Thursday, May 09, 2024

"உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போல இருக்கும்."

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,191     💚 மே 13, 2024 💚 திங்கள்கிழமை 💚

"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ( ஏசாயா 48 : 17 )

நமது தேவன் உலக ஆசீர்வாதங்களுக்கு மட்டும் உரியவரல்ல; மாறாக, மறுவுலக வாழ்க்கைக்கும் நித்திய ஜீவனுக்கும் வேண்டிய வழியினை நமக்குக் காண்பித்து நடத்துகின்றவர். அதுவே நமது ஆத்துமாவுக்கு உபயோகரமானது. இதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." என்று. 

நமக்கு ஆவிக்குரிய வழியைப் போதித்து நடத்துகின்றவர் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர்தான். நமது உபயோகத்துக்காக தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். இதனையே இயேசு கிறிஸ்து கூறினார், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

மட்டுமல்ல, "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து.

எனவே, இன்றைய தியான வசனம் கூறுவது போல, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற  தேவனாகிய கர்த்தர் காட்டும் வழிகளில் நடக்க நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.  அப்படிக்  கீழ்படிதலுள்ளவர்களாக நாம் நடக்கும்போது நமக்குப் பூரண சமாதானம் கிடைக்கும். இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." ( ஏசாயா 48 : 18 )

நதியானது அமைதியாக ஓடுகின்றது. மட்டுமல்ல, அதன் கரையோரத்திலுள்ள மரங்களை செழித்து வளரச் செய்கின்றது. அதுபோலவே தேவனது ஆவியானவர் காட்டும் வழியில் நாம் நடக்கும்போது நமது வாழ்க்கை அமைதியானதாகவும் மற்றவர்களுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கும். மட்டுமல்ல, "உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." என்று ஏசாயா கூறுகின்றார். அதாவது கடலில் அலைகள் ஓய்வில்லாமல் இருப்பதுபோல நமது நீதி அழிவில்லாத நித்திய நீதியாக இருக்கும்.  

ஆம் அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தரின் குரலுக்குச் செவிசாய்த்து நடப்போமானால் அதுவே நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும். உலக ஆசீர்வாதங்களுக்கு முன்னுரிமைகொடுத்து ஜெபிக்காமல் இத்தகைய ஆவிக்குரிய தேவ வழிநடத்துதலுக்கு நாம் ஜெபிக்கும்போது தேவன் நம்மேல் மகிழ்ச்சிக்கொள்வார். சமுத்திரத்தின் அலைகள்போல முடிவில்லாத நீதி நம்மைச் சூழ்ந்துகொள்ளும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

தனக்குப் பயந்தவர்களுக்குக் கிருபை செய்கிறார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,190      💚 மே 12, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )

தேவனது கிருபையினை மிகுதியாகப்பெற்ற அன்னை மரியாள் உன்னதனமான ஒரு உண்மையினை உணர்ந்திருந்தார். அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். அதாவது, தேவன் தனக்குப் பயந்து நீதியோடு வாழும் மக்களுக்கு கிருபையினை அளிக்கின்றார். மட்டுமல்ல அப்படி தேவன் அளிக்கும் கிருபை தலைமுறைக்கும் நிலைத்ததாக இருக்கும். 

இன்றைய தியான வசனத்தின் இரண்டு வசனத்துக்கு முன் அன்னை மரியாள் கூறுகின்றார், "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்." ( லுூக்கா 1 : 48 ) ஆம் அன்பானவர்களே, சர்வ லோகத்தையும் படைத்தாளும் தேவன் அன்னை மரியாளின் வயிற்றில் பிறந்தது எத்தனை பெரிய கிருபை. இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்றும் நாம் அவரைப் பாக்கியவதி என்று போற்றுகின்றோம்.

இதனைத் தாவீது ராஜாவும் அறிக்கையிடுகின்றார். தேவனுக்குப் பயந்து வாழ்ந்தவர்தான் தாவீது. அவருக்குத் தேவன் அளித்த கிருபை மிகப்பெரியது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் வம்சத்திலே தோன்றியது மட்டுமல்ல, தாவீதின் மகன் என்றே குறிப்பிடப்படுகின்றார். இது எத்தனை பெரிய கிருபை பாருங்கள்!!! இதனையே, "தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்." ( சங்கீதம் 18 : 50 ) என்று கூறுகின்றார் அவர். 

அன்பானவர்களே, இதே கிருபையினைத்  தேவன் நமக்கும் நமது சந்ததிக்கும் தருவேன் என்று வாக்களித்துள்ளனர். நாம் செய்யவேண்டியது தேவனுக்குப்பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதே.  "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." ( ஏசாயா 55 : 3 ) என்கிறார் சர்வ வல்லமையுள்ள தேவன். 

மனிதர்களாகிய நாம் நமது தலைமுறையினர் நல்ல ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்ற நோக்கத்தில் பல்வேறு சொத்து சுகங்களைச்  சேர்த்து வைக்கின்றோம். வங்கிகளில் பணங்களை முதலீடு செய்து வைக்கின்றோம். ஆனால் இவை அனைத்தையும்விட   நாம் செய்யவேண்டியது தேவனுக்குப் பயந்த நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியதுதான். அப்படி வாழும்போது, "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது."
என இன்றைய தியான வசனத்தில் கூறியுள்ளபடி  தேவ இரக்கம் நமது தலைமுறை மக்களுக்குச் சொந்தமாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Wednesday, May 08, 2024

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறது

 ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,189       💚 மே 11, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2 : 7 )

சபைகளில் முக்கியமான நேரம் பிரசங்க நேரமாகும். ஆனால் பெரும்பாலும் பல பாரம்பரிய சபைகளில் விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் பிரசங்க வேளையை அலட்சியப்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆவியின் அபிஷேகம் இல்லாத பல ஊழியர்களின் உப்புச்சப்பற்ற பிரசங்கங்கள். 

ஒரு ஊழியன் ஆவியின் அபிஷேகத்தோடு பரிசுத்த ஆவியானவரின் தொடர்பில் இருக்கும்போதுதான் அவனால் வல்லமையான ஆவிக்குரிய செய்தியினைக் கொடுக்கமுடியும்.  ஆனால், பாரம்பரிய சபைகளில் ஒவ்வொரு நாளுக்கென்றும் ஏற்கெனவே குறிக்கப்பட்ட வேத வசனங்களை வாசித்து போதகர்கள் செய்திகளைக் கொடுக்கின்றனர். அதிலும் பலவேளைகளில் வாசித்த வேத வசனத்துக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத உலக காரியங்களை அரசியல்வாதிகள் பேசுவதுபோல பேசி மக்களை நோகடிக்கின்றனர். 

ஆவியானவர் ஒரு மனிதனில் இருந்து செயல்படும்போது அந்த நாளுக்கு ஏற்ற செய்திகளை தேவன் கொடுப்பார். அப்படிக் கொடுக்கும் செய்தி தேவனே அளிக்கும் செய்தியானதால் மக்களது இருதயங்களைத் தொடுவதாக இருக்கும்.  ஆவியானவரே அந்தந்த நாளுக்கான செய்தியை போதகர் வழியாகக் கொடுக்கின்றார் என்பதனை எனது வாழ்வில்  தேவன் எனக்குப் புரியவைத்தார். 

நாகர்கோவிலிலிருந்து கொட்டாரம் சபைக்கு பேருந்தில் நான் பயணம்செய்யும்போது அன்று எந்த வசனத்தை சபையின் போதகர் எடுத்துக் பிரசங்கிக்கப்போகிறார் என்பதனை தேவன் வெளிப்படுத்தித் தந்தார். அந்தப் போதகருக்கும் அவரது தனிப்பட்ட ஜெபத்தில், "நீ இன்று இந்த வசனத்தை எடுத்து பிரசங்கம்பண்ணு" என தேவன் காண்பித்துள்ளார். இருவருக்கும் ஒரே வசனத்தை தேவன் வெளிப்படுத்தி  இதுவே மக்களுக்கான இன்றைய செய்தி என்று கூறியது, ஆவியானவரே மக்களுக்கான செய்தியைக் கொடுக்கின்றவர் என்பதனை விளக்குகின்றதல்லவா? 

இரண்டு நாட்கள் இந்த அனுபவத்தைத் தேவன் எனக்குக் கொடுத்தார். இரண்டு நாட்களும் அதேபோல அந்த ஊழியர் தேவன் எனக்குக் காண்பித்த வசனத்தை எடுத்துப் பிரசங்கித்தார்.  மனிதர்கள் கொடுப்பதல்ல இறைச்செய்தி ஆவியானவர் வெளிப்படுத்தி மனிதர்கள் மூலம் கொடுப்பதே இறைச்செய்தி.

இப்படி "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது கேட்க மனதுள்ளவன் கேட்கட்டும் என்கிறார் தேவன். தேவன் யாரையும் கட்டாயப்படுத்தமாட்டார். விருப்பமுள்ளவன் கேள், அப்படிக் கேட்டால் "அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன்." என்கின்றார் தேவன். 

நாம் உணவு சாப்பிடச் செல்லும்போது எந்த ஹோட்டலில் சிறப்பான உணவு கிடைக்கும் என்று பார்த்துப் பார்த்து உண்ணச் செல்கின்றோம். ஆனால் ஆவிக்குரிய உணவினை உண்பதற்கு அலட்சியம் காட்டுகின்றோம். ஆவியானவர் சொல்லுகிறதைக் கேட்பதற்குக் கருத்துள்ளவர்களாக வாழ்வோம். அப்படி ஆர்வமுள்ளவர்களாக வாழும்போதுதான்  தேவன் நமக்கு அரிய பல காரியங்களை வெளிப்படுத்தித் தருவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

சகலத்தையும் செய்ய வல்லவர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,187         💚 மே 10, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." ( யோபு 42 : 2 )

இந்த உலகத்தில் சில சர்வாதிகார அரசியல் தலைவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். இந்தத் தலைவர்கள் தங்கள் இருதயத்தில் எண்ணியத்தைச் செய்வார்கள். இவர்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது. ஹிட்லர் இத்தகைய சர்வாதிகாரியாக இருந்தார். இப்போதும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) ஒரு சர்வாதிகாரியாக இருக்கின்றார். அரசியலில் இவர்கள் செய்ய நினைத்தது தடைபடாது. வேண்டாதவர்களையும் எதிர் கருத்துக் கொண்டவர்களையும் கொன்று ஒழிப்பதே அவர்களது குணம். 

அற்பமான இந்த உலகப் பதவியை வைத்துக்கொண்டு அதுவும் குறுகிய ஒரு நிலப்பரப்புக்குள் உள்ள அதிகாரத்தைக்கொண்டு இவர்கள் இப்படிச் செயல்படுகின்றனர். ஆனால் இவர்களால் பெரும்பாலும் மக்களுக்கு நன்மைகள் எதுவும் ஏற்படாது. தேவன் நினைத்தால் இவர்கள் படுக்கையில் உறங்கி மீண்டும் விழித்தெழாமலேயிருக்கச் செய்யமுடியும் எனும் உண்மை உணர்வில்லாமல் வாழ்கின்றனர். 

அன்பானவர்களே, நமது தேவன் இத்தகைய இழிவான மனிதர்களைப் போன்றவரல்ல. "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்" என்று யோபு கூறுவதுபோல விசுவாசத்தோடு நாமும் கூறுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். தேவன் நம்மை அழிப்பதற்கல்ல; மாறாக, நம்மை மேலான வாழ்வு வாழவைப்பதற்காகவே அவர் சகலத்தையும் செய்கின்றார். ஆம் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் எனும்  விசுவாசம் நமக்கு இருக்குமேயானால் அவரிடமிருந்து அதிசயங்களையும் நமது வாழ்க்கையில் பெற்று அனுபவிக்கமுடியும்.  

அவரால் நமது பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கமுடியும், நோய்களிலிருந்து விடுதலையளிக்க முடியும், கடன் தொல்லைகள், பிரச்சனைகள், இக்கட்டுகள் இவைகளிலிருந்து விடுதலையளிக்க முடியும். முற்றிலும் நமது வாழ்க்கையினை மாற்றிட முடியும். ஆம்,  அவர் சகலத்தையும் செய்ய வல்லவர்; அவர் செய்ய நினைப்பது தடைபடாது.  நமக்கு எதிராகச் செயல்படுபவர்கள், நம்மை ஏளனம் செய்பவர்கள் இவர்களை ஒரேயடியாக தாழ்த்த அவரால் ஆகும். 

இதனையே பிலதெல்பியா சபையின் தூதனுக்கு எழுதவேண்டி தேவன் கூறிய வார்த்தைகளும் உறுதிப்படுத்துகின்றன.  "என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது" ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 7 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, ஒருவரும் திறக்கமுடியாதபடி பூட்டுகின்றவரும் ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும்தான் நமது தேவன். எனவே நமக்கு எதிராக யாரும் செயல்படமுடியாது. இத்தகைய வல்லமையுள்ள பரிசுத்த தேவனை நமது பிதாவாகக் கொண்டுள்ளது எவ்வளவு மகிமையான காரியம் பாருங்கள். நாம் அவரது பிள்ளைகளாக வாழும்போது இந்த சர்வ வல்லவரின் உடனிருப்பும் பாதுகாப்பும் நமக்கு நிச்சயம் உண்டு. எனவே யோபுவைபோல விசுவாசத்தோடு நாமும் "தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்." என்று அறிக்கையிடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

ஏவாள் வஞ்சிக்கப்பட்டதுபோல வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,186     💚 மே 09, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை." ( 1 யோவான்  2 : 4 )

இயேசு கிறிஸ்துவை அறிவது என்பது மேலான ஒரு அனுபவமாகும். இயேசு கிறிஸ்துவை வெறுமனே ஆராதிப்பதும் நமது தேவைகளுக்காக மட்டும் தேடுவதும்  அவரை அறிவதல்ல. மாறாக, நாம் நமது குடும்பத்து உறவினர்களுடன் உறவோடு வாழ்வதுபோல அவரோடு உறவை வளர்த்துக்கொள்வதே அவரை அறிவதாகும். 

இப்படி அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்வார்கள். ஆறது கற்பனை சிறிதான ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்புசெய்வதும் தன்னை அன்பு செய்வதுபோல பிறரை அன்பு செய்வதுமே அவரது கற்பனை.  அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்பவன் இந்தக் கற்பனைகளைக் கைக்கொள்பவனாக இருக்கவேண்டும். இப்படி "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்." ( 1 யோவான்  2 : 3 )

எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை அன்புசெய்பவன் அவரை மட்டுமே அன்புசெய்பவனாக வாழ்வான். எந்தச் சூழ்நிலையிலும் அவருக்குக்  கொடுக்கவேண்டிய முன்னுரிமையை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் வாழ்வான். இப்படி, "அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  2 : 5 )

கிறிஸ்துவுக்குக் கொடுக்கவேண்டிய முன்னுரிமையை நாம் பிற புனிதர்களுக்கோ, உலக செல்வங்களுக்கோ கொடுப்போமானால் நாம் அவரை பூரணமாக அன்பு செய்யவில்லை என்றுதான் பொருள். அவரிடம் நேரடியாக நமது உள்ளத்தை வெளிப்படுத்திப் பேசாமல் பரிந்துரைவேண்டி மற்றவர்களை உதவிக்குத் தேடுவதும் அழைப்பதும் நாம் அவரை பூரணமாக அன்பு செய்யவில்லை என்பதையே வெளிப்படுத்தும்.  

ஒரு பெண்ணை உண்மையாக காதலிப்பவன் அந்தப் பெண்ணை மட்டுமே எண்ணி வாழ்வானேத்தவிர எல்லா பெண்களையும் அன்புசெய்யமாட்டான். இதனையே, "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 2, 3 ) என்று எழுதுகின்றார் அப்போஸ்தலராகிய பவுல். 

ஆம், தந்திரத்தால் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதுபோல நாமும் வஞ்சிக்கப்படாமல் இருப்போம்.   அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதிருந்தால் நாம் பொய்யர்கள். ஏவாளைப்போல வஞ்சிக்கப்பட்டவர்கள். அவரையே அறிந்திருக்கிறோம் என்று வெறுமனே சொல்லிக்கொள்ளாமல் அவரையே  அன்புசெய்து அவரோடு நெருங்கிய உறவுகொண்டு வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Tuesday, May 07, 2024

கிறிஸ்துவை அன்புசெய்வது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,185       💚 மே 08, 2024 💚 புதன் கிழமை 💚

"நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்." ( யோவான் 16 : 27 )

அன்பானவர்களே, சர்வலோகத்தையும் படைத்து ஆண்டு நடத்தும் தேவாதி தேவனது அன்பைப் பெறுவது எவ்வளவு மேலான காரியம் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அந்த மேலான காரியத்தை நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன்மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது பிதா நம்மேல் அன்புகூருகின்றார்.  இப்படி பிதா நம்மேல் அன்புகூருவதால் என்ன பலன் நமக்குக் கிடைக்கின்றது? அது இந்த உலகத்தில் எதற்கும் கலங்காமல் துணிவுடன் இருக்கும் பலத்தை நமக்குத் தருகின்றது. மேலும், பிதா நம்மேல் அன்புகூருவதால் அவர் நம்மைத் தனியே இருக்க விடமாட்டார். 

இந்த உலகத்தில் பல இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. மிகப்பெரிய நோயோ, கடன் பாரமோ நம்மை நெருக்கும்போது நம்மிடம் அதுவரை அன்புடன் பழகிய நண்பர்களும் சுற்றத்தாரும் நம்மைவிட்டு நீங்கிவிடுவர். அத்தகைய நிர்க்கதியான வேளைகளில் பிதாவாகிய தேவன் மட்டும் நம்மைக் கைவிடமாட்டார். காரணம், அவர் நம்மை அன்புசெய்வதால்.  

இயேசு கிறிஸ்துவுக்கு இத்தகைய நெருக்கடியான காலம் ஏற்பட்டபோது அவரோடு உண்டு உறங்கிய அனைவரும் அவரைவிட்டு  ஓடிவிட்டனர். ஆனால் பிதாவாகிய தேவன் மட்டும் அவரோடு இருந்தார். இதனையே இயேசு கிறிஸ்து, "இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16 : 32 ) என்று கூறினார். 

இன்றைய தியானவசனம் நமக்குக் கூறும் உண்மை இதுதான். அதாவது நாம் இயேசு கிறிஸ்துவின்மேல் அன்புகூர்ந்து,  அவர் பிதாவாகிய தேவனிடமிருந்து வந்த மெய்யான தேவ குமாரன் என்று நாம் விசுவாசிப்போமானால் இயேசு கிறிஸ்துவைத் தனித்திருக்கவிடாமல் அவரோடுகூட எப்போதும் பிதாவாகிய தேவன் தங்கியிருந்ததுபோல நம்மோடும் இருப்பார்.

இந்த உலகமே நம்மைக் கைவிட்டாலும், தகுதியில்லாதவர்கள் என்று நம்மைப் புறம்பே தள்ளினாலும், பிதாவாகிய தேவன் நம்மைத் தள்ளாமல் நம்மோடுகூட இருந்து நமக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பார். விசுவாசத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புசெய்வோம்.  எப்படி அவரை அன்பு செய்வது என்பதனையும் இயேசு நமக்குக்  கற்பித்துள்ளார்.

"நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்." ( யோவான் 15 : 10 ) கிறிஸ்துவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரை நாம் அன்புசெய்வதை உறுதிப்படுத்துவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                            

Monday, May 06, 2024

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,184     💚 மே 07, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 58 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர்தான் ஆபிரகாம். அவரே இஸ்ரவேல் குலத்தினரின் தந்தை. இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாகப் பிறந்திருந்தாலும் அவர் மனிதனல்ல. இந்த உலகமே அவரால்தான் படைக்கப்பட்டது. எனவேதான் நாம் அவரைக் கடவுள் என்கின்றோம். 

"அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1 : 2, 3 ) என்று வாசிக்கின்றோம். உலகத்தையே அவர் படைத்தார் என்பதால் அவர் ஆபிரகாமுக்கு முந்தினவர். இதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். 

ஆனால் இன்று உலகில் வாழும் பல கிறிஸ்தவர்களைப்போல யூதர்களாலும் இதனை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே அவர்மேல் கோபம்கொண்டு கல்லெறிய முயன்றனர். "அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்." ( யோவான் 8 : 59 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, அன்னை மரியாவிடம் மனிதனாக கிறிஸ்து பிறந்திருந்தாலும் அவர் மனிதனல்ல. உலகினில் தான் மனித உடலெடுக்க அன்னை மரியாளை கருவியாகத் தெரிந்துகொண்டார். எனவே அவர் அன்னை மரியாளுக்கு முந்தினவர். 

கிறிஸ்துவை வல்லமையுள்ள தேவனாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிக் கூறுவதால் அன்னை மரியாவை நாம் தாழ்வாக எண்ணுகின்றோம் என்று பொருளல்ல, மாறாக கிறிஸ்து காலங்களையும் யுகங்களையும்  கடந்த தேவாதி தேவன் என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதனால்தான். 

வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பிறந்த ஒருவராக நாம் அவரைப் பார்த்தோமானால் அவரை நாம் கடவுளாக முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லையென்றும்,  புத்தர், காந்தி,  அரிஸ்ட்டாட்டில் போன்று ஒரு மகானாக அவரை நாம் நம்பியுள்ளோம் என்றுதான் பொருள். அப்படி நம்பிக்கொண்டிருப்பவர் மீட்பு அனுபவத்தை அடையவும் முடியாது, பாவத்திலிருந்து முழு விடுதலையை அடையவும் முடியாது. 

ஆம் அன்பானவர்களே, அவர் ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே இருக்கிறார்; உலகம் தோன்றுவதற்குமுன்னமே இருக்கிறார். இதனையே அவர் பிதாவை நோக்கி ஜெபித்தபோது கூறினார், "பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினால் இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்." ( யோவான் 17 : 5 ) என்று. இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்  கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பெயர் கிறிஸ்தவர்களே.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Sunday, May 05, 2024

கர்த்தர் என் பாத்திரத்தின் பங்கு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,183     💚 மே 06, 2024 💚 திங்கள்கிழமை 💚

"கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ( சங்கீதம் 16 : 5 )


இன்றைய தியான வசனம் தாவீது கர்த்தரை எப்படித் தனது வாழ்க்கையில் கொண்டிருந்தார் என்பதனை நமக்கு விளகுவதாக உள்ளது. 

சுதந்திரம் என்பது உரிமையைக் குறிக்கும். அதாவது, கர்த்தர் எனது உரிமையானவர். இதனையே அடுத்த வார்த்தைகளில் அவர் கூறுகின்றார்,  "அவர் என் பாத்திரத்தின் பங்குமானவர்" என்று. ஒரே வீட்டில் உரிமையுடன் வாழ்பவர்கள் ஒரே உணவைத்தான் உண்பார்கள். அவர்களது உணவுப்பாத்திரம் வேறுபடுவதில்லை. அதுபோல, கர்த்தரோடு நான் ஒரு தாய் தகப்பனோடு உரிமையோடு ஒரே வீட்டில் வாழ்ந்து ஒரே உணவை உண்பதுபோல உண்ணும் மகனைப்போன்றவன் என்கிறார் தாவீது. 

அன்பானவர்களே, இதுவே நாம் கர்த்தரோடு கொள்ளவேண்டிய உறவு. வெறும் நன்மைகளைப் பெறுவதற்கு மட்டுமல்ல, மாறாக அவரை நம்மோடு நம் வாழ்க்கையாக மாற்றவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

சோர்வுகள், துன்பங்கள், நோய்கள் நமக்கு வரலாம். காரணம், நாம் இந்த உலகத்தில்தான் வாழ்கின்றோம். எனவே எல்லா உலகப் பாடுகளும் நமக்கும் உண்டு. ஆனால் நாம் கர்த்தரோடு ஒரே பாத்திரத்தில் உண்ணுமளவு உரிமையுள்ளவர்களாக வாழ்வோமானால் நாம் எந்தத் துன்பச் சூழ்நிலையிலும் அசைவுறமாட்டோம். எனவேதான் தாவீது தொடர்ந்து கூறுகின்றார், "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை." ( சங்கீதம் 16 : 8 )

ஆவிக்குரிய வாழ்வில் நாம் கொள்ளவேண்டிய உறுதி இதுதான். அதாவது, கர்த்தரோடு நமக்குள்ள உறவை வலுப்படுத்தி, ஒரே குடும்பத்தில் வாழ்பவர்களைப்போல வாழவேண்டும். இதுவே ஆவிக்குரிய வாழ்வில் நாம் எடுக்கவேண்டிய முக்கியமான நிலை. 

இதனையே, ஆவிக்குரிய வாழ்வு ஒரு ஓட்டப்பந்தயத்தைப் போன்றது என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது நம் கண்கள் இறுதி இலக்கைநோக்கி  இருக்கவேண்டுமேத் தவிர நம்மோடுகூட ஓடுபவர்களையும் சுற்றிலும் நிற்பவர்களை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் வெற்றிபெற முடியாது. எனவே நாம் பரிசைப் பெற்றுக்கொள்ளத் தக்கவர்களாக ஓடவேண்டும். "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 )

சூழ்நிலை, பிரச்சனைகளை நோக்காமல் கர்த்தரையே இலக்காகக் கொண்டு வாழ்வோம். அவரை நமது குடும்பத்து நபராக, நம்மோடு ஒரே பாத்திரத்தில் உண்டு உறவோடு வாழ்பவராக வாழ்வில் நிறுத்திக்கொள்வோம்.  அப்படி வாழ்வோமானால் அவரும் நமது அனைத்துக்கும் போதுமானவையாக இருப்பார். இதனையே இன்றைய வசனத்தில் இறுதியாகத் தாவீது கூறுகின்றார், "என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." ஆம், அப்படி நாம் வாழும்போது இந்த உலகிலும் மறுஉலகிலும் தேவனோடுள்ள நமது உரிமை காப்பாற்றப்படும். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல நமது பரிசினையும்நாம் பெற்றுக்கொள்வோம். 


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Saturday, May 04, 2024

பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,182      💚 மே 05, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"ஆதலால்நாம் இரக்கத்தைப் பெறவும்ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும்தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 )

பழைய ஏற்பாட்டுக்கால ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் கிருபாசனம் இருந்ததுகிருபாசனத்தின்மேல் உடன்படிக்கையின் பெட்டி இருந்ததுஅங்கிருந்துதான் தேவன் மோசேயுடன் பேசுவார். "அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்." ( யாத்திராகமம் 25 : 22 ) என்று வாசிக்கின்றோம்

ஆனால் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிரதான ஆசாரியன்  மட்டுமே இந்த மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் செல்ல  முடியும்மேலும் இந்த இடத்தைக்குறித்து மக்களிடையேயும்  ஆசாரியர்களிடமும் ஒருவித அச்சம் இருந்ததுகாரணம்  தவறுதலாக அல்லது தகுந்த முன் தயாரிப்பின்றி இங்கு  செல்வோரை தேவன் அழித்துவிடுவார்எனவே பழைய  ஏற்பாட்டுக்கால  மக்கள் தேவனை அச்சத்துடனேயே பார்த்தனர்

ஆனால்இந்த பயத்தையும் தேவனிடம் ஒரு தகப்பனிடம் பேசுவதுபோல தைரியமாகப் பேசும் உரிமையையும் நமது புதிய ஏற்பாட்டின் பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து நமக்கு உருவாக்கியுள்ளார்எனவேபழைய ஏற்பாட்டுக்கால ஆசாரியர்கள்போலவும் மக்களைப்போலவும் நாம் அச்சப்படத் தேவையில்லைகிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அனைவருமே ஆசாரியர்கள்தான்எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்களோஉங்களை அந்தகாரத்தினின்று தன்னுடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்பரிசுத்த ஜாதியாயும்அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1பேதுரு 2:9) என்று கூறுகின்றார்.

இன்று தேவன் நம்மோடு பேசுவது ஒரு இனிய அனுபவமாக இருக்கின்றதுஅதற்காக ஆவலாய் ஏங்குகின்றோம்ஆனால் பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனது குரலைக் கேட்டு அஞ்சினர்எனவேதான்,  "மோசேயை நோக்கிநீர் எங்களோடே பேசும்நாங்கள் கேட்போம்தேவன் எங்களோடே பேசாதிருப்பாராகபேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்." ( யாத்திராகமம் 20 : 19 )"

அன்பானவர்களேஇஸ்ரவேல் மக்களைப்போல நாம் பயப்படாமல்அவரது இரக்கத்தைப் பெறவும்ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும்தைரியமாய் அவரிடத்தில் நெருங்கிச் சேர்ந்து அவரோடு ஒரு தகப்பனிடம் பேசுவதுபோல தனிப்பட்ட உறவுடன் பேச முடியும்கிருபையாய் நமக்கு இந்த உரிமையைப் பெற்றுத்தந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்