Saturday, April 03, 2021

ஆதவன் - ஏப்ரல் 02, 2021 - வெள்ளிக்கிழமை

 விவசாயிகள் ஆடுகளை பண்டிகை நாளுக்கென்று வளர்ப்பார்கள். அதனை நன்கு கவனிப்பார்கள், அது ஆடுகள்மேல் கொண்ட அன்பினாலல்ல...

ஆதவன் - ஏப்ரல் 02, 2021 - வெள்ளிக்கிழமை          இன்றைய  வேதாகம சிறுசெய்தி - 276

"நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்"
(யோவான் - 10 : 17)

கிராமங்களில் சில விவசாயிகள் ஆடுகளை பண்டிகை நாளுக்கென்று வளர்ப்பார்கள். அதனை நன்கு கவனிப்பார்கள் ஆனால் அது ஆடுகள்மேல் கொண்ட உண்மையான அன்பினாலல்ல. நன்றாகக் கவனித்தால்தான் அவை கொழுகொழுயென ஆகி அதிக விலைக்கு விற்பனையாகும். ஆனால் அந்த அப்பாவி ஆடுகளுக்கு இது தெரியாது. எனவே அவை அந்த விவசாயியை நம்பி அவனோடேயே இருக்கும். ஒருவேளை அந்த ஆடுகளுக்கு உண்மை புரிந்தால் அவை என்னசெய்யுமென்று எண்ணிப்பாருங்கள்? அவை அந்த விவசாயியை விட்டுத் தப்பி ஓடிவிடும்.

ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவானவர் வைத்திருந்த திட்டம் தெளிவாகத் தெரியும். அவர் உலகினில் பிறந்ததே தனது உயிரை மக்களுக்காகத் தியாகம் செய்யத்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவர் எல்லா விதத்திலும் தேவனது சித்தப்படி அவரது நிறைவேறிட தன்னை முழுவதுமாக ஒப்புவித்து வாழ்ந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்". நாம் உதாரணமாய்ப் பார்த்த ஆடுகள் அவைகளின் உரிமையாளரின் திட்டம் தெரியாமல் அவனோடேயே இருந்து உயிரைவிட்டன. ஆனால் கிறிஸ்துவோ பிதாவின் திட்டம் தெரிந்தும் அவருக்கு கீழ்ப்படிந்து தனது உயிரை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார்.
கிறிஸ்துவின் உயிரை யூதர்கள் எடுக்கவில்லை. அவரே பிதாவின் சித்தப்படி தனது உயிரைக் கொடுத்தார். "ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரமுண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு" (யோவான் - 10 : 18). ஆனால் அவரது உயிரை உலகிலிருந்து எடுத்துக்கொள்ள பிலாத்து ஒரு கருவியாக இருந்தான்.

இயேசு கிறிஸ்து தனது கேள்விகளுக்குப் பதில்கூறாமல் இருந்தபோது பிலாத்து, "என்னிடம் பேசமாட்டாயா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும் , உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா?" (யோவான் - 19 : 10) என்றான். அவனுக்கு இயேசு கிறிஸ்து "பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது" (யோவான் - 19 : 11) என்று பதில் கூறினார்.

அன்பானவர்களே, தேவன் பட்சபாதகமுள்ளவரல்ல. இயேசு கிறிஸ்துவிடம் காட்டிய அதே அன்பை தேவன் நம்மிடமும் கொண்டுள்ளார். இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து அவரது குரலைக்கேட்டு வாழ்ந்ததுபோல நாமும் வாழ்வோமானால் நம்மிடமும் அவரது வல்லமைச் செயல்படும். பரத்திலிருந்து தேவனது அதிகாரம் கொடுக்கப்படாதிருந்தால், நம்மேல் எவருக்கும் எந்த அதிகாரமுமிராது. ஏனெனில் இயேசு கிறிஸ்து நாம் அனைவர்களுக்காகவும் ஏற்கெனவே பிதாவிடம் மன்றாடிவிட்டார்.

"நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். ( யோவான் 17 : 20, 21 )
நாம் ஏற்கெனவே பார்த்த கிராமத்து விவசயிகள்போல இவர் தனது சுய லாபத்துக்காக நம்மேல் அன்புகூரவில்லை; மாறாக நமது நன்மைக்காகவே தனது உயிரையும் கொடுத்து மீட்பினை ஏற்படுத்தி நாமும் அவரைப்போல பிதாவோடு இருக்கவேண்டும் எனும் காரணத்தால் நம்மேல் அன்புகூர்ந்து தனது உயிரையும் கொடுத்தார்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்."( 1 கொரிந்தியர் 16 : 22 )

No comments: