- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,210 💚 ஜூன் 01, 2024 💚 சனிக்கிழமை 💚
"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் ஆவிக்குரிய தூக்கத்தையும், மரணத்தையும் குறித்து நமக்கு அறிவுறுத்தி ஆலோசனைச் சொல்கின்றார். தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமோ, நமது பாவ காரியங்களைக் குறித்த உணர்வோ இன்றி வாழ்வதுதான் பவுல் குறிப்பிடும் தூக்கமும் மரணமும்.
இத்தகைய உணர்வுகள் இன்றியே பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நீ அப்படி அவர்களைப்போல இல்லாமல் விழித்து எழுந்திரு என்கின்றார் அவர். இதனையே அவர், "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு" எனும் வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார். மற்றவர்கள் எப்படியும் இருக்கட்டும், நீ முதலில் அத்தகைய மரித்தவர்களை விட்டு எழுந்திரு என்கின்றார்.
நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், காணிக்கைகள் கொடுக்கலாம், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்ளலாம், வேதாகமத்தைத் தினசரி வாசிக்கலாம். ஆனால் இத்தகைய செயல்பாடுகள் இருப்பதால் நாம் ஆவிக்குரிய மக்கள் என்றும் விழித்திருப்பவர்கள் என்றும் கூறிவிட முடியாது. காரணம், இத்தகைய செயல்களை அனைத்து மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கைகளுக்கேற்பச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே இத்தகைய செயல்பாடுகள் ஆவிக்குரிய விழித்திருந்தல் ஆகாது.
ஆம் அன்பானவர்களே, பாவத்தை நாம் மேற்கொள்ளாதவரை நாம் ஆத்தும மரணத்தில்தான் இருக்கின்றோம். "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23) இன்றைய தியான வசனத்தின்படி நாம் மரணத்திலிருந்து எழுந்திருக்க வேண்டுமானால் நமது பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயம் நமக்கு வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்.
அப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது நாம் தூங்குகின்றவர்களையும் மரித்தவர்களையும் விட்டு எழுந்திருக்கின்றவர்கள் ஆவோம். "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆம், நமது ஒளியிழந்த வாழ்க்கை அப்போது பிரகாசமடையும். நாம் மற்றவர்களுக்கு வெளிச்சமாகவும் வழிகாட்டுகின்றவர்களாகவும் மாறுவோம். இதனையே இயேசு கிறிஸ்துத் தனது மலைப் பிரசங்கத்தில் கூறினார்:-
"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 )
"இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." ( மத்தேயு 5 : 16 )
ஆதலால், தூங்குகிற நாம் விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருப்போம். அப்பொழுது கிறிஸ்து நம்மைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறது. தூக்கம், மரணம் இவற்றைவிட்டு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே, நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். அப்போது, நமது ஆவிக்குரிய இருளும் உலக வாழ்விலுள்ள இருளும் அகன்று மனிதர்கள்முன் நாம் பிரகாசிப்பவர்களாக இருப்போம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,211 💚 ஜூன் 02, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்." ( 1 சாமுவேல் 12 : 20 )
நமது தேவனது மன்னிக்கும் மனப்பான்மையையும், அவரது அளவில்லாக் கிருபையையும் சாமுவேல் உணர்ந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் மக்களைப்பார்த்து இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். நீங்கள் தேவனுக்கு எதிராக பல பொல்லாங்கான செயல்களைச் செய்துள்ளீர்கள். பரவாயில்லை, ஆனால், கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் மட்டும் இருந்து கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள் என்கின்றார்.
நாம் தேவனுக்கு எதிராகப் பலப் பாவங்களைச் செய்திருந்தாலும் ஒருபோதும் அவரை மறுதலித்துப் பின்வாங்கிப் போய்விடக்கூடாது எனும் உண்மையினை அவர் இங்கு விளக்குகின்றார். "நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்" என்பது நமக்கும் பொருந்தும். பல பாவங்களை நாம் செய்திருந்தாலும் அவரை நாம் மறுதலியாமல் இருப்போமானால் அவரது கிருபையினால் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெறுவோம்.
இதற்கான காரணத்தையும் சாமுவேல் அடுத்த இரு வசனங்களுக்குப்பின் கூறுகின்றார். அதாவது, "கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்." ( 1 சாமுவேல் 12 : 22 ) கர்த்தர் நம்மை அவருக்கு உகந்த மக்களாக விருப்பப்பட்டுள்ளார். எனவே அவர் நம்மைக் கைவிடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆம், ஜீவனுள்ள தேவனாகிய அவர் நம்மைத் தனது மக்களாகத் தெரிந்துகொண்டுள்ளார்.
நல்ல ஆயனாகிய இயேசு கிறிஸ்துவும் இதனையே கூறினார். எந்த ஆடும் வழிதப்பித் போவது அவருக்குப் பிரியமில்லை. அவர் நாம் ஒவ்வொருவரது மனநிலையினையும் அறிந்துள்ளார். இதனையே அவர், "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14, 15 ) என்று கூறினார்.
"நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்"என்று இயேசு கிறிஸ்து கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது அவர் அவருடைய மக்களாகிய நம்மை அறிந்துள்ளார், நாம் அவரை மறுதலியாமல் இருக்கின்றோம் என்பதனையும் அறிந்திருக்கின்றார். சில வேளைகளில் துன்பங்கள் நெருக்கும்போது சிலர் மனதுக்குள் சோர்வடைந்து, "என்ன ஜெபம் செய்தும் தேவன் என்னையும் எனது ஜெபத்தையும் கேட்கவில்லை....நான் இனி அவரிடம் எதனையும் கேட்கமாட்டேன்" என விரக்தியில் கூறுவதுண்டு.
அன்பானவர்களே இத்தகைய மனித மன நிலையையும் அவர் அறிவார். நமது பலவீனம் இது என்பதும் அவருக்குத் தெரியும். ஆனால் நாம் இத்தகையைச் சூழ்நிலையிலும் அவரை மறுதலியாமல் பிற தெய்வங்களை நாடாமல் இருப்போமானால் அவர் நம்மைச் சேர்த்துக்கொள்வார்.
இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற தெய்வங்களை நாடிச் செல்வார்கள் என்பது சாமுவேலுக்குத் தெரிந்திருந்தது. எனவே அவர் மக்களிடம் "விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே." ( 1 சாமுவேல் 12 : 21 ) என்று கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இதனைக் கூறுகின்றார்.
எனவே அன்பானவர்களே, எந்த நெருக்கடிச் சூழ்நிலை வந்தாலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை நமது முழு இருதயத்தோடும் சேவிப்போம். கர்த்தர் நமைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனமாகிய நம்மைக் கைவிடமாட்டார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,212 💚 ஜூன் 03, 2024 💚 திங்கள்கிழமை 💚
"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 )
நித்திய ஜீவனைக்குறித்து வேதத்தில் பல்வேறு இடங்களில் நாம் வாசித்தாலும் இன்றைய தியான வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறுவது நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். அதாவது நாம் நித்திய ஜீவன் எனும் நிலை வாழ்வை அடையவேண்டுமானால் மெய்யான தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பிய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்து அவர்களோடு உறவுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியமாகும்.
பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் அறிவது என்பது வெறுமனே அவர்களுக்கு ஆராதனை செய்வதோ ஒரு சில கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றுவதோ அல்ல; மாறாக அவரை ஒரு குழந்தைத் தனது தாயையும் தகப்பனையும் அறிந்து அவர்களோடு ஐக்கியமாக இருப்பதுபோல நமது தனிப்பட்ட வாழ்வில் அவரோடு உறவை வளர்த்துக் கொள்வதைக் குறிக்கின்றது. அவரோடு பேசுவதும் அவர் நம்மோடு பேசுவதைக் அன்றாடம் கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பதைக் குறிக்கின்றது.
அதாவது, நாம் மனம் திரும்பிப் பாவ மன்னிப்பைப் பெற்றால் போதாது; அவர்மேல் அளவற்ற விசுவாசம் உள்ளவர்களாக இருந்தால் போதாது; ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதோ, கைகளை ஒருவர்மேல்வைத்து குணமாக்குவதோ, மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு போன்றவரைப்பற்றி அறிந்து மற்றவர்களுக்கு உபதேசிப்பதோ மட்டும் போதாது. இவை அனைத்தும் கிறிஸ்தவ விசுவாசம்தான். ஆனால் நாம் பூரணராகவேண்டுமானால் இவற்றைக் கடந்து, இவற்றுக்கும் மேலாக பிதாவையும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.
எனவேதான் எபிரேய நிருப ஆசிரியர், "ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." ( எபிரெயர் 6 : 1, 2 ) என்று கூறுகின்றார். இவைகள் அஸ்திபார உபதேசங்கள்தான் ஆனால் நாம் இவற்றையே சொல்லிச் சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பது போதாது.
ஒரு குழந்தைக்கு நாம் நல்ல உணவு, உடை, பராமரிப்புக் கொடுக்கலாம், ஆனால் அந்தக் குழந்தை நாம் எவற்றைக்கொடுத்தாலும் அதில் முழுத் திருப்தி அடையாது. மாறாக அது தனது தாயின் முகத்தையும் தாயின் அரவணைப்பையும் தான் அதிகம் விரும்பும்.
ஆம் அன்பானவர்களே, இதுபோலவே மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு போன்றவை நல்ல உபயோகமான காரியங்களாக இருந்தாலும் நாம் தனிப்பட்ட முறையில் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி அறிந்து அவரோடு ஐக்கியமாக வாழ்வதே நித்திய ஜீவன். இந்தத் தனிப்பட்ட உறவினை அடைந்துகொள்ள முயல்வோம்.
இதற்கு நாம் உலக ஆசீர்வாதங்களையே அவரிடம் கேட்பதை விட்டு ஆவிக்குரிய ஆர்வமுள்ளவர்களாக, ஆவிக்குரிய மேலான காரியங்களை ஜெபத்தில் அவரோடு பேசி, கேட்டு பெற்றுக்கொள்பவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், இம்மைக்குரியவைகளையல்ல; மேலானவைகளையே தேடுபவர்களாக வாழ்வோம். மெய்த்தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்து நித்தியஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆவோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,213 💚 ஜூன் 04, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
"என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்". ( எரேமியா 4:22)
ஆதிகாலமுதல் தேவன் பல்வேறு விதங்களில் மனிதர்களிடம் இடைபட்டுக்கொண்டிருக்கின்றார். ஏதேனில் ஆதாம் ஏவாளோடு உலாவிய தேவன், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களோடும் இடைப்பட்டார். பின்னர் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தி அவரோடு பேசி இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார். யோசுவா, சாமுவேல், பல்வேறு நியாதிபதிகள், அரசர்கள் மூலம் தனது மக்களை நடத்தினார். ஆனாலும் மக்கள் அவரை அறியவோ, அறிந்துகொள்ளவேண்டுமென்று விருப்பப்படவோ இல்லை.
தேவன் இஸ்ரவேல் மக்களை பல்வேறு விதமாக நேசித்து நடத்தியும் அவர்கள் மீண்டும் மீண்டும் வழிவிலகி நடந்து தேவனைத் துக்கப்படுத்தினர். எனவே அவர் கூறுகின்றார், "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை"
இன்றைய வசனம் பழைய ஏற்பாட்டுக்கால மக்களைக்குறித்து கூறப்பட்டிருந்தாலும் இதே நிலைமைதான் இன்றும் தொடர்கின்றது. பொதுவாக பலரும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும் தேவனை அறியவேண்டும் எனும் உணர்வோடு செல்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தேவனிடமிருந்து உலக நன்மைகளைப் பெறுவதற்கே முன்னுரிமைகொடுத்து ஆலயங்களுக்குச் செல்கின்றனர்.
மக்கள் இப்படித் தேவனை அறியாதிருப்பதால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல், "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 ) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, மனிதர்களது கேடான சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் காரணம் தேவனை அறியாமல் இருப்பதுதான்.
இப்படித் தேவனை அறியாதிருப்பதால் பலரும் பல்வேறு பக்திச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் அவர்களில் உள்ளான மாறுதல்களைக் காண முடிவதில்லை. ஆம், இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, "பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள்".
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தனிப்பட்ட முறையில் அறிந்தால் மட்டுமே நம்மில் சுபாவமாற்றம் ஏற்பட முடியும். எனவே, தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமும் அதற்கான ஆன்மீகத் தேடுதலும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். அப்படித் தேடும்போது மட்டுமே நாம் அவரைக் கண்டுபிடிக்கமுடியும். அப்படிக் கண்டுபிடிக்கும்போது மட்டுமே நமது குணங்களில் மாற்றம் ஏற்படும்.
நம்மை யாராவது அறிவுகெட்டவனே / அறிவுகெட்டவளே என்று கூறிவிட்டால் நமது மனம் எவ்வளவு வேதனைப்படும்? ஆனால் அவரை நாம் அறிய முயலாவிட்டால் தேவனும் நம்மைப்பார்த்து அப்படிதான் கூறுவார். "என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை."
நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து, "தேவனே உம்மை எனக்கு வெளிப்படுத்தித்தாரும்; நான் உமது மகனாக, மகளாக வாழ விரும்புகின்றேன்" என்று உண்மையான மனதுடன் ஜெபிப்போம். "ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." ( மத்தேயு 7 : 8 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,214 💚 ஜூன் 05, 2024 💚 புதன்கிழமை 💚
"கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" (கொலோசெயர் 3:11)
இந்த உலகத்திலுள்ள அனைவரும் ஒரே தேவனுடைய பிள்ளைகளே. யாராக இருந்தாலும், எந்த மதம், ஜாதி, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் எல்லோரும் ஒரே பிதாவின் பிள்ளைகளே. அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார்.
இன்று நாம் கிறிஸ்துவை அறிந்து ஆவிக்குரிய ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கலாம். ஆனால் அப்படி நாம் வாழ்வதால் நாம் மட்டுமே கடவுளின் மக்கள் என்று எண்ணிவிடக்கூடாது. எல்லோரும் அவரது பிள்ளைகளே. இன்று இந்த அறிவும் தெளிவும் இல்லாததால்தான் மற்றவர்களை அற்பமாக பார்க்கும் நிலைமை உள்ளது. ஆனால் நாம் அப்படி இருக்கலாகாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எனவேதான் தொடர்ந்து அவர் கூறுகின்றார்:-
"ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (கொலோசெயர் 3:12, 13)
ஒரு தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். நான்குபேருமே அவருக்கு ஒன்றுதான். ஆனால் நான்கு பிள்ளைகளும் வெவ்வேறான குணங்கள் உள்ளவர்களாகவும், சிலர் தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரே தகப்பனுக்குப் பிறந்த சகோதரர்கள். எனவேதான் பவுல் கூறுகின்றார், "ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."
இந்த எண்ணமும் பவுல் குறிப்பிடும் சுபாவங்களும் இல்லாததால்தான் மத வெறுப்புகளும் சண்டைகளும் ஏற்படுகின்றன. கிறிஸ்தவர்களுக்குள், கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமை இல்லாததற்கும் இதுவே காரணம்.
சிலர் சபை ஒருங்கிணைப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்து பல்வேறு சபையினைச் சார்ந்த ஊழியர்களை அழைப்பதுண்டு. இது நல்ல ஒரு முயற்சிதான். ஆனால் அந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு யாரை நியமிக்கலாம் என்று முடிவெடுக்கவேண்டிய சூழ்நிலை வரும்போது அனைவருமே தாங்கள் சார்ந்துள்ள சபை ஊழியர்களே தலைமை இடத்துக்கு வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே இத்தகைய பல கூட்டமைப்பு முயற்சிகள் ஒரு சில மாதங்களிலேயே தோல்வியில் முடிவடைந்துவிடுகின்றன.
சபைகளில் மட்டுமல்ல, ஊர்களில் பிரச்னை ஏற்படுவதற்கும் இத்தகைய பெருந்தன்மைக் குணமில்லாமையே காரணம். ஆம் அன்பானவர்களே, பவுல் அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோல "கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்" எனும் எண்ணம் வரும்போதுதான் அனைவரையும் மதிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இதனையே கிறிஸ்து விரும்புகின்றார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,215 💚 ஜூன் 06, 2024 💚 வியாழக்கிழமை 💚
"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63 : 6 )
பொதுவாக இரவு நடுச்சாமத்தில் விழிக்கும்போது மனிதர்களது நினைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று நாம் எண்ணிப்பார்ப்போம். நாம் கடன் தொல்லையால் அவதிப்படும்போது நமக்குக் கடன்கொடுத்தவர்களது முகங்களும் அவர்கள் நமக்கு எதிராகப் பேசிய பேச்சுக்களும் நமக்கு நினைவுக்குவரும்.
கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும்போது மருத்துவர்கள் கூறிய வார்த்தைகளும், நமது குடும்பத்தைப்பற்றிய எண்ணமும் நம்மை வருத்தமுறச்செய்யும். காதல் வசப்பட்டவர்களுக்குத் தங்களது காதலர்களின் முகமும் அவர்களது அன்பான பேச்சுகளும் நினைவுக்கு வரும். ஆனால் இன்றைய தியான வசனத்தில் தாவீது , இராச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத் தியானிப்பதாகக் கூறுகின்றார்.
அன்பானவர்களே, தாவீது இந்த வசனத்தை பஞ்சு மெத்தையில் அமர்ந்துகொண்டு எழுதவில்லை. மாறாக மிகுந்த உபத்திரவத்தின் மத்தியில், சுகமாகப் படுப்பதற்கு இடமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்துகொண்டு எழுதுகின்றார். இதனையே வறண்டு தண்ணீரற்ற பாலை நிலத்தில் நடுச்சாமத்தில் அவர் தேவனை நினைத்துத் தியானிப்பதாக இன்றைய தியான சங்கீதத்தின் முதல் வசனமாக அவர் கூறுகின்றார்:-
"தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது."( சங்கீதம் 63 : 1 )
நமது வாழ்க்கையினை நாம் நினைத்துப் பார்ப்போம். நிச்சயமாக இதை வாசிக்கும் எவரது வாழ்க்கையும் இப்படிப்பட்ட வீடற்று பாலை நிலத்தில் வாழக்கூடிய வாழ்க்கையாக இருக்காது என்று எண்ணுகின்றேன். ஆனால் ஒருவேளை நமக்குக் கடன்களும் நோய்களும் இதரப் பிரச்சனைகளும் இருக்கலாம். ஆனால் நாம் பிரச்னைகளையே நோக்கிடாமல் தாவீதைப்போல சூழ்நிலைகளை மறந்து கர்த்தரையே நோக்கிப் பார்க்க இன்றைய தியான வசனம் நமக்கு வழி காட்டுகின்றது.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் இதுபோலவே இருந்தனர். அவர்கள் சிறைச்சாலைச் சூழ்நிலையையும் தாங்கள் கைதியாக அடைபட்டிருப்பதையும் எண்ணாமல் நடுச்சாமத்தில் தேவனைப் புகழ்ந்து பாடி ஜெபித்தார்கள்.
"நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே, நமது படுக்கையில் விழிப்பு ஏற்படும்போதெல்லாம் நமது பிரச்சனைகளை எண்ணிக் கலங்காமல் தேவனையே நினைத்துத் தியானிப்போம். பவுல் அப்போஸ்தலரும் சீலாவும் அப்படி ஜெபித்தபோது "சிறைச்சாலைக் கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." என்று கூறப்பட்டுள்ளதுபோல நமது சிறையிருப்பின் வாழ்க்கையும் கட்டுக்களும் நிச்சயம் கழன்றுபோகும்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,216 💚 ஜூன் 07, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 5 )
ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்குமுள்ள தனிப்பட்ட உறவின் அடையாளம். நாம் அவரோடு பேசுவதும் அவர் பேசுவதைக் கேட்பதும்தான் ஜெபம். நாம் தேவனோடு பேசும்போது உலக காரியங்களை மறந்து அவரோடு பேசவேண்டும்.
நாம் ஜெபிப்பதை நம்மைப் பலர் பார்த்துக்கொண்டிருக்க, புகைப்படக் கேமராவும் வீடியோவும் பதிவு செய்துக்கொண்டிருக்குமானால் நாம் எப்படி அந்தரங்கமாக ஜெபிக்கமுடியும்? அந்த ஜெபம் எப்படி தேவனுக்கு உகந்ததாக இருக்கமுடியும்? அத்தகைய ஜெபம் மாயக்காரனின் ஜெபம் என்று வேதம் கூறுகின்றது. "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு குறிப்பிடுகின்றார்.
அதாவது, அவர்கள் ஜெபிப்பதை உலக மக்கள் பார்த்தார்களே அதுதான் அவர்கள் அத்தகைய ஜெபத்தால் அடைந்த பலன். அதனை அவர்கள் அடைந்து தீர்த்தாகிவிட்டது. எனவே இதற்குமேல் அந்த ஜெபத்தால் பலனில்லை என்று பொருள்.
இன்று பல கிறிஸ்தவ ஊழியர்களும் இப்படித் தங்கள் தனிப்பட்ட ஜெபத்தை வீடியோ காட்சியாக பதிவேற்றி முகநூலில் வெளியிடும் அவலம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. "மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்" என்றுதான் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது, ஜெபிப்பதை முகநூலில் வெளியிடுவதைக் குறித்துக் குறிப்பிடவில்லை என்று இவர்கள் எண்ணிக்கொள்கின்றார்கள்.
அன்பானவர்களே, அரசியல் தலைவர்கள் மக்களைக் கவரவும் ஓட்டுகள் வாங்கவும் இப்படி நடிக்கலாம். ஆனால் தேவனுக்குமுன் மனிதர்களது நடிப்பு எடுபடாது. பெருமையில்லாமல், தன்னைத் தாழ்த்தி, தனது பாவங்களை அறிக்கையிட்டு அந்தரங்கத்தில் ஜெபிப்பதையே தேவன் விரும்புகின்றார். "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 6 ) என்று வேதம் கூறவில்லையா?
ஆலயங்களில் நாம் ஜெபிப்பதற்கும் தனிப்பட்ட ஜெபத்துக்கும் வித்தியாசம் உண்டு. தனிப்பட்ட ஜெபம் வல்லமையுள்ளது. தனி ஜெபத்தில்தான் நாம் தேவனோடு நெருக்கமாக பேசவும் அவர் பேசுவதைக் கேட்கவும் முடியும். பல கிறிஸ்தவர்கள் ஆலய ஆராதனையோடு ஜெபத்தை முடித்துக்கொள்கின்றனர். இப்படி இருக்கும் மக்கள் தேவனது பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாது.
எனவே அன்பானவர்களே, நமது தனி ஜெப வேளையை நாம் அதிகரிக்கவேண்டும். அத்துடன் நமது ஜெபம் நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ளத் தொடர்பு என்பதனையும் நாம் மறந்துவிடக் கூடாது. நமது அறைவீட்டுக்குள் தனியே அந்தரங்கத்திலிருக்கிற நமது பிதாவை நோக்கி ஜெபம்பண்ணுவோம்; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற நமது பிதா நமக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,217 💚 ஜூன் 08, 2024 💚 சனிக்கிழமை 💚
"ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதி யுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்." ( கொலோசெயர் 1 : 12, 13 )
பிதாவாகிய தேவனைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் முக்கியமான ஒரு சத்தியத்தை இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது நாம் குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்குள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவாகிய தேவனின் சித்தம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. அவரே நம்மை ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகின்றார். எனவே பிதாவாகிய தேவனை நாம் ஸ்தோத்தரிக்கவேண்டும்.
அவரே நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார். இதனையே இயேசு கிறிஸ்துவும், "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்." ( யோவான் 6 : 44 ) என்று குறிப்பிட்டார். ஆம், பிதாவின் சித்தத்தால் நாம் குமாரனை அறிகின்றோம்; அவரோடு சேருகின்றோம்.
பிதா என்னை இழுத்துக்கொள்ளவில்லை, எனவே நான் கிறிஸ்துவை அறியவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி நாம் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொள்ளாமல் விலகி நின்றுவிடக்கூடாது. காரணம் இயேசு கிறிஸ்து தொடர்ந்து கூறினார், "எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." ( யோவான் 6 : 45 )
அதாவது, நாம் நமது ஜெபங்களில் கேட்கவேண்டியது உலக ஆசீர்வாதங்களையல்ல, மாறாக சத்தியத்தை அறியும் ஆவலில் பிதாவிடம் மன்றாடவேண்டும். இப்படி சத்தியத்தை அறிந்திடும் ஆவல் உள்ளவர்களாய் வாழ்பவர்களுக்கு பிதாவாகிய தேவன் தனது குமாரனை வெளிப்படுத்துவார். ஒருவருக்கு ஆர்வமிருக்கும் ஒன்றை நாம் அவருக்குக் கொடுக்கும்போதுதான் அவருக்கு அதன் மதிப்பு அதிகமாகத் தெரியும். "ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." என்றார் இயேசு கிறிஸ்து.
இப்படி பிதாவாகிய தேவன் நம்மை "ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்குத் தகுதியுள்ளவர்களாக்கி, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார்.
அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை. ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்து கொள்வது மட்டும் போதாது. தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவை நாம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இப்படி நாம் பிதாவையும் குமாரனாகிய கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழ்வதே மெய்யான கிறிஸ்தவ வாழ்வு. அப்படி அறிவதே நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு.
"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? ஆம் அன்பானவர்களே, நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் வெறுமனே ஆராதிப்பவர்களாக அல்ல. தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக இருக்கவேண்டும். அத்தகைய தேவனை அறியும் அறிவை வேண்டுவோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,218 💚 ஜூன் 09, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 )
பிதாவாகிய தேவனின் வல்லமையையும் மகிமையையும் நம்மில் பலரும் உணர்ந்திடாமலேயே இருக்கின்றோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உயிர்தெழச் செய்தவர் பிதாவாகிய தேவனே என்று இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது.
மட்டுமல்ல, அந்த பிதாவாகிய தேவனுடைய ஆவி நம்மில் இருக்கும்படியான வாழ்வு வாழ்வோமானால் கிறிஸ்துவை உயிர்தெழச் செய்ததுபோல நம்மையும் உயிர்ப்பிப்பார். இதனையே நாம் "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று வாசிக்கின்றோம்.
மேலும், கிறிஸ்துவுக்கு மேலான நாமத்தையும் அதிகாரத்தையும் கொடுத்தவர் பிதாவாகிய தேவனே. ஆம், தன்னையே தாழ்த்தி பிதாவுக்கு எல்லாவிதத்திலும் கீழ்ப்படிந்ததால் பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்கு இந்த மேலான நாமத்தையும் அதிகாரத்தையும் கொடுத்துள்ளார். "ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 9-11 )
எனவேதான் நாம் பிதாவையும் குமாரனையும் அறியவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இப்படி அறியும்போது நம்மையும் தேவன் உயர்வான இடத்தில கொண்டு சேர்ப்பார். இதனை நாம் அடைந்திட நமக்காக ஏற்கெனவே இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடம் ஜெபித்துள்ளார். யோவான் 17 ஆம் அதிகாரத்திலுள்ள இயேசு கிறிஸ்துவின் ஜெபம் பிதாவுக்கும் அவருக்குமான நெருக்கத்தை விளக்குவதாக மட்டுமல்ல, நாமும் அப்படி அவர்களோடு நெருக்கமாக வாழவேண்டுமென்று கூறுவதாக உள்ளது.
"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 23, 24 ) என்று இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்துள்ளார்.
ஆம் அன்பானவர்களே, பிதாவும் கிறிஸ்துவும் இணைந்திருப்பதுபோல அவர்களோடு நாமும் ஒன்றாக இணைந்திருக்க இயேசு விரும்புகின்றார். எனவேதான் கிறிஸ்து பிதாவை அறிந்து அவரோடு உறவுடன் வாழ்ந்ததுபோல நாமும் வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,219 💚 ஜூன் 10, 2024 💚 திங்கள்கிழமை 💚
"அப்பொழுது யாக்கோபு: "உன் சேஷ்டபுத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு" என்றான். அதற்கு ஏசா: "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்." ( ஆதியாகமம் 25 : 31, 32 )
இஸ்ரவேலரின் வழக்கத்தின்படி சேஷ்டபுத்திரபாகம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் முதல் மகனும் தங்கள் தந்தையிடமிருந்து ஒரு சிறப்பு வாரிசு உரிமையைப் பெறுவதைக் குறிக்கும். முதற்பேறான மகன் குடும்பத்தின் ஆசாரியனாக இருப்பான் (கடவுளால் அந்தப் பணி லேவியர்களுக்கு மாற்றப்படும் வரை), அந்த மகன் தந்தையின் சுதந்தரத்திலும் தந்தையின் அதிகாரத்திலும் இருமடங்கைப் பங்காகப் பெறுவான்.
இன்றைய தியான வசனம் இரண்டு சகோதரர்களின் உரையாடல். மட்டுமல்ல, இந்த உரையாடல் மூலம் இருவரின் குணங்களை நாம் காண முடிகின்றது. யாக்கோபு எப்படியாவது தனது அண்ணனை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை அடைந்துவிட எண்ணுகின்றான். அவன் அண்ணன் ஏசாவோ வயிற்றுக்கே முன்னுரிமை கொடுத்து சேஷ்டபுத்திரபாகத்தை விட்டுக்கொடுக்கின்றான். ஒருவேளை உணவை உண்ணாதிருப்பதால் யாரும் உடனே செத்துவிட மாட்டார்கள். ஆனால் ஏசா கூறுகின்றான், "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்."
ஏசாவின் பலவீனத்தை யாக்கோபு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். "அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்." ( ஆதியாகமம் 25 : 34 ) என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் அன்பானவர்களே, "வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்." ( நீதிமொழிகள் 20 : 17 )
நமது ஊர்களில் சில குடிகாரர்கள் இருப்பார்கள். அவர்களுக்குக் குடிப்பதற்கு சிறு தொகையினைக் கொடுத்தால்கூட விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்துவிடுவார்கள். சில கிராமங்களிலுள்ள பண்ணையார்கள் இப்படி ஊரிலுள்ள குடிகாரர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்வதுண்டு.
இன்றைய தியான வசனமும் செய்தியும் நமக்கு கூறுவது இதுவே; அதாவது நாம் இந்த இரண்டு சகோதரர்களைப்போலவும் இருக்கக் கூடாது. அடுத்தவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் லாபம் சம்பாதிப்பவர்களாகவும், அற்ப உடல் தேவைக்காக மேலான ஆசீர்வாதங்களை உதறித் தள்ளுபவர்களாகவும் நாம் இருக்கக்கூடாது.
இன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலானவர்கள் யாக்கோபைப் போலவும் ஏசாவைப்போலவே இருக்கின்றனர். யாரையாவது ஏமாற்றி பொருள் சேர்த்து விடவேண்டுமென்று ஒரு கூட்டமும், தேவ ஆசீர்வாதத்தை இழந்தாலும் உலக ஆசீர்வாதத்தால் தாங்கள் நிரம்பிடவேண்டுமென்று எண்ணும் ஒருகூட்டமும் கிறிஸ்தவர்களிடையே உண்டு.
அன்பானவர்களே, நாம் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஏற்றவேளையில் அவர் நம்மை உயர்த்திட அவருக்கு அடங்கி வாழ்வோம். அப்போதுதான் மெய்யான ஆசீர்வாதம் நமக்கு உண்டு. "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,220 💚 ஜூன் 11, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
"இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், இனி அலைந்து திரிவதில்லை." ( எரேமியா 4 : 1 )
நமது தேவன் யாரையும் வலுக்கட்டாயம் பண்ணுபவரல்ல. எந்தநிலையிலும் முடிவெடுக்கும் உரிமையினை மனிதர்களிடமே கொடுத்துவிடுகின்றார். ஆதியில் ஏதேனிலும் தேவன், "நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் கனிகளையும் உண்ணலாம் ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணவேண்டாம் என்று கூறினார்". உண்ணவேண்டாம் என்று தேவன் கூறியது ஒரு கட்டளையே தவிர அவர் மனிதனைக் கட்டாயம்பண்ணவில்லை. அந்த மரத்தின் கனியை உண்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமையினை மனிதனிடமே விட்டுவிட்டார்.
அதுபோலவே, தேவன் பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள் மூலம் மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகளை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மக்கள் தேவனது வார்த்தைகளுக்கு முற்றிலும் செவிகொடுக்கவில்லை. அவர்களைப் பார்த்துதான் தேவன் கூறுகின்றார், "இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று. மட்டுமல்ல, அப்படித் தேவனிடம் திரும்பினால் நீ இனி அலைந்து திரியமாட்டாய்.
மனம் திரும்பு என்று கட்டளையாகக் கூறாமல், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று கூறுகின்றார். சில வேளைகளில் நாம் நமது நண்பர்களை குறிப்பிட்ட நாளில் நமது வீட்டிற்கு அழைக்கும்போது அவர்கள், "முடிந்தால் வருகின்றேன்" என்பார்கள். நாம் அவர்களுக்கு, "முடிந்தால் அல்ல, உனக்கு மனமிருந்தால் வா....மனமிருந்தால் முடியும்" என்று கூறுவோம்.
அதுபோலவே தேவன் மனம் திரும்புவது குறித்துக் கூறுகின்றார். அவர் பல்வேறு விதங்களில் மனம்திரும்புதலுக்கேற்ற செய்திகளை பலர் மூலம் கொடுத்தும் மனம் திரும்பாத மக்களைப்பார்த்துக் கூறுகின்றார், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று" அப்படி நீ மனம்திரும்பி உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை என்கின்றார்.
பலருடைய வாழ்க்கை அலைந்து திரிகின்ற வாழ்கையாக இருக்கின்றது. பிழைப்புக்காக, வருமானத்துக்காக, ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக என அலைந்து திரிகின்றார்கள். பலர் பல்வேறு திருத்தலங்களை நாடி அலைகின்றனர். ஆம் அன்பானவர்களே, இந்த அலைச்சல் நமக்குத் தேவை இல்லாத ஒன்று. நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பினால் போதும், அப்போது நாம் அலைந்து திரியமாட்டோம். இதனையே, "நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நம்மிடம்தான் உள்ளது. நமது மனதை தேவனுக்கு நேராகத் திருப்பும்போது நாம் பல்வேறு ஆலயங்களைத் தேடியும் ஊழியர்களைத் தேடியும் அலைந்து திரியாமல் தேவன் நமக்குள்ளே இருப்பதால் மனச் சமாதானத்தோடு வாழ்வோம். "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று மனதுருக்கத்தோடு தேவன் நம்மிடம் கூறுகின்றார். அவரது சத்தத்துக்குச் செவிகொடுத்து அலைச்சலில்லாமல் வாழ்வோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,221 💚 ஜூன் 12, 2024 💚 புதன்கிழமை 💚
"நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." ( சங்கீதம் 119 : 67 )
உபத்திரவங்கள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் நடப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றன. காரணம் எந்த உபத்திரவமும் நமக்கு ஏற்படவில்லையானால் நாம் தேவனைவிட்டு விலகிச் சென்றுவிடுவோம். உபத்திரவம் என்பது தேவன் அளிக்கும் தண்டனையாகவும் அவரை நோக்கி நம்மை இழுக்கும் கயிறாகவும் இருக்கின்றது என்றும் நாம் கூறலாம். வேதாகமத்தில் "சிட்சை" என்று இது கூறப்பட்டுள்ளது.
நாம் நமது குழந்தைகள் தவறு செய்யும்போது சிறு தண்டனைகள் கொடுப்பதுபோல தேவன் நமக்குச் சில தண்டனைகளைக் கொடுத்து நல்வழிப் படுத்துகின்றார். இதனையே இன்றைய தியான வசனம், "நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." என்று கூறுகின்றது. அதாவது வாழ்வில் உபத்திரவம் வருவதற்குமுன் வழிதப்பி நடக்கின்றோம். உபத்திரவம் வந்தபின் புத்தி தெளிந்து அவரது வார்த்தைகளைக் காத்து நடக்கின்றோம்.
எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.
நாம் வழி தப்பி நடக்கும்போது நம்மை நல்வழிப் படுத்துவதற்காக சிலவேளைகளில் தேவன் பிறர் மூலம் நமக்கு உபத்திரவங்களைக் கொடுக்கின்றார். ஆனால் நாம் தேவனுக்கு நேராக நமது வழிகளைத் திருப்பும்போது நம்மை உபத்திரவப்படுத்துகின்றவர்களுக்கு தேவன் உபத்திரவத்தைக் கொடுத்து நமக்கு இளைப்பாறுதலைத் தருவார். "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்று கூறப்பட்டுள்ளது.
அன்பானவர்களே, இப்படி வேதம் கூறுவதால் நாம் நமக்கு உபத்திரவம் வரும்வரை தேவனைத் தேடாமல் வாழவேண்டுமென்று பொருளல்ல; மாறாக, நமக்கு பிரச்சனைகளும் துன்பங்களும் வாழ்வில் ஏற்படும்போது நாம் நம்மையே நிதானித்து நமது வழிகளைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று பொருள்.
"உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. ( 1 பேதுரு 1 : 15, 16 ) எனவே, நம்மை பரிசுத்தராக்குவதற்கே துன்பங்கள்நமக்கு வருகின்றன என்பதை உணர்ந்து தேவனது வார்த்தையைக் காத்து நடக்க முயலுவோம்.
மேலும், இந்த உபத்திரவம் நமக்கு தேவன்மேல் நம்பிக்கையையும் வளரச்செய்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். ( ரோமர் 5 : 3, 4 ) என்று கூறுகின்றார்.
ஆம், உபத்திரவப்படுவதற்கு முன் நாம் வழிதப்பி நடக்கின்றோம் அதன் பின்போ அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கின்றோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,222 💚 ஜூன் 13, 2024 💚 வியாழக்கிழமை 💚
"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )
நமது தேவன் தனது மக்களோடு பல்வேறு சமயங்களில் உடன்படிக்கை செய்துகொள்பவராக இருக்கின்றார். இது ஏனென்றால் தனது மக்கள் நம்பிக்கையோடு தங்களது வாழ்வைத் தொடரவேண்டும் என்பதற்காகவே. இன்றைய வசனம் எகிப்திலிருந்து புறப்பட்டபோது இஸ்ரவேல் மக்களோடு தேவன் செய்த உடன்படிக்கையினைக் குறித்துக் கூறுகின்றது. ஆனால் இஸ்ரவேல் மக்கள் அந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை.
அதாவது எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களோடு தேவன் உடன்படிக்கைச் செய்திருந்தும் அவர்கள் அந்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை. வேற்று தெய்வங்களை வழிபடவும் தேவனது கட்டளைகளை புறக்கணிக்கவும் செய்தனர். எனவே தேவன் அவர்களைப் புறக்கணித்து பல்வேறு சமயங்களில் வேற்று அரசர்களுக்கு அடிமைகள் ஆக்கினார்.
இதுபோலவே, நாம் எகிப்தாகிய நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையாகும்போது தேவன் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கை போன்றதல்ல என்று நாம் எபிரெய நிருபத்தில் வாசிக்கின்றோம்.
"அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எபிரெயர் 8 : 9 )
அன்பானவர்களே, இன்று பாவ வாழ்க்கையான எகித்தைவிட்டு வெளிவரும் நம்மோடு தேவன் பண்ணுகின்ற உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கையைவிட மேலானது. இதனையே, "அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது.
மோசேயோடு உடன்படிக்கைச் செய்து கட்டளைகளை கற்பலகைகளில் எழுதியதுபோல அல்லாமல் இன்று நமது உள்ளமாகிய பலகையில் தேவன் தனது உடன்படிக்கையினை எழுதியுள்ளார். பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளிவரும்போது ஆவியானவர் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். எனவே, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." என்று ஆகாய் தீர்க்கத்தரிசி மூலம் தீர்க்கத்தரிசனமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆம் அன்பானவர்களே, புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ ஆவியானவர் நமக்குத் துணையாக இருப்பார். எனவே நாம் பயப்படாமல் நமது ஆவிக்குரிய பயணத்தைக் தொடர்வோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,223 💚 ஜூன் 14, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." ( யோவான் 5 : 39 )
பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி 300 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் இருப்பதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தத் தீர்க்கதரிசனங்கள் போதுமான அளவு துல்லியமாக கிறிஸ்துவே மேசியா என்பதனைக் குறிப்பிடுவன. இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார்.
பரிசேயரும் சதுசேயரும் இயேசு கிறிஸ்துதான் வரவேண்டிய மேசியா என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கும் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே கிறிஸ்துவைக் குறித்துத் துல்லியமான தீர்க்கத்தரிசனங்கள் கூறப்பட்டுள்ளன என்பது ஆச்சரியமான உண்மையல்லவா?
கிறிஸ்துவைக் குறித்தத் தீர்க்கத்தரிசனங்கள் உண்மையாகவே நிறைவேறியுள்ளது ஆச்சரியமான உண்மையென்றால், அந்தக் கிறிஸ்துக் கூறியவையும் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் நம்பலாம் அல்லவா? ஆம், அவற்றை சந்தேகமில்லாமல் விசுவாசிக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. இயேசு கிறிஸ்து அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது நித்தியஜீவன். "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." ( 1 யோவான் 2 : 25 )
இயேசு கிறிஸ்து இதனைத் தெளிவாகக் கூறினார், "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது." ( யோவான் 6 : 40 ) என்றார். எனவே, நித்தியஜீவன் என்பது மெய்யானது.
ஆம் அன்பானவர்களே, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளபடி வேத வாக்கியங்களுக்குள் நித்திய ஜீவன் உள்ளது. ஏனெனில் அவை வார்த்தையான தேவனாகவே இருக்கின்றன. அவரது வார்த்தைகளால் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லாத வாழ்க்கை உண்டு என்பதால் நாம் வேத வசனங்களை ஏற்றுக்கொண்டு தியானித்து வாழவேண்டும்.
நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது கடமைக்காக வாசிக்காமல், குறிப்பிட்ட ஆசீர்வாத வசனங்களைத் தேடி வாசிக்காமல் அந்த வேத வசனங்களுக்குள் இருக்கும் சத்தியத்தை உணர்ந்து வசித்துப் பழகவேண்டும். வேத வசனங்கள் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கூறுபவை மட்டுமல்ல, அவை நாம் நித்தியஜீவனை அடைந்திட உதவுபவை.
இன்று பல கிறித்தவ ஊழியர்கள் இயேசுவின் காலத்துப் பரிசேயரையும் சதுசேயரையும் போலவே இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை நித்திய ஜீவனின் ஊற்றாகப் பார்க்காமல் அதிசயங்கள் செய்யும் அற்புதராக மட்டுமே பார்த்துப் பழகி அப்படியே மக்களுக்குப் போதிப்பவர்களாக இருக்கின்றனர். ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமம் வாசிக்கும் முறைமையை ஆராய்ந்து பார்ப்போம். வேத வசனங்கள் கூறும் மெய்யான சத்தியத்தை உணர்ந்துகொள்ள வாசிப்பவர்களாக மாறும்போது மட்டுமே நித்தியஜீவனை நாம் அடைந்திட முடியும்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,224 💚 ஜூன் 15, 2024 💚 சனிக்கிழமை 💚
"நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." ( யோவான் 14 : 16 )
பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய ஒரு உண்மையினை இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது பரிசுத்த ஆவியானவர் பிதாவின் ஆவியானவர். ஒருவருக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் வேண்டுமானால் முதலில் அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவராக இருக்கவேண்டும். அப்படி விசுவாசமுள்ளவராக இருக்கும்போதுதான் அவரது பரிந்துரையின்பேரில் பிதாவானவர் பரிசுத்த ஆவியானவரை ஒருவருக்குக் கொடுக்கின்றார்.
பாரம்பரிய சபைகளில் திடப்படுத்துதல் ஆராதனை என்று ஆராதனை செய்து சிலச் சடங்குகள் செய்து ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொண்டதாகக் கூறிக்கொள்கின்றனர். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது வெறும் சடங்குமுறைகள் சம்பந்தப்பட்டதல்ல. அது மேலான ஒரு ஆவிக்குரிய அனுபவம். பரிசுத்த ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொள்ளும்போது அவரது ஆவிக்குரிய வாழ்வில் பெரிய மாறுதல் உண்டாகும். காரணம், அவர் பெற்றுக்கொண்டது பிதாவின் ஆவியானவர். அந்த ஆவியானவர் ஒருவரில் வரும்போதுதான் அவர் கிறிஸ்துவைக் குறித்தச் சாட்சியை உறுதியாகக் கூறமுடியும்.
இதனையே இயேசு கிறிஸ்து, "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." ( யோவான் 15 : 26 ) என்று கூறினார்.
ஆவியானவர் ஒருவரில் வரும்போதுதான் ஒருவர் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடியும். இன்று இந்தச் சத்தியம் மறைக்கப்பட்டு வெறும் சடங்குகள் மூலம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதாகப் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பல சபைகளிலோ வெறும் கூப்பாடுபோட்டு அலறுவதுதான் பரிசுத்த ஆவியின் அனுபவம் என்று நம்பப்படுகின்றது. எனவே, இப்படிக் கூப்பாடுபோட்டுத் துள்ளும் பலரிடம் ஆவிக்குரிய கனிகளை நாம் காணமுடிவதில்லை.
அன்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) என்று. நாம் கிறிஸ்துவுக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவிபுரிபவரே பரிசுத்த ஆவியானவர்.
ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவம் வெறும் சடங்குகளோடு சம்பந்தப்பட்ட மார்க்கமல்ல, அது அனுபவபூர்வமானது. ஒவ்வொரு வசனமும் சத்தியமானது. அவற்றை வெறுமனே கூறிக்கொள்வதாலோ ஒரு சில வெளிச் செயல்பாடுகளாலோ ஒருவர் அவற்றை அனுபவிக்கமுடியாது. ஆவியானவரின் அபிஷேகம் பெற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் தன்னோடு இருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்கள்.
இதுவரை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெறவில்லையானால் நாம் அதற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடவேண்டியது அவசியம். அவர் வரும்போது "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. எனவே, அவர் நம்மில் வரும்போதுதான் நம்மால் பாவத்தை மேற்கொள்ள முடியும். இந்தச் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் நம்மை நிறைக்கும்படி மன்றாடுவோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,225 💚 ஜூன் 16, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்." ( உபாகமம் 7 : 21 )
தேவனாகிய கர்த்தரைக் குறித்து இன்றைய தியான வசனம் "அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்" என்று கூறுகின்றது. நமது தேவன் ஒரு தாய்க்குரிய பரிவு கொண்டவராக இருந்தாலும் ஒரு தந்தைக்குரிய வல்லமையுள்ளவர். தேவன் அன்பாகவே இருந்தாலும் தனது மக்களை அநியாயமாக பிறர் தொடும்போது அவர் அதனைச் சிலவேளைகளில் பொறுத்துக் கொள்வதில்லை. இதனையே, "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 8 ) என்று நாம் வேதத்தில் வாசிக்கின்றோம்.
வேதாகமம் முழுவதும் நாம் வாசிக்கும்போது, தேவனுடைய வல்லமையும் பராக்கிரமமும் விளக்கப்பட்டுள்ளதை கண்டுகொள்ளலாம். இந்த வல்லமையுள்ள தேவன் குமாரனாக பூமியில் வாழ்ந்தபோதும் வல்லமையானச் செயல்களைச் செய்தார். அவர் புயற்காற்றையும் கொந்தளித்தக் கடலையும் அடக்கியபோது சீடர்கள் பயந்தனர். "அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்." ( மாற்கு 4 : 41 ) என்று வாசிக்கின்றோம்.
எதிரிகளுக்கு மட்டுமல்ல, அவரிடம் அன்புகூர்ந்து அவருக்கு அஞ்சி வாழ்வோருக்கு கிருபை செய்கின்ற பயங்கரமான தேவன் அவர். நெகேமியா தேவனை நோக்கி விண்ணப்பம் செய்தபோது கூறுகின்றார். "பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே," ( நெகேமியா 1 : 5 ) என்று. அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது தனது வல்லமையான பயங்கரச் செயல்கள்மூலம் அவர்களுக்குப் பதில்தருவார்.
இந்த வல்லமையின்படியே அவர் பிள்ளைகளாகிய நமக்குச் செவிகொடுக்கின்றார். இந்த வல்லமையுள்ள தேவன் நமக்குள்ளே இருப்பதால் "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராக" இருக்கின்றார். ( எபேசியர் 3 : 20 )
ஆம் அன்பானவர்களே, இந்த மகத்துவமான தேவன் நமக்குள்ளே இருக்கின்றார் எனும் உறுதி நமக்கு இருக்குமானால் நாம் எதற்கும் அஞ்சிடாமல் துணித்து நிற்போம். தேவனுடைய இந்த வல்லமை நம்மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படும்.
சில அரசியல் தலைவர்களுக்கு கறுப்புப் பூனைப்படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். அவர்கள் பயணம் செய்ய குண்டு துளைக்காத வாகனங்கள் உண்டு. அணிந்துகொள்ள குண்டு துளைக்காத ஆடைகள், அவர்கள் நின்று உரையாற்ற குண்டு துளைக்காத மேடை என அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் உண்டு. அந்தத் தைரியத்தில் அவர்கள் வலம்வருவார்கள். ஆனால், இவை அனைத்தையும்விட தேவனுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் உள்ளேயே இருந்து செயல்படும் வல்லமையும் பயங்கரமுமான தேவன் உண்டு.
மனிதர்கள் தரும் பாதுகாப்பு போன்றதல்ல தேவன் அளிக்கும் வல்லமைமிக்க பாதுகாப்பு. உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் மட்டும் தருவதல்ல அது; மாறாக நாம் மறுவுலக வாழ்வைத் சுதந்தரித்துக்கொள்ள ஏற்றவர்களாக வாழ தேவனது இந்த வல்லமையுள்ள பாதுகாப்பு நம்மைப் பாவத்துக்கு விலக்கிக் காக்கின்றது. ஆம், நமது தேவனாகிய கர்த்தர் வெளியே எங்கோ இருபவரல்ல; குறிப்பிட்டப் புனித ஸ்தலங்களுக்குள் இருபவரல்ல; மாறாக, நமக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,226 💚 ஜூன் 17, 2024 💚 திங்கள்கிழமை 💚
"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள்." ( யாக்கோபு 1 : 22 )
வஞ்சித்தல் எனும் வார்த்தை ஏமாற்றுதல் எனும் பொருளில் இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் வேத வசனங்களை கேட்பவர்களாக இருந்தும் அவற்றை நாம் கைக்கொள்ளாவிட்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக வேத வசனங்களைக் கேட்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கின்றது. எனவேதான் பல்வேறு நற்செய்திக் கூட்டங்களில் கலந்துகொள்கிறவர்களாக இருக்கின்றோம். ஆனால் நாம் கேட்கும் வசனத்தை நாம் கைக்கொள்கின்றோமா? என்று நாம் நம்மைத்தானே ஆராய்ந்துபார்க்க அழைக்கப்படுகின்றோம்.
இதற்கு ஒரு உதாரணமாக ஆவியின் கனிகள் என்பதனை விளக்கலாம் என்று எண்ணுகின்றேன். ஆவியின் கனிகள் என்று கூறும்போது பல கிறிஸ்தவர்களுக்கும் போதகர்களுக்கும் கலாத்தியர் 5: 22, 23 வசனங்கள் நினைவுக்கு வரும். அதனை அழகாக மனப்பாடமாகச் சொல்லவும் செய்வார்கள்.
ஆனால் அதில் கூறப்பட்டுள்ள அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்றவை நமக்கு இருக்கின்றதா என்று பலரும் எண்ணிப்பார்ப்பதில்லை. கணிதம் அல்லது வேதியல் பார்மலாவைச் சொல்வதுபோல இந்த வசனத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். பலரும் ஜெபிக்கும்போது, "எனக்கு ஆவியின் கனிகளைத் தாரும் ஆண்டவரே" என்று ஆவியின் கனிகளை ஏதோ வரம் என்று எண்ணிக்கொண்டு ஜெபிக்கின்றனர்.
அன்பானவர்களே, ஆவியின் கனிகள் கேட்டுப் பெறவேண்டிய வரமல்ல, அவை நாம் கிறிஸ்துவுக்குள் வாழும்போது உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தால் நம்மிடம் வெளிப்படவேண்டிய குணங்கள். பல கிறிஸ்தவர்களிடையே ஆவியின் கனிகள் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் உள்ளான மனதில் இந்த குணங்கள் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பி ஜெபிப்பதில்லை. வரங்களைக் கேட்பதுபோல ஆவியின் கனிகள் வேண்டுமென்று ஜெபிக்கின்றனர். ஆனால் அந்தக் கனியுள்ள வாழ்க்கை வாழ முயலுவதில்லை.
இது ஒரு உதாரணமே. கிறிஸ்தவர்கள் பலரும் பல வேத வசனங்களை இப்படியே கூறிக்கொண்டிருக்கின்றோமேத் தவிர அவற்றை அனுபவமாக்க முயலுவதில்லை.
எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார், "என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.( யாக்கோபு 1 : 23, 24 )
ஆம் அன்பானவர்களே, நமது சாயலை மறந்தவர்களாக நாம் வாழக்கூடாது; நாம் தேவச் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதனை மறந்துவிடக்கூடாது. அந்தச் சாயல் நம்மில் வெளிப்படவேண்டும். எனவே, வேத வசனங்களைக் கேட்பவர்களாகவும் வாசிப்பவர்களாகவும் மட்டுமல்ல, அவற்றைச் செயல்படுத்துகின்றவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். நாம் வேதாகமத்தில் வாசிக்கும் பரிசுத்தவான்களின் குணங்கள் நம்மிடம் இருக்கின்றதா என்று சீர்தூக்கிப் பார்பவர்களாகவும் அத்தகைய குணங்கள் நமக்கு வேண்டும் எனும் ஆர்வம் உள்ளவர்களாகவும் வாழவேண்டும்.
நாம் பலவீனமானவர்கள் என்பதைத் தேவன் அறிவார். ஆனால், நாம் இத்தகைய நல்ல குணங்களோடு வாழ மெய்யாகவே உள்ளத்தில் விரும்புவோமானால் தேவன் அதற்கான பலத்தை நமக்குத் தந்து உதவுவார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,227 💚 ஜூன் 18, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
"நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்." ( 1 கொரிந்தியர் 13 : 1 )
அந்நியபாஷை என்பதுதான் பரிசுத்த ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொண்டதற்கு அடையாளம் எனவும், அந்நியபாஷைதான் ஆவிக்குரிய வாழ்வின் உச்சம் எனவும் தவறான ஒரு கருத்தும் போதனையும் தங்களை ஆவிக்குரிய சபை எனக் கூவிக்கொள்ளும் பல சபைகளில் நிலவுகின்றது. இன்றைய தியான வசனம் அது தவறு என்பதனை விளக்குகின்றது.
அதாவது ஆவிக்குரிய உயர்ந்த பண்பான அன்பு இல்லாத ஒருவரும் அந்நியபாஷை பேசலாம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்." என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, தங்களை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்கள் பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவுமே இருக்கின்றனர்.
ஒருவரில் ஆவியானவர் இருந்து செயற்படுகின்றார் என்பதற்கு அந்நியபாஷை அடையாளம் அல்ல; மாறாக அவரது அன்புச் செயல்பாடுகளே அடையாளம். இதனைத் தெளிவுபடுத்த பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து நீண்ட விளக்கமாகக் கூறுவனவற்றை நாம் கவனமுடன் வாசிக்கவேண்டும்.
தொடர்ந்து இது குறித்து எழுதும்போது அவர், "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" ( 1 கொரிந்தியர் 13 : 10 ) என்கின்றார் அவர். அதாவது, நிறைவான கிறிஸ்து நம்மில் வரும்போது நம்மிலிருக்கும் குறைகள் ஒழிந்துபோகும். ஆவிக்குரிய வாழ்வில் நாம் நிறைவடையும்போது நாம் அதுவரைப் பேசிய அந்நியபாஷை குழந்தைத்தனமானதாக நமக்குத் தெரியும். மேலும், நாம் குழந்தைகளாக இல்லாமல் அதனைத் தாண்டி வளரவேண்டும். விசுவாசம், நம்பிக்கை, அன்பு இவைகளில் நாம் வளர்ச்சியடையவேண்டும் என்கின்றார். இதனையே அவர் தெளிவாகப் பின்வருமாறு கூறுகின்றார்:-
"நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது." ( 1 கொரிந்தியர் 13 : 11 - 13 )
ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வின் குழந்தைப்பருவ அனுபவம் அந்நியபாஷை. மேலும், அன்பற்ற அந்நியபாஷை அர்த்தமில்லாதது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்." ( 1 கொரிந்தியர் 14 : 28 ) என ஒரு முக்கிய நிபந்தனையை விதிக்கின்றார். மேலும், யாராவது அந்நியபாஷை பேசுவதைத் (தனியாகப் பேசுவதை) தடைபண்ணவேண்டாம் ( 1 கொரிந்தியர் 14 : 39 ) என்றும் கூறுகின்றார். காரணம், அது ஆவிக்குரிய ஒரு வரம்.
சுருக்கமாகக் கூறுவதானால், கிறிஸ்தவர்களுக்கு அடையாளம் அன்புதானேத் தவிர சிலர் கூறுவதுபோல அந்நியபாஷையல்ல. அந்நியபாஷை பேசுவதை ஆவிக்குரிய குழந்தைகளாக இருக்கும்போது ஒருவர் மேன்மையாகக் கருதலாமேத் தவிர அத்துடன் நின்றுவிடாமல் ஆவிக்குரிய வாழ்வில் மேலான வளர்ச்சியடைய வேண்டும். அந்த வளர்ச்சியை அந்நியபாஷையல்ல, நமது அன்புச் செயல்களே அடையாளம் காட்டும்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,228 💚 ஜூன் 19, 2024 💚 புதன்கிழமை 💚
"வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்." ( லுூக்கா 13 : 25 )
தேவனுக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழும் மனிதர்களது பரிதாபகரமான நிலையினை இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் விளக்குகின்றார். உலகத்தின் இறுதிநாட்களில் நியாயத்தீர்ப்பு முடிந்து பரலோகக் கதவுகள் அடைக்கப்படும்போது மனிதர்கள் எப்படிப் புலம்புவார்கள் என்பதனை அவர் இங்கு விளக்குகின்றார்.
இப்படிக் கதவைத் தட்டுகின்றவர்கள் ஆலயங்களுக்குச் செல்லாதவர்களோ பக்திக் காரியங்களில் ஈடுபடாதவர்களோ அல்ல. மாறாக, ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டு கிறிஸ்துவின் உடலை உண்டு இரத்தத்தைப் பானம்பண்ணியவர்கள்தான். மட்டுமல்ல இவர்கள் தேவ ஊழியர்களின் பிரசங்கங்களைக் கேட்க ஆர்வமாய் ஓடியவர்கள்தான். இதனையே இயேசு கிறிஸ்து தொடர்ந்து கூறுகின்றார்:-
"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம் பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார்." ( லுூக்கா 13 : 26, 27 )
தேவ சமூகத்தில் அப்பம் புசித்து வீதிகளில் நடக்கும் போதகங்களைக் கேட்பது மட்டும் ஒருவரை தேவனுக்கு ஏற்புடையவர் ஆக்கிடாது எனும் உண்மையினை இயேசு இங்குக் கூறுகின்றார். நமது தனிப்பட்ட வாழ்க்கை தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டியது அவசியம். "நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று அவர் நம்மைப்பார்த்துக் கூறும் நிலை நமக்கு ஏற்படுமானால் எப்படியிருக்குமென்று எண்ணிப்பாருங்கள்.!!!
நமக்குப் பல்வேறு திறமைகள் இருக்கலாம், அதிக அளவு செல்வம் இருக்கலாம், இவற்றைப் பயன்படுத்தி நம்மைப் புகழ்ந்து பேசும் மக்களை நாம் நமக்கென ஆதாயமாக்கிக் கொள்ளலாம், ஆனால் இறுதிநாளில் இவை எதுவுமே நமக்குக் கைக்கொடுக்காது. ஆம் அன்பானவர்களே, "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 )
எனவே நாம் நமது ஆத்துமாவை நஷ்டப்படுத்தாமல் வாழவேண்டியது அவசியம். தேவனோடு தனிப்பட்ட ஐக்கியத்தை நாம் வளர்த்துக்கொள்ளாமல் நம்மால் ஆவிக்குரிய வாழ்க்கையை வெற்றிகரமாக வாழமுடியாது. ஆலய வழிபாடுகளும் இதர ஆவிக்குரிய செயல்பாடுகளும் நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக மாற்றிடாது. தேவனை அறியும் அறிவும் தேவ ஐக்கியமும் மிகவும் முக்கியமாக நமக்குத் தேவை.
எனவே அன்பானவர்களே, தேவனோடு நமதுத் தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்ள முயல்வோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மெய்யான மனஸ்தாபத்தோடு அவரது பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட மன்றாடுவோம். ஆம், கிறிஸ்தவம் வெற்று வார்த்தைகளில் அடங்கியுள்ள மார்க்கமல்ல; வேதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் அனுபவங்கள் அனைத்துமே நாம் அனுபவிக்க வேண்டியவை. எனவே நமது ஒட்டுமொத்த வாழ்வையும் அவருக்குச் சமர்ப்பித்து பாவ அறிக்கைசெய்வோம்.
"நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன்" என்று அவர் சொல்லாமல், "என் அருமை மகனே / மகளே வா என்னோடு" என்று அவர் நம்மை அணைத்துக்கொள்ளும் மேலான நிலையினை நாம் பெற்றிட முயல்வோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,229 💚 ஜூன் 20, 2024 💚 வியாழக்கிழமை 💚
"நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது." ( யோவான் 17 : 14 )
இந்த உலகம் ஜாதிவெறி, மதவெறி, இனவெறி நிறைந்தது. எல்லோருக்குமே பொதுவாக தங்கள் ஜாதி, மத இனத்தவரிடம் தனி அன்பு உள்ளது. பொதுவாக புதிய நபர் ஒருவரை சந்திக்கும்போது பலருக்கும் அவர் எந்த ஜாதி என்பதை அறிவதில் ஒரு ஆர்வம் இருக்கின்றது. அப்படி அவர்கள் தங்கள் ஜாதியினர் என்றால் அவர்களிடம் அதிகமாக நெருக்கம் வைத்துக்கொள்வார்கள். இது பொதுவான மனித குணம்.
இந்த மனித குணமே பொதுவாக எல்லா இடங்களிலும் மேலோங்கி இருகின்றது. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஜாதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கின்றன. இதுபோன்ற மனநிலையே ஆவிக்குரிய மக்களைப் பிறர் புறக்கணிக்கவும் மற்றவர்கள் அவர்களிடம் வித்தியாசமாகச் செயல்படுவதற்கும் காரணம். ஆவிக்குரிய மக்கள் இந்த உலகத்தோடு பல விஷயங்களில் ஒத்துப் போகமுடியாதவர்கள். எனவே உலக மனிதர்கள் இவர்களைப் பகைக்கின்றனர். எனவேதான் இயேசு கிறிஸ்து, "நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது." என்று கூறுகின்றார்.
சொந்த வீட்டில்கூட ஆவிக்குரிய வாழ்வு வாழப் பலவேளைகளில் நெருக்கடியும் துன்பங்களும் ஏற்படுவதுண்டு. ஏனெனில் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெற்று வாழ்பவர்கள் அந்த அனுபவத்தைப் பெறாத தங்கள் சொந்தங்களுடன்கூடச் சில வேளைகளில் ஒத்துப்போகமுடிவதில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 35, 36 )
தன்னைப் பின்பற்றிவர விரும்புபவர்கள் அனுதினமும் தங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு தன்னைப் பின்தொடரவேண்டும் என்று கூறினார். இதுவே இயேசு கிறிஸ்து கூறிய அனுதினமும் சிலுவை சுமக்கும் அனுபவம். கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாகவும் அவரது சீடர்களாகவும் நாம் வாழவேண்டுமென்றால் இந்தப் புறக்கணித்தல் எனும் சிலுவையை ஒருவர் சுமந்துதான் ஆகவேண்டும்; குடும்பத்தால், உலகத்தால் பகைக்கப்படும் சூழ்நிலையைத் தாங்கித்தான் ஆகவேண்டும். இதனையே, "தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல." ( மத்தேயு 10 : 38 ) என்றும், "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." ( லுூக்கா 14 : 27 ) என்றும் கூறுகின்றார் இயேசு கிறிஸ்து.
இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து ஏன் இப்படி உலகம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவர்களைப் பகைக்கின்றது என்றும் பின்வருமாறு கூறுகின்றார். "நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்.....ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது." அதாவது இயேசு கிறிஸ்து கொடுத்த பிதாவின் வார்த்தைகள் ஆவிக்குரிய மனிதர்களுக்குள் இருப்பதால் பிதாவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஆவிக்குரியவர்களைப் பகைக்கின்றனர்.
எனவே, ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு வரும் புறக்கணித்தலையும் உலகத்தால் பகைக்கப்படுதலையும் நாம் பொறுமையுடன் சகிக்கப் பழகவேண்டும். காரணம், உலகம் நம்மைப் பகைப்பதற்கு முன்னமே இயேசு கிறிஸ்துவையும் பகைத்தது. "உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்." ( யோவான் 15:18 ) என்று அவர் கூறவில்லையா? புறக்கணித்தலையும், பகைமையையும் தாங்கி ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறிச்செல்ல பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிட ஜெபிப்போம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,230 💚 ஜூன் 21, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
"தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்." ( யோவான் 1 : 18 )
பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் பொதுவாக தேவனை ஆராதித்து வழிபட்டு வந்தாலும் அவரோடு அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததில்லை. யெகோவா அல்லது யாவே கடவுள் என்று கூறி ஆராதித்தனர். மட்டுமல்ல அவரை அறிந்து வாழ்ந்த தீர்க்கத்தரிசிகளும் பரிசுத்தவான்களும் அவரை சர்வ வல்லவராக, ஆபிரகாமின் தேவனாக, ஈசாக்கின் தேவனாக மட்டுமே அறிந்து ஆராதித்து வந்தனர். ஆனால் அவரை யாரும் கண்டதில்லை.
"நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை." ( யோவான் 5 : 37 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார்.
மேலும், பிதாவாகிய தேவனைக் குறித்து, "அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்." ( 1 தீமோத்தேயு 6 : 15,16 ) என்று நாம் வாசிக்கின்றோம்.
இந்தப் பிதாவாகிய தேவனை பிதாவினிடமிருந்து வந்த குமாரனான இயேசு கிறிஸ்துதான் முதன் முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார். அவர் எங்கோ இருந்து வல்லமையுடன் ஆட்சிசெய்யும் அரசர் போன்றவரல்ல; மாறாக அவர் நம்மோடு இருக்கும் நமது தகப்பனைப் போன்றவர்; அன்பானவர், என்று தெளிவுபடுத்தினார். எனவே நாம் இன்று பழைய ஏற்பாட்டுக்கால மக்களைப்போல தேவனை அறியாமல் ஆராதிப்பவர்களல்ல.
அன்பானவர்களே, பிதாவாகிய தேவனை நாம் நேரடியாகப் பார்க்கமுடியாதவர்கள் எனினும் தேவனின் தன்மை பொருந்தியவராக வாழ்ந்த இயேசு கிறிஸ்துவை நாம் அறிய முடியம். "இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார்." ( எபிரெயர் 1 : 3 )
எனவேதான், "நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்" ( யோவான் 8 : 19 ) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம் அன்பானவர்களே, தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை என்றாலும் பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே நாம் பழைய ஏற்பாட்டுக்கால மக்களைப்போல அறியாத பிதாவையல்ல, நாம் அறிந்த பிதாவையே ஆராதிப்பவர்களாக இருக்கின்றோம். ஏனெனில் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நாம் அறிந்துள்ளோம்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆசாரியர்கள் மட்டுமே தேவனது மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் சென்று சேரமுடியும். ஆனால் கிறிஸ்து இயேசு மூலம் நாம் பிதாவை அறிந்துள்ளதால் அவரை விசுவாசிக்கும் நாம் அனைவருமே ஆசாரியர்களும் லேவியர்களுமாக இருக்கின்றோம். "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கிறார் அப்போஸ்தலரான பேதுரு.
"ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 ) கிறிஸ்து பிதாவாகிய தேவனை நமக்கு வெளிப்படுத்தியுள்ளதால் நாம் பெற்றுள்ள பேறு இதுதான். ஆம், பிதாவாகிய தேவனிடம் நெருங்கிச் சேர்ந்து நமது விண்ணப்பங்களைக் கூற முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் நாம் இந்த உரிமைபேறினைப் பெற்றுள்ளோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,231 💚 ஜூன் 22, 2024 💚 சனிக்கிழமை 💚
"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 )
பரிசுத்த ஆவியானவரை நாம் வாழ்வில் பெறவேண்டுமானால் முதலில் அவரைப்பற்றி அறிந்தும் கேட்டும் இருக்கவேண்டும், அவரை வாழ்வில் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வமும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் பலரும் ஆவியானவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் பலருக்கும் அவரை வாழ்வில் பெற்று அனுபவிக்கவேண்டும் எனும் ஆர்வம் இல்லாமலே இருக்கின்றது.
இதனையே இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது" என்று. நாம் கிறிஸ்துவை அறிந்து நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது ஆவியானவர் நமக்குள் வருகின்றார். சீடர்கள் அப்படி இருந்ததால் அவர்கள் உள்ளே ஆவியானவர் இருந்தார். எனவேதான், "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்று இயேசு கூறுகின்றார்.
கிறிஸ்துவை அறிந்த எபேசு நகர சீடர்கள் பரிசுத்த ஆவியானவரை அறியாமலேயே இருந்தனர். அப்போது அங்கு வந்த பவுல் அவர்களிடம் ஆவியானவரைப்பற்றி கேட்டு அவர்கள் பரித்த ஆவியைப் பெறுவதற்கு உதவியதை நாம் பார்க்கின்றோம். "அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 : 1, 2 )
உலக மக்கள் ஆவியானவரை அறியாமல் இருந்தாலும் ஆவிக்குரிய அனுபவம் பெற்றவர்கள் அவரை அறிந்துகொள்வார்கள். ஆவியானவர் நமக்குள் இருப்பதை நாமே அறிந்துகொள்வோம் என்பதையே "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.
ஒருவர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுள்ளார் என்பதற்கு பெரிதான வெளி அடையாளங்கள் தேவையில்லை. ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர் உள்ளத்தில் அவர் இருப்பதை பெற்றுக்கொண்டவர்கள் அறிவார்கள்.
ஆனால் இன்று ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் தங்களிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்பதனை வெளிக்காட்டிக்கொள்ள பல்வேறு உபாயங்களைக் கையாளுகின்றனர். ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் இந்தச் சபைகளின் ஊழியர்களும் தங்களிடம் ஆவியானவர் இருக்கின்றார் என்பதனை தங்கள் சபை விசுவாசிகள் அறிந்தால்தான் தங்களை மேன்மையாகக் கருதுவார்கள் என எண்ணி பல்வேறு உபாயங்களைக் கையாள்வதுடன் தங்களது பெயருக்குப்பின் பல்வேறு அடைமொழிகளையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
நாம் பரிசுத்த வாழ்வு வாழத் துணைபுரிபவரே பரிசுத்த ஆவியானவர். சத்திய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம்பண்ணி நமக்குள்ளேயே இருப்பதால், நாம் அவரை அறிவதுடன் பரிசுத்த வாழ்வும் வாழ முடிகின்றது. காரணம், "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) நமக்குள்ளே பாவத்தைக்குறித்தும் நீதியைக்குறித்தும் உணர்வும், பரிசுத்தமாக வாழவேண்டுமெனும் எண்ணமும் இருக்குமானால் நமக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் என்பது நிச்சயம்.
இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வர வாஞ்சையாய் மன்றாடுவோம். நிச்சயம் தேவன் நம்மை ஆவியினால் நிரப்பி பரிசுத்தமாய் வாழ உதவிடுவார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,232 💚 ஜூன் 23, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்." ( 1 யோவான் 5 : 11 )
நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வைச் சுதந்தரித்துக்கொள்வதே கிறிஸ்தவ வாழ்வின் இலக்காகும். நாம் இந்த உலகத்தில் அனைத்துச் செல்வங்களையும் உடையவர்களாக வாழ்ந்தாலும் நித்திய ஜீவனை இழந்துவிட்டோமானால் அதனால் எந்த பயனும் இல்லை.
இந்த நித்திய ஜீவன் தேவனுடைய ஒரே குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்று. ஆம் அன்பானவர்களே, பிதாவோடு இணைந்துகொள்வதே நித்தியஜீவன். அதற்கு ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
எனவேதான் இன்றைய தியான வசனத்தை எழுதிய அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான் 5 : 12 ) எனவேதான் நாம் இயேசு கிறிஸ்துவை அறியவேண்டியது அவசியமாய் இருக்கின்றது; கிறிஸ்து நமது உள்ளத்தில் வரவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.
நாம் பாலை காய்ச்சும்போது சரியாக கழுவாத அழுக்கான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சுவோமானால் அது உடனேயே திரிந்துபோய்விடும். அதனால் எந்த பயனுமின்றி வெளியே கொட்டப்படவேண்டும். அதுபோலவே பரிசுத்தரான இயேசு கிறிஸ்து நமது உள்ளத்தில் வரவேண்டுமானால் நமது உள்ளம் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.
ஆனால் மனிதர்கள் இயல்பிலே பரிசுத்தர்கள் அல்ல என்பதாலும் மனிதர்களால் தானாக பரிசுத்தமாக முடியாது என்பதாலும் இயேசு கிறிஸ்து தன்னாலேதானே சுத்திகரிப்பை உண்டாக்கினார்; இரட்சிப்பு அல்லது மீட்பு அனுபவத்தை ஏற்படுத்தினார். அதற்காகவே அவர் தனது இரத்தத்தைச் சிந்தினார். இதனை நாம், "எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 ) என்று வாசிக்கின்றோம்.
எனவே, ஆத்தும மீட்பு என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே சாத்தியமாகின்றது. அவரே தனது சுய இரத்தத்தைச் சிந்தி நமக்காக மரித்து பரிசுத்த பலிபொருளானார். எனவேதான், "தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
எனவே அன்பானவர்களே, நமது பாவங்கள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவிடம் அறிக்கையிடுவோம். அவரே நமது பாவங்களைக் கழுவி பரிசுத்தமாக்கி நமக்கு முடிவில்லா வாழ்வு எனும் நித்திய ஜீவனைத் தந்து பிதாவோடு இணைந்திருக்கச் செய்வார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,233 💚 ஜூன் 24, 2024 💚 திங்கள்கிழமை 💚
"உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." ( சங்கீதம் 119 : 120 )
இந்த உலகவாழ்க்கைக்குப்பின் தேவனால் அளிக்கப்படும் நியாயத்தீர்ப்பு ஒன்று உள்ளது. அப்போது நாம் செய்யும் நன்மை தீமைக்கேற்ப நாம் பலனடைவோம். இதுவே வேதம் கூறும் உண்மை. ஆனால் இன்று கிறிஸ்தவர்களிலேயேகூடப் பலர் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. சொர்க்கமும் நரகமும் இந்த உலகிலேயேதான் இருக்கின்றன. இங்கு துன்பம் அனுபவிப்பவர்கள் நரகத்தையும் செலவச் செழிப்பில் வாழ்பவர்கள் சொர்க்கத்தையும் அனுபவிக்கின்றனர் என்கின்றனர் அவர்கள்.
கிறிஸ்தவர்களில் பலர் கூறும் விடுதலை இறையியல் இந்த நம்பிக்கையில் உருவானதுதான். எனவேதான் பல குருக்கள் சமூக பொருளாதார விடுதலை பற்றி அதிகம் பேசுகின்றனர். பல கிறிஸ்தவர்களை இவர்கள் இப்படி வஞ்சித்து வைத்துள்ளனர். அன்பானவர்களே, செல்வச் செழிப்பு ஆத்தும சாமாதானத்தை ஒருபோதும் தராது எனும் உண்மையினை இவர்கள் அறியாதவர்கள்.
இன்றைய தியான வசனம், "உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." என்று கூறுகின்றது. அதாவது கடவுளுக்குப் பாயப்படும் பயம் இருப்பதால் அவரது நியாயத்தீர்ப்புக்கும் பயப்படுகின்றோம் என்று பொருள். எனவே, இந்த பயமில்லாதவன் உண்மையில் கடவுள் நம்பிக்கையற்றவன். இப்படி நியாயத்தீர்ப்புக்குப் பயப்படும் பயம் இருந்தால் மட்டுமே நாம் இந்த உலகினில் தேவனுக்கேற்ற ஒரு வாழ்வு வாழ முடியும். ஆம், "கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்." ( சங்கீதம் 119 : 137 )
வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் வாசிக்கின்றோம், "இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 1 ) என்று. ஆம், தேவன் சாத்தியத்தின்படியும் நீதியின்படியும் இந்த உலகத்தை நியாயம் தீர்ப்பார்.
"கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். ( ஏசாயா 11 : 3, 4 ) என்று கூறப்பட்டுள்ளது.
நியாயத்தீர்ப்பைக்குறித்து நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் தெளிவாகப் பல முறைக் கூறியுள்ளார். மட்டுமல்ல இந்த உலகை நியாயம்தீர்க்கும் அதிகாரமும் இயேசு கிறிஸ்துவிடம்தான் உள்ளது. இதனையே அவர், "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 ) என்று கூறினார்.
அன்பானவர்களே, எனவே விடுதலை இறையியல் போதனைகளோ இதர போதனைகளோ, இதர தெய்வ வழிபாட்டு முறைமைகளோ நம்மை நியாயத்தீர்ப்புக்குத் தப்புவிக்கமாட்டாது. "உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சி அவருக்கேற்ற ஒரு வாழ்வு வாழும்போது மட்டுமே நாம் நியாயத்தீர்ப்பில் நிலைநிற்கமுடியும்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,234 💚 ஜூன் 25, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚
"என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்." ( சங்கீதம் 35 : 28 )
இன்றைய தியான சங்கீத வசனத்தில் தாவீது மேலான ஒரு ஆவிக்குரிய அனுபவத்தைக் கூறுகின்றார். அதாவது, ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்கள் தங்களை அறியாமல் தங்களது வாழ்வின் அனைத்து நன்மை தீமைகளுக்காகவும் தேவனை ஸ்தோத்தரித்து மகிமைப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்." ( கொலோசெயர் 4 : 2 )
"இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 17 )
என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. இடைவிடாமல் எப்படி ஜெபிக்கமுடியும்? நாக்கு வேறு உலக வேலைகளும் கடமைகளும் இல்லையா என்று நாம் எண்ணலாம். ஆனால் ஜெபம் எப்போதும் நீண்டதாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. தேவனுக்கு நன்றி சொல்வதும் ஸ்தோத்திரம் சொல்வதும் ஜெபம்தான். மேலும் ஜெபம் என்பது வாயினால் நாம் சொல்வது மட்டுமல்ல; மாறாக, அது இருதயம் சம்பந்தப்பட்டது.
நாம் எந்த உலக வேலை செய்துகொண்டிருந்தாலும் நமது இருதயம் ஜெபசிந்தனையோடு இருக்க முடியும். நாம் மர வேலைசெய்யும் ஒரு ஆசாரியாக இருக்கலாம், கொத்தனாராக இருக்கலாம், வங்கியில் பணிபுரிபவராக, மருத்துவராக, கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம். எந்த வேலையில் நாம் இருந்தாலும் நமது இருதயம் தேவனுக்கு நேராக இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளமுடியும். அப்படி நாம் இருப்போமானால், நாம் செய்யும் பணியையும் சிறப்பானதாகச் செய்யமுடியும்.
மட்டுமல்ல, வாழ்வில் நெருக்கடியான சூழ்நிலை வரும்போதும் நாம் தேவனைத் துதிக்க முடியும். அப்போஸ்தலரான பவுலும் சீலாவும் தங்கள் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையிலும் நாடு இரவில் தேவனைத் துதித்துப் பாடவில்லையா? ஆம், அப்படி நாம் தேவனைத் துதிப்பது மிகப்பெரிய விடுதலையை நமது வாழ்வில் கொண்டுவரும்.
"என் நாவு உமது நீதியையும், நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்." என்று எழுதிய தாவீது சாதாரண மனிதனல்ல; அவர் ஒரு அரசர். அரசாங்கப் பணிகள் அவருக்கு அதிகம் இருந்திருக்கும். அந்தப் பணிகளினூடே தேவனைத் துதித்தார். அரசர் ஆவதற்குமுன் அவர் மிகவும் நெருக்கப்பட்ட ஒருவாழ்வு வாழ்ந்தார்; அப்போதும் தேவனைத் துதித்தார். அதனையே இன்றைய தியான வசனத்தில் அவர் கூறுகின்றார்.
துதிப்பதும் ஜெபிப்பதும் மட்டுமல்ல, என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் சொல்லிக்கொண்டிருக்கும் என்கின்றார். அதாவது நாம் தேவனைப்பற்றியும் அவரது வல்லமையைப்பற்றியும் நமது சொல்லாலும் வாழ்வாலும் அறிக்கையிடவேண்டியது அவசியம்.
அன்பானவர்களே, இதுவரை நாம் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தேவனை ஆராதிப்பவர்களாக வாழ்ந்திருந்தாலும் இனி இந்த வழியைக் கைக்கொள்வோம். இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கித் தேவனைத் தொழுவார்கள். ஆனால் தேவன் நமக்குள்ளே இருந்து கிரியைசெய்யும்போது அவரது அன்பு நம்மை நெருக்குவதால் நாம் இப்படி குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஜெபிப்பவர்களாக இருக்கமாட்டோம். மாறாக, தாவீது கூறுவதுபோல நமது நாவு அவரது நீதியையும், நாள்முழுவதும் அவரது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,235 💚 ஜூன் 26, 2024 💚 புதன்கிழமை 💚
"கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்.." ( எரேமியா 2 : 8 )
இன்றைய தியான வசனம் கூறும் எரேமியா காலத்தில் இருந்த நிலைமைதான் இன்றும் நிலவுகின்றது. வேதத்தைப் போதித்து மக்களை நேர்வழியில் நடத்தவேண்டிய ஆசாரியர்கள் தேவனை அறியாமல் இருந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது போலவே இன்றும் தேவனை அறியாதவர்கள்தான் பெரும்பாலும் போதகர்களாக இருக்கின்றனர். ஆம் அன்பானவர்களே, தேவனை அறிவது மேலான ஒரு அனுபவம். அது வேதாகமக் கல்லூரிப்படிப்பால் ஒருவருக்கு ஏற்படாது.
ஒருவர் தேவனை அறியும்போதுதான் அவர் மேலான ஆவிக்குரிய அனுபவங்களையும், வேத வசனங்களுக்கான மெய்யான பொருளையும் அறிந்துகொள்ளமுடியும். அப்படி அறிந்த ஒருவர்தான் மற்றவர்களுக்கு தேவனைப்பற்றித் தெளிவுபடுத்த முடியும். சார்ள்ஸ் ஸ்பர்ஜன் எனும் தேவ மனிதன் இதுகுறித்து கூறும்போது, "தேவனை அறியாத ஒருவன் மக்களுக்கு தேவனைப்பற்றிப் போதிப்பது, பறக்க இயலாத குள்ளவாத்து கழுகுக் குஞ்சுகளுக்குப் பறக்கக் கற்றுக்கொடுக்க முயல்வதுபோன்றது" என்று கூறுகின்றார்.
இன்று விசுவாசிகள் பலரும் கழுக்குக் குஞ்சுபோன்று துடிப்பாக உள்ளனர். பல விசுவாசிகள் அவர்களை வழிநடத்தும் போதகர்களையும் குருக்களையும்விட தேவ அனுபவமும் தேவனைப்பற்றிய அறிவும் கொண்டுள்ளனர். ஆனால் விசுவாசிகளை வழிநடத்தும் குருக்கள், போதகர்கள், பாஸ்டர்கள் எந்த வித ஆன்மீக அனுபவமுமின்றி குள்ள வாத்துக்களைப்போன்று இருக்கின்றனர்.
இப்படிக் கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் தேவனை அறியாமலுமிருந்து, தேவனுக்குத் துரோகம்பண்ணினபடியினால் இதற்கு மாற்றாக தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். ஆம், போதகர்களும் குருக்களும் தேவனை அறியாமலிருந்தாலும் ஆவியானவர் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் நடத்த முடியும். எனவேதான், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து.
நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது ஆவியானவர் தனது ஆளுகைக்குள் நம்மை எடுத்துக்கொள்கின்றார். எனவே நம்மை வழிநடத்தும் உலக போதகர்களும் குருக்களும் நம்மைச் சரியான பாதையில் நடத்தத் தவறினாலும் ஆவியானவர் நம்மை நேர்மையான பாதையில் நடத்துவார். ஆனால், நாம் ஆவியானவர் நம்மை வழிநடத்த நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்.
ஆம் அன்பானவர்களே, இதுவே உண்மையாகும். எனது முப்பது ஆண்டுகால ஆவிக்குரிய அனுபவத்தில் ஆலய மறையுரைகளில் போதகர்கள் மூலம் கேட்டு உணர்ந்துகொண்ட சத்தியங்களைவிட ஆவியானவர் தெளிவுபடுத்தியவை அதிகம். பொதுவாக நான் எந்த ஊழியர்களது போதனைகளையும் அதிகம் கேட்பதில்லை; போதகர்களது ஆவிக்குரிய நூல்களையும் அதிகம் வாசிப்பதில்லை. ஆனால் எனக்கு ஆவியானவர் உணர்த்துவதையே எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எழுதுபவை வேதத்துக்கு முரணாக இருப்பதாக யாரும் கூறியதில்லை.
ஆம், தேவனைத் தனிப்பட்ட முறையில் நாம் அறிந்துகொள்ளும்போது ஆவியானவர் நம்மைச் சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்துவார். எனவேதான் நாம் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டியது அவசியம். தேவ ஆவியானவரின் துணையுடன் வேதாகமத்தை வாசிப்போம். சத்திய ஆவியானவர் சத்தியத்தை நாம் உணரச்செய்து நம்மைச் சத்திய வழியில் நடத்துவார்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,236 💚 ஜூன் 27, 2024 💚 வியாழக்கிழமை 💚
"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15 : 2 )
நாம் கனி கொடுக்கின்ற ஓர் வாழ்க்கை வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். அவரை ஆராதிப்பவர்களாக, அவரை ஸ்தோத்தரிப்பவர்களாக மட்டுமல்ல, அப்படி அவரை ஆராதிக்கும் நாம் கனிகொடுக்கின்ற வாழ்க்கை வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார்.
ஒரு சிறந்த தோட்டக்காரன் எப்படித் தன் தோட்டத்திலுள்ள மரங்களை பராமரிப்பானோ அதுபோலவே தேவன் தனது மக்களைப் பராமரிக்கின்றார். இதற்காக அவர் இரண்டு காரியங்களைச் செய்கின்றார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
முதலில், "கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது. செடியோடு இணைக்கப்பட்டிருக்கும் கொடிகள் உலர்ந்துபோய்விட்டது என்றால் அதில் கனிகள் உருவாக முடியாது. அத்தகைய கொடிகளை அவர் அறுத்துப்போடுகின்றார். காரணம் அந்தக் கொடிகளால் யாருக்கும் பலனில்லை. மேலும் அவை தேவையற்று இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். தேவையற்ற கொடிகள் என்று தேவன் நம்மை அறுத்துப் போட்டுவிடாதபடி நமது வாழ்க்கையை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது, "கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." விவசாயிகளுக்குத் தெரியும் மரங்களை கவ்வாத்து (Pruning) செய்துவிட்டால் அவை அதிகக் கனிகளைக்கொடுக்கும் என்று. கவ்வாத்து செய்வதால் மரங்களின் தேவையற்ற வளர்ச்சிக் கட்டுப்படுத்தப்படும், தளிர்களும் மொட்டுகளும் பூக்களும் அதிகம் வந்து அதிக கனிகளை உற்பத்திசெய்யும். பழையன கழிந்து புதியன தோன்றும்.
இப்படி மரங்களை வெட்டி கவ்வாத்துச் செய்வது மரங்களுக்கு வேதனைதரும் ஒரு செயல்தான். ஆனால் அது அவைகளின் நன்மைக்கே. இதுபோலவே தேவன் ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்கும் மக்களுக்கும் சில துன்பங்களைக் கொடுக்கின்றார். இந்தத் துன்பங்கள் நம்மில் தேவையற்ற உலகப்பிரகாரமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றது. மட்டுமல்ல ஆவிக்குரிய வாழ்வில் நம்மில் புதிய தளிர்களும் மொட்டுகளும் பூக்களும் அதிகம் தோன்றி அதிகக் கனிகளை உற்பத்திசெய்யும் மனிதர்களாக நாம் மாறுகின்றோம்.
எனவே, ஆவிக்குரிய வாழ்வில் நமக்குத் துன்பங்கள் ஏற்படும்போது நாம் தயங்கவோ கலங்கவோ வேண்டியதில்லை. தேவன் நம்மைப் பண்படுத்துகின்றார் என்று உணர்ந்து அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருக்கவேண்டியது தான் நாம் செய்யவேண்டியது.
"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது துன்பங்கள் நம்மைச் சூழ்ந்தால் நாம் தேவனுக்குமுன் பாக்கியவான்கள் என எண்ணிக்கொள்வோம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,237 💚 ஜூன் 28, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 7 )
ஒரு மகனுக்குத் தகப்பனுடைய அனைத்துச் சொத்து சுகங்களின்மேலும் முழு அதிகாரம் உண்டு. இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து அவருக்குக் குமாரனாகும் தகுதிபெறும்போது அந்தத் தகப்பனுக்குள்ள அதிகாரங்கள் நமக்குக் கிடைக்கின்றது. அதற்கு நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனையே "ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
வேதாகமத்தில் லேவியராகமம் முதல் பல்வேறு இடங்களில் நாம் "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." ( லேவியராகமம் 26 : 12 ) எனும் வசனத்தைக் காணலாம்.
தேவன் எப்போதும் நம்மோடு தங்கி நம்மோடு இருக்கவே விரும்புகின்றார். அதற்குத் தகுகியுள்ளவர்களாக நாம் வாழ வேண்டியதே முக்கியம். இன்றைய தியான வசனம் கூறும் வார்த்தைகளைப்போன்று வேதத்தில் பல்வேறு இடங்களிலும் நாம் வாசிக்கலாம். (உதாரணமாக, எரேமியா- 7:23, 11:3, 30:22, 31:1, 32:38 இன்னும் பல)
ஆனால் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்கள் அனைத்திலும், "நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டில் தேவனை நாம் தகப்பனாக அறிந்து அவரோடு சேர்வதால், "நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும் அனைவருமே அவரது குமாரனும் குமாரத்திகளும்தான்.
இப்படி நாம் அவரது குமாரனும் குமாரத்திகளுமாக இருக்கவேண்டுமானால் முதலில் அவரது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. "என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லாவழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்." ( எரேமியா 7 : 23 )
மேலும் இன்றைய தியான வசனத்தினைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 8 )
அதாவது, தேவன் காட்டிய வழிகளில் நடவாதவர்கள் மேற்படி வசனம் கூறுவதுபோல பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யருமாக இருக்கின்றனர். அத்தகையவர்கள் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே அன்பானவர்களே, நாம் ஜெயம்கொள்ளும் ஒரு வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதற்கான வழிகளை நமக்குத் திறந்து வைத்துள்ளார். அந்த வழியாகிய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் வாழும்போது மட்டுமே நாம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். அப்போது, இன்றைய வசனம் கூறுவதுபோல நாம் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவோம். அவர் நமது தேவனாயிருப்பார்; நாம் அவர் குமாரனாக குமாரத்திகளாக இருப்போம்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,238 💚 ஜூன் 29, 2024 💚 சனிக்கிழமை 💚
"அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." ( யோபு 23 : 12 )
நாம் நமது வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய நல்ல ஒரு பாடத்தை யோபு இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். யோபுவைப் போல துன்பத்தை அனுபவித்தவர்கள் நம்மில் யாரும் இருக்கமுடியாது. ஆனால் அத்தகைய துன்பத்தை வாழ்வில் அனுபவித்த யோபு கூறுகின்றார், "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை" என்று. அதாவது தேவனது கற்பனைகளை நான் கைக்கொள்ளாமல் போனதில்லை, இனியும் போவதில்லை என்கின்றார்.
நல்ல ஒரு வாழ்க்கைத் தனக்கு அமைந்ததால் தேவனது கற்பனைகளைவிட்டு நான் பின்வாங்கமாட்டேன் என்று அவர் கூறவில்லை. மாறாக, வாழ்வில் அனைத்தும் எதிர்மறையாக நடைபெற்றபோதுதான் இப்படிக் கூறுகின்றார். மட்டுமல்ல, "அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" என்கின்றார். நாம் இப்போது ஆகாரத்தைப் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவது போல யோபு தனது இருதயத்தை ஒரு குளிர்சாதன பெட்டிபோல தேவ வார்த்தைகளை பாதுகாக்க பயன்படுத்துவதாகக் கூறுகின்றார்.
இன்று நமக்கு தேவ வார்த்தைகளை நினைக்கும்போதெல்லாம் படித்து அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதுபோல அந்தக்காலத்தில் இல்லை. அந்தக்காலத்தில் வேதாகம தோல் சுருள்கள் எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் அவர் அவற்றை விரும்பி உள்ளத்தில் பாதுகாத்தார். அன்பானவர்களே, நாம் நம்மையே சீர்தூக்கிப்பார்ப்போம். தேவ வார்தைகளை விட்டுப் பின்வாங்காமல் அந்த வார்த்தைகளை நமக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொள்கின்றோமா?
பல கிறிஸ்தவ வீடுகளில் வேதாகமம் மறக்கப்பட்ட ஒரு புத்தகமாக இருக்கின்றது. ஒருமுறை ஒரு வீட்டில் சென்றிருந்தபோது அங்கிருந்த வேதாகமத்தை எடுத்துப்பார்த்தேன். அது சாதாரண வேதாகமத்தைவிடப் பலமடங்கு தடிமனாக இருந்தது. திறந்து பார்த்தபோது, அதில் அவர்களுக்கு வந்திருந்த பல திருமண அழைப்பிதழ்கள், நீத்தார் நினைவு அட்டைகள், வீட்டுவரி, தொலைபேசி ரெசீதுகள், மளிகை சாமான்கள் வாங்கிய துண்டுச் சீட்டுகள் போன்றவைகளால் நிறைந்திருந்தது. ஆம், அவர்கள் தேவ வசனத்தால் இருதயங்களை நிறைப்பதற்குப் பதிலாக வேதாகமத்தை உலக காரியங்களால் நிறைத்துவிட்டனர்.
இது அவர்கள் வேதாகமத்தை எந்த அளவுக்கு மதிக்கின்றார்கள், அதனை எப்படிப் பயன்படுத்துகின்றார்கள் என்பதனை நமக்கு வெளிக்காட்டுகின்றது. இத்தகைய மனிதர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது தேவ ஆலோசனை பெறவும், தேவனது பதிலை அறியவும் குருட்டுத்தனமாக கண்களை மூடி வேதாகமத்தைத் திறந்து பார்த்து அங்கு எழுதப்பட்டுள்ள வசனங்களை தேவன் தங்களுக்குத் தந்த வார்த்தையாக எண்ணிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, நாம் அன்பு செய்பவர்கள் நமைக்குறித்துக் கூறுவதனை அறிய நாம் விரும்புவதில்லையா? அதுபோல நாம் உண்மையாகவே தேவனிடம் அன்புள்ளவர்களாக இருப்போமானால் அவரது வார்த்தைகளைப் பெறுவதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருப்போம். இல்லாவிட்டால் ஏனோதானோ மனநிலையில்தான் நாம் வாழ்வோம்.
"அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்" என்று யோபுவைபோல தேவ வார்த்தைகளைக் காத்துக்கொள்ளும் ஆர்வமும் அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டுப் பின்வாங்காத நிலைமையும் நமக்கு இருக்குமானால் யோபுவைபோல நாமும் துன்பங்களைச் சகித்து வாழ முடியும்.
மட்டுமல்ல, நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் தனது வசனத்தின்படியே நம்மை நியாயம்தீர்ப்பேன் என்கின்றார். எனவே அவரது வசனங்களை நாம் படிப்பதும், தியானிப்பதும் அவற்றை இருதயத்திலே உணவைப்போல பாதுகாத்து வைக்கவேண்டியதும் அவசியம். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர்.
'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,239 💚 ஜூன் 30, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚
"அவன் (பிலாத்து) நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்." ( மத்தேயு 27 : 19 )
நல்லவர்கள், தீயோர், தேவனை அறிந்தவர்கள், அறியாதவர்கள் அனைவர்க்கும் தேவன் சிலவேளைகளில் கனவுகள் மூலம் வழிகாட்டுகின்றார். அதுதேவனது அளப்பரிய அன்பினால்தான். தவறான முடிவெடுத்து தங்கள் வாழ்க்கையையும் ஆன்மாவையும் மனிதர்கள் அழித்துவிடக்கூடாது என்பதற்காக தேவன் இப்படிச் செய்கின்றார்.
ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்பவர்கள் கனவுகளின் பொருளை அறிந்துகொண்டு தங்களைத் திருத்திக்கொள்கின்றனர். மற்றவர்களோ அவற்றின் மறைபொருளை உணர்ந்துகொள்வதில்லை. இயேசுவின் தந்தை யோசேப்பை தேவன் கனவுமூலம் வழிநடத்தியதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். அவர் தேவனது கட்டளைகளை அதன்மூலம் அறிந்து அதற்கேற்றபடி நடந்து தேவ சித்தத்தை நிறைவேற்றினார்.
"தேவனை அறியேன்" என்று கூறிய பார்வோனுக்கும் தேவன் கனவுமூலம் தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவனால் அதன் பொருளை உணர்ந்துகொள்ளமுடியவில்லை. எனவே யோசேப்பு அதற்கான பொருளை உணர்த்திக்கொடுத்து எகிப்தின் அழிவைத் தடுத்து நிறுத்தினார். இதுபோலவே, தானியேல் கனவுக்குப் பொருள்கூறும் வரம் பெற்றவராக இருந்தார்.
இப்படித் தேவன் ஏன் கனவுமூலம் சில காரியங்களை உணர்த்துகின்றார் என்பதற்கு யோபு புத்தகத்தில் பதில் உள்ளது. "அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்." ( யோபு 33 : 16, 17 ) என்று வாசிக்கின்றோம். இங்கு, மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதுபோலவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நியாயம் விசாரிக்கப்படுவதற்கு முந்தினநாள் பிலாத்துவின் மனைவிக்குத் தேவன் கனவுமூலம் சில உணர்த்துதலைக் கொடுத்தார். எனவே, அவளால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எனவே அவள் "அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்."
ஆனால் பிலாத்து தனது மனைவிமூலம் தேவன் கொடுத்த எச்சரிக்கையினைப் புறக்கணித்தான். இதுபோலவே நாமும் பலவேளைகளில் இருக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, தேவன் அளிக்கும் கனவு தெளிவான கனவாக இருக்கும். அதன்மூலம் நாம் ஒரு செய்தியினை உணர்ந்துகொள்ளமுடியும். அப்போது நாம் அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடப்போமானால் இக்கட்டுகளுக்கு நீங்கலாகிவிடுவோம்.
எல்லா கனவுகளும் அர்த்தமுள்ளவையல்ல. "தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல...." ( பிரசங்கி 5 : 3 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது நாம் பல்வேறு தொல்லைகளால் நெருக்கப்படும்போது சரியான உறக்கமில்லாமல் கனவுகள் தோன்றும். ஆனால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது கனவுமூலம் தேவன் நம்மோடு பேசுவதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். தேவன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களோடு பேசுகின்றார். கனவு அவற்றில் ஒன்றாகும்.
எனவே, கனவுகளை நாம் அற்பமாக எண்ணாமல் அவைகூறும் கருத்துக்களை நிதானித்துப் பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும். நமது குடும்பத்து உறுப்பினர்களது செயல்பாடுகளையும் அவற்றைத் திருத்திக்கொள்ளவும் தேவன் இப்படி வழிகாட்டலாம். பிலாத்துவின் மனைவிக்குத் தேவன் இப்படித்தான் தவறுக்கு நீங்கலாக்க வழி காட்டினார். எனவே கனவுகள் நமக்குத் தோன்றும்போது தேவனிடம் அதன் விளக்கத்தைக் கேட்டு அறிவோம்; நம்மைத் திருத்திக்கொள்வோம்.