"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." ( 1 யோவான் 1 : 3 )
ஐக்கியம் என்பது அன்பான உறவினைக் குறிக்கின்றது. வெறுமனே சேர்ந்து இருப்பது அல்ல, மாறாக சேர்ந்து இருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கையினையே ஐக்கியம் என்கின்றோம். சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் சரியான உறவு இருப்பதில்லை. பத்து பதினைந்து ஆண்டுகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தும் ஒருவருக்கொருவர் பேசாத கணவன் மனைவிகள் உள்ள குடும்பங்கள் பல உண்டு. அதாவது வெளிப்பார்வைக்கு அவர்கள் ஒரே குடும்பம்; ஆனால் அவர்களுக்குள் ஐக்கியம் இல்லை.
தேவன் தனது சபைகளும் விசுவாசிகளுக்குள் ஐக்கியதோடு இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார். சேர்ந்து ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்வதல்ல; மாறாக, விசுவாசிகளுக்குள் ஒற்றுமையும் அன்புறவும் அவசியம். பல சபைகளில் சேர்ந்து பாடி ஆராதித்து வந்தாலும் இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகளாக பிரிந்தவர்களாகவே விசுவாசிகள் இருக்கின்றனர். நிர்வாகிகள் அடாவடித்தனமாகச் செயல்படும்போது நிர்வாகத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் செயல்படுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் இதற்குக் காரணம் கிறிஸ்துவை தனிப்பட்ட வாழ்வில் அறியாத கிறிஸ்தவர்களாக இருப்பதுதான்.
அப்போஸ்தலர்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் ஒரே மனநிலையுடன் வாழ்ந்தனர். மட்டுமல்ல, விசுவாசிகளும் அவர்களோடு அதே ஐக்கியத்தில் வாழ்ந்தனர். "அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 : 46, 47 ) என்று வாசிக்கின்றோம்.
இதே ஐக்கியதோடு நாமும் வாழவேண்டுமென்று இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார். அதாவது நாம் அப்போஸ்தலர்கள் வாழ்ந்ததுபோல பிதாவோடும் குமாரனான கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டுமென்று கூறுகின்றார். இதனையே அவர், "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது" என்கின்றார்.
அதாவது, பிதாவோடும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் நமக்கு ஐக்கியம் இருக்குமானால் ஒருவருக்கொருவர் ஐக்கியமுள்ளவர்களாக இருப்போம். இப்படி நாம் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவே யோவான் இந்த நிருபத்தை எழுதுகின்றார். இதனையே அவர், "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்" என்கின்றார்.
நமக்குள் ஒருவருக்கொருவர் ஐக்கியமுடன் வாழவேண்டுமென்றால் நாம் முதலில் பிதாவோடும் குமாரனோடுமுள்ள உறவை வலுப்படுத்தவேண்டியது அவசியம். அப்படி தேவ உறவு வலுப்படும்போதுதான் குடும்பத்திலும், நமது ஆலயத்திலும், ஊரிலும், நாட்டிலும் சமாதானம் பெருகும். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "தேவனையும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." (2 பேதுரு 1;2) என்று கூறுகின்றார். நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் தேவ உறவில் வலுப்படமுடியும். எனவே கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட அவற்றை அவரிடம் அறிக்கையிடுவோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1714 ஆதவன் 17.10.2025 வெள்ளி
"உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே." ( ஏசாயா 44 : 2 )
மனிதர்கள் பொதுவாக இன்று பல்வேறுவித பயங்களால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் நன்றாக வாழும்போதும் எதிர்மறையான எண்ணங்களால் பயத்துடன் வாழ்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்குறித்து பயம், அவர்களது படிப்பு, திருமண காரியங்களைக்குறித்து பயம், உலகத்தில் ஏற்படும் பல்வேறு நோய்நொடிகளைக் கண்டு பயம், திடீரென ஏற்படும் மரணங்களைக் காணும்போது பயம் ...இப்படி மனிதர்களது பயங்கள் நீண்டுகொண்டே போகின்றன.
எனவேதான் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் தேவன், "பயப்படாதே" என்று நம்மைத் தைரியப்படுத்துகின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் "பயப்படாதே விசுவாசமுள்ளவனாய் இரு" என்று தன்னிடம் வந்த நோயாளிகளைத் திடப்படுத்தினார்.
உளவியல் பார்வையில் பயத்தின் வகைகள் குறித்து பேசும்போது, அவற்றை பெரும்பாலும் இயற்கையாகப் பிறவியிலேயே உள்ள பயங்கள் மற்றும் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்படும் பயங்கள் என இருவகைப்படுத்துகின்றார்கள். இயற்கையான (Innate) பயங்கள் என்பவை நாம் பிறந்தபோதே நம்முள் பதியப்பட்டிருக்கும், பரிணாம வளர்ச்சியின் மூலம் நமது மூளையில் ஆழமாக பதிந்திருக்கும் பயங்கள் ஆகும். இதற்கு உயரமான இடங்களிலிருந்து பார்க்கும்போது உண்டாகும் பயம், பெரும் சத்தத்தைக் கேட்கும்போது உண்டாகும் பயம், திடீர் இயக்கங்களின் பயம் போன்றவை எடுத்துக்காட்டாகும்.
அனுபவ பயங்கள் என்பவை நமது அனுபவம் அல்லது பார்வையின் மூலம் உருவாகும் பயங்களாகும். குழந்தை பருவத்தில் இருளின் பயம் போன்ற எளிய பயங்களிலிருந்து, பெரியவர்களின் பொது மேடையில் பேசும்போது ஏற்படும் பயம் போன்றவைகளை இதற்கு உதாரணம் கூறலாம்.
ஆனால் எந்தப் பயமாக இருந்தாலும் தேவனால் அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கமுடியும். நம்மைத் தாயின் வயிற்றில் உருவானதுமுதல் பாதுகாத்து வருபவர் நமது தேவன். எத்தனையோ குழந்தைகள் தாயின் வயிற்றிலேயே இறந்துபோய்விடுகின்றன. சில பிறக்கும்போது இறக்கின்றன. வறுமை காரணமாக ஐந்து வயதாகுமுன் பல குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் இவை அனைத்திலுமிருந்து நம்மைப் பாதுகாத்து இந்தச் செய்தியை வாசிக்கும் இந்தநாள்வரை நம்மைக் கொண்டுவந்துள்ளார்.
இதற்குக் காரணம் தேவனது சுத்தக் கிருபையே. எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே" என்று. ஆம், இம்மட்டும் கைவிட தேவன் இனியும் கைவிடமாட்டார்.
அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான் 4 : 18 ) என்று. அதாவது நாம் தேவன்மேல் பூரண அன்பு கொண்டு வாழ்வோமானால் பயம் நம்மைவிட்டு அகன்றுவிடும். காரணம், அகிலத்தையே படைத்த தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் தைரியம். ஆம் அன்பானவர்களே, என்ன நடந்தாலும் பயப்படாமல் வாழ்வை எதிர்கொள்வோம். தேவனது கிருபையின் கரங்கள் நம்மோடு இருக்கின்றன என விசுவாசிப்போம்.
"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 10 ) எனவே, பயப்படாமல் தைரியமாக வாழ்வைத் தொடருவோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1715 ஆதவன் 18.10.2025 சனி
"கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்." ( உன்னதப்பாட்டு 2 : 14 )
சாலமோனின் உன்னதப்பாட்டு எனும் இலக்கிய நடையிலான உருவக நூலானது வேதாகமத்தின் தனித்துவமான நூலாக உள்ளது. உண்மையான காதல் உணர்வு பாவமல்ல என்பதனையும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு காதல் உணர்வுபோன்று இருக்கவேண்டுமென்றும் இந்நூல்மூலம் நாம் அறிகின்றோம்.
எப்போதும் தேவனிடம் எதையாகிலும் எதிர்பார்த்து ஜெபிக்கவேண்டும் எனும் பிச்சைக்கார மனநிலையை நாம் மாற்றி அவரை அன்புணர்வோடு அணுகும்போது தேவனும் நம்மிடம் அன்பாக இருக்கின்றார். நம்மோடு நெருங்கி வருகின்றார் எனும் உண்மையினை இந்நூல் வாயிலாக நாம் உணர்ந்துகொள்கின்றோம்.
தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் ஆவிக்குரிய மனிதர்களை தேவன் கண்ணோக்கிப் பார்க்கின்றார். அவர்களோடு பேசுவதற்கு ஆர்வமுள்ளவராக இருக்கின்றார். பல்வேறு இக்கட்டுத் துன்பங்களால் வேதனையுற்று மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு ஒதுங்கி வாழும் தனது பக்தர்களை தேவன், "கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!" என்று அழைக்கின்றார். மகனே, மகளே நீ கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் ஒளிந்து வாழ்வதுபோல வாழாதே, நான் உன்னைப் பார்க்க, உன்னோடு பேச ஆசைப்படுகின்றேன் என்கின்றார்.
அதனையே நாம், "உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்" என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, தேவன் நமது ஜெபத்தைக் கேட்க ஆவலுள்ளவராக இருக்கின்றார். உலகத்துக்கு நாம் வெறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம் ஆனால் தேவனுக்கு நாம் அழகானவர்கள்; உலகம் நமது குரலைப் புறக்கணிக்கலாம், ஆனால் தேவனுக்கு நமது சத்தம் இன்பமாக இருக்கின்றது.
இன்று நாம் நமது வறுமை, வேலையில்லாமை போன்ற காரணங்களால் உறவினர்களாலும், நமது நண்பர்களாலும் கைவிடப்பட்டவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு வெட்கப்பட்டு நாம் கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற புறாக்களைப்போல மறைந்து வாழ்பவர்களாக இருக்கலாம். பொது இடங்களில் மற்றவர்களோடு சேர்ந்து இருக்கும் தகுதி நமக்கு இல்லை என்று நமது மனமே நம்மைத் தனிமைப்படுத்தலாம். ஆனால் தேவன் நம்மை நேசிக்கின்றார். வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்கும் நமது ஜெபங்களை தேவன் கேட்கின்றார்; அவருக்கு நாம் இன்பமானவர்கள்.
இஸ்ரவேல் நாட்டிலுள்ள கழுகு இனங்களில் ஒன்று வயதானபின் சிறகுகள் உதிர்ந்து பறக்க முடியாமலும், இரைதேட முடியாமலும் பெரிய கன்மலையின் பொந்துகளில் போய் ஒளிந்துகொண்டு அமைதியாகக் காத்திருக்குமாம். ஆனால் சில காலங்கள் கடந்தபின்னர் அவற்றின் இறகுகள் வளரத்துவங்கும். மீண்டும் அவை பெலனடைந்து வானில் சிறகடித்துப் பறக்கும். ஆம், இதுபோலவே, "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்".(ஏசாயா 40:31)
எனவே, இன்று கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற புறாவாக நாம் இருந்தாலும் விசுவாசத்தை இழந்திடாமல் கர்த்தர் செயல்படும்வரை பொறுமையாகக் காத்திருப்போம். செட்டைகளை அடித்து எழும்பத்தக்கதாக தேவன் நம்மை உயர்த்துவார்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1716 ஆதவன் 19.10.2025 ஞாயிறு
"அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்." ( 1 யோவான் 3 : 22 )
தேவனிடமிருந்து நாம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் முதலில் நாம் அவரது கற்பனைகளைக் கடைபிடிக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆனால் இந்த உலகத்தில் தேவனை அறியாதவர்களும், ஜெபிக்காதவர்களும்கூட பல ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ்வதை நாம் காண்கின்றோம். காரணம் என்னவென்றால், தேவன் தனது கிருபையால் எல்லோருக்கும் உதவிகள் செய்கின்றார். அவரை விசுவாசிப்பவர்கள், விசுவாசியாதவர்கள், அவருக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எல்லோரையும் அவர் பராமரிக்கின்றார். துன்மார்க்கர்களும் உலகினில் பல ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ்கின்றனர்.
இப்படி இருந்தாலும், அவரது கற்பனைகளின்படி வாழ்பவர்களை அவர் சிறப்பாகக் கவனிக்கின்றார். இதற்கு பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு விளக்கம் தருவது எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமென்று எண்ணுகின்றேன். வகுப்பில் படிக்கும் மாணவர்களில் பல மாணவர்கள் நன்றாகப் படிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் கீழ்ப்படித்தலிலும், ஒழுக்கத்திலும் சிறப்பாக இருப்பதில்லை. ஆனால் ஒரு மாணவன் நன்றாகப் படிப்பது மட்டுமல்லாமல் ஆசிரியருக்குக் கீழ்ப்படிந்து பள்ளியின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து ஒழுக்கமாக நடப்பானென்றால் அவனிடம் ஆசிரியர் தனி அன்பு கொள்வாரல்லவா?
இதுபோல, ஒரு குடும்பத்தில் எந்த மகன் தாய் தந்தையருக்கு ஏற்புடையச் செயலைச் செய்து அவர்களுக்குப் பிரியமாக நடக்கின்றானோ அவனைப் பெற்றோர் அதிகம் அன்பு செய்வதில்லையா? தினமும் குடித்து ஊர்ச்சுற்றிக்கொண்டு கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைக்கழிக்கும் மகனிடம் குடும்பத்துப் பொறுப்பையும் இரகசியங்களையும் பகிர்ந்துகொள்வார்களா?
இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34, 35 ) என்று கூறுகின்றார். அதாவது, தேவனை அறியாத மக்களும் நீதியான வாழ்க்கை வாழும்போது அவருக்கு உகந்தவர்கள் ஆகின்றனர். ஆனால் நாம் தேவனுக்கு உகந்தவர்களாக அல்ல; மாறாக அவரது சொந்த பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். பிள்ளைகளுடைய உரிமைப்பேறு சிறப்பானது.
ஆம் அன்பானவர்களே, நாம் தேவனது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழும்போது நாம் அவரது பிள்ளைகளாகின்றோம்; அப்போது, தேவன் நம்மில் மகிழ்ச்சிக்கொள்வது மட்டுமல்ல, அவர் நம்மில்வந்து நிலைத்திருக்கின்றார் என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான் 3 : 24 )
மேலும், இப்படித் தேவனின் நிலைத்திருக்கும் மனிதன் தேவ சித்தமறிந்து விண்ணப்பம் செய்பவனாக இருப்பான். காரணம் அவன் அவரது மகன் / மகள் என்பதால் தகப்பனது சித்தம் அவர்களுக்கு முழுமையாகத் தெரியும். இப்படி வாழும்போது, "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." ( 1 யோவான் 5 : 14 ) தேவன் சிலவேளைகளில் நமது ஜெபங்களுக்கு உடனேயே பதில் தந்து மகிழச்செய்வார். ஆனால், மேஜிக் போல உடனேயே நமது எல்லா விண்ணப்பங்களும் தேவன் எப்போதும் பதில் தருவதில்லை. பலவேளைகளில் நமது காத்திருத்தலை அவர் எதிர்பார்க்கின்றார்.
அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்து நாம் பொறுமையுடன் காத்திருக்கவேண்டியதும் அவசியமாகும். "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 ). ஆம் அன்பானவர்களே, தேவ சித்தம் செய்து, பொறுமையுடன் காத்திருந்து தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம்.