Friday, July 29, 2022

தேவன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யாதவன் தேவனை அவமதிக்கின்றான்.


 ஆதவன் 🖋️ 549  ஜுலை 30, 2022 சனிக்கிழமை

"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்." ( கொலோசெயர் 3 : 17 )

எது நடந்தாலும் நன்றியும் ஸ்தோத்திரமும் செய்ய நம்மை அறிவுறுத்தும் வேதம் இன்றைய வசனத்தில் எதைச்செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்து பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிக்க நம்மை அறிவுறுத்துகின்றது. நமது உலக வேலைகளை உண்மையாய்ச் செய்வதே தேவனை மகிமைப்படுத்துவதுதான்.

நாம் உலக வேலைகளில் இருந்தாலும் இன்றைய வசனத்தின்படி நாம் அவற்றை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உண்மையுடன் செய்யவேண்டும்இப்படிச் செய்யும்போது நமது வேலைகளை நல்ல முறையில் செய்வதுடன் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க மற்றவர்கள் செய்வதுபோல நாம் செய்யமாட்டோம்

இன்று ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றேன் என்று கூறிக்கொள்ளும் பலர் உலக காரியங்களில் உண்மையில்லாமல் இருக்கின்றார்கள்ஆவிக்குரிய சபைக்குப் பல ஆண்டுகளாகச் செல்லும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும். சபையில் கன்வென்சன் நடத்தவேண்டுமா, இல்லை சபைக்கு நிதி திரட்டவேண்டுமா, என்ன காரியத்திலும் இவர் பாஸ்டரோடு இணைந்து தீவிரமாகச் செயல்படுவார். இவர் அரசாங்க வேலையும் பார்த்துவந்தார். வீட்டிலும் ஒரு சிறிய தொழிலும் நடத்திவந்தார். அதனை அவரது மனைவி நிர்வகித்துவந்தார்.   

சபையின் காரியங்களுக்காகவும் தனது  தொழில் காரியங்களுக்காகவும் அடிக்கடி பொய்கூறி அலுவலகத்துக்கு டிமிக்கி கொடுத்துவிடுவார். அரசு ஆவணங்களில் அவர் களப்பணி செய்ய குறிப்பிட்ட ஒரு  இடத்துக்குச் சென்றதாக குறிப்பு எழுதிவைத்துவிட்டு தனது சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இதுபோல எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைபார்த்தார். வாரத்துக்கு ஒருமுறை அலுவலகம் சென்று வருகைப்பதிவேட்டில்  மொத்தமாக ஒருவாரத்துக்கான கையொப்பத்தினையும் போட்டுவிட்டு ஊரில் தனது சொந்த காரியங்களைப் பார்ப்பார். மருத்துவமனை ஊழியர் இவர் காட்டும் சலுகைகளுக்காக இவரைக் காட்டிக்கொடுக்காமல் உயர் அதிகாரிகள் திடீரென்று வந்துவிட்டால்,  "அவர் இப்போதுதான் வெளியே சென்றார்" எனக்கூறி சமாளித்துவிடுவார். இவரும் கிறிஸ்தவர்தான்.   

இப்படிப்பட்டவர்கள் பிதாவாகிய தேவனை அவமதிக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். எத்தனையோபேர் வேலையில்லாமல் திண்டாடும்போது கிருபையாய் தேவன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யாதவன் தேவனை அவமதிக்கின்றான்

அன்பானவர்களே, இத்தகைய  தவறினை உங்கள் பணியிடங்களில் செய்திருந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள்.    வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே சரியாக நேர்மையாகச் செய்யுங்கள். இப்படிச் செய்வதும் தேவனை மகிமைப்படுத்துவதுதான்.

Wednesday, July 27, 2022

வேதாகம முத்துக்கள் (ஜூலை - 2022)

                                 

 வேதாகம முத்துக்கள் (ஜூலை - 2022)

                             - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ஆதவன் 🖋️ 520 ⛪ ஜுலை 01, 2022 வெள்ளிக்கிழமை 

"...........மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7, 8 )

நெல் விதைத்துவிட்டு கோதுமையை அறுவடை செய்ய முடியாது. இது நாம் எல்லோரும் அறிந்ததே. இதே இயற்கையின் விதிதான் மனிதர்களது வாழ்க்கைக்கும் பொருந்தும். 

இந்த உலகத்திலேயே சிலவேளைகளில் அப்பட்டமாக இது வெளிப்படும். ஒரு முறை ஒரு சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டேன். ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சாலை ஓரம் ஒரு முதியவர் பல நாட்களாக வசித்து வந்தார். அவர் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்டு அவலமான நிலையில் இருந்தார். ஆனால் அவரது முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும். தர்மம் கொடுப்பவர்களை வாழ்த்துவார்.

நகரத் தூய்மை பணிக்காக சாலை ஒர மக்களை அப்புறப்படுத்தினர் அதிகாரிகள். அப்போது ஒரு முரட்டு அதிகாரி கோபத்துடன், "பிச்சைக்கார பயலே, இங்கிருந்து ஓடுடா.." என்றும் , கெட்டவார்த்தைகள் பேசியதுமல்லாமல்  தனது காலால் அந்த முதியவரையும் அவரது உடைமைகளையும் மிதித்துத் தள்ளினார். சரியாக மூன்றாம் நாள் அதே இடத்தில் நடந்த ஒரு விபத்தில் அந்த அதிகாரியின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கித் துண்டானது. இதனைப் பார்த்தப் பலரும் , "ஆணடவன் உண்மையிலேயே இருக்காரு...." என மனித முறைமையில் சொல்லிக்கொண்டனர். 

"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." ( 1 தீமோத்தேயு 5 : 24 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

சிலருடைய பாவங்கள் என்று கூறப்பட்டுள்ளதால் எப்போதுமே இப்படி நடைபெறும் என்று சொல்லமுடியாது என்பது தெளிவு. 

இதுபோல "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." எனவே அன்பானவர்களே, நாம் இந்த குறுகிய உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்க்கையினை இழந்துவிடக் கூடாது. 

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்  எனும் உண்மையினை உணர்ந்துகொண்டோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும். குறுகிய உலக ஆசைகளுக்காகப் பாவ காரியங்களில் ஈடுபடமாட்டோம்.  

ஆதவன் 🖋️ 521 ⛪ ஜுலை 02, 2022 சனிக்கிழமை 

"அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." ( எபேசியர் 3 : 3 )

யூதர்கள் மேசியா, அவர் அளிக்கும் மீட்ப அனுபவம் இவை எல்லாம் தங்களுக்கு மட்டுமே உரிமை என்று எண்ணிக்கொண்டார். ஆனால் கிறிஸ்து இயேசு தனது சுய இரத்தத்தால் உண்டாக்கிய மீப்பு அனுபவம் யூதர்களுக்கு மட்டுமல்ல, அவரை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் சொந்தமாகும். இதனையே தனக்கு வெளிப்படுத்தப்பட்ட ரகசியம் என்கின்றார் பவுல் அடிகள். 

ஆனால், "இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை."( எபேசியர் 3 : 6 ) 

கிறிஸ்துவின் மீட்பினை எல்லா மனிதர்களும் பெறவேண்டும் என்பதுதான் தேவனுடைய சித்தம்.  "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 )

இப்படி மீட்பு அனுபவம் பெற்றவர்கள் அனைவரும் உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களும் கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்கள்.

இன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் அனைவருமே யூதர்கள்தான்; ஆவிக்குரிய யூதர்கள். கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறாதவர்கள் புறஜாதிகள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மீட்பினைப் பெறும்போது நம்மோடுகூட பங்காளிகளாகின்றனர். அதாவது நமக்கு தேவனிடமுள்ள அதே அளவு உரிமை அவர்களுக்கும் சொந்தமாகின்றது.

இதனால் நாம் யாரையும் அற்பமாக எண்ணாதிருப்போம். இன்று புறஜாதியாயிருப்பவர்கள் நாளையே நமது பங்காளிகளாக மாறிடும் வாய்ப்பு இருக்கின்றது. கிறிஸ்துவே அதனை அவர்களுக்கு வழங்குவார். எனவே அனைவரையும் மதிப்போம்; அனைவருக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து நமது சொந்தமாக்குவோம்.  

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5114613328844159"

     crossorigin="anonymous"></script>


ஆதவன் 🖋️ 522 ⛪ ஜுலை 03, 2022 ஞாயிற்றுக்கிழமை 

"ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." ( கொலோசெயர் 2 : 6, 7 )

நாம் நமக்கு இருக்கும் விசுவாசத்தில் பெருகவேண்டும் என்பதே இன்றைய செய்தி கூறும் கருத்து. இதனாலேயே சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் தங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்று வேண்டினர். ( லுூக்கா 17 : 5 ) காரணம், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாத காரியம்" (எபிரெயர் - 11:6). 

நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நமக்கு விசுவாசம் இருந்ததால்தான் இரட்சகராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் அந்த நிலையிலேயே நாம் நின்றுவிடக் கூடாது. அவருக்குள் வேர்கொண்டு வளரவேண்டும்; அவர்மேல் கட்டப்படவேண்டும் என்கின்றது இன்றைய வசனம்.

நாம் இரட்சிக்கப்படும் ஆரம்பகாலத்தில் தேவன் பல அதிசயங்களை நமது வாழ்வில் செய்து நமது விசுவாசம் வளர்ந்திட உதவி செய்கின்றார்.   மெய்யான மீட்பு அனுபவம் பெற்றவர்கள் இதனை அறிவார்கள். ஆனால், அந்த அதிசயங்களை உணர்ந்துகொள்ளும் கண்கள் நமக்கு வேண்டும். 

"நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக" என்று இந்த வசனம் கூறுகின்றது. அதாவது கிறிஸ்துவின் இரட்சிப்பை நமக்கு பிறர் எடுத்துச்சொல்லி போதித்தபோதுதான் நாம் அவர்மேல் விசுவாசம்கொள்ள ஆரம்பித்தோம். ஆனால் அந்த ஆரம்ப நிலையிலேயே நில்லாமல்  அதில் நாம் உறுதிப்படவேண்டும். விசுவாசத்தில் பெருகிட ஸ்தோத்திரம் பண்ணவேண்டும் என்று இந்த வசனம் மூலம் அறிகின்றோம்.

எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செலுத்தும் நிலைக்கு நாம் வந்துவிட்டால் விசுவாசத்தில் வளர்ந்துள்ளோம் என்று பொருள். இப்படி வாழ்வதே அவர்மேல் கட்டப்படுவது. 

சிலர்  என்றோ தாங்கள்  பெற்றுக்கொண்ட மீட்பு அனுபவத்தையே எப்போதும்  கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களது வாழ்வில் எந்த கிறிஸ்தவ கனியையும் காண முடியாது. காரணம் அவர்கள் விசுவாசத்தில் வளரவில்லை; கட்டப்படவில்லை என்று பொருள். 

நாளுக்குநாள் விசுவாசத்தில் வளர்ந்து உறுதிப்படும்போதே நமது கிறிஸ்தவ வாழ்வு கனியுள்ளதாக மாறும். ஆம், இத்தகைய வளர்ந்த  "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது கூடாத காரியம்" 

ஆதவன் 🖋️ 523 ⛪ ஜுலை 04, 2022 திங்கள்கிழமை 

"என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என்பாவத்தையும் எனக்கு உணர்த்தும். நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?"( யோபு 13 : 23, 24 )

யோபு தேவனிடம் உரிமையோடு தனது பாவங்களுக்காக மன்றாடும் விண்ணப்பம் தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். தனது தொடர்ந்த துன்பங்களுக்குத் தனது பாவங்கள்தான் காரணமாக இருக்குமோ என்று யோபு அஞ்சினார். ஏனெனில் அவரைப் பார்த்து ஆறுதல் கூறவந்த நண்பர்கள் எலிப்பாசும், பில்தாதும், சோப்பாரும் யோபுவைக் குற்றப்படுத்தியே பேசினர். 

நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக ஏன் எண்ணுகின்றீர் ? நான் செய்த பாவம்தான் என்ன? பாவத்தின் அளவுதான் என்ன? அதை எனக்கு உணர்த்தும். என்று யோபு தேவனிடம் கேட்கின்றார்.

யோபுவின் துன்பத்துக்குக் காரணம் அவரது பாவங்கள் அல்ல. யோபுவின் மனச்சாட்சியிலும் பாவ உணர்த்துதல் இல்லை. அவர் தேவனுக்குமுன் உத்தமனும், சன்மார்க்கனும் , தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகின்றவராகவும் வாழ்ந்துவந்தார் (யோபு - 1:1) எனவேதான் தைரியமாக தேவனிடம் கேட்கின்றார்,  "என்னை உமக்குப் பகைஞனாக ஏன் எண்ணுகின்றீர் ? நான் செய்த பாவம்தான் என்ன? பாவத்தின் அளவுதான் என்ன?" என்று.

அன்பானவர்களே, இன்று நம்மை நாம் நிதானித்துப் பார்ப்போம். யோபு கேட்டதுபோல நம்மால் தேவனிடம் கேட்க முடியுமா? எப்படிப் பார்த்தாலும் நாம் அனைவருமே பல்வேறு பாவங்களைச் செய்கின்றோம். எனவே நம்மால் இப்படிக் கேட்க முடியாதுதான். ஆனால், நாம் இந்த மேலான நிலைமைக்கு வரவேண்டும் எனும் உணர்வாவது நமக்கு இருக்கின்றதா என்று எண்ணிப் பார்ப்போம்.

திருமண வீடுகளிலோ  அல்லது பொது இடங்களிலோ தெரிந்தவர்கள் சிலர் நம்மைக் கவனிக்காததுபோலச் செல்லும்போது "என்ன? கண்டும் காணாததுபோல செல்லுகிறீர்களே  என்னை கோபம் உங்களுக்கு என்மேலே? என யோபு தேவனிடம் கேட்டக்  கேள்விபோல மனிதர்கள் தங்களது சக நண்பர்களிடம் கேட்பதுண்டு.  

ஆம், கர்த்தருக்கும் யோபுவுக்கும் அவ்வளவு நெருங்கியத் தொடர்பு இருந்தது. எனவேதான் கர்த்தர் யோபுவின் நண்பன் எலிப்பாசை நோக்கிக்  கூறினார், "உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை." ( யோபு 42 : 7 ) 

என் தாசனாகிய யோபு என்று கர்த்தர் யோபுவைக் குறித்துக் கூறினார். இந்த நிலைமைக்கு நம்மை உயர்த்துவதுதான் மேலான ஆன்மீக அனுபவம். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்களும் தேவனிடம் அற்ப உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். நாம் அவர்களைப்போலல்லாமல்  மேலானவைகளையே நாடுவோம்.  

ஆதவன் 🖋️ 524 ⛪ ஜுலை 05, 2022 செவ்வாய்க்கிழமை 

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய்விடுகிறார்." ( சங்கீதம் 23 : 1, 2 )

ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பர்களை நாம் கிராமங்களில் பார்த்திருக்கலாம். செம்மறியாடுகளை மந்தையாக மேய்ச்சலுக்குக் கூட்டிச்செல்வார்கள். அப்போது அவர்கள் பல்வேறு வித ஒலிகளை எழுப்புவார்கள். அந்த ஆடுகள் அவற்றைப் புரிந்து மேய்ப்பனின் குரலுக்குச் செவிகொடுக்கும். 

மலைகளில் ஆடுமேய்க்கும் மேய்ப்பர்களுக்கு எங்கெங்கு ஆபத்து இருக்கும் , விஷச்செடிகள் எங்கெங்கு இருக்கும் எல்லாம் தெரியும். அவர்கள் ஓர் கட்டுப்பாட்டுடன் ஆடுகளை மேய்ப்பார்கள். ஆடுகள் விருப்பினாலும் சில இடங்களுக்கு அவை செல்வதை மேய்ப்பர்கள் அனுமதிப்பதில்லை. 

ஆனால் மலைகளில் காட்டு ஆடுகளும் உண்டு. அவைகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. அவை தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்லும்; விரும்பியவற்றை உண்ணும்.  காட்டு ஆடுகள் மேய்ப்பன் வளர்க்கும் ஆடுகளைவிட நன்கு கொழுத்து திடகாத்திரமாக இருக்கும்.

மேய்ப்பனால் கட்டுப்பாட்டுக்குள் வளரும் ஆடுகள் என்ன நினைக்கும்? "ஆஹா, இந்தக் காட்டு ஆடுகள் கொடுத்துவைத்தவை. அவை விருப்பம்போல சுதந்திரமாக சுற்றிவருகின்றன. நாமோ இந்த மேய்ப்பனிடம் அகப்பட்டு அற்பமான உணவை உண்டு வாழ்கின்றோம்". 

ஆனால் உண்மை அதுவல்ல, மேய்ப்பனிடம் வளரும் ஆடுகளுக்கு நல்ல பாதுகாப்பு உண்டு. காட்டு ஆடுகளை எந்த நேரத்திலும் சிங்கமோ, கரடியோ. புலியோ அடித்துச் சாப்பிட்டுவிடும் வாய்ப்பு இருக்கின்றது. இந்த உண்மையினை  ஆடுகளை மேய்த்து அனுபவப்பட்டத் தாவீது நன்கு அறிந்திருந்தார். எனவேதான் அவர் கர்த்தரைத் தனது மேய்ப்பராகக் எண்ணி அவர் என் மேய்ப்பராயிருப்பதால் தான்  தாழ்ச்சியடைவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றார். 

உலகினில் துன்மார்க்கமாக பொருள்சேர்த்து செழித்து வாழும் மக்களைப்பார்த்து நாம் கர்த்தரிடம் விசுவாசமாக இருந்தும் அத்தகைய செழிப்பு நமக்கு இல்லையே என  நமது அற்ப நிலைமையை எண்ணி  வருந்திட வேண்டாம். 

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்." என விசுவாசமாய்க் கூறி தொடர்ந்து கர்த்தரது குரலுக்குச் செவிகொடுக்கும் ஆடுகளைப்போல அமைதியாக செவிகொடுத்து வாழ்வோம்.  அவர்  நம்மை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய்விடுவார். அதாவது பூரண சமாதானத்துடன் நாம் வாழ்ந்திடச் செய்வார்.

ஆதவன் 🖋️ 525 ⛪ ஜுலை 06, 2022 புதன்கிழமை

"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." ( எபேசியர் 2 : 10 )

கடவுள் மனிதனை ஏன் படைத்தார் என்று ஒரு கேள்வியைச் சிலர் எழுப்புவதுண்டு. கடவுளைப் புகழ்வதற்கு என்று சிலர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவார்கள். அதாவது மனிதரைப் படைத்து அவன் தன்னைப் புகழ்ந்துகொண்டிருக்கவேண்டும் என்று கடவுள் விரும்புவாரா? 

நாம் உலகினில் படைக்கப்பட்டதே நற்செயல்கள் செய்வதற்காகத்தான் என்கின்றார் பவுல் அடிகள்.  அதாவது கடவுள் நல்லவராகவே இருக்கின்றார். அவர் தான் படைத்த மனிதர்களும் தன்னைப்போல நற்செயல்கள் செய்பவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1 : 27 ) என்று வேதம் கூறுகின்றது.

"தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக "( ஆதியாகமம் 1 : 26 ) என்று கூறுவதைப் பார்க்கின்றோம். சாயல் என்பது குணத்தைக் குறிக்கின்றது. அதாவது தனது சாயலை மனிதன் வெளிப்படுத்தவேண்டும் என அவர் எண்ணினார். ரூபம் என்பது உருவம். அதாவது கடவுள் மனித உருவில் இருக்கின்றார் (கடவுளுக்கு உருவமில்லை என்று கூறுவது சரியான  வேத படிப்பினை அல்ல) ஆனால் மனிதன் பாவம் செய்தபோது அந்த தேவச் சாயலை இழந்துவிட்டான். 

இன்றைய வசனம் கூறுகின்றது, "நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்". ஆம் அந்த தேவ சாயலை நாம் இழந்துவிடாமல் நடக்கும்படி முன்னதாகவே சரியான வழியை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார். ஆனால் மனிதன் அந்த வழியில் நடக்கவில்லை.

எனவேதான் கர்த்தராகிய இயேசு உலகினில் வந்தார். "நானே வழி " என்று அறிக்கையிட்டு ஏற்கெனவே ஆயத்தம்பண்ணய சரியான வழியை நமக்குக் காண்பித்தார். 

அன்பானவர்களே, கிறிஸ்து இயேசு உலகினில் வந்து நமக்கு வழியைக் காட்டியது மட்டுமல்ல, அந்த வழியில் நாம் நடந்திட  பரிசுத்த ஆவியானவரை நமக்குத் துணையாளராகத் தந்துள்ளார். நற்செயல்கள் செய்து கிறிஸ்து காட்டிய இந்த வழியில் நடக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  துணையாளரான பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்து காட்டிய வழியில் நடத்திட அவரது துணையினை எந்நாளும் வேண்டுவோம்.

ஆதவன் 🖋️ 526 ⛪ ஜுலை 07, 2022 வியாழக்கிழமை

"தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 9, 10 )

மறு  உலக வாழ்வு, பரலோகம், நித்திய ஜீவன் இவைகளை தேவன் ஏற்கெனவே தம்மை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளார்.  ஆனால் இவைகளை நாம் நமது ஊனக்கண்ணால் காணமுடியாது.  இதுபோல நமக்காக இயேசு கிறிஸ்து ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுவதற்குத் தான் செல்வதாகக் கூறினார். இதனையும் நாம் காணவில்லை. 

"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 2, 3 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இவைகள் எல்லாமே தேவனிடம் அன்புகூருகிறவர்களுக்காக அவர் ஏற்பாடு செய்தவை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆனால், எதையுமே நாம் காணவில்லை. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு இவைகளை வெளிப்படுத்தித் தருகின்றார். அவர் அப்படி வெளிப்படுத்தித் தருவதால் நமக்குள் இவைகுறித்த விசுவாசம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் கூட இவைகளில் விசுவாசம் இல்லை. அவர்கள் தேவனை ஆராதிக்கின்றார்கள், பல்வேறு பக்திபூர்வமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆனால்  பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கும் இவற்றைப்பற்றிய அறிவும் இல்லை தெளிவும் இல்லை. 

இதற்குக் காரணம் அவர்கள் தேவனைத் தேடுவது இவற்றுக்காக அல்ல. அவர்கள் தங்கள் உலகத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  அவை பற்றி வேண்டுதல் செய்வதற்கும் மட்டுமே தேவனிடம் வருகின்றனர். 

ஆவிகுரியார்களே ஆவிக்குரிய சத்தியங்களை அறிய முடியும். "மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்."(ரோமர்-8:5).

அன்பானவர்களே, "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." என்று கூறியுள்ளபடி ஆவிக்குரிய மக்களாக நாம் மாறும்போதே இவைகளை அறியவும் முடியும்; சுதந்தரிக்கவும் முடியும்.

ஆதவன் 🖋️ 527 ⛪ ஜுலை 08, 2022 வெள்ளிக்கிழமை

"கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." ( 1 கொரிந்தியர் 6 : 20 )

கிறிஸ்தவ விசுவாச சத்தியத்தின்படி நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. ( 1 கொரிந்தியர் 6 : 19 ) கிறிஸ்து நம்மைத் தனது சுய இரத்தத்தைச் சிந்தி கிரயத்துக்கு (விலைக்கு) வாங்கியுள்ளார். எனவே நாம் தேவனுக்கு உடைமையானவர்கள். நாம் நமக்குச் சொந்தமல்லாதவர்களாக தேவனுக்குச் சொந்தமானவர்கள் ஆனபடியால் நமது உடலாலும் ஆவியினால் அவரை மகிமைப் படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

எப்படி நமது உடலாலும் ஆவியினால் அவரை மகிமைப்படுத்துவது ? இதற்குப் பதிலாக அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 )

அதாவது, நமது சரீரங்களை பரிசுத்தமுள்ளவையாக பாதுகாக்கவேண்டும், பாவங்களுக்கு விலக வேண்டும். அப்படி நாம் நமது உடலைப் பரிசுத்தமாகக்  காத்துக்கொள்வதே அவரை நாம் மகிமைப்படுத்துவதற்கு அடையாளம். 

இருபத்திநான்கு மணி நேரமும் தேவ பயமும் அவரைப்பற்றிய எண்ணமும் இல்லாமல் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயத்தில் சென்று ஆராதிப்பதில் அர்த்தமில்லை.  

நாம் தேவனுக்கு உடைமையானவர்கள் எனும் எண்ணம் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் நமது உடலைப் பாதுகாப்போம். ஏனெனில் நமது உடல் தேவனால் கிரையம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதால் அவர் நமக்குள் இருக்கின்றார்; நாம் அவரது ஆலையமாக இருக்கின்றோம்.

அன்பானவர்களே, இந்த எண்ணத்துடனேயே வாழ்வோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும்.

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனால் பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலையமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல என்றும் அறியீர்களா? ( 1 கொரிந்தியர் 6 : 19 )

ஆதவன் 🖋️ 528 ⛪ ஜுலை 09, 2022 சனிக்கிழமை

"மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." ( சங்கீதம் 94 : 11 )


மனிதன் பலவீனமானவன். ஆனால் இந்த பலவீனமான உடலைக்கொண்டு அவன் நினைக்கும் காரியங்களையும் செய்யும் செயல்பாடுகளையும் பார்க்கும்போது அவை என்றைக்கும் அழியாமல்  நிலைத்திருக்கும் என்று அவன் எண்ணுவதையே காட்டுகின்றது. காரணம், தனது வலுவற்ற தண்மையைஅவன் உணருவதில்லை. இந்த உலகினில் நிரந்தர முதல்வர், நிரந்தர பிரதமர்  என்று கூறிக்கொண்டவர்களது  நிலைமையை நாம் அறிவோம்.

இந்த உலகத்தில் பலரும் செய்யும் காரியங்கள் அவர்கள் இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழப்போவதாக எண்ணுவதையே நமக்கு உணர்த்தும். ஆனால் மனிதனது இத்தகைய செயல்பாடுகள் தேவனுக்குச் சிரிப்பையே வரவழைக்கும். காரணம், "மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்." 

"வானத்தினளவு கோபுரம் கட்டி நமக்குப் பெயர் உண்டாகப் பண்ணுவோம்" என்று எண்ணி கோபுரம்கட்ட முயன்ற மக்களைப் பார்த்தக்  கர்த்தர்   "தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபட மாட்டாது என்று இருக்கிறார்கள்" என்று கூறி அவர்கள்  பேசும் மொழியைத் தாறுமாறாக்கினார்.  பாபேல் என்ற கோபுரம் பாதியில் நின்றுபோனது (ஆதியாகமம் - 11)

நாம் என்னதான் உடல் வலுவுள்ளவர்களாக இருந்தாலும், அதிகாரபலம், பணபலம் உள்ளவர்களாக இருந்தாலும் அது நிறைவேறுவது கர்த்தரது கிரியை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." ( நீதிமொழிகள் 19 : 21 ) என்று நீதிமொழிகள் கூறுவது கவனிக்கத்தக்கது.

அன்பானவர்களே, நாம் எப்போதும் பெருமைகொண்டு என்னால் முடியும் என்று எண்ணுவதைவிட கர்த்தரது கிருபையினைச் சார்ந்துகொள்வதே நமக்கு வெற்றியைத் தரும். காரணம் அவரது சித்தமில்லாது பலவீனமான நாம் எதனையும் செய்யமுடியாது. படுக்கைக்குச் செல்லும் மனிதன் மறுநாள் எழுந்திருப்பதே நிச்சயமில்லை.

"நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 14, 15 ) என்று அருமையான யோசனையைத் தருகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.

கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதுதான் மனித வாழ்வு. எனவே நாம் கர்த்தரை முன்வைத்தே நமது திட்டங்களை வகுப்போம். கர்த்தரை மறந்து நாம்  எடுக்கும் செயல்திட்டங்கள் வீணானவையே. 

ஆதவன் 🖋️ 529 ⛪ ஜுலை 10, 2022 ஞாயிற்றுக்கிழமை

"இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை." ( ஏசாயா 64 : 8 )

மனிதர்களாகிய நாம் அனைவருமே கடவுளது கரத்தின் செயல்பாடுகளாய் இருக்கின்றோம். மனிதர்களைக் கடவுள் வித்தியாசமான குணங்கள் உள்ளவர்களாகப் படைத்துள்ளார். ஒவ்வொருவருமே வித்தியாசமானவர்கள். ஆனால் எல்லோருமே தேவ நோக்கம் நிறைவேற்றவே படைக்கப்பட்டுள்ளோம். 

ஒரு தாய் தந்தையருக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளும் ஒன்றுபோல இருப்பதில்லை. ஒரு குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றுபோல இருப்பதில்லை. 

ஒரு வீட்டில் பல்வேறுவித பாத்திரங்கள் இருக்கும். வொவ்வொன்றையும் நாம் தேவைக்கேற்ப பயன்படுத்துவோம். அதுபோலவே தேவன் மனிதர்களை பயன்படுத்துகின்றார். மேலும், பாத்திரத் தொழிற்சாலையில் வெவ்வேறுவிதமான் பாத்திரங்கள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. எல்லாமே ஒவ்வொரு தேவைக்குப்   பயன்படுகின்றன.  

இதனையே அபோஸ்தரான பவுலும் கூறுகின்றார். "மிதிபட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" ( ரோமர் 9 : 21 )

எனவே நாம் பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். பிறரிடம் இல்லாத ஏதோ ஒன்று நிச்சயம் நம்மிடம் இருக்கும். அதற்காக தேவனுக்கு நன்றி கூறவேண்டும். ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே தேவன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் எனும் உணர்வு வரும்போது நாம் தேவனிடம் குறைபட்டுக்கொள்ளமாட்டோம். 

வெறுமனே ஆராதனைகளில் கலந்துகொண்டு கடமையை நிறைவேற்றுவதல்ல கிறிஸ்தவம். அது தேவனோடு உறவை வளர்த்துக்கொண்டு அவரோடு வாழ்வது. தேவனோடு நெருங்கிய உறவுகொள்வோமானால் நம்மைக் குறித்த தேவநோக்கத்தை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். அந்த நிலைக்கு நாம் வரும்போது மட்டுமே தேவன் ஏன் நம்மை இப்படிப் படைத்துள்ளார் என்பது புரியும். நமது துன்பங்கள்,  துயரங்கள், பிரச்சனைகள் எல்லாமே தேவ நோக்கத்தோடுதான் நடக்கின்றன.  

கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை என்பதை உணர்ந்துள்ளேன். எனக்கு என்னைக்குறித்த தேவ நோக்கத்தை வெளிப்படுத்தும் என விசுவாசத்துடன் வேண்டுவோம். கர்த்தர் அதனை நமக்கு வெளிப்படுத்துவார்.  

ஆதவன் 🖋️ 530 ⛪ ஜுலை 11, 2022 திங்கள்கிழமை

"அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 1 : 19 )

எதிரி நாட்டு ராஜாக்கள் உனக்கு எதிராக யுத்தம் செய்ய வருவார்கள்; ஆனால் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள். காரணம், சர்வ வல்லவரான நான் உன்னோடுகூட  இருக்கிறேன் என   மக்களைத் திடப்படுத்த எரேமியா தீர்க்கதரிசி யூதாவுக்குக் கூறிய வார்த்தைகள் தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

தங்களது மீறுதலால் தேவ கோபத்துக்கு உள்ளாகி யூதா மற்றும் இஸ்ரவேலர்கள் பல்வேறு ராஜாக்களின் அடிமைத்தனத்துக்கு உள்ளானார்கள். ஆனால் தேவன் தெரிந்துகொண்ட மக்கள் இனமானதால் தேவன் அவர்கள்மேல் பரிவு கொண்டார். மக்கள் தங்கள் தவறான வழிகளைவிட்டு தன்னிடம் திரும்பிட தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் மக்களுக்கு அறிவுரைகள் கூறினார்.  

உங்களுக்கு எதிராக யுத்தம் பண்ணுவார்கள் ஆனால் உங்களை  மேற்கொள்ள மாட்டார்கள் என்பதே செய்தி. 

அன்பானவர்களே, இதுவே ஆவிக்குரிய வாழ்வில் ஈடுபடும் நமக்கும் பொருந்தக்கூடிய செய்தி. ஆவிக்குரிய வாழ்வில்  நமக்கும் தினசரி போராட்டம் உண்டு. "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்கின்றார் பவுல் அடிகள். 

ஆனால் தேவனுடைய ஆவியானவர் நம்மோடுகூட இருப்பதால் அந்தப் போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளாது. ஒருவேளை நமக்கு எதிராக யுத்தம்செய்வது பாவங்களாக இருக்கலாம். ஆனால் அவை நம்மை மேற்கொள்ளாது. காரணம், தேவன் நம்மோடு இருக்கின்றார்.  

ஆவிக்குரிய வாழ்வில் போராடி வெற்றிபெறுவதற்குத் தேவன் பல்வேறு ஆவிக்குரிய போராயுதங்களைத் தந்துள்ளார். சத்தியம் , நீதி, சமாதானத்தின் சுவிஷேஷத்துக்குரிய ஆயத்தம், விசுவாசம், இரட்சிப்பு எனும் இவைகளே பல்வேறு ஆவிக்குரிய ஆயுதங்கள். எபேசியர் 6:14-17 இல் நாம் இதுகுறித்து விபரமாக  வாசிக்கலாம். 

ஆவிக்குரிய வாழ்வில் இந்த ஆயுதங்களை நாம் சரியாகப் பயன்படுத்துவோமானால், நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணும் பாவங்களும் நமக்கு எதிராகச் செயல்படும் வல்லமைகளும், எதிரிகளும் நம்மை மேற்கொள்ளமாட்டார்கள்; நம்மை இரட்சிக்கும்படிக்குத் தேவன் நம்மோடே கூட இருப்பார். 

ஆதவன் 🖋️ 531 ⛪ ஜுலை 12, 2022 செவ்வாய்க்கிழமை

"எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்."( எரேமியா 2 : 11 )


இஸ்ரவேலர் செய்த தேவனுக்குப் பிரியமில்லாத மிகப்பெரிய காரியம் அல்லது பாவம்,  அவர்கள் அந்நிய தெய்வங்களை வழிபடத் துவங்கியதுதான். இஸ்ரவேலர் நடுவே வேறு இனத்து மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் வெல்வேறு தெய்வங்களை வழிபட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் மதத்தில் உறுதியாக இருந்து அவற்றையே வழிபட்டனர்.  

இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்தினார். பல்வேறு அதிசயங்களைச் செய்து தானே மெய்யான தேவன் என்பதை அவர்கள் உணரத்தக்கவிதமாக அவர்களை வழிநடத்தினார். இவைகளைத் தங்கள் முன்னோர்கள் கூற அறிந்து  உணர்ந்திருந்தும் அவர்கள் தங்கள் உலகத் தேவைகளுக்கு தங்களைச் சுற்றியுள்ள மக்கள் வழிபட்ட அந்நிய தேவர்களை வணங்கவும் ஆராதிக்கவும் துவங்கினர். 

பிற இனத்தவர் வணங்கியது மெய்யான தேவனல்ல எனவேதான் இங்கு தேவன்  "தேவர்களல்லாத தங்கள் தேவர்களை அவர்கள்  மாற்றினது உண்டோ?" என்று கேட்கின்றார். ஆனால் வீணான அந்த தேவர்களுக்காக இஸ்ரவேலர் தங்கள் மெய் தெய்வத்தை மாற்றினார்கள்.  

 "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )  என்றும் எரேமியா புத்தகத்தில் வாசிக்கின்றோம். 

அந்நிய தெய்வங்களே வெடிப்புள்ள தொட்டிகள். வெடிப்புள்ள தொட்டியில் நீரைச் சேகரித்து பயன்படுத்த முடியாததுபோல அந்தத் தெய்வங்களால் வேறு எந்த பயனும் இல்லை.

இன்றும் மக்கள் இந்தத் தவறையே செய்கின்றனர். பணத்தையும், சொத்துச்  சுகங்களையும்,  பதவியையும், பெருமையையும் தெய்வங்களாக எண்ணி அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து கிறிஸ்துவுக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் போகின்றனர். ஆம், வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர். 

அன்பானவர்களே, வீணான தெய்வங்களை வழிபட்ட இஸ்ரவேலரைப்போல நாம் இருப்பது முறையல்ல. வீணான உலகத் தேவைகளை தெய்வங்களாக எண்ணி அவற்றைத் தேடி ஓடுவதில் கிறிஸ்துவை, அவர் காட்டிய நெறிகளை  விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிடுவது வெடிப்புள்ளத் தொட்டிகளைக் கட்டும் மூடத்தனம் போன்றதாகும்.

இஸ்ரவேலர் அடிமைபட்டுபோகக் காரணம் அவர்கள் தேவனை விட்டுவிட்டதுதான். இன்று அற்பகால இன்பத்துக்காக தேவனை விட்டுவிடுவது நமது வாழ்வில் நம்மை பல்வேறு அடிமைத்தனத்துக்குள்தான் கொண்டுபோய்ச்  சேர்க்கும். 

ஆதவன் 🖋️ 532 ⛪ ஜுலை 13, 2022 புதன்கிழமை

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் ". ( யோவான் 8 : 47 )

இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைவருமே தேவனால் உண்டானவர்கள்தான். ஆனால் ஆவிக்குரிய விளக்கத்தின்படி இது சரியல்ல. இயேசு கிறிஸ்து தேவனால் உண்டானவனுக்கும் பிசாசானவனால் உண்டானவனுக்குமுள்ள வேறுபாட்டை இங்குக் குறிப்பிடுகின்றார். 

தேவனுடைய வசனத்தைக் கேட்டு அதன்படி நடப்பவனே தேவனால் உண்டானவன். தேவனுடைய வசனத்தை அறியாமலும் அதன்படி வாழாமலும் இருப்பவன் பிசாசானவனால் உண்டானவன். 

தனது வார்த்தைகளை விசுவாசியாமலும் தனக்கு எதிராகவும் நின்ற யூகர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்"  ( யோவான் 8 : 44 )

கிறிஸ்துவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, அல்லது அதனை விசுவாசியாமல் அவற்றுக்கு எதிரான செயல்பாடுகளை நாம் செய்யும்போது பிசாசின் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றோம். இதனைத்தான் இயேசு கிறிஸ்து,  "உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.

நாம் தேவனால் உண்டானவர்கள் என்று கூறிக்கொண்டு வெறும் ஆராதனையில் மட்டும் அவரைப் புகழ்ந்து துதித்துவிட்டு உலக காரியங்களில் அவரது கற்பனைகளுக்கு முரணாக வாழ்வோமானால் நாம் பிசாசானவனால் உண்டானவர்கள்.

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" என்று இயேசு கிறிஸ்து கூறுவது வெறுமனே பிரசங்கத்தில் அவரது வார்த்தைகளை காதால் கேட்பதைக் குறிக்கவில்லை. வசனங்களுக்குச் செவிகொடுத்தல் என்பது அவரது வார்த்தைகளை வாழ்வாக்குவது.  

நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நாம் எப்படி இருக்கின்றோம்? வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோமா? கன்வென்சன் பிரசங்கங்களை காதால் கேட்பதற்கு ஓடி வாழ்க்கையில் சாட்சியற்றவர்களாக இருக்கின்றோமா ? 

நாம் தேவனால் உண்டானவர்களென்றால் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுப்போம் இல்லாவிட்டால்  நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் தேவனால் உண்டாயிராதபடி பிசாசின் மக்களாகவே வாழ்வோம்.   

ஆதவன் 🖋️ 533 ⛪ ஜுலை 14, 2022 வியாழக்கிழமை

"இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 )

தனித்திருத்தல் என்பது மிகுந்த துன்பம் தரக்கூடியது. இந்தத் துன்பம் அனைவருக்குமே ஏதோ ஒரு காலத்தில் வரக்கூடும். எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவும் இந்தத் தனித்திருத்தலை அனுபவித்தார். 

அதனையே அவர், "நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது". என்று குறிப்பிட்டார். உலக மனிதர்கள் இந்தத் தனித்திருத்தலை எளிதில் தாக்கிக்கொள்ளமுடியாது. மகன் இறந்த துக்கம், மனைவி இறந்த துக்கம், கணவன் இறந்த துக்கம் தாங்க முடியாமல்  பலர் தற்கொலை செய்வதுண்டு. நாம் பத்திரிகைச் செய்திகளில் பல நேரங்களில் இதனை வாசித்திருக்கலாம். 

ஆனால் இயேசு கிறிஸ்து எல்லோராலும் கைவிடப்பட்டவராக, தனித்திருப்பவராக,  உலகத்துக்குத் தெரிந்தாலும் அவர் உண்மையில் தனித்திருக்கவில்லை. அவரோடு பிதாவாகிய தேவன் எப்போதும் இருந்தார். எனவேதான்  "நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." என்று கூறுகின்றார். எல்லோராலும் கைவிடப்பட்டாலும் பிதா அவரைக் கைவிடவில்லை. 

அன்பானவர்களே, இன்று ஒருவேளை உலகப்பிரகாரமான தனித்திருத்தலில் இதை வாசிக்கும் நீங்கள் இருக்கலாம். பெற்ற பிள்ளைகள்  ஒருவேளை கைவிட்டு இனி என்ன செய்வது எனக் கலங்கிக்கொண்டிருக்கலாம்.  கை பிடித்தக் கணவன் கைவிட்டிருக்கலாம்.  ஆனால் நம்மைப் படைத்து நம்மோடு இருக்கும் தேவன் நம்மைத் தனித்திருக்க விடமாட்டார். அவர் கூடவே இருக்கிறார் என்று விசுவாசியுங்கள். 

"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ( ஏசாயா 41 : 10 ) என்கிறார் கர்த்தராகிய தேவன்.

"நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்" என்று இயேசு கிறிஸ்துவுக்கு வந்ததுபோல நமக்கும் ஒரு காலம் வரும் என்பதால் தேவனோடு நாம் எப்போதும் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போது நாமும் இயேசுவைப்போல துணிவுடன் கூறலாம், "நான் தனித்திரேன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்" என்று. 

ஆதவன் 🖋️ 534 ⛪ ஜுலை 15, 2022 வெள்ளிக்கிழமை

"..........அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 1 )

ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபின்னர் ஏற்பட்டக் கலவரத்தால் எருசலேம் சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. மக்கள் யூதர்களுக்கு அஞ்சிச் சிதறி யூதேயா மற்றும் சமாரியா தேசங்களுக்குச் சிதறிஓடினார்கள்.

ஆனால் எந்த ஒரு தீமையான செயலையும் தேவன் நன்மையாக மாற்றக்கூடியவர் என்பதற்கேற்ப நடந்தது. யூதர்கள் சமாரியர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று கருதி அவர்களோடு உணவுகூட உண்பதில்லை. ஆனால் இப்போது அவர்கள் சமாரியாவில் தஞ்சம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இப்படிச் சமாரியாவுக்குப்போன கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யூதர்கள் அங்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள்.

"சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 4 )ஆம் சிதறப்பட்டு ஓடியதால் சமாரியர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியும் வாய்ப்பு உண்டானது.

நமது ஆவிக்குரிய வாழ்விலும் பிசாசு பல்வேறு துன்பங்களையும் பிரச்சனைகளையும் எழுப்பி நம்மைச் சிதறடிப்பான். ஆம் , பிசாசுதான்  சிதறடிக்கின்றவன்.  நாம் நமது ஆவிக்குரிய வாழ்வின் அரணை (வேலியைக்) நமது ஜெப ஜீவியத்தால்  காத்துக்கொள்ளவேண்டும்.    "சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து." ( நாகூம் 2 : 1 )  என்று நாகூம் தீர்க்கதரிசி கூறுகின்றார். 

இப்படி நாம் நமது ஆவிக்குரிய வாழ்வின் வேலியை உறுதியாகக் காத்துக்கொண்டால் சாத்தானின் சிதறடிக்கும் முயற்சி  வெற்றிபெறாது. மட்டுமல்ல, அன்று சிதறடிக்கப்பட்ட மக்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்ததுபோல நம்மூலம் கிறிஸ்து அறிவிக்கப்பட்டு மகிமைப்படுவார்.

ஆம், ஆவிக்குரிய வாழ்வில் சிதறடிக்கப்படும் அனுபவம் இன்றியமையானது. பக்தனான யோபு சிதறடிக்கப்பட்டபின் பொன்னாகத் திகழ்ந்தார்.  எனவே, நாகூம் கூறுவதுபோல நமது அரணைக் காத்துக்கொண்டு  வழியைக் காவல் பண்ணி  அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொண்டு நமது பெலனை மிகவும் ஸ்திரப்படுத்துவோம். அதற்கு ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருப்போம்.


ஆதவன் 🖋️ 535 ⛪ ஜுலை 16, 2022 சனிக்கிழமை

"அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்."( யோவான் 11 : 16 )

இந்தியாவின் அப்போஸ்தலர் தோமாவைக்குறித்து நாம் அதிகம் எண்ணுவதில்லை. தோமாவின் வாழ்வின் செயல்பாடுகள், அவர் கிறிஸ்துவுக்காகக் காட்டிய வைராக்கியம் இவை நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இப்போதுள்ளதுபோன்ற பிரயாண வசதிகள் கிடையாது. தவிர, நீண்ட கடல் பயணங்கள் ஆபத்தானவை. ஆனால் கிறிஸ்துவின்மேலுள்ள அன்பினால், தனது சொந்த மக்கள், குடும்பம், உணவுப் பழக்கம், காலசூழ்நிலை இவை அனைத்தையும்விட்டு,  மீண்டும் அங்கு சென்று தான் விட்டுவந்த எல்லோரையும் பார்க்க முடியுமா என்ற நிச்சயமில்லாமல் கிறிஸ்துவை அறிவிக்க இந்தியாவுக்கு வந்தார் அவர். 

கிறிஸ்துவோடு இருக்கும்போதே கிறிஸ்துவுக்காக அவரோடு உயிரை விடத் தயாராக இருந்தார் அவர். யூதேயாவுக்குச் செல்ல இயேசு புறப்பட்டபோது, அவரோடு அங்கு சென்றால் யூதர்கள் கல்லெறிந்து இயேசு கிறிஸ்துவைக் கொன்றால், நாமும் சாகநேரிடும் என மற்ற சீடர்கள் அஞ்சியபோது, "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என சக அப்போஸ்தலரையும் அவர் அழைக்கின்றார். 

கிறிஸ்துவோடு கிறிஸ்துவாக நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டு மரிப்பதுதான் கிறிஸ்தவ வாழ்வு. இதனை தீர்க்கதரிசனமாக தோமா கூறுவதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். அப்போஸ்தலரான பவுல் இதனை, "நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 6 : 6 ) என்று கூறுகின்றார்.

இன்று உடலளவில் நாம் ஒருவேளை கிறிஸ்துவுக்காக மரிக்காமல் இருக்கலாம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல பாவத்துக்கு நாம் மரிக்க முடியும். நமது பாவ சரீரம் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்படவேண்டும்.

அப்போஸ்தலரான தோமா மற்ற சீடர்களை அழைத்ததுபோல "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்" என நாம் நமது சமூகத்தில் உள்ள மற்றவர்களை அழைக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

மேலும், அப்படித் துணிந்து தோமா நடந்தபோதுதான் மிகப்பெரிய அற்புதத்தைக் காண முடிந்தது. ஆம், மரித்து நான்கு நாட்களான லாசருவை கிறிஸ்து உயிரோடு எழுப்பினார்.   அன்பானவர்களே, நாமும் நமது பாவ சரீரங்களை கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைய ஒப்புக்கொடுப்போம்.  அப்போது நமது வாழ்விலும் கிறிஸ்து செய்யும் அதிசயங்களைக் கண்டு மகிழ முடியும். 

ஆதவன் 🖋️ 536 ⛪ ஜுலை 17, 2022 ஞாயிற்றுக்கிழமை

"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக் காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 )

தேவன் அருவருக்கும் இரண்டு பெரிய பாவங்கள், விபச்சாரமும் விக்கிரக ஆராதனையும்தான். சர்வ வல்லவரின் மகிமையையும் அவரது அளப்பரிய ஆற்றலையம் உணர்ந்தவன் சிலையைச் செய்து அதனை வணங்கமாட்டான். இந்த அண்டசராசரங்களைப் படைத்து அடக்கி ஆளும் தேவன் மனிதனின் கையால் உருவாக்கப்பட்ட சிலையினுள் இருப்பார் என எண்ணுவது அறிவுடைமையல்ல. 

"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;" ( யாத்திராகமம் 20 : 4 ) என இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் மோசே மூலம்  அளித்த  பத்துக் கற்பனைகளில் கூறியுள்ளார். 

ஆனால் இன்றைய வசனம் இதற்கு மேலே ஒருபடி போய், "விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது" என்று நம்மை அறிவுறுத்தும் உண்மை என்னவென்றால், விக்கிரக ஆராதனை எனும் சிலை வழிபாடு என்பது மண்ணினாலோ, மரத்தினாலோ அல்லது வேறு உலோகங்களினாலோ செய்யும் சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, பொருளாசையும் சிலை வழிபாடுதான் என்பதே. 

இன்று சிலைகளை அருவருகின்றோம் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ ஊழியர்களும்  பொருளாசை எனும் சிலைவழிபாட்டுக்குள் விழுந்து கிடக்கின்றனர். மட்டுமல்ல பல கிறிஸ்தவ ஊழியர்கள்  மக்களை நடத்துவதும் சிலைவழிபாட்டுக்கு நேராகவேதான். 

சொத்து சேர்ப்பது, வாகனங்கள் மற்றும் வீடு வாங்க ஜெபிப்பது, காணிக்கை கொடுத்தால் தேவன் அதனைப் பல மடங்காகத் திருப்பித் தருவார் என மக்களை ஆசைகாட்டி அதிக காணிக்கைக் கொடுக்கத் தூண்டுவது, இவை அனைத்தும் சிலை வழிபாடுகளே. ஆனால்  தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் இன்று இத்தகைய விக்கிரக ஆராதனைக்காரர்களாகவே இருக்கின்றனர். 

இன்றைய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது, "அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே" என்று.  அதாவது, நேரடியான சிலை வழிபாடு செய்யவில்லை என்றாலும் வேதம் கூறும் அசுத்தக் குணமும் பொருளாசை எனும் சிலைவழிபாட்டுக் குணமும் நமக்கு இருக்குமானால் நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்கடைவதில்லை. 

இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு பொருள், பணம் தேவை. ஆனால் பொருளாசை என்பது உள்ளது போதும் என நிறைவடையாமல் துன்மார்க்கமாய் மேலும் மேலும் பணம், சொத்து சேர்க்கும் ஆசையைக் குறிக்கின்றது. எனவே கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்கடைய வேதம் கூறும் சிலைவழிபாடுகளை நம்மைவிட்டு அகற்றுவோம்.

ஆதவன் 🖋️ 537 ⛪ ஜுலை 18, 2022 திங்கள்கிழமை

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." ( மத்தேயு 11 :28,29 )

வேதாகமம் எழுதப்பட்டபோது அதிகார எண்களோடும் வசன எண்களோடும்  எழுதப்படவில்லை. கி.பி. 1200 க்குப் பின்னரே எண்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பிட்ட  வசனத்தை எளிதில் கண்டுபிடிக்க இந்த எண்கள் உதவியாக இருக்கின்றன. ஆனால் அதேநேரம் எண்கள் கொடுக்கப்பட்டது பல வசனங்களை  நாம் சரியாகப் புரிந்துகொள்ளத் தடையாகவும் இருக்கின்றன. 

இன்றைய வசனமும் அப்படித்தான். பொதுவாகப் பலரும் மத்தேயு 11:28 ஐ மட்டுமே கூறுவதுண்டு. சுவர்களில் எழுதப்படும் வசனங்களிலும் இதனை மட்டுமே எழுதுவதுண்டு.   "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்". என்பதோடு இயேசு முடிக்கவில்லை. தொடர்ந்து கூறுகின்றார்,  "என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." (மத்தேயு 11:29)

நுகம் என்பது வண்டி மாடுகளுக்கு கழுத்தில் சுமத்தப்படும் குறுக்குத் தடியைக் குறிக்கும். இந்த வசனத்தின் சரியான பொருள், நீங்கள் உங்கள் உலகப்  பாரங்களைச் சுமந்து வேதனைப்படவேண்டாம் என்னிடம் வந்து  ஆறுதல் பெறுங்கள். அதற்கு நீங்கள் எனது நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். "என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும்  இருக்கிறது " (மத்தேயு 11:30)

சரியான பொருள், நீங்கள் உங்கள் உலக கவலைகளையும் துக்கங்களையும் பாடுகளையும் சுமந்து வேதனை அடையவேண்டாம், என்னிடம் வாருங்கள்; என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை ஏற்றுக்கொள்வது லெகுவான காரியம். அப்போது உங்கள் ஆத்துமாவுக்கு வேதனையிலிருந்து இளைப்பாறுதல் கிடைக்கும்.

அன்பானவர்களே, கிறிஸ்துவிடம் வருவது என்பது அவரை ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைகள் எனும் நுகத்தை ஏற்றுக்கொள்வது. அவை கடினமானவைகளுமல்ல. இதனையே அப்போஸ்தலரான யோவானும் கூறுகின்றார். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

நாம் நமது துக்கங்களை எண்ணி எண்ணி கவலைப்பட்டு மனபாரத்தோடு இருப்பதைவிட, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வரவேண்டும். நமது அனைத்துப் பிரச்சனைகளின் பாரத்தையும் அவர் சுமந்துகொள்வார் எனும் நம்பிக்கையுடன் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள உறுதிகொள்ளவேண்டும். 

கிறிஸ்துவின் இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ள ஆர்வத்துடன் அவரிடம் நெருங்கி வருவோம். அவர் நம்மில் எவருக்கும் தூரமானவர் அல்ல. 

ஆதவன் 🖋️ 538 ⛪ ஜுலை 19, 2022 செவ்வாய்க்கிழமை

"பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) 

ஒருவர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக இருக்கலாம், ஆனால் அதனால் அவர் எல்லாம் தெரிந்தவரோ பெரிய மேதையோ என அர்த்தமல்ல. அவருக்கு ஏதோ பலவீனம் இருக்கும். அவரோடு நெருங்கிப் பழகினால்தான் அது தெரியும்.

இந்த உலகத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக புகழப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  இவர் விஞ்ஞானத்தில் மேதையாக இருந்தாலும் அவரது அறிவு கடவுளை அறிந்திடத் தடையாகவே இருந்தது. 

இந்த உலக வரலாற்றில் இதுவரைப் பிறந்தவர்களில் அதிக அளவு மூளைத்திறன் உள்ளவராக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  அவரது அறிவினைக்கண்டு வியந்த விஞ்ஞானிகள் அவர் மரித்தபின் அவரது மூளையைப் பாதுகாத்து  எப்படி இந்த மனிதனது மூளை இப்படி சிந்தித்தது , இவரதுமூளை மற்ற மனிதர்களது மூளையிலிருந்து எப்படி வேறுபட்டதாயிருக்கின்றது ஆராய்ச்சி செய்தனர்.

ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நம்மை வியக்கவைக்கும். ஒருமுறை அவர் ஏதோ காரியமாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அவரிடம் வந்து டிக்கெட்டை காண்பிக்குமாறு கூறினார். ஐன்ஸ்டின் தனது மேல்சட்டை, கால்சட்டை, மேலே அணிந்திருந்த கோட் பாக்கெட் என அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார். டிக்கெட் கிடைக்கவில்லை.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, எனக்கு உங்களைத் தெரியும். நீங்கள் நிச்சயமாக டிக்கெட் வாங்கியிருப்பீர்கள். பரவாயில்லை, உங்களைப்போன்ற மேதைகளால் நமது நாட்டுக்கே பெருமை. நியாயப்படி அரசாங்கம் உங்களுக்கு இலவச பயண வசதி செய்துகொடுத்திருக்க வேண்டும்...அமர்ந்துகொள்ளுங்கள் " என்று கூறியபடி நகர்ந்தார்.

அவர் அடுத்த பெட்டியைநோக்கி நகரவும் ஐன்ஸ்ட்டின் கீழே குனிந்து தனது இருக்கையின் அடியில் டிக்கெட்டைத் தேடத் துவங்கினார். அதனைக் கவனித்தத் டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, பரவாயில்லை, எனக்கு அது தேவையில்லை" என்றார். அதற்கு ஐன்ஸ்டின் மறுமொழியாக, " சார், உங்களுக்கு அது தேவையில்லாமல் இருக்கலாம், எனக்கு அது தேவைப்படுகின்றது. நான் எங்கே செல்கிறேன் என்பது அதனைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும்" என்றார்.  

மிகப்பெரிய மேதை என உலகத்தால் புகழப்பட்ட மனிதன் இந்த உலகத்தில் தான் எங்கு செல்கிறேன்  என்று தெரியாமலே பயணம் செய்தது ஆச்சரியமாயில்லையா? தனது இந்த உலக பயணமே தெரியாதபோது மறுவுலகம் பற்றிய சிந்தனை அவருக்கு வேடிக்கையான கதையாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. 

மேதை எனப் புகழப்பட்ட ஐன்ஸ்டின் ஒருமுறைக் கூறினார், " 'கடவுள்' என்ற வார்த்தை என்னைப் பொறுத்தவரை மனித பலவீனங்களின் வெளிப்பாடு மற்றும் விளைவுகளே தவிர வேறொன்றுமில்லை, பைபிள் மரியாதைக்குரிய, ஆனால் இன்னும் பழமையான சிறுபிள்ளைத்தனமான  கதைகளின் தொகுப்பாகும். இவற்றை நியாயப்படுத்த எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாது " 

ஆம், மேதையாய் இருப்பதால் எல்லாம் தெரிந்தவர் என எண்ணிவிடக்கூடாது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) என்றார். 

அன்பானவர்களே, இதுபோல நமது அறிவும் படிப்பும் தேவனை அறிந்திடத் தடையாக இருக்கலாம். அப்படி இராதபடி பார்த்துக்கொள்வோம். "ஆண்டவரே, நான் புழுதியும் குப்பையுமானவன், என் பாவங்களை எனக்கு மன்னித்து உம்மை நான் அறிந்திட கிருபை செய்யும்" என வேண்டுதல் செய்வோம். 

ஆதவன் 🖋️ 539 ⛪ ஜுலை 20, 2022 புதன்கிழமை

"முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)

பொதுவாக இன்று ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும், "நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறுவது வழக்கம்.   சிலர் அதனை தேதி குறிப்பிட்டு இந்தத் தேதியில் நான் இரட்சிக்கப்பட்டேன் என்றும் கூறுவார்கள். இப்படிக் கூறுபவர்கள் பாவ மன்னிப்புக்கும் இரட்சிப்புக்குமுள்ள வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களே.

நமது மகன் நாம் சொல்லும் அறிவுரைகளைக் கேட்காமல் துன்மார்க்க நண்பர்களோடு சேர்ந்து பழகுகின்றான் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை அப்படி அவர்களோடு சேர்ந்து சிறு தகாத செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைதுசெய்யப்படுகின்றான். நமக்குத் தகவல் வருகின்றது. நாம் காவல் நிலையம் செல்லுகின்றோம்.

நம்மைக் கண்டதும் மனம் கசிந்து அழுகின்றான். பின், "அப்பா, உங்கள் அறிவுரையினைக் கேட்காதது தவறுதான். என்னை மன்னியுங்கள்" என்கின்றான். நமது மகன் என்பதால் நாம் அவனை மன்னிக்கின்றோம். இதுவே பாவ மன்னிப்பு. கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிடும்போது இதுபோல அவர் நம்மை மன்னிக்கின்றார்.  அதாவது நாம் அவருடன் ஒப்புரவாக்கப்படுகின்றோம். அப்போது அதுவரை நாம் செய்த பாவங்களை அவர் மன்னிக்கின்றார். 

ஆனால் காவல் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டபின் அந்த மகன் பழைய பாவ நண்பர்களைவிட்டு விலகவேண்டும். தாய் தகப்பனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறுதிவரை அப்படி இருந்தாலே அவன் பாவ மன்னிப்பைப் பெற்றதில் அர்தமுண்டு. இல்லையானால் மீண்டும் இக்கட்டுக்கு உள்ளாவான்.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5 : 10 ) 

அதாவது இப்படி ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. எனவே இப்படி பாவமன்னிப்பு பெற்று கிறிஸ்துவோடு ஒப்புரவாக்கப்பட்டபின்பு கிறிஸ்துவின் ஜீவனாலே நாம்  இரட்சிக்கப்படுவது நிச்சயம் என்று பவுல் கூறுகின்றார். கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் நம்மைப் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும். 

இப்படி இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ஆவியின் படியே நடப்பார்கள். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 1, 2)

இது ஒருநாளில் நடப்பதல்ல. அன்றாடம் நாம் பாவத்துக்கு எதிராகப் போராடவேண்டும். இதுவே கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் அனுபவம். இப்படிச் சிலுவை  சுமந்து, பாவத்துக்கு எதிராகப் போராடி நமது வாழ்வின் இறுதிவரை நம்மைப் பாவமில்லாமல்  காத்துக்கொள்ளவேண்டும். இப்படி வாழ்வின்  "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)

அன்பானவர்களே, என்றோ நாம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு  அனுபவத்தை வைத்துக்கொண்டு , "நான் இரட்சிக்கப்பட்டேன் " என்று கூறிக்கொண்டு அலைவதால் அர்த்தமில்லை. உலக வாழ்வின் இறுதிவரை நமது வாழ்வு பாவமில்லாமல் நிலை நிற்கவேண்டும். இல்லையானால், நாம் முதலில் பார்த்த சம்பவத்திலுள்ள மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுபோல சாத்தானின் வல்லமைக்குள் கைதியாக இருப்போம்.

ஆதவன் 🖋️ 540 ⛪ ஜுலை 21, 2022 வியாழக்கிழமை

"கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )

கர்த்தருக்குக் காத்திரு என்று இன்றைய வசனம் வலியுறுத்திக் கூறுகின்றது. "கர்த்தருக்கே காத்திரு" என்று கூறுவது அவருக்காக மட்டுமே காத்திரு எனும் பொருளில்தான். 

காத்திருத்தல் என்பது ஒன்றும் செய்யாமல் ஒரு பேருந்துக்கோ ரயிலுக்கோ காத்திருப்பதுபோல காத்திருப்பதையல்ல. மாறாக, பொறுமையோடு அமைதியாக கர்த்தர் செயல்படும்வரை உன் மனதில் விசுவாசத்தோடு இரு என்பதாகும். அதனைத்தான் திடமானதாயிரு என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், காத்திருத்தல் எனும் வார்த்தைக்கு மூல வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள  கிரேக்க வார்த்தை QAVAH என்பதாகும். இதற்குக்   'காத்திருத்தல்' எனும் பொருளைத் தவிர வேறு   இரண்டு அர்த்தங்களும்  கூறப்பட்டுள்ளன. ஒன்று 'பின்னுதல்' (பெண்கள் தலை முடியைப் பின்னுவதுபோல) இன்னொரு பொருள் 'இணைத்தல்' (bind). அல்லது 'ஒட்டிக்கொள்ளுதல்'. எனவே இந்த வசனத்தின் மெய்யான பொருள், கர்த்தரோடு கர்த்தராக உன்னை பின்னிக்கொள், அவரோடு அவராக ஒட்டிக்கொள்  என்பதாகும். அப்படி இருக்கும்போது அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். 

மேலும் இப்படிக் கர்த்தரோடு தங்களை இணைத்துக் கொண்டவர்களைக் குறித்து ஏசாயா, "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 ) என்று கூறுகின்றார்.

ஆவிக்குரிய வாழ்வில் நாம் நடக்கும்போது நம்மைத் திடப்படுத்தவும் நாம் அவரோடு மேலும் நெருங்கிடவும் தேவன் சில வாக்குத்தத்தங்களை நமக்குத் தரலாம். அவை நமது வாழ்வில் நிறைவேறிட காலதாமதமாகலாம். ஆனால் நாம் அவரோடுள்ள உறவில் விலகிடாமல் நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியம்.

ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுள்ளவனாய் இருந்தபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேறிட அவர் தனது நூறு வயதுவரை காத்திருக்கவேண்டியிருந்தது. அவர் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். காரணம், தேவனோடு அவர் தன்னைப் பிணைத்துக்கொண்டார்; அவரோடு ஒட்டிக்கொண்டார். 

அன்பானவர்களே, திடமனதாய் கர்த்தருடன் இணைந்த வாழ்வை வாழ்வோம். வேதாகமத்தை வாசிப்பதும், அன்றாட ஜெபத்தில் தரித்திருப்பதும் அவருக்கேற்ற ஒரு வாழ்வை வாழ்வதும் அவரோடுள்ள நமது நெருக்கத்தை அதிகரிக்கும். அப்போது அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார்.  அப்போது எந்த உலகக் கவலையும் பிரச்சனைகளும் நம்மை மேற்கொள்ளாது.

ஆதவன் 🖋️ 541 ⛪ ஜுலை 22, 2022 வெள்ளிக்கிழமை

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1, 2 )

கிறிஸ்துவுடன் கிறிஸ்துவுக்காக மரித்து (அதாவது பாவத்துக்கு மரித்து) அவருடன் எழுந்திருப்பதே நாம் இரட்சிக்கப்பட்டுளோம் என்பதற்கு அடையாளம். அப்படி இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றவர்கள் கிறிஸ்துவைப்போல மேலான எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அதனையே,    "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்" என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். ஒருவர் கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்த அனுபவம் உள்ளவரென்றால் (அதாவது இரட்சிக்கப்பட்டவரென்றால் ) இப்படி மேலானவைகளைத் தேடுபவராக இருப்பார்.

தேவனுடைய வலது பாரிசத்தில் இருப்பவை இந்த பூலோகத்திலுள்ளவைகளல்ல. அந்த பரலோக மகிமை காரியங்கள் பவுல் அடிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டது.  அதனையே பவுல் அடிகள், "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம்...."( 2 கொரிந்தியர் 12 : 7 ) என்று கூறுகின்றார்.

ஆனால் இந்த உலகத்தில் பெரும்பாலான கிறிஸ்தவ பிரசங்கிகளும் தங்களைக் ஆவிக்குரிய சபைகள் என்று  கூறிக்கொள்ளும் சபைகளும்  இந்த அனுபவத்தையோ, இதுபற்றிய தெளிவோ இல்லாமல் நூறு சதவிகிதம் உலக காரியங்களையே பிரசங்கித்து மக்களை இருளுக்கு நேராக நடத்துகின்றனர். இவர்கள் நூதனமான சுவிசேஷத்தை அறிவிக்கின்றனர்.

"நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்களானால் கிறிஸ்துவிடம் உங்கள் எல்லா உலகத்  தேவைகளையும் கேளுங்கள். கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையல்ல பூமியிலுள்ளவைகளையே  நாடுங்கள். அதற்கு அதிக காணிக்கைகளைக் கொடுங்கள். பத்தில் ஒருபங்கு வருமானத்தை எங்களுக்குத் தாருங்கள்; நீங்கள் கொடுப்பது பலமடங்காக உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்." என்பதே இவர்களது நூதன சுவிசேஷம். 

அன்பானவர்களே, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பிரபல பிரசங்கிகளால் வஞ்சிக்கப்படுகின்றார்கள். மக்களது காணிக்கைப் பணத்தால் இவர்களால் துவக்கப்பட்ட பத்திரிகைகளும் டெலிவிஷன்களும் இருளுக்கு நேராக மக்களை வழிநடத்தவே பயன்படுகின்றன.  

நாம் நம்மைக் காத்துக்கொள்வோம். கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத் தேடுவோம். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவோம்.

ஆதவன் 🖋️ 542 ⛪ ஜுலை 23, 2022 சனிக்கிழமை

"தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (எபிரெயர் 13: 7, 8) 

கிறிஸ்துவின் சுவிசேஷம் யாரோ ஒருவரால் நமது வாழ்வில் நமக்கு அறிவிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவில்  விசுவாசம் கொண்டிருப்போம். நம்மை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியவர்கள் பிற்பாடு ஒருவேளை வழி விலகிப் போயிருக்கலாம். 

எனவேதான், நம்மை இரட்சிப்புக்கு நேராக நடத்தியவர்களின் செயல்பாடுகளை நினைத்து, அவற்றின் முடிவினைக் கவனித்து அவற்றைப் பின்பற்றவேண்டும்.  எனவேதான், "உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்."  என்று எழுதுகின்றார் நிரூப ஆசிரியர்.

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்போஸ்தலர் காலத்தில் அவர் நடத்தியவிதங்களில் இன்றும் தன்னை விசுவாசிப்பவர்களை அவர்  நடத்துகின்றார். நமது  வாழ்வில் கிறிஸ்துவின் செயல்பாடுகள் இல்லாமல் போவதற்கு நமது தவறான செயல்பாடுகள் காரணமாய் இருக்கலாம், எனவே அவற்றை நாம் ஆராய்ந்து பார்த்து திருத்திக் கொள்ளவேண்டுமே தவிர, "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்". (எபிரெயர் 13:9 ) என்கின்றார். 

இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். தங்களது வாழ்வில் ஆசீர்வாதம் இல்லை என எண்ணி மாறி மாறி ஒவ்வொரு ஊழியக்காரர்களாக அலைந்து திரிகின்றனர். இந்த ஊழியர்கள் ஆளாளுக்கு ஒரு உபதேசம் கூறுபவர்களாக இருக்கின்றனர். எனவேதான், "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. வேதாகம சத்தியங்களுக்கு முரணான போதனைகளே அந்நிய போதனைகள்.

அன்பானவர்களே, நம்மை நாம் வேத வெளிச்சத்தில் நிதானித்துப்பார்த்து  நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர அலைந்து திரிவதால் அர்த்தமில்லை. 

தேவவசனத்தை நமக்குப் போதித்து நடத்தினவர்களை நாம் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவோம். ஒருவேளை அவர்கள் வழி விலகிச் சென்றிருந்தால், வேத வெளிச்சத்தில் ஆராய்ந்துபார்த்து நேர் வழியில் நடப்போம். 

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதால் நம்மை அவர் நேரான வழியில் நடத்துவார். 

ஆதவன் 🖋️ 543 ⛪ ஜுலை 24, 2022 ஞாயிற்றுக்கிழமை

"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

காபிரியேல் தூதன் கூறிய செய்தியைக் கேட்டு அன்னை மரியாள் எலிசபெத்தை சந்திக்கச்செல்லுகின்றாள். எலிசபெத்து மரியாளைப்பார்த்து, "என் ஆண்டவரது தாயார் என்னிடத்தில் வரக்கூடிய பாக்கியம் எனக்கு எதனால் கிடைத்தது" என ஆச்சரியப்பட,  அன்னை மரியாள் பாடிய புகழ் பாடலில் இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார். 

ஆம், கர்த்தரது இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு இந்தத் தலைமுறையில் மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து இருக்கும் என்பதே இந்த வசனம் கூறுவது. 

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது ஒரு போலீஸ்காரரைப் பார்த்துப் பயப்படுவதுபோலவோ அல்லது ஒரு ஆசிரியரைப் பார்த்து மாணவன் பயப்படுவதுபோல பயப்படுவதையோ குறிக்கவில்லை.  

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என நீதிமொழிகள் நூலில் வாசிக்கின்றோம். 

தீமையை வெறுக்கக்கூடிய மனம் நமக்கு வேண்டும். "பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." என்று இந்த வசனம் கூறுகின்றது. இத்தகைய குணங்கள் மிகுதியாக அரசியல்வாதிகளிடம் இருப்பதை நாம் அறிவோம். பதவிக்காகவும் தாங்கள் சார்ந்துள்ள கட்சி செய்வதை நியாயப்படுத்தவும் அரசியல்வாதிகள் இப்படிச் செய்கின்றனர்.

ஆனால் இந்தக் குணம் பெரும்பாலான மனிதர்களிடமும் இருக்கின்றது. ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்துவிட்டாலே பெருமை, அகந்தை மனிதர்களுக்கு வந்துவிடுகின்றது. பிரபஞ்சத்தையே படைத்து ஆட்சிசெய்யும் தேவன் எல்லா மகிமையையும் விட்டு அற்பமான மனிதனுக்கு ஒப்பானவராக மாறினாரே ? (வாசிக்க - பிலிப்பியர் 2 : 6-11)அவர் எப்படி இந்த அகந்தையும் பெருமையும் உள்ள மனிதர்களை ஏற்றுக்கொள்வார்? 

அன்பானவர்களே, நமது தலைமுறை நன்றாய் இருக்கவேண்டுமென்று சொத்து சுகங்கள் சேர்த்து வைத்து கூடவே தேவ சாபத்தையும் சேர்க்கக்கூடாது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது என்று கூறப்பட்டுள்ளதால், "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" என்ற வசனத்தின்படி தீமையை வெறுத்து அவருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம்.

ஆதவன் 🖋️ 544 ⛪ ஜுலை 25, 2022 திங்கள்கிழமை


"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )

அதிகமான தூக்கம் மனிதனின் வாழ்வை நாசமாக்கும். தூங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து நமது அன்றாட வேலைகளைச் செய்யாமலிருந்தால் தரித்திரம்தான் நம்மைத் தொடரும். " .........................."தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்." ( நீதிமொழிகள் 23 : 21 ) என்கின்றது நீதிமொழிகள். அதாவது சோம்பலாய் தூக்கத்திலேயே நாட்டம்கொண்டு இருப்போமானால் உடுத்துவதற்கு நல்ல ஆடை கூட இல்லாத நிலைமை ஏற்பட்டு கந்தலைக் கட்டிக்கொண்டு திரியவேண்டியிருக்கும்.

ஆனால் பவுல் அடிகள் இங்குக் குறிப்பிடுவது ஆவிக்குரிய தூக்கத்தைக்குறித்து. அதாவது ஆத்தும காரியங்களைக்குறித்து எந்தவித சிந்தனையுமில்லாமல் உலக காரியங்களையே எண்ணி ஆத்மத் தூக்கத்திலேயே இருப்பதைக் குறிப்பிடுகின்றார். அத்தகைய மனிதன் செத்தவர்களுக்குச் சமம் என்று பவுல் கருதுகின்றார். 

எனவேதான், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு. செத்தவன்போல இருக்காதே, விழித்துக்கொள் என்று அறிவுறுத்துகின்றார்.  ஆவிக்குரிய சிந்தனையே இல்லாமல் உலக காரியங்களையே எண்ணி அவற்றுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தோமானால் நாமும் இருளடைந்தவர்களாக இருப்போம். நம்மைக்கொண்டு யாருக்கும் எந்த பயனுமிராது. 

கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் வளருவோமானால் கிறிஸ்துவின் மெய்யான ஒளி நம்மேல் துலங்கும். இதனையே, "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." என்கின்றார் பவுல். எனவே நாம் மற்ற உலக மக்களைப்போல இருக்கக்கூடாது. "ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 6 )

ஆவிக்குரிய வாழ்வில் விழிப்புடன் இருக்கும்போது பல்வேறு துன்பங்களும் பிரச்சனைகளும் நம்மை நெருக்கலாம். ஆனால் நாம் இப்போது தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டோம் ஆதலால்,  பகலுக்குரியவர்களாக மாறிவிட்டோம்.    எனவே, பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக் கடவோம். ( 1 தெசலோனிக்கேயர் 5 : 8 )
 
அன்பானவர்களே, ஆதலால் ஆவிக்குரிய தூக்கத்தில் இருக்கின்ற நாம் விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருக்க வேண்டியது அவசியம்.  அப்பொழுது மட்டுமே கிறிஸ்து நம்மைப் பிரகாசிக்க முடியும். கிறிஸ்து நம்மைப் பிரகாசிக்கும்போது மட்டுமே நம்மூலம் மற்றவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளமுடியும். 

ஆதவன் 🖋️ 545 ⛪ ஜுலை 26, 2022 செவ்வாய்க்கிழமை


"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."( கலாத்தியர் 2 : 20 )

அப்போஸ்தலராகிய பவுல் அடிகள் இந்த வசனத்தில் இரண்டுவித பிழைத்திருத்தலைக் குறித்துப்  பேசுகின்றார். ஒன்று ஆவிக்குரிய பிழைத்திருத்தல் இன்னொன்று சரீர விதமாகப் பிழைத்திருத்தல். இரண்டு பிழைத்திருத்தலும் நமக்கு அவசியம். 

முதலாவது பிழைத்திருத்தல் என்பது, பாவத்தால் மரித்த ஆத்துமம் கிறிஸ்துவால் பிழைத்திருப்பதைக் குறிக்கின்றது.  எனது உடலையும் ஆத்துமாவையும் ஒடுக்கி கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல அறையப்பட ஒப்புக்கொடுத்தேன். எனவே இப்போது கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கின்றேன். இப்போது பழைய பவுல் அல்ல, இயேசு கிறிஸ்துவே எனக்குள் வாழ்கின்றார் என்கின்றார். 

இது நாம் அனைவரும் செய்யவேண்டிய முக்கியமான ஆவிக்குரிய காரியம். நமது உடலையும் ஆத்துமாவையும்  கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து நமது பாவ மனிதன் அழிவுற நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். "அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக் கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்." ( ரோமர் 6 : 11 )

இப்படி நாம் நமது ஆத்துமாவையும் சரீரத்தையும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து வாழும்போது அவர் நமது உடலையும் நோய்களிலிருந்து காத்துக்கொள்வார். மட்டுமல்ல, இந்த உலகத்தில் ஏற்படும் விபத்துக்கள் சடுதி மரணங்கள் இவைகளிலிருந்தும் நாம் காக்கப்படுகின்றோம். 

உடலளவில் நாம் நோயில்லாமல் பிழைத்து வாழ்கின்றோமென்றால் அது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்தான். இதனையே, நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."( கலாத்தியர் 2 : 20 ) என்கின்றார் பவுல் அடிகள். 

அன்பானவர்களே, நாம் இன்று உலகத்தில் பிழைத்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்றால் அது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால்தான். உலகினில் கிறிஸ்துவை விசுவாசியாதவர்களும் சுகத்தோடு வாழ்வதை நாம் பார்க்கின்றோம். தேவன் கிருபையுள்ளவரும் மனிதரில் வேற்றுமை பாராட்டத்தவருமாக இருப்பதால் அவர் பலரையும் வாழச் செய்கின்றார். ஆனால், ஏற்கெனவே நாம் பார்த்த முதலாம் பிழைத்திருத்தல் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.  

உடலளவில் இந்த உலகத்தில் பிழைத்து வாழ்வதோடு ஆவிக்கேற்றபடி கிறிஸ்து நமக்குள் வாழக்கூடிய பிழைதிருத்தலோடு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. அத்தகைய பிழைத்திருத்தலுக்கு தகுதியுள்ளவர்களாக மாறிட நமது பாவத்துக்கு கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறைந்திட நம்மை ஒப்புக்கொடுப்போம். 

ஆதவன் 🖋️ 546 ⛪ ஜுலை 27, 2022 புதன்கிழமை

"ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்." ( யாக்கோபு 4 : 7 )

தேவனுக்குக் கீழ்படிந்திருத்தல் என்பது அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பதைக் குறிக்கின்றது. அதுபோல பிசாசுக்கு எதிர்த்து நிற்பது என்று  சொல்வது, கத்தியையும் துப்பாக்கியையும்  எடுத்துக்கொண்டு பிசாசு எங்கே என்று தேடி அதனைத் துரத்துவதோ அல்லது பேய் ஓட்டும் ஊழியர்களைக் கொண்டு பேய் ஓட்டுவதோ அல்ல; மாறாக, பிசாசின் செயல்பாடுகளைச் செய்யாமல் அவற்றுக்கு விலகி நிற்பது. 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வசனத்திற்கு நேர் எதிராகச் செயல்படுகின்றார்கள். ஆம், அவர்கள் தங்கள் செயல்பாடுகளால் பிசாசுக்குக் கீழ்படிந்திருக்கிறார்கள், தேவனுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.  எனவே பிசாசு விலகி ஓடிப்போவதற்குப் பதிலாக இவர்களோடு  பாய்போட்டுப் படுத்துக்கொண்டுள்ளான்.

ஆதாம் ஏவாள் செய்த அதே ஆதி பாவமே மக்களிடம் இன்றும் தொடருகின்றது. தேவன் ஆதாம் ஏவாளிடம் நன்மை தீமை அறியும் மரத்தின் கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கூறினார். (ஆதியாகமம் 2:17) ஆனால் பிசாசு:-

"நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்"  (ஆதியாகமம் 3 : 4,5 ) என்று கூறியது. அவர்கள் தங்கள் செயல்பாடுகளால் பிசாசுக்குக் கீழ்படிந்து தேவனுக்கு எதிர்த்து நின்றார்கள்.  

இன்று தங்களது பிரச்சனைகளுக்கு தேவனுக்கு எதிரான தங்கள் செயல்பாடுகளே காரணம் என்பதைப்  பல கிறிஸ்தவர்கள் உணர்வதேயில்லை.  அவர்கள் எதற்கெடுத்தாலும் சாத்தான் மேல் பழிபோட்டு, யோபுவைச் சோதித்ததுபோல சாத்தான் தங்களைச் சோதிப்பதாகக் கூறிக்கொண்டு அதற்காக ஊழியர்களைத்தேடி ஓடுகின்றனர். ஆனால் தாங்கள் யோபுவைபோல உத்தமர்களாய் இருக்கின்றோமா என்று எண்ணிப்பார்ப்பதில்லை.

அன்பானவர்களே, எனவேதான் இன்று ஆவிக்குரிய சபை ஊழியர்களில் பேய் ஓட்டும் ஊழியர்கள் அதிகரித்துவிட்டனர். மக்களை தேவனுக்கு நேராக மனம்திரும்பச் செய்யாமல் பேய் ஓட்டும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  பில்லி சூனிய கட்டு அவிழ்க்கப்படும் என்று போஸ்டர், நோட்டிஸ், ஒலிபெருக்கி அறிவிப்பு கொடுத்து  மந்திரவாதி நிலைமைக்கு பல ஊழியர்கள் தங்களை கொண்டுசென்றுவிட்டனர். 

கர்த்தரது மெய்யான இரட்சிப்புக்கு ஏதுவாக மக்களை நடத்தினாலே போதும் என்ற அடிப்படை அறிவற்ற ஊழியர்கள் கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக இருக்கின்றனர்.

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; கர்த்தரோடு இசைந்திருங்கள்; பிசாசின் செயல்பாடுகளுக்கும்  பிசாசு ஓட்டும் ஊழியர்களுக்கும் விலகி நில்லுங்கள், அப்பொழுது பிசாசு உங்களைவிட்டு ஓடிப்போவான்.

ஆதவன் 🖋️ 547 ⛪ ஜுலை 28, 2022 வியாழக்கிழமை

"தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது."( 2 கொரிந்தியர் 7 : 10 )

கவலை அல்லது துக்கம் மனிதர்களது அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதிக்கும், அது பசியின்மை, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், உறவுகள், தூக்கம் மற்றும் வேலை செயல்திறன் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 

அதிகமாகக் கவலைப்படும் பலர் மிகவும் பதட்டத்தில் இருப்பார்கள். அவர்கள் அதிகப்படியான புகைப்பழக்கம், மது மற்றும் போதைப்பொருள்களைப் பயன்படுத்துதல் போன்ற தீங்கு விளைவிக்கும் வாழ்க்கை முறை பழக்கங்களில் நிவாரணம் தேடி, பல்வேறு நோய்களுக்கு ஆளாகி  இறுதியில் மரணத்துக்கு நேராக கடந்து செல்கின்றனர். மருத்துவர்கள் கூறும் இதே கருத்தையே பவுல் அடிகளும் லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது என்று கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும், "கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?" ( மத்தேயு 6 : 27 ) என்றும் "என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்" ( மத்தேயு 6 : 25 ) என்றும் கூறினார்.  

ஆனால் இதே இயேசு கிறிஸ்து, "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்றும் கூறினார். இதுவே அப்போஸ்தலரான பவுல் கூறும் தேவனுக்கேற்ற துக்கம். இந்தத்  "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது" 

அன்பானவர்களே, எவ்வளவுதான் முயற்சி செய்தும் தேவனுக்கு ஏற்றபடி வாழ முடியவில்லை என்று துக்கப்பட்டிருக்கிறீர்களா? குறிப்பிட்ட பாவ காரியங்களை விடமுடியவில்லை  என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா? பரிசுத்தமான ஒரு வாழ்வு வாழ முடியவில்லை என கவலை உங்களை வாட்டியிருக்கின்றதா? இவைகளே தேவனுக்கேற்ற துக்கம்.

இப்படி தேவனுக்கேற்ற துக்கம் நீங்கள் கொண்டிருந்தால் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை அது உண்டாக்கும். கிறிஸ்துவின் இரட்சிப்பு அனுபவம் கிடைக்கும். 

யூதாசும் துக்கமடைந்தான், ஆனால் அது தேவனுக்கேற்ற துக்கமல்ல. அப்படியானால் அவரிடம் வந்து மன்னிப்பு வேண்டியிருப்பான். ஆனால் பேதுருவும் கிறிஸ்துவை மறுதலித்து, பின் ஆத்துமாவில் வேதனைப்பட்டு அழுதார். கிறிஸ்துவை மீண்டும் கிட்டிச் சேர்ந்தார். 

அன்பானவர்களே, உலக காரியங்களுக்காக அல்ல, தேவனுக்கேற்ற காரியங்களுக்காகத் துக்கம் கொள்வோம். அது நமக்கு  இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்கும். 

ஆதவன் 🖋️ 548 ⛪ ஜுலை 29, 2022 வெள்ளிக்கிழமை

"ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." ( கொலோசெயர் 2 : 6, 7 )

வளர்ச்சிக்குரிய அனுபவத்தை இங்கு பவல் அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். நாம் ஒரு மரத்தையோ செடியையோ நட்டு வளர்ப்போமானால் அதன் அன்றாட வளர்ச்சி நமக்கு மகிழ்வைத் தரும். மாறாக, எவ்வளவு உரம் இட்டு நீர் பாய்ச்சி வந்தாலும்  வளர்ச்சியில்லாத ஒரு மரக்கன்றைப் பார்க்கும்போது நமக்குக் கோபம்தான் வரும். 

இதுபோலவே கிறிஸ்துவும் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை விரும்புகின்றார். நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே நின்றுவிடக்கூடாது. ஒரு மர்மோ செடியோ மண்ணில் வேர்விட்டு வளர்வதுபோல வேர்விட்டு வளரவேண்டும். இதனையே, " அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும்", என்று கூறப்பட்டுள்ளது.

வேர்விட்டு வளரும்போதுதான் மரங்கள் வறட்சியைத் தாங்கவும் கடுமையான காற்றை எதிர்த்து நிற்கும் பலமுள்ளதாகவும் மாறும். மட்டுமல்ல வேர்விட்டு செழித்து வளரும்போதுதான் மரத்தில் நாம் விரும்பும் கனி கிடைக்கும். இதுபோல நம்மில் ஆவிக்குரிய கனிகள் பெருகவேண்டுமானால் நாம் கிறிஸ்துவுக்குள் வேர்விட்டு வளரவேண்டியது அவசியம்.

ஆவிக்குரிய வளர்ச்சியைக் கட்டடம் கட்டுவதற்கும் பவுல் ஒப்பிடுகின்றார். கட்டடமானது கட்டப்படும்போது அதன் வளர்ச்சி நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுபோல நாம் ஆவிக்குரிய கட்டடமாக எழும்பும்போது கிறிஸ்து மகிழ்ச்சியடைகின்றார்.

இந்த ஆவிக்குரிய வளர்ச்சி எப்படி ஒருவருக்குக் கிடைக்கும் என்பதனை இந்த வசனத்தின் இறுதியில் விளக்குகின்றார். அதாவது "அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நடந்துகொண்டு, வேதம் கூறும் போதனைகளைக் கைக்கொண்டு, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக."

கிறிஸ்துவின் போதனைகளின்படி விசுவாசத்துடன் வாழவேண்டும். மேலும், எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் பண்ணவேண்டும்.  நமது வாழ்வில் நடக்கும் நன்மையோ தீமைகளோ எல்லாவற்றுக்கும் ஸ்தோத்திரம் செலுத்தவேண்டும். யோபு இப்படித்தான் செய்தார். அனைத்தையும் இழந்து நிற்கதியாக நிற்கும்போதும், "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம்" என்றார். இறுதியில் அனைத்தையும் இரண்டு மடங்காகப் பெற்றுக்கொண்டார்.   

அன்பானவர்களே, அப்போஸ்தலரான பவுல் கூறியுள்ளபடி, கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாகவும், கட்டப்பட்டவர்களாகவும் வளருவோம். அதற்கு எல்லாவற்றுக்காகவும் கர்த்தரை ஸ்தோத்தரித்து நன்றிசொல்லுவோம். 

ஆதவன் 🖋️ 549 ⛪ ஜுலை 30, 2022 சனிக்கிழமை

"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்." ( கொலோசெயர் 3 : 17 )

எது நடந்தாலும் நன்றியும் ஸ்தோத்திரமும் செய்ய நம்மை அறிவுறுத்தும் வேதம் இன்றைய வசனத்தில் எதைச்செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்து பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிக்க நம்மை அறிவுறுத்துகின்றது. நமது உலக வேலைகளை உண்மையாய்ச் செய்வதே தேவனை மகிமைப்படுத்துவதுதான்.

நாம் உலக வேலைகளில் இருந்தாலும் இன்றைய வசனத்தின்படி நாம் அவற்றை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உண்மையுடன் செய்யவேண்டும்.  இப்படிச் செய்யும்போது நமது வேலைகளை நல்ல முறையில் செய்வதுடன் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க மற்றவர்கள் செய்வதுபோல நாம் செய்யமாட்டோம். 

இன்று ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றேன் என்று கூறிக்கொள்ளும் பலர் உலக காரியங்களில் உண்மையில்லாமல் இருக்கின்றார்கள். ஆவிக்குரிய சபைக்குப் பல ஆண்டுகளாகச் செல்லும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும். சபையில் கன்வென்சன் நடத்தவேண்டுமா, இல்லை சபைக்கு நிதி திரட்டவேண்டுமா, என்ன காரியத்திலும் இவர் பாஸ்டரோடு இணைந்து தீவிரமாகச் செயல்படுவார். இவர் அரசாங்க வேலையும் பார்த்துவந்தார். வீட்டிலும் ஒரு சிறிய தொழிலும் நடத்திவந்தார். அதனை அவரது மனைவி நிர்வகித்துவந்தார்.   

சபையின் காரியங்களுக்காகவும் தனது  தொழில் காரியங்களுக்காகவும் அடிக்கடி பொய்கூறி அலுவலகத்துக்கு டிமிக்கி கொடுத்துவிடுவார். அரசு ஆவணங்களில் அவர் களப்பணி செய்ய குறிப்பிட்ட ஒரு  இடத்துக்குச் சென்றதாக குறிப்பு எழுதிவைத்துவிட்டு தனது சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இதுபோல எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைபார்த்தார். வாரத்துக்கு ஒருமுறை அலுவலகம் சென்று வருகைப்பதிவேட்டில்  மொத்தமாக ஒருவாரத்துக்கான கையொப்பத்தினையும் போட்டுவிட்டு ஊரில் தனது சொந்த காரியங்களைப் பார்ப்பார். மருத்துவமனை ஊழியர் இவர் காட்டும் சலுகைகளுக்காக இவரைக் காட்டிக்கொடுக்காமல் உயர் அதிகாரிகள் திடீரென்று வந்துவிட்டால்,  "அவர் இப்போதுதான் வெளியே சென்றார்" எனக்கூறி சமாளித்துவிடுவார். இவரும் கிறிஸ்தவர்தான்.   

இப்படிப்பட்டவர்கள் பிதாவாகிய தேவனை அவமதிக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். எத்தனையோபேர் வேலையில்லாமல் திண்டாடும்போது கிருபையாய் தேவன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யாதவன் தேவனை அவமதிக்கின்றான். 

அன்பானவர்களே, இத்தகைய  தவறினை உங்கள் பணியிடங்களில் செய்திருந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள்.    வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே சரியாக நேர்மையாகச் செய்யுங்கள். இப்படிச் செய்வதும் தேவனை மகிமைப்படுத்துவதுதான்.

ஆதவன் 🖋️ 550 ⛪ ஜுலை 31, 2022 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார். அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்." ( சங்கீதம் 33 : 13-15 )

உலக மக்கள் அனைவரையும் ஜாதி, மதம், இனம், மொழி  இவற்றுக்கு அப்பாற்பட்டு தேவன் காண்கின்றார். அவர்கள் செய்யும் செயல்களைக்  கண்ணோக்கிக் கொண்டிருக்கின்றார். 

மனிதனது இருதயங்களை உருவாக்கியவர் அவர். தன்னைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக மனிதர்கள் வாழவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். எனவேதான் இந்த வசனம் கூறுகின்றது, "அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்" என்று. 

இதன்படியே அவர் உலகத்தை நியாயம் தீர்ப்பார். கிறிஸ்துவை அறிந்தவர்கள் அறியாதவர்கள் ஒவ்வொருவரது மனசாட்சியும் தேவனது குரலாய் இருந்து அவர்களை எச்சரிக்கின்றது. இந்த எச்சரிப்பை மீறி செயல்படும்போது தேவன் அவற்றுக்குத் தண்டனை தீர்ப்பளிப்பார். கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரது போதனையை இதுவரை அறியாதவர்கள் இவர்களை தேவன் அவரவர் மனச்சாட்சியின்படியே நியாயம் தீர்ப்பார்.

"அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்." ( ரோமர் 2 : 15,16 )

ஆம், நமது இருதயங்களை உருவாக்கி, அது தனது இருதயம்போல பரிசுத்தமானதாக மாறவேண்டும் என விரும்பும் தேவன்,  வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமல்ல, ஆண்டவர் நமக்குச் செவிகொடுக்கவேண்டுமானால் நமது இருதயம் அவருக்கேற்றதாக இருக்கவேண்டியது அவசியம். "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்." ( சங்கீதம் 66 : 18 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, ஒரு இடத்தில்  CCTV கேமரா கண்காணிப்பு இருக்குமானால் நாம் எவ்வளவு கவனமாகச் செயல்படுவோமோ அதுபோன்ற கவனத்துடன் நமது ஆவிக்குரிய வாழ்வை வாழவேண்டியது அவசியம்.   ஆம், தேவன் நமது  செய்கைகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறார்.