உயிர்ப்பு விழா கொண்டாடி மகிழ்ந்தால் போதாது. அவர் வரும்போது அவரை எதிர்கொள்ளத் தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டியது அவசியம்.
ஆதவன் - ஏப்ரல் 04, 2021 - ஞாயிற்றுக்கிழமை இன்றைய வேதாகம சிறுசெய்தி - 278
"சீமோன் பேதுரு அவனுக்குப்பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்."( யோவான் 20 : 6 , 7 )
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றிக் கூறும்போது அவரை அடக்கம் செய்தபோது அவரது தலையில் சுற்றிக்கட்டியிருந்த துணியினைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. வேதத்திலுள்ள எந்த வசனமும் அர்த்தமில்லாமல் எழுதப்படவில்லை என்பதற்கு வேதாகமத்தில் இந்தத் துணிபற்றி எழுதபட்டுள்ள குறிப்பு ஒரு சான்றாகும். கிறிஸ்துவின் தலைத் துணியினைப்பற்றிக் கூறப்பட்டுள்ளதற்கு வேத அறிஞர்கள் யூத முறைமைகளை ஆய்வுசெய்து கீழ்கண்ட உண்மையினைக் கண்டறிந்துள்ளனர்.
மதிப்புமிக்க யூதத் தலைவர்கள் விருந்துண்ணும்போது கடைபிடிக்கும் ஒரு வழக்கத்தை இது குறிப்பிடுகின்றது. அதாவது, தலைவன் உணவருந்தும்போது வேலைக்காரன் உணவுகளைப் பரிமாறிவைத்துவிட்டு ஒதுங்கிச்சென்றுவிடவேண்டும். தலைவன் சாப்பிடுவதை அவன் பார்த்துக்கொண்டு நிற்கக்கூடாது; தலைவன் அவனை அழைத்தாலொழிய அந்த அறையினுள் வரக்கூடாது.
சிலவேளைகளில் உணவருந்தும் தலைவன் அவசரவேலையினிமித்தம் வெளியே செல்லநேர்ந்தால், அவன் தனது தலையில் கட்டியிருக்கும் தலைத் துணியைக் கழற்றி சுருட்டி உணவருந்தும் மேசையின் ஓரத்தில் வைத்துவிட்டுச் செல்வான். அப்படி அவன் செல்வது, நான் இன்னும் எனது உணவை முடிக்கவில்லை, நான் திரும்பி வருவேன் என்பதைக் குறிக்கும். அப்போது அந்த வேலைக்காரன் தலைவன் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருப்பான்.
அன்பானவர்களே, சுருட்டி வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துவின் தலைதுணியினைப்பற்றி தனியாக வேதம் குறிப்பிடுவதற்குக் காரணம் இதுதான் எனக் கண்டறிந்துள்ளனர் வேத அறிஞர்கள். அதாவது கிறிஸ்து தான் மீண்டும் வரப்போவதைக் குறிக்க இதனை ஒரு அடையாளமாக விட்டுச் சென்றார்.
"கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 11 )
அன்பானவர்களே, கிறிஸ்து தனது முதல் வருகையில் கிருபை நிறைந்தவராக வந்தார். அன்பு, இரக்கம், நிறைந்து பணியாற்றினார். ஆனால் அவரது இரண்டாம் வருகை நீதிபதி போன்று உலகை நியாயம்தீர்க்கப் போகின்ற வருகை. அங்கு அன்பு, இரக்கம் எல்லாம் இருக்காது, நீதி மட்டுமே அவர்முன் இருக்கும். எனவேதான் அவர் கூறுகின்றார், "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 )
தனது சுய இரத்தத்தால் மீட்பினை உருவாக்கியவர் அதனை அலட்சியப்படுத்துபவர்களை நீதியாய் நியாயம்தீர்ப்பேன் என்கின்றார். வெறும் உலக மகிழ்ச்சிக்காய் உயிர்ப்பு விழா கொண்டாடி மகிழ்ந்தால் போதாது. அவர் வரும்போது அவரை எதிர்கொள்ளத் தகுதியுள்ளவர்களாய் மாறவேண்டியது அவசியம்.
"நான் சிறு குழந்தையாய் இருந்தபோதிருந்தே அவர் வருகிறார் , வருகிறார் என்று கூறுவதைக் கேட்கிறேன், எப்போதான் வருவார்" எனச் சிலக் கிறிஸ்தவர்களே கிண்டலாகக் கேட்கின்றனர். அவர்களுக்கு அப்போஸ்தலரான பேதுரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே பதில் கூறிவிட்டார்.
"அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்."
( 2 பேதுரு 3 : 4 )
"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்."
( 2 பேதுரு 3 : 9 )
அவர் வருவார் என்பதற்கு கல்லறையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணியும்கூட ஒரு முன்னடையாளம்தான்.
"இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 20 )