INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Tuesday, March 25, 2025

🦋வேதாகம முத்துக்கள் - மார்ச் 2025

 

        - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

வேதாகமத் தியானம் - எண்:- 1,484    

'ஆதவன்' 💚மார்ச் 01, 2025. 💚சனிக்கிழமை  

"திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்." ( உன்னதப்பாட்டு 8: 7)

தேவன்மேல் அன்புகொண்ட மெய்யான பக்தன் கூறும் வார்த்தைகளே இன்றைய தியான வசனம். இந்த வசனம் முழுவதும் வேத சத்தியங்களை  உருவகமாகக் கூறி நம்மை அறிவுறுத்துகின்றது.  

நாம் தேவன்மேல் உண்மையான அன்புகொண்டு வாழ்வோமானால் தேவன்மேலுள்ள அந்த அன்பை துன்பங்களோ வேதனைகளோ குறைந்திடச் செய்யாது.  இதனையே, "திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" என்று இந்த வசனம் கூறுகின்றது. காரணம் தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் உறுதி நாம் அவரை மெய்யாக அன்பு செய்யும்போது நமக்கு உண்டாகும். "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது." ( ஏசாயா 43: 2) என வாக்களித்துள்ளாரே தேவனாகிய கர்த்தர். 

மேலும் தேவன்மேல் பற்றுக்கொண்டவனுக்கு உலக செல்வங்கள் பெரிதாகத் தெரியாது. யாராவது கிறிஸ்துவின் மெய்யான விசுவாசியிடம் வந்து, "என்னை அன்புசெய்" என்றாவது அல்லது "நான் வணங்கும் தெய்வத்தை வணங்கு உனக்குப் பணம் தருகின்றேன்" என்றாவது கூறினாலும்; அவன் எத்தனைக் கோடி பணம் கொடுத்தாலும் அதனை மெய்யான விசுவாசி அசட்டைபண்ணிவிடுவான். இதனையே, "ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்." என்று பக்தன் கூறுகின்றான். 

இதற்கு மாறாக, தேவன்மேல் பற்றுகொண்டவன் தனக்கு உள்ளவை அனைத்தையும் கொடுத்தாவது அவரை வாழ்வில் பெற்றுக்கொள்வதையே விரும்புவான். இதனையே இயேசு கிறிஸ்து, "அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்." ( மத்தேயு 13: 44) என்று கூறினார். ஆம் மெய்யான விசுவாசி தேவனை வாழ்வில் பெற்றுக்கொள்ள தன்னிடம் உள்ளதையும் இழக்கத் துணிந்தவனாக இருப்பான்.  அதாவது, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல அவன் தேவன்மேல் கொள்ளும் நேசத்துக்காகக் அனைத்துச் செல்வங்களையும் முற்றிலும் அசட்டைபண்ணி விடுவான். 

இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நாம் வாழ்வதையே தேவன் விரும்புகின்றார். வெள்ளம்போன்ற துன்பங்கள் பிரச்சனைகள் வாழ்வில் ஏற்படும்போதும்  யோபு கொண்டதுபோன்ற தேவன்மேல் அசைக்கமுடியாத அன்பு நமக்கு இருக்கவேண்டும். இரண்டாவது,  உலக செல்வங்கள் ஆஸ்திகளை வாழ்வில் பெறவேண்டும் என்பதற்காக அவரை மறுதலிக்காமல் வாழவேண்டும்.  

"ஆண்டவரே, திரளான தண்ணீர்கள் போன்ற துன்பங்களும் பிரச்சனைகளும் உம்மேல் கொண்ட எனது நேசத்தை குறைத்திடாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; எவராவது தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் என்னிடம் கொடுத்து தன்னை அல்லது தான் வணங்கும் பிற தெய்வங்களை நேசிக்கச்சொல்லி என்னை வேண்டினாலும் நான் அவற்றை  முற்றிலும் அசட்டைபண்ணிவிடுவேன்" என்று உறுதியுடன் கூறி தேவன்மேல் மட்டுமே விசுவாசத்துடன் வாழ்வோம்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,485    
'ஆதவன்' 💚மார்ச் 02, 2025. 💚ஞாயிற்றுகிழமை  

"அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." ( எபிரெயர் 4: 13)

இந்த உலகத்தில் நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தையும் தேவன் அமைதியாகப்  பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார். ஆனால் மனிதர்கள் நாம் இதனை உணர்வதில்லை. இன்று மனிதர்கள் தங்கள் மூளை அறிவால் CCTV கேமராக்களை உருவாகியுள்ளனர். இந்த கேமராக்கள் மூலம் பல்வேறு திருட்டுக்கள் தப்பிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நாம் அறிவோம். மனித அறிவே இத்தகைய கண்காணிப்புக் கருவியைக் கண்டுபிடிக்கமுடியுமானால் தேவனது அறிவு எத்தகைய வல்லமையுள்ளதாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள்!

நாம் இருக்கும் இடத்தையும், நமது செயல்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறியும்போது மனிதர்கள் பொதுவாக நல்லவர்களாக நடந்துகொள்கின்றனர். பல கடைகளிலும் பொது இடங்களிலும், "நீங்கள் CCTV கேமரா கண்காணிப்பில் இருக்கிறீர்கள்" என்று அறிவிப்புகள் எழுதப்பட்டிருக்கும்.  அங்கு பலரும் நல்லவர்களாக நடந்துகொள்கின்றனர். காரணம் தண்டிக்கப்பட்டுவிடுவோம் எனும் பயம். 

அன்பானவர்களே, இதுபோலவே தேவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். இதனையே இன்றைய தியான வசனம், "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்." என்று கூறி நம்மை எச்சரிக்கின்றது. 

தங்களது சொத்துக்களை விற்ற அனனியா, சப்பீராள் எனும் தம்பதியினர் விற்ற பணத்தில் சிறிதளவு பணத்தை தங்களுக்கென்று வைத்துக்கொண்டு மிச்ச பணத்தை பேதுருவிடம்   ஒப்படைத்தனர்.  அந்தப்பணம் அவர்களுக்கு உரிமைப்பட்டதுதான். ஆனால் தேவனுக்கென்று கொடுக்கத் தீர்மானித்தபின் அது தேவனுக்கு உரிமையுள்ளதாயிற்று. அந்தப்பணத்தில்தான் சிறிதளவு பணத்தை அவர்கள் தங்களுக்கென்று வைத்துக்கொண்டனர்.   

ஆனால் அவர்களது இந்தச் செயல் தேவனுக்கு மறைவானதாக இருக்கவில்லை. அவர் ஆவியானவர்மூலம் பேதுருவுக்கு இதனை வெளிப்படுத்திக்கொடுத்தார். எனவே, "பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5: 3) என்று கேட்கின்றார். 

ஆம், தேவன் தனது வார்த்தையால் நம்மை நியாயம்தீர்க்கும்போது நாம் அவரை ஏமாற்ற முடியாது. "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4: 12)

எனவே நாம் கவனமுடன் நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம். நமது அனைத்துப் பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் CCTV கேமரா கண்காணிப்பதைவிட அதிக வல்லமையுடன் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  அவர் தனது வார்த்தையால் நம்மை நியாயம் தீர்க்கும்போது நாம் அவரை ஏமாற்ற முடியாது. இந்த உணர்வோடு நாம் வாழ்வோமானால் நமது வாழ்க்கையும், பேச்சுக்களும் செயல்பாடுகளும் தேவனுக்கு ஏற்றவையாக, வித்தியாசமானவையாக இருக்கும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,486    
'ஆதவன்' 💚மார்ச் 03, 2025. 💚திங்கள்கிழமை  

"சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ( ஏசாயா 41: 17)

பொதுவாக இந்த உலகம் பொருளாதார நிலைமை, படிப்பு, பதவி இவைகளைக்கொண்டு மனிதர்களை மதிப்பிடுகின்றது. இவைகளை வாழ்வில் பெறாதவர்களை அற்பமாக எண்ணுகின்றது இந்த உலகம். ஆனால் தேவன் அப்படியல்ல; சிறுமையானவர்களின் குரலை தேவன் புறக்கணிப்பதில்லை. அவர் மனிதர்களின் உள்ளான மனத்தினைப்  பார்க்கின்றார். எனவே, பலவேளைகளில் உலகத்தாரால் அற்பமாகவும் சிறுமையாகவும் எண்ணப்படும் மனிதர்கள் தேவனது பார்வையில் மேலானவர்களாக இருக்கின்றனர்.   

இப்படி சிறுமையும் எளிமையுமானவர்களை தேவன் கைவிடுவதில்லை என்பதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்." என்று வாசிக்கின்றோம். 

இங்கு "தண்ணீரைத் தேடி" என்று கூறப்பட்டுள்ளது உருவகமாக கூறப்பட்ட வார்த்தைகளாகும். அதாவது பிழைப்புக்கான வழியற்று என்ன செய்வோம் என நிலைகுலைந்து நிற்கும் ஏழைகள் இந்த உலகினில் பலர் உண்டு. அத்தகைய நிலைமையையே "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது" என்று கூறப்பட்டுள்ளது. தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் ஏழை மக்கள் இப்படித் துன்பம் அனுபவிக்கும்போது தேவன் அவர்களுக்கு உதவுவேன் என்கின்றார்.  

ஒருமுறை எனது நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் என்னிடம், "நீங்கள் கடவுள் அன்பும் இரக்கமும் உள்ளவர் என்று கூறிக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் இந்த உலகினில் பசி பட்டினியால் எத்தனையோ ஏழைகள் மடிவதை நீங்கள் காணவில்லையா? கடவுள் அன்புள்ளவரென்றால் ஏன் இதனை அனுமதிக்கின்றார்?" என்று கேட்டார். ஒருவரது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படாதவரை இத்தகைய கேள்விகளுக்கான பதிலை அவர்களுக்குப் புரியவைக்க முடியாது. தேவன் அநீதி செய்பவரல்ல என்பதை நாம் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை; அதனை நாம் விசுவாசிக்கவேண்டும். 

நாம் மனித கண்ணோட்டத்தில் அனைத்தையும் பார்க்கின்றோம். தேவனின் சில திட்டங்களை நாம் உடனே புரிந்துகொள்ள முடியாது.  சில வேளைகளில் குறிப்பிட்டக்  காலம்வரைச் சிலரை, சில நாடுகளை  தேவன் சிறுமைப்படுத்தி வைத்திருப்பார். அது நிரந்தரமல்ல. ஆனால், தனக்கு உகந்த வாழ்க்கை வாழும் எவரையும் தேவன் முற்றிலும் கைவிடுவதில்லை. அதனையே இன்றைய தியான வசனத்தில், "கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்." என்கிறார் தேவன். இதற்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உண்டு. 

இஸ்ரவேல் மக்களை தேவன் எகிப்திலிருந்து விடுதலையாக்கி கானானை நோக்கி வழிநடத்தியபோது அவர்கள் இடுக்கமான ஒரு வாழ்க்கையையே சந்தித்தனர். ஆனால் நாற்பது ஆண்டுகள் தேவன் அவர்களை நடத்தினார். உணவு, இறைச்சி, தண்ணீர் என அவர்கள் அடிப்படைத் தேவைகளைச் சந்தித்தார். "இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப் போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை." ( நெகேமியா 9: 21) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, இன்றைய துன்பங்களையும் கஷ்டங்களையும் கண்டு நாம் துவண்டுபோய்விடவேண்டாம் அவருக்குமுன் உண்மையும் உத்தமுமான வழக்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். ஒருவேளை உலக மக்கள் அனுபவிக்கும் மேலான செல்வங்கள் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால்,  "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்" எனும் வார்த்தைகளின்படி தேவன் நம்மைக் கைவிடாமல் காத்து நடத்துவார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,487    
'ஆதவன்' 💚மார்ச் 04, 2025. 💚செவ்வாய்க்கிழமை  

"அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18: 7)

பலவேளைகளில் நாம் எவ்வளவுதான் ஜெபித்தாலும் நமது ஜெபங்களுக்குத் தேவனிடமிருந்து எந்தப் பதிலும் வராததுபோலத் தெரியும். பல நாட்களாக நாம் ஜெபித்தும் தேவன் அதனைக் கேட்காததுபோல நமக்குத் தெரியும். இதனால் பலர் சிலவேளைகளில் சோர்ந்துபோவதுண்டு. ஆனால் தேவன் நமது ஜெபங்களை மட்டுமல்ல, நமது பிரச்சனையின் ஆழத்தினை, நமது உள்ளக் குமுறல்களை  எல்லாம் நன்கு அறிவார். மட்டுமல்ல, அவர் நமது தகப்பனைப் போன்றவர். எனவே நிச்சயம் நமது ஜெபங்களுக்குப் பதில் தந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துவார். 

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் இப்போது இருப்பதுபோன்ற நீதிமன்றங்கள் இருந்ததில்லை. மாறாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதிகள் (Judges) நகரங்களில் நியமிக்கப்பட்டிருந்தனர். மக்கள் தங்கள் பிரச்சனைகளை அவர்களிடம் கொண்டுசென்றால் அவர்கள் அதனை விசாரித்துத் தீர்ப்புச் சொல்வார்கள். இயேசு இத்தகைய ஒரு நியாயாதிபதியைத் தேவனோடு ஒப்பிட்டு கூறிய உவமையில்  இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார்.   

அந்த நியாயாதிபதியைக்குறித்து அவர் கூறுகின்றார், "அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்." ( லுூக்கா 18: 2) என்று. இத்தகைய நீதிபதிகள் அன்று மட்டுமல்ல, இன்றும் நமது நாட்டில் அதிகம்பேர் உண்டு.  இன்று பணத்துக்கும் பதவிக்கும் மதிப்பளித்து ஏழைகளுக்கு முறையான நீதிவழங்காமல் அவர்களை அவமதிக்கும் நீதிபதிகளை நாம் பார்க்கின்றோம். இயேசு கூறும் நீதிபதி அத்தகையவன்தான். 

இந்த நீதிபதியிடம் ஒரு விதவை ஒரு வழக்குக்காக தீர்ப்புவேண்டி வருகின்றாள். ஆனால் அவன் அவளது குரலை மதிக்கவில்லை. காரணம் விதவைதானே இவளிடம் நமக்குத் தரும்படி பணம் எதுவும் இருக்காது என்று கருதினான்.  எனவே அவளை அவன் புறக்கணித்தான். ஆனால் அவளோ விடாது அவனைத் தொந்தரவு செய்து தனக்கு நீதி வழங்கவேண்டி வற்புறுத்தினாள். இறுதியில் அவளது தொந்தரவு தாங்காமல் அவளது வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்கிறான்.  

இந்த நீதிபதியை இயேசு தேவனோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார், "அநீதியுள்ள இந்த துன்மார்க்க நீதிபதி தன்னை நோக்கிக் கூப்பிட்ட விதவையின்  உபத்திரவத்தைத்  தாங்கமுடியாமல் அவளுக்குத் தீர்ப்புச் செய்தானே, அப்படியானால் நீதியுள்ள தேவன் தன்னை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும் நமது ஜெபங்களுக்குப் பதில்தராமல் இருப்பாரா?" என்று கேட்கின்றார். 

நாம் தேவனுக்கேற்ற நீதியுள்ள வாழ்க்கை வாழ்ந்து வருவோமானால்  நமது ஜெபத்துக்கு தேவனது ஏற்ற பதிலைப் பெறுவோம்.  "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5: 16) என்று கூறுகின்றது வேதாகமம்.

"எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்." (1 பேதுரு 4: 7) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார் பேதுரு. ஆம் அன்பானவர்களே, நமது ஜெபவிண்ணப்பத்துக்கு முடிவு சமீபமாயிற்று. நமது தேவன் அநீதியுள்ளவரல்ல. அநீதியான நியாயாதிபதியே ஏழை விதவையின் தொடர்ந்த கூக்குரலுக்குச் செவிகொடுத்து ஏற்ற தீர்ப்புக் கூறினானென்றால் நீதியுள்ள நியாயாதிபதியான தேவன் நமது ஜெபத்துக்கு ஏற்ற பதில்தராமல் இருப்பாரா? உறுதியுடன் ஜெபத்தில் தரித்திருப்போம்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,489    
'ஆதவன்' 💚மார்ச் 05, 2025. 💚புதன்கிழமை  

"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதனால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது." ( மத்தேயு 5: 13)

தன்மேல் பற்றுக்கொண்டு மெய்யான கிறிஸ்தவர்களாக வாழ்பவர்களை உப்புக்கு இயேசு கிறிஸ்து ஒப்பிட்டுக் கூறுகின்றார். நாம் உண்ணும் உணவுக்கு சுவையூட்ட உப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகுக்குச் சுவையூட்டுபவர்களாக இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் இயேசு, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" என்று நம்மைப்பார்த்துக் கூறுகின்றார். 

உப்பு மிகவும் தேவையான பொருளாக இருப்பதால் நாம் அதனை சமையலறையில் முக்கிய இடம்கொடுத்து வைத்திருக்கின்றோம். ஒருவேளை இந்த உப்பானது தனது சாரத்தை இழந்து  வெறும் சுண்ணாம்புபோல ஆகிவிட்டது என்றால் நாம் அதனைத் தூக்கி வெளியே எறிந்துவிடுவோமல்லவா? அது மனிதர்களால் மிதிபட்டு அழியும். இதுபோலவே சாட்சியற்ற வாழ்க்கையும் இருக்கும் என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

இன்று கிறிஸ்துவை மக்களுக்கு அறிவிக்கவேண்டுமெனும் ஆவலில் உழைக்கும் உண்மையுள்ள ஊழியர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்களது உழைப்பைக் கெடுக்கும் சாரமற்ற கிறிஸ்தவர்கள் மற்றும்  கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் இருக்கின்றனர். தினசரி செய்தித்தாள்களில் பல கேவலமான செயல்கள் செய்யும் கிறிஸ்தவ ஊழியர்களைப்பற்றிய செய்திகள் அன்றாடம் வெளிவருவதை நாம் பார்க்கின்றோம். கொலை செய்துவிட்டு  காவல்துறைக்குத் தப்பி ஓடிஒளியும் குருவானவர், மனைவியைக் கொலைசெய்யும் கிறிஸ்தவ ஊழியன், சிறு பெண்களை பாலியல் சீண்டல் செய்து போக்ஸோ சட்டத்தில் கைதாகும் ஊழியன், கற்பழிப்பு வழக்கிலும் பண மோசடி வழக்கிலும் கைதுசெய்யப்படும் ஊழியர்கள் இவர்களே இயேசு கிறிஸ்து கூறிய சாரமற்ற உப்பாகிப்போனவர்கள். 

இவர்களது பெயர்கள்  பத்திரிகைகளில் நாற்றமெடுத்து மனிதர்களால் மிதிப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் மறுக்கமுடியாது. ஆம், "உப்பானது சாரமற்றுப்போனால், எதனால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது." ஆம் அன்பானவர்களே, இன்று கிறிஸ்தவர்களுக்கு எதிரிகள் வெளியிலில்லை; சாரமற்ற உப்பான கிறிஸ்தவர்களே கிறிஸ்தவத்துக்கு எதிரிகள். 

நாம் போதிக்கும் கிறிஸ்து மற்ற எவரும் அறிவிக்காத தனித்துவமுள்ள தேவ குமாரன் என்பதை மற்றவர்கள் உணர்ந்தால் மட்டுமே அவரை ஏற்றுக்கொள்ளமுடியும்.   அதற்கு சாரமுள்ள உப்பான நமது சாட்சியுள்ள வாழ்க்கைதான் காரணமாக இருக்கமுடியும்.  இன்று பல கிறிஸ்தவர்களைவிட கிறிஸ்துவை அறியாத பலர் நீதி வாழ்க்கை வாழ்கின்றனர். எனவே:- 

"கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளைப்பார்க்கிலும் அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என் கட்டளைகளிலே நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,  இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி, நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன்." ( எசேக்கியேல் 5: 7-9)

அதாவது, கிறிஸ்துவை அறியாத பிறஇன மக்களைவிடக்  கேவலமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு,  அவரை அறிந்திருக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் "சாரமற்ற உப்பாகிப்போனவர்களைத்  தண்டிப்பேன்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். எனவே அன்பானவர்களே, சாரமற்ற உப்பு மனிதர்கள் காலடியில் மிதிபட்டு அழிவதைப்போல நாம் அழிந்துவிடக் கூடாது.  கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்ட நாம் நமது சாரத்தை இழக்காத உப்பாக வாழ்ந்து கிறிஸ்துவுக்குச் சாட்சிபகர்வோம். அதனையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,490    
'ஆதவன்' 💚மார்ச் 06, 2025. 💚வியாழக்கிழமை  

"உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல." ( உபாகமம் 10: 17)

நமது தேவன் இரக்கமுள்ளவர், அன்புள்ளவர் என்று நாம் கூறுகின்றோம் ஆனால் அவர் பயங்கரமான தேவனுமாயிருக்கிறார். "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே." ( எபிரெயர் 12: 29) என்று தேவனது குணத்தைப்பற்றி வசனம் கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே இன்றைய தியான வசனமானது தேவனது நியாயத்தீர்ப்பைக் குறித்துக்  கூறுகின்றது. நியாயத்தீர்ப்பு நாளில் அவருக்குக் கையூட்டுக்கொடுத்து நாம் தப்பிவிடமுடியாது என்று நம்மை இந்த வசனம் எச்சரிக்கின்றது. 

இந்த உலகத்தில் பலரும் தேவனைத் தங்களைப்போன்ற மனித குணம் கொண்ட ஒருவராக எண்ணிக்கொள்கின்றனர். இதனால் மனிதர்கள் தேவனுக்கு ஆராதனை என்று செய்யும் பல காரியங்கள் இத்தகைய மனித எண்ணத்தின் விளைவுகளாகவே இருக்கின்றன. நாம் தேவனையும் அவரது குணங்களையும் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது.  தேவன் மனிதர்களைத் தனது சாயலிலும் ரூபத்திலும் உண்டாக்கியிருந்தாலும் அவர் மனிதர்களைப்போல அற்பமான காரியங்களுக்கு மயங்குகிறவரல்ல; வெற்று ஆராதனைகளுக்கு மயங்குபவரல்ல. இவைகளைவிட மனத் தாழ்மை, உள்ளத்தூய்மை இவைகளையே  தேவன் விரும்புகின்றார் என்பதே உண்மை. 

தேவன் படைத்த இந்த அண்டசராசரங்களைப் புரிந்துகொள்ளவே  இன்னும் மனிதர்களால் முடியவில்லை. நமது காலடியில் இருக்கும் பூமிக்கு அடியில் இருக்கும் காரியங்களையும் கடலின் ஆழத்தில் உள்ள அதிசயங்களையும் மனிதனால் இன்னும் முழுவதும் கண்டறியமுடியவில்லை. ஆம், சர்வ வல்லவரான அவரது அறிவு ஞானம் இவை அளவிடமுடியாதவை. "ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!" ( ரோமர் 11: 33) என்று வியந்து கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.

இதுபோலவே, அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள். அவர் நியாயம் தீர்க்கும்போது  "நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11: 4) இந்த உலகத்திலுள்ள துன்மார்க்க நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்துத் தப்புவதுபோல அவருக்கு நாம் கையூட்டுக் கொடுத்துத்  தப்பி ஓடமுடியாது. அரசியல் பலத்தினால் காவல்துறைக்குத் தப்பி ஒழிந்துகொள்வதுபோல ஒழிந்துகொள்ள முடியாது. 

"நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்." ( சங்கீதம் 139: 8 -10) என்று அவரது வல்லமையினை உணர்ந்துகொண்ட பக்தன் கூறுகின்றான்.  

எனவேதான் நாம் கர்த்தருக்குப் பயந்த நீதியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. அவர் பட்சபாதம்பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. இந்த உண்மையினை நன்றாக உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்." ( சங்கீதம் 119: 62) அதாவது தேவனுக்கு விரோதமான பாவம் ஏதாவது செய்திருப்போமோ எனும் பயத்தால் நடு இராத்திரியில் எழுந்து தேவனைத்  துதித்து மன்னிப்பை வேண்டுவேன் என்கின்றார் சங்கீத ஆசிரியர். 

"உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்." ( சங்கீதம் 119: 120) இத்தகைய பயம் நமக்கு இருக்குமானால் மட்டுமே நாம் நீதியுள்ள வாழ்க்கை வாழமுடியும். இல்லாவிட்டால் துன்மார்க்க மனிதர்கள் கூறுவதுபோல "நியாயத்தீர்ப்பு நாளில்  எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்" என்றுகூறி நமது துன்மார்க்கத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து அழிவோம்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,491    
'ஆதவன்' 💚மார்ச் 07, 2025. 💚வெள்ளிக்கிழமை
 
"தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." (2 கொரிந்தியர் 10: 18)

தற்புகழ்ச்சியுள்ளவன் உத்தமனாக இருக்கமுடியாது என்பதே இன்றைய தியான வசனம் கூறும் உண்மையாக இருக்கின்றது. அதுபோல, மனிதர்களால் புகழப்படும் எல்லோரும் உத்தமர்களல்ல. காரணம், எல்லா மனிதர்களும் எப்போதும் ஒருவரைப் புகழ்வது கிடையாது. ஒருவரைப் புகழும் மனித வாய்களே அவரைச் சிலகாலம் கடந்தபின்னர்  இழவும் வாய்ப்புண்டு. ஆனால் கர்த்தர் ஒருவரைப் புகழ்ந்தால் புகழ்ந்ததுதான். எனவே,  கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இந்த உலகத்தில் மனிதர்களால் புகழப்பட்ட பல தலைவர்கள் அழிந்துபோயினர்; இருந்த இடம்தெரியாமல் போய்விட்டனர். மேலும் அவர்கள் இறந்தபின்னர் அவர்களைப்பற்றிய அவலட்சணமான உண்மைகள் பல வெளியுலகுக்குத் தெரியவந்து இறந்தபின்னரும் அவமானம் அடைகின்றனர். ஆனால் இதற்கு மாறாக, தேவனால் புகழப்பட்ட மனிதர்களோ இன்றும் நமது முன்மாதிரிகளாக நிலைத்து நிற்கின்றனர். தேவனால் மகிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கர்த்தரால் புகழப்பட்ட மனிதர்கள் பலர் வேதாகமத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். மோசேயை, "தேவனுடைய நண்பன்" என்று தேவன் கூறினார்; தாவீதை, "தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவர்" என்றார்; நோவா, "உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனும்" எனத் தேவனால்  புகழப்பட்டான்; "பிரியமான புருஷனாகிய தானியேல்" என்று தானியேலை தேவன் அழைத்தார். அன்னை மரியாளை, "கிருபை பெற்றவள்" என்றும் "பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்றும் தேவன் கூறினார். ஆனால் இவர்கள் வாழ்ந்தபோது இந்த உலகத்தில் பலர் இவர்களுக்கு எதிராகவே செயல்பட்டனர். 

தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் ஒருவரைத் தேவன் எவ்வளவு அதிகமாய் உயர்த்துகின்றாரோ அதுபோல பெருமைகொண்டவரை அவர் தாழ்த்தவும் செய்கின்றார். தற்புகழ்ச்சி பெருமையின் வெளிப்பாடு. பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எப்போதும் எதிராகவே இருக்கின்றார். "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4: 6) 

ஆதியில் தேவனுடைய சந்நிதானத்திலிருந்து சாத்தான் தள்ளப்பட பெருமையே காரணமாக இருந்தது. அழகும் ஒளியும் கொண்ட லூசிபர் எனும் தேவதூதன் பெருமை கொண்டு தன்னைத்  தேவனுக்கு நிகராக உயர்த்தப் பார்த்தான். அதனை அவன் வெளியே சொல்லவில்லை; மாறாக மனதில்தான் எண்ணினான். ஆனால் அந்த எண்ணத்தை அறிந்த தேவன் அவனைப் பிசாசாகப் பாதாளத்தில் தள்ளினார். இதனை நாம் வேதாகமத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." ( ஏசாயா 14: 12 - 15)

ஆம் அன்பானவர்களே, தற்பெருமை எனும் குணம் நமக்கு இருக்குமானால் இதுவே நமது முடிவாகவும் இருக்கும். எனவேதான் இவை  பதிவுசெய்யப்பட்டு நமது நன்மைக்காக வேதாகமத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே நமது செயல்களையும் நமது வாழ்க்கையையும் பிறர் புகழவேண்டும் எனும் எதிர்பார்ப்போடு நாம் வாழாமல் தேவனது கண்களுக்குமுன் புகழ்ச்சி பெறும் வகையில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.  எப்போதும் தேவனையே நமது கண்முன்கொண்டு செயல்படுவோம். 

"தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." எனும் மெய்யான தேவ வார்த்தைகளை எச்சரிக்கையாக மனதினில் கொண்டு தாழ்மையான வாழ்க்கைவாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,492    

'ஆதவன்' 💚மார்ச் 08, 2025. 💚சனிக்கிழமை 

"இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்." ( உபாகமம் 28: 1)

வேதாகமத்தில் ஆயிரக்கணக்கான தேவ வாக்குறுதிகள் உள்ளன. ஆனால் நாம் எந்த வாக்குறுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரு நிபந்தனையுடன்தான் இருக்கும். கிறிஸ்தவர்களில் பலரும்  பொதுவாக இந்த நிபந்தனைகளைக் கவனிப்பதில்லை. மாறாக, "தேவன் இப்படி வாக்களித்துள்ளார், எனவே எனக்கு இந்த வாக்குறுதியின்படிச் செய்து முடிப்பார்" என்று கூறிக்கொள்கின்றனர்.  கிளிப்பிள்ளைகள்போல இந்த வாக்குறுதிகளைச் சொல்லிச் சொல்லி  ஜெபிக்கின்றனர்.  

பல்வேறு விஞ்ஞான விதிகள் எப்படிச் சில நிபந்தனைகளுடன் கூறப்பட்டுள்ளதோ  அப்படியே தேவனும் சில நிபந்தனைகள் வைத்தே வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார்.  விஞ்ஞானம் கூறும் நிபந்தனைகளைக் கவனிக்காமல் நாம் செயல்பட்டால் அவை கூறும் விளைவுகளை எப்படி அனுபவிக்கமுடியாதோ அதுபோலவே தேவன் கூறும் நிபந்தனைகளை நாம் கைக்கொள்ளாமல் இருப்போமானால் அந்த வாக்குத்தத்தங்கள் கூறுபவை நமது வாழ்வில் பலிக்காது. 

உதாரணமாக, தண்ணீரின் வேதியியல் சூத்திரம், H2O, ஒவ்வொரு மூலக்கூறிலும் ஒரு ஆக்ஸிஜன் மற்றும் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதை இது  குறிக்கிறது. இரண்டுபங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்சிஜனும் இணையும்போது மட்டுமே நாம் தண்ணீரைப் பெறமுடியும்.  

இதுபோலவே, இன்றைய தியான வசனம் கூறப்பட்டுள்ள உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் பல ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்கள் உள்ளன. ஆனால் அந்த வாக்குத்தத்தங்களை நாம் சுதந்தரித்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது,  "உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால்" என்று கூறப்பட்டுள்ளது. இதுவே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையின்படி அவரது கட்டளைகளுக்குச் செவிகொடுத்து அவற்றை வாழ்வில் கடைப்பிடித்தால் இவை நமது வாழ்வில் பலிக்கும் என்று பொருள். 

இந்த உபாகம அதிகாரத்தில் தொடர்ந்து கூறப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் 12. ஆனால் இவைகளின்படி நாம் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று கூறப்பட்டுள்ள சாபங்கள் 53. ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகம வாக்குத்தத்த வசனங்களை வாசிக்கும்போது தனியாக அந்த வசனங்களை மட்டும் வாசிக்காமல் அதன் முன்னும் பின்னும் கூறப்பட்டுள்ள காரியங்களையும் சேர்த்து வாசித்து வசனம் கூறும் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும். 

ஒருவேளை நம்மை வழிநடத்தியவர்கள் இந்த உண்மையை நமக்கு உணர்த்தாமல் இருந்திருக்கலாம். இதனால் நாம் அந்த வசனம் கூறும் ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முடியாதவர்களாக இருந்திருக்கலாம். நமது தவறுகளை நாம் திருத்திக்கொள்ளும்போது தேவன் நம்மை ஆசீர்வதிக்கத் தயாராக இருக்கின்றார். அதனை நாம் வேதாகமத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்." ( உபாகமம் 30: 2, 3)

எனவே அன்பானவர்களே, வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைக் கண்டு அவை எல்லாம் தேவனுடைய வாக்குறுதிகள் எனவே எனது வாழ்வில் அவை எனக்குப் பலிக்கும் என எண்ணிடாமல்,  தேவன் முன்வைத்துள்ள நிபந்தனைகளுக்கு முதலில் செவிகொடுப்போம்; அப்போது  அவை நமது வாழ்வில் பலிக்கும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,493    
'ஆதவன்' 💚மார்ச் 09, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை  

"கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்." ( லுூக்கா 11: 34)

ஒரு மனிதனுக்கு கண்ணானது மிக முக்கிய உறுப்பாகும். கண்ணை நாம் இழப்போமானால் வாழ்வே இருளாகிவிடும். மற்றவர்களின் உதவியின்றி நம்மால் எந்தச் செயலையும் செய்யமுடியாது. இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெறும் உலக பொருளில் இந்த வசனத்தைக் கூறாமல் ஆவிக்குரிய பொருளில் கூறுகின்றார்.  

கண்கள், விளக்கு, வெளிச்சம், இருள் என்று இயேசு கிறிஸ்து கூறும் வார்த்தைகள்  உருவக வார்த்தைகளாகும். அதாவது வேத சத்தியங்களை கூர்ந்து பார்க்கும் அறிவாகிய கண்கள், அந்த சத்தியங்களை அறிந்துகொண்ட அறிவாகிய விளக்கு, அதன்மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் மனத்தெளிவாகிய வெளிச்சம், இவைகள் எதுவுமற்ற மனத்தின் இருள் இவைகளையே இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.  

தேவனது வார்த்தைகளைக் கவனித்துப்பார்கும்படி நமது கண்ணானது தெளிவாக இருக்குமானால் நமது உடலானது பாவக்கறையின்றி முழுவதும் வெளிச்சமாக இருக்கும். காரணம் தேவனது வார்த்தைகள் நம்மைத் தெளிவான பாதையில் நடத்திடும். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119: 105) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். 

இப்படி நமது கண்கள் தேவனது வார்த்தைகளைத் தெளிவாகக் கண்டுகொண்டு அவரது வார்த்தையின்படி நாம் நடப்போமானால் நமது உடலானது முற்றிலும் ஒளிபொருந்தியதாக இருக்கும். இருளான இடத்தில் ஒரே  ஒரு விளக்கு இருந்தாலும் அது தனது ஒளியால் மற்றவர்களுக்கு உதவியாக ஒளிகொடுத்து உதவுவதுபோல இருளான மக்கள் மத்தியில் ஒளியுடன் வாழும் மெய்யான கிறிஸ்தவனும் இருப்பான். இதனை, "உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்" ( லுூக்கா 11: 36) என்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

இதனால்தான் அப்படி வாழ்பவர்களை இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5: 14) என்றார். 

இதற்கு மாறாக தேவ வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்போமானால் நமது கண்கள் கெட்டுப்போய்விட்டன என்று பொருள்.  இப்படி நமது கண் கெட்டதாயிருந்தால் நமது சரீரம் முழுவதும் பாவத்தில் மூழ்கி இருளாயிருக்கும். "உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!"  (மத்தேயு 6:23) 

ஆம் அன்பானவர்களே, "கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழும் நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே."  (1 தெசலோனிக்கேயர் 5:5)    என்கிறார் அப்போஸ்தலரான பவுல். எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருந்து இருள் நம்மைப் பற்றிக்கொள்ளாமல் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ்வோம்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,494    
'ஆதவன்' 💚மார்ச் 10, 2025. 💚திங்கள்கிழமை  

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதனாலே வருகின்றன; உங்கள் அவயவங்களின்  போர்செய்கிற இச்சைகளினாலல்லவா?" (யாக்கோபு 4;1)

இந்த உலகத்தில் மனிதர்களுக்குள் சண்டைகள், குடும்பங்களுக்குள் பிளவுகள், நாடுகளுக்கிடையே போர்கள் இவை ஏற்படக் காரணம்  மனிதர்களின் உடலிலுள்ள போர்ச்செய்கின்ற இச்சைகளினால் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது மனித உடலின் ஒவ்வொரு அவயவமும் இந்த இச்சை எனும் வெறியினால் நிறைந்திருப்பதால்தான் இவை ஏற்படுகின்றன என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, அடுத்தவன் வைத்திருக்கும் சொத்து சுகங்கள் அல்லது பதவிகள் தனக்கும் வேண்டும் எனும் இச்சையானது  தனக்கு அவை கிடைக்கவில்லை எனும்போது பொறாமையாக மாறுகின்றது. இது மனிதர்களுக்குள் சண்டையை, பகையை ஏன் கொலையையே ஏற்படுத்துகின்றது.   

உலகின் முதல் கொலை பொறாமையினால்தான் உண்டானது. காயினும் ஆபேலும் தேவனுக்குப் பலி செலுத்தும்போது தேவன் காயீனின் பலியினை ஏற்றுக்கொள்ளவில்லை. "காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது." ( ஆதியாகமம் 4: 5) இதுவே அவன் தனது சகோதரனைக் கொலைசெய்யக் காரணமாயிற்று. 

நமது அவயவங்களின் இந்த போர்புரிகின்ற இச்சை மாறும்போது மட்டுமே பரிசுத்தமானவர்களாக வாழமுடியும்; நாம் குடும்பத்திலும் நாட்டிலும் உலகத்திலும் சமாதானத்தைக் காணமுடியும். சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையினை பலரும் வீடியோ காட்சியாகப் பார்த்திருக்கலாம் அல்லது செய்தியாக வாசித்திருக்கலாம். அமெரிக்க அதிபரின் போர்புரியும்  இச்சையினை இது தெளிவாக நமக்குக் காண்பித்தது. 

நமது உடலை நாம் பரிசுத்தத்துக்கு ஒப்புக் கொடுக்கும்போது மட்டுமே இத்தகைய  எண்ணங்கள் மனிதனிலிருந்து மறையும். இதனாலேயே அப்போஸ்தலரான பவுல், "உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்" ( ரோமர் 6: 19) என்று கூறுகின்றார். 

தனி மனித வாழ்விலும் நம்மோடு போர்ச்செய்கின்ற இச்சை குணங்கள் நம்மை பாவத்துக்கு நேராக இழுத்துச் செல்கின்றன. "ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." ( கொலோசெயர் 3: 5) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

"உன் வலதுகண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்." ( மத்தேயு 5: 29) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

எனவே  குடும்பத்தில் சமாதானமும் நமக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் வராமலும் இருக்கவேண்டுமானால் நமது  அவயவங்களில் போர்செய்கிற இச்சைகள் ஒழிக்கப்படவேண்டியது அவசியம். பரிசுத்த ஆவியானவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போது மட்டுமே அது சாத்தியமாகும். எனவே ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். பூரண சமாதானம் நம்மிலும், குடும்பத்திலும், நாட்டிலும் உலகத்திலும் அப்போது மட்டுமே சாத்தியமாகும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,495    
'ஆதவன்' 💚மார்ச் 11, 2025. 💚செவ்வாய்க்கிழமை  

"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுக்காரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11: 31)

வரி வசூல் செய்யும் மக்களையும் பாலியல் தொழிலாளர்களையும் பாவிகள் என்று யூத சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்தது. அவர்களோடு பழகுவதற்குத் தயக்கம் காட்டியது. ஆனால் அவர்களும் மனம்திரும்பும்போது தேவனுக்கு உகந்தவர்கள் ஆகின்றனர். இதனால்தான் மனம் திரும்பிய சகேயுவைக்குறித்து இயேசு கிறிஸ்து, "இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே" (லூக்கா 19:9)  என்று  பாராட்டிக் கூறினார். விபச்சாரத்தில் கையும்மெய்யுமாய் பிடிபட்டப்  பெண்ணை மன்னித்தார். ஆம் அன்பானவர்களே, "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10)  

நாமும் பலவேளைகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை வேசிகள் எனும் கொச்சையான வார்த்தையால் குறிப்பிடுகின்றோம். ஆனால் இத்தகைய பெண்களோடு பழகிப்பார்க்கும்போது அவர்கள் பலவிதங்களில்சாதாரண வாழ்க்கை நடத்தும் பெண்களைப் போலவே இருக்கின்றனர். அவர்களும் ஜெபிக்கின்றனர், தர்மம் செய்கின்றனர், ஆராதனைகளில் கலந்துகொள்கின்றனர், இரக்கச்செயல்கள் பலச்செய்கின்றனர்.     

நான் ஒரு தொண்டு நிறுவனத்தில்  பணியாற்றியபோது இத்தகைய பெண்களோடு பழகும்  வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். தேவனது சத்தியங்களை அறிந்துகொள்வதற்காகவே இந்த வாய்ப்பினை தேவன் எனக்குத் தந்திருந்தார் என எண்ணுகிறேன். அந்த நிறுவனம்  இந்தப் பெண்களின் வாழ்க்கைக் கதையைத் தொகுத்து புத்தகமாக வெளியிடமுயன்றபோது அந்தப்பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நான் நூற்றுக்கணக்கான பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு பேசி, கண்டுகொண்டது, விருப்பத்தோடு இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் வெகுசிலர்தான். மற்றவர்கள் அவர்கள் வளர்ந்த சுற்றுச்சூழல், குடும்பச் சூழ்நிலை காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதே. 

ஆம் அன்பானவர்களே, இன்று தியான வசனத்தில் குறிப்பிடப்படும் ராகாப் என்பவளும் அப்படிப்பட்டவள்தான். அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தபோதும் கர்த்தரையும் அவரது வல்லமையையும் உணர்ந்திருந்தாள். இஸ்ரவேல் மக்களில் பலர் விசுவாசித்ததைவிட அதிகமாக கர்த்தர் எரிகோவை இஸ்ரவேல் மக்களுக்கு நிச்சயமாகக் கொடுப்பார் என்பதை அவள் விசுவாசித்தாள். மட்டுமல்ல,  ".........உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்." ( யோசுவா 2:11) என்று தனது விசுவாசத்தை அறிக்கையிட்டாள். 

எனவேதான் எபிரெய நிருப ஆசிரியர் அவளை விசுவாசிகளின் பட்டியலில் சேர்த்துள்ளார். இதனையே நாம், "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுக்காரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்." என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, எனவே நாம் பாவிகள் என்று  யாரையும் அற்பமாக எண்ணவேண்டாம். இந்தச் சமுதாயத்தில் நல்லவர்கள் என்று பெயர்பெற்றவர்கள், போதகர்கள், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும்  பலர் ரகசிய பாவங்களில் விழுந்து கிடக்கின்றனர். ஆனால் அவர்களை சமுதாயம் உயர்வாகக் கருதுகின்றது. இஸ்ரவேல் மக்களிடையேயும் இப்படிப்பட்ட எண்ணமே இருந்தது. எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களிடம் கூறினார், ".........ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21: 31)

எத்தகைய கொடிய பாவத்தில் விழுந்திருந்தாலும் தேவனிடம் முழு இருதயத்தோடு மன்னிப்பை வேண்டுவோம். மன்னிப்பதற்கு அவர் தயை மிகுந்தவராகவே இருக்கிறார். "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." (ஏசாயா 55;7)

வேதாகமத் தியானம் - எண்:- 1,496    
'ஆதவன்' 💚மார்ச் 12, 2025. 💚புதன்கிழமை  

"இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்." ( மாற்கு 10: 27)

நாம் தேவனை சர்வ வல்லவர் என்றுகூறுகின்றோம். இதன் பொருள், அவருக்கு எந்தச் செயலையும் செய்யும் வல்லமை உண்டு என்று பொருள். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த அண்டசராசரங்களை உருவாக்கியவர் அவர். இல்லாதவைகளை இருக்கின்றவையாக மாற்றுகின்றவர் அவர். 

இன்றைய தியான வசனம் கூறப்பட்டப் பின்னணியைப் பார்ப்போமானால், பொருளாசை கொண்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது  மிகவும் கடினமான காரியம் என்று இயேசு கூறினார். இதனையே அவர், "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்." ( மாற்கு 10: 25) இதனைக்கேட்ட சீடர்களும் யூதர்களும் அப்படியானால் யார்தான் அதில் பிரவேசிக்கமுடியும் என்று ஆச்சரியப்பட்டார்கள். அவர்களைப் பார்த்துத்தான் இயேசு இன்றைய தியான வசனத்தைக் கூறினார். 

ஆம் அன்பானவர்களே, மனிதர்களால் கூடாதவை தேவனால் கூடும்.  பணம் படைத்தவர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்று இயேசு கூறவில்லை. மாறாக, மற்றவர்களைவிட அவர்கள் அதில் பிரவேசிக்க அதிக முயற்சியெடுக்கவேண்டும் என்றுதான் கூறுகின்றார். காரணம், ஒருவரிடம் அதிகமான பணம் சேரும்போது கூடவே அதிகமான கெட்டப்  பழக்கவழக்கங்களும் சேர்ந்துகொள்ளும். மட்டுமல்ல, அவர் பெருமைகொண்டு தனது சுய பலத்தை நம்பி வாழ்வார்; மற்றவர்களை அற்பமாக எண்ணி நடத்துவார்.  இத்தகைய குணங்களை அவைகளை விட்டு விலக்குவது அவர்களால் பெரும்பாலும் முடிவதில்லை. 

ஆனால், அத்தகையவர்களும் தேவனுடைய ஆவியானவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து வாழும்போது தேவன் அவர்களுக்குத் தங்கள் வழிகளைவிட்டு தேவ வழியில் நடக்க உதவிடுவார். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பல தேவ மனிதர்கள் செல்வந்தர்களாக இருந்தவர்கள்தான். ஆபிரகாம், யாக்கோபு போன்றதனி மனிதர்களும்,  ஆட்சி அதிகாரம் பெற்றிருந்த  தாவீது ராஜா, எசேக்கியா ராஜா போன்றவர்களும் இதற்கு உதாரணம்.  ஆம், இவர்களெல்லாம் "மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்" எனும் வசனத்தின்படி தேவனுடைய ராஜ்யத்தை உரிமையாக்கிக்கொண்டவர்கள். 

நாம் பொருளாசை எனும் இச்சையில் விழுந்து கிடப்போமானால் நம்மால் மேலான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை உரிமையாக்கமுடியாது. மட்டுமல்ல, தேவனுடைய ராஜ்யத்துக்கும் நாம் அந்நியராகிவிடுவோம். இன்றைய தியான வசனம் கூறுவதுபோல பொருளாசைக்கு நாம் விலகி வாழ்வது மனித முயற்சியால் கூடாதது. ஆனால் தேவனைச் சார்ந்து இருப்போமானால் இது கூடும். 

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்". (2 கொரிந்தியர் 12:9) என்று அப்போஸ்தலரான பவுலுக்குத் தேவன் கூறவில்லையா? இந்த வசனத்தின்படி, பொருளாசை எனும் பலவீனம் நமக்கு இருக்குமானால் அதனை தேவனிடம் அறிக்கையிடுவோம். நமது பலவீனத்திலே தேவனது பலம் பூரணமாய் விளங்கும். அப்போது மனுஷரால் கூடாதது தேவனால்  கூடும் எனும் வசனத்துக்கேற்ப நமது பொருள் சார்ந்த பலவீனம் நம்மைவிட்டு அகலும். ஆம், தேவனது வல்லமையால் ஒட்டகமும் ஊசியின் காதினுள் நுழையும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,497    
'ஆதவன்' 💚மார்ச் 13, 2025. 💚வியாழக்கிழமை  

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59: 2)

"கடவுள் என ஒருவர் உண்டுமா கிடையாதா?", "உண்டு என்றால் அவர் எங்கே இருக்கிறார்?", "ஏன் அவர் மனிதர்களுக்கு மறைவாக இருக்கிறார்?", "நான் காணும்படி அவர் என்முன் வரட்டும் நான் அப்போது நம்புகிறேன்" இப்படி விதண்டாவாதம் பேசும் மக்களுக்கும் தங்கள் வாழ்வில் தேவனை மெய்யாக அறிந்துகொள்ளாமல் வெறுமனே பெயரளவுக்கு ஆராதனை செய்து கிறிஸ்தவர்களாக வாழ்பவர்களுக்கும்  தேவன் இன்றைய தியான வசனம் மூலம் விளக்கமளிக்கிறார்.  

அதாவது, "முதலில் நீ உன் கண்ணில் போடப்பட்டிருக்கும் கண்கட்டை அவிழ்ந்துவிடு. அப்போது என்னைப்பார்க்க உன் கண் தெளிவடையும்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். ஆம் அன்பானவர்களே, கண்ணை மறைத்துக்கொண்டு தேடினால் எதனையும் கண்டடையமுடியாது. முதலில் கண் திறக்கப்படவேண்டும். நாம் தேவனுக்கு எதிராகச் செய்யும் பாவங்களே நமது கண்கட்டு. 

தேவனுக்கு எதிராக நாம் செய்யும் பாவங்கள் சிறுகச் சிறுக வளர்ந்து அவருக்கும் நமக்கும் பிரிவினை உண்டாக்கி இருக்கிறது. இந்தப்பிரிவினை மாறும்போது மட்டுமே அவரை நாம் கண்டுகொள்ள முடியும்.  இரண்டுபேர் எதிரெதிரே இருந்தாலும் அவர்களுக்கிடையே ஒரு சுவர் இருக்குமானால் ஒருவரையொருவர் எப்படிக் கண்டுகொள்ள முடியாதோ அப்படியே பாவச்சுவரானது ஒருவர் முகத்தை ஒருவர் காணாதவாறு நம்மையும் தேவனையும்  பிரிக்கின்றது. 

இந்தப் பாவச்சுவர் மறையும்போது நாம் அவரைக் காண்பது மட்டுமல்ல, மேற்கொண்டு நாம் பாவத்தில் விழாதபடி அவரால் காப்பாற்றப்படுகின்றோம். இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை." (1 யோவான்  3 : 6) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, பாவச்சுவர் அகற்றப்பட்டு நாம் அவரோடு நிலைத்திருக்கவேண்டியது அவசியம். அப்போது நாம் மேற்கொண்டு பாவம் செய்யமாட்டோம். 

வேத வசனங்கள் வெறுமனே எழுதப்பட்ட வெற்று  வார்த்தைகளல்ல. அவை வாழ்வுதரும் மெய்யான வார்த்தைகள். மெய்யாகவே நாம் தேவனை அறியவேண்டுமெனும் ஆர்வமுள்ளவர்களாக இருப்போமானால் முதலில் நம்மை நாமே ஆராய்ந்துபார்த்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடவேண்டியது அவசியம். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான்  1 : 9)

ஆனால் இன்று தேவனை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு ஆலயங்களுக்குச் செல்லும் பலரும் கூடத் தங்களைப் பாவி என்று ஒத்துக்கொள்வதில்லை. "நான் என்ன பெரிய பாவம் செய்துவிட்டேன்?", என்றும் "நான் கொலை செய்தேனா? கற்பழித்தேனா? அடுத்தவனை வஞ்சித்தேனா?" என்றும் கூறித் தங்களையே நீதியானவர்கள் என்று எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர்.  இத்தகையவர்களைப்  பார்த்து  இயேசு கூறுகின்றார், "நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது." ( யோவான் 9: 41)

எனவே அன்பானவர்களே, தேவனுக்கு விரோதமான செயல்பாடுகள் நம்மிடம் உண்டுமானால் அவரிடம் அவற்றை முழு மனத்தோடு அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். மெய்யான மனஸ்தாபத்தோடு வேண்டும்போது நமது பாவங்களை மன்னித்து தன்னை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். ஆம், "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது." (1 யோவான்  1 : 8) நம்மை நாமே வஞ்சிக்காமல் வாழ்வோம். பாவ மன்னிப்பினைப் பெற்று தேவனை வாழ்வில் அறிந்துகொள்வோம். 

"...அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான்  1 : 7)

வேதாகமத் தியானம் - எண்:- 1,498    
'ஆதவன்' 💚மார்ச் 14, 2025. 💚வெள்ளிக்கிழமை  

"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." ( சங்கீதம் 84: 5)

நாம் மண்ணினாலான வெறும் மனிதர்கள்தான். தேவனது சித்தமில்லாமல் நம்மைக்கொண்டு  எதனையும் செய்யமுடியாது. இந்த உண்மை எப்போதும் நமக்குள் நினைவிருக்கவேண்டியது அவசியம். இந்த எண்ணம் நமக்குள் இருக்குமானால் நாம் எதற்கும் தேவனையே சார்ந்திருப்பவர்களாக வாழ்வோம். 

நமது உடலில் பலமிருக்கும்போது, அல்லது பணம்,  நல்ல வேலை, நல்ல பதவி இருக்கும்போது இதனை நாம் எண்ணுவதில்லை. காரணம், நமது பணம், பதவி, செல்வாக்கு இவைகள் பல காரியங்களைச்  சாதிக்க உதவக்கூடும். ஆனால் நாம் இவைகளை நிரந்தரம் என எண்ணி வாழும்போது இவைகளை இழக்கும்போது மிகவும் பாதிப்படைந்தவர்களாக மாறிவிடுவோம். 

ஆம் அன்பானவர்களே, அதனால்தான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." என்று. அதாவது முதலில் நாம் தேவனில், தேவனது அன்பில், அவரது ஐக்கியத்தில் பலம்கொள்ளவேண்டும். இரண்டாவது, நமது இருதய சிந்தனை செம்மையானதாக இருக்கவேண்டும். அதாவது, நாம் இருதய சுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும். 

தேவனோடுள்ள உறவில் நாம் பலப்படும்போது மட்டுமே நமது வாழ்க்கை வித்தியாசமான வாழ்க்கையாக மாறும். தேவனில் பலம்கொள்ளும்போது, நமது இருதய சிந்தனையும் செயல்பாடுகளும் இயல்பாகவே தேவனுக்கு உகந்தவையாக மாறும். நாம் நல்ல வழியில் வாழ்பவர்களாக மாறுவோம். 

இப்படி நாம் தேவனில் பலம்கொள்ளும்போது நமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதனை சங்கீத ஆசிரியர் தொடர்நது வரும் வசனத்தில் கூறுகின்றார்,  "அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்." ( சங்கீதம் 84: 6, 7)

அதாவது, நாம் தேவனில் பலம் கொள்ளும்போது நமது வாழ்க்கையில் வரும் துன்பங்கள், பிரச்சனைகள், கண்ணீர்கள், கவலைகள் இவைகளை நாம் எளிதில் மேற்கொண்டு வாழ்க்கையில் களிப்பைக் காணும்படி தேவன் உதவிடுவார். வறண்ட குளம் போன்ற நமது வாழ்க்கையில் செழிப்பின் மழை பொழிந்து அதனை நிரப்பும். எல்லாவற்றுக்கும் மேலாக,  நாம் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவோம் என்று கூறப்பட்டுள்ளது. 

சுருங்கக் கூறினால், நாம் தேவனால் பலம்கொண்டவர்களாக வாழும்போது நமக்கு இம்மையிலுள்ள துன்பங்களுக்குத் தீர்வும், மகிழ்ச்சியும் மறுவுலக வாழ்வும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் அன்பானவர்களே, ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்கள் இன்று பல்வேறு துன்பங்களில் சிக்கிச் சோர்ந்து போயிருக்கலாம். இனி நமக்கு தேவ துணை கிடைக்குமா என்று எண்ணலாம். ஆனால் தேவ வசனம் கூறுகின்றது, "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." ( ஏசாயா 40: 29)

எனவே, சோர்வு வேண்டாம், தயக்கம் வேண்டாம், தேவ சந்நிதியில் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். தேவ பலம் நம்மை நிரப்ப வேண்டுவோம். அவரில் பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள் எனும் வசனத்தின்படி தேவன் நம்மை பாக்கியவான்களாக மாற்றுவார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,499    
'ஆதவன்' 💚மார்ச் 15, 2025. 💚சனிக்கிழமை  

"மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?." ( மீகா 6 : 8 )

இன்று மனிதர்கள் செய்யும் பக்திச்  செயல்பாடுகளுக்குக் குறைவில்லை. தெருவுக்குத் தெரு கோவில்களும், அந்தக் கோவில்களில் நடைபெறும் ஆராதனைகளும், ஆலயக் காரியங்களுக்கு என மக்கள் ஓடிஓடிச் செய்யும் பல்வேறு பக்திச் செயல்பாடுகளுக்கும் குறைவில்லை. ஆனால் நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்பாடுகளுக்கும் குறைவில்லை. ஆன்மிகம் அதிகரித்துள்ளது மெய்யென்றால் நாட்டில் பாவக்காரியங்கள் குறைந்திருக்கவேண்டும்.

இதன்மூலம் நாம் அறிவது, மக்கள் ஆன்மிகம் என்று எண்ணிக்கொள்ளும் காரியங்கள் மெய்யான ஆன்மீகக் காரியங்களல்ல;  அவர்கள் தேவ நோக்கத்தைச் செய்யாமல் தங்களது மனது எண்ணியபடி சில செயல்பாடுகளைச்  செய்து தங்களை ஆன்மீகவாதிகள் என்று காட்டிக்கொள்கின்றனர். அதாவது ஆன்மிகம் எனும் பெயரில் சில சரீர ஒடுக்கச் செயல்பாடுகளைச்  செய்து அதனால் தேவனைத் திருப்திப்படுத்தலாம் என்று எண்ணிக்கொள்கின்றனர். இன்று மனிதர்கள் செய்யும் பல காரியங்கள் இத்தகையதே.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது." ( கொலோசெயர் 2 : 21 - 23 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, குறிப்பிட்டக் காலங்களில் ஒரு அசைவ உணவுகளைத் தவிர்ப்பது, உள்ளத்தில் மெய்யான பக்தியில்லாமல், எல்லோரும் செய்கிறார்களே என்று  பணிந்து குனிந்து வணங்குவது, தாடி வளர்ப்பது,  இவைபோன்ற செயல்களை ஞானம் என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இவைபோன்ற செயல்கள் ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள்  நமது உடலைப் பேணலாமேத்தவிர இவைகளால் வேறு பயனில்லை. 

அப்படியானால் எதுதான் தேவன் விரும்புவது? அதனையே இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது, "மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?." என்று. அதாவது நாம் செய்யவேண்டிய காரியங்களைத்  தேவன் நமக்குக் கட்டளைகளாகத் தந்துள்ளார். அவற்றைக் கடைபிடித்து, நீதி, நியாயம், இரக்கம் கொண்டு தேவனுக்குமுன் மனத்தாழ்மையாக நடப்பதையே தேவன் விரும்புகின்றார். 

"இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்" ( ஏசாயா 1 : 13 - 16 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

ஆம் அன்பானவர்களே, பக்திச்  செயல்பாடுகள் என்று பலமணிநேரங்கள் தேவையற்ற செயல்பாடுகளில் மூழ்கி அப்படிச் செய்வதால் தேவன் நம்மேல் பிரியமாய் இருப்பார் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் தேவனுக்கேற்ற ஆவிக்குரிய மனிதர்களாக வாழ முயலுவோம்.  அரசியல் தலைவர்கள் ஒருவேளை இவைகளை விரும்பலாம், நமது தேவன் அரசியல் தலைவரல்ல, அவர் ஆத்தும மீட்பர்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,500    
'ஆதவன்' 💚மார்ச் 16, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை  

"புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." ( தீத்து 3 : 9 )

தர்க்கங்கள், வம்ச வரலாறுகள் குறித்தச்  சண்டைகள், வாக்குவாதங்கள் இவைகளை தேவன் விரும்புவதில்லை. இன்று பல  கிறிஸ்தவர்களிடையே இத்தகைய தர்க்கங்களும் வாக்குவாதங்களும் நிலவுவதை நாம் பலவேளைகளில் காணலாம். தாங்கள் விசுவாசிக்கும் திருச்சபைப்பிரிவின்  கோட்பாடுகள்தான் சரியானவை, வேதபூர்வமானவை என்பதனை உறுதிப்படுத்தவே இந்தச் சண்டைகளும் வாக்குவாதங்களும். ஆனால் "அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

கிறிஸ்து இயேசு அளிக்கும் மீட்பு அனுபவம்தான் மெய்யேத்தவிர தேவையற்ற வாக்குவாதங்கள் உபயோகமற்றவை. அத்தகைய வாக்குவாதங்கள் நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு எந்த நன்மையையும் கொண்டுவரப்போவதில்லை. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்." ( 1 கொரிந்தியர் 2 : 2 ) என்று கூறுகின்றார்.

கிறிஸ்து தனது இரத்தத்தால் சம்பாதித்த மீட்பினை ஒருவரும் கெட்டுப்போகாமல் அனைவரும் பெறவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதமாவதற்கு இதுவும் ஒரு காரணம். இதனை அப்போஸ்தலரான பேதுரு, "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று கூறுகின்றார்.

பெரிய பாரம்பரிய கிறிஸ்தவ சபைகளைத்தவிர உலகினில் இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்டக் கிறிஸ்தவப் பிரிவுகள் உள்ளன. இதுதவிர தனிநபர் ஊழியங்களுக்குக் கணக்கே இல்லை. எல்லோரும் தங்களது கோட்பாடுகளை உறுதிப்படுத்த முயன்று கொண்டிருந்தால் கிறிஸ்துவை யார்தான் அறிவிப்பது? எனவே,  புத்தியீனமான தர்க்கங்களையும், சண்டைகளையும்,   வாக்குவாதங்களையும் விட்டு விலகவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

கிறிஸ்து நமக்குள் வரும்போது நமக்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். கிறிஸ்துவின்மேல் ஒரு தீவிர அன்பு ஏற்படும். அப்படி ஏற்படும்போது மற்ற காரியங்களை நாம் கவனிக்கமாட்டோம். அப்படி கிறிஸ்து ஒருவனுக்குள் வரவில்லையானால் அவன் தர்க்கம் செய்பவனாகவே இருப்பான். பாரம்பரிய சபையிலுள்ள சில குருக்கள் பிற சபைகளுக்குச் செல்லும் மக்களை "வழி தப்பிய ஆடுகள்" என்றும் பிற சபை ஊழியர்களை "ஆடுதிருடர்கள்" என்றும் பிரசங்கிப்பதைக் கேட்டிருக்கிறேன். இதற்குக் காரணம் இவர்கள் இன்னும் கிறிஸ்துவை அறியவில்லை என்பதே. 

இதுபோலவே சில பெந்தேகோஸ்தே சபைகளில் பாரம்பரிய சபைகளுக்குச் செல்லும் மக்களை, "நரகத்துக்குச் செல்லும் கூட்டம்" என்று கூறுகின்றனர்.  அதாவது ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இத்தகைய பெந்தேகோஸ்தே சபைகள் ஆவியில்லாத சபைகளே. 

எனவே அன்பானவர்களே, நாம் இத்தகைய தவறான வாக்குவாதங்களில் ஈடுபடாமல், இத்தகைய பேச்சுகளுக்குச் செவிகொடாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அவரது அன்பையும் மட்டும்  வாழ்வில் ருசிக்கக் கற்றுக்கொள்வோம். "அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்." ( லுூக்கா 12 : 8 ) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. வீண் வாக்குவாதங்களிலும்  சண்டைகளிலும் ஈடுபடாமல் கிறிஸ்துவை அறிக்கைபண்ணும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முயலுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,501    
'ஆதவன்' 💚மார்ச் 17, 2025. 💚திங்கள்கிழமை  

"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 55 : 8 )

மனித நினைவுகள், மனித வழிகள் இவைகள் தேவ நினைவுகளையும் வழியையும் விட தாழ்ந்தவைகள். மனித அறிவு குறைவுள்ளது. இந்தக் குறைந்த அறிவைக்கொண்டுதான் நாம் சிந்திக்கின்றோம், செயல்படுகின்றோம். குறைந்த அறிவு குறைவாகவே சிந்திக்கும். மேலும், நாம் எல்லாவற்றையும் உலக நோக்கோடும் உலக ஆதாயத்தோடும் மட்டுமே பார்க்கப் பழகியுள்ளோம். அனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல. எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அவர், என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று சொல்லுகிறார்.

தேவனது அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. வானத்துக்கு எப்படி நாம் எல்லையைக் குறிக்கமுடியாதோ அப்படியே தேவனது அறிவும் அவரது நினைவுகளும் உள்ளன. இதனையே இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனமாக நாம் வாசிக்கின்றோம், "பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கின்றன." ( ஏசாயா 55 : 9 ) என்று.

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோதும் இதனையே யூதர்களுக்குக் கூறினார். "அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல." ( யோவான் 8 : 23 ) என்று வாசிக்கின்றோம். 

ஆவிக்குரிய மனிதர்கள் இந்தச் சத்தியத்தை உணர்ந்துகொண்டாலும் சாதாரண உலகு சார்ந்து வாழும் மக்கள் இதனை உணர்ந்துகொள்வதில்லை. எனவே, இந்த உலகத்தில்  அசம்பாவிதச் செயல்கள் நடக்கும்போது அவர்கள், "தேவன் என ஒருவர் உண்டு என்றால் ஏன் இவ்வாறு நடக்க அனுமதிக்கின்றார்?" எனக் கேள்வி கேட்கின்றனர். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பலரும் இதனாலேயே மேலும் தங்கள் மனது கடினப்பட்டு தேவனை அறியாமல் இருக்கின்றனர். காரணம் அவர்கள் தங்களது குறைந்த மனித அறிவால் அனைத்தையும் பார்த்து எடைபோடுகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, நமக்கும் வாழ்வில் நடக்கும் சில எதிர்மறையான காரியங்களைப் பார்த்து சிலவேளைகளில்  தேவனைக்குறித்த சந்தேகங்கள் எழலாம்; நமது விசுவாசத்தைக் குறைக்கக்கூடிய சிந்தனைகள் நம்மில் எழலாம். ஆனால் "நம்முடைய அறிவு குறைவுள்ளது" ( 1 கொரிந்தியர் 13 : 9 ) என்ற இந்தச் சிந்தனை எப்போதும் நமக்கு இருக்குமானால் நாம் தேவனை சந்தேகிக்கமாட்டோம்.  பூமியைவிட, வானங்களைவிட மேலான தேவ சிந்தனையையும் வழிகளையும் நாம் அறியமுடியாது. எனவே அவரது சித்தத்துக்கும் வழிகளுக்கும் நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோம். 

"மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." ( 1 கொரிந்தியர் 15 : 48 ) வானத்துக்குரியவர்களாக நாம் மாறும்போது மட்டுமே வானத்துக்குரியவரின் சிந்தனைகளையும் வழிகளையும் நாம் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியும். மண்ணான நாம் அவரது சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வதையே தேவன் விரும்புகின்றார்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,502    
'ஆதவன்' 💚மார்ச் 18, 2025. 💚செவ்வாய்க்கிழமை  

"ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்." ( எபிரெயர் 12 : 1 )

நாம் பாவத்திலிருந்து மன்னிப்பைப்பெற்று மீட்பின் அனுபவத்தைப் பெறும்போது ஆவியானவரின் வழிநடத்துதலுக்குள் வருகின்றோம். இந்த அனுபவத்துக்குப்பின்னர் தேவன்மேலுள்ள நமது விசுவாசம் படிப்படியாக வளரத் துவங்குகின்றது. இப்படி நமது விசுவாசத்தைத் துவங்குகின்றவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். மீட்பு அனுபவம் நமக்கு இல்லாமல் இருக்குமானால் நாம் உறுதியான விசுவாசத்தில் வளரமுடியாது. 

எபிரெயர் நிருபத்தில் நீண்ட விசுவாசிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்நது எழுதும்போது நிருப ஆசிரியர், "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க" என்று தொடர்கின்றார். அதாவது இத்தனை விசுவாச சாட்சிகள் நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்போது  நாம் ஏன் தயங்கவேண்டும்? ஏன் விசுவாசத்தில் குறைவுபடவேண்டும்? 

எனவே, நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாரமான யாவற்றையும், பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் என்கின்றார். பாரமான காரியங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது உலகத்தில் நம்மை நெருக்கும் துன்பங்களைக் குறிக்கின்றது. இந்தத் துன்பங்களையும்  நமது  விசுவாச வாழ்வைக் கெடுக்கும் பாவங்களையும் கண்டு துவண்டுவிடாமல்,  பாவ சூழ்நிலைகளை உதறித்  தள்ளிவிட்டு கிறிஸ்துவை மட்டுமே நோக்கி நமது பயணத்தைக் தொடரவேண்டும். 

ஓட்டப்பந்தயங்களில் இறுதி இலக்கைக்  குறிக்க அங்கு ஒரு சிகப்புக்  கயிறு கட்டியிருப்பார்கள். அதுதான் இலக்கு. அந்த இலக்கை முதலில் அடைபவன் வெற்றிபெறுவான். ஆவிக்குரிய ஓட்டத்தில் இறுதி இலக்காக நிற்பவர் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவரை நோக்கியே நாம் ஓடவேண்டும். ஆனால், ஆவிக்குரிய ஓட்டத்தில் முதல், கடைசி என்று கிடையாது. யாரெல்லாம் அந்த இறுதி இலக்கை அடைகின்றார்களோ அனைவருமே வெற்றிபெறுவர். எனவேதான் அவசரம் வேண்டாம், "பொறுமையோடே ஓடக்கடவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்றைய தியான வசனம், "நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தில்" ஓடக்கடவோம் என்று கூறுகின்றது. தேவன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பாதையில் வழிநடத்துவார். எனவே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் என்ன ஆவிக்குரிய நிலையில் இருக்கிறார்கள், ஆவிக்குரிய வாழ்வில் மற்றவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று அக்கம்பக்கம் பார்க்காமலும், மற்றவர்கள் செல்லும் வழியில் செல்லாமலும் ஆவியானவர் நமக்குக் காட்டும்பாதையில் பொறுமையோடு நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் அன்பானவர்களே, வேதத்தில் காட்டியுள்ள உதாரண விசுவாச வீரர்களை மனதில்கொண்டு, நம்மை நெருக்கும் உலக பிரச்சனைகள், துன்பங்களையும்,  பாவங்களையும் உதறித்ததள்ளி   விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். நமது ஆவிக்குரிய ஓட்டம் வெற்றிகரமானதாக அமைந்திட ஆவியானவர்தாமே அதற்கான பெலனை நமக்குத் தருவாராக. 

வேதாகமத் தியானம் - எண்:- 1,503    
'ஆதவன்' 💚மார்ச் 19, 2025. 💚புதன்கிழமை

"அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்." ( யோவான் 18 : 37 )

இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாக இருக்கின்றார். ஆனால் உலகினில் அவர் வாழ்ந்தபோது அவரைப் பார்த்தவர்கள் ராஜாவாக அவரைக் கண்டுகொள்ள முடியவில்லை. காரணம்,  அவர் பிறக்கக்கூட சொந்த நல்ல  இடமில்லாமல் மாட்டுத் தொழுவதில்தான் பிறந்தார்.  உலகத்தில் அவர் வாழ்ந்தபோது தலை சாய்க்க இடமில்லாதவராகவே வாழ்ந்தார்.  அவர் இறந்தபோதும் சொந்த கல்லறை இல்லாமல் அடுத்தவரது கல்லறையில்தான் அடக்கம் செய்யப்பட்டார். 

ஆனால் தன்னிடம் விசாரணை செய்த பிலாத்துவுக்கு அவர் "நான் ராஜாதான்" என்று பதில் கூறுகின்றார். இந்த உலகினில் ஒரு ராஜா என்றால் அவருக்கென்று மிகப்பெரிய அரண்மனை, பொன், வெள்ளி எனும் பொக்கிஷங்கள், ஊழியம்செய்ய வேலைக்காரர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள்,  எதிரிகளோடு போர்புரிய ராணுவவீரர்கள், ராஜமேன்மையை வெளிப்படுத்தும் கிரீடம் போன்ற பல காரியங்கள் உண்டு. ஆனால் இவை எதுவும் இயேசு கிறிஸ்துவுக்கு இல்லை. 

"இவன் தன்னை யூதருடைய ராஜா என்று கூறிக்கொள்கிறான்" எனும் குற்றச்சாட்டு அவர்மேல் சுமத்தப்படுகின்றது.    பிலாத்து அவரது நிலைமையைப் பார்த்துத் தனக்குள் கேலியாக எண்ணியிருக்கவேண்டும். ஒன்றுமில்லாத ஒருவன் தன்னை ராஜா என்று கூறிக்கொள்கிறானே என்று அவன் எண்ணினான். ஆனால் பிலாத்து எண்ணியதுபோல அவர் உலகதுக்குரிய ராஜா அல்ல. அவனால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே தொடர்ந்து அவரிடம் அவன் கேள்வி எழுப்பியபோது இயேசு கிறிஸ்துக் கூறினார்:- 

"என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்." ( யோவான் 18 : 36 )

இதன்பின்னர் தான் இயேசு கிறிஸ்து பிலாத்துவுக்கு முக்கியமான ஒரு சத்தியத்தைக் கூறுகின்றார். அதாவது,  "சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்." என்றார் அவர். அதாவது, உண்மையுள்ளவர்கள் எவரும் என் குரலைக் கேட்கமுடியும் என்கின்றார். ஆம், உண்மையுள்ள வாழ்க்கை வாழும்போதுதான் தேவனது குரலைக் கேட்கமுடியும்; அவரை வாழ்வில் அறிய முடியும். வாழ்க்கையில் உண்மையில்லாமல் ஏமாற்றும், பித்தலாட்டமும் செய்துகொண்டு அலைபவர்கள் தேவ சத்தத்தைக் கேட்கமுடியாது. வாழ்வில் உண்மையில்லாத பிலாத்து எனவேதான் இயேசு கிறிஸ்து கூறிய பதிலுக்குச், "சத்தியமாவது என்ன?" ( யோவான் 18 : 38 ) என்றான். உண்மை என்றால் என்ன என்பதே தெரியாத பரிதாபகரமான வாழ்க்கை அவனது வாழ்க்கை!

ஆம் அன்பானவர்களே, இதுவே நமக்கு இன்றைய செய்தி. "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்று கூறிய இயேசுவை அறிய நாம் உண்மையுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். காரணம், அவரது வார்த்தையே சத்தியம். சத்தியமான அவரது வார்தைக்குக் கீழ்ப்படியும்போது மட்டுமே அவரை நாம் வாழ்வில் அறியமுடியும். இல்லையானால் பிலாத்து கேட்டதுபோல, "சத்தியமாவது என்ன?" என்று கேட்டுக்கொண்டு தேவனை அறியாதவர்களாகவே இருப்போம். 

ஆதியிலிருந்த வார்த்தையான (யோவான் 1;1) கிறிஸ்துவை அறிய சத்தியமான அவரது வார்த்தையை நாம் வாழ்வில் கடைபிடிக்கவேண்டியது அவசியம். அப்படிக் கடைபிடிப்போமானால் அவரை ராஜாவாக நாம் கண்டுகொள்வோம். மட்டுமல்ல, அந்த ராஜாவின் பிள்ளைகளாகவும் நாம் மாறுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,504    
'ஆதவன்' 💚மார்ச் 20, 2025. 💚வியாழக்கிழமை

"இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம்மாற அவர் மனுஷன் அல்ல." ( 1 சாமுவேல் 15 : 29 )

இன்று நாம் மனிதர்களிடையே பரவலாக காணக்கூடிய ஒரு பழக்கம் மாற்றிப்பேசுவது. அதாவது ஒரு காரியத்தைச் சொல்லிவிட்டுப் பின்னர் அதனை மாற்றி,  "நான் இதனை அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை" என்றோ, "நான் சொன்னதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை" என்றோ,  அல்லது "நான் அப்படிச் சொல்லவே இல்லை" என்றோ கூறுவது. ஒருசிலர் மட்டும் ஏதாவது ஒரு சூழ்நிலையில், "நான் சொன்னது தவறுதான், மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கூறுவதுண்டு. 

பொதுவாக அரசியல்வாதிகள் எல்லோருமே இப்படித்தான் இருக்கின்றார்கள். அவர்கள் பேசுவதை நேரடி ஒளிபரப்பில் நாட்டுமக்கள் அனைவரும் கண்டு, கேட்டு அறிந்தபின்னரும்கூடத் துணிகரமாக இப்படிப் பொய்பேசுகின்றனர்.  இதுபோலவே நம்மிடையேயும் நமது குடும்பங்களிலும் சிலர் இருக்கலாம்.  இவர்களால் தான் குடும்பங்களில் பிரச்சனைகளும் சன்டைகளும் அதிகம் ஏற்படுகின்றன. 

ஆனால், நமது தேவன் இப்படி மாற்றிப்பேசுபவரோ, பேசியதற்காக மன்னிப்புக் கேட்பவரோ அல்ல. இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம், "இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை" என்று வாசிக்கின்றோம். மட்டுமல்ல, அவர் சொன்னது சொன்னதுதான். அவர் சொல்லும் வார்த்தைகள் அதன் பலனை விளைவிக்காமல் அவரிடம் திரும்பிச் செல்வதில்லை. 

"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." ( ஏசாயா 55 : 10, 11 )

ஆம்  அன்பானவர்களே, தேவன் உண்மையுள்ளவராக இருப்பதால் மனிதர்களைப்போல  தாம் சொன்னதைக் குறித்து மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மாற்றிப் பேசுவதுமில்லை.  மனம் மாற அவர் மனுஷன் அல்ல. இதனையே அப்போஸ்தலரான பவுல், "என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 1 : 19 ) அவர் ஆம் என்றால் அது ஆம்தான். 

இதனால், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) என்கிறார் பவுல். தேவனது வாக்குத்தத்தங்கள் அனைத்தும் உண்மையானவை. நமது வாழ்வில் அவை பலிக்கவில்லையானால் நாம் தேவனைக் குறைகூறுவதோ, அவர் வாக்குத்தத்தங்கள் பொய்யானவை என்றோ கூறிடமுடியாது. தவறு மனிதர்களாகிய நம்மிடம்தான் இருக்கும்.  

எனவே நாம் வேதத்திலுள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரிமைகோரி ஜெபிக்கும்போது அந்த வாக்குத்தத்தங்களுக்கு முன்போ, பின்னரோ கூறப்பட்டுள்ள நிபந்தனைகளையும் கவனிக்கவேண்டியது அவசியம். அவரது வாக்குத்தத்தங்கள் குறித்து அவர் கூறியுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப  நாம் நமது வாழ்க்கையினை வாழ்கின்றோமா என்று கவனித்து நம்மிடம் தவறு இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். காரணம், இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்வதில்லை, மனம் மாறுவதுமில்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல.

வேதாகமத் தியானம் - எண்:- 1,505   
'ஆதவன்' 💚மார்ச் 21, 2025. 💚வெள்ளிக்கிழமை

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." ( சங்கீதம் 20 : 7 )

மேன்மைபாராட்டல் எனும் வார்த்தை பெருமைகொள்வதைக் குறிக்கின்றது. பெரும்பாலான மனிதர்களுக்கும் பொதுவாகவே தங்களிடமுள்ள செல்வம், பதவி, அந்தஸ்து, அழகு இவைகளைக் குறித்து பெருமை உண்டு. மற்றவர்களிடம் இல்லாத பொருளோ, பதவியோ, அதிகாரமோ அழகோ தங்களிடம் இருக்குமானால் அது அவர்களுக்குப் பெருமையாக இருக்கின்றது. 

இன்று மக்களிடையே பொதுவாக, நான்கு சக்கர வாகனங்கள், வீடுகள், நிலங்கள், அதிக அளவில் நகைகள் வைத்திருப்பது மிகப்பெரிய மதிப்புக்குரியதாகக் கருதப்படுவதைப்போல  சுவிசேஷம் எழுதபட்டக் காலங்களில்  குதிரைகள், ஆடுமாடுகள், ஒட்டகங்கள், ரதங்கள்  வைத்திருப்பது செல்வத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. எனவே, இவைகள் தங்களிடம் அதிகம் இருப்பதால் பெருமைகொண்டு வாழ்ந்தவர்களை உதாரணம் காட்டி  இன்றைய தியான வசனம் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், நமது வாழ்வில் தேவனை அறிய முயலாமல் இப்படி  உலகச்  செல்வங்களை மட்டுமே நாம் நம்பி வாழ்வோமானால் நமக்கு ஐயோ என்று வேதம் கூறுகின்றது. "சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா 31 : 1 )

தாவீது, ராஜாவாக இருந்தாலும் இவைகள் தன்னிடம் இருப்பதை அவர் பெருமைக்குரியதாகக் கருதாமல்  தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அறிந்துள்ளதைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம் என்கின்றார். ஆம் அன்பானவர்களே, இன்று ஒருவேளை நமக்கு மற்றவர்களைப்போல செல்வங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால், தேவனை நாம் அறிந்துள்ளது அவைகளைவிட மேலான செல்வமாகும். கர்த்தரை அறிந்துள்ளதே நமக்குப் பெருமை. 

அப்போஸ்தலரான பவுலும் "மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 17 ) என்று கூறுகின்றார். காரணம், உலகச் செல்வத்தை மட்டுமே நம்பி, அவற்றை அடைந்துள்ளதையே பெருமையாக எண்ணி வாழ்வோமானால் அது நமக்குக் கைகொடுக்கப்போவதில்லை. மேலும், அதிக பொருள் சேர்ந்தவர்களும், அதிக கல்வி கற்றவர்களும் தேவனை தனிப்பட்ட முறையில் அறியாமலும் அந்த மேன்மையான அனுபவங்களை வாழ்வில் பெறாமலும் இருக்கின்றனர். 

இந்த சர்வ லோகத்தையும் படைத்து ஆளும் தேவாதிதேவன் நம்மோடு தனிப்பட்ட உறவோடு நம்மோடு பேசி நம்மை வழிநடத்துவது எவ்வளவு மேலான காரியம்? இந்த அனுபவத்தில்தான் தாவீது கூறுகின்றார், "கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( சங்கீதம் 34 : 8 ) என்று. 

மேலான உலக செல்வங்கள் தரமுடியாத மகிழ்வான அனுபவத்தை நாம் கர்த்தரை அறியும் அறிவினால் பெறமுடியும். எனவே எப்படியாவது இந்த அனுபவத்தை பெற்று அனுபவிக்க முயற்சி செய்வோம். அதன் முதல்படியாக தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு வேண்டுவோம். அந்த அனுபவத்தைப் பெற்றுவிட்டோமானால் நாமும் உண்மையான இருதயத்தோடு, "நாங்கள்  எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." என்று கூற முடியும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,506   
'ஆதவன்' 💚மார்ச் 22, 2025. 💚சனிக்கிழமை

"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்." ( மத்தேயு 6 : 6 )

ஜெபம் என்பது விளையாட்டுப் பொருளல்ல;  அது மற்றவர்கள் கண்டு களிக்கவேண்டிய காட்சிப்பொருளுமல்ல. அது ஒரு குழந்தை தனது தாய் தகப்பனிடம் பேசுவதுபோல மெய்யான விசுவாசி தேவனோடு பேசும் ஒரு தெய்வீக அனுபவம். அதனையே இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து வலியுறுத்துகின்றார். 

இன்றைய தியான வசனம் விசுவாசிகள் சேர்ந்து ஜெபிக்கும் ஜெபத்தைக் குறிப்பிடவில்லை. நாம் ஆலயங்களில் ஜெபிக்கும்போது எல்லோரும் சேர்ந்துதான் ஜெபிக்கின்றோம். ஒன்றுகூடி தேவனை ஆராதிக்கின்றோம். மாறாக, இன்றைய தியான வசனம் நமது தனி ஜெபத்தைக்குறித்து இயேசு கூறுவதாகும்.  நமது தனி ஜெபம் நமக்கும் தேவனுக்கும் தெரியவேண்டிய ஒன்றே தவிர நாம் ஜெபிப்பதை ஊரே பார்க்கவேண்டுமென்று அவசியமில்லை என்கிறார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய தியான வசனத்தில் இயேசு குறிப்பிடுவது பெருமையுள்ளவர்களது ஜெபத்தைக்குறித்துதான். அதாவது தங்களை நல்லவர்கள், பக்திமான்கள் என்பதை மற்றவர்கள் அறியவேண்டும் எனும் கெட்ட உள்நோக்கத்துடன் அனைவரும் பார்க்க ஜெபிப்பதை இயேசு கண்டிக்கின்றார். உண்மையான தேவ அன்புள்ளவன் தேவனோடு தனியே ஜெபிப்பவனாக இருப்பான்; மட்டுமல்ல,  தான் ஜெபிப்பதை மற்றவர்கள் அறியவேண்டுமென்று  அவன் எண்ணவுமாட்டான். 

ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்குமான ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் செயலாக இருக்கின்றது. நாம் எவ்வளவுதான் ஆலயங்களுக்குச் சென்று ஜெபித்தாலும் அதனைவிட தனிஜெபம் மிக அவசியமாகும். தனி ஜெபத்தில் நாமும் தேவனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றோம். தனி ஜெபமில்லாத வாழ்க்கை ஆவியில்லாத வாழ்க்கையாகும்.  அப்படி நாம் தேவனோடு தனி ஜெபத்தில் உறுதியுடன் வாழும்போது அதனை அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாய் பலனளிப்பார் என்கிறார் இயேசு கிறிஸ்து. 

இதற்கு மாறாக பலரும் பார்க்கும்படி ஜெபிப்பவர்களை மாயக்காரர்கள் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 6 : 5 )

இப்படி பலரும் பார்க்கவேண்டுமென்று எண்ணி அவர்கள் ஜெபித்ததை பலரும் பார்த்தார்களே, அதுதான் அவர்களது ஜெபத்தால் அவர்கள் பெற்ற பலன்.  இதனையே இயேசு கிறிஸ்து, "அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று குறிப்பிடுகின்றார். ஆனால் இன்று பல ஊழியர்கள் தாங்கள் தனியாக ஜெபிப்பதை வீடியோ எடுத்து முகநூலில் (Facebook) வெளியிடும் அவலங்கள் நடைபெறுவதை நாம் காணலாம். அவர்கள் இப்படிச் செய்யக் காரணம், "நாங்கள் ஜெபம் செய்யாமல் ஊழியம் செய்யவில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று மக்களுக்கு அறிவிக்கவே. 

அன்பானவர்களே, நமது தனிப்பட்ட ஜெபங்கள் தேவனுக்கும் நமக்குமான தனிப்பட்ட உறவை வளர்க்கவே. அதனை நாம் பகிரங்கப் படுத்தவேண்டிய அவசியமில்லை. மேலும், இயேசு கிறிஸ்து கூறியபடி நாம் அந்தரங்கத்தில் ஜெபிக்கும்போது பிதாவாகிய தேவன்  வெளியரங்கமாய் நமக்குப் பலனளிப்பார். எனவே தனி ஜெபத்தில் உறுதியாக இருப்போம்; அதனை மற்றவர்கள் காணாமல் இருக்கவும் கவனமாக இருப்போம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,507   
'ஆதவன்' 💚மார்ச் 23, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்." ( நீதிமொழிகள் 1 : 7 )

கர்த்தருக்குப் பயப்படுதல் என்று கூறுவது ஒரு மாணவன் தனது ஆசிரியரைப்பார்த்து பயப்படுவது அல்லது உயரதிகாரியைப்பார்த்து பணியாளர்கள் பயப்படுவது போன்ற பயத்தைக் குறிக்கவில்லை. அன்று இஸ்ரவேலர் இப்படித்தான் தேவனுக்குப் பயப்பட்டனர். தேவனை நேரடியாக பார்ப்பதற்கோ, அவரது குரலைக் கேட்பதற்கோ அவர்கள் தயாராக இல்லை. எனவேதான் அவர்கள், "மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்." ( யாத்திராகமம் 20 : 19 )

ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பயமானது தேவனது நீதி, நேர்மையினைக்குறித்த பயம்; பாவத்தைக்குறித்த பயம்.  இந்த பயம் இருக்குமானால் மட்டுமே நாம் ஞானமுள்ளவர்களாக வாழ்வோம். தேவனுடைய ஆவியானவர் இந்த பயத்தை நமக்குள் தருகின்றார். இன்றைய புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நமக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவம் இந்த பயத்தை நமக்குள் தருகின்றது. 

நாம் தேவ ஞானம் பெறும்போது, கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று கூறியுள்ளபடி நாம் அனைத்தையும் புதிய ஞானத்தோடு பார்க்கவும் புரிந்துகொள்ளவும் தேவன் கிருபை அருளுவார். வேதாகம வசனங்களும் நாம் ஞானம் பெறும்போது புதிய அர்த்தத்துடன் நமக்குப் புரியவரும். மட்டுமல்ல, ஒரே வசனமே பல்வேறு வேளைகளில் நமக்கு பல்வேறு சத்தியங்களை உணர்த்துவதை நாம் புரிந்துகொள்ள முடியும். தேவ ஞானம் பெற்ற ஒருவர் இறையியல் கல்லூரியில் படித்துதான் வேத அறிவு பெறவேண்டுமென்று தேவையில்லை. 

இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்" என்று. உலகத்துக்கு ஞானிகளாகவும் அறிவாளிகளாகவும் தெரியும் பலர் தேவ காரியங்களை அறியாத மூடர்களாக இருக்கின்றனர். நான் நாத்தீக சிந்தனையோடு வாழ்ந்தபோது நண்பர்களாக இருந்த பலர் இப்போதும் நண்பர்களாகத்தான் இருக்கின்றனர்.  சிலவேளைகளில் நான் அவர்களுக்கு பாவத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் குறித்துக் கூறும்போது இன்றைய தியான வசனம் கூறுவதுபோல அவர்கள் அதனை அசட்டைபண்ணுவது மட்டுமல்ல, என்னையும் கேலி செய்வதுண்டு. 

ஆம் அன்பானவர்களே, கர்த்தருக்குப் பயப்படும் பயம் மட்டுமே நம்மை தேவனை அறியவைப்பதுடன் பாவத்துக்கு விலக்கி நம்மை வாழவைக்கும். இல்லையானால் தேவனது  ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்களாகவே இருப்போம்.  இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும்கூட தேவ வார்த்தைகளை அசட்டைபண்ணுகிறவர்களாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் இந்தப் போதனைகளை  தேவ வார்த்தைகளாக எண்ணாமல் தாங்கள் சாராத வேறு திருச்சபையின் போதனை என்று தவறாகப் புரிந்துகொண்டதுதான். 

தேவ ஞானத்தையும் அதுகுறித்த போதகத்தையும் அசட்டை பண்ணும் மூடர்களாக வாழாமல், கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் வாழ்வோம். அதுவே தேவ ஞானத்தோடு நம்மை வாழவைக்கும்; தேவ  வழிகளையும் அவரது சித்தத்தையும் நாம் அறியவைக்கும். அப்போது நாம் இஸ்ரவேல் மக்கள் தேவனது குரலுக்குப் பயப்பட்டதுபோல பயப்படாமல் அவரது குரலைக் கேட்பதை இன்பமான இறை அனுபவமாக எண்ணுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,508   
'ஆதவன்' 💚மார்ச் 24, 2025. 💚திங்கள்கிழமை

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." ( சங்கீதம் 37 : 4, 5 )

இந்த உலகத்தில் நாம் பல்வேறு பாடுகளையும் பிரச்சனைகளையும் கடந்து செல்லவேண்டியிருக்கிறது.  பிரச்சனையில்லாத வாழ்க்கை இல்லை. இத்தகைய இக்கட்டான சூழல்களில் நாம் பல்வேறு விண்ணப்பங்களை தேவனிடம் எழுப்புவதுண்டு. ஆனால் உடனேயே அவைகளுக்கான தீர்வு நமக்குக் கிடைத்திடாது. சில வேளைகளில் எவ்வளவு ஜெபித்தாலும் தேவன் நமது ஜெபத்தைக் கேட்காததுபோலவும் தோன்றும். அத்தகைய வேளைகளில் நாம் முறுமுறுக்காமல்  கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனமானது தாவீது தனது அனுபவத்தின்மூலம் கண்டுகொண்ட உண்மையாகும். அதனையே அவர் நமக்கு அறிவுரையாகக் கூறுகின்றார்.  கர்த்தரிடம் மனமகிழ்ச்சியாக இருக்க அவர் கூறும் முக்கியமான அறிவுரை, "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" என்பது.

ஆம் அன்பானவர்களே, நமது வழிகள் தேவனுக்கேற்ற வழிகளாக இருக்குமானால் தாவீது கூறுவதுபோல, அவர் நமது இருதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார். எனவே நமது வழிகளை அவரிடம் ஒப்படைத்துவிடவேண்டியது அவசியம். அதாவது, தேவ வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டி நமது சுய அறிவு, பலம், நமது பதவி, பொருளாதாரம் இவைகளை நம்பாமல், "ஆண்டவரே, எனக்கு வாழ்வில் என்ன செய்வதென்று தெரியவில்லை; என்ன முடிவெடுப்பதென்று தெரியவில்லை.   நீரே எனது வாழ்வைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும்" என்று பிரச்சனையை அவரிடம் ஒப்படைத்துவிடவேண்டியது அவசியம். 

எனவேதான் தாவீது 55வது சங்கீதத்தில் கூறுகின்றார்,  "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்." ( சங்கீதம் 55: 22) ஆம் அன்பானவர்களே, இப்படி நம்மை அவரிடம் ஒப்படைத்து அவருக்கேற்ற நீதியுள்ள வாழ்க்கை வாழ்வது உண்மையானால் அவர் நம்மை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார். 

துன்பவேளைகளில் கர்த்தரிடம் நாம் எப்படி மனமகிழ்ச்சியாக இருக்கமுடியும்? அது வெறுமனே ஆலயங்களுக்குச் செல்வதாலோ, ஜெபக்கூட்டங்களில் கலந்து கொள்வதாலோ அல்ல, மாறாக நாம் அவரோடு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும்போது மட்டுமே முடியும். சிலவேளைகளில் பாஸ்டர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள்  தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளை நாம் பத்திரிக்கைகளில் வாசிக்கின்றோம். இதற்குக் காரணம், அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொண்டாலும் அவர்களுக்கு தேவனோடு தனிப்பட்ட உறவு இல்லாததுதான். 

ஆம் அன்பானவர்களே,  இறையியல் படித்துவிட்டதால் ஒருவர் தேவனை அறிந்தவருமல்ல, அவரோடு உறவோடு வாழ்பவருமல்ல. நம்மில் தேவனுடைய ஆவியானவர் செயல்படும்போது மட்டுமே நாம் மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெறமுடியும். அப்போது மட்டுமே நாம் தேவனோடுள்ள உறவில் வளரமுடியும்.  அப்போதுதான் நமக்கு தேவன்மேல் அசைக்கமுடியாத விசுவாசம் ஏற்படும். விசுவாசம் ஏற்படும்போது மட்டுமே தேவன் நமது இருதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் எனும் உறுதியும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியும் ஏற்படும். 

எனவே, தேவனோடுள்ள தனிப்பட்ட உறவில் வளர வேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டியது அவசியம். அப்படி அவரோடு ஐக்கியத்தில் வளர்ந்து,  நமது வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிருப்போம்; அப்போது அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,509   
'ஆதவன்' 💚மார்ச் 25, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." ( யோவான் 1 : 10, 11 )

சிலவேளைகளில் மனிதர்கள் தங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று புலம்புவதுண்டு. சிலமாதங்களுக்குமுன் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து மடிந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. அந்த மாணவன் தான் தற்கொலைசெய்யும்முன் எழுதிவைத்திருந்தக்  கடிதத்தில், 'என் சாவுக்கு யாரும் காரணமல்ல; இந்த உலகத்தில் யாரும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்பதால் சாகிறேன்" என்று எழுதிவைத்திருந்தான்.  

ஆம் அன்பானவர்களே, நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லையானால் நமக்கு அதுவே  வேதனையாக இருக்கும். அதுவும் நம்மிடம் உண்மை இருக்கும்போது அதனைப்  பிறர் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அது மிகுந்த வேதனையளிக்கும். இதுபோலவே இந்த உலகத்தில் வந்த இயேசு கிறிஸ்துவும் வேதனை அனுபவித்தார். அதனையே அவரது அன்புச் சீடர் யோவான்,   "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." என்று கூறுகின்றார். 

நம்மை நமது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லையானால் எப்படி இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். முதியோர் இல்லங்களில் இப்படி தங்கள் பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ளப்படாத பெற்றோர்களை நாம் பார்க்கலாம்.  ஆம் அவர்கள் மூலமாய் உலகினில் வந்த பிள்ளைகளே அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இதுபோலவே பிதாவாகிய தேவன் நாம் அவரது பிள்ளைகளாகும்படி உலக மக்கள்மேல் அன்புகூர்ந்தார். ஆனால் உலகமோ அவரை அறியவில்லை. இதனையே அப்போஸ்தலரான யோவான், "நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை." ( 1 யோவான்  3 : 1 ) என்று குறிப்பிடுகின்றார். 

இன்று பலவேளைகளில் நமது நாட்டில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் நாம் இரண்டாம்தரக்  குடிமக்களாக கருதப்படுகின்றோம். ஆனால் நாம் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கிறிஸ்துவையே இந்த உலகம் அறியவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் நம்மை எப்படி ஏற்றுக்கொள்ளும்? 

கிறிஸ்தவ குடும்பங்களில்கூட கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் புறக்கணிக்கப்படும் மனிதர்கள் உண்டு. கிறிஸ்தவ கிராமங்களில்கூட கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அறிந்துகொண்டு ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் கிறிஸ்தர்களை  "அல்லேலூயா கூட்டத்தைச் சார்ந்தவன் / சார்ந்தவள்" என்று ஒதுக்கிவைக்கும் அவலங்கள் நடைபெறுவதை நாம் காண்கின்றோம்.  ஆம், உலகம் அவரை அறியாததுபோலவே நம்மையும் அறியவில்லை. 

புறக்கணிக்கப்படும்போது மகிமையான வாழ்வை தேவன் நமக்கு ஏற்படுத்தியுள்ளார் எனும் எண்ணம் நமக்கு இருக்குமானால் புறக்கணித்தல் வேதனை தருவதாக இருக்காது. பிரபல விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின் அவர்கள் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளைத்  தனது அயராத ஆராய்ச்சிகளின்மூலம் கண்டறிந்தார். அவற்றில் சிறப்பானவை இடிதாங்கி, மைல் கணிப்பான் (ஓடோமீட்டர்), நீச்சல் இறக்கைகள், கண்ணாடி ஆர்மோனிக்கா (ஒரு இசைக்கருவி) மற்றும் பத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புக்கள். 

ஆனால் முதலில் அவரை அவரது ஊர் பைத்தியக்காரன் என்று கூறியது. காரணம், அவரது செயல்பாடுகள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தது. அவரது ஆராய்ச்சிகளை உலகம் பைத்தியத்தின் செயல்பாடாகப் பார்த்தது. ஆனால் அவர்தான் உலகிற்கு அரியபல கண்டுபிடிப்புகளை கண்டறிந்துகொடுத்தார்.    எனவே,  உலகம் நம்மைப் புரிந்துகொள்ளவில்லையெனும் கவலையை விட்டு நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று எண்ணி  மகிழ்ச்சிகொள்வோம்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,510   
'ஆதவன்' 💚மார்ச் 26, 2025. 💚புதன்கிழமை

"நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 )

நாம் பலவேளைகளில் பல்வேறு விண்ணப்பங்களுடன் தேவனை நோக்கி ஜெபிக்கின்றோம். ஆனால் தேவன் எப்போதும் நமது ஜெபங்களுக்கு உடனடியாகப் பதில் தருவதில்லை. ஆனால் மக்கள்  ஜெபிக்காத பல காரியங்களை மனிதர்களுக்குத் தேவன் கொடுத்துக்கொண்டுதானிருக்கிறார்.  தன்னை ஆராதிப்பவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள அனைவருக்கும் தேவன் பல காரியங்களைக் கொடுத்து வாழவைத்துக் கொண்டுதானிருக்கிறார். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்துக் குறிப்பிடுவது குறிப்பிட்ட நமது ஜெப விண்ணப்பங்களைக் குறித்துத்தான். மட்டுமல்ல, இந்த வசனம் பொதுவான மக்களுக்கான வசனம்போல இருந்தாலும், இது ஆவிக்குரிய அர்த்தமுள்ள வசனமாகும். கேட்டுக்கொள்வது அனைத்தையும் தேவன் தனது பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை. ஒரு தாய்க்குத் தனது குழந்தைக்கு எதனை எப்போது கொடுக்கவேண்டுமென்று தெரிந்திருப்பதுபோல தேவனுக்கும் தெரியும். எனவே, ஏற்றவேளையில் அதனை அவர் தந்து மகிழ்ச்சிப்படுத்துவார்.  

அப்படித் தேவன் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்க அவர் கூறும் நிபந்தனைதான் இன்றைய தியான வசனம். அதாவது, நாம் தேவனது வார்த்தைகளை மனதில் கொண்டு அவற்றின்படி வாழ்ந்து அவற்றில் நிலைத்திருப்போமானால் நமது வேண்டுதல்களை அவர் நிறைவேற்றுவார். இதனையே அவர், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." என்று கூறுகின்றார். 

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பல வசனங்களில் நமக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு சில வசனங்களைப் பொறுக்கியெடுத்து நாம் தேவனது வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுக்கக்கூடாது. தேவன் கூறிய பல வசனங்களை ஒப்பிட்டு அவற்றைப் புரிந்துகொண்ட மனிதர்களாக வாழவேண்டும். இதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு கண்களைத் திறந்திட முதலில் ஜெபிக்கவேண்டும். 

ஆவிக்குரிய மெய்யான வாழ்வு வாழும் மனிதன் எப்போதும் உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்துக்கொண்டிருக்கமாட்டான். மேலான இறை அனுபவங்கள், ஆவிக்குரிய வாழ்வில் மேலும் முன்னேறிச்செல்லும் ஆர்வம் இவைகளின் அடிப்படையிலேயே ஆவிக்குரிய மக்களது ஜெபம் இருக்கும். இப்படி ஜெபித்து வாழ்பவர்களுக்குத் தேவன் அவர்கள் கேட்காத ஆசீர்வாதங்களையும் கொடுத்து மகிழ்விப்பார். இதனையே,  "முதலாவது   தேவனுடைய  ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (மத்தேயு 6:33)  என்று கூறினார் இயேசு கிறிஸ்து. 

மனதில் நூறு சதவிகிதம் உலக ஆசையை வைத்துக்கொண்டு நாம் விண்ணப்பம் பண்ணும்போது அது தேவனுக்கு விருப்பமில்லாத ஜெபமாக மாறுகின்றது. இதனால்தான், "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்". (யாக்கோபு 4:3) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியானத்தில்   ஜெபத்தைக்குறித்த மூன்று காரியங்களை உணர்த்துவது அவசியமென்று எண்ணுகின்றேன். 
1. நாம் நமது வாழ்வில் தேவனுடைய வார்த்தைகளுக்கு முன்னுரிமைகொடுத்து, அவற்றுக்குக் கீழ்ப்படிந்து ஜெபிக்கவேண்டும்.
2.  நமது ஜெபங்களில் ஆவிக்குரிய காரியங்களைக்குறித்த ஆர்வம் இருக்கவேண்டும்.
3. வெறும் உலக ஆசைகளை நிறைவேற்ற மட்டுமே ஜெபித்துக் கொண்டிருக்கக் கூடாது. 

இப்படி நாம் வாழ்வோமானால் "நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

வேதாகமத் தியானம் - எண்:- 1,511   
'ஆதவன்' 💚மார்ச் 27, 2025. 💚வியாழக்கிழமை

"அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 12 : 7 )

பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு வரும் நோய்கள், துன்பங்களை தேவன் அளிக்கும் தண்டனையாக எண்ணுகின்றனர். வெகுசிலர் தேவன் தங்களைப் புடமிட்டு மேன்மைப்படுத்துவதற்காகத் துன்பங்களைக் கொடுத்துள்ளார் என எண்ணுகின்றனர். 

நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது சிலவேளைகளில் நமக்குத் துன்பங்கள் தொடரவேச்  செய்யும். ஆனால் அதனால் நமது வாழ்க்கை சரியல்ல, ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று கலங்கவேண்டியதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை யோபுவைபோல நம்மைப் புடமிடவும் மேலான ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் அனுபவிக்கத் தகுதியுள்ளவர்கள் ஆகும்படிக்கும்  தேவன் துன்பங்களை நமது வாழ்வில் அனுமதிக்கலாம். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் இவைகளுக்கு அப்பாற்பட்டக் கருத்தைத் தனது அனுபவத்தில் உணர்ந்து கொண்டதாக  அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். அதாவது, அப்போஸ்தலரான பவுலுக்கு தேவன் மேலான ஆவிக்குரிய அனுபவங்களைக் கொடுத்திருந்தார். அவர் மூன்றாம் வானம் வரை எடுக்கப்பட்டு பரலோக தரிசனத்தைப் பெற்றவர். மனிதர்கள் பேசாத மகிமையான தேவ வார்த்தைகளைக் கேட்டவர்.  இதனால் அவர் ஆவிக்குரிய பெருமை கொண்டுவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு உடலில் ஒரு முள்ளை தேவன் கொடுத்திருந்தார் என்று குறிப்பிடுகின்றார். 

"மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.  அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்". (2 கொரிந்தியர் 12:1-3)

இப்படித் தனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் தன்னைத் தான் உயர்த்தாதபடிக்குத்  தனது  மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர். 

ஒருமுறை ஒரு ஆவிக்குரிய சபையில் நான் சந்தித்த பாட்டி ஒருவர் தனது குடும்பத்துத் துன்பங்களையும் தனது நோய்களையும் குறிப்பிட்டு என்னிடம், "பவுலுக்குத் தேவன் கொடுத்ததுபோன்ற முள்ளை எனக்குக் கொடுத்திருக்கிறார்" என்று புலம்பினார். ஆனால், அந்தப் பாட்டியின் மருமகளோ பாட்டியைக்குறித்துப்  பல குறைகளைக் கூறி, "அவள் ஒரு சூனியகாரக் கிழவி" என்று சபித்தாள். அந்த மருமகள் கூறுவது உண்மைதான் என்பது பலரிடம் கேட்டபோது புரிந்தது. 

ஆம் அன்பானவர்களே, நம்மில் யாரும் பவுல் பெற்றதுபோன்ற மேலான தேவ அனுபவங்களைப்  பெறவில்லை. எனவே அவரோடு நம்மை ஒப்பிட்டு,  "பவுல் அனுபவித்த முள்ளைப்போல நான் அனுபவிக்கிறேன்" என்று கூறுவோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். 

நமது ஆவிக்குரிய வாழ்வில் துன்பங்கள் வருகின்றதென்றால், நம்மை நாமே நிதானித்துப்பார்த்துத் தவறைத் திருத்திக்கொள்ளவேண்டும். எந்தத் தவறும் செய்யாதபோதும் துன்பங்கள் தொடர்கின்றன என்றால் தேவன் நம்மைப் புடமிடுகின்றார் என்று பொருள்.  இதற்கு மேலாக, பவுல் அப்போஸ்தலருடன் நம்மை ஒப்பிட்டு நமது துன்பங்களை நியாயப்படுவதுவோமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே  இருப்போம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,512   
'ஆதவன்' 💚மார்ச் 28, 2025. 💚வெள்ளிக்கிழமை

"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்." ( லுூக்கா 16: 31)

இயேசு கிறிஸ்து கூறிய  செல்வந்தனும் லாசரும் உவமையின் இறுதியில் ஆபிரகாம் செல்வந்தனிடம் கூறுவதுதான் இன்றைய தியான வசனம். இந்த வார்த்தைகள்மூலம் மேலான ஒரு சத்தியம் நமக்கு அறிவிக்கப்படுகின்றது. 

இன்று பெரும்பாலான மக்கள் அதிசயம், அற்புதங்களை நாடித்தான் தேவனிடம் வருகின்றார்களேத்தவிர தேவனையோ, அவரது அன்பினையோ நாடி வருவதில்லை. உண்மையான தேவ அன்பு என்பது ஒரு குழந்தை தனது பெற்றோரை நேசித்து அவர்களோடு எப்போதும் சேர்ந்திருக்க விரும்புவதுபோன்ற விருப்பச் செயலாகும். இப்படி நாம் அவரை அன்பு செய்யும்போது அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிகின்றவர்களாகவும் இருப்போம். ஆம், தேவனை அன்பு செய்வது என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." (1 யோவான்  5 : 3) என்று வாசிக்கின்றோம்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மோசேமூலமும் தீர்க்கதரிசிகள் மூலமும் பல்வேறு கட்டளைகளைக் கொடுத்த தேவன் இன்று இயேசு கிறிஸ்து மூலம் அன்புக் கட்டளைகளை நமக்குத் தந்துள்ளார். அவரது திருத்தூதர்கள் வழியாக பல்வேறு படிப்பினைகளைக் கொடுத்துள்ளார். இயேசு கிறிஸ்து செல்வந்தனும் லாசரும் உவமையில் கூறுவதுபோல இந்தப் புதிய நியமங்களுக்குக் கீழ்ப்படியாமல் வெறும் அற்புதம் அதிசயம் என அலைவோமானால் செல்வந்தனைப்போல பரிதபிக்கக்கூடியவர்களாக மாறிவிடுவோம். 

ஆம் அன்பானவர்களே, மரித்தவன் உயிர்த்து எழுந்ததுபோன்ற வல்லமையான அற்புதங்களை நாம் கண்ணால் கண்டாலும் அல்லது நமது வாழ்வில் அனுபவித்தாலும் தேவனிடம் மெய்யான அன்புகூராமல் போவோமானால் அதனால் என்ன பயன்? முதலில் மோசேக்கும் தீர்க்கதரிசிகளும் கீழ்படியவேண்டும் என்று கூறப்பட்டதுபோல புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நாம் புதிய ஏற்பாட்டு நியமங்களுக்குக் கீழ்ப்படியவேண்டியது அவசியம்.  

நாம் பல்வேறு ஜெபக் கூட்டங்களில் பங்கேற்று பல்வேறு தேவ மனிதர்களது செய்திகளைக் கேட்டிருக்கலாம். அல்லது ஆராதனைகளில் கலந்துகொண்டு நற்கருணை உட்கொண்டிருக்கலாம் அனால் அவைகள் நம்மை இறுதிநாளில் இரட்சிக்க உதவாது. அவற்றை நாம் தேவனிடம் எடுத்துக்கூறி அவரது இரக்கத்தைப் பெறமுடியாது. 

இதனையே இயேசு கிறிஸ்து, "அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13: 26, 27) என்றார். 

தேவனிடம் மெய்யான அன்பு இல்லாத மனிதர்கள்; தேவனது அன்பை வாழ்வில் மெய்யாக உணராத மனிதர்கள்,  மரித்துப்போனவன் எழுந்து வந்து நிற்பதைக் கண்ணால் கண்டாலும் அந்த அற்புதத்தைக்  கைதட்டி ரசிப்பார்களேத்தவிர வேதாகம சத்தியங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். இதனையே இயேசு கூறிய உவமையில், "ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்." ( லுூக்கா 16: 29) என்று ஆபிரகாம் கூறுவதாகக் கூறினார். அதிசய அற்புதங்களுக்கு அல்ல, மாறாக தேவ வார்த்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                     📞 Contact: 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com    

வேதாகமத் தியானம் - எண்:- 1,513   

'ஆதவன்' 💚மார்ச் 29, 2025. 💚சனிக்கிழமை

"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." (1 தீமோத்தேயு 4: 8)

இந்த உலகத்தில் மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் தங்கள் உடலைப் பேணவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் அதிகாலை நான்கு நான்கரை மணிக்கு எழுந்து உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அதுபோல உணவுகளில் சில உணவுகளைத் தவிர்த்து சில உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். இத்தகையைச் செயல்கள் உடலுக்கு வேண்டுமானால் பலன்தரக்கூடும்.  

ஆவிக்குரிய செயல் என்பதும்   இதுபோன்றதுதான் என்று எண்ணி பலர் இதுபோன்ற உடலைப்பேணும் காரியங்களை பக்தி என்று கருதி செய்கின்றனர். தேவன் இத்தகைய உடலைப்பேணும் காரியங்களை மேலாகக் கருதுவார் என்று எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பிட்டக் காலங்களில் சில உணவுகளைத் தவிர்ப்பது,  உடல்சார்ந்த சில ஒடுக்க முயற்சிகளைச்  செய்வது இவை தேவனைத் திருப்திப்படுத்தும் என எண்ணிக்கொள்கின்றனர். "இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது." ( கொலோசெயர் 2: 23)

ஆம் அன்பானபவர்களே, இதுபோன்ற சரீர முயற்சிகள் அற்பமானவை என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது. எது மெய்யான தேவபக்தி என்பதற்கு அப்போஸ்தலரான யாக்கோபு மூன்று  காரியங்களைக் கூறுகின்றார். 

1. நமது பேச்சிலே அடக்கமாக இருப்பது. இதனையே அவர், "உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்." (யாக்கோபு 1:26) என்று கூறுகின்றார்.
2. திக்கற்ற பிள்ளைகள், விதவைகள் படும் உபத்திரவத்தில் அவர்களுக்கு உதவுவது.
3. உலக பாவங்கள் நம்மை மேற்கொள்ளாமல், அவற்றால் நாம் கறைபடாமல் நம்மைக் காத்துக்கொள்வது.

இதனையே அவர், "திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." ( யாக்கோபு 1: 27) என்று கூறுகின்றார். எனவே, இத்தகைய தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும்  எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது என்று அறிகின்றோம்.  

தேவனைத் திருப்திப்படுத்த உடல் சார்ந்த சில ஒடுக்குமுறைகள் செய்வதே போதும் என்று எண்ணி அவற்றையே பின்பற்றி தேவன் விரும்பும் மற்ற காரியங்களை விட்டுவிடுவோமானால்  அதனால் எந்தப்  பயனுமில்லை. பிற மத சகோதரர்கள் இதுபோல பல உடல்சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களைப்பார்த்து கிறிஸ்தவர்களிலும் பலர் இவ்வாறு செய்கின்றனர். எனவே அன்பானவர்களே, உடல்சார்ந்த சில செயல்களை மட்டும் செய்து அதனால் தேவனைத் திருப்திப்படுத்தலாம் என எண்ணுவது கிறிஸ்த போதனையல்ல. அவைகளுக்கு மட்டுமே முன்னுரிமைகொடுத்து வாழ்வோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாகவே  இருப்போம்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                     📞 Contact: 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com    

வேதாகமத் தியானம் - எண்:- 1,514   

'ஆதவன்' 💚மார்ச் 30, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்." ( லுூக்கா 12: 24)

இன்றைய தியான வசனமானது பலருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆடு, மாடு, பறவைகளை இவை உழைக்காமல் இருந்து உண்கின்றன; அவைகளும் உலகத்தில் வாழ்கின்றன. நம்மையும் இயேசு கிறிஸ்து அவைகளைப்போல உழைக்காமல் இருக்கச் சொல்கின்றாரா? 

அப்படியல்ல, இன்றைய தியான வசனம், உலகத் தேவைகளுக்கு முன்னுரிமைகொடுக்காமல் தேவனையே நாம் உறுதியாகப் பற்றிக்கொண்டு வாழவேண்டுமென்று வலியுறுத்துகின்றது. ஆம் அன்பானவர்களே, பறவைகளையே உணவுகொடுத்துக் காப்பாற்றும் தேவன் தனது சாயலில் ரூபத்திலும் தான் படைத்த மனிதனைக் காப்பாற்றாமல் கைவிடுவாரா? நிச்சயமாக விடமாட்டார் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறும் வார்த்தைகள் முற்றிலும் பொருளாசைகொண்டு அதனைச் சேமிக்கவே உழைத்து தனது வாழ்வை அழிக்கும் மனிதர்களுக்குத்தான் இதனை அறிவுரையாகக் கூறுகின்றார். இன்றையத் தியான வசனத்தைக் கூறுமுன் இயேசு ஒரு செல்வந்தனின் உவமையினைக் கூறுகின்றார். பொருளாசைகொண்ட அவன் தனது நிலம் அதிக விளைச்சலைக் கொடுத்ததால் அதில் திருத்தியடையாமல் இன்னும் அதிகம் சேர்த்துவைக்கவேண்டி தனது களஞ்சியத்தை மேலும் பெரிதாக்கிக் கட்டுவேன் என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டான். 

பல ஆண்டுகள் கவலையற்று வாழ அவன் எண்ணினான். ஆனால் தேவன் அந்தச் செல்வந்தனிடம் "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்." ( லுூக்கா 12: 20) என்று கேட்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது செல்வங்கள் நமது கவலைகளைத் தீர்ப்பதில்லை. தேவ கிருபையில்லாமல் நாம் சேமிக்கும் பொருள் எதற்கும் உதவாது. ஒரு கொடிய நோய் நம்மைத் தாக்குமேயானால் எல்லாம் வீணாகிவிடும். தேவனது கிருபையே நம்மைத் தாங்கி நடந்திடும். எனவே நாம் நமது செல்வங்களைச் சார்ந்து வாழாமல் தேவனது கிருபையினைச் சார்ந்து வாழவேண்டுமென்று இயேசு வலியுறுத்துகின்றார். காகங்கள் சேர்த்துவைக்காமல் வாழவில்லையா என்று அவைகளை நமக்கு உதாரணமாகக் கூறுகின்றார். 

நமக்கு என்னத்தேவை என்பது தேவனுக்குத் தெரியும். நாம் தேவன்மேல் விசுவாசம்கொண்டு உண்மையாக உழைப்போமானால் தேவன் நமது தேவைகளைச் சந்திப்பார். அதாவது நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டியது தேவனுக்குத்தான். அப்படி அவரை நாம் தேடுபவர்களாக வாழ்வோமானால் நம்மை அவர் கைவிடமாட்டார். ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை அவர் ராஜாவாக உயர்த்தவில்லையா? 

"தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்." ( சங்கீதம் 78: 70, 71) ஆம் அன்பானவர்களே, கர்த்தரைத் தேடுபவர்களுக்கோ சிறு நன்மையையும் குறைவுபடாது. "தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." ( லுூக்கா 12: 31) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                     📞 Contact: 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com    

வேதாகமத் தியானம் - எண்:- 1,515   

'ஆதவன்' 💚மார்ச் 31, 2025. 💚திங்கள்கிழமை

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." ( மத்தேயு 7: 21)

இன்றைய தியானம் சாதாரண விசுவாசிகளுக்கும் தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கும் அறிவுரை கூறுவதாக உள்ளது.  

ஜெபம், வாழ்க்கை இவை இரண்டும் சேர்ந்ததுதான் ஆவிக்குரிய வாழ்க்கை. இவற்றில் எது இல்லையானாலும் அது ஒற்றைக்கண்ணோடு வாழ்வது போன்றதுதான்.   மட்டுமல்ல, நம்மிடம் நல்ல ஒரு சாட்சியான வாழ்க்கை இல்லையானால் நமது ஜெபமும் அர்த்தமற்றது என்கின்றது இயேசு கூறிய இன்றைய தியான வசனம். 

தேவன் தனது கிருபையினால் சிலருக்கு ஆவிக்குரிய பல வரங்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்குத் தகுதியில்லாத வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களிடம் அந்த தேவ வரம் செயல்படும். அதாவது தேவனுக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழ்பவர்களும்  மற்றவர்களுக்காக ஜெபித்து அதிசய குணமாக்குதலையும் தீர்க்கத்தரிசன   வெளிப்பாடுகளையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

ஒருவரிடம் ஜெப உதவிகேட்டு வரும் விசுவாசியின் நம்பிக்கையை கனம்பண்ண  தேவன்  இப்படி ஊழியர்கள்மூலம் குணமாக்குதலை அருளுவார். இது ஜெபித்த ஊழியக்காரர் உண்மையுள்ளவர் என்பதனாலல்ல, மாறாக ஜெப உதவி கேட்டு வந்தவர்மேல் தேவன் கொண்ட கிருபையினால்தான். ஆனால் பல ஊழியர்கள் இதனை உணராமல் தங்களை மேன்மைப்படுத்தியும் தங்கள் பாவ வாழ்கையினை உணராமலுல் வாழ்கின்றனர்.  

இதனையே இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்." ( மத்தேயு 7: 23) 

எனவே இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை ஊழியம் செய்பவர்களாக இருந்தால் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம். உங்கள்மூலம் அதிசயம் நடப்பதால் மட்டுமே நீங்கள் நல்ல வாழ்க்கை வாழ்கின்றிர்கள் என்று பொருளல்ல. பொதுவான விசுவாசிகளாக இருந்தால் ஊழியக்காரர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கவேண்டாம்.  அவர்கள் கூறும் தேவ வார்த்தைகளை மட்டும் கேட்டு அதன்படி வாழ்ந்திட முயற்சியெடுங்கள்.  

இதனையே கிறிஸ்து "ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்." ( மத்தேயு 23: 3) என்று நமக்கு அறிவுரையாகக் கூறியுள்ளார். 

அதாவது இன்றைய தியானம்,  கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்பவர்கள் அவரது வார்த்தைகளைக் கடைபிடித்து ஊழியம் செய்ய ஒப்புக்கொடுக்கவும் விசுவாசிகள் ஊழியர்களது போதனைகளை மட்டும் கேட்டு அவர்களது   செயல்பாடுகளைப் பார்க்காமல் வாழவும் நமக்கு அறிவுறுத்துகின்றது. கர்த்தாவே! கர்த்தாவே! என்று வெற்றுக் கூப்பாடுபோடாமல் சாட்சியுள்ள வாழ்க்கையோடு ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                     📞 Contact: 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com    

No comments: