Wednesday, April 05, 2023

இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள்.

ஆதவன் 🌞 799🌻 ஏப்ரல் 06, 2023 வியாழக்கிழமை









"நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்." ( யோவான் 8 : 24 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் இயேசு கிறிஸ்துவின் கோபத்தின் வார்த்தைகளாக இருக்கின்றதுஅதாவது பாவங்களை மன்னிக்க பலி பொருளாக பிதாவினால் அனுப்பப்பட்டு உலகினில் வந்துள்ள தன்னை விசுவாசிக்காவிட்டால் பாவங்களிலே சாவீர்கள் என்று யூதர்களைப் பார்த்து இயேசு கடுமையாகக் கூறுகின்றார்.

தானே உலகத்தில் வரவிருப்பதாக தீர்க்கதரிசிகளால் அறிவிக்கப்பட்ட மேசியா என்பதை யூதர்களுக்கு அவர் தனது வல்லமையான பல செய்கைகளினால் மெய்ப்பித்திருந்தார்ஆனால் யூதர்கள் அவரை விசுவாசிக்கவில்லைவிசுவாசியாத யூதர்களை பார்த்துதான் இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளைக் கூறினார்.

இயேசு எனும் பெயருக்கு இரட்சகர் என்றுதான் பொருள்மக்களது பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்கவே அவர் மனிதனாக உலகினில் வந்தார்புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தமே இதுதான். "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாகஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்." ( மத்தேயு 1 : 21 )

இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடுவது உடல் மரணத்தையல்லஆத்தும மரணத்தைப் பற்றியேஉலகினில் பிறந்த அனைவருமே ஒருநாளில் இறந்துதான் ஆகவேண்டும்எனவே இயேசு இங்கு உடல் மரணத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பது தெளிவுபாவத்தை மன்னிக்க அதிகாரம் படைத்தத் தன்னை யூதர்கள் விசுவாசிக்காததால் இயேசு கோபத்தில், "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியா விட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்என்று கூறினார்.

அன்பானவர்களேநாம் இன்று இயேசு கிறிஸ்துவை எதற்காக விசுவாசிக்கின்றோம் என்று நம்மை நாமே ஆய்வு செய்து பார்க்க வேண்டியுள்ளதுவெறும் உலக ஆசீர்வாதங்களுக்காநமது பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண்பதற்காநமது நோய்களை குணமாக்குவதற்கா?

பாவத்தின் பிடியிலிருந்து விடுதலைப் பெறவேண்டுமெனும் ஆவலில் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்போமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தை பெறுவோம்யூதர்களைப்போல வெறும் அதிசயம் அற்புதங்களை மட்டும் அவரிடம் எதிர்பார்த்து வருவோமானால் அவரது இரக்கத்தால் ஒருவேளை அதிசயங்களை பெற்றாலும் நமது ஆத்துமா மன்னிப்பின்றி அழிவையே சந்திக்கும்.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும்போது தான் நாம் தேவனை அறிய முடியும்ஆம் நமது பாவங்கள் தேவனை நாம்  அறிய  முடியாதபடி  நமக்கும்  தேவனுக்கும்  நடுவாக  தடுப்புச்  சுவராக உள்ளதுஇயேசு கிறிஸ்துதான் அந்தப் பாவஅடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்க முடியும்நமது சுய பலத்தால் அது முடியாதுஅவருக்கு  நம்மை  ஒப்புக்கொடுப்போம்.  ஆண்டவரேஇந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து என்னை விடுவித்து உமது இரத்தத்தால் என்னைக் கழுவி இரட்சிப்பை எனக்குத் தந்தருளும் என வேண்டுவோம்.

 "குமாரன் (இயேசுஉங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்," (  யோவான் 8 : 36 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 


Tuesday, April 04, 2023

தேவனை உள்ளான அன்போடு தேடுவோம்.

ஆதவன் 🌞 798🌻 ஏப்ரல் 05, 2023 புதன்கிழமை






"தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதன் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதன் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்." ( சங்கீதம் 46 : 1- 3 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் பெற்று மெய்யான அன்போடு அவரைத் தேடுபவர்கள் உலக ஆசை, தேவைகளின் அடிப்படையில் தேவனை அன்பு செய்யாமல் உள்ளான ஆத்தும அன்போடு அன்பு செய்வார்கள். அத்தகைய அன்போடு தேவனை அன்பு செய்பவர்கள்தான் இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுவதைப்போல தாங்களும் கூற முடியும். 

தேவன் எனக்கு எல்லாமே தந்துகொண்டிருப்பதால் நான் அவரை அன்பு செய்கின்றேன் என்று கூறுவது மெய்யான அன்பல்ல; மாறாக, வாழ்வில் எத்தகைய எதிர்மறையான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவரை உள்ளன்போடு அன்புசெய்வதே மெய்யான அன்பாகும். தேவனிடம் அத்தகைய அன்பு நமக்கு இருக்கும்போது,  இன்றைய வசனம் கூறுவதுபோல, "பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்." 

நான் கிறிஸ்துவை அறிந்துகொண்ட எனது முப்பத்தியாறாவது வயதில் எனக்கு நல்ல வேலை இல்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பனாகிவிட்டேன். பொருளாதாரத்தில் அன்றாடத் தேவைகளை மட்டுமே சிரமத்துடன் சந்திக்க முடியும் எனும் நிலைமை. எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு, திருமணம் இவைகளை  எப்படி நம்மால் சமாளிக்க முடியும் எனும் பதற்றம்.  ஆனால் அந்த நெருக்கடியானச் சூழ்நிலையில் தேவன் மட்டுமே எனக்குத் துணையாக இருந்து வசனங்களின் மூலம் வழிநடத்தினார். 

நான் சந்தித்த வாழ்க்கைச் சூழலை ஆபகூக் தீர்க்கதரிசியும் சந்தித்திருக்கிறார். தேவன் எனக்கு அதனை வெளிப்படுத்தினார். எனவேதான் அவர் இன்றைய வசனம் கூறுவதுபோலக்  கூறுகின்றார், "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." ( ஆபகூக் 3 : 17, 18 )

இந்த வசனத்தைப் படித்தவுடன் பழைய ஏற்பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் என்று இதனை கோடிட்டு குறித்து வைத்தேன். 


அன்பானவர்களே, தேவனை உலகத் தேவைகளுக்காக மட்டும் நாம் தேடிக்கொண்டிருப்போமானால் நாம் இன்னும் அவரை அறியவில்லை என்றே பொருள்.  அவரை உள்ளன்போடு நாம் அன்பு செய்யும்போது மட்டுமே அவரிடம் அசைக்க முடியாத அன்பும் எந்த எதிர்மறையான சூழ்நிலைகளையும் சந்திக்கும் பலமும் நமக்கு கிடைக்கும். இதனால்தான் இன்றைய தியானத்துக்குரிய 46 ஆம் சங்கீதத்தின் இறுதி வசனமாக சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்." ( சங்கீதம் 46 : 11 )

தேவனை உலகத் தேவைகளுக்காக அல்ல; அவரிடமுள்ள உள்ளான அன்போடு தேடுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                 Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, April 03, 2023

ஒருமனப்பாடுடன் ஜெபிப்போம்

ஆதவன் 🌞 797🌻 ஏப்ரல் 04, 2023 செவ்வாய்க்கிழமை

"அல்லாமலும்உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." (  மத்தேயு 18 : 19 )

பெரும்பான்மையைக் கொண்டு வெற்றி தோல்வியினைக்  கணிப்பது மனிதர்களது குணம். அரசியலிலும் பெரும்பான்மையையே வெற்றியாகக் கருதுகின்றார்கள். ஆனால் நமது தேவன் அப்படியல்ல, அவருக்கு பெரும்பான்மை தேவையில்லை, அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் கூட்டம் தேவையில்லை. தன்னை உண்மையான அன்புடன் நேசிக்கும் ஒரு சில உள்ளங்கள் இருந்தாலே அதனை அவர் கணம் பண்ணுவார். 

இன்று பலக்  கிறிஸ்தவ விசுவாசிகளும் ஊழியர்களும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஜெபிக்கும்போது அந்த ஜெபத்தைத் தேவன்  கேட்பார் என்று எண்ணிக்கொள்கின்றனர்.   இது இவர்கள் தேவனை ஒரு அரசியல் தலைவனைப் போலப் பார்ப்பதையே உணர்த்துகின்றது

எங்களது ஜெபக்கூட்டத்தில் பத்தாயிரம் தேவ பிள்ளைகள் கூடி ஜெபித்தார்கள் என்று கூறுவதில் சில பாஸ்டர்களுக்கும்ஊழியர்களுக்கும் பெருமைஇதுபோலவே சங்கிலிஜெபம் என இன்று முகநூலிலும் 'வாட்சப்பிலும் ஜெப விண்ணப்பம்ஜெபக் குறிப்புகள் அனுப்புகின்றனர்எங்கள் ஜெபக் குறிப்புகளுக்காக ஐம்பது நாடுகளிலிருந்து மக்கள் ஜெபிக்கின்றனர் என்று கூறிக்கொள்கின்றனர்.

இப்படி ஜெபிப்பதைத் தவறு என்றோஇது கூடாது என்றோஇப்படி ஜெபிப்பவர்கள் எல்லாம் தவறு செய்கின்றனர் என்றோ  நான் கூறவில்லை.  மாறாகஇங்கு நான் உணர்த்தவிரும்பும் கருத்து இயேசு கிறிஸ்து கூறிய  அர்த்தத்தில் மட்டுமேஅதாவது பத்தாயிரம் பதினைந்தாயிரம் மக்கள் சேர்ந்து ஜெபிப்பதோ, ஐம்பது அல்லது நூறு நாடுகளில் ஜெபிப்பதோ தேவனுக்கு முக்கியமல்ல.  இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால்பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்  என்றார் இயேசு கிறிஸ்து.

அதாவது தேவன் ஒரு காரியத்துக்குப் பதில் அளிக்க  அரசியல் தலைவனைப்போலவும் அரசாங்கத்தைப்போலவும் அதிக மக்கள் ஜெபிக்கவேண்டுமென்பது முக்கியத் தேவையில்லை.  ஒருமனப்பட்ட இரண்டு பேர் ஜெபித்தாலே போதும்.   அதாவது எண்ணிக்கையைவிட ஒருமனப்பட்ட மனமே தேவனது பார்வையில் முக்கியமாக இருக்கின்றது

மேலும் நம்மை ஜெபிக்கத் தூண்டுவதே ஆவியானவர்தான்விண்ணப்பத்தின் ஆவியானவர் நம்முள் இருந்து நாம் பாரத்துடன் வேண்டுதல் செய்யும்போதே அந்த ஜெபம் கேட்கப்படும்எனவே ஜெப விண்ணப்பங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஜெபிக்கவேண்டுமென்பதில்லை.  நீங்கள் இருக்குமிடத்தில் இருந்து இரண்டுபேர் மூன்றுபேர்  ஒருமனப்பட்டு ஜெபித்தாலே போதும்ஜெபத்தைக்குறித்த இயேசு கிறிஸ்து கூறிய இந்த உண்மை எப்போதும் நமக்குள் இருக்கவேண்டியது  அவசியம்

ஆம் உண்மையான ஐக்கியத்துடன் ஜெபிக்கும் இரண்டுபேர் ஊழியத்தில் சாதனைகள் செய்ய முடியும். எனவேதான் "ஏனெனில்இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோஅங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்." (  மத்தேயு 18 : 20 )   என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

சுருங்கக் கூறவேண்டுமானால், தேவன் செயல்பட, செம்மறியாட்டுக் கூட்டம்  தேவையில்லை; சிங்கம் போன்ற ஒருமனமுள்ள ஒரு சில ஜெப வீரர்களே போதும். ஒருமனப்பாடுடன் சேர்ந்து ஜெபிப்போம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                 Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, April 01, 2023

நமது உட்புறத்தைச் சுத்தமாக்கிடுவோம்.

ஆதவன் 🌞 796🌻 ஏப்ரல் 03, 2023 திங்கள்கிழமை






















"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது." ( மத்தேயு 23 : 25 )

நானும் எனது நண்பர் ஒருவரும்  பணி நிமித்தமாக ஒருமுறை ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தபோது மதியம் தாகத்துக்குக் குடிக்க  ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டோம்.  ஒரு செம்பில் தண்ணீர் தந்தார்கள். அந்தச் செம்பினைப்   பார்த்தபோது  பளபளவென்றிருந்தது. ஆனால் அதனை வாங்கிப் பாத்தபோது அதன் தூரில் பச்சையும் கருப்புமாக பாசியும் அழுக்கும்  படர்ந்திருந்தன. தண்ணீரைக்  குடிக்க முடியவில்லை.  

இதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் காலத்து வேத அறிஞர்கள், பரிசேயர்கள் போன்றவர்கள் பல்வேறு வெளித்தூய்மை சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை மட்டுமே  கடைபிடித்து வாழ்ந்துவந்தனர். அடிக்கடி கைகளைக் கழுவுதல், பாத்திரங்களையும் கிண்ணங்களையும் கழுவுவது போன்ற தூய்மைச் செயல்களையும் செய்துவந்தனர். இப்படிப்பட்டச் செயல்களைச்  செய்வதே கடவுளை வழிபடுமுன் நாம் செய்யவேண்டிய முறைமைகள் என்று கற்பித்து வந்தனர். ஆனால் அவர்களது உள்ளமோ வேசித்தனத்தினாலும் பொருளாசையினாலும், கபடத்தினாலும் நிறைந்திருந்தது. 

இதனையே இயேசு கிறிஸ்து கண்டித்தார்.  "குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின்  உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு." ( மத்தேயு 23 : 26 ) என்று கூறினார். அதாவது, வெளிப்புற சடங்குகள் இருக்கட்டும் முதலில் நீ உன் உள்ளத்தைக் கடவுளுக்கு ஏற்புடையதாக மாற்று என்கின்றார்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு ஆலய காரியங்களிலும், பல்வேறு பக்தி செயல்களிலும், சடங்காச்சாரத்திலும் மூழ்கி தங்களது வெளி தோரணையினை பகட்டாகக் காட்டும் பலரது நிஜ வாழ்க்கை அலங்கோலமாக இருக்கின்றது. ஊழியர்கள், குருக்கள் பலரது சாட்சியற்ற வாழ்க்கை இன்று பத்திரிகைகளில் அம்பலமாகி பிற மதத்தவர்களும் கேலிபேசுமளவுக்கு இருக்கின்றது. கிறிஸ்தவ விசுவாசி என்று பெயர்பெற்றவன் அலுவலத்தில் கையூட்டுப்பெற்று கைதாகி அவமானப்பட்டு நிற்கின்றான். 

அன்பானவர்களே, நமது வெளியரங்கமான பக்திச்  செயல்பாடுகளையல்ல, நமது இதயத்தையே தேவன் பார்க்கின்றார். இந்தஉண்மையினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வெளியரங்கமாக சிறந்த விசுவாசி என்று பெயர் வாங்குவதையல்ல, நாம் தேவனுக்குமுன் எப்படி நமது வாழ்க்கையினை அமைத்துள்ளோம் என்பதனையே தேவன் பார்க்கின்றார். நமது உட்புறத்தைச் சுத்தமாக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மட்டுமே முடியும். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து மீட்பு அனுபவத்தைப் பெறும்போது மட்டுமே நமது உட்புறம் சுத்தமாக முடியும். 

நமது உட்புறம் சுத்தமாகாவிட்டால் நாம் வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறைகள்போலவே தேவனது பார்வைக்கு இருப்போம். வேதபாரகரும் பரிசேயர்களும் இப்படி இருந்ததால்தான் இயேசு கிறிஸ்து அவர்களைப்பார்த்து, "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்டக்  கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்." ( மத்தேயு 23 : 27 ) என்றார். 

வெளி ஆராதனை, சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமுன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நமது இருதயத்தை ஒப்புக்கொடுத்து நமது உட்புறத்தைச் சுத்தமாக்கிடுவோம்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                 Website :- www.aathavanmonthly.blogspot.com 

தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்ட இரட்சிப்பு

ஆதவன் 🌞 795🌻 ஏப்ரல் 02, 2023 ஞாயிற்றுக்கிழமை






"புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டன." ( லுூக்கா 2 : 30-32 )

இயேசு கிறிஸ்துவைக் குறித்து சிமியோன் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம். சிமியோனைக்குறித்து, "அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாகவும் இஸ்ரவேலுக்கு ஆறுதல்வரக் காத்திருந்தவனாகவும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தார்"  (லூக்கா - 2: 25) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் அவன் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டான்.

ஆவியானவரின் நிறைவால் அவன் பேசினான். இஸ்ரவேல் மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இயேசு கிறிஸ்து யூதராக உலகத்தில்  பிறந்தது யூதர்களுக்கு மகிமை. மட்டுமல்ல, அவர்  தேவனையே அறிந்திராத பிற இனத்து மக்களுக்கு  ஒளியாக வந்தார்.  மேலும், அனைத்து உலக மக்களுக்கும் அவர்மூலமே இரட்சிப்பு. இத்தகைய மேன்மையான மெசியாவை என் கண்கள் கண்டுகொண்டன என்கின்றான் சிமியோன்.

அன்பானவர்களே, இன்று நமது கண்கள் இயேசுவை எப்படிக் கண்டுகொள்கின்றன? ஆவியானவர் சிமியோன் மூலம் வெளிப்படுத்தினபடி இயேசு கிறிஸ்துவைப் பாவ  இருளில் இருக்கும் நமக்கு ஒளியாகவும், இரட்சிப்பாகவும் பார்க்கின்றோமா?

இன்றைக்குப் பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்கள் இயேசுவை உலக ஆசீர்வாதங்களை அளிப்பவராகவே  அடையாளம் காட்டுகின்றனர்.  இத்தகைய ஊழியர்களுக்கு ஆவியானவரின் வெளிப்பாடு இல்லை என்றே பொருள். தீர்க்கதரிசனமாக சிமியோனுக்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மையினையே பல்வேறு தீர்க்கதரிசிகளும்   வேதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இத்தனைத் தெளிவாக இன்று ஆவியானவர் தனது அடியார்களைக் கொண்டு எழுதிவைத்த பின்னரும் உலக ஆசீர்வாதங்களுக்காகவே இயேசு கிறிஸ்து வந்தார் என்று போதிப்பது எவ்வளவு அறிவீனம்!1

சிமியோன் எட்டுநாள் குழந்தையான இயேசு கிறிஸ்துவிடம் இரட்சிப்பு இருப்பதைக் கண்டார். பிதாவின் சித்தப்படி அவர் பாடுபட்டு மரித்து உயிர்த்தபோது அந்த இரட்சிப்பு உலக மக்களுக்குக் கிடைத்தது.  கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவையும் அவர் உலகினில் வந்த நோக்கத்தையும் அறியாமல் வாழ்வது எத்தனை அறிவீனம்!!

சகல ஜனங்களுக்கும் ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், இரட்சிப்பு ஏற்கெனவே பிதாவாகிய தேவனால் மக்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டது. தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்ட இரட்சிப்பை நாம் புறக்கணித்தால் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவோம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்போதுதான் நாம் மீட்பு அனுபவத்தைப் பெற முடியும். அன்பானவர்களே,  தேவன் நமக்காக ஆயத்தம்பண்ணின தேவனது மீட்பினைச் சிமியோனைப்போல  கண்டுகொள்வோம்; பெற்று மகிழ்வோம்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                 Website :- www.aathavanmonthly.blogspot.com