ஆதவன் - ஏப்ரல் 05, 2021 - திங்கள்கிழமை

 பாவத்துக்கு மரித்து நீதிமான்களாக்கப்பட வேண்டுமானால் கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.

ஆதவன் - ஏப்ரல் 05, 2021 - திங்கள்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 279

"கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 33 )

கிறிஸ்து உயிர்தெழுந்தது அவரைக் கொலைசெய்த யூதர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அவர்களால் அதனை மூடி மறைக்கமுடியவில்லை. காரணம், அப்போஸ்தலர்கள் மூலம் செய்யப்பட்ட அருஞ்செயல்கள். கிறிஸ்து செய்ததுபோல அப்போஸ்தலர்களும் மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார்கள், நோய்களைக் குணமாக்கினார்கள், முடவர், குருடர் போன்றவர்களை சுகமாக்கினார்கள். இப்படி, கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்.

ஆனால், மக்களிடையே கிறிஸ்துவின் உயிர்தெழுதலைக் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொண்டு ஆலயத்துக்கு வந்தவர்களிடத்தையேகூட கிறிஸ்துவின் உயிர்தெழுதலைக் குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. அவர்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்தவே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா (வீண்) ." (  1 கொரிந்தியர் 15 : 14 ) என்று எழுதுகின்றார்.

மேலும், "கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 ) என்று எழுதுகின்றார். அதாவது நமது பாவங்கள் கிறிஸ்துவினால் மன்னிக்கப்படும் அனுபவம் நமக்கு வேண்டும். இல்லையானால் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று நாம் கூறிக்கொள்வதும் வீணானதாயிருக்கும்.

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது." அதாவது கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்குச் சாட்சிகளாயிருந்த சீடர்கள்மேல் கிறிஸ்துவின் பூரண கிருபை இருந்தது. இன்று நாமும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ்வோமானால், நம்மைக்கொண்டும் வல்லமையான செயல்களை தேவன் செய்வார்; மட்டுமல்ல நம்மேலும் கிறிஸ்துவின் பூரண கிருபை நிறைந்திருக்கும்.

கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் நம்மை பாவங்களிலிருந்து விடுவிக்கக் காரணமாயிருக்கின்றது. மனிதர்கள் பாவம் செய்து மீறிமீறிப்போனாலும், "மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது." ( ரோமர் 5 : 15 )

மேலும் ஒரே மனிதனாகிய ஆதாமின் கீழ்படியாமையினால் பாவிகளான மனிதர்கள், கிறிஸ்துவின் கீழ்படிதலினால் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். "அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்." (  ரோமர் 5 : 19 )

எனவே நாம் பாவத்துக்கு மரித்து நீதிமான்களாக்கப்பட வேண்டுமானால் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்படைக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. எனவே நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்படைப்போம்; மீட்பின் அனுபவத்தைப் பெற்று சாட்சிகளாக வாழ்வோம்.

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்