INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Thursday, April 08, 2021

எப்போதும் சந்தோசமாய் இருப்பது எப்படி?

                                           - எம். ஜியோ பிரகாஷ்


லகத்தில் நமக்கு பாடுகளும்,வேதனைகளும் தொடரத்தான் செய்யும். அதனால் நமது மனம் துவண்டு வேதனைப் படுவதுண்டு. கஷ்டமான சூழ்நிலையில் மகிழ்ச்சியாய் சந்தோசமாய் நாம் இருக்க முடியாதுதான். மிகப்பெரிய இழப்போ  நமக்கு வேண்டியவரது மரணமோ ஏற்படும்போது நாம் மகிழ்ச்சியாய் இருக்க முடியாதுதான். இயேசு கிறிஸ்து கூட தனது சிநேகிதன் லாசர் மரித்ததைக் கேள்விப்பட்டு கண்ணீர் சிந்தினார் என நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் " (பிலிப்பியர் -4:4) எனக் கூறுகின்றார்.


அப்போஸ்தலரான பவுல் ஏன் இப்படிக் கூறுகின்றார் என்று இந்த வசனத்தைச் சரியாகக் கவனித்தால் புரியும். அவர் கூறுகின்றார், "கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருங்கள் ". என்று. உலக சந்தோசம் என்பது வேறு ஆவிக்குரிய சந்தோசம் என்பது வேறு. பவுல் அடிகள் இங்குக் கூறுவது ஆவிக்குரிய சந்தோசம் குறித்து. அதனைத்தான் "கர்த்தருக்குள்" என்ற அடைமொழியுடன் கூறுகின்றார். இந்த உலகத்தில் நமக்குப் பாடுகள், வேதனைகள், பிரச்சனைகள் எல்லாம் உண்டு ஆனால் கர்த்தரை விட்டு பின்மாறிடாமல், பிரச்னை வந்தவுடன் தேவனை முறுமுறுக்காமல், ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? நான் தேவனிடம் எவ்வளவோ நம்பிக்கையாய் இருந்தேன், என் நம்பிக்கை பொய்த்துவிட்டது.....என்பன போன்ற எண்ணங்கள் நமது தேவன் மீதான நம்பிக்கையை சேதப்படுத்த விடாமல் வாழ்வது. இதுவே கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்பது.


இப்படி ஒரு மனநிலை இருந்ததால்தான் பவுல் அடிகள், "நான் எந்த நிலையில் இருந்தாலும் மன ரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் ." (பிலிப்பியர் -4:11,12) எனக் கூறுகின்றார்.


யோபுவின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் துன்பப்பட்டபோது அரற்றினார், புலம்பினார். அது அவரது மனித மனநிலை. ஆனால் அவர் தேவனோடு ஆவிக்குரிய உறவில் இருந்ததால் மகிழ்ச்சியோடு கூறினார், " என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன் " (யோபு-19:25,26) இதுவே கர்த்தருக்குள் சந்தோசமாய் இருப்பது.


எந்த நேரத்திலும், பிரச்சனையிலும் தேவனை விட்டுப் பின் மாறிடாமல் இருப்பது. இரத்த சாட்சிகளது வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. முதல் இரத்த சாட்சியான ஸ்தேவான் ஒரு உதாரணம். அவரைக் கல் எறிந்து கொல்வதற்கு கொண்டு செல்லும்போதும் அவர் மனம் கலங்கவில்லை. தேவனது மகிமையைக்  கண்டு களிகூர்ந்தார்இன்று நமக்குப் பாடுகளும் துன்பங்களும் வரும்போது  யோபுவைப் போலும், பவுலைப்போலும், ஸ்தேவானைப் போலும் நம்மால் இருக்க முடியாவிட்டாலும் தேவனை முறுமுறுக்காமலாவது இருப்போம்.


தேவனோடு அதிக ஜெப வாழ்வில் நெருங்கி நாம் வாழும்போது தேவன் இந்த பலத்தை நமக்குத் தருவார். ஆனால் நாம் உலக நாட்டங்களுக்காக மட்டும் தேவனைத் தேடாமல் அன்போடு, "தேவன் எனக்கு வேண்டும்" எனும் அன்பு உணர்வோடு தேவனைத் தேடவேண்டும். அப்படித் தேடும்போது உலக ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்காமல் போனாலும் அது நம்மை சோர்வுக்குள்ளாக்காது.


எபிரேயர் நிருபத்தில் பல விசுவாச வீரர்களைக் குறித்து வாசிக்கின்றோம். ஆனால் அவர்கள் எல்லோரும் தாங்கள் விசுவாசித்ததை இந்த உலகத்தில் அடையவில்லை. ஆனால் மகிழ்ச்சியோடு மரித்தனர். "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்." ( எபிரெயர் 11 : 13 )


துன்பங்கள் நம்மை மேற்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். அதாவது துன்பங்களே இல்லாத வாழ்வை தேவன் நமக்கு வாக்களிக்கவில்லை என்ற உணர்வு நமக்கு வேண்டும். "உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்றுதான் இயேசு கிறிஸ்துக் கூறினார்.


யோபுவைவிட பெரிய துன்பம் ஒன்றும் நமக்கு வந்துவிடவில்லை. எனவே  கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.

No comments: