இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, July 23, 2021

நமது பிரதான ஆசாரியன்

 

                                        - சகோ . எம். ஜியோ பிரகாஷ் 


ந்த உலகத்தில் இலவச ஆலோசனைகள் வழங்க பலர் தயாராக உள்ளனர். இத்தகைய மனிதர்கள் பிரச்சனைகள், கஷ்டங்களில் அகப்படும் பிற மனிதர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவதும்  அந்த ஆலோசனைகளை  கடைபிடிக்காவிட்டால் அவர்களை விமரிசித்து  கேலி செய்வதும் உண்டு.  ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பிறருக்குக் கூறுவது எளிது. யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் கூறலாம். ஆனால் அப்படி ஆலோசனை கூறும் மனிதர்களுக்கு அதுபோன்ற பிரச்சனைகள் வரும்போது அவர்களது செயல்பாடுகள் வித்தியாசமானதாக இருக்கும்.


"தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது மற்றவர்களுக்கு அறிவுரைகூறுவதிலும், மற்றவர்கள் செய்யும் செயல் தவறு என நிரூபிப்பதிலும்  தீவிரம் காட்டுபவர்கள்  தங்களுக்கு அதேபோன்ற பிரச்னை வரும்போது தாங்கள் மற்றவர்களை குறைகூறிய  அதே தவறைச் செய்வர்ஆம் சொல்லுவது எல்லோருக்கும் எளிது ஆனால் சொல்லியபடி வாழ்ந்துகாட்டுவதுதான் கடினம்


திருவள்ளுவரும் இதுபற்றிக் கூறும்போது, "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்" (குறள் - 664) என்று கூறியுள்ளார்


நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாம் பூமியில் வாழ்வதற்கும் , மறுமை இன்பத்தை அடைவதற்கும் பல அறிவுரைகளைக் கூறினார். இன்று  பலர்  'இயேசு கிறிஸ்துவின் போதனைகள்படி யாரும் வாழ முடியாது' என்று கூறுகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து வெறும் போதனை செய்ததோடு நிற்கவில்லை, தனது போதனையின்படி வாழ்ந்து நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். அதனையே எபிரெய நிருப ஆசிரியர், " எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" என்று குறிப்பிட்டுகின்றார்.


"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )


எல்லா விதத்திலும் என்று கூறும்போது, நமக்கு இன்று உலகினில் வரக்கூடிய அனைத்து வித சோதனைகளும் அவருக்கும் வந்தன  என்று பொருள். பண ஆசையினால் விழக்கூடிய சோதனை, பதவி ஆசையில் விழக்கூடிய வாய்ப்பு, இச்சையில் அகப்படும் வாய்ப்பு போன்ற சோதனைகள் அவருக்கும் வந்தன. ஆனால் அவர்  அவற்றில் அகப்படாமல் பாவமில்லாதவராய் இருந்தார். அதனால்தான் அவரால் நம்மையும் பாவத்திலிருந்து விடுக்க முடியும் என்று இந்த நிருப ஆசிரியர் கூறுகின்றார்.


"ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்". (  எபிரெயர் 2 : 18 )


ஒரு புதிய காட்டுவழிப் பாதை.அதனைக் கடந்து செல்லவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முன்பின் தெரியாத அந்தக் காட்டில் நமக்கு வழிகாட்ட அங்கு அந்த காட்டைப் பற்றியும் அங்குள்ள வழிகள், நீரோடைகள், பழ மரங்கள் பற்றியும் , ஆபத்தான இடங்கள் பற்றியும் தெரிந்த ஒரு மனிதன் நமக்கு வழிகாட்டக் கிடைத்தால் எப்படி இருக்கும் ? அன்பானவர்களே, அத்தகைய மனிதன் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.


நாம் வெட்டிப்பேச்சு பேசும் அரசியல்வாதியைப்போல  உள்ள ஒரு தலைவரை நமக்குத் தலைவராகப் பெறவில்லை. நாம் பயணம் செய்யும் பாதையில் அவர் ஏற்கெனவே பயணம் செய்துவிட்டார். எனவே நமக்கு உதவி செய்ய அவரால் முடியும். இதுவே நமது கிறிஸ்தவ நம்பிக்கை.   


"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல்" என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது நமது பலவீனங்கள் அவருக்குத் தெரியும். அவற்றைக்குறித்து அவரும் பரிதாபப்படுகின்றார். நாம் செய்யவேண்டியது நமது பலவீனங்களை அவரிடம் ஒத்துக்கொண்டு அவரது உதவியை நாடுவதே. 'ஆணடவரே என்னால் இந்தக் குறிப்பிட்டப் பாவ பழக்கத்தை விட முடியவில்லை, ஆண்டவரே பொருளாசை, பதவி ஆசை, இச்சை, பெருமை, பொறாமை ...என்று நம்மை அடிமைப்படுத்தும் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரது உதவியை நாடுவோம். நமக்கு எல்லா விதத்திலும் உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார்


நாம் வெறும் ஜெபக் கிறிஸ்தவர்களாக, ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருப்பது போதாது. கிறிஸ்துவின் மூலம் அடையும் பெலன் நமது வாழ்வையே மாற்றக்கூடியது என்பதை விசுவாசிக்கவேண்டும். நமது குணங்கள் மாறவேண்டுமெனும் ஆவல் நமக்கு இருக்க வேண்டும். கிறிஸ்துவினால் அது மாறிட வேண்டும். வெறும் உலக ஆசீர்வாதங்களையே வேண்டி நமது ஆத்துமத்தைப்  பாதாளத்துக்குச் சென்றிட வழி செய்துவிடக் கூடாது. 



No comments: