இயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல், பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும்.
ஆதவன் - ஏப்ரல் 03, 2021 - சனிக்கிழமை இன்றைய வேதாகம சிறுசெய்தி - 277
"திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்." ( லுூக்கா 23 : 27, 28 ) என்றார்.
இன்று பெரிய வியாழன் மற்றும் துக்கவெள்ளி நாட்களில் நடைபெறும் ஆராதனைச் சடங்குகளில் கலந்துகொள்ளும் பலருக்கு இயேசுவின் பாடுகளும் மரணமும் மனதில் ஒரு உணர்ச்சியைத் தூண்டி கண்களில் கண்ணீர் வரவைக்கலாம். இது மன உணர்ச்சியினால் ஏற்படும் ஒரு தூண்டுதல். ஒரு சோகமான திரைப்படத்தைப் பார்க்கும்போது பலர் அழுவதுண்டு; சிலருக்கு புத்தகங்களில் படிக்கும் கதைகள் இப்படி உணர்ச்சியினைத் தூண்டலாம். ஆனால் அடுத்தச் நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் சித்திரவதைகளும் மரணமும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுது மறந்துபோவதற்கல்ல. இப்படிப் பரிதாபப்பட்டுத் தனக்காக மக்கள் அழுவதை இயேசு விரும்பவுமில்லை. அதனையே தன்னைப் பார்த்து அழுத பெண்களுக்கு அவர் கூறுகின்றார், "நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்".
பாவமும் மரணமும் எவ்வளவு கொடூரனானவை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் மக்களுக்கு அதனைப்பற்றி அக்கறையில்லாமலிருந்தது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டும் அவர்மேல் பரிதாபம்கொண்டும் அழுதனர். எனவே தங்களது பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பாமல், தங்களது குழந்தைகளது மனம்திரும்புதலைகுறித்து கவலைகொள்ளாமல் வெறும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுவதில் பிரயோஜனமில்லை என்பதையே இயேசு கிறிஸ்து இங்குக் குறிப்பிடுகின்றார்.
அன்பானவர்களே, வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானது போதும். இத்தகைய உணர்ச்சிவசப்படுவது ஒன்றுக்கும் உதவாது. நாம் மனம்திரும்பாமல்போனால் இறுதியில் அது நம்மை நரகத்துக்கு நேராகக் கொண்டுசென்றுவிடும். "ஆண்டவரே, ஆண்டவரே உமக்காக துக்கவெள்ளிக்கிழமைதோறும் அழுதேனல்லவா ?" என்று நாம் கூறி தப்பிட முடியாது. ஏனெனில், மனம் திரும்பாமல் இருந்துகொண்டு வெறுமனே பிரசங்கங்களைக் கேட்பதோ தேவனுடைய ஆலயத்தில் நற்கருணை உட்கொள்வதோ கூட நம்மை பரலோகத்துக்கு உரிமையாளராக்காது என்று இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்:-
"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 13 : 26 , 27 )
அன்பானவர்களே, இந்த நாட்களில் நாம் அழுவது வெறும் உணர்ச்சிவசப்பட்டு, இயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல், பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும். அதனையே இயேசு கிறிஸ்து விரும்புவார்.
No comments:
Post a Comment