🏫 வேதாகமத் தியானம் - ஜூன் 2026


"ஆதவன்" தியானம் - 1941
2026 ஜூன் 01, திங்கள்     

"பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்." ( கலாத்தியர் 5 : 16 )

இந்த உலகத்தில் நாம் பிள்ளைகளுக்கு அறிவுரைகள் கூறும்போது, "அப்பா, அம்மா சொல்கேட்டு நல்ல பிள்ளைகளாக வாழவேண்டும்" என்று கூறுவதுண்டு. காரணம், அப்படி நாம் நடக்கும்போது பல்வேறு துன்பங்களுக்கு நீங்கலாகிவிடுவோம். இதுபோலவே ஆவிக்குரிய வாழ்வில் நம்மைத் தாய்தகப்பனாக இருந்து வழிநடத்துவது பரிசுத்த ஆவியானவர்தான். 

இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்" என்று கூறுகின்றார். நம்மைத் தேவனிடமிருந்து பிரிப்பவை நமது உடல்சார்ந்த சில பாவச் செயல்பாடுகள்தான். நாம் ஆவியானவரின் சொல்கேட்டு நடப்போமென்றால் இத்தகைய பாவச் செயல்களில் ஈடுபடமாட்டோம். 

இப்படி நம்மைச் சத்திய வழியில் நடத்தவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குப் பரிசுத்த ஆவியானவரை வாக்களித்தார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" ( யோவான் 16 : 13 ) என்றுதானே  இயேசு கிறிஸ்து வாக்களித்தார்?. 

இப்படி நாம் தேவன் தரும் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளும்போது மாம்ச இச்சையை நிறைவேற்றாமலிருப்போம். அப்போது நமக்கு தேவனின் தண்டனைத் தீர்ப்பும் இல்லாமல் இருக்கும். ஆம், "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1 )

இன்று உலகத்தில் பல்வேறு பாவ காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணம் வழிநடத்தும் ஆள் ஒருவர் இல்லாமல் இருப்பதுதான். இளைஞர்களை வழிநடத்தத் திரைப்பட நடிகர்களும் நடிகைகளும், முதியோர்களை வழிநடத்த வெற்று போதனைகள் கூறும் உலக ஞானிகளும் மூன்றாம்தர அரசியல்வாதிகளும் தான்  இருக்கின்றனர்.  மேலும், அறிவுரைகூறும் பலரும் தாங்கள் கூறும் அறிவுரைகளுக்கு அவர்களே முன்மாதிரியாக இருப்பதுமில்லை. 

ஆனால் தேவன் நமக்குத் தந்துள்ள நம்மை வழிநடத்தும் அவரது குமாரனாகிய பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராக நமக்கு முன்னுதாரண வாழ்க்கையினை விட்டுச்சென்றுள்ளார். அவர் போதிக்கமட்டும் செய்யவில்லை போதனையை வாழ்ந்து காட்டினார். ஆம்,  "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )

இந்தப் பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து காட்டும் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் பரிசுத்த ஆவியினை தந்தருளுமாறு வேண்டுவோம். அவரே பரிசுத்த ஆவியின் நிறைவு. அவரது முன்மாதிரியைப் பின்பற்றுவோம். அப்போது நாம் மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்போம்.

"ஆதவன்" தியானம் - 1942
2026 ஜூன் 02, செவ்வாய்      

"நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன்." ( 1 இராஜாக்கள் 17 : 9 )

இன்றைய தியான வசனம் எலியாவுக்குத் தேவன் கூறியதாக இருந்தாலும் இன்று நமக்கும் பொருந்தும். ஆம், தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களுக்கு எலியாவுக்கு ஏற்பட்டது போன்ற அனுபவங்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. எலியா வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து அற்புதம் செய்தவர். மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்கவும் மீண்டும் மழை பெய்யும்படித் திறக்கவும் செய்தவர். ஆனால் அவர் நம்மைப்போல பாடுள்ள மனிதனாகவே இருந்தார்.   

"எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை." ( யாக்கோபு 5 : 17 ) என்று வாசிக்கின்றோம். 

எலியா தேவனோடு சஞ்சரித்தவர். ஆனாலும் துன்பங்கள் அவரை விட்டு முற்றிலும் விலகிடவில்லை. இதுபோலவே,  கிறிஸ்துவுக்குள் வாழும் நமக்கும், நாம் எவ்வளவு நெருக்கமாக தேவனோடு வாழ்ந்தாலும்  எலியாவுக்குச் சம்பவித்தவைபோல இன்றும் சிலவேளைகளில் சம்பவிக்கும். எனவேதான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்று கூறினார்.

ஆனால் எலியாவின் வாழ்க்கையிலிருந்து நமக்குச் சில ஆவிக்குரிய சத்தியங்களைத் தேவன் உணர்த்துகின்றார்.  துன்பங்கள் நம்மை நெருக்கும்போது தேவன் எலியாவுக்குச்,  "சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு" என்று கட்டளையிட்டதுபோல நமக்கும் கட்டளையிடுகின்றார். ஆம், நாம் சாறிபாத்துக்குச் செல்லவேண்டியது அவசியம். அதாவது, தேவனோடு தனித்து ஒதுங்கி வாழவேண்டியது அவசியம். இதுதான் நமது சாறிபாத். இப்படித் தேவனோடு தனித்து ஜெபத்தில் இருப்பதால் உடனேயே பெரிய செழிப்பு நமக்கு வந்துவிடாது. ஆனால் தேவன் நம்மோடு இருப்பதை அவர் உறுதிசெய்வார்.

மட்டுமல்ல, சாறிபாத் இஸ்ரவேல் நாட்டில் இல்லை. மெய்யான தேவனை அறியாத மக்கள் வாழ்ந்த இடம்தான் சாறிபாத். துன்ப வேளையில் எலியாவை தேவன் அங்கு அனுப்பித் தனது வல்லமையினை அங்கிருந்த மக்களுக்குத் தெரியப்படுத்த  எலியாவைப் பயன்படுத்தினார். இதனை இயேசு கிறிஸ்துவும், "அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை." ( லுூக்கா 4 : 25, 26 ) என்று குறிப்பிடுகின்றார்.

ஆம், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலருக்குள் அனுப்பப்படாமல் எலியா பிற இனத்தவர் வாழ்ந்த சாறிபாத்துக்கு அனுப்பப்பட்டார். இது, கடவுளின் இரக்கம் என்பதையும், அவரது மீட்புத் திட்டத்தில் பிற இனத்தவரும் (புற இனத்தவர்) உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்பதையும் வலியுறுத்திக் காட்டுகிறது.

எனவே, நமது  நெருக்கடியான நேரத்தில் தேவனை அறியாத மக்களுக்கு நம்மைக்கொண்டு தேவன் நற்செய்தியை அறிவிக்க முயலுகின்றார் என்றும் நாம் உணர்ந்துகொள்ளலாம். எலியாவுக்கு உதவிட ஏற்கெனவே ஒரு விதவையைத் தேவன்  ஏற்பாடு செய்திருந்ததைப்போல நமக்கும் நமது சாறிபாத் அனுபவத்தில் உதவிட விதவைபோல மக்கள் உண்டு. நம்மூலம் அவர்களும் பயன்பெறுவார்கள். 

ஆம் அன்பானவர்களே, நமது துன்பமயமான சாறிபாத் அனுபவத்தில் நாம் கைவிடப்பட்டு விடுவதில்லை. எலியாவுக்கு உடனிருந்து தேவன் உதவியதுபோல அந்த நெருக்கடியான வேளையில்  நம்மோடு கூட இருந்து உதவும் ஒருவர் உண்டு. அவர் நம்மோடு கூடவே இருக்கின்றார்.  நமது அற்பமான உடலில் நமக்குள்ளே அவர் இருந்து செயலாற்றுகின்றார். ஆம், "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 4 : 7 )

எனவே, எலியா மூலம் விதவைக்கு அற்புதமாக மாவும் எண்ணையும் பஞ்சகாலத்தில் பெருக்கச் செய்ததுபோல நமது  துன்ப வேளையின் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்தாலும் நம்மால் தேவனை அறியாத மக்களுக்கு உதவி செய்து தேவனை அறிவிக்க முடியும். அதற்கு முதலில் நாம் நமது துன்பங்களையும் பிரச்சனைகளையும் எண்ணி எண்ணி வருந்திடாமல் புறப்பட்டுச் சாறிபாத்துக்குப் போகவேண்டியது அவசியம். 

அப்போஸ்தலரான பவுல் இந்த அனுபவத்துடன்தான் நற்செய்தியை அறிவிக்கச் சென்றார். எனவேதான் அவர் தைரியமாகக் கூறுகின்றார், "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை;  துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 8, 9 ) இதுதான் சாறிபாத் அனுபவம். 

தேவன் தம்மை அறிந்த பிள்ளைகள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கூறுகின்றார், "நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன்" ஆம், நமது மக்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்க நமது துன்பங்களைச் சுமந்து சாறிபாத்துக்குச் செல்வோம்.

"ஆதவன்" தியானம் - 1943
2026 ஜூன் 03, புதன்       

"கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது." ( உன்னதப்பாட்டு 2 : 14 )

பலருடைய வாழ்க்கை இந்த உலகத்து மக்களுடன் ஒப்பிடும்போது அற்பமானதாகவே இருக்கின்றது. எனவே இந்தச் சமூகத்தின் பல்வேறு அவமானங்களும் புறக்கணிப்புகளும் அவர்களைத்  தாழ்வுமனப்பான்மைக்கு இட்டுச்செல்கின்றது. இவர்கள்தான் சமூகத்துக்குத் தங்களை வெளிகாட்டமுடியாமல் ஒதுங்கி வாழும் புறாக்கள் போன்றவர்கள்.

இன்று பல இளைஞர்களும் இளம் பெண்களும் இப்படி ஒதுங்கி வாழும் புறாக்களைப்போல இருக்கின்றனர். படித்த படிப்புக்கேற்ற வேலையில்லாததால் மற்றவர்களைப்போல் இவர்களால் மகிழ்ச்சியுடன் வாழ முடிவதில்லை. தங்களுடன் படித்த மற்றவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளுடன் வருமானம் அதிகமாகப் பெற்று வாழும்போது அவர்களோடு வாழ்ந்து, விளையாடி, படித்துப் பட்டமும் பெற்றபின்னர்  அவர்களைப்போன்ற வாழ்க்கை அமையவில்லை இவர்களுக்கு. 

இதுபோலவே, திருமணம் செய்துகொண்டு வாழும் பல தம்பதிகளும் இருக்கின்றனர். பொருளாதாரத்தில் நலிவு, கணவன்மார்களின் போதைப்பழக்கம் போன்றவை  இவர்கள் மற்றவர்களோடு நெருங்கி வாழ்வதைத் தடுக்கின்றது. காரணம், நமது சமுதாயம் பணத்தின் அடிப்படையிலும், அந்தஸ்து மற்றும்  செல்வாக்கின் அடிப்படையிலும் மக்களை எடைபோட்டு மதிப்பளிப்பதாக இருக்கின்றது. 

இதனால் இத்தகைய அவமானத்துக்குளாகும் மனிதர்கள்  பலரும் கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற புறாக்களைப்போல ஒதுங்கி வீட்டுக்குள்ளேயே இருக்கின்றனர். ஆனால் தேவன் மனம் நொறுங்கி அவமானத்துடன் வாழும் இவர்களைப்பார்த்து, "என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது" என்கின்றார். 

மற்றவர்களுக்கு ஒருவேளை இத்தகைய இளைஞர்களும் இளம்பெண்களும், நலிவுற்ற குடும்பத்தாரும் அற்பனானவர்களாகத் தெரியலாம். ஆனால் தேவனுக்கு இவர்கள்தான் அருமையானவர்கள். அவர் ஒடுக்கப்பட்டு வாழும் மக்களைப் புறக்கணிப்பதில்லை.  எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அவர் அழைக்கின்றார், என் மகனே, மகளே மற்றவர்கள் உன்னை அவமதிப்பது குறித்துக் கவலைப்படாதே, உன் முகத்தை எனக்கு நேராகத் திருப்பு. என்னை நோக்கிக் கூப்பிடு. உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்கின்றார். 

ஆம், அவமானத்தால் வெளி உலகோடு சமமாகப் பழக்கமுடியாமல் வீட்டுக்குள் அடைந்துகிடந்து அடுப்படியில் வாழும் வாழ்க்கை வாழும் இத்தகைய மக்களைப்பார்த்து தேவன் கூறுகின்றார், "நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்." ( சங்கீதம் 68 : 13 )

சோர்ந்துபோய் வாழும் வாழ்க்கை நமக்கு வேண்டாம். தேவன் அழைக்கும் சத்தத்துக்குச் செவிகொடுப்போம். நமது முகத்தை அவருக்கு நேராகத் திரும்புவோம். ஆம், "உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது" என இன்றைய தியான வசனம் கூறுவது நமக்கு நம்பிக்கைத் தரும் வாக்காக அமையட்டும். இந்த வசனம் நாம் அவரை நோக்கிப்பார்த்து ஜெபிக்க நம்மை அழைக்கின்றது. 

அவரை நோக்கிப்பார்த்து நமது ஜெப சத்தத்தை எழுப்புவோம். அவருக்கு நமது முகம் அழகாகவும் நமது சத்தம் இன்பமாகவும் இருக்கும். அப்போது நமது சிறையிருப்பு வாழ்க்கையினை அவர் மாற்றுவார்.  "இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 2, 3 ) ஆம், நாம் நினைத்துபார்த்திராத அளவுக்கு நம்மை அவர் உயர்த்திட வல்லவராகவே இருக்கின்றார். 

"ஆதவன்" தியானம் - 1944
2026 ஜூன் 04, வியாழன்        

"தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?" ( யோவான் 5 : 44 )

மகிமை செலுத்துதல் என்பதற்கு  மதிப்பளிப்பது அல்லது கவுரவப்படுத்துதல்  என்று பொருள் கொள்ளலாம். அரசர்களை குடிமக்கள் மகிமைக்குரியவர்கள் என்று கருதுவதுண்டு.  அதுபோல, அரசர்களும் தங்களது நாட்டில் சாதனை புரிந்தவர்களை கவுரவப்படுத்துவதுண்டு. பொதுவாக மக்கள் பலரும் இப்படி மற்றவர்களால் மதிப்பளிக்கப்படுவதை விரும்புகின்றனர்.  இதற்கு உண்மையான காரணம் அவர்களது பெருமை.  மெய்யான மகிமைக்கு தேவன் மாத்திரமே சொந்தக்காரர். நாம் அவரை மகிமைப்படுத்தினால் அவர் நம்மை மகிமைப்படுத்துவார். 

இன்றைய தியான வசனம் தன்னை விசுவாசிக்காத யூதர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக்  கூறுவதாகும். பெதஸ்தா குளக்கரையில் 38 ஆண்டுகள் படுக்கையில் கிடந்த மனிதனை இயேசு கிறிஸ்து குணமாக்கியதை யூதர்கள் விரும்பவில்லை. காரணம், இயேசு கிறிஸ்து இந்த அற்புதத்தை ஓய்வுநாளில் செய்ததுதான்.  எனவே யூதர்கள் அவரை விசுவாசிக்கவும் இல்லை. இதனால் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து    "தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?" என்று கேட்கின்றார். 

இயேசு கிறிஸ்துக்  கேட்கும் இந்தக் கேள்விக்குரிய உள்ளார்ந்த பொருள், ஓய்வுநாளை நீங்கள் கடைப்பிடிக்கின்றீர்கள் என்பதனை மற்றவர்கள் அறிந்து உங்களைக் கனப்படுத்தவேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்; இப்படி மற்றவர்களிடம் மதிப்பு பெறவேண்டும் என்று எண்ணும் நீங்கள் எப்படி நான் செய்ததை விசுவாசிக்கமுடியும்? என்பதுதான். ஆம்,   தேவனை நாம் அறிந்து அவரை ஏற்றுக்கொள்ளவேண்டுமானால் முதலில் நாம் நமது சுய பெருமையினை விடவேண்டியது அவசியம். எல்லோரும் என்னை மதிக்கவேண்டும் என்று நாம் பெருமைகொண்டு மனிதர்களது மதிப்பினைத்தேடி ஓடிக்கொண்டிருப்போமானால் தேவனை வாழ்வில் அறியமுடியாது. 

ஆம் அன்பானவர்களே, தேவனே நம்மை உயர்த்தவேண்டும்; அவரே நம்மை மகிமைப்படுத்தவேண்டும். நமது பதவியோ, பணமோ, அதிகாரமோ நம்மை மகிமைப்படுத்தும் என்று எண்ணி ஓடிக்கொண்டிருப்போமானால் நாம் தேவனை அறியமுடியாது. பல திருச்சபைகளில் மேலான பதவிகளை வகித்து திருச்சபையை வழிநடத்தும் தலைவர்கள் தங்களை அறியாமல் இந்தப் பெருமைக்குள் அகப்பட்டுக்கொள்கின்றனர். அதாவது, அவர்கள் தேவனால் வரும் மகிமையைவிட தங்களது பதவியைப்பார்த்து மனிதர்கள் தங்களை மதிக்கவேண்டும் என எண்ணுகின்றனர். எனவே அவர்களால் தேவனை வாழ்வில் அறிய முடிவதில்லை. 

பெருமையை விட்டு, தன்னைத்தான் தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான் எனும் இயேசுவின் வார்த்தைகளுக்கேற்ப நம்மைத் தாழ்த்தும்போது மட்டுமே நாம் தேவனை அறிந்து வாழ்வில் உயர்த்தப்படமுடியும். ஆம், "கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." ( யாக்கோபு 4 : 10 )

ஒருவேளை இப்படி மனிதர்களுக்குமுன் நம்மை நீதிமான்கள்போலக்  காட்டி மனிதர்கள்முன் நாம் மேன்மையடையலாம் ஆனால் இப்படி மகிமையைத் தேடுவதை  தேவன் அருவருகின்றார். இதனையே நாம் "அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." ( லுூக்கா 16 : 15 ) என்று வாசிக்கின்றோம். 

சுய மகிமையை நாடாமல், தேவன் நம்மை உயர்த்தும்படி அவரது கரங்களுக்குள் அடங்கியிருக்காவே வேதம்  நமக்கு அறிவுறுத்துகின்றது. "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 ) மற்றவர்களால் மகிமையடையும்படி ஆர்வமுடன் ஓடி தேவனுக்குமுன் அருவருப்படையாமல் பொறுமையாக அவர் நம்மை மகிமைப்படுத்தக் காத்திருப்போம்.  

"ஆதவன்" தியானம் - 1945
2026 ஜூன் 05, வெள்ளி         

"ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல." ( 2 கொரிந்தியர் 10 : 12 )

மற்றவர்களோடு தங்களை ஒப்பீடு செய்து வாழ்வது உலக வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் ஏற்புடைய ஒன்றல்ல. ஆனால் பலரும் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே இந்த வேண்டாத பழக்கத்தை பயிற்றுவித்துவிடுகின்றனர். உதாரணமாக,  மற்ற மாணவ மாணவிகளைவிட தனது குழந்தை படிப்பிலோ, விளையாட்டிலோ பின்தங்கிவிட்டால், "அவனைப்பார், அவன் எத்தனை அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளான்!! நீ கல்லூரி பேராசிரியரின் மகன், அவனோ சாதாரண கொத்தனாரின் மகன். அவனைவிட உனக்கு நாங்கள் நல்ல  உணவு, உடைகள் கொடுக்கின்றோம்; அடுத்த தேர்வில் நீ அவனைவிட அதிக மதிப்பெண் பெறவேண்டும்" என்கின்றனர்.  

சிறு வயதிலேயே மனதில் புகுத்தப்படும் இத்தகைய எண்ணங்கள் பிற்காலத்தில் இந்தக் குழந்தைகள் கெட்டுபோவதற்குக் காரணமாக இருப்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆதியில் லூசிபர் இப்படியே தேவனுக்கு நிகராகத் தன்னை ஒப்பிட்டு இருதயத்தில் பெருமைகொண்டான்; அதனால் வீழ்ச்சியும் அடைந்தான். "நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." ( ஏசாயா 14 : 14,15 ) என்று வாசிக்கின்றோம்.

நமது ஆவிக்குரிய வாழ்விலும் இத்தகைய எண்ணம் நமக்கு வீழ்ச்சியையே கொடுக்கும். ஆவிக்குரிய வாழ்வில் இப்படித்  தன்னைக்கொண்டு தன்னை அளந்துகொண்டு, தனக்கே தன்னை ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு மனிதனைக்குறித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார்.   

ஆம், ஆயக்காரனும் பரிசேயனும் ஜெபித்த முறை இதனை வெளிப்படுத்துகின்றது. "பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபச்சாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்." ( லுூக்கா 18 : 11,12 ) அதாவது, அவன் ஆயக்காரனுடன் தன்னை ஒப்பிட்டுத்  தனது பெருமையினை எண்ணி தன்னைத்தானே மேலானவனாகக் கருதிக்கொண்டான். இத்தகைய மனிதர்கள் புத்திமான்களல்ல என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இத்தகைய மனிதர்களை இன்றும்  நாம் நமது ஊர்களில் பார்க்கலாம். இவர்கள் தங்களது பக்தி முயற்சிகளையும், ஆவிக்குரிய செயல்பாடுகளையும் பெருமையாக எடுத்துக் கூறிக்கொண்டிருப்பார்கள். மட்டுமல்ல, இவர்களைப்போல செயல்படாத மற்றவர்களைக் குறையும் கூறிக்கொண்டிருப்பார்கள். 

ஒருமுறை ஒருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் என்னிடம் கூறியது எனக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது. அவர் கூறினார், "ஒருவிதத்தில் நான் தாவீது இராஜாவைவிட மேலானவன்தான். நான் எனது மனைவியைத்தவிர வேறு எந்தப் பெண்ணையும் நோக்கிப்பார்த்ததில்லை" என்றார் அவர். மனிதர்களது ஒப்பிடுதல் எவ்வளவு மோசமான இருக்கின்றது என்று பாருங்கள்!! "தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்" என்று தேவனே சாட்சிகொடுத்தார். இன்று அவரோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டிருக்கும் இவர் அதுபோல தேவனது இருதயத்துக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்கின்றாரா?

இப்படிப்பட்ட இழிவான செயலை நாங்கள் செய்யமாட்டோம் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். இதனையே, ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம் என்று அவர் கூறுகின்றார். 

ஓட்டப்பந்தயத்தில் ஓடும் ஒருவன் வெற்றிக்குறியை நோக்கி ஓடவேண்டுமே தவிர தனக்கு வலது புறமும் இடதுபுறமும் ஓடும் சக வீரர்களைப் பார்த்துப்பார்த்து ஓடக்கூடாது. அப்படி ஓடும் ஒருவன் வெற்றிபெறவும் முடியாது.  ஆவிக்குரிய வாழ்வும் ஒரு ஓட்டப்பந்தயம்தான். அதில் நமது இலக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரை நோக்கியே நமது ஓட்டம் இருக்கவேண்டியது அவசியம்.   

ஆம் அன்பானவர்களே, உலக வாழ்க்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடும் மோசமான குணத்தை விட்டு கிறிஸ்துவுக்கு ஏற்ற ஆவிக்குரிய வாழ்வு வாழ அவரது உதவியை நாடி ஜெபிப்போம். 

"ஆதவன்" தியானம் - 1946
2026 ஜூன் 06, சனி  

"இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்." ( மாற்கு 12 : 17 )

இந்த உலகத்தில் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் வேறுபாடுகள் உள்ளன. ஒரு போலீஸ் காவலர் அவரது உயரதிகாரிக்கு வணக்கம் செலுத்துவது, மாணவன் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவது, ஒரு அலுவலகத்தில் மேலதிகாரிக்கு பணியாளர்கள் வணக்கம் செலுத்துவது, நம்மைவிட மேலானவர்களை நாம் சந்திக்கும்போது அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது இவைகள் ஒவ்வொன்றும் வேறுபட்ட முறையில் இருக்கும். உதாரணமாக,  நமது உறவினர்களை வரவேற்கும்போது போலீஸ் காவலர் தனது மேலதிகாரிக்கு வணக்கம் செலுத்துவதுபோல  வணக்கம் செலுத்தி நாம் வரவேற்பதில்லை.

இந்த உலகத்தில் அவரவர்களுக்குச்  செலுத்த வேண்டிய மரியாதையினை நாம் செலுத்த கவனமாக இருக்கின்றோம். இதனையே, "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. அதாவது, ஆளுவோருக்கு அளிக்கவேண்டிய மரியாதையை அவர்களுக்குக் கொடுங்கள்; தேவனுக்குக் கொடுக்கவேண்டிய கனத்தையும், மரியாதையையும், வணக்கத்தையும் தேவனுக்குக் கொடுங்கள் என்கின்றார் இயேசு. 

அப்போஸ்தலரான பவுலும், "ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." ( ரோமர் 13 : 7 ) என்று கூறுகின்றார். 

நாம் யாருக்கு எந்த அளவு மரியாதையும் வணக்கத்தையும் கடமைகளையும் செய்யவேண்டுமோ அந்த அளவு செய்தால் போதும். ஆனால் இன்று உலகத்தில் பல கிறிஸ்தவர்கள் அரசியல் தலைவர்களுக்குத் தேவனுக்குக் கொடுப்பதுபோல மகிமை கொடுக்கின்றனர். கடந்த தேர்தலின்போது இதனை நாம் வெளிப்டையாகப் பார்க்கமுடிந்தது. 

இதுபோல, இளைஞர்கள் திரைப்பட நடிகர்களது படங்களுக்கு கடவுளுக்குக் கொடுப்பதுபோல மரியாதை செலுத்துகின்றனர். தங்களுக்குப் பிடித்த நடிகன் நடித்தத் திரைப்படம் வெளிவரும்போது கடவுளுக்குச் செலுத்துவதுபோல நடிகனின் படத்துக்கு மகிமையைச் செலுத்துகின்றனர். 

இப்படி தேவனுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுப்பது பாவமான காரியமாகும். தேவன் ஒருவரே மகிமைக்கும் கனத்துக்கும் சொந்தக்காரர். 

ஏலியின் புதல்வர்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய கனத்தைச் செலுத்தாமல் கர்த்தருக்கான பலிப்பொருட்களை தாங்களே முதல்முதலில் எடுத்துக்கொண்டனர். இப்படி கர்த்தருக்கான மகிமையினைச் செலுத்தாமல் போயினர். அப்போது கர்த்தர் கூறியது:- "ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்" ( 1 சாமுவேல் 2 : 30 )

நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். இந்த உலக வாழ்க்கையில் தேவனுடையதை இராயனுக்குச் செலுத்திக்கொண்டிருப்போமானால் நம்மைப்பார்த்துக் கர்த்தர் எச்சரித்துக் கூறுகின்றார், "என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள்." ஆம், நமது உடலாலும் பொருளாலும் தேவனுக்குச் செலுத்தவேண்டிய மகிமையை தேவனுக்குச் செலுத்துவோம்; மற்றவர்களுக்கு செலுத்தவேண்டிய அளவுக்கு மட்டும் மகிமையினைச் செலுத்துவோம். 

"ஆதவன்" தியானம் - 1947
2026 ஜூன் 07,  ஞாயிறு   

"உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்." ( உபாகமம் 11 : 16 )

வஞ்சித்தல் என்பது ஒருவருக்கு நம்பகரமானவர்போல கூடவே இருந்து  அவரை ஏமாற்றுதலைக் குறிக்கின்றது. பல குடும்பங்களில் இத்தகைய வஞ்சகங்கள் நடைபெறுவதுண்டு. நண்பர்கள்போல பழகியவர்களும் இப்படி நம்பியவர்களை ஏமாற்றுவதுண்டு. பலர் மற்றவர்களது சொத்துக்களை இப்படி வஞ்சித்து அபகரிப்பதுமுண்டு. வஞ்சித்தல் என்பது மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மட்டுமல்ல, இது மிகப்பெரிய துரோகமாகும். "நான் அவனை எவ்வளவோ நம்பியிருந்தேன், இப்படி என்னை வஞ்சித்து மோசம்போக்கிவிட்டான்" என்று ஏமாற்றப்பட்டவர்கள்  பின்னர் புலம்புவதுண்டு. 

இன்றைய தியான வசனம் இப்படி நமது இருதயம் வஞ்சிக்கப்பட்டு தேவனைவிட்டு வழிவிலகிச்  சென்றுவிடக்கூடாது என்று நம்மை எச்சரிக்கின்றது. ஆதியில் ஆதாம் ஏவாள் இப்படியே சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு தேவ மகிமையினை இழந்தனர்.  காரணம், அவர்கள் தேவனது வார்தையைவிட சர்பமாகிய சாத்தான் கூறிய வஞ்சக வார்த்தைகளை நம்பியதுதான். இப்படி ஆதிப்பெற்றோர் வஞ்சிக்கப்பட்டுப் போனதுபோல நாமும் அந்நிய தேவர்களைச் சேவித்து  வழிவிலகிப் போகாமலிருக்க இன்றைய தியான வசனம் நம்மை எச்சரிக்கின்றது. 

தேவன் கொடுத்த பத்துக்கட்டளைகளில் முதல் கட்டளையே. "உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்." ( யாத்திராகமம் 20 : 2, 3 ) என்பதுதான். இந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படியாமல் போகும்போது நாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்று பொருள்.

தேவனை விட்டு நாம் வேறு எந்த உலகப்பொருளுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் அது அந்நிய தேவர்களைச் சேவிப்பதுதான்;  எந்தெந்த உலகப்பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அவை அனைத்துமே வேறு தேவர்கள்தான்; அவை அனைத்தும் விக்கிரக ஆராதனைதான். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் பொருளாசையாகிய விக்கிரக ஆராதனை என்று கூறுகின்றார். "ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்". ( கொலோசெயர் 3 : 5 ) என்று வாசிக்கின்றோம். 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை." ( மாற்கு 12 : 30 ) என்று கூறினார். இப்படி இயேசு கிறிஸ்து கூறியபடி நாம் தேவனாகிய கர்த்தரிடம் அன்புகூர்வோமானால் நம்மை எளிதில் யாரும் வஞ்சிக்கமுடியாது. 

இன்று தேவனை விட்டு நமது மனத்தினைப் பிரித்து நம்மை வஞ்சிக்க வேற்று மதத்தினர்தான்  வரவேண்டுமென்று அவசியமில்லை. எப்படி நம்மோடு இருக்கும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் சிலவேளைகளில் நம்மை வஞ்சிக்கின்றனரோ அதுபோல சாத்தான் நமக்குள்ளிருக்கும் கிறிஸ்தவ ஊழியர்களையே இதற்காகப் பயன்படுத்துகின்றான். ஆம், பொருளாசை, உலக ஆசீர்வாதம் இவைகளை மட்டுமே மேலானவையாகப் போதிக்கும் ஊழியக்காரர்களைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களை வஞ்சிக்கின்றான்.   

தேவன் மூலம்  அடைந்துக்கொள்ளும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் புறம்பேத் தள்ளி, இத்தகைய ஆசீர்வாதப் போதகர்கள் போதிக்கும் உலக ஆசீர்வாதமே மேல் என இவர்களது போதனைகளை நம்பி இவர்களைப் பின்பற்றும்போது நாம் வஞ்சிக்கப்படுகின்றோம் என்று பொருள். முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழுப் பலத்தோடும் தேவன்மேல் அன்புகூரும்போது மட்டுமே நாம் இவர்களது வஞ்சனைக்குத் தப்பிக்கமுடியும். 

ஆம், "உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமல்  இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்" என்று எச்சரிக்கின்றார் தேவனாகிய கர்த்தர். 

"அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." ( சங்கீதம் 16 : 4 )

"ஆதவன்" தியானம் - 1948
2026 ஜூன் 08,  திங்கள்    

"நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." ( உபாகமம் 20 : 1 )

இன்று இந்த உலகினில் நாம் யாரோடும் யுத்தம் செய்யப்போவதில்லை. ஆனால், இஸ்ரவேலரின் வாழ்க்கை போராட்டமும் யுத்தமும் நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது. எனவே இந்த வசனம் அவர்களைத் திடப்படுத்தக் கூறப்பட்டத்  தேவ வார்த்தையாகும். 

ஆனால் ஆவிக்குரிய இஸ்ரவேலரான நமக்கு இன்று இந்த வசனம் நமது ஆவிக்குரியவாழ்க்கையில் நம்மைத் திடப்படுத்தும் வார்த்தைகளாகும். இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமக்குப் பல போராட்டங்கள் உண்டு. அந்த போராட்டங்களே இன்று நமக்கு யுத்தமாகும். இதனையே, "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு". (எபேசியர் 6:12) என்று வாசிக்கின்றோம். 
 
ஆம், நமது இன்றைய வாழ்க்கைப் இந்தப்போராட்டங்கள், அன்று இஸ்ரவேலர் எதிர்கொண்ட குதிரைகளையும், இரதங்களையும், பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கொண்டதுபோல இருந்தாலும் அவர்களுக்குப் பயப்படாயாக என்று கூறப்பட்டுள்ளது.  காரணம், நம் தேவனாகிய கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார்.

இன்று பல்வேறு உபத்திரவங்களால் பாதிக்கப்பட்டு வாழும் அருமை சகோதரனே சகோதரியே, இன்றைய தியான வசனம் நமக்காகவே கொடுக்கப்பட்டுள்ளது என்று விசுவாசிப்போம். யோசுவா முறியடித்த இராஜாக்கள் மொத்தம் 31 பேர் (யோசுவா 12:24) ஆம் அன்பானவர்களே, மாதத்தில் அதிகபட்சம் 31 நாட்கள் உண்டு. யோசுவா முப்பத்தியொரு ராஜாக்களை முறியடித்ததுபோல நாமும் 31 நாட்களிலும் வரும் நமக்கு எதிரான பிரச்சனைகளை முறியடிக்க முடியும். காரணம், நம் தேவனாகிய கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார். எனவே, பயப்படாயாக. 

அன்று இஸ்ரவேலரைத் திடப்படுத்தி அவர்களை விசுவாசத்தோடு பிரச்சனைகளை சந்திக்க வழிநடத்த முதலில் மோசேயும் பின்னர் யோசுவாவும் இருந்தனர். இன்றும் நாம் அதுபோல நமது விசுவாச வாழ்க்கை வாழ உதவிட தேவனுடைய ஆவியானவர் உண்டு. அவரது துணை மூலம் இந்தப் போராட்டங்களை நாம் வென்றெடுக்கமுடியும். இதனையே அப்போஸ்தலரான  பவுல் தனது சீடனாகிய தீமோத்தேயுக்கு அறிவுரையாகக் கூறினார்:-

"விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்." ( 1 தீமோத்தேயு 6 : 12 )

ஆம், நாமும் இப்படி விசுவாசத்தின் நல்ல போராட்டம் போராடுவோம். அப்போது அநேக சாட்சிகளுக்கு முன்பாக கிறிஸ்துவை அறிக்கை பண்ணுகிற நல்ல சாட்சிகளாக  வாழமுடியும். 

"ஆதவன்" தியானம் - 1949
2026 ஜூன் 09,  செவ்வாய்     

"இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே." ( 1 கொரிந்தியர் 5 : 10 )

இந்த உலகத்தில் விபச்சாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள். உண்மையான ஆவிக்குரிய அனுபவத்தோடு வாழ்பவர்கள் குறைவானவர்களே. நாம் மற்ற எல்லோரையுமே பாவிகள் என்று கருதி ஒதுக்கினால் இந்த உலகத்திலே நாம் வாழமுடியாது; அப்படியானால்  நாம் உலகத்தைவிட்டு ஒதுங்கிப்போகவேண்டியிருக்கும்.  அப்படி ஒதுக்கினால் நாம் உலகத்தில் வாழவும் முடியாது, யாருக்கும் சுவிசேஷம் அறிவிக்கவும் முடியாது. எனவே அவர்களை ஒதுக்கவேண்டாம்.

கொரிந்து சபையில் விபச்சார பாவத்தில் ஈடுபட்ட ஒருவன் உறுப்பினராக இருந்ததை அப்போஸ்தலரான பவுல் கடிந்து கொண்டு அவனைக்குறித்துப் பல விஷயங்களைக் கூறிவிட்டுத் தொடர்ந்து  எழுதும்போது இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறுகின்றார்.

இயேசு கிறிஸ்து பாவிகளோடும் ஆயக்காரரோடும்தான் அதிகநேரம் இருந்தார். "அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்." ( மாற்கு 2 : 16  மற்றும் மத்தேயு 9:11, லூக்கா 5:30) "நோயாளிகளுக்கே மருத்துவர் தேவை" என்றார் இயேசு கிறிஸ்து.

அதாவது பவுல் அப்போஸ்தலர் கூற விரும்பும் கருத்து என்னவென்றால், நம் கருத்தை ஏற்காதவர்கள், பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்களோடுதான் இந்த உலகத்தில் நாம்வாழவேண்டும். அப்படி ஒதுக்கினால் நாம் இந்த உலகத்தில் வாழமுடியாது.

ஆனால் தொடர்ந்து பவுல் அடிகள் எழுதுகின்றார், "நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனெனப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது." ( 1 கொரிந்தியர் 5 : 11 )

அன்பானவர்களே, பவுல் அடிகள் இரண்டு கருத்துக்களை வலியுறுத்திக் கூறுகின்றார். 

1. இந்த உலகத்தில்  விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் எல்லோருமே நிறைந்திருக்கிறார்கள். அவர்களை ஒதுக்க வேண்டாம்.  காரணம், அவர்கள் ஒருவேளை நம்மூலம் கிறிஸ்துவை அறிந்து மீட்பு பெறலாம்.

2.  சகோதரன் என்று கூறப்படும் ஒருவன் - அதாவது நான் இரட்சிக்கப்பட்டேன் மீட்பு பெற்றுள்ளேன் எனக் கூறும் ஒருவன் நமது சபையில் இருந்துகொண்டு,  விபச்சாரம், பொருளாசை, கொள்ளை, விக்கிரகாராதனை செய்பவனாக இருந்தால் அவனோடு சேர்ந்திருக்கக்கூடாது, அவனோடு சாப்பிடக்கூடாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், கிறிஸ்துவை அறிந்திருக்கிறேன் என்று கூறிக்கொள்ளும் ஆவிக்குரிய ஒருவன் இத்தகைய பாவங்கள் செய்பனாக இருந்தால் அவனை முற்றிலும் நம்மைவிட்டு ஒதுக்கவேண்டும். 

இப்படிப் பவுல் அடிகள் அவர்களை விலக்கச் சொல்லும் காரணம், புளிப்பு மாவு போன்ற அவர்கள் நம்மோடு இருப்பார்களானால் நம்மையும் அவர்களைப்போல பாவத்தினால் புளிக்க வைத்துவிடுவார்கள். "ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள்." ( 1 கொரிந்தியர் 5 : 7 )

பவுல் அடிகள் கூறும் கருத்துக்களை நாம் கடைபிடித்தால், துன்மார்க்கருக்கு சுவிசேஷம் அறிவித்து அவர்களை சபையில் சேர்க்க முடியும்; அத்துடன் அழுக்காகிப்போன நமது சபையையும்  சுத்தமாக்க முடியும். 

"ஆதவன்" தியானம் - 1950
2026 ஜூன் 10,  புதன்      

"எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு." ( எபிரெயர் 6 : 7, 8 )

தேவனுடைய வார்த்தை மனிதர்களுக்குள் எப்படி இறங்கிச் செயல்படுகின்றது என்பதனை இன்றைய தியான வசனம் விளக்குகின்றது. தேவனுடைய வார்த்தைகள் மனிதரில் செயல்படுவதை மழை, பனி, இவை பூமியில் பொழிவதற்கு  வேதம் ஒப்பிடுகின்றது. மனிதர்களது மனம்தான் நிலம். "மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்." ( உபாகமம் 32 : 2 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

மழையும் பனியும் இடம்பார்த்து ஆள்பார்த்து பொழிவதில்லை. அனைவருக்கும் பொதுவாக, சமமாக அவை பூமியில் பொழிகின்றன. ஆனால் அவை பொழியும் இடத்துக்கேற்பவே அவை பலன் தரும்.  இப்படி அந்த நீரை உள்வாங்கி பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, தேவனது வார்த்தைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மனிதர்கள்மூலம் நம்மை அடைகின்றன. நமது மனம் அந்த வசனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்குத்தான் அவை நமக்கு ஆசீர்வாதத்தினைக் கொண்டுவரமுடியும். நமது மனமானது அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுக்குமானால் அது தகாத நிலம்போல இருக்கும். ஆம், அந்த  நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு என்று கூறப்பட்டுள்ளது. 

"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." ( ஏசாயா 55 : 10, 11 ) என்று தேவன் நம்பிக்கையுடன் கூறுகின்றார். இந்த நம்பிக்கைக்கு எதிராக அவர் விரும்பாதபடி செய்து வெறுமையாய் அவரிடம் அந்த வார்த்தைகள் திரும்புமானால் அவர் நம்மை எப்படி ஆசீர்வதிக்கமுடிடியும்?

இன்றைய தியான வசனம், "தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து" என்று கூறுவதன்படி தேவனது வார்த்தைகள் அடிக்கடி நம்மைச் சந்திக்கின்றன. அந்த வசனங்களை நாம் காதுகளினால் கேட்கின்றோம். ஆனால், செயல்பாட்டில் நாம் அவற்றின்படி செய்யவில்லையானால் நாம் பரிதபிக்கப்படக்கூடியவர்களாக இருப்போம். 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்." ( யாக்கோபு 1 : 22 ) என்று கூறுகின்றார். அப்படிச் செய்யும்போதுதான்  நாம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்களாய் முப்பது மடங்காகவும், அறுபது மடங்காகவும் நூறு மடங்காகவும் பலன்தரமுடியும்.

தேவனுடைய வார்த்தைகளைச் சரியான முறையில்  ஏற்றுக்கொள்ள நமது மனமாகிய நிலங்களை பக்குவப்படுத்துவோம்.  பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக அதனை மாற்றுவோம். தேவ ஆசீர்வாதம் பெறுவோம். 
 
"ஆதவன்" தியானம் - 1951
2026 ஜூன் 11,  வியாழன்       

"மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ( ரோமர் 6 : 7 )

உலக மக்கள் நினைப்பதுபோல அல்லாமல், கிறிஸ்தவ வாழ்வில் மரணம், உயிர்ப்பு என்பவை வேறு பொருளைக் கொண்டவை. நாம் எத்தனை ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தாலும் நமது பாவங்கள் கழுவப்படாமல், பாவத்திலேயே தொடர்ந்து வாழ்வோமென்றால் நாம் மரித்துப்போன ஒரு வாழ்கையினை வாழ்கின்றோம் என்று பொருள். அதுபோல, பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நாம் பிழைத்து வாழ்கின்றோம் என்று பொருள். 

இதனையே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து எழுதும்போது அப்போஸ்தலரான பவுல், "அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்." ( ரோமர் 6 : 11 ) என்று கூறுகின்றார்.

கிறிஸ்துவினால் நமது பாவங்கள் கழுவப்படும்போது நாம் புது மனிதர்களாகின்றோம். பழைய மனிதன் நம்மில் மரித்துப்போகின்றான். இப்படி நாம் பாவத்துக்கு மரித்தவர்கள் ஆகின்றோம். செத்துப்போன ஒரு மனிதனால் எதுவும் செய்ய முடியாததுபோல நாமும் இப்படிக் கிறிஸ்துவுக்குள் மரித்துபோனோமென்றால் பாவம் செய்யமாட்டோம். ஆனால், அப்போது நாம் மரித்துப்போன வாழ்விலிருந்து பிழைத்திருக்கும் வாழ்க்கைக்குள் வருகின்றோம்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6 : 13 ) என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். 

நமது உடலை தேவனுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்து வாழவேண்டியதே கிறிஸ்தவ வாழ்வாகும். மட்டுமல்ல, அதுவே நாம் செய்யும் புத்தியுள்ள ஆராதனையாகவும் இருக்கும். "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை" ( ரோமர் 12 : 1 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவை வெறுமனே ஆராதிக்கும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு அழைக்கப்படவில்லை. மாறாக, புத்தியுள்ள ஆராதனை செய்து, கிறிஸ்து நமக்குள் வந்து வசிக்கும் ஆவிக்குரிய மக்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். அப்படிக் கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நமது உடல் பாவத்துக்கு மரித்ததாகவும் நமது ஆவி ஜீவனுள்ளதாகவும் இருக்கும். ஆம், "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 )

மரித்துப்போன வாழ்வு வாழ்கின்ற மக்களாக இல்லாமல் கிறிஸ்துவின் ஆவியைக்கொண்ட உயிருள்ள கிறிஸ்தவர்களாக வாழ நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். அப்போது மட்டுமே நாம் சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழமுடியும். இதனையே, "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே" என்று இன்றைய தியான வசனம் மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலரான பவுல். ஆம், கிறிஸ்துவுக்குள் மரித்து பாவத்துக்கு நீங்கலாவோம்.  

"ஆதவன்" தியானம் - 1952
2026 ஜூன் 12,  வெள்ளி        

"என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை." ( ஏசாயா 45 : 6 )

இந்த உலகத்தில் ஒரு நிறுவனம் ஒருவரை எந்த வேலைக்காகத் தேர்ந்தெடுத்தாலும் அதற்கு ஒரு நோக்கமுண்டு. நோக்கமில்லாமல் எவருக்கும் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்புக் கொடுப்பதில்லை. இந்த வேலையினை நாம் செய்வதற்கு அந்த நிறுவனம் நமக்கு பல்வேறு உதவிகளையும் செய்யும். 

இதுபோலவே, இந்த உலகத்தில் தேவன் நம்மைத் தெரிந்தெடுத்து, தம்மை நமக்கு வெளிப்படுத்தி வழிநடத்தி வருகின்றாரென்றால் அதற்கு ஒரு நோக்கமுண்டு. அதனையே இன்றைய தியான வசனம் எடுத்துக் கூறுகின்றது. அதாவது, "என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு" என்று கூறப்பட்டுள்ளது. 

நமது கர்த்தரே மெய்யான தெய்வம் என்பதனை சூரியன் உதிக்கும் திசைமுதல் அது மறையும் திசைவரையுள்ள மக்கள் அறியும்படிக்கு அவர் நம்மைத் தெரிந்தெடுத்துள்ளார். அப்படி நாம் அவரை பிறர் அறியச் செய்யவேண்டுமானால், நாம் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழவேண்டியது அவசியம்.  இதற்காகவே நாம் அவரை அறியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்தபோதும் அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். 

இன்றைய தியான வசனம் வெறுமனே நமக்கு அவர் தன்னை வெளிப்படுத்தினார் என்று கூறாமல் தொடர்ந்து, "நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்" என்று கூறுகின்றது. இடைக்கட்டு என்பது நம்மைப் பலப்படுத்துவதைக் குறிக்கின்றது. சூரியன் உதிக்கும் திசைமுதல் அது மறையும் திசைவரையுள்ள மக்கள் தன்னை அறியும்படிக்கு நம்மை அவர் தெரிந்தெடுத்தது மட்டுமல்ல, நாம் அப்படி அவரை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நம்மைப் பலப்படுத்தியுள்ளார். அந்த பலம்தான் பரிசுத்த ஆவியானவர்.  

நாம் நமது சொந்த பலத்தில் இந்த உலகத்துக்கு கிறிஸ்துவை அறிவிக்கமுடியாது. தவறாமல் ஆலயங்களுக்குச் செல்வதாலோ, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதாலோ, காணிக்கைகள் கொடுப்பதாலோ, ஆலய கட்டுமானப் பணிகளுக்கு உதவுவதாலோ அவரை உலகுக்கு அறிவிக்க முடியாது.  இதற்குமேல் நமக்கு சாட்சியுள்ள ஒரு வாழ்க்கைத் தேவை.  பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வந்து நாம் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழாதவரை கிறிஸ்துவை நாம் உலகிற்கு வெளிப்படுத்த முடியாது. 

எனவேதான் உயிர்த்தெழுந்த கிறிஸ்துத் தனது சீடர்களிடம், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) ஆம், இந்த பரிசுத்த ஆவியானவரின் பலம்தான் நமக்கு இடைக்கட்டு. அவர் நமக்குள் வரும்போதுதான் நாம் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து சூரியன் உதிக்கும் திசைமுதல் அது மறையும் திசைவரையுள்ள மக்கள் அவரை அறியும்படிச் செய்யமுடியும். 

ஆம் அன்பானவர்களே, அவரை நாம் அறியாதிருந்தும், தன்னை அவர்  நமக்கு வெளிப்படுத்தியது மட்டுமல்ல, இடைக்கட்டாக பரிசுத்த ஆவியானவரையும் தந்துள்ளார். அவருக்கு நன்றியுள்ளவர்களாக நாம் வாழவேண்டுமானால்  நம்மைத் தெரிந்துகொண்ட அவரது நோக்கத்தை நாம் நிறைவேற்றுபவர்களாக வாழவேண்டியது அவசியம்.  

நமது சாட்சியுள்ள வாழ்க்கை மூலமே நாம் அவரை உலகுக்கு அறிவிக்கமுடியும் என்பதால் நாம் நமது பேச்சிலும், செயலிலும் கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோம். அப்போதுதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி கர்த்தரைத்தவிர  வேறு தேவன் ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் உள்ள மக்கள் அறிந்துகொள்வார்கள். 

"ஆதவன்" தியானம் - 1953
ஜூன் 13,  சனி 2026        

"துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( ரோமர் 13 : 14 )

தரித்துக்கொள்வது என்பது உடுத்திக்கொள்வது என்று பொருள். கிறிஸ்தவர்களாகிய நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நம்மில் ஆடையாக உடுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். அப்படி "தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்." ( 2 கொரிந்தியர் 5 : 3 ) 

மேற்படி வசனம் கூறும் நிர்வாணம் என்பது உலக மனிதர்கள் கூறும் நிர்வாணமல்ல; மாறாக, தேவனது பார்வையில் நாம் ஆத்துமாவில் காணப்படும் நிர்வாணமாகும். அதாவது நாம் கிறிஸ்துவை நம்மில் தரித்துக்கொள்ளவில்லையானால் அவரது பார்வையில் நிர்வாணிகளாக இருக்கின்றோம் என்று பொருள். அவரை நம்மில் உடுத்திக்கொள்ளும்போது நாம் நிர்வாணிகளாகக்  காணப்படமாட்டோம். இன்றைய தியான வசனம் இதனால்தான், "துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்" என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. 

ஆதாம், ஏவாள் வாழ்க்கையிலிருந்து இதனை நாம் உணர்ந்துகொள்ளலாம். அவர்கள் பாவம் செய்யுமுன் ஆடையின்றி இருந்தபோதும் தங்களது நிர்வாணத்தை உணரவில்லை. "ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்." ( ஆதியாகமம் 2 : 25 ) காரணம், அப்போது அவர்கள் தேவ சாயலில் இருந்தனர். ஆனால், பாவம் செய்தபோது அவர்கள் தேவ மகிமையை இழந்துவிட்டனர். அப்போது தாங்கள் நிர்வாணிகளாக இருப்பதை உணர்ந்துகொண்டனர். 

ஏதேன் தோட்டத்தில் தேவன் அவர்களோடு உலாவி, அவர்களோடு பேசிவந்தார். ஆனால் பாவம் செய்தபோது அவர்கள் தங்கள் நிர்வாணத்தை உணர்ந்துகொண்டு வெட்கப்பட்டு,  தேவனுக்குப்  பயந்து ஒளிந்துகொண்டனர். தேவன், "ஆதாம் நீ எங்கே இருக்கிறாய்?" என்று கேட்டபோது "அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்." ( ஆதியாகமம் 3 : 10, 11 )

ஆம் அன்பானவர்களே, ஆதாமைப்போல தேவனது கட்டளைகளுக்கு விரோதமாக நாம் நடக்கும்போது நிர்வாணிகளாக இருக்கின்றோம் என்று பொருள். அப்போது நம்மால் தேவனை எளிதில் நெருங்கமுடியாது. எனவேதான் இன்றைய தியான வசனம், துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. 

கிறிஸ்துவைத் தரித்துக்கொள்வது என்பது நமது பாவ உடல் ஒழிந்து அவரோடு சிலுவையில் அறையப்படுவதாகும். ஆம், அப்படி நாம் பாவத்துக்கு மரித்துச் சிலுவையில்  அறையப்படும்போது கிறிஸ்துவைத் தரித்துக்கொள்கின்றோம். "நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 6 : 6 ) இப்படி சிலுவையில் அறைய நம்மை ஒப்புக்கொடுக்கும்போது மட்டுமே துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ள முடியும். அப்படித் தரித்துக்கொள்வோமானால் அவரது பார்வையில் நாம் நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம். 

ஆதாமும் ஏவாளும் ஏதேனில் இழந்துபோன தேவ மகிமையினை நாம் கிறிஸ்துவை ஆடையாக உடுத்திக்கொள்வதன்மூலம் பெற்றுக்கொள்ளமுடியும். இதுவே மேலான ஆவிக்குரிய உண்மை; ஆசீர்வாதம். 

"ஆதவன்" தியானம் - 1954
ஜூன் 14,  ஞாயிறு 2026      

"உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்." ( உபாகமம் 5 : 11 )

இன்றைய தியான வசனம் தேவன் வழங்கிய பத்துக்கட்டளையின் மூன்றாவது கட்டளையாகும். கர்த்தருடைய பெயர் நமது நாவில் ஒலித்துக்கொண்டிருப்பது ஆசீர்வாதமான ஒன்றாகும். எல்லா பரிசுத்தவான்களும் கர்த்தரது பெயரைப் போற்றிப் புகழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இன்றைய தியான வசனமானது அவருடைய பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக என்று நமக்குக் கூறுகின்றது. மட்டுமல்ல, அப்படிக் கூறுபவனை அவர்  தண்டிக்காமல் விடமாட்டார் என்று கூறுகின்றது. இது ஏன் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். 

வீணாகச் சொல்வது என்பது, சாட்சியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேவையில்லாத இடத்தில் அல்லது தேவையில்லாத முறையில் கர்த்தரது பெயரை உச்சரித்துக் கூறுவதைக் குறிக்கின்றது. ஒரு துன்மார்க்க கிறிஸ்தவ அரசியல்வாதி லஞ்சமும் ஊழலும் செய்து பணத்தைக் குவித்துவிட்டு மக்கள்முன், "கர்த்தர் என்னை ஆசீர்வதித்துள்ளார்" என்று கூறுவதை நாம் இதற்கு  உதாரணமாகக் கூறலாம். இதனைக் கேட்கும் மக்கள் என்ன நினைப்பார்கள்? கர்த்தர் துன்மார்க்கனுக்கு உதவுபவர் என்றா அல்லது தவறாக வாழ்கையினைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர் என்றா? இப்படிக் கர்த்தரின் பெயர் அவமானப்படுத்தப்படுவதால் அவர் தனது பெயரை வீணாகக் கூறுபவனைத் தண்டிக்காமல் விடமாட்டேன் என்கின்றார். 

எனக்குத் தெரிந்த ஒரு நபர் அரசாங்க பதவியில் இருந்தார். அங்கு இருந்துகொண்டு தன்னிடம் வரும் மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்தலும் செய்தார். இதனைப் பலர் எதிர்த்தனர். வேலை நேரத்தில் ஏன் இவர் இப்படிச் செய்கின்றார் என்று அவருக்கு எதிராக போராட்டமும் செய்தனர்.  பல கிறிஸ்தவர்கள் அவரிடம் நீங்கள் செய்வது தவறு என்று எடுத்துக்கூறியும் அவர் எதனையும் கண்டுகொள்ளவில்லை. 

தாசில்தார் பதவியில் இருந்த அவர் ஒருமுறை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் முறைகேடாக நிலங்களை தனது மனைவி பெயருக்கு பதிவுசெய்திருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆம் அன்பானவர்களே, அவர்மூலம் கிறிஸ்துவின்பெயர் பிற மக்கள் மத்தியில் அவமானமடைந்தது. சாட்சியற்ற வாழ்க்கை வாழ்ந்த இவர்  கிறிஸ்துவின் பெயரை மக்களிடம் உச்சரிப்பதை நிறுத்தியிருந்தால் கிறிஸ்துவின் பெயர்  அவமானமடைந்திருக்காது அல்லவா?

இதுபோல பல உதாரணங்களைக் கூறலாம். சாட்சியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு எப்போதும், "ஸ்தோத்திரம், அல்லேலூயா" என்று கூறிக்கொண்டு வாழும் பலரை நாம் நமது  வாழ்விலும் ஊர்களிலும் சந்தித்திருக்கலாம். இத்தகைய மனிதர்கள் தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள தேவன் அறிவுறுத்துகின்றார்.   

ஒரு மூன்றாம்தர அரசியல் தலைவர் ஒருவேளை மற்றவர்கள் தங்களைப் புகழ்வதை விரும்பலாம். ஆனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல,  அவர் தகுதியற்றவர்கள் தன்னைப் புகழ்வதை விரும்புவதில்லை. தனது பெயரை அவர்கள் உச்சரிப்பதையும் அவர் விரும்புவதில்லை. திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவன் காவல்துறையினர் கைதுசெய்தபோது பிரபல நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு நான் அவரது மகன் என்று கூறினால் அது அந்த நீதிபதிக்கு எவ்வளவு பெரிய அவமானம்!!

கிறிஸ்துவின் பெயரை நாம் அறிக்கையிடவேண்டுமானால் முதலில் அதற்கேற்ற வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். முதலில் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வோம். அப்போது நாம் அறிவிக்காமலே கிறிஸ்து அறிவிக்கப்படுவார். அப்படி இல்லையானால் இன்றைய தியான வசனம் கூறுகின்றபடி, கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடமாட்டார்.  

"ஆதவன்" தியானம் - 1955
ஜூன் 15,  திங்கள் 2026      

"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )

இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக  பல ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளின் விசுவாசிகள் இப்படி நினைத்துக்கொள்கின்றனர். காரணம், அவர்களை வழிநடத்தும் சில போதகர்கள் அவர்களுக்கு அப்படித்தான் போதிக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் வித்தியாசமானதாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர். 

அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். எனவேதான், இன்றைய தியான வசனத்தில் தேவனுடைய அன்பிலே நம்மைக்  காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா. 

ஆம், கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்கு நாம்  காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய்  வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம். 

பாவ மன்னிப்பும் இரட்சிப்பும் வேறுவேறு காரியங்கள். இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும்  என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.

வெறுமனே தேவன்மேல் விசுவாசம் கொள்வதல்ல, அந்த விசுவாசம் நம்மை உறுதியுடன் நிலைநிறுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். ஆவிக்குரிய வாழ்வில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், இக்கட்டுகளையும் இன்னல்களையும் நாம் சந்திக்கவேண்டியதுண்டு. இந்த உலகத்தின் வாழ்க்கைப் பிரச்சனைகளோடு அவற்றை சகித்து நாம் ஆவிக்குரிய வாழ்வில் பின்மாறிடாமல் வாழவேண்டியது அவசியம். அப்போஸ்தலரான பவுல் இப்படித் தான் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களைச்  சந்தித்து  அவைகளை மேற்கொண்ட அனுபவத்தால் நமக்குக் கூறுகின்றார்:-

"ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு." ( பிலிப்பியர் 1 : 29, 30 )

ஆம் அன்பானவர்களே, பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றால் மட்டும்போதாது, தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு தொடர்ந்து நாம் அதில் நிலைநிற்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தை நாம் பெறவேண்டும். 

சுருக்கமாகச் சொல்வதானால், பாவ மன்னிப்பு அனுபவம், அதனைத் தொடர்ந்த சோதனைகளைச் சகித்து மேற்கொள்ளும் விசுவாசமான ஆவிக்குரிய வாழ்வு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் இவைகள் அனைத்துமே நம்மை   நித்தியஜீவனுக்கேதுவாக  நடத்திச்செல்ல முடியும்.

"ஆதவன்" தியானம் - 1956

ஜூன் 16,  செவ்வாய்  2026      

"ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 36 )

இந்த உலகத்தில் சிலவேளைகளில் நம்மோடு இருக்கும் சிலரே நமக்கு எதிராகச் செயல்படுவதுண்டு. அதாவது நமக்குள் நடக்கும் உரையாடல்கள், இரகசியங்கள் இவற்றை நம்மோடு இருக்கும் சிலரே நமக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு கொடுத்து நம்மைக் கெடுக்கப்பார்ப்பதுண்டு. இதுபோல ஆவிக்குரிய வாழ்க்கையில் நமது முன்னேற்றத்தை நமது குடும்பத்தினரே தடுக்கப்பார்ப்பதுண்டு. இதனையே இன்றைய தியான வசனம் எடுத்துக்கூறுகின்றது. 

ஆம், இன்றைய தியான வசனமானது ஆண்டவர் கூறிய மேலான ஆவிக்குரிய பொருள்கொண்ட ஒன்றாகும். ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே அளவு ஆவிக்குரிய அனுபவம் கொண்டவர்கள் அல்ல. குடும்பத்திலுள்ள ஒருவர் அல்லது இருவர் மட்டும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப்பெற்று, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும் பெற்றிருப்பார்கள். ஆவியானவர் வழிநடத்துவதை அவர்கள் உணர்த்திருப்பதால் அதன்படி நடக்க முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் கிறிஸ்துவைத் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாக இருப்பதால்  குடும்பத்துக்குள்   முரண்பாடுகள்  எழுவதுண்டு.    

இப்படி ஒரு முரண்பாடு குடும்பத்துக்குள் ஏற்படுவதால்தான், சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று கூறிய இயேசு கிறிஸ்து,  பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என்றும் கூறுகின்றார், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்." ( மத்தேயு 10 : 35 )  

மேலும், "தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல" ( மத்தேயு 10 : 37 ) என்றும்  கூறினார். மேற்படி வசனத்தின் பொருளை பல கிறிஸ்தவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால், "அப்படியானால் நாம் நமது தாய் தகப்பனையும் மனைவி, பிள்ளைகளையும் அன்பு செய்யக்கூடாதா?" என்று கேள்வி எழுப்புவதுண்டு. 

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து நாம் அவர்களை அன்பு செய்யக்கூடாது என்று கூறவில்லை. மாறாக, ஆவிக்குரிய காரியங்களில் நம்மோடு அவர்கள் முரண்படும்போது நாம் கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றார்.  நாம் யாரை அன்பு செய்கின்றோமோ அவர்களது சொல்லைத்தானே கேட்டு நடப்போம்? அதுபோல குடும்பத்திலுள்ள மற்றவர்கள் கூறுவதற்கல்ல; மாறாக, ஆவியானவரின் குரலுக்கே முன்னுரிமைகொடுத்து நாம் நடக்கவேண்டியது அவசியம். 

இப்படி நடக்கும்போது அவர்கள் நமக்கு எதிரிகள்போலத் தெரியலாம். இதனையே இயேசு கிறிஸ்து, "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே" என்று கூறுகின்றார். அதாவது ஆவிக்குரிய காரியங்களில் நாம் முன்னேறமுடியாமல் நமக்கு அவர்கள் சத்துருபோல இருக்கின்றார்கள். உலகத்தில் நாம் இதனை அதிகம்  பார்க்கலாம். கிறிஸ்துவைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்துள்ள மனைவிகள் தங்கள் கணவனால் இதுபோல ஆவிக்குரிய காரியங்களில் முன்னேறமுடியாமல் துன்பங்கள் அனுபவிப்பதுண்டு. சில குடும்பங்களில் கணவன்மார்கள் மனைவிகளால் இதுபோல துன்பப்படுகின்றனர். 

இதுவே பல ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சிலுவை. இந்தச் சிலுவை அனுபவத்தை அனுபவித்துக்கொண்டே நாம் ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து பயணிக்கவேண்டும். இப்படி இந்தச் சிலுவையைச் சுமக்க விரும்பாதவன் எனக்கு ஏற்புடையவன் அல்ல என்கின்றார் இயேசு கிறிஸ்து. ஆம், "தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல." ( மத்தேயு 10 : 38 )

அன்பானவர்களே, இத்தகையைச் சிலுவைச் சுமக்கும் அனுபவம் இருக்குமானால் கவலைப்படாமல்  ஆவிக்குரிய பயணத்தைக் தொடர்வோம். தேவன் நம் மனநிலையை அறிந்திருக்கின்றார்; நாம் சுமக்கும் சுமையையும் அறிந்திருக்கின்றார். வீட்டுக்குள்ளேயே இருந்து நமக்கு எதிராக சத்துருவாக இருக்கும் குடும்பத்தார் கிறிஸ்துவை அறிந்து நமக்கு நண்பர்களாக மாறிட ஜெபிப்போம். அப்போது நமது சுமை குறைவானதாக மாறும்.  

"ஆதவன்" தியானம் - 1957

ஜூன் 17,  புதன் 2026   

"தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்." ( மத்தேயு 16 : 25 )

நாம் ஏற்கெனவே பல தியானங்களில் குறிப்பிட்டுள்ளபடி, வேதாகம வசனங்கள் அனைத்துமே ஆவிக்குரியப்  பொருள் கொண்டவை.  நாம் உலக மனநிலையில் வேதாகம வசனங்களை வாசிப்போமானால் அவற்றின் உள்ளான அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியாது. 

இன்றைய தியான வசனத்தை இயேசு கிறிஸ்து சற்று மாற்றி இன்னொரு இடத்தில்  கூறுகின்றார், "தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்." ( மத்தேயு 10 : 39 ) என்று. 

நாம் இந்த உலகத்தில் தேவனை முற்றிலுமாகச் சார்ந்துகொள்ளாமல் உலகப்பொருட்களையே நம்பி அவற்றைச் சம்பாதிப்பதிலும்  சேமிப்பதிலும் நமது வாழ்கையினைச் செலவழித்துக் கொண்டிருப்போமானால் நிச்சயமாக நாம் நமது ஆத்துமாவை இழந்துவிடுவோம். ஆம் அன்பானவர்களே, நமது பணம், அழகு, திறமை இவைகளைக்கொண்டு உலக மக்களது அன்பையும் பேராதரவையும் நாம் ஒருவேளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது ஆத்தும காரியங்களுக்கு நாம் முன்னுரிமைக்கொடுத்து வாழாவிட்டால் அதனால் பயனில்லை. 

எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்று கேட்கின்றார்.  

மேலும் உலகத்தை ஆதாயப்படுத்துதல் என்பது உலகத்தோடு ஒத்துப்போகும் மனிதர்களுக்கு  மட்டுமே சாத்தியம். அவர்கள் தங்களது திறமையால் உலக மக்களைத் தங்களைத் திரும்பிப்பார்க்க வைக்க முடியும். காரணம், இந்த உலகம் புகழையும் பணத்தையும் மேலானதாகக் கருதுகின்றது. . 

ஆனால் கிறிஸ்துக்குள் வாழும் ஒரு கிறிஸ்தவன் இதற்கு மாறாகக் கிறிஸ்துவைச் சுதந்தரிக்க முயற்சியெடுக்கவேண்டும். அதற்கு நாம் உலகம் மேலானதாகக் கருதுபவைகள் மேலுள்ள ஆசையினையும் விட்டுவிடவேண்டும். அப்போதுதான் நாம்  கிறிஸ்துவை முற்றிலும் சுதந்தரித்துக்கொள்ளமுடியும்; நமது ஆத்துமாவை அழிவுக்கு நீங்கலாக்க முடியும். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்." ( பிலிப்பியர் 3 : 11 ) என்றும், "ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3 : 7, 8 ) என்று கூறுகின்றார். 

பணமும் பதவியும், புகழும் மட்டும் போதும் நாம் வாழ்ந்துவிடலாம் என்று தனது ஜீவனை அவற்றின்மூலம் இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, எனக்கு பணமும் புகழும் சம்பாதிப்பது முக்கியமல்ல எனத்  தனது  உலக ஜீவனுக்கான இவைகளின்மேலுள்ள பற்றினை விட்டுவிடுகின்றவன் அவற்றை மறுமையில் கண்டடைவான். கிறிஸ்துவா, உலகப்பொருள் இன்பமா என வரும்போது நாம் கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். இப்படி முன்னுரிமை கொடுப்பதே கிறிஸ்துக்காக  ஜீவனை இழப்பதாகும். 

கிறிஸ்துவை வாழ்வில் பற்றிக்கொண்டு வாழ்வோம். உலகப் பொருட்களுக்கோ பணம், பதவி, புகழ் இவற்றுக்கோ அடிமைகளாகாமல் கிறிஸ்து ஒருவருக்கே அடிமைகளாக நம்மை ஒப்புக்கொடுப்போம். பொருள் சம்பாதிப்பது தவறல்ல; ஆனால் அவற்றின்மேலான அதிகப்படியான பற்றினையே தேவன் வெறுக்கின்றார். எனவே, கிறிஸ்துவின் நிமித்தம் நமது ஜீவனை இழந்துபோகிறவர்களாக வாழ்வோம்; அப்போது அதனைக் கண்டடைவோம்.

"ஆதவன்" தியானம் - 1958

ஜூன் 18,  வியாழன் 2026   

அதற்கு ரூத்: "நான் உம்மைப்பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்." ( ரூத் 1 : 16 )

இன்றைய தியான வசனம் ரூத் தனது மாமியார் நகோமியிடம் கூறிய விசுவாச வார்த்தைகளாகும்.

தன்னிடம் வைராக்கியமான அன்புடன் செயல்படுபவர்களை நமது தேவன் மகிமைப்படுத்தாமல் விடுவதி

ல்லை. ஒருவேளை நமது காலத்தில் நாம் இதனை உணராமல் இருந்தாலும் நமது பின் சந்ததிகள் இதன் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார்கள். இதனையே நாம் ரூத்தின் வாழ்க்கை மூலம் அறிந்து கொள்கின்றோம். 

ரூத் மோவாப் தேசத்தைச் சார்ந்தவள்.  அவள் கர்த்தரை அறிந்த இனத்தவளல்ல. ஆனால் அவள் பஞ்சம்பிழைக்க அந்த நாட்டில் குடியேறிய   இஸ்ரவேலனாகிய நகோமியின் மகனை மணமுடித்ததால் நகோமியின் மருமகள் ஆனாள். நகோமியின் வாழ்க்கை, அவள் கர்த்தர்மேல் கொண்டிருந்த பக்தி, கர்த்தர் அவளது வாழ்வில் செய்த மேலான காரியங்கள் இவைகளைப் பார்த்திருந்த ரூத், கர்த்தர்மேல் பற்றுகொண்டு அவரையே தனது தேவனாகப் பற்றிக்கொண்டாள்.  

அந்த அன்பினால் அவள் தனது இனத்தையும் தான் வணங்கிவந்த தெய்வங்களையும் அறவே விட்டுவிடத் துணித்துவிட்டாள். எனவேதான் தனது மாமியாரிடம், "நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" என்று அறிக்கையிட்டாள். அவ்வாறே நகோமியுடன் இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பிவந்தாள். 

இப்படித் தன்னைத் தெரிந்துகொண்டு, தனது இனத்தையும், தான் வணங்கிவந்த தெய்வங்களையும் விட்டுவிட்டு வந்த ரூத்தினை தேவன் கைவிடவில்லை. அவளது வழிமரபில் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவைப் பிறக்கச் செய்தார். ஆம், இயேசு கிறிஸ்துவின் மூதாதையரின் பெயர் பட்டியலில் ரூத்தும் இணைந்துகொண்டாள். இதனை நாம், "சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;" ( மத்தேயு 1 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். இப்படி ரூத் தாவீது ராஜாவின் பூட்டியானாள்.  

இதனை நாம் ரூத் புத்தகத்திலும், "அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்." ( ரூத் 4 : 17 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாமும் கர்த்தருக்காக வைராக்கியமாகச் செயல்படும்போது அவரது ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ முடியும். ரூத்தினைபோல இன்று நாம் உலகத்துக்கு அறிமுகமில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் தேவனுக்கு நாம் அறிமுகமில்லாதவர்களல்ல. நமது ஒவ்வொரு செயல்பாட்டினையும் தேவன் பார்த்துக்கொண்டிருக்கின்றார். அவற்றுக்கான கைமாறினை அவர் நிச்சயமாகத் தருவார். 

"ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 )

துன்பங்கள், சோதனைகள் நம்மை நெருக்கினாலும் கர்த்தர்மேலுள்ள அன்பில் குறைந்திடாமல் வைராக்கியமாக வாழ்வோம். தேவன் அவருக்காக நாம் செய்யும் நமது செயல்பாடுகளை ஒருபோதும் மறக்கமாட்டார். கைமாறுதராமல் இருக்கமாட்டார். 

"ஆதவன்" தியானம் - 1959

ஜூன் 19,  வெள்ளி 2026   

"இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார்." ( உபாகமம் 4 : 20 )

முன்பு நாம் பாவத்துக்கு அடிமைகளாக எகிப்தில் இருந்தோம். இன்று நாம் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட சுதந்திர மக்களாக இருக்கின்றோம். காரணம், இப்போது கிறிஸ்துவின் இரக்கத்தினால் நாம் பழைய பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையாக்கப்பட்டுள்ளோம். 

நமது பாவத்துக்கு அடிமையான பழைய வாழ்க்கை எகிப்து எனும் இரும்புக்காளவாய் என்று இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது வலிமையான இரும்பையே உருக்கக்கூடிய உலைக்களம் நமது பழைய எகிப்து வாழ்க்கை.  அதாவது அந்தப்பாவம் நமது ஆத்துமாவையே அளிக்கக்கூடியதாக இருந்தது. அந்த நிலையிலிருந்து நம்மை அவர் வெளியேறி புறப்படப்பண்ணியுள்ளார். 

இதனை நாம் எபேசியருக்கு எழுதப்பட்ட நிருபத்தில்,  "அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்"  ( எபேசியர் 2 : 3 - 5 ) என்று வாசிக்கின்றோம்.

இப்படிக் கிறிஸ்து நம்மை எகிப்து என்னும் இருப்புக்காளவாயான எகிப்து எனும் பாவத்திலிருந்து விடுவித்ததால், நாம் இந்நாளில்  இருக்கிறதுபோல, அவருக்குச் சுதந்தரமான மக்களாக இருக்கின்றோம். எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரைத்  தேவன் தனது கிருபையினால் மீட்டதுபோல பாவத்துக்கு அடிமைகளாக இருந்த நம்மையும் அவர்  மீட்டுள்ளார். ஆம், "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 )

இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து மோசே, இப்படித்  தேவன் உங்களை எகிப்து எனும் இரும்பு உலைக்களத்திலிருந்து மீட்டுக்கொண்டதால் அவரைத்தவிர வேறு தெய்வங்களை வணங்காதீர்கள் என்று அறிவுறுத்துகின்றார். ஆம் அன்பானவர்களே, நாமும் பாவத்திலிருந்து மீட்கப்பட்டதால் இனியும் பாவ வாழ்க்கைக்குள் நுழைத்திடாமல் எச்சரிக்கையாக இருப்போம்,  

நாம் அவரது சொந்த மக்களாக இருக்கும்படி நம்மைத் தெரிந்துகொண்டு பாவத்திலிருந்து நம்மை விடுவித்து நடத்தும் தேவன் நம்மை ராஜரீக ஆசாரியர்களாகவும் பரிசுத்த மக்கள் இனமாகவும் மாற்றியுள்ளார். ஆம், "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 )

எனவே தொடர்ந்து நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். இப்படி நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்வோமானால், "உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார்." ( உபாகமம் 4 : 31 )  எனத் தொடர்ந்து கூறுகின்றார் மோசே. 

பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்த கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக தொடர்ந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம்.  

"ஆதவன்" தியானம் - 1960                                    
ஜூன் 20,  சனி  2026  

"அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்." ( 1 இராஜாக்கள் 19 : 19 )

தேவன் தனது கிருபையினால் நம்மை அழைத்தாலும், நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதற்கு நமக்குப் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் மட்டுமல்ல, நமது சுய அர்ப்பணிப்பும் தேவையாக இருக்கின்றது. அப்படி இருந்தால் மட்டுமே நாம் மேலான ஆவிக்குரிய வாழ்க்கையினை வாழமுடியும். 

எலியா, எலிசாவை ஊழியத்துக்கு அழைத்தச் செய்தி; அழைத்த விதம் இவைகளை இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். வேதாகமம் கூறும் அடிப்படையில் பார்த்தால் எலிசா செல்வந்தனான ஒரு மனிதனாக இருக்கவேண்டுமென்று நாம் கணிக்கலாம். காரணம்,  எலிசா உழவுசெய்துகொண்டிருந்த பெரிய நிலத்தில் பன்னிரெண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்  என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அவருக்கு அதிகமான நிலம் இருந்திருக்கலாம். 

"எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்" என்று கூறப்பட்டுள்ளது. இது  எலியா வழியாக தேவன் எலிசாவுக்கு பரிசுத்த ஆவியானவரை அளித்ததைக் குறிக்கின்றது. இயேசு கிறிஸ்துவின் ஆடையில் வல்லமையான ஆவியின் அபிஷேகம் இருந்ததைப்போல எலியாவின் சால்வையில் ஆவியின் அபிஷேகம் இருந்தது. எனவே, எலியா வாயினால் எதுவும் கூறாமலே எலிசா தேவ அழைப்பைப் புரிந்துகொண்டார். ஆவியானவரின் வல்லமை அவரில் அதிகமாகச் செயல்படத்துவங்கியது. 

அன்பானவர்களே, ஆவியானவரின் அழைப்பை எலியா வழியாகப் புரிந்துகொண்டதும் அவரால் அவரையே கட்டுப்படுத்த முடியவில்லை. எலியாவிடம் அதுகுறித்து விளக்கமும் கேட்கவில்லை. மாறாக, உடனேயே எலிசா தனது வீட்டிற்குப் போய்த்  தாய்தகப்பனிடம் சொல்லிவிட்டுத் திரும்பி வருகின்றார். அப்போது அவரது மனதினில் "நாம் எக்காரணம் கொண்டும் மீண்டும் பின்மாறி பழைய வேலைக்கு வந்துவிடக்கூடாது" என எண்ணம் ஏற்படுகின்றது.  எனவே, பழைய வேலைக்கான அடிப்படைக் கருவிகளையே அழித்துவிட முடிவெடுத்தார்.  

"அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்." ( 1 இராஜாக்கள் 19 : 21 ) என்று வாசிக்கின்றோம். 

இன்று இந்தச் செய்தி நமக்கு உணர்த்துவது கவனிக்கத்தக்கது. ஆம்  அன்பானவர்களே, தேவனுக்கென்று நாம் எடுக்கும் முடிவில் உறுதியுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். "இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்" ( யாக்கோபு 1 : 8 ) என்பதனை எலிசா உணர்ந்திருந்தார். எனவே, தனது அழைப்பைக்குறித்து பிற்காலத்தில் குழப்பம் ஏற்பட்டாலும் தேவனுக்காக அதனால் வரும் இழப்பையும் அவர் ஏற்றுகொள்ளத் தயாராக இருந்தார்.  

அதுவரைத் தனக்கு வாழ்வாதாரமாக இருந்த தனது அடிப்படை வேலைக் கருவிகளையும், உழவு மாடுகளையும் அழித்துவிட்டு தேவனையே முற்றிலும் சார்ந்துகொண்டார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவைவிட்டு நம்மைப் பிரிக்கும் அல்லது கிறிஸ்துவின்மேல் முழு அன்பையும் நாம் செலுத்தத் தடையாக இருப்பவைகளை நாம் முற்றிலும் நம்மைவிட்டு அகற்றிடத்  தயங்கிடாமல் இருப்போம். குறைந்தபட்சம் நமது கைபேசியில் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றச் செயலிகளையாவது அகற்றிவிட முயல்வோமா? ஆம், இன்று அவைகளே நம்மைக் கிறிஸ்துவைவிட்டுப் பிரிப்பதில் முன்னணியில் இருக்கின்றன.  எலிசா துணித்து செய்தார். நாம் ? 

 "ஆதவன்" தியானம் - 1961

ஜூன் 21,  ஞாயிறு 2026  


"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." ( 1 பேதுரு 3 : 15 )

பொதுவாகப் பல கிறிஸ்தவர்களும் ஆலயங்களைக் கடந்து செல்லும்போது அதனைப்பார்த்துப்  பணிவாக வணங்குவதுண்டு. காரணம், அங்கு பரிசுத்தரான தேவன் இருக்கின்றார் என்பதால்தான்.  பலரும் ஆலய வளாகத்துக்குள் கெட்டவார்த்தைகள் பேசுவது கிடையாது, மது அருந்துவதோ, புகைபிடிப்பதோ கிடையாது. காரணம்  அவர்கள் அங்கு பரிசுத்தரான தேவன் இருக்கின்றார் என்று எண்ணுவதால்தான். இப்படிச் சில காரியங்களை ஆலய வளாகத்தினுள் பலரும் செய்வதில்லை. 

ஆனால், ஆலய வளாகத்தினுள் வைத்து நடைபெறும் ஆலயக் கமிட்டி கூட்டங்களிலும், இதர நிர்வாகக் குழு கூட்டங்களிலும், குறிப்பிட்ட அமைப்பினரின் கூடுகைகளிலும்  இந்த கிறிஸ்தவர்கள் நடந்துகொள்வது வித்தியாசமாக இருக்கும். அங்கு இவர்கள் தங்களோடு இருக்கும் இதர நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு எதிராகக் கோஷ்டிகளாகப் பிரிந்து மூன்றாம்தர அரசியல்வாதிகளைவிடக் கேவலமாக நடந்துகொள்வார்கள்; வஞ்சகமும், நரித்தனங்களும் இவர்களுக்குள் நிறைந்து காணப்படும். எப்படி அடுத்தவனைக் கெடுக்கலாம், அல்லது அவனது அதிகாரத்தைப் பறிக்கலாம் என்றே முயன்று நடந்துகொள்வார்கள். 

ஆனால் இத்தகைய தங்களது செயலைப்   பரிசுத்தரான தேவன் பார்த்துக்கொண்டிருக்கின்றார் என்று எண்ணுவது கிடையாது.  இதற்குக் காரணம் இவர்கள் தேவனைத் தங்களது  இருதயத்தில் பரிசுத்தம் பண்ணாமல் இருப்பதுதான். எனவேதான் இன்றைய தியான வசனம், "கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்" என்று அறிவுறுத்துகின்றது. 

தேவனை இருதயத்தில் பரிசுத்தம் பண்ணும்போதுதான் நாம் உண்மையான பரிசுத்தர்களாக மாறமுடியும். காரணம், இருதயத்தின் நிறைவுதான் வாய்மூலம் வெளிவரும். "விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்." ( மத்தேயு 12 : 34 )  என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

மேலும், "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்." ( மத்தேயு 15 : 18, 19 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

ஆம் அன்பானவர்களே, நமது இருதயத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்காமல் நாம் பரிசுத்தர்களாக மாற முடியாது. இப்படி நாம் நமது இருதயத்தை முற்றிலுமாக அவருக்கு ஏற்புடையது ஆக்கினால்தான் தேவனது வார்த்தைகள் நமக்குள் தங்கும். இல்லாவிட்டால் நாம் ஆயிரம் முறை வேதாகமத்தை வாசித்தாலும் நமக்குப் பயனிருக்காது. 

இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்" என்று. அதாவது, முதலில் நாம் முதலில் தேவனை நமது இருதயத்தில் பரிசுத்தம் பண்ணவேண்டும்; அப்படிப் பரிசுத்தம் பண்ணினால்தான்  அவரது வார்த்தைகள் நமக்குள் தங்கும்; அப்படித் தங்கினால்தான் நமது நம்பிக்கையைக்குறித்து நம்மிடம் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் நாம் பதில் சொல்ல முடியும்.  

இப்படி நாம் முதலில் தேவனை நமது இருதயங்களில் பரிசுத்தம் பண்ணும்போதுதான் நம்மிடம் நமது நம்பிக்கையினைக்குறித்து கேள்வி கேட்கும் பிற மத அன்பர்களுக்கு நாம் தெளிவான பதிலைக் கூறி கிறிஸ்துவிடம் வழிநடத்த முடியும்.  நமது இருதயத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கழுவி சுத்திகரிக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.  அப்போது ஆலய வளாகத்தினுள் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் நமது பேச்சும் செயலும் சாட்சியுள்ளவையாக மாறும். 

"ஆதவன்" தியானம் - 1962 
ஜூன் 22,  திங்கள் 2026  

"இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை." ( சங்கீதம் 39 : 7 )

இன்று பெரும்பாலான மக்களது ஜெபங்களும் தேவனிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஒரே நோக்கத்தின் அடிப்படையிலேயே இருப்பதை  நாம் உணரலாம். இதனை நாம்  "பெறும் மனப்பான்மை" (Receiving Mentality) என்று கூறலாம். இத்தகைய மனிதர்கள், "நான் விசுவாசத்துடன் ஜெபிக்கிறேன்" என்று கூறிக்கொண்டாலும் இவர்களிடம் தேவன் மேல் முழு விசுவாசம் இல்லை என்றுதான்  பொருள். பெறும் மனப்பான்மையிலிருந்து நாம் கொடுக்கும் மனப்பான்மைக்கு மாறவேண்டியது அவசியம். ஆம், தேவனுக்கு நமது முழு அன்பினையும் கொடுப்பவர்களாக நாம் மாறவேண்டும். 

நாம் இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து எத்தனையோ ஆண்டுகளாக ஜெபிக்காமல்தான் இருந்திருப்போம். ஆனால் இன்று ஒருவேளை நமக்கு அறுபது, அறுபத்தைந்து அல்லது எழுபதோ அதற்குமேலோ வயதாகியிருக்கலாம். இத்தனை ஆண்டுகள் தேவன் நம்மை நமது ஜெபத்தின் அடிப்படையில் பராமரிக்கவில்லை. மாறாக, தனது கிருபையினால் வழிநடத்தியுள்ளார். இதனையே இயேசு கிறிஸ்து, "உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்" ( மத்தேயு 6 : 8 ) என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, நாம் கர்த்தர்மேல் அன்பு வைத்து அவரை முற்றிலும் அடைந்துகொள்ள வாஞ்சித்து விரும்புவதே மேலான ஜெபம். இதுவே முழு விசுவாசம். என் தேவன் என்னை நடத்துவார் என்று நம்பிக்கையுடன் இருந்து அவரையே அடைந்துகொள்ள விருப்புவதுதான் மேலான விசுவாச ஜெபம். ஆம், இப்படி "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( எரேமியா 17 : 7 )

இதனையே இன்றைய தியான வசனத்தில் தாவீது, "இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை" என்று கூறுகின்றார். அதாவது, ஆண்டவரே, நான் உம்மிடம் என்ன எதிர்பார்த்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை; அது உமக்கேத் தெரியும். நான் உம்மையே நம்பிக்கொண்டிருக்கின்றேன் என்கின்றார் அவர். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் அவர் "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்" ( சங்கீதம் 39 : 6 ) என்று கூறுகின்றார். அதாவது, ஜெபிப்பதுபோல மனிதர்கள் செய்வது வேஷம்தான். அவர்கள் பல உலக அசீர்வாதங்களுக்காக வீணாகச் சஞ்சலப்படுகின்றார்கள். ஆஸ்திகளைச் சேர்க்கவேண்டும் என்று விரும்பி ஜெபிக்கின்றார்கள். ஆனால் அவற்றை  பிற்பாடு யார் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள் என்று அவர்கள் அறியார்கள். 

இப்படிக்கூறிவிட்டு, இன்றைய தியான வசனத்தில்  தாவீது கூறுகின்றார், ஆண்டவரே, நான் அப்படியல்ல; "நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை" என்று.

ஆம் அன்பானவர்களே, தேவனிடம் எதிர்பார்ப்பில்லாத அன்பு செலுத்தும்போது,  "என் தேவன் என்னையும் எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளையும் ஆசீர்வாதமாக நடத்துவார்" எனும் விசுவாசத்தை நமக்குள் கொண்டுவரும்.  

நாளை நடப்பது நமக்குத் தெரியாது; எதிர்காலத்தைக்குறித்து நமக்கு நூறுசதம் அறிவு கிடையாது. பின் எப்படி நாம் சரியானமுறையில் நமது விண்ணப்பங்களை தேவனிடம் எடுத்துக்கூறமுடியும்? எனவே, முழு அன்புடன் தேவனைச் சார்ந்து அவரை முற்றிலும் அடைந்துகொள்ளவே நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். நாம் பலவீனமான மனிதர்கள். எனவே, "அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது இன்னதென்று  அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்." ( ரோமர் 8 : 26 )

எனவே, "இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை" எனத்  தாவீது கூறுவதுபோல நாமும் கூறி ஜெபிப்போம். நமது நம்பிக்கையின்படியே தேவன் நம்மைக் கைவிடாமல் நடத்துவார்.  

 "ஆதவன்" தியானம் - 1963

ஜூன் 23,  செவ்வாய் 2026  

"நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" ( யோபு 31 : 33 )

இன்றைய தியான வசனம் பக்தனாகிய யோபு தனது கடுமையான துன்பத்தின் காரணமாக மனவேதனையுடன் கூறியதாகும். 

நமது எல்லாத் துன்பங்களுக்கும் நமது பாவங்கள் காரணமல்ல. ஆனால் பொதுவாக மனிதர்கள் தங்களது துன்பங்களுக்கு தங்கள் செய்த பாவமே காரணம் என பலவேளைகளில் எண்ணுகின்றனர். தேவன் மனிதர்களைச் சோதித்தறிய; அவர்களைப் புடமிட  துன்பங்களைக் கொடுப்பதுண்டு. இதனை யோபுவும் அறிவார். எனவேதான் அவர்,  "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்". (யோபு 23:10) என்று கூறினார். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. அடுக்கடுக்கானத் தனது துன்பங்களுக்கு ஒருவேளை தனது பாவம் காரணமாக இருக்குமோ என அவர் எண்ணினார். யோபு தனது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுபவர்.  எனவே தொடர்ந்த துன்பங்களால் மனம் துவண்டு அவர் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். மட்டுமல்ல, யோபு தனது பாவங்களுக்காக மட்டுமல்ல, தனது பிள்ளைகளின் பாவங்களுக்காகவும் பரிகாரம் செலுத்துபவர்.

இதனை நாம்,  யோபுவின் புதல்வர்கள் விருந்து கொண்டாடும்போது, "விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்." ( யோபு 1 : 5 ) என்று வாசிக்கின்றோம். 

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அவர், ஆண்டவரே ஏன் எனக்கு இத்தனைத் துன்பம்? நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? என்று கேட்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, ஆதாம் பாவம் செய்தபோது தேவனிடம் அதனை மறைத்தான். தேவன் அவனிடம் அவன் செய்த மீறுதல் குறித்துக் கேட்டபோது ஆதாம் தனது பாவத்தை ஒப்புக்கொள்ளாமல், மன்னிப்புக் கேட்காமல்,  "என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்." ( ஆதியாகமம் 3 : 12 ) அதாவது, தேவன் ஒரு பெண்ணை அவனுக்குக் கொடுத்ததால்தான் அவன் பாவம் செய்ததாகக் கூறுகின்றான்.   ஒருவிதத்தில் இது தேவனையே குற்றப்படுத்துவதுபோல இருக்கின்றது. ஆனால், நான் அப்படி எனது பாவத்தை மூடி மறைக்கவில்லையே? பின் ஏன் எனக்கு இத்தனைத் துன்பம் எனக் கேட்கின்றார் யோபு. 

இன்றைய தியானம் நமக்குத் தரும் சிந்தனை இதுதான்:- நாம் யோபுவைபோல இப்படி நமது அனைத்துப் பாவங்களையும் மூடி மறைக்காமல் தேவனிடம்  அறிக்கையிட்டுள்ளோமா?  யோபு தேவனிடம் கேட்டதுபோல நம்மால் தேவனிடம், "நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" என்று தைரியமாகக் கேட்கமுடியுமா? 

அன்பானவர்களே, சிறிய பாவமோ பெரிய பாவமோ எதுவானாலும் மூடி மறைக்காமல் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். வேதாகமம் நம்மை எச்சரித்து அறிவுறுத்துகின்றது,  "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 )


 "ஆதவன்" தியானம் - 1964

ஜூன் 24,  புதன் 2026  

"தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை." ( ஏசாயா 64 : 4 )

மனிதர்களது வாழ்க்கை இந்த உலகத்துடன் முடிந்துபோகும் ஒன்றல்ல. மாறாக, இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நமக்கு நித்தியமான ஒரு வாழ்க்கை உள்ளது. இதனை நாம் கண்களால் கண்டதில்லை. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனால் இவை வேதாகமம் கூறும்  உண்மை. இன்று இவைகளைக்குறித்து நாம்  பேசும்போது பல கிறிஸ்தவர்களே இவற்றை வேடிக்கையாக எண்ணுகின்றனர்; கட்டுக்கதை எனக் கருதுகின்றனர்.  

ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பல வேளைகளில் இதுகுறித்துக் கூறியுள்ளார். எனவே நாம் இதனை நம்புகின்றோம். இயேசு கிறிஸ்துவுக்கு பொய்ச்சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர் தான் கண்டவற்றையும், கேட்டவற்றையுமே நமக்குக் கூறியுள்ளார். 

"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 2, 3 ) என்று அவர் கூறவில்லையா? 

இதனையே இன்றைய தியான வசனத்தில் ஏசாயாவும், "தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை" என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, இப்படி ஒரு  நித்திய வாழ்வு இல்லையானால் நாம் இந்த உலகத்தில் நல்ல ஒரு வாழ்க்கை வாழவேண்டிய அவசியமே இல்லை. மிருகங்களைப்போல கண்டபடி வாழ்ந்து மிருகங்களைப் போலவே சாகலாம் அல்லவா?

நாம் உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை வாழாமல், ஆவிக்குரிய அனுபவங்களைப்  பெறாமல் இருப்போமானால் இவைகளெல்லாம் கட்டுக்கதைகளாகவேத்  தெரியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 11, 12 ) என்று கூறுகின்றார். 

மட்டுமல்ல, ஏசாயா கூறிய வார்த்தைகளையே அவர் மேற்கோளாகப் பயன்படுத்தி இதனை, "எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 9, 10 ) என்று கூறுகின்றார். 

ஆம், தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணிய மேலான ஆசீர்வாதங்களை உலக மனிதர்கள் காணாமல் இருந்தாலும் நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். எனவேதான் அந்த மேலான வாழ்க்கையினை நாம் சுதந்தரித்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றோம். 

இயேசு கிறிஸ்து வாக்களித்துள்ள இந்த நித்திய ஜீவனைக் குறித்து நமக்குள் உறுதியான விசுவாசம் ஏற்படவேண்டுமானால் முதலில் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம்  அவர்மேல் ஆழமான விசுவாசம் கொண்டவர்களாக வாழமுடியும். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் கட்டுக்கதையல்ல, நாம் அனுபவித்து மகிழவேண்டிய உண்மையான எதிர்கால உண்மை என்பதனை நாம் நிச்சயமாக உணர்ந்துகொள்ள முடியும். 

ஆம், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 6 : 47 ) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. முதலில் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை வேண்டுவோம். அப்போது நமது இருதயத்தின் இருள் விலகும்; வேதாகம உண்மைகள் நமது ஆத்தும கண்களுக்குத் தெளிவாகப் புரியும். 

 "ஆதவன்" தியானம் - 1965

ஜூன் 25, வியாழன் 2026  

"பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்." ( நீதிமொழிகள் 14 : 21 )

பாவம் என்பது கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு போன்ற கொடிய செயல்கள் மட்டுமல்ல, அது இருதயத்தின் வெளிப்பாடு. வஞ்சகம், பொறாமை, பகட்டு, இவைகளும் பாவமே. மட்டுமல்ல, ஒருவரது இல்லாமையினை வைத்து, அல்லது ஒருவரது பொருளாதாரக் குறைவை முன்னிட்டு நாம் அவரை அற்பமாக எண்ணுவோமானால் நாம் பாவம் செய்தவர்களாவோம். அதுபோல அத்தகைய பொருளாதாரக் குறைவிலிருக்கும் ஏழைகளுக்கு இரங்குகின்றபோது நாம் ஆசீர்வதிக்கப்படுகின்றோம்.

நாம் பேசும் வார்த்தையினால்தான் மற்றவர்களுக்கு  அவமதிப்பு ஏற்படவேண்டுமென்று இல்லை. பொதுவான இடங்களில் ஒருவரை மதிக்காமல்  ஒதுக்குவது, பலர்  கூடியிருக்கும்போது தங்களது பணப்பெருமையினை வெளிக்காட்டிப் பேசுவது,  போன்ற காரியங்களைச்  செய்யும்போது நாம் பிறரை அவமதிக்கின்றோம் என்று பொருள். இது மனிதர்களது மனப்பெருமையின் வெளிப்பாடு. பெருமையுள்ளவனுக்குத் தேவன் எப்போதும் எதிர்த்தே நிற்கின்றார்.

இப்படி அற்பமாக நாம் பிறரை எண்ணிச் செயல்படுவது எப்படிப் பாவமாகின்றது என்பதனை இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார். "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 10 ) ஆம், நாம் பிறரை அற்பமாக, அவமரியாதை செய்யும்போது அவர்களது தேவதூதர்களையும் அவமதிக்கின்றோம். அவர்கள் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிப்பதால் இந்த அவமதிப்பை அவருக்கு எடுத்துச் சொல்வார்கள். 

அன்பானவர்களே, நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் தேவன் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்படுபவைகளையும் இல்லாதவைகளையுமே தெரிந்தெடுத்து உயர்த்துகின்றார். "உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) ஆம், "வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 11 ) என்று எழுகியுள்ளபடி அற்பமாக எண்ணப்பட்ட கிறிஸ்துவானவர் எல்லா முழங்கால்களும் அவருக்குமுன் முடங்கும்படிக்கு உயர்த்தப்பட்டார். 

இன்றைய தியான வசனம் மேலும், "தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்" என்று கூறுகின்றது. அதாவது ஏழைகளுக்கு நாம் இரங்கி உதவும்போது அந்தச் செயலை தேவன் பார்த்து நமக்கு இரங்குகின்றார். "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" ( நீதிமொழிகள் 19 : 17 ) என்று நாம் வாசிக்கவில்லையா?

பிறரை சொல்லினாலும் செயலினாலும் அவமதிக்காமல் இருப்பது, நம்மிடையே  வசிக்கும் ஏழைகளுக்கு உதவுவது இவை இரண்டும் வெவ்வேறான காரியங்களல்ல. இரண்டும் ஒன்றுதான். நம்மிடையே வாழும் மற்றவர்களை நாம் அவமதிக்காமல் இருப்போமானால் அதுவும் ஏழைகளுக்கு உதவுவது போன்ற செயலே. எனவேதான் இன்றைய தியான வசனம் இவை இரண்டையும் சேர்த்துக் கூறுகின்றது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, நமது ஜெபங்களை தேவன் கேட்கவேண்டுமானால் நாம் மற்றவர்களால் அவமதித்துப் புறம்தள்ளப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது, "கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 31 ) என்று கொர்நேலியுவுக்குக் கூறியதுபோல தேவன் நம்மிடமும் கூறி நமது ஜெபங்களை அங்கீகரிப்பார். 

"ஆதவன்" தியானம் - 1966

ஜூன் 26, வெள்ளி 2026  

"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." ( ஆமோஸ் 5 : 14 )

கர்த்தர் நம்மோடு இருப்பதே மேலான ஆசீர்வாதம். அப்படிக் கர்த்தர் நம்மோடு இருக்க நாம் என்னச் செய்யவேண்டும் என்பதே இன்றைய தியானம் தரும் செய்தி. 

பலரும் ஜெபம், வழிபாடு, தினமும் வேதாகமத்தை வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது, காணிக்கைகள் கொடுப்பது இவைகளே கிறிஸ்தவ வாழ்வு என  எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இப்படிச் செய்வதால் கர்த்தர் நம்மோடு இருப்பார் என்றும்  நினைத்துக்கொள்கின்றனர்.  இப்படியே பல ஊழியர்களும் மக்களுக்குப் போதிக்கின்றனர். எனவேதான் தினசரி அதிகாலையில் எழுந்து ஜெபிக்கவேண்டும், தினமும் வேதாகமத்தின் ஒரு அதிகாரத்தையாவது வாசிக்கவேண்டும்  என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் இவை மட்டும் ஒரு கிறிஸ்தவனுக்குப் போதுமானதல்ல. 

அன்பானவர்களே, இப்படி மேற்படி எல்லா பக்திமுயற்சிகளையும்  செய்துவிட்டு நாம் அன்றாட வாழ்க்கையில் நன்மையானவற்றைச் செய்யாமல் இருப்போமானால் அதனால் பலனில்லை. அதாவது, சுருக்கமாகச் சொல்வதானால் நமது வாழ்க்கை ஒரு சாட்சியுள்ள வாழ்க்கையாக இருக்கவேண்டியது அவசியம். இப்படி வாழ்வோமானால் நாம் எண்ணுகின்றபடி சேனைகளின் தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பார். இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?" ( 1 பேதுரு 3 : 13 ) என்று கேட்கின்றார். நாம் நன்மையானவற்றைச் செய்யும்போது கர்த்தர் நம்மோடு இருப்பார். நமக்கு எதிராக யாரும் தீங்கு செய்ய முடியாது.

மட்டுமல்ல, அப்போஸ்தலரான பவுல், "உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்." ( ரோமர் 12 : 9 ) என்று கூறுகின்றார். பிறரிடம் அன்பு செலுத்துவதுபோல பேசுவது மட்டுமல்ல, நாம் செயலிலும் அப்படி அன்புள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி வாழ்வதுதான் மாயமற்ற அன்புடன் வாழ்வது. 

நாம் நன்மையைத் தேடுகின்றவர்களாக இருப்போமானால் நாம்  எல்லோரோடும் மகிழ்ச்சியாக இருப்பவர்களாக, நல்மனம் உள்ளவர்களாக, ஒரே உள்ளதோடு பழகுபவர்களாக, எல்லோருடனும் சமாதானத்துடன் வாழ்பவர்களாக இருப்போம்.  இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார் ( 2 கொரிந்தியர் 13 : 11 ) என்று கூறுகின்றார். 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம், நித்தியஜீவனுக்கு ஏற்புடையவர்களாக நாம் பிழைத்திருக்கும்படியான அறிவுரையாகவும் இருக்கின்றது.  ஆம் அன்பானவர்களே, நித்தியஜீவனை நாம் அடையவேண்டுமானால் தீமையை அல்ல, நன்மையைத் தேடுபவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். நாமும் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாக இருப்போம். 

பக்தி முயற்சிகள் நல்லவைதான் ஆனால் அவை மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. ஒரு மனிதனுக்கு இரண்டு கண்களும் அவசியம். வெறும் பக்திக் செயல்பாடுகள் மட்டும் நம்மிடம் இருக்குமானால் நாம் ஒற்றைக்கண்ணர்களாகவே  இருப்போம். 

 "ஆதவன்" தியானம் - 1967

ஜூன் 27, சனி 2026  

"நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்." ( ஓசியா 2 : 19, 20 )

தேவனுக்கும் நமக்குமான உறவு திருமண உறவு போன்றது; அது உண்மையான கணவன் மனைவி அன்பு போன்றதாக இருக்கவேண்டியது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல்,  "இதனிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." ( எபேசியர் 5 : 31, 32 ) என்று கூறுகின்றார். மேலும் தேவன் மேல் நாம் கொள்ளும் அன்பு உண்மையான காதலர்களின் உறவுபோல கள்ளமில்லாத அன்புறவு உள்ளதாக இருக்கவேண்டியது அவசியம். இதனையே உன்னத சங்கீதங்களில் நாம் வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, இப்படி அவர்மேல் உண்மையான அன்புள்ளவர்கள்தான் தேவனை வாழ்வில் அறியமுடியும். இத்தகைய  "அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." ( 1 யோவான்  4 : 8 ) என்று அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார்.

இத்தகைய தேவ அன்புடன் வாழ்பவர்களைப் பார்த்துத்தான்  இன்றைய தியான வசனத்தில் தேவன், நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்;  கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய் என்று கூறுகின்றார்.

ஆம் கர்த்தர் நம்மை அவருக்கு மணவாட்டிகளாக நியமித்துக்கொள்வேன் என்கின்றார்.  இந்த உலகத்தில் ஒரு செல்வந்தனான  வாலிபன் ஒரு ஏழைப் பெண்ணை மணமுடிக்க தெரிந்துகொள்கின்றான் என்றால் அது அவளுக்கு  எத்தனை மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். இதுபோலவே நாம் பாவத்தின் கொடூரத்தில் சிக்கி ஆத்துமாவில் ஏழையாகிப்போனவர்கள். நம்மை இந்த சர்வ லோகத்தையும் படைத்து ஆளும் தேவன் தனக்கு மணவாட்டிகளாகத் தெரிந்துகொள்கின்றாரென்றால் அது எத்தனை மகிழ்ச்சியான காரியம்!!

இப்படி, "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." ( 1 யோவான்  4 : 19 ) ஆம், முந்தி நம்மேல் அவர் அன்புகொண்டதால்தான் நமக்காகச் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் நாம் இன்னும் அவர்மேல் முழுமையான அன்பு செலுத்தாமல் உலக ஆசீர்வாதங்களுக்காகவே அவரைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். எனவேதான் அப்போஸ்தலரான யோவான் நம்மை எச்சரித்துக் கூறுகின்றார், "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை." ( 1 யோவான்  2 : 15 )

நம்மை நித்திய விவாகத்துக்கென்று அவர் தெரிந்தெடுத்துள்ளார். நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் நம்மைத் தமக்காக நியமித்துக்கொள்ளுவேன் என்கின்றார். ஆனால் நாமோ அவரை அன்பு செய்யாமல் அவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என உலக ஆசீர்வாதங்களைத்தேடி அலைந்துகொண்டிருக்கின்றோம். அதாவது இப்படி நாம் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே அவரிடம் எதிர்பார்ப்போமென்றால் அவரை நாம் உண்மையாக அன்பு செய்யவில்லை என்று பொருள். இப்படி இருப்போமானால் நாம் இறுதிவரை கர்த்தரை வாழ்வில் அறிந்துகொள்ளாதவர்களாகவே மரிப்போம்.  

எனவே அன்பானவர்களே, கர்த்தரை உண்மையாக அன்பு செலுத்தி அவரிடம் உண்மையான அன்புடன் வாழ்வோம். இப்படி அவர்மேல் அன்பில்லாதவன் தேவனை அறியான்.

"ஆதவன்" தியானம் - 1968

ஜூன் 28, ஞாயிறு 2026  

"இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" ( 1 யோவான்  5 : 5 )

உலகத்தை ஜெயித்தல் அல்லது உலகத்தை வெற்றிகொள்ளுதல் என்பது பல பெரிய மன்னர்களின் ஆசையாக இருந்தது. அவர்கள் உலகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன்மூலம் உலகத்தின் தலைவராக உருவாக விரும்பிச் செயல்பட்டனர். மாவீரன் அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போனபாட், அடால்ப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் இதற்கு ஒருசில உதாரணங்கள்.  உலகை வெற்றிகொள்ளவேண்டும் எனும் இந்த மனிதர்களின் வெறியால் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும்   தாங்கள் எண்ணியபடி இவர்களால் உலகத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. அனைவருமே அகால மரணமடைந்தார்கள். 

ஆனால், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது அன்பினால் மொத்த உலகத்தையே வெற்றிகொண்டார். இன்று இரண்டாயிரத்து இருபத்தாறு ஆண்டுகளைக் கடந்தும் இயேசு கிறிஸ்து மன்னராக பலகோடி உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார் என்று வேதம் கேள்வி எழுப்புகின்றது. ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவன் அவரைப்போல உலகத்தை வெற்றிகொள்ள முடியும். 

உலகத்தை வெற்றிகொள்வது என்பது அழிந்துபோன மேற்குறிப்பிட்ட சர்வாதிகாரிகள் எண்ணியதுபோல மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்துவதல்ல; மாறாக, அன்பினால் மக்களது உள்ளத்தை நம்வசப்படுத்துவது. இந்த உலகத்தில் நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள பாவத்தை மேற்கொள்வது.  சாத்தானின் வல்லமையினை மேற்கொள்வது. உதாரணமாக, அன்னை தெரேசா அன்பினால் உலகத்தை ஜெயித்தவர். பல பரிசுத்தவான்கள் பாவத்தை வென்று வாழ்ந்துள்ளனர்; சாத்தானை வென்று அவனது பிடியிலிருந்து மக்களை விடுத்துள்ளனர்.    

இத்தகைய உலகத்தை வெல்லும் அனுபவத்தையே வேதாகமம் நமக்கு மெய்யான வெற்றியாகக் கூறுகின்றது. இப்படி உலகத்தை வெல்லவேண்டுமானால் நாம் இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கவேண்டியதும் அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கவேண்டியதும் அவசியம். 

மேலும் உலகத்தை ஜெயித்திட நாம் முதலில் செய்யவேண்டியது மற்றவர்களை அழிக்கவேண்டியது அல்ல; மாறாக நம்மை அழிக்க, அல்லது இழக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இப்படித் தன்னை இழக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்துவது நமக்கு இலாபமல்ல, நஷ்டமே. எனவேதான் இயேசு கிறிஸ்துக்  கூறினார், "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" ( லுூக்கா 9 : 24, 25 )

மேலும், உலகத்தை ஜெயிக்கவேண்டுமானால் நமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் மறுபடி பிறக்கவேண்டும். இப்படி நாம் மறுபடி பிறக்கும்போது   "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்." ( 1 யோவான்  5 : 4 ) என்று கூறியுள்ளபடி தேவனால் மறுபடி பிறந்து அந்த விசுவாசத்தினால் நாம் உலகத்தை ஜெயிக்கமுடியும். 

இறுதியாக, இப்படி தேவன்மேல் கொள்ளும் விசுவாசத்தினால் மறுபடி பிறந்தவர்கள் மறுவுலகில் தேவனுடைய ராஜ்ஜியத்தையும் சுதந்தரித்துக்கொள்ளமுடியும். "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" ( யோவான் 3 : 3 ) இயேசு கிறிஸ்து. 

ஆம் அன்பானவர்களே, இதுதான் கிறிஸ்தவம் காட்டும் உலகத்தை ஜெயித்தல். இதற்குப் பெரிய உடல் வலிமை தேவையில்லை. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் முழுமையான விசுவாசம் கொண்டாலே போதும்.  

"ஆதவன்" தியானம் - 1969

ஜூன் 29, திங்கள் 2026  

"உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்." ( 1 யோவான்  1 : 4 )

இந்த உலகத்தில் பல்வேறுவித இன்பங்கள் உள்ளன. மனிதர்கள் தங்களிடமுள்ள பணத்தைச் செலவழித்து அந்தப் பூலோக இன்பங்களை அடைந்துகொள்ள ஆசைப்படுகின்றனர். இதற்காக எவ்வளவு அதிகமானப் பணச்செலவையும் செய்ய மனிதர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் குறுகியகால அந்த இன்பங்கள் இறுதியில் மனிதர்களது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து அவர்களைத் துன்பத்துக்குள்ளாக்குகின்றன. எனவேதான் இத்தகைய பூலோக இன்பங்களை "சிற்றின்பங்கள்" என்று கூறுகின்றோம். மது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது, பாலியல் சம்பந்தமான செயல்பாடுகள் இவை சிற்றின்பத்துக்கு உதாரணங்கள்.

இத்தகையச் சிறியகால  சிற்றின்பங்களுக்கு மாற்றாக பேரின்பங்கள் உண்டு. அதனை பணமின்றி பெறமுடியுமென்றாலும் பலரும் அவற்றுக்கு ஆசைப்படுவதில்லை. 

இதுவரை உலகத்தில் நாம் கண்டிராத ஒரு பொருளைக் கண்டுபிடித்துவிட்டோமானால் நமக்கு அது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். அதனை நாம் உடனேயே எல்லோரிடமும் அறிவிக்கவேண்டும் என்று ஆசைப்படுவோம். இதுதான் மனித இயல்பு. அப்போஸ்தலரான யோவான் அப்படி ஒன்றினைக் கண்டுபிடித்துவிட்ட நிறைவான மகிழ்ச்சியில், இன்றைய தியான வசனத்தைக் கூருகின்றார்.  அதுதான் பேரின்பத்தை அடையும் வழி. எனவேதான் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம் என்கின்றார்.

இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் தானும் தன்னோடிருக்கும் மற்ற அப்போஸ்தலர்களும் அதனை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதனை அவர் கூறுகின்றார். ஆம், "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." ( 1 யோவான்  1 : 3 )

அதாவது, பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் நெருங்கிய உறவு கொண்டுள்ளதால் அந்த மகிழ்ச்சியைக் கண்டுகொண்டோம் என்கின்றார்.  அதுபோல, நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம் என்கின்றார் அவர். இதுதான் மெய்யான மேலான சுவிசேஷ அறிவிப்பு. எனவே அப்போஸ்தலரான யோவான் இவற்றை சுவிசேஷமாக எழுதினார். ஆம், "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." ( யோவான் 20 : 31 ) என்கின்றார் அவர். 

ஆம் அன்பானவர்களே, நித்திய ஜீவனின் காரணனான இயேசு கிறிஸ்துவைக் கண்டுகொள்வதே அந்தப் பேரின்ப  மகிழ்ச்சி. அதனைப்  பிறருக்கு அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்பு. பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்வதால் மட்டுமே அந்த மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும். இதனால்தான், "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்துக்  கூறினார். 

அதனையே அவருடைய அப்போஸ்தலரான யோவான், எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது என்று கூறுகின்றார். மட்டுமல்ல, உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம் என்று கூறுகின்றார். நிறைவான சந்தோசம் நமக்கு வேண்டுமா இல்லை குறுகியகால சிற்றின்ப சந்தோசம் நமக்குப் போதுமா என்று முடிவெடுக்கவேண்டியது நாம்தான்.  

எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது; எங்களது சந்தோசம் அதில்தான் இருக்கின்றது என்று முடிவெடுப்போமானால் நமக்கு நித்தியஜீவன் உண்டு. இல்லையானால் நாம் உலகத்தில் எவ்வளவு இன்பத்தை அனுபவித்தாலும் அவையெல்லாம் பயனற்றவைகளாகவே இருக்கும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                                                                                                                                                                                                   📞 96889 33712 & 76390 22747

🌐 Website: aathavanmonthly.blogspot.com

"ஆதவன்" தியானம் - 1970

ஜூன் 30, செவ்வாய்  2026  

"இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?" ( எரேமியா 2 : 18 )

தேவனால் மீட்கப்பட்ட நாம் நமது பழைய பாவ அடிமைத்தனங்களுக்குத் திரும்பக்கூடாது என்பதனை இன்றைய தியான வசனம்  நமக்கு உணர்த்துகின்றது. மட்டுமல்ல, இந்த வசனத்தின்மூலம் தேவனது பாதுகாப்பைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, மனித பலத்தையும் அரசியல் தந்திரங்களையும் நம்பியதற்காக தனது மக்களாகிய யூதாவை தேவன் கண்டிக்கின்றார். யூதாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் இந்த வசனம் எச்சரிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரவேலர்கள் எகிப்தியருக்கும் அசீரியர்களுக்கும் அடிமைகளாக இருந்தவர்கள். இந்த இரு அரசுகளும் வலிமைவாய்ந்தவை. ஆனால் இவர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்றபோதும் யூதாவை ஆட்சிசெய்த அரசர்கள் தங்களது பாதுகாப்புக்காகத் தேவைக்கேற்ப எகித்தியரையும் அசீரியர்களையும் மாறிமாறி சார்ந்துகொண்டனர். யூதா தேசம் பெரும்பாலும் இந்தப்  பேரரசுகளை ஒன்றுக்கொன்று எதிராகப் பயன்படுத்திப் பாதுகாப்பைப் பெற முயன்றது. எகிப்தால் அச்சுறுத்தப்படும்போது அசீரியாவின் உதவியையும் அசீரியாவினால் அச்சுறுத்தப்படும்போது எகிப்தின் உதவிட்டையும்  நாடியது. 

இதனால்தான் தேவன், "நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்." ( எரேமியா 2 : 36 ) என்கின்றார்.  இப்படித் தேவனை விட்டு இவ்வுலக அதிகாரங்கள் அல்லது அமைப்புகள் மீது முழுமையான பாதுகாப்பைச் சார்ந்திருப்பது எப்போதும் ஏமாற்றத்திலேயே முடியும் என்பதை இவ்வசனம் கற்பிக்கிறது. 

இந்த வசனம், நமது ஆன்மீக நிலைத்தன்மையைச் சோதித்துப் பார்ப்பதற்கான ஓர் அழைப்பாக அமைகிறது. விசுவாசிகளான நாம் நமது நம்பிக்கையை எதன் மீது வைத்துள்ளோம் என்பதை மதிப்பிடுமாறு இந்த வசனம் நம்மைத் தூண்டுகிறது.

தேவன் முன்னதாகவே தம்மை "ஜீவத்தண்ணீர் ஊற்று" என்று குறிப்பிட்டிருந்தார் (எரேமியா 2:13). எகிப்து அசீரியாவின் நதிகளிலிருந்து "குடிப்பதன்" மூலம், இஸ்ரவேலர்கள் தேவனுடைய தூய மற்றும் ஜீவன் தரும் வல்லமைக்கு மாற்றாக, போலியான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள்தனத்தைச் செய்தனர். நாம் அவ்வாறு செய்யக்கூடாது என்று இன்று நமக்கு இந்த வசனம் அறிவுறுத்துகின்றது. 

இப்படி தேவனை முற்றிலும் நம்பாமல் நாம் பழைய பாவ வாழ்கைக்குத் திரும்புவதும் அல்லது பழைய பாவ நண்பர்களை நமது தேவைகேற்றப் பயன்படுத்த முயல்வதும் தேவன் வெறுக்கும் காரியம். இப்படி இருப்போமானால் தேவனது ஆசீர்வாதத்துக்குப் பதில் நமக்குத் தண்டனையே வரும் என்று இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனத்தில் தேவன் நம்மை எச்சரிக்கின்றார். 

ஆம், "உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப்பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எரேமியா 2 : 19 )

எனவே ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டு சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்கும் ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்கும் போகாமல் இருப்போம். அப்படிப் போவதால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது?  

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                                                                                                                                                                                                   📞 96889 33712 & 76390 22747

🌐 Website: aathavanmonthly.blogspot.com


சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எரேமியா 5 : 1 / Jeremiah 5:1

  " ஆதவன் " தியானம் - 1971 ஜூலை 01, புதன் 2026   "நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவ...