"பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்." ( ஓசியா 6 : 6, 7 )
இன்று பொதுவாக பலரும் ஜெபம், வழிபாடுகள், வேத வாசிப்பு, உபவாசம் இவைகளே தேவன் விரும்பும் செயல்கள் என்று எண்ணி இவைகளைக் கைக்கொள்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால், தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல மனிதர்களிடமும் நாம் கனியுள்ள வாழ்க்கையைக் காண முடிவதில்லை. காரணம், ஆவிக்குரிய வாழ்வுக்கு மேற்குறிப்பிடப்பட்ட பக்திக் செயல்கள் மட்டும் போதும் என்று அவர்கள் எண்ணுவதுதான். ஆனால் ஆவிக்குரிய வாழ்வுக்கு இவைகள் முக்கியமானவை என்றாலும் இவற்றை மட்டும் நாம் கைக்கொண்டு நமது தனிப்பட்ட வாழ்க்கையினை மாற்றிக்கொள்ளாமல் இருப்போமானால் அதனால் எந்தப் பலனுமில்லை; நமது வாழ்வில் கனிகளைக் காணவும் முடியாது.
முதலில் நாம் நமது வாழ்வில் தேவனைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். வாழ்வில் தேவனை அறியாமல் நாம் செய்யும் செயல்பாடுகள் யானையைப் பார்த்தக் குருடர்கள் செய்த செயல்களைப் போன்றவைதான். தேவனை நாம் அறியாவிட்டால், யானையைச் சுவராகவும், தூணாகவும், கயிறாகவும், முறமாகவும் அவர்கள் பார்த்ததுபோல நாமும் தேவனைக்குறித்து நமக்குள்ளே தவறாக எண்ணிக்கொண்டுதான் வாழ்வோம்.
தேவனை அறியும்போது மட்டுமே அவரது தெய்வீக குணங்கள் நமக்குள் வரும். குறிப்பாக, அன்பு, இரக்கம் போன்ற குணங்கள் நமக்குள் தேவனால் வரும் குணங்களாகும். நியாயத்தீர்ப்பு நாளில் நாம் செய்த இரக்கச் செயல்களே நமக்குத் துணையாக நிற்கும். "ஏனென்றால், இரக்கஞ் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்." ( யாக்கோபு 2 : 13 ) என்று கூறப்பட்டுள்ளது.
மட்டுமல்ல, நாம் வெறும் பக்திச் செயல்பாடுகளோடு நிறுத்திக்கொள்ளாமல் தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." ( 1 சாமுவேல் 15 : 22 ) என்று ஏசாயா நூலில் வாசிக்கின்றோம்.
இன்றைய தியான வசனத்தில், "அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாம் ஏவாளோடு உலாவினார். அப்போது அவர்களுக்கு அவர் நிறைவேற்றிடமுடியாத பெரிய கட்டளைகளைக் கொடுக்கவில்லை. ஒரு சிறு கட்டளைதான் கொடுத்தார். ஆனால் ஆதாம் அதனை மீறினான். அதுபோலவே இஸ்ரவேல் மக்களும் தேவ கட்டளையை மீறினார்கள். இன்றும் மனிதர்கள் தேவ கட்டளைகளுக்குச் செவிகொடுப்பதில்லை.
ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய பக்திச் செயல்களல்ல, தேவனை நமது வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அறிந்து அவரோடு இணைந்து வாழ்வதே அவசியம். தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவேண்டியதே அவசியம். "உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப்பிரியமில்லை." ( ஏசாயா 1 : 11 )
இன்று நாமும் ஆதாமைப்போல எந்தெந்த விதங்களில் தேவ கட்டளைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளோம் என்று எண்ணிப்பார்ப்போம். தேவ கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுவது துரோகம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. காரணம் நாம் அவருக்கு விரோதமாகச் செயல்படும்போது அவரை அவமதிக்கின்றோம்; அவரைக் காலால் மிதிக்கின்றோம். ஆம், "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10 : 29 )
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது பரிசுத்த இரத்தத்தால் உருவாக்கிய புதிய உடன்படியையை ஆதாமைப்போல் நாமும் மீறிடாமல்; தேவனுக்குத் துரோகம் செய்திடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1623 ஆதவன் 18.07.2025 வெள்ளி
"இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்." ( ஏசாயா 12 : 2 )
மனிதர்களுக்கு நம்பிக்கையற்ற வேளைகளில் பயம் ஏற்படுகின்றது. நமக்கு இந்த இக்கட்டான வேளைகளில் யார் உதவுவார்? யார் நமக்கு வழிகாட்டுவார்? என நமது மனம் துவண்டுவிடும். இத்தகைய வேளைகளில் நாம் பெரும்பாலும் நமக்குத் தெரிந்த ஒவ்வொரு மனிதர்களாக எண்ணிப்பார்த்து இவர்களில் யாரிடம் இந்தப் பிரச்சனைக்கு உதவி கேட்கலாம் என்று எண்ணுவதுண்டு.
ஆனால் வேதம் நமக்கு கூறும் அறிவுரை, "மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."( சங்கீதம் 118 : 8 ) என்பதுதான். தேவனை நாம் நம்பும்போது ஏதாவது வழியில் நமக்கு உதவும் கரங்களை அவரே அனுப்புவார்.
சமீபத்தில் ஒரு செய்தியை வாசித்தேன். மாலை வேளையில் தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சச் சென்ற விவசாயி ஒருவர் தவறி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அந்தக் கிணற்றில் சிறிதளவு நீரே இருந்ததால் அவர் உடனே அங்கிருந்த ஒரு மரத்தின் வேரை பற்றிக்கொண்டு இரவு முழுவதும் ஜெபித்துக்கொண்டு இருந்தார். மறுநாளிலும் மதியம் வரை அங்கு எவரும் வரவில்லை. அவர் கூக்குரலிட்டு அபயக்குரல் எழுப்பியும் யாரும் அவரைக் காணவில்லை. மாலை வேளையில் அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மனிதர்கள் அவரைக் கண்டுபிடித்தனர்.
மேலிருந்து அந்த மனிதர்கள் அவரிடம், 'பயப்படாதே, தைரியமாய் இரு. நாங்க உன்னைக் காப்பாற்றிவிடுவோம்" என்று அவருக்குத் தைரியம் கூறினர். கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்த மனிதனுக்கு அது எத்தனை பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்!! அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தேவனுக்கு நன்றிகூறினார்.
ஆம் அன்பானவர்களே, நாம் தேவனோடு ஐக்கியத்தில் இருப்போமானால் நமக்கு அவரிடம் நம்பிக்கை ஏற்படும். எந்த எதிர்மறையான சூழ்நிலையும் நம்மை மனம்மடியச் செய்யாது. நாமும் ஏசாயா கூறுவதுபோல, "தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்." என்று கூறி தைரியமாக இருப்போம்.
எனவேதான் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பேத் தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான் 4 : 18 ) என்று. தேவனிடம் நாம் பூரண அன்பு கொள்ளும்போது அது பயத்தைப் புறம்பேத் தள்ளும்.
மட்டுமல்ல, அப்படி நாம் தேவன்மேல் நம்பிக்கைகொண்டு வாழும்போது பாக்கியவான்களாக இருப்போம் என்று வேத வசனம் கூறுகின்றது. "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்." ( எரேமியா 17 : 7 )
ஆம் அபானவர்களே, நாம் எந்த வேளையிலும் தேவனை பற்றிக்கொண்டு அவர்மேல் அன்புகொண்டு வாழ்வோம். நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் வரும்போது, "தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்" என்று நமக்குள் கூறிக்கொண்டு நம்மை நாமே திடப்படுத்திக்கொள்வோம். அவரிடம் நாம் பூரண அன்பு கொள்ளும்போது பயம் நம்மை விட்டு அகலும். நாமும் பாக்கியவான்களாக வாழ்வோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1624 ஆதவன் 19.07.2025 சனி
"பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." ( உபாகமம் 32 : 10 )
இன்றைய தியானத்துக்குரிய வசனம் யாக்கோபு வானந்தரம் வழியாக நடந்துசென்றபோது தேவன் அவனோடு உடனிருந்து நடத்திய மேன்மையை நமக்கு உணர்த்தி நமது வாழ்விலும் தேவன் இத்தகைய வழிநடத்துதலைத் தருவார், எனவே நாம் பயப்படத் தேவையில்லை எனும் நம்பிக்கையைத் தருவதாக உள்ளது. ஈசாக்கு தனது மகன் யாக்கோபிடம், "தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி" ( ஆதியாகமம் 28 : 4 ) அவனை பதான் அராமிற்கு அனுப்புகின்றான்.
யாக்கோபு தனது தகப்பன் ஈசாக்கு தனக்குக் கட்டளையிட்டபடி பதான் அராமிலிருக்கும் தனது மாமன் வீட்டிற்கு வனாந்தரம் வழியாக நடந்து சென்றான். கானானுக்கும் பதான்அராமிற்கும் இடையிலான தூரம் சுமார் 640 கிமீ (400 மைல்கள்) ஆகும் என்று இன்றையகால ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இது முழுவதும் பாலைவன பாதையாகும். பாலைவனத்தில் உயிரைப்பறிக்கக்கூடிய கொடிய வனவிலங்குகள் பல உண்டு. தனியனாக வழிநடந்த அவனைக் கொடிய விலங்குகளிடம் சிக்கிப் பலியாகாமல் தேவனே காத்துக்கொண்டார்.
இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம், "பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." என்று வாசிக்கின்றோம். ஆம், "கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவனோடே இருந்ததில்லை." ( உபாகமம் 32 : 12 )
இந்த வனாந்தர பயணத்தில் தேவன் அவனோடு பேசினார். வெளிப்பாடுகளைக் கொடுத்தார். இருள் சூழ்ந்த ஒரு இரவில் அவன் ஒரு கல்லில் தலை சாய்த்து உறங்கியபோது அவனிடம் தேவன் அற்புதமான கனவு மூலம் பேசினார். பூமிக்கும் வானத்துக்கும் இணைப்பான ஒரு ஏணியை அவன் கண்டான். "அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்." ( ஆதியாகமம் 28 : 13 ) என்றார். அந்த இடத்திற்கு அவன் பெத்தேல் என்று பேரிட்டான் ( ஆதியாகமம் 28 : 19 ).
பாலைவன பயணத்துக்குப் பின்னரும் அவன் வாழ்வில் கடினமான சூழ்நிலையே நிலவியது. ஆனாலும் தேவன் அவனோடு இருந்து அவனை ஆசீர்வதித்தார். அவன் திரும்பி தனது சொந்த நாட்டிற்குத் திரும்பியபோதும் தேவன் அவனோடு ஒரு மனிதனாக இடைபட்டார். அவனோடு ஒரு இரவு முழுவதும் போராடினார் என்று கூறப்பட்டுள்ளது. அவன் மனிதர்களோடும் தேவனோடும் போராடி வெற்றிகண்டான். "அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்." ( ஆதியாகமம் 32 : 28 )
ஆம் அன்பானவர்களே, தேவன் அனுமதித்து நமது வாழ்வில் வனாந்தர பயணம் வருமானால் யாக்கோபுக்கு வந்ததுபோல தேவனாலும் மனிதர்களாலும் அனுமதிக்கபட்டச் சோதனைகள் வரலாம். அதனால் நிச்சயம் பிற்காலத்தில் ஆசீர்வாதம் உண்டு. யாக்கோபு திரும்பி வரும்போது மிகப்பெரிய ஆசீர்வாதத்துடன் வந்தான். "அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்." ( ஆதியாகமம் 32 : 10 ) என்று கூறுகின்றான் அவன்.
இன்று நாமும் ஒருவேளை இதுபோல பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் நடந்துகொண்டிருக்கலாம். கொடிய விலங்குகள் போன்று பல பிரச்சனைகள் நம்மைச் சுற்றிலும் இருக்கலாம். ஆனால் நாம் தனியாக இருப்பதுபோலத் தெரிந்தாலும் தனியாக இல்லை. தேவன் நம்மோடுதான் இருக்கின்றார். அவர் யாக்கோபைக் கண்டுபிடித்ததுபோல நம்மையும் கண்டுபிடித்து நடத்துவார், தமது கண்மணியைப் போலக் காத்துக்கொள்வார். யாக்கோபோடு போராடினாலும் வனாந்தர வாழ்வில் பேசி வழிநடத்தியதுபோல நம்மோடும் பேசி நம்மைத் திடப்படுத்துவார். தேவனோடுள்ள ஐக்கியத்தை மட்டும் நாம் விடாமல் பற்றிக்கொள்வோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1625 ஆதவன் 20.07.2025 ஞாயிறு
"உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." ( ஏசாயா 60 : 20 )
தேவனை அறியாத இருளின் வாழ்க்கையினை வாழ்ந்து துக்கமும் சோகமும் அனுபவித்த நாம் அவரை அறியும்போது அவரது வியத்தகு ஒளியினிடம் வருகின்றோம். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வியத்தகு ஒளியான மெய்யான தேவன். எனவேதான், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து அவரை முற்றிலும் அறிந்த அவரது சீடனான யோவான் அவரைக்குறித்து எழுதும்போது, "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.' ( யோவான் 1 : 9 ) என்று கூறுகின்றார்.
"எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி" என்று அவர் கூறுவதால் அவர் ஜாதி, மதம், இனம், நாடுகளுக்கு அப்பாற்பட்டு எந்த மனிதனையும் ஒளிர்விக்க வல்லவர் என்று அவர் கூறுகின்றார். அந்த ஒளியான இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில் ஏற்றுக்கொள்ளும்போது நம்மிலிருக்கும் இருள் மறைகின்றது; ஒளி நம்மில் பிரகாசிக்கின்றது. சூரியனும் சந்திரனும் ஒளிகொடுக்க குறிப்பிட்ட கால நேரங்கள் உண்டு. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்டக் கால நேரத்துக்கல்ல, நித்திய காலத்துக்கும் நமது வாழ்வில் அவர் வெளிச்சமாயிருப்பார்.
மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்" என்று. ஆம் அன்பானவர்களே, இன்று ஒருவேளை இதனை வாசிக்கும் உங்களது வாழ்க்கை இருளானதாகத் தெரியலாம். எந்த நம்பிக்கையுமற்ற எதிர்காலம் உங்களை அச்சுறுத்தலாம். ஆனால் அவற்றைப் பார்க்காமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து அவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கும்போது இந்த வியத்தகு ஒளி உங்களைச் சூழ்ந்துகொள்ளும். அந்த நம்பிக்கையின் ஒளி உங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டால் அது அஸ்தமிப்பதுமில்லை; மறைவதுமில்லை. அது நித்திய வெளிச்சமாயிருக்கும். இதுவரை வேதனைப்படுத்தி வந்த துக்கநாட்கள் முடிந்துபோகும்.
மேலும், நாம் மனம்திரும்பி அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நமது பழைய நெகிழப்பட்ட, கைவிடப்பட்ட வாழ்க்கை முற்றிலும் அகன்றுவிடும். அதனையே அவர் ஏசாயா மூலம், "நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்." ( ஏசாயா 60 : 15 ) என்று கூறுகின்றார்.
வேத வசனங்கள் வெறுமனே வசித்து மறந்துவிடுவதற்கானவை அல்ல; மாறாக அவை நமது வாழ்வில் பலிக்கக்கூடிய உண்மையுள்ள வார்த்தைகள். அவை உயிருள்ள கடவுளின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள். அவற்றை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது அவை நமது வாழ்வில் அற்புதங்களைக் கொண்டுவரும்.
எந்தவிதமான பாடுகள், கவலைகள், துக்கங்கள், பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை அவரிடம் விட்டுவிடுவோம். அவருக்கேற்ற வாழ்க்கை வாழ உறுதியேற்போம். நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நமது இருதயத்தில் வந்து தங்கிட இருதயத்தின் அருகிலேயே நின்றுகொண்டிருக்கிறார். அவருக்குக் கதவைத் திறக்கவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." ( 1 யோவான் 1 : 9 ) அப்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1626 ஆதவன் 21.07.2025 திங்கள்
"தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்." ( 1 கொரிந்தியர் 7 : 17 )
தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாகவும் வெவ்வேறு நோக்கத்துக்காகவும் படைத்துள்ளார். எனவே, நமக்கு நியமிக்கப்பட்டப் பணியை அறிந்து அதனை நாம் சிறப்பாகச் செய்யவேண்டும். இதுவே தேவனது சித்தம். ஆனால் நம்மில் பலரும் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு வாழ்பவர்களாக இருக்கின்றனர். இப்படி ஒப்பிடாமல், அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன் என்கின்றார் பவுல்.
இதனை அப்போஸ்தலரான பவுல் உடலின் உறுப்புகளைக்கொண்டு "நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்." ( 1 கொரிந்தியர் 12 : 27 ) என்று கூறியுள்ளதை நாம் அறிவோம். எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. அதுபோல நம்மிலும் ஒவ்வொருவருக்கும் தேவனால் நியமிக்கப்பட்டப் பணிகள் உண்டு.
இன்று ஆவிக்குரிய காரியங்களிலும், உலகக் காரியங்களிலும் பலர் மற்றவர்களையேக் கவனித்து அவர்களைபோலத் தாங்களும் மாறவேண்டுமென்றும் எண்ணிக்கொண்டு செயல்படுகின்றனர். இதுவே போட்டிகளும் பொறாமைகளும் எழுவதற்குக் காரணமாக இருக்கின்றது. இதனை நாம் தவிர்க்கவேண்டுமென்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். எனவேதான் அவர், "அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன்" என்று குறிப்பிடுகின்றார்.
இன்று கிறிஸ்தவ சமூகத்தில் காப்பியடித்தல் பல்வேறு விதங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் காணலாம். குறிப்பாக கிறிஸ்தவ ஊழியங்களில் இது அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நான் சாத்தான்குளத்தில் பணியாற்றியபோது ஒரு சகோதரனை எனக்கு ஒருவர் அறிமுகப்படுத்தினார். அவர் முதல்முதல் தன்னைபற்றி என்னிடம் கூறிய வார்த்தைகள், "பிரதர், நான் DGS தினகரனைப்போலவே பாடுவேன்" என்பதுதான். ஆம், பிரபல ஊழியர்களைக் காப்பியடித்து அவர்களைப்போல பேசவும் பாடவும் முயலுதல் பெருமையாக எண்ணப்படுகின்றது. ஆனால் அதுவே இன்று கிறிஸ்தவ ஊழியங்களில் சாபக்கேடாக இருக்கின்றதை நாம் காணலாம். கிறிஸ்து இப்படி ஊழியர்களைக் காப்பியடிக்கக் கூறவில்லை. நாம் பின்பற்றவேண்டிய ஒரே மாதிரி கிறிஸ்துதான்.
"நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்." ( 1 கொரிந்தியர் 12 : 27 ) எனவே உங்களுக்குரிய கிறிஸ்தவ கடமைகளை மட்டும் செய்யுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். மற்ற உறுப்புக்கள் செய்யும் பணியைச் செய்ய நாம் தேவையில்லை.
இதுபோலவே மற்றவர்களுக்குரிய சொத்துக்கள், நகைகள், ஆடைகள் பதவிகள் போன்று நமக்கு இல்லையே என்று கவலைப்பட்டு கலங்கும் மக்களும் உண்டு. இத்தகைய கவலை இருக்குமானால் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவில்லை என்று பொருள். மட்டுமல்ல, இத்தகைய எண்ணமுள்ள ஆணும் பெண்ணும் ஆவிக்குரிய மேலான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது.
இவற்றை நாம் விட்டுவிடவேண்டுமானால், அமர்ந்திருந்து தேவன் நமக்குக் கொடுத்துள்ள நன்மைகளை எண்ணிப்பார்த்து அவற்றுக்கு நன்றிகூறப் பழகிடவேண்டும். அப்போது மட்டுமே தேவன் நம்மை ஆசீர்வதிக்கமுடியும். மேலும், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை இறையியல் சிந்தனையாளர்கள் விரும்புவதுபோல மேடுபள்ளங்கள் இல்லாத சமத்துவ சமுதாயம் நாட்டில் என்றைக்குமே மலர்ந்திட முடியாது. இயேசு கிறிஸ்துவும் அப்படி ஒரு சமுதாயத்தை உருவாக்கிட உலகினில் வரவில்லை. மேடும்-பள்ளமும், இருளும்-வெளிச்சமும், குட்டையும்-நெட்டையும் இயற்கை. அவை இருப்பதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. உதாரணமாக, உலக நிலப்பரப்பு மேடுபள்ளமற்ற சமபூமியாகுமானால் முழுவதும் கடல்நீரால் நிறைந்து அழிந்து விடும்.
"எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது." ( 1 கொரிந்தியர் 7 : 7 ) என்கின்றார் பவுல். அதாவது அவரது ஆசை எல்லோரும் அவரைப்போல மாறவேண்டும் என்பது. ஆனால் அவரே கூறுகின்றார், "அவனவனுக்கு தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது." என்று. ஆம் அதுதான் தேவ சித்தம்.
எனவே, மற்றவர்களைப் பார்க்காமல், காப்பியடிக்காமல், தேவன் நமக்குப் பகிர்ந்ததெப்படியோ, அவர் நம்மை அழைத்ததெப்படியோ, அப்படியே நடப்போம். நமக்கு அவர் தந்த அளவுக்குத்தான் நம்மிடம் அவர் இறுதிநாளில் கனக்குக் கேட்பார். "அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்" ( லுூக்கா 12 : 48 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
எனவே, மற்றவர்களை நோக்காமல், பொறாமை கொள்ளாமல் "கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன்." தேவன் நமக்குக் கொடுத்துள்ள தாலந்துகளை பயனுள்ளவையாகப் பயன்படுத்துவோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1627 ஆதவன் 22.07.2025 செவ்வாய்
"நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே." ( 2 கொரிந்தியர் 8 : 9 )
தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கவேண்டுமென்பதற்காக தாய் தகப்பன்மார் பல்வேறு உபத்திரவங்களைச் சகிக்கின்றனர். வீடுகளில் வேலைசெய்தும் மிகக் கடுமையான தொழில்களில் ஈடுபட்டும் வரும் பலர் தங்களுக்குக் கிடைக்கும் சிறு வருமானத்திலும் தங்களது ஆசைகளை அடக்கி தங்கள் குழந்தைகளது படிப்புக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்கின்றனர். நாம்தாம் இப்படி ஆகிவிட்டோம் நமது குழந்தைகளாவது எதிர்காலத்தில் நல்ல நிலையில் வரவேண்டுமென்னும் கனவுடன் உழைக்கின்றனர்.
ஆம் அன்பானவர்களே, இதைவிட மேலானவராக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இருக்கிறார் என்று இன்றைய வசனம் சொல்கின்றது. அவர் செல்வந்தன்தான். ஆனால் நாம் செல்வந்தர்கள் ஆகவேண்டும் என்பதற்காக; நாம் மீட்கப்பட்டு பரலோகத்தைச் சுதந்தரிக்கவேண்டும் என்பதற்காக அவர் தந்து செல்வ நிலைமையை விட்டுவிட்டு நமக்காக தரித்திரனானார். உலகத் தாய் தகப்பன்மார் தங்களது இல்லாமையில் தியாகங்கள் செய்கின்றனர். ஆனால் கிறிஸ்துவோ தனது செல்வ நிலையை நமக்காகத் தியாகம் செய்து நம்மைப்போலானார்.
"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்." ( பிலிப்பியர் 2 : 6,7 ) அடிமை என்பவன் எந்த அடிப்படை மனித உரிமையும் இல்லாதவன். இந்த அண்ட சராசரங்களைப் படைத்து ஆளும் தேவன் ஒரு அடிமையைப்போல ஆனார் என்பதை எண்ணிப்பாருங்கள். எதற்காக? நமக்காக. நாம் மீட்பு பெறவேண்டுமென்பதற்காக. இந்த விதத்தில் அவரது அன்பு மனிதர்களது அன்பைவிட பல மடங்கு மேலானதல்லவா?
வறுமையில் பல தியாகங்கள் செய்து சேகரித்தப் பணத்தில் மகனைப் படிக்கவைக்கும் தாய், அந்த மகன் வேண்டாத நண்பர்களது சகவாசம்கொண்டு படிக்காமல் தாய் அனுப்பும் பணத்தையும் தாறுமாறாய்ச் செலவழித்தால் எவ்வளவு வேதனைப்படுவாள்? அத்தகைய பெற்றோர்களை நாம் இந்த உலகத்தில் பலவேளைகளில் சந்திக்கின்றோம் அல்லவா? சமீபத்தில் ஒரு பத்திரிக்கைச் செய்தியில், படிப்புக்காக தான் கொடுக்கும் பணத்தைத் துன்மார்க்கமாய் மகன் செலவளித்ததால் ஒரு தாய் மனம்பொறுக்காமல் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டாள் என்று வாசித்தேன்.
அன்பானவர்களே, இன்று பலரும் கிறிஸ்துவின் மீட்பினை அலட்சியம்செய்து உலக ஆசையில் மூழ்கி கிறிஸ்துவை மறுதலித்து வாழும்போது அவர் இதுபோலவேதான் வேதனைப்படுவார். நமக்காகத் தரித்திரரான இயேசு கிறிஸ்துவின் அன்பை நாம் உணருவோமானால் அவரது விருப்பப்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.
அன்பான இயேசுவே இதனை நாட்களும் உமது மேலான அன்பை உணராமல் அலட்சியமாக வாழ்ந்துவிட்டேன். என்னை மன்னியும். உமக்கு ஏற்ற வாழ்க்கை வாழ இன்றே என்னை ஒப்புக்கொடுக்கிறேன். என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமது பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்து உமக்கு ஏற்புடைய வழியில் நான் தொடர்ந்து நடக்க எனக்கு உதவி செய்யும் என வேண்டுதல் செய்வோம்.
நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் நமக்காகச் செய்த உயிர் தியாகம் வீணாவதை அவர் விரும்பமாட்டார். தனிமையில் கிறிஸ்துவிடம் மனம் திறந்து பேசுங்கள். மேலான தேவ அனுபவத்தை அளித்து நம்மை மகனாக / மகளாக ஏற்றுக்கொள்வார்.
"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1 : 12 )
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1628 ஆதவன் 23.07.2025 புதன்
"தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10 : 29 )
நாம் தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டுள்ளோம். இதனை "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். இந்தக் கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
அதாவது இந்த வசனம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் மீட்பு அனுபவத்தை நாம் நம்பாமல் புறக்கணிக்கக் கூடாது என்பதையும் அதனை நம்பி ஏற்றுக்கொண்டபின்னர் ஆவிக்குரிய பின்மாற்ற மனநிலை நமக்கு ஏற்படக்கூடாது என்பதையும் உணர்த்துகின்றது. மட்டுமல்ல, அப்படி பின்மாற்றமடைவது தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து அவமானப்படுத்துவது போன்றது என்று எச்சரிக்கின்றது. இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்." ( லுூக்கா 9: 62)
தேவனுடைய பாதையில் நடக்க விரும்புவதை இங்கு இயேசு கிறிஸ்து கலப்பையில் கைவைத்து உழுகின்ற விவசயிக்கு ஒப்பிட்டு விளக்குகின்றார். ஒரு விவசாயி கலப்பையினை முன்னோக்கிச் செலுத்தி உழவேண்டுமேத் தவிர உழுவதற்குத் தயாரானபின்னர் பின்நோக்கிப் பார்க்கக்கூடாது. அத்தகைய எண்ணமுள்ளவன் தனக்கு உகந்தவன் அல்ல என்கின்றார் இயேசு.
ஆம் அன்பானவர்களே, தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் பின்னிட்டுப்பார்க்காத ஒரு வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். நமது கடந்த காலத்தை நாம் முற்றிலும் மறந்துவிடவேண்டும் என்பது இதன் பொருளல்ல, மாறாக கடந்த கால பாவ வாழ்க்கையினை அந்த வாழ்க்கைக் கொடுத்த பாவ சந்தோஷத்தை நாம் திரும்பிப்பார்க்கக் கூடாது என்று பொருள்.
நாம் நமது கடந்த கால வாழ்கையினையும் அதன் பாடுகளையும் அவற்றிலிருந்து தேவன் நம்மை மீட்டு புது வாழ்க்கைத் தந்துள்ளதையும் எண்ணி அவருக்கு நன்றிகூறவேண்டுமேத் தவிர பழைய வாழ்கைக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படக்கூடாது. அப்படிப் பின்னோக்கிச் செல்வது அவரது இரத்தத்தை அவமதிப்பது என்று பொருள்.
இத்தகைய பின்னோக்கிச் செல்லும் வாழ்க்கையினை பன்றிக்கும் நாய்க்கும் ஒப்பிட்டு அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்:-"அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது." (2 பேதுரு 2: 21, 22)
இன்று ஆங்காங்கே நடைபெறும் பல்வேறு ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொண்டு தேவ வார்த்தைகளைக் கேட்டு பலர் கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டு தங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்கின்றனர். ஆனால் அவர்களில் பலரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடிவதில்லை. காரணம், கிறிஸ்து காட்டும் குறுகலான பாதை. அந்தப்பாதையில் தொடர்ந்து நடக்கச் சிரமப்படுவதால் பழைய வாழ்கைக்குச் சென்றுவிடுகின்றனர்; பின்னர் முழுவதும் பழைய வாழ்க்கையையே வாழ்கின்றனர்.
ஆனால் தேவன் இத்தகைய வாழ்க்கை வாழ்வதை விரும்புவதில்லை. அன்பானவர்களே, கிறிஸ்துவை நோக்கி அடியெடுத்துவைத்த காலை நாம் பின் வைக்காமல் தொடர்ந்து அவரது பாதையில் நடக்கவேண்டுமென்பதே கிறிஸ்து விரும்புவது. கிருபையால் அவர் நம்மை இரட்சித்துள்ளார். இந்தத் தேவ கிருபையினை நாம் புறக்கணிக்கக்கூடாது என்றும் விரும்புகின்றார். நம்மைப் பாவத்திலிருந்து மீட்ட கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின் பரிசுத்த இரத்தத்தை அசுத்தமென்றெண்ணிடாமல் ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து நடக்கவேண்டியது அவசியம். அப்படித் தொடராமல் அவரை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள் என்று எச்சரிக்கின்றது இன்றைய தியான வசனம்.
நம்மைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணிடாமல் வாழ்வோம்; நித்திய மீட்பு பெறுவோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1629 ஆதவன் 24.07.2025 வியாழன்
"அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்." ( உபாகமம் 7 : 21 )
பயம் நமக்கு ஏற்படக் காரணம் நமது பலவீனம்தான். நாம் நல்ல உடல் நலத்துடன் பலத்துடன் இருக்கும்போது தைரியமாகச் செயல்படுவோம். ஆனால் உடல் பலவீனமாகி நோய்வாய்ப்படும்போது பயம் ஏற்படுகின்றது. ஒருவேளை இது கொடிய நோயாக இருக்குமோ என்று எண்ணிக் கலங்குகின்றோம். இதுபோலவே, பணப்பற்றாக்குறை ஏற்படும்போதும், நமக்கு எதிராக சிலர் செயல்படும்போதும் நமக்குள் பயம் ஏற்படுகின்றது.
ஆனால் இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது, "அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்" என்று. நோய்களோ, வறுமையோ, எதிரிகளோ, எதுவும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. காரணம், "உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்." அவர் குறைவுகளை நிறைவாக மாற்றவல்லவர்.
ஆம் அன்பானவர்களே, நாம் ஆராதிக்கும் தேவன் எங்கோ ஆலயத்தில்மட்டும் அடங்கிக்கொண்டு இருப்பவரல்ல, அவர் நமக்குள் இருந்து செயல்படுபவர், அன்றாடம் நம்மை நடத்துபவர். சர்வலோகத்தையும் படைத்து ஆளும் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாக நமக்குள் இருப்பது ஒரு மேலான இரகசியம் என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 )
அப்படி மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருக்கும் தேவன் எப்படிப்பட்டவர் என்று இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதி "அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்" என்று நமக்கு விளக்குகின்றது. தேவன் அன்பானவர்தான், இரக்கமுள்ளவர்தான் ஆனால் தனது பிள்ளைகளுக்கு எதிரான செயல்களை அவர் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். காரணம் நாம் அவரது கண்விழிகளைப்போல இருக்கின்றோம். "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 8 ) என்று வேதம் கூறுகின்றது. எனவே, நமக்கு எதிரான செயல்பாடுகளுக்கு அவர் பயங்கரமானவராக இருப்பார்.
ஆனால் நாம் நமது பலத்தை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். நமக்குள் இருக்கும் தேவாதி தேவனை நாம் உணர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். யானைகளைப்பற்றிய ஒரு உண்மையை இங்கு நினைவுகூருதல் பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகின்றேன். குட்டி யானைகளை முதலில் சிறிய நாய்களைக்கட்டும் சங்கிலியால் கட்டிவைப்பார்கள். அந்தக் குட்டியானைகள் அந்தக் கட்டுக்கு அடிமையாகிவிடும். அவை வளர்ந்தபின்னர் சற்று பெரிய சங்கிலிகளை வைத்துக் கட்டுவார்கள். யானை நினைத்தால் ஒரே இழுப்பில் அதனை அறுத்து தப்பிவிட முடியும். ஆனால் அதன் மனநிலை அதனை அறுக்கவிடாது. அது முன்பு குட்டியாக இருந்தபோது தன்னால் இயலாது என வாழ்ந்த அடிமை மனநிலையால் அந்தச் சிறிய கட்டுக்கு அடங்கியே என்றும் இருக்கும்.
அன்பானவர்களே, தங்களது பலத்தை அறியாத இந்த யானைகளைப்போல அல்லாமல் நாம் நமது பலத்தை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். நமது தேவனாகிய கர்த்தர் நமக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இதனை நாம் உணர்ந்துகொள்வோமானால் மட்டுமே அப்போஸ்தலரான பவுலைப்போல நாமும் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 ) என்று கூறி பயத்தை மேற்கொண்டவர்களாக வாழ முடியும்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1630 ஆதவன் 25.07.2025 வெள்ளி
"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்." ( சங்கீதம் 121 : 1 )
இந்த உலகத்தில் நமக்கு உதவிகள் தேவைப்படும்போது சில நேரங்களில், "நான் இந்தக் காரியத்தில் அவரைத்தான் மலைபோல நம்பியிருக்கிறேன்" என்று கூறுவதுண்டு. அதாவது அந்த நபர் நமக்கு உதவுவார் என்று நிச்சயமாக நாம் நம்பியிருக்கின்றோம் என்று பொருள். மலை உறுதியானது, உயரமானது, யாரும் எளிதில் அசைக்க முடியாதது. அதுபோல அந்த மனிதர்கள் நமக்கு உதவுவார்கள் என்று நாம் உறுதியாக நம்பிக்கொண்டிருப்போம். மட்டுமல்ல, மலையானது நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாகவும் இருக்கின்றது. நமது இந்திய நாட்டிற்குக்கூட வடக்கிலுள்ள இமயமலை மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கின்றது.
இப்படி நாம் நமக்கு உதவிக்காக பல்வேறு நபர்களை மலைபோல நம்பிக்கொண்டிருக்கலாம். அவர்கள் நமக்கு உண்மையாக உதவுபவர்களாகவும் இருக்கலாம். ஆனால், சில வேளைகளில் சூழ்நிலைகள் மாறி அவர்கள் நமக்கு உதவிட முடியாத நிலைகளை உருவாக்கிவிடலாம். நமக்கு வேண்டியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும்கூட சூழ்நிலைகள் மாறும்போது அவர்களால் நமக்கு உதவி செய்ய இயலாமல் போய்விடும்.
எனவேதான் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்." ( சங்கீதம் 118 : 8, 9 )
மேலும், எருசலேம் நகரைச் சுற்றிலும் மலைகள் பாதுகாப்பு அரண்போல இருப்பதுபோல, கர்த்தர் நமக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கின்றார். நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்களாக வாழ்வோமானால் நாமே அவரது பரிசுத்த எருசலேம் நகராக இருக்கின்றோம். அவர் நமக்குள் வந்து தங்குகின்றார். அப்படி நாம் வாழும்போது, "பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்." ( சங்கீதம் 125 : 2 ) எனும் வசனத்தின்படி அவர் நமக்கும் நமது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பார்.
ஆம் அன்பானவர்களே, நமக்கு ஒத்தாசை வரும் மலைபோல அசையாமல் மாறாமல் இருப்பவர் கர்த்தர் மட்டுமே. சூழ்நிலைகளோ, நேரமோ, காலமோ அவரை மாற்றமுடியாது. அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் நித்திய காலத்துக்குமானவைகள். கொடுத்த வாக்குறுதிகளை மாற்றிட மனிதர்களைப்போல அவர் உண்மையற்றவரல்ல. "நாம் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." ( 2 தீமோத்தேயு 2 : 13 )
எனவே, கர்த்தரே நமக்கு மிகப்பெரிய நம்பிக்கை மலையாக இருக்கின்றார்; அவரே நமக்கு ஒத்தாசையாக இருக்கின்றார். அவரை நோக்கி நமது கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது அவரது உதவி நமக்குக் கிடைக்கும். மனிதர்களை நோக்கியல்ல; கர்த்தரையே நோக்கி நமது கண்களை ஏறெடுப்போம். நமக்கு ஒத்தாசை அவரிடமிருந்து மட்டுமே வரும்.
பிரச்சனைகள், துன்பங்கள் நெருக்கும்போது எதிர்மறையான எண்ணம்கொண்டு விசுவாசத்தில் பலவீனமடைந்து பிற தெய்வங்களையோ பிற மத நம்பிக்கைகளையோ நாம் பின்பற்றிடாமல் உறுதியான மனதுடன் கர்த்தரையே கிட்டிச் சேர்வோம். மலைபோன்ற அவரை உறுதியான விசுவாசத்தோடு அண்டிக்கொள்வோம். அப்படி வாழ்வோமானால், "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்". (ஏசாயா 54:10) என்று கூறியுள்ளபடி அவரது கிருபை நம்மைவிட்டு விலக்கிடாமல் இருக்கும்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1631 ஆதவன் 26.07.2025 சனி
"தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." ( சங்கீதம் 90 : 15 )
இன்றைய தியான வசனம் தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெப விண்ணப்பமாகும். மோசேயின் வாழ்வின் மொத்த நாட்கள் 120 ஆண்டுகள். இந்த ஆண்டுகள் சரியாக நாற்பது நாற்பதாக வகுக்கப்பட்ட நாட்களாகும். முதல் நாற்பது ஆண்டுகள் பார்வோனின் மகளின் மகனாக அரண்மனை வாழ்வு. அடுத்து நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் ஆடுமேய்க்கும் துன்பத்தின் நாட்கள். இறுதி நாற்பது ஆண்டுகள் தேவனோடு நடந்து இஸ்ரவேல் மக்களை நடத்திய நாட்கள்.
ஆடுமேய்ப்பவராக வாழ்ந்தபோது மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களை வனாந்தரத்தில் நடத்திய நாற்பது ஆண்டுகளும்கூட மோசே இஸ்ரவேல் மக்களது கடின மனதினாலும் அடங்காத குணத்தினாலும் துன்பத்தை அனுபவிக்கவேச் செய்தார். ஆனாலும் தேவனோடு நடக்கும் உன்னதமான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றார். தேவனோடு நடந்தார்; தேவனை முகமுகமாய்க் காணும் பேறுபெற்றார். "தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." எனும் அவரது விண்ணப்பத்தின்படி தேவன் அவரை ஆவிக்குரிய மகிழ்ச்சியால் நிறைத்து நடத்தினார்.
ஒருவேளை நமது வாழ்வு இன்று சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்வாக இருக்கலாம்; துன்பங்களை அனுபவிக்கும் வாழ்வாக இருக்கலாம்; மற்றவர்களைப்போன்ற மேலான செல்வ ஆசீர்வாதங்களோ, வேலைவாய்ப்போ இல்லாமலிருக்கலாம். ஆனால் என்றுமே அவ்வாறு இருக்குமென்று நாம் கலங்கிடத் தேவையில்லை. அவற்றைக்குறித்து கலங்கிடாமல் மோசேயைப்போல, "ஆண்டவரே எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்." என நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம்.
பல குடும்பங்களில் ஒரு தலைமுறை பாடு அனுபவித்துக் கொண்டிருக்கும். ஆனால் பின்நாட்களில் குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வரும்போது பழைய பாடுகள், துன்பங்கள் மறைந்துவிடும். அந்தக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். இது இயற்கை. ஆனால் எந்த நம்பிக்கையுமற்ற வேளைகளில் பாடுகளிலிருந்து விடுதலை பெற வாய்ப்பே இல்லாத சூழ்நிலைகளில் தேவன் சிலருக்கு உதவி பழைய துன்ப வாழ்க்கையினை மாற்றுவார்; அவர்களது ஆவிக்குரிய வாழ்வையும் மாற்றுவார்.
ஆம் அன்பானவர்களே, தேவன் ஒருவரை ஆசீர்வதிக்குமுன் முதலில் அவரது தனிப்பட்ட வாழ்வை மாற்றிட விரும்புகின்றார். அதாவது, உலக ஆசீர்வாதத்துக்குமுன் நமது ஆவிக்குரிய வாழ்வு மேம்படவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே முதலில் நமது வாழ்வை அவர் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, பின்னர் நிலைநிறுத்துவார். இத்தகைய நிலைநிறுத்துதலுக்குப்பின் வரும் தேவ ஆசீர்வாதமான நாட்களே மெய்யான மகிழ்ச்சிக்குரியதாக்கும். மோசேயை தேவன் இப்படியே நிலைநிறுத்தினார்.
இதனையே அப்போஸ்தலரான பேதுரு "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" ( 1 பேதுரு 5 : 10 ) என்கின்றார்.
எனவே அன்பானவர்களே, துன்பங்கள் சோதனைகள் நமக்கு மகிழ்ச்சிக் குறைவினைக் கொண்டுவந்தாலும் சோர்ந்துபோகாமல் தேவனையே பற்றிக்கொண்டு மோசேயைப்போல வேண்டுதல் செய்வோம். நமது வாழ்வை அவருக்கு ஏற்புடையதாக மாற்றிட முயலுவோம். அப்போது அவர் நம்மைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாம் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் மகிழ்ச்சியாக்குவார். நமது வாழ்வு மெய்யான ஆசீர்வாதம் பெற்ற வாழ்வாக அமையும்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1632 ஆதவன் 27.07.2025 ஞாயிறு
"அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?" ( யாக்கோபு 2 : 25 )
தேவன்மேல் நாம் விசுவாசமுள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு வெறுமனே ஜெபித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, மாறாக நமது விசுவாசம் அதனோடு சார்ந்த செயலாக வெளிப்படவேண்டியது அவசியம். தேவனை நாம் விசுவாசிக்கின்றோமென்றால் அந்த நமது விசுவாசம் உண்மையானது என்பதனை நாம் தொடர்ந்து எடுக்கும் செயல்பாடுகள்தான் உறுதிப்படுத்தும்.
இஸ்ரவேல் மக்கள் யோர்தானைக் கடந்து கானான் தேசத்தினுள் நுழையுமுன் அவர்களுக்கு முதலில் சவாலாக இருந்தது எரிகோவின் கோட்டைமதில்தான். அதனைக் கடப்பதற்குமுன் யோசுவா இரண்டு நபர்களை துப்பறிவாளர்களாக அங்கு அனுப்பினார். அவர்களுக்கு ராகாப் எனும் விபச்சாரப்பெண் உதவியாக இருந்தாள். காரணம், அவள் கர்த்தரிடம் விசுவாசமாக இருந்தாள் என்று கூறப்பட்டுள்ளது. "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து வெளிவந்தபோது வனாந்தரத்தில் தேவன் அவர்களை வழிநடத்திய அனைத்துச் செயல்பாட்டு அற்புத அதிசயங்களையும் அவள் கேள்விப்பட்டிருந்தாள். எனவேதான் அவள் கூறுகின்றாள்:- "நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்." ( யோசுவா 2 : 10, 11 )
மட்டுமல்ல, கானான் தேசத்தை தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறார் என்பதனையும் அவள் தனது விசுவாசத்தால் அறிந்திருந்தாள். "கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்." ( யோசுவா 2 : 9 ) என்று தனது விசுவாசத்தையும் அறிக்கையிட்டாள்.
எனவே அவள் யோசுவா அனுப்பிய இரண்டு வேவுக்காரரையும் மறைத்து வைத்துக் காப்பாற்றினாள்; அவர்களை ராஜாவின் ஆட்களிடம் அகப்படாதவாறு காப்பாற்றி வேறு வழியாக அனுப்பிவைத்தாள். இந்தச் செயலினால் அவள் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். எபிரெய நிருப விசுவாசிகளின் பட்டியலில் அவளது பெயர் இடம்பெறவும் இதுவே காரணமாயிற்று.
ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே தேவனை விசுவாசிப்பது மட்டுமல்ல, ஏற்ற வேளையில் துணிவுடன் நமது விசுவாசத்தை நமது செயல்கள் மூலம் வெளிப்படுத்துபவர்களாக வாழவேண்டியதும் அவசியம். அதனையே தேவன் விரும்புகின்றார். பிரச்சனைகள் ஏற்படும்போது நமது தனிப்பட்ட வாழ்வில் விசுவாசத்தை நாம் எப்படி வெளிப்படுத்துகின்றோம் என்பதனை சிந்தித்துப் பார்ப்போம். "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்" (எபிரெயர் 11:6)
மேலும், "ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது." ( யாக்கோபு 2 : 26 ) என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1633 ஆதவன் 28.07.2025 திங்கள்
"நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்." ( யோவான் 14 : 18, 19 )
சில தந்தையர்கள் தாங்கள் மரணமடையுமுன் தங்களது பிள்ளைகளுக்குச் சில அறிவுரைகளையும் வாக்குறுதிகளையும் கூறுவதுண்டு. அவை குறிப்பாக அவரது சொத்துக்கள் பற்றியகாகவே இருக்கும். தான் மரணமடைந்தபின்னர் நீங்கள் என்ன செய்யவேண்டும், சொத்துக்களை எப்படி உங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவேண்டும், உங்களது தாயை எப்படிக் கவனிக்கவேண்டும் என்று பல்வேறு இறுதி ஆசைகளைக் கூறுவார்கள். ஆனால் எந்தத் தகப்பனும் இறந்தபின்னர் தங்கள் பிள்ளைகளோடு வந்து வாழ்வேன் என்று கூறமுடியாது; வாழவும் முடியாது; அவர்களுக்கு ஆலோசனைகள் கூறமுடியாது.
உலகத் தகப்பனைப்போலவே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் மரணமடையுமுன் தனது சீடர்களிடம் பேசினார். அதில் முக்கியமானதுதான் இன்றைய தியான வசனத்தின் முதல் பகுதி. அவர் கூறுகின்றார், நான் உலகினில் உங்களுடன் இல்லை என்பதற்காக நீங்கள் வருந்தவேண்டாம்; "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்." என்று. மேலும், நான் உலகினில் இல்லை என்பதால் உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள் என்கின்றார். ஆம், நமது ஆண்டவர் என்றென்றும் வாழ்கின்றவர். "மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்." (வெளி 1:18) என்று கூறவில்லையா ?
ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்துத் தம்மை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கூறும் செய்தி, அவர் நம்மை விட்டு எங்கும் சென்றுவிடவில்லை; மாறாக, நம்மோடுதான் இருக்கின்றார் என்பதுதான். இதனை நாம் மெய்யாகவே உணர்ந்துகொள்ள முடியும். அவர் நம்மோடு இருப்பதை நாம் உணர்ந்துகொள்வோமானால் நாம் அவரது பிள்ளைகளாய் வாழ்கின்றோம் என்று பொருள். "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்." ( யோவான் 14 : 20 ) என்று இயேசு மேலும் கூறுகின்றார்.
இடதுசாரி சிந்தனைகொண்டு நான் கிறிஸ்துவை அறியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தபோது இயேசு கிறிஸ்துவை, சாக்ரடீஸ், பிளாட்டோ போல சாதாரண ஒரு சிந்தனைவாதி என்றுதான் கூறிக்கொண்டிருந்தேன். கம்யூனிச சிந்தனைவாதிகள் அனைவருமே அப்படித்தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்று அந்த உலக அறிஞர்கள் அனைவரும் மரித்து மண்ணொடுமண்ணாகப் போய்விட்டார்கள். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்" என்று கூறிய வார்த்தையின்படி எனக்குத் தன்னை வெளிப்படுத்தித் தான் உயிரோடிருப்பதை எனது தனிப்பட்ட வாழ்வில் மெய்ப்பித்தார்.
இன்றைய தியான வசனத்தின் இறுதியில் இயேசு கூறுகின்றார், "நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்" என்று. இது நமது பாவத்துக்குச் செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும் வாழ்வைக் குறித்து இயேசு கூறுவதாகும். இதற்காகவே அவர் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார். இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்". (1 பேதுரு 2:24) என்று குறிப்பிடுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவை வாழ்வில் ஏற்றுக்கொண்ட எவரும் திக்கற்றவர்களல்ல; அனாதைகளல்ல. மாறாக, என்றும் உயிருள்ள தகப்பனைத் தங்களோடு கொண்டவர்கள்; அதிகாரம் மிகுந்த ராஜாவின் பிள்ளைகள். வெளியுலகம் வேண்டுமானால் அவரைக் காணாமலிருக்கலாம் ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழும் நாமோ அவரைக் காண்கின்றோம். எனவே தைரியமாக நமது வாழ்வைத் தொடர்வோம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1634 ஆதவன் 29.07.2025 செவ்வாய்
"மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்..." ( உபாகமம் 8:3, மத்தேயு 4 : 4 & லூக்கா 4:4 )
மனிதர்கள் பலரும் இந்த உலகத்தின் செல்வங்கள் மட்டுமே தங்களுக்கு நிம்மதியான, மேலான ஒரு வாழ்க்கையினைக் கொடுக்கமுடியுமென்று எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். ஆனால் உலகினில் நாம் பிழைப்பதற்கு உலக செல்வங்கள் மட்டும் போதாது அவற்றைவிட தேவனுடைய கிருபை நமக்கு மிகமிக அவசியம் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தேவன் கிருபையாய் ஒரு வார்த்தைசொன்னால் நமது வாழ்க்கை முற்றிலும் மாறும்; வாழ்வடையும். ஆம், உலக செல்வங்களால் மட்டுமல்ல, தேவ கிருபை இருந்தால் மட்டுமே நாம் உலகினில் பிழைத்து வாழ முடியும்.
மிகச் சமீபத்தில் எனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்:- ஒரு நபரை எனக்குத் தெரிந்த சகோதரர் ஒருவர் என்னிடம் அறிமுகப்படுத்தினார். அந்த நபர் வெளிநாடுகளில் வேலைசெய்து அதிக அளவில் பொருள் சம்பாதித்து திரும்பியவர். பல்வேறு இடங்களில் சொந்தமாக மனைவி பெயரிலும் தனது பெயரிலும் நிலங்கள் வாங்கிக் குவித்துள்ளார். வங்கியிலும் அதிக அளவு பணம் உண்டு. ஆனால் சமீபகாலமாக அவரது வீட்டில் ஒற்றுமையில்லாத பிரச்னை.
இப்போது அவருடன் அவரது மனைவி பிள்ளைகள் பேசுவது கிடையாது. அவருக்கு உணவளிப்பதுகூடக் கிடையாது. அவர் மூன்று வேளையும் ஹோட்டல்களில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார். வாழ்வில் நிம்மதியில்லை. தற்கொலைசெய்து உயிரை மாய்த்துக்கொள்ள சிந்தனையுள்ளவராக இருக்கின்றார். "பிரதர், இவருக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்று என்னிடம் அந்தச் சகோதரர் கூறினார்.
அவருக்காக ஜெபித்தபோது, ஒருவாரமாக எனக்குத் தேவன் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் ஒருநாள் காலை எட்டுமணியளவில் திடீரென்று இன்றைய தியான வசனத்தை தேவன் எனக்கு அளித்து, "இதுதான் அவனுக்கு நான் கூறும் பதில்" என்றார். "எனது வார்த்தைக்கு அவன் கீழ்ப்படிந்தால் அவனது வாழ்வு மாறும்" என்றார். பின்னர் விசாரித்தபோது தெரிந்தது அந்தச் சகோதரன் பணம், சொத்து சேர்க்கும் ஆசையில் இருந்தாரேத்தவிர மனைவி மக்களை நன்கு கவனிக்கவில்லை என்பது. அவரிடம் தேவனது பதிலை எடுத்துக்கூறி, "நீங்கள் பணம் சொத்து சேர்ப்பதில் செலுத்தும் ஆர்வத்தை ஆண்டவரது வார்த்தைகளைக் கேட்பதிலும் அவற்றுக்குக் கீழ்ப்படிவதிலும் காட்டுங்கள், தேவன் உங்கள் நிலைமையை மாற்றுவார்" என்று கூறினேன்.
ஆம் அன்பானவர்களே, அந்த நபரிடம் "அப்பம்" அதிகமாக இருக்கின்றது, ஆனால் தேவனுடைய வார்த்தை இல்லாததால் அவருக்குப் பிழைக்க வழியில்லாமலிருக்கின்றார். இதனையே தேவன் எனக்கு உணர்த்தினார்.
இதனையே நாம் உபாகமம் நூலில் வாசிக்கின்றோம், "அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு ....." ( உபாகமம் 8 : 3 ) என்று. ஆம் சிலவேளைகளில் தேவன் நம்மைச் சிறுமைப்படுத்தி, பசியினால் வருந்துவது மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை நமக்கு உணர்த்தும்படிக்காகவும் இருக்கலாம்.
எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் இத்தகைய நிலைமை இருப்பதை அறிவேன். பணத்துக்கோ, சொத்துசுகங்களுக்கோ குறைவிருக்காது, ஆனால் குடும்ப சமாதானமில்லாத நிலைமை அதிகமாக காணப்படுகின்றது. இத்தகைய நிலைமை இருக்குமானால் அதற்குத் தேவன் தரும் தீர்வு இதுதான். பணம், சொத்து, இவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தேவனுக்குக் கொடுங்கள் என்பதே. அன்பானவர்களே, அப்பத்தினால் மட்டுமல்ல தேவனது வார்த்தையினாலும்தான் நாம் பிழைக்க முடியும். தேவ வார்த்தைகளை நமக்குள் வாங்கி அவற்றுக்குக் கீழ்ப்படிந்து வாழ முயலுவோம். அப்படி வாழும்போது மட்டுமே பிரச்சனைகள் மாறமுடியும்; நாம் பிழைக்கமுடியும்; செழிக்கமுடியும்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1635 ஆதவன் 30.07.2025 புதன்
"உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்." ( ஏசாயா 44 : 24 )
இன்றைய தியான வசனம் நமக்கு நம்பிக்கையும் திடனும் அளிப்பதாக இருக்கின்றது. நாம் இன்று பல்வேறு கவலைகளால், பிரச்சனைகளால் துன்புறும்போது மனம் தளர்வடைந்துவிடுகின்றோம். இந்தத் தளர்வு நமக்குத் தேவையில்லாதது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
தேவனாகிய நானே இந்த வானங்களையும் அண்டசராசரங்களையும் உருவாக்கி ஆண்டுவருகின்றேன். இதற்கு நான் வேறு அவருடைய உதவியையும் நாடவில்லை. நான் ஒருவராய் இந்த வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினேன். இவற்றை உருவாக்கிய என்னால் உனக்கு உதவிடமுடியாதா? என்கின்றார் உன்னதமான தேவன்.
விஞ்ஞானிகள் கூறும் அண்டசராரசாரத்தின் ஒரு பகுதியான நமது பால்வெளி குறித்து நாம் அறியும்போது ஆச்சரியமடைகின்றோம். நமது தேவனின் வல்லமையினை உணர்ந்துகொள்கின்றோம்.
"Galaxy" என்ற சொல் கிரேக்க மொழியிலுள்ள galaxias என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதற்கு அர்த்தம் "பாலைப்போல" என்பதாகும். இது, நம்முடைய சூரிய குடும்பம் அடங்கியுள்ள "பால்வெளி" விண்மீன் தொகுப்பைக் குறிப்பதாகும். ஒரு விண்மீன் தொகுப்பில் சராசரியாக 10 கோடி (100 million) விண்மீன்கள் இருக்கின்றன. சிறிய விண்மீன் தொகுப்பு ஆயிரத்திற்கு குறைவான விண்மீன்களுடன் காணப்படும்; மிகப் பெரியவை, சுமார் நூறு இலட்சம் கோடி (100 trillion) விண்மீன்களை உள்ளடக்கிய சூப்பர் ஜெயன்ட் விண்மீன் தொகுப்பாகும். ஒவ்வொரு விண்மீனும் அதன் தொகுப்பின் மத்தியைச் சுற்றிச் சுழல்கின்றது.
இத்தகைய பரந்த அண்டத்தைப்படைத்த தேவன் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்கின்றார்; நம்மோடு உறவாடி உறவுடன் வாழ விரும்புகின்றார். இது மிகப்பெரிய ஆச்சரியமல்லவா? நெகேமியா, "நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மை பணிந்துகொள்ளுகின்றன." ( நெகேமியா 9 : 6 ) என்று கூறுகின்றார். அன்பானவர்களே, சோதனை காலங்களில் தேவனின் இந்த வல்லமை மகத்துவங்களை எண்ணிப்பார்ப்போமானால், நிச்சயமாக நமது விசுவாசம் வலுப்படும்.
லீஸ்திராவிலே ஒரு முடவனை அப்போஸ்தலரான பவுலும் பர்னபாவும் குணமாக்கினர். அதனைக்கண்ட அங்கிருந்த மக்கள் பர்னபாவை ஜூபிடர் என்றும் பவுலை மெர்க்குரி என்றும் வழிபட ஆயத்தமாகிவிட்டனர். அப்போது பவுலும் பர்னபாவும் மக்களைநோக்கி, "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 15 ) என்று கூறுகின்றனர்.
நாம் வழிபடும் தேவன் வீணான தேவனல்ல அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவன். ஆனால் லிஸ்த்தீரா மக்களைப்போல நம்மிலும் பலர் பலவேளைகளில் குறுகிய எண்ணம்கொண்டு அற்புதங்களையும் அதிசயங்களையும் நாடி தேவனை மறந்து தேவையற்றச் செயல்களில் ஈடுபட்டுவிடுகின்றனர்.
வானத்தையும் பூமியையும் படைத்த "தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்" (வெளி 14:7) இத்தகைய வல்லமையும் மகத்துவமும் மிகுந்தவரை நாம் மெய்யாகவே உணர்ந்து தொழுதுகொள்ளும்போது நம்மில் விசுவாசம் உறுதிப்படுவதுடன் நமது பயங்களும் பிரச்சனைகளும் மறைந்து விடுவதை நாம் வாழ்வில் கண்டுகொள்ளலாம்.
"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1636 ஆதவன் 31.07.2025 வியாழன்
"அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்." ( எரேமியா 13 : 16 )
தேவனில்லாத வாழ்க்கை; தேவனைத் தேடாத வாழ்க்கை, எப்போதும் அமைதியும் ஆறுதலும் தருவதாக இருக்காது. காரணம், அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்போதே எல்லோரது வாழ்விலும் சிலவேளைகளில் அந்தகார இருள் ஏற்படலாம். நல்ல ஒரு காரியம் நடக்கும் என எண்ணி எதிர்பாத்திருக்கும்போது அந்தகார இருள் ஏற்பட்டு வாழ்க்கையின் மகிழ்ச்சி போய்விடலாம். இத்தகைய வேளைகளில் கர்த்தருக்குக் காத்திருப்பவர்களுக்குத் திட நம்பிக்கை உண்டு.
இன்றைய வசனம் தேவனைத் தேடி அவருக்கேற்ற ஒரு வாழ்க்கை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. அதாவது, நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன், இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன் நாம் நம் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை அரசாங்கமும் சில தொண்டு நிறுவனங்களும் ஏற்பாடு செய்வதுண்டு. பேரிடர் ஏற்படுமுன் மக்கள் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்று இந்தப் பயிற்சிகளில் அறிவுறுத்தப்படுகின்றது. கடந்த கொரோனா காலத்தில் அரசாங்கம் அறிவித்த அறிவிப்புகளை நாம் அறிவோம்; அரசு செய்த முன்னேற்பாடுகளை நாம் அறிவோம். மருத்துவ மனைகளில் அதிக அளவில் படுக்கைகளும், மருந்துகளும் முன்னேற்பாடாகத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
இதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் சில தயாரிப்புகளைச் செய்யவேண்டியது அவசியம். பெரிய இடர்பாடாக நமது வாழ்வில் அந்தகாரத்தை தேவன் வரப்பண்ணுவதற்கு முன், இருண்ட மலைகளில் நம் கால்கள் இடறுவதற்கு முன், நாம் நம் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தவேண்டியது அவசியம். நமது வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஒரு மகிமையான வாழ்வு வாழவேண்டியது அவசியம். வெறும் ஆராதனை செய்வது மட்டுமல்ல, நமது வாழ்கையினையும் நாம் தேவனுக்கேற்றபடி, தேவ வசனங்களுக்கு ஏற்றப்படி மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.
இறுதி நேரத்தில் நமது தேவைக்காக அவரைத் தேடுகின்றவர்களாக இருப்போமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம். "அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்..." ( எரேமியா 2 : 27, 28 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர்.
கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது வாழ்வில் துன்பமே வராது என்று பொருளல்ல, ஆனால் அப்படி நாம் வாழும்போது துன்பத்தோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் தேவன் நமது வாழ்வில் உண்டாக்குவார் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 10:13)
ஆனால், துன்மார்க்கமாய் வாழ்ந்து, தேவனை மறந்து அவருக்கு மகிமைச் செலுத்தாமல் வாழும்போது நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் சிக்கலானவைகளாக இருக்கும்; அவற்றை நாம் மேற்கொள்வது கடினமாக இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் எரேமியா நமக்கு அறிவுரையாகக் கூறுகின்றார்.
அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தைகளை நமக்குள் உறுதியாக காத்துக்கொண்டு அவற்றின்படி வாழ்வோம். கேடான சம்பவங்கள் வாழ்வை வருத்துமுன் கர்த்தருகேற்ற மகிமையை அவருக்குச் செலுத்தி பரிசுத்தமான வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். எனவேதான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்" (லூக்கா 11:28) என்று கூறினார். இப்படி பாக்கியவான்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
No comments:
Post a Comment