட்டுவிடுபவரல்ல.



ஆதவன் 🔥 937🌻 ஆகஸ்ட் 22, 2023 செவ்வாய்க்கிழமை

"சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." ( ஏசாயா 30 : 19 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் சீயோன், எருசலேம் என்பவை உருவகமாகக் கூறப்பட்டுள்ளன. சீயோன் என்பது பரலோக ராஜ்யத்தையும் (தேவனுடைய நகரத்தையும்)  எருசலேம் என்பது பரிசுத்த வாழ்க்கையையும் குறிக்கின்றது. அதாவது பரலோக ராஜ்யத்துக்கு உரிமையான மக்கள் பரிசுத்தமாக வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

அடுத்து வரும் வார்த்தைகள், அப்படி தேவனுக்கு ஏற்புடைய பரிசுத்த வாழ்க்கை வாழ்வதால் வரும் ஆசீர்வாதங்கள் விளக்கப்பட்டுள்ளன. அதாவது அப்படி பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியான ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழும்போது, "நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." என்று கூறப்பட்டுள்ளது. 

தொடர்ந்து அடுத்த வசனங்களிலும் ஏசாயா இதன் ஆசீர்வாதங்களை விளக்குகின்றார். "ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." ( ஏசாயா 30 : 20, 21 )    

அதாவது இப்படி சீயோனுக்குத் தகுதியுள்ளவர்களாக ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழும்போது நாம் உபத்திரவம், குறைச்சல் போன்று நெருக்கத்தின் மத்தியில் இருந்தாலும் நமது போதகர் , அதாவது தேவன் நமக்கு மறைந்திருக்கமாட்டார். அவர் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். நெருக்கத்தின் மத்தியிலும் நாம் அவரது தேவ பிரசன்னத்தைக் கண்டுணரமுடியும். 

மேலும் நாம் செல்லவேண்டிய சரியான பாதையினை அவர் நமக்குக் காட்டி வழிநடத்துவார். நாம் செல்லவேண்டிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.

மற்ற மக்களுக்கும் சீயோனைச் சார்ந்த மக்களுக்குமுள்ள ஆசீர்வாதத்தின் வித்தியாசம் இதுதான். மற்ற மக்கள் துன்பப்படும்போது வழிதெரியாமலும் உதவுவாரில்லாமலும் தவிப்பார்கள். ஆனால் நாம்  சீயோன் எனும் பரலோகத்துக்குரியவர்களாக பரிசத்தமாக வாழும்போது தேவன் நமக்கு மறைந்திருக்கமாட்டார். நெருக்கத்தின் மத்தியிலும் அவரது முகத்தரிசனத்தை நாம் காண முடியும். அவரது வழிநடத்துதலை அனுபவிக்கமுடியும்.  

மேலும்,  அப்படி வாழும்போது  அவரை நோக்கி நாம் ஜெபிக்கும்போது நமது ஜெபத்துக்கு உடனேயே இரங்கி பதில் தருவார். இதனையே, "உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." என்று இந்த வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, நாம் இந்த உலகத்தில் கொஞ்சகாலம் வாழ்ந்தாலும் நாம் நிரந்தர நகரான பரலோக சீயோனுக்கு உரியவர்கள். கர்த்தரோடு வாழப்போகிறவர்கள். எனவே தாறுமாறாக அலைந்திடாமல் பரிசுத்தநகரமாகிய எருசலேமில் தங்கி பரிசுத்த வாழ்கையினைத் தொடர்ந்திடுவோம். 



ஆதவன் 🔥 938🌻 ஆகஸ்ட் 23, 2023 புதன்கிழமை

"என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 )

அன்பானவர்களே, ஒரு உணர்வுள்ள இருதயம் நமக்கு இருக்குமானால் நாமும் இன்றைய தியான வசனத்தில் தாவீது ராஜா கூறுவதுபோல கூறமுடியும். ஆண்டவரே, என் பாவம் எனக்கு முன்பாக நிற்கின்றது; நான் அதனை உணந்துள்ளேன், என்னை மன்னியும்  என்று கூற முடியும். தாவீது பாவம் செய்தபோது முதலில் அது குறித்து எந்த குற்ற உணர்வும் அவருக்கு இல்லாமலிருந்தது. ஆனால் நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் பாவங்களை அவருக்கு உணர்த்தினார். அதனை ஏற்றுக்கொண்ட தாவீது, "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." எனக் கூறுகின்றார். மட்டுமல்ல, தேவனிடம் மன்னிப்பு வேண்டி இறைஞ்சினார். இந்த 51 வது சங்கீதம் நமக்கெல்லாம் ஒரு  மன்னிப்பு வேண்டுதல் ஜெபமாக உள்ளது. 

"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."  ( நீதிமொழிகள் 28 : 13 ) எனும் வசனத்துக்கேற்ப தாவீது இரக்கம் பெற்றார். 

பாவம் செய்யாத மனிதர்கள் இல்லை. மனிதர்கள் நாம் பெலவீனமானவர்கள். இதனை தேவன் நன்கு அறிவார். எனவே உணர்வுள்ள இருதயம் நமக்கு இருக்கும்போது நாம் மன்னிப்பு வேண்டும்போது அவர் நமது பாவங்களை மன்னிக்கிறார். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." ( 1 யோவான்  1 : 9 )

அன்பானவர்களே, நாம் செய்வது தவறு அல்லது பாவம் எனும் உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். அப்படி இல்லாமல் வாழும்போது நாம் காட்டுக்கழுதைகள் போல இருப்போம். இந்த உணர்வு இல்லாமல் வாழும்போது நமது ஜெபங்களும் அனைத்து பக்திச்  செயல்களும் வீணானவைகளே. 

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 ) என்கிறார் பரிசுத்தரான கர்த்தர். 

எனவே நாம் இன்றைய வசனம்  கூறுவதுபோல ஒரு உணர்வுள்ள இருதயத்தோடு வாழவேண்டியது அவசியமாய் இருக்கிறது. பாவம் நமது ஆத்துமாவைக் கொல்லுகின்றது. உணர்வுள்ள நாம் இருதயத்தோடு நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிகையிடும்போது மன்னிப்புப் பெறுகின்றோம். மட்டுமல்ல, நித்தியஜீவன் எனும் முடிவில்லா வாழ்வுக்கும் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். எனவேதான் "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

தேவன் நமக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தரும்படி வேண்டுவோம். அப்போதுதான் நாம் தேவனிடம் பாவ மன்னிப்பு வேண்டி, அதனைப் பெற்று  நரக அக்கினிக்கு நீங்கலாகி நித்திய ஜீவனுக்கு தகுதியுள்ளவர்கள் ஆகமுடியும்.



ஆதவன் 🔥 939🌻 ஆகஸ்ட் 24, 2023 வியாழக்கிழமை

"அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 )

இந்த உலகத்தில் தவறு செய்கின்றவர்களுக்கு உலக அரசாங்கங்கள் கொடுக்கும் தண்டனைகள் கடுமையானவை. கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் போன்ற தண்டனைகள் இன்றும்கூட சில நாடுகளில் தொடரத்தான் செய்கின்றன. இந்தியாவில்கூட நீதித்துறையில் ஊழலும் லஞ்சமும் இருந்தாலும் ஓரளவு மனசாட்சியுள்ள நீதிபதிகள் இருப்பதால் பலவேளைகளிலும் தவறுக்குத் தண்டனைகள் வழங்கபடத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைய வசனம் தேவனைப்பற்றி,  "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்" என்று கூறுகின்றது. 

நமது பாவங்களை அவர் எண்ணுவாரானால் அவர் கொடுக்கும் தண்டனை எவ்வளவு பெரிதாய் இருக்கும்? ஆனால் அவர் கிருபையாய் நமது பாவங்களுக்கும் கெட்டச்  செயல்களுக்கும் தக்கதாக நமக்குச் செய்யாமல் இருக்கிறார். ஆம், "இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்..." ( எசேக்கியேல் 20 : 44 ) என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர். 

"பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது." ( சங்கீதம் 103 : 11 ) என்று வேதம் கூறுகின்றது. அப்படி இருப்பதால் அவர் நமது அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமல் இருக்கின்றார். 

யூதர்கள் இயேசு கிறிஸ்துவைக் கொடுமைப்படுத்தி, முகத்தில் காறி உமிழ்ந்து அவமானப்படுத்தி சொல்லிமுடியாத கொடூர விதமாக நடத்திச்  சிலுவையில் அறைந்து கொன்றனர். ஆனால் அவர்கள் செய்த கொடுமைக்குத் தக்கதாக அவர் அவர்களைப் பழிவாங்கவில்லை. பிதாவே, இவர்கள் தங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்; இவர்களை மன்னியும் என அவர்களது மன்னிப்புக்காக ஜெபித்தார்.    

உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாக நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று தேவன் கூறியுள்ளபடி இன்றும் சாட்சிகள் பலர் எழும்பிக்கொண்டிருக்கின்றார். வேதாகமத்தை கிழித்து எறிந்து  கிறிஸ்தவர்களை அவமானப்படுத்திய சாது சுந்தர்சிங்கைப்போல  பலர் இன்றும் மனம் மாறி சாட்சி கூறுகின்றனர். ஆம், அவர்களது செயல்களுக்கேற்ப தண்டனை அளிக்காமல் தேவன் கிருபை பாராட்டியதால் அவர்கள் கர்த்தரை அறிந்துகொண்டனர். 

அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் இப்படி நாம் செய்த பாவங்களை எண்ணிப்பார்ப்போமானால் அவரிடம் மன்னிப்பு வேண்டி அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். அப்படி நாம் வாழும்போதுதான் கர்த்தரை நாம் அறிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாகவே இறுதிவரை வாழ்ந்து மடிந்து போகிறவர்களாகவே இருப்போம்.  


ஆதவன் 🔥 940🌻 ஆகஸ்ட் 25, 2023 வெள்ளிக்கிழமை

"உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." ( சங்கீதம் 40 : 16 )

இன்றைய தியான வசனம், "உம்மைத் தேடுகிற அனைவரும்" எனும் வார்த்தைகளைக் கூறுவது நாம் கவனிக்கவேண்டிய ஒன்று. ஆம், நாம் தேவனைத் தேடுபவர்களாக மட்டுமே வாழவேண்டியது அவசியம். அப்படி வாழும்போது மகிழ்ச்சியும் சந்தோஷமும் நம்மில் தங்கியிருக்கும். ஆனால், இன்று இதற்கு மாறாக "தேவனிடமிருந்து வருவதைத் தேடுகின்றவர்களாகவே" நம்மில் பலரும் பலவேளைகளில் இருக்கின்றோம். 

ஒருமுறை நான் ஒரு ஆய்வுப்போல சிலரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். 'நீங்கள் ஏன் ஆலயத்துக்குச் செல்கின்றிர்கள் ? அல்லது ஆலயத்தில் என்ன வேண்டுதல் செய்வீர்கள்?" அன்பானவர்களே, இந்தக் கேள்விக்கு நான் கேட்ட அனைவருமே, குடும்ப ஆசீர்வாதம், நோய்களிலிருந்து விடுபட, கடன்தொல்லையிலிருந்து விடுபட, நமது திருச்சபை கட்டளைகளில் ஒன்று எனவே செல்கின்றோம் எனும் பதிலைத்தான் கூறினார்களேத் தவிர அதற்குமேல் ஒருவரும் பதிலாகக் கூறவில்லை. 

கர்த்தரைத் தேடுகிறபோதுதான் அவருக்குள் மகிழ்ந்து சந்தோஷப்பட முடியும்; அவரது  இரட்சிப்பை விரும்புகிறவர்கள் மட்டுமே தங்கள் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்ல முடியும் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

இன்று பலரும் தங்களது உலகத் துக்கத்தையே பெரிதாக எண்ணி அதனை மட்டுமே நிவர்த்திசெய்திட தேவனைத் தேடுபவர்களாக மாறிப்போனோம். ஆனால் பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார், "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." ( 2 கொரிந்தியர் 7 : 10 ) ஆம், தேவனுக்கேற்ற ஆவிக்குரிய துக்கம் நம்மிடம் ஏற்படும்போதுதான் நாம் மனம் திரும்பி இரட்சிப்பை அடையமுடியும். உலக துக்கம் மட்டுமே கொள்பவர்களாக இருந்தால் நமது ஆத்துமா மரணமடையும் என்று வசனம் கூறுகின்றது. 

இதனையே இயேசு கிறிஸ்து,  "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்று கூறினார். அது எப்படி துயரப்படுகின்றவர்கள் பாக்கியவானாக இருக்கமுடியும்?  என நாம் இதன் பொருளை அறிய எண்ணுவதில்லை. ஆம், இங்கு இயேசு கிறிஸ்து கூறியுள்ளது ஆவிக்குரிய துக்கத்தைக் குறித்துதான். அவரை வாழ்வில் அறியவேண்டும், அடையவேண்டும் எனும் ஆர்வம், அந்தத் துக்கம் நமக்குள் ஏற்படவேண்டும். 

நாம் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது அவரது பிள்ளைகளாகின்றோம். அப்போது அவர் நமது தேவைகளைச் சந்திப்பார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? ஆனால் நாமோ இதற்கு மாறாக உலகப் பொருட்களையே  முதலில் தேடுபவர்களாக இருக்கின்றோம்; அவரை விட்டுவிடுகின்றோம்.

"நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." ( 2 தெசலோனிக்கேயர் 2 : 14 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம், நாம் அவரது இரட்சிப்பைப் பெற்று மகிமையை அடையவேண்டும் இதனையே அவர் விரும்புகின்றார். அதற்கு நாம், அவரைத் தேடுபவர்களாக வாழவேண்டியது அவசியம். அவரைத் தேடும்போது அவருக்குள்  மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; அவரது இரட்சிப்பை விரும்புகிறவர்களாக நாம் மாறுவோம்.  கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்பவர்களாக இருப்போம்.



ஆதவன் 🔥 941🌻 ஆகஸ்ட் 26, 2023 சனிக்கிழமை

"கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." ( செப்பனியா 3 : 15 )

சர்வ லோகத்தையும் படைத்து ஆண்டுவரும் கர்த்தர் நம்மை நோக்கிக் கூறும் இன்றைய வார்த்தைகள் நமக்கு மிகப்பெரிய ஆறுதலையும்  தேறுதலையும் தருகின்றன. இதுவரை நாம் பல்வேறு ஆக்கினைகளுக்கு உட்பட்டிருக்கலாம், நமக்கு எதிராக உலக மனிதர்களும் சில நோய்களும் சத்துருவாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று கர்த்தர் கூறுகின்றார், "நான் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினேன்". 

அன்பானவர்களே, நாம் தேவனது வார்த்தைகளை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளும்போது அவை உண்மையிலேயே நமது வாழ்வில் செயல்புரிவதை நாம் காணலாம். இன்றைய வசனம் கர்த்தர் தீங்கை உன்னைவிட்டு விலக்குவார் என்று கூறுவதுடன்,  "ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." என்றும் கூறுகின்றது. 

அதாவது ஒரு ராஜா நம்முடன் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அல்லது நாமே ஒரு ராஜாவின் மகனாக மகளாக இருக்கிறோம் என எண்ணும்போது அது எவ்வளவு மேன்மை. ஆம்,  அதுபோல ராஜாவாகிய கர்த்தர் நம்மோடு இருப்பதால் இதுவரை நமக்கு ஏற்பட்டிருந்த சிறுமையினையும் நோய்களையும் பிரச்சனைகளையும் நம்மைவிட்டு அகற்றுவது மட்டுமல்லாமல் இனித்தீங்கைக் காணாதிருக்கும்படி அருள்புரிவார். 

இந்த உலகத்தில் நோய்கள், பிரச்சனைகள், துன்பங்கள் அனைவருக்கும் உண்டு. தேவ பிள்ளைகளான நமக்கும் உண்டு ஆனால் கர்த்தர் நம்மோடு இருப்பதால் அவற்றை எளிதாகக் கடந்துசெல்ல உதவிடுவார். 

இன்றைய வசனத்தைக் கூறும் செப்பனியா தீர்க்கதரிசி தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார், "........உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( செப்பனியா 3 : 20 )

அதாவது கர்த்தர் நமது வாழ்வில் அதிசயமாகச் செயல்படும்போது மற்ற மக்களிடமிருந்து நாம் வேறுபட்டு காணப்படுவோம். மட்டுமல்ல, "சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."

ஒரு ராஜாவின் பிள்ளை எங்குசென்றாலும் அதற்குத் தனி அங்கீகாரம் கிடைப்பதுபோல கர்த்தருக்குள் வாழும் நம்மையும் தேவன் மற்ற மக்களுக்குமுன் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பார். 

அன்பானவர்களே, நம்மேல் இவ்வளவு  அன்பு கொண்டுள்ள தேவனுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியமென்று எண்ணிப்பாருங்கள். அற்ப உலக இன்பங்களுக்காக நாம் அவரை உதாசீனப்படுத்தி பிரிந்திடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். அப்படி வாழும்போது வாக்குமாறாத தேவன் தான் கூறியபடி தொடர்ந்து நம்மை சகல ஜனங்களுக்குள்ளும் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைத்திடுவார்.  அப்போது நம்மைக் காணும் பிறருக்கு நாமே தேவ சாட்சியாக இருப்போம். 



ஆதவன் 🔥 942🌻 ஆகஸ்ட் 27, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." ( பிரசங்கி 5 : 19 )

மனிதர்கள் பலரும் பெரும்பாலும் மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன என்பதை அறியாமல் இருக்கின்றனர். அதிகப்படியான செல்வம், சொத்துக்கள், புகழ், அதிகாரம் இவை இருப்பதே ஆசீர்வாதம் என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இந்த உலகத்திலே நாம் பலவேளைகளில் பார்ப்பது,  எல்லா செல்வமும் பெற்றிருக்கும் பலர் தாங்கள் நினைத்ததை உண்ணவும் குடிக்கவும் முடியாமல் இருக்கின்றனர். 

நீதிமொழிகள் நூலில் ஒரு அருமையான வசனம் உண்டு. "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) அதாவது கர்த்தர் தரும் ஆசீர்வாதம் முழுமையான ஆசீர்வாதமாக இருக்கும். வேதனை இருக்காது. எந்தத் தாயும் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவைப் பரிமாறிவிட்டு கூடவே நஞ்சை ஊட்டுவாளா? அதுபோலவே கர்த்தர் ஆசீர்வாதத்தைத் தரும்போது அதனை நாம் முழுமையாக அனுபவிக்க கிருபையும் செய்வார்.

இன்றைய வசனம், "ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பெற்றுக்கொண்ட பொருளாதார ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்க தேவனுடைய கிருபை அவசியம். 

இன்று தேவனிடம் வேண்டுதல் செய்யும்போது பலரும் ஆசீர்வாதங்களை மட்டுமே கேட்கின்றனர். கிறிஸ்தவ பிரசங்கிகளும் தேவ ஆசீர்வாதம் என்று பொருளாதார ஆசீர்வாதங்களையே முன்வைக்கின்றனர்.  காரும் பங்களாவும் கைநிறைய பணமும் இருந்தாலும் அதனை அனுபவிக்க தேவ கிருபை அவசியம். லட்சங்களை சம்பாதித்து மருத்துவமனைகளுக்குச் செலவிட்டு என்ன பயன்? 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கு என்ன தேவையோ அதனை தேவன் தருவார். மட்டுமல்ல, அப்படி அவர் தரும் ஆசீர்வாதத்தை நாம் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் கிருபை செய்வார். 

"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது...." ( யாக்கோபு 1 : 17 )   என்று வேதம் கூறுகின்றது. பிதாவாகிய தேவனே நமக்கு நன்மையானவைகளைத் தருகின்றார். அப்படி அவர் தரும் எதுவும் நன்மையானதாக, பூரணமானதாக இருக்கும்.  நாம் நமது ஜெபங்களில் இதனையே நாடுவோம். பிதாவே, பூரணமான நன்மைகளினால் என்னை நிரப்பும் என்று வேண்டுதல் செய்வோம். அவர் தரும் நன்மையில் புசிக்கவும், நம் பங்கைப் பெறவும், மகிழ்ச்சியாயிருக்கவும் நமக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய கிருபையே. 

   

ஆதவன் 🔥 943🌻 ஆகஸ்ட் 28, 2023 திங்கள்கிழமை

"ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக  அவன் இன்னும் அறியவில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 2 )

சிலர் என்னிடம் பலவேளைகளில் சொல்லுவது,  "நாங்களெல்லோரும் பராம்பரிய கிறிஸ்தவர்கள். நீங்கள் எங்களுக்கு ஏன் சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். கிறிஸ்துவை அறியாத மக்களிடம்போய் அறிவிக்கவேண்டியதுதானே? இப்படி கூறுபவர்களுக்கு அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்ற பதில்தான் இன்றைய வசனம். ஆம், நாம் எல்லாம் அறிந்துவிட்டோம் என எண்ணிக்கொள்வதே அறியாமையின் வெளிப்பாடுதான். 

பல்வேறு பாரம்பரியங்களுக்கும் பாவங்களுக்கும்  அடிமையாகி மெய்த்தேவனை அறியாமலிருந்த யூதர்கள் இயேசு கிறிஸ்துவிடம் இதனைத்தான், "நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை;" ( யோவான் 8 : 33 ) என்று கூறினர். ஆம் அவர்கள் அறியவேண்டியதை அறியவேண்டியபடி அறியவில்லை. இதுபோலவே இன்றும் பல பாரம்பரிய கிறிஸ்தவர்கள் கூறிக்கொள்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் சத்தியத்தை அறியாதபடி சாத்தான் நம்மைப் பலவேளைகளில் தடைசெய்துள்ளான். எனவே நாம் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடித்தபடி நாம் அடிமைகளாய் இருப்பதை உணராமலிருக்கின்றோம். பியோடெர் டோஸ்டோயுவஸ்கி (Fyoder Dostoyevesky) எனும் அறிஞர் தனது நூலில், "ஒரு கைதியை சிறையிலிருந்து தப்பவிடாமல் செய்யச்  சிறந்த வழி அவன் தான் சிறையிலிருப்பதை உணர்ந்துகொள்ளாமல் இருக்கச்செய்வதே" என்று கூறுகின்றார்.

ஆம், பாவங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அடிமையாகி அப்படி தாங்கள் அடிமைகளாக இருப்பதையே பலர் உணராமலிருக்கின்றனர். அப்படி உணராமல் இருப்பதால் அதே அடிமைத்தனத்தில் தொடருகின்றனர். தங்கள் அடிமைத்தனத்தை  உணரும்போதுதான் விடுதலையும் மெய்த்தேவனை அறியும் வாய்ப்பும் நமக்கு  உண்டு. 

தேவன் நமது பாவத்தை மன்னித்த நிச்சயத்தைப் பெரும்போதுதான் நாம் தேவனை உண்மையாய் அன்புகூர முடியும். அப்படி "தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்." ( 1 கொரிந்தியர் 8 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

மதவெறியுள்ளவன் தேவனை அறியமுடியாது. அதுபோல சபை வெறிகொண்ட கிறிஸ்தவன் கிறிஸ்துவை அறியமுடியாது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியவேண்டுமானால் மற்ற எல்லாவற்றையும் நஷ்டமாகவும் குப்பையாகவும் நாம் எண்ணி வாழவேண்டும். அவரையே முற்றும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனையே, "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3 : 8 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக  அவன் இன்னும் அறியவில்லை. நாம் இன்னும் எதனையும் அறியவில்லை எனும் வெறுமை உள்ளம் நமக்கு வேண்டும். வெறும் குடத்தில்தான் நீரைச்  சேகரிக்கமுடியும். அந்தக் குடம் அழுக்கும் அவலட்சணமான பொருளாலும் நிறைந்திருக்குமானால் அதில் சுத்த நீரைச் சேகரித்து வைக்கமுடியாது. 

ஆண்டவரே, என்னையே நான் வெறுமையாக உம்மிடம் ஒப்படைக்கிறேன்; உமது ஆவியால் என்னை நிரப்பும். உம்மை அறியும் அறிவால் என்னைத்  திருப்தியாக்கும் என வேண்டுவோம். நாம் எல்லாம் அறிந்தவர்களென்று  எண்ணிக்கொள்வோமானால் ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக  இன்னும் அறியவில்லை என்றுதான் பொருள். 



ஆதவன் 🔥 944🌻 ஆகஸ்ட் 29, 2023 செவ்வாய்க்கிழமை

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 12 )

ஆவிக்குரிய வாழ்க்கை அனுபவங்கள் மிகப்பெரிய கடல் போன்றது.  அதனை முற்றிலும் அறிய மனிதர்களால் கூடாது. ஆனால் கிறிஸ்துவால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அழைக்கப்பட்ட நமக்கு அதனை அறியவேண்டும் எனும் ஆர்வம் இருக்கவேண்டியது அவசியம். ஆவிக்குரிய அனுபவங்களில் முற்றிலும் தேறினவர்கள் இல்லை. 

எனவேதான், நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன் என்று கூறுகின்றார். "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3 : 15 )

அன்பானவர்களே, இன்று பொதுவாகத்   தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று  கூறிக்கொள்ளும் பலருக்கும் இந்த எண்ணமும் ஆவிக்குரிய வாழ்கையினைப்பற்றிய உணர்வும் இல்லை. மாறாக அற்பமான மதவெறி மட்டும் அதிகமாக இருக்கின்றது. (பெந்தெகொஸ்தே சபைகள் உட்பட)  அப்போஸ்தலரான பவுல் மிகப்பெரிய அப்போஸ்தலராக இருந்தும், தேவனால் மிக அதிகமாக வல்லமையாய்ப் பயன்படுத்தப்பட்டிருந்தபோதும் அவரே அதை நான் இன்னும் அடையவில்லை என்று இன்றைய வசனத்தில் கூறுகின்றார். அப்படியானால் நாம் எம்மாத்திரம்?

கிறிஸ்து இயேசுவே நமது பந்தயப்பொருள்;அவரே நமது இலக்கு. அந்த இலக்கை அடையவேண்டியதே ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கவேண்டிய உணர்வு. அந்த இலக்கை நோக்கி தான் பயணிப்பதாக அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 14 ) என்கின்றார். 

நமக்கு எந்த அளவு ஆர்வமிருக்கின்றதோ அதன் அடிப்படையில்தான் தேவன் நமக்கு ஆவிக்குரிய ரகசியங்களை வெளிப்படுத்தித் தரமுடியும். ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றிய ஆர்வமும் அதன் உபயோகமும் தெரியாத மனிதனிடம் அந்தப் பொருளை நாம் கொடுப்போமானால் அவனுக்கு அதன் மதிப்பு தெரியாததால் அதனைப் பெரிதாக எண்ணமாட்டான். அந்த பொருள் தனக்குக் கிடைத்தது அவனுக்கு மேன்மையாகத் தெரியாது.  எனவே, ஆர்வமில்லாதவர்களுக்கு தேவன் மேன்மையான காரியங்களை வெளிப்படுத்துவதில்லை.

மாறாக, ஒரு பொருள் நமக்கு மனத்துக்குப் பிடித்திருந்தால் அதனை எப்படியாவது பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். அப்படியுள்ள மனிதர்களுக்கு தேவனும் அதிகமான அனுபவங்களைக் கொடுத்து வழி நடத்துவார். அப்படி ஏற்பட்ட அனுபவத்தையே அப்போஸ்தலரான பவுல்,  "அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." என்று குறிப்பிடுகின்றார். 

"ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்" என்கின்றார் பவுல். இந்தச் சிந்தனையே நாம் தேறினவர்கள் என்பதற்கு அடையாளம். ஆவிக்குரிய அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் தேறினவர்களே. வெறுமனே வழிபாட்டுக்  கிறிஸ்தவர்களாக இல்லாமல் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 

எனவே, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி நமது ஆவிக்குரிய ஓட்டத்தைத் தொடருவோம்.  



ஆதவன் 🔥 945🌻 ஆகஸ்ட் 30, 2023 புதன்கிழமை

"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )

இந்த உலகத்தில் பொருள் சம்பாதிக்கவேண்டும் எனும் எண்ணத்திலும் எப்படியாவது வாழ்க்கையில்  முன்னேறி விடவேண்டுமென்னும் எண்ணத்திலும் மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வீட்டையும் மனைவி பிள்ளைகளையும் விட்டு பொருள்தேட இரவும் பகலும் உழைக்கும் மனிதர்களை நாம் இந்த உலகத்தில் பார்க்கின்றோம். ஆனால், அப்போஸ்தலரான பவுல், மனிதனின் இந்த முயற்சிகள் அற்ப பிரயோஜனமுள்ளது என்று கூறுகின்றார். 

இப்படிக் கடினமாக உழைப்பதால் ஒருவேளை நாம் வாழ்வில் முன்னேறி வீடு, கார், சொத்துசுகங்கள், புகழ் இவற்றைச் சம்பாதிக்கலாம். ஆனால் இவை அற்ப பிரயோஜனமுள்ளது. உலகத்தின் பார்வையில் இவை பெரிதாகத் தெரிந்தாலும் தேவனின் பார்வையில் இவை அற்பமானவையே. 

இது மட்டுமல்ல, தங்களது உடலைப் பேணுவதற்குச் சிலர் கடுமையான பயிற்சிகளையும் உணவுக்கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றனர். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் தேவையே. ஆனால் இவைகளையே நாம் முற்றிலும் சார்ந்துவிடக்கூடாது. இத்தகைய முயற்சிகள் தேவ பக்தி முயற்சிகளுக்கு அடுத்தபடியாக இருந்தால் தான் நல்லது. உடற்பயிற்சி மட்டும் எவரையும் காப்பாற்றிவிடாது.  எனவேதான், தேவபக்தியானது எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது என்று இன்றைய வசனம் கூறுகின்றது.

தேவ பக்திக்கென்று நாம் எடுக்கும் முயற்சிகள் மற்றும்  தேவனோடு ஐக்கியம் ஏற்படுத்த நாம் கொள்ளும் முயற்சிகள் இந்த உலக வாழ்க்கைக்கும் இனி வரவிருக்கும் மறுஉலக வாழ்க்கைக்கும் பிரயோஜனமுள்ளதாய் இருக்கின்றது. இதனையே தனது சீடனான தீமோத்தேயுக்கு எடுத்துச் சொல்கின்றார் பவுல். தொடர்ந்து, "உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்." ( 1 தீமோத்தேயு 6 : 7 ) என நினைவுறுத்துகின்றார்.

அதாவது சரீர முயற்சியில் எவ்வளவு நாம் சம்பாதித்தாலும் அவை இந்த உலகத்தைத் தாண்டி நம்மோடு வரப்போவதில்லை. ஆனால் இந்த உலக மக்கள் பண ஆசையால் இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் உபயோகமாகவுள்ள தேவ பக்திக்குரிய செயல்களை விட்டுவிடுகின்றனர். 

இப்படி இந்த உலகத்துச் செல்வத்துக்காக மட்டுமே நாம் உழைத்துக்கொண்டிருப்போமானால் நாம் பரிதபிக்கத் தக்கவர்களாகவே இருப்போம். ஆம்,  "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )

அன்பானவர்களே, இதனைப் படிக்கும்போது சிலர் நாம் உழைக்கக்கூடாதா? உடற்பயிற்சிகள் செய்யக்கூடாதா? என எண்ணலாம். நாம் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். உழைக்காதவன் உண்ணலாகாது என்றுதான்  வேதம் கூறுகின்றது. ஆனால், உழைப்பை நம்புவதைவிட  உழைப்பதற்கான ஆற்றலையும் பலத்தையும் நமக்குத் தந்துள்ள தேவனை முதலில் நம்பி அவருக்கு நாம் முதலிடம் கொடுக்கவேண்டும். 

ஆம், நமது சரீரமுயற்சி தேவனது பார்வையில் அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.



ஆதவன் 🔥 946🌻 ஆகஸ்ட் 31, 2023 வியாழக்கிழமை

"உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்." ( ரோமர் 5 : 3, 4 )

இந்த உலகத்தில் பாடுகளும் துன்பங்களும் பிரச்சனைகளும் எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால் நாம் துன்பங்களைக்கண்டு அஞ்சி ஓடினாலோ அல்லது தேவனைவிட்டு பின்மாறினாலோ நாம் நமது இலக்கை அடைய முடியாது. இதனை வலியறுத்தவே பவுல் அப்போஸ்தலர் இதனை எழுதுகின்றார்.

எவ்வளவோ ஜெபித்தாலும் கஷ்டங்கள் மாறவில்லை, துன்பங்கள் தொடருகின்றன எனச் சிலர் விரக்தி அடைகின்றனர். வேறு சிலரோ, "எல்லாம் கட்டுக்கதை....கடவுளை நம்பாதவர்களும் ஜெபிக்காதவர்களும் நன்றாக இருக்கின்றனர்; நாம் ஏன் இன்னும் கிறித்தவ விசுவாசத்தில் நிலைத்துருக்கவேண்டும்?" என வெறுத்துப்போய் கூறுகின்றனர்.  அல்லது, ஜெபிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை, நடப்பது நடந்தே தீரும் என போலி வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால் பவுல் அப்போஸ்தலர், நமது வாழ்வில் வரும் உபத்திரவங்கள் நமது பொறுமையை வளர்க்க உதவுகின்றது என்கின்றார். அது நமது விசுவாசத்தைச் சோதிக்க தேவன் வைக்கும் சோதனை, அதாவது பரீட்சை என்று கூறுகின்றார். எனவேதான் நாம் சோதனைகளை முறுமுறுப்பில்லாமல் சகிக்கும்போது அந்தப் பொறுமை பரீட்சையையும், அந்தப்  பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, அப்படி உபாத்திரவங்களில்  மேன்மைபாராட்டுகிறோம் என்கின்றார். 

தொடர்ந்து எழுதும் அப்போஸ்தலரான பவுல் அடுத்த வசனத்தில், நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றிருப்பதால்  பரிசுத்த ஆவியானவரே நம்மை நடத்துவார். அவர்மூலம் தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் நிரம்பியிருக்கும். எனவே நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படவிடாது. தேவன் நிச்சயமாக நம்மை விடுவிப்பார் என்கின்றார். இதனையே,  "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." ( ரோமர் 5 : 5 ) என்கின்றார். 

அதாவது, நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போதும் துன்பங்கள் சோதனைகள் வருகின்றன என்றால், இந்தத் தேர்வின்மூலம்  தேவன் நமக்கு ஏதோ நல்லது செய்யபோகின்றார் என்று உறுதியுடன் அமர்ந்திருந்து அப்படி உபாத்திரவங்களில்  மேன்மைபாராட்டுகிறோம் என்கின்றார். 

அப்போஸ்தலரான யாக்கோபும், "இதோ, பொறுமையா யிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 ) என யோபு அடைந்த துன்பங்களையும் தேவன் இறுதியில் அவரை துன்பங்களிலிருந்து விடுவித்து ஆசீர்வதித்ததையும் நமக்கு நினைவூட்டி துன்பகளில்  பொறுமையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார். 

அன்பானவர்களே, இவை கடினமான செயலாக இருந்தாலும் நாம் துவண்டுவிடவேண்டாம். துன்பங்களில் ஜெபிக்க இயலாவிட்டாலும் தேவனை முறுமுறுக்காமல் அமைதியாக இருப்போம். அதுவே விசுவாசம்தான். "நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்" ( சங்கீதம் 4 : 4 )

No comments: