- சகோ . எம். ஜியோ பிரகாஷ்
ஒளியை விரும்பும் உயிரினங்களுக்கும் இருளை விரும்பும் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு. ஆந்தை, கூகை, தேள், கரப்பான், பூரான் இவை போன்ற உயிரினங்கள் ஒளியை விரும்புவதில்லை. அவை எப்போதும் இருளான இடங்களைத் தேடி பதுங்கி உயிர்வாழும். அடியிலும், மரப் பொந்துகளிலும் அவை தங்கியிருக்கும். அவை மறைந்திருக்கும் அந்தக் அகற்றினால் அவை உடனே இருளைத்தேடி ஓடும்.
திருடர்களைப் பாருங்கள் அவர்கள் எங்கே திருடச் சென்றாலும் அங்குள்ள விளக்குகளைத் தான் முதலில் அணைப்பர்.ஆம், ஒளியான இடத்தில இருளின் உயிர்களுக்கு இடமில்லை. ஒளியைவிட அவை இருளையே விரும்புகின்றன. இதனைத்தான் இயேசு கிறிஸ்து, "பொல்லாங்குச் செய்கிறவன் எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்காத படிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்". (யோவான் - 3:20) என்று கூறினார்.
இன்று கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தியையும் பாவத்தின் அந்தகாரத்தையும் நாம் விபரித்துச் சொல்லும்போது பலர் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். காரணம், அவர்களது பாவ வாழ்க்கை. பலரும் தங்களது பாவ வாழ்க்கையை நியாயப்படுத்துகின்றனர். "நான் என்ன பாவம் செய்தேன்?" எனக் கேள்வி எழுப்புகின்றனர். அல்லது, "இதெல்லாம் பாவமா? உலகத்தில் எல்லோரும் இப்படித்தானே வாழ்கின்றனர்?" என்கின்றனர். அதாவது அவர்கள் தங்கள் வாழ்க்கை மாற்றத்துக்கோ, கிறிஸ்துவை அறியவோ தயாராக இல்லை.
இப்படிக் கிறிஸ்துவை நெருங்கிடத் தயங்கும் மக்கள் இறுதி நியாயத் தீர்ப்புநாளிலும் இப்படியே இருப்பர். ஆம், அவர்கள் கிறிஸ்துவின் ஒளியினிடம் நெருங்க முடியாமல் இருளையே விரும்புவர். தேவன்அவர்களை இருளான நரகத்தில் தள்ளுமுன் பாவிகளின் பாவ வாழ்க்கையே அவர்களை இருளை நாடி ஓடச் செய்யும்.
இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம். ஒரு திருமண வீட்டில் மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்கும்போது நல்ல ஆடையை அணிந்துள்ள விருந்தினர்கள் மேடையில் ஏறி நேரடியாக மணமக்களை வாழ்த்துவார்கள். மேடை வண்ண விளாக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் அங்கு அரைகுறை ஆடையுடனோ நிர்வாணமாகவோ ஒரு மனிதன் வர நேர்ந்தால் அவன் மேடையில் வருவானா? வெட்கப்பட்டுத் தன் மானத்தை மறைக்க இருளான இடத்தைத் தேடி ஓடுவானல்லவா?
ஒளியான வாழ்க்கையைப் பகைத்து இருளான பாவவாழ்க்கையில் வாழும் மனிதன் இப்படியே இருப்பான். இரட்சிப்பின் ஆடை அணிந்தவர்கள் மணவாளனான இயேசுவிடம் நெருங்கி உறவாட நெருங்கிட, இருளையே விரும்பி, இருளான பாவ வாழ்க்கை வாழ்ந்த மனிதன் ஆடையில்லாத நிர்வாண மனிதன் ஒளியைக்கண்டு இருளைத்தேடி ஓடுவது போலத் தானாகவே தனக்கும் பிசாசுகளும் ஆயத்தம் பண்ணப்பட்ட இருளைத் தேடி ஓடுவான். ஆம் ஒளிக்கும் இருளுக்கும் சம்மந்தமேது ?
இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறியதுபோல, "ஒளியானது உலகத்தில் வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினை தீர்ப்புக்கு காரணமாயிருக்கிறது" (யோவான் -3:19)
யோவான் தனது சுவிசேஷத்தின் ஆரம்பத்திலேயே கிறிஸ்துவைக்குறித்து, "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் -1:9) என்று குறிப்பிடுகின்றார். மெய்யான அந்த ஒளியிடம் வரும் போது மட்டுமே எந்த மனுஷனும் பிரகாசமடைவான்.
சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது. ஆனால் அது சூரியனையேச் சுற்றி, சூரியனுடைய ஒளியை வாங்கி பூமிக்கு ஒளி கொடுக்கிறது.அதுபோலவே கிறிஸ்து இல்லாத மனிதன் கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து நிலவானது சூரியனைச் சுற்றுவது போல கிறிஸ்து இயேசுவைப் பற்றிக்கொள்ளும் போது நீதியின் சூரியனான அவரது ஒளியைப் பெற்று பிறருக்கு ஒளி கொடுப்பவனாக மாறுகின்றான். "நான் உலகத்திலிருக்கையில் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறேன் " (யோவான் 9:5) என்று கூறிய இயேசு கிறிஸ்து "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்" (மத்தேயு - 5:14) என்று இதனால்தான் கூறினார்.
நீதியின் சூரியனான இயேசு கிறிஸ்து நம்மை ஒளியடையச் செய்ய நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்படைப்போம். நாம் இருளான வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தால் மனம் திரும்பி நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று ஒளியான கிறிஸ்துவை தரித்துக்கொள்ளவேண்டும், ஏற்கெனவே கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றவர்களாக இருந்தால் அது இருளடைந்திடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு " ( லூக்கா - 11:35)