Wednesday, June 24, 2020

பாவ மன்னிப்பும் இரட்சிப்பும்


                   பாவ மன்னிப்பும் இரட்சிப்பும்  


                                                                                 - சகோ . எம். ஜியோ பிரகாஷ் 

கிறிஸ்தவ வட்டாரத்தில் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை இரட்சிப்பு . ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் சந்தித்துக் கொள்ளும்போது ஒருவரை ஒருவர் பார்த்து கேட்பது , "நீங்கள் எப்போது இரட்சிக்கப்படீர்கள் ? " என்பதுதான். இரட்சிப்பு என்பது ஒரே நாளில் பெற்றுக்கொள்ளும் ஒன்று என்று இவர்கள் எண்ணுவதுதான் இதற்க்கு காரணம். 

இந்த பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் உண்மையில், பொதுவாக மக்கள் எண்ணியுள்ள இரட்சிப்புக்கும் வேதம் கூறும் இரட்சிப்புக்கும்  வேறுபாடு உண்டு.

இரட்சிப்பு என்பது வேத அடிப்படையில் ஒரே நாளில் கிடைப்பது இல்லை. பாவ மன்னிப்பு , இரட்சிப்பு இவைகளுக்குள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால்தான் நாம் தெளிவடைய முடியும். 

பாவ மன்னிப்பு என்பது ஒரு மனிதனுக்கு எப்படிக்  கிடைக்கும் என்பது குறித்தே கிறிஸ்தவ வட்டாரத்தில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. குழப்பம் மனிதர்களுக்கு தானே தவிர வேதத்தில் இல்லை.  ஒரு மனிதன் தனது பாவங்களை உணர்ந்து மனம் வருந்தி தேவனிடம் வரும்போது கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவ மன்னிப்பைப் பெறுகிறான் என்பது பலரது கருத்து.  

வேறு சிலர் முதலில் கிறிஸ்து அனுபவத்தைப் பெற்றபின் மன உந்துதல் பெற்று பாவங்களை அறிக்கையிட்டு அந்த அனுபவத்தில் வளர வேண்டும் என்கின்றனர். சகேயு இந்த முறையில் இரட்சிப்பு அனுபவம் பெற்றவர் (லூக்கா - 19) எனக் கூறுகின்றனர்.

ஆனால் வேதம் என்ன கூறுகிறது? கிருபையினால் தான் ஒருவர் மீட்பு அனுபவத்தைப் பெறுகின்றார். "கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு " (எபேசியர் - 2:8). இதனை எழுதிய பவுல் அப்போஸ்தலருடைய வாழ்க்கையைப் பாருங்கள். அவர் தேவனுக்கு விரோதமான செயல் பாடுகளில் தான் ஈடுபட்டிருந்தார். தன தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டு ஜெபிக்கவில்லை. ஆனால் தேவன் அவர்மேல் வைத்திருந்த கிருபையினால் அவரை இழுத்துச் சேர்த்துக்கொண்டார். அதன் பின்புதான் அவர் தேவனிடம் மன்னிப்பு பெறுகின்றார். 

ஆனால் பாவ மன்னிப்பு இரட்சிப்பு அல்ல. பாவமன்னிப்பு என்பது  நாம் செய்த பாவங்களுக்கு  மன்னிப்பு பெறும் அனுபவம் மட்டுமே. இரட்சிப்பு என்பது பாவம் செய்யும் மன நிலையில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவது. அதாவது பாவத்தின் பிடியில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவது.

இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்க முடியும். உங்கள் மகன் நீங்கள் பல முறை எச்சரித்தும் வேண்டாத நண்பர்களுடன் சுற்றுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதனால் அவன் நண்பர்களுடன் சேர்ந்து செய்த ஒரு குற்றத்துக்காக போலீசாரால் கைது செய்யப்படுகிறான். இப்போது அவனை மீட்க நீங்கள் காவல் நிலையம் செல்லுகிறீர்கள். உங்களை பார்த்ததும் உங்கள் மகன் , "அப்பா என்னை மன்னித்து விடுங்கள் ..நீங்கள் சொல்லியும் நான் கேட்காத செயலுக்கு தண்டனை பெறுகிறேன்" என்று சொல்லி அழுகிறான். நீங்கள் அவனது கண்ணீரைத் துடைக்கிறீர்கள். மன்னிக்கிறீர்கள். இதுதான் பாவ மன்னிப்பு அல்லது ஒப்புரவு .

ஆனால் நீங்கள் அவனை அப்படியே விட்டு விட்டு வந்து விடுவதில்லை. அவனை போலீசாரின் பிடியிலிருந்து விடுவிக்க அடுத்த கட்ட செயல்பாடுகளில் இறங்குவீர்கள். பின் அவனை  விடுவித்து வெளியே கொண்டு வருகிறீர்கள் . இதுதான் இரட்சிப்பு. அதாவது பாவத்தின் பிடியில் இருந்து முற்றிலும் விடுவிப்பது. ஆனால் அந்த மகன் முழு இரட்சிப்பினை பெற வேண்டுமானால் பழைய கெட்ட நண்பர்களது சவகாசத்தை விட்டு முற்றிலும் நீங்கவேண்டும்.

கிறிஸ்து இந்த இரண்டையும் நமக்காகச் செய்து முடித்தார். தனது இரத்ததால் பாவங்களைக் கழுவி மீண்டும் அதில் விழாத வகைக்கு தனது பரிசுத்த ஆவியைத் தந்து நம்மைத் தாங்குகிறார்.  ஆனால் இரட்சிப்பு அனுபவம் பெற்று அதில் வளர நமது முயற்சியும் விருப்பமும் அவசியம். பல கிறிஸ்தவர்களும் என்றோ  பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தை வைத்துக்கொண்டு "நான் இரட்சிக்கப்பட்டேன்" என்று கூறிக்கொண்டு தங்களையே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இரட்சிப்பு ஒரே நாளில் பெற்றுக் கொள்ளுவதல்ல . இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார். 

"நாம் தேவனுக்குச் சத்துருக்களாய் இருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப் பட்டோமானால் ஒப்புரவாக்கப்பட்ட பின் நாம் அவருடைய ஜீவனாலே  இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே " (ரோமர் - 5:10) என்கிறார் பவுல் அடிகளார். அதாவது ஒப்புரவாக்கப்பட்ட பின் இரட்சிப்பு.

மேலும் பவுல் அடிகள் கூறுகிறார், " நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாக இருந்ததைப்  பார்க்கிலும் இப்போது அது நமக்கு அதிக சமீபமாக இருக்கிறது" (ரோமர் - 13:11). பாவங்கள் மன்னிக்கப் பட்டு விசுவாசிகளான நமக்கு இரட்சிப்பு சமீபமாக இருக்கிறது. ஆனால் நாம் பழைய பாவங்களை விட்டு விலக வேண்டும்.

"நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு பாவ சரீரம் ஒழிந்து போகும்பொருட்டாக நம்முடைய பழைய மனுஷன் அவரோடுகூட சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் - 6:6).

மேலும் கிறிஸ்து நம்மை நியாயப்  பிரமாணத்துக்கு விடுதலையாக்கினார். மோசே கொடுத்த நியாயப்  பிராமண கட்டளைகள் மட்டும் ஒருவரை மீட்க முடியாது . நியாயப்பிராமணமானது நம்மை நீதி வாழ்க்கைக்குள் நடத்த முடியாது. எனவேதான் கிறிஸ்து உலகினில் வந்தார். இரட்சிப்பு அனுபவத்தைத் தந்தார்.  " நீதியானது நியாயப்பிரமாணத்தினால் வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாய்  இருக்குமே" (கலாத்தியர் - 2:21)

கொர்நேலியு பாவ மன்னிப்பையும் இரட்சிப்பு அனுபவத்தையம்  பெற்றது எப்படி? தேவனை அறியாத புற  ஜாதியானாகிய அவர் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டவரல்ல. ஆனால் தான் செய்த நீதிச் செயல்களால் தான் இந்த அனுபவங்களைப்  பெற்றார். (படிக்க - அப்போஸ்தலர் - 10 ம் அதிகாரம்) . அதனைக் கண்டு பேதுரு பின்வருமாறு கூறுகின்றார், " .....தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்" (அப்போஸ்தலர் - 10:34,35)

பாவம், பாவத்திலிருந்து விடுதலை இவை குறித்து இயேசு கிறிஸ்து கூறுபவைகளை நாம் புரிந்து கொண்டால் தெளிவடையலாம். நாம் பாவத்துக்கு அடிமைகளாய் இருக்கிறோம். " பாவம் செய்யும் எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் " (யோவான் -8:34) இப்படி அடிமையாய் இருப்பவனை அதிலிருந்து விடுவிப்பதுதான் இரட்சிப்பு. அது இயேசு கிறிஸ்துவினால்தான் உண்டு. இயேசுவே தொடர்ந்து கூறுகின்றார், " ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால்  மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் -8:36)

குமாரனான அவரால் மட்டுமே பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க முடியும். வேதம் கூறுகின்றது, "கர்த்தரே ஆவியானவர், கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு". (2 கொரிந்தியர்-3:17)  நியாயப்பிரமாணம் நாம்  பாவம் செய்யாமல் இருக்க வேண்டி கொடுக்கப்பட்டதுதான். ஆனால் அதனால் மனிதனை முற்றும் முழுவதுமாக பாவத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை. "அது எப்படியெனில் , மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப் பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு தம்முடைய குமாரனை பாவ மாம்சத்தின் சாயலாகவும் பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." (ரோமர் - 8:3) என்று வேதம் கூறுகின்றது.

கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் தான் பரிசுத்த ஆவியை நமக்கு கிடைக்கச் செய்தது. இயேசு கிறிஸ்து கூறினார், "நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும் ; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்துக்கு அனுப்புவேன். அவர் வந்து பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்." (யோவான் - 16:7-8)

ஆம் தேற்றரவாளனான பரிசுத்த ஆவியானவர்தான் நம்மை பரிசுத்தத்தில் நடத்திட முடியும். அவர் நம்மை நடத்திட ஒப்புக் கொடுக்கும்போது  பாவம் நம்மை மேற்கொள்ள முடியாது. "நீங்கள் நியாய பிராமணத்துக்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப் பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது" (ரோமர் - 6:14). இதுவே இரட்சிப்பு. பாவத்தை மேற்கொள்ளும் அனுபவம். 

" ......நம்மில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் " ( ரோமர்-8;37) எனும் வசனத்தின்படியான முற்றிலும் ஜெயம் கொள்ளும் வாழ்வு .

அன்பானவர்களே ! என்றோ பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு அனுபவத்தைப்  வைத்துக்கொண்டு , "நான் இரட்சிக்கப்பட்டேன், நான் இரட்சிக்கப்பட்டேன்" என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் பாவத்தை மேற்கொள்ளும் மெய்யான இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்று மகிழ்வோம் . கர்த்தர்தாமே நம்மை அந்த அனுபவத்திற்கும் நடத்திட தொடர்ந்து ஜெபிப்போம்.   ஆமென் .

No comments: