இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக பல ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளின் விசுவாசிகள் இப்படி நினைத்துக்கொள்கின்றனர். காரணம், அவர்களை வழிநடத்தும் சில போதகர்கள் அவர்களுக்கு அப்படித்தான் போதிக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் வித்தியாசமானதாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். எனவேதான், இன்றைய தியான வசனத்தில் தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா.
ஆம், கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய் வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம்.
பாவ மன்னிப்பும் இரட்சிப்பும் வேறுவேறு காரியங்கள். இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும் என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.
வெறுமனே தேவன்மேல் விசுவாசம் கொள்வதல்ல, அந்த விசுவாசம் நம்மை உறுதியுடன் நிலைநிறுத்துவதாக இருக்கவேண்டியது அவசியம். ஆவிக்குரிய வாழ்வில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும், இக்கட்டுகளையும் இன்னல்களையும் நாம் சந்திக்கவேண்டியதுண்டு. இந்த உலகத்தின் வாழ்க்கைப் பிரச்சனைகளோடு அவற்றை சகித்து நாம் ஆவிக்குரிய வாழ்வில் பின்மாறிடாமல் வாழவேண்டியது அவசியம். அப்போஸ்தலரான பவுல் இப்படித் தான் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்தித்து அவைகளை மேற்கொண்ட அனுபவத்தால் நமக்குக் கூறுகின்றார்:-
"ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு." ( பிலிப்பியர் 1 : 29, 30 )
ஆம் அன்பானவர்களே, பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றால் மட்டும்போதாது, தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு தொடர்ந்து நாம் அதில் நிலைநிற்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தை நாம் பெறவேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதானால், பாவ மன்னிப்பு அனுபவம், அதனைத் தொடர்ந்த சோதனைகளைச் சகித்து மேற்கொள்ளும் விசுவாசமான ஆவிக்குரிய வாழ்வு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கம் இவைகள் அனைத்துமே நம்மை நித்தியஜீவனுக்கேதுவாக நடத்திச்செல்ல முடியும்.
"ஆதவன்" தியானம் - 1956
"ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே." ( மத்தேயு 10 : 36 )
இந்த உலகத்தில் சிலவேளைகளில் நம்மோடு இருக்கும் சிலரே நமக்கு எதிராகச் செயல்படுவதுண்டு. அதாவது நமக்குள் நடக்கும் உரையாடல்கள், இரகசியங்கள் இவற்றை நம்மோடு இருக்கும் சிலரே நமக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு கொடுத்து நம்மைக் கெடுக்கப்பார்ப்பதுண்டு. இதுபோல ஆவிக்குரிய வாழ்க்கையில் நமது முன்னேற்றத்தை நமது குடும்பத்தினரே தடுக்கப்பார்ப்பதுண்டு. இதனையே இன்றைய தியான வசனம் எடுத்துக்கூறுகின்றது.
ஆம், இன்றைய தியான வசனமானது ஆண்டவர் கூறிய மேலான ஆவிக்குரிய பொருள்கொண்ட ஒன்றாகும். ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே அளவு ஆவிக்குரிய அனுபவம் கொண்டவர்கள் அல்ல. குடும்பத்திலுள்ள ஒருவர் அல்லது இருவர் மட்டும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப்பெற்று, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தையும் பெற்றிருப்பார்கள். ஆவியானவர் வழிநடத்துவதை அவர்கள் உணர்த்திருப்பதால் அதன்படி நடக்க முயற்சிப்பார்கள். ஆனால் அவர்களது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் கிறிஸ்துவைத் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாக இருப்பதால் குடும்பத்துக்குள் முரண்பாடுகள் எழுவதுண்டு.
இப்படி ஒரு முரண்பாடு குடும்பத்துக்குள் ஏற்படுவதால்தான், சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று கூறிய இயேசு கிறிஸ்து, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என்றும் கூறுகின்றார், "எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்." ( மத்தேயு 10 : 35 )
மேலும், "தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல" ( மத்தேயு 10 : 37 ) என்றும் கூறினார். மேற்படி வசனத்தின் பொருளை பல கிறிஸ்தவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால், "அப்படியானால் நாம் நமது தாய் தகப்பனையும் மனைவி, பிள்ளைகளையும் அன்பு செய்யக்கூடாதா?" என்று கேள்வி எழுப்புவதுண்டு.
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து நாம் அவர்களை அன்பு செய்யக்கூடாது என்று கூறவில்லை. மாறாக, ஆவிக்குரிய காரியங்களில் நம்மோடு அவர்கள் முரண்படும்போது நாம் கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று கூறுகின்றார். நாம் யாரை அன்பு செய்கின்றோமோ அவர்களது சொல்லைத்தானே கேட்டு நடப்போம்? அதுபோல குடும்பத்திலுள்ள மற்றவர்கள் கூறுவதற்கல்ல; மாறாக, ஆவியானவரின் குரலுக்கே முன்னுரிமைகொடுத்து நாம் நடக்கவேண்டியது அவசியம்.
இப்படி நடக்கும்போது அவர்கள் நமக்கு எதிரிகள்போலத் தெரியலாம். இதனையே இயேசு கிறிஸ்து, "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே" என்று கூறுகின்றார். அதாவது ஆவிக்குரிய காரியங்களில் நாம் முன்னேறமுடியாமல் நமக்கு அவர்கள் சத்துருபோல இருக்கின்றார்கள். உலகத்தில் நாம் இதனை அதிகம் பார்க்கலாம். கிறிஸ்துவைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்துள்ள மனைவிகள் தங்கள் கணவனால் இதுபோல ஆவிக்குரிய காரியங்களில் முன்னேறமுடியாமல் துன்பங்கள் அனுபவிப்பதுண்டு. சில குடும்பங்களில் கணவன்மார்கள் மனைவிகளால் இதுபோல துன்பப்படுகின்றனர்.
இதுவே பல ஆவிக்குரிய கிறிஸ்தவர்களின் சிலுவை. இந்தச் சிலுவை அனுபவத்தை அனுபவித்துக்கொண்டே நாம் ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து பயணிக்கவேண்டும். இப்படி இந்தச் சிலுவையைச் சுமக்க விரும்பாதவன் எனக்கு ஏற்புடையவன் அல்ல என்கின்றார் இயேசு கிறிஸ்து. ஆம், "தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல." ( மத்தேயு 10 : 38 )
அன்பானவர்களே, இத்தகையைச் சிலுவைச் சுமக்கும் அனுபவம் இருக்குமானால் கவலைப்படாமல் ஆவிக்குரிய பயணத்தைக் தொடர்வோம். தேவன் நம் மனநிலையை அறிந்திருக்கின்றார்; நாம் சுமக்கும் சுமையையும் அறிந்திருக்கின்றார். வீட்டுக்குள்ளேயே இருந்து நமக்கு எதிராக சத்துருவாக இருக்கும் குடும்பத்தார் கிறிஸ்துவை அறிந்து நமக்கு நண்பர்களாக மாறிட ஜெபிப்போம். அப்போது நமது சுமை குறைவானதாக மாறும்.
"ஆதவன்" தியானம் - 1957
"தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்." ( மத்தேயு 16 : 25 )
நாம் ஏற்கெனவே பல தியானங்களில் குறிப்பிட்டுள்ளபடி, வேதாகம வசனங்கள் அனைத்துமே ஆவிக்குரியப் பொருள் கொண்டவை. நாம் உலக மனநிலையில் வேதாகம வசனங்களை வாசிப்போமானால் அவற்றின் உள்ளான அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியாது.
இன்றைய தியான வசனத்தை இயேசு கிறிஸ்து சற்று மாற்றி இன்னொரு இடத்தில் கூறுகின்றார், "தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்." ( மத்தேயு 10 : 39 ) என்று.
நாம் இந்த உலகத்தில் தேவனை முற்றிலுமாகச் சார்ந்துகொள்ளாமல் உலகப்பொருட்களையே நம்பி அவற்றைச் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் நமது வாழ்கையினைச் செலவழித்துக் கொண்டிருப்போமானால் நிச்சயமாக நாம் நமது ஆத்துமாவை இழந்துவிடுவோம். ஆம் அன்பானவர்களே, நமது பணம், அழகு, திறமை இவைகளைக்கொண்டு உலக மக்களது அன்பையும் பேராதரவையும் நாம் ஒருவேளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் நமது ஆத்தும காரியங்களுக்கு நாம் முன்னுரிமைக்கொடுத்து வாழாவிட்டால் அதனால் பயனில்லை.
எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்று கேட்கின்றார்.
மேலும் உலகத்தை ஆதாயப்படுத்துதல் என்பது உலகத்தோடு ஒத்துப்போகும் மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம். அவர்கள் தங்களது திறமையால் உலக மக்களைத் தங்களைத் திரும்பிப்பார்க்க வைக்க முடியும். காரணம், இந்த உலகம் புகழையும் பணத்தையும் மேலானதாகக் கருதுகின்றது. .
ஆனால் கிறிஸ்துக்குள் வாழும் ஒரு கிறிஸ்தவன் இதற்கு மாறாகக் கிறிஸ்துவைச் சுதந்தரிக்க முயற்சியெடுக்கவேண்டும். அதற்கு நாம் உலகம் மேலானதாகக் கருதுபவைகள் மேலுள்ள ஆசையினையும் விட்டுவிடவேண்டும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை முற்றிலும் சுதந்தரித்துக்கொள்ளமுடியும்; நமது ஆத்துமாவை அழிவுக்கு நீங்கலாக்க முடியும்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்." ( பிலிப்பியர் 3 : 11 ) என்றும், "ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3 : 7, 8 ) என்று கூறுகின்றார்.
பணமும் பதவியும், புகழும் மட்டும் போதும் நாம் வாழ்ந்துவிடலாம் என்று தனது ஜீவனை அவற்றின்மூலம் இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, எனக்கு பணமும் புகழும் சம்பாதிப்பது முக்கியமல்ல எனத் தனது உலக ஜீவனுக்கான இவைகளின்மேலுள்ள பற்றினை விட்டுவிடுகின்றவன் அவற்றை மறுமையில் கண்டடைவான். கிறிஸ்துவா, உலகப்பொருள் இன்பமா என வரும்போது நாம் கிறிஸ்துவுக்கே முன்னுரிமை கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். இப்படி முன்னுரிமை கொடுப்பதே கிறிஸ்துக்காக ஜீவனை இழப்பதாகும்.
கிறிஸ்துவை வாழ்வில் பற்றிக்கொண்டு வாழ்வோம். உலகப் பொருட்களுக்கோ பணம், பதவி, புகழ் இவற்றுக்கோ அடிமைகளாகாமல் கிறிஸ்து ஒருவருக்கே அடிமைகளாக நம்மை ஒப்புக்கொடுப்போம். பொருள் சம்பாதிப்பது தவறல்ல; ஆனால் அவற்றின்மேலான அதிகப்படியான பற்றினையே தேவன் வெறுக்கின்றார். எனவே, கிறிஸ்துவின் நிமித்தம் நமது ஜீவனை இழந்துபோகிறவர்களாக வாழ்வோம்; அப்போது அதனைக் கண்டடைவோம்.
"ஆதவன்" தியானம் - 1958
அதற்கு ரூத்: "நான் உம்மைப்பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்." ( ரூத் 1 : 16 )
இன்றைய தியான வசனம் ரூத் தனது மாமியார் நகோமியிடம் கூறிய விசுவாச வார்த்தைகளாகும்.
தன்னிடம் வைராக்கியமான அன்புடன் செயல்படுபவர்களை நமது தேவன் மகிமைப்படுத்தாமல் விடுவதி
ல்லை. ஒருவேளை நமது காலத்தில் நாம் இதனை உணராமல் இருந்தாலும் நமது பின் சந்ததிகள் இதன் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார்கள். இதனையே நாம் ரூத்தின் வாழ்க்கை மூலம் அறிந்து கொள்கின்றோம்.
ரூத் மோவாப் தேசத்தைச் சார்ந்தவள். அவள் கர்த்தரை அறிந்த இனத்தவளல்ல. ஆனால் அவள் பஞ்சம்பிழைக்க அந்த நாட்டில் குடியேறிய இஸ்ரவேலனாகிய நகோமியின் மகனை மணமுடித்ததால் நகோமியின் மருமகள் ஆனாள். நகோமியின் வாழ்க்கை, அவள் கர்த்தர்மேல் கொண்டிருந்த பக்தி, கர்த்தர் அவளது வாழ்வில் செய்த மேலான காரியங்கள் இவைகளைப் பார்த்திருந்த ரூத், கர்த்தர்மேல் பற்றுகொண்டு அவரையே தனது தேவனாகப் பற்றிக்கொண்டாள்.
அந்த அன்பினால் அவள் தனது இனத்தையும் தான் வணங்கிவந்த தெய்வங்களையும் அறவே விட்டுவிடத் துணித்துவிட்டாள். எனவேதான் தனது மாமியாரிடம், "நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" என்று அறிக்கையிட்டாள். அவ்வாறே நகோமியுடன் இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பிவந்தாள்.
இப்படித் தன்னைத் தெரிந்துகொண்டு, தனது இனத்தையும், தான் வணங்கிவந்த தெய்வங்களையும் விட்டுவிட்டு வந்த ரூத்தினை தேவன் கைவிடவில்லை. அவளது வழிமரபில் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவைப் பிறக்கச் செய்தார். ஆம், இயேசு கிறிஸ்துவின் மூதாதையரின் பெயர் பட்டியலில் ரூத்தும் இணைந்துகொண்டாள். இதனை நாம், "சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;" ( மத்தேயு 1 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். இப்படி ரூத் தாவீது ராஜாவின் பூட்டியானாள்.
இதனை நாம் ரூத் புத்தகத்திலும், "அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்." ( ரூத் 4 : 17 ) என்று வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே, நாமும் கர்த்தருக்காக வைராக்கியமாகச் செயல்படும்போது அவரது ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ முடியும். ரூத்தினைபோல இன்று நாம் உலகத்துக்கு அறிமுகமில்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் தேவனுக்கு நாம் அறிமுகமில்லாதவர்களல்ல. நமது ஒவ்வொரு செயல்பாட்டினையும் தேவன் பார்த்துக்கொண்டிருக்கின்றார். அவற்றுக்கான கைமாறினை அவர் நிச்சயமாகத் தருவார்.
"ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 )
துன்பங்கள், சோதனைகள் நம்மை நெருக்கினாலும் கர்த்தர்மேலுள்ள அன்பில் குறைந்திடாமல் வைராக்கியமாக வாழ்வோம். தேவன் அவருக்காக நாம் செய்யும் நமது செயல்பாடுகளை ஒருபோதும் மறக்கமாட்டார். கைமாறுதராமல் இருக்கமாட்டார்.
"ஆதவன்" தியானம் - 1959
ஜூன் 21, ஞாயிறு 2026
ஜூன் 23, செவ்வாய் 2026
"நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" ( யோபு 31 : 33 )
இன்றைய தியான வசனம் பக்தனாகிய யோபு தனது கடுமையான துன்பத்தின் காரணமாக மனவேதனையுடன் கூறியதாகும்.
நமது எல்லாத் துன்பங்களுக்கும் நமது பாவங்கள் காரணமல்ல. ஆனால் பொதுவாக மனிதர்கள் தங்களது துன்பங்களுக்கு தங்கள் செய்த பாவமே காரணம் என பலவேளைகளில் எண்ணுகின்றனர். தேவன் மனிதர்களைச் சோதித்தறிய; அவர்களைப் புடமிட துன்பங்களைக் கொடுப்பதுண்டு. இதனை யோபுவும் அறிவார். எனவேதான் அவர், "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்". (யோபு 23:10) என்று கூறினார்.
ஆனால் இன்றைய தியான வசனத்தில் அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. அடுக்கடுக்கானத் தனது துன்பங்களுக்கு ஒருவேளை தனது பாவம் காரணமாக இருக்குமோ என அவர் எண்ணினார். யோபு தனது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுபவர். எனவே தொடர்ந்த துன்பங்களால் மனம் துவண்டு அவர் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். மட்டுமல்ல, யோபு தனது பாவங்களுக்காக மட்டுமல்ல, தனது பிள்ளைகளின் பாவங்களுக்காகவும் பரிகாரம் செலுத்துபவர்.
இதனை நாம், யோபுவின் புதல்வர்கள் விருந்து கொண்டாடும்போது, "விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்." ( யோபு 1 : 5 ) என்று வாசிக்கின்றோம்.
எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அவர், ஆண்டவரே ஏன் எனக்கு இத்தனைத் துன்பம்? நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? என்று கேட்கின்றார்.
ஆம் அன்பானவர்களே, ஆதாம் பாவம் செய்தபோது தேவனிடம் அதனை மறைத்தான். தேவன் அவனிடம் அவன் செய்த மீறுதல் குறித்துக் கேட்டபோது ஆதாம் தனது பாவத்தை ஒப்புக்கொள்ளாமல், மன்னிப்புக் கேட்காமல், "என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்." ( ஆதியாகமம் 3 : 12 ) அதாவது, தேவன் ஒரு பெண்ணை அவனுக்குக் கொடுத்ததால்தான் அவன் பாவம் செய்ததாகக் கூறுகின்றான். ஒருவிதத்தில் இது தேவனையே குற்றப்படுத்துவதுபோல இருக்கின்றது. ஆனால், நான் அப்படி எனது பாவத்தை மூடி மறைக்கவில்லையே? பின் ஏன் எனக்கு இத்தனைத் துன்பம் எனக் கேட்கின்றார் யோபு.
இன்றைய தியானம் நமக்குத் தரும் சிந்தனை இதுதான்:- நாம் யோபுவைபோல இப்படி நமது அனைத்துப் பாவங்களையும் மூடி மறைக்காமல் தேவனிடம் அறிக்கையிட்டுள்ளோமா? யோபு தேவனிடம் கேட்டதுபோல நம்மால் தேவனிடம், "நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?" என்று தைரியமாகக் கேட்கமுடியுமா?
அன்பானவர்களே, சிறிய பாவமோ பெரிய பாவமோ எதுவானாலும் மூடி மறைக்காமல் தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். வேதாகமம் நம்மை எச்சரித்து அறிவுறுத்துகின்றது, "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 )
ஜூன் 24, புதன் 2026
"தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை." ( ஏசாயா 64 : 4 )
மனிதர்களது வாழ்க்கை இந்த உலகத்துடன் முடிந்துபோகும் ஒன்றல்ல. மாறாக, இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நமக்கு நித்தியமான ஒரு வாழ்க்கை உள்ளது. இதனை நாம் கண்களால் கண்டதில்லை. அந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனால் இவை வேதாகமம் கூறும் உண்மை. இன்று இவைகளைக்குறித்து நாம் பேசும்போது பல கிறிஸ்தவர்களே இவற்றை வேடிக்கையாக எண்ணுகின்றனர்; கட்டுக்கதை எனக் கருதுகின்றனர்.
ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பல வேளைகளில் இதுகுறித்துக் கூறியுள்ளார். எனவே நாம் இதனை நம்புகின்றோம். இயேசு கிறிஸ்துவுக்கு பொய்ச்சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர் தான் கண்டவற்றையும், கேட்டவற்றையுமே நமக்குக் கூறியுள்ளார்.
"என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 2, 3 ) என்று அவர் கூறவில்லையா?
இதனையே இன்றைய தியான வசனத்தில் ஏசாயாவும், "தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை" என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, இப்படி ஒரு நித்திய வாழ்வு இல்லையானால் நாம் இந்த உலகத்தில் நல்ல ஒரு வாழ்க்கை வாழவேண்டிய அவசியமே இல்லை. மிருகங்களைப்போல கண்டபடி வாழ்ந்து மிருகங்களைப் போலவே சாகலாம் அல்லவா?
நாம் உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை வாழாமல், ஆவிக்குரிய அனுபவங்களைப் பெறாமல் இருப்போமானால் இவைகளெல்லாம் கட்டுக்கதைகளாகவேத் தெரியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 11, 12 ) என்று கூறுகின்றார்.
மட்டுமல்ல, ஏசாயா கூறிய வார்த்தைகளையே அவர் மேற்கோளாகப் பயன்படுத்தி இதனை, "எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 2 : 9, 10 ) என்று கூறுகின்றார்.
ஆம், தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணிய மேலான ஆசீர்வாதங்களை உலக மனிதர்கள் காணாமல் இருந்தாலும் நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். எனவேதான் அந்த மேலான வாழ்க்கையினை நாம் சுதந்தரித்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றோம்.
இயேசு கிறிஸ்து வாக்களித்துள்ள இந்த நித்திய ஜீவனைக் குறித்து நமக்குள் உறுதியான விசுவாசம் ஏற்படவேண்டுமானால் முதலில் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் அவர்மேல் ஆழமான விசுவாசம் கொண்டவர்களாக வாழமுடியும். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் கட்டுக்கதையல்ல, நாம் அனுபவித்து மகிழவேண்டிய உண்மையான எதிர்கால உண்மை என்பதனை நாம் நிச்சயமாக உணர்ந்துகொள்ள முடியும்.
ஆம், "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 6 : 47 ) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. முதலில் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை வேண்டுவோம். அப்போது நமது இருதயத்தின் இருள் விலகும்; வேதாகம உண்மைகள் நமது ஆத்தும கண்களுக்குத் தெளிவாகப் புரியும்.
ஜூன் 25, வியாழன் 2026
"பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்." ( நீதிமொழிகள் 14 : 21 )
பாவம் என்பது கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு போன்ற கொடிய செயல்கள் மட்டுமல்ல, அது இருதயத்தின் வெளிப்பாடு. வஞ்சகம், பொறாமை, பகட்டு, இவைகளும் பாவமே. மட்டுமல்ல, ஒருவரது இல்லாமையினை வைத்து, அல்லது ஒருவரது பொருளாதாரக் குறைவை முன்னிட்டு நாம் அவரை அற்பமாக எண்ணுவோமானால் நாம் பாவம் செய்தவர்களாவோம். அதுபோல அத்தகைய பொருளாதாரக் குறைவிலிருக்கும் ஏழைகளுக்கு இரங்குகின்றபோது நாம் ஆசீர்வதிக்கப்படுகின்றோம்.
நாம் பேசும் வார்த்தையினால்தான் மற்றவர்களுக்கு அவமதிப்பு ஏற்படவேண்டுமென்று இல்லை. பொதுவான இடங்களில் ஒருவரை மதிக்காமல் ஒதுக்குவது, பலர் கூடியிருக்கும்போது தங்களது பணப்பெருமையினை வெளிக்காட்டிப் பேசுவது, போன்ற காரியங்களைச் செய்யும்போது நாம் பிறரை அவமதிக்கின்றோம் என்று பொருள். இது மனிதர்களது மனப்பெருமையின் வெளிப்பாடு. பெருமையுள்ளவனுக்குத் தேவன் எப்போதும் எதிர்த்தே நிற்கின்றார்.
இப்படி அற்பமாக நாம் பிறரை எண்ணிச் செயல்படுவது எப்படிப் பாவமாகின்றது என்பதனை இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார். "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 10 ) ஆம், நாம் பிறரை அற்பமாக, அவமரியாதை செய்யும்போது அவர்களது தேவதூதர்களையும் அவமதிக்கின்றோம். அவர்கள் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிப்பதால் இந்த அவமதிப்பை அவருக்கு எடுத்துச் சொல்வார்கள்.
அன்பானவர்களே, நாம் உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் தேவன் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்படுபவைகளையும் இல்லாதவைகளையுமே தெரிந்தெடுத்து உயர்த்துகின்றார். "உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) ஆம், "வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 11 ) என்று எழுகியுள்ளபடி அற்பமாக எண்ணப்பட்ட கிறிஸ்துவானவர் எல்லா முழங்கால்களும் அவருக்குமுன் முடங்கும்படிக்கு உயர்த்தப்பட்டார்.
இன்றைய தியான வசனம் மேலும், "தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்" என்று கூறுகின்றது. அதாவது ஏழைகளுக்கு நாம் இரங்கி உதவும்போது அந்தச் செயலை தேவன் பார்த்து நமக்கு இரங்குகின்றார். "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" ( நீதிமொழிகள் 19 : 17 ) என்று நாம் வாசிக்கவில்லையா?
பிறரை சொல்லினாலும் செயலினாலும் அவமதிக்காமல் இருப்பது, நம்மிடையே வசிக்கும் ஏழைகளுக்கு உதவுவது இவை இரண்டும் வெவ்வேறான காரியங்களல்ல. இரண்டும் ஒன்றுதான். நம்மிடையே வாழும் மற்றவர்களை நாம் அவமதிக்காமல் இருப்போமானால் அதுவும் ஏழைகளுக்கு உதவுவது போன்ற செயலே. எனவேதான் இன்றைய தியான வசனம் இவை இரண்டையும் சேர்த்துக் கூறுகின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நமது ஜெபங்களை தேவன் கேட்கவேண்டுமானால் நாம் மற்றவர்களால் அவமதித்துப் புறம்தள்ளப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது, "கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 31 ) என்று கொர்நேலியுவுக்குக் கூறியதுபோல தேவன் நம்மிடமும் கூறி நமது ஜெபங்களை அங்கீகரிப்பார்.
"ஆதவன்" தியானம் - 1966
ஜூன் 26, வெள்ளி 2026
"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." ( ஆமோஸ் 5 : 14 )
கர்த்தர் நம்மோடு இருப்பதே மேலான ஆசீர்வாதம். அப்படிக் கர்த்தர் நம்மோடு இருக்க நாம் என்னச் செய்யவேண்டும் என்பதே இன்றைய தியானம் தரும் செய்தி.
பலரும் ஜெபம், வழிபாடு, தினமும் வேதாகமத்தை வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வது, காணிக்கைகள் கொடுப்பது இவைகளே கிறிஸ்தவ வாழ்வு என எண்ணிக்கொண்டிருக்கின்றனர். இப்படிச் செய்வதால் கர்த்தர் நம்மோடு இருப்பார் என்றும் நினைத்துக்கொள்கின்றனர். இப்படியே பல ஊழியர்களும் மக்களுக்குப் போதிக்கின்றனர். எனவேதான் தினசரி அதிகாலையில் எழுந்து ஜெபிக்கவேண்டும், தினமும் வேதாகமத்தின் ஒரு அதிகாரத்தையாவது வாசிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் இவை மட்டும் ஒரு கிறிஸ்தவனுக்குப் போதுமானதல்ல.
அன்பானவர்களே, இப்படி மேற்படி எல்லா பக்திமுயற்சிகளையும் செய்துவிட்டு நாம் அன்றாட வாழ்க்கையில் நன்மையானவற்றைச் செய்யாமல் இருப்போமானால் அதனால் பலனில்லை. அதாவது, சுருக்கமாகச் சொல்வதானால் நமது வாழ்க்கை ஒரு சாட்சியுள்ள வாழ்க்கையாக இருக்கவேண்டியது அவசியம். இப்படி வாழ்வோமானால் நாம் எண்ணுகின்றபடி சேனைகளின் தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பார். இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?" ( 1 பேதுரு 3 : 13 ) என்று கேட்கின்றார். நாம் நன்மையானவற்றைச் செய்யும்போது கர்த்தர் நம்மோடு இருப்பார். நமக்கு எதிராக யாரும் தீங்கு செய்ய முடியாது.
மட்டுமல்ல, அப்போஸ்தலரான பவுல், "உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்." ( ரோமர் 12 : 9 ) என்று கூறுகின்றார். பிறரிடம் அன்பு செலுத்துவதுபோல பேசுவது மட்டுமல்ல, நாம் செயலிலும் அப்படி அன்புள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி வாழ்வதுதான் மாயமற்ற அன்புடன் வாழ்வது.
நாம் நன்மையைத் தேடுகின்றவர்களாக இருப்போமானால் நாம் எல்லோரோடும் மகிழ்ச்சியாக இருப்பவர்களாக, நல்மனம் உள்ளவர்களாக, ஒரே உள்ளதோடு பழகுபவர்களாக, எல்லோருடனும் சமாதானத்துடன் வாழ்பவர்களாக இருப்போம். இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார் ( 2 கொரிந்தியர் 13 : 11 ) என்று கூறுகின்றார்.
மட்டுமல்ல, இன்றைய தியான வசனம், நித்தியஜீவனுக்கு ஏற்புடையவர்களாக நாம் பிழைத்திருக்கும்படியான அறிவுரையாகவும் இருக்கின்றது. ஆம் அன்பானவர்களே, நித்தியஜீவனை நாம் அடையவேண்டுமானால் தீமையை அல்ல, நன்மையைத் தேடுபவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். நாமும் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாக இருப்போம்.
பக்தி முயற்சிகள் நல்லவைதான் ஆனால் அவை மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. ஒரு மனிதனுக்கு இரண்டு கண்களும் அவசியம். வெறும் பக்திக் செயல்பாடுகள் மட்டும் நம்மிடம் இருக்குமானால் நாம் ஒற்றைக்கண்ணர்களாகவே இருப்போம்.
"ஆதவன்" தியானம் - 1967
ஜூன் 27, சனி 2026
"நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்." ( ஓசியா 2 : 19, 20 )
தேவனுக்கும் நமக்குமான உறவு திருமண உறவு போன்றது; அது உண்மையான கணவன் மனைவி அன்பு போன்றதாக இருக்கவேண்டியது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இதனிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." ( எபேசியர் 5 : 31, 32 ) என்று கூறுகின்றார். மேலும் தேவன் மேல் நாம் கொள்ளும் அன்பு உண்மையான காதலர்களின் உறவுபோல கள்ளமில்லாத அன்புறவு உள்ளதாக இருக்கவேண்டியது அவசியம். இதனையே உன்னத சங்கீதங்களில் நாம் வாசிக்கின்றோம்.
ஆம் அன்பானவர்களே, இப்படி அவர்மேல் உண்மையான அன்புள்ளவர்கள்தான் தேவனை வாழ்வில் அறியமுடியும். இத்தகைய "அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." ( 1 யோவான் 4 : 8 ) என்று அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார்.
இத்தகைய தேவ அன்புடன் வாழ்பவர்களைப் பார்த்துத்தான் இன்றைய தியான வசனத்தில் தேவன், நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய் என்று கூறுகின்றார்.
ஆம் கர்த்தர் நம்மை அவருக்கு மணவாட்டிகளாக நியமித்துக்கொள்வேன் என்கின்றார். இந்த உலகத்தில் ஒரு செல்வந்தனான வாலிபன் ஒரு ஏழைப் பெண்ணை மணமுடிக்க தெரிந்துகொள்கின்றான் என்றால் அது அவளுக்கு எத்தனை மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். இதுபோலவே நாம் பாவத்தின் கொடூரத்தில் சிக்கி ஆத்துமாவில் ஏழையாகிப்போனவர்கள். நம்மை இந்த சர்வ லோகத்தையும் படைத்து ஆளும் தேவன் தனக்கு மணவாட்டிகளாகத் தெரிந்துகொள்கின்றாரென்றால் அது எத்தனை மகிழ்ச்சியான காரியம்!!
இப்படி, "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." ( 1 யோவான் 4 : 19 ) ஆம், முந்தி நம்மேல் அவர் அன்புகொண்டதால்தான் நமக்காகச் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் நாம் இன்னும் அவர்மேல் முழுமையான அன்பு செலுத்தாமல் உலக ஆசீர்வாதங்களுக்காகவே அவரைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். எனவேதான் அப்போஸ்தலரான யோவான் நம்மை எச்சரித்துக் கூறுகின்றார், "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை." ( 1 யோவான் 2 : 15 )
நம்மை நித்திய விவாகத்துக்கென்று அவர் தெரிந்தெடுத்துள்ளார். நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் நம்மைத் தமக்காக நியமித்துக்கொள்ளுவேன் என்கின்றார். ஆனால் நாமோ அவரை அன்பு செய்யாமல் அவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என உலக ஆசீர்வாதங்களைத்தேடி அலைந்துகொண்டிருக்கின்றோம். அதாவது இப்படி நாம் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே அவரிடம் எதிர்பார்ப்போமென்றால் அவரை நாம் உண்மையாக அன்பு செய்யவில்லை என்று பொருள். இப்படி இருப்போமானால் நாம் இறுதிவரை கர்த்தரை வாழ்வில் அறிந்துகொள்ளாதவர்களாகவே மரிப்போம்.
எனவே அன்பானவர்களே, கர்த்தரை உண்மையாக அன்பு செலுத்தி அவரிடம் உண்மையான அன்புடன் வாழ்வோம். இப்படி அவர்மேல் அன்பில்லாதவன் தேவனை அறியான்.
"ஆதவன்" தியானம் - 1968
ஜூன் 28, ஞாயிறு 2026
"இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" ( 1 யோவான் 5 : 5 )
உலகத்தை ஜெயித்தல் அல்லது உலகத்தை வெற்றிகொள்ளுதல் என்பது பல பெரிய மன்னர்களின் ஆசையாக இருந்தது. அவர்கள் உலகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன்மூலம் உலகத்தின் தலைவராக உருவாக விரும்பிச் செயல்பட்டனர். மாவீரன் அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், நெப்போலியன் போனபாட், அடால்ப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் போன்றவர்கள் இதற்கு ஒருசில உதாரணங்கள். உலகை வெற்றிகொள்ளவேண்டும் எனும் இந்த மனிதர்களின் வெறியால் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் தாங்கள் எண்ணியபடி இவர்களால் உலகத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. அனைவருமே அகால மரணமடைந்தார்கள்.
ஆனால், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது அன்பினால் மொத்த உலகத்தையே வெற்றிகொண்டார். இன்று இரண்டாயிரத்து இருபத்தாறு ஆண்டுகளைக் கடந்தும் இயேசு கிறிஸ்து மன்னராக பலகோடி உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார் என்று வேதம் கேள்வி எழுப்புகின்றது. ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவன் அவரைப்போல உலகத்தை வெற்றிகொள்ள முடியும்.
உலகத்தை வெற்றிகொள்வது என்பது அழிந்துபோன மேற்குறிப்பிட்ட சர்வாதிகாரிகள் எண்ணியதுபோல மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்துவதல்ல; மாறாக, அன்பினால் மக்களது உள்ளத்தை நம்வசப்படுத்துவது. இந்த உலகத்தில் நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள பாவத்தை மேற்கொள்வது. சாத்தானின் வல்லமையினை மேற்கொள்வது. உதாரணமாக, அன்னை தெரேசா அன்பினால் உலகத்தை ஜெயித்தவர். பல பரிசுத்தவான்கள் பாவத்தை வென்று வாழ்ந்துள்ளனர்; சாத்தானை வென்று அவனது பிடியிலிருந்து மக்களை விடுத்துள்ளனர்.
இத்தகைய உலகத்தை வெல்லும் அனுபவத்தையே வேதாகமம் நமக்கு மெய்யான வெற்றியாகக் கூறுகின்றது. இப்படி உலகத்தை வெல்லவேண்டுமானால் நாம் இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கவேண்டியதும் அவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கவேண்டியதும் அவசியம்.
மேலும் உலகத்தை ஜெயித்திட நாம் முதலில் செய்யவேண்டியது மற்றவர்களை அழிக்கவேண்டியது அல்ல; மாறாக நம்மை அழிக்க, அல்லது இழக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இப்படித் தன்னை இழக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்துவது நமக்கு இலாபமல்ல, நஷ்டமே. எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" ( லுூக்கா 9 : 24, 25 )
மேலும், உலகத்தை ஜெயிக்கவேண்டுமானால் நமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் மறுபடி பிறக்கவேண்டும். இப்படி நாம் மறுபடி பிறக்கும்போது "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்." ( 1 யோவான் 5 : 4 ) என்று கூறியுள்ளபடி தேவனால் மறுபடி பிறந்து அந்த விசுவாசத்தினால் நாம் உலகத்தை ஜெயிக்கமுடியும்.
இறுதியாக, இப்படி தேவன்மேல் கொள்ளும் விசுவாசத்தினால் மறுபடி பிறந்தவர்கள் மறுவுலகில் தேவனுடைய ராஜ்ஜியத்தையும் சுதந்தரித்துக்கொள்ளமுடியும். "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" ( யோவான் 3 : 3 ) இயேசு கிறிஸ்து.
ஆம் அன்பானவர்களே, இதுதான் கிறிஸ்தவம் காட்டும் உலகத்தை ஜெயித்தல். இதற்குப் பெரிய உடல் வலிமை தேவையில்லை. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் முழுமையான விசுவாசம் கொண்டாலே போதும்.
"ஆதவன்" தியானம் - 1969
ஜூன் 29, திங்கள் 2026
"உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்." ( 1 யோவான் 1 : 4 )
இந்த உலகத்தில் பல்வேறுவித இன்பங்கள் உள்ளன. மனிதர்கள் தங்களிடமுள்ள பணத்தைச் செலவழித்து அந்தப் பூலோக இன்பங்களை அடைந்துகொள்ள ஆசைப்படுகின்றனர். இதற்காக எவ்வளவு அதிகமானப் பணச்செலவையும் செய்ய மனிதர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் குறுகியகால அந்த இன்பங்கள் இறுதியில் மனிதர்களது உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து அவர்களைத் துன்பத்துக்குள்ளாக்குகின்றன. எனவேதான் இத்தகைய பூலோக இன்பங்களை "சிற்றின்பங்கள்" என்று கூறுகின்றோம். மது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது, பாலியல் சம்பந்தமான செயல்பாடுகள் இவை சிற்றின்பத்துக்கு உதாரணங்கள்.
இத்தகையச் சிறியகால சிற்றின்பங்களுக்கு மாற்றாக பேரின்பங்கள் உண்டு. அதனை பணமின்றி பெறமுடியுமென்றாலும் பலரும் அவற்றுக்கு ஆசைப்படுவதில்லை.
இதுவரை உலகத்தில் நாம் கண்டிராத ஒரு பொருளைக் கண்டுபிடித்துவிட்டோமானால் நமக்கு அது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். அதனை நாம் உடனேயே எல்லோரிடமும் அறிவிக்கவேண்டும் என்று ஆசைப்படுவோம். இதுதான் மனித இயல்பு. அப்போஸ்தலரான யோவான் அப்படி ஒன்றினைக் கண்டுபிடித்துவிட்ட நிறைவான மகிழ்ச்சியில், இன்றைய தியான வசனத்தைக் கூருகின்றார். அதுதான் பேரின்பத்தை அடையும் வழி. எனவேதான் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம் என்கின்றார்.
இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் தானும் தன்னோடிருக்கும் மற்ற அப்போஸ்தலர்களும் அதனை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதனை அவர் கூறுகின்றார். ஆம், "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." ( 1 யோவான் 1 : 3 )
அதாவது, பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் நெருங்கிய உறவு கொண்டுள்ளதால் அந்த மகிழ்ச்சியைக் கண்டுகொண்டோம் என்கின்றார். அதுபோல, நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம் என்கின்றார் அவர். இதுதான் மெய்யான மேலான சுவிசேஷ அறிவிப்பு. எனவே அப்போஸ்தலரான யோவான் இவற்றை சுவிசேஷமாக எழுதினார். ஆம், "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." ( யோவான் 20 : 31 ) என்கின்றார் அவர்.
ஆம் அன்பானவர்களே, நித்திய ஜீவனின் காரணனான இயேசு கிறிஸ்துவைக் கண்டுகொள்வதே அந்தப் பேரின்ப மகிழ்ச்சி. அதனைப் பிறருக்கு அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்பு. பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொள்வதால் மட்டுமே அந்த மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும். இதனால்தான், "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறினார்.
அதனையே அவருடைய அப்போஸ்தலரான யோவான், எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது என்று கூறுகின்றார். மட்டுமல்ல, உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம் என்று கூறுகின்றார். நிறைவான சந்தோசம் நமக்கு வேண்டுமா இல்லை குறுகியகால சிற்றின்ப சந்தோசம் நமக்குப் போதுமா என்று முடிவெடுக்கவேண்டியது நாம்தான்.
எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது; எங்களது சந்தோசம் அதில்தான் இருக்கின்றது என்று முடிவெடுப்போமானால் நமக்கு நித்தியஜீவன் உண்டு. இல்லையானால் நாம் உலகத்தில் எவ்வளவு இன்பத்தை அனுபவித்தாலும் அவையெல்லாம் பயனற்றவைகளாகவே இருக்கும்.
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 📞 96889 33712 & 76390 22747
"ஆதவன்" தியானம் - 1970
ஜூன் 30, செவ்வாய் 2026
"இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?" ( எரேமியா 2 : 18 )
தேவனால் மீட்கப்பட்ட நாம் நமது பழைய பாவ அடிமைத்தனங்களுக்குத் திரும்பக்கூடாது என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. மட்டுமல்ல, இந்த வசனத்தின்மூலம் தேவனது பாதுகாப்பைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, மனித பலத்தையும் அரசியல் தந்திரங்களையும் நம்பியதற்காக தனது மக்களாகிய யூதாவை தேவன் கண்டிக்கின்றார். யூதாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் இந்த வசனம் எச்சரிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரவேலர்கள் எகிப்தியருக்கும் அசீரியர்களுக்கும் அடிமைகளாக இருந்தவர்கள். இந்த இரு அரசுகளும் வலிமைவாய்ந்தவை. ஆனால் இவர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்றபோதும் யூதாவை ஆட்சிசெய்த அரசர்கள் தங்களது பாதுகாப்புக்காகத் தேவைக்கேற்ப எகித்தியரையும் அசீரியர்களையும் மாறிமாறி சார்ந்துகொண்டனர். யூதா தேசம் பெரும்பாலும் இந்தப் பேரரசுகளை ஒன்றுக்கொன்று எதிராகப் பயன்படுத்திப் பாதுகாப்பைப் பெற முயன்றது. எகிப்தால் அச்சுறுத்தப்படும்போது அசீரியாவின் உதவியையும் அசீரியாவினால் அச்சுறுத்தப்படும்போது எகிப்தின் உதவிட்டையும் நாடியது.
இதனால்தான் தேவன், "நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்." ( எரேமியா 2 : 36 ) என்கின்றார். இப்படித் தேவனை விட்டு இவ்வுலக அதிகாரங்கள் அல்லது அமைப்புகள் மீது முழுமையான பாதுகாப்பைச் சார்ந்திருப்பது எப்போதும் ஏமாற்றத்திலேயே முடியும் என்பதை இவ்வசனம் கற்பிக்கிறது.
இந்த வசனம், நமது ஆன்மீக நிலைத்தன்மையைச் சோதித்துப் பார்ப்பதற்கான ஓர் அழைப்பாக அமைகிறது. விசுவாசிகளான நாம் நமது நம்பிக்கையை எதன் மீது வைத்துள்ளோம் என்பதை மதிப்பிடுமாறு இந்த வசனம் நம்மைத் தூண்டுகிறது.
தேவன் முன்னதாகவே தம்மை "ஜீவத்தண்ணீர் ஊற்று" என்று குறிப்பிட்டிருந்தார் (எரேமியா 2:13). எகிப்து அசீரியாவின் நதிகளிலிருந்து "குடிப்பதன்" மூலம், இஸ்ரவேலர்கள் தேவனுடைய தூய மற்றும் ஜீவன் தரும் வல்லமைக்கு மாற்றாக, போலியான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் முட்டாள்தனத்தைச் செய்தனர். நாம் அவ்வாறு செய்யக்கூடாது என்று இன்று நமக்கு இந்த வசனம் அறிவுறுத்துகின்றது.
இப்படி தேவனை முற்றிலும் நம்பாமல் நாம் பழைய பாவ வாழ்கைக்குத் திரும்புவதும் அல்லது பழைய பாவ நண்பர்களை நமது தேவைகேற்றப் பயன்படுத்த முயல்வதும் தேவன் வெறுக்கும் காரியம். இப்படி இருப்போமானால் தேவனது ஆசீர்வாதத்துக்குப் பதில் நமக்குத் தண்டனையே வரும் என்று இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனத்தில் தேவன் நம்மை எச்சரிக்கின்றார்.
ஆம், "உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப்பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எரேமியா 2 : 19 )
எனவே ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய தேவனை விட்டு சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்கும் ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்கும் போகாமல் இருப்போம். அப்படிப் போவதால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடப்போகிறது?
✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் 📞 96889 33712 & 76390 22747

No comments:
Post a Comment