ஆதவன் 🖋️ 563 ⛪ ஆகஸ்ட் 13, 2022 சனிக்கிழமை
"அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )
இன்றைய தியான வசனம் மாற்கு 6:56 ன் இறுதிப்பகுதியாகும். இந்த வசனம் முழுமையாகக் கூறுவது, "அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்." ( மாற்கு 6 : 56 )
இந்தப்பகுதியில் இயேசுவின் உடலையும் அவரது ஆடைகளையும் தொட்டுக் குணமடைய மக்கள் அவரிடம் நெருங்கினார்கள் என்று கூறுகின்றது. இயேசு கிறிஸ்து வெறும் உடல் சுகத்தை மட்டும் அளிக்க வரவில்லை. ஆத்தும சுகமளித்து நித்திய ஜீவனை அளிக்கவே அவர் வந்தார்.
இப்படி கிறிஸ்துவை ஆத்தும ரீதியாகத் தொட்டு குணமடைந்தவர்களே அவரது சீடர்களும் மற்றும் பலரும். சீடர்கள் தவிர பல உதாரணங்கள் வேதத்தில் உண்டு. 12 சீடர்கள் தவிர அவரைப் பின்பற்றிய அநேக சீடர்கள், சகேயு, மகதேலேனா மரியாள், சிலுவைக் கள்ளன் ஒருவன், அரிமத்தேயா யோசேப்பு, 10 குஷ்டரோகிகளில் ஒருவன் போன்றவர்கள். உடல் ரீதியாக அவரைத் தொட்டவர்கள் உடல் சுகம் அடைந்தார்கள். ஆத்தும ரீதியாகத் தொட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆத்தும சுகம் அடைந்தார்கள்.
இன்று நாம் இயேசு கிறிஸ்துவை எதற்காகத் தொடுகின்றோம்? சரீர சுகத்துக்காக, பிரச்சனைகளிலிருந்து விடுபட, ஆசீர்வாதம் பெற என பல காரணங்களுக்காக இருக்கலாம். தவறல்ல; ஆனால் அத்துடன் நமது தொடுதலை நாம் நிறுத்திவிடக் கூடாது. அவரை ஆத்தும மீட்பராக எண்ணித் தொடவேண்டும்.
இன்று கிறிஸ்துவுக்காக சாட்சி கூறும் பலரது சாட்சியங்கள் உடல் ரீதியாக இயேசுவைத் தொட்ட சாட்சிகளே. இயேசு செய்த அற்புதங்களைக் கண்டு அவர்மூலம் மீட்பு உண்டு என்று விசுவாசிப்பதைவிட உலகத் தேவைகளால் திருப்தியாவதையே பலரும் விரும்பினர். எனவேதான் இயேசு அவர்களுக்கு, "நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". ( யோவான் 6 : 26 ) என்றார்.
அன்பானவர்களே, நாம் அப்பம் உண்டு திருப்தியானதால் அல்ல, திருப்தியான மறுமை வாழ்வளிக்கும் மீட்புக்காக அவரைத் தொடும்படித் தேடுவோம். அப்படித் தேடித் தொடும்போது நமது ஆத்தும மீட்பு எனும் அதிசயத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு அவரைத் தொடும்போது "உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான் 5 : 13 )
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
இணையத்தளம்:- www.aathavanmonthly.blogspot.com