ஆதவன் 🖋️ 542 ⛪ ஜுலை 23, 2022 சனிக்கிழமை
"தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (எபிரெயர் 13: 7, 8)
கிறிஸ்துவின் சுவிசேஷம் யாரோ ஒருவரால் நமது வாழ்வில் நமக்கு அறிவிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருப்போம். நம்மை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியவர்கள் பிற்பாடு ஒருவேளை வழி விலகிப் போயிருக்கலாம்.
எனவேதான், நம்மை இரட்சிப்புக்கு நேராக நடத்தியவர்களின் செயல்பாடுகளை நினைத்து, அவற்றின் முடிவினைக் கவனித்து அவற்றைப் பின்பற்றவேண்டும். எனவேதான், "உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்." என்று எழுதுகின்றார் நிரூப ஆசிரியர்.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்போஸ்தலர் காலத்தில் அவர் நடத்தியவிதங்களில் இன்றும் தன்னை விசுவாசிப்பவர்களை அவர் நடத்துகின்றார். நமது வாழ்வில் கிறிஸ்துவின் செயல்பாடுகள் இல்லாமல் போவதற்கு நமது தவறான செயல்பாடுகள் காரணமாய் இருக்கலாம், எனவே அவற்றை நாம் ஆராய்ந்து பார்த்து திருத்திக் கொள்ளவேண்டுமே தவிர, "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்". (எபிரெயர் 13:9 ) என்கின்றார்.
இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். தங்களது வாழ்வில் ஆசீர்வாதம் இல்லை என எண்ணி மாறி மாறி ஒவ்வொரு ஊழியக்காரர்களாக அலைந்து திரிகின்றனர். இந்த ஊழியர்கள் ஆளாளுக்கு ஒரு உபதேசம் கூறுபவர்களாக இருக்கின்றனர். எனவேதான், "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. வேதாகம சத்தியங்களுக்கு முரணான போதனைகளே அந்நிய போதனைகள்.
அன்பானவர்களே, நம்மை நாம் வேத வெளிச்சத்தில் நிதானித்துப்பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர அலைந்து திரிவதால் அர்த்தமில்லை.
தேவவசனத்தை நமக்குப் போதித்து நடத்தினவர்களை நாம் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவோம். ஒருவேளை அவர்கள் வழி விலகிச் சென்றிருந்தால், வேத வெளிச்சத்தில் ஆராய்ந்துபார்த்து நேர் வழியில் நடப்போம்.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதால் நம்மை அவர் நேரான வழியில் நடத்துவார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712