வேதாகமத் தியானம் - எண்:- 1,490
'ஆதவன்' 💚மார்ச் 06, 2025. 💚வியாழக்கிழமை
"உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல." ( உபாகமம் 10: 17)
நமது தேவன் இரக்கமுள்ளவர், அன்புள்ளவர் என்று நாம் கூறுகின்றோம் ஆனால் அவர் பயங்கரமான தேவனுமாயிருக்கிறார். "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே." ( எபிரெயர் 12: 29) என்று தேவனது குணத்தைப்பற்றி வசனம் கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே இன்றைய தியான வசனமானது தேவனது நியாயத்தீர்ப்பைக் குறித்துக் கூறுகின்றது. நியாயத்தீர்ப்பு நாளில் அவருக்குக் கையூட்டுக்கொடுத்து நாம் தப்பிவிடமுடியாது என்று நம்மை இந்த வசனம் எச்சரிக்கின்றது.
இந்த உலகத்தில் பலரும் தேவனைத் தங்களைப்போன்ற மனித குணம் கொண்ட ஒருவராக எண்ணிக்கொள்கின்றனர். இதனால் மனிதர்கள் தேவனுக்கு ஆராதனை என்று செய்யும் பல காரியங்கள் இத்தகைய மனித எண்ணத்தின் விளைவுகளாகவே இருக்கின்றன. நாம் தேவனையும் அவரது குணங்களையும் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது. தேவன் மனிதர்களைத் தனது சாயலிலும் ரூபத்திலும் உண்டாக்கியிருந்தாலும் அவர் மனிதர்களைப்போல அற்பமான காரியங்களுக்கு மயங்குகிறவரல்ல; வெற்று ஆராதனைகளுக்கு மயங்குபவரல்ல. இவைகளைவிட மனத் தாழ்மை, உள்ளத்தூய்மை இவைகளையே தேவன் விரும்புகின்றார் என்பதே உண்மை.
தேவன் படைத்த இந்த அண்டசராசரங்களைப் புரிந்துகொள்ளவே இன்னும் மனிதர்களால் முடியவில்லை. நமது காலடியில் இருக்கும் பூமிக்கு அடியில் இருக்கும் காரியங்களையும் கடலின் ஆழத்தில் உள்ள அதிசயங்களையும் மனிதனால் இன்னும் முழுவதும் கண்டறியமுடியவில்லை. ஆம், சர்வ வல்லவரான அவரது அறிவு ஞானம் இவை அளவிடமுடியாதவை. "ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!" ( ரோமர் 11: 33) என்று வியந்து கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.
இதுபோலவே, அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள். அவர் நியாயம் தீர்க்கும்போது "நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11: 4) இந்த உலகத்திலுள்ள துன்மார்க்க நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்துத் தப்புவதுபோல அவருக்கு நாம் கையூட்டுக் கொடுத்துத் தப்பி ஓடமுடியாது. அரசியல் பலத்தினால் காவல்துறைக்குத் தப்பி ஒழிந்துகொள்வதுபோல ஒழிந்துகொள்ள முடியாது.
"நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்." ( சங்கீதம் 139: 8 -10) என்று அவரது வல்லமையினை உணர்ந்துகொண்ட பக்தன் கூறுகின்றான்.
எனவேதான் நாம் கர்த்தருக்குப் பயந்த நீதியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. இந்த உண்மையினை நன்றாக உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்." ( சங்கீதம் 119: 62) அதாவது தேவனுக்கு விரோதமான பாவம் ஏதாவது செய்திருப்போமோ எனும் பயத்தால் நடு இராத்திரியில் எழுந்து தேவனைத் துதித்து மன்னிப்பை வேண்டுவேன் என்கின்றார் சங்கீத ஆசிரியர்.
"உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." ( சங்கீதம் 119: 120) இத்தகைய பயம் நமக்கு இருக்குமானால் மட்டுமே நாம் நீதியுள்ள வாழ்க்கை வாழமுடியும். இல்லாவிட்டால் துன்மார்க்க மனிதர்கள் கூறுவதுபோல "நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்" என்றுகூறி நமது துன்மார்க்கத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து அழிவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,490
AATHAVAN 💚 March
06, 2025 💚
Thursday
"For the Lord your God is
God of gods, and Lord of lords, a great God, a mighty, and a terrible, who
regardeth not persons, nor taketh reward." (Deuteronomy 10:17, KJV)
We often speak of our God as
merciful and loving, but He is also a fearsome God. "For our God is a
consuming fire." (Hebrews 12:29, KJV) This verse describes the nature
of God. Yes, dear ones, today’s meditation verse speaks about God’s judgment.
On the day of judgment, we cannot bribe Him to escape, as this verse warns us.
In this world, many people
think of God as having human-like qualities. As a result, many of the acts of
worship performed by humans are influenced by such human reasoning. We cannot
fully comprehend God or His nature. Although God created humans in His own
image and likeness, He is not swayed by trivial matters like humans are, nor is
He impressed by empty rituals. Instead, God desires humility and purity of
heart.
Even today, humanity has not
been able to fully understand the universe God created. The depths beneath our
feet and the wonders of the ocean remain largely unexplored. Truly, His wisdom
and knowledge are immeasurable. "O the depth of the riches both of
the wisdom and knowledge of God! how unsearchable are His judgments, and His
ways past finding out!" (Romans 11:33, KJV) exclaims the apostle Paul
in awe.
Similarly, His judgments are
immeasurable. When He judges, "He shall judge the poor with
righteousness, and reprove with equity for the meek of the earth: and He shall
smite the earth with the rod of His mouth, and with the breath of His lips
shall He slay the wicked." (Isaiah 11:4, KJV) Unlike corrupt judges
in this world who can be bribed, we cannot bribe God to escape His judgment.
Nor can we evade His justice through political power or influence.
"If I ascend up into
heaven, Thou art there: if I make my bed in hell, behold, Thou art there. If I
take the wings of the morning, and dwell in the uttermost parts of the sea;
even there shall Thy hand lead me, and Thy right hand shall hold me." (Psalm
139:8-10, KJV) These words are spoken by a devout soul who has come to
understand God’s omnipresence and power.
Therefore, it is essential for
us to live a righteous life in the fear of the Lord. He shows no partiality and
accepts no bribes. Realizing this truth, the Psalmist says, "At
midnight I will rise to give thanks unto Thee because of Thy righteous
judgments." (Psalm 119:62, KJV) In other words, the Psalmist is
saying that he will rise at midnight to praise God and seek forgiveness,
fearing that he may have sinned against Him.
"My flesh trembleth for
fear of Thee; and I am afraid of Thy judgments." (Psalm 119:120, KJV)
Only if we have such fear can we live a righteous life. Otherwise, like the
wicked, we might say, “We’ll deal with judgment when it comes,” and continue
living in sin, leading to our destruction.
Gospel Message: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment