ஆதவன் - ஏப்ரல் 07, 2021 - புதன்கிழமை

 நல்லது செய்து ஒருவன் தேவனது முன்னிலையில் நல்லவன் ஆக முடியாது.

ஆதவன் - ஏப்ரல் 07, 2021 - புதன்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 281

"என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை." ( ரோமர் 7 : 18 )

பொதுவாக மனிதர்கள் நல்லதுசெய்து தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புகின்றார்கள். ஆனால் நல்லது செய்பவர்களெல்லாம் நல்லவர்களல்ல. உதாரணமாக நாம் பல அரசியல் தலைவர்களைப் பார்க்கின்றோம். அவர்களில் பலரும் பல நல்ல செயல்களைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் அப்படி நல்ல செயல்களைச் செய்வதன் நோக்கம் தங்கள் சுய லாபம்; பதவிவெறி. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இப்படியே அனைத்துச் செயல்களும் இருக்கின்றன. நமது குடும்பத்தில், நண்பர்கள் மத்தியில் நாம் செய்யும் சில நல்ல செயல்கள், தர்ம காரியங்களுக்கு உதவுதல், ஆலய காரியங்களில் நாம் செயல்படுவது என அனைத்துக் காரியங்களிலும் மனிதனது சுயம் உள்ளே அமுங்கி இருக்கும். எனவே நல்லது செய்து ஒருவன் தேவனது முன்னிலையில் நல்லவன் ஆக முடியாது.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. அதாவது நாம் நல்லது செய்யவேண்டுமானால் முதலில் கிறிஸ்து இயேசு நம்முள் உருவாக வேண்டும். கிறிஸ்துவின் ஆவி நம்முள் வரும்போது மட்டுமே நம்மால் நன்மை செய்ய முடியும். அப்போதுதான் நமது சுயம் சாகும்.

கிறிஸ்து நம்முள் இல்லாமல் நாம் செய்யும் நல்ல செயல்கள் தீமையாகவே முடியும். காரணம் மனித சுயம் எப்படியாவது அதில் கலந்திருக்கும். அப்படி கலந்திருப்பதே தீமையாயிருக்கிறது. "ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்."( ரோமர் 7 : 19 ) என்கின்றார் பவுல் அடிகள்.

இதற்குத் தீர்வுதான் என்ன? அது பரிசுத்த வழிநடத்தலுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைப்பது; சில வேளைகளில் நாம் நமது மன விருப்பப்படிச் செய்யும் சில செயல்கள் தேவனுக்குப் பிரியமானதாக இருக்காது. எனவேதான் ஆவியின் வழிநடத்துதலின்படி வாழ்வதும் செயல்படுவதும் ஆவிக்குரிய வாழ்வில் முக்கியமானதாக இருக்கிறது. இப்படி ஆவிக்குரிய வழி நடத்துதலோடு நடப்பவர்களே தேவனுக்கு உகந்தவர்கள். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1 ).

அன்பானவர்களே, எந்த ஒரு காரியமாக இருந்தாலும் தேவ ஆலோசனையின்படியும் ஆவியானவரின் வழி நடத்துதலின்படியுமே நாம் செய்யவேண்டும். அப்போஸ்தலரான பவுல் அடிகளே, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன் எனக் கூறுகின்றார். நாம் எம்மாத்திரம்?

நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை எனப் பவுல் அடிகள் கூறுவதுபோல நாம் நம்மைக் கிறிஸ்துவுக்கு ஒப்படைத்துவிடுவோம். நாம் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடந்தால் நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்