இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Saturday, September 28, 2024

வேதாகம முத்துக்கள் - செப்டம்பர் 2024.

       தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்       

'ஆதவன்' 💚செப்டம்பர் 01, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை 💚                            வேதாகமத் தியானம் - எண்:- 1,301 

"தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

தேவன் எவ்வளவு தயவு மிக்கவர் என்பதனை விளக்க இயேசு ஒரு உவமையைக் கூறுகின்றார். அநியாய நியாயாதிபதி (Judge) பற்றிய உவமையே அது. அவன், "தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்." ( லுூக்கா 18 : 2 ) அவனிடம் ஒரு விதவை தனது வழக்கை விசாரித்து நீதி வழங்குமாறு தினசரி வந்து உபத்திரவப்படுத்திக் கொண்டிருந்தாள் . அவளது தொல்லை தாங்காமல் இறுதியில் அவளது வழக்கை அந்த அநியாய நீதிபதி விசாரித்துத் தீர்ப்பு வழங்கினான். 

நமது தேவன் நீதியும் இரக்கமும் கிருபையும் மிகுந்தவர். அவர் இப்படி இருப்பதால்தான் நாம் அவரிடம் வேண்டுவதைப் பெற்றுக் கொள்கின்றோம்.  இதனையே இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்  கூறுகின்றார். அநியாயமிக்க நீதிபதி விதவையின் குரலுக்குச் செவிகொடுத்து அவளுக்கு நியாயம் செய்தானென்றால், "தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே. நமது அன்றாட ஜெபங்களும் விண்ணப்பங்களும் ஒருபோதும் வீணாகிப்போகாது. இதனை வாசிக்கும்போது நீங்கள் ஒருவேளை, "அப்படியானால் எனது ஜெபத்துக்குத்   தேவன் ஏன் பதில்தரவில்லை" என்று  எண்ணலாம்.  அதனால்தான் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் கூறுகின்றார்,  "தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து" என்று. அதாவது, நாம் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதற்கேற்ப நமது வாழ்க்கை இருக்கவேண்டும். இரண்டாவது  நமக்கு  நீடிய பொறுமை வேண்டும்.  

மேலும், தேவன் அந்த அநீதியுள்ள நீதிபதி போன்றவரல்ல; நமக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதனையும் அவர் அறிவார். நாம் நமக்கு மிகவும் தேவை எனக் கருதுவது தேவனது பார்வையில் அவ்வளவு முக்கியமானதாக இருக்காமல் போகலாம். அதேவேளையில் நாம் முக்கியமற்றதாகக் கருதும் ஒன்று முக்கியமானதாக இருக்கலாம்.  எனவேதான் இந்த வசனத்தில் இயேசு நமது கூப்பிடுதலுக்குச் செவிகொடுத்து நிறைவேறுவார் என்று கூறாமல், "நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" என்கின்றார். அதாவது, பொறுமையாக இருந்து  எது நியாயமோ அதனைச் செய்வார்.  எனவேதான்  தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் ஜெபிக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.  

ஆம்  அன்பானவர்களே, தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருக்க மாட்டார். விசுவாசத்தோடு தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவர் பதில் தரும்  வரை பொறுமையாகக் காத்திருப்போம். அவர் ஒருபோதும் நமக்கு அநியாயம் செய்யமாட்டார். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 02, 2024. 💚திங்கள்கிழமை 💚                             வேதாகமத் தியானம் - எண்:- 1,302

"...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

நமது நாட்டின் சாபக்கேடான விஷயங்களில் ஒன்று ஜாதி பாகுபாடு. ஜாதி வெறி இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளும் இருப்பது மறுக்கமுடியாத நிஜம். ஜாதி பாகுபாட்டைக் கொண்டுசெயல்படும் கிறிஸ்தவ ஆலயங்கள், கல்லறைகள் மட்டுமல்ல ஜாதி அடிப்படையில் உயர் பதவிகளுக்கு ஊழியர்களை நியமனம் செய்யும் அவலநிலையும்  கிறிஸ்தவத்திலும் மற்ற சமூகங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருக்கின்றது. பொதுமக்கள் யாரும் எந்தக் கோரிக்கையும்  வையாதபோது தங்கள் ஜாதிக்கு உயர்பதவிவேண்டும் என்பதற்காக  ஜாதி அடிப்படையில் மறைமாவட்டங்களைப் பிரித்து ஆட்சிசெய்வதையும் நாம் பார்க்கின்றோம். 

ஆனால் இன்று இவைகளை மறைத்து தங்களிடம்  குறையில்லாததுபோல கிறிஸ்தவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஜாதிவெறி பாவம் என்பதும் அது தேவனுக்கு ஏற்பில்லாத செயல் எனும் எண்ணமும்  கிறிஸ்தவத்  தலைவர்களுக்கும் இருப்பதில்லை. தேவன் இதனை அப்போஸ்தலரான பேதுருவுக்கு வெளிப்படுத்தினார். எனவே அவர் கூறுகின்றார், "...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." என்று. 

தேவன் ஆள்பார்த்தும் ஜாதி இனம் பார்த்தும் செயல்படுபவரல்ல. ஒருவன் தனக்கு உகந்த வாழ்க்கை வாழ்கின்றானா இல்லையா என்பதே அவரது அளவுகோல். ஆம், "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34, 35 ) என்கிறார் பேதுரு. 

தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்கின்றவன், நீதியைச் செய்யாதவன் எனும் இரு பிரிவுகள் தான் தேவனுக்கு உண்டுமேத்தவிர ஒருவர் பிறந்த ஜாதி இனத்தின் அடிப்படையில் அவர் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படியிருந்தும் நீதியைச் செய்யாதவன் மனம் திரும்பி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழத் தன்னை ஒப்புக்கொடுக்கும்போது தேவன் அவனையும் எந்தப் பாகுபாடுமில்லாமல் ஏற்றுக்கொள்கின்றார். 

கிறிஸ்தவம் வெறும் இரண்டே கட்டளைகளுக்குள் தான் அடங்கியுள்ளது. இயேசு கிறிஸ்து கூறினார், "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக." ( மத்தேயு 22 : 37 - 39 )

அதாவது, தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவதும் தன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவதும் இணையான கட்டளைகள். தன்னைப்போல பிறனிடத்தில் அன்புகூருபவன் மற்றவனைப் பிரித்துப் பார்க்கமாட்டான். ஆனால் இந்த இரண்டு கட்டளைகளில் ஒன்றில் தவறுகின்றவன் இரண்டிலும் தவறுகின்றான். 

எனவே அன்பானவர்களே, ஜாதி பாகுபாடுபார்ப்பவன் கிறிஸ்தவத்தில் எந்த உயர் பதவியில் இருபவனாக இருந்தாலும் அவன் தேவனுக்கு அருவெறுப்பானவன். அத்தகைய அருவெறுப்பானவன் மக்களை நல்வழியில் நடத்திட முடியாது. இதுபோலவே, ஜாதிவெறியுள்ளவன் ஒருவன் சாதாரண கிறிஸ்தவ விசுவாசி என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அவன் கிறிஸ்தவ விசுவாசி கிடையாது. 

எனவே, எந்த மனிதரையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருப்போம். அப்படிச் சொல்லிக்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் தவறாமல் கலந்துகொண்டு வாழ்வோமானால் இறுதிநாளில் தேவன் நம்மையும்  அசுத்தன் என்று கூறிப் புறம்பே தள்ளுவார். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 03, 2024. 💚செவ்வாய்க்கிழமை 💚                          வேதாகமத் தியானம் - எண்:- 1,303

"என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்" ( லுூக்கா 24 : 49 )

பிதாவான தேவன் நம்மை வழிநடத்தும் ஆவியானவரை நமக்கு வாக்களித்துள்ளார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துமூலம் ஆவியானவர் நமக்கு அருளப்படுகின்றார். "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." ( யோவான் 15 : 26 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். இதனையே, "என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆவியானவர் நமக்குள் வரும்போதுதான் நமக்கு பெலன் கிடைக்கின்றது. இன்றைய தியான வசனம் இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு உலகத்தில் வாழ்ந்தபோது கூறியது. அதுபோல தான் மரித்து உயிர்த்தபோதும் இதனையே கூறினார். "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 ) என்று உயிர்த்த இயேசு சீடர்களிடம் கூறினார். 

"எருசலேம் நகரத்தில் இருங்கள்" என்றும்  "நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது. எருசலேம் என்பது பரிசுத்த நகரம். அதாவது நீங்கள் உங்கள் பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் எனது வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 
 
அன்பானவர்களே, நாம் இங்குக் கவனிக்கவேண்டியது பரிசுத்தத்தைவிட்டு விலகாமல் காத்திருக்கும் அனுபவம். நாம் கிறிஸ்துவை அறிவிக்கவேண்டுமானால் இந்தக் காத்திருத்தல் அவசியமாய் இருக்கின்றது. பாவங்கள் மன்னிக்கப்படுவது ஆவிக்குரிய வாழ்வின் முதல்படிதான். உடனேயே கிறிஸ்துவை அறிவிக்கப்போகின்றேன் என்று புறப்பட்டுவிடக்கூடாது. நமக்கு உன்னத பெலன் தேவையாய் இருக்கின்றது. அந்த பெலன் ஆவியானவரால் நமக்கு அருளப்படுகின்றது. அந்த பெலன் தான் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவக்கூடியது. 

எனவேதான் இயேசு கிறிஸ்து சீடர்களிடம் கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) ஆம்,  எருசலேம் நாம் இருக்கும் பரிசுத்த நகரம், நமது சொந்த வீடு, குடும்பம். முதலில் நமது சாட்சி அங்கு இருக்கவேண்டும். தொடர்ந்து அடுத்திருக்கும் யூதேயா, அதாவது நம்மைச் சுற்றியிருக்கும் சமூகம் / ஊர்,  அடுத்து சமாரியா எனும் பிற இனத்து மக்கள்.  இப்படி நமது சாட்சியுள்ள வாழ்க்கை விரிவடைந்து இருக்குமானால் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வில் பூமியின் கடைசி எல்லைவரை சாட்சிகளாய் இருக்க முடியும். 

சொந்த வீட்டிலும், ஊரிலும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலும் சாட்சிக்கேடான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது.   ஆம் அன்பானவர்களே, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி எருசலேமில் தரித்திருந்து ஆவிக்குரிய பெலனடைவோம். அதன்பின்னர் கிறிஸ்துவை அறிவிக்க நமக்கு பெலன் கிடைக்கும். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 04, 2024. 💚புதன் கிழமை 💚                         வேதாகமத் தியானம் - எண்:- 1,304

"உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன். " ( யோவான் 8 : 26 )

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நாம் கடைபிடிக்கவேண்டிய ஒரு முக்கியமான குணத்தைக்குறித்துப்  பேசுகின்றார். மனிதர்களாகிய நாம் பல வேளைகளில் ஒருவரைக்குறித்து முழுவதும் அறியாமல் அவர்களைப் பற்றிப் பல காரியங்களைப் பேசவும் அவர்களிடம் நாம் காணும் குறைகளைவைத்து அவர்களை நியாயம்தீர்க்கவும் செய்கின்றோம். 

ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லோரையைப் பற்றியும் அவர்களது மனத்தின் எண்ணங்களைக்குறித்தும் நன்கு அறிந்திருந்தார். இதனை நாம், "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." ( யோவான் 2 : 25 ) என்று வாசிக்கின்றோம். ஆனால் அவர் மனிதர்களைப்போல ஒருவரது குறையை மற்றவர்களிடம் கூறிக்கொண்டிருக்கவில்லை.  

இதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார், "உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்." என்று. அதாவது, உங்களைக் குறித்துப் பேச உங்களைப்பற்றி  பல காரியங்கள் எனக்குத் தெரியும். ஆனால் நான் அவைகளைப் பேச விரும்பவில்லை, மாறாக என்னை அனுப்பின சத்தியமுள்ள பிதாவாகிய தேவன் என்னிடம்  சொல்ல நான் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன்".

ஆம் அன்பானவர்களே, நாம் பேசவேண்டியக்  காரியங்கள் இப்படியே இருக்கவேண்டும். மற்றவர்களைக்குறித்து அரையும் குறையுமாக நாம் கேள்விப்பட்டவற்றைப் பேசுவதையும் அதன் அடிப்படையில் அவர்களை நியாயம்  தீர்ப்பதையும் விட்டுட்டு தேவனுக்கேற்ற காரியங்களை மட்டுமே பேச முயற்சியெடுக்க வேண்டும்.  பிறரைக்குறித்த தேவையற்ற பேச்சுக்கள் மனிதர்களிடையே சண்டையையும் பிரச்சனைகளையுமே வளர்க்கும். 

ஒருவரைக்குறித்து நாம் சில காரியங்களை எளிதில் பேசிவிடலாம். ஆனால் நாம் பேசியது தவறு என்று பின்னர் நாம் உணர்ந்துகொண்டாலும் நாம் மற்றவர்களிடம் சென்று நான் இன்னாரைக்குறித்து பேசியது தவறு என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. காரணம் நாம் தவறுதலாகக் கூறிய அந்தச் செய்தி அதற்குமுன் பலரிடம் பரிமாறப்பட்டிருக்கும். அதாவது நாம் ஒருவரது நற்பெயருக்கு கெடுதல் உண்டாக்கியிருக்கின்றோம் என்று பொருள். 

எனவே, மற்றவர்களைக்குறித்து நாம் கேள்விப்படுகின்ற காரியங்களை நாம் நமக்குளேயே வைத்துக்கொள்வது நல்லது. இதனால்தான் வேதம் கூறுகின்றது, "தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே." ( நீதிமொழிகள் 20 : 19 ) அவர்களோடு கலவாமல் இருப்பது மட்டுமல்ல; நாமும் அதுபோல தூற்றிக்கொண்டும் இரகசியக்களை வெளிப்படுத்திக்கொண்டும் வாழாமல் தேவனுக்குச் சித்தமானவைகளை மட்டுமே பேசுபவர்களாக வாழ்வோம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 05, 2024. 💚வியாழக்கிழமை 💚                       வேதாகமத் தியானம் - எண்:- 1,305

"ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 14 )

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின சுவிசேஷம்வரை கோர்வையாக நாம் பார்ப்போமானால் மனிதர்கள் தன்னைப்போல பரிசுத்தமாக வாழ்ந்து நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்க தேவன் தொடர்ந்து எடுத்தச்  செயல்பாடுகளை நாம் பார்க்கலாம்.  ஆதியாகமத்தில் ஜீவவிருட்சமாக  நித்தியஜீவன் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேவனாகிய கர்த்தர், "...தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்." ( ஆதியாகமம் 2 : 9 ) ஆனாலும் அவர் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை உண்ண மட்டுமே தடைசெய்திருந்தார். தோட்டத்தின் நடுவிலே இருந்த ஜீவவிருட்சத்தைக்  குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆதாமும் ஏவாளும் ஜீவவிருட்சத்தை விரும்பவுமில்லை; அதனை அடைய விரும்பவுமில்லை. ஆனால் தேவன் தடைசெய்த மரத்தின் கனியைத் தின்று தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர். 

ஜீவனுக்குள் பிரவேசிக்க பரிசுத்தம் வேண்டும். "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 ) என்று நாம் வாசிக்கின்றோம்.

தேவ கட்டளையை மீறியபோது ஆதாமும் ஏவாளும் உண்மையில்லாதவர்களாக மாறிவிட்டனர். எனவே, அதுவரை பாவம் செய்யாமல் இருந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும் திறந்திருந்த ஜீவவிருட்சத்துக்குச் செல்லும் வாசல் அடைக்கப்பட்டது. இதனை,  "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3 : 24 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, தேவ சித்தம் செய்யாதவன் ஜீவனுக்குள் நுழையத் தகுதியில்லாதவன்.

ஆதாமும் ஏவாளும் இழந்துபோன இந்த பாக்கியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் வழங்க விரும்புகின்றார். அதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கவே அவர் பாடுபட்டு மரித்து நித்திய மீட்பினை உண்டுபண்ணினார்.  ஆம், அவரே வாசல். அவர் வழியாகவே நாம் நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியும். இதனையே, "ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே,  கிறிஸ்து தனது சுய இரத்தத்தால் உண்டாக்கிய இந்த மீட்பின் பாதையினைப் புறக்கணிக்காமல் வாழ்வோம். ஆதாம் ஏவாள் சுவைக்க மறுத்த ஜீவவிருட்சத்தின் கனியினை உண்டு மகிழ்வோம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 06, 2024. 💚வெள்ளிக்கிழமை                                    வேதாகமத் தியானம் - எண்:- 1,306

"நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 15, 16 )

இந்த உலகத்தில் நமக்கு வாழக்கொடுக்கப்பட்ட நாட்கள் குறைவு. எனவே அந்தக் குறைந்த  நாட்களை நாம்  நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஏன் கவனமாக நடக்கவேண்டும்? இந்த உலகத்தின் நாட்கள் பொல்லாதவைகளாய் இருக்கின்றன. காரணம் இந்த உலகம் பொல்லாங்கனுக்குள்  கிடக்கின்றது. "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  5 : 19 ) என்று கூறுகின்றார் யோவான். 

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம், ஆனால்  உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் (பிசாசு அல்லது சாத்தானின் கையில்)  கிடக்கிறது. இந்த முரண்பாடே பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றது. எனவே நாம்  ஞானமற்றவர்களாய் இருக்காமல்  ஞானமுள்ளவர்களாய்க் கவனமாய் நடந்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.   

ஞானமில்லாதவன் அறிவில்லாமல் சில காரியங்களைச் செய்வதைப்போல நாமும் செய்துவிடக்கூடாது என்கிறார் அப்போஸ்தலராகிய பவுல். எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறுகின்றார்,  "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 ) அதாவது ஞானமுள்ளவன் தன்னைக்குறித்த தேவனது சித்தம் இன்னதென்று அறிந்தவனாக இருப்பான். ஞானமில்லாதவனுக்கு அந்த அறிவு இருக்காது. 

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு. அந்தச் சித்தத்தைச் செய்வதே தேவனுக்கு உகந்ததாகும். தேவ சித்தத்தை மீறும்போது நாம் பாவம் செய்தவர்களாகின்றோம். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்......." ( கொலோசெயர் 1 : 9 ) என்று கொலோசெய சபை விசுவாசிகள் தேவ சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட ஜெபிப்பதாகக் கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும் தான் சொல்லிக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். ஆம் அன்பானவர்களே, பிதாவின் சித்தம் பரலோகத்தில் எப்படி அவரது விருப்பப்படி செய்யப்படுகின்றதோ அதுபோல பூமியில் நாம் அதனை நிறைவேற்றவேண்டும்.  எனவே, நாட்கள் பொல்லாதவைகளானதால் நமது குறுகிய வாழ்நாள்  காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஞானமுள்ளவர்களாக நம்மைக்குறித்த பிதாவின் சித்தம் அறிந்து செயல்படுவோம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 07, 2024. 💚சனிக்கிழமை                                   வேதாகமத் தியானம் - எண்:- 1,307

"இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்." ( யாக்கோபு 1 : 8 )

இருமனமுள்ளவர்கள் உலக காரியங்களில் மட்டுமல்ல, ஆவிக்குரிய வாழ்விலும் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக தோல்வி வாழக்கையையே சந்திப்பார்கள். உலக காரியங்களில் சிலர் ஒரு வேலையினைச் செய்யத் துவங்குவார்கள். பின்னர் மற்றவர்களையும் தங்களது செயலில் ஏற்படும் பிரச்சனைகளையும் கண்டு மனம்மாறி வேறு ஒரு செயலைச் செய்யத் துவங்குவார்கள். இத்தகைய மனிதர்கள் நிலையற்றவர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இதற்குக் காரணம் சந்தேகம். ஒருவேளை நாம் செய்யும் இந்தச் செயல் நஷ்டத்தில் முடியுமோ? என்று சந்தேகப்படுவது. ஆவிக்குரிய வாழ்விலும் பலர் இப்படியே இருக்கின்றனர். எப்போதும் எதெற்கெடுத்தாலும் சிலர் சந்தேகத்திலேயே இருப்பார்கள். நன்றாக ஜெபிப்பார்கள், ஆனால் ஒருவேளை நாம் ஜெபித்தபடி நடக்காவிட்டால் என்னசெய்வது? என்பதே இவர்களது எண்ணமாக இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில், "அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 ) என்று கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறுகின்றார். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தின் முன்பு யாக்கோபு கூறுகின்றார், "சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 6, 7 ) என்று. ஆம் அன்பானவர்களே, சந்தேகம் ஒரு பெரிய நோய். உலக காரியங்களிலும் ஆவிக்குரிய காரியங்களிலும் மனிதர்களின் அழிவுக்கு சந்தேகம் இட்டுச்செல்லும். 

எனவே நாம் ஜெபிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சந்தேகப்படாமல் ஜெபிப்பது. எனது ஜெபத்துக்கு நான் விரும்பும் பதில் வந்தாலும் வராவிட்டாலும் நான் கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடமாட்டேன் என்று உறுதியாக இருப்பது. இந்த உறுதி இருக்குமானால் நாம் கலங்கிடமாட்டோம். நிலையற்றவர்களாக அலைந்து திரியமாட்டோம். இன்று கிறிஸ்தவர்கள் பலர்கூட தங்களுக்குச் சில பிரச்சனைகள் வரும்போது  பல்வேறு மூட நம்பிக்கைச் செயல்பாடுகளையும் பிறமதத்தினர் கையாளும் காரியங்களுக்கும் அடிமைகளாக உள்ளனர். இது தவறல்ல, இந்தியன் கல்ச்சர் என்று கூறித் தங்கள் தப்பிதங்களை நியாயப்படுத்திக்கொண்டு வாழ்கின்றனர். 

இத்தகைய இருமனதுள்ளவர்களைப் பார்த்து வேதம் கூறுகின்றது,  "நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்." ( 1 இராஜாக்கள் 18 : 21 )

'ஆதவன்' 💚செப்டம்பர் 08, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை                                வேதாகமத் தியானம் - எண்:- 1,308

"தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்." ( சங்கீதம் 18 : 25, 26 )

கடவுளை நாம் எப்படிப் பார்க்கின்றோமோ அப்படியே அவர் நமக்குத் தோன்றுவார். பணத்தை அடிப்டையாகக் கொண்டு தேவ ஆசீர்வாதத்தினைத் தேடுபவர்களுக்கு அவர் வெறும் பணம் தரும் தெய்வமாகவும் ஆத்தும இரட்சிப்பைத் தேடுபவர்களுக்கு அவர் ஆத்தும இரட்சகராகவும் தோன்றுவார். 

திருடச் செல்பவனும் தனது மனதில் தேவனைத் தன்னைப்போல ஒரு திருடனாக எண்ணுவதால் திருடும்போது யாரும் தன்னைக் கண்டு பிடித்துவிடக்கூடாது என்றுதான் வேண்டுதல் செய்கின்றான். இப்படித்  தன்னை ஒருவன் எப்படிப்பட்டவராக எண்ணுகின்றானோ அப்படியே அவனுக்குத் தோன்றுவார். ஆம்,   மாறுபாடுள்ளவனுக்கு  அவர் மாறுபடுகிறவராகத்  தோன்றுவார். எனவே தான் தேவனைத் துன்மார்க்கர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிவதில்லை. இந்த உலகத்தில் ஊழல் செய்யும் ஊழல்வாதிகள், எத்தர்கள், துன்மார்க்க அரசியல்வாதிகள் பலரும் பக்திக் செயல்பாடுகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ளனர். காரணம், அவர்கள் பார்வைக்கு கடவுளும் அவர்களைப் போன்றவர்தான்.  

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும் தோன்றுவீர்"  என்று.  ஆம் அன்பானவர்களே, நாம் தேவனது தயவு, உத்தமம், பரிசுத்தம் அல்லது புனிதம் இவற்றை அடையவேண்டுமானால் தேவனை நாம் அப்படிப்பட்டவராக எண்ணி வாழவேண்டியது அவசியம். 

இன்று கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் தேவனை உலக ஆசீர்வாதங்களைத் தருபவராகவே மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றனர். எனவே அவர்களுக்கு அவர் அந்த மட்டுமே வெளிப்படுவார். நித்தியஜீவனை அளிப்பவராக தேவனைப் பார்பவர்களுக்கோ நித்திய ஜீவனை அளிப்பார். 

ஆம், "தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்." ( ரோமர் 2 : 6 - 8 ) என்று வாசிக்கின்றோம். 

தேவன் தன்னை எவரிடமும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது கிடையாது. எனவே அவரவர் குணங்களுக்கேற்ப தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தமராகவும்; புனிதனுக்கு புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுகின்றார்.  எனவே, அன்பானவர்களே, பாவ மன்னிப்பையும் பரிசுத்த வாழ்வையும் நித்தியஜீவனையும் தேடுபவர்களுக்கு மட்டுமே அவர் தன்னை உண்மையாக வெளிப்படுத்தி அவர்களுக்கு இவைகளை அருளுகின்றார்.  

"..............நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். " ( லுூக்கா 6 : 38 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

'ஆதவன்' 💚செப்டம்பர் 09, 2024. 💚திங்கள்கிழமை                                   வேதாகமத் தியானம் - எண்:- 1,309

"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன." ( யோவான் 6 : 63 )

தேவ வசனங்கள் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன என்று இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். தேவனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் உயிருள்ளவை. எனவேதான் அவை மரித்தவனுக்கு உயிர்கொடுக்கும் வல்லமையும் நோய்களைக் குணமாக்கும் வல்லமையும் கொண்டுள்ளன. அதுபோலவே அந்த வார்த்தைகள் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வையும் கொடுக்க வல்லவை. 

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே." ( யோவான் 6 : 68 ) என்று இயேசு கிறிஸ்துவிடம் கூறினார். 

இயேசு கிறிஸ்து கூறுவதுபோல ஆவியே உயிர்ப்பிக்கிறது, அவர் கூறும் வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது. அதாவது மாம்சகாரியங்கள் ஒன்றுக்கும் பயனற்றவை. ஆனால் இன்று பலரும் ஆவிக்குரிய காரியங்களைவிட மாம்சகாரியங்களையே தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். தேவனது ஜீவனுள்ள வார்த்தைகளைப் புறக்கணிக்கின்றனர். வார்தையைப் புறக்கணிப்பது என்பது  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே புறக்கணிப்பதாகும். 

காரணம், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் தேவனது வார்த்தை என்று வேதம் கூறுகின்றது. ஆம், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

எனவே, மெய்யான சுவிசேஷ அறிவிப்பு என்பது நமது ஆண்டவராகிய இயேசுவை அறிவிப்பதுதான். அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.' ( 1 யோவான்  1 : 1 ) என்று. எனவே, கிறிஸ்துவையும் அவர் தரும்  நித்தியஜீவனையும் அறிவிக்காமல் உலக ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக அறிவிப்பது அவரைப் புறக்கணிப்பதாகும்.

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; அந்த வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன என்று கூறியுள்ளபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றார். அவரைப் நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிட்டு நாம் நமது மாம்சத்தில் எடுக்கும் முடிவுகள் ஒன்றுக்கும் உதவாதவை. 

எனவே, ஆவியும் ஜீவனுமாக இருக்கும் அவரையே வாழ்வில் பற்றிக்கொள்வோம்.  ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்ற அவரே நமக்கு நித்திய ஜீவனையும் தருவார். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 10, 2024. 💚செவ்வாய்க்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,310

".............அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை". ( தானியேல் 4 : 35 )

வானத்தின் சேனைகள் என்று இங்குக் குறிப்பிடப்படுவது வான்மண்டல கோள்கள் மற்றும் விண்மீன்களைக் குறிக்கின்றது. வானத்துக் கோள்கள் அங்கு சும்மா இருக்கவில்லை, மாறாக ஒன்றையொன்று தங்களது ஈர்ப்புவிசையால் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி நடத்துபவர்தான் நமது தேவனாகிய கர்த்தர். 

பூமி அந்தரத்தில் குறிப்பிட்ட இலக்குக்குள் தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கென்று ஒரு ஆதாரம் வேண்டும். அது கிரகங்களின் ஈர்ப்புவிசையால் (Magnetic Force) தான் நடைபெறுகின்றது. இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த உண்மையினை ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பரிசுத்தவான்களுக்குத் தேவன் வெளிப்படுத்தியுள்ளார். எனவேதான் எந்தவித நவீன கருவிகள் இல்லாதகாலத்திலேயே இதனை அவர்கள் கண்டுணர்த்து கூறமுடிந்தது.  

"வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" ( யோபு 38 : 31 -33 ) என்று தேவன் கேட்கின்றார்.  

அதாவது இப்படி இந்தக் கிரகங்கள், ராசிகள்  பூமியை நிலைநிறுத்த உதவுகின்றன. (பூமியிலுள்ள மக்களையல்ல) இவை செய்யும் எந்த காரியத்தையும் மனிதனால் செய்ய முடியாது. இதனையே மேற்படி வசனத்தில் தேவன், "அறிவாயோ? திட்டம்பண்ணுவாயோ? நீ இணைக்கக்கூடுமோ? கட்டுகளை அவிழ்ப்பாயோ?  வரப்பண்ணுவாயோ? வழிநடத்துவாயோ?" என்று கேட்கின்றார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை தேவனால்தான் முடியம்  என்றுதான் இருக்கமுடியும். 
 
இப்படி தேவன்  தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் மக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. இப்படி நாம் வெறும் தூளும் துரும்புமாக இருப்பதால் அவருக்கு அஞ்சி வாழவேண்டியது அவசியம். அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. ஒருவனும் இல்லை என்று கூறும்போது எந்த பரிசுத்தவானும் இல்லை என்றுதான் பொருள். 

எனவேதான் நாம் தேவ கிருபையினைச் சார்ந்துகொள்ளவேண்டியது அவசியம். "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை." ( புலம்பல் 3 : 22 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, எனவே நாம் அவரது கிருபையைச் சார்ந்தகொண்டு அவரது சித்தத்தின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 11, 2024. 💚புதன்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,311

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." ( லுூக்கா 3 : 8 )

தேவன் விரும்புகின்ற வாழ்க்கை இருக்கின்றதோ இல்லையோ பல கிறிஸ்தவர்களுக்குள்ளும் தங்களது சபைகளைக்குறித்த வீண் பெருமைமட்டும் அதிக அளவு உள்ளது.  கிறிஸ்துவுக்கேற்ற கனியுள்ள வாழ்க்கை இல்லாமல் இத்தகைய வீண் பெருமைகள் எதற்கும் உதவாது என்று இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

யூதர்களுக்கு ஒரு மத வைராக்கியம் இருந்தது. தங்களை ஆபிரகாமின் சந்ததி என்று கூறிக்கொள்வதில் அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் தேவன்மேல் ஆபிரகாம் கொண்டிருந்த விசுவாசமோ அவர்களுக்கு இல்லை. அவர்கள் கருத்துப்படி ஆபிரகாம்தான் மேலான தகப்பன்.  எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், "எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் " ( யோவான் 8 : 53 ) என்றார்கள்.

இன்றும் இப்படி வீண் பெருமைபேசும் மனிதர்கள் உண்டு. மற்ற சபைப் பிரிவினரைவிட தங்களுக்குள் மேன்மையாக இருக்கும் காரியங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இப்படிப் பேசும் பலரிடமும் தேவன் விரும்பும் நற்குணங்கள் இருப்பதில்லை. மூன்றாம்தர உலக மனிதர்களைப்போல குடித்து, லஞ்சம் வாங்கி, கெட்டவார்த்தைகள்பேசி, தகாத உறவுகள்கொண்டு, சபைத் தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகளைவிடக் கேவலமாக நடந்துகொண்டு  வாழும் இவர்கள் தங்களது சபையைக்குறித்து மேன்மையாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

இதுபோலவே அன்றைய யூதர்கள் ஆபிரகாமைப்பற்றி பெருமைபேசுபவர்களாக இருந்தனர். இத்தகைய மனிதர்களைப்பார்த்துத்தான் இன்றைய வசனம் கூறுகின்றது,  "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்...." என்று. 

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தைக் கூறிய யோவான் ஸ்நானகன் தொடர்ந்து கூறுகின்றார், "இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( லுூக்கா 3 : 9 ) அதாவது மனம்திரும்பி கனிகொடுக்கின்ற வாழ்க்கை இல்லாமல் இருக்குமேயானால் நல்ல கனி கொடாத மரங்களை வெட்டி வீழ்த்துவதுபோல வெட்டி வீழ்த்தப்படுவாய். கோடரியானது அருகே தான் வைக்கப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நமது சபை மேன்மையோ, நமது சொந்த பதவி, அதிகார பலமோ நம்மை இறுதி நாட்களில் இரட்சிக்காது. கனியுள்ள வாழ்க்கை வாழும்போது மட்டுமே நாம் தேவனுக்கு உகந்தவர்களாக முடியும்.  அது மட்டுமே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராகக்  கொண்டுச் செல்ல முடியும். "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 
 
'ஆதவன்' 💚செப்டம்பர் 12, 2024. 💚வியாழக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,312

"என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்." ( சகரியா 14 : 5 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தனது பரிசுத்தவான்கள் புடைசூழ அவர் உலகிற்கு வரும்போது நாம் அவருக்கு ஏற்றத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் அவர் நம்மில் தனக்கு உகந்தவர்களாக வாழ்பவர்களை அவரோடுகூட அப்போது எடுத்துக்கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது இதுகுறித்து பல்வேறுமுறை உவமைகளாகக் கூறியுள்ளார்.  அவற்றில் பத்துக் கன்னியர்  உவமை (மத்தேயு 25), திருமண ஆடை இல்லாத மனிதனைக் குறித்த உவமை (மத்தேயு 22) நாம் பலமுறை படித்து அறிந்தவையே. 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து அவர் உயிர்த்து பரலோகம் சென்றவுடனேயே சீடர்களுக்கு அறிவிக்கப்பட்டது. "கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 ) என வானதூதர் அவர்களுக்கு அறிவித்தார். 

இயேசு கிறிஸ்துவும் தான் உயிரோடு இருந்த நாட்களில் இதனை வெளிப்படுத்தினார். "அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." ( மத்தேயு 24 : 29, 30 ) என்றார் அவர். 

ஆனால் அந்த நாள் என்று வரும் என்று நமக்குத் தெரியாது. "கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்." ( 2 பேதுரு 3 : 10 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. மேலும், "இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!" ( 2 பேதுரு 3 : 11 ) என்று அவர் கூறுகின்றார். 

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் வருவதற்குமுன் என்னென்ன நிகழும் என வேதாகமம் கூறும் தீர்க்கதரிசனங்கள் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல பரிசுத்த நடக்கையுள்ளவர்களாய்  நம்மைக் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். மணவாளனாகிய அவர் வரும்போது அவரோடுகூட பரலோகராஜ்யத்தில் நுழைய முடியாமல் நாம் புறம்தள்ளப்பட்டுவிடக்கூடாது. எனவே எச்சரிக்கையாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.  ஆம், "தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; " ( 2 பேதுரு 3 : 12 )

'ஆதவன்' 💚செப்டம்பர் 13, 2024. 💚வெள்ளிக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,313

"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்."( சங்கீதம் 119 : 92 )

கிறிஸ்துவுக்குள் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போதும் பலவேளைகளில் துன்பங்கள் நம்மை நெருக்கிச் சோர்ந்துபோகச் செய்துவிடும். அத்தகைய வேளைகளில் தேவனுடைய வார்த்தைகளே நமக்கு ஆறுதலும் மனமகிழ்ச்சியும் தர முடியம். இப்படி ஆவிக்குரிய வாழ்வில் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள், கிறிஸ்துவை அறியாத மனிதர்கள் வாழ்விலும் இது உண்மையாகும். ஆம், கிறிஸ்துவை வாழ்வில் அறியாத பலரும்கூட தேவ வார்த்தைகளால் மரணத்துக்குத் தப்பி வாழ்ந்துள்ளனர். 

இதுகுறித்தப் பல சாட்சிகளை நான் கேட்டுள்ளேன். வாழ்வே இருளாகி இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒரு  வழியில் தேவனது வார்த்தைகள் அவர்களோடு இடைப்பட்டு  தற்கொலை முடிவினை  கைவிட்டுள்ளதாகப் பலரும் சாட்சி கூறுகின்றனர். ஒருமுறை ஒரு பிராமண நண்பர் என்னிடம், "நான் சுவர்களில் எழுதப்பட்டுள்ள வேத வசனங்களை எங்கு கண்டாலும் வாசித்துப் பார்ப்பேன். காரணம் அவை எனக்குள்ளே புத்துணர்ச்சியைத் தருகின்றன" என்று கூறினார். 

இத்தகைய மகிழ்ச்சி தனக்குள்  இருந்ததால்தான் இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்" என்கின்றார். அதாவது,  உமது வேத வார்த்தைகள் இருப்பதால்தான் நான் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இல்லையானால் அழிந்துபோயிருப்பேன் என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, வேத வசனங்களில் நாம் காணும் பல வாக்குறுதிகள் நமக்கு எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையினைத் தந்து நம்மை வாழவைக்கின்றன. 

"உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்." ( சங்கீதம் 119 : 103 ) என்றும் "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்றும் இன்றைய தியான சங்கீதத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது கூறப்பட்டுள்ளதை நாம் காணலாம். 

முதலாவது தேவ வார்த்தைகள் நமது வாய்க்கு இனிமையாகவும் தொடர்ந்து நமது வாழ்க்கையினை நாம் சரிபடுத்திக்கொள்ள தீபமாகவும் இருக்கின்றன.  எனவேதான் நாம் வேதாகமத்தை வாசிக்கவும் அதிலுள்ள வசனங்களை நமது இருதயத்தில் பதித்து வைக்கவேண்டியதும் அவசியமாய் இருக்கின்றது. அப்படி நாம் இருப்போமானால் அவை நமக்கு எந்தவித துன்ப வேளையிலும் மனம் சோர்ந்துபோகாமல் இருக்க உதவிடும். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) என்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது வார்த்தைகள் நமக்குள் இருக்கவேண்டும்; அவற்றின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். எனவே வேத வசனங்களை வாசித்து ஏற்றுக்கொள்வோம். அவரது வேதம் நமது மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், இன்றைய தியான வசனத்தின்படி நமது துக்கத்திலே நாம் அழிந்து போய்விடுவோம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 14, 2024. 💚சனிக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,314

"........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." ( யோவான் 17 : 9 )

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மை அறிந்த நம் ஒவ்வொருவருக்காகவும் ஏற்கெனவே ஜெபித்துள்ளார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் பார்க்கின்றோம். இன்று சிலர் ஜெபிப்பதைப்போல மொத்த உலகத்துக்காகவும் அவர் ஜெபிக்கவில்லை. மாறாக, அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களுக்காக மட்டும் அவர் ஜெபித்தார். அதனையே, "........உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே." என்று கூறுகின்றார். 

அவர் இப்படி ஜெபிக்க என்ன காரணம் என்பதனையும் அவர் கூறுகின்றார். அதாவது, "நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்." ( யோவான் 17 : 8 )

பிதா தனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடையவர்களே என்கின்றார். காரணம், பிதாவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவனே பிதாவுக்குரியவன். அவர்களுக்காக மட்டுமே அவர் ஜெபிக்கமுடியும். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவன் அவரையும்  ஏற்றுக்கொள்ளாதவனாக இருக்கின்றான். அப்படி அவரை ஏற்றுக்கொள்ளாதவனுக்காக அவர் ஜெபிக்கமுடியாது.  

ஆனால், தேவன் அனைவரையும் அன்பு செய்வதால் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புகின்றார்.  ஆனால் அவர் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவருக்குரியவர்கள் ஆகின்றோம். 

தன்னை அறியும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் தேவன் அளிக்கின்றார்.  அதனை பயன்படுத்திக்கொள்பவர்கள் அவரை அறிகின்றார்கள். அல்லது சத்தியத்தை அறியவேண்டுமென்று விரும்புகின்றவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். உண்மையாக தேவனைத் தேடுபவர்கள் அவரை அறிந்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் அவருடையவர்களாகின்றனர். 

எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தின் முந்தைய  வசனத்தில், அவர்கள் உமது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள் என்று கூறுகின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது பிதாவை ஏற்றுக்கொள்கின்றோம். நாம் அவர்களுடையவர்கள் ஆகின்றோம். 

அன்பானவர்களே, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் வாயினால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவதோ, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதோ, வெறுமனே வேதாகமத்தை வாசிப்பதோ அல்ல, மாறாக அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்  அனுபவம்.  அந்த அனுபவம் பெற்றவர்களே பிதாவினால் இயேசு கிறிஸ்துவுக்கென்று கொடுக்கப்பட்டவர்கள். அப்படி நாம் இருப்போமானால் நமக்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே ஜெபித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியும் மன நிறைவும் சமாதானமும் அடைந்தவர்களாக இருப்போம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 15, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,315

"இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." ( ஓசியா 13 : 9 )

இன்றைய தியான வசனம் தேவனது  அளப்பரிய இரக்கத்தை எடுத்துக் கூறுகின்றது. மனிதர்கள் நாம் வலுவற்றவர்கள். எனவே, நாம் பலவேளைகளில் தவறி தேவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டுவிடுகின்றோம். ஆனால் தேவன் நமது வலுவற்ற நிலையினை அறிவார். எனவேதான், நீ எனது  வார்த்தைகளை மீறி உனக்கு நீ கேடுண்டாக்கிக்கொண்டாய் ஆனாலும் என்னிடத்தில் உனக்கு மன்னிப்பு உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

எப்படி கேடுண்டாகிக்கொண்டார்கள் என்பதனை இன்றைய தியான வசனத்துக்கு  மூன்று வசனங்களுக்குமுன் நாம் வாசிக்கின்றோம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள்." ( ஓசியா 13 : 6 )

அதாவது, நல்ல ஒரு வேலை, மனம் விரும்புவதை வாங்கக்கூடிய அளவு பணம்,  மற்றவர்களைவிட உயர்ந்த அந்தஸ்து இவை இருப்பதால் அவற்றின்மேலேயே நம்பிக்கைக்கொண்டு தேவனை மறந்தார்கள் என்று பொருள். இதனையே இந்த வசனம், "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று" என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனாலும், நீ மனம்திரும்பி என்னிடம் வந்தால் உனக்குச் சகாயம் உண்டு என்கின்றார் தேவனாகிய கர்த்தர். புதிய ஏற்பாட்டின்படி கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட மீட்பு அனுபவம் பெற்ற நாம்தான் ஆவிக்குரிய யூதரும் இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம்.  உள்ளத்தில் யூதர்களான நாமே யூதர்கள். "ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்" ( ரோமர் 2 : 28, 29 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படி கிறிஸ்துவை  அறிந்துகொண்ட நாமே யூதரும் இஸ்ரவேலருமாக இருக்கின்றோம். எனவே, நாம் மற்ற உலக மனிதர்கள் உலக செல்வத்தால் திருப்தியாகி தேவனை மறந்து வாழ்வதுபோல வாழக்கூடாது என்று இன்றைய தியான வசனம் உணர்த்துகின்றது.  அப்படி நாம் இதுவரை நமக்கு உள்ள வசதிகள் வாய்ப்புகள், பதவிகள் குறித்து மேன்மைபாராட்டி மற்றவர்களை அற்பமாக எண்ணியிருப்போமானால் நாம் நமக்குக் கேடுண்டாக்கிக்கொண்டுள்ளோம் என்று பொருள். 

ஒருவேளை மனம்திரும்பிய வாழ்க்கை வாழ்ந்தாலும் நம்மை அறியாமலேயே இத்தகைய ஒரு சில பாவங்கள் நம்மை மேற்கொண்டு தேவனைவிட்டு நம்மைப் பிரித்துவிடக்கூடும். ஆனாலும், "என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, இப்படி நாம் இதுவரை வாழ்ந்திருப்போமானால் தேவனிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடுவோம். நமது தவறான வழியைவிட்டு விலகுவோம்.  அப்படி நாம் மன்னிப்புக்கேட்டு மனம்திரும்புவோமானால் நமக்கு மன்னிப்பு உண்டு. ஆம்,  "ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு." என்கிறார் கர்த்தராகிய தேவன். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 16, 2024. 💚திங்கள்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,316

"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;" ( 1 கொரிந்தியர் 2 : 9 )

தேவனிடத்தில் அன்புகூருபவர்களுக்கு மற்றவர்களைப்போல உலக ஆசீர்வாதங்கள் இல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் உணர்ந்துகொள்ளாத பரம ஆசீர்வாதங்கள் உண்டு. ஆனால் அவைகளை எல்லோரும் கண்டுகொள்வதில்லை. கிறிஸ்துவுக்காக பலர் வைராக்கியமாகச் செயல்படக் காரணம் அவர்கள் இந்த பரம ஆசீர்வாதங்களைக் கண்டுகொண்டதால்தான். 

தங்களிடம் உலக ஆசீர்வாதமிருப்பதால் சிலர் அந்த ஆசீர்வாதங்கள் எதுவுமில்லாத மற்றவர்களை அற்பமாக எண்ணுவதுண்டு. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்கள் உலகத்தின்முன் அற்பமாக எண்ணப்பட்டாலும் தேவன் அவர்களிடம் அன்புகூருகின்றார்.  அப்படித்  தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன்  ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவன் ஆயத்தம்பண்ணின இந்த ஆசீர்வாதங்களை ஆவிக்குரியவர்களுக்கு அவர் வெளிப்படுத்திக் கொடுக்கின்றார். இதனையே, "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 10 ) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் இதனைக் கண்டுகொள்ளமுடியும். ஆம், "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 11 )

இயேசு கிறிஸ்துவும் இதனைத் தனது சீடர்களுக்கு எடுத்துக்கூறினார். "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்." ( யோவான் 14 : 2 ) பிதாவின் வீட்டிலுள்ள வாசஸ்தலம் தான் ஆவிக்குரிய மக்களது ஆசீர்வாதம். அதற்காகத்தான் இயேசு கிறிஸ்து பரலோகம் சென்றார். "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 3 ) என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். 

ஆம் அன்பானவர்களே, விசுவாசத்தோடு தேவனது வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்வோம். ஆவியானவர் அந்த விசுவாச சத்தியத்தை நாம்  உணர்ந்துகொள்ளும் மனதினை  நமக்கு அருளும்படி வேண்டுதல் செய்வோம். தேவனிடத்தில் தொடர்ந்து அன்புகொண்டு ஆவிக்குரிய வாழ்வைத் தொடருவோம். அப்போது தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை விசுவாசத்தால் கண்டு உணரும்படியான உள்ளத்தை அவர் நமக்குத் தந்து நம்மைத் திடப்படுத்துவார். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 17, 2024. 💚செவ்வாய்க்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,317

"தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

ஆன்மீகத் தேடல் என்பது இயற்கையிலேயே ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. எனவேதான் நமது நாட்டில்கூட பல்வேறு பெரியவர்கள், மகான் என அழைக்கப்படுகின்றவர்களும் தோன்றி தங்களுக்கு எது சரியோ அதனைக் கடவுளை அறியும் வழியாகப் போதித்து வந்துள்ளனர். இப்படி போதிக்கப்பட்ட அனைத்தும் சரி என்று நாம் கூறிவிடமுடியாது.  அதற்குக் காரணம் என்ன என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவ ஞானம், சுய ஞானம் எனும் இரு காரியங்கள் இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ளன. சுய ஞானம் என்பது மனிதனது சுயபுத்தியால் கற்றுக்கொடுக்கப்படும் அறிவு. தேவ ஞானம் என்பது விண்ணகத்திலிருந்து தேவனால் அருளப்படுகின்ற வெளிப்படுத்துதல் மூலம் அடையும் அறிவு. 

இன்று கடவுளை அறிந்துகொண்டவர்கள்போல பேசும் பலரும் தங்களைத் துறவிகள் என்று கூறிக்கொள்பவர்களும், சாதுக்களும்  தங்களது சுய ஞானத்தால் கடவுளைப் பற்றி பேசுபவர்கள்தான். காரணம், இப்படிப் பேசும் பலரும் பெரும்பாலும் உலகம் அருவருக்கும்  செயல்களைச் செய்பவர்களாக இருக்கின்றனர். இதுவே இவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்பதனை வெளிப்படுத்துகின்றது. இதற்கு ஆதாரமாக நாம் இவர்களைப்பற்றிய பல்வேறு செய்தித் சான்று காட்டமுடியும். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இவர்களைப்பற்றிய இத்தகையைச் செய்திகளை வெளியிடும்போது பலரும் அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் நாம் அப்படி அதிர்ச்சி அடைவதில்லை. காரணம், சுய ஞானம் இப்படித்தான் இருக்குமென்பது நமக்குத் தெரியும். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு எழுதும்போது;- "அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." ( தீத்து 1 : 16 ) என்று கூறுகின்றார். 

ஆனால், கிறிஸ்துவைக்குறித்து நாம் பிரசங்கிப்பது பலருக்கு பைத்தியக்காரத்தனம்போல இன்று தெரிகின்றது. பலரும், "இந்தக்காலத்தில்போய் இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே" என்று கிண்டலாகக் கூறுகின்றனர். ஆனால் இந்தப் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

ஆம் அன்பானவர்களே, சிலுவையைப்பற்றிய உபதேசம் வெறும் போதனையல்ல, அது மனிதனில் உள்ளான மாற்றத்தைக் கொண்டுவரும் வல்லமை உடையது. காரணம், அவை தேவனது வார்த்தைகள். பல்வேறு மத சாதுக்களும், கடவுளைக்குறித்து போதிக்கும் சந்நியாசிகளும் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்காத பரிசுத்தத்துக்கு நேராக இந்த வார்த்தைகள் நம்மை வழிநடத்துகின்றன. காரணம் அவை தேவ குமானாகிய கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தைகள். "அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்." ( 1 கொரிந்தியர் 1 : 31 ) எனவே, உலகத்துக்குப் பைத்தியமாகத் தோன்றுகிற அவரது வார்த்தைகளை யார் கேலிசெய்தாலும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 96889 33712
 
"ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்..." ( நீதிமொழிகள் 17 : 5 )

பரிகாசம் பண்ணுதல் என்பது வெறுமனே கேலி கிண்டல் செய்வதைமட்டுமல்ல, ஏழைகளை அற்பமாக எண்ணுவது, அவர்களைப்  புறக்கணிப்பது, அவர்களோடு பேசத் தயங்குவது, மற்றவர்களோடு அவர்களை ஒப்பிட்டு அற்பமாகப் பேசுவது போன்ற அனைத்துக் காரியங்களையும் குறிக்கும். 

ஒருமுறை ஏழைப் பெண் ஒருவர் வழக்கமாக அவர் அணிவதைவிட நல்ல ஆடை அணிந்து ஆலயத்துக்கு  வந்தார். அன்று ஆராதனை முடிந்து ஆலய வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த இரு பெண்கள் அந்தப் பெண்ணைக்குறித்துப் பேசும்போது ஒருத்தி, "இன்றைக்கு இன்னாரது மகளைப் பார்த்தாயா?"  என்று அந்தப் பெண்ணின் தகப்பன் பெயரைச்சொல்லி  ஒருவிதக் கேலியாகக் கேட்க,  மற்றவள், " யாராவது தர்மம்  செய்திருப்பார்கள்" என்றாள். 

இந்தமாதிரி பேச்சுக்களைச்  சம்பந்தப்பட்ட அந்தப்பெண்  கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவரைப் பரிகாசம் பண்ணுவதுதான்.  இதுபோல சிலர் தங்கள் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரர்களை எண்ணுவதுண்டு. கெட்டுப்போன உணவுகளை வேலைக்காரர்களுக்குக் கொடுப்பது, அவர்களுக்கான சம்பளத்தை ஏற்ற காலத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருநாள் அவர்கள் வேலைக்கு வரவில்லையானால் சம்பளம் கொடுக்கும்போது ஒருநாள் கூலியைக் கணக்குப் பார்த்துக் குறைப்பது இவைபோன்றவை ஏழைகளை பரிகாசம்பண்ணுவதுதான்.

பெரும்பாலும் அரசு வேலைகளில் இருப்போர் இப்படிச் செய்கின்றனர். அரசாங்கம் எத்தனைநாள் தங்களுக்கு விடுமுறை அளிக்கின்றது, இதுதவிர பணி நாட்களில் எத்தனை நாட்கள் எத்தனை வகை விடுமுறை அளிக்கப்படுகின்றது என்பதனை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.  

கடுமையான வார்த்தைகளால் வேலைக்காரர்களைத் திட்டுவதும் அவர்களைப் பரிகாசம்பண்ணுவதுதான்.   அவர்கள் ஏன் நம்மிடம் வேலைக்கு வந்திருக்கின்றார்கள்? அவர்களது ஏழ்மை நிலையால்தானே? எனவேதான் வேதம் சொல்கின்றது, "எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்." ( எபேசியர் 6 : 9 )

நான் ஆவிக்குரிய விசுவாசி என்று கூறிக்கொள்வதாலோ, ஆவிக்குரிய ஆராதனையில் கலந்துகொண்டு கூச்சலிடுவதாலோ, வேதாகமத்தை தினமும் வாசிப்பதாலோ, பல மணிநேரம் உபவாச ஜெபம் செய்வதாலோ நாம் தேவனது பார்வையில் நல்லவர்களல்ல. எனவே பெரிய அளவில் ஏழைகளுக்குத் தானதர்மங்கள்  செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இத்தகைய குறைகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.  

"தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்." ( நீதிமொழிகள் 14 : 31 )

'ஆதவன்' 💚செப்டம்பர் 19, 2024. 💚வியாழக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,319

"பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்....." ( சகரியா 4 : 7 )

பாபிலோனில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை கோரஸ் ராஜா (King Syrus ) விடுவித்து நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து  கைப்பற்றிச்சென்ற பொருட்களையும் திருப்பிக்கொடுத்து ஆலயத்தைத் திரும்பவும் கட்ட அனுமதியளித்தான். அப்போது செருபாபேல் தலைமையில் ஆலயம் கட்டப்பட்டது. ஆலயம் கட்டத் துவங்கியபோது யூதருக்கு எதிரானவர்கள் ஆலயம் கட்டுவதை எதிர்த்தனர்; தடைசெய்தனர். ஆலயப்பணி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுக் கிடந்தது. 

அப்போது சக்கரியா தீர்க்கதரிசிமூலம் கர்த்தரது வார்த்தை வந்தது.  அப்போது அவர் கூறியதுதான் இன்றைய தியான வசனம். மட்டுமல்ல, கர்த்தர் தொடர்ந்து கூறுகின்றார், "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்." ( சகரியா 4 : 9 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாமே தேவனுடைய ஆலயமாய் இருக்கின்றோம். ஒருவேளை நமது உடலாகிய ஆலயம் சந்துருவின் முயற்சியால் இன்று தேவனற்றதாக மாறிப்போயிருக்கலாம். அல்லது நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோயிருக்கலாம். பெரிய மலைபோன்ற பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம். நாம் எப்படி வாழ்வைத தொடருவோம் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். நம்மைப்பார்த்து தேவன் கூறுகின்றார், "பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்.....". எந்த மலைபோன்ற பிரச்சினை நம்மை நெருக்கினாலும்  அது நொறுங்கி சமபூமியாகும். 

ஆனால் செருபாபேலுக்கு இருந்ததுபோன்ற ஆர்வம் நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.   சும்மா இருந்துகொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று எண்ணிடாமல் நம்மை அவரது பலத்தக்  கரத்தினுள் ஒப்புக்கொடுத்து நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டி எழுப்ப ஒப்புக்கொடுக்கவேண்டும். 

பலமில்லாத நம்மைக்கொண்டே தேவன் இதனை நமது வாழ்வில் செய்துமுடிப்பார். இதனையே, "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். இன்றைய வசனத்தில் செருபாபேல் எனும் பெயர் வருமிடத்தில் உங்கள் பெயரைச் சேர்த்துச் சொல்லி இதனை விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். எந்தப் பெரிய பர்வதமானாலும் அது எம்மாத்திரம்? நமக்கு முன்பாக அது சமபூமியாகிடும். 

தேவனது அற்புதமான ஆற்றல்மூலம் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதை நாம் எஸ்றா நூலில் வாசிக்கலாம். சகரியா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறிய வார்த்தைகள் நிறைவேறின. ஆம், "செருபாபேலுக்குச் (நமக்கு) சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )

'ஆதவன்' 💚செப்டம்பர் 20, 2024. 💚வெள்ளிக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,320

"அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்." ( மத்தேயு 16 : 15 )

தன்னை ஏற்றுக்கொள்பவர்கள் வெறுமனே தன்னிடம் அன்புகூராமல் தான் யார் என்பதனை அறிந்து அன்புகூரவேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகின்றார். இன்று கிறிஸ்துவை அறியாத பிறமத அன்பர்களும் பலர் இயேசுவை அன்புசெய்கின்றனர். ஆனால் அவர்கள் மற்ற தெய்வங்களைப்போல அவரும் ஒருவர் என்று எண்ணிக்கொள்கின்றனர். எனவே தங்களது தொழில் நிறுவனங்களில் பிறமத தெய்வங்களது படங்களுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தையும் வைத்து மாலை அணிவித்து நறுமண தூபம் காட்டுகின்றனர். ஆனால் இவை கிறிஸ்துவைத் திருப்திச் செய்யாது என்பதனை அவர்கள் உணர்வதில்லை. 

இதுபோலவே இயேசு கிறிஸ்து உயிருடன் இருந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பலரும் அவரை மதித்தனர். ஆனால் அவர் யார் என்பதனை அவர்கள் உணர்ந்து மதிக்கவில்லை. மாறாக, முற்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி உயிர்பெற்று எழுந்து வந்துள்ளதாக எண்ணிக்கொண்டனர். சிலர்  அவரை யோவான் ஸ்நானகன் என்றனர், சிலர் எலியா என்றனர், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று எண்ணிக்கொண்டனர். எனவே, முதலில் தனது சீடர்களிடம் இயேசு, "மக்கள் என்னை யார் என்று கூறுகின்றனர்?" என்று கேட்டபோது சீடர்கள் இந்தப் பதிலையே கூறினர்.

ஆனால் இயேசு கிறிஸ்து, மக்கள் கூறுவது இருக்கட்டும், "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். ஏனெனில் நீங்கள் ஆரம்பம்முதல் என்னோடு இருக்கிறீர்கள், என்னோடு பழகியிருக்கிறீர்கள் எனவே மக்கள் எண்ணத்துக்கும் உங்கள் எண்ணத்துக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துவதற்குத்தான் இப்படிக் கேட்டார்.  அப்போது, "சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம்.? நம்மில் சிலர் அவரை நோய்தீர்க்கும் மருத்துவராக, கடன் தீர்க்க உதவும் நிதிஉதவி செய்பவராக, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வீட்டைக் காக்கும் காவல்காரராக, அனைத்துவித உலக ஆசீர்வாதங்களையும் வழங்குபவராகவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  இது யூதர்கள் அவரைப் பார்த்ததுபோன்ற பார்வையாகும்.   

அப்போஸ்தலரான சீமோன் பேதுரு கூறியபடி அவரை நாம்  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்ப்போமானால் மட்டுமே நமக்கும் அவருக்கும் உறவு சரியாக இருக்கின்றது என்று பொருள். அப்போதுதான் நமது பாவங்களை அவரால் மன்னிக்கமுடியுமென்ற உறுதி நமக்கு ஏற்படும். இப்படி பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவோடு நெருங்கிய உறவினர்களாக மாறிவிடுகின்றோம். அப்போது நாம் அவரை ஒரு தகப்பனாக, தாயாக, நண்பனாக, சகோதரனாகப் பார்க்கமுடியும். 

இப்படி நாம் அவரை ஏற்றுக்கொள்வதையே கிறிஸ்து விரும்புகின்றார். எனவே அன்பானவர்களே, இதுவரை அவரை நாம் யூகர்களைப்போல பார்த்திருப்போமானால் அந்தப் பார்வையை மாற்றுவோம். அவரை ஆத்தும இரட்சகராக,  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்க்கப் பழகுவோம். அப்போது நமது ஆவிக்குரிய வாழ்க்கை அடுத்த உயர்ந்த நிலைக்குச் செல்வதை கண்டுகொள்ளலாம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 21, 2024. 💚சனிக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,321

"என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எசேக்கியேல் 34 : 15 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பனாய் இருக்கின்றார். இந்த நல்ல மேய்ப்பரைக்குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாகக் கூறும் வார்த்தைகளே  இன்றைய தியான வசனம். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்." ( எசேக்கியேல் 34 : 14 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இந்த உலகத்தில் வாழ்ந்தபோது கிறிஸ்துவும் இதனையே கூறினார். "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்றார் அவர். 

இன்றைய தியான வசனத்தில் ஆடுகள் என்று வெறுமனே கூறாமல், 'என் ஆடுகள்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி நடப்பவர்களே அவரின் ஆடுகள். அப்படி அவரது வார்த்தையின்படி வாழும் மக்களை அவரே மேய்த்து வழிநடத்துவார். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்" எனும் தீர்க்கதரிசன வார்த்தைகள் கிறிஸ்து அருளும் ஆசீர்வாதங்களையும் சமாதானத்தையும் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் குரலுக்குக் கீழ்படியும்போது  மட்டுமே அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறமுடியும். அப்படி அறியும்போது மட்டுமே அவரது இரத்தத்தாலான மீட்பினை நாம் அனுபவிக்கமுடியும். இதனையே அவர், "நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." என்று கூறுகின்றார். ஆம், அவர் சிலுவையில் நமக்காக பலியானதையே இது குறிக்கின்றது. 

மட்டுமல்ல, இந்த மீட்பு அனுபவத்தை உலக மக்கள் அனைவரும் பெற்று அனுபவிக்கவேண்டுமென்று கிறிஸ்து விரும்புகின்றார். அதனையே அவர் கூறினார், "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்." ( யோவான் 10 : 16 ) 

ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ஏற்படவேண்டுமானால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் முதலில் அந்த நல்ல மேய்ப்பனை அறியவேண்டியது அவசியம். அதற்கு அவரை அறிந்தவர்கள் அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டியது அவசியம். எனவே அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையினாலும் வார்த்தைகளினாலும் அவரை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாக வாழ்வோம்.  

'ஆதவன்' 💚செப்டம்பர் 22, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,322

"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." ( யோவேல் 2 : 26 )

இன்றைய தியான வசனம் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய வாக்குத்தத்த வசனமாக உள்ளது.  அதாவது கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பு நிச்சயத்தைப் பெற்றவர்களே அவரது மக்கள். இந்த "என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படி தேவனது மக்களாக இருப்பவர்கள், சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, தங்களை அதிசயமாய் நடத்திவந்த தங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் ஒரு திருப்தியான வாழ்க்கை வாழ்வார்கள். காரணம் தேவனாகிய கர்த்தர் அவர்களை அதிசயமாக நடத்திவந்துள்ளார் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

பல்வேறு நெருக்கடிகள் போராட்டங்கள் வாழ்வில் வந்தாலும் தேவனால் மீட்கப்பட்டவர்கள் தேவனால் தனி அன்போடு கவனிக்கப்படுவார்கள். எனவே, தேவ ஜனங்கள் துன்பப்படும்போது மற்றவர்கள் அவர்களை அற்பமாகப் பார்த்தாலும் முடிவில் அப்படி அற்பமாகப் பார்த்தவர்கள் வெட்கப்படுவார்கள். தேவன் ஒருபோதும் தனது மக்களை வெட்கப்பட விடமாட்டார்.   

நமது ஆரம்பத்தில் நாட்கள் மற்றவர்களைவிட அற்பமானதாக இருக்கலாம். ஆனால், அந்த நாளிலும் பிறர் நம்மைப் பார்ப்பதைவிட கர்த்தரது கண்கள் சந்தோஷமாய் நம்மைப் பார்க்கின்றன. அவரது கரங்கள் நம்மை வழிநடத்துகின்றன. ஆம், "அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது". ( சகரியா 4 : 10 )

எனவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் துதிக்கக் கற்றுக்கொள்வோம். "ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்". (எபிரெயர் 13:15) எப்போதும் என்று கூறும்போது வாழ்வில் நல்லது கெட்டது எது நடக்கும்போதும் என்று பொருள்.

எனவே தேவனுடைய பிள்ளைகளே, வாழ்வில் நமது இன்றைய குறைகளை எண்ணி வேதனைப்படாமல் மகிழ்ச்சியாக இருப்போம். தேவனுக்கேற்ற வாழ்வைத் தொடர்வோம். எப்போதும் நமது உதடுகள் தேவனைத் துதிக்கும் உதடுகளாக இருக்கட்டும்.  "நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 23, 2024. 💚திங்கள்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,323

"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் அளித்தபடி அவரது நூறாவது வயதில் பிறந்தவன் ஈசாக்கு.  ஆனால், அவருக்கு  பிள்ளை இல்லாததால் அவர் மனைவி சாராள் தனது அடிமைப்பெண்ணான ஆகாரை அவருக்கு மறுமனைவியாகக் கொடுத்ததால் அவள்மூலம் பிறந்தவன் இஸ்மவேல்.  இதனைக்கொண்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் ஒரு சத்தியத்தை விளக்குகின்றார். 

நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவர்கள் ஆகின்றோம். ஆம், கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்துக்கு உரிமையாளர்கள் ஆகின்றோம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் இஸ்மவேலைப்போல மாம்சத்தின்படி பிறந்தவர்கள். இப்படி மாம்சத்தின்படி பிறந்தவர்களுக்கும் ஆவியின்படி பிறந்தவர்களுக்கும் முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 29, 30 ) அதாவது, மீட்பு அனுபவம் இல்லாதவர்கள் கிறிஸ்துவோடு சுதந்தரவாளியாயிருப்பதில்லை. 

எனவே, ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஆவிக்குரியவர்களுக்குத்தான் வேதத்திலுள்ள வாக்குத்தத்த வசனங்கள் உரிமையாகுமேத்  தவிர அவரோடு எந்தத் தொடர்புமின்றி வெறும் மாம்ச சிந்தைகொண்டு உலக ஆசீர்வாதங்களையேத் தேடி அலைபவர்களுக்கு அவை உரிமையாவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, மீட்பு அனுபவம் பெற்றவர்களே ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். மெய்யான ஆசீர்வாதம் அவர்களுக்கே உரியது. இதனையே நாம், "ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்." ( ஆதியாகமம் 26 : 12, 13 ) என்று வாசிக்கின்றோம். 

இஸ்மவேலைப்போன்ற உலக மனிதர்கள் நம்மை நெருக்கலாம். நமது செயல்பாடுகளை விமர்சிக்கலாம், நமக்கு எதிராகச் செயல்படலாம். ஆனால் மெய்யான தேவ ஆசீர்வாதம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக வாழ்பவர்களுக்கே உரியது.  கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரது புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, அந்த அழைப்பைப் புறக்கணிக்காமல் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாவோம். மெய்யான ஆசீர்வாதத்தினைச் சுதந்தரித்துக்கொள்வோம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 24, 2024. 💚செவ்வாய்க்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,324

".....எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன." ( 2 நாளாகமம் 20 : 12 )

இன்றைய தியான வசனம் யூதாவின் ராஜாவாகிய யோசபாத் கர்த்தரை நோக்கி ஜெபித்த ஜெபமாகும். மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். அதனை அறிந்த யோசபாத் நாடெங்கும் உபவாசத்தை அறிவித்தார். எல்லோரும் கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டார்கள். அப்போது யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவன் மேல் கர்த்தரது ஆவி வந்ததால் அவன் தீர்க்கதரிசனம் சொன்னான். 

"யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்" ( 2 நாளாகமம் 20 : 17 ) என்றான் அவன். அவன் கூறியதுபோல கர்த்தர் யோசபாத்தோடு இருந்து யூதாவுக்கு வெற்றியளித்தார். யோசபாத்துக்கு தேவன் பதிலளிக்க அவன் செய்த ஜெபமே காரணமாக இருந்தது. 

இன்றைய தியான வசனமான  ஜெப விண்ணப்பத்தில் யோசபாத் மூன்று காரியங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கையிடுவதை நாம் பார்க்கின்றோம். அவை:-

1. இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை;
2. நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை;
3. எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன.

பெலவீனத்தில் தேவனது பெலன் விளங்கும் (2 கொரிந்தியர் 12;9) எனும் உண்மையை யோசபாத் அறிந்திருந்தார். எனவே அதனை தேவனிடம் வாயினால் அறிக்கையிட்டார். ஆண்டவரே இந்த ஏராளமான கூட்டத்துக்கு முன்பாக நிற்பதற்கு எங்களுக்குப் பெலனில்லை. எனவே, நீரே எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்கிறார். 

இரண்டாவது, நாங்கள் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. என்கின்றார். ஆம், நமது வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்போது அதற்கு என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாமலிருக்கும். எப்படி பிரச்சனையிலிருந்து வெளிவருவது? எனவே, அதனை யோசபாத் தேவனது கரத்தில் விட்டுவிடுகின்றார். 

மூன்றாவது, எங்கள் கண்கள் உம்மையே நோக்கிகொண்டடிருக்கின்றன என்கிறார். ஆம், தேவனைவிட்டு தனது பார்வையை அவர் அகற்றவில்லை. பிரச்சனையைப் பார்க்காமல் தேவனை நோக்கிப் பார்த்தார். 

ஆம் அன்பானவர்களே, இதுவே இன்று நாம் பின்பற்றவேண்டிய சரியான வழியாகும். பிரச்சனைகள், துன்பங்கள் வாழ்வில் ஏற்படும்போது யோசபாத் ஜெபித்ததுபோல தேவனிடம் நமது பலவீனத்தை அறிக்கையிடுவோம். பிரச்சனையிலிருந்து வெளிவர என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாததால் அதனை தேவனிடம் விட்டுவிடுவோம். இறுதியாக பிரச்சனையையே எண்ணிக் கலங்காமல் தேவனைநோக்கி நமது கண்களைத் திருப்பி அவரையே நம்பிக்கையோடு நோக்குவோம்.  கர்த்தர் அதிசயமாக நம்மை விடுவித்து நடத்துவார். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 25, 2024. 💚புதன்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,325

"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )

மனிதர்கள் நாம் எதிலும் அவசரமாகச் செயல்படுகின்றோம். எனவே அதுபோன்ற அவசரத்தை நாம் தேவனிடமும் எதிர்பார்க்கின்றோம். ஆனால் தேவன் நம்மைப்போல எதையும் அவசரகதியில் செய்பவரல்ல. தேவனிடம் நாம் எதையாவது பெறவேண்டுமானால் முதலில் நாம் அவரது சித்தத்தின்படி வாழவேண்டும். இரண்டாவது பொறுமையாக அவர் செயல்படுவதற்குக் காத்திருக்க வேண்டும். 

தேவன் நமக்குச் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கலாம். ஆனால் அவை நிறைவேறுமளவும் நாம் காத்திருக்கவேண்டும். நாம் ஒரு காரியத்துக்காக ஜெபிக்கும்போது தேவன் அதற்கு பதில் தருவாரேத் தவிர எப்போது நாம் கேட்பதைத் தருவேன் என்று பெரும்பாலும் சொல்வதில்லை. ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதானபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் எப்போது அந்த மகனைத் தருவேன் என்பதை அவர் கூறவில்லை. அந்த வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருந்தது. 

தேவன் இப்படி நம்மைக் காத்திருக்கச் செய்வது நமது விசுவாசத்தைச் சோதிக்கவும் உறுதிப்படுத்தவுமே. இதனையே இன்றைய தியான வசனம்,  "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, பொறுமையோடிருந்து நாம் தேவனிடமிருந்து நமது விண்ணப்பங்களைப்  பெறவேண்டியதாயிருக்கின்றது. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." (யாக்கோபு 5:11) என்று கூறுகின்றார். 

கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கின்ற படியால்  இப்படி நம்மைப் பொறுமையாக காத்திருக்கச் செய்து தனது வாக்குத்தத்ததை நமக்கு அருளுகின்றார். காரணம்,  இப்படித் தேவனுக்காகக் காத்திருந்து அவர் வாக்களித்ததைப் பெறும்போதுதான் மேலான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கின்றது.   ஒரு தகப்பனிடம் மகனோ மகளோ ஒரு பொருளை ஆசைபட்டுக் கேட்கும்போது அந்தத் தகப்பன் உடனே அதனை வாங்கிக்கொடுக்காமல் அதனை வாங்குவதற்கான பணத்தைச் சம்பாதித்துத் தாமதமாக அந்தப் பொருளை வாங்கிக்கொடுக்கும்போது அந்தப் பிள்ளைகள் அதிக மகிழ்ச்சியடையும்.  

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 ) என்று வேதம் கூறுகின்றது.  ஆம் அன்பானவர்களே, தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியதை  பெறும்படிக்குப் பொறுமையாகக் காத்திருப்போம். அப்போது அது நிறைவேறும்போது பூரணமான மகிழ்ச்சி நமக்கு ஏற்படும். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 26, 2024. 💚வியாழக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,326

"அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )

இன்றைய தியான வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்து அவர் கூறியது. இயேசு கிறிஸ்து வருவார் என்பது நிச்சயமேத் தவிர, எப்போது வருவார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படாத சத்தியம். அதனை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியமில்லை. 

தனது வருகைக்கு முன்அடையாளமாக இயேசு பல காரியங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவைகளில் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் வருகை எப்போது என்பது இரகசியமான சத்தியம். அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் என்று இயேசு கிறிஸ்து கூறிவிட்டார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்  சிலர் தங்கள் மேதாவித்தனத்தைக் காண்பிக்க வேத ஆராய்ச்சி என்று பல்வேறு வேத வசனங்களை எடுத்து கணக்குப்பார்த்து இயேசு எப்போது வருவார் என்று கணித்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய மூடத்தனத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர். பிற பாரம்பரிய சபைகளில் இந்தக் கணக்குப்பார்த்தல் இல்லை.

தானியேல் புத்தகத்தின் சில வசனங்களை எடுத்து  தங்கள் கணித அறிவைப் பயன்படுத்தி இயேசுவின் வருகைக்கு நாள்குறிக்கின்றனர் இவர்கள்.  இத்தகைய ஆராய்ச்சி தேவையற்றது என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 'முகநூல்', 'யூடியூப்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய கணித அறிவு ஊழியர்களின் வீடியோக்களை நாம் அதிகம் பார்க்க முடிகின்றது. ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற குப்பைகளே. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கே தெரியாத இரகசியத்தை நாம் அறிய முயற்சிப்பது குப்பையைக் கிளறுவதுபோலத்தான்.

கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழ்ந்தாலும் வருகையின்போது அவர்  நம்மைத்  தன்னோடு சேர்த்துக்கொள்ளத்  தகுதியாக வாழவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  மக்களை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியதே உண்மை ஊழியர்களின் கடமை.  ஆனால் இன்று இத்தகைய கணிதமேதை ஊழியர்களின் போதனைகளைக்கேட்டு பல விசுவாசிகள் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதில் பெருமைகொள்கின்றனரேத் தவிர தங்களைத் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. இவர்களில் சிலர் என்னிடம், "சகோதரரே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குறித்து எழுதுங்கள்" என்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்றபடி வாழவேண்டிய வழிமுறைகள் வேதத்தில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதே கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுதல். அப்படி வாழும்போது அவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்கொள்ளமுடியும். எனவே நாம் அவர் எப்போது வருவார் என்று கணக்குப் போடாமல் எச்சரிக்கையோடு வாழ்வோம். "அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்." ( மாற்கு 13 : 33 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

'ஆதவன்' 💚செப்டம்பர் 27, 2024. 💚வெள்ளிக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,327

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." ( மத்தேயு 7 : 21 )

வாழ்க்கையில் உண்மையில்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டு - தேவ சித்தத்துக்கு முரணான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு - ஒருவர் எவ்வளவு ஜெபித்தாலும் அது அர்த்தமற்றது என்பதனை இன்றைய தியான வசனத்தில்  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். 

இன்று பலரும் "ஜெபமே ஜெயம்" என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் இந்த வார்த்தைகள் வேதத்தில் கூறப்படவில்லை. காரணம் ஜெபம் மட்டுமே ஒருவருக்கு வெற்றி தருவதில்லை. ஆவிக்குரிய வாழ்வில் ஜெபம் முக்கியம் என்றாலும் தேவ ஐக்கியதோடு கூடிய ஜெபம்தான்  தேவன் விரும்புவது. 

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.  உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" (ஏசாயா 1:15, 16) என்று ஏசாயா மூலம் தேவன் கூறுவதை நாம் வாசித்திருகின்றோம்.  

இதனையே "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்று இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது கர்த்தரை நோக்கி ஜெபிப்பது மட்டும் முக்கியமல்ல, நமது வாழ்க்கையும் அவருக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கவேண்டியது அவசியயம். 

ஆனால் இந்தச் சத்தியத்தை பெரும்பாலான ஊழியர்கள் கூறுவதில்லை. என்ன பிரச்சனைக்கு விசுவாசிகள் அவர்களை அணுகினாலும், "ஜெபியுங்கள்....ஜெபியுங்கள்...நானும் ஜெபிக்கிறேன்" என்று கூறி மக்கள் தங்கள் வாழ்க்கையின் செயல்பாடுகளைத் திருத்திக்கொள்ள வழி கூறாமல் தடுக்கின்றனர். மட்டுமல்ல, "ஆசீர்வாத உபவாச ஜெபம், நள்ளிரவு ஜெபம், வெள்ளிக்கிழமை ஜெபம், வாலிபர் ஜெபம், பெண்கள் உபவாச ஜெபம்......" போன்று பல்வேறு ஜெப அறிவிப்புகளை அறிவித்து ஜெபிக்கின்றனர். அந்த ஜெபங்கள் தேவனுக்கு ஏற்றதாக முதலில் நாம் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை பெரும்பாலும் கூறுவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் ஜெபமும் வாழ்க்கையும் இரு கண்களைபோன்றவை. இரண்டு கண்களும் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். வாழ்க்கை சரியில்லாத ஜெபம் ஒருவரை ஒற்றைக்கண்ணனாகவே மாற்றும். 

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே" என்று இயேசு கிறிஸ்து கூறுவதன்படி நம் அனைவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு பொதுவான சித்தமுண்டு. இது தவிர நம் ஒவ்வொருவரைக்குறித்தும் பிதாவாகிய தேவனுக்கு ஒரு சித்தமுண்டு. அந்தச் சித்தத்தை நாம் அறிந்து அதன்படி வாழவேண்டும். அப்படி வாழும்போது மட்டுமே நமது ஜெபம் அர்த்தமுள்ள ஜெபமாக இருக்கும். வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" கூப்பாடுபோட்டு ஜெபிப்பதில் அர்த்தமில்லை. 

நமது ஜெபங்கள் பிதாவுக்கு ஏற்புடையதாக இருக்க முதலில் அவரது சித்தம் அறிந்து அதன்படி வாழ்பவர்களாக மாறுவோம்.  தேவ சித்தத்துக்கு எதிராக நாம் செய்யும் பாவ காரியங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 28, 2024. 💚சனிக்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,328

"கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்." ( சங்கீதம் 7 : 8 )

நமது தேவன் நீதியின் தேவனாக இருக்கின்றார். அவர் செய்யும் செயல்கள் பலவும் பலவேளைகளில் நமக்குப் புரியாதவையாக இருந்தாலும் அவர் செயலுக்கு நீதியான ஒரு காரணம் இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார். 

இப்படி அவர் நீதியுள்ள தேவனாக இருப்பதால் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார் என்றும், எனவே என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும் என்றும் தாவீது கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தாவீது கூறுகின்றார், "துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்." ( சங்கீதம் 7 : 9 ) என்று. நீதியில்லாத வாழ்க்கை வாழும் துன்மார்க்கர்களின் வாழ்க்கை ஒழிந்துபோகின்ற வாழ்க்கையாகவே இருக்கும். 

நீதியைச் செய்பவனே தேவனுக்கு உகந்தவன். அன்று கொர்நேலியு வீட்டில் பிரசங்கிக்கும்போது அப்போஸ்தலரான பேதுரு கூறினார், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்று. தேவன் மதம், இனம் ஜாதி, நிறம், அழகு பார்த்து ஒருவரைத் தனக்கு உகந்தவனாக தேர்ந்துகொள்வதில்லை. மாறாக ஒருவரது நீதியுள்ள வாழ்க்கையையே பார்க்கின்றார். அப்படி வாழ்ந்த பிற இனத்தானாகிய கொர்நேலியுவுக்கு அவர் தன்னை வெளிப்படுத்தினார். 

ஆனால் இன்று பலருக்கு உண்மை,  நீதி, இவர்களைப்பற்றி பேசுவது பிடிப்பதில்லை. பலமணிநேரம் ஜெபிப்பார்கள், வேதம் வாசிப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் உண்மை நேர்மை இருக்கவேண்டுமென்று கூறினால் சலிப்பார்கள்; அல்லது பயப்படுவார்கள். ஒரு ஆலயத்தில் செய்தி கொடுக்கச் சென்றிருந்த எனது நண்பர் சகோதரர் ஒருவர் பேசி முடித்ததும் அங்கிருந்த குருவானவர், "உங்க மெசேஜ் நன்றாக இருந்தது... ஆனால் இவ்வளவு விரிவாக  பாவத்தையும் குறித்து நீங்கள் விளக்கியிருக்கவேண்டாம்" என்றாராம்.  எனது நண்பர் அன்று பேசியது, "பண விஷயத்தில் உண்மை" என்பது குறித்து.  

குறிப்பிட்ட குருவானவர் பணவிஷயத்தில் பல்வேறு தில்லுமுல்லு செய்பவர் என்று பிற்பாடுதான் அந்தச் சகோதரருக்குத் தெரிந்ததாம். இப்படியே அப்போஸ்தலரான பவுல் பேசும்போது பேலிக்ஸ் பயமடைந்தான். காரணம் அவனிடம் நீதி, நேர்மை இல்லாமலிருந்தது. இதனை நாம் "அவன் (பவுல்), நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த நீதியும் உண்மையுமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அப்போதுதான் நமது ஜெபங்கள் அர்த்தமுள்ளவைகளாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபமாக அமையும். அப்போது தாவீதைப்போல நாமும் துணிவுடன் தேவனை  நோக்கி,  "கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்."  என்று தைரியமாக ஜெபிக்கமுடியும். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 29, 2024. 💚ஞாயிற்றுகிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,329

"ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

இன்றைய தியான வசனம் "ஏனெனில்", எனும் வார்த்தையோடு ஆரம்பிக்கின்றது. அப்படியானால் இதற்குமுன் ஏதோ ஒன்று கூறப்பட்டுள்ளது, அத்தனையும் சேர்த்து வாசித்தால்தான் உண்மை விளங்கும். அது என்ன? இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்கள் கூறுகின்றன, "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 8, 9 )

அதாவது, கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்த விசுவாசத்தாலும்  கிருபையாலும் நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதுதேவனால் உண்டானது. இப்படி நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்டது ஏனென்றால், நற்செயல்கள் செய்கிறதற்கு.  அப்படி நாம் நற்செயல்கள்  செய்து நடக்கும்படி அவர் முன்னதாக இந்த மீட்பு அல்லது இரட்சிப்பை நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.

ஆம் அன்பானவர்களே, எல்லோரும் நற்செயல்கள் செய்யலாம். பலரும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், மீட்பு அனுபவம் பெற்று ஒருவர் நற்செயல் செய்யும்போது அது மற்றவர்கள் செய்வதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இப்படி நாம் வித்தியாசமானவர்களாக இருக்கும்படிக்கே - அவைகளில் நாம் நடக்கும்படிக்கே - அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கை இல்லாமல் நாம் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியாது. நற்செயல்கள் செய்வது என்பது வேறு; கனியுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது வேறு. கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது மட்டுமே நாம் கனிகளோடு சேர்ந்து நற்செயல்கள் செய்ய முடியும். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )

மட்டுமல்ல, தொடர்ந்து அடுத்த வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறினார், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 ) ஆம் அன்பானவர்களே, அவர் நமக்குள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி நாம் கனியுடன் கூடிய வாழ்க்கையுடன் நற்செயல்கள் செய்யவே அவர் மீட்பு அல்லது இரட்சிப்பு அனுபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.  

மேலும் இன்றைய வசனம் சொல்கின்றது, நாம்  படைக்கப்பட்டதே கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து நற்செயல்கள் செய்வதற்காகவே. எனவேதான் எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுகின்றார், "அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 )

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம்.  அப்போதுதான்  நாம் கனிகளோடுகூடிய நற்செயல்கள் செய்து தேவனை மகிமைப்படுத்த முடியும். 

'ஆதவன்' 💚செப்டம்பர் 30, 2024. 💚திங்கள்கிழமை                               வேதாகமத் தியானம் - எண்:- 1,330

"அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." ( 1 சாமுவேல் 8 : 7 )

இஸ்ரவேல் மக்களை தேவனே வழிநடத்தி வந்தார். பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள்  அவர்களை வழிநடத்தினர். காரணம், தேவன் தனது மக்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவர்களாக, தனது நேரடி பராமரிப்பில் வாழவேண்டுமென்று விரும்பினார். ஆனால் இஸ்ரவேல் மக்களைச் சுற்றிலும் இருந்த பல்வேறு இன  மக்களுக்கு அரசர்கள் இருந்தனர். அந்த அரசர்கள் அவர்கள் வழிநடத்தி அவர்களுக்காக யுத்தங்களையும் செய்தனர். 

இவைகளைப் பார்த்த இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. மற்ற மக்களுக்கு இருப்பதுபோல நமக்கும் தனி ராஜா இருக்கவேண்டும், அவர் நம்மை ஆட்சிசெய்யவேண்டும் என்று விரும்பினர். இதற்கு காரணம் சாமுவேலுக்குப்பின் அவர்களை வழிநடத்திய அவரது புதல்வர்கள் நல்லவர்களாக இல்லை. 

"இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்." ( 1 சாமுவேல் 8 : 5 ) என்று கூறப்பட்டுள்ளது. இங்கு நாம் இந்த மூப்பர்கள் செய்த தவறினை கவனிக்கவேண்டியது அவசியம். தேவன் இஸ்ரவேல் மக்களை தானே ஆட்சி செய்யும்படி விரும்பி தீர்க்கதரிசிகளையும் நியாதிபதிகளையும் ஏற்படுத்தினார். அவர்களிடம் தவறு இருக்குமானால் அதனை அவர்கள் தேவனிடம்தான் சொல்லி தீர்வு கண்டிருக்கவேண்டும். 

ஆனால் இஸ்ரவேலின் மூப்பர்கள் தேவனை நோக்கிப் பார்க்காமல் தங்களைச் சுற்றிலுமிருந்த மற்ற மக்கள் இனங்களைப் பார்த்தனர். அவர்களைபோலத் தங்களுக்கும் ஒரு ராஜா இருக்கவேண்டுமென்று விரும்பினர். எனவே அவர்கள் கடைசி நியாயாதிபதியான சாமுவேலிடம் வந்து தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டுமென்று கூறினர்.  மக்கள் இப்படிக் கூறியது தேவனுக்கும் சாமுவேலுக்கும்  மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே தேவன் சாமுவேலிடம் வேதனையுடன் கூறினார், "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்." என்று. 

ஆம் அன்பானவர்களே, இதனையே இன்றும் நம்மில் பலரும் செய்துகொண்டிருக்கின்றோம். தேவன் நம்மை வழிநடத்த அனுமதிக்காமல் நம்மைச் சுற்றிலுமிருக்கும் மக்களைப்போல நாமும் வாழவேண்டுமென்று விரும்பி தேவனுக்குப் பிரியமில்லாத செயல்களைச்  செய்துகொண்டிருக்கின்றோம்; அவரைப் புறக்கணிக்கின்றோம். இப்படி வாழும் மக்களைப்பார்த்துத்  தேவன் அன்று சாமுவேலிடம் கூறியதுபோலவே   "நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தள்ளினார்கள்." என்று வேதனையுடன் கூறுகின்றார்

உலக மக்களின் செழிப்பு, பகட்டு இவைகளைப்பார்த்து நாம் தேவனைவிட்டு விலகிப்போகும்போது தேவன் மனதில் வருத்தமடைகின்றார். காரணம் அப்படி விலகும்போது நாம் அவரது ஆளுகையைவிட்டு விலகிப்போகின்றோம். தேவனை விட்டு விலகிய இஸ்ரவேல் மக்கள் பட்டப்பாடுகளும் பல்வேறு அந்நிய ராஜாக்களுக்கு அடிமைகளாகி அவதிப்பட்டதும் நமக்கு ஒரு எச்சரிப்பு. எனவே அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் தேவனது கரத்தின் ஆட்சிக்கு விலகி நாம் சென்றுவிடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். அவரே நம்மை எப்போதும் ஆளுவாராக. !!                                    

நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.

 'ஆதவன்' 💚செப்டம்பர் 30, 2024. திங்கள்கிழமை        வேதாகமத் தியானம் - எண்:- 1,330

Wednesday, September 25, 2024

கனிகளோடுகூடிய நற்செயல்கள்

 'ஆதவன்' செப்டம்பர் 29, 2024. ஞாயிற்றுகிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,329

"ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

இன்றைய தியான வசனம் "ஏனெனில்", எனும் வார்த்தையோடு ஆரம்பிக்கின்றது. அப்படியானால் இதற்குமுன் ஏதோ ஒன்று கூறப்பட்டுள்ளது, அத்தனையும் சேர்த்து வாசித்தால்தான் உண்மை விளங்கும். அது என்ன? இன்றைய வசனத்துக்கு முந்தின வசனங்கள் கூறுகின்றன, "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 8, 9 )

அதாவது, கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்த விசுவாசத்தாலும்  கிருபையாலும் நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதுதேவனால் உண்டானது. இப்படி நாம் கிருபையால் இரட்சிக்கப்பட்டது ஏனென்றால், நற்செயல்கள் செய்கிறதற்கு.  அப்படி நாம் நற்செயல்கள்  செய்து நடக்கும்படி அவர் முன்னதாக இந்த மீட்பு அல்லது இரட்சிப்பை நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.

ஆம் அன்பானவர்களே, எல்லோரும் நற்செயல்கள் செய்யலாம். பலரும் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால், மீட்பு அனுபவம் பெற்று ஒருவர் நற்செயல் செய்யும்போது அது மற்றவர்கள் செய்வதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இப்படி நாம் வித்தியாசமானவர்களாக இருக்கும்படிக்கே - அவைகளில் நாம் நடக்கும்படிக்கே - அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கை இல்லாமல் நாம் கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியாது. நற்செயல்கள் செய்வது என்பது வேறு; கனியுள்ள வாழ்க்கை வாழ்வது என்பது வேறு. கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது மட்டுமே நாம் கனிகளோடு சேர்ந்து நற்செயல்கள் செய்ய முடியும். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 )

மட்டுமல்ல, தொடர்ந்து அடுத்த வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறினார், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15 : 5 ) ஆம் அன்பானவர்களே, அவர் நமக்குள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இப்படி நாம் கனியுடன் கூடிய வாழ்க்கையுடன் நற்செயல்கள் செய்யவே அவர் மீட்பு அல்லது இரட்சிப்பு அனுபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்.  

மேலும் இன்றைய வசனம் சொல்கின்றது, நாம்  படைக்கப்பட்டதே கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து நற்செயல்கள் செய்வதற்காகவே. எனவேதான் எபிரெயர் நிருப ஆசிரியர் கூறுகின்றார், "அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 )

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம்.  அப்போதுதான்  நாம் கனிகளோடுகூடிய நற்செயல்கள் செய்து தேவனை மகிமைப்படுத்த முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Tuesday, September 24, 2024

என் நீதியின்படி எனக்கு நியாயஞ்செய்யும்

 'ஆதவன்' செப்டம்பர் 28, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,328

"கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்." ( சங்கீதம் 7 : 8 )

நமது தேவன் நீதியின் தேவனாக இருக்கின்றார். அவர் செய்யும் செயல்கள் பலவும் பலவேளைகளில் நமக்குப் புரியாதவையாக இருந்தாலும் அவர் செயலுக்கு நீதியான ஒரு காரணம் இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார். 

இப்படி அவர் நீதியுள்ள தேவனாக இருப்பதால் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார் என்றும், எனவே என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும் என்றும் தாவீது கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தாவீது கூறுகின்றார், "துன்மார்க்கனுடைய பொல்லாங்கு ஒழிவதாக; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்." ( சங்கீதம் 7 : 9 ) என்று. நீதியில்லாத வாழ்க்கை வாழும் துன்மார்க்கர்களின் வாழ்க்கை ஒழிந்துபோகின்ற வாழ்க்கையாகவே இருக்கும். 

நீதியைச் செய்பவனே தேவனுக்கு உகந்தவன். அன்று கொர்நேலியு வீட்டில் பிரசங்கிக்கும்போது அப்போஸ்தலரான பேதுரு கூறினார், "எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 35 ) என்று. தேவன் மதம், இனம் ஜாதி, நிறம், அழகு பார்த்து ஒருவரைத் தனக்கு உகந்தவனாக தேர்ந்துகொள்வதில்லை. மாறாக ஒருவரது நீதியுள்ள வாழ்க்கையையே பார்க்கின்றார். அப்படி வாழ்ந்த பிற இனத்தானாகிய கொர்நேலியுவுக்கு அவர் தன்னை வெளிப்படுத்தினார். 

ஆனால் இன்று பலருக்கு உண்மை,  நீதி, இவர்களைப்பற்றி பேசுவது பிடிப்பதில்லை. பலமணிநேரம் ஜெபிப்பார்கள், வேதம் வாசிப்பார்கள் ஆனால் வாழ்க்கையில் உண்மை நேர்மை இருக்கவேண்டுமென்று கூறினால் சலிப்பார்கள்; அல்லது பயப்படுவார்கள். ஒரு ஆலயத்தில் செய்தி கொடுக்கச் சென்றிருந்த எனது நண்பர் சகோதரர் ஒருவர் பேசி முடித்ததும் அங்கிருந்த குருவானவர், "உங்க மெசேஜ் நன்றாக இருந்தது... ஆனால் இவ்வளவு விரிவாக  பாவத்தையும் குறித்து நீங்கள் விளக்கியிருக்கவேண்டாம்" என்றாராம்.  எனது நண்பர் அன்று பேசியது, "பண விஷயத்தில் உண்மை" என்பது குறித்து.  

குறிப்பிட்ட குருவானவர் பணவிஷயத்தில் பல்வேறு தில்லுமுல்லு செய்பவர் என்று பிற்பாடுதான் அந்தச் சகோதரருக்குத் தெரிந்ததாம். இப்படியே அப்போஸ்தலரான பவுல் பேசும்போது பேலிக்ஸ் பயமடைந்தான். காரணம் அவனிடம் நீதி, நேர்மை இல்லாமலிருந்தது. இதனை நாம் "அவன் (பவுல்), நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த நீதியும் உண்மையுமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அப்போதுதான் நமது ஜெபங்கள் அர்த்தமுள்ளவைகளாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபமாக அமையும். அப்போது தாவீதைப்போல நாமும் துணிவுடன் தேவனை  நோக்கி,  "கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்."  என்று தைரியமாக ஜெபிக்கமுடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

வாழ்க்கையில் உண்மையில்லா ஜெபம் அர்த்தமற்றது

 'ஆதவன்' செப்டம்பர் 27, 2024. வெள்ளிக்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,327

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." ( மத்தேயு 7 : 21 )

வாழ்க்கையில் உண்மையில்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டு - தேவ சித்தத்துக்கு முரணான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு - ஒருவர் எவ்வளவு ஜெபித்தாலும் அது அர்த்தமற்றது என்பதனை இன்றைய தியான வசனத்தில்  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். 

இன்று பலரும் "ஜெபமே ஜெயம்" என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் இந்த வார்த்தைகள் வேதத்தில் கூறப்படவில்லை. காரணம் ஜெபம் மட்டுமே ஒருவருக்கு வெற்றி தருவதில்லை. ஆவிக்குரிய வாழ்வில் ஜெபம் முக்கியம் என்றாலும் தேவ ஐக்கியதோடு கூடிய ஜெபம்தான்  தேவன் விரும்புவது. 

"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.  உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" (ஏசாயா 1:15, 16) என்று ஏசாயா மூலம் தேவன் கூறுவதை நாம் வாசித்திருகின்றோம்.  

இதனையே "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை" என்று இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது கர்த்தரை நோக்கி ஜெபிப்பது மட்டும் முக்கியமல்ல, நமது வாழ்க்கையும் அவருக்கு ஏற்ற வாழ்க்கையாக இருக்கவேண்டியது அவசியயம். 

ஆனால் இந்தச் சத்தியத்தை பெரும்பாலான ஊழியர்கள் கூறுவதில்லை. என்ன பிரச்சனைக்கு விசுவாசிகள் அவர்களை அணுகினாலும், "ஜெபியுங்கள்....ஜெபியுங்கள்...நானும் ஜெபிக்கிறேன்" என்று கூறி மக்கள் தங்கள் வாழ்க்கையின் செயல்பாடுகளைத் திருத்திக்கொள்ள வழி கூறாமல் தடுக்கின்றனர். மட்டுமல்ல, "ஆசீர்வாத உபவாச ஜெபம், நள்ளிரவு ஜெபம், வெள்ளிக்கிழமை ஜெபம், வாலிபர் ஜெபம், பெண்கள் உபவாச ஜெபம்......" போன்று பல்வேறு ஜெப அறிவிப்புகளை அறிவித்து ஜெபிக்கின்றனர். அந்த ஜெபங்கள் தேவனுக்கு ஏற்றதாக முதலில் நாம் நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை பெரும்பாலும் கூறுவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் ஜெபமும் வாழ்க்கையும் இரு கண்களைபோன்றவை. இரண்டு கண்களும் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். வாழ்க்கை சரியில்லாத ஜெபம் ஒருவரை ஒற்றைக்கண்ணனாகவே மாற்றும். 

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே" என்று இயேசு கிறிஸ்து கூறுவதன்படி நம் அனைவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு பொதுவான சித்தமுண்டு. இது தவிர நம் ஒவ்வொருவரைக்குறித்தும் பிதாவாகிய தேவனுக்கு ஒரு சித்தமுண்டு. அந்தச் சித்தத்தை நாம் அறிந்து அதன்படி வாழவேண்டும். அப்படி வாழும்போது மட்டுமே நமது ஜெபம் அர்த்தமுள்ள ஜெபமாக இருக்கும். வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" கூப்பாடுபோட்டு ஜெபிப்பதில் அர்த்தமில்லை. 

நமது ஜெபங்கள் பிதாவுக்கு ஏற்புடையதாக இருக்க முதலில் அவரது சித்தம் அறிந்து அதன்படி வாழ்பவர்களாக மாறுவோம்.  தேவ சித்தத்துக்கு எதிராக நாம் செய்யும் பாவ காரியங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Sunday, September 22, 2024

அந்த நாளை பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 26, 2024. வியாழக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,326

"அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )

இன்றைய தியான வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக் குறித்து அவர் கூறியது. இயேசு கிறிஸ்து வருவார் என்பது நிச்சயமேத் தவிர, எப்போது வருவார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படாத சத்தியம். அதனை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியமில்லை. 

தனது வருகைக்கு முன்அடையாளமாக இயேசு பல காரியங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவைகளில் பலவும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் வருகை எப்போது என்பது இரகசியமான சத்தியம். அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் என்று இயேசு கிறிஸ்து கூறிவிட்டார். 

ஆனால் இன்று ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்  சிலர் தங்கள் மேதாவித்தனத்தைக் காண்பிக்க வேத ஆராய்ச்சி என்று பல்வேறு வேத வசனங்களை எடுத்து கணக்குப்பார்த்து இயேசு எப்போது வருவார் என்று கணித்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஆவிக்குரிய போதகர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய மூடத்தனத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர். பிற பாரம்பரிய சபைகளில் இந்தக் கணக்குப்பார்த்தல் இல்லை.

தானியேல் புத்தகத்தின் சில வசனங்களை எடுத்து  தங்கள் கணித அறிவைப் பயன்படுத்தி இயேசுவின் வருகைக்கு நாள்குறிக்கின்றனர் இவர்கள்.  இத்தகைய ஆராய்ச்சி தேவையற்றது என்பதையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 'முகநூல்', 'யூடியூப்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய கணித அறிவு ஊழியர்களின் வீடியோக்களை நாம் அதிகம் பார்க்க முடிகின்றது. ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற குப்பைகளே. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவுக்கே தெரியாத இரகசியத்தை நாம் அறிய முயற்சிப்பது குப்பையைக் கிளறுவதுபோலத்தான்.

கிறிஸ்துவின் வருகை எப்போது நிகழ்ந்தாலும் வருகையின்போது அவர்  நம்மைத்  தன்னோடு சேர்த்துக்கொள்ளத்  தகுதியாக வாழவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  மக்களை அதற்குத் தகுதிப்படுத்தவேண்டியதே உண்மை ஊழியர்களின் கடமை.  ஆனால் இன்று இத்தகைய கணிதமேதை ஊழியர்களின் போதனைகளைக்கேட்டு பல விசுவாசிகள் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதில் பெருமைகொள்கின்றனரேத் தவிர தங்களைத் திருத்திக்கொள்ள முயல்வதில்லை. இவர்களில் சிலர் என்னிடம், "சகோதரரே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குறித்து எழுதுங்கள்" என்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்றபடி வாழவேண்டிய வழிமுறைகள் வேதத்தில் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதே கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுதல். அப்படி வாழும்போது அவர் எப்போது வந்தாலும் நாம் அவரை எதிர்கொள்ளமுடியும். எனவே நாம் அவர் எப்போது வருவார் என்று கணக்குப் போடாமல் எச்சரிக்கையோடு வாழ்வோம். "அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்." ( மாற்கு 13 : 33 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

காத்திருப்போம்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 25, 2024. 💚புதன்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,325

"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )

மனிதர்கள் நாம் எதிலும் அவசரமாகச் செயல்படுகின்றோம். எனவே அதுபோன்ற அவசரத்தை நாம் தேவனிடமும் எதிர்பார்க்கின்றோம். ஆனால் தேவன் நம்மைப்போல எதையும் அவசரகதியில் செய்பவரல்ல. தேவனிடம் நாம் எதையாவது பெறவேண்டுமானால் முதலில் நாம் அவரது சித்தத்தின்படி வாழவேண்டும். இரண்டாவது பொறுமையாக அவர் செயல்படுவதற்குக் காத்திருக்க வேண்டும். 

தேவன் நமக்குச் சில வாக்குறுதிகளைத் தந்திருக்கலாம். ஆனால் அவை நிறைவேறுமளவும் நாம் காத்திருக்கவேண்டும். நாம் ஒரு காரியத்துக்காக ஜெபிக்கும்போது தேவன் அதற்கு பதில் தருவாரேத் தவிர எப்போது நாம் கேட்பதைத் தருவேன் என்று பெரும்பாலும் சொல்வதில்லை. ஆபிரகாமுக்கு எழுபத்தைந்து வயதானபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் எப்போது அந்த மகனைத் தருவேன் என்பதை அவர் கூறவில்லை. அந்த வாக்குத்தத்தம் நிறைவேற ஆபிரகாம் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்கவேண்டியதிருந்தது. 

தேவன் இப்படி நம்மைக் காத்திருக்கச் செய்வது நமது விசுவாசத்தைச் சோதிக்கவும் உறுதிப்படுத்தவுமே. இதனையே இன்றைய தியான வசனம்,  "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, பொறுமையோடிருந்து நாம் தேவனிடமிருந்து நமது விண்ணப்பங்களைப்  பெறவேண்டியதாயிருக்கின்றது. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." (யாக்கோபு 5:11) என்று கூறுகின்றார். 

கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கின்ற படியால்  இப்படி நம்மைப் பொறுமையாக காத்திருக்கச் செய்து தனது வாக்குத்தத்ததை நமக்கு அருளுகின்றார். காரணம்,  இப்படித் தேவனுக்காகக் காத்திருந்து அவர் வாக்களித்ததைப் பெறும்போதுதான் மேலான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கின்றது.   ஒரு தகப்பனிடம் மகனோ மகளோ ஒரு பொருளை ஆசைபட்டுக் கேட்கும்போது அந்தத் தகப்பன் உடனே அதனை வாங்கிக்கொடுக்காமல் அதனை வாங்குவதற்கான பணத்தைச் சம்பாதித்துத் தாமதமாக அந்தப் பொருளை வாங்கிக்கொடுக்கும்போது அந்தப் பிள்ளைகள் அதிக மகிழ்ச்சியடையும்.  

"நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 ) என்று வேதம் கூறுகின்றது.  ஆம் அன்பானவர்களே, தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியதை  பெறும்படிக்குப் பொறுமையாகக் காத்திருப்போம். அப்போது அது நிறைவேறும்போது பூரணமான மகிழ்ச்சி நமக்கு ஏற்படும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

Saturday, September 21, 2024

எங்களுக்குப் பெலனில்லை

 'ஆதவன்' செப்டம்பர் 24, 2024. செவ்வாய்க்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,324

".....எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன." ( 2 நாளாகமம் 20 : 12 )

இன்றைய தியான வசனம் யூதாவின் ராஜாவாகிய யோசபாத் கர்த்தரை நோக்கி ஜெபித்த ஜெபமாகும். மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். அதனை அறிந்த யோசபாத் நாடெங்கும் உபவாசத்தை அறிவித்தார். எல்லோரும் கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டார்கள். அப்போது யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவன் மேல் கர்த்தரது ஆவி வந்ததால் அவன் தீர்க்கதரிசனம் சொன்னான். 

"யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; கர்த்தர் உங்களோடே இருக்கிறார்" ( 2 நாளாகமம் 20 : 17 ) என்றான் அவன். அவன் கூறியதுபோல கர்த்தர் யோசபாத்தோடு இருந்து யூதாவுக்கு வெற்றியளித்தார். யோசபாத்துக்கு தேவன் பதிலளிக்க அவன் செய்த மேற்கூறிய ஜெபமே காரணமாக இருந்தது. 

இன்றைய தியான வசனமான  ஜெப விண்ணப்பத்தில் யோசபாத் மூன்று காரியங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கையிடுவதை நாம் பார்க்கின்றோம். அவை:-

1. இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை;
2. நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை;
3. எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கின்றன.

பெலவீனத்தில் தேவனது பெலன் விளங்கும் (2 கொரிந்தியர் 12;9) எனும் உண்மையை யோசபாத் அறிந்திருந்தார். எனவே அதனை தேவனிடம் வாயினால் அறிக்கையிட்டார். ஆண்டவரே இந்த ஏராளமான கூட்டத்துக்கு முன்பாக நிற்பதற்கு எங்களுக்குப் பெலனில்லை. எனவே, நீரே எங்களை பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்கிறார். 

இரண்டாவது, நாங்கள் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. என்கின்றார். ஆம், நமது வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் ஏற்படும்போது அதற்கு என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாமலிருக்கும். எப்படி பிரச்சனையிலிருந்து வெளிவருவது? எனவே, அதனை யோசபாத் தேவனது கரத்தில் விட்டுவிடுகின்றார். 

மூன்றாவது, எங்கள் கண்கள் உம்மையே நோக்கிகொண்டடிருக்கின்றன என்கிறார். ஆம், தேவனைவிட்டு தனது பார்வையை அவர் அகற்றவில்லை. பிரச்சனையைப் பார்க்காமல் தேவனை நோக்கிப் பார்த்தார். 

ஆம் அன்பானவர்களே, இதுவே இன்று நாம் பின்பற்றவேண்டிய சரியான வழியாகும். பிரச்சனைகள், துன்பங்கள் வாழ்வில் ஏற்படும்போது யோசபாத் ஜெபித்ததுபோல தேவனிடம் நமது பலவீனத்தை அறிக்கையிடுவோம். பிரச்சனையிலிருந்து வெளிவர என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாததால் அதனை தேவனிடம் விட்டுவிடுவோம். இறுதியாக பிரச்சனையையே எண்ணிக் கலங்காமல் தேவனைநோக்கி நமது கண்களைத் திருப்பி அவரையே நம்பிக்கையோடு நோக்குவோம்.  கர்த்தர் அதிசயமாக நம்மை விடுவித்து நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Friday, September 20, 2024

நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகள்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 23, 2024. திங்கள்கிழமை       வேதாகமத் தியானம் - எண்:- 1,323

"சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்." ( கலாத்தியர் 4 : 28 )

ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் அளித்தபடி அவரது நூறாவது வயதில் பிறந்தவன் ஈசாக்கு.  ஆனால், அவருக்கு  பிள்ளை இல்லாததால் அவர் மனைவி சாராள் தனது அடிமைப்பெண்ணான ஆகாரை அவருக்கு மறுமனைவியாகக் கொடுத்ததால் அவள்மூலம் பிறந்தவன் இஸ்மவேல்.  இதனைக்கொண்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் ஒரு சத்தியத்தை விளக்குகின்றார். 

நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவர்கள் ஆகின்றோம். ஆம், கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்துக்கு உரிமையாளர்கள் ஆகின்றோம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் இஸ்மவேலைபோல மாம்சத்தின்படி பிறந்தவர்கள். இப்படி மாம்சத்தின்படி பிறந்தவர்களுக்கும் ஆவியின்படி பிறந்தவர்களுக்கும் முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 29, 30 ) அதாவது, மீட்பு அனுபவம் இல்லாதவர்கள் கிறிஸ்துவோடு சுதந்தரவாளியாயிருப்பதில்லை. 

எனவே, ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஆவிக்குரியவர்களுக்குத்தான் வேதத்திலுள்ள வாக்குத்தத்த வசனங்கள் உரிமையாகுமேத்  தவிர அவரோடு எந்தத் தொடர்புமின்றி வெறும் மாம்ச சிந்தைகொண்டு உலக ஆசீர்வாதங்களையேத் தேடி அலைபவர்களுக்கு அவை உரிமையாவதில்லை. 

ஆம் அன்பானவர்களே, மீட்பு அனுபவம் பெற்றவர்களே ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். மெய்யான ஆசீர்வாதம் அவர்களுக்கே உரியது. இதனையே நாம், "ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்." ( ஆதியாகமம் 26 : 12, 13 ) என்று வாசிக்கின்றோம். 

இஸ்மவேலைப்போன்ற உலக மனிதர்கள் நம்மை நெருக்கலாம். நமது செயல்பாடுகளை விமர்சிக்கலாம், நமக்கு எதிராகச் செயல்படலாம். ஆனால் மெய்யான தேவ ஆசீர்வாதம் ஈசாக்கைபோல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாக வாழ்பவர்களுக்கே உரியது.  கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரது புதிய உடன்படிக்கையின் மக்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, அந்த அழைப்பைப் புறக்கணிக்காமல் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாவோம். மெய்யான ஆசீர்வாதத்தினைச் சுதந்தரித்துக்கொள்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

 'ஆதவன்' செப்டம்பர் 22, 2024. ஞாயிற்றுக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,322

"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." ( யோவேல் 2 : 26 )

இன்றைய தியான வசனம் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய வாக்குத்தத்த வசனமாக உள்ளது.  அதாவது கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பாவமன்னிப்பு நிச்சயத்தைப் பெற்றவர்களே அவரது மக்கள். இந்த "என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இப்படி தேவனது மக்களாக இருப்பவர்கள், சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, தங்களை அதிசயமாய் நடத்திவந்த தங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் ஒரு திருப்தியான வாழ்க்கை வாழ்வார்கள். காரணம் தேவனாகிய கர்த்தர் அவர்களை அதிசயமாக நடத்திவந்துள்ளார் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

பல்வேறு நெருக்கடிகள் போராட்டங்கள் வாழ்வில் வந்தாலும் தேவனால் மீட்கப்பட்டவர்கள் தேவனால் தனி அன்போடு கவனிக்கப்படுவார்கள். எனவே, தேவ ஜனங்கள் துன்பப்படும்போது மற்றவர்கள் அவர்களை அற்பமாகப் பார்த்தாலும் முடிவில் அப்படி அற்பமாகப் பார்த்தவர்கள் வெட்கப்படுவார்கள். தேவன் ஒருபோதும் தனது மக்களை வெட்கப்பட விடமாட்டார்.   

நமது ஆரம்பத்தில் நாட்கள் மற்றவர்களைவிட அற்பமானதாக இருக்கலாம். ஆனால், அந்த நாளிலும் பிறர் நம்மைப் பார்ப்பதைவிட கர்த்தரது கண்கள் சந்தோஷமாய் நம்மைப் பார்க்கின்றன. அவரது கரங்கள் நம்மை வழிநடத்துகின்றன. ஆம், "அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது". ( சகரியா 4 : 10 )

எனவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரைத் துதிக்கக் கற்றுக்கொள்வோம். "ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்". (எபிரெயர் 13:15) எப்போதும் என்று கூறும்போது வாழ்வில் நல்லது கெட்டது எது நடக்கும்போதும் என்று பொருள்.

எனவே தேவனுடைய பிள்ளைகளே, வாழ்வில் நமது இன்றைய குறைகளை எண்ணி வேதனைப்படாமல் மகிழ்ச்சியாக இருப்போம். தேவனுக்கேற்ற வாழ்வைத் தொடர்வோம். எப்போதும் நமது உதடுகள் தேவனைத் துதிக்கும் உதடுகளாக இருக்கட்டும்.  "நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

Wednesday, September 18, 2024

நல்ல மேய்ப்பன்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 21, 2024. 💚சனிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,321

"என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எசேக்கியேல் 34 : 15 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பனாய் இருக்கின்றார். இந்த நல்ல மேய்ப்பரைக்குறித்து எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாகக் கூறும் வார்த்தைகளே  இன்றைய தியான வசனம். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்." ( எசேக்கியேல் 34 : 14 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இந்த உலகத்தில் வாழ்ந்தபோது கிறிஸ்துவும் இதனையே கூறினார். "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்றார் அவர். 

இன்றைய தியான வசனத்தில் ஆடுகள் என்று வெறுமனே கூறாமல், 'என் ஆடுகள்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி நடப்பவர்களே அவரின் ஆடுகள். அப்படி அவரது வார்த்தையின்படி வாழும் மக்களை அவரே மேய்த்து வழிநடத்துவார். "அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும்" எனும் தீர்க்கதரிசன வார்த்தைகள் கிறிஸ்து அருளும் ஆசீர்வாதங்களையும் சமாதானத்தையும் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவின் குரலுக்குக் கீழ்படியும்போது  மட்டுமே அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறமுடியும். அப்படி அறியும்போது மட்டுமே அவரது இரத்தத்தாலான மீட்பினை நாம் அனுபவிக்கமுடியும். இதனையே அவர், "நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." என்று கூறுகின்றார். ஆம், அவர் சிலுவையில் நமக்காக பலியானதையே இது குறிக்கின்றது. 

மட்டுமல்ல, இந்த மீட்பு அனுபவத்தை உலக மக்கள் அனைவரும் பெற்று அனுபவிக்கவேண்டுமென்று கிறிஸ்து விரும்புகின்றார். அதனையே அவர் கூறினார், "இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்." ( யோவான் 10 : 16 ) 

ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும் ஏற்படவேண்டுமானால் உலகிலுள்ள மக்கள் அனைவரும் முதலில் அந்த நல்ல மேய்ப்பனை அறியவேண்டியது அவசியம். அதற்கு அவரை அறிந்தவர்கள் அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டியது அவசியம். எனவே அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையினாலும் வார்த்தைகளினாலும் அவரை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Monday, September 16, 2024

"என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் ?"

 'ஆதவன்' 💚செப்டம்பர் 20, 2024.வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,320

"அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்." ( மத்தேயு 16 : 15 )

தன்னை ஏற்றுக்கொள்பவர்கள் வெறுமனே தன்னிடம் அன்புகூராமல் தான் யார் என்பதனை அறிந்து அன்புகூரவேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகின்றார். இன்று கிறிஸ்துவை அறியாத பிறமத அன்பர்களும் பலர் இயேசுவை அன்புசெய்கின்றனர். ஆனால் அவர்கள் மற்ற தெய்வங்களைப்போல அவரும் ஒருவர் என்று எண்ணிக்கொள்கின்றனர். எனவே தங்களது தொழில் நிறுவனங்களில் பிறமத தெய்வங்களது படங்களுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தையும் வைத்து மாலை அணிவித்து நறுமண தூபம் காட்டுகின்றனர். ஆனால் இவை கிறிஸ்துவைத் திருப்திச் செய்யாது என்பதனை அவர்கள் உணர்வதில்லை. 

இதுபோலவே இயேசு கிறிஸ்து உயிருடன் இருந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பலரும் அவரை மதித்தனர். ஆனால் அவர் யார் என்பதனை அவர்கள் உணர்ந்து மதிக்கவில்லை. மாறாக, முற்காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தீர்க்கதரிசி உயிர்பெற்று எழுந்து வந்துள்ளதாக எண்ணிக்கொண்டனர். சிலர்  அவரை யோவான் ஸ்நானகன் என்றனர், சிலர் எலியா என்றனர், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று எண்ணிக்கொண்டனர். எனவே, முதலில் தனது சீடர்களிடம் இயேசு, "மக்கள் என்னை யார் என்று கூறுகின்றனர்?" என்று கேட்டபோது சீடர்கள் இந்தப் பதிலையே கூறினர்.

ஆனால் இயேசு கிறிஸ்து, மக்கள் கூறுவது இருக்கட்டும், "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். ஏனெனில் நீங்கள் ஆரம்பம்முதல் என்னோடு இருக்கிறீர்கள், என்னோடு பழகியிருக்கிறீர்கள் எனவே மக்கள் எண்ணத்துக்கும் உங்கள் எண்ணத்துக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துவதற்குத்தான் இப்படிக் கேட்டார்.  அப்போது, "சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாம் கிறிஸ்துவை எப்படிப் பார்க்கின்றோம்.? நம்மில் சிலர் அவரை நோய்தீர்க்கும் மருத்துவராக, கடன் தீர்க்க உதவும் நிதிஉதவி செய்பவராக, வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வீட்டைக் காக்கும் காவல்காரராக, அனைத்துவித உலக ஆசீர்வாதங்களையும் வழங்குபவராகவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  இது யூதர்கள் அவரைப் பார்த்ததுபோன்ற பார்வையாகும்.   

அப்போஸ்தலரான சீமோன் பேதுரு கூறியபடி அவரை நாம்  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்ப்போமானால் மட்டுமே நமக்கும் அவருக்கும் உறவு சரியாக இருக்கின்றது என்று பொருள். அப்போதுதான் நமது பாவங்களை அவரால் மன்னிக்கமுடியுமென்ற உறுதி நமக்கு ஏற்படும். இப்படி பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் கிறிஸ்துவோடு நெருங்கிய உறவினர்களாக மாறிவிடுகின்றோம். அப்போது நாம் அவரை ஒரு தகப்பனாக, தாயாக, நண்பனாக, சகோதரனாகப் பார்க்கமுடியும். 

இப்படி நாம் அவரை ஏற்றுக்கொள்வதையே கிறிஸ்து விரும்புகின்றார். எனவே அன்பானவர்களே, இதுவரை அவரை நாம் யூகர்களைப்போல பார்த்திருப்போமானால் அந்தப் பார்வையை மாற்றுவோம். அவரை ஆத்தும இரட்சகராக,  ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாகப் பார்க்கப் பழகுவோம். அப்போது நமது ஆவிக்குரிய வாழ்க்கை அடுத்த உயர்ந்த நிலைக்குச் செல்வதை கண்டுகொள்ளலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Monday, September 09, 2024

பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? நீ சமபூமியாவாய்.....".

 'ஆதவன்' 💚செப்டம்பர் 19, 2024. வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,319

பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்....." 

பாபிலோனில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரை கோரஸ் ராஜா (King Syrus ) விடுவித்து நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்திலிருந்து  கைப்பற்றிச்சென்ற பொருட்களையும் திருப்பிக்கொடுத்து ஆலயத்தைத் திரும்பவும் கட்ட அனுமதியளித்தான். அப்போது செருபாபேல் தலைமையில் ஆலயம் கட்டப்பட்டது. ஆலயம் கட்டத் துவங்கியபோது யூதருக்கு எதிரானவர்கள் ஆலயம் கட்டுவதை எதிர்த்தனர்; தடைசெய்தனர். ஆலயப்பணி பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுக் கிடந்தது. 

அப்போது சக்கரியா தீர்க்கதரிசிமூலம் கர்த்தரது வார்த்தை வந்தது.  அப்போது அவர் கூறியதுதான் இன்றைய தியான வசனம். மட்டுமல்ல, கர்த்தர் தொடர்ந்து கூறுகின்றார், "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய்." ( சகரியா 4 : 9 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாமே தேவனுடைய ஆலயமாய் இருக்கின்றோம். ஒருவேளை நமது உடலாகிய ஆலயம் சந்துருவின் முயற்சியால் இன்று தேவனற்றதாக மாறிப்போயிருக்கலாம். அல்லது நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை நாம் இழந்துபோயிருக்கலாம். பெரிய மலைபோன்ற பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம். நாம் எப்படி வாழ்வைத தொடருவோம் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். நம்மைப்பார்த்து தேவன் கூறுகின்றார், "பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்.....". எந்த மலைபோன்ற பிரச்சினை நம்மை நெருக்கினாலும்  அது நொறுங்கி சமபூமியாகும். 

ஆனால் செருபாபேலுக்கு இருந்ததுபோன்ற ஆர்வம் நமக்கு இருக்கவேண்டியது அவசியம்.   சும்மா இருந்துகொண்டு தேவனே எல்லாம் செய்வார் என்று எண்ணிடாமல் நம்மை அவரது பலத்தக்  கரத்தினுள் ஒப்புக்கொடுத்து நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டி எழுப்ப ஒப்புக்கொடுக்கவேண்டும். 

பலமில்லாத நம்மைக்கொண்டே தேவன் இதனை நமது வாழ்வில் செய்துமுடிப்பார். இதனையே, "செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். இன்றைய வசனத்தில் செருபாபேல் எனும் பெயர் வருமிடத்தில் உங்கள் பெயரைச் சேர்த்துச் சொல்லி இதனை விசுவாச அறிக்கையாகக் கூறுங்கள். எந்தப் பெரிய பர்வதமானாலும் அது எம்மாத்திரம்? நமக்கு முன்பாக அது சமபூமியாகிடும். 

தேவனது அற்புதமான ஆற்றல்மூலம் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டதை நாம் எஸ்றா நூலில் வாசிக்கலாம். சகரியா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறிய வார்த்தைகள் நிறைவேறின. ஆம், "செருபாபேலுக்குச் (நமக்கு) சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

Sunday, September 08, 2024

ஏழைகளைப் பரிகாசம் பண்ணுகிறவன்

 'ஆதவன்' 💚செப்டம்பர் 18, 2024. 💚புதன்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,318

"ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்..." ( நீதிமொழிகள் 17 : 5 )

பரிகாசம் பண்ணுதல் என்பது வெறுமனே கேலி கிண்டல் செய்வதைமட்டுமல்ல, ஏழைகளை அற்பமாக எண்ணுவது, அவர்களைப்  புறக்கணிப்பது, அவர்களோடு பேசத் தயங்குவது, மற்றவர்களோடு அவர்களை ஒப்பிட்டு அற்பமாகப் பேசுவது போன்ற அனைத்துக் காரியங்களையும் குறிக்கும். 

ஒருமுறை ஏழைப் பெண் ஒருவர் வழக்கமாக அவர் அணிவதைவிட நல்ல ஆடை அணிந்து ஆலயத்துக்கு  வந்தார். அன்று ஆராதனை முடிந்து ஆலய வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த இரு பெண்கள் அந்தப் பெண்ணைக்குறித்துப் பேசும்போது ஒருத்தி, "இன்றைக்கு இன்னாரது மகளைப் பார்த்தாயா?"  என்று அந்தப் பெண்ணின் தகப்பன் பெயரைச்சொல்லி  ஒருவிதக் கேலியாகக் கேட்க,  மற்றவள், " யாராவது தர்மம்  செய்திருப்பார்கள்" என்றாள். 

இந்தமாதிரி பேச்சுக்களைச்  சம்பந்தப்பட்ட அந்தப்பெண்  கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவரைப் பரிகாசம் பண்ணுவதுதான்.  இதுபோல சிலர் தங்கள் வீட்டில் வேலைசெய்யும் வேலைக்காரர்களை எண்ணுவதுண்டு. கெட்டுப்போன உணவுகளை வேலைக்காரர்களுக்குக் கொடுப்பது, அவர்களுக்கான சம்பளத்தை ஏற்ற காலத்தில் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருநாள் அவர்கள் வேலைக்கு வரவில்லையானால் சம்பளம் கொடுக்கும்போது ஒருநாள் கூலியைக் கணக்குப் பார்த்துக் குறைப்பது இவைபோன்றவை ஏழைகளை பரிகாசம்பண்ணுவதுதான்.

பெரும்பாலும் அரசு வேலைகளில் இருப்போர் இப்படிச் செய்கின்றனர். அரசாங்கம் எத்தனைநாள் தங்களுக்கு விடுமுறை அளிக்கின்றது, இதுதவிர பணி நாட்களில் எத்தனை நாட்கள் எத்தனை வகை விடுமுறை அளிக்கப்படுகின்றது என்பதனை இவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.  

கடுமையான வார்த்தைகளால் வேலைக்காரர்களைத் திட்டுவதும் அவர்களைப் பரிகாசம்பண்ணுவதுதான்.   அவர்கள் ஏன் நம்மிடம் வேலைக்கு வந்திருக்கின்றார்கள்? அவர்களது ஏழ்மை நிலையால்தானே? எனவேதான் வேதம் சொல்கின்றது, "எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்." ( எபேசியர் 6 : 9 )

நான் ஆவிக்குரிய விசுவாசி என்று கூறிக்கொள்வதாலோ, ஆவிக்குரிய ஆராதனையில் கலந்துகொண்டு கூச்சலிடுவதாலோ, வேதாகமத்தை தினமும் வாசிப்பதாலோ, பல மணிநேரம் உபவாச ஜெபம் செய்வதாலோ நாம் தேவனது பார்வையில் நல்லவர்களல்ல. எனவே பெரிய அளவில் ஏழைகளுக்குத் தானதர்மங்கள்  செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இத்தகைய குறைகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம்.  

"தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்." ( நீதிமொழிகள் 14 : 31 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

Saturday, September 07, 2024

தேவ ஞானம் Vs சுய ஞானம்

 'ஆதவன்' செப்டம்பர் 17, 2024. செவ்வாய்க்கிழமை     வேதாகமத் தியானம் - எண்:- 1,317