📆 மே 01, 2026 வெள்ளி
"தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்." ( சங்கீதம் 18 : 25, 26 )
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரை அங்கு பணிபுரியும் எல்லா ஆசிரியர்களுக்கும் அங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறிட முடியாது. ஒவ்வொருவரும் அவரை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்ப்பதுண்டு. சிலர் ஹிட்லராக, கொடுங்கோலனாகவும், வேறு சிலர் நல்ல நிர்வாகியாகவும், திறமைசாலியாகவும் பார்ப்பதுண்டு. அவருக்குத் தங்களின் மனதின் எண்ணப்படி பல்வேறு பட்டப்பெயர்களையும் வைப்பதுண்டு.
அதாவது, நல்ல திறமையான ஆசிரியர்களுக்கு அந்தத் தலைமை ஆசிரியர் நல்லவராகவும், ஒழுங்காக பாடம் நடத்தாமல் அடிக்கடி விடுமுறையெடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர் கெட்டவராகவும், முரட்டு குணமுள்ளவராகவும் தோன்றுவார். இதுபோலவே மாணவர்களிலும் சிறப்பாக படிக்கும் மாணவர்கள் அவரை நல்லவராகவே பார்ப்பார்கள்.
இதுபோலவே தேவனும் மக்களது மனநிலைக்கேற்ப அவர்களுக்குத் தோன்றுவார். இரக்கமுள்ளவர்களுக்கு அவர் இரக்கமுள்ளவராகவும் உத்தம வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அவர் உத்தமராகவும்; புனிதர்களுக்கு அவர் புனிதராகவும், மாறுபாடுள்ள கேடுகெட்டவர்களுக்கு அவர் மாறுபாடு உள்ளவராகவும் தோன்றுவார். அதாவது அவரவர் மனநிலைக்கேற்பத்தான் தேவன் ஒவ்வொவருவருக்கும் தோன்றுவார்.
ஆனால் பலரும் இதனை எளிதில் உணர்ந்துகொள்வதில்லை. எனவேதான் துன்மார்க்கமாக நடக்கும் மனிதன் தனக்குக் கேடானவை நடக்கும்போது தனது தவறை உணர்ந்துகொள்ளாமல், தேவனைக் குற்றபடுத்துபவனாக இருப்பான். "கடவுளுக்கு எங்கே கண் இருக்கிறது? அவருக்குக் காதும் கேட்பதில்லை. எனவே, என் ஜெபத்தை அவர் கேட்பதில்லை" எனச் சிலர் விரக்தியில் கூறுவதுண்டு. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கை நிலையை சீர்தூக்கிப் பார்க்க மறந்துவிடுகின்றனர்.
அன்பானவர்களே, தேவனிடம் எந்த மாறுபாடும் இல்லை. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று வாசிக்கின்றோம். நம்மிடம் அவர் மாறுபாட்டைக் காட்டுகின்றாரென்றால் நம்மிடம் உள்ள குறைகளை நாம் கண்டறிந்துத் திருத்திக்கொள்ளவேண்டியது அவசியம்.
இன்றைய தியான வசனத்துக்கு இணையாக இயேசு கிறிஸ்து கூறினார், "ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." ( மத்தேயு 7 : 2 ) ஆம், நாம் அளக்கும் அளவின்படியே தேவன் நமக்கு அளப்பார்; நாம் தயவுள்ளவராக, உத்தமர்களாக புனிதர்களாக இருந்தால் அதற்கேற்பவும் நமது செயல்கள் அவருக்கு எதிராக மாறுபாடுள்ளவையாக இருக்குமானால் அதற்கேற்ப மாறுபாடுள்ள பலனையும் அவரிடமிருந்து பெறுவோம்.
ஒரே விதமான ஒளியைத்தான் நாம் அனைவரும் சூரியனிடமிருந்து பெறுகின்றோம். ஆனால், கருப்புக்கண்ணாடி அணிந்து பார்த்தால் கருப்பாகவும், பச்சை நிறக் கண்ணாடி அணிந்து பார்த்தால் பச்சையாகவும்தான் தெரியும். கர்த்தர் இரக்கமும், கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவர். இதனை அவர் மோசேயிடம் கூறவில்லையா? "கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்." ( யாத்திராகமம் 34 : 6 )
நமக்கு அவர் எப்படித் தோன்றுகின்றார்? தயவுள்ளவராகவா, இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் உள்ளவராகவா? இல்லை மாறுபாடுள்ளவராகவா? தேவன்மேல் பழியைப் போடாமல் நம்மை நாமே நிதானித்துப்பார்த்து நம்மைத் திருத்திக்கொள்வோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1911
"விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்." ( 2 கொரிந்தியர் 9 : 10 )
நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்றப் பிரதிபலன்களைக் கொடுக்கின்றவர் தேவனே. ஒரு விவசாயி விதைக்கின்றானென்றால் அந்தப்பயிர் விளைந்து அவனுக்கு உணவையும் மீன்டும் விதைப்பதற்கான விதைகளையும் கொடுக்கவேண்டியது அவசியம். அப்படிச் செய்யவேண்டியது தேவன்தான். அவரே அதைப் பெருகப்பண்ணி, விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
இதுபோலவே நாம் செய்யும் நல்லகாரியங்களுக்கான பிரதிபலன் தேவனால் அளிக்கப்படுகின்றது. இன்றைய தியான வசனத்தின் முன்னர் உள்ள வசனங்கள் இதனையே எடுத்துக்கூறுகின்றன.
"மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்." ( 2 கொரிந்தியர் 9 : 8, 9 ) என்று நாம் வாசிக்கின்றோம்.
அதாவது, நாம் ஒரு தர்ம காரியத்துக்கு உதவுவதும் நற்செயல்கள் செய்வதும் நாம் விதைக்கும் விதைகள். அப்படி நாம் விதைக்கும்போது, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் நமக்கு வேண்டிய விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, நமது நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்." ( லுூக்கா 6 : 38 )
இன்றைய தியான வசனத்தை அப்போஸ்தலரான பவுல் குறிப்பாக பரிசுத்தவான்களுக்கு கொடுத்தல் பற்றி கூறும்போதுதான் கூறுகின்றார். ( 2 கொரிந்தியர் 9 : 1 ) அதாவது, விசுவாசமார்க்கத்தில் இருக்கும் ஏழைகளுக்குக் கொடுப்பது பற்றி கூறும்போது கூறுகின்றார். ஆனால் பழைய ஏற்பாடுபோல பத்தில் ஒன்று கொடுக்கவேண்டும் என்று கூறாமல், நமது மனதில் நாம் எண்ணியுள்ளபடி மன மகிழ்ச்சியுடன் கொடுக்கவேண்டியது அவசியம் என்கின்றார். "அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 9 : 7 )
ஆனால் நாம் இப்படிக் கொடுப்பதால் தேவன் நமக்குப் பலமடங்காகத் திருப்பித் தருவார் என்று எதிர்பார்ப்புடன் கொடுக்காமல் உண்மையான அன்புடன் கொடுக்கவேண்டியது அவசியம். அப்படியல்லாமல் நாம் பிரதிபலனை எதிர்பார்த்துக் கொடுப்போமென்றால் அதனால் எந்தப் பயனும் இருக்காது. சாதாரண தர்ம காரியம்தான்; ஆனால் தேவன் அதற்குள் பல நிபந்தனைகளை வைத்துள்ளார். இதனை உணர்ந்தவர்களாக நாம் உதவிகள் செய்யவேண்டியது அவசியம்.
"எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை." ( 1 கொரிந்தியர் 13 : 3 ) என்று கூறியுள்ளபடி நாம் செய்யும் தர்ம காரியங்கள் அன்பினால் ஏவப்பட்டுச் செய்யப்படுபையாக இருக்கவேண்டியது அவசியம்.
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் நாம் செய்யும் அன்புச் செயல்களுக்கேற்ப நமக்குப் பிரதிபலனைத் தருவார். விதை விதைக்கும் விவசாயிக்கு அதனைப் பெருகப்பண்ணுவதுபோல நமக்கு அவர் நமது வாழ்வில் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1912
📆2026 மே 03, ஞாயிறு
"நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து." ( லுூக்கா 22 : 32 )
கிறிஸ்துவின் சுவிசேஷத்தை மக்களுக்கு அறிவிக்குமுன் நாம் முதலில் கிறிஸ்தவ விசுவாசத்தில் பலப்படவேண்டியது அவசியம். அல்லாவிட்டால் நமது சுவிசேஷ அறிவிப்புகள் எதார்த்தத்தைவிட்டு விலகி சாதாரண ஒரு அரசியல்வாதியின் பேச்சுபோல ஆகிவிடும். பல கிறிஸ்தவ ஊழியர்கள் இப்படிச் சரியான ஆத்தும குணமடைவதற்குமுன் மற்றவர்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்க முற்படுகின்றனர். இதனால் தங்களுக்கும் தங்களது வார்த்தைகளைக் கேட்பவர்களுக்கும் சிலவேளைகளில் கேடு வருவித்துக்கொள்கின்றனர்.
எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கிறிஸ்துவை அறிவிக்க அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்குப் புறப்பட்டுச் செல்வார். குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக கிராமங்களுக்குச் சென்று ஊழியம் செய்து வந்தார்.
ஆனால் இவரது சொந்த ஊரில் சாட்சியற்ற வாழ்க்கைதான் வாழ்ந்தார். சீட்டு நடத்துவது, வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்ற செயல்களைச் செய்துவந்தார். அதாவது, கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு விரோதமான செயல்பாடுகளைத்தான் செய்துவந்தார். ஆனால் அவ்வப்போது நற்செய்தி அறிவிக்க வெளி மாவட்டங்களுக்குச் சென்றுவிடுவார். ஒருமுறை அவரிடம், "நீங்கள் செய்யும் தொழிலுக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை. முதலில் உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள்" என்று கூறினேன்.
அவர் சம்மதிக்கவில்லை. தான் செய்வது சரிதான் என்று சாதித்தார். "இது நான் செய்யும் தொழில்; இதற்கும் நான் நற்செய்தி அறிவிப்பதற்கும் சம்பந்தமில்லை" என்று கூறினார். மட்டுமல்ல, தொடர்ந்து அவரிடம் பேசியபோது, பிரபல ஊழியர்களைப்பார்த்து தானும் அவர்களைப்போல பிரபலமானவராக மாறவேண்டும் என்று உள்ளத்தில் எண்ணுவது புரிந்தது. ஆனால் பரிதாபம் என்னவென்றால் திடீரென்று ஒருநாள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இன்றைய தியான வசனம், தலைமை அப்போஸ்தலர் பேதுருவைச் சாத்தான் சோதிக்க கிறிஸ்துவிடம் அனுமதிகேட்டபோது இயேசு கிறிஸ்து அவரை நோக்கிக் கூறிய வார்த்தைகளாகும். ஆண்டவர் இயேசு பேதுருவைச் சோதிக்கச் சாத்தானுக்கு இடம்கொடுக்கவில்லை. காரணம், தந்திரமான சாத்தானுக்கு இடங்கொடுத்தால் அவன் பேதுருவின் விசுவாசத்தைக் கெடுத்துவிடுவான் என்று இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார்.
ஆம் அன்பானவர்களே, நமது விசுவாசத்தை சீர்குலைக்க சாத்தான் பல்வேறு வகைகளில் முயலுவான். பண ஆசை, புகழாசை, பெருமை இவைகளை நமக்குமுன் கொண்டுவருவான். அவற்றை முதலில் நாம் மேற்கொள்ளும் பலமடைந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவோடு இரவும் பகலும் உடனிருந்து அவரோடு உண்டு குடித்து வாழ்ந்த பேதுருவையே சாத்தான் சோதிக்க எண்ணுவானென்றால் நாமெல்லாம் அவனுக்கு எம்மாத்திரம்?
எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 11 12 ) என்று கூறுகின்றார்.
அன்பானவர்களே, பேதுருவுக்காக இயேசு கிறிஸ்து வேண்டுதல் செய்ததுபோல நாமும் நமக்காகவும் நற்செய்தி அறிவிக்கும் பிறருக்காகவும் வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். அத்துடன் அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆவிக்குரிய போர் ஆயுதங்கள் ( எபேசியர் 6 : 14-17 ) நம்மிடம் மழுங்கிப்போகாமல் சரியாக இருக்கின்றதா என்றும் உறுதி செய்துகொள்ளவேண்டும். அதற்கு முதலில் கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றியவர்களாக நாம் பலப்படவேண்டும்.
இப்படி நாம் பலப்பட்டுக் குணப்பட்டபின்பு அடுத்தவரைக் குணப்படுத்த சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் மாயக்காரர்களாகவே இருப்போம்; நாம் அறியாத கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க முயலும் சாதாரண மதவாதியாகவே இருப்போம். இயேசு கிறிஸ்து கூறினார், "மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." ( மத்தேயு 7 : 5 )
நம்மை நாமே சோதித்துப்பார்த்து நமது கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போட வகைப்பார்ப்போம். மாய்மால வாழ்க்கையை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு பின்னர் கிறிஸ்துவை அறிவிக்கும் பணியினைத் தொடர்வோம். கிறிஸ்துவை அறிவிப்பது என்பது வேதாகமத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக அலைவதும், பிரசங்கம் செய்வதும் மட்டுமல்ல, நமது வாழ்க்கை மூலம் அவரை அறிவிப்பதும் நற்செய்தி அறிவித்தலே. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவர்கள் என்று பெயருக்கு வாழாமல் சீடத்துவ கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முயலுவோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1913
📆2026 மே 04, திங்கள்
"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது." ( ஏசாயா 29 : 13 )
இன்று ஆலயங்களிலும், கிறிஸ்தவ கூடுகைகளிலும், கன்வென்க்ஷன்களிலும் கூட்டத்துக்கு குறைவில்லை. எங்கும் பல ஆயிரம் மக்கள் கூடுகின்றனர். இதனால் இன்று நாட்டில் எழுப்புதல் வந்த்துவிட்டது என்று சில ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கூட்டமும் ஜெபங்களும் உண்மையில் மக்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிதான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
அன்பானவர்களே, இன்று ஆலயங்களில் கூடும் கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்மையில் தேவனுக்காக கூடுபவர்களாக இருப்பார்களானால் மிகப்பெரிய வாழ்க்கை மாற்றத்தை நாம் இவர்களிடம் காண முடியும். அது நாட்டிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் தங்களது உலகத் தேவைகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் கூடுகின்ற மக்களாகவே இருக்கின்றனர். எனவே, ஆலய ஆராதனைக்குப்பின் இவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றமுமின்றி மற்ற மனிதர்களைப்போலவே வாழ்கின்றனர். மட்டுமல்ல, பல்வேறு ஏமாற்று, பித்தலாட்டம், கையூட்டு வாங்குவது போன்ற செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
இது இன்று நேற்றல்ல, எசாயா தீர்க்கத்தரிசியின் காலத்திலேயே இருந்த நடைமுறைதான். அன்றும் மக்கள் தேவனுக்கென்று மாடுகளையும் ஆடுகளையும் பலியிட்டனர், காணிக்கைகள் செலுத்தினர், தேவ சந்நிதியில் தூபம் காண்பித்து ஆராதித்தனர். ஆனால் அவர்களது வாழ்க்கையோ கேடுகெட்டதாகவே இருந்தது.
இதனையே ஏசாயா, "மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது." ( ஏசாயா 66 : 3 ) என்று கூறுகின்றார்.
மேற்படி வசனத்தில் ஏசாயா, இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள் என்கின்றார். அதாவது அவர்கள் இப்படிப் பலி செலுத்தினாலும் தேவ வழியையல்ல, தங்களது மனதின் வழியையே தெரிந்துகொள்கின்றார்கள் என்கின்றார். மேலும், இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது என்கின்றார். ஆம், இத்தனை பலிகளையும் ஆராதனைகளையும் காணிக்கைகளையும் செலுத்தியும் தொடர்ந்து தங்கள் பாவ வழிகளிலேயே விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர் என்கின்றார்.
ஆம் அன்பானவர்களே, மக்கள் வாயினால் கர்த்தரிடம் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் ஆராதிக்கின்றார்களேத் தவிர அவர்கள் இருதயம் கர்த்தருக்குத் தூரமாகவே இருக்கின்றது. அவர்கள் பயபக்தியுடன் ஆலயங்களில் வந்து வழிபட்டாலும் அது தேவனை அறிந்ததனால் வந்த தேவ பயமல்ல, மாறாக மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. அதாவது சிறு குழந்தைகளாக இருக்கும்போதே பெற்றோர்கள் கடவுள் பயத்தைபற்றிச் சொல்லிக்கொடுத்ததால் பயப்பட்டு ஆராதிக்கின்றார்கள்.
இதற்கு மாறாக உண்மையாகவே தேவனை அறிந்த மனிதர்களுக்கு ஆவியானவரே தேவனைப்பற்றிய அறிவை உணர்த்துவார். அவர்கள் வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக அல்லாமல் தேவனை ஆத்துமபூர்வமாக அறிந்து ஆராதிப்பவர்களாக இருப்பார்கள். அப்படி ஆராதிப்பவர்களிடம் மட்டுமே சாட்சியுள்ள வாழ்க்கையும் இருக்கும்.
வெறுமனே வாயினால் ஆராதித்து வாழாமல் தேவனை மெய்யாக அறிந்து உணர்ந்து அன்பு செலுத்துபவர்களாக வாழும்போது நமது ஆராதனை வித்தியாச ஆராதனையாக இருக்கும். அத்தகைய ஆராதனை செய்யும்போது நமது வாழ்க்கையும் மாறுபட்ட வாழ்க்கையாக இருக்கும். தேவனை அறிந்து, அவரையே வாழ்வில் பெற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்களாக வாழ்வோம்; அதற்காகவே அவரை ஆராதிப்போம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1914
"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. ஏனெனில் இதனை இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு கட்டளையாகக் கூறினார். "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம்.
பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரே தவிர மதம் மாற்றுவதில்லை. ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர திணிக்கக்கூடாது. வலுக்கட்டாயமாக எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. அப்படி ஒருவர் கிறிஸ்தவராக வருவாரென்றால் அவர் பெயர் கிறிஸ்தவராகவே இருப்பார். இன்று சிலர் திருமணத்துக்காக இப்படி மதம் மாறி கிறிஸ்தவர்கள் ஆகின்றனர்.
இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான். அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:-
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 ) ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி அனைவருக்கும் ஒன்றுதான். அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம்.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.
ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.
கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான பாதையில் நடத்த வல்லமையுள்ளது.
"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது மற்றவர்களைவிட கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கே அதிகம் பொருந்தும்.
நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். இல்லையானால் நாம் நியாத்தீர்ப்புநாளில் அவர் முன் தைரியமாக நிற்கமுடியாது.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1915
"அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்." ( எரேமியா 2: 27)
நமக்குப் பிடிக்காதவர்கள் அல்லது நம்மைப் பிடிக்காதவர்கள் இவர்களை நேருக்குநேராகச் சந்திக்கும்போது சிலவேளைகளில் ஒருவருக்கொருவர் மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் முகங்களைத் திருப்பிக்கொள்வதுண்டு; சிலவேளைகளில் ஒருவர் மற்றவரை உதாசீனப்படுத்துவதுண்டு. சிலர் தாங்கள் செல்லும் வழியில் பிடிக்காதவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்தால் தங்களது வழியையே மாற்றி வேறு வழியாகச் செல்வதுண்டு.
நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழாமல் இருப்போமானால் நாமும் இப்படித் தேவனுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே இருப்போம். தேவன் நமக்கு ஏற்கெனவே வாழவேண்டிய வழிகளை வகுத்துத் தந்துள்ளார். அதன்படி நடக்காவிட்டால் நாம் அவருக்கு நமது முதுகினைக் காட்டுகின்றோம் என்று பொருள். தங்களுக்குப் பிடிக்காத மனிதர் உயர் பதவியில் இருக்கும்போது சிலர், "இவனை நாம் ஏன் மதிக்கவேண்டும்?" என்பதுபோல செயல்படுவார்கள். ஆனால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களைத் தேடி நாம் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதுபோலவே, நமது தேவைகளுக்காக நாம் தேவனைத் தேடவேண்டிய சூழ்நிலை அதிகமாக ஏற்படும்.
பெரும்பாலான மனிதர்கள் தேவ கற்பனைகளையும், வழிகளையும் புறம்தள்ளி தங்கள் மனத்துக்கேற்ற வாழ்க்கை வாழ்கின்றனர்; தேவ பயமற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால், பெரிய இக்கட்டான சூழ்நிலையோ, கொடிய நோய்களோ ஏற்படும்போது தேவனைத் தேடி ஓடுகின்றனர். அப்போதும்கூட, தங்களது பிரச்சனையும் நோயும் தீரவேண்டும் என்று எண்ணுகின்றனரேத்தவிர தேவனை மனதார எண்ணுவதில்லை; அவரை அன்புள்ளவராகவோ அன்பு செய்யத் தகுதியுள்ளவராகவோ எண்ணுவதில்லை. மக்களது ஒரே எண்ணம் நமது தேவை அவரைக்கொண்டு நிறைவேற்றவேண்டும் என்பது மட்டுமே.
இப்படி உலகில் செயல்படும் மனிதர்களை நாம் காரியவாதிகள் என்று குறிப்பிடுவோம். அதாவது, தங்களுக்குக் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக பிறரை முகஸ்துதி செய்வார்கள் இவர்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்களைக்குறித்து எந்த நல்ல எண்ணமும் இருப்பதில்லை. இத்தகைய மனிதர்களையே இன்றைய தியான வசனத்தில் தேவன் "அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்" என்று கூறுகின்றார்.
தேவன் மனிதர்களது உள்ளத்து எண்ணங்களை அறிந்திருக்கிறார். நமது வாயில் சொல் பிறக்குமுன்பே நாம் என்னச் சொல்லப்போகின்றோம் என்பதனைத் தேவன் அறிவார். "என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்" ( சங்கீதம் 139: 4) என்கின்றார் சங்கீத ஆசிரியர்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து அப்போஸ்தலரான யோவான், "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாய் இருக்கவில்லை." ( யோவான் 2: 25) என்று கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, நாம் எந்த மனஎண்ணத்துடன் தேவனை நோக்கி வேண்டுகின்றோம், நமது உள்ளான மனநிலை என்ன என்பதனை தேவன் அறிவார். எனவே, மனிதர்களிடம் நடிப்பதுபோல தேவனை நாம் நடித்து ஏமாற்றிடமுடியாது. நமது முகத்தை அவருக்குக் காண்பிப்பதுபோலக் காண்பித்து நமது இருதயம் அவருக்கு முதுகைக் காண்பிக்குமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம்.
நமது ஆவி, ஆத்துமா சரீரம் அனைத்தும் அவருக்கு நேராக சீராக இருக்கவேண்டியது அவசியம். அவருக்கு முதுகைக்காட்டக்கூடிய நிலையில் இவை இருக்குமானால் நம்மையே நாம் சீர்தூக்கிப்பாத்துத் திருத்திக்கொள்வோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1916
"கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்." ( சங்கீதம் 25 : 12 )
நமது வாழ்க்கைப் பயணத்தில் இந்த உலகத்தில் நாம் செல்லும் வழிகள் அனைத்தும் பலவேளைகளில் சரியாக இருப்பதில்லை; நாம் எடுக்கும் முடிவுகள் பலவும் சரியாக இருப்பதில்லை. காரணம், நமது அறிவு குறைவுள்ளது. நாம் நமக்குத் தெரிந்த குறைந்த அனுபவங்களையும் அறிவையும் கொண்டு முடிவுகள் எடுக்கின்றோம். எனவேதான் பலவேளைகளில் தவறுகின்றோம்.
ஆம் அன்பானவர்களே, நமது அறிவு குறைவுள்ளது. ஆனால் தேவன் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் நிறைவுள்ளவர்கள் ஆகின்றோம். அப்படி "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்." ( 1 கொரிந்தியர் 13 : 10 ) அதுவரை நாம் பலவேளைகளில் தவறிக்கொண்டுதான் இருப்போம்.
சிலருக்கு வாழ்க்கையில் அனைத்தும் வெற்றியாக நடைபெறுவதையும் பலருக்கு எதை எடுத்தாலும் தோல்வியில் முடிவடைவதையும் பார்க்கின்றோம். காரணம், தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட தேவ பிள்ளைகளை மற்றவர்களைப்போல நடத்துவதில்லை. மற்றவர்களுக்கு வெற்றியாக முடிவடையும் காரியங்கள் தேவன் அன்பு செய்யும் மனிதர்களுக்குத் தோல்வியில் முடிவடையும். தொடர்ந்த தோல்வியில், உபத்திரவங்களில் தேவன் மனிதர்கள் தன்னை முழுமனதுடன் தேடும்படிச் செய்கின்றார். ஆம் அன்பானவர்களே, தேவன் உபத்திரவங்களால் சோதித்து தனக்கான மக்களைத் தெரிவுசெய்கின்றார்.
இதனையே, "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." ( ஏசாயா 48 : 10 ) என்று வாசிக்கின்றோம்.
பழைய காலங்களில் கடல் பயணம் மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது. பரந்த கடல்வெளியில் திசை அறிவது மிகவும் கடினமாகவே இருந்தது. ஆனால் திசைகாட்டும் கருவி கண்டுபிடிக்கப்பட்டபின்னர் அது சிறிதளவு எளிதாக மாறியது. கடல் பயணத்துக்கு உதவியாக கலங்கரை விளக்குகள் இருந்தன. அவை கடற்கரை குறித்து ஓரளவு அறிவித்தன. ஆனால், இந்தக்காலத்தில் கடல் பயணம் நவீனமாகிவிட்டது. கப்பல்கள் நவீனமாகிவிட்டன. GPS கருவிகள், கம்ப்பியூட்டர் துல்லியமாக இடங்களை பயணம் செய்பவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றன.
நாம் தேவனில்லாத வாழ்க்கை வாழும்போது பழைய காலத்து மனிதர்கள் கடல் பயணம் செய்ததுபோல வாழ்கின்றோம். ஆனால் தேவனை அறிந்தபின்னர் நவீன காலத்து மக்களைப்போல துல்லியமாக பயணத்தின் இடம், திசை அறிந்தவர்களாக மாறுகின்றோம். காரணம் கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு இருக்குமானால் அவர் நம்மை நடத்துவார். இதனையே இன்றைய தியான வசனத்தில், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று வாசிக்கின்றோம்.
எனவேதான் நாம் கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அப்படி வாழ்வோமானால் தேவனே நமக்கான வழியினைக் காண்பித்து நம்மை நடத்துவார். தொடர்ந்த பிரச்னை, கஷ்டங்கள் வாழ்வில் ஏற்படும்போது நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய செய்தி இதுதான்:- "தேவன் என்னை நேசிக்கின்றார்; எனவே எனது வாழ்க்கை மாற்றத்தை விரும்புகின்றார்"
தேவனது சித்தத்தை அறிந்து நம்மைத் திருத்திக்கொள்ள மனதுள்ளவர்களாக இருப்போமானால் தாம் தெரிந்துகொள்ளும் வழியை நமக்குப் போதிப்பார்; நமது வாழ்க்கையையும் மாற்றுவார். அப்போது, நவீன விஞ்ஞான கருவிகளுடன் நவீன கப்பல்களில் பயணம் செய்வதுபோல நமது வாழ்க்கைப் பயணம் மாறும்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1917
📆2026 மே 08, வெள்ளி
"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6: 12)
ஒருவர் எத்தனை பலவீனமானவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் அற்பமானவராகக் கருதப்பட்டாலும் அவரைக் கர்த்தர் பயன்படுத்த முடியும். அறிவு குறைவாக இருப்பது, பொருளாதாரக் குறைவு, உடல் பலவீனம், படிப்புக் குறைவு இவை எதுவும் தேவன் ஒருவரைப் பயன்படுத்தத் தடையாக இருப்பதில்லை. மாறாக அற்பமானவைகளையும் இழிவானவைகளையுமே தேவன் தனக்காகத் தெரிந்து கொள்கின்றார். கிறிஸ்துவின் சீடர்கள் அனைவருமே பெரிய மேதைகளல்ல, சாதாரண மீனவர்கள். ஆனால் அவர்களால்தான் தேவனுடைய இராஜ்ஜியம் உலகத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இதனையே, "உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் 1: 28) என்று நாம் வாசிக்கின்றோம்.
இதற்குக் கிதியோனின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணமாக உள்ளதைப் பார்க்கின்றோம். மீதியானியர் கைகள் இஸ்ரவேலர்மேல் பலத்திருந்த காலம் அது. மீதியானியர்கள் இஸ்ரவேலர்களது உடைமைகளையும் அவர்களது விளைச்சல்களையும் கொள்ளையிட்டனர். இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு இரட்சகன் கிடைக்கமாட்டானா என்று ஏங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கிதியோன் தனது கோதுமைப் பயிரை அறுவடைசெய்து, மீதியானியர்கள் வந்து அதனைக் கொள்ளையடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆலையின் அருகிலேயே வைத்துப் போரடித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் கர்த்தருடைய தூதன் வந்து நின்று அவனைப் பார்த்து, "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."
அன்பானவர்களே, கிதியோன்போல நாமும் நம்மைப் பலவீனர்கள் என எண்ணி இதுபோல தேவையில்லா காரியங்களுக்காக பயந்துகொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தர் நம்மைப் பராக்கிரமசாலிகளாகப் பார்க்கின்றார். ஆம், கர்த்தர் நம்மோடு இருப்பதால், நமக்கு இருக்கின்ற பலமே நமது எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமானது.
எனவேதான் மீதியானியருக்குப் பயந்து வாழ்ந்த கிதியோனைப்பார்த்துக் கர்த்தர், "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6: 14) "என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று அப்போஸ்தலரான பவுலுக்கு தேவன் இதுபோல தைரியம் கூறியுள்ளாரே?
ஆனாலும் கிதியோன், "ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்" ( நியாயாதிபதிகள் 6: 15). கிதியோன் தனது அற்ப நிலைமையைக் கர்த்தரிடம் எடுத்துக் கூறியதுபோல நாமும் ஒருவேளை, "ஆண்டவரே, நான் பலவீனமல்லவா? எனது குடும்பம், எனது தொழில், எனது வருமானம், எனது உடல்நிலை எல்லாமே மோசமானதாக அல்லவா இருக்கின்றது? நான் எப்படி இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பேன்?" என்று எண்ணலாம்; கூறலாம். ஆனால் கர்த்தர் கிதியோனிடம் கூறியதுபோல நம்மிடமும், "எதனையும் பார்க்காதே. நான் உன்னோடு இருக்கின்றேன்" என்கின்றார்.
ஆம், இப்படித்தான் அவர் கிதியோனிடம் கூறினார். "அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6: 16) என்று வாசிக்கின்றோம்.
அன்பானவர்களே, எத்தனைப் பெரிய பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் நாம் அவற்றை மேற்கொள்ள முடியும். காரணம் கர்த்தர் நம்மைப் பராக்கிரமசாலிகளாகப் பார்க்கின்றார்; "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று சொல்கின்றார். எனவே, கிதியோன் மீதியானியரை முறியடித்ததுபோல நம்மாலும் பிரச்சனைகளையும் பாவங்களையும் மேற்கொண்டு ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கை வாழ முடியும்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1918
"என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்." ( ஏசாயா 38 : 12 )
எசேக்கியா ராஜா பிளவை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துக்கு ஏதுவாக இருந்தார். அப்போது ஏசாயா தீர்க்கத்தரிசிமூலம் தேவன் அவரது இறப்பின் செய்தியை அறிவித்தார். அப்போது ஏசாக்கியா தேவனை நோக்கிக் கதறி கண்ணீரோடு ஜெபித்தார். அப்போது அவர் ஜெபித்ததைத்தான் தனது நோயிலிருந்து சுகமானபின்னர் எழுதிவைத்துள்ளார். அதன் ஒரு பகுதிதான் இன்றைய தியான வசனம்.
ஆடுமேய்க்கும் மேய்ப்பர்கள் கூடாரங்கள் போட்டுக் குறிப்பிட்டச் சில இடங்களில் தங்குவார்கள். ஆனால் அது நிரந்தரமல்ல, மாறாகச் சில நாட்களுக்குப்பின் அந்தக் கூடாரத்தை பெயர்த்துக்கொண்டு இன்னொரு இடத்துக்குக் கடந்து செல்வார்கள். இதுபோலவே ஆடை நெய்கிறவர்கள் குறிப்பிட்ட புடவையோ வேஷ்டியோ நெய்து முடிந்ததும் தறியிலிருந்து நூலை அறுத்து விடுவார்கள். மனிதர்களது வாழ்க்கையும் இதுபோலவே இருக்கின்றது. மேய்ப்பர்கள் கூடாரத்தைப் பெயர்த்து வேறு இடத்துக்குச் செல்வதுபோல இந்த உடம்பாகிய கூடாரத்தை விட்டு நாம் கடந்து செல்லவேண்டும்; நமது உயிர் நெய்கிறவன் தறியிலிருந்து நூலை அறுத்துவிடுவதுபோல தேவனால் எப்போது வேண்டுமானாலும் அறுத்துவிடப்படலாம்.
தனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கின்றது என்பதனை எசேக்கியா ராஜா உணர்ந்திருந்தார். "இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்" என்று தனது மரணம் இந்த இரவிலேயே ஏற்படலாம் என்று எண்ணினார். எனவே, ஏசாயா தீர்க்கத்தரிசி அவரது மரணத்தைக்குறித்து தீர்க்கத்தரிசனம் கூறியதும், "நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்." ( ஏசாயா 38 : 14 ) என்று தேவனை நோக்கித் தான் ஜெபித்ததாகக் கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, எசேக்கியாவின் இந்த விண்ணப்பத்தைக் கேட்டு தேவன் அவரது ஆயுள் நாட்களை மேலும் பதினைந்து ஆண்டுகள் நீட்டித்துக்கொடுத்தார். அதனை அவர் "கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்." ( ஏசாயா 38 : 20 ) என்று கூறப்பட்டுள்ளது.
எசேக்கியாவின் வாழ்க்கை, அவர் தேவனுக்காகச் செய்த வைராக்கியமான செயல்பாடுகள், அவரது உருக்கமான வேண்டுதல்கள் போல நாம் வாழும் வாழ்க்கை, தேவனுக்காக நாம் செய்யும் செயல்பாடுகள், நமது இருதய பூர்வமான வேண்டுதல்கள் இவை அனைத்தையும் தேவன் பார்க்கின்றார்; கேட்கின்றார். அப்படிச் செய்யும்போது நமது மனக் கசப்புகளை நீக்குகின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக நமது பாவங்களை மன்னிக்கின்றார். அப்போது நாமும் எசேக்கியாவைப் போல "இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." ( ஏசாயா 38 : 17 ) என்று நாமும் மகிழ்வுடன் கூறமுடியும்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1919
"நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." ( ஆதியாகமம் 50 : 20 )
தேவ பிள்ளைகளுக்கு எதிராக ஒருவர் செயல்படும் செயல்பாடுகள் அந்தக் குறிப்பிட்ட நேரம் துன்பமாகத் தெரிந்தாலும் அது நிரந்தரமல்ல. காரணம் தேவன் தனது பிள்ளைகளோடு இருந்து அவர்களை நடத்துவதுதான். மட்டுமல்ல, இப்படிச் சிலர் நமக்கு எதிராகச் செயல்பட்டாலும் இறுதியில் அதனை தேவன் நமக்குச் சாதகமாக; நன்மையாகவே முடியப்பண்ணுவார்.
இன்றைய தியான வசனம் யோசேப்புத் தனது சகோதரர்களைப் பார்த்துக் கூறியதாகும். யோசேப்பின் சகோதரர்கள் பொறாமையால் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். முதலில் அவனைக் கொலைசெய்ய எண்ணிய அவர்கள் பின்னர் அவனை இருபது வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்பனை செய்தனர். இப்படி அவர்கள் அவனுக்கு எதிராகத் தீமை செய்ய எண்ணியிருந்தாலும் தேவன் இறுதியில் அதனை நன்மையாக முடியப்பண்ணினார். ஆம், அப்படி அவர்கள் அவனை அடிமையாக விற்பனை செய்ததால்தான் அவன் பிற்காலத்தில் எகிப்தின் பார்வோனுக்கு இணையானவனாக மாறமுடிந்தது.
இதுவே யோசேப்பைக் குறித்தத் தேவ திட்டமாக இருந்தது. இதனால்தான் அவன் பஞ்சகாலத்தில் மக்கள் பட்டினியால் மடிந்துபோகாமலிருக்கும்படி ஞானமாய் நடந்து மக்களை பஞ்சகாலத்திலும் பாதுகாத்தான். இதனையே யோசேப்பு இன்றைய தியான வசனத்தில், "இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்" என்கின்றான். யோசேப்புக்கு எதிரான தீமையான காரியம் இப்படி நன்மையாக முடிவடைந்தது.
ஆம், அன்பானவர்களே, "உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்."( உபாகமம் 28 : 7 ) என்று வேத வசனம் கூறுகின்றபடி நமக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தோல்வியடைந்து ஓடுவார்கள் அல்லது யோசேப்பின் சகோதர்களைப்போல நம்மிடமே வந்து சரணடைவார்கள்.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?" ( ரோமர் 8 : 31 ) என்று கேள்வி எழுப்புகின்றார். நமக்கு ஆதரவாக தேவன் இருக்கும்போது நமக்கு விரோதமாக யாரும் இருக்க முடியாது; நம்மை யாரும் குற்றம்சாட்ட முடியாது. "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்." ( ரோமர் 8 : 33 )
இதுபோலவே, தானியேலுக்கு எதிராக எழும்பி அவனை அழித்துவிட திட்டமிட்ட எதிரிகள் அதில் வெற்றிபெற முடியவில்லை. தேவன் தானியேலிடம் பட்சமாக இருந்ததால் சிங்கக்கெபியிலிருந்தும் காப்பாற்றப்பட்டான். ஆனால் தானியேல் மீது குற்றம் சாட்டி அவனை அழிக்க நினைத்த எதிரிகள் அதே சிங்கங்களுக்கு உணவானார்கள் (தானியேல் - 6). மொர்தெகாயை தூக்கிலிட எண்ணிய ஆமான் அதற்காக அவன் உண்டாக்கிய அதே தூக்குமேடையில் தூக்கிடப்பட்டான். அதனால் பல ஆயிரம் யூதர்கள் காப்பாற்றப்பட்டனர் (எஸ்தர்)
இன்றும் இதுபோல நமக்கு எதிராக யாராவது செயல்படும்போது நாம் பொறுமையாக இருப்போமானால் அவர்கள் நினைத்தத் தீமை செயல்படாமல் போகும். மட்டுமல்ல, தேவன் அந்தத் தீமையை நமக்குச் சாதகமாக மாற்றி நமதுமூலம் பலரும் நன்மை அடையச் செய்வார். நாம் மனித அறிவால் எல்லாவற்றையும் எடைபோடுகின்றோம். ஆனால் தேவ ஞானமும் அறிவும் அளவிடமுடியாதவை. "ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!" ( ரோமர் 11 : 33 )
எனவே அன்பானவர்களே, நமக்கு எதிரான செயல்பாடுகளை பொறுமையாகச் சகித்து தேவனிடம் விசுவாசமாக இருப்போம். தேவன் அதனை நன்மையாக முடியப்பண்ணுவார். மட்டுமல்ல, நமதுமூலம் பல மக்கள் நன்மை அடையவும் தேவன் வகைசெய்வார்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1920
"துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்." ( எபிரெயர் 10 : 22 )
தேவனுடைய பரிசுத்த சன்னிதானத்தில் நாம் சேரவேண்டுமானால் நமக்கு இருக்கவேண்டிய தகுதியைக்குறித்து இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
முதலாவது, நமது இருதயம் இயேசு கிறித்துவின் இரத்தத்தால் தெளித்து துப்புரவாக்கப்பட்ட சுத்த இருதயமாக இருக்கவேண்டியது அவசியம். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே? இருதயத்தில் சுத்தமில்லாமல் நாம் செய்யும் வழிபாடுகளோ, ஆராதனைகளோ, நாம் செலுத்தும் காணிக்கைகளோ நம்மைத் தேவனிடம் சேர்க்காது.
இரண்டாவது, நமது உடலானது பாவ பழுதற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே சுத்த ஜாலத்தால் கழுவப்பட்ட சரீரம் என்று வசனம் கூறுகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று எழுதுகின்றார்.
பழைய ஏற்பாட்டு முறைமையின்படி ஆசாரியன் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கமுடியும். ஆனால் இன்று புதிய ஏற்பாட்டின் முறைமையில் நாம் எல்லோருமே ஆசாரியர்கள்தான். எனவே நாம் அனைவருமே பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட கிறிஸ்துவே தனது இரத்தத்தால் வழி உண்டாக்கியுள்ளார்.
இதனையே இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன:- "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்," ( எபிரெயர் 10 : 19, 20 ) என்று.
தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினால் ( எபிரெயர் 10 : 21 ) நாம் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய உரிமை பெற்றுள்ளோம். ஆனால் அப்படி நுழைந்திட இன்றைய தியான வசனம் மேற்கூறிய இரண்டு நிபந்தனைகளை கூறுகின்றது. ஆம், அவைதான் :-
1. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம்
2. சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம்
உடலால் பாவச் சேற்றில் வாழ்ந்துவிட்டு அதனைப்பற்றி எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நாம் செய்யும் ஆராதனைகள் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. நமது உடலை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். ஆடு மாடுகளைப் பலியிடுவதில்கூட பழுதற்றவைகளையே பலியிடவேண்டுமென்று பழைய ஏற்பாட்டு முறைமையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல நமது உடலை தேவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது அது பரிசுத்தமானதாக, பாவமில்லாததாக இருக்கவேண்டியது அவசியம்.
அன்பானவர்களே, நமக்கு ஏற்கெனவே மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட நமது பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்து தனது சொந்த இரத்ததால் வழியமைத்துக் கொடுத்துள்ளார். அவரது இரத்ததால் உண்டாக்கப்பட்ட மீட்பினை நாம் விசுவாசிக்கவேண்டும். அவரது இரத்தத்தால் நாம் கழுவப்பட நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அவர் நம்மைத் தூய்மையாக்கி மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழையத் தகுதிப்படுத்துவார்.
அப்போதுதான் நாம் இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் பரலோகத்தில் சேரமுடியும்.
மேலும் இன்றைய தியான வசனம் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் என்று கூறுகின்றது. அதாவது நாம் உண்மையுள்ளவர்களாகவும் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
உள்ளத்திலும் உடலிலும் தூய்மை, வாழ்க்கையில் உண்மை, தேவன்மேல் உறுதியான விசுவாசம் இவைகள் இல்லாமல் நாம் செய்யும் எந்த ஆராதனையும், சடங்குகளும், காணிக்கைகளும் நம்மைப் பரலோகம் கொண்டு செல்ல உதவாது.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1921
📆2026 மே 12, செவ்வாய்
"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை." ( 1 யோவான் 3 : 1 )
இந்த உலகத்தில் ஒருவர் முதலமைச்சரின் மகன் / மகள், பிரதமரின் மகன் / மகள் அல்லது பிரபல மருத்துவரின் மகன் அல்லது மகள் என்று கூறிக்கொள்வதைப் பெருமையாக எண்ணுகின்றனர். உலக மக்களுக்கு அது பெருமையான காரியம்தான். ஆனால் தேவன் நம்மைத் தனது சொந்த பிள்ளைகளாக எண்ணி நடத்துகின்றார் என்பதே நமது மேன்மை. விசுவாசிகளாகிய நாம் அவரது பிள்ளைகள். நாம் அவரது மகனாகவும் மகளாகவும் இருக்கின்றோம். இப்படி "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
ஆம் அன்பானவர்களே, தேவன் நம்மேல் வைத்த அன்பினால் நம்மைத் தமது பிள்ளைகளாகத் தெரிந்தெடுத்துள்ளார். தனது மேலானக் கிருபையினால் நமது பாவங்களை அவர் மன்னித்து தமக்குச் சொந்த மக்களாகத் தெரிந்தெடுத்துள்ளார். இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 ) என்று கூறுகின்றார்.
ஆனால் சாதாரண மக்களுக்கு இதன் மகிமையோ மேன்மையோ தெரியாது. அவர்கள் பிரபலமான மனிதர்களின் பிள்ளைகளை அறிவார்கள் ஆனால் தேவ பிள்ளைகளை அறிவதில்லை. காரணம் அவர்கள் தேவனையே அறியாதவர்கள்; பின்னர் எப்படி தேவனது பிள்ளைகளை அறிவார்கள்? இதனையே இன்றைய தியான வசனத்தில் "உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை" என்று வாசிக்கின்றோம்.
மட்டுமல்ல, இப்படி நாம் தேவனது பிள்ளைகளாக இருப்பதன் பயன் என்ன என்பதனை அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார், "அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்." ( 1 யோவான் 3 : 3 ) அதாவது,இப்படித் தேவனது பிள்ளைகளாக நாம் இருப்போமானால் தேவனைப்போல் நாமும் சுத்தமுள்ளவர்களாக வாழ முடிகின்றது.
இது எப்படி என்றால், மேலே நாம் முதலில் பார்த்த உதாரணங்களில் கூறப்பட்ட பிரபலமான மனிதர்கள் தங்களது பிள்ளைகளும் தங்களைப்போல எதிர்காலத்தில் வளரவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உதவிகள் செய்வார்களோ அதுபோல தேவன் தனது பிள்ளைகளும் தன்னைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக வாழவேண்டுமென்று உதவி செய்வதுதான்.
பிரபலமான மனிதர்களின் பிள்ளைகள் என்று கூறப்படுவது மற்றவர்களுக்குப் பெருமையாக இருக்கலாம் ஆனால் நமக்கோ, நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று கூறிக்கொள்வதில்தான் பெருமை உள்ளது. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று நாம் எண்ணிப்பார்த்து அவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம்.
உலகம் நம்மை அறியவேண்டும், நாம் பிரபலமானவர்களாக மாறவேண்டும் என்று விரும்பி குறுக்கு வழியில் சென்று நம்மை நாமே உயர்த்திட விரும்பாமல் வாழ்வோம். பொறுமையாக அவருக்கு அடங்கிய வாழ்க்கை வாழ்வோம். "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )
தன்னை எல்லோரும் அறியவேண்டும் என்று வலுக்கட்டாயமாக தேவன் தன்னை யாரிடமும் திணிப்பதில்லை. தன்னை அறிய தேவன் கூறியுள்ள ஒரே வழி, தாழ்மையுடன் நமது பாவங்களை அவரிடம் அறிகையிட்டு மனம் திரும்புவதுதான். அப்படி நாம் மனம் திரும்பும்போது தேவனது அன்புக்குரிய மக்களாக மாறுகின்றோம்; அவரது இரக்கத்தையும் பராமரிப்பையும் பெறுகின்றோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிதென்று எண்ணிப் பாருங்கள்!!
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1922
"நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை." ( ஓசியா 13 : 4 )
இஸ்ரவேலரின் வாழ்க்கைச் சம்பவங்கள் இன்றைய நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் நிழலாட்டமாக இருக்கின்றன. இன்றைய தியான வசனம் கூறும் சத்தியத்தையே இன்று நாம் விபரமாக அறியவுள்ளோம்.
நன்றி மறந்த குணம் என்பது மனிதர்களிடம் அதிகமாக இருக்கின்றது. அவர்கள் தங்களுக்கு உதவியவர்களை வெகு சீக்கிரத்தில் மறந்துவிடுகின்றனர். எவ்வளவு உதவிகள் செய்திருந்தாலும் சிலர் தங்களுக்கு உதவிகளை அடியோடு மறந்துவிடுவதுண்டு. மட்டுமல்ல, உதவியவர்களுக்கு எதிராகவும் செயல்படுவதுண்டு. தெருநாய்க்கு நாம் ஒரு பிஸ்கெட் துண்டைப் போட்டால்கூட அது நம்மை மறப்பதில்லை. ஆனால் மனிதர்கள் பலவேளைகளில் நாய்களைவிட மோசமானவர்களாக இருக்கின்றனர். இப்படி நாம் நன்றிகெட்டு வாழக்கூடாது என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
இஸ்ரவேல் மக்களை தேவன் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அழைத்து அவர்களைப் பாலும் தேனும் வழியும் கானானுக்கு வழிநடத்தி அந்தத் தேசத்தை அவர்களுக்கு உரியதாக்கினார். ஆனால் இஸ்ரவேலரோ தேவனது இந்த இரக்கத்தையும் வல்லமையையும் மறந்தவர்களாக குறுகிய காலத்தில் வேறு தெய்வங்களை வழிபடத் துவங்கினர்.
இதுபோலவே இன்று நம்மை தேவன் பாவமாகிய எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுத்துள்ளார். நமது பழைய பாவ வாழ்க்கை என்பது இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமைகளாக இருந்தது போன்றதாகும். அத்தகைய பாவ வாழ்க்கையிலிருந்து தேவன் நம்மை மீட்டுள்ளார். தேவன் கிருபையினால் நம்மை அந்தப் பாவ வாழ்க்கையிலிருந்து மீட்டு நம்மை ஆவிக்குரிய மக்களாக வழிநடத்தி வருகின்றார்.
அன்று இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து மீட்டு வனாந்தரம் வழியாக தேவன் வழிநடத்தினார். இன்றும் அதுபோல மகிழ்ச்சியான பாவ வாழ்கையிலிருந்து நாம் மீட்கப்படும்போது வனாந்தர வாழ்க்கைபோல நமக்குச் சில கடினமான வாழ்க்கைச் சவால்கள் ஏற்படலாம். ஆனால் தேவன் நாம் பரம கானானை அடைவதற்கு; நமது நல்ல எதிர்காலத்துக்கு அப்படி நடத்துகின்றார். இதனையே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்." ( ஓசியா 13 : 5 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
ஆனால் இப்படி மீட்கப்பட்டு வனாந்தரம் வழியாக நடத்தப்பட்டு கானானுக்குள் பிரவேசித்த இஸ்ரவேல் மக்கள் கொஞ்ச நாட்களுக்குள் தேவனைவிட்டுப் பின்மாறி வேறு தெய்வங்களை வழிபட்டதுபோல இன்றும் தேவனால் இரட்சிக்கப்பட்ட மக்கள் பலர் சிறிதுநாட்களுக்குள் பழைய பாவ வாழ்க்கையினை ருசிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அவற்றையே வேறு தேவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. சிலருக்கு அந்த வேறு தெய்வங்கள் என்பது பணமாக, பதவியாக, பெண்ணாசையாக, அதிகார வெறியாக இருக்கலாம். நம்மைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த தேவனை மறந்து இத்தகைய வேறு தேவர்களை நீ அறிய வேண்டாம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.
இப்படி வேறு தேவர்களை நாம் ஆராதித்துக் கொண்டிருப்போம் என்றால் நாம் மீண்டும் அடிமைகளாவோம். ஆம் அன்பானவர்களே, அன்று இப்படி வேறு தேவர்களை ஆராதித்த இஸ்ரவேலர்கள் பாபிலோனியர்களுக்கும் அசீரியர்களுக்கும் அடிமைகளாயினர். தேவனது எருசலேம் ஆலயம் தகர்க்கப்பட்டு தேவனது மகிமை அவர்களைவிட்டுப் போயிற்று. நாமும் நம்மை பாவத்திலிருந்து மீட்டு வழிநடத்தும் தேவனது பரிசுத்த வழிகளை விட்டு விலகுவோமென்றால் நமது ஆவிக்குரிய வாழ்க்கை தகர்ப்பட்டு தேவ மகிமை நம்மைவிட்டு அகன்றுபோகும்.
ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை என்கின்றார் தேவனாகிய கர்த்தர். வேறு தேவர்கள் என்பது வேறு மத கடவுளர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, நாம் தேவனை விட யாருக்கெல்லாம், எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கின்றோமோ அவை அனைத்தையும் குறிக்கின்றது. அப்படி அவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும்போது நாம் நம்மை மீட்டத் தேவனை விட்டு வேறு தேவர்களை அறிகின்றோம் என்று பொருள்.
நமது வாழ்க்கையின் இக்கட்டான வேளையில் தேவனை விட்டு நாம் முன்னுரிமை கொடுக்கும் வேறு எதுவும், யாரும் நமக்கு உதவிட முடியாது. எனவே, தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே வாழ்க்கையில் முன்னுரிமை கொடுத்து வாழ்வோம். ஆம் அன்பானவர்களே, "என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை" என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1923
"எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது." ( சங்கீதம் 130 : 6 )
விடியலை துன்மார்க்கரைத் தவிர எல்லோரது மனமும் ஆவலாய் எதிர்பார்க்கின்றது. துன்மார்க்கர்கள் தங்களது அவலட்சண காரியங்களுக்கு இருளையே விரும்புகின்றனர். இறுதியில் இருளான இடத்துக்கே செல்கின்றனர். நமக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது சிலவேளைகளில் நமக்குத் தூக்கம் வருவதில்லை. எப்போது விடியும் என்று எதிர்பார்ப்போடு காத்திருப்போம். விடியல் மகிழ்ச்சியும் இன்பமுமாயிருக்கின்றது.
இன்றைய தியான வசனத்தில் ஆண்டவருக்குக் காத்திருப்பதை ஜாமக்காரர்கள் (இரவுக் காவலர்கள்) எப்போது விடியும் என விடியலை எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. பெரிய பெரிய கடைகளுக்கு முன்பும் ஏ.டி.எம் மையங்களிலும் காவல் செய்யும் காவலர்களை எண்ணிப்பாருங்கள். மழையோ குளிரோ எதுவந்தாலும் அவர்கள் அங்குப் பணியாற்றுவார்கள். அப்போது அவர்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது. அவர்களது இருதயம் எப்போது விடியும் என்றுதானே ஏங்கும்? ஆம், அதைவிட அதிகமான ஏக்கத்துடன் கர்த்தருக்காக எனது ஆத்துமா கர்த்தருக்காகக் காத்திருக்கின்றது என்கின்றார் சங்கீத ஆசிரியர்.
விடியலுக்காகக் காத்திருப்பது என்பது, இருளான நமது வாழ்வில் கர்த்தர் வந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார் என எதிர்பார்த்திருப்பதைக் குறிக்கின்றது.
இந்தச் சங்கீதம் ஒரு ஆரோகண சங்கீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, திருயாத்திரைச் செல்லுகிறவர்கள் பாடும் பாட்டு. வருடாந்த பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக மலைகளில் ஏறி ஏறி எருசலேமை நோக்கி யாத்திரை செய்யும்போது மக்கள் இப்பாடல்களைப் பாடுவார்கள். யாத்திரீகர்கள் தனிமையான, மக்கள் இல்லாத பல இடங்களைக் கடந்துசெல்ல வேண்டியது நேரிடும். அத்தகைய வேளைகளில் பாடப்படுவதால் இவை ஆரோகண சங்கீதம் என்று கூறப்படுகின்றது.
நான் சிறுவனாக இருந்த போது எனது தந்தை பெரும்பாலான நாட்களில் பணி நிமித்தமாக வெளி ஊரில்தான் இருப்பார். நானும் எனது சகோதரிகளும் எனது அம்மாவின் பராமரிப்பில் நாகர்கோவிலில் இருந்தோம். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அப்பா ஊருக்கு வருவார். அவர் வரும் நாளை கடிதம் மூலம் அறிவிப்பார். நாங்கள் அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்போம். அவர் வருவதற்கு முந்தின நாள் சரியாக தூக்கம் வராது. எப்போது விடியும் என்று காத்திருக்கும் எங்களது மனது. இது அப்பாவைப் பார்க்கவேண்டும் எனும் எண்ணத்திலேயே தவிர அவர் கொண்டுவரும் பொருட்களுக்காக அல்ல.
ஆம் அன்பானவர்களே, இன்று பலரும் கர்த்தரைத் தேடுவதைவிட, கர்த்தாரிடமிருந்துவரும் ஆசீர்வாதங்களையே அதிகமாய்த் தேடுகின்றனர். ஆனால் உண்மையான அன்பு இப்படிப் பொருள்களைத் தேடி ஓடாது.
இன்று பல சபைகளில் நள்ளிரவு உபவாச ஜெபங்கள் என்று நடத்துகின்றார்கள். ஒருமுறை ஒரு போதகர் அழைத்தார் என்று ஒரு இரவு ஜெபக் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். ஆனால் அங்கு ஏன் சென்றேன் என்று எண்ணுமளவுக்கு கேலிக்கூத்தான காரியங்கள் நடந்தன. ஆராதனையின் இடையில் துள்ளுவதும் ஆடுவதும் உடற்பயிற்சிபோல பயிற்சியும் நடந்தன. பிற்பாடு நான் அந்தப் போதகரிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? இது பக்தியான காரியமாகத் தெரியவில்லையே? " என்று கேட்டேன். அவர் கூறினார்:- "இப்படி நாம் அவர்களை உற்சாகப்படுத்தாவிட்டால் மக்கள் உறங்கிவிடுவார்கள்" என்றார்.
தேவ அன்புடன் தேவனுக்காக காத்திருப்பவனுக்கு ஏன் உறக்கம் வருகிறது? உறக்கம் வருபவர்கள் வீட்டிற்குச் சென்று உறங்கவேண்டியதுதானே? தேவ அன்பற்று துள்ளிக் குதித்து உறக்கத்தைக் கலைப்பதில் என்ன பக்தி அல்லது தேவ அன்பு இருக்கிறது?
அன்பானவர்களே, நள்ளிரவு உறங்காமல் இருப்பதை தேவனுக்குக் காத்திருத்தல் என்று முற்றிலும் கூறிட முடியாது. பகல்பொழுதிலும்கூட நமது இருதயம் தேவ நாட்டம்கொண்டு அவருக்காகக் காத்திருக்க முடியும். அதாவது, தேவன் நமக்குள் வந்து நம்மை ஆளுகைசெய்ய காலம், நேரம், இடம் இவை தடையல்ல. எனவே, தேவ அன்புடன் நாம் தேவனுக்காகக் காத்திருக்கின்றோமா? தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வம் நமக்கு இருக்கின்றதா? என்பதே முக்கியம். உண்மையான தேவ அன்புடன் தனக்காகக் காத்திருப்பவர்களையே தேவன் விரும்புகின்றார். அந்த மெய்யான அன்புடன் அவரைத் தேடுவோம்; அவருக்காகக் காத்திருப்போம்.
"ஆதவன்" 🌳தியானம் - எண் 1924
"என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்." ( சங்கீதம் 144 : 1 )
எல்லா நாடுகளும் எதிரிகள் தங்களைத் தாக்கி அழித்துவிடாதபடி தங்களைத் தற்காத்துக்கொள்ள இராணுவத்துக்கு அதிக நிதியை ஒதுக்குகின்றனர். பல்வேறு நவீன ஆயுதங்களை தங்களது பாதுகாப்புக்கு எனத் தயாரிக்கின்றனர் அல்லது வாங்கி வைத்துள்ளனர். அவற்றைப் பயன்படுத்தத் தங்களது வீரர்களுக்குப் பயிற்சியும் அளிக்கின்றனர்.
இதுபோலவே தேவன் தனது பிள்ளைகளுக்கு செய்கின்றார்; பயிற்சியும் அளிக்கின்றார். இன்றைய தியான வசனம் ஆவிக்குரிய போரைப்பற்றி குறிப்பிடுகின்றது. தாவீது அரசனாக இருந்து பல போர்களை நடத்தியவர். எனவே அவர் மனிதர்களின் ஆவிக்குரிய வாழ்வின் போராட்டத்தை போருக்கு ஒப்பிடுகின்றார்.
நாம் தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழும்போது இந்த ஆவிக்குரிய போராட்டத்தை மேற்கொள்ள தேவன் நமக்குப் பெலன் தருவார். தேவனே நம்மோடு இருந்து நம்மை இந்தப் போராட்டங்களிலிருந்து விடுபட வழி செய்வார். அதனையே, என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தர் என்று தாவீது கூறுகின்றார்.
இந்த உலக வாழ்க்கையில் நமக்கு இரண்டுவித போராட்டங்கள் உண்டு. உலகப் பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள் போன்ற உடல்சார்ந்த போராட்டங்கள்; ஆவிக்குரிய வாழ்வில் நம்மை தேவனை விட்டுப் பிரித்திட பிசாசு கொண்டுவரும் பாவப் போராட்டங்கள். இவற்றையே அப்போஸ்தலரான பவுல், "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்று கூறுகின்றார்.
இன்றைய தியான வசனம் கர்த்தர் நமது கைகளையும் விரல்களையும் போருக்குப் படிப்பிக்கின்றார் என்று கூறுகின்றது. தேவன் நமக்குப் பல போர் ஆயுதங்களைத் தந்துள்ளார். அவற்றை நாம் தகுந்த முறையில் பயன்படுத்த படிப்பிக்கவும் செய்கின்றார். "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 6 : 13 ) என்று கூறப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆயுதங்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.பின்னர் அவற்றைத் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும்.
இந்த ஆவிக்குரிய போராயுதங்களைக்குறித்து நாம் எபேசியர் 6: 14 முதல் 17 வரையுள்ள வசனங்களில் வாசிக்கின்றோம். ஆம் இந்தப் போராயுதங்களை நாம் தகுதியான முறையில் பயன்படுத்த நம்மைப் பயிற்றுவிப்பவர் தேவனுடைய ஆவியானவர்தான்.
இன்று பலர் வாழ்க்கையில் சலிப்படைந்து தற்கொலை எனும் விபரீத முடிவைத் தேடிக்கொள்கின்றனர். காரணம் தேவனது ஐக்கியம் இல்லாததுதான். அவரோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழ்வோமானால் இன்றைய தியான வசனம் கூறுவதன்படி நமது கைகளையும் விரல்களையும் போராட்டத்துக்குத் தகுதிப்படுத்தி நம்மை வெற்றியுடன் நிலைநிறுத்துவார்.
இப்படி வல்லமையும் அன்புமுள்ள தேவன் நமக்கு இருப்பதால் அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். எனவேதான், "என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்கின்றார் சங்கீத ஆசிரியர். இந்த ஆயுதங்களை நாமும் பயன்படுத்தவும் அதன் மூலம் வெற்றிபெறவும் முடியும். எனவே, சங்கீத ஆசிரியருடன் சேர்ந்து நாமும் என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி நன்றியுள்ளவர்களாக வாழ்வோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1925
"உன் தீர்க்கத்தரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள்." ( புலம்பல் 2 : 14 )
தேவன் தனது சித்தத்தை தனது அடியார்களுக்கு வெளிப்படுத்துவதுதான் தீர்க்கத்தரிசனம். இந்தத் தீர்க்கத்தரிசனமானது மக்களது நன்மைக்காக; மக்கள் தங்களது பாவங்களை உணர்ந்து மனம்திரும்பி தேவனுக்கேற்றவர்களாக மாறவேண்டும் என்பதற்காக தேவனால் அருளப்படுகின்ற ஒரு வரமாகும். இப்படி முறையான தெளிவான தீர்க்கத்தரிசனம் இல்லாத இடத்தில மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்.
"தீர்க்கத்தரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்." ( நீதிமொழிகள் 29 : 18 ) என்று கூறப்பட்டுள்ளது. "இந்த ஆண்டு உனக்கு ஆசீர்வாதமான ஆண்டாக இருக்கும், நீ சொந்தமாக வீடு வாங்குவாய், இந்த ஆண்டு புதிய கார் வாங்குவாய், உனது வேலையில் மிக உயர்ந்த இடத்துக்குப்போவாய்" என்பது போன்ற தீர்க்கத்தரிசனங்கள் நடைபெறுகின்றதோ இல்லையோ அனால் கேட்கும் மக்களுக்கு இன்பமாக இருக்கும்.
ஆனால், தேவன் அருளும் மெய்யான தீர்க்கத்தரிசனம் மனிதர்களைப் பாவ உணர்வடையச் செய்யும். பெரும்பாலும் ஊழியர்கள் இத்தகைய தீர்க்கதரிசனங்களைக் கூறாமல், ஆசீர்வாதத்தையே தீர்க்கத்தரிசனமாகக் கூறுவார்கள்; மக்களும் அதனையே இரசிக்கின்றனர். இது இப்போது மட்டுமல்ல, எரேமியா தீர்க்கத்தரிசியின் காலத்திலும் இப்படியே இருந்தது. எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தில், உன் பாவச் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள் என்று கூறுகின்றார்.
தாவீது பாவம் செய்தபோது நாத்தான் தீர்க்கத்தரிசி அவரது பாவத்தை உணர்த்தி அவர் மனம் திரும்பும்படிச் செய்தார். ஆம் அன்பானவர்களே, உண்மையான தீர்க்கத்தரிசனம் இருதயத்தின் அந்தரங்கப்பாவங்களை மனிதர்களுக்கு வெளிப்படுத்திக்கொடுத்து அவர்களை மனம்திரும்பச் செய்யும். இப்படி மக்களிடையே மனம்திரும்புதல் ஏற்படும்போதுதான் ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்படும். ஆனால் இன்று ஆசீர்வாதக் கூட்டங்களில் கூடும் மக்களைப் பாத்துவிட்டு நாட்டில் எழுப்புதல் ஏற்பட்டுவிட்டது என்று போலி மாயையை உருவாக்குகின்றார்கள்.
பாவ உணர்வூட்டும் தீர்க்கத்தரிசனம் குறித்து அப்போஸ்தலரான பவுல், பாவம் செய்த ஒருவனைக்குறித்து தீர்க்கத்தரிசனம் கூறும்போது "அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்." ( 1 கொரிந்தியர் 14 : 25 ) என்று கூறுகின்றார்.
இத்தகைய தீர்க்கத்தரிசனத்தையே தேவன் விரும்புகின்றார். நாமும் பல்வேறு ஆவிக்குரிய வரங்களில் தீர்க்கத்தரிசன வரத்தையே விரும்பவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம், "அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கத்தரிசன வரத்தை விரும்புங்கள்." ( 1 கொரிந்தியர் 14 : 1 )
அபத்தமும் வியர்த்தமுமான தீர்க்கத்தரிசனங்களை நம்பினால் அவை நம்மை பாவச் சிறைக்குள்ளேயே வைத்திருக்கும். எனவே, அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் நமக்காகத் தரிசித்துத் தீர்க்கத்தரிசனம் கூறும் ஊழியர்களை நோக்கி ஓடாமல் நமது ஆத்துமாக்களைக் காத்துக்கொள்வோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1926
"ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்; உன் கண்கள் உன் போதகரைக் காணும்." ( ஏசாயா 30 : 20 )
துன்பம், உபத்திரவம் இவைகளை நாம் உண்ணும் அப்பத்துக்கும் குடிக்கும் தண்ணீருக்கும் இன்றைய தியான வசனம் ஒப்பிடுகின்றது. அன்பான தேவனுடைய பிள்ளைகளே, இன்று ஒருவேளை தேவன் நமது வாழ்வில் பல்வேறு நெருக்கங்களையும், துன்பங்களையும் ஒடுக்குதலையும் தந்திருக்கலாம். மற்றவர்களைப்போல நாம் செழிப்பான வாழ்க்கை வாழாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உன் போதகர் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்; உன் கண்கள் உன் போதகரைக் காணும்."
அதாவது, நமது இந்த வனாந்தர வாழ்க்கையை தேவன் அறிந்திருக்கின்றார். நமது துன்பங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார். ஆம், "கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்." ( நாகூம் 1 : 7 )
இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள "உன் போதகர்" எனும் வார்த்தைகள் பழைய மொழிபெயர்ப்பு வேதாகமங்களில், "உன் போதகர்கள்" என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. இந்தப்போதகர் வேறு யாருமல்ல, பரிசுத்த ஆவியானவர்தான். அதாவது நாம் நெருக்கமான, இடுக்கமான உணவை உண்டு, குறைவான தண்ணீரைக் குடித்து வாழ்வதுபோல நெருக்கடியான ஒரு வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம்மைப் பார்த்து வழிநடத்த தேவனுடைய ஆவியானவர் உண்டு.
அன்று இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் வழிநடந்தபோது இரவும் பகலும் தேவன் அவர்களைப் பாதுகாத்து வழி நடத்தினார். "பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை." ( யாத்திராகமம் 13 : 22 ) என்று வாசிக்கின்றோம்.
இன்று ஆவிக்குரிய வாழ்வில் நம்மை வழிநடத்தும் இந்த மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமும் பரிசுத்த ஆவியானவர்தான். எனவே, நெருக்கடியான சூழ்நிலையில் நாம் தனியாக இல்லை நம்மோடு தேவன் இருக்கின்றார் எனும் தைரியத்தோடு நாம் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோமானால், "உன் போதகர் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்; உன் கண்கள் உன் போதகரைக் காணும்" எனும் வார்த்தைகளின்படி நாமும் அவரை விசுவாசக்கண்ணால் காண முடியும்.
ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுடைய சமூகத்தைத் தேடுகின்றவர்களாகவும், அதற்காகக் அவசியம். அன்று மோசே தேவனிடம் இப்படித்தான் ஜெபித்தார். "ஆண்டவரே, நீர் எங்களோடு வரவில்லையானால் நாங்கள் இதே இடத்தில்தான் இருப்போம்" என்றார் அவர். இதனை நாம், "அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும்." ( யாத்திராகமம் 33 : 15 ) என்று வாசிக்கின்றோம்.
இக்கட்டான வேளைகளில் நாமும் இதுபோல ஜெபிப்போம். "ஆண்டவரே, உன் போதகர் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்; உன் கண்கள் உன் போதகரைக் காணும் என்று கூறப்பட்டுள்ளதே, அதனை நான் விசுவாசிக்கிறேன். நீரே எங்களை மேகஸ்தம்பமும், அக்கினிஸ்தம்பமுமாக இருந்து வழிநடத்தி எங்களது இந்தப் பாலைவன வாழ்கையினைக் கடந்து செல்ல உதவிபுரியும். எங்களது துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் நாங்கள் மேற்கொண்டு வாழ்ந்திட உதவிபுரியும்".
தேவனுடைய கிருபையினைச் சார்ந்து வாழும்போது நிச்சயமாக அவர் நம்மைக் கைவிடமாட்டார். "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" ( 1 பேதுரு 5 : 10 ) ஆமென்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1927
"எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை...." ( யாத்திராகமம் 10 : 26 )
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் பலமுறை சென்று இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அனுப்பிவிடும்படி வேண்டிக்கொள்ளும் சம்பவங்களை நாம் யாத்திராகமம் நூலில் வாசிக்கின்றோம். பார்வோன் இஸ்ரவேலரை விடுவிக்க மறுத்துக்கூறிடவே தேவன் பல்வேறு வாதைகளை அனுப்பி எகிப்தியரை வாதித்தார். வாதைகளைக் கண்ட பார்வோன் இஸ்ரவேலரின் ஆண்கள் மட்டும் சென்று கர்த்தருக்குப் பலிசெலுத்த அனுமதி கொடுத்தான். மோசேயும் ஆரோனும் அதற்கு உடன்படவில்லை. தொடர்ந்து கர்த்தர் வெட்டுக்கிளிகளால் பெரிய வாதையினை எகிப்தின்மேல் அனுப்பினார்.
அதன்பின்னர் பார்வோன் மோசேயை அழைத்து, "உங்கள் கால்நடைகளை எகிப்தில் விட்டுவிட்டு நீங்கள் மட்டும் செல்லுங்கள்" என்றான். அப்போது மோசே, "எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது" ( யாத்திராகமம் 10 : 26 ) என்று உறுதியாகக் கூறினார்.
இந்த வசனத்தில், எந்தவொரு கால்நடையையும் விட்டுச் செல்ல முடியாது என்று மோசே கூறுவது கவனிக்கத்தக்கது. இது, எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலையானது ஒரு முழுமையான செயலாக இருக்கவேண்டும் என்று மோசே விரும்பியதைக் காட்டுகின்றது. மட்டுமல்ல, அவர்களுடைய கால்நடைகள் வெறும் விலங்குகள் அல்ல, அவை அவர்களின் பொருளாதார மற்றும் விவசாய வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாதவையாக இருந்தன. விவிலிய சூழலில், கால்நடைகள் அவர்களின் அன்றாட வாழ்விலும் பலி செலுத்தும் முறைகளிலும் முக்கியப் பங்கு வகித்தன. ஒரு குளம்பைக் கூட பின்விட்டுச் செல்வது என்பது, வழிபாட்டிற்கும் வாழ்வாதாரத்திற்கும் தங்களுக்குத் தேவையானவற்றில் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமமாகும்.
இது நமது ஆவிக்குரிய வாழ்வினை விளக்கும் அடிப்படையாகவும் உள்ளது. ஆவிக்குரிய விடுதலை என்பது முழு விடுதலையாக இருக்கவேண்டும். அன்று இஸ்ரவேலர்கள் எதையும் விட்டுவைக்க விரும்பாதது போலவே, நாமும் நமது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பழைய நிலையிலிருந்து விடுவித்து தேவனுக்கு அர்ப்பணிக்கத் தயாராக, முழு மனதுடன் நமது விசுவாசத்தில் உறுதியாக நிற்கவேண்டியது அவசியம்.
சிலர் தாங்கள் தேவனிடம் திரும்பிய பின்னரும் பழைய சில பாவ காரியங்களை விட்டுவிடாமல் இருப்பதுண்டு. நாம் மோசேயைப்போல தேவனிடம் முழு அன்பும் விசுவாசமும் உள்ளவர்கள் என்றால் மோசே கூறியதுபோல, "ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை" என்று எந்த ஒரு பழைய பாவத்தையும் விட்டுவைக்காமல் தேவனிடம் சரணடையவேண்டியது அவசியம்; நமது பழைய பாவ வாழ்க்கை முற்றிலும் மறக்கப்படவேண்டியது அவசியம்.
பார்வோன் மோசேயிடம் கூறியதுபோல சில வேளைகளில் சாத்தான் நம்மிடம். "இது என்னைப் பெரிய பாவம்? இதையெல்லாம் தேவன் பெரிதாக நினைக்கமாட்டார்" என்று நமது சில பாவங்களை நியாயப்படுத்தச் சொல்லலாம். நம்மை அவன் குழப்பலாம். நாமும்கூட சிலவேளைகளில் நமது மனதில், "இதெல்லாம் பெரிய பாவமே அல்ல" என எண்ணலாம். அன்பானவர்களே, சிறிய பாவம் பெரிய பாவம் என்று நாம் கணக்குப் பார்க்கத் தேவையில்லை.
ஒரு குட்டி ஆட்டையோ மாட்டையோகூட விட்டுவிட்டு எகிப்தைவிட்டுச் செல்ல மோசே சம்மதிக்கவில்லை. இதுபோலவே நாமும் கிறிஸ்து இயேசுவிடம் முழு சரணாகதி (Total surrender) அடையவேண்டும். எந்த ஒரு பாவத்தையம் விட்டுவிடாமல் அவரிடம் அறிக்கைசெய்து விட்டுவிடவேண்டியது அவசியம். "ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை" என உறுதியாகக் கூறி எகிப்திலிருந்து இஸ்ரவேலர் முழு விடுதலையினைப் பெற்றதுபோல நாமும் முழு விடுதலை பெற எல்லா பாவங்களையும் கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்போது மட்டுமே முழு விடுதலையினைப் பெற்று மகிழ முடியும்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1928
"கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்." ( ஏசாயா 25 : 4 )
தமிழ்நாட்டில் டிசம்பர் 26, 2004 அன்று சுனாமி தாக்கியதை நம்மில் யாரும் மறந்திருக்கமாட்டோம். அப்போது கடல் அலைகள் பனைமர அளவிற்கும் மேலான உயரத்தில் எழும்பி கரையைநோக்கி வந்து மிகப்பெரிய அழிவினை உண்டாக்கின. சுமார் 8000 க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் உயிரிழந்தனர். இதுதவிர, கோடிக்கணக்கான பணமதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகின.
கொடூரமானவர்களின் சீறல் இதுபோன்றதே என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அது மதிலை மோதியடிக்கும் பெருவெள்ளத்தைப்போல இருக்கின்றது. இவர்களால் ஏற்படும் அழிவும் சுனாமி அழிவு போன்றதே. பல கொடுங்கோல் மன்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் இப்படி இருந்திருக்கின்றனர். ஆனால் இத்தகைய கொடூரமான நேரங்களில் கர்த்தர் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாக இருந்திருக்கின்றார்.
சென்ற நூற்றாண்டுகளில் ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்கள்மேல் ஒடுக்குதலும் நொறுக்குதலும் மிகக்கடுமையாக இருந்தது. பலர் உயிரிழந்தனர். கிறிஸ்தவ ஆலயங்கள் நொறுக்கப்பட்டு வேதாகமங்கள் எரிக்கப்பட்டன. ஆனாலும் பல விசுவாசிகள் விசுவாசத்தைக் காத்துக்கொண்டு வாழ்ந்தனர். இதுபோல ஹிட்லரின் கொடுங்கோல் சட்டங்களுக்கும் தண்டனைகளுக்கும் பலர் பலியானாலும் அவர்களில் பலரை தேவன் அதிசயமான வழிகளில் பாதுகாத்தச் செய்திகள் பல உண்டு.
இதுபோல தாவீது ராஜாவின் ஆரம்ப நாட்களில் அவரை அழித்திட மோதியடிக்கிற வெள்ளத்தைப்போல பல எதிரிகள் எழுந்தனர். ஆனால் தேவன் அவரை அவர்களது கைகளுக்குத் தப்புவித்தார். இதனால்தான் அவர், "கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்." ( சங்கீதம் 28 : 7 ) என்று கூறுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, எத்தனை பெரிய சத்துருவாக இருந்தாலும் கர்த்தரது பெயருக்குமுன் அவைகள் நிற்கமுடியாது. அத்தகையச் சத்துருக்களின் முன் கர்த்தருடைய வெற்றிக்கொடி பறக்கும். இதனை நாம், "அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." ( ஏசாயா 59 : 19 ) என்று வாசிக்கின்றோம்.
இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி நமது கர்த்தர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாக இருக்கின்றார். அவரது வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோமென்றால் நமக்கு நிரந்தர பாதுகாப்பு உண்டு.
கிறிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களில் அப்போஸ்தலர்கள் பல்வேறு நெருக்குதலுக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளானார்கள். சாட்டை அடிகளும், சிறைச்சாலைகளும் அவர்களை அச்சுறுத்தின. ஆனாலும் அவர்களோடு கர்த்தரது கரம் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாக இருந்து பாதுகாத்தது.
இன்று நமக்கும் அடைக்கலமாகவும் புகலிடமாகவும் இருந்து நம்மைக் காப்பவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். எனவே நாம் அவரையே சார்ந்துகொண்டு வாழவேண்டியது அவசியம். அவரைக்குறித்து ஏசாயா தீர்க்கத்தரிசனமாக, "இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்" ( ஏசாயா 32 : 1, 2 ) என்று கூறுகின்றார். மோதியடிக்கும் பெருவெள்ளமோ புயலோ அவரிடமிருந்து நம்மைப் பிரித்து அழிக்கமுடியாது. விசுவாசத்துடன் நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடருவோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1929
"நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்." ( லேவியராகமம் 18 : 3, 4 )
ஒருமுறை ஒரு கிறிஸ்தவ நண்பர் என்னிடம், "பிரதர், தேவன் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர் என்று கூறுகின்றீர்கள் ஆனால் பழைய ஏற்பாட்டில் எகிப்தில் அந்த மக்களைக் கொன்று அழித்தது, இஸ்ரவேலரைக் கொண்டு பல போர்கள் மூலம் கானான் தேசத்து மக்களை, குறிப்பாக பெண்கள் குழந்தைகளை இரக்கமின்றி கொல்லச்சொன்னது போன்ற செயல்களைப் பார்க்கும்போது தேவன் இரக்கமுள்ளவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று கேட்டார்.
நான் அவரிடம் சொன்னேன், "உங்கள் வீட்டுப் பழைய பொருட்கள் போடும் இடத்தில் நல்லபாம்பு (Cobra) ஒன்று பல நூறு குட்டிகளைப் போட்டுள்ளதை நீங்கள் அறிந்தால் என்ன செய்வீர்கள்? ஐயோ, இந்தக் குட்டிகள் பாவம், இப்போதுதான் பிறந்துள்ளன என்று அவற்றைக் கொல்லாமல் விடுவீர்களா? எல்லாவற்றையும் கொன்று அழிப்பீர்களல்லவா? இதுபோலவே, பாவத்தைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணரான பரிசுத்த தேவன் இருக்கின்றார். அருவெறுப்பான பாலியல் பாவங்களை அவர் வெறுக்கின்றார். அருவெறுப்பான பாவ சந்ததி வாழக்கூடாது என்று விரும்புகின்றார்."
"நண்பரே, லேவியராகமம் 18:6-23 முதலான வசனங்களில் எகிப்து தேசத்தாரும் கானானியரும் செய்த இத்தகைய பாலியல் முறைகேடான பாவங்களைக்குறித்துத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவேதான் தேவன் அந்தச் சந்ததியையே அழித்தார்." என்றேன்.
ஆம், "இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததனாலே தேசம் தீட்டாயிற்று." ( லேவியராகமம் 18 : 26 ) எனவே, நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள் என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
தேவன் நம்மை மற்ற மக்களைப்போல நடத்தவில்லை. காரணம், நாம் தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்ட மக்கள் இனம். எனவே, "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்." ( லேவியராகமம் 20 : 26 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
இதுபற்றி அந்த நண்பரிடம் நான் கூறியபோது அவர் ஏளனமாகச் சிரித்துக்கொண்டு, "பிரதர், இவையெல்லாம் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள், நீங்கள் இவற்றை இந்தக்காலத்தில் கூறக்கூடாது" என்றார். நான் அவரிடம், "இவை புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டுள்ள கட்டளைகள்தான். அப்போஸ்தலரான பவுல் கூறுவதை வாசித்துப்பாருங்கள் என்று கீழ்வரும் பகுதியைக் காண்பித்தேன்:-
"அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." ( 1 கொரிந்தியர் 6 : 9,10 )
ஆம் அன்பானவர்களே, பரம கானானுக்குள் நாம் நுழைந்திட பரிசுத்தமாக நமது உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கவேண்டியது அவசியம். எனவே, நாம் எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அழிந்துபோன கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், கர்த்தருடைய நியாயங்களின்படி செய்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு பரிசுத்தமாக நடப்போம். நாம் தேவனுடைய பிள்ளைகளாக வாழ அவர் நம்மை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்துள்ளார்.
எகிப்து, கானான் மக்களைப்போல அல்லாமல் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் வாழும் நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின்மூலம் இந்தப் பாவங்களிலிருந்து முழுமையான விடுதலை உண்டு. எனவே இத்தகைய பாவங்கள் நம்மிடம் இருக்குமானால் கிறிஸ்துவிடம் அவற்றை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1930
"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 6 )
இன்றைய தியானத்தில் ஜெபத்தைக்குறித்தச் சில முக்கியமான சிந்தனைகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தருகின்றார்.
இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஆலய வழிபாடுகள், ஆராதனைகள் இவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து தனி ஜெபத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஆலய வழிபாடுகளும் ஆராதனைகளும் தேவை என்றாலும் தனிமையின் அந்தரங்க ஜெபமே நம்மைத் தேவனோடு ஐக்கியப்படுத்தும்; நமக்கும் தேவனுக்குமுள்ள உறவை வலுப்படுத்தும்; பாவத்தை மேற்கொள்ளும் பலத்தை தனி ஜெபத்தின்மூலம் மட்டுமே நாம் பெறமுடியும்.
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆலயங்களுக்குச் சென்றார். பல பண்டிகைகளில் கலந்துகொண்டார். ஆனால் அதே வேளையில் பிதாவோடு தனி ஜெபத்தில் அதிகநேரம் செலவிட்டார். "அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்." ( மாற்கு 1 : 35 ) என்று வாசிக்கின்றோம். ஆம், வனாந்தரம் தொந்தரவில்லாத இடம். மற்றவர்களின் இடையூறற்ற இடம்.
தனி ஜெபத்தை வேதம் ஏன் வற்புறுத்துகின்றது என்றால், தனி ஜெபத்தில் நாம் தேவனோடு தனிப்பட்டத் தொடர்பில் இருக்கின்றோம். அதாவது ஒரு நண்பனோடு உரையாடுவதுபோல நாம் தேவனோடு உரையாடுகின்றோம். இந்த ஐக்கியம் ஆலய வழிபாடுகளிலும் ஆராதனைகளிலும் பெரும்பாலும் நமக்குக் கிடைப்பதில்லை. இத்தகைய நமது தனிப்பட்ட ஜெபம் மற்றவர்களுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. அது தேவனுக்கும் நமக்குமிடையில் மட்டும் இருக்கவேண்டியது. எனவேதான் இன்றைய தியான வசனத்தில், "ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு" என்று இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார்.
நமது ஆலய ஆராதனையும் வழிபாடுகளில் நாம் கலந்துகொள்வதும் மற்றவர்களுக்கு வெளிப்டையாகத் தெரியும். ஆராதனைகளில் நாம் ஒன்று சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துகின்றோம். ஆனால் நமது தனி ஜெபம் நமக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும். தனி ஜெபத்தை அந்தரங்கத்தில்பார்க்கிற பிதா வெளியரங்கமாய் நமக்குப் பலனளிப்பார். எல்லா பரிசுத்தவான்களும் தனி ஜெபத்துக்கு அதிக நேரம் ஒதுக்கியவர்களே.
மேலும் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார், "அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்" ( மத்தேயு 6 : 7 ) என்று.
நாம் ஜெபிக்கும்போது நமக்குத் தெரிந்த வசனங்களையெல்லாம் சொல்லிச் சொல்லித்தான் ஜெபிக்கவேண்டுமென்று அவசியமில்லை. "உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்." ( மத்தேயு 6 : 8 ) எனவே, நமது இருதயம் தூய்மையாக இருந்து ஒரு பிள்ளைத் தாய் தகப்பனிடம் உரிமையோடும் அன்போடும் பேசுவதுபோல நாம் தேவனிடம் பேசி அவரோடு ஐக்கியமாக இருந்து ஜெபித்தால் போதும்.
பொதுவாகக் குடும்பங்களில் வயதான பெரியவர்களிடம் நேரம் ஒதுக்கிப் பலரும் பேசுவது கிடையாது. அத்தகைய முதியவர்கள் மனவேதனையுடன் இருப்பார்கள். இதுபோலவே வெறும் ஆலய ஆராதனைகளிலும் வழிபாடுகளிலும் கலந்துகொண்டு நாம் தனி ஜெபத்தைப் புறக்கணித்து வாழும்போது தேவனை மனவேதனை அடையச் செய்கின்றோம். தனி ஜெபமே தேவ ஐக்கியத்தை வளர்க்கும்.
ஆம் அன்பானவர்களே, அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கித் தனிமையில் ஜெபிக்கும்போது அந்தரங்கத்தில் பார்க்கிற நமது பிதா வெளியரங்கமாய் நமக்குப் பலனளிப்பார். இதுவரை தனி ஜெபத்தை மறந்து வாழ்ந்தவர்களாக இருந்தால் அதற்காக நேரம் ஒதுக்கி ஜெபிக்கப் பழகுவோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1931
"எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 24 )
இந்த உலகினில் துன்மார்க்கச்செயல்களைச் செய்யும் பலரும் அவற்றை பிறரிடமிருந்து மறைப்பதற்கும் நீதிமன்றங்களிலிருந்து தண்டனைகளைப் பெறுவதைத் தவிர்க்கவும் பல்வேறு குறுக்கு வழிகளையும் உபாயங்களையும் கையாண்டு அவற்றில் வெற்றியும் பெற்றுவிடுகின்றனர்.
கொலை, கற்பழிப்பு, களவு, ஊழல் செய்த பலரும்கூட தண்டனைகளிலிருந்து தப்பிப்பது மட்டுமல்ல, பெரிய பதவிகளும் வகிக்கின்றனர். அவர்களது மனதினில் தங்களை யாரும் கவனிக்கவில்லை, தாங்கள் நல்லவர்கள் என்று மக்கள் நம்புகின்றனர் எனும் எண்ணமே இருக்கின்றது. தங்களது அவலட்சணமான குணங்களைக்குறித்து அவர்கள் கவலைப்படுவதுமில்லை.
இன்றைய தியான வசனத்தில் அத்தகைய துன்மார்க்கர்களைப்பார்த்துத் தேவன், "எவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக் கொள்ளக்கூடுமோ நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ" என்று கூறுகின்றார். "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." ( எபிரெயர் 4 : 13 )
உலக நீதிபதிகள்முன் லஞ்சம் கொடுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தியும் தண்டனைகளுக்குத் தப்பலாம். ஆனால் சர்வ லோகத்தையும் படைத்த தேவனுக்குமுன் இவை எதுவும் நம்மைத் தப்புவிக்காது.
ஆனால் பொதுவாக, பணம், அதிகாரம் இவை மனிதர்களின் மனக்கண்களைக் குருடாக்கிவிடுகின்றன. எனவே அவர்கள் தங்களது துன்மார்க்கத்திலேயே வாழ்வைத் தொடர்கின்றனர். ஆழ்மனதில் மனச்சாட்சியின் உறுத்தல் இருப்பதால் அவ்வப்போது கடவுளுக்கு என்று பல்வேறு காணிக்கைகளையும் நேர்ச்சைகளையும் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். கைகளில் பல்வேறு மந்திரித்தக் கயிறுகளையும் தாயத்துகளையும் கட்டிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் துன்மார்க்கர்களுக்கு மட்டும் எச்சரிக்கைக் கொடுக்கவில்லை: ஆவிக்குரிய மக்களாகிய நாமும்கூட எச்சரிக்கையுடன் வாழவேண்டியது அவசியம் எனும் எச்சரிப்பைத் தருகின்றது. இதனால்தான் சங்கீத ஆசிரியர், "உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்." ( சங்கீதம் 139 : 7, 8 ) என்று கூறுகின்றார்.
எனவே நாம் கர்த்தருக்குப் பயந்த வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். பயந்த வாழ்க்கை என்றவுடன் எப்போதும் நடுநடுங்கி நாம் வாழவேண்டும் என்று பொருளல்ல, மாறாக "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" என்று வேதம் கூறுகின்றது. அதன்படி தீமையான காரியங்களுக்கு விலகி நாம் வாழவேண்டியது அவசியம்.
பல்வேறு மலர் மாலைகளையும் நறுமணப்பொருட்களையும் அகர்பத்திகளையும் தேவனுக்கென்று படைப்பதையல்ல, மாறாக நமது நறுமணமான வாழ்க்கையை நாம் அவருக்குமுன் காண்பிப்பதையே தேவன் விரும்புகின்றார். ஆம், "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்" ( ஏசாயா 11 : 3 ) என்று கூறியுள்ளபடி நாம் அவருக்கு வாசனையைத் தருபவர்களாக வாழவேண்டியது அவசியம்.
வானத்தையும் பூமியையும் நிரப்புகிற தேவனாகிய கர்த்தருக்குமுன் ஒளிவு மறைவற்ற நேர்மையான தூய வாழ்க்கை வாழ நம்மை அவருக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுப்போம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1932
"நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை." ( உன்னதப்பாட்டு 1 : 6 )
இன்றைய தியான வசனம் இந்த உலகத்தில் மற்றவர்களால் அற்பமாக எண்ணப்பட்டு புறக்கணிக்கப்படும் ஆவிக்குரிய ஒரு பெண் (மணவாட்டி) கூறுவதாக உள்ளது.
தனது இழிவான நிலைகுறித்து அவள் கூறுகின்றாள, வெய்யிலில் வேலை செய்து என் உடல் கருப்பாக மாறிவிட்டது; அப்படி வேலை செய்ய வைத்தது வேறு யாருமல்ல, என் தாயின் பிள்ளைகள் என்கின்றாள் அவள். அதாவது அவளது உடன்பிறந்த சகோதர சகோதரிகள். தனது சொந்த வேலைகளைகூடச் செய்யவிடாமல் அவளைக் கட்டாயப்படுத்தித் தங்களுக்குத் திராட்சைத்தோட்டக் காவல்காரியாக வைத்தார்கள். வெய்யிலில் உழைத்து உழைத்து அவளது தேகம் கருத்துப்போனது. ஆனால் "என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை; அதனைக் காக்க அவர்கள் என்னை விடவில்லை" என்கின்றாள் அவள்.
இதுபோலவே ஆவிக்குரிய மக்கள் பலர் உலகத்தில் தங்கள் குடும்பத்தினராலும் சமூகத்தினராலும் ஒடுக்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அடிமைகள்போல நடத்தப்படுகின்றனர். ஆனால் தேவன் அவர்களது உள்ளான மனதினை அறிவார். இன்றைய தியான வசனத்தில் அவள் தன்னைப் புறக்கணிக்கும் மக்களுக்குத் தனது வேதனையை வெளிப்படுத்திக் கூறுகின்றாள், "நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்".
வெளி அழகைப்பார்த்து, எனது ஏழ்மை நிலையைப்பார்த்து என்னை ஒதுக்காதீர்கள் என்று அவள் கூறுகின்றாள். ஆம் அன்பானவர்களே, தேவன் வெளி அழகையோ செல்வத்தின் திரட்சியையோ பார்த்து நம்மை நேசிப்பதில்லை. அவர் மனிதர்களின் இருதயத்தைப் பார்க்கின்றார். "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்".(1 சாமுவேல் 16 : 7) என்று நாம் வாசிக்கவில்லையா?
ஒடுக்கப்பட்ட இந்தப்பெண் இந்த உண்மையினை அறிந்திருந்தாள். எனவே அவள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றாள், "எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்." ( உன்னதப்பாட்டு 1 : 5 ) அதாவது உலகிற்கு நான் கருப்பாக அழகற்றவளாக இருக்கலாம், ஆனால் என் தேவனுக்குமுன் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றாள்.
மற்றவர்களை அற்பமாக எண்ணி அவர்களைப் புறக்கணிப்பது, குறிப்பாக அவர்களது பொருளாதாரக் குறைவு, உடல் அமைப்பு, நிறம் இவற்றைக்கொண்டு மற்றவர்களைப் புறக்கணிப்பதைத் தேவன் வெறுக்கின்றார். அவரே அனைத்து ஆத்துமாக்களையும் உண்டாக்கியவர். அவர் தனக்கான மக்களை அழகிப்போட்டி நடத்தியோ ஆணழகன் போட்டி நடத்தியோ தேர்வு செய்வதில்லை. மாறாக, இருதயத்தைக் கவனித்துப்பார்த்தே தேர்வுசெய்கின்றார்.
இப்படி மற்றவர்களை அற்பமாக எண்ணி அவமதிப்பவர்கள் தங்களது பாவ நிலைக்கு தேவனிடம் மன்னிப்பைக் கேட்கவேண்டியது அவசியம். அதுபோல, இன்று இத்தகைய அவமதிப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகியிருப்பீர்களென்றால் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கையில் பின்மாற்றமின்றி தொடர்ந்து, விசுவாசத்துடன் இந்தப்பெண் கூறுவதுபோல கூறிக்கொள்ளுங்கள் "நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்" என்று. ஆம் தேவனுக்குமுன் நெருக்கமான இத்தகைய வாழ்க்கை வாழும் நாமே அழகானவர்கள்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1933
"ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது." ( மத்தேயு 10 : 29 )
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய இன்றைய தியான வார்த்தையானது துன்பவேளைகளில் நமது விசுவாசத்தை நாம் காத்துக்கொள்ள உதவுவதாக இருக்கின்றது. சாதாரண அடைக்கலான் குருவியைத் தரையில் விழுந்துவிடாமல் பாதுகாக்கும் தேவன் குருவிகளைவிட எத்தனையோ மடங்கு மேலான தான் உருவாக்கிய மனிதர்களை ஆழிந்துபோகவிடுவாரா? நிச்சயமாக விடமாட்டார் எனும் நம்பிக்கையை இயேசு நமக்கு அளிக்கின்றார்.
ஒருமுறை ஒரு கடவுள் நம்பிக்கையற்ற மனிதன் துன்பத்தின் நெருக்கடியில் சோர்ந்துபோய் வாழ்க்கையில் இனி என்னசெய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து மடிந்துவிடக்கூடிய நிலைக்கு வந்துவிட்டான். பல்வேறு நெருக்கடிகள், கடன்பாரங்கள், துன்பங்கள் அவனை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தன. தனது நிர்ப்பாக்கிய நிலையினை எண்ணி வருந்தியவனாக வீட்டில் முடங்கி இருந்த அவனிடம் மனைவி கடையில் சென்று சில பொருட்களை வாங்கிவரச் சொன்னாள். அவன் அப்படியே பொருட்களை வாங்கிவிட்டு பத்துகாசுக்கு கடலையும் வாங்கிக்கொண்டான்.
அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து கடலையைச் சாப்பிடத் துவங்கினான். அப்போது அந்தக் கடலை பொதியப்பட்டக் காகிதத்தில் இன்றைய தியான வசனம் இருப்பதை அவன் கண்டான். அதனைத் தொடர்ந்து அவன் வாசித்தபோது, "ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள்." ( மத்தேயு 10 : 31 ) என்று வார்த்தைகள் இருந்தன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் அவனுக்குள் புத்துணர்வினைக் கொடுத்தன. "உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது" என்ற வரிகள் அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தன. பிதாவின் சித்தமில்லாமல் ஒரு சிறு குருவியே விழாது என்று கூறும்போது, அவரது சித்தமில்லாமல் நான் எப்படி விழுவேன்? என்று எண்ணத் துவங்கினான். அவனது நண்பர் ஒருவர் ஆவிக்குரிய கிறிஸ்தவராக இருந்தார். அவர் பலமுறை அவனிடம் தேவனிப்பற்றி எடுத்துக்கூறியுள்ளார். அப்போதெல்லாம் அவரைக் கேலி செய்த இந்த மனிதனுக்கு அவரது நினைவு வந்தது. நேராக அவரது வீட்டிற்குச் சென்று தனது இந்த அனுபவத்தைக் கூறினான். பின்னர் அவரது வழிநடத்துதலின்படி மனம்திரும்பிய மனிதனாக மாறினான். அவனது வாழ்க்கையும் மாறியது.
ஆம் அன்பானவர்களே, வேத வசனங்கள் எதுவும் ஆவியின் வல்லமை இல்லாதவையல்ல. ஒரு சிறு வார்த்தைகூட மனிதர்களை மாற்றிவிடும். பிதாவின் சித்தமில்லாமல், வேத வார்த்தைகள் ஒன்றாகிலும் வீணாகத் தரையிலே விழாது.
இன்று சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை செய்வதைப் பார்க்கின்றோம். தேர்வு எழுதப் பயந்து சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; தேர்வு முடிவு வருவதற்குமுன் பயந்து சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; இன்னு சிலர் தேர்வு முடிவு அவர்களுக்குத் தோல்வியாக இருந்ததால் தற்கொலை செய்கின்றனர். ஆம் நாம் நமது குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவனைக்குறித்து, அவரது வல்லமையினைக் குறித்து நாம் அறிவிக்கும்போது இந்த வகையான விபரீதங்களுக்கு அவர்களைத் தப்புவிக்கலாம்.
"இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." ( ஏசாயா 43 : 19 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
ஆம், ஒன்றினை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். தொழில் முயற்சியில் தோல்வி என்பது வாழ்க்கையின் தோல்வியல்ல; எடுத்தக் காரியம் தோல்வியில் முடிவது வாழ்க்கையின் தோல்வியல்ல; தேர்வில் தோல்வி நமது வாழ்க்கைத் தோல்வியல்ல. அடைக்கலான் குருவிகளை தரையில் விழுந்துவிடாமல் காப்பாற்றும் தேவன் அவர்களைவிட மேலான மனிதர்களை நிச்சயம் வாழ்க்கையில் கீழே விழவிடமாட்டார். எனவே விசுவாசத்துடன் அவரைப் பற்றிக்கொள்வோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1934
"விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தன." ( எபிரெயர் 11 : 30 )
எபிரெயர் நிருபத்தின் பதினொன்றாம் அதிகாரம் விசுவாசத்தை விளக்கும் அற்புதமான ஒரு பகுதியாகும். இங்கு பல விசுவாச வீரர்களைக்குறித்து நாம் வாசிக்கின்றோம். இவை ஒவ்வொன்றும் நாம் சிந்தித்துத் தியானிக்கவேண்டியவை. எத்தகைய உறுதியான விசுவாச வாழ்க்கையினை இந்த விசுவாசிகள் வாழ்ந்துள்ளார்கள் என்பது நம்மையும் உணர்வூட்டுவனவாக உள்ளன. கிறிஸ்தவர்களாகிய நாமும் இத்தகைய விசுவாசவாழ்வு வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். எனவேதான், விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாத காரியம் என்று வேதம் அறிவுறுத்துகின்றது.
"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று கூறப்பட்டுள்ள வசனத்துக்குச் சரியான உதாரணமாக இஸ்ரவேலரின் எரிகோ பட்டணத்தின் மதில்கள் தகர்ப்பு உள்ளது. பல போர்களை நடத்திய இஸ்ரவேலருக்கு இந்த அமைதிப்பயணம் வித்தியாசமான விசுவாசப்பயணம். நினைத்துப்பாருங்கள், மிகப்பெரிய மதில்ச் சுவரை இடிப்பதற்கு அதனைத் தொடாமல், அதனை எதுவுமே செய்யாமல் வெறுமனே சுற்றிவந்தால்போதும் என்று கூறுவதை எப்படி ஒருவரால் நம்பமுடியும்? ஆனால் இஸ்ரவேல் மக்கள் நம்பினார்கள். அவர்கள் நம்பியபடி வெற்றியும் பெற்றனர்.
இத்தனைக்கும் எரிகோவின் மதில்கள் நாம் காணும் வெறும் கற்சுவர்கள் போன்றதல்ல. தொல்லியல்துறையினர் எரிகோவில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் அடிப்படையில், அந்தச் சுவரின் பிரம்மாண்டமான அளவுகள் நம்மை இப்போதும் அதிசயிக்கச் செய்கின்றன. அந்த மதில்ச் சுவரின் அகலம் சுமார் 1.5 முதல் 2 மீட்டர் (4.9 முதல் 6.6 அடி). உயரம் 3.7 முதல் 5.2 மீட்டர் (12 முதல் 17 அடி). இத்தனைப் பெரிய மதில்ச் சுவரைத் தகர்ப்பதற்குத்தான் யோசுவா இஸ்ரவேல் மக்களிடம் ஏழு நாட்கள் அதனைச் சுற்றி வரச்சொல்கின்றார்.
"ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்." ( யோசுவா 6 : 4, 5 )
அன்பானவர்களே, இது நம்ப முடியாத காரியம்தான். ஆனால் இஸ்ரவேல் மக்கள் அதனை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அதன்படி ஏழு நாட்கள் சுற்றிவந்தனர். வெற்றியும் பெற்றனர். இதனைத்தான் இன்றைய தியான வசனத்தில், "விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தன" என்று வாசிக்கின்றோம்.
இன்று நமது வாழ்க்கைக்கும் இந்தச் சம்பவம் மிக பயனுள்ள ஒன்றாக இருக்கின்றது. நமது வாழ்க்கையில் எரிகோ மதில்போல பல எதிர்மறையான காரியங்கள் தடையாகத் தெரியலாம்; கடக்கவே முடியாதவையாகத் தெரியலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார், "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்." ( மாற்கு 9 : 23 ) விசுவாசத்தோடு தேவனை நம்பி வாழ்ந்தால் போதும்.
எரிகோ தகர்க்கப்பட்ட சம்பவத்தில் முதல் ஆறு நாட்கள் மக்கள் அமைதியாகச் சுற்றிவந்தார்கள். ஏழாம்நாளிலும் முதலில் ஆறுமுறை அமைதியாகவும் பின்னர் ஆர்ப்பரிப்புடனும் துதித்தார்கள். பிரமாண்டமான அந்த மதில்ச்சுவர் தகர்க்கப்பட்டது. ஆம் அன்பானவர்களே, நமக்கும் நமக்குமுன் தடையாக இருக்கும் பிரச்சனைகள் எனும் மதில் சுவரானது தகர்க்கப்பட தேவன் குறிப்பிட்டாக காலத்தையும் நேரத்தையும் வைத்துள்ளார். அதுவரை நாம் விசுவாசத்துடன் அமைதியாக மதிலைச் சுற்றிவந்த இஸ்ரவேலரைப்போல அமைதியில் ஜெபிப்போம். மதிலைத் தேவன் நமக்காகத் தகர்க்கும்போது நாம் நம்மையறியாமல் தேவனை ஆர்ப்பரித்து மகிமைப்படுத்துவோம்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1935
"அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?" ( லுூக்கா 16 : 11 )
எல்லா மனிதர்களும் தங்களிடம் பணி செய்பவர்களும் தங்களோடு பழகுபவர்களும் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார்கள். ஆனால் இப்படி விரும்பும் பெரும்பாலான மனிதர்களும் தாங்களும் அப்படி உண்மையுள்ளவர்களாக வாழவேண்டுமென்று எண்ணுவதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு மனிதர், "பொய் சொல்பவர்களை எனக்குக் கண்டாலே பிடிக்காது....நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வேன், என்னிடம் பொய் சொல்வதை மட்டும் பொறுத்துக்கொள்ளமாட்டேன்" என்று அடிக்கடிக் கூறுவார். ஆனால் இந்த மனிதர் வாயைத்திறந்தாலே பொய்யாகத்தான் இருக்கும்; அவரது தொழிலையும் பல்வேறு பொய்களைச்சொல்லியே நடத்திக்கொண்டிருக்கின்றார்.
நாம் கவனித்துப்பார்த்தால் புரியும், ஒருவர் தனக்கு ஏதாவது பொருளாதார இலாபம் இருப்பதால்தான் பொய்க்கூறுகின்றார். அதாவது குறுக்கு வழியில் செல்வந்தனாகிவிடவே அப்படிப் பொய்வழியைத் தேடுகின்றார். ஆனால் தேவன் கூறுகின்றார், "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." ( நீதிமொழிகள் 28 : 20 ) என்று.
ஆம் அன்பானவர்களே, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லா உலகக் காரியங்களிலும் நாம் உண்மையல்லவர்களாக வாழவேண்டியது அவசியம். சிறிய காரியத்தில் உண்மையாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் உண்மையுள்ளவனாக இருப்பான். இதனையே இன்றைய தியான வசனத்தின் முன்பு இயேசு கூறுகின்றார், "கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்." ( லுூக்கா 16 : 10 ) என்று.
நமக்குக் கொடுக்கப்பட்டது சிறிய உலக வேலையாக இருந்தாலும் அந்த வேலையில் உண்மையுள்ளவர்களாக இருப்போம். வேலைக்காரர்கள் எப்படித் தங்கள் எஜமானனுக்குப் பணிசெய்யவேண்டும் என்பதனை அப்போஸ்தலரான பவுல், "மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்." ( எபேசியர் 6 : 6 ) என்றும் "மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்." ( எபேசியர் 6 : 8 ) என்றும் கூறுகின்றார். அதாவது, நாம் செய்யும் உலகவேலையின் எஜமான் கர்த்தரே என்று எண்ணி நாம் வேலைசெய்யவேண்டும்.
இப்படிக் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களையே தேவன் தனது பணிக்காகப் பயப்படுத்துகின்றார். இதனையே அப்போஸ்தலரான பவுல், "என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்." ( 1 தீமோத்தேயு 1 : 12 ) என்று கூறுகின்றார்.
ஆலயங்களுக்குச் சென்று ஆராதிப்பதிலும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதிலும், காணிக்கைகள் கொடுப்பதிலும் காட்டக்கூடிய ஆர்வத்தைப் பலரும் உண்மையுள்ள வாழ்க்கை வாழ்வதற்குக் கொடுப்பதில்லை. தேவசந்நிதியில் சென்று சேர இதுவே தகுதி. "துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்." ( எபிரெயர் 10 : 22 ) என்று வாசிக்கின்றோம்.
இந்த உலகத்தில்கூட பல நிறுவனக்களில் உண்மையுள்ள ஊழியர்களையே கண்டறிந்து உயர் பதவிகளில் அமர்த்துகின்றனர். அப்படி இருக்கும்போது தேவன் எப்படி உண்மையில்லாத மனிதர்களுக்கு மேலான பரலோக ஆசீர்வாதங்களைக் கொடுக்கமுடியும்? ஆம், உண்மையில்லாத பொய்யர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் நரகமே. ".........பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்" ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8 ) என்று எச்சரிக்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1936
"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 )
பொதுவாக மனிதர்களுக்குத் தங்களது குற்றங்களையும், குறைகளையும், பாவங்களையும் பிறர் எடுத்துக்கூறுவது பிடிக்காது. அதிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தங்களைப் பிறர் குறைகூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வழியுண்டு. இதுபோலவே, விசாரணைக் கைதியான பவுல் பேசிய பேச்சுக்கள் பேலிக்சை உள்ளத்தில் குத்தியதால் அவன் பயமடைந்தான். ஆனாலும் அவன் மனம் திரும்பவில்லை.
உண்மையினை நேருக்குநேர் சந்திக்க பலரும் விரும்புவதில்லை. பேலிக்ஸ் ராஜாவும் அப்படியே இருந்தான். பவுல், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்தான் என்று வாசிக்கின்றோம். இந்த பயத்துக்குக் காரணம் என்ன? அவனிடம் நீதி, இட்சையடக்கம் போன்ற குணங்கள் இல்லை என்று பொருள். எனவே அவன் இருதயத்தில் குத்தப்பட்டான்.
யூதர்கள் குற்றம் சுமத்தி பவுல் அப்போஸ்தலர் கைதுசெய்யப்பட்டு ரோமையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது அவரிடம் பேலிக்ஸ் ராஜா விசாரணை செய்தான். அந்த நியாய விசாரணையிலும்கூட பவுல் அப்போஸ்தலரது பதில்களும் மறுமொழிகளும் சுவிசேஷ அறிவிப்புகளாகவே வெளிவந்தன. பவுல் பேசிய பேச்சுக்களைக் கேட்டு பேலிக்ஸ் பயமடைந்தான்.
இன்றும் பலர் இதுபோலவே இருக்கின்றனர். ஆதவன் வேதாகம தியானங்களை வாசிக்கும் பலரும் ஆசீர்வாதச் செய்திகள் இருந்தால் அதனை இரசித்துப் பேசுகின்றனர். அதேவேளையில் தங்களைப் பாதிக்கும் அல்லது உள்ளத்தில் அவர்களைக் குத்தக்கூடிய செய்திகளை விரும்புவதில்லை. சமூக வலைத்தளங்களில் ஆதவன் செய்திகளுக்கு வரும் விமரிசனங்களைப் பார்த்தாலே இது புரியும். ஆம், எப்போதும் ஆசீவாத வசனங்களையே கூறிக்கொண்டிருந்தால் பாராட்டுவார்கள். தங்களது மறைமுகப் பாவங்களை உணர்த்தும் வசனங்களுக்கான விளக்கத்தைப் பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை.
அப்போஸ்தலரான பவுல் பேசிய வார்த்தைகள் பேலிக்ஸ் ராஜாவை அச்சுறுத்தின. எனவே அவன், "நீ போகலாம், எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன்" என்று கூறி அனுப்பிவிட்டான். அன்பானவர்களே, தேவன் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புவதால் பொறுமையோடு காத்திருந்து பல்வேறு விதமாகத் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தாமல் பேலிக்ஸ் ராஜாவைப்போல, "எனக்குச் சமயம் கிடைக்கும்போது பேசலாம், நீ போ " என உதறிவிட்டோமானால் இரட்சிப்பு அனுபவத்தை நாம் பெறமுடியாது.
குறிப்பிட்டச் சில வேத வசனங்களைக் கேட்கும்போது நமக்கு எரிச்சலோ, கோபமோ பயமோ வருகின்றது என்றால் நம்மிடம் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள். வசனத்தின்மேலோ, அதனைக் கூறுபவர் மேலோ கோபம் கொள்ளாமல் நம்மை ஆராய்ந்துபார்த்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திரும்புவோம்.
"அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 ) பேலிக்ஸ் இராஜாவைப்போல, "நீ போகலாம் எனக்குச் சமயம் கிடைக்கும்போது உனது பேச்சைக் கேட்பேன்" எனும் மனநிலை நமக்கு இருக்குமானால் நாம் கிறிஸ்துவை வாழ்வில் அறியமுடியாத நிலை ஏற்படலாம்.
"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." ( ஏசாயா 55 : 6 )
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1937
"துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ? கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?" ( மீகா 6 : 10, 11 )
பாவ வாழ்க்கையினைவிட்டு மனம்திரும்புதலை தேவன் அதிகமாக விரும்புகின்றார். மனம்திரும்பும் மக்களிடம் அதிக அன்பு காட்டுகின்றார். பாவ இருளில் இருக்கும் மனிதர்களை விடுவித்து நித்திய ஒளியிடம் வழிநடத்தவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார்.
ஆனால், ஒருவர் கர்த்தரிடம் மனம்திரும்பி வருகின்றாரென்றால் அவர் பூரணமாக மனம்திரும்பி வரவேண்டியது அவசியம். தங்களை பிரச்சனைகளும், நோய்களும் துரத்தி வாட்டும்போது அவற்றிலிருந்து தப்பிக்க மனம்திருப்பிச் சில நல்ல செயல்களைச் செய்துவிட்டு அதன்பின்னர் பழைய வாழ்க்கையினைத் தொடர்வதையும் தேவன் முற்றிலும் விரும்புவதில்லை.
நமது பழைய பாவ வாழ்க்கை முற்றிலும் நம்மைவிட்டு அகற்றப்படவேண்டியது அவசியம். இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது, உன் வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பணமும், அருவருக்கப்படத்தக்க அளவு குறைந்த கள்ள மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவா? கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இன்னும் உன் வீட்டில் இருக்கும்போது, உன்னைத் சுத்தமுள்ளவர்களென்று நான் எண்ணுவேனோ? என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
கள்ளத் தராசு, எடைகுறைந்த படிக்கற்கள், போன்றவை ஒருவரது துன்மார்க்கத்தனத்துக்கு உருவகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவர் துன்மார்க்கத்துக்குக் காரணமான குணத்தையோ, தொடர்ந்து துன்மார்க்கத்தைச் செயல்படுத்த ஏதுவான கருவிகளையோ முற்றிலும் தன்னைவிட்டு அகற்றாமல் வைத்துக்கொண்டு ஆலயத்தில்வந்து ஜெபிப்பதை நான் எப்படி ஏற்றுக்கொள்வேன்? உங்கள் ஜெபத்தை சுத்தமுள்ள ஜெபம் என்று நான் எப்படி எண்ணுவேன் என்கின்றார் பரிசுத்தமான கர்த்தர்.
இதனையே ஏசாயா நூலிலும் நாம் வாசிக்கின்றோம்:- "நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" ( ஏசாயா 1 : 15,16 )
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சகேயு எனும் மனிதன் சந்தித்தபோது அவன் முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டான். ஆயக்காரனாகிய அவனது வீட்டில் இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்கள் அதிகம் இருந்தன. இயேசு கிறிஸ்து அவன் வாழ்வில் இடைப்பட்டபின்னர் அவன் அவை அனைத்தையும் அகற்றிவிடத் தீர்மானித்தான். எனவே, "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்". ( லுூக்கா 19 : 8 )
இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி அவன் துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களையும் தன்னிடமிருந்த கள்ளத்தராசு கள்ளப் படிக்கற்கள் போன்ற குணத்தையும் விட்டுவிடத் தயாரானபோது, "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே." ( லுூக்கா 19 : 9 ) என்றார்.
ஆம் அன்பானவர்களே, நமது தேவைக்காக மட்டும் நாம் தேவனிடம் நடிக்கமுடியாது. முற்றிலும் நம்மிடமுள்ள துர்க்குணங்கள் முற்றிலுமாக நம்மைவிட்டு அகற்றப்படவேண்டியது அவசியம். குறைந்த மரக்காலும் கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் நம்மிடம் இன்னும் இருக்கும்போது, நம்மை அவர் சுத்தமுள்ளவர்களென்று எப்படி எண்ணமுடியும் ? சகேயுவைபோல அவை அனைத்தையும் விட்டுவிடும்போதுதான் மெய்யானத் தேவ ஆசீர்வாதத்தினை நாம் பெற்று மகிழ முடியும்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1938
"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" ( ஓசியா 8 : 14 )
இன்று நமது நாட்டில் நாம் பல்வேறு பிரமாண்ட கிறிஸ்தவ ஆலயங்களைப் பார்க்கின்றோம். இத்தகைய ஆலயங்களைப் பகட்டாகக் கட்டுவதற்குக் கோடிக்கணக்கான பணம் மக்களால் செலவழிக்கப்படுகின்றது. மக்கள் அதுகுறித்துக் கவலைப்படுவதுமில்லை. பல ஊர்களில் தங்களது ஆலயக் கோபுரம் அருகிலுள்ள பிற ஊர்களிலுள்ள கோபுரங்களைவிட உயரமாக இருக்கவேண்டுமென்று போட்டிபோட்டு உயர்த்தப்படுகின்றன. மக்களும் ஆலயக் கட்டுமானத்துக்கு என்று யாராவது கேட்கும்போது மறுப்பதில்லை; தங்களால் முடிந்த பணத்தைக்கொடுத்து உதவுகின்றனர்.
ஆலய கட்டுமானத்துக்கு நன்கொடை சேகரிப்பதில் ஆலயக் கமிட்டியினர் கடினமாக உழைக்கின்றனர். பலநூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து பணம் திரட்டுகின்றனர். இதுதவிர, லாட்டரி குலுக்கல் மூலம் பரிசுகள் அறிவித்து ஆலயக் கட்டுமானத்துக்குப் பணம் திரட்டப்படுகின்றது.
ஆனால், இப்படி நன்கொடை சேகரிப்பதில் நாட்டம்கொண்டு அலைபவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்களும் தங்களது தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்துவை அறிந்திருக்கிறார்களா, ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றார்களா என்பது கேள்விக்குறியே. நன்கொடை சேகரிப்பதிலும் ஆலயப் பணிகளிலும் காட்டும் ஆர்வத்தைத் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டும் இவர்களில் என்று எத்தனைபேர் முயலுகின்றனர்?
ஆம் அன்பானவர்களே, இப்படித் தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருந்துகொண்டு ஆலயப்பணிகளுக்காக உழைப்பதையே "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" என்று. இன்றைய வசனம் வேதனையோடு குறிப்பிடுகின்றது.
அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் கர்த்தருடைய விசுவாசிகளான நாம் தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நமது உடல்தான் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது. "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள்.
ஆம், நாம் நம்முடையவர்களல்ல; தேவனுக்கானவர்கள். முதலில் தேவனுக்கு உரியதான நமது உடல் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"( 1 கொரிந்தியர் 3 : 16 )
நாம் முதலில் கட்டவேண்டியது நமது உடலான ஆலயத்தை. உடலால் பாவிகளாக இருந்துகொண்டு வானுயர ஆலயம் கட்ட முயலுவதிலோ, கட்ட உதவுவதிலோ அர்த்தமில்லை; அத்தகைய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டபின்னர் அதற்காக உழைத்தவர்களின் பெயர் பட்டியல் கல்வெட்டில் பதிக்கப்படுவதில் அர்த்தமில்லை. இத்தகைய செயல்பாடுகளைத் தேவன் விரும்புவதுமில்லை. தன்னை உண்டாக்கினவரை மறந்து ஆலயத்தைக் கட்டுவோர் தங்களது சுய பெருமைக்காகவே சில, பல செயல்களைச் செய்கின்றனர்.
நாம் மண்ணினாலல்ல கிறிஸ்து இயேசுவின்மேல் நமது சரீரமாகிய ஆலயத்தைக் கட்டவேண்டும். அதாவது, போடப்பட்ட அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின்மேல் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வைக் கட்டவேண்டும். (1 கொரிந்தியர் 3:11,12) என்கிறார் பவுல் அடிகள். நாம் நமது உடலான ஆலயதைக் காட்டாமல் பெருமைக்காகவும் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறவேண்டியும் மண்ணாலான ஆலயத்தைக் கட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டு நமது உடலான ஆலயத்தை கட்டாமல் இருந்து அதனைக் கெடுத்துவிட்டோமானால் அது நமது ஆத்துமாவுக்குப் பெரிய அழிவையே கொண்டுவரும்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் பின்வருமாறு எச்சரிப்பு கலந்த அறிவுரைகூறுகின்றார்:- "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) ஆம் அன்பானவர்களே, முதலில் நமது உடலாகிய ஆலயத்தைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள முயற்சியெடுப்போம்.
"வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 49 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர். ஆம், கல், மண், செங்கல் கொண்டு கட்டும் ஆலயத்தைவிட நமது உடலான ஆலயம் மேலானது. அதனை பரிசுத்தமாக வாழ்ந்து கட்ட முயற்சிப்போம். அதனையே தேவன் விரும்புகின்றார்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1939
"அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 147 : 11 )
இந்த உலகத்தில் மனிதர்கள் தங்களது சுய பலத்தினால் பல அரிய செயல்களைச் செய்யமுடியும். இப்படி மனிதர்கள் தங்களது சுய பலத்தை நம்பி பல செயல்களைச் செய்து வெற்றிபெறுவதால் பலர் கடவுளுக்கு உரிய மதிப்பினைக் கொடுக்காமல், "எல்லாம் என்னால் முடியும்" எனும் மனநிலையில் வாழ்கின்றனர். வெளியில் இப்படிக் கூறாவிட்டாலும் அவர்களது உள்ளான மனநிலை இப்படியே இருக்கின்றது. எனவே, தங்களைவிடத் தகுதி குறைந்தவர்கள் என்று இவர்கள் எண்ணுபவர்களிடம் வேற்றுமை பாராட்டி மனதளவில் அவர்களை பலவேளைகளில் ஒதுக்குகின்றனர்.
ஆனால் நாம் எவ்வளவுதான் பலமுள்ளவர்களாக, செல்வாக்குள்ளவர்களாக இருந்தாலும் கர்த்தரது கிருபை இல்லாமல் நம்மால் எதுவும் செய்யமுடியாது. இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம், "அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்" என்று வாசிக்கின்றோம். இந்த வசனத்தில் குதிரை, வீரனுடைய கால்கள் என்பன சுய பலத்தினைக் குறிக்கின்றன. குதிரை வலிமையான ஒரு மிருகம். அதனைப் பழங்காலத்தில் போருக்குப் பயன்படுத்தினார்கள். வலிமையான குதிரைப்படை, இராணுவ வீரர்களின் எண்ணிக்கை இவை ஒரு அரசனின் பலத்துக்கு அடையாளம். ஆனால், வெற்றிபெற இவை மட்டுமே தகுதியல்ல.
பார்வோனிடம் வலிமையான குதிரைப்படையும், தேர்களும் இராணுவ வீரர்களும் இருந்தனர். ஆனால் மோசே வழிநடத்திய இஸ்ரவேல் மக்களிடம் இவை எதுவும் இல்லை. அவர்கள் தேவனது கிருபையினை மட்டுமே நம்பி வழிநடந்தனர். இறுதியில் நடந்த சம்பவங்கள் நமக்குத் தெரியாதவையல்ல. ஆம், வலிமையான குதிரைப்படைகளும் வீரர்களும் செங்கடலில் அழிந்துபோயினர். ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். அவர்களை உலகக் கேடுகளுக்குத் தப்புவித்து நடத்துகின்றார்.
இந்த தியான வசனம் நமக்குத் தரும் பாடம் இதுதான்: நம்மிடம் எவ்வளவு உடல்பலம் இருந்தாலும், பதவி, பணம், அந்தஸ்து இவை இருந்தாலும் இவை அனைத்தும் பார்வோன் நம்பியிருந்த சுய பலம் போன்றதே. இவற்றை நாம் நம்பிக்கொண்டு உலகத்தில் வாழ்வோமானால் கர்த்தர் நம்மேல் பிரியமாக இருக்கமாட்டார். இக்கட்டான வேளைகளில் அவரை நோக்கி நாம் கூப்பிட்டாலும், "நீயே உனது பலத்தினால் சமாளித்துக்கொள்" என்று கூறி பேசாமல் இருந்துவிடுவார்.
ஆனால் நாம் நமது சுய பலத்தை நம்பாமல் தேவனையே சார்ந்து அவரிடம் அன்புகூர்ந்து வாழ்வோமானால் ஆயிரம் தலைமுறைக்கும் நமக்கு இரக்கம் காட்டுவேன் என்கின்றார். ஆம், "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கம் செய்கிறவராய் இருக்கிறேன்" (யாத்திராகமம் 20 : 6 & உபாகமம் 5 : 10 ) என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
அன்னை மரியாளும் தனது பாடலில், "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்." ( லுூக்கா 1 : 50, 51 ) என்று பாடுகின்றார்.
நம்மிடம் இருக்கும் திறமைகள், பணம், அதிகாரபலம் இவற்றை பெரிதாக எண்ணி இருதய சிந்தையில் அகந்தை உள்ளவர்களாக வாழ்வோமானால் தேவன் நம்மைச் சிதறடிப்பார். காரணம், நமது தேவன் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் மட்டுமே அவர் பிரியமாயிருக்கிறார்.
பயத்துடன் தேவனது கிருபையினைச் சார்ந்துகொள்வோம். அப்போது மட்டுமே நாமும் நமது சந்ததிகளும் தேவனது ஆசீர்வாதத்தினைப் பெற்றவர்களாக வாழமுடியும்.
💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1940
"ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன்." ( 1 பேதுரு 3 : 10, 11 )
இந்த உலகத்தில் வாழும் அனைவருமே உலகத்தில் பல ஆண்டுகள் சிறப்பாக வாழவேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். அதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுப்பதுண்டு. தங்களது உடல்நலத்தைப் பேணிக்காப்பதற்காக பல்வேறு உணவு முறைமைகளையும் உடற்பயிற்சிகளையும் பலரும் செய்கின்றனர்.
இவை அனைத்தும் நல்ல செயல்பாடுகள்தான். ஆனால், பலரும் உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதிற்குக் கொடுப்பதில்லை. இன்று பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களது பல நோய்களுக்கு அவர்களது உணவு முறை மட்டுமல்ல, அவர்களது மனதளவிலான சில செயல்பாடுகளும் காரணம் என்று கூறுகின்றனர். கோபம், எரிச்சல், பொறாமை, வஞ்சக எண்ணம் போன்றவை மனிதர்களது பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.
எதிர்மறையான மேற்படி எண்ணங்களும் செயல்பாடுகளும் உடலைப் பாதிப்பதுபோல நேர்மறையான மனச்செயல்பாடுகள் உடலில் நல்ல நிணநீர்களைச் சுரக்கச்செய்து உடல் நோய்களை மாற்றுகின்றன. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்", என்றும் வீடுகளுக்குச் செல்லும்போது "சமாதானம் உண்டாவதாக" என்று வாழ்த்துங்கள் என்றும் கூறவில்லையா? இதனைத்தான் இன்றைய விஞ்ஞான ஆய்வுகளும் கூறுகின்றன.
அதாவது, எவ்வளவுதான் நல்ல உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சிகள் செய்தாலும் மனமானது சரியாக இல்லையானால் நாம் வாழ்வில் நீடித்த வாழ்வையும் நல்ல நாட்களையும் காண முடியாது. இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நல்ல வாழ்நாளை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு விலகவேண்டும். நன்மை செய்து, சமாதானத்தைத் தேடவேண்டும்.
இந்தச் சத்தியத்தை பக்தனாகிய யோபு நன்கு அறிந்திருந்தார். எனவேதான் அவர், "எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்" ( யோபு 21 : 17 ) என்று கூறுகின்றார். ஆம், இப்படிப் பொல்லாப்புச்செய்து, நாவையும் உதடுகளையும் கபடத்தால் உடுத்தி பொருள் சேர்க்கும் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்.
ஆம் அன்பானவர்களே, நமது உடலும், மனமும் ஒன்றாகச் செயல்படவேண்டியது அவசியம். நமது மனம் நினைப்பதை நாவும் உதடுகளும் பேசவேண்டும். இவை மாறுபட்டு இருக்குமானால் நாம் கபடர்கள் என்று பொருள். எனவேதான் சங்கீத ஆசிரியர், "உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்." (சங்கீதம் 34:13) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.
இந்த வசனத்தில் குறிப்பிடப்படும், "ஜீவனை விரும்பி" எனும் வார்த்தைக்கு நித்திய ஜீவனை விரும்புவதையும் பொருளாகக் கொள்ளலாம். ஆம், "நீ நித்திய ஜீவனை அடைந்திட விரும்புவாயென்றால், பொல்லாப்புக்கு உன் நாவையும், கபடத்துக்கு உன் உதடுகளையும் விலக்கிக் காத்துக்கொள்" என்றும் பொருள்.
ஆம் அன்பானவர்களே, உடலை நாம் பேணுவதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது மனத்தினைப் பேணுவதற்கும் கொடுக்கவேண்டியது அவசியம். மனித போதனைகள் இதனை நாம் செயல்படுத்திட உதவாது. காரணம் பல நீதிநூல்களும் இவற்றைத்தான் கூறுகின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் பலவீனமானவர்கள். நமது சுயத்தால் நாம் இப்படி மாறிட முடியாது. எனவே, தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம்.
"கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்"(சங்கீதம் 141:3) என்று உண்மையான ஆர்வத்துடன் ஜெபிப்போம். நீடித்த ஜீவனையும் நல்ல நாட்களையும் அப்போதுதான் நாம் பெறமுடியும்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 📞 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com