Monday, August 30, 2021

தேவனைத் தேடிக் கண்டுகொள்வோம்

                            - சகோ. ஜியோ பிரகாஷ்  



தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்." (  சங்கீதம் 53 : 2 )

 

பெரிய பெரிய கட்டிடங்களிலும் அலுவலகங்களிலும் இன்று சி.சி.டி.வி. காமெரா பொருந்தி மனிதர்களது நாடவடிக்கைகளைக் கண்காணிக்கிறார்கள். இப்படிக் கண்காணிப்பதன்மூலம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது அந்தக் காமிராவில் பதிவாகியுள்ளக் காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது. இதுபோலவே இன்று உலகினில் வாழும் நாமனைவரும் தேவனது கண்காணிப்பில் இருக்கின்றோம். நமது ஒவ்வொரு செயலையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இந்த எண்ணம் நமக்கு இருக்குமானால் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச்  செய்யமாட்டோம்.

 

இப்படித் தேவன் மனிதர்களைக் கண்காணிக்க இன்னுமொரு காரணம் தன்னைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்கவே. தேவன் பரலோகத்திலிருந்து தன்னை  அறியவேண்டும் எனும் உணர்வுள்ளவன் பூமியில் உண்டுமா என்று பார்த்துகொண்டேயிருக்கின்றார். ஒருவர் எந்த மதத்திலும் பிறந்திருக்கலாம்; ஆனால், குருட்டுத்தனமாக எல்லோரும் செய்கிறார்களே என்று ஒரு சில வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டு வேறு சிந்தனையற்றவர்களாக வாழ்ந்தால் தேவனை அறிய முடியாது. 


தேவனை அறியவேண்டும் எனும் மெய்யான உணர்வோடு தேடுகிற மனிதர்களுக்கு அவர் வெளிப்படுவார். தேவன் அவராகத் தன்னை யாரிடமும் திணிப்பது கிடையாது.

 

எனக்குத் தெரிந்து இரட்சிப்பு அனுபவம் பெற்று வாழும் பல சகோதரர்களது சாட்சிகள்  இதனை உறுதிப்படுத்துகின்றவையாக உள்ளன. கடவுள் என்று ஒருவர் உண்டா? அப்படியானால் உண்மையான கடவுள் யார்? என்பதை அறிய எல்லா மத நூல்களையையும் படித்து இறுதியில் தேவனை அறிந்துகொண்டதாகப் பலரும் கூறுகின்றனர். குறிப்பாக இந்து குடும்பத்தில் பிறந்த எனது நண்பர் சகோதரர் சொர்ணகுமார் அவர்கள் தனது சாட்சியைக் கூறும்போது,  இப்படித்  தேவனை அறிய பல மத நூல்களையும் தான் கற்றதாகவும் இறுதியில் வேதாகமத்தைத் தொடர்ந்து  படித்துக் கொண்டுவரும்போது , "உன்னுடனே பேசுகிற நானே அவர் " (யோவான் - 4 : 26) எனும் வசனத்தைப் படித்தபோது தனது உள்ளுணர்வில் தேவனால் உணர்த்தப்பட்டுத் தொடப்பட்டு கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததாகக்  கூறுவார். இப்போது அவர் தான் இப்படித் தேடி அறிந்துகொண்ட தேவனைப் பிறருக்கும் அறிவிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். ஆம், இதுபோல உண்மையாய்த் தேவனைத் தேடும் எவருக்கும் அவர் வெளிப்படுவார்.   

 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்தவப் பெற்றோருக்கு மகனாக,  மகளாகப் பிறந்துவிட்டு கிறிஸ்தவ முறைமைகளை பின்பற்றுவதால் தேவனை அறிய முடியாது. அம்மா அப்பா சொல்வதாலல்ல, "யார் மெய்யான தேவன் என நான் அறியவேண்டும்" எனும் உணர்வோடு தேடும்போது தேவன் நமக்கு வெளிப்படுவார்.  ஒருவர் பெயரளவில் கிறிஸ்தவராக இருப்பதில் அர்த்தமல்ல.  அவர் கிறிஸ்துவை அறிந்தவர் என்று கூறிட முடியாது; தேவனை அறிந்தவர் என்றும் கூறிட முடியாது.    


பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்காணிக்கும் தேவன் இப்படித் தன்னைத் தேடுகின்ற மனிதர்களுக்கு இரட்சிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றார். "உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." (  சங்கீதம் 70 : 4 )


இப்படித் தன்னைத் தேடும் சாந்தகுணமுள்ள மனிதர்களை, அதாவது தங்களது மதப்பெருமைகளைவிட்டு மெய்யான தேவனை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு தன்னைத் தேடுபவர்கள் மேல் தேவன் பிரியம் வைக்கின்றார். "கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்." (  சங்கீதம் 149 : 4 )

 

இதுவரை தனிப்பட்ட முறையில் தேவனை வாழ்வில் அனுபவிக்காத நிலையில் இருந்தால், நம்மையே தாழ்த்தி, "ஆண்டவரே, எனது வாழ்வில் உம்மை அறிய விரும்புகின்றேன்; அனுபவிக்க விரும்புகின்றேன் என்று வேண்டுவோம். கிறிஸ்தவம் என்பது மதமல்ல. இயேசுவே  என்று கூடச் சொல்லவேண்டாம், பொதுவாக, "மெய்யான தெய்வம் ஒன்று இருக்குமானால், நான் அதனை அறிய விரும்புகின்றேன். எனக்கு உம்மை வெளிப்படுத்தும்." என்று உண்மையான ஆர்வத்துடன், மெய்யானக் கடவுளை அறியும் ஆர்வத்துடன் வேண்டினாலே போதும் தேவன் உங்களுக்கு வெளிப்படுவார். 


சென்ற நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் அவர்கள் பிறப்பால் ஒரு சீக்கியர்.  அவர் துன்பங்கள் தொடர்ந்திட அவைகளை மேற்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து பொதுவான ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார்.


அதிகாலையில் எழுந்து தனது வீட்டுக்கு அருகில் செல்லும் ரயில் தண்டவாளத்தில் ஓடும் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்த்குகொள்ள முடிவெடுத்தார். எந்த தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடாமல், " நான் தற்கொலை செய்து என்னை மாய்த்துக்கொள்ளப் போகின்றேன் ... உண்மையிலேயே தேவன் என்று ஒருவர் இருப்பாரானால், அவர் என்னை மன்னிக்கட்டும்...தற்கொலை செய்வது பாவம் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன....எனவே உண்மையான தேவன் ஒருவர் உண்டு என்றால் அவர் என்னை மன்னிக்கட்டும்" என்று பொதுவாக ஜெபித்துவிட்டு எழுந்தபோது கிறிஸ்து அவருக்கு வெளிப்பட்டார்.  தற்கொலைக்கு முயன்ற அவர் பிறகு கிறிஸ்துவின் அபோஸ்தர்களது அனுபவித்த அனுபவத்துடன் வல்லமையான ஊழியரானார். 


ஆம், "உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (  எரேமியா 29 : 13 ) எனும் வசனத்தின்படி தேவனை அறியவேண்டுமெனும் எண்ணத்துடன் முழு மனதுடன் தேடினால் தேவனைக் கண்டு கொள்ளலாம். அதனை விடுத்து மத சம்பிரதாயங்கள் மூலம் தேவனைத் தேடினால் அவரை அறிய முடியாது.


அன்பானவர்களே, இந்த மேலான அனுபவத்தைப்பெற்று தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்து ஒரு மேலான ஆவிக்குரிய  வாழ்க்கை வாழ்வோம்.

Monday, August 02, 2021

பாபிலோனில் கர்த்தரது சித்தம் செய்தல்

பாபிலோனில் கர்த்தரது  சித்தம் செய்தல்

                                   - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ன்று நமக்கு  வாழ்க்கையில் பலப் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து நம்மை அடிமைப்படுத்தலாம். நமக்கு  எதிரானச் செயலில் சிலர் ஈடுபடலாம். நாட்டை ஆளும் அதிகாரிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படலாம்,  நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் சிலர் நமக்கு எதிராக மேலதிகாரிகளுக்கு நம்மைக்குறித்து குற்றச்சாட்டுகளைக் கூறலாம். ஆனால் கர்த்தருக்குப் பிரியமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றவன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் அதாவது அவனது வாழ்வில் பாபிலோன் போன்ற ஒரு சிறைப்பட்ட வாழ்க்கை வந்தாலும் அவருக்குச் சித்தமானதையே செய்வான்.  பிரச்னை வந்துவிட்டது, பணத்தேவை வந்துவிட்டது என்று  பணியிடத்தில் லஞ்சம் , வாங்கமாட்டான். குறுக்கு வழியில் ஆதாயம் தேடமாட்டான். கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமான பேச்சு மற்றும் செயல்களில் ஈடுபடமாட்டான். . மாறாகக் கர்த்தருக்குச் சித்தமானதையே செய்வான்.. 

இதனைத்தான் ஏசாயா மூலம் தேவன்  கூறுகின்றார்,  "நீங்களெல்லாரும்   கூடிவந்து  கேளுங்கள்;   கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்கு சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்அவன்  புயம்   கல்தேயரின்மேல்    இருக்கும்  என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?" (  ஏசாயா 48 : 14 )

பாபிலோன் என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கின்றதுஇங்கு தேவன் நமக்கு உணர்த்துவதுஒருவன்  கர்த்தருக்குப்                      பிரியமான  வாழ்க்கை  வாழ்ந்தால் அவன் அவருக்குச் சித்தமானதை                 எத்தகைய     சூழ்நிலை    வந்தாலும்  அங்கும் செய்து  அவரதுநாமத்தை    மகிமைப்படுத்துவான்இடமோ   பிரச்சனைகளோ கர்த்தருக்குப் பிரியமாக  நடப்பவனைத்  தடைசெய்ய முடியாது. மட்டுமல்ல, அந்த இடத்தில்  தேவன் அவனை மற்றவர்களுக்கு மேலாக வைப்பார்.

ஏசாயா கூறிய இந்த வசனம் தானியேலுக்கு அப்படியே நிறைவேறியதை நாம் பார்க்கலாம். யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் ஆண்டு நேபுகாத்நேச்சார் படையெடுத்துவந்து எருசலேம் தேவாலயத்திலுள்ள அனைத்துப்  பொன்னையும் வெள்ளியையும் கொள்ளையிட்டு, மக்களையும் கைதுசெய்து அடிமையாகப்  பாபிலோனுக்கு (காலத்தேயர் தேசத்துக்குகொண்டுசென்றான். (தானியேல் - 1) அப்படிக் கொண்டு போகப்பட்டவர்களில் தானியேல் ஒருவர்.

ஆனால் தேவன் அங்கு பெரிய செயல்புரிந்தார்நேபுகாத்நேச்சார் ஒரு கனவு கண்டான். அவன் அறிஞர்களைக் கூப்பிட்டு, "நான் ஒரு கனவு கண்டேன் எனக்கு நான் கண்டக்  கனவினையும் அதன் பொருளையும் கூறவேண்டும்" எனக் கட்டளையிட்டான். அறிஞர்கள் ராஜாவிடம், "ராஜாவே நீர் கனவினைக்  கூறும் நாங்கள் அப்போது அதன் பொருளைக் கூறுவோம்என்றனர்ராஜா "இல்லை, நான் கண்டக்  கனவினையும் அதன் பொருளையும் நீங்கள் கூறவேண்டும்" என்று கூறினான். "இது எந்த மனிதனலும் முடியாது தேவர்களால்தான் முடியும்" என்று கூறிவிட்டனர் அறிஞர்கள்

ஆனால் தானியேல் ராஜா கண்ட கனவினையும் அதன் பொருளையும் சரியாகக்  கூறினார்ஆம், கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்  என்ற வசனத்தின்படி தான் அடிமையாக இருந்த  பாபிலோனில் தானியேல் இதனைச் செய்தார்.  

மட்டுமல்ல இந்த வசனம் கூறுகின்றது, "அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும்" என்றுஅதன்படி தானியேல் ராஜாவின்  கனவையும் அதன் விளக்கத்தையும் கூறியதால்,  "ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்". (  தானியேல் 2 : 48 )

இன்று நாம் வாழும் நாட்டில் பல சூழ்நிலைகள் நம்மை அடிமைப்படுத்தியுள்ளன. அரசியல் நிலைகள் உத்தமமான கிறிஸ்தவர்களுக்குச்  . சாதகமாக இல்லை.  பல வேளைகளில் நாமும் பாபிலோனில் இஸ்ரவேல் மக்கள் வாழ்ந்ததுபோல வாழ்கின்றோம்.

அன்பானவர்களே, ஏசாயாவின் தீர்க்கதரிசனம், "கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்பது. நாமும் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்தால் தானியேலுக்கு நிறைவேறியதுபோல இந்தத் தீர்க்கதரிசனம் நமது வாழ்க்கையிலும் நிறைவேறும். நமது புயம் கல்தேயரின்மேல் (நமது எதிரிகள்மேல்) வெற்றிபெற்றதாக இருக்கும்ஆம் , எந்தவித அசாதாரணச் சூழ்நிலையிலும்  நாம் வெற்றிபெறமுடியும்.

"கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்" என்று இந்த வசனம் கூறுவதுபோல முதலில் கர்த்தருக்குப்  பிரியமானவன் எனும் நிலையினை நாம்  பெறவேண்டும். இன்று துன்மார்க்க வாழ்க்கை வாழும் போலி கிறிஸ்தவர்களும் ஊழியர்களும் கர்த்தருடைய  சித்தம் இன்னதென்று தெரியாமலேயே செயல்பட முயல்கின்றனர். 

கிறிஸ்துவை அறியாத பெயர் கிறிஸ்தவர்கள், அல்லது தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மாம்சீக கிறிஸ்தவர்கள், போலி ஆவிக்குரிய சபை ஊழியர்கள்,  இன்று தேவையில்லாமல் எதிர் கருத்து கொண்ட மதத்தினரையும்  எதிர் கருத்து கொண்ட அரசியல் கட்சியினரையும் தேவையில்லாமல் எதிர்த்து கிறிஸ்தவ முறைமைகளை எதிரான கருத்துக்களைக் கூறுவதும்  செயல்படுவதும் பலப் பிரச்னைகளைத் தோற்றுவிக்கின்றது.

ஆனால், எனக்குத் தெரிந்த பல உண்மையான ஊழியர்களும் ஆவிக்குரிய நண்பர்களும் இந்த வசனத்தின்படி கர்த்தருக்குச் சித்தமானதை இந்த அசாதாரண  சூழ்நிலையிலும் செய்து கர்த்தரது  நாமத்தை மகிமைப்படுத்தி வருகின்றனர். இந்த வசனம் இன்றும் உண்மையாகச் செயல்புரிவதைக் காண முடிகின்றது. 

வேதாகம வசனங்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய் அல்ல. அவை ஜீவனுள்ள தேவ வார்த்தைகள். அன்பானவர்களே,  பாவ மன்னிப்பைப் பெற்று, கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள்; அவருக்குச் சித்தமானதை பாபிலோன்போன்ற எந்த இக்கட்டானச் சூழ்நிலையிலும் செய்து தேவ நாமத்தை நாம் மகிமைப்படுத்த முடியும்.

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

❤️ When the Manna Ceases - Video

  Even the smallest verse in the Bible has been written with a purpose and can become a source of blessing in someone’s life.  Let us receiv...