இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, April 05, 2021

ஆதவன் - ஏப்ரல் 06, 2021 - செவ்வாய்க்கிழமை

 தேவன் மதத்தைப்பார்த்து மனிதனை நேசிப்பவரல்ல

ஆதவன் - ஏப்ரல் 06, 2021 - செவ்வாய்க்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 280

"தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34 , 35 )

மனிதர்கள் தங்கள் குறுகிய புத்தியால் கடவுளையும் தங்களைப்போல அற்பமானவராக எண்ணிக்கொள்கின்றனர். உலக மனிதர்களுக்கும் தலைவர்களுக்கும் பிறர் தங்களைப் புகழ்வதும் தங்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்து வரவேற்பதும் பெரிதாகத் தெரியும். ஆனால் தேவன் அப்படிபட்டவரல்ல. மக்கள் பொதுவாக இதுபோல ஒரு அற்ப மனிதனாகக் கடவுளையும் எண்ணிக்கொள்கின்றனர். எனவே கடவுள் படத்துக்கு மாலை அணிவிப்பதையும், நறுமண அகர்பத்திகளைக் கொளுத்துவதையும் இன்னும் பல்வேறு பக்திக் செயல்களைச் செய்வதையும் கடவுள் விரும்புவார் என எண்ணி அவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

இத்தகைய மனிதர்கள், கடவுள்தான் தங்களைப் பாதுகாக்கின்றார் என்பதை மறந்து இவர்கள் கடவுளைப் பாதுகாக்க முயலுகின்றனர். அரசியல் தலைவனிடம் அன்பினைப்பெற பிற கட்சிக்கு எதிராகச் சில அற்ப செயல்களைச் செய்வதுபோன்று கடவுளது அன்பினைப் பெற பிற மத வழிபாட்டுத்தலங்களை அழித்து தங்கள் கடவுளுக்கு வழிபாட்டுத் தலங்கள் அமைக்க முயலுகின்றனர். அதாவது கடவுளை ஒரு அற்பமான அரசியல் தலைவனாக எண்ணிக்கொள்கின்றனர்.

தவறு என்று தெரிந்தும் தங்களது மதவைராக்கியதாலும், ஜாதி வைராக்கியதாலும் அநீதிக்குத் துணைபோகின்றனர். விபச்சாரம், வேசித்தனம், களவு, ஏமாற்று, வஞ்சகம், ஊழல் என அனைத்து அயோக்யத்தனங்களையும் செய்துவிட்டு கடவுள் உருவங்களுக்குமுன் கூப்பாடுபோட்டு அலறுவதாலும் அந்த உருவங்களுக்கு முன் மரியாதையாக விழுந்து வணங்குவதாலும் ஆசீர்வாதம் கிடைக்குமென்று எண்ணுகின்றனர்.

ஆனால் நமது பரிசுத்தமான தேவன் சொல்கின்றார்,
நான் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் எனக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே எனக்கு உகந்தவன். அதாவது, நீ எனக்கு பூமாலையும் பத்தியும் நறுமண புகைகளும் செலுத்தவேண்டாம், எனக்குப் பயந்து நீதியைச் செய்; அது போதும்.

கொர்நேலியு தேவனை அறியாதவராக இருந்தாலும் தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்து வாழ்ந்தவர்; தனது சுய மகிமைக்காக அல்லாமல் உண்மையான மனித நேயத்துடன் தானங்களும் தர்மங்களும் செய்தவர். எனவே தேவன் தன்னை அவருக்கு வெளிப்படுத்தினார்.

நமது பாவ வழிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வாழ்பவன் தேவனை அறிய முடியாது. மத வைராக்கியத்தினால் தனது கடவுளுக்கென்று சில பல செயல்களை செய்யலாம். ஆனால் அனைவரையும் படைத்து ஆளும் தேவன் ஒருவரே. அவர் அநியாயத்துக்குத் துணைபோகின்றவர் அல்ல. "அவர் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக்கண்ணர்". அநியாய வாழ்க்கை வாழ்ந்து இவ்வுலக நிம்மதியையும் இழந்து மறு உலக நிச்சயமுமில்லாமல் பரிதாபமாக உலகத்தைவிட்டுக் கடந்துச்சென்ற தலைவர்களையும் சாதாரண மனிதர்களையும் நாம் பார்த்துள்ளோம்.

அன்பானவர்களே, ஒரேயொரு வாழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீதியோடும் நேர்மையோடும் வாழ்ந்து தேவனை அறிந்துகொள்வோம். தேவன் மதத்தைப்பார்த்து மனிதனை நேசிப்பவரல்ல; அவர் நம்மில் யாருக்கும் தூரமானவருமல்ல. கொர்நேலியுவைபோல நீதியோடும் நேர்மையோடும் வாழும் யாருக்கும் தன்னை வெளிப்படுத்துவார்.

No comments: