Saturday, April 13, 2024

நமது பேச்சுக்கள் பதிவுசெய்யப்படுகின்றன

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,161      💚 ஏப்ரல் 14, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருஇவைகளில் நிலைகொண்டிருஇப்படிச் செய்வாயானால்,  உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும்  இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 )

சுமார் இருபத்தியெட்டு ஆண்டுகளுக்குமுன் நான் ஞாயிறு தோறும் கன்னியாகுமரி  அருகிலுள்ள கொட்டாரம் எனும் ஊரிலிருக்கும் .பி.சிசர்ச்  ஆராதனையில் கலந்துகொள்வேன்அங்கு பாஸ்டராக ஜான்சன்டேவிட் ஐயா இருந்தார்கள் (இப்போது இறந்துவிட்டார்). மிகப்  பெரிய தேவ மனிதனாகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தார்  அவர்ஒரு மறைவானஆரவாரமில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர். என்னை முதல் முதல் பார்த்தபோதே, அவருக்கு நான் அறிமுகமில்லாதவனாக இருந்தபோதே என்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறி என்னைப் பிரமிக்கவைத்தார்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் அவரது பல ஆவிக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். ஒருமுறை அப்படி  அவர் என்னிடம் பேசும்போது அவருக்கு ஆண்டவர்  அளித்தத்  தரிசனத்தைக் குறித்து விளக்கினார்அவர் ஆலயத்தில்போதிக்கும் போதனைகள் அனைத்தும் ஒரு பெரிய  டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாராம். இதனை அவர் பிரசங்கம் செய்யும் அதே நேரத்தில்ஆண்டவர் அவருக்குக் காண்பித்தாராம்அப்போது ஆண்டவர் அவருக்கு மேற்படி வசனத்தை உணர்த்தி, "நீ போதிப்பதில்  கவனமாக இருஎன்றாராம்நாம் பேசும் ஒவ்வொரு பேச்சும்  நியாயத் தீர்ப்பு நாளில் ஆண்டவரால் நினைவுகூரப்படும்  என்பதற்கு இது ஒரு அடையாளம்.

அப்போது நான் ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகட்டத்தில்  இருந்தேன். எந்த ஆவிக்குரிய அனுபவங்களும் அப்போது எனக்கு இல்லை. அப்போது பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா என்னிடம், "தம்பி பிற்காலத்தில் நீ ஊழியம் செய்யும்போது இதை  மறந்திடாதே " என்று அறிவுரை கூறினார்அப்போது அப்படி  நான் போதிக்கும் நிலை வரும் என்று நினைத்துப்  பார்த்ததில்லைஆனால் இன்று ஒவ்வொருநாள் வேதாகமச்  செய்தி எழுதும்போதும் இந்த வார்த்தைகள் என்னை  அச்சுறுத்துவனவாகவே உள்ளன. ஆம், நமது செயல்கள், பேச்சுக்கள் அனைத்தையும் தேவன் கவனித்துக்கொண்டிருக்கின்றார். 

அன்பானவர்களேஇது எனக்கு மட்டுமல்லநாம்  அனைவருக்குமே பொருந்தும்கிறிஸ்தவர்கள் நாம்  அனைவருமே கிறிஸ்துவை போதிக்கக் கடமைப்பட்டவர்கள்ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கிறிஸ்துவை  அறிவிக்கின்றோம்அதனால் நமது செயல்பாடுகள் பிறருக்குச் சாட்சியளிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.

அந்தியோகியாவில் கிறிஸ்துவைப்போல வாழ்ந்த அவரது  சீடர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் அவர்களைக்  கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர் (அப்போஸ்தலர் பணி 11:26). ஆனால் இன்று பலரும் இயேசு கிறிஸ்து அரசியல் கட்சி  துவங்குவதுபோல கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தார் எனத் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றோம்மேற்படி  வசனத்தின்படி சீடர்கள் வாழ்ந்ததால் இந்த வசனத்தின்படி  அவர்களது உபதேசத்தைக் கேட்டவர்களையும் அவர்கள்  இரட்சிப்பு அனுபவத்தினுள் நடத்தினார்கள்அப்படி அந்த மீட்பு அனுபவத்தைப் பெற்றவர்களே கிறிஸ்தவர்கள்.

நாமும் இன்று நமது பேச்சு செயல் இவற்றில் எச்சரிக்கையாய் இருப்போம்நமது ஒவ்வொரு பேச்சும் செயலும் தேவனால்  கவனிக்கப்படுகின்றன எனும் அச்ச உணர்வு இருந்தால்  மட்டுமே நாம் ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ  முடியும். அவரது நியாயத் தீர்ப்புகள் எதார்த்தமானவை. நியாயத் தீர்ப்புநாளில் நமது வாழ்க்கைச் செயல்பாடுகளை அவர் உணர்த்தும்போது நாம் மறுக்கமுடியாது; அவரை எதிர்த்து நமது தவறுகளை நியாயப்படுத்தி பேசமுடியாது முடியாது. எனவே, அச்ச உணர்வோடு தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ முயலுவோம்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Friday, April 12, 2024

கிருபையினால் மீட்பு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,160       💚 ஏப்ரல் 13, 2024 💚 சனிக்கிழமை 💚


"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." ( தீத்து 3 : 5 )

நாம் கிறிஸ்து இயேசுவினால் மீட்கப்பட்டதற்கு நமது நீதிச் செயல்கள் காரணமல்ல; மாறாக அவரது இரக்கமே காரணம். இந்த உலகத்தில் பலர் நல்ல நீதிசெயல்கள் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறவில்லை. ஆலய காரியங்களில் முழுமூச்சாக ஈடுபட்டுப்  பல பக்திச்  செயல்பாடுகளில்  ஈடுபட்டாலும் பலரும் மீட்பு அனுபவத்தைப் பெறவில்லை. 

இன்று நாம் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெற்றுள்ளோம் என்றால் அதற்குக் காரணம் அவர் நம்மேல் வைத்தக் கிருபைதான் காரணம். நாம் செய்த நற்செயல்களல்ல மாறாக முற்றிலும் தேவ கிருபையால் நாம் மீட்கப்பட்டுள்ளோம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 9 ) மேலும்,  "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 ) என்று வாசிக்கின்றோம்.

இதனை நாம் ஒரு சிறு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம். சமுதாயத்தில் நல்ல செல்வாக்குள்ள தனது  தகப்பனார் அடிக்கடி அறிவுறுத்தியும் துன்மார்க்க மகன் அவனது நண்பர்களோடு சேர்ந்து குடித்து பலருடன் தகராறுசெய்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டான். அங்கு காவலர்களால் அடிபட்டு அவமானப்பட்டபோது அவனுக்குத் தகப்பனார் கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வந்தன. பலமுறை சிந்தித்து, தான் யார் என்பதை போலீசாரிடம் சொல்லிவிட முடிவெடுத்தான்.

அவன் தான் யார் என்பதைக் கூறியபோது அவன் இவ்வளவு பெரிய மனிதனின் மகன் என்பதை போலீசாரால் நம்ப முடியவில்லை. அந்தத் தந்தையைத்  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். அந்த மகனும்  தந்தையிடம் அழுது மன்னிப்பு வேண்டினான். தகப்பன் கூறிய பின்னர் அவனைப் போலீசார்  விடுவித்தனர். அவன் போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டான்; மீட்கப்பட்டான். அதன்பின்னர் அவனுக்குத் தான் தந்தைக்கு எதிராகச் செய்த செயல் அவமானமாய் இருந்தது. அவரது நற்பெயருக்கு கேடு விளைவித்தததற்காக மனம் வருந்தினான். இனிமேல் பழைய நண்பர்களோடு சேரக்கூடாது என்று உறுதியெடுத்துத் திருந்தினான்.  

அந்த மகன் இதற்குமுன் தந்தையோடு சேர்ந்து பல நல்ல சமுதாயத் தொண்டுகளும்  செய்துள்ளான். ஆனால் நல்லது செய்தாலும் துன்மார்க்க நண்பர்களும் துன்மார்க்கச் செயல்பாடுகளும் அவனிடம் இருந்து அவனை கேடுகெட்டவனாகவே மாற்றியிருந்தது. ஆனால் இப்போது இந்த ஒரு சம்பவம் தகப்பனின் இரக்கத்தை உணரச்செய்து  அவனை மனம் திரும்பச் செய்தது. 

அன்பானவர்களே, இந்தத் தகப்பன் தனது மகன் ஏற்கெனவே செய்த பல நல்ல செயல்களுக்காக அவனிடம் அன்புகூரவில்லை. மாறாக, அவன் அவரது சொந்த மகன் என்பதால் காவலர்களின் பிடியில் சிக்கியபோது அன்புகூர்ந்து அவனை விடுவிக்க முயற்சியெடுத்தான். இப்படியே, "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." ( ரோமர் 5 : 8 ) ஆம் கிறிஸ்து நமது அன்பானத் தகப்பன். 

இந்தத் துன்மார்க்க மகனைப்போலவே நாம் இருக்கின்றோம். நமது தகப்பனாகிய கிறிஸ்து இயேசுவின் அன்பை நாம் உணராமல் இருக்கின்றோம். அவருக்கு எதிரான பாவச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், அவரை விசுவாசத்தோடு நாம் நோக்கிப்பார்த்து நமது பாவங்களை ஒத்துக்கொண்டால் மீட்கப்படுவோம். ஆம் அன்பானவர்களே, நாம் நல்ல செயல்கள் செய்யாதவர்களாக இருந்தாலும் கிறிஸ்துவின் கிருபையால் மீட்கப்படுவோம். அதன்பின்னர்தான் அவரது அன்பினை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும். 

"ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்." ( ரோமர் 4 : 5 ) 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Thursday, April 11, 2024

சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே பேசினார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,159        💚 ஏப்ரல் 12, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து," ( எபிரெயர் 11 : 24 )

மோசேயின் பல்வேறு குணங்கள் நம்மையும்  ஆவிக்குரிய வாழ்வில் நிதானித்து அறிந்து பின்பற்றிட வழி காட்டுகின்றது. 

மோசேயினுடைய வாழ்க்கை வித்தியாசமானது.  பிறக்கும் எபிரேயர்களுடைய ஆண்பிள்ளைகள் அனைத்தையும் நைல் நதியில் போட்டுவிடவும் பெண்பிள்ளைகளை மட்டும் உயிரோடு வைக்கவும் பார்வோன் மன்னன் எல்லோருக்கும் கட்டளையிட்டான். (யாத்திராகமம் 1:22)  மோசேயின் தாய் தனக்குப் பிறந்த மகனான மோசேயை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்து வளர்த்தாள். அதற்குமேல் அதனை வளர்க்கமுடியாமல் நைல்நதி ஓரத்தில் நாணல்பெட்டியில் வைத்து விட்டாள். அவனை பார்வோனின் மகள் எடுத்துத்  தனது மகனாக வளர்த்தாள். 

ஆனால் வளர்ந்தபின்னர் மோசேக்குத் தனது பிறப்பின் பின்னணி தெரிந்தது.  அதன் பின்னால் அவனால் அரண்மனை வாழ்க்கையில் தொடர்ந்து வாழமனமில்லை. அரண்மனையில் ராஜ வாழ்க்கை  வாழ்ந்து, பார்வோனின் மகளின் மகன் (பார்வோன் மன்னனின் பேரன்) என்ற மேலான நிலை இருந்தபோதும் மோசே அதனைவிட தேவனுடைய மக்களாகிய எபிரேயர்களுடன் சேர்ந்து பாடு அனுபவிப்பதையே தெரிந்து கொண்டார். 

அரண்மனையில் பல்வேறு பாவ காளியாட்டுகள் சந்தோஷமளிக்கக் கூடியவைகளாக இருந்தபோதும் அவற்றைவிட தனது மக்களுடன் பாடு அனுபவிப்பதையே மோசே தெரிந்துகொண்டு அரண்மனை வாழ்கையினைத் துறந்து வெளியேறினார். இதனை நாம், "அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்." ( எபிரெயர் 11 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம். 

எபிரேய நிருப ஆசிரியர் இது மோசேயின் விசுவாசத்தினால்தான் என்று கூறுகின்றார். இதனையே இன்றைய தியான வசனம், "விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து," என்று கூறுகின்றது. மோசே ஒரு சராசரி மனிதனாக இருந்திருந்தால் அரண்மனையிலேயே வாழ்ந்து அடுத்த அரச பதவியினை அடைந்திட முயன்றிருப்பான். ஆனால் தேவன்மேலிருந்த விசுவாசத்தினால் மோசே அரண்மனை வாழ்கையினைத் துறந்தார். 

மட்டுமல்ல, இந்த "மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்." ( எண்ணாகமம் 12 : 3 ) என்று வாசிக்கின்றோம். பாவத்தின்மேல் வெறுப்பு, செல்வத்தின்மேல் பற்றில்லாத நிலை, சாந்தகுணம் போன்ற குணங்கள் இருந்ததால், "ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்".
( யாத்திராகமம் 33 : 11 )

இவை அனைத்துக்கும் மூல காரணம், தேவன்மேல்கொண்ட விசுவாசத்தினாலே தான்.   அன்பானவர்களே, பாவ சந்தோஷங்களையும், செல்வம், பதவி போன்றவற்றையும் வெறுத்து ஒதுக்கி தேவன்மேல் உறுதியான விசுவாசத்தோடு தேவ ஐக்கியத்தில் வாழ மோசே நமக்கு வழி காட்டுகின்றார். பெரிய உலக ஆசீர்வாதம் நமக்குமுன் இருந்தாலும் அதனைவிட தேவனுக்குமுன் உண்மையாய் வாழ நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் தேவ ஐக்கியத்தில் நாமும் உறுதிப்படலாம். 

"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்" என்று கூறப்பட்டுள்ளபடி தேவன் நம்மோடும் பேசுவார். அவர் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுபவரல்ல. இந்த அனுபவதில் வளருவதே ஆவிக்குரிய வளர்ச்சி. விசுவாசத்தோடு தேவ ஐக்கியத்தில் வளர முயற்சியெடுப்போம். அதற்கு, மோசே செய்ததுபோல தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கக்கூடிய  சில காரியங்களை நம்மைவிட்டு ஒதுக்கிவைப்போம். அதற்கு ஆவியானவர்தாமே நமக்குஉதவுவாராக. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Monday, April 08, 2024

வேதாகமத்தின் அடிப்படையில் யாருக்கு நாம் வாக்களிப்பது?

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,158      💚 ஏப்ரல் 11, 2024 💚 வியாழக்கிழமை 💚


"துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்." ( நீதிமொழிகள் 24 : 24 )
  
தேர்தல் காலத்தில் நமக்கு உணர்வூட்டக்கூடிய வசனம் இன்றைய தியான வசன  மாகும்.  பொதுவாக அரசியல்வாதிகள் பலரும் துன்மார்க்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்குள் நாம் கலக்கமில்லாமல் அமைதலான வாழ்க்கை வாழ உதவக்கூடிய  மனிதர்களைப்  பொறுக்கியெடுத்து நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

துன்மார்க்கருக்கு வேதாகமம் குறிப்பிடும் அடையாளங்களைப் பார்த்து நாம் ஒருவரைத் தள்ளி இன்னொருவருக்கு வாக்களிக்கவேண்டுமானால் இன்றைய சூழலில்   நாம் யாருக்கும் வாக்களிக்கமுடியாது. ஆனால் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நாம் நமது கடமையைச் செய்யவேண்டியது அவசியம். எனவே, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு  வழங்கக்கூடியவர்களையும் கொடூரமான சட்டங்களால் மக்களை வதைக்காதவர்களையும்  நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.

இன்றைய வசனம், "துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்."  என்று கூறுகின்றது. எனவே, நாம் மேலே பார்த்தபடி, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு  வழங்கக்கூடியவர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டியுள்ளது. இப்படி இவற்றுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு நாம் வாக்களிக்கும் போது "துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய்" என்று நாம் கூறுவதாகப் பொருள்.  

ஆனால் கிறிஸ்தவர்களில் சிலர் இப்படி நீதி, நேர்மை, சம உரிமை, சாமவாய்ப்பு இவற்றை மறுக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க ஆதரவு திரட்டுகின்றனர். சிலர் அத்தகைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றனர்; வேட்பாளர்களாகவும் நிற்கின்றனர்.  இவர்களைப்பார்த்து வேதம் எச்சரிக்கின்றது, "தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா 5 : 20 )

மேலும், "ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ! விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?" ( ஏசாயா 10 : 1-3 ) என்கின்றார் உன்னதமான கர்த்தர்.

மேற்படி வசனங்களில் "ஐயோ" எனும் வார்த்தை மறைமுகமாகச்  சாபத்தைக் கூறுகின்றது. அதாவது அப்படிப்பட்டவன் கடவுளின் பார்வையில் ஐயோ என்று போய்விடுவான். கைவிடப்பட்டுக் கடவுளின் சாபத்தைப் பெறுவான். மட்டுமல்ல, இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களித்து துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, அத்தகைய மனிதன் கடவுளின் சாபத்தையும் மனிதர்களின் சாபத்தினையும் பெறுவான். "விசாரிப்பின் நாளிலும் (நியாயத்தீர்ப்பு நாளில்)  தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்?"  என்கின்றார் தேவன்.

எனவே,  நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை சமநீதி, சமவாய்ப்பு  வழங்கக்கூடியவர்களையும், கொடுமையான சட்டங்களை எழுதி, செயல்படுத்தி மக்களை வதைக்காதவர்களையும்  தேவன் நமக்குத் தலைவராகத்  தரும்படி ஜெபிக்கவேண்டியதும் அத்தகைய கட்சியினருக்கு வாக்களிக்கவேண்டியதும் நமது கடமையாகும். மாறாக, அத்தகையவர்களுக்கு எந்தவிதத்திலும் ஆதரவளிப்பது வேதாகமத்தின் அடிப்படையில்  நமக்கும் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் சாபத்தைக் கொண்டுவரும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Sunday, April 07, 2024

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு உரிமையுண்டு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,157    💚 ஏப்ரல் 10, 2024 💚 புதன்கிழமை 💚

"எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது." ( 1 கொரிந்தியர் 10 : 23 )

தேவன் மனிதனைப் படைத்து பூமியிலுள்ள அனைத்தின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக்கொடுத்தார். மனிதனை தேவன் ஒரு ரோபோ இயந்திரம் போல படைக்கவில்லை. அவனுக்குச் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். இப்படி இல்லையானால் நாம் அனைவரும் தேவ கட்டளைக்குள் அவர் சொல்வதை மட்டுமே செய்துகொண்டிருப்போம். இப்படி இருந்தால் மனிதனுக்கு சுதந்திரத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போயிருக்கும். 

இப்படி, எல்லாவற்றையும் அநுபவிக்க நமக்கு உரிமை இருந்தாலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். நாம் கிறிஸ்துவுக்குள் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டுமானால் சில பல காரியங்களை நாம் தியாகம் செய்யவேண்டும். உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் தேவனால் படைக்கப்பட்டிருந்தாலும் அவைகளை தேவன் ஒரு நோக்கத்துக்காகப் படைத்திருப்பார். ஆனால் மனிதன் தனது மூளை அறிவினால் பல பொருட்களை தேவனுக்கு ஏற்பில்லாதவையாக மாற்றிவிட்டான். 

இப்படி இருப்பதால், "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்." ( 1 கொரிந்தியர் 6 : 12 ) என்கின்றார் பவுல் அடிகள். தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள் தவிர மனிதனால் உருவாக்கபட்டப் பல பொருட்களையும் அனுபவிக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால் எல்லாம் தகுதியாகவும் இராது நாம் எவற்றுக்கும் அடிமையாகிவிடவும் கூடாது.  

இந்த உலகத்தில் நாம் வாழ பணம், வீடு, ஆடைகள், உணவு  எனப் பலவித பொருட்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. இவைகளை அனுபவிக்க நமக்கு உரிமை உள்ளது. ஆனால் இவைமட்டுமே வாழ்க்கை என எண்ணி இவற்றைப் பெறுவதற்கு நாம் தகாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது நாம் அந்தப் பொருளுக்கு அடிமையாகியுள்ளோம் என்று பொருள். 

எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நமக்கு எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமை இருந்தாலும் நமது ஆத்துமத்துக்குத் தகுதியான, நமது பக்திவிருத்தியை அதிகரிக்கச்செய்யக்கூடிய பொருட்களை மட்டும் நாம் உபயோகிக்கவேண்டும். மட்டுமல்ல, எவற்றுக்கும் நாம் அடிமைகள் ஆகிவிடக்கூடாது.  

பக்திச் செயல்பாடுகளில் மூழ்கி பல்வேறு ஆன்மீகப் பணிகளைச்  செய்யும் சிலர் மறுபுறம் முழுநேரமும் தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பது, கிரிக்கெட் விளையாட்டுகளை ரசிப்பது, மற்றும் நகைகள், புடவைகள், திரைப்படங்கள்  போன்ற பலவற்றுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். இவை எவையும் நமக்கு பக்திவிருத்தியோ, ஆத்தும முன்னேற்றத்தையோ தரப்போவதில்லை. 

உலகினில் நாம் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் எனினும் நம்மிடம் இத்தகைய அடிமைத்தனங்களோ பக்திவிருத்தி ஏற்படுத்தாத செயல்களோ இருக்குமானால் அவற்றை அகற்றி வாழும்போது மட்டுமே தேவனை அறியக்கூடிய வழிகளில் நாம் முன்னேற்றம்காண முடியும்.   

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

மனிதனை கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு...

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,156     💚 ஏப்ரல் 09, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 )

ஒருவன் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக விளங்கவேண்டமானால் அவன் கிறிஸ்துவைப்பற்றி அறிந்தால் மட்டும் போதாது. காரணம், கிறிஸ்துவைப் பற்றி அறிவது நம்மை அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கமாட்டாது.  கிறிஸ்துவைப் பற்றி அறிவது வெறும் மதபோதனை. மதபோதனை மதவாதிகளைத்தான் உருவாகுமேத்தவிர மேலான ஆவிக்குரிய மனிதர்களை உருவாக்க முடியாது.  

ஆனால், ஒருவர் கிறிஸ்துவை அறியும்போது மட்டுமே அவர் கிறிஸ்துவைப்போன்ற குணங்களுள்ளவர்களாக மாறமுடியும். கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்ளும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவை அறியமுடியும்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில்,  "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து" என்று கூறுகின்றார். அவரைபற்றியல்ல; மாறாக அவரையே அறிவித்து என்று கூறுகின்றார். அப்படி அறிவிக்கக் காரணம், "ஒருவரை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு" என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தில், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்" எனும் வார்த்தைகளை பவுல் பயன்படுத்தியுள்ளார். அதாவது, நாடு, மதம், ஜாதி, இனம், நிறம் கடந்து எந்த மனிதனையும் கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்த வேண்டும் என்று பொருள். இதுபோலவே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிக் குறிப்பிடும்போதும் அப்போஸ்தலனாகிய யோவான், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) என்று குறிப்பிடுகின்றார். ஆம் அவர் எந்த மனிதனையும் ஒளிர்விக்க வல்லவர்.

கிறிஸ்துவுக்குள் தேறினவனாக ஒருவர் மாறும்போது அற்பமான மனித சுபாவங்கள் மாறிவிடும். வெளிப்பார்வைக்கு அவர்கள் வித்தியாசம் தெரியாதவர்களாக மற்றவர்களைப்போல் இருந்தாலும் உள்ளான மனிதனில் கிறிஸ்துவைப்போன்ற எண்ணங்கள் உள்ளவர்களாக மாறிவிடுவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னரும் அப்போஸ்தலரான பவுலின் நிரூபங்கள் உயிருள்ளவையாக இருக்கின்றன. காரணம், அவரது உள்ளான எண்ணம் மாயமற்றதாக இருந்தது. இன்றைய வசனத்தில் அவர் கூறுவதுபோல, எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவர் போதித்தார், ஜெபித்தார். 

நாமும் இப்படி வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று அவர் கூறியுள்ளபடி மனிதர்களை கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாக மாற்றிட நாம் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும். 

ஆனால் இன்று பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகள் இப்படியிருப்பதில்லை. அன்பானவர்களே, நான் அடிக்கடி கூறுவதுபோல கிறிஸ்தவத்துக்கு எதிரி வெளியிலில்லை. பிரபல கிறிஸ்தவ ஊழியர்களே கிறிஸ்தவத்துக்கு எதிரிகள். இவர்களில் பலர்  தொலைக்காட்சி ஊழியம் எனும் பெயரில் மனிதர்களை இருளுக்கு நேராகவே நடத்துகின்றனர். அவர்கள்  மனிதர்களுக்கு ஞானத்தோடு புத்திசொவதுமில்லை சரியான போதனைகளைக் கொடுப்பதுமில்லை;  கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்த முயலுவதுமில்லை. இவர்களது பல சாட்சிகள் பிற மதத்தினர்முன் கிறிஸ்தவத்தைக் கேலிப் பொருளாக்குவதுடன் உண்மையான கிறிஸ்தவர்களையே மனம்நோகச் செய்கின்றன.

எனவே, இப்படி எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு போதிப்பதே மெய்யான ஊழியம். அப்போஸ்தலரான பவுலின் மனநிலையுடன் நமது வாழ்வாலும் வார்த்தையாலும் கிறிஸ்துவை அறிவிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

Friday, April 05, 2024

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,155      💚 ஏப்ரல் 08, 2024 💚 திங்கள்கிழமை 💚


"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." ( பிலிப்பியர் 4 : 4 )

இந்த உலகத்தில் நமக்குப் பாடுகளும் உபத்திரவங்களும் துன்பங்களும் உண்டு என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். ஆனால் கிறிஸ்துவின்மேல் திட நம்பிக்கைகொண்டு வாழும்போது நாம் இவற்றை ஜெயிக்க முடியும். எனவேதான், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" ( யோவான் 16 : 33 ) என்றார் இயேசு. 

"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்." என்று இயேசு கூறுவதிலிருந்து அவரில் நாம் விசுவாசம்கொள்ளும்போது நமக்கு சமாதானம் கிடைக்கும் என்று பொருளாகின்றது. அப்படி சமாதானம் கிடைக்கும்போது நாம் சோர்வாக இருக்கமாட்டோம்.  இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில்,  "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."என்று கூறுகின்றார். 

நமது துன்பங்ளையும் பிரச்சனைகளையும் விசுவாசத்தோடு தேவனிடம் ஒப்படைத்துவிட்டால் மனதின் துக்கங்கள் மாறும்.  சாமுவேலின் தாயாகிய அன்னாளைக்குறித்து நாம் வாசிக்கும்போது, பிள்ளையில்லாத அவளது மனக்குறையினை காண்கின்றோம். பிள்ளையில்லாத துன்பம் கொடியது. உலகத்தினரின் பழிச்சொல்லுக்கும் மனக்கவலைக்கும் அது இட்டுச்செல்லும். இப்படி பிள்ளையில்லாததனால் தனது நாச்சியாரின் பழிச்சொல்லையும் ஊராரின் பழிச்சொல்லையும் சுமந்து கவலையுடன் அவள் தேவ சமூகத்தில் ஜெபிக்கின்றாள்.    

உண்ணாமல் வேதனையுடன் தேவ சமூகத்தில் ஜெபித்த அவள் தனது குறையினைத் தேவனிடம் தெரிவித்தபின்பு மன நிம்மதியடைகின்றாள்.  வேதம் சொல்கின்றது, "பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.' ( 1 சாமுவேல் 1 : 18 ) தேவனிடம் எனது குறையினைச் சொல்லிவிட்டேன்; அவர் எனது வேண்டுதலுக்குச் செவிகொடுப்பார் எனும் உறுதி அன்னாளுக்கு இருந்தது. எனவே அவள் அதன்பின்பு துக்கமுகமாய் இருக்கவில்லை. 

அன்பானவர்களே, இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." என்று உறுதியாகக் கூறுகின்றார். பின்னர், அவ்வாறு எப்படி  சந்தோஷமாய் இருப்பது என்பதற்கு பின்வருமாறு வழி கூறுகின்றார்:- 

"நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." ( பிலிப்பியர் 4 : 6, 7 )

கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டு எப்போதும் சந்தோசமாக இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

குருடராயிருந்தால் பாவமிராது;

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,154     💚 ஏப்ரல் 07, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது." ( யோவான் 9 : 41 )

இயேசு கிறிஸ்து கூறிய இன்றைய தியான வசனம் சாதாரண வசனம்போல இருந்தாலும் இதன் உட்பொருள் ஆழமான அர்த்தம் கொண்டது. தேவனை நாம் அறியாமலேயே இருந்திருந்தால் நமக்கு பெரிய பாவம் சேர்ந்திருக்காது. மாறாக அவரை அறிந்துகொண்டபின் நாம் பாவம் செய்தால் அது மிகக் கடுமையாக தேவனால் பார்க்கப்படும். எனவே, தேவனை அறிந்த கிறிஸ்தவர்கள் வாழ்வில் அதிகக்  கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.

இந்த வசனத்தில் தேவனை அறியாத நமது பழைய காலத்தை குருடர்களுக்கும் கிறிஸ்துவை அறிந்த வாழ்க்கைக்கு கண் திறந்து காணக்கூடிய புதிய வாழ்க்கைக்கும்  ஒப்பிடப்பட்டுள்ளது. மட்டுமல்ல, குருடனாகவே இருந்திருந்தால் பாவம் இருக்காது; கண்திறந்து பார்வை அடைந்துள்ளோம் என்று கூறுவதால் நமது பாவம் நிலை நிற்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவரிடம் அவருக்கு கொடுக்கப்பட்ட அளவுக்குத்தான் கணக்குக் கேட்கமுடியும். அதுபோல தேவனையே அறியாதவனிடம் அந்த அளவுக்குத்தான் தேவன் எதிர்பார்ப்பார். ஆனால், "நான் தேவனை அறிந்திருக்கிறேன்" என்று கூறிக்கொண்டு, பெருமையுள்ளவர்களாகி ஒருவர் செய்யும் தவறான செயல்கள் தேவனால் கடுமையான தண்டனைக்குரிய ஒன்றாக பார்க்கப்படும். இதனையே, "நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது" என்கின்றார் இயேசு.  

தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் ஆவிக்குரிய சபையினர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில சபைகளும் இப்படி இருக்கின்றனர். தாங்களே தேவனை அறிந்தவர்கள், மற்றவர்கள் இருளின் மக்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். 

இப்படித் தாங்கள் மட்டுமே சீயோனுக்குத் தகுதியுள்ளவர்கள் மற்ற சபையினர் நரகத்தின் மக்கள் என்று கூறிக்கொண்டிருந்தால்  காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள். 

தங்களை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொண்டு வாழ்க்கை மாற்றமில்லாமல் வெறுமனே கூப்பாடுபோட்டு ஜெபித்துக் கொண்டிருந்தால் காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள்.  

மற்ற சபையினரையும் பிற மத மக்களையும் இருளின் மக்கள் என்று கூறிக்கொண்டிருந்தால், காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள்.  

இயேசு கிறிஸ்து கூறினார், "அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்." ( லுூக்கா 12 : 48 )  மனிதர்களே அப்படியானால் தேவன் எவ்வளவு அதிகம் கேட்பார்!!!

எனவே அன்பானவர்களே, ஏதேனும் தியானங்களில் கலந்துகொண்டு கிறிஸ்துவை வாழ்வில் லேசாக ருசித்த அனுபவம் பெற்றவுடன் நாம் மற்றவர்களைவிட மேலானவர்கள் எனும் எண்ணம் வந்துவிடக்கூடாது.  பெற்றுக்கொண்ட அந்த அனுபவத்தில் முழுமையடையவேண்டும்.  அறிந்த கிறிஸ்துவை வாழ்வில் நாம் பிரதிபலிக்கவேண்டும்.  அதே ஆவிக்குரிய அனுபவத்தில் வாழ்வின் இறுதிவரை நாம் நிலைத்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் கிறிஸ்து நம்மைப் பார்த்தும் இன்றைய தியான வசனத்தில் கூறியதுபோலக் கூறுவார், "நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது." 

ஆம், கிறிஸ்துவை அறிந்துள்ளேன் என்று கூறிக்கொள்ளும் நம்மிடம் தேவனுக்கு ஏற்பில்லாத தகாத குணங்கள் இருக்குமானால் அவைகளை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மனத்தாழ்மையுடன் வாழ முயலவேண்டும். இல்லாவிட்டால் நாம் அவரை அறியாமலேயே இருந்திருப்பது அதிக நன்மையானதாக இருக்கும். சில அடிகள் மட்டுமே அடிக்கப்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Thursday, April 04, 2024

நற்செய்தியை அறிவிப்பது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,153      💚 ஏப்ரல் 06, 2024 💚 சனிக்கிழமை 💚


"என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்." ( கலாத்தியர் 4 : 19 )

கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். அது கிறிஸ்து நமக்குக் கொடுத்தக் கட்டளையாகும். நற்செய்தி அறிவித்தல் என்பது வெறும் உலக ஆசீர்வாதங்களை அறிவிப்பதல்ல; மாறாக, கிறிஸ்துவின் பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் மக்களுக்கு அறிவித்து அவர்களை மீட்பின் பாதையில் நடத்துவதாகும்.  

கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் செல்லுமுன் கொடுத்த இறுதிக் கட்டளையே இதுதான். பின்பு, அவர் அவர்களை நோக்கி: "நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 ) என்றார். ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல கிறிஸ்து நம்மில் உருவாகவேண்டும்.  அப்படி நாம் கிறிஸ்துவை அறிந்து கொண்டபின்னர் அதே ஆத்தும பாரத்தோடு கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். 

நாம் வெறுமனே பிரசங்கம் செய்வதல்ல, மாறாக கிறிஸ்துவை பிறர் அறிந்து அவரது மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டுமென்று நம்மையே வருத்தி  அவர்களுக்கு அறிவிப்பது. இதுவே மனிதர்களது மனமாற்றத்தைக்கு ஏதுவாக அமையும். 

நான் கம்யூனிச சித்தாந்தத்துக்கும் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும்  அடிமையாக இருந்தபோது உலக பத்திரிகைகளுக்கு கதைகள் கவிதைகள் எழுதிவந்தேன். அப்போது கிறிஸ்துவை அறிந்த,  என்னை விட  சுமார் 10 வயது குறைவான பத்திரிகை நண்பரொருவர் எனக்கு இருந்தார். அவர் கிறிஸ்துவை அறிந்தவர். அவர் என்னிடம் கதை, கட்டுரைகள் வாங்க எனது வீட்டிற்கு வருவார். அப்போது மெதுவாக கிறிஸ்துவைப்பற்றி எனக்கு அறிவிப்பார்.  நான் அவரிடம், "வேறு நல்ல விஷயங்கள் இருந்தால் பேசுங்கள், இல்லாத ஒன்றைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள்" என்பேன். இது பல நாட்களாக நடந்தது.

ஒருமுறை என்னிடம், "ஜியோ அண்ணே, நீங்க உங்களுக்காக இல்லாவிட்டாலும் நான் கூப்பிடுவதற்காகவாவது எனக்கு மதிப்பு கொடுத்து என்னோடு ஒரு பிரேயருக்கு வாருங்கள்" என்று வற்புறுத்தினார். அவருக்காக அன்று ஒரு சனிக்கிழமை அவரோடு சென்றேன். ஒரு சிறிய ஆலயத்தில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்களோடு உட்கார்ந்திருந்தேன். அவர்கள் எனக்காக ஜெபித்தார்கள்.  எனக்கு என்னைக்குறித்தே அவமானமாக இருந்தது. "நமது பழைய நண்பர்கள் நாம் இங்கே அமர்ந்திருப்பதைக் கண்டால் என்ன எண்ணுவார்கள்?" என்பது மட்டுமே என் மனதில் இருந்தது. 

இதுபோல மூன்று வாரங்கள் வார இறுதி நாட்களில் கூடி ஜெபித்த அந்தக் கூட்டத்துக்குச் சென்றேன். மூன்றாவது வாரத்தில் ஜெபித்து முடித்து வீட்டிற்கு வந்தபோது அந்த இரவில் கிறிஸ்துவால் மாற்றமடைந்தேன். அது, 1993 நவம்பர் 18 ஆம் நாள். அந்த ஒரே நாளில் எனது பழைய குணங்கள் மாறின; பழைய நண்பர்கள் மாறினர். அன்பானவர்களே, அதன் பின்னர்தான் எனக்காக அந்தச் சகோதரன் எடுத்தக்  கடுமையான உபவாசத்தையும், தனது உடலை வருத்தி எனது மாற்றத்துக்காக அவர் ஜெபித்ததையும் என்னிடம் கூறினார். ஆம், கிறிஸ்து என்னிடத்தில்  உருவாகுமளவும் அவர் எனக்காக  கர்ப்பவேதனைப் பட்டிருக்கின்றார். 

அன்பானவர்களே, இதுதான் பவுல் அப்போஸ்தலர் கூறும் நற்செய்தி அறிவித்தல். வேதாகமத்திலிருந்து ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத் தேடிப்  பொறுக்கிஎடுத்து, "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறுவது எளிது. அது  நற்செய்தி அறிவிப்பல்ல; உளவியல் ஆற்றுப்படுத்தல். அதனால் ஒருவர் கிறிஸ்துவை அறியவோ மனமாற்றமடையவோ முடியாது.

எனவே ஜெபத்தோடு, மனம் திரும்புதல், ஆவிக்குரிய நிலையில் வளர்ச்சியடைதல்  போன்ற செய்திகள் எழுதுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கின்றேன்.  இதுவரை நான் எழுதிய 1150 க்கும் மேற்பட்ட தியானங்களில் உலக ஆசீர்வாதத்தை வெறும் 20 அல்லது 25 தியானங்களில் மட்டுமே குறிப்பிட்டிருப்பேன். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவை ஒருவர் வாழ்வில் அறிந்துகொள்வதே மெய்யான ஆசீர்வாதம்; அவரை அறிந்தபின்பு நமது வாழ்வின் மற்றவைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். 

"உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 )  எனும் கிறிஸ்துவின் வார்த்தைகளை கடைபிடிக்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். நம்மை வருத்தியாவது நாம் அறிந்த கிறிஸ்துவை பிறருக்கும் அறிவிப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்