- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
வேதாகமத் தியானம் - எண்:- 1,424
'ஆதவன்' 💚ஜனவரி 01, 2025. 💚புதன்கிழமை
"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." ( ஏசாயா 43: 18, 19)
அனைவருக்கும் ஆதவனின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
புதிய ஆண்டுக்குள் நாம் நுழைந்துள்ளோம். இனி நமது சிந்தனைகளும் எண்ணங்களும் புதியனவாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.
முந்தின நாட்களில் நாம் செய்துவந்த பாவகரமான எண்ணங்களையும் செயல்களையும் அகற்றி புதியனவற்றை சிந்திப்பவர்களாகவும் செய்பவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். நமது சிந்தனைகளும் செயல்களும் புதிதாகும்போது கர்த்தர் நமது வாழ்வில் புதிய காரியங்களைச் செய்து நம்மை ஆசீர்வதிப்பார்.
மட்டுமல்ல, ஒருவேளை கடந்த ஆண்டில் நமது வாழ்வில் சில விரும்பத்தகாத காரியங்கள் நடந்திருக்கலாம். அவைகளை எண்ணி நாம் கலங்கிக்கொண்டிருக்க வேண்டாம். "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்" என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
வேலையின்மை, அதன் தொடர்ச்சியான வறுமை, கடன் பிரச்சனைகள், தீராத நோய்கள் போன்றவை நமது வாழ்வை வனாந்தரமாக மாற்றியிருக்கலாம். வாழ்வை எப்படித் தொடர்வோம் என நாம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவன் கூறுகின்றார், "நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." என்று.
ஆம் அன்பானவர்களே, தேவனுடைய கைகள் குறுகியவையல்ல. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேரை வயிறார உண்ணச்செய்தவர் அவர். தனது கைகளை நீட்டியும் தனது வாயின் வார்த்தைகளினாலும் பல்வேறு நோய்களைக் குணமாகியவர்.
நம்பமுடியாத சூழ்நிலையிலும் எந்த நம்பிக்கையுமற்ற வேளையிலும் தேவனது கரம் நமக்கு உதவிடமுடியும். அந்த உதவியும் நாம் எதிர்பார்த்திராத வகையில் நமக்கு வந்து சேரும். எலிசா மூலம் தேவன் கூறினார், "நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (2 இராஜாக்கள் 3: 17) அதுபோலவே செய்துமுடித்தார்.
மட்டுமல்ல, எலிசா யோசாபாத்திடம் கூறினார், "இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்." (2 இராஜாக்கள் 3: 18) என்று. அதுபோலவே மோவாபியர் யோசபாத்திடம் தோல்வியுற்றனர். ஆம் அன்பானவர்களே, மோவாபியரைப்போன்று நமக்கு எதிராக இருக்கும் காரியங்கள் கர்த்தரின் அற்புதமான செயல்களினால் நமக்குச் சாதகமாக முடியும்.
எனவே இந்த ஆண்டினை நம்பிக்கையுடன் தொடங்குவோம். கர்த்தரின் வல்லமைமிக்க கரம் நம்மோடுகூட இருந்து நம்மை வழிநடத்தும். "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,425
'ஆதவன்' 💚ஜனவரி 02, 2025. 💚வியாழக்கிழமை
"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." (ஏசாயா 45: 2)
இந்தியாவில் நாம் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு காட்சி, ஆட்சியாளர்கள் வரும்போது நடைபெறும் அதிரடியான சாலைப் பராமரிப்பு. பல ஆண்டுகள் செப்பனிடப்படாமல் மக்களுக்கு இடையூறாக குண்டும் குழியுமாக இருக்கும் ன சாலைகள் முதல்வரோ பிரதமரோ வருகின்றார் என்றால் இரவுபகல் வேலை நடப்பித்து அவசரகதியில் செப்பனிடப்படும். தலைவர்கள் எந்தச் சிரமுமின்றி பயணிக்கவேண்டும் என்பதே இந்த அவசர சாலைப் பராமரிப்பின் நோக்கமாகும்.
நமது தேவன் நம் ஒவ்வொருவரையும் விலைமதிக்கமுடியாத தலைவர்களைப்போலவே பார்க்கின்றார். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார், "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." என்று. நமது வாழ்க்கைப் பயணம் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கொண்டதாக இருந்தாலும் நமக்குமுன்னே அவர் செல்வேன் என்று கூறுகின்றார்.
அன்று மோசேக்கு "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" ( யாத்திராகமம் 33: 14) என்று வாக்களித்த கர்த்தர் வாக்கு மாறாதவராகவே இருக்கின்றார். கர்த்தரது சமுகம் நமக்கு முன்பாகச் செல்லும்போது கோணலானவைகள் நேரக்கப்படும் என்பது நாம் அறியாத ஒன்றல்ல. ஆம் அன்பானவர்களே, தேவன் அன்று மோசேயை கானானுக்கு நேராக வழிநடத்தியது போலவே இன்று நம் ஒவ்வொருவரையும் பரம கானானை நோக்கி வழிநடத்தி வருகின்றார். எனவே நமக்குமுன் கோணலாக இருப்பவைகளை நேராக்கி நடத்துகின்றார்.
கோணலானவைகளை நேராக்கிவிட்டு அவர் நம்மை விட்டுவிடுவதில்லை. அவர் நம்மோடு கூடவே இருக்கின்றார். மோசேயை அடுத்து மக்களை வழிநடத்திய யோசுவாவிடம் அவர் கூறினார், "பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." ( யோசுவா 1: 9) என்று. நேர் வழியை உண்டாக்கிவிட்டு அவர் சென்று விடுவதில்லை. நம்மோடு கூடவே இருக்கின்றார். எனவே நமது வாழ்வின் இலக்கு உண்மையாகவே பரம கானானை நோக்கியதாக இருக்குமானால் நாம் பயப்படத் தேவையில்லை.
நமது இலக்கு எப்போதுமே பரம கானானை நோக்கியதாக இருக்கவேண்டியது அவசியம். அப்படி இருக்குமானால், "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 9) என அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல இருப்போம்.
இதற்கு மாறாக நமது முழு விருப்பத்தையும் உலக ஆசீர்வாதங்களின்மேலும் உலக காரியங்களை அடைவதிலும் வைத்திருந்தோமானால் இன்றைய தியான வசனம் நமது வாழ்வில் செயல்பட முடியாது. ஆம் அன்பானவர்களே, இந்த தியானத்தின் ஆரம்பத்தில் நாம் பார்த்ததுபோல தலைவர்கள் வரும்போது மட்டுமே அவர்களது பயணத்துக்கு அவசரமான சாலைப் பராமரிப்புச் செய்யப்படுகின்றது. தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது மட்டுமே தேவன் நம்மைத் தலைவர்களைப்போல சிறப்பாக நடத்துவார்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,426
'ஆதவன்' 💚ஜனவரி 03, 2025. 💚வெள்ளிக்கிழமை
"பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்." ( கலாத்தியர் 5: 16)
இன்று கிறிஸ்தவர்களில் பலர்கூட பரிசுத்த ஆவியானவரைக் குறித்து அதிகம் அறியாமலும் தவறான எண்ணம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். காரணம் ஆவியானவரைக்குறித்து சரியான போதனை அவர்களுக்குக் கொடுக்கப்படாததும் அவரைக்குறித்து அறிய மனமில்லாமையும்தான். முதலில் நமக்கு ஆவியானவரை அறியவேண்டும் எனும் எண்ணமும் அவரை நம்மில் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியம்.
இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம் கூறினார், "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14: 17)
இன்றைய தியான வசனம் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. ஆவியானவரை நாம் அறிந்து பெற்றுக்கொண்டால் மட்டுமே அவரது விருப்பப்படி நாம் நடக்கமுடியும். அப்படி அவர் நம்மை நடத்தும்போது மட்டுமே நாம் பாவ காரியங்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அப்போஸ்தலரான பவுல், "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்." ( ரோமர் 8: 5) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் ஆவியின்படி நடக்கும்போதுதான் நமது சிந்தனைகள் ஆவிக்குரியதாக மாறும்.
அதாவது, மாம்சத்துக்குரிய எண்ணம் (ஊனியல்புக்கு உட்பட்ட எண்ணங்கள்) நம்மில் இருக்குமானால் நாம் அவற்றின்படியே நடப்போம். அது பாவத்துக்கு நேராக நம்மை நடத்தும். ஆனால் ஆவிக்குரியவர்களாக நாம் இருப்போமானால் நமது எண்ணங்களும் செயல்களும் ஆவிக்குரியதாக இருக்கும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களா யிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.
"கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." என்று வேத வசனம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது. இதன் பொருள் என்னவென்றால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்களல்ல; மாறாக தேவனுடைய ஆவியைப் பெற்றவர்கள் மட்டுமே கிறிஸ்தவர்கள்.
இன்று சில கிறிஸ்தவ சபைகளில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள சில சடங்கு முறைகளைக் கைக்கொண்டு வருகின்றனர். அவர்கள் கூறுவதுபோல திடப்படுத்தும் அருட்சாதனம் என்று ஆயர்கள் நம்மீது கைவைத்து ஜெபிப்பதால் நாம் ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆவியின் அபிஷேகம் ஒரு உன்னதமான அனுபவம். அது தேவனே அருளும் ஒரு கொடை.
இந்த ஆவியானவரை அனுபவபூர்வமாக நாம் நம்மில் பெற்றுக்கொள்ளும்போதுதான் நாம் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ள முடியும். அப்போதுதான் நாம் மாம்ச இச்சையை நிறைவேற்றாமலிருப்போம். ஆம் அன்பானவர்களே, "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." எனும் வார்த்தைகளை மறந்துவிடவேண்டாம். இதுவரை ஆவியானவரைக்குறித்து தவறான எண்ணங்கள் இருக்குமானால் அதனை மாற்றி ஆவியானவரை வாழ்வில் பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம்.
"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்". (ஏசாயா 44:3) என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,427
'ஆதவன்' 💚ஜனவரி 04, 2025. 💚சனிக்கிழமை
"உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." ( ஏசாயா 55: 3 )
தேவனது வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கவேண்டுமென்றும் அப்படி தேவ வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதால் வரும் நன்மைகளைப்பற்றியும் இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
இன்று மனிதர்கள் கடவுளுக்கென்று பல்வேறு காரியங்களைச் செய்கின்றனர். ஆலயங்களுக்கு அதிக காணிக்கைகளைக் கொடுக்கின்றனர். சிலர் தங்களது கோரிக்கைகள் நிறைவேறினால் கடவுளுக்கு பல்வேறு பொருட்களையும் பணத்தையும் காணிக்கை தருவதாக பொருத்தனை செய்கின்றனர். ஆனால் இன்றைய தியான வசனம் இவைகளைவிட முதலில் நாம் நமது செவிகளை அவர் வார்த்தைகளைக் கேட்பதற்குத் திருப்பவேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
"கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." (1 சாமுவேல் 15: 22) என்று சவுல் ராஜாவுக்கு சாமுவேல் அறிவுறுத்தியதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.
இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதி கர்த்தருக்குச் செவிகொடுப்பதால் ஏற்படும் நன்மை என்ன என்பதனை விளக்குகின்றது. அதாவது, அப்படி தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும்போது "உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." என்கின்றார் தேவனாகிய கர்த்தர்.
கர்த்தரது வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும்போது நமது ஆத்துமா மரணத்துக்குத் தப்பித் பிழைக்கும். மட்டுமல்ல, தேவனது கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ளும். அதுவும் தாவீதுக்கு தேவன் அருளிய நிலையான நித்திய கிருபையைப்போல தேவ கிருபை நம்மைச் சூழ்ந்துகொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. தாவீது பல்வேறு சமயங்களில் தேவனுக்கு ஏற்பில்லாத காரியங்களைச் செய்திருந்தாலும் தேவன் அவரைத் தள்ளிவிடவில்லை. காரணம் தாவீதோடு தேவன் செய்த உடன்படிக்கை நித்தியமானது; நிலையானது. மட்டுமல்ல தாவீதின் சந்ததியே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டது. தேவ குமாரனான கிறிஸ்து அவரது வழிமரபில் வந்து பிறந்தார்.
அதுபோல நாம் தேவ வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும்போது தேவன் நம்மேலும் நமது குடும்பத்தின்மேலும் அவரது கிருபை நிழலிடும்படிச் செய்வேன் என்கின்றார். செவிகொடுத்தல் என்பது வெறுமனே தேவ வசனத்தைக் கேட்பதை மட்டும் குறிக்கவில்லை; மாறாக, கேட்ட வசனத்தின்படி நமது வாழ்க்கையினை மாற்றி அமைத்துகொள்வதைக் குறிக்கின்றது. "அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்." ( யாக்கோபு 1: 22) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.
தேவனது வார்த்தைகளுக்குச் செவிகொடுத்துக் கேட்டு அதனை வாழ்வாக்குவோம். அப்போது கர்த்தர் நித்திய கிருபையினால் நம்மையும் நமது சந்ததிகளையும் ஆசீர்வாதமாக வாழவைப்பார்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,428
'ஆதவன்' 💚ஜனவரி 05, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" (1 யோவான் 5 : 5)
உலகத்தை ஜெயித்தல் என்பதற்கு பலரும் பல்வேறு பொருள் கொள்ளலாம். அரசர்கள் பலர் மொத்த உலகத்தையும் தங்கள் ஆட்சிக்கு உட்படுத்துவதையே உலகத்தை ஜெயிப்பதாக எண்ணிக்கொண்டனர். மகா அலெக்சாண்டர், நெப்போலியன் போன்றவர்கள் இப்படி எண்ணி வாழ்ந்தவர்களே. இதுபோல, விளையாட்டுகளில் ஈடுபாடுகொண்டவர்கள் உலக சாம்பியன் ஆவதையே உலகினை ஜெயிப்பதாக எண்ணுகின்றனர். திரைப்பட வல்லுநர்கள் ஆஸ்கர் விருது பெறுவதையும் அழகிகள் பிரபஞ்ச அழகி விருது பெறுவதையும் உலகினை வெல்வதாகக் கருதுகின்றனர்.
ஆனால் வேதாகம அடிப்படையில் உலகினை ஜெயித்தல் என்பது உலகில் நாம் பாவங்களை வென்று வாழ்வதைக் குறிக்கின்றது. பாவங்களை மேற்கொண்டு வாழ்வது மற்ற எந்த உலக சாதனைகளையும்விடக் கடினமானது. ஆனால் கிறிஸ்து இயேசுவை நாம் பற்றிக்கொள்ளும்போது அதுவே எளிதாகின்றது. இதனையே இயேசு கிறிஸ்து, "என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்". (மத்தேயு 11:30)
இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு வாழ்வோமானால் அவர் உலகினை ஜெயித்ததுபோல நம்மையும் ஜெயிக்கவைப்பார். பாவம் மட்டுமல்ல, இந்த உலகத்தின் உபத்திரவங்கள், பிரச்சனைகள் இவைகளையும் இயேசு வெற்றிகொண்டார். அதுபோல அவரை விசுவாசிக்கும்போது நாமும் அவற்றின்மேல் வெற்றிகொண்டவர்களாக வாழ முடியும். எனவேதான் அவர் கூறினார், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." ( யோவான் 16: 33)
இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்வது என்பது வெறுமனே அவரை ஆராதிப்பதல்ல; மாறாக நமக்காக அவர் சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து உண்டாக்கிய மீட்பினை நாம் விசுவாசித்து அதனை நமது வாழ்வில் பெற்று அனுபவிப்பது. அப்போதுதான் நாம் இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவர்களாவோம். ஏனெனில் பிதாவாகிய தேவன் அதற்காகவே அவரை பூமியில் அனுப்பினார். அந்தப் பெரியவராம் கிறிஸ்துவையும் அவரது மீட்பினையும் ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான் நாம் அவரது மெய்யான விசுவாசிகள் ஆகின்றோம்.
எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்." (1 யோவான் 4 : 4) ஆம், நம்மில் இருக்கிறவர் பெரியவர். அவர்மேல் விசுவாசம் கொண்டவர்களாக நாம் வாழும்போது நாம் உலகினை வெற்றிகொண்டவர்களாக மாறமுடியும். "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?."
வேதாகமத் தியானம் - எண்:- 1,429
'ஆதவன்' 💚ஜனவரி 06, 2025. 💚திங்கள்கிழமை
"கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9: 6)
பலரும் தவறாமல் ஆலயங்களுக்குச் சென்று ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டாலும் ஆலய காரியங்களில் முனைப்புடன் செயல்பட்டாலும் தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்களோ ஆலய காரியங்களில் தாங்கள் முனைப்புடன் ஈடுபடுவதால் தங்களைத் தேவனை அறிந்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர்.
தேவனை வாழ்க்கையில் அறிந்து அவரது அன்பை ருசித்தவர்கள் மற்ற மனிதர்கள் எல்லோரும் தங்களைப்போல தேவனை அறிந்தவர்களாக மாறவேண்டுமென்று ஜெபிக்கின்றனர்; நற்செய்தியை அறிவிக்கின்றனர். ஆனாலும் பெரும்பாலான மக்கள் சுவிசேஷ சத்தியங்களுக்குச் செவிகொடுப்பதில்லை. உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனை நோக்கி ஜெபித்து பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வேண்டுதல்கள் செய்து கொண்டிருக்கின்றனர்; தங்களது வாழ்வில் மெய்யான தேவனை அறியாதிருக்கின்றனர்.
இதற்குக் காரணம் என்ன என்பதனை தேவன் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, "கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள்" என்கின்றார் தேவன். கபடம் என்பது உள்ளொன்று வைத்து வெளியொன்றை பேசும் செயலைக் குறிக்கின்றது. இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து தேவன் கூறுகின்றார்:- "அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன்தன் அயலானோடே தன்தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான்." ( எரேமியா 9: 8)
அதாவது நேரில் ஒருவரைப் பார்க்கும்போது அவர்களுக்கு நல்லவர்கள்போலவும் அவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துசென்றபின் அவர்களைக்குறித்து அவதூறாகப் பேசுவதும்தான் கபடம். இப்படிக் கபட குணம் இருப்பதால் தேவன் அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தவில்லை என்கின்றார். ஆம் அன்பானவர்களே, தேவன் மனிதர்கள் சுத்த எண்ணம் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்.
வேத வசனங்களை வாசிக்கும்போதோ மற்றவர்கள் அவைகளைப் பேசும்போதோ நமது இருதயத்தில் அது நமது தவறை உணர்த்துமானால் நாம் அவற்றைத் திருத்திக்கொள்ளவேண்டும். ஒரு முறை எனக்குத் தெரிந்த, என்னிடம் நன்கு பேசக்கூடிய ஒருவர் எனது நண்பரொருவரிடம், "ஜியோ தனது "ஆதவன்" தினசரி தியானங்களில் மறைமுகமாக என்னைக் குறித்து எழுதுகின்றார். அது எனக்கு கஷ்டமாக இருக்கின்றது" என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நான் அப்படி எழுதுவதில்லை. தேவனது வார்த்தைகள் அவரது உள்ளத்தில் அவரது தவறை உணர்த்தியுள்ளன, அவரோ தவறாகவே புரிந்துகொண்டு என்னைக் குற்றப்படுத்துகின்றார். ஆனாலும் என்னிடம் பேசும்போது அதனை மறைத்து நான் எழுதும் தியானங்களைப் பாராட்டுகின்றார்.
தேவன் நேரடியாக வந்து மனிதர்களிடம் உன்னைத் திருத்திக்கொள் என்று கூறமாட்டார். வசனங்கள் வழியாக ஏதோ முறையில் மனிதர்களுடன் இடைப்படுவார். அதனை உணர்ந்து நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும். இன்றைய தியான வசனம் அறிவுறுத்துவதன்படி கபட குணம் நம்மிடம் இருக்குமானால் நம்மை நாம் திருத்திக்கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்து கூறினார், "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.' ( மத்தேயு 5: 37) என்று. கபடமில்லாத மனிதன் உள்ளதை உள்ளபடி பேசுபவனாக இருப்பான்.
இத்தகைய இருதய சுத்தமுள்ளவர்களே தேவனை வாழ்வில் அறிய முடியும். அவர்களுக்குத் தேவன் தன்னை வெளிப்படுத்துவார். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5: 8)
வேதாகமத் தியானம் - எண்:- 1,430
'ஆதவன்' 💚ஜனவரி 07, 2025. 💚செவ்வாய்க்கிழமை
"கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." ( எரேமியா 14: 7)
இந்த உலகத்தில் பிறந்துள்ள யாரும் முற்றிலும் தன்னைப் பரிசுத்தன் என்று கூறிக்கொள்ள முடியாது. மனிதர்கள் நாம் மனித பலவீனத்தால் பல்வேறு பாவ காரியங்களில் விழுந்து விடுகின்றோம். ஆனால் பாவத்தில் நாம் விழுந்துவிட்டாலும் பாவத்திலேயே மூழ்கி கிடப்பதுதான் தேவன் அருவெறுக்கும் காரியம். பாவத்தில் விழுந்துவிடும்போது அப்படியே கிடைக்காமல் நாம் மீண்டு எழுந்து வருவதையே தேவன் விரும்புகின்றார்.
அப்போஸ்தலரான பேதுரு இயேசு கிறிஸ்துவிடம் ஆண்டவரே என் சகோதரன் எனக்கு எதிராக குற்றம் செய்தால் நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? எழுதரமா ? என்று கேள்வி கேட்டபோது அவருக்கு மறுமொழியாக இயேசு, "ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18: 22) என்றார். மனிதர்களாகிய நம்மையே இப்படி மன்னிக்கும்படி அறிவுறுத்திய தேவன் நம்மை மன்னியாதிருப்பதெப்படி? எனவே பாவத்தில் விழும்போதெல்லாம் அவரிடம் நாம் மன்னிப்பை வேண்டிடவேண்டும்.
தேவனிடம் நாம் கடமைக்காக அல்ல; மாறாக, உள்ளன மனத்துடன் மன்னிப்புக் கேட்கவேண்டியது அவசியம். அப்படியே இன்றைய தியான வசனத்தில் எரேமியா தேவனிடம் மன்றாடுகின்றார். "எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." என்கின்றார் அவர். இதுபோலவே தாவீது ராஜாவும் விண்ணப்பம் செய்வதை நாம் வேதாகமத்தில் வாசிக்கலாம். "தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்." ( சங்கீதம் 51: 1) என மன்றாடுகின்றார் அவர். "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51: 3) என அறிக்கையிட்டார்.
நாம் வாழ்வடைந்து சிறக்கவேண்டுமானால் நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவது அவசியமாய் இருக்கின்றது. "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28: 13) என்று வேதம் கூறவில்லையா?
அப்போஸ்தலரான பவுல், "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்." (1 தீமோத்தேயு 1: 15) என்று தன்னைப் பாவிகளில் பிரதான பாவி என்று அறிக்கையிடுவதை நாம் வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, இப்படியிருக்க நாம் நம்மை நீதிமான்கள் என்று எப்படிக் கூறிக்கொண்டிருக்கமுடியும்?
நமது வாழ்வில் சிறு வயதுமுதல் நாம் தேவனுக்கு விரோதமாகச் செய்த பாவ காரியங்களை எண்ணிப்பார்ப்போம். அவற்றை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிடுவோம். "உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." என்று தேவனது கிருபைக்காக விண்ணப்பம் செய்வோம். அவரே நம்மைக் கழுவி இரட்சிப்பின் சந்தோஷத்தினால் மகிழச்செய்வார். "குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான் 1 : 7)
வேதாகமத் தியானம் - எண்:- 1,431
'ஆதவன்' 💚ஜனவரி 08, 2025. 💚புதன்கிழமை
"ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." ( ஆபகூக் 3: 19)
கர்த்தரோடு நடக்கப்பழகியவர்கள் எந்த எதிர்மறையான சூழலிலும் நம்பிக்கை இழக்காமல் இருப்பார்கள். தங்களுக்கு இருக்கும் அனைத்தையும் இழந்தாலும் விசுவாசத்தை இழக்கமாட்டார்கள். இதற்கு யோபு நமக்கு மிகப்பெரிய உதாரணமாக இருக்கின்றார். யோபு தனக்கு இருந்தவை அனைத்தையும் இழந்தார்; ஆனால் விசுவாசத்தை இழக்கவில்லை.
இன்றைய தியான வசனத்தில் ஆபகூக் தீர்க்கதரிசி கூறுவது யோபு கூறுவதற்கு இணையானது. ஏனெனில் இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனங்களில் அவர் கூறுகின்றார், "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக் 3: 17, 18)
யோபு கூறுவதற்கும் ஆபகூக் கூறுவதற்கும் சிறிய வித்தியாசம் உண்டு. யோபு இருந்தவை அனைத்தையும் இழந்தும் விசுவாசத்துடன் இருந்தார். ஆனால் ஆபகூக், தனக்கு எல்லாம் இருந்தும் தனக்குரியவைகள் எந்த பலனையும் தராமல் போனாலும் தேவன்மேலுள்ள நம்பிக்கையை இழக்காமல் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கின்றார். தான் செல்வங்கள், சொத்துக்கள் என்று கருதும் அத்திமரம், திராட்சைச்செடி, ஒலிவமரம், வயல்கள், ஆட்டுமந்தைகள், மாடுகள் இவை எதுவும் பலன்தராமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கின்றார் அவர்.
மட்டுமல்ல, "ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." என்கின்றார். அதாவது எனக்கு உரிய சொத்து சுகங்களை நான் பெலனாகக் கருதவில்லை, தேவனையே பெலனாகக் கருதுகின்றேன், எனவே அவர் என்னைக் கைவிடமாட்டார் என்கின்றார். தாவீது ராஜாவும், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 40: 4) என்று கூறுவதை நாம் வாசித்திருக்கலாம்.
கர்த்தர்மேல் நம்பிக்கைகொள்ளும்போது அவர் நமக்கு உறுதி தருகின்றார். மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணி நடத்திட அவர் அனுமதிக்கமாட்டார். இதனையே இன்றைய தியான வசனத்தில், "அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்." என்று கூறுகின்றார்.
சுருக்கமாக இன்றைய தியான வசனம் கூறும் கருத்து இதுதான்:- கர்த்தரை நம்பி அவர் ஒருவரையே நாம் பற்றிக்கொள்ளும்போது உலக செல்வங்கள் நமக்கு இரண்டாம்பட்சமாகவே தெரியும். அவைகளை நாம் இழந்துவிட்டாலும் நாம் கவலையடையாமல் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்போம். மட்டுமல்ல, அப்போதும் அவர் பிறர் நம்மை அவமானப்படுத்திட அனுமதிக்காமல் நமது பெலனாக இருந்து நம்மை மற்றவர்களைவிட உயர்வாக நடத்துவார்.
ஆம், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்."
வேதாகமத் தியானம் - எண்:- 1,432
'ஆதவன்' 💚ஜனவரி 09, 2025. 💚வியாழக்கிழமை
"ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22: 14)
ஆதியில் ஏதேனில் தேவன் ஜீவ விருட்சத்தையும் நன்மைதீமை அறியும் விருட்சத்தையும் வைத்து நன்மைதீமை அறியும் விருட்சத்தின் கனியை மட்டும் உண்பதற்கு ஆதாம் ஏவாளுக்குத் தடை விதித்திருந்தார். ஆனால் அவர்களோ தடை செய்யப்பட்ட நன்மைதீமை அறியும் விருட்சத்தின் கனியை உண்பதற்கே ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். அதனை உண்டு தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்தனர். எனவே பாவிகளான அவர்கள் ஜீவ விருட்சத்தின் கனியை உண்பதற்குத் தேவன் தடை செய்தார். "அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்." ( ஆதியாகமம் 3: 24) என்று வாசிக்கின்றோம்.
ஆதாம் ஏவாள் புறக்கணித்த ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தகுதியுள்ளவர்களாக அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
இங்கு "வாசல் வழியாய்" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது எந்த வாசல்? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாசல். அவர் வழியாக உள்ளே நுழைபவர்களுக்கே ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரம் உண்டு. "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." ( யோவான் 10: 9) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?
ஆடுகளாகிய நமக்கு பரலோகம் செல்ல வாசல் அவரே. "ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 10: 7) என்று அழுத்திக் கூறுவதை நாம் காணலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் புறக்கணித்து வேறு வழியாக நுழைபவர்கள் விண்ணரசில் பிரவேசிக்கமுடியாது. காரணம் அத்தகையவர்கள் கள்ளரும் கொள்ளைக்காரருமாய் இருக்கின்றார்கள். "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்." ( யோவான் 10: 1)
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் நாம் கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டியது அவசியம். அவரது கற்பனைகளை நாம் வாழ்வாக்கி வாழும்போதுதான் அந்த அதிகாரம் நமக்குக் கிடைக்கும். ஏனோதானோ என்று வாழும்போது நாம் புறக்கணிக்கப்பட்டவர்களாக பரலோக நகருக்குள் நுழைய அனுமதியின்றி வெளியே நிற்க நேரிடும். "நாய்களும், சூனியக்காரரும், விபச்சாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22: 15) என்று வேதம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது.
ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவாகிய வாசல் வழியே நுழைய முற்படுவோம்; ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாக அதன் கனியை ருசிப்பவர்களாக நித்திய ஜீவனைக் கண்டடைவோம்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,433
'ஆதவன்' 💚ஜனவரி 10, 2025. 💚வெள்ளிக்கிழமை
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3: 14)
ஆவிக்குரிய வாழ்க்கையினை அப்போஸ்தலரான பவுல் தனது நிரூபங்களில் ஓட்டப்பந்தயம், (1 கொரிந்தியர் 9: 24, 25) மல்யுத்தம் (2 தீமோத்தேயு 2:5) சிலம்பம் (1 கொரிந்தியர் 9: 26) போன்ற விளையாட்டுகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். நமது ஆவிக்குரிய வாழ்க்கை எந்த விளையாட்டைப்போல இருந்தாலும் நமது இலக்கு அதில் வெற்றிவாகை சூடுவதாக இருக்கவேண்டுமென்று வலியுறுத்துகின்றார்.
அதனையே அவர் இன்றைய தியான வசனத்தில், "பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்று கூறுகின்றார். அதாவது, தனது இலக்கை இன்னும் தான் அடையவில்லை "நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3: 12) என்கின்றார்.
நமது பரம அழைப்பின் பந்தயப் பொருள் என்று குறிப்பிடப்படுவது நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வைத்தான். அந்த இலக்கை அடைவதற்காகவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நமது ஆவிக்குரிய வாழ்க்கை அதனை நோக்கி நகர்வதாகவே இருக்கவேண்டும். அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல் அதனை அடைந்திடவே நாமும் நமது பயணத்தைக் தொடரவேண்டும்.
ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு இது அவ்வளவு தெளிவாகப் புரியாது. ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேறினவர்களாக இருக்கின்றோமென்றால் இந்த சிந்தை நமக்கு இருக்கவேண்டியது அவசியம். இதனையே பவுல் அப்போஸ்தலர் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து கூறுகின்றார்:- "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3: 15)
இன்று தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலருக்கு இந்தத் தெளிவு இருப்பதில்லை. ஆராதனையெனும் பெயரில் ஒரு சில பாடல்களைப்பாடித் துதிப்பதுதான் ஆவிக்குரிய வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே பலரிடம் கனியுள்ள ஒரு வாழ்க்கை இல்லாமலிருக்கின்றது. ஆம் அன்பானவர்களே, தேவனுக்கு ஆராதனை செய்யும் அனைவரும் விசுவாசத்தில் உறுதிப்பட்டவர்கள் என்று கூறிட முடியாது. முழுமையான உறுதியான விசுவாசமில்லாதவர்களும் ஆராதனை செய்யலாம்.
மட்டுமல்ல, நித்திய ஜீவனை அடைய இந்த உலகத்தில் விசுவாச போராட்டம் நமக்கு அவசியம். துன்பங்களை விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டு வெற்றிபெறும் அனுபவம் அவசியம். அதன் மூலமே நாம் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள முடியும். இதனையே அப்போஸ்தலரான பவுல் தனது சீடனாகிய தீமோத்தேயுவுக்கு பின்வருமாறு கூறுகின்றார்:- "விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்" ( 1 தீமோத்தேயு 6: 12)
ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது சுய இரத்தத்தால் ஏற்படுத்தியுள்ள மீட்பினை நாம் பெற்று வாழும்போதுதான் நாம் விசுவாசத்தில் பலத்தவர்களாக வாழமுடியும்; நமது ஆவிக்குரிய இலக்கை நோக்கித் தடையின்றி பயணிக்க முடியும். அப்படி வாழும்போதுதான் நாமும் அப்போஸ்தலரான பவுலைப்போல "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." என்று கூறமுடியும்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,434
'ஆதவன்' 💚ஜனவரி 11, 2025. 💚சனிக்கிழமை
"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை." ( சங்கீதம் 44: 6)
இன்றைய தியான வசனம் தனது சுய பலத்தை நம்பாமல் கர்த்தரையே நம்பி வாழக்கூடிய பக்தனுடைய வார்த்தைகளாகும். இங்கு வில், பட்டயம் என்பவை சுய பலத்தைக் குறிக்கும் வார்த்தைகளாக உள்ளன. அவை நமது உடல் வலிமை, அதிகார பலம், செல்வத்திரட்சி இவைகளைக் குறிக்கின்றன. இந்த வசனத்தில் சங்கீத ஆசிரியர், "நான் இவைகளை நம்பவில்லை, இவை என்னைக் காப்பாற்றப்போவதுமில்லை" என்கின்றார்.
தொடர்ந்து அடுத்த வசனத்தில் அவர் கூறுகின்றார்:- "நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்." ( சங்கீதம் 44: 7) என்று. இதனையே தாவீது ராஜாவும் தனது சங்கீத வார்த்தைகளில், "எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது." ( சங்கீதம் 33: 16, 17) என்கின்றார்.
ஆம் அன்பானவர்களே, நாம் எவ்வளவு உடல் வலிமை, பணபலம், அதிகாரபலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவை நம்மை இக்கட்டுகளிலிருந்து முற்றிலும் விடுவிக்கமாட்டாது. ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த அறிவு இருப்பதில்லை. அவர்கள் மிகுதியான உலக பலம் இருப்பதால் இறுமாப்புக்கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணி வாழ்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இதனை உணர்ந்து கொண்டாலும் அந்தச் சமயத்தில் இந்த உணர்வு அவர்களுக்குக் கைகொடுப்பதில்லை.
நாம் வாழ்வில் கண்டுள்ள பல்வேறு திரைப்பட பிரபலங்கள், அரசியல் ஜாம்பவான்கள் தங்களது இறுதி நாட்களில் மன அமைதியின்றி வாழ்ந்து மடிந்துள்ளனர். காரணம் சுய பலத்தை நம்பிய வாழ்க்கை.
எனவேதான் நாம் நமக்கு என்ன உலக ஆசீர்வாதங்கள் இருந்தாலும் அவற்றின்மேல் நம்பிக்கையை வைக்காமல் கர்த்தர்மேல் நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். நாம் நம்பும் உலக ஆசீர்வாதங்கள் நமக்கு எப்போதும் கைகொடுக்காது. எரேமியா தீர்க்கத்தரிசி கூறுகின்றார்:- "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்." ( எரேமியா 17: 7, 8)
மேற்படி வசனத்தில், "உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்." என்று உவமையாகக் கூறப்பட்டுள்ளது நமது உலக துன்பங்களைத்தான். தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாக நடப்பட்டதுமான மரம் எப்படிக் கடுமையான வெப்பம், மழை இல்லாமை போன்ற எதிர்மறையான சூழ்நிலையிலும் இவைகளைத் தாங்கி பலன்தருகின்றதோ அதுபோலவே தனது சுய பலத்தை நம்பாமல் கர்த்தரையே நம்பி கர்த்தரோடு இணைந்த வாழ்க்கை வாழும் மனிதன் செழிப்போடு இருப்பான்.
இன்றைய தியான வசனம் கூறுவதுபோல எவ்வளவு உடல்பலம், செல்வத் திரட்சி, அதிகார பலம் நமக்கு இருந்தாலும் "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை, கர்த்தரே என் நம்பிக்கையாகக் கொள்ளுவேன்" எனும் உறுதியோடு வாழ்வோம்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,435
'ஆதவன்' 💚ஜனவரி 12, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்." (1 கொரிந்தியர் 16: 13)
இன்றைய தியான வசனம் ஆவிக்குரிய வாழ்வில் நாம் கடைபிடிக்கவேண்டிய நான்கு குணங்களை வலியுறுத்திக் கூறுகின்றது. அவை:- நாம் ஆவிக்குரிய காரியங்களில் விழிப்புடன் இருக்கவேண்டும், கர்த்தர்மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும், ஒரு ஆணைப்போல உறுதிவேண்டும், இறுதியில் ஆவியானவரின் திடன் பொருந்தியவர்களாக இருந்து உலகத்தை வெற்றிகொள்ளவேண்டும்.
இங்கு விழித்திருப்பது என்பது உறங்காமல் இருப்பதைக் குறிக்கவில்லை. மாறாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்று நமக்குத் தெரியாது. அது இரவில் திருடன் வருவதுபோல வரும் என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். மேலும் அவர் கூறிய 10 கன்னியர் உவமையில் இதனையே வலியுறுத்திக் கூறினார். அந்த உவமையின் இறுதியில் அவர் கூறுகின்றார்:- "மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்." ( மத்தேயு 25: 13) என்று. அதாவது நாம் அவர் எப்போது வந்தாலும் அவரை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கவேண்டும்.
இரண்டாவது, இந்த வசனத்தில் விசுவாசத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மார்க்கமே விசுவாசத்தை அடிப்டையாகக் கொண்டது தான். தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கைக்கு விசுவாசமே அடிப்படை. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீத்துவுக்கு, "விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்." ( தீத்து 1: 14) என்று அறிவுரை கூறுகின்றார். எனவே தேவன்மேலுள்ள விசுவாசத்தில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.
மூன்றாவது இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ளது, புருஷராயிருங்கள் என்று. அதாவது ஒரு நல்ல ஆண்மகனைப்போல நாம் திடமான உறுதியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இந்த உறுதி நமக்குள் ஆவியானவர் செயல்படும்போதுதான் நம்மில் வெளிப்படும். புயல்காற்று கப்பலை அலைக்கழித்து உயிர் பிழைப்போமோ மாட்டோமோ என்று கப்பல் பயணிகள் மனம்தளர்ந்து இருந்தபோது அப்போஸ்தலரான பவுல் திடமான புருஷனாக இருந்து அவர்களைத் தைரியப்படுத்தியதை நாம் அப்போஸ்தலர்ப்பணி நூலில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- "ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 27: 25)
இன்றைய தியான வசனம் இறுதியாகக் கூறுகின்றது, திடன் கொள்ளுங்கள் என்று. ஆம் அன்பானவர்களே, உலகத்தின் உபத்திரவங்கள், துன்பங்களைக்கண்டு மனம் துவளாமல் நாம் திடன்கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16: 33) என்று நமக்கு அறிவுறுத்தினார்.
எனவே இன்றைய தியான வசனம் கூறும் நான்கு காரியங்களையும் நாம் கடைபிடிக்க உறுதியாக இருப்போம். அவரது வருகைக்காக விழிப்பாய் இருப்போம், விசுவாசத்தை தளரவிடாமல் காத்துக்கொண்டு ஒரு ஆண்மகனைப்போல உறுதியாகச் செயல்படுவோம், திடன்கொண்டவர்களாக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்ததுபோல நாமும் ஜெயம் பெற்றவர்களாக வாழ்வோம்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,436
'ஆதவன்' 💚ஜனவரி 13, 2025. 💚திங்கள்கிழமை
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." ( மத்தேயு 28: 20)
நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து உலகத்தைவிட்டுச் செல்லுமுன் தனது சீடர்களிடம் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். மட்டுமல்ல, மத்தேயு நற்செய்தியின் இறுதி வசனம் இதுதான். இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம், அவர் கட்டளையிட்ட அனைத்தையும் மக்கள் கைக்கொள்ளும்படி உபதேசிக்கக் கூறுகின்றார். இப்படி கிறிஸ்துவின் போதனைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதுதான் நற்செய்தி அறிவிப்பு.
இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." என்று. இதன் பொருள் என்னவென்றால், அவரது கட்டளைகளின்படி வாழும்போது அவர் என்றும் நம்மோடு இருப்பார் என்பதுதான். அது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமல்ல, மாறாக உலகம் முடியும் நாள்வரை இந்த வசனம் பலிக்கும்; அவரும் அப்படி அவர் கட்டளைகளின்படி வாழும் மக்களோடு இருப்பார்.
இன்று நாம் இந்த வாசனத்தை வாழ்வாக்கவேண்டியது அவசியம். தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அவர் நம்மோடு இருக்கிறார் என்று நாம் கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதுபோல, "அவர் எங்கே நம்மோடு இருக்கிறார்?" என்று சந்தேகத்தோடு கேட்டுக்கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை. இன்று பலரும் தேவனைத் தங்களது வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அறியாமலும் அனுபவிக்காமலும் இருப்பதால் அவர்கள் இந்த வசனத்தின் ஆழத்தினை உணர்வதில்லை. அவர் கூறியபடி நம்மோடு இருப்பதை அனுபவிப்பதுமில்லை.
மட்டுமல்ல, இந்த வசனம் கூறுவதுபோல கிறிஸ்து நம்மோடு இருப்பதை நாம் அனுபவிக்கும்போதுதான் நாம் பாவத்தை மேற்கொண்டவர்களாக வாழ முடியும். வெற்றிகரமான ஆவிக்குரிய வாழ்க்கையினை வாழமுடியும். "அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை." (1 யோவான் 3 : 6) என்று வேத வசனம் கூறுவது பொய்யல்ல. அதாவது அவரில் நாம் நிலைத்திருந்தால் பாவம் செய்யமாட்டோம்; பாவம் செய்துகொண்டே இருப்போமானால் அவரை வாழ்வில் காணவுமாட்டோம்.
இன்று கிறிஸ்துவைத் தனிப்பட்ட விதத்தில் வாழ்வில் அனுபவிக்காததால் பல்வேறு தாறுமாறான உபதேசங்கள் கிறிஸ்தவ உலகில் பரவிக் கிடக்கின்றது. கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அனுபவிக்காத போதகர்கள் எப்படி கிறிஸ்துவை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறமுடியும்?
எனவே, அன்பானவர்களே, அவர் கட்டளையிட்ட யாவையும் நாம் கைக்கொள்ளும்படி கவனமாக இருக்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, இதனை நாம் மற்றவர்களுக்கும் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதனையே இயேசு கிறிஸ்து, "அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்" என்று கட்டளையாகக் கூறினார். அப்படி வசனத்துக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது அவர் சகல நாட்களிலும் நம்முடனே கூட இருப்பதை வாழ்வில் நாம் அனுபவிக்கமுடியும். அப்போது மற்றவர்களும் நம்மூலம் அவரை அறிந்துகொள்வார்கள்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,437
'ஆதவன்' 💚ஜனவரி 14, 2025. 💚செவ்வாய்க்கிழமை
"காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?" ( யோபு 38: 41)
இந்த உலகத்தில் தேவன் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் அவரே உணவூட்டி அவற்றைப் பராமரிக்கின்றார். பறவைகளில் நாம் காக்கையை பெரிதாகக் கருதுவதில்லை. பல்வேறு அழகிய பறவைகள் உலகினில் உண்டு. ஆனால் காகம் அழகும் கவர்ச்சியும் இல்லாத ஒரு பறவை. அசுத்தத்தை உண்டு வாழும் பறவை. ஆனால் அந்த உணவும் அவைகளுக்கு இல்லாமல் போகும்போது அவைகளின் குரலுக்கும் தேவன் செவிகொடுத்து அவற்றுக்கு உணவூட்டுகின்றார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
இதே கருத்தை நாம் சங்கீத நூலிலும், "அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.' ( சங்கீதம் 147: 9) என்று வாசிக்கின்றோம். வேதாகமத்தில் இந்த வசனங்கள் நமது விசுவாசத்தை வளர்த்துவதற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன. அற்பமான காக்கை குஞ்சுகளுக்கே உணவளிக்கும் தேவன் தனது சாயலில் ரூபத்திலும் அவர் உண்டாக்கிய மனிதனுக்கு அவனது தேவைகளைச் சந்திக்க உதவாமலிருப்பாரா?
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில், "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?" ( மத்தேயு 6: 26) என்று கூறினார்.
அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை என்று இயேசு கூறியதை சிலர் தவறுதலாகப் புரிந்துகொண்டு, அப்படியானால் நாம் இந்த உலகத்தில் உழைக்காமல் இருந்தாலும் தேவன் உணவூட்டுவாரா? எனக் கேட்பதுண்டு. உழைக்காதவன் உண்பதற்குத் தகுதியற்றவன் என்றுதான் வேதம் கூறுகின்றது. "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே." (2 தெசலோனிக்கேயர் 3: 10) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எனவே இயேசு கிறிஸ்து நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தக் கூறும் வார்த்தைகளே இவை. விதைக்காமல், அறுக்காமல், சேமித்து வைக்காமல் வாழும் பறவைகளுக்கே தேவன் உணவளிக்கும்போது உழைக்கும் நமது தேவைகளைச் சந்திக்காமல் இருப்பாரா?
ஆனால், ஐந்தறிவு காக்கைகளே தேவனை நோக்கிக் கூப்பிடுவதுபோல நாமும் நமது தேவைகளுக்காக தேவனை நோக்கிப் பார்க்கவேண்டியது அவசியம். நமது உழைப்பு தேவையாக இருந்தாலும் உழைப்புக்கேற்ற பலனை நாம் அடையச் செய்வது தேவனே.
நமது தேவைகள், இக்கட்டுகளின்போது இந்த வசனங்களால் நம்மைத் திடப்படுத்திக் கொள்வோம். ஆம், கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறவர், தேவச் சாயலாகப் படைக்கப்பட்ட நமது தேவைகளைச் சந்திக்காமல் இருக்கமாட்டார்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,438
'ஆதவன்' 💚ஜனவரி 15, 2025. 💚புதன்கிழமை
"நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்." (கலாத்தியர் 4: 10,11)
கிறிஸ்தவர்கள் என்று நம்மைக் கூறிக்கொள்ளவேண்டுமானால் நாம் தேவன்மேல் நூறுசதம் விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி ஒரு விசுவாச வாழ்க்கை வாழும்போது நாம் அவரைத்தவிர வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கமாட்டோம் எதனையும் அவரைவிடப் பெரிதாக எண்ண மாட்டோம்.
ஆனால் இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலரும் புறமத கலாச்சாரங்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி தேவனை அவமதிக்கின்றவர்களாக இருக்கின்றனர். அதனையே அப்போஸ்தலரான பவுல் இங்கு "நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே". என்று குறிப்பிடுகின்றார். பல கிறிஸ்தவ குடும்பங்களில் நல்ல காரியங்கள் ஏற்பாடுசெய்யும்போது தேவ சித்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட நல்லநாள், நல்ல நேரம், நல்ல மாதம் இவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பது அவர்களது விசுவாசக் குறைவையும் கிறிஸ்துவை அவமதிப்பதையுமே காட்டுகின்றது..
எவ்வளவோ மேலான விசுவாச சாட்சிகள் வேதத்தில் உண்டு. நமது வாழ்க்கையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த மகத்தான காரியங்கள் பல உண்டு. ஆனால் வாழ்வில் அப்படி கிறிஸ்துமூலம் நன்மைகளைப் பெற்றுக்கொண்டதாக அவற்றிக்குறித்து சாட்சிகூறும் பல கிறிஸ்தவர்களும்கூட நல்ல நேரம், மாதம், காலம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் "நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார். ஆம் இப்படி நாள் நட்சத்திரம் பார்ப்பது நமக்குரிய கிறிஸ்தவ விசுவாசத்தை வீணாக்கிவிட்டோம் என்பதனையே காட்டுகின்றது.
மட்டுமல்ல, இப்படி நல்லநாள், நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்த பலரது திருமணங்கள் விவாகரத்தில் முடிவதை நாம் பலவேளைகளில் பார்க்கமுடிகிறது. இதுவே இவை தேவையற்ற மூடநம்பிக்கைகள் என்பதற்கு அத்தாட்சி.
ஆம் அன்பானவர்களே, காலங்களையும் நேரங்களையும் பார்ப்பதைவிட காலத்தையும் நேரத்தையும் கையில்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ளவரையே நாம் நோக்கிப்பார்க்கவேண்டியது அவசியம். இதனை உணர்ந்திருந்த சங்கீத ஆசிரியர், "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்." ( சங்கீதம் 31 : 15 ) என்கின்றார். நமது காலங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உள்ளன. அவரே நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் பிரச்சனைகளுக்கும் தப்புவிக்க வல்லவர்.
நாம் தேவனை அறிந்தவர்களாக வாழ்வோமானால் அவரது காலங்களையும், நியமங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்தித் தருவார். காலங்களை அவர் அறியாதவரல்ல; அவரை வாழ்வில் அறிந்தவர்கள் அவர் நியமித்துள்ள நாட்களையும் அறிந்துகொள்வார்கள். "சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?" ( யோபு 24: 1 ) என்று வேதம் கூறுகின்றது. நேரங்களையும் நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறதை விட்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ளவரையே நோக்கிப்பார்ப்போம். தேவன் மேலுள்ள நமது விசுவாசம் அவமாகிப் போய்விடாமல் காத்துக்கொள்வோம்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,439
'ஆதவன்' 💚ஜனவரி 16, 2025. 💚வியாழக்கிழமை
"அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." (1 பேதுரு 1:17)
தான் வசிக்கும் இடத்தின் சொந்தக் குடியுரிமை இல்லாதவரைக் குறிக்கும் வார்த்தைதான் பரதேசி என்பது; அல்லது இந்த வார்த்தை அந்நிய பூமியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரைக் குறிக்கின்றது. வேதாகம அல்லது ஆன்மீக அடிப்படையில், இது ஒரு யாத்திரிகர் அல்லது உலகத்தில் அந்நியர் என்று ஒருவரைக் குறிக்கின்றது. உலகத்தில் நாம் வசித்தாலும் இது நமது சொந்தக் குடியிருப்பு அல்ல. நமது குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது என்றே வேதம் குறிப்பிடுகின்றது. எனவே இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவருமே பரதேசிகள்தான்.
"நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்." ( பிலிப்பியர் 3: 20) என்று வாசிக்கின்றோம். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்து இந்த பூமியில் பரதேசியாக வாழும் நம்மைத் தன்னோடு சேர்த்துக்கொள்வார்.
அவர் நம்மைத் தன்னோடு சேர்த்துக்கொள்ள வேண்டுமானால் நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ வேண்டியது அவசியம். அவர் நமது செயல்களின்படி நம்மை நியாயம்தீர்த்து நாம் அவருக்கு ஏற்புடையவர்கள் எனக் கண்டுகொண்டால் தன்னோடு சேர்த்துக்கொண்டு பரதேசிகளான நம்மை தனது பரலோக குடியிருப்பில் உரிமைக் குடிமகன்களாக / குடிமகள்களாக ஏற்றுக்கொள்வார். எனவே, இந்த உலகத்தில் பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது இன்றைய தியான வசனம்.
ஆனால் நம்மில் பலரும் இதனை எண்ணிப்பார்ப்பதில்லை. இந்த உலகமே நமது நிரந்தர குடியிருப்பு என எண்ணி உலகச் செல்வங்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றோம். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை." (மத்தேயு 6: 19, 20)
ஆம் அன்பானவர்களே, அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நாம் பிதாவாகத் தொழுதுகொள்வது உண்மையானால் நாம் இந்த உணர்வுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். இப்படிச் சொல்வதால் நாம் உலகச் செல்வங்களைச் சேர்ப்பது தவறு என்றோ பாவம் என்றோ கூறவில்லை. மாறாக, இவற்றைச் சேர்ப்பதில் நாம் காட்டும் ஆர்வத்தைவிட தேவனுக்கு ஏற்ற காரியங்களில் நாம் முன்னுரிமை காட்டுபவர்களாக வாழவேண்டும்.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பயத்துடனே செய்யப்படுவதாக இருக்கவேண்டும். அதாவது, நாம் எந்தச் செயலைச் செய்யும்போதும் "நான் செய்யும் இந்தச் செயல் தேவனுக்கு ஏற்புடையதாக இருக்குமா? அவர் இதனை விரும்புவாரா?" எனும் எண்ணம் நமக்குள் எழவேண்டியது அவசியம். அப்படி நடப்பதுதான் பயத்துடன் நடந்துகொள்வது. ஆம், அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நாம் நமது பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால், பூமியில் பரதேசிகளாய் வாழும் நாள்வரைக்கும் இந்தப் பயத்துடனே நடந்துகொள்வோம். அப்போது பரதேசிகளான நமக்கு மறுவுலக குடியுரிமை கிடைப்பது நிச்சயமாகும்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,440
'ஆதவன்' 💚ஜனவரி 17, 2025. 💚வெள்ளிக்கிழமை
"ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும் படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்." (2 தெசலோனிக்கேயர் 2: 11, 12)
இந்த உலகத்தில் மக்கள் பல்வேறு வஞ்சக எண்ணங்களால் நிறைந்திருக்கக் காரணம் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
உண்மையினை உலகம் எளிதில் ஏற்றுக்கொளவதில்லை ஆனால் பொய்யினை எளிதில் நம்பிவிடுகின்றது. இப்படி பொய்யை நம்புவதால்தான் பல்வேறு ஏமாற்று காரியங்கள் உலகத்தில் நடைபெறுகின்றன. உதாரணமாக, அரசாங்கம் நிர்ணயித்துள்ள வட்டி விகிதங்களைவிட அதிக வட்டி தருவதாகக் கூறுவதால் பல்வேறு ஏமாற்று நிறுவனங்களில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இதுபோல பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெறக் காரணம் பொய்யை நம்புவதால்தான்.
உண்மையினை ஏற்றுக்கொள்ளாமல் அநீதியான காரியங்களில் விருப்பம் காட்டுவதுதான் மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்து உலகத்தில் மனிதனாக வந்திருந்தபோதும் பலரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதனை இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்:- "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3: 19)
இன்றைய தியான வசனம் "சத்தியத்தை விசுவாசியாமல்" என்று கூறுகின்றது. அப்படியானால் எது சத்தியம் எனும் கேள்வி நமக்குள் எழுகின்றது. அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், தேவனது வசனமே சத்தியம் என்று. "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17: 17) ஆம் அன்பானவர்களே, தேவனுடைய வசனமே சத்தியம்.
இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" என்று. அதாவது, அவர்கள் உண்மையான தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாததால் தொடர்ந்து பொய்யிலேயே கெட்டுபோக்கத்தக்கதாக தேவன் அவர்களை இருளிலே நடக்கப்பண்ணுவார்.
மேலும் இப்படி உண்மையினை விசுவாசியாமல் நாம் இருப்போமானால் அது தேவனுடைய கோபத்தை நம்மேல் வருவிபத்தாக இருக்கும். இதனையே அப்போஸ்தலரான பவுல், "சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது." (ரோமர் 1:18) என்று கூறுகின்றார். அதாவது, உண்மையினை அறிய மனமில்லாமலும் உண்மையாக வாழ மனமில்லாமலும் தங்கள் அநியாயத்தினால் உண்மையினை அடக்கிவைக்கும் மனிதர்கள்மேல் தேவ கோபம் வெளிப்படும் என்கின்றார்.
ஆம் அன்பானவர்களே, எனவே நாம் சத்தியமான தேவனுடைய வார்த்தைகளை அறிந்தவர்களாக, அவற்றை வாழ்வில் கடைபிடிப்பவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி வாழும்போது வாழ்வில் நமக்கு விடுதலையும் கிடைக்கும். "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". (யோவான் 8:32) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
வேதாகமத் தியானம் - எண்:- 1,441
'ஆதவன்' 💚ஜனவரி 18, 2025. 💚சனிக்கிழமை
"தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." ( எபேசியர் 2:4,5)
இன்று நாம் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப்பெற்று வாழ்கின்றோமென்றால் அதற்குக் காரணம் பிதாவாகிய தேவனது இரக்கமேயாகும். பல்வேறு அக்கிரம செயல்பாடுகளினாலும் பாவத்தின் பிடியிலும் சிக்கி பாவத்தினால் மரித்தவர்களாய் இருந்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரைவிட நீதியுள்ள வாழ்க்கை வாழும் பலர் பிற மாதங்களில் உள்ளனர். ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் நீதி வாழ்க்கை வாழும் பிற மதத்தினரும் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறவில்லை. நீதி வாழ்க்கை வாழ்ந்தாலும் அது மட்டும் இரட்சிப்பு அல்ல; அது மட்டும் ஒருவரை இரட்சிப்பு அனுபவம் பெறுவதற்கு உதவாது, மாறாக தேவனது கிருபையினால்தான் நாம் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுகின்றோம். இதனால்தான், "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." (தீத்து 3:5) என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்.
அப்படியானால், நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம் என்பதை எப்படி அறிந்துகொள்வது? அதற்குப் பல காரணிகளை நாம் கூறலாம். நமது உள்ளான மானிதனில் இதுவரை நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதலை நாம் உணர்ந்து கொள்ளலாம்; நமது மனச்சாட்சி கூர்மையடைவதால் இதுவரை பாவம் என்று நாம் உணராத பல காரியங்கள் பாவம் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம்; தேவன்மேல் அளப்பரிய பற்று ஏற்படுவதால் முன்பைவிட அவரை அதிகம் தேடுபவர்களாக, அவரது அன்பைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்துகொள்பவர்களாக இருப்போம்; எல்லாவற்றுக்கும் மேலாக நாம் அறிந்த தேவனை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் ஏற்படும். இவை சில உதாரணங்களே.
மட்டுமல்ல, தேவனது கட்டளைகளை கடைபிடிப்பதிலும் அவற்றை அறிவதிலும் நமக்கு ஆர்வம் மிகுதியாகும். நாம் அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதனால் அவர் நம்மில் நிலைத்திருப்பதை நாம் உறுதியாக உணர்ந்துகொள்வோம். இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 3:24) என்று கூறுகின்றார்.
நாம் அதிகமான பக்திகாரியங்களில் ஈடுபடுவதால் நம்மை நாமே நியாயப்டுத்திக்கொள்ள முடியாது. பக்திச் செயல்பாடுகள் என்று செய்யும் சில சம்பிரதாய செயல்பாடுகள் எல்லாம் தேவனுக்கு ஏற்புடையவையல்ல. தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்து அவரை அன்பு செய்வதே மெய்யான மேலான பக்தி. அவரது கட்டளைகளை அறிந்து கீழ்படிவதே மேலான பக்தி.
ஆம் அன்பானவர்களே, பிதாவாகிய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் இப்படி கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிர்ப்பிக்கின்றார். இது நமது சொந்த முயற்சியினாலல்ல, மாறாக அவரது கிருபையினாலே தான். எனவே நாம் அவரது கிருபையைப் பெறுவதற்கு வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். "கர்த்தாவே பாவியான அடியான்மேல் கிருபையாயிரும்" என்று உள்ளான மனதிலிருந்து வேண்டுதல் செய்வோம். தேவன் தனது கிருபையினால் நம்மை இரட்சிப்பினால் திருப்தியாக்குவார்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,442
'ஆதவன்' 💚ஜனவரி 19, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்." (1 கொரிந்தியர் 4: 15)
இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு ஆசிரியர்கள் இருக்கலாம். நாம் முதலாம் வகுப்பு படித்ததுமுதல் கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை சுமார் நூறுபேராவது நமக்கு ஆசிரியராக பல்வேறு பாடங்களை நடத்தியிருப்பார்கள். இதுதவிர நாம் பல்வேறு மறையுரைகளைக் கேட்டிருப்போம். அவர்களும் நமக்குக் கற்பித்த ஆசிரியர்களே.
இப்படி நமக்குப் பல்வேறு ஆசிரியர்கள் நமது வாழ்வில் இருந்தாலும் தகப்பன் என்பது நமக்கு ஒருவர் மட்டுமே இருக்க முடியும். நம்மைப் பெற்றவரை மட்டுமே நாம் அப்பா என்று கூறுவோம். இதனையே கொரிந்து சபை மக்களுக்கு அப்போஸ்தலரான பவுல் உவமையாகக் கூறுகின்றார். கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தியதால் ஆவிக்குரிய தகப்பனாக இங்கு அவர் தன்னைக் கூறிக்கொள்கின்றார். இதனையே, "கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்" என்கின்றார்.
ஒரு குழந்தைக்கு முன்மாதிரி அதன் பெற்றோரே. அதுபோல தான் ஆவிக்குரியத் தகப்பனாக இருப்பதால் கொரித்து சபை மக்கள் தகப்பனைப் பின்பற்றி நடக்கும் பிள்ளைகளைப்போலத் தன்னைப் பின்பற்றவேண்டும் என்கின்றார். இந்த நாளுக்குரிய தியான வசனதைத்தொடர்ந்து இதனையே அவர் கூறுகின்றார்:- "ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்." (1 கொரிந்தியர் 4: 16) என்று.
கொரிந்தியருக்கு பவுல் எழுதியுள்ளது நமக்கு எப்படிப் பொருந்தும் என்று சிலர் எண்ணலாம். ஆனால் பவுல் அப்போஸ்தலர் இந்த நிருபத்தை கொரிந்து மக்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்காகவுமே எழுதியுள்ளார். இதனை இந்த நிருபத்தின் ஆரம்பத்தில் அவர்:- ".........பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது" (1 கொரிந்தியர் 1: 2) என்று கூறியுள்ளார்.
கிறிஸ்து இயேசு உலகில் நமக்கு முன்மாதிரியையான ஒரு வாழ்வை வைத்துச் சென்றார். கிறிஸ்து தேவனது குமாரனாக இருந்ததால் அவர் தூய்மையாக வாழ்ந்தார், நாம் சாதாரண மனிதர்கள் எனவே நாம் அவரைப்போல வாழமுடியாது என்று பலர் எண்ணலாம். ஆனால் ஆவியின் வல்லமை நமக்குள் செயல்பட இடம்கொடுப்போமானால் நாமும் கிறிஸ்துவைப்போல வாழ முடியும் என்பதற்கு அப்போஸ்த்தலரான பவுல் ஒரு உதாரணம். "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." (1 கொரிந்தியர் 11: 1) என்று துணிந்து கூறுகின்றார் அவர். இந்த வார்த்தைகளை வேறு எவராலும் கூற முடியாது. ஆம், எனவே நமது இலக்கும் இதுவாக இருக்கவேண்டும். நமது இலக்கு எப்போதும் மிக உயர்ந்ததாக இருக்கவேண்டியது அவசியம்.
ஆயிரம் ஆசிரியர்கள் கற்பிக்க முடியாத காரியங்களை நாம் அப்போஸ்தலரான பவுலின் நிருபங்கள் மூலம் கற்றுக்கொள்ள முடியும். அதுபோல உலகத் தகப்பன்மார் வழிநடத்துவதைவிட மிகச் சிறப்பாக அவரது நிருபங்கள் நம்மை வழிநடத்த முடியும். அவரது 14 நிருபங்களையும் (எபிரெயர் நிருபமும் அவர் எழுதியதே என்பது பல இறையியலாளர்களின் கருத்து. மட்டுமல்ல, இதனை வாசிக்கும்போது நாம் அப்போஸ்தலராகிய பவுலின் இறையியலின் ஆழத்தை இதில் காண்கின்றோம். எனவேதான் 14 நிருபங்கள் என்று கூறுகின்றேன்) நாம் வாசித்து வாழ்வாக்கும்போது நமது இலக்கின் பாதியையாவது நாம் அடைவது உறுதி. அவரது நிருபங்களை ஜெபத்துடன் வாசிப்போம்; ஆவிக்குரிய வாழ்வில் அவரைப்பின்பற்றி அவரோடுகூட கிறிஸ்து காட்டிய வழியில் உறுதியாக நடப்போம்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,443
'ஆதவன்' 💚ஜனவரி 20