Tuesday, November 28, 2023

வேதாகம முத்துக்கள் - நவம்பர் 2023

                        - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1008, நவம்பர் 01, 2023 புதன்கிழமை

"என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்." ( யோவான் 6 : 56 )

இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதும் அறிவதும்தான் அவரைப் புசிப்பதும் இரத்தத்தைக் குடிப்பதும். அப்படி விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரில் நிலைத்திருக்கின்றவனே அவரோடும் நிலைத்திருப்பான். அப்படி நிலைத்திருக்கும் மனிதனிடம் நானும் வந்து தங்கியிருப்பேன் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

ஆனால் அவரோடு இருந்த பலச்  சீடர்கள் இயேசு கிறிஸ்து கூறிய இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கேட்டுத் திகைப்படைந்தார்கள். அவர்களது ஆவிக்குரிய குருட்டுத் தன்மை உண்மையினை அறியவிடாதபடி அவர்களைத் தடுத்துவிட்டது. 

"என்ன, இந்த மனிதனை நம்பி பின்பற்றினால் அவரது உடலைத் தின்று இரத்தத்தைக் குடிக்கவேண்டும் என்றுகூறுகின்றாரே? நம்மை நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிகள் என்று இவர் நினைத்துவிட்டாரா?"  என்று ஒருவேளை அவர்கள் எண்ணியிருப்பார்கள்.  எனவே இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் திகைத்து அவரைவிட்டு விலகினார்கள். "அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்." ( யோவான் 6 : 66 ) என்று வாசிக்கின்றோம். 

கிறிஸ்துவின் உடலைப் புசிப்பது, அவருடைய இரத்தத்தைக் குடிப்பது என்பவை ஆவிக்குரிய அர்த்தத்தில் இயேசு கிறிஸ்து கூறியவை. "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது." ( யோவான் 6 : 63 ) என்று இயேசு கிறிஸ்துத் தெளிவுபடுத்தினார். 

அவரோடிருந்த பன்னிரண்டு சீடர்களும் இதனைப் புரிந்துகொண்டார்கள். எனவே அவர்களது சார்பில் அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்." ( யோவான் 6 : 69 ) ஆம், இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதும் அறிவதும்தான் அவரைப் புசிப்பதும் இரத்தத்தைக் குடிப்பது என்று பேதுருவும் மற்றச் சீடர்களும் அறிந்துகொண்டனர். 

ஆம் அன்பானவர்களே, நாம் கிறித்துவை தேவனுடைய குமாரன் என்று அறிந்தும் விசுவாசித்தும்   இருப்பதை  நாம் நற்கருணை உண்ணும்போது அல்லது இராப்போஜனம் எனும் பரிசுத்த பந்தியில் பங்கெடுக்கும்போது அறிக்கையிடுகின்றோம். 

ஆனால் வெறுமனே கடமைக்காக இப்படிச் செய்வோமானால் நாம் அவரை அவமதிக்கின்றோம் என்று பொருள். பரிசுத்தரான அவரை நமது வாழ்வில் பரிசுத்தமில்லாமல் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது; அவரும் நம்மில் குடிவரமாட்டார். மாறாகத் தகுதியில்லாமல் அவரது உடலை உண்போமானால் நமக்கு நாமே கேடு வருவித்துக்கொள்கின்றோம் என்று  பொருள். 

"எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். ( 1 கொரிந்தியர் 11 : 28 - 31 )

கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உண்ணுமுன் நம்மை நாமே நிதானித்துப் பார்த்துக்கொள்வோம். நமது மனச்சாட்சி குற்றமில்லை என நமக்கு உணர்த்துமானால் மட்டுமே நற்கருணை விருந்தில் பங்கெடுப்போம். 

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,009,                                                           நவம்பர் 02, 2023 வியாழக்கிழமை

"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." ( தீத்து 3 : 5 )

பரிசுத்தரான  தேவனின் முன்னிலையில் நாம் எல்லோருமே தூய்மையற்றவர்களே. மனிதர்களாகிய நாம் பல நீதிச் செயல்களைச்  செய்யலாம். ஆனால், அந்த நீதிச் செயல்களைப்பார்த்து அவர் நம்மை இரட்சிப்பதில்லை. காரணம், மனித நீதிகள் பலவும் அவர் பார்வையில் அழுக்கான கந்தையைப்போல இருகின்றது என்று ஏசாயா கூறுகின்றார். "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64 : 6 )

ஆம் தேவன் நம்மை இரட்சிப்பது நமது நீதிச் செயல்கலைப் பார்த்தோ நாம் வாழும் உண்மையான வாழ்வைப் பார்த்தோ அல்ல. அப்படிப் பார்த்தாரானால் பாவம் செய்து இனி நமக்கு இரட்சிப்பே இல்லை என்று வாழும் பாவ மனிதர்கள் தேவனை அறிய முடியாது. ஆம், அவர் பாவிகளை நேசிக்கின்ற தேவன். அவர் பாவத்தை வெறுக்கின்றார் ஆனால் பாவிகளையோ நேசிக்கின்றார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடனான தீமோத்தேயுக்கு எழுதும்போது பின்வருமாறு கூறுகின்றார்:- 

"அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்."( 2 தீமோத்தேயு 1 : 9 )

அதாவது அவர் நாம் நல்லதே செய்ததால் அவர் நம்மை இரட்சிக்கவில்லை, மாறாக நாம் அவர்மேல் விசுவாசம்கொள்ளும்போது  தனது இரக்கத்தால் நம்மை இரட்சிகின்றார். இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;" ( எபேசியர் 2 : 8 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, ஒருவேளை நாம்  வாழ்வில் நல்லவைகளையே செய்துகொண்டிருக்கலாம். ஆனால் அந்த நல்லச் செயல்கள் நம்மை இரட்சிக்காது. இந்த உலகத்தில் கோடிக்கணக்கான பிற மத நம்பிக்கைகொண்ட மனிதர்கள் வாழ்கின்றார்கள். அவர்களில் பலர் நல்லதே செய்து தேவ பக்தியுள்ளவர்களாக வாழ்கின்றனர். ஆனால் இரட்சிப்படைய அது போதாது. ஏற்கெனவே நாம் பார்த்தபடி அவை மனித நீதிகள். அவற்றில் பலவும் அழுக்கான கந்தையைபோன்றவை. நாம் தேவ நீதியின்படி வாழவேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து மீட்படையவேண்டியது அவசியம்.

ஒருவேளை பாவ வாழ்க்கையே இதுவரை வாழ்ந்திருப்போமானால் கவலைப் படவேண்டாம். கிறிஸ்துவின் இரக்கத்துக்கு வேண்டுவோம். எல்லா ஜெபத்தைவிடவும்  ஒரு பாவி மனம்திரும்ப ஜெபிக்கும் ஜெபத்தை தேவன் அதிகம் விரும்புகின்றார்.   ஆம், இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சிக்கின்றார்.

நாம் நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும், பாவ வாழ்க்கையே வாழ்ந்திருந்தாலும் அவரது கிருபைக்காக வேண்டுதல் செய்வோம். இதுவரை நாம் அனுபவித்திராத மேலான இரட்சிப்பு அனுபவத்தால் நம்மை அவர் நிரப்பி நடத்துவார். ஆம், தேவ கிருபையினால்தான் மீட்பு உண்டாகின்றது.


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,010,                                                             நவம்பர் 03, 2023 வெள்ளிக்கிழமை\\

"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே." ( ரோமர் 8 : 36, 37 )

இந்த உலகத்தில் பிறந்துள்ள நாம் அனைவருமே இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். எப்போதும் இன்பமாகவே இருப்பதில்லை. அதுபோல, துன்பம் வந்தாலும் அதுவும் கடந்துபோகும். கிறிஸ்தவ வாழ்வில் துன்பத்தைக் கடந்திட ஒரே வழி கர்த்தராகிய இயேசுவைப் பற்றிக்கொள்வதுதான்.  நாம் அவருக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நம்மேல் அவர் அன்பு கொள்கின்றார். அவர்மூலம் நாம் துன்பத்தை மேற்கொள்ளமுடியும். எனவேதான் பவுல் அப்போஸ்தலர், நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் என்கின்றார். 

எனவே அன்பானவர்களே, தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போதும் துன்பங்கள் வருமானால் நாம் கலங்கவேண்டியதில்லை. நாம் முற்றிலும் ஜெயம் கொள்ள அவர் உதவுவார். காரணம் அவர் நம்மேல் அன்புகொண்டுள்ளார்.

மேலும், தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்போது நமக்கு நேரிடும் சோதனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் போக்கையும் அவர் உண்டாக்குவார் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

இன்று நாம் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கும்போது தேவையற்ற சில சிறிய காரணங்களுக்காகப்  பலர் தற்கொலை செய்து மடிவத்தைக் காண்கின்றோம். பெரியவர்கள் முதல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள்வரை இப்படித் தற்கொலை செய்து மடிகின்றனர்.  தேவனுக்கு வாழ்வில் இடம்கொடுக்காததே இதற்குக் காரணம். கிறிஸ்துவுக்கு நமது  வாழ்க்கையில் இடம்கொடுப்போமேயானால்,  உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிற அவராலே வெற்றிபெறமுடியும்.  

தேவன் மேல் நம்பிக்கை வைக்கும்போது நாம் தேவ வசனங்களை நம்புவோம். அவர் பொய் சொல்பவரல்ல என்று அறிந்துகொள்வோம்.  இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் வெறுமனே ஜெயம் கொள்கிறவர்களாயிருக்கிறோம் என்று கூறாமல், "முற்றிலும்" என்று கூறுகின்றார். தேவன் எல்லாவற்றிலும் பூரணமானவர். அவரிடம் குறைவு கிடையாது. எனவே அவர்மூலம் நாம் பெறும்  ஜெயம் முற்றிலுமான ஜெயமாக இருக்கும்.  

யோபுவின் துன்பங்களைவிட அதிகத் துன்பம் நமக்கு வந்துவிடவில்லை. தேவனைப் பழித்து உயிரைவிடும் என்று அவரது மனைவியே கூறக்கூடிய நிலையிலும், யோபு அவளுக்குப் பதிலாக, "நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்" ( யோபு 2 : 10 )

"அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;" ( யோபு 13 : 15 ) என்பதே யோபுவின் விசுவாச அறிக்கை. அதற்கேற்ப தேவன் அவரை இரண்டு  மடங்கு ஆசீர்வாதத்தினால் நிரப்பினார். தேவனில் மெய்யான அன்பு கூருவோம்; அப்போது,  நம்மில் அன்புகூருகிற அவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருப்போம்.  


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,011,                                                             நவம்பர் 04, 2023 சனிக்கிழமை

"அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்." ( ரோமர் 9 : 8 )

ஆபிரகாமின் மகன் இஸ்மவேல் மற்றும் ஈசாக்கினைக்கொண்டு அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியானத்தில் முக்கியமான வேத உண்மையினை விளக்குகின்றார். 

ஆபிரகாமுக்குத் தேவன் ஒரு மகனை வாக்களித்திருந்தாலும் அவருக்குத் தேவன் வாக்களித்தபடி உடனேயே   குழந்தை பிறக்காததால் அவர் மனைவி சாராள் தனது அடிமைப்பெண் ஆகாரை அவருக்கு மறுமனைவி ஆக்குகின்றாள். அவள் மூலமாவது ஒரு குழந்தை பிறக்கட்டும் என்று எண்ணுகின்றாள். ஆபிரகாமும் அதற்குச் சம்மதிக்கின்றான். அப்படி ஆபிரகாம் ஆகார் மூலம் இஸ்மவேலைப் பெற்றபோது 86 வயதுள்ளவனாக இருந்தார். (ஆதியாகமம் 16;16)

எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தாலும் மனிதன்தானே. ஆபிரகாம் இந்த வாரிசு விஷயத்தில் தவறி தேவ சித்தத்துக்கு முரணாகச் செயல்பட்டுவிட்டார். 75 வயதில் ஒரு மகனைத் தேவன் வாக்களித்து அவர் ஏறக்குறைய 10 ஆண்டுகள் காத்திருந்து பின்னர் இந்த முடிவுக்கு வந்தார். ஆனாலும் "ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்." ( ஆதியாகமம் 17 : 1, 2 )

அதன் பின்னர் அவருக்கு ஏறக்குறைய 100 வயதானபோது வாக்குத்தத்தத்தின் மகன் ஈசாக்குப் பிறக்கின்றான். முதலில் பிறந்த இஸ்மவேல் மனித விருப்பத்தின்படிப் பிறந்தவன். பின்னால் பிறந்த ஈசாக்கோ தேவனது வாக்குத்தத்தத்தின்படிப் பிறந்தவன். தேவன் அப்போதே அவர்களை வேறுபிரிக்கத் திட்டம்கொண்டார். எனவே சாராள் மனத்தைத் தூண்டி ஆகாரையும் அவள் மகன் இஸ்மவேலையும் பிரித்து விடுகின்றார்.  சாராள் "ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள்." ( ஆதியாகமம் 21 : 10 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் அபிரகாமுக்குத் தன் மகனையும் மறு மனைவியையும் பிரிய வருத்தமாகத்தான் இருந்திருக்கும்.  "அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்." ( ஆதியாகமம் 21 : 12 )என்றார். 

வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவனே தேவ தயவு பெற்றவன். அப்படியே, "ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்." ( ஆதியாகமம் 21 : 14 )

அன்பானவர்களே, இந்தச் சம்பவத்தையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் விளக்குகின்றார். அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல என்கின்றார். அதாவது நாம் ஒரு கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிள்ளைகளாகப் பிறந்துவிட்டதால் நாம் கிறிஸ்துவுக்கு உரிமையானவர்களாகி விடுவதில்லை.  வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். அதாவது முதலில் நாம்  கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களுக்கு உரிமையானவர்களாக வேண்டும். அவரது இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டும். 

"அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே." ( ரோமர் 9 : 7 ) அதாவது பெயரளவில் எல்லோருமே கிறிஸ்தவர்கள் என்று கூறப்பட்டாலும் எல்லோரும் கிறிஸ்தவர்களல்ல; ஈசாக்கைபோல கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களுக்கு உரிமையானவர்களே கிறிஸ்தவர்கள்.  ஆம், வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். என்கின்றார் பவுல்.

ஆழமான இறையியல் உண்மையான இந்தச் சத்தியம் நாம் ஆவிக்குரிய மறுபிறப்பு அடையும்போதே முற்றிலுமாகப் புரியும். அந்த அனுபவத்தை நாம் பெறுவதற்கு முயலவேண்டும். வெறுமனே ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்துகொண்டிருப்போமானால் நாம் இன்னும் இஸ்மாயிலைப்போல மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்களாகவே இருப்போம்; அப்போது நாம்  தேவனுடைய பிள்ளைகளல்ல, நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் கிறிஸ்துவின் பார்வையில் நாம் கிறிஸ்தவர்களல்ல. ஆழமான இறையியல் உண்மையான இந்தச் சத்தியம் நாம் ஆவிக்குரிய மறுபிறப்பு அடையும்போதே முற்றிலுமாகப் புரியும். அந்த அனுபவத்தை நாம் பெறுவதற்கு முயலவேண்டும். வெறுமனே ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்துகொண்டிருப்போமானால் நாம் இன்னும் இஸ்மாயிலைப்போல மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்களாகவே இருப்போம்; அப்போது நாம்  தேவனுடைய பிள்ளைகளல்ல, நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் கிறிஸ்துவின் பார்வையில் நாம் கிறிஸ்தவர்களல்ல. கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களுக்கு உரிமையானவர்களே கிறிஸ்தவர்கள்.  ஆம் அப்படி உரிமை வாழ்வைப் பெறுவதற்கு நம் பாவங்கள் மன்னிக்கப்பட கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்படைக்க வேண்டியதே நாம் செய்ய வேண்டியது. 

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,012,                                         நவம்பர் 05, 2023 ஞாயிற்றுக்கிழமை

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்." ( யோவான் 16 : 7 )

கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலருக்கும் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி சரியான புரிதல் இல்லை என்றுதான் கூறவேண்டும். பலரும் அது ஏதோ ஆவி என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதுகூட பல கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கும்போது வெளியேறிவிடுகின்றனர்.

இதற்குக் காரணம் பல ஆவிக்குரிய சபைகளில் சில விசுவாசிகள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப்  பெற்றுவிட்டேன் எனக் கூறி அலறி கூப்பாடுபோட்டுத் தரையில் உருண்டு அமர்களப்படுத்துவதுதான்.  (இது என்ன ஆவி என்று தெரியவில்லை) இது ஏதோ விசித்திரமான ஆவிபோல இருக்கின்றது; நம்மேல் இந்த ஆவி இறங்கினால் நாமும் ஒருவேளை இப்படி ஆகிவிடுவோமோ என்று பலர் அச்சப்படுகின்றனர். ஆம்,  ஆவியானவரைப் பற்றிச் சரியான புரிதல் இல்லாததே இதற்குக் காரணம். 

உண்மையில் அவரை நாம் ஆவியானவர் என்றுதான் கூறவேண்டும். அவர் பிதா குமாரன் போல ஒர் ஆள்தத்துவம் உள்ளவர்.  வேதத்தில் ஆவியானவர் என்றே கூறப்பட்டுள்ளது. இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்துவும், "நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்"  என்றுதான் கூறுகின்றார்.  ஆவியானவர் ஒரு மனிதனைப்போல ஆள்தத்துவம் உள்ளவர் என்பதால் மனிதர்களைப்போன்ற அனைத்துச் செயல்களையும் அவர் செய்கின்றார். சாதாரண ஒரு ஆவி இப்படிச் செய்யமுடியாது. 

அவர் மனிதனைபோலத் துக்கப்படுகின்றார் - "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

மனிதனைப்போலப்  பேசுகின்றார் - "ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 29 )

பலவீனத்தால் மனிதர்கள் நமக்கு உதவுவதுபோல உதவுகின்றார் - "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். ( ரோமர் 8 : 26 )

நமக்காக ஜெபிக்கின்றார் - "நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்." ( ரோமர் 8 : 26 )

தாய் தகப்பன் வாங்கித்தரும் தின்பண்டத்தை மூத்தச் சகோதரனோ சகோதரியோ பங்கிட்டுத் தருவதுபோல் வரங்களைப் பங்கிட்டுத் தருகின்றார் - "இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்." ( 1 கொரிந்தியர் 12 : 11 )

எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிகின்றார் - "......அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 10 )

அன்பானவர்களே, இந்த ஆவியானவரின்  துணையில்லாமல் நாம் வெற்றிகரமான ஆவிக்குரிய வாழ்வு  வாழ முடியாது. "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றாரே ?

அன்பானவர்களே, ஆவியானவரை அறிய ஆர்வம் கொள்ளும்போதுதான் அவரை அறியமுடியும். சாதாரண உலக மனிதர்களைப்போல இருப்போமானால் அவரை அறியவும் அடையவும் முடியாது; ஆவிக்குரிய வாழ்வு வாழ்வும் முடியாது.  "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 )

இந்தச் சத்திய ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளத் தாகத்தோடு வேண்டுவோம். அவரை நம்மில் பெறும்போதுதான் நம்மை நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும். .

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,013,                                 நவம்பர் 06, 2023 திங்கள்கிழமை

"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." ( சங்கீதம் 84 : 5 )

தேவனுக்கென்று நாம் செலுத்தும் பலிகளும் காணிக்கைகளும் அவருக்குப் பெரிதல்ல; மாறாக, நமது இருதயம் சுத்தமாக இருப்பதையே அவர் விரும்புகின்றார். இருதய சுத்தமில்லாமல் செய்யப்படும் விண்ணப்பங்களையும் அவர் கேட்பதில்லை. (ஏசாயா 1:15) தேவன் மனிதர்கள் தன்னை அறிந்து தனக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென்றுதான் விரும்புகின்றார். 

ஒரு மனிதன் கிறிஸ்துவை அறிவதுடன்  நின்றுவிடாமல் நாளுக்குநாள் கிறிஸ்து அனுபவத்தில் வளரவேண்டும். பெலன் அடையவேண்டும். கொரிந்து சபை அப்போஸ்தலரான பவுலால் பல ஆண்டுகள் பல்வேறு அறிவுரைகள் கூறி நடத்தப்பட்டபின்னரும் பலம் அடையவில்லை. (1 கொரிந்தியர் 3: 2)  எனவே அவர்கள் பெலனடையவேண்டுமென்று அவர் அறிவுரை கூறுகின்றார். காரணம், கிறிஸ்துவுக்குள் ஒரு மனிதன் பெலன்கொள்ளும் போதுதான் அவன் பாக்கியவானாக இருப்பான். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம், "உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்" என வாசிக்கின்றோம். அது என்ன  ஆசீர்வாதம்? அடுத்த வசனத்தில் சங்கீத ஆசிரியர் கூறுகிறார்,  "அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்." ( சங்கீதம் 84 : 6 ) அதாவது வாழ்வின் துன்பங்கள் துயரங்கள் மறைந்து மகிழ்ச்சியடைவார்கள். வறண்ட நிலத்தில் மழைபொழிந்து குளங்களை நிரப்புவதுபோல அவர்கள் வாழ்க்கைச் செழிப்படையும்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இருதய சுத்தத்தைப்பற்றி கூறும்போது, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்றார். அன்பானவர்களே எண்ணிப்பாருங்கள், காணக்கூடாத தேவனை நாம் தரிசிக்கவேண்டுமானால் நமது இருதயம் சிறு குழந்தைகளின் இருதயம்போலச்  சுத்தமாக இருக்கவேண்டும் என்கின்றார். இதனால்தான் சங்கீத ஆசிரியர் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்கள்  பாக்கியவான்கள் என்று கூறுகின்றார். 

இன்று மனிதர்கள் கடவுளைத் தரிசிக்க ஆலயம் ஆலயமாக ஓடுகின்றார்கள். புனித ஸ்தலங்களுக்குச் செல்கின்றார்கள். பல்வேறு நோன்புகள், உடலை வருத்தும்  பல்வேறுசெயல்களைச் செய்கின்றனர். காணிக்கைகளுக்கும் நேர்ச்சைகளுக்கும குறைவில்லை. ஆனால் இப்படியெல்லாம் செய்தும்  தேவனை அவர்களால் தரிசிக்க முடியவில்லை.  காரணம் இருதய சுத்தமில்லாமை; வைராக்கிய எண்ணங்கள். 

ஆம், இருதயத்தை மாற்றாமல் நாம் செய்யும் எந்தச் செயல்பாடுகள் மூலமும் நாம் தேவனை வாழ்விலே அறிய முடியாது. ஆலயங்களில் முன்னுரிமை பெறுவதில் போட்டியும் பொறாமையும் கொண்ட மனிதர்களைத் தேவன் எப்படிச் சகிக்கமுடியும்? எப்படி அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்த முடியும்? தனக்குப் பிடிக்காத ஒருவரை மகள் காதலித்துத் திருமணம் முடித்து விட்டாள் என்பதற்காக மகள் என்றும் பாராமல் படுகொலைச்செய்யும் வைராக்கிய இருதயமுள்ள இரக்கமில்லாத தகப்பன் மற்றவர்களை எப்படி நேசிக்க முடியும்? இத்தகைய மனமுள்ளவர்கள்  எப்படித் தேவனை நெருங்கவோ அவரை அறியவோ முடியும்? ஆனால் அவர்களும் ஜெபிக்கின்றார்கள்!!!

அன்பானவர்களே, தேவனில் பெலன்கொண்டு வளர ஆசைகொண்டு முயலுவோம். அப்படி முயன்று பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் உண்மையிலேயே பாக்கியவான்கள். வேத வசனம் வெறுமனே எழுதப்பட்ட கட்டுக்கதையல்ல; வாழ்வில் நிஜமாக பலிக்கும் தேவனுடைய வார்த்தைகள் அவை. 

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,014,                                               நவம்பர் 07, 2023 செவ்வாய்க்கிழமை

"சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்." ( சங்கீதம் 46 : 7 )

சேனை என்பது பெரிய இராணுவத்தைக் குறிக்கின்றது. இஸ்ரவேல் மக்கள் அதிகமான போர்களைச் சந்தித்தவர்கள். அவர்கள் சிலவேளைகளில் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டார்கள். காரணம் அவர்கள் தேவனது கட்டளைகளுக்குக் கீழ்படியத் தவறியதுதான்.  ஆனால் கர்த்தர் தங்களோடிருந்து செய்த வல்லமையான செயல்களைக் கண்டு உணர்ந்த சங்கீதக்காரர் சொல்கின்றார், "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்"

நமது தேவன் சேனைகளின் கர்த்தர். சேனைக்கு வெற்றித்தருபவர். இதனை அறிந்திருந்ததால்தான் தாவீதுராஜா கோலியாத்தை எதிர்கொண்டபோது, "நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்' ( 1 சாமுவேல் 17 : 45 ) என்று அறிக்கையிட்டு அவனை வீழ்த்தினார். 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அனாதைகளாக விட்டுச் செல்லவில்லை. சேனைகளின் கர்த்தராகிய ஜெய கிறிஸ்து உலகத்தின் முடிவுவரை நம்மோடு இருப்பேன் என்று தான் விண்ணகம் செல்லுமுன் வாக்களித்துச் சென்றார்.  ( மத்தேயு 28 : 20 ) அவர் நம்மோடு இருக்கின்றார். 

சாதாரண உலக மக்களைப்போல நாம் வாழ்ந்து கொண்டிருப்போமானால் அவரையும் அவரது உடனிருப்பையும் நாம் உணர்ந்துகொள்ள முடியாது. அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்." ( பிலிப்பியர் 4 : 9 )

நாம் தேவனைப்பற்றி, அவரது கட்டளைகளைப்பற்றி கற்றிருக்கின்றோம், பல்வேறு தேவ செய்திகள் மூலம் அவரைப்பற்றி கேட்டு அறிந்திருக்கின்றோம். பல்வேறு பரிசுத்தவான்களின் வாழ்க்கைச் சரித்திரத்தையும் அவர்களது வாழ்வையும் அறிந்திருக்கின்றோம்.  அவைகளையே நாம் வாழ்வில் கடைபிடிப்போமானால் அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

இன்று கிறிஸ்தவர்களில் பலர்கூட சிலவேளைகளில் வேத வசனங்களை நம்புவதில்லை. காரணம் அவர்கள் துன்பங்களில், பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்களால் சமாதானத்தின் தேவன் தங்களோடு இருக்கின்றார் என்பதை நம்ப முடியாதுதானே? பொதுவாக மனித மனம் அடுத்தவர்களைக் குறைகூறுவதாகவே இருக்கின்றது. தங்களிடமுள்ள குறைகளை மனிதர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. ஆம், அன்பானவர்களே, தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது அவர் சேனைகளின் கர்த்தராக நம்மோடு இருப்பார். இல்லாவிட்டால் அவரை நாம் அப்படிக் கண்டுகொள்ள முடியாது. அவரைக் குறைசொல்வதில் அர்த்தமில்லை.

தாய் தந்தையருக்குக் கீழ்ப்படியும் குழந்தைகள் வீட்டின் நன்மையினை அனுபவிக்கும். தான்தோன்றித்தனமாக அலைந்து திரியும் குழந்தைகள் பெற்றோரின் அன்பையும் அவர்களது சொத்துச் சுகங்களையும் அனுபவித்து மகிழ முடியாது. அதுபோல தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது அவரை வாழ்வில் அனுபவிக்கலாம். சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கிறார்; யாக்கோபின் தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமானவர் என்று உணர்த்து அறிக்கையிடலாம்.

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,015,                                                 நவம்பர் 08, 2023 புதன்கிழமை

"விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;" ( எபிரெயர் 11 : 9 )
ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று நாம்  கூறுவதற்கு அவர் மகன் ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது மட்டும் காரணமல்ல; ஆரம்பம் முதலே அவரது வாழ்க்கை விசுவாச வாழ்க்கையாகவே இருந்தது. "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ( ஆதியாகமம் 12 : 1, 2 ) என்று கூறியதை அவர் முற்றிலுமாக நம்பினார். 

ஆபிரகாமின் விசுவாச வாழ்வை எண்ணிப்பார்க்க வியப்பாக உள்ளது. இன்று நவீன உலகத்தில் தொலைத்தொடர்பு சாதனங்களும் பயணங்களுக்கான வாகனங்களும் உள்ளதுபோல அக்காலத்தில் இல்லை. ஆனாலும் அவர் தேவனது கட்டளைக்குக்  கீழ்ப்படிந்து தனது சொந்த நாட்டை விட்டுப் புறப்படுகின்றார்.  

இன்று வாடஇந்தியாவிலுள்ள ஒரு சிறிய ஊருக்கு நாம் செல்லவேண்டுமென்றும் அங்கே தங்கி இருக்கவேண்டுமென்றும் நமக்குக் கூறப்பட்டால் எப்படி இருக்கும்? நாம் என்னவெல்லாம் எண்ணுவோம்? அங்குள்ள மொழி, உணவு, மக்கள் எதுவுமே நமக்குச் சரியாகத் தெரியாது. ஆம், அன்பானவர்களே, இப்படி ஒரு அறியாத நிலையில்தான் ஆபிரகாம்  தேவன் சொன்ன நாட்டுக்குப் புறப்பட்டார். "விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்." ( எபிரெயர் 11 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. இன்று நாம் சாலை ஓரங்களில் கூடாரமடித்துத் தங்கியிருக்கும் நரிக்குறவர்களைப் பார்க்கின்றோமே அதுபோல ஆபிரகாம் பரதேசியைப்போலத் தங்கியிருந்தார்.  இத்தனைக்கும் அவர் தனது சொந்த நாட்டில் நல்ல நிலையில் வாழ்ந்தவர். ஊர் என்கின்ற கல்த்தேயருடைய நகரத்தைச் சார்ந்தவர் (ஆதியாகமம்  11:31) 

ஆபிரகாம் இத்தனை விசுவாசத்தோடு காத்திருக்கக் காரணம், " தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்." ( எபிரெயர் 11 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. தேவன் தனது வாக்குத்தத்தத்தை மறந்துவிடவில்லை. அவரை உயர்த்தினார்.

ஆம், ஒரு மனிதன் தேவனது வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து அனைத்தையும் விட்டு அவர் காட்டிய தேசத்துக்குப் புறப்பட்டு வந்ததால் அந்த ஒரு மனிதனை ஒரு தேசமாகவே தேவன் மாற்றினார். இஸ்ரவேல் தேசம் ஆபிரகாமின் சந்ததிகளால் உருவானது. இன்றும் அது உலகத்தில் பல்வேறு விதங்களில் தனித்துவம் பெற்ற நாடாக உள்ளது. ஆபிரகாம் என்னை ஆசீர்வதியும் என வேண்டவில்லை. என்னை ஒரு தேசமாக மாற்றும் என்று வேண்டவில்லை. தேவனது சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார் அவ்வளவே.

அன்பானவர்களே, முதலில் தேவன் நம்மிடம் பேசுவதைக் கேட்கும் அனுபவத்துக்கு வரவேண்டும்; பின் அதற்குக் கீழ்படியவேண்டும். அப்போது தேவன் நம்மையும் ஆபிரகாமை ஆசீர்வதித்ததுபோல  மேலான ஆசீர்வாதத்தினால் நிரப்புவார்.

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,016,                                                 நவம்பர் 09, 2023 வியாழக்கிழமை 

"இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்." ( எரேமியா 7 : 3 )

நமது தேவன் பாவங்களை மன்னிக்கின்றவர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதை மட்டும் அவர் கருத்தில் கொள்வதில்லை. நமது வழிகளை நாம் சீர்படுத்தவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். அதனையே இன்றைய தியான வசனத்தில்,  "உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்" என்று கூறப்பட்டுள்ளது. 

ஒரு முறை பிறமத நண்பர் ஒருவர் என்னிடம், " கிறிஸ்தவத்தில் மன்னிப்பு பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது. பாவம் செய்துவிட்டு மன்னிப்பும் பெறலாம் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்" என்று கேட்டார். நான் அவரிடம் கூறினேன், "பாவம் செய்துவிட்டு மன்னிப்பு பெறுவது ஒரு சடங்கல்ல; மாறாக அது ஒரு மனம் மாறுதல். இனிமேல் இப்படிப்பட்டப் பாவத்தை நான் செய்யமாட்டேன் என்று மனஸ்தாபப்பட்டு உறுதியெடுப்பது. அந்த உறுதியில் நிலைத்திருக்கும் காரியங்களை செய்வது."

வேதாகமத்தில் சகேயு எனும் ஒரு மனிதனைக்குறித்து நாம் வாசிக்கின்றோம். இந்த சகேயு வரி வசூலிப்பவர்களின் தலைவன். அநியாயமாக வரி வசூலித்து சொத்துச் சேர்த்தவன். ஆனால் அவன் இயேசு கிறிஸ்துவிடம் வந்தபோது, "ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்." ( லுூக்கா 19 : 8 ) ஆம், செய்த தவறை உணர்ந்து அதற்குக் கைமாறுசெய்யத் துணிந்தான். 

இதுபோன்ற செயல்களையே இன்றைய வசனத்தில் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது. நாம் செய்த தவறுகளை உணர்வது மட்டுமல்ல, கூடுமானவரை பாதிக்கப்பட்டவருக்கு கைமாறு செய்வது. அல்லது, அப்படிக் கைமாறு செய்ய முயலுவது. ஒருவரை நாம் ஏமாற்றியிருக்கலாம்,  அப்பொழுது திறந்த மனதுடன் அதனை அவரிடம் ஒத்துக்கொள்வது.  

நான் வெறுமனே ஜெபித்துக்கொண்டே இருப்பேன், தேவன் என்னை மன்னிக்கட்டும் என்று இருப்பது மேலான செயலல்ல. காரணம், இப்படி இருப்போமானால் நமது உள்ளான மனதில் மாற்றமில்லை என்று பொருள். ஒருவேளை பழைய சூழ்நிலை நமக்குத் திரும்புமானால் நாம் பழையதுபோன்ற தவறான வாழ்கையினையேத்  தொடருவோம் என்று பொருள். மட்டுமல்ல; நமது தேவன் அநியாயத்துக்குத் துணைபோகின்றார் என்றும் பொருளாகும்.

பாவங்களில் சாமாரிய பெண் செய்ததுபோன்ற பாவங்களும் உண்டு, சகேயு செய்த பாவம் போன்ற பாவமும் உண்டு.  விபச்சாரம் செய்தவள் அதனை நிறுத்தினால் போதும், ஆனால் பொருள், பணத்தை அபகரித்து, அல்லது லஞ்சம் வாங்கி வாழ்ந்தவர்கள் சகேயுபோல ஈடுகட்டவேண்டியதும் அவசியம். 

பிலேமோனுக்கு அப்போஸ்தலரான பவுல் எழுதிய நிருபத்தில் ஒநேசிமு எனும் ஒரு மனிதனைக் குறித்து எழுதுகின்றார். இந்த ஒநேசிமு தனது எஜமானாகிய பிலேமோனிடம் ஏமாற்றிவிட்டுத் தப்பிவந்த அவனது வேலைக்காரன். ஆனால் பவுல் மூலம் கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டான். அவனிடம் பணம் இல்லை. ஆனால் பவுல் அதனை அப்படியே விட்டுவிடவில்லை. அவன் ஏற்படுத்திய அநியாயத்தை அவனுக்காகத் தான் செலுத்தித் தீர்ப்பேன் என்று எழுதுகின்றார்.   

"அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். " ( பிலேமோன் 1 : 18, 19 )

ஆம், நமது வழிகளையும் நமது கிரியைகளையும் சீர்ப்படுத்தும்போது நம்மை அவர் நன்மையுடன் குடியிருக்கப்பண்ணுவார்.  

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,017,                                                 நவம்பர் 10, 2023 வெள்ளிக்கிழமை

அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்;' ( 1 இராஜாக்கள் 19 : 4, 5 )

எலியாவைப்போன்ற  "சூரைச் செடி அனுபவம்" வாழ்வில் எல்லோருக்குமே ஏற்படுவதுதான்.  இத்தனைக்கும் எலியா சாதாரண ஆள் அல்ல. அவர் வல்லமையான தேவ மனிதன். அவர் வானத்திலிருந்து அக்கினியை இறக்கி கர்த்தரே மெய்யான தேவன் என்பதை பாகால் தீர்க்கதரிசிகளுக்கு உணர்த்தியவர், இறந்தவர்களை உயிர்ப்பித்தாவர், கொடிய பஞ்சகாலம் முடியும்வரை சாறிபாத் விதவையின்  வீட்டில் மாவும் எண்ணையும் அதிசயமாக பெருகும்படிச் செய்தவர். 

மழை பெய்யாதபடி அவர் வேண்டுதல் செய்து மூன்றரை ஆண்டுகள் வானத்தை அடைந்துவிட்டார். பின்னர் அவர் வேண்டுதல் செய்தபோது வானம் மழையைப் பொழிந்தது.  இதனை அப்போஸ்தலரான யாக்கோபு, "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை." ( யாக்கோபு 5 : 17 ) என்று நினைவுபடுத்துகின்றார்.

ஆம், இத்தனைக்கும் எலியா நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகவே இருந்தார் என்று மேற்படி வசனம் கூறுகின்றது. எனவேதான் யேசபேல் அவரைக் கொலைசெய்யும்படித் தேடியபோது எலியா மனம் சோர்ந்து போனார். சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினார். 

அவர் தேவனது தீர்க்கதரிசியாக இருந்து தேவனது வார்த்தையின்படிச் செயல்பட்டதால்தான் அவருக்குப் பாடுகள். ஆம். நாம் எவ்வளவுதான் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் உலகத்தில் நமக்கு இதுபோன்ற பாடுகளும் அனுபவங்களும் ஏற்படுவதுண்டு. 

ஆனால் தேவன் நம்மை அப்படியே விட்டுவிடுவதில்லை. சோர்ந்து படுத்திருந்த எலியாவைத் திடப்படுத்தத்  தேவன் தனது தூதனை அனுப்பினார். தூதன் கொண்டுவந்த அப்பத்தையும் தன்னீரையும் குடித்த எலியா திடன்கொண்டார். "அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்." ( 1 இராஜாக்கள் 19 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது.

அன்பானவர்களே, சூரைச்செடி அனுபவம் நமது வாழ்வில் ஏற்படும்போது நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து பலமடையவேண்டும். தூதன் அளித்த அப்பதையும் தண்ணீரையும்விட மேலான அப்பமாகிய தனது உடலையும் இரத்தத்தையும் இயேசு கிறிஸ்து நமக்காகக் கொடுத்துள்ளார்.  

தூதன் அளித்த அப்பத்தின்  பலத்தால் எலியா  நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான். நாமும் நமது வாழ்க்கையில் வரும் சோர்வுகளைக் கடந்து கிறிஸ்துவின் உடலும் இரத்தமும் தரும் பலத்தால்  பரலோக சீயோனை நோக்கிச் செல்ல முடியும். சூரைச் செடி அனுபவம் நம்மைத் தேவனுக்குள் திடப்படுத்துகின்றது. அவர் இல்லாமல் நம்மால் எதனையும் செய்ய முடியாது எனும் உண்மையினை நமக்குப் புரியவைக்கின்றது. 

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,018,                                                 நவம்பர் 11, 2023 சனிக்கிழமை

"யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான்." ( யோனா 4 : 6 )

நேற்றைய தியானத்தில் நாம் எலியாவின் சூரைச்செடி அனுபவத்தைப் பார்த்தோம். இன்றைய தியானம் யோனா தீர்க்கதரிசியின் ஆமணக்குச்செடி அனுபவத்தைக் கூறுகின்றது. எலியாவின் மனமடிவிற்கும் யோனாவின் மனமடிவிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. எலியா தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்த பின்னரும் தனக்கு உயிரே போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி வருத்தமுற்றார்.   ஆனால் யோனாவோ, தான் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போனதை எண்ணி வருத்தமுற்று மனமடிவிற்குள்ளானார்.

யோனா புத்தகத்தை வாசிக்கும்போது  யோனாவுக்கும் தேவனுக்கும் ஒரு குடும்பத்தில் தாய் தகப்பனோடு பிள்ளைகள் கொண்டுள்ள உறவு  போன்ற உறவு இருந்தது நமக்குப் புரியவரும். அவர் தனது அனைத்து மன எண்ணங்களையும்  தேவனோடு  பகிர்ந்துகொள்ளக்கூடிய மனிதனாக இருந்தார். பலரும் அவர் வறட்டுத்தனமான முடிவெடுத்து தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தர்ஷீசுக்குத்  தப்பி ஓடினார் என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது மெய்யல்ல. 

யோனாவுக்கு எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தது. தேவன் நினிவே நகரத்தை அழிக்கமாட்டார் என்பது அவருக்கு  ஏற்கனவே தெரியும். அதனை அவர் தேவனிடம் ஏற்கனவே கூறியிருந்தார். "நீர்தான் நினிவேயை அழிக்கமாட்டீரே பின்  நான் ஏன் அங்கு செல்லவேண்டும்? " என்று கூறினார். 

இதனை நாம் யோனாவின் ஜெபத்தின்மூலம் அறியலாம். யோனா "கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்."( யோனா 4 : 2 ) என்று அவர் கூறுகின்றார்.  

ஆனால் அவருக்குள் மனித பலவீனம் இருந்தது. தான் தீர்க்கதரிசனம் கூறியது நிறைவேறாவிட்டால் பின்னர் மக்கள் தன்னை தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் கருதினார். எனவேதான் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தப்பி ஓடினார்.  நமக்கும் தேவனுக்கும் இத்தகைய புரிந்துகொள்ளும் உறவு உள்ளதா? எனவே தேவன் யோனாவைக் கடிந்துகொள்ளவில்லை. யோனாவைத் தனது மரணத்துக்கும் உயிர்தெழுதலுக்கும் உதாரணமாக இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.  "யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்." ( மத்தேயு 12 : 40 ) என்று இயேசு குறிப்பிடுவதை நாம் வாசிக்கின்றோம்.

தான் தீர்க்கதரிசனம் கூறியது நிறைவேறாததால் அவர் மனமடிவடைந்து நகருக்குவெளியே சென்று ஒரு குடிசைபோட்டு அமர்ந்துகொண்டார். ஆனால் தேவன் அன்புள்ளவராதலால், யோனாவுடைய மனமடிவுக்கு நீங்கலாக்க ஒரு ஆமணக்குச்செடியை ஒரேநாளில் முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணி ஒரே நாளில் அதனை அழித்து அதன்மூலம் யோனாவுக்கும் நமக்கும் தேவனுடைய இரக்கம் எப்படிப்பட்டது என்பதனைப் புரிய வைக்கின்றார்.

"வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்." ( யோனா 4 : 11 ) ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்களுக்காக மட்டுமல்ல மிருகங்களுக்காகவும் இரங்குகின்றார்.  

யோனா தேவனுக்குக் கீழ்படியவில்லை என்று அற்பமாக எண்ணாமல் அவரைப்போல தேவ உறவில் வளருவோம். தனது மனதின் எண்ணங்களை யோனா தேவனோடு பகிர்ந்துகொண்டதுபோல நாமும் பகிர்ந்துகொள்வோம். அப்போது தேவன் நம்மீதும்  இரக்கம்கொள்வார். மேலான காரியங்களை வெளிப்படுத்தித் தருவார். நினிவே நகருக்கு யோனாவினால் மீட்பு உண்டானதுபோல நம்மைக்கொண்டும் பலரை நீதியின்  பாதையில் நடத்துவார்.

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,019,                                                 நவம்பர் 12, 2023 ஞாயிற்றுக்கிழமை

"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்....." ( எபேசியர் 1 : 17 )

ஆவிக்குரிய வாழ்விலும் உலக வாழ்விலும் நாம் சிறப்புற விளங்கவேண்டுமென்றால் நமக்கு தேவனை அறியக்கூடிய ஞானம் அவசியம். இந்த ஞானம் இல்லாமல் நாம் வெறுமனே உலக ஞானத்தையே முன்னுரிமை கொடுத்துத் தேடிக்கொண்டிருப்போமானால் நமது வாழ்க்கை பரிதபிக்கக்கூடிய ஒன்றாகவே மாறிவிடும். இதனாலேயே அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்று" வேண்டுகின்றார். 

உலக ஞானத்தையே விரும்பி அதனால் தேவனையும் தனது நாட்டையும் கெடுத்த ஒரு மனிதன்தான் சாலமோன். தேவன் அவனுக்குத் தரிசனமாகி உனக்கு என்னவேண்டும் என்று கேள் என்று கூறியபோது சாலமோன், "உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.'( 1 இராஜாக்கள் 3 : 9 )

சாலமோன் தேவனிடம் கேட்டது முழுக்க முழுக்க உலக ஆசீர்வாதத்தை முன்னிறுத்தி வேண்டிய உலக ஞானம். ஆனால் தேவன் அதனை விரும்பினார் என்று கூறப்பட்டுள்ளது. தேவன் இப்படிக் கேட்டதை தேவன் பாராட்டினார். தேவன் சாலமோனுக்கு இரண்டுமுறை தரிசனமானார். அவன் 3000 நீதிமொழிகளைச் சொன்னான். ஆனாலும் அன்பானவர்களே, அவன் தேவ ஞானத்தைப் பெறாமலேயே போனான். 

காரணம், அவனது பெண்ணாசை. அவனுக்கு 300 மனைவிகளும் 700 மறு மனைவிகளும் இருந்தனர். ( 1 இராஜாக்கள் 11 : 3 ). அனைவரும் தேவன் விலகிய பிற இனத்துப் பெண்கள்.  அவர்கள் அவனது மனதை மாற்றிப் பிற தெய்வங்களை வணங்கச்செய்தனர். "சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்." ( 1 இராஜாக்கள் 11 : 6 )

ஆம் அன்பானவர்களே, தேவனைப் பற்றி  அறியும்போது மட்டுமே ஒருவன் பாவத்துக்கு விலகி வாழ முடியும். இரண்டுமுறை தேவன் அவனுக்குத் தரிசனமானபின்னரும் சாலமோன் தேவனைப் பற்றி அறிந்திருந்தானேத்   தவிர தேவனைச் சரியாக  அறியவில்லை. தேவனை அறிந்திருப்பானேயானால்  அவன் பிற தெய்வங்களை நாடிப்போயிருக்கமாட்டான். ஆம், அவனுக்குத் தேவனை அறியும் ஞானம் இல்லை; அதனை அவன் கேட்கவுமில்லை.

"ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டு விசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்."( 1 இராஜாக்கள் 11 : 9,10 ) என்று வாசிக்கின்றோம். முதலில் சாலமோன் ஞானத்தைக் கேட்டபோது மகிழ்ச்சியடைந்த கர்த்தர் இப்போது அவன்மேல் கோபமானார் என்று கூப்பட்டுள்ளது. மட்டுமல்ல, இஸ்ரவேல் நாட்டையே இரண்டு கூறாக்கிப்போட்டார் தேவன்.  

அன்பானவர்களே, எனவே நாம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். தேவனை அறியும்  ஞானத்தையும்  தெளிவை அளிக்கின்ற ஆவியையும் நாம் தேவனிடம் கேட்கவேண்டியது அவசியம். இதனாலேயே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் நமக்கு இந்த அறிவுரையினைக் கூறுகின்றார். தேவ ஞானம் வரும்போது நாம் உலக காரிங்களிலும் ஞானத்துடன் நடக்க முடியும். இல்லையானால் உலக ஞானத்தையே தேடிய சாலமோனின் நிலைமையே  நமக்கும்  ஏற்படும். 

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,020,                                                 நவம்பர் 13, 2023 திங்கள்கிழமை

"தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." ( 2 கொரிந்தியர் 7 : 10 )

தேவனுக்கேற்ற துக்கம், உலகத் துக்கம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.  உலகத் துக்கம் கொள்வோமானால் நமக்கு நிம்மதி இருக்காது. நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு அவர்களுக்குள்ளதுபோல எதுவும் நமக்கு இல்லை எனும் எண்ணம் நம்மை வாட்டிக்கொண்டிருக்கும். இன்று மருத்துவர்கள் கூறுவது, மனிதர்களது பல்வேறு நோய்களுக்குக்  காரணம் மனக்கவலை எனும் உலகத் துக்கம். தீராத கவலை பல நோய்களை நமது உடலில் கொண்டு வருகின்றது. ஆம், மருத்துவ உலகம் இன்று கண்டறிந்து  கூறியுள்ள உண்மையினைத்தான் அப்போஸ்தலரான பவுல்,    "லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." என்று கூறியுள்ளார். 

இதற்கு மாறாக நாம் ஆவிக்குரிய துக்கம் எனும் தேவனுக்கேற்ற துக்கம் கொள்வோமானால் நாம் இரட்சிக்கப்படுவோம்.  ஆம் அன்பானவர்களே, இரட்சிப்படைய முதல்படி நம்மைக்குறித்து, நமது பாவ வாழ்கையினைக்குறித்தத்  துக்கம். ஒரு தவறான செயல் செய்துவிடும்போது ஐயோ, நான்  இப்படிச் செய்துவிட்டேனே என வருந்துவது; அல்லது நான் இப்படிச் செய்திருக்கக் கூடாது எனும் எண்ணம் நமது மனதினில் எழுவது. ஆம், இது ஆவிக்குரிய துக்கம். இத்தகைய துக்கமடைவதை தேவன் விரும்புகின்றார். காரணம், இத்தகைய "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு தொடர்ந்து நாம் அதனைக்குறித்து மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது" என்கின்றார் பவுல் அப்போஸ்த்தலர். 

இயேசு கிறிஸ்துவும் தனது மலைப் பிரசங்கத்தில்,  "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்று கூறினார். இயேசு கிறிஸ்துக்  கூறியதை நாம் பெரும்பாலும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அது எப்படித் துயரப்படுபவர்கள் பாக்கியவான்களாக இருக்க முடியும்? என்று எண்ணுவோம். ஆனால் இயேசு தொடர்ந்து  கூறுகின்றார், "அவர்கள் ஆறுதல் அடைவார்கள்" என்று. 

தேவன் கொடுக்கும் சமாதானமே ஆறுதல் தரும்.  நாம் ஆவிக்குரிய தேவனுக்கேற்ற துக்கம் கொள்ளும்போது தேவன் நம்மைத் தனது  இரட்சிப்பினால் நிரப்புவார். அப்போது உலகம் கொடுக்க இயலாத சமாதானம் நம்மை நிரப்பும். எனவேதான் அத்தகைய துயரப்படுபவர்கள் பாக்கியவான்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

பெரும்பாலும் மனிதர்கள் தங்கள் மனதில் ஆவிக்குரிய துக்கம் கொள்வது அரிதாகவே இருக்கின்றது. "அவன் / அவள் அப்படிப் பேசியது தப்புதானே? பின் நான் பதிலுக்குப் பேசியது மட்டும் எப்படித் தப்பாக இருக்க முடியும்?" என்று எண்ணுவது; அல்லது  லஞ்சம் வாங்கிவிட்டு, "இதெல்லாம் பெரிய தப்பு கிடையாது, இப்போ யார் லஞ்சம் வாங்காமல் இருக்கிறாங்க?.. நான் சும்மாவா வாங்கினேன் பதிலுக்கு நானும் பணம் தந்தவருக்கு நன்மை செய்திருக்கிறேனே?" என எண்ணுவது அல்லது, "எனது மாதச் சம்பளம் குறைவுதான். அதனை வைத்து எப்படிக் குடும்பத் தேவையைச் சமாளிக்கமுடியும்?" எனத் தவறை நியாயப்படுத்துவது என்றே பலர் பலவேளையில் இருக்கின்றனர். 

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு அரசு அலுவலகத்தில் வேலைபார்த்துவந்தார். அவரது குணம் தனது உயர் அதிகாரிகளையும் உடன் பணியாளர்களையும் குறித்து தொடர்ந்து மேலிடத்துக்கு மொட்டைக்கடிதம் அனுப்புவது. பலமுறை இவரது மொட்டைக்கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு இவர் கூறுவது தவறு என்று நிரூபிக்கப்பட்டது. இவரிடம் பலரும் அதிகம் பேசுவதில்லை. மதுவுக்கு அடிமையாகி  மனச் சமாதானமில்லாமல் இறுதியில் தற்கொலை செய்து வாழ்வை முடித்துக்கொண்டார். 

ஆம் அன்பானவர்களே, இப்படி இருப்போமானால் நாம் தேவனுக்கும் அவரது இரட்சிப்புக்கும் தூரமானவர்களாகவே இருப்போம். பவுல் அப்போஸ்தலரது வார்த்தைகள் எப்போது நமது இருதயத்தில் ஒரு பயத்தையும்  எச்சரிப்பையும்  உண்டாக்கவேண்டும்.  தேவனுக்கேற்ற துக்கம் பின்பு நமக்கு இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. நமது தவறான செயல்பாடுகளை எண்ணித் துக்கம்கொள்வோம்; தேவனிடம் மன்னிப்பை வேண்டுவோம், ஆறுதல் பெறுவோம்.
 
'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,021,                                                 நவம்பர் 14, 2023 செவ்வாய்க்கிழமை

"நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 )

அப்போஸ்தலரான பேதுரு ஆவிக்குரிய மக்களுக்குக்  கூறும் ஆலோசனைதான் இன்றைய தியான வசனம். நாம் கிறிஸ்துவை வாழ்வில் அறிந்தால் மட்டும் போதாது, அந்த அனுபவத்தில் தினமும் வளர்ச்சியடையவேண்டும். அது எப்படி வளருவது? வெறும் சடங்குகளையும் மத சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பதால் அல்ல; மாறாக, திருவசனமாகிய ஞானப்பாலை உட்கொள்வதால்தான். அதனால்தான் பேதுரு, "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்" என்று கூறுகின்றார். 

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்கள் குழந்தைகளிடம் பெரிய அரசியல் தலைவர்களையும், விஞ்ஞானிகளையும், அறிவு மேதைகளையும் சுட்டிக்காட்டி அவர்களைப்போல மாறவேண்டும் என்று அறிவுரை கூறுவதுண்டு. ஆனால் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குழந்தைகளுக்கு பெரியவர்கள் மாதிரியல்ல; மாறாக பெரியவர்களுக்குத்தான் குழந்தைகள் மாதிரி என்று கூறினார். ஆம், "நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 3 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இந்த உலகத்தில் நாம் பல பெரியவர்களைப் பார்த்து அவர்களைப்போல மாறிட முயற்சி செய்யலாம். ஆனால் அவை இந்த உலக வாழ்க்கைக்கு மட்டுமே உதவும். மட்டுமல்ல நாம் பெரியவர்கள் என எண்ணியிருக்கும் மனிதர்களது ஒரு பக்கம்தான் நமக்குத் தெரியும். பல பிரபலமான பெரிய மனிதர்களது வாழ்க்கை பாவ இருள் நிறைந்ததாகவே இருக்கின்றது. எனவே, அவர்களை நாம் முன்மாதிரியாகக் கொள்ள முடியாது. 

நாம் பெரியவர்களைப்போல அல்ல; மாறாக, குழந்தைகள்போல மாற வேண்டும். நாம் உள்ளத்தில் குழந்தைகள்போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியாது. மனம்திரும்பிய வாழ்க்கையே குழந்தைக்குரிய வாழ்வு. பின்பு, இன்றைய தியானத்தில் பேதுரு கூறுவதுபோல வசனமாகிய ஞானப்பாலை உட்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு அதனைப் பருகி வளரவேண்டும். 

மேதைகளையும், அறிஞர்களையும், செல்வந்தர்களையும்  இராஜாக்களையும், முதல்வர்களையும் பிரதமர்களையும் என்னிடம் வருவதற்கு இடம்கொடுங்கள் ஏற்று இயேசு கிறிஸ்து கூறவில்லை, மாறாக,    "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" ( மத்தேயு 19 : 14 ) என்று கூறினார். 

அன்பானவர்களே, தேவ வசனங்கள் வல்லமையானவை, அதிகாரமுள்ளவை. அவற்றை நாம் முதலில் வாசித்து அறியவேண்டும். அப்படி அறிய அறிய நமது உள்ளம் குழந்தைகளுக்குரிய கபடமில்லாத உள்ளம்  போல  மாறும். அப்போது அந்த வசனங்கள் கூறுவதன்படி வாழ முயல்வோம்.  அதுவே பலம் கொள்ளுதல். அப்படி நாம் பலம்கொள்ளும்போது நாம் வாசித்த தேவ வார்த்தைகள் நமது வாழ்க்கையில் வல்லமையாய்ச் செயல்படுவதை நாம் கண்டுணரலாம். 

களங்கமில்லாத ஞானப்பாலாகிய  திருவசனங்களை அன்றாடம் உட்கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் பலம் கொள்வோம். குழந்தைகளைப்போலாகி பரலோக ராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர்களாக மாறுவோம். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,022,                                                 நவம்பர் 15, 2023 புதன்கிழமை

"கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை." ( உபாகமம் 29 : 5 )

இஸ்ரவேல் மக்களை தேவன் எகிப்திலிருந்து விடுவித்து கானானை நோக்கி நடத்தியபோது பல அற்புத அதிசயங்களைச்  செய்தார். அவற்றில் நாம், செங்கடலை தேவன் பிரித்தது, கரைபுரண்டு ஓடிய யோர்தானைத் திருப்பியது, எரிகோ கோட்டையினை இடிந்துவிழச் செய்தது, மன்னா பொழிந்தது, அதிசயமாகப்  பாலை நிலத்தில் இறைச்சியும், தண்ணீரும்  மக்களுக்குக் கொடுத்தது இவற்றையே பெரிதாகப் பேசுகின்றோம். ஆனால் அவற்றிற்கு இணையான அதிசயத்தைத்தான்  இன்றைய வசனம் கூறுகின்றது. 

நாம் ஓர்  ஆண்டுக்குள் எத்தனைச் செருப்புக்கள் மாற்றுகின்றோம் என்று எண்ணிப்பாருங்கள். இத்தனைக்கும் நாம் இஸ்ரவேல் மக்கள் நடந்ததுபோல் பல கிலோமீட்டர்தூரம் வனாந்தரத்தில் நடப்பதில்லை.  ஆனால் அந்த மக்கள் 40 ஆண்டுகள் ஒரே செருப்பை அணிந்தபடி நடந்தனர். அந்தச் செருப்புகள் அறுந்துபோகவோ  பழையவைகளாகவோ இல்லை.  இந்த அதிசயத்தையே மோசே, "உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை." என்று கூறுகின்றார். ஆம் அவை 40 ஆண்டுகள் அவை புதிதாகவே இருந்தன. 

பாலை நிலத்தில் புதிய செருப்புக்களை வாங்கி உபயோகிக்க முடியாது, மக்கள் உடனேயே தயாரித்து அணியவும்  முடியாது. எனவே தேவன் இந்த அதிசயத்தைச் செய்தார்.  இதுபோலவே அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் பழையதாகிப்போகவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய அதிசயம்!!! ஆனால் நாம் இவற்றை அதிகமாக எண்ணிப்பார்ப்பதில்லை. 

அன்பானவர்களே, இதே சிந்தனையோடு நாம் பரம கானானை நோக்கிப்  பயணிக்கும் புதிய ஏற்பாட்டுச் சிந்தனைக்கு வருவோம். புதிய ஏற்பாட்டில் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்படையும்போது இரட்சிப்பின் ஆடை அணிவிக்கப்படுகின்றோம். இந்த ஆடை இல்லாமல் நாம் பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியாது.  இந்த ஆடை என்பது பரிசுத்தவான்களுக்கு அடையாளம். "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது. இதனை நாம் பழையதாகிக்  கந்தையாகாமல் காத்துக்கொள்ளவேண்டும்.

இயேசு கிறிஸ்துவும் இதனைத் தனது உவமையில் கூறினார். "சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்." ( மத்தேயு 22 : 13 )

இதுபோலவே செருப்புகளைப்பற்றியும் நாம் அறியலாம். சமாதானத்தின் சுவிசேஷம் எனும் கிறிஸ்துவின் நற்செய்தியை அந்த செருப்புகள். இதனை அப்போஸ்தலரான பவுல்,  "சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;" ( எபேசியர் 6 : 15 ) என்று கூறுகின்றார். ஆம், நமது வேத வசனங்களின் அறிவும் எப்போதும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்த ஆயுதமாகவும் அதற்கேற்ற வாழ்க்கையும் உள்ளவர்களாய் அவை பழையதாகிவிடாமல் எப்போதும் புதிதாகக் காக்கப்படவேண்டும். 

"கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே." ( உபாகமம் 29 : 3 ) என்று மோசே கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போது, அன்று இஸ்ரவேல் மக்களுக்குச் செய்ததுபோல ஆவிக்குரிய இஸ்ரவேலரான நமது வாழ்க்கையிலும் நமது இரட்சிப்பின் ஆடையும்   நமது வேத அறிவும், அவற்றைப் பயன்படுத்தும் ஆயத்தமும்  சுவிசேஷ வாழ்க்கையும்  பழையதாகாமல் காத்துக்கொள்ள தேவன் வழிசெய்து அதிசயமாக நம்மையும்  நடத்துவார். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,023,                                                 நவம்பர் 16, 2023 வியாழக்கிழமை

"என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 2 )

இன்றைய வசனம் தேவன் மனிதர்கள்மேல் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதையும் அவர்களை மீட்டெடுக்க அவர் எவ்வளவு ஆர்வமுள்ளவராக இருக்கின்றார் என்பதனையும்  விளக்குகின்றது. இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனமானது இதனோடு தொடர்புடையது. அதில் தேவன் கூறுகின்றார், "வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?"( ஏசாயா 66 : 1 )

அன்பானவர்களே, வானத்திலுள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், பால்வெளிவீதி, சூரிய குடும்பத்தைப்போல பல்வேறு சூரிய குடும்பங்கள் இவையெல்லாமே தேவன் படைத்தவைதான். இவைகளுக்குமேல் அதிகாரம் செலுத்தும் சிங்காசனம் அவருடையது. இவைகளோடு  ஒப்பிடும்போது பூமி அவர் கால் வைக்கும் சிறு படி போன்றதுதான்.  ஆனால் இன்று மனிதர்கள் இந்தக் கால்படிபோன்ற பூமியில் அவருக்கென்று ஆலயம் கட்டுவதையும் ஆலயப்பணிசெய்வதையும் பெருமையாக எண்ணிக்கொள்கின்றனர். 

அத்தகைய மனிதர்களைப்பார்த்துத்  தேவன் கூறுகின்றார், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." அதாவது மனிதனே, நான் இவ்வளவு பெரிய ஆகாய விரிவை உண்டாகியிருக்கிறேன். இதற்குமுன் நீ எனக்குக் கட்டும் ஆலயம் எம்மாத்திரம்? 

நான் இவைகளை நோக்கிப்பார்ப்பதில்லை. சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். எனது வசனத்தைக்கைக் கொண்டு, எனக்கு அஞ்சி, எனக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவனை நான் நோக்கிப்பார்ப்பேனேத் தவிர  வேறு எவரையும் நான் நோக்கிப்பார்ப்பதில்லை. நான் உண்டாக்கின பெரிய ஆகாய விரிவையோ அவற்றில் நான் உருவாக்கிய பல்வேறு கிரகங்களையோ நோக்கிப்பார்ப்பதைவிட எனக்குப் பயப்பட்டு எனக்கு ஏற்ற வாழ்க்கை வாழ விரும்பும் மனிதனையே நான் நோக்கிப்பார்ப்பேன் என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். 

இதற்குக் காரணம் தேவன் மனிதனைத் தனது சாயலாகவும் ரூபமாகவும் உண்டாக்கியதுதான். (ஆதியாகமம் - 1;26) தேவன் தனது சாயலையும் ரூபத்தையும் வேறு எந்த உயிரினங்களுக்கும் கொடுக்கவில்லை. மனிதனை மட்டுமே அப்படிப் படைத்தார். அப்படிப் படைக்கப்பட்ட மனிதன் அந்தச் சாயலை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். எனவே, தான் எவ்வளவோ பெரிய படைப்புகளைப் படைத்திருந்தாலும் அவற்றைவிட தனது கட்டளைகளுக்கு நடுங்கிக் கீழ்ப்படியும் மனிதனை நோக்கிப் பார்க்கின்றார்.

இப்படி அவர் மனிதனை நோக்கிப்பார்ப்பதால்தான் நமது ஜெபங்களுக்குப் பதில் தருகின்றார். அன்பானவர்களே, எனவே நாம் அவரது வசனங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமேத் தவிர இதர சடங்கு சம்பிரதாயங்களுக்கல்ல. ஆம், அவருக்காகச் செய்யும் எந்த மேலான செயல்பாடுகளையும்விட அவருக்குக் கீழ்படிவத்தையே தேவன் விரும்புகின்றார் எனும் எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்குமானால் ஆன்மிகம் எனும் பெயரில் செய்யப்படும் தேவையில்லாத காரியங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,024,                                                 நவம்பர் 17, 2023 வெள்ளிக்கிழமை
 
"அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்." ( ஓசியா 7 : 14 )

மெய்யான மனம் திரும்புதலின்றி தங்களுக்கு ஏதாவது துன்பமோ பிரச்சனைகளோ ஏற்படும்போது மட்டும் தேவனை நோக்கி ஜெபிக்கும் மக்களைக் குறித்து  இன்றைய தியான வசனம்  கூறுகின்றது. 

இத்தகைய மனிதர்கள் துன்பங்களோ  வியாதிகளோ நெருக்கும்போது தேவனுக்கு ஏற்புடையதுபோன்ற காரியங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். ஜெபம், தவம், காணிக்கைகள், ஆலயங்களுக்குச் செல்லுதல் எனத் தங்கள் வாழ்க்கை முறைகளில் சில மாறுதல்களைச்  செய்வார்கள். ஆனால், பொதுவாக இத்தகைய மனிதர்கள் தன்னைத் தேடவில்லை என்று வருத்தத்துடன் கூறுகின்றார் தேவன். 

இதனையே, "தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, தேவனை வாழ்வில் அறியவேண்டும் எனும் எண்ணத்தில் தேவனிடம் வராமல் தங்கள் உலகத் தேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்பதற்காக இப்படி பக்திகாரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்கின்றார் தேவன்.  

இதனையே தொடர்ந்து ஓசேயா மூலம் தேவன் கூறுகின்றார், "திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; " ( ஓசியா 7 : 16 ) அதாவது இத்தனைக் காலமும் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மாற்றி தேவனிடம் திரும்பியதுபோல ஒரு தோற்றம் இருக்கின்றதே தவிர உன்னத தேவனிடம் உண்மையாகத் திரும்பவில்லை என்கின்றார். இதனையே, "திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு  அல்ல" என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, பலவேளைகளில் தேவன் நமக்குப்  பதிலளிக்காமல் இருக்கக் காரணம் இதுதான். அதாவது அந்த நேரத்திற்கான ஒரு விடுதலையினை மனிதர்கள் எதிர்பார்க்கின்றார்களேத்  தவிர நிரந்தரமான ஒரு விடுதலையினை அடையவேண்டும் என்று விரும்பவில்லை. தேவனை வாழ்வில் அறியவேண்டும் எனும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

ஆனாலும், தேவன் மனிதர்கள்மீது தான் கொண்டுள்ள அன்பினால் பலவேளைகளில் தனது ஊழியர்கள் ஜெபிக்கும்போது இத்தகைய மனிதர்களுக்குத் தற்காலிக விடுதலையினைக் கொடுக்கின்றார்.  ஆனால் அது போதாது. ஒவ்வொரு நேரத்துக்கும் ஊழியர்களைத்தேடி சுகம் பெற முடியாது. தொடர்ந்து மனம்திரும்பாத நிலையில் ஒரு மனிதன் இருப்பானேயானால் தேவன் விடுதலையளிக்காமல் அப்படியே விட்டுவிடலாம். மேலும் சரீர சுகம் பெறுவது நமது இலக்கல்ல; மாறாக நாம் தேவனை அறிந்து நித்திய ஜீவனுக்குத்  தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டும். 

தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடி தேவனைவிட்டு விலகிப்போகும் மனிதர்களைப்போல நாம் இருக்கக் கூடாது. அவரை வாழ்வில் அறியவேண்டும் எனும் ஆர்வமுடன் அவரைத் தேடி தேவ அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். நம்மைக்குறித்த தேவனது எதிர்பார்ப்பு இதுதான். அவரது மன விருப்பத்துக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.   


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,025,                                                 நவம்பர் 18, 2023 சனிக்கிழமை

"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது." ( ஆதியாகமம் 22 : 14 )

ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடத் துணிந்து மோரியா நாட்டிற்குச் சென்று தனக்குக் கர்த்தர் குறித்த  மலைமீது ஏறி ஈசாக்கைப் பலியிடத் தயாரானபோது கர்த்தரது தூதன் இறுதியில் அவரைத் தடுத்து நிறுத்தினார். ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிபவர் என்றும் அவருக்காக எதனையும் செய்யத்துணிந்தவர் என்பதும் உறுதியானது. தேவன் ஏதாவது அதிசயம் செய்து தனது மகனைக் காப்பாற்றுவார் என்பது ஏற்கனவே ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்தது.  எனவேதான் ஈசாக்கு அவரிடம், "அப்பா, பலியிட விறகுகளும் நெருப்பும் இருக்கின்றன. பலியிட ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்டபோது ஆபிரகாம், "என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்." ( ஆதியாகமம் 22 : 8 ) என உறுதியாகக் கூறுகின்றார். 

காரணம், ஈசாக்கு தேவனால் வாக்களிக்கப்பட்ட மகன். தான் அவனைப் பலியிட்டாலும் தேவன் மீண்டும் அவனை உயிரோடு எழுப்புவார் என்று ஆபிராகாம் நம்பினார். இதனை, "ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்." ( எபிரெயர் 11 : 19 ) என்று வாசிக்கின்றோம்.

எனவே, அவர் விசுவாசத்தால் கூறிய வார்த்தைகளை தேவன் அங்கீகரித்தார். 'ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்." ( ஆதியாகமம் 22 : 13 ) ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டார்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று பெயர் உண்டானது. 

அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நமக்கு கொல்கொதா மலை ஒரு யேகோவாயீரே. ஈசாக்குக்காக பலியான ஆடுபோல நமக்காக பலியான ஆடுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம்,  இதனையே யோவான் ஸ்நானன் மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.' ( யோவான் 1 : 29 ) என்று வாசிக்கின்றோம்.
 
அன்று ஆபிரகாமிடம் பிதாவாகிய தேவன் அமைதியாக இருந்திருந்தால் ஈசாக்கு பலியாகியிருப்பான். அதுபோல,  கிறிஸ்துவாகிய தேவ ஆட்டுக்குட்டியை  பிதாவாகிய தேவ கொடுக்காமல் அமைதியாக இருந்திருந்தால் நாமெல்லோரும் அழிந்துபோயிருப்போம். நமக்காக கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்பட்டதால் நாம் உன்னதங்களில் அவரோடுகூட அமரக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளோம்

இந்த உறுதியில்தான் அப்போஸ்தலரான பவுல், "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" ( ரோமர் 8 : 32 ) என்று கூறுகின்றார். தனது சொந்த மகனையே நமக்காகத் தந்தவர் அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் எப்படி நமக்குத் தராமல் இருப்பார்?

தேவன் மேலுள்ள நமது விசுவாசம் உறுதியாகும்போது அவரே நமது யேகோவாயீரே யாக இருப்பார். அன்று மோரியா மலையில் ஆபிரகாமுக்குப் பார்த்துக்கொண்டதுபோல நாம் கல்வாரியை நோக்கிப் பார்க்கும்போது நமக்கும் எல்லாம் பார்த்துக்கொள்ளப்படும். கிறிஸ்துவைவிட்டு விலகாத விசுவாசத்தோடு அவரையே பற்றிக்கொள்வோம். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,026,                                                நவம்பர் 19, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும்  நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லைஆட்டுக்குட்டியானவரின்ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள்  மாத்திரம் அதில் பிரவேசிபபார்கள்." (  வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 )

பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்குரிய முக்கியமான ஒரு தகுதியாக ஜீவபுத்தகத்தில் நமது பெயர் எழுதப்படுவதை வேதம் குறிப்பிடுகின்றது. ஒருவன் தேவனால் தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு      அனுபவத்திற்குள் வரும்போது அவனது பெயரை  தேவன் ஜீவபுத்தகத்தில்              எழுதுகின்றார்இப்படித் தங்கள் 
பெயர்  ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்களே தேவனது பரலோக  ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்இதனை வேதம் தெளிவாக பல  இடங்களில் குறிப்பிட்டுள்ளது

"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15 )

மேலும்,  "மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 )

பவுல் அடிகளும் இதனைக் குறிப்பிடும்போது,  "அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (  பிலிப்பியர் 4 : 3 ) என எழுதுகின்றார். 

பழைய ஏற்பாட்டு பக்தனான மோசேயும் இதனை அறிந்திருந்தார். இஸ்ரவேல் மக்கள் பொன் கன்றுகுட்டியை செய்து 'இதுவே எங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்த தேவன்' என வணங்கியதைக் கண்டு ஆவேசம் கொண்டார். அவர்களுக்காக தேவனிடம் மன்னிப்பு வேண்டினார். அப்போது, "ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்."(  யாத்திராகமம் 32 : 32 )

அதாவது தனது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படுவதைவிட பாவம்செய்த இஸ்ரவேல் மக்கள் முதலில் மன்னிப்புப் பெறவேண்டும் எனும் மேலான எண்ணமே மோசேயிடம் இருந்தது.  "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்." (  யாத்திராகமம் 32 : 33 ) என்றார்.

அன்பானவர்களே ! வேதாகம பக்தர்கள் பலரும் மீட்கப்பட்ட மக்களது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதும் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தனர்

இன்று உலக அரசாங்கங்கள்கூட பல்வேறு பெயர் பதிவு ஆதாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளனஉதாரணமாக, பிறப்பு சான்றிதழ்ஆதார் கார்டு போன்றவை. ஆதார் அடையாள அட்டை  இல்லாவிட்டால் நம்மை இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் நிலையே உள்ளது. அரசாங்கத்திடம் என்ன  காரியத்துக்கு விண்ணப்பித்தாலும் ஆதார் பதிவு முக்கியமாக உள்ளது

எனவேதான் இன்று மக்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே பிறப்பு சான்றிதழை பெற ஓடுகின்றனர். ஆதார் அட்டைப்பெற முயற்சி செய்கின்றனர்அன்பானவர்களே, இதுபோலவே தேவன் ஜீவ புத்தகத்தில் பெயர் பதிவு செய்வதை ஒரு முறையாக வைத்துள்ளார். நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் நமக்கு உண்டுமானால் நமது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது நிச்சயம். இது ஒருவிதத்தில் தேவனது ராஜ்யத்துக்கு நாம் நுழைவதற்குரிய   பாஸ்போர்ட். இந்திய பாஸ்போர்ட் உள்ளவன் இந்திய குடிமகனாக உலக நாடுகளால் என்றுகொள்ளப்படுவதுபோலத் தான் இதுவும்.

இந்த உரிமையினை நாம் பெறவேண்டியது அவசியமல்லவா? அன்பானவர்களே, தேவனிடம் நம்மைத் தாழ்த்தி  ஜெபித்து நமது மீட்புக்காக வேண்டுவோம். தேவன்தாமே நமது பெயரை ஜீவபுத்தகத்தில் பதிவிடுவார். அந்த நிச்சயம் நம்மை மகிழ்ச்சிப்படுத்தும்


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,027,                                                நவம்பர் 20, 2023 திங்கள்கிழமை

"உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." ( லுூக்கா 12 : 34 )

இருதயத்தின் நிறைவினால் தான் மனிதன் நடத்தப்படுகின்றான். ஒரு மனிதனின் எண்ணங்களும் செயல்களும் அவனது இருதயத்தின் நிறைவைப்பொறுத்தே அமையும். இதனால்தான் இயேசு கிறிஸ்து கூறினார், "நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்." ( மத்தேயு 12 : 35 ) என்று.

பண ஆசை நிறைந்தவர்களது இருதயம் பணத்தைப்பற்றியும் அதனை எப்படிப் பெருக்குவது என்றுமே எண்ணிகொண்டிருக்கும். பதவி ஆசை கொண்டவன் இருதயம் எப்படித் தான் அடைய விரும்பும்  அந்தப் பதவியைப் பெறுவது என்பதிலேயே குறியாய் இருக்கும். ஆம், எதனை ஒரு மனிதன் தனது செல்வம் என்று எண்ணுகின்றானோ அதனைச் சுற்றயே அவனது இருதய எண்ணமும் இருக்கும். அதனை அடைந்திட மனிதன் எதனையும் செய்வான். இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில்,  "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." என்று கூறுகின்றார்.

இன்று போலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் பல கிரிமினல்கள், "எப்படியாவது பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்று எண்ணியே இப்படிச் செய்தேன்" என வாக்குமூலம் அளிப்பதுண்டு.  கொலை, களவு இவற்றுக்குப் பெரும்பாலும் பண ஆசையே காரணமாய் இருக்கின்றது. 

இதுபோலவே, தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமும், நித்தியஜீவன்மேல் நம்பிக்கையும் கொண்டவர்கள் இருதயம் அதற்கேற்ப செயல்படும். இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தைக்குறித்துப் பல உவமைகளைக் கூறினார். அதில் ஒன்று, "பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்." ( மத்தேயு 13 : 44 ) என்பது. அதாவது, பரலோக ராஜ்யத்துக்குரியவைகளைத் தேடுபவனுக்கு மற்றவையெல்லாம் அற்பமாகவே தெரியும். எனவே அவற்றை இழந்து பரலோக ராஜ்யத்தைப் பெற முயலுவான் என்கின்றார் இயேசு. 

அப்போஸ்தலரான பவுலின் இருதயம் கர்த்தராகிய இயேசுவை அறியும் ஆர்வத்தில் நிறைந்திருந்தது. எனவே அவர் மற்ற எல்லாவற்றையும் அற்பமாகவும் குப்பையாக எண்ணினேன் என்று கூறுகின்றார்.  "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3 : 8 )

ஆம் அன்பானவர்களே, நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்குப் பணம் மிக முக்கியமான தேவைதான். ஆனால் நமது இருதயம் அதன்மேலேயே இருக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று கூறிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் நம்பினால் நாம் உறுதியுடன், "அவர் எனக்குத் தேவையானவற்றைத் தருவார் எனும் நம்பிக்கையும் ஏற்படும். 

அப்போது நாம் ஆசீர்வாதங்களைத் தேடி ஓடாமல் ஆசீர்வாதங்களின் ஊற்றாகிய தேவனை நோக்கி நமது இருதயத்தைத் திருப்புகிறவர்களாக இருப்போம். "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." என்ற வார்த்தையின்படி நமது பொக்கிஷமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே கருதுவோம். அப்போது நமது உள்ளான மனநிலையில்  பெரிய மாற்றம் ஏற்படும்; தேவன் உலக ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புவார். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,028,                                                நவம்பர் 21, 2023 செவ்வாய்க்கிழமை

"என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று, என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்." ( யோபு 27 : 2 - 4 )

இன்றைய தியான வசனத்தில் பக்தனாகிய யோபு தேவனுக்கு வித்தியாசமான பெயரைக் குறிப்பிடுகின்றார். தேவனை அவர், "என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற தேவனும்" என்று குறிப்பிடுகின்றார். 

தொடர்ந்த துன்பங்களால் மனம் சோர்ந்துபோன யோபுவைக்குறித்து வேதம், "உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனும்" ( யோபு 1 : 1 ) என்று கூறுகின்றது. யோபுவின் விசுவாசம் மிக உயர்ந்ததாக இருந்தது. எனவே அவர் வாழ்வில் ஏற்பட்ட மிகக் கடுமையான உபத்திரவத்திலும் தேவனைவிட்டு விலகவில்லை; அவரை முறுமுறுக்கவுமில்லை.  "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;" ( யோபு 13 : 15 ) என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

தான் கூறியதற்கேற்ப தான் வாழ்வதை இன்றைய வசனத்தில் குறிப்பிடுகின்றார். தேவன் எனக்குச் செய்வதைப்  பார்த்தால் என் நியாயத்தைத் தள்ளிவிடுகிறதுபோல இருக்கின்றது. அவரது இந்தச் செயலால் என் ஆத்துமா கசப்பாகிறது என்று குறிப்பிடும் யோபு, ஆனாலும் "என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை' என்கின்றார். ஆம், எத்தனைத் துன்பம் வந்தாலும் நான் தேவனுக்கு விரோதமானச்  செயல்களைச்  செய்யமாட்டேன். குறிப்பாக எனது உதடுகளால் தீமை பேசுவதுமில்லை எனது நாக்கு கபடம் பேசுவதுமில்லை என்கின்றார். 

இத்தகைய இருதயம் இருந்ததால்தான் யோபு முதல் வசனத்தில் அவரைக்குறித்து "உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனும்"  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்று நாம் உலகினில் பார்க்கும் பலர் தாங்கள் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பிப்பதை நாம் காணலாம். தங்கள் வாழ்வில் செய்யும் துன்மார்க்கச் செயல்களான லஞ்சம், கொலை, களவு, குடிவெறி, வேசித்தனம் இவை அனைத்தையுமே மனிதர்கள் நியாயப்படுத்துவார்கள்.   ஆனால் பக்தனான யோபு இதற்கு மாறாக, எது எப்படி நடந்தாலும் நான் தேவனுக்குமுன் எனது உத்தமத்தை விட்டு விலகமாட்டேன் என்கின்றார்.   

அவரது விசுவாசத்தைத் தேவன் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. மாறாக, அவரை ஆசீர்வதித்தார். ஆனால் அந்த ஆசீர்வாதத்தை எதிர்பார்த்து யோபு உத்தமனாய் வாழ்வில்லை. மாறாக, தேவன் ஆசீர்வதிக்கின்றாரோ இல்லையோ, நான் உத்தமனாய் இருப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். 

அன்பானவர்களே, யோபுவிடமிருந்து நாமும் இந்த நல்லச் செயலைக் கற்றுக்கொள்வோம். என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று இன்றைய வசனத்தில் அவர் கூறுவதுபோல நாமும் உறுதியுடன் கூறுவோம். எந்தத் துன்பம் வந்தாலும் நாம் எடுத்த உறுதியைக் காத்துக்கொள்வோம். இந்த பலத்தைத் தேவன் நமக்குக் கொடுக்குமாறு வேண்டுவோம். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,029,                                                நவம்பர் 22, 2023 புதன்கிழமை

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையும்  செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பயனுள்ளவைகளாய் இருக்கின்றன. ( 2 தீமோத்தேயு 3 : 16, 17 )

வேதாகமத்தை நாம் ஏன் வாசித்து அறியவேண்டுமென்றால் அது முதலில் தேவனால் நமக்கு அளிக்கப்பட்டது. அதாவது அவை தேவனுடைய வார்த்தைகள். அவற்றைத் தேவன் தனது பரிசுத்த ஆவியினால் பரிசுத்த மனிதர்கள்மூலம் நமக்கு அளித்துள்ளார். நம்மைப் படைத்துக், காத்து வழிநடத்தும் தேவன் நமக்கு என்னச் சொல்ல விரும்புகின்றார் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டுமல்லவா? எனவே அவற்றை நாம் வாசித்து அறியவேண்டும்.  

இரண்டாவது நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக விளங்கவேண்டும். அதாவது நாம் அவரைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக மாறவேண்டும். அதற்கு, அவரது வார்த்தைகளை நாம் உட்கொள்ளவேண்டும். அவரது பெயரே பரிசுத்தர்தான். "நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்" ( ஏசாயா 57 : 15 ) என்றுதான் ஏசாயா எழுதுகின்றார். எனவே அந்தப் பரிசுத்தரின்  வார்த்தைகளே நம்மையும் பரிசுத்தமாக்க முடியும். 

தேவனுடைய வார்த்தைகள் எப்படி நம்மைப் பரிசுத்தமாக்குகின்றன என்பதை இன்றைய வசனம் தெளிவாகக் கூறுகின்றது. அதாவது, நாம் "எந்த நற்கிரியையும்  செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பயனுள்ளவைகளாய் இருக்கின்றன. " என்று கூறப்பட்டுள்ளது. 

தேவனுடைய வார்த்தைகள் நமக்கு நல்ல உபதேசத்தைத் தருகின்றன. நாம் தவறும்போது கடிந்து நம்மைத் நிறுத்துகின்றன, அதனால் நமது வாழ்க்கைச் சீர்படுத்தப்படுகின்றது.  மேலும் நாம் தேவனுக்கேற்ற நீதியுள்ளவர்களாக வாழ நமக்குக் கற்றுத்தருகின்றது. 

மேலும், இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகள் எப்போதும் நமக்குள் இருக்கவேண்டுமென்றும் நம்மில் அவை செயல்புரியவேண்டுமென்றும் விரும்புகின்றார். அவரது வார்த்தைகளுக்கேற்ப நாம் வாழும்போதே அவர் நமது வேண்டுதல்களை நிறைவேற்றுவார். இதனாலேயே அவர், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 ) என்று கூறினார். எனவே நாம் அவரது வார்த்தைகளை அறிந்திருக்கவேண்டியது அவசியம். 

ஆம் அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவுக்குள்  தேறினவர்களாகவும் எந்த நற்செயல்கள் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக நம்மைக் கற்பித்து வழிநடத்தும் தேவ வார்த்தைகளை அறிந்தவர்களாகவும் அவற்றை வாழ்வாக்குபவர்களாகவும் வாழ வேண்டியது அவசியம்.  எனவே முதலில் நாம் அவரது வார்த்தைகளை அறிந்து அதில் தேறினவர்களாகவேண்டும். 

வேதாகமத்தை தேவனை அறியும் ஆவலில் வாசிக்கப் பழகவேண்டும். கடமைக்காக வாசிப்பது, அட்டவனைப் போட்டு இந்த நாளுக்கு இந்த வசனங்கள் என்று வாசிப்பது பலன் தராது. ஆர்வமும் நேரமும் இருந்தால் ஒரேநாளில்கூட ஒரு சில வேதாகம புத்தகங்களை நாம் வாசித்துவிடமுடியும். ஜெபத்துக்கும் வேத வாசிப்புக்கும் முன்னுரிமைகொடுக்கும்போது வேதத்தின் பல ரகசியங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். வேதாகமத்தை நேசிப்போம்; வாசிப்போம்; வாழ்க்கை மாற்றம் பெறுவோம்.


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,030,                                                நவம்பர் 23, 2023 வியாழக்கிழமை

"அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." ( தீத்து 1 : 16 )

கிரேத்து தீவைச்சார்ந்த மக்களைக்குறித்து கூறும்போது அப்போஸ்தலராகிய பவுல் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். இந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், தேவனை நாங்கள் அறிந்திருக்கின்றோம் என்று கூறிக்கொள்கின்றார்கள். ஆனால் அவர்களது  செயல்பாடுகள் அதற்கு முரணாக இருக்கின்றன. அவர்கள் எப்போதும் பொய்யையே பேசுபவர்கள், துஷ்டர்கள், சாப்பாட்டுப் பிரியர்கள்,  சோம்பேறிகள். இதனையே பவுல் அப்போஸ்தலர், "கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்." ( தீத்து 1 : 12 ) என்று கூறுகின்றார். 

இந்த வசனங்களின்மூலம் நாம்   புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், தேவனை அறிந்திருக்கின்றோம் என்று கூறும் அனைவரும் உண்மையில் தேவனை அறிந்தவர்கள் அல்ல. உண்மையில் அவர்கள் தேவனை அறிந்துள்ளார்களா என்பது அவர்களது செயல்பாடுகளால்தான் அறியமுடியும். அதாவது கனியுள்ள வாழ்க்கையே ஒருவர் தேவனை அறிந்திருக்கின்றாரா இல்லையா என்பதை உணரச்செய்யும். 

நமது வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கின்றோம்? தேவனை  நாம் அறிந்திருக்கின்றோமென்றால், நமது வாழ்க்கையில் அது வெளிப்படவேண்டும். 

நாம்  ஏற்கெனவே பல தியானங்களில் பார்த்ததுபோல, தேவனை அறிதல் என்பதும் தேவனைப்பற்றி அறிதல் என்பதும் வெவ்வேறானவை.  தேவனைப்பற்றி அறிந்தவர்கள் வெறுமனே அவரது குணங்களைப்பற்றி மட்டும் கற்று அறிந்தவர்கள். அவர்ளிடம் மேலான ஆவிக்குரிய பண்புகள் இருக்காது. பவுல் அப்போஸ்தலர் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடும் கிரேத்துத்   தீவைச் சார்ந்தவர்கள் தேவனைப்பற்றி மட்டும் அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் தாங்கள் தேவனை அறிந்தவர்கள் என்று கூறிக்கொள்கின்றனர்.  

அன்பானவர்களே, நாம் நமது வாழ்க்கையில் மாற்றமில்லாமல் வாழ்ந்து ஒரு சில பக்திக்காரியங்களை மட்டும் கடைபிடித்துக் கொண்டு   தேவனை அறிந்தவர்கள் என்று கூறிக்கொள்வோமானால்  நாம் இந்த கிரேத்தாத் தீவு மக்களைப்போலவே இருப்போம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்,  "அருவருக்கப்படத் தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." என்று கூறப்பட்டுள்ளது. 

கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நாம் நற்செயல்கள் செய்ய முடியும். அவரோடு இணைந்த வாழ்க்கை மட்டுமே நம்மை முற்றிலும் மாற்ற முடியும். "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

கிரேத்தாத் தீவு மக்களைப்போல அல்லாமல் கிறிஸ்துவை வாழ்வில் அறிந்து வாழ்பவர்களாக நாம் இருக்கவேண்டியது அவசியம். நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அப்போது மட்டுமே நாம் நற்செயல்கள் செய்யத் தகுதியுள்ளவர்கள் ஆக முடியும். இல்லையானால், கிறிஸ்தவர்கள் என்று நாம் நம்மைக் கூறிக்கொண்டாலும் கிறிஸ்துவை அறியாதவர்களும், கிறிஸ்து இல்லாதவர்களாகவுமே நாம் இருப்போம்.


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,031,                                                நவம்பர் 24, 2023 வெள்ளிக்கிழமை

"உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 )

கிறிஸ்து இயேசுவை நமது வாழ்வில் நாம் பெறும்போது அவரது வாசனையினை உணரமுடியும்.  மட்டுமல்ல, அதனை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியும். கிறிஸ்துவின் பெயர், அவர்மூலம் நாம் பெறும் வாழ்க்கை  அனுபவங்கள் இவற்றை வாசனைக்கு ஒப்பிட்டு இன்றைய வசனம், "உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது" என்று கூறுகின்றது. 

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள, "ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." எனும் வார்த்தைகள் விசுவாசிகளைக் குறிக்கின்றது. ஆம், கன்னியர்களாகிய பழுதற்ற விசுவாசிகள் அவரை நேசிப்பார்கள். 

இந்த வாசனை எதுவரை நம்மிடம் வீசும் என்பதனையும் இன்றைய வசனத்தைத் தொடர்ந்து இந்த அதிகாரத்தை நாம் வாசித்தால் புரிந்துகொள்ளலாம். அங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது, "ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளதைலம் தன் வாசனையை வீசும்." ( உன்னதப்பாட்டு 1 : 12 ) அதாவது கிறிஸ்து ராஜாவாக நமது இருதயத்தில் இருக்குமளவுக்கு இந்த வாசனை நம்மில் வீசும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 ) என்று குறிப்பிடுகின்றார். நம்மிடமிருக்கும் அவரை அறிகின்ற அறிவின் வாசனையினை அவர் எல்லா இடங்களிலும் நம்மூலம் வெளிப்படுத்துகின்றார். அவருக்கே ஸ்தோத்திரம்.

கிறிஸ்துவை அறிகின்ற இந்த அறிவாகிய வாசனை மீட்பு அனுபவத்திற்கு குறிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் நறுமணமாக இருக்கும். துணிந்து தங்கள் பாவங்களில் வாழ்ந்து கேலிபேசி துன்மார்க்கமாகத் திரிபவர்களுக்கு இந்த வாசனை தெரியாது அது அவர்களுக்கு மரண வாசனைபோலவேத் தெரியும். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே  ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாகவும் இருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 15,16 ) எனக் கூறுகின்றார். "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?" என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோலத் தங்களைக் கழுதைகளாக ஆக்கிக்கொண்டவர்களுக்கு கிறிஸ்துவின் வாசனை புரியாது. 

பொது இடங்களுக்கு, திருமண வீடுகளுக்குச் செல்லும்போது பலர் நறுமண 'சென்ட்' பூசிக்கொண்டுச் செல்வார்கள். அது தங்களை சிறப்பித்துக்காட்டும், மட்டுமல்ல ஒரு புத்துணர்ச்சியினைக் கொடுக்கும்.  அதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நறுமணத்தை நாம் பூசிக்கொள்வோமானால் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும். நமது ஆவி புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக இருக்கும். 

"ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" என்று கூறியுள்ளபடி விசுவாசக் கன்னியர்களாகிய நாம் அனைவருமே அவரை நேசிப்போம். அவரது நறுமணம் நம்மீதும் நமது மூலம் நம்மைச் சுற்றியுள்ள அனைவர்மீதும் வீசச்செய்வோம். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,032,                                                நவம்பர் 25, 2023 சனிக்கிழமை

"என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்."( நீதிமொழிகள் 8 : 34 )

உணர்வில்லாதக்  காட்டுக் கழுதைகளைப்போல வாழாமல் உணர்வுள்ள இருதயத்தோடு நாம் வாழவேண்டும் என்பதனையே இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுவது, நாம் தேவனது வார்த்தைகளைக் கேட்கவும், அதன்படி நடக்கவும் நம்மை ஒப்புவிக்கவேண்டும். அதாவது நாம் தினமும் தேவ சமூகத்தில் காத்திருந்து ஜெபித்து நம்மைக்குறித்த தேவ சித்தத்தை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதனையே, "என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன்" என்று கூறப்பட்டுள்ளது. 

ஒரு வீட்டின் வேலையாள் அந்த எஜமானின் விருப்பத்தை நிறைவேற்றுபவனாக இருப்பான். எனவே அவன் எப்போதும் எஜமானின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கேட்டு அவற்றுக்குக் கீழ்ப்படிய தயாராக இருப்பான். அத்தகைய ஊழியனை எஜமானன் பெருமையாகக்  கருதுவான். அதுபோல நாம் தேவனால் உண்டானவர்கள் என்பதை உணர்த்துக்கொண்டால் அவருக்குக் காத்திருந்து செவிகொடுப்போம். "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" ( யோவான் 8 : 47 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

ஆம் அன்பானவர்களே, அவரது வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, அவரது கதவுநிலையருகே காத்திருந்து, அவருக்குச் செவிகொடுக்கவேண்டும். "பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?" ( எபிரெயர் 12 : 25 ) என்று வேதம் எச்சரிக்கின்றது.

மட்டுமல்ல, இன்றைய  வசனம் கூறுவதன்படி அவரது கதவுநிலையருகே காத்திருந்து அவருக்குச் செவிகொடுக்கும்போதுதான் அவர் கதவைத் தட்டும் சத்தத்தை நாம் கேட்கமுடியும். அப்போதுதான் நாம் அவருக்கு நமது இருதயக் கதவைத் திறக்க முடியும்; அப்போதுதான் அவர் நம்முள் வந்து நம்மோடு உணவருந்துவார். நாமும் அவரோடு உணவருந்தும் மேலான அனுபவத்தைப் பெறமுடியும். 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.' ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

இத்தகைய மனுஷன் பாக்கியவான் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் நாம் விழிப்புடன் இருப்போம். அவரது கதவு நிலையருகில் பொறுமையாக காத்திருப்போம்; அவரது குரலைக் கேட்டு அதற்குக்  கீழ்படிவோம். ஆண்டவரே, எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும் என்று வேண்டுவோம். வெறும் உலகப் பொருளாசீர்வாதங்களுக்கல்ல, மேலான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருப்போம்.


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,033,                                                நவம்பர் 26, 2023 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்." ( நீதிமொழிகள் 18 : 10, 11 )

பழைய காலத்து மன்னர்களது அரண்மனைகளை நாம் பார்வையிடும்போது நம்மைக் கவருவது அவர்கள் தங்கள் அரண்மனையினைப் பாதுகாக்கச் செய்துள்ள மதில்சுவர்கள். அதனையே இன்றைய வசனம் துருக்கம் என்று கூறுகின்றது. தமிழ் அகராதியில் துருக்கம் எனும் சொல்லுக்கு செல்லுதற்கு அரிய இடம்,  ஒடுக்க வழி, மலையரண்,  மதில் என்று பல அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன. அதாவது பாதுகாப்பான இடம் என்று சொல்லலாம்.  

நமது கர்த்தரின் பெயரானது பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் என்று கூறப்பட்டுள்ளது. "எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக," ( எபேசியர் 1 : 20 ) மேலான பெயரை பிதாவாகிய தேவன் அவருக்குக் கொடுத்துள்ளார். எனவே நீதியான வாழ்க்கை வாழ்ந்து அவரை அண்டிக்கொள்ளும்போது நமக்கு அவர் மேலான அரணாக இருந்து பாதுகாப்பார். 

இதனையே தாவீது, "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." ( சங்கீதம் 18 : 2 ) என்று கூறுகின்றார். 

ஆனால், இன்றைய வசனத்தில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது, "ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்." அதாவது, பொருள் செல்வத்தை மட்டுமே பெரிதாக எண்ணி அதனைச் சேகரிக்கும் செல்வந்தனுக்கு அவன் சேர்த்த பொருள் செல்வமே அவனுக்குப் பாதுகாப்பான நகரம் போலவும் உயர்ந்த மதில்போலவும்  இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவனது எண்ணத்தில்தான் அது உயர்ந்த பாதுகாப்பு  அரணான நகரம் போல இருக்கும்; உண்மையில் அப்படியல்ல. அவன் அப்படி எண்ணிக்கொள்கின்றான் அவ்வளவுதான்.

எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல " ( லுூக்கா 12 : 15 ) என்று. ஆம் அன்பானவர்களே, கோடிக்கணக்கான செல்வங்களைச்  சேர்த்துவைத்துக்கொண்டு கிறிஸ்து இல்லாத வாழ்க்கை வாழும்போது அது நமக்குப் பாதுகாப்பல்ல. அதிக செல்வம் அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும். ஆனால் அந்த மதில் உண்மையில் எவ்வளவு வலிமையானது என்பது அவனுக்குத் தெரியாது. 

மண்சுவரால் கட்டப்பட்ட மதிலுக்கும் இரும்பு வெண்கலம் போன்ற உலோகங்களால் உறுதியாகக் கட்டப்பட்ட மதிலுக்கும் வித்தியாசம் உண்டல்லவா? கர்த்தரது பெயரால் கட்டப்படும் பாதுகாப்பு அரண்  இரும்பு வெண்கலம் போன்ற உலோகங்களால் உருவாக்கப்படுவது போன்றது. உலக செல்வங்களைப் பெருக்கி உருவாக்கிடும் பாதுகாப்பு வேலி மண்சுவர் போன்றது.  ஆம்,  "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" என்று கூறியுள்ளபடி அவரது நாமமான கோட்டைக்குள் தங்கி சுகமாய் வாழ முயலுவோம்.


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,034,                                                நவம்பர் 27, 2023 திங்கள்கிழமை

"கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." ( எரேமியா 14 : 7 )

பாவம் செய்யும்போது மன சமாதானம் கெடுகின்றது. இதனால் பாவம் செய்யும் பலரும் தங்கள் மனச்சாட்சியில் குத்தப்பட்டுப் பாவ மன்னிப்பைத்தேடி அலைகின்றனர். எல்லா மதங்களிலும் பாவத்திலிருந்து விடுதலைபெற பல்வேறு சடங்குகள், சம்ரதாயங்கள் கூறப்பட்டுள்ளன. 

ஆனால், நமது கர்த்தர் ஆதிகாலமுதல் தனது கிருபையினால்தான்  மனிதர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதனை மக்களுக்கு உணர்த்தியுள்ளார். சடங்குகள் அல்ல, மனதில் பாவ உணர்வடைதலே முக்கியம். இதனாலேயே எரேமியா இன்றைய வசனத்தில்,  "கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்" என்று கெஞ்சுகின்றார். 

பாவம் செய்தல் மனிதர்களது பிறவிக்குணம். இயற்கையிலேயே நம்முள் பாவம் உள்ளது. அது ஆதாம் ஏவாளால் வந்த வித்து. "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." ( சங்கீதம் 51 : 5 ) என்கின்றார் தாவீது. 

"அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7 : 18, 19 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.

அன்பானவர்களே, இந்தப் பாவ வாழ்விலிருந்து விடுதலை அளிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். பிதாவாகிய தேவன், "இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 31 ) என்று வேதம் கூறுகின்றது. 

எனவே, "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 43 )

நமது பலவீனங்கள் அவருக்குத் தெரியும். ஆனால் நாம் அவற்றை ஒத்துக்கொள்ளவேண்டும். எரேமியா கூறுவதுபோல, "எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." என்று உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து நாம் கூற முடியுமானால் அவரது மீட்பு அனுபவத்தைப் பெறலாம். 

இன்று கிறிஸ்தவர்கள் பலரும் மீட்பு அனுபவம் பெறாமலிருக்கக்காரணம் பாவ உணர்வில்லாத அவர்களது இதயம்தான். கிறிஸ்தவ ஊழியர்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உலக ஆசீர்வாதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து போதித்து மக்களை அறியாமைக்குள் வைத்துள்ளனர். 

எனவே பாவத்தைக்குறித்து நாம் பேசும்போது,   "நான் என்ன பெரிய பாவம் செய்துவிட்டேன்?" என்றும்  கேட்பது, அல்லது மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு, "உலகத்துல ஒவ்வொருவனும் என்னென்னமோ பெரிய பாவம் செய்கிறான்...... அவனெல்லாம் நல்லாதானே இருக்கிறான்? நான் அப்படி என்ன பெரிய பாவம் செய்தேன்?" என்றும்  தங்களுக்குள் கூறிக்கொள்கின்றனர். அன்பானவர்களே, இத்தகைய குணங்கள் நம்மில் இருந்தால் அவற்றை விட்டு கர்த்தரிடம் திரும்புவோம்.   

"நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." ( 1 யோவான்  1 : 9 )

"கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்"


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,035,                                                நவம்பர் 28, 2023 செவ்வாய்க்கிழமை

"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." ( ஏசாயா 45 : 2 )

இன்றைய இந்த தியான வசனம் கோரஸ் (Cyrus) ராஜாவைப் பார்த்துக் கூறப்பட்ட வசனம். 

நாம்  இதுவரை வாழ்ந்த பழைய தவறான பாவ  வழிகளையும், நமது மூதாதையர்கள் செய்த தவறுகளையும் தொடர்ந்து நாமும் செய்யாமல் நம்மைத் திருத்திக்கொண்டு தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது தேவன் நமக்கு ஆசி வழங்கி நமது வாழ்க்கையிலுள்ள கோணல்களைச் சீர்படுத்தி நம்மை நல்ல ஒரு வாழ்க்கை வாழவைப்பார் என்பதை இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. இந்த வசனம் கூறப்பட்டுள்ள பின்னணியை நாம் புரிந்துகொண்டால் இது விளங்கும்.

நேபுகாத்நேச்சார் கி.மு. 586 ஆம் ஆண்டு எருசலேமைக் கைப்பற்றி எருசலேம் ஆலயத்தைத் தகர்த்து ஆலயத்திலிருந்து அனைத்துப் பொருட்களையும் கொள்ளையிட்டு மக்களையும் சிறைபிடித்துப்  பாபிலோனுக்குக் கொண்டு சென்று விட்டான்.  இஸ்ரவேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது கூக்குரலைக்கேட்ட கர்த்தர் கி.மு. 538 ஆம் ஆண்டு பரசீக மன்னர் கோரஸ் கையில்  பாபிலோனை ஒப்படைத்தார். கோரஸ் பாபிலோனைக் கைப்பற்றிய அதே ஆண்டில் இஸ்ரவேலரை விடுவித்தார். மட்டுமல்ல நேபுகாத்நேச்சார் எருசலேம் ஆலயத்தில்  கொள்ளையடித்துக் கொண்டுவந்த ஆலயப் பொருட்களையும் இஸ்ரவேலரிடம் ஒப்படைத்து அவர்களை ஆலயத்தை மீண்டும் கட்டும்படி பணித்தார். 

"நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்." ( எஸ்றா 1 : 7 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

கோரஸ் ராஜா இப்படி நேபுகாத்நேச்சார் கைப்பற்றிய ஆலயப்  பொருட்களைத் திருப்பி எடுத்துக் கொடுத்ததால்,  "கோரசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்." ( ஏசாயா 44 : 28 ) என்று ஏசாயா மூலம் கர்த்தர் அறிவித்தார். இங்கு கோரஸை தேவன் என் மேய்ப்பன் என்று அடைமொழிகொடுத்து கூறுகின்றார். மட்டுமல்ல, கோரஸ்  இப்படிச் செய்ததால், "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." என்று இன்றைய வசனத்தைக்  கர்த்தர் அவருக்குக்  கூறினார். 

அன்பானவர்களே, நமது பழைய வாழ்க்கை, நமது குடும்பப் பின்னணிகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். கோரஸ் ராஜா செய்ததுபோல  பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகிய நமது உடலை நாம் மீண்டும் தூய்மையாக்க நம்மை ஒப்படைக்கவேண்டும். நமது பாவ வழிகளையும், அறியாமல் நமது முன்னோர்கள் கைபற்றிவந்த தவறான வழிகளையும்  நாம் சீர்படுத்த வேண்டும். கர்த்தருக்கு நம்மை முற்றிலும் ஒப்படைக்கவேண்டும். இப்படிச் செய்வோமானால், கோரஸ் ராஜாவுக்குச் சொன்னதுபோல "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." என்று தேவன் நமக்கும் சொல்வார்.

மட்டுமல்ல, "உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்;" ( ஏசாயா 45 : 3, 4 ) என்கின்றார் கர்த்தர். 

நம்மை முற்றிலும் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து பரிசுத்த வாழ்க்கை வாழ முடிவெடுப்போம். கோரஸ் ராஜாவுக்குத் தேவன் கூறிய வார்த்தைகள் நமது வாழ்வில் நமக்கும் செயல்படும். 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,036                                                நவம்பர் 29, 2023 புதன்கிழமை

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." ( பிலிப்பியர் 3 : 14,15 )

ஆவிக்குரிய வாழ்வின் ஓட்டத்தை அப்போஸ்தலரான பவுல் ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிட்டுக் கூறுவதை நாம்  கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் வாசித்திருக்கின்றோம். அங்கு அவர் கூறுகின்றார், "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 )

அதே கருத்தில்தான் இன்றைய தியான வசனத்திலும் கூறுகின்றார். ஒவ்வொரு பந்தயத்துக்கும் ஒரு இலக்கு உண்டு. இலக்கை அடைவதே வெற்றி. கிறிஸ்தவ வாழ்வின் இலக்கு நித்தியஜீவன். அந்த இலக்கை நோக்கித் தான் செல்வதாகக் கூறும் பவுல் அப்போஸ்தலர், "நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." என்று இன்றைய தியானத்தில் நம் அனைவர்க்கும் அழைப்பு விடுக்கின்றார். 

மட்டுமல்ல, "சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்." ( பிலிப்பியர் 3 : 17 ) என்று தனது மாதிரியை நாம் பின்பற்றவேண்டும் என்கின்றார். 

இன்றைக்குத்தான்  இந்த ஆவிக்குரிய மேலான கருத்து பின்தள்ளப்பட்டுள்ளது என்று நாம் எண்ணுகிற்றோம். ஆனால் இன்றல்ல, அப்போஸ்தலரான பவுல் காலத்திலேயே தவறான பூமிக்குரிய ஆசீர்வாத உபதேசங்கள் கிறிஸ்தவத்தில் நுழைந்து கிறிஸ்து கூறிய ஆவிக்குரிய சிந்தை  புறம்பே தள்ளப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அப்படி உலக ஆசீர்வாதங்களையே போதிப்பவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

"ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( பிலிப்பியர் 3 : 18,19 )

ஆம், இத்தகைய உலக ஆசீர்வாதங்களுக்காக கிறிஸ்துவைத் தேடுபவர்களும் போதிப்பவர்களும் முடிவில் அழிவையே அடைவார்கள் என்கின்றார். காரணம் அவர்களது தேவன் வயிறு. அவர்களுக்கு உலகத் தேவையான வயிறு நிரப்பவேண்டும். எனவே அவர்கள் பூமிக்கடுத்தைவைகள் பற்றியே சிந்திக்கின்றார்கள்.  

தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளை அடைந்திட விரும்புகின்றவர்கள் தான் ஆவிக்குரிய வாழ்வில் தேறினவர்கள். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அவர் கூறுகின்றார், "நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." என்று. நாம் தேறினவர்களா, நம்மை வழிநடத்தும் போதகர்களும் நற்செய்தி அறிவிக்கின்றோம் என்று கூறி கூட்டங்கள் நடத்தி பிரசங்கிக்கும் ஊழியர்களும் தேறினவர்களா என்பதை அவர்கள் போதிக்கும் போதனையே அடையாளம் காட்டும். 

அன்பானவர்களே, "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி நமது ஆவிக்குரிய பயணத்தைக் தொடர்வோம்.  வயிறான உலகத் தேவைகளை நிரப்ப மட்டுமே  முயற்சியெடுத்து நாம் அழிவை அடைந்திடக்கூடாது. 


'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,037                                                நவம்பர் 30, 2023 வியாழக்கிழமை

"இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்." ( 2 கொரிந்தியர் 4 : 6 )

"கிறிஸ்துவின் முகத்திலுள்ள தேவனின் அறிவாகிய ஒளி" எனும் வார்த்தைகளை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில்  வாசிக்கின்றோம்.  தேவனின் அறிவாகிய ஒளி கிறிஸ்து இயேசுவில் இருக்கின்றது. அந்த ஒளியை நமது இருதயங்களில் தேவன் ஒளிரச்செய்தார் என்கின்றார் பவுல் அடிகள்.

வேதாகமத்தில் தேவன் பேசிய முதல்  வார்தைகளாக பதிவிடப்பட்டுள்ளது,  "தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று." ( ஆதியாகமம் 1 : 3 ) என்பதுதான். ஒளியான தேவன் முலமாக ஒளி உலகினில் வந்தது. அந்த ஒளியே கிறிஸ்துவாகிய ஒளியாகவும் உலகினில் வந்தது. "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 )  என்று அப்போஸ்தலரான யோவான் குறிப்பிடுகின்றார்.

நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாகும்போது கிறிஸ்துவின் ஒளி நமக்குள் வருகின்றது.  ஆம், இந்த உலகை ஒளிரச் செய்த ஒளி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அண்டவெளிவீதிகளிலுள்ள ஒளி இவற்றையெல்லாம் படைத்த அந்த ஒளி கிறிஸ்து மூலம் நமது வெறும் மண்ணாலான உடலுக்குள் வருகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 4 : 7 ) என்கின்றார். 

எனவே, கிறிஸ்துவை வாழ்வில் பெற்றுக்கொண்ட  நாமும் ஒளிவீசுபவர்களாக இருக்கின்றோம். "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) மலைமேல் இருக்கும் பெரிய நகரம் எப்படி மற்றவர்களின் கண்ணில் படாமல் இருக்கமுடியாதோ அதுபோல நமது ஒளியும் மற்றவர்களது கண்ணில் படும். 

"பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 ) என்று இயேசு கிறிஸ்து கூறியதுபோல இன்றும் ஒளியான நம்மை பொல்லாதவர்கள் பகைக்கின்றனர். இருளிலிருக்கும் அவர்களது இருளான செயல்பாடுகள் கிறிஸ்துவிடம் வந்தால் அவரது ஒளியினால் வெளிப்பட்டுவிடும் என எண்ணி அவர்கள் ஒளியைப் பகைக்கின்றனர். 

ஒளியான தேவன் யாரையும் புறம்பே தள்ளுவதில்லை. பாவிகளின் பாவ வாழ்க்கையே அவர்களை இருளுக்குள் கொண்டு செல்லும். பல்வேறு அலங்கார விளக்குகளால் ஒளிமயமாகக் காட்சியளிக்கும் திருமண மேடையில் நிர்வாணியான ஒரு மனிதன் துணிந்து வருவானா? அவன் இருளைத்தேடி ஓடுவானல்லவா? அதுபோல பாவிகளின் பாவ வாழ்க்கையே அவர்களை இருளைநோக்கி இழுத்துச் செல்லும். 

எனவே அன்பானவர்களே, தேவன்  நமது இருதயத்தில் பிரகாசிக்கச் செய்த கிறிஸ்துவின் ஒளி மங்கிடாமல் பாதுகாப்போம். அதனை மற்றவர்களுக்கும் கொடுப்போம். நமது ஒளிமிக்க வாழ்க்கையே நம்மை மலைமேல் இருக்கும் நகர்போல மற்றவர்களுக்கு அடையாளம் காட்டும். அப்போது,  வெளிச்சத்தைத் தேடி வரும் பூச்சிகளைப்போல மற்றவர்கள் நமது ஒளியால் கவரப்பட்டு கிறிஸ்துவுக்குள் நம்மைப்போல ஐக்கியமாவார்கள்.

No comments: