- எம் . ஜியோ பிரகாஷ்
"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)
படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல் அடிகள் இங்கு விளக்குகின்றார். அதாவது படைத்தத் தேவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்காமல் படைக்கப்பட்டப் பொருட்களுக்குக் கொடுப்பது. இது இன்று நேற்று ஆரம்பித்த நிலையல்ல, தேவன் மனிதனைப் படைத்த ஆரம்ப காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.
அன்று ஏதேனில் ஆதாமும் ஏவாளும் தங்களைப் படைத்தத் தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசைகொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள். இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். பணம், பதவி, சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டு இன்று மனிதர்கள் தேவனுக்கு விரோதமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது. தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். எப்படியாவது உலகினில் நினைததைச் சாதித்துவிடவேண்டுமென்றும் மக்களது மதிப்பினைப் பெற்றுவிடவேண்டுமென்றும் தரம்தாழ்ந்த செயல்பாடுகளில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர்.
மட்டுமல்ல, இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர் "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) உலகினில் நடக்கும் காரியங்களை நாம் கவனித்துப் பார்த்தாலே இது புரியும். அவலட்சணமான காரியங்களைச் செய்யும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் மக்கள்கூட்டம் ஓடுவது இதனால்தான். அவர்கள் இந்தமாதிரி மோசமான காரியங்களில் ஈடுபடுவோரையே விரும்புகின்றனர். இந்த உலகத்திலேயே துன்மார்க்கத்தில் ஈடுபடும் மனிதனுக்கு அமைதியாக நல்லசெயல்பாடுகளைச் செய்யும் மனிதர்களோடு ஒத்துபோகமுடியவில்லை. அப்படியானால் இவர்கள் எப்படி பரிசுத்தவான்கள் கூட்டத்தில் சந்தோஷமடைய முடியும்?
அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. இதன்பொருட்டே உலகம் இன்று விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல் ஆசைகொள்வதே. அப்போஸ்தலரான பவுல் இப்படி படைத்தவரைவிட்டு படைக்கப்பட்டப் பொருட்கள்மேல் ஆசைகொள்வதால் வரும் கேடுகளைப்பற்றி ரோமர் நிருபத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்." ( ரோமர் 1 : 26, 27 )
மனிதர்களுக்கு தேவனை அறியவேண்டுமெனும் ஆசை இல்லை. எனவேதான் அவர்கள் படைக்கபட்டப் பொருட்களை நாடி தேவனைப் புறக்கணிக்கின்றனர். இதுவே மனிதனது கேடான சிந்தைகளுக்குக் காரணமாகின்றது. "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 )
அன்பானவர்களே, உலக பொருட்கள்மேல் ஆசைகொண்டு தேவனை மறந்து வாழ்வோமெனில் நமது நித்தியம் நரக அக்கினியிலேயே இருக்கும். உலகப் பொருட்களை தேவைக்கு அனுபவிப்போம்; இச்சைகொண்டு அலைந்து அவைகளைப்பெற துன்மார்க்கச்செயல்பாடுகளில் ஈடுபட்டு நமது ஒரே வாழ்வைத் தொலைத்துவிடவேண்டாம். அப்படியே இருப்போமெனில் இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நிம்மதியென்பது இருக்காது.