DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, May 30, 2025

🦋 Meditation verse - ரோமர் 8: 3 / Romans 8:3

"விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1578                                          ஆதவன் 03.06.2025 செவ்வாய்  


"மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8: 3)

இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கைவாழ அவர் மோசே வழியாக பல்வேறு கட்டளைகளை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்தார். இந்தக் கட்டளைகளையே நாம் நியாயப்பிரமாணக் கட்டளைகள் என்கின்றோம். ஆனால் இஸ்ரவேல் மக்கள் அந்தக் கட்டளைகளை வெறும் கட்டளைகளாகப் பார்த்து அவைகளுக்குக் கீழ்ப்படிந்தார்களேத்தவிர அவர்களுக்கு அந்தக் கட்டளைகளின் உள்ளார்ந்த அர்த்தமோ அனுபவமோ இல்லை.  எனவே அவர்கள் மனிதாபிமானமில்லாதவர்களாக, இறுமாப்புள்ளவர்களாக, சுபாவ அன்பில்லாதவர்களாக இருந்தனர். 

இதன் ஒரு உதாரணம்தான் ஓய்வுநாள் கட்டளை. ஓய்வுநாள் கட்டளையை மனிதாபிமானமற்றதாக அவர்கள் கடைபிடித்ததை இயேசு பல்வேறு முறைக் கண்டித்ததைப் பார்க்கின்றோம். "மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது" ( மாற்கு 2: 27) என்பதையும், கட்டளைகள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டன, மனிதன் கட்டளைகளுக்காக உண்டாக்கப்படவில்லை என்பதனையும் உணர்த்தினார். 

மனிதர்களுக்கு இந்த அறிவு  இல்லாததால் கட்டளைகள் பலன்தரவில்லை; அவை வலுவிழந்து போய்விட்டன.  கட்டளைகளால் மனிதர்களைத் தேவனுக்கு ஏற்ற தூயவர்களாக மாற்றமுடியவில்லை. இதனையே,  "மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." என்று கூறப்பட்டுள்ளது.

இதனையே, "நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்." (1 பேதுரு 2: 24) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் ஆவிக்குரிய வாழ்வில் வரும்போது நாம் கிறிஸ்துவின் ஜீவனுள்ள ஆவியின் பிரமானத்துக்குள் வந்துவிடுகின்றோம். அந்த ஆவியானவர் நம்மை நடத்துவதால் நாம் பாவம், அதனைத் தொடர்ந்த மரணம் இவைகளிலிருந்து விடுதலையாகின்றோம். "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து மனிதனாகப்  பூமியில் தோன்றி மரித்தது இதனால்தான். அதாவது கட்டளைகள் செய்யமுடியாத செயலை நமக்காக அவரே செய்து முடித்து நம்மைத் தூய்மைப்படுத்தவே அவர் உலகினில் வந்தார்.  

நியாயப்பிரமாணக் கட்டளைகள் வலுவற்றுப்போனதால் மனிதர்கள் சிதறிய ஆடுகளைப்போல இருந்தனர். அவர்களுக்கு வழியும், சத்தியமும் தெரியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து இவற்றைச் செய்துமுடித்து நமக்கு மீட்பினைத் தந்தார். இதனையே, "சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 25) என்கின்றார் அப்போஸ்தலரான் பேதுரு. 

எனவே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் அல்ல; மாறாக, கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசத்தினால் மட்டுமே நாம் நீதிமான்களாக முடியும்.  "நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்," ( பிலிப்பியர் 3 : 9 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

"நான் எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறேன்" என்று எண்ணிக்கொண்டும் கூறிக்கொண்டும் நம்மை தேவனுக்கு ஏற்றவர்கள், நீதிமான்கள்  எனக் கருத்துவோமானால் நாம் ஏமாந்தவர்கள் ஆவோம். நாம் எத்தனை நீந்திச் செயல்கள் செய்தாலும் அவைகள் நம்மை மீட்காது. கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை மீட்ப்படையச் செய்யும். 

"நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 11 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                     


🌳 Inside the Seeds

Scripture Meditation No. 1578
📅
Tuesday, 03.06.2025

“For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh.” — Romans 8:3 (KJV)

To enable the Israelites to live a life pleasing to God, He gave them various commandments through Moses. These are what we call the commandments of the Law. However, the Israelites perceived them merely as rules and obeyed them outwardly, without grasping or experiencing their deeper, spiritual meaning. As a result, they became unkind, proud, and lacking in true love.

One example of this is the Sabbath commandment. They observed the Sabbath in a rigid and inhumane manner, which Jesus often rebuked. He clarified this truth by saying: “The sabbath was made for man, and not man for the sabbath.” — Mark 2:27 (KJV) Jesus emphasized that commandments were made to serve man, not to enslave him.

Because people lacked understanding, the commandments lost their intended effect. They became powerless and failed to make people holy or acceptable to God. That is why the Scripture declares: “For what the law could not do, in that it was weak through the flesh, God sending his own Son in the likeness of sinful flesh, and for sin, condemned sin in the flesh.”
Romans 8:3 (KJV)

The apostle Peter also writes: “Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness: by whose stripes ye were healed.”
1 Peter 2:24 (KJV)

When our sins are forgiven and we are brought into a spiritual life, we come under the law of the Spirit of life in Christ Jesus. As He leads us, we are delivered from sin and the death that follows it. As Paul writes:
“For the law of the Spirit of life in Christ Jesus hath made me free from the law of sin and death.” — Romans 8:2 (KJV)

Yes, beloved, this is the reason Christ came into the world in human form and died—so that He could accomplish what the Law could not, and thereby make us holy.

Because the commandments of the Law were weakened, people were like scattered sheep, without direction or truth. But Jesus Christ fulfilled what was required and brought us salvation. As Peter says:
“For ye were as sheep going astray; but are now returned unto the Shepherd and Bishop of your souls.” — 1 Peter 2:25 (KJV)

Therefore, it is not through obedience to commandments that we are made righteous, but solely through faith in Jesus Christ. As Paul writes:
“And be found in him, not having mine own righteousness, which is of the law, but that which is through the faith of Christ, the righteousness which is of God by faith.” — Philippians 3:9 (KJV)

If we think or declare, “I obey all the commandments, therefore I am righteous before God,” then we deceive ourselves. No matter how many good works we do, they cannot redeem us. Only our faith in Jesus Christ can save us.

“But that no man is justified by the law in the sight of God, it is evident: for, the just shall live by faith.” — Galatians 3:11 (KJV)

Gospel Message: Bro. M. Geo Prakash

Thursday, May 29, 2025

🦋 1 பேதுரு 2: 9 / 1 Peter 2:9

 "விதைகளின் உள்ளே" 🌳

  வேதாகமத் தியானம் எண் - 1577                                          ஆதவன் 02.06.2025 திங்கள் 


"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 9)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகின் ஒளியாக இருக்கின்றார். இதனை அவரது அன்புச்  சீடனான யோவான்,  "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை." (யோவான் 1: 4, 5) என்று அவரது நற்செய்தியின் துவக்கத்திலேயே கூறுகின்றார். மட்டுமல்ல, "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி".  (யோவான் 1: 9) என்கிறார். 

இயேசு கிறிஸ்துவும் "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்."  (யோவான் 8: 12) மேலும், "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் " (யோவான் 9: 5) என்றார்.

நாம் அந்த ஆச்சரியமான ஒளியினிடம் வருவதற்கு நம்மைப் பிதாவாகிய தேவன் அழைத்துள்ளார்.  நாம் ஒளியாகிய இயேசு கிறிஸ்துவிடம் வரும்போது, நாம் தேவனால்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜ அதிகாரப்பெற்ற ஆசாரியர்களாகவும், பரிசுத்த மக்களாகவும், அவருக்குச் சொந்தமானவர்களாகவும் மாறுகின்றோம்.  அந்த ஒளியிடம் வரும்போது நம்மைச் சூழ்ந்துள்ள பாவ இருள் நம்மைவிட்டு அகலுகின்றது. இதனையே, 'அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவர்' என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

இப்படி நாம் அந்த ஒளியினிடம் வந்ததால் நமக்கு என்ன நன்மை? அதனை இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அப்போஸ்தலரான பேதுரு, "முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 10) என்று கூறுகின்றார். 

அதாவது நாம் இந்த ஒளியான கிறிஸ்துவிடம் வரும்போது நாம் அவருடைய மக்களாவது மட்டுமல்ல, தேவனது இரகத்தைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாகின்றோம். 

ஒளியாகிய இயேசு கிறிஸ்துவிடம் வருவது என்பது வெறுமனே இயேசுவே ஆண்டவர் என்று கூறிக்கொள்வதல்ல, அவருடைய உருவப்படத்துக்கு மாலையும் மெழுவர்த்தியும் ஏற்றி வழிபடுவதல்ல. மாறாக, அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும் அனுபவத்தைப் பெறுவது. நாம் பாவத்தோடு இருப்போமானால் அவரைப் பகைக்கிறவர்களாக இருப்போம். "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3: 20) என்று இயேசு கூறவில்லையா?

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி நாம்  தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கவேண்டுமானால் பாவங்கள் கழுவப்பட்ட  அனுபவம் நமக்குத் தேவை. அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். 

"அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்."  (1 யோவான் 1: 7) 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                       

Inside the Seeds 🌳

Scripture Meditation - No.1577                                                                       

Aathavan – Monday, 02.06.2025


“But ye are a chosen generation, a royal priesthood, an holy nation, a peculiar people; that ye should shew forth the praises of him who hath called you out of darkness into his marvellous light.” — 1 Peter 2:9

Our Lord Jesus Christ is the Light of the world. His beloved disciple John affirms this in the very beginning of his Gospel:

“In him was life; and the life was the light of men. And the light shineth in darkness; and the darkness comprehended it not.” — John 1:4–5 (KJV)

He further says, “That was the true Light, which lighteth every man that cometh into the world.” — John 1:9 (KJV)

Jesus Himself declared,

“I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.” — John 8:12 (KJV)

“As long as I am in the world, I am the light of the world.” — John 9:5 (KJV)

It is God the Father who has called us to come to this marvellous light. When we come to Jesus Christ, the Light, we are transformed into a chosen generation, royal priests, a holy nation, and His own special people. When we approach the Light, the darkness of sin that surrounds us is driven away. That is why today’s meditation verse says, “who hath called you out of darkness into his marvellous light.”

What benefit do we receive by coming to this Light?

The apostle Peter continues in the next verse:

“Which in time past were not a people, but are now the people of God: which had not obtained mercy, but now have obtained mercy.” — 1 Peter 2:10 (KJV)

In other words, when we come to Christ, the Light, we not only become His people, but we also become recipients of His divine mercy.

Coming to Jesus Christ, the Light, is not merely acknowledging Him as Lord or decorating His image with garlands and candles. It is about experiencing the cleansing of our sins through His blood. If we continue in sin, we remain enemies of Christ. Didn’t Jesus Himself say:

“For every one that doeth evil hateth the light, neither cometh to the light, lest his deeds should be reproved.” — John 3:20 (KJV)

Yes, beloved, if we are to truly be that chosen generation, royal priesthood, holy nation, and His own people, as today’s verse says, then we must experience the cleansing of our sins. Let us confess our sins before Him and seek His forgiveness.

“But if we walk in the light, as he is in the light, we have fellowship one with another, and the blood of Jesus Christ his Son cleanseth us from all sin.” — 1 John 1:7 (KJV)

Gospel Message: Bro. M. Geo Prakash          

Tuesday, May 27, 2025

🦋 வேதாகம முத்துக்கள் - மே 2025


 - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


வேதாகமத் தியானம் - எண்:- 1,546

'ஆதவன்' 💚மே 01, 2025. 💚வியாழக்கிழமை 

"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." (1 கொரிந்தியர் 1: 18)

"இன்றைய நவீன உலகினில் எல்லாமே புதியனவாக உள்ளன. சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்குமுன் இருந்த பல பொருட்கள் இன்று இல்லாமல்போய் அவைகளுக்குப்பதில் நவீனமான பொருட்கள் உலகில் பரவலாக வந்துவிட்டன.  அப்படியானால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இருந்த காரியங்களும் எழுதிவைத்த எழுத்துக்களும் எப்படி இந்தக் காலத்துக்குப் பொருந்தும்?" இது நண்பர் ஒருவரிடம் நான் கிறிஸ்துவைப்பற்றி - அவரது சிலுவையினால் உண்டான மீட்பினைப்பற்றி எடுத்துக்கூறியபோது அவர் என்னிடம் கேட்டக்  கேள்வி.  

ஆம்  அன்பானவர்களே, இன்று பலரும் இப்படித்தான் எண்ணுகின்றனர். கிறிஸ்துவின் போதனைகள் இன்று கடைபிடிக்க இயலாதவை என்கின்றனர் பலர். இந்த நவீன உலகத்துக்குப் பொருந்தாத பைத்தியக்காரனாக நீ இவைகளை நம்பிக்கொண்டும் இவைகளைப்பற்றி எழுதிக்கொண்டும் இருக்கின்றாயே என்கின்றனர். 

சரி, சிலுவையைப்பற்றிய உபதேசம் என்பதுதான் என்ன? அது கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டான பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, நித்திய ஜீவன் இவைகளே.  இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது" என்று. அதாவது தங்களது பாவ வாழ்க்கையினைக்குறித்துக் கவலையில்லாமல் அதிலேயே தொடர்ந்து வாழ்பவர்களுக்கு கிறிஸ்துவின் இத்தகைய போதனைகள் பைத்தியமானவையாகவே இருக்கும். 

மேலும் கிறிஸ்துவின் சிலுவையின் வழி பஞ்சு மெத்தையில் நடப்பது போன்றதல்ல; மாறாக, அது கடினமான பாதை. அவர் நடந்ததுபோல் அந்தப் பாதையில் நடப்பதுதான் சிலுவையின் வழி. எனவேதான் இயேசு கிறிஸ்து, "தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." ( மத்தேயு 16: 24) என்றார். ஆனால் இன்று பல ஆசீர்வாதப் போதகர்கள் இதற்கு மாறான தவறான போதனையால் இலகுவான வழியை மக்களுக்குக் காட்டி பெரிய கூட்டத்தைத் தங்களுக்குப்பின் திரட்டுகின்றனர்.  

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்." ( மத்தேயு 7: 13, 14) என்றார் இயேசு கிறிஸ்து. இன்று சிலுவை காட்டும் இந்த இடுக்கமான வழியை நாம் எடுத்துக்கூறும்போது அது மற்றவர்களுக்குப் பைத்தியமாக இருக்கின்றது. 

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து சீடத்துவ வாழ்க்கை வாழவே நம்மை அழைக்கின்றார். "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்." ( லுூக்கா 14: 27) என்றார் அவர். ஆம், சிலுவை எனும் இடுக்கமான வழிதான் இரட்சிப்பின் வழி. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் என்று இயேசு கிறிஸ்துவே கூறிவிட்டார். அந்தச் சிலரில் நாமும் ஒருவராக இருப்போம். ஏனெனில் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, "இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." 

சிலுவையின் போதனை தரும் பெலன்தான் என்ன? அது பாவத்தை மேற்கொள்ளும் பெலன். அந்தப்  பெலத்தைப்  பெற்றுக்கொண்டால்தான் நாம் நித்தியஜீவனுக்குப் பங்குள்ளவர்கள் ஆகமுடியும். 

இயேசு கிறிஸ்து கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." ( யோவான் 3: 16) என்று. தேவனுடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நாம் சிலுவை பற்றிய உபதேசத்தையும் விசுவாசிப்பவர்களாக இருப்போம். அது நமக்குப் பெலனையும் தரும்.  இல்லையானால் நாம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல கெட்டுப்போன பைத்தியக்காரர்களாகவே இருப்போம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,547

'ஆதவன்' 💚மே 02, 2025. 💚வெள்ளிக்கிழமை

"மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது." ( ஏசாயா 1: 3)

ஆதிகாலமுதல் தேவன் தன்னை இஸ்ரவேல் மக்களுக்குப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தினார். எத்தனையோ தீர்க்கத்தரசிகள், பரிசுத்தவான்கள் மூலம் தன்னைப்பற்றி அறிவித்து பல வல்ல செயல்களால் அவர்கள்  கூறியவற்றை உறுதிப்படுத்தியும்  வந்தார். மக்கள் தொடர்ந்து பாவம் செய்தபோது அவர்களுக்குத் தண்டனையாக அவர்களை பல்வேறு இராஜாக்களுக்கு அடிமைப்படுத்தினார். பின்னர் அந்த மக்கள் தங்கள் பாவங்களுக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்டபோதெல்லாம் அவர்களை விடுவித்தார். 

ஆனாலும் தொடர்ந்து அவர்கள் தேவனை மறுதலித்துத் தங்கள் பொல்லாத வழிகளிலேயே நடந்தார்கள். இதனை ஏசாயா இன்றைய தியான வசனத்துக்கு அடுத்த வசனமாகக் கூறுகின்றார்,  "ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்."( ஏசாயா 1: 4) என்று.

ஒரு மாடுகூடத் தன்னை வளர்க்கும் எஜமானன் என்ன விரும்புகின்றான் என்பதனை அறிந்திருக்கின்றது. அதுபோல கழுதை தனது எஜமானின் விருப்பத்தையும் தனக்காக எஜமான் ஏற்பாடு செய்துள்ள இடத்தையும் தனக்குமுன் தீவனத் தொட்டியில் வைக்கப்படும் உணவையும் அறிந்து குறிப்பிட்ட சமயத்தில் அங்குவந்து சேர்கின்றது.  ஆனால் இந்த மக்களுக்கு நான் எத்தனையோ நன்மைகளைச் செய்திருந்தும் இவர்கள் என்னை அறியாமல் இருக்கின்றார்களே என்று மனம் வருந்திக் கூறுகின்றார் தேவனாகிய கர்த்தர். 

தேவனை அறிவது என்பது வெறுமனே ஆராதனை செய்வதல்ல, அவரோடு ஐக்கியத்தில் வாழ்வது; அதன்மூலம் அவரது சித்தத்தை அறிந்து நிறைவேற்றுவது. தனிப்பட்ட விதத்தில் நாம் அவரோடு ஒரு உறவில் வாழும்போதுதான் நாம் தேவனுக்கேற்ற செயல்களைச்  செய்து வாழமுடியும். தேவனை நாம் அறியவில்லையானால் வெறுமனே ஆலயங்களுக்கு வந்து கூடி கூப்பாடு போட்டுவிட்டுக் கலைந்துசெல்கின்றவர்களாகவே இருப்போம். அப்படி தேவனை அறியாமல் வாழ்வோமானால் கேடான சிந்தையும் செயலும் நம்மைவிட்டு மாறாது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1: 28) என்று கூறுகின்றார். தொடர்ந்து கேடான சிந்தை நம்மை எத்தகைய பாவ வாழ்க்கைக்குள் கொண்டுசெல்லும் என்பதனையும் பட்டியலிட்டுக் கூறுகின்றார்.

ஐந்தறிவுள்ள மாடும், கழுதையும் தங்களது எஜமானனையும் அவனது சித்தத்தையும் அறிந்து செயல்படும்போது ஆறறிவுள்ள மனிதர்களாகிய நாம் தேவ சித்தத்தை அறிந்து அவருக்கேற்ற வாழ்வு வாழவேண்டாமா? 

ஆம் அன்பானவர்களே,  "இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது." என்று மனம் வருந்திக் கூறும் தேவனது வார்த்தைகளை மனதில் கொள்ளுவோம். அறிவில்லாமலும் உணர்வில்லாமலும் வாழாமல் நம்மை அவருக்கு முற்றிலும் ஒப்புக்கொடுப்போம். அவரது பரிசுத்த இரத்தம் நம்மைக் கழுவித் தூய்மைப்படுத்திட   பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். பாவங்கள் கழுவப்படும்போது மட்டுமே  அவரோடு நமக்கு ஐக்கியம் உருவாகும். அப்போதுதான் நாம் அவரது சித்தம் செய்பவர்களாக இந்த உலகினில் வாழமுடியும். ஆம், "ஆண்டவரே நான் மாடோ கழுதையோ அல்ல, உமது பிள்ளை" என்று அவரிடம் உறுதியுடன் கூறுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,548

'ஆதவன்' 💚மே 03, 2025. 💚சனிக்கிழமை

"நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5: 10)

இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும் அனுபவம்  வேறு, இரட்சிப்பு அனுபவம் வேறு.  கிறிஸ்தவர்களில் பலரும்கூட முதலில் அவர்கள் பெறும் பாவ மன்னிப்பு அனுபவத்தையே நினைவில் கொண்டு, "நான் இரட்சிக்கப்பட்டேன்" என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இன்றைய தியான வசனம் தெளிவாகக் கூறுகின்றது, "அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." என்று. 

அதாவது நாம் செய்த பாவங்கள் கழுவப்படுவதுதான் ஒப்புரவாதல். இப்படி நாம் அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோமானால் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயம்.  இதிலிருந்து நாம் அறிவது, இரட்சிப்பு என்பது பாவத்திலிருந்து முழு விடுதலை பெறுவது என்பதுதான். அதாவது, நமது வாழ்வின் இறுதிவரை பாவத்துக்கு அடிமையாகாமல் இருப்பது. "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8: 34) என்றார் இயேசு கிறிஸ்து. இந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து முழு விடுதலை பெறுவதே இரட்சிப்பு.

இது ஒருநாளில் நடைபெறும் காரியமல்ல, பாவ மன்னிப்பு அனுபவம் பெற்றபின்னர் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து பாவத்துக்கு எதிராகப் போராடி வெற்றிபெறவேண்டும். எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." ( மத்தேயு 24: 13) என்று. ஆம் அன்பானவர்களே, நமது பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டும் போதாது, நாம் அவற்றிலிருந்து முழு விடுத்தலை அடைந்து வாழ்வின் இறுதிவரை அதில் நிலைநிற்க வேண்டும். 

ஒரு தகப்பன் தனது மகன் கேவலமான நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவதை பலமுறைக் கண்டித்து வந்தார். ஆனாலும் அந்த மகன்  தனது துன்மார்க்க நண்பர்களை விடவில்லை. ஒருமுறை இரவு குடித்துவிட்டுச் சாலையில் நண்பர்களோடு சுற்றி அட்டகாசம் செய்தபோது  காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான்.  காவல்துறையிலிருந்து அவனது வீட்டிற்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். அவனது தகப்பன் காவல் நிலையத்துக்குச் சென்றபோது அவரது மகனை அங்கு சட்டையைக் கழற்றி உட்காரவைத்திருந்தனர். 

தகப்பனைக் கண்டவுடன் மகன்,  "அப்பா, நீங்கள் பலமுறை எச்சரித்தும் நான் கேட்கவில்லை, என்னை மன்னித்துவிடுங்கள்" என்றான் அழுகையுடன். தகப்பன் அவனை நோக்கி, "பரவாயில்லை, மகனே, உன்னை நான் மன்னித்துவிட்டேன்" என்கின்றான். ஆம் அன்பானவர்களே, இதுதான் பாவ மன்னிப்பு. ஆனால் இதனைத் தொடர்ந்து, அந்தத் தகப்பன் காவல் ஆய்வாளரிடம் பேசி மகனை அங்கிருந்து மீட்டு வீட்டிற்குக் கூட்டிச்சென்றார். இது இரட்சிப்பு. ஆம், நமது பாவங்களை கிறிஸ்து மன்னித்தால் மட்டும்போதாது, நாம் பாவத்தின் பிடியிலிருந்து விடுபடவேண்டும்; தொடர்ந்து அதுபோல பாவத்தில் விழாமல் நமது வாழ்வின் இறுதிவரை வாழவேண்டும்.  இதுவே பூரண இரட்சிப்பு. 

கிறிஸ்து நமக்குள் உருவாகி இருந்தால் மட்டுமே நமது உடலானது பாவத்திலிருந்து முழு விடுதலை பெறும். இதனையே, "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.' ( ரோமர் 8: 10) என்றார் அப்போஸ்தலரான பவுல். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால்  மட்டுமே நமது பாவங்களை மன்னிக்கவும் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கவும் முடியும். எனவேதான் அவர், "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8: 36) என்றார். 

ஆம் அன்பானவர்களே, "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான்  1 : 7) என்று கூறியுள்ளபடி அவரது இரத்தத்தால் கழுவப்படும்படி முதலில் நமது பாவங்களை அவரிடம் அறிக்கைபண்ணுவோம். அப்போது பாவ மன்னிப்பைப் பெறுவோம். தொடர்ந்து அவரோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழ்வோம்.  அப்போது அவர் நமக்குப் பாவங்களை மேற்கொள்ளும் பலத்தைத் தந்து நாம் பாவங்களிலிருந்து முழு விடுதலை பெற உதவி செய்வார். அப்போது நாம் இரட்சிக்கப்படுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,549
'ஆதவன்' 💚மே 04, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"தேவனுடைய கிருபை வரங்களும், அழைத்த அழைப்பும் மாறாதவைகளே." ( ரோமர் 11: 29)

மனிதர்கள் நாம் மாறக்கூடியவர்கள். ஒருமுறை எடுத்த முடிவை மாற்றுவோம், பேச்சை மாற்றுவோம், செயல்களை மாற்றுவோம். ஆனால் நமது தேவன் அப்படி மாற்றி மாற்றி செயல்படுபவரல்ல. நமக்கு ஒரு வாக்குறுதி அளித்திருப்பாரென்றால் அதனை அவர் நிச்சயமாக நிறைவேற்றுவார். எனவே நாம் தேவன்மேல் விசுவாசம்கொண்டு அவருக்கு உண்மையுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். 

அதுபோல சிலருக்குத் தேவன்  பல்வேறு வரங்களை அளித்திருப்பார். மனிதர்கள் நாம் தேவனுக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒருமுறை அவர் அளித்த தேவவரத்தை திரும்ப எடுத்துக்கொள்ள மாட்டார். இதனாலேயே பல ஊழியர்கள் கனியற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களால் ஜெபித்து மற்றவர்களது நோய்களைக் குணமாக்க முடிகின்றது; பல வல்ல செயல்களைச்  செய்ய முடிகின்றது. ஏனெனில், தேவன் அவர்களை நாடிவரும் மக்கள் மேலும் கிருபையுள்ளவராக இருக்கின்றார் என்பதால்தான். 

ஆம் அன்பானவர்களே,  "நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்." (2 தீமோத்தேயு 2: 13) இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். நாம் நமது நண்பர்களுக்கு, தோழிகளுக்குப் பிறந்தநாள், அல்லது திருமணநாள் போன்ற சில சந்தர்ப்பங்களில் பல பரிசுகளைக் கொடுப்போம். புடவைகள், கைக்கடிகாரங்கள், ஏன் சில வேளைகளில் விலை உயர்ந்த அலைபேசிகள் போன்றவற்றைக்கூட பரிசாக அளிப்போம். 

ஆனால் ஏதோ காரணங்களால் பிற்பாடு அவர்களோடு நமக்கு மனத்தாங்கல் ஏற்பட்டு, பேச்சுவார்த்தை இல்லாமல் போயிட்டது என வைத்துக்கொள்வோம், அப்போது நம்மில் யாரும் அவர்களிடம் சென்று, "நீதான் என்னோடு பேச, மாட்டாயே, நான் முன்பு உனக்குப் பரிசளித்த புடவையை எனக்குத் திருப்பிதா" என்று  கேட்கமாட்டோம். மனிதர்களாகிய நாமே இப்படிக் கொடுத்ததைத் திருப்பிக் கேட்பதை கேவலமான செயலாக எண்ணும்போது தேவன் இத்தகைய செயலை எப்படிச்  செய்வார்?

இதுபோலவே தேவனது ஊழிய அழைப்பும். தனது ஊழியத்துக்காக அவர் ஒருவரை அழைப்பது தேவனது முன்குறித்தத் திட்டமாகும். அந்த ஊழிய அழைப்பை அவர் மாற்றுவதில்லை. இதனால்தான் நாம் உலகினில் தகுதியற்ற ஊழியர்களை பலவேளைகளில் பார்க்கமுடிகின்றது. ஆனால் அப்படி அழைக்கப்படும் ஊழியன் தேவனுக்கேற்ற உண்மையுள்ளவனாக  தேவனது அழைப்பை  மதித்து நடக்கவில்லையானால் தேவன் அவனைத் தண்டிப்பார்.  

இதனையே இயேசு கிறிஸ்து, "தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்." ( லுூக்கா 12: 47) என்றார். 

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய கிருபை வரங்களும், அழைத்த அழைப்பும் மாறாதவையாக இருப்பதால் நாம் தேவனுக்கேற்ற உண்மையுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். அவர் நமக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் மாறமாட்டார். 

அதுபோல, நம்மிடம் தேவ வரங்கள் செயல்படுவதால் நாம் உண்மையுள்ளவர்கள், தேவனுக்குப் பிரியமானவர்கள் என்று பொருளல்ல. நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்துத் திருத்திக்கொள்வது அவசியமாய் இருக்கின்றது. இல்லையானால் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் எனும் வசனத்தின்படி நாம் அடிக்கப்படுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,550
'ஆதவன்' 💚மே 05, 2025. 💚திங்கள்கிழமை

"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1: 17)

இந்த உலகத்தில் அரசாங்கங்கள் மக்கள் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துள்ளன. அவற்றை நாம் பெறவேண்டுமானால் முறையாக விண்ணப்பிக்கவேண்டியது அவசியம். ஆனால் இந்த உலகில் நாம் முறைப்படி அனுபவிக்கவேண்டிய பல சலுகைகளை இந்த உலக அரசாங்கம் தரமுடியாதபடி பல்வேறு தடைகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் உள்ளனர். ஆள்பார்த்து, கொடுக்கும் கையூட்டு மற்றும் பணத்தின் அடிப்படையில் இங்குச்  சலுகைகள் வழங்கப்படுவதை பல்வேறு சமயங்களில் பார்க்கின்றோம். 

ஆனால் நமது பரலோக அரசாங்கம் இந்த உலக அரசாங்கம் போன்றதல்ல. இயேசு கிறிஸ்து, "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்." ( யோவான் 18: 36) கூறியபடி அவரது பிள்ளைகளாகிய நமது ராஜ்யமும் இவ்வுலகுக்குரியவை அல்ல. 

எனவே, நமது விண்ணப்பங்கள் ஜெபத்தின்மூலம் பரலோக ராஜ்ஜியத்துக்குச் சமர்பிக்கப்படும்போது அங்கிருந்து நமக்குத் தகுந்த பலன் இறங்கி வருகின்றது. இந்த உலக அரசாங்கத்தைப்போல அங்கு கையூட்டுக் கொடுக்கவேண்டிய அவசியமோ கட்டாயமோ இல்லை. இதனையே இன்றைய தியான வசனம், "அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." என்று கூறுகின்றது. அவர் ஆள் பார்த்து, மனிதர்களது முகத்தைப்பார்த்து, பணத்தைப்பார்த்து மக்களுக்கு உதவுபவர் அல்ல.  

இந்த உலகத்தில்கூட பல தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை  விண்ணப்பித்தவர்களின் திறமையின் அடிப்படையிலேயே வழங்குகின்றன. அங்கு பணத்தைக்கொடுத்தோ ஆள் பலத்தின் மூலமோ வேலைவாய்ப்பினைப் பெற முடியாது. காரணம், அவர்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கின்றனர். 

"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது" என்று கூறியுள்ளபடி, அனைத்து நன்மையான காரியங்களும் அவரிடமிருந்தே நமக்குக் கிடைக்கின்றன. ஆம் அன்பானவர்களே, எனவே நாம் இந்த பரலோக அரசாங்கத்துக்கு உண்மையுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். 

மேலும், இன்றைய தியான வசனம் நாம் பரலோக ராஜ்யத்தின் உதவியைப்பெற கெஞ்சி கேட்கவேண்டும் என்றுகூடச் சொல்லவில்லை. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது" என்றுதான் கூறுகின்றது. அதாவது அது நீரோடையிலிருந்து வெள்ளம் இறங்கிப் பாய்வதுபோல பாய்ந்து வருகின்றது. தகுதியுள்ள அனைவரையும் அது நிரப்புகின்றது. நாம் அவருடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுபவர்களாக இருந்தாலே போதும். 
 
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." (மத்தேயு 6: 33) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?. ஆம் அன்பானவர்களே, நாம் உலகினில் நமது நாட்டுக்கு எத்தகைய உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டுமோ அதுபோல பரலோக ராஜ்யத்துக்கும் உண்மையுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம்.  அப்படி வாழும்போது பூரணமான வரம் ஜோதிகளின் பிதாவிடமிருந்து நம்மேல் இறங்கி வரும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,551
'ஆதவன்' 💚மே 06, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15: 4)

ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவுடனான ஐக்கியத்தில் நாம் வளரவேண்டியது அவசியம். எனவே, நமது பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டும் போதாது நாம் இறுதிவரை அவரோடு நிலைத்திருக்கவேண்டியது அவசியம். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த ஐக்கியத்தைத் திராட்சைச் செடியுடன் இணைந்திருக்கும் கொடிக்கு ஒப்பிடுகின்றார். நிலத்திலிருந்து வேர்களினால் உறிஞ்சப்படும்  தாவரங்களுக்குத் தேவையான தண்ணீரும் சத்துக்களும் செடியின் தண்டுப்பகுதி வழியாகவே அதன் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கின்றன. எனவே கொடிகள் தண்டுப்பகுதியுடன் இணைந்திருக்காவிட்டால் உலர்ந்துபோயிடும். இதுபோலவே, கிறிஸ்து எனும் தண்டுடன் நாம் இணைந்திருக்காவிட்டால் உலர்ந்துபோய்விடுவோம். 

மட்டுமல்ல, தாவரங்கள் கனிகொடுக்கவேண்டுமானால் நல்ல சத்துக்கள் தேவை. அந்தச் சத்துக்களும் தண்டுவழியாகவே அனைத்துப்பாகங்களுக்கும் செல்கின்றன. இன்று கிறிஸ்துவோடு எந்தத் தனிப்பட்டத் தொடர்பும் ஐக்கியமும் இல்லாத பலரும் கிறிஸ்தவர்கள் என்று பெயரளவில் கூறிக்கொள்கின்றனர். கிறிஸ்தவ  ஊழியர்களில் பலருக்கும்கூட இந்த தேவ ஐக்கியம் இல்லை. இதனால் இவர்கள் கனிகொடுக்க முடியவில்லை. இவர்களது  சாட்சிக்கேடான வாழ்க்கை கிறிஸ்தவத்துக்கு அவப்பெயரைக் கொடுப்பதாகவும்  உள்ளது. 

நாம் சிறிதளவு கனிகொடுப்பவர்களாய் மட்டுமல்ல, அதிக கனி கொடுக்கின்றவர்களாய் மாறவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே அவர் தன்னோடு ஐக்கியமுள்ளவர்களாய் வாழும் விசுவாசிகளுக்குத் துன்பங்களைக் கொடுக்கின்றார். ஏனெனில் அவர் அவர்களை மேலும் சுத்தம்பண்ண விரும்புவதால்தான். "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." ( யோவான் 15: 2) என்றார் இயேசு கிறிஸ்து. 

கனிகொடுக்காமல் தோட்டத்தில் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும் மரங்களை வெட்டி அகற்றும் விவசாயிகள் தங்களது பழ மரங்கள் அதிகமான கனிகளைக் கொடுக்கவேண்டுமென்பதற்காக தேவையற்ற கிளைகளை கழித்தும்  போடுவார்கள். இதனை கவ்வாத்து (pruning) என்பார்கள். இப்படி மரங்களின் சில கிளைகளை வெட்டி அகற்றும்போது மரங்களுக்கு வலியுண்டாகவே செய்யும். ஆனால் அந்த வலி பிற்பாடு அதிகக் கனிகளை அவை கொடுப்பதற்கு உதவியாக இருக்கும்.  நமது தேவனும் கனிகொடுக்காதவர்களை அகற்றி கனிகொடுக்கும் விசுவாசிகளைச்   சிறு வலிகளைக்கொடுத்து சுத்தம்பண்ணுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திருப்பதுபோல நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மட்டுமே கனிகொடுக்க முடியும். மட்டுமல்ல, கனிகொடுக்கும் நாம் அதிகமான கனிகளையும் கொடுக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். எனவே, தேவனில் நிலைத்திருப்பது மட்டுமல்ல, அவர் கொடுக்கும் சிறுசிறு துன்பங்களையும் சகித்து நாம் வாழவேண்டியது அவசியம். இத்தகையத் துன்பங்களைக் கண்டு நாம் கிறிஸ்துவைவிட்டு விலகிச் சென்றிடாமல் இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகின்றார்.  

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் "நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" என்று தன்னில் நிலைத்திருக்குமாறு கிறிஸ்து நம்மை எச்சரித்து அறிவுறுத்துகின்றார்.  துன்பங்களைச் சகித்து, வலிகளைத் தாங்கி  அவரில் நிலைத்து வாழ்வோம். இதனையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,552
'ஆதவன்' 💚மே 07, 2025. 💚புதன்கிழமை

"கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது." ( சங்கீதம் 103: 17)

இன்றைய தியான வசனம் தேவனது கிருபையையும் நீதியையும் நாம் நமது வாழ்வில் பெற்று வாழ்வது நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் என்றும், அது நமது மேல் மட்டுமல்ல, நமது பிள்ளைகளின் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகளின்மேலும் என்றென்றைக்கும் இருக்கும் என்றும்  கூறுகின்றது. 

மேலும், தேவனுடைய இந்தக் கிருபையினை நாம் பெறவேண்டுமானால் நாம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் வாழவேண்டும் என்று இந்தத்  தியான வசனம் எடுத்துக் கூறுகின்றது. கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்பது அவரைக்கண்டு அஞ்சி ஓடுவதையல்ல மாறாக அவர் வெறுக்கும் தீய செயல்களைச் செய்யாமல் நம்மை நாம் காத்துக்கொள்வதைக் குறிக்கின்றது. "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.' ( நீதிமொழிகள் 8: 13) என்று நாம் வாசிக்கின்றோம். 

தீமையான காரியங்களை வெறுக்கவேண்டும் என்று கூறுவதோடு,  தொடர்ந்து, பெருமை, அகந்தை, தீய வழி, புரட்டுவாய் இவைகளை நம்மைவிட்டு அகற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று நம்மில் பலரும் குடி, ஏமாற்று, திருட்டு, கொலை போன்ற காரியங்கள் மட்டுமே தீய வழிகள் என்று எண்ணிக்கொண்டு அவற்றைச் செய்யாததால் நம்மைப் பாவமற்றவர்கள் என்றும் எண்ணிக்கொண்டு வாழ்கின்றோம்.  

பழைய ஏற்பட்டு முறைமையின்படி, மோசே இஸ்ரவேல் மக்களுக்கு "ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்." ( உபாகமம் 8: 6) என்று அறிவுறுத்தினார். அதாவது, அவருக்குப் பயந்து அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் எனும் பொருளில் அவர் கூறுகின்றார்.   

ஆனால் இன்று புதிய ஏற்பாட்டின்படி தேவனது கட்டளைகளுக்கு பயந்து கீழ்ப்படியாமல் நாம் அவர்மேலுள்ள அன்பினால் அவரது கற்பனைகளுக்குக் கீழ்படியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு கணவன் மனைவி சொல்வதைக் கேட்கின்றான் என்றால் அவளுக்குப் பயந்து அல்ல; மாறாக, அவளிடத்தில் அன்புகூர்வதால் தான். ஆம், அதுபோல "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." (1 யோவான்  5 : 3) என்கின்றார் அப்போஸ்தலரான யோவான். 

ஆம் அன்பானவர்களே, நாம் அவரிடம் அன்புகூர்வதால் அவருக்கு எதிராக பாவம் செய்துவிடக்கூடாது எனும் பயம் மட்டுமே நம்மிடம் இருக்க வேண்டும்.  இப்படி நாம்  வாழும்போது கர்த்தருடைய கிருபை  நம்மேலும், அவருடைய நீதி நமது  பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் நிரந்தரமாக இருக்கும். சுருங்கக் கூறுவதானால் நாம் பழைய ஏற்பாட்டு மக்களைப்போல பயந்தவர்களாக அல்ல; மாறாக, தேவனிடம் அன்புடன் அவரது கற்பனைகளுக்குக் கீழ்படியவேண்டும்.  

"அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." (1 யோவான்  4 : 18) என்று கூறப்பட்டுள்ளது. எனவே புதிய ஏற்பாட்டு மக்களாகிய நாம் தேவன்மேல் அன்புகொண்டவர்களாக கற்பனைகளைக் கைக்கொண்டு  வாழ்வோம். அதுவே நமது சந்ததிகளுக்கு நாம் சேர்த்துவைக்கும் நிரந்தர ஆசீர்வாதமாக இருக்கும். இப்படி நாம் வாழும்போது, "கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது." எனும் வசனம் நமது வாழ்வில் உறுதியாக நிறைவேறும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,553
'ஆதவன்' 💚மே 08, 2025. 💚வியாழக்கிழமை

"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24: 25)

உண்மையினை நேருக்குநேர் சந்திக்க பலரும் விரும்புவதில்லை.  பேலிக்ஸ் ராஜாவும் அப்படியே இருந்தான். பவுல், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்தான் என்று வாசிக்கின்றோம். இந்த பயத்துக்குக் காரணம் என்ன? அவனிடம் நீதி, இட்சையடக்கம் போன்ற குணங்கள் இல்லை என்று பொருள். 

பொதுவாக மனிதர்களுக்குத் தங்களது குற்றங்கள் குறைகளையும் பாவங்களையும் பிறர் எடுத்துக்கூறுவது பிடிக்காது. அதிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தங்களைப்  பிறர் குறைகூறுவது ஏற்கவே முடியாதது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்பவர்கள் தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வழியுண்டு. விசாரணைக் கைதியான பவுல் பேசிய பேச்சுக்கள் பேலிக்சை உள்ளத்தில் குத்தியதால் அவன் பயமடைந்தான். ஆனாலும் அவன் மனம் திரும்பவில்லை.  

அப்போஸ்தலரான பவுல் அடிகள் மேல்  யூதர்கள் குற்றம் சுமத்தி அந்தக் குற்றங்களை விசாரிப்பதற்காக அவர் உரோமையில்  கைதியாக இருந்தபோது அவரிடம் பேலிக்ஸ் ராஜா விசாரணை செய்தான். அவனுக்கு பவுல் அப்போஸ்தலரது பதில்களும் மறுமொழிகளும் சுவிசேஷ அறிவிப்புகளாகவே வெளிவந்தன. பவுல் பேசிய பேச்சுக்களைக் கேட்டு பேலிக்ஸ் பயமடைந்தான் என்று இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது. 

ஆதவன் வேதாகம தியானங்களைச் சில கிறிஸ்தவ ஊழியர்கள் விரும்புவதில்லை. சிலர் ஏதாவது தேவையற்ற விமரிசனங்களைச் சொல்வார்கள். ஆனால் நான் கவனித்த ஒரு விசயம், குறைகூறும் இந்த ஒருசில ஊழியர்கள் வாழ்க்கையில் நற்சாட்சி இல்லாதவர்கள். தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொரு பெண்ணை மனைவிபோல  சேர்த்துவைத்துக்கொண்டு வாழ்பவர்,   நிதி மோசடி வழக்குகளில் சிக்கி நீதிமற்றத்துக்கும் வீட்டுக்குமாக  அலைபவர், ரியல் எஸ்டேட் நடத்துவதாகக் விளம்பரம் செய்து பொய்களைக்கூறி ஒன்றுக்கும் உதவாத நிலத்தை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்....  இவர்களே.

இதுபோன்ற செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கு வேத வசனங்கள் கசக்கவேச் செய்யும்.  எப்போதும் ஆசீவாத வசனங்களையே கூறிக்கொண்டிருந்தால் பாராட்டுவார்கள். அப்போஸ்தலரான பவுல் பேசிய வார்த்தைகள் இதுபோலவே பேலிக்ஸ் ராஜாவை அச்சுறுத்தின. எனவே அவன், "நீ போகலாம், எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன்" என்று கூறி அனுப்பிவிட்டான். 

அன்பானவர்களே, தேவன் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புவதால் பொறுமையோடு காத்திருந்து பல்வேறு விதமாகத் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தாமல்  பேலிக்ஸ் ராஜாவைப்போல, "எனக்குச் சமயம் கிடைக்கும்போது பேசலாம், நீ போ "  என உதறிவிட்டோமானால் இரட்சிப்பு அனுபவத்தை நாம் பெறமுடியாது.  "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." (2 கொரிந்தியர் 6: 2)

குறிப்பிட்ட சில வேத வசனங்களைக் கேட்கும்போது நமக்கு எரிச்சலோ, கோபமோ பயமோ வருகின்றது என்றால் நம்மிடம் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள். வசனத்தின்மேலோ, அதனைக் கூறுபவர் மேலோ கோபம் கொள்ளாமல் நம்மை ஆராய்ந்துபார்த்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திரும்புவோம். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,554
'ஆதவன்' 💚மே 09, 2025. 💚வெள்ளிக்கிழமை

"பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது." ( யாக்கோபு 3: 17)

இந்த உலகத்தில் ஞானிகள் பலர் இருந்துள்ளனர். தங்களது உலக ஞானத்தால் பல்வேறு நல்ல கருத்துக்களை அவர்கள் எழுதிவைத்துள்ளனர். இதுபோல தேவ ஞானிகளும் தங்களுக்குத் தேவன் அருளிய ஞானத்தால் பல கருத்துக்களை எழுதிவைத்துள்ளனர். இந்த தேவ ஞானம் சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

ஆனால் "இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது." (1 கொரிந்தியர் 3: 19-20) என்று வேதம் கூறுகின்றது. 

உதாரணமாக, இந்த உலக ஞானத்தால் உருவாக்கப்பட்ட யோகா பல கோடிக்கணக்கான மக்களை வஞ்சித்து வைத்துள்ளதை நாம் அறிவோம்.  ஒருவேளை யோகா உடலைப் பேணுவதற்குப் பயன்தரலாமேத் தவிர அதனால் நாம் பாவத்திலிருந்து விடுதலையடைய முடியாது. பொதுவாக உலக ஞானிகள் உடலை வருத்துவதும் ஒரு சில உணவுகளைத் தவிர்ப்பதும் ஞானம் என போதிக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் ஆத்துமாவுக்கு எந்த பலனையும் தருவதில்லை. 

இதுபோலவே, இயற்கை உணவுமுறை என்று ஒரு சாரார் கூறி  வருகின்றனர். இயற்கை உணவுமுறை  ஆத்துமாவுக்கு புத்துணர்வூட்டும் என்கின்றனர். எந்த உணவையும் அவிக்காமலும் பொரிக்காமலும் இயற்கையில் கிடைப்பதுபோலவே உண்ணவேண்டும் என்பதுதான் இவர்கள் கூறுவது. இதுவே இயற்கையில் கடவுள் நியமித்த முறை என்கின்றனர். ஒருமுறை  இத்தகைய பயிற்சியை அளித்துவரும்   எழுபது வயது பயிற்சியாளரை சந்திக்க என்னோடு பணியாற்றிய நண்பர்கள் முன்னறிவிப்பின்றி அவரது வீட்டில் சென்று சந்திக்க முயன்றபோது  அவர் பரோட்டா, சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இத்தனைக்கும் அவர், தான் கடந்த இருபது ஆண்டுகளாக இயற்கை உணவு முறையையே பின்பற்றி வருவதாகப் பொதுமேடையில்  பேசிவந்தவர்.

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவ போதகர்களிலும் பலர் இப்படி மாயமான போதனைகளைப் போதித்துக்கொண்டு  வாழ்கின்றனர். "இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது." ( கொலோசெயர் 2: 23) மட்டுமல்ல பெரும்பாலும் இப்படிப் போதிக்கும் பலரும் தங்கள் வாழ்வில் அவற்றைக் கடைபிடிப்பதுமில்லை. 

"அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோசெயர் 2:3) என்று கூறியுள்ளபடி கிறிஸ்துவே ஞானமும் மீட்புமானவர். 

நாம் உண்மையான பரத்திலிருந்து வரும் ஞானத்தைப் பெற்றவர்களென்றால் அவற்றை நமது அன்றாட வாழ்வில் அதனை வெளிப்படுத்துபவர்களாக வாழவேண்டும் என்று வேதம் நமக்கு அறியவுறுத்துகின்றது. "உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்." (யாக்கோபு 3:13). 

பரிசுத்தம், சமாதானம், சாந்தம்,  இணக்கம், இரக்கம் நற்கனிகள்,  பட்சபாதமில்லாமை, மாயமற்றத் தன்மை இவையே பரத்திலிருந்து ஒருவன் பெறும் ஞானத்தின் அறிகுறிகள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  ஆனால் உலக ஞானம் இவற்றைப்  போதிப்பதில்லை, இவற்றைக் கடைபிடித்து வாழ நமக்கு உதவுவதுமில்லை.  

"உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்". (யாக்கோபு 1:5) என்று அப்போஸ்தலரான யாக்கோபு நமக்கு அறிவுறுத்துகின்றார். இந்த அறிவுரையைக் கேட்போம்;  பரத்திலிருந்து வரும் ஞானத்தால்  நாம் நிரம்பிட தேவனிடம் வேண்டுவோம். மாயமான உலக ஞானம் நமக்கு எந்தவிதத்திலும் உதவுவதில்லை.

வேதாகமத் தியானம் - எண்:- 1,555
'ஆதவன்' 💚மே 10, 2025. 💚சனிக்கிழமை

"அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12: 43)

நாம் ஆலய காரியங்களுக்கென்றும் நமது   ஊரின் நன்மைக்காகவும் பலச்  செயல்கள் செய்யலாம். அதிகமான பணத்தை ஆலயங்களுக்குச் செலவழிக்கலாம்; அல்லது தர்ம காரியங்கள் அதிகம் செய்யலாம். ஆனால் இவை அனைத்தையுமே எதற்காகச் செய்கின்றோம் என்பதே முக்கியம். தேவன் நாம் செய்யும் காரியங்களையும் அவற்றைச் செய்யும் நோக்கத்தையும்  அறிவார். உள்ளான அன்புடன் நாம் செய்வது எது, பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று தற்பெருமைக்காகச்  செய்வது எது என்தையும்  தேவன் அறிவார். 

பிறர் அறியவேண்டும், நம்மை மதிக்கவேண்டும்  எனும் எண்ணத்துடன் செய்யும் காரியங்கள் உண்மையான அன்புடன் செய்பவையல்ல. அப்படிச் செய்வதால், நம்மை அறியாமலே ஒரு பெருமை நமக்குள் வந்துவிடுகின்றது. இதனை தேவன் விரும்புவதில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது." ( மத்தேயு 6: 3) என்று. தர்மம் செய்யும்போது மட்டுமல்ல, என்ன நல்ல செயலை நாம் செய்தாலும் இப்படியே இருக்கவேண்டியது முக்கியம். 

இதுபோலவே, சிலர் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை அல்லது கிறிஸ்துவைத்  தாங்கள்  நம்புவதை வெளிப்படையாகச்  சொல்லத் தயங்குவதுண்டு.  வேலை பார்க்கும் இடங்களில் பிற மத நண்பர்கள் அதிகம் பணிசெய்யும்போது அவர்கள் நம்மைத் தவறாகக் கருதுவர் என எண்ணி கிறிஸ்தவ விசுவாசத்துக்கு முரணான காரியங்களைச் செய்து  அவர்களோடு பல காரியங்களில் ஒத்துப்போவது சிலரது பழக்கம். இத்தகைய மனிதர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையைத் தேடுபவர்கள். 

யூதர்களில் பலர் இயேசுவைக்  கிறிஸ்து என்று நம்பினாலும் அதனை வெளிப்படையாக அறிக்கையிடத் தயங்கினார்கள். காரணம், யூதர்கள் தங்களைக் கொலைசெய்துவிடுவார்கள் என்று அவர்கள் பயந்தனர். சிலர் இரகசிய சீடர்களாக இருந்தனர். ஆனால் பலர் கிறிஸ்துவை மேசியா என்று கண்டுகொண்டாலும் அதனை வெளிப்படையாக அறிக்கையிடத் தயங்கினர். இத்தகைய மனிதர்களைப் பார்த்துதான் இயேசு கிறிஸ்து, "அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." (யோவான் -12:43) என்று குறிப்பிடுகின்றார்.

இதுபோலவே இன்று சுய மகிமையைத் தேடும் கிறிஸ்தவ ஊழியர்கள் நாட்டில் பெருகியுள்ளனர். கிறிஸ்துவை அறிவிப்பதைவிடத் தங்களது பெருமைகளை மக்கள் மத்தியில் பறைசாற்றுபவர்களாக வாழ்கின்றனர். இத்தகைய ஊழியர்களும் தேவனால் வரும் மகிமையைவிட மனிதர்களால் வரும் மகிமையைத் தேடுபவர்களே.  ஆனால் அப்போஸ்தலரான பவுல் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று குறிப்பிடுகின்றார்.  "உங்களிடத்திலாவது,. மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை." (1 தெசலோனிக்கேயர் 2: 6) என்கின்றார் அவர். 

அன்பானவர்களே, நமது செயல்கள் அனைத்தும் தேவனை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டுமேத்தவிர நம்மை விளம்பரப்படுத்துவதற்கான சுயமகிமைக்கானவைகளாக இருக்கக்கூடாது. இப்படிச் சுயமகிமையைத் தேடுபவர்களாக நாம் வாழ்வோமானால் நாம் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. எனவே நம்மையே மறைத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடும்போம். 

யோவான் ஸ்நானகன் கூறுவதுபோல, "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்." ( யோவான் 3: 30) என்று வாழ்பவர்களே மெய்யான ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,555
'ஆதவன்' 💚மே 11, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2: 11)


நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணும்போது நாம் பிதாவாகிய தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. காரணம், அப்படி பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படிக்கு எல்லா பெயருக்கும் மேலான பெயரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அவர் அளித்துள்ளார் என்று இந்த வசனம் நமக்குக் கூறுகின்றது.

சங்கீத ஆசிரியர் கூறுகின்றார், "அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது." ( சங்கீதம் 148: 13) ஆம் அன்பானவர்களே, இந்த மகிமையை விண்வெளிக்குச் சென்றுவந்த பல்வேறு விண்வெளிவீரர்களும் அறிக்கையிட்டுள்ளனர். வேதாகமம் கூறும் சத்தியங்கள் பவற்றையும் தெளிவாகப் புரிந்துகொண்டதாகக் கூறியுள்ளனர்.  விண்வெளிக்குச் சென்றுவந்தபின்னர் கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசம் அவர்களில் உறுதிப்பட்டுள்ளது என்று பலரும் கூறியுள்ளனர். ஆம், "அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது."

எல்லா நாமத்துக்கு மேலான நாமம் என்பதால் மூவுலகத்தோரும் அவருக்குமுன் முழங்கால்களை முடக்குவார்கள். "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு" ( பிலிப்பியர் 2: 10) என்று நாம் வாசிக்கின்றோம். அப்படி முடங்கத்தக்கதான மேலான நாமத்தை இயேசு கிறிஸ்து பெற்றுள்ளார். எனவேதான் நாம் அவரது பெயரைக் கேட்டவுடன் அச்சுத ஆவிகள் அலறி ஓடுவதைக் காண்கின்றோம். 

மட்டுமல்ல, உலகத்தின் எந்த அதிகாரமும் அவரது பெயருக்கு எதிர்த்து நிற்கமுடியாது. காரணம், "எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக," ( எபேசியர் 1: 20) அவரது பெயர் உயர்ந்திருக்கின்றது. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் பலவேளைகளில் இதனை உணர்வதில்லை. 

உலக காரியங்கள் முதலில் தோல்விபோல நமக்குத் தெரியலாம், ஆனால் நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்வு வாழ்வோமென்றால் அவரது பெயரின் வல்லமை நமது வாழ்வில் செயல்படுவதை நாம் கண்டுணரலாம். அதுபோல, இந்திய நாட்டில் நாம் சிறுபான்மையோராக இருக்கலாம், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பார்வையில் நாம் சிறுமைப்பட்டவர்களல்ல. இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் எத்தனையோ எதிர்ப்புகளையும் தாண்டி கிறிஸ்தவம் நிலைநிற்கின்றதென்றால் அது கிறிஸ்துவின் பெயரின் வல்லமையால்தான். 

கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்கள் நம்மை பயமுறுத்துவதாக அல்ல; மாறாக,  நமது விசுவாசத்தை நாம் வளர்த்துக்கொள்ள உதவுவனவாக  இருக்கவேண்டும். பத்திரிக்கைச் செய்திகளைக் கவனமாக நாம் வாசித்து வருவோமென்றால் எதிரிகளின் மாற்றத்தை நாம் கண்டுகொள்ளலாம்.  கிறிஸ்துவை எதிர்த்த பல வடமாநில கிராமங்கள் மனம்திரும்பி அவரை ஏற்றுக்கொண்டவர்களாக  மாறுவதை நாம்  கண்டுகொள்ளலாம். அதுதான் அவரது பெயரின் வல்லமை.

வல்லமையான கிறிஸ்துவின் பெயருக்குமுன் நம்மைத் தாழ்த்தி அவருக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வோம். பெயர்க்கிறிஸ்தவ வாழ்க்கையல்ல, மாறாக அவரது வல்லமையை உணர்ந்து மனம்திரும்பியவர்களாக வாழ்வோம். காரணம் யாராக இருந்தாலும் மனம்திரும்பாதபட்சச்தில், "இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்.." ( மத்தேயு 21: 44) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவின் வல்லமையை நாம் புகழும்போது அதற்கு அஞ்சி வாழவேண்டியதும் அவசியம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,556
'ஆதவன்' 💚மே 12, 2025. 💚திங்கள்கிழமை

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1: 12)


எல்லா பெயருக்கும் மேலான பெயரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் அளித்துள்ளார் என்றும்,  இயேசு எனும் பெயரின் மகத்துவத்தையும் குறித்து நேற்றைய தியானத்தில் தியானித்தோம்.  இன்றைய தியான வசனத்தில் அந்தப் பெயரின்மேல் நாம் விசுவாசம் கொள்ளும்போது அவரது சொந்தப் பிள்ளைகளாகின்றோம் என்றும்  வாசிக்கின்றோம். 

தாய் தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு உறவு உண்டு. அந்த உறவே அவர்களைக் குடும்பமாக சேர்ந்து வாழ வகைசெய்துள்ளது. நாம் ஒருவருடன் எவ்வளவுதான் நெருக்கமாகப் பழகினாலும் குடும்ப உறவினருக்குள் இருக்கும் நெருக்கம் மற்றவர்களோடு இருப்பதில்லை. நமது ஒருசில நண்பர்கள் குடும்ப உறவினர்களைவிட நம்மோடு அதிக நெருங்கியவர்களாக இருந்தாலும் சட்டபூர்வமாகச்  சில காரியங்களுக்கு குடும்ப உறவினர்களையே  நாம் பயன்படுத்தமுடியும். 

ஒரு தகப்பனின் சொத்துக்களுக்கு அவரது பிள்ளைகள்தான் உரிமைகோர முடியுமேத்தவிர மற்றவர்கள் எத்தனை நெருங்கியவர்களாக இருந்தாலும்  அவர்களுக்கு எந்த உரிமையும் இருப்பதில்லை.  கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் விசுவாசம்கொண்டு அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவரது பிள்ளைகளாகின்றோம். அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை கோடி மக்களாக இருந்தாலும் அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளே. 

இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்வது என்பது வெறுமனே அவரை நம்புவதல்ல. காரணம்,  உலகிலுள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களும் அவரை நம்புகின்றனர்.  மெய்யான விசுவாசம் என்பது அவரை நாம் நம்புவதை செயலில் காண்பிப்பதைக் குறிக்கின்றது. அவர் கூறியபடி, அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும் அனுபவத்தைப் பெறும்போதே நாம் அவரது பிள்ளைகளாகின்றோம். இப்படிப் பாவங்கள் கழுவப்பட்ட    அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுக்கின்றார். 

இந்த அதிகாரம் என்பது  தேவனுக்குரிய அனைத்துக் காரியங்களிலும் உரிமையை அவரிடமிருந்து நாம் பெறுவதைக் குறிக்கின்றது. ஆம் அன்பானவர்களே, நமது பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்ல, தொடர்ந்து நாம் அவரோடு ஐக்கியத்தில் வாழவேண்டியதும்  அவசியம். அப்படி ஐக்கியத்தில் வாழ்வதையே அவர் விரும்புகின்றார். அப்படி நாம் வாழும்போது  "மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." ( லுூக்கா 15: 31) என்று நம்மைப்பார்த்தும் அவர் கூறுவார். இதுவே பிள்ளைகளுக்குள்ள அதிகாரம். 

நாம் எப்போதும் அவரோடு இணைந்திருக்க வேண்டியது அவசியம். இந்த உலகினில் சில ஊதாரி மகன்களை குடும்பத்தைவிட்டே ஒதுக்கிவைப்பதை நாம் பார்க்கலாம். காரணம் அவர்கள் எந்தப் பொறுப்புணர்வுமின்றி குடித்துக் குடித்தே அழிந்து குடும்பத்தின் பெயரையும் கெடுத்து அழிந்து போகின்றனர். 

எனவே அன்பானவர்களே, கிறிஸ்துவில் விசுவாசத்தோடும் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்புப் பெற்று தொடர்ந்து அவரோடு ஐக்கியத்திலும் வாழ்வோம். இப்படி வாழும்  அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுக்கின்றார் என்று கூறியுள்ளபடி அவர் நம்மைத் தமது பிள்ளைகளாக அங்கீகரித்துக்கொள்வார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,557
'ஆதவன்' 💚மே 13, 2025. 💚 செவ்வாய்க்கிழமை

"நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." ( சங்கீதம் 37: 25)

சில சம்பவங்கள் நடைபெறும்போது நம்மில் பலரும்,  "என் வாழ்நாளில் இத்தகைய காரியத்தை நான் கண்டதும் இல்லை; கேள்விப்பட்டதுமில்லை என்று கூறுவதுண்டு. உதாரணமாக, 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி) இந்தியா உட்பட 14 நாடுகளில் 2,30,000 க்கும் மேற்பட்ட மக்களது உயிரைப் பலிகொண்டது. இது வரலாற்றில் மிகக்கொடிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும். அப்போது, நம்மில் வயதான மனிதர்கள், "என் வாழ்நாளில் இத்தகைய பெரிய அழிவை நான் கண்டதே இல்லை" என்று கூறினர். 

வயதான மனிதர்கள் ஆழிப்பேரலையைக் குறித்துக் கூறியது எத்தகைய உண்மையோ அதுபோன்ற உண்மையே இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுவது. அதாவது, எனது வாழ்நாளில் நான் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை என்கின்றார் தாவீது. இதன் பொருள் நீதிமான் தேவனால் கைவிடப்படுவதில்லை என்பதே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்". (மத்தேயு 13:43) என்று கூறினார். பிதாவின் ராஜ்யத்தில் சூரியனைப்போல பிரகாசிக்கும் நீதிமான்களின் சந்ததியும் அதுபோலவே  ஆசீர்வதிக்கப்படும். 

நீதிமான்கள்மேல் தேவன் தனிக்கவனமுடன் இருக்கின்றார். எனவேதான் அப்போஸ்தலராகிய பேதுரு,  "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமை செய்கிறவர்களுக்கோ   கர்த்தருடைய  முகம் விரோதமாயிருக்கிறது". (1 பேதுரு 3:12) என்கின்றார். 

ஒரு புகழ்பெற்றத் தனியார் நிறுவனத்தில் ஒரு நேர்மையான அதிகாரி இருந்தார். அவர் அந்த நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணராக இருந்தார். மிக நேர்மையான அதிகாரி அவர். பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. அந்த அதிகாரி பணிநிறைவுபெற்று பின்னர் சில ஆண்டுகளில் இறந்துபோனார். ஆனால் அந்த நிறுவனம் வளர்ந்து மிகப்பெரிய நிறுவனமாக மாறிவிட்டது. அந்த நிறுவனத்தில் பணியாளர்கள் தேர்வு நடைபெற்றபோது அந்த நேர்மையான அதிகாரியின் பேரனும் விண்ணப்பித்திருந்தான். அவனோ, மிகச் சாதாரண படிப்புதான் படித்திருந்தான். ஆனால் விண்ணப்பப் படிவத்தில் தனது தாத்தா இந்த நிறுவனத்தில் பணிபுரிந்ததைப்  பற்றிக்  குறிப்பிட்டிருந்தான். 

அவன் குறிப்பிட்டிருந்த தகவல் உண்மையா என  நிறுவனத்தின் பழைய ஆவணங்களை சோதித்துப் பார்த்தபோது அது உண்மை எனவும் அவரது சாதனைகளைப் பற்றியும், அந்த நிறுவன வளர்ச்சியில் அவர் முக்கிய பங்குவகித்ததையும் கண்டுகொண்டனர். உடனேயே அவனுக்கு அந்த நிறுவனத்தில் மிகச் சிறப்பான பதவியைக் கொடுத்தனர். உனது தாத்தா நிறுவன வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்பை இந்த நிறுவனம் மறந்துவிடவில்லை என்றும், அவரது பேரனான நீங்களும் நிச்சயம் அவரைப்போல இருப்பீர்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றும்   நியமன ஆணையில் குறிப்பிட்டிருந்தனர். 

ஆம்  அன்பானவர்களே, இந்த உலகிலுள்ள ஒரு சாதாரண நிறுவனம் தன்னிடம் உண்மையாகப் பணியாற்றிய முன்னாள் பணியாளரை மதித்து அவரது சந்ததியை ஏற்ற பணியில் அமர்த்தியது என்றால் நமது  தேவன்  தனக்குமுன் நீதிமானாக வாழ்ந்த மனிதனது சந்ததியைக் கைவிடுவாரா? நிச்சயமாகக் கைவிடமாட்டார். நமது ஒவ்வொரு செயலையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். 

எனவே, தேவனுக்கேற்ற நீதியுள்ள வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். நாமும் நமது சந்ததியும் எப்போதும் தேவனால் கைவிடப்படமாட்டோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,558
'ஆதவன்' 💚மே 14, 2025. 💚 புதன்கிழமை

"அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்." ( தீத்து 2: 14)

இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாக அவதரித்து, பாடுகள்பட்டு மரணமடைந்து உயிர்த்தது  மனுக்குலத்துக்கு மீட்பினைக் கொண்டுவந்தது. இதனால்தான்  நாம் அவரது சொந்த மக்களாக மாறும் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். 

மேலும், அவரது இரத்தம் நம்மைச் சுத்திகரிப்பது மட்டுமல்லாமல்  நாம் நற்செயல்புரிய நம்மைத் தகுதியுள்ளவர்களாகவும் மாற்றுகின்றது. காரணம்,  பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்ல, இந்த உலகினில் நாம் நற்செயல்கள் செய்து அவருக்கேற்ற கனிகொடுக்கின்றவர்களாக மாறவேண்டியதும் அவசியமாகும். இதனால்தான் இயேசு,  "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." (யோவான் 15:5) என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, வெறுமனே நமது பாவங்களை மன்னிப்பதுடன் அவர் நின்றுவிடுவதில்லை. மாறாகத் தொடர்ந்து நாம் அவருக்கேற்ற வாழ்க்கை வாழவும் அவர் நமக்கு உதவிசெய்கின்றார். இதற்காகவே தம்மைத்தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இன்று பல கிறிஸ்தவர்களும் என்றோஒருநாள்  அவர்களது வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட பாவமன்னிப்பு அனுபவத்தைச் சொல்லிச்சொல்லி வாழ்கின்றார்களேத்தவிர அதற்கு மேலான ஆவிக்குரிய வளர்ச்சியற்றவர்களாகவே இருக்கின்றனர். மனம்திரும்புதல், விசுவாசம், ஞானஸ்நானம், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு இவை கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபார உபதேசங்கள். காலம்முழுவதும் இவைகளைச் சொல்லிக்கொண்டிராமல் நாம் கிறிஸ்துவைப்போல பூரணராக மாறவேண்டும். இந்தப் பூரணம் கிறிஸ்துவோடு நாம் கொள்ளும் ஐக்கியத்தில் மட்டுமே சாத்தியமாகும்.

எனவேதான் எபிரெய நிருப ஆசிரியர், "ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக." ( எபிரெயர் 6: 1, 2) என்று எழுதுகின்றார். 

இயேசு எப்படிப் பூரணரானார்? "அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி," ( எபிரெயர் 5: 8, 9) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பாடுகளைச் சகித்து, பிதாவாகிய தேவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து பூரணரானார். இப்படியே  நாம் அவருக்குரிய சொந்த ஜனங்களாகம் மாறவேண்டும். நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாக வாழவேண்டும். இப்படி நாம் வாழ நம்மைச் சுத்திகரித்து அவரில் வளரும்படி  நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

ஆம் அன்பானவர்களே, நாம் பாவ மன்னிப்பு பெற்ற அனுபவம் மட்டும் போதாது. நாம் முற்றிலும் அவருக்குச் சொந்தமானவர்களாக மாறவேண்டும். பாவத்தை மேற்கொள்ளும் பலம் பெற்றவர்களாக மாறவேண்டும்; அவரைப்போல பூரணம் அடைந்திடவேண்டும். கிறிஸ்துவோடுள்ள ஐக்கியமே இவற்றை நமது வாழ்வில் நாம் பெற்றிட உதவிசெய்து  நம்மைப்  பூரணப்படுத்தும். எனவே எந்த வேளையிலும் அவரைவிட்டுப் பிரிந்திடாமல் வாழ்வோம். மூல அஸ்திபார உபதேசங்களையே வாழ்நாள் முழுவதும் கூறிக்கொண்டிராமல் அவர்மேல் கட்டப்பட்ட ஆலயமாக நம்மை மாற்றுவோம்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,559
'ஆதவன்' 💚மே 15, 2025. 💚 வியாழக்கிழமை

"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ( ஏசாயா 26: 3)

உலகினில் மனிதர்கள் பெறவேண்டிய மிகப்பெரிய ஆசீர்வாதம் சமாதானம். இந்த சமாதானத்தை நாம் எந்த வழிகளில் அடைந்திட முயல்கின்றோம் என்பதே முக்கியம். இன்று சமாதானத்தைத் தேடி மனிதர்கள் பல்வேறு துன்மார்க்க வழிகளில் முயல்கின்றனர். மதுவைக் குடிப்பதால் சமாதானம் கிடைக்குமென்று எண்ணி மதுவுக்கே அடிமையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் அதிகம். இன்னும்பலர் திரைப்படங்கள், கேளிக்கைவிடுதிகளில் சாதானத்தைத் தேடி சற்றுநேர மனச்சமாதானத்தையும் பல்வேறு நோய்களையும் வருவித்துக்கொள்கின்றனர். 

ஆனால் அன்பானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நமக்கு பூரண சமாதானத்தைக் கொடுக்க முடியும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கொடுக்கும் சமாதானம் இந்த உலகம் கொடுக்கும் சமாதானத்தைப் போன்றதல்ல. "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." ( யோவான் 14: 27) என்று அவர் கூறவில்லையா?

உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு அளித்த முக்கிய செய்தியே சமாதானம்தான். "வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்." ( யோவான் 20: 19)

"மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்." ( யோவான் 20: 26)

இப்படி அனைவருக்கும் சமாதானமே தேவையாக இருப்பதால் அவர் தனது சீடர்களிடம் எந்த வீட்டினுள் நுழையும்போதும் சமாதான வாழ்த்தைக் கூறும்படிக் கட்டளையிட்டார். "ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.' ( மத்தேயு 10: 12, 13) என்றார். 

உலகப்  பொருட்கள், செல்வங்களில் நாம் பெறும் சமாதானம்  நமக்கு நிரந்தரமாக சாதானத்தைத் தருவதில்லை. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பலர் மனச் சமாதானமில்லாமல் தற்கொலை செய்து மடிவதை நாம் பத்திரிகைச் செய்திகளில் வாசிக்கின்றோமே? ஆம் அன்பானவர்களே, இதனால்தான் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" என்று. எனவே மெய்யான சமாதானம் நமக்கும் நமது குடும்பத்துக்கும் வேண்டுமானால் நாம் சமாதானக்  காரணரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

நோய்கள், கடன்பாரங்கள், பண நெருக்கடிகள், எதிர்காலத்தைப்பற்றிய பயம், நமது குழந்தைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம் என நமக்குச் சமாதானக் குறைவைத் தரும் எந்த காரியமாக இருந்தாலும்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அவற்றை விசுவாசத்துடன் ஒப்படைப்போம். நிச்சயமாக அவரது பிள்ளைகளை அவர் பூரண சாமாதானத்தால் காத்துக்கொள்வார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,560
'ஆதவன்' 💚மே 16, 2025. 💚 வெள்ளிக்கிழமை

"கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்." ( லுூக்கா 11: 34)

இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள "கண்" என்பது நமது உடலிலுள்ள வெளியரங்கமான சரீர கண்ணைப்பற்றியல்ல, மாறாக ஆவிக்குரிய கண்களைப் பற்றி இயேசு கிறிஸ்து கூறியது. 

நமது ஆவிக்குரிய கண்கள் தெளிவாக இருக்குமானால் நமது உடல் முழுவதும் பாவமில்லாமல் வெளிச்சத்தின் பிள்ளைகளுக்குரிய குணங்களுடன் இருக்கும். இதற்கு மாறாக நமது கண்கள் ஆவிக்குரிய தெளிவற்று இருக்குமானால் நாம் இருளின் பிடியில் சிக்கியவர்களாக இருப்போம் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இதனால்தான் சங்கீத ஆசிரியர் "உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்." ( சங்கீதம் 119: 18) என்று ஜெபிக்கின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது கண்கள் திறக்கப்பட்டவர்களாக அதனை வாசிக்கவேண்டும். வெறும் செய்தித்தாளை வாசிப்பதுபோலவோ, பாடப்புத்தகத்தை வாசிப்பதுபோலவோ வாசித்தோமானால் நமது கண்கள் இன்னும் திறக்கப்படவில்லை என்று பொருள். 

கண்களினால் நாம் செய்யும் பாவங்கள் அதிகம். அதிலும் இன்றைய நவீன யுகத்தில் அலைபேசி மூலம் பலரும் பல்வேறு பாவ காரியங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். பரிசுத்தவான்கள் கண்களினால் பாவம் செய்துவிடக்கூடாது என்று ஜெபித்தார்கள். பக்தனான யோபு பாவம் செய்துவிடக்கூடாது என்று தனது கண்களோடு உடன்படிக்கைச் செய்துகொள்வதை நாம் வேதத்தில்,  "என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?" ( யோபு 31: 1) என்று வாசிக்கின்றோம்.

அப்போஸ்தலரான யோவான், "ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்." (1 யோவான்  2 : 16) என்று கூறுகின்றார். எனவே நாம் ஆவிக்குரியவர்கள் என்று நம்மைக் கூறிக்கொள்ளவேண்டுமானால் நாம் கண்களின் இச்சையையும் அதன் தொடர்ச்சியான மாம்சத்தின் இச்சையையும் அழித்தவர்களாக வாழவேண்டியது அவசியம். 

ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய கண்கள் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். அப்படி நமது ஆவிக்குரிய கண்கள் தெளிவடையும்போது நாம் உடலின் இச்சைகளை மேற்கொள்வோம். அப்போது இன்றைய தியான வசனம் கூறுவதுபோல நமது  சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும். 

வேதாகமத்தை ஜெபத்துடன் வாசிக்கப் பழகுவோம். "ஆண்டவரே, நான் வாசிக்கப்போகின்ற வேதாகாமப் பகுதியை எனக்குத் தெளிவுபடுத்தித் தாரும்" என்று வேண்டுதல் செய்து வேதாகமத்தை வாசிப்போம். "உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்." என்று வேண்டுதல் செய்வோம். அப்போது வேத வசனங்கள் நம்மை தேவ பாதையில் வழிநடத்தும். இன்றைய தியான வசனம் கூறுவதன்படி நமது சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். அப்போது, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5: 14) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமது வாழ்வில் பலிக்கும்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,561
'ஆதவன்' 💚மே 17, 2025. 💚 சனிக்கிழமை

"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்." (வெளி 3:21)

இந்த உலகத்தில் அதிகார நாற்காலியைக் கைப்பற்றிட நடக்கும் அரசியல் போட்டிகள் பற்றி நமக்கு நன்குத்  தெரியும். எப்படியாவது அடுத்தவனைக் கெடுத்தாவது  பதவியில் அமர்ந்திடவேண்டுமென்று பலரும் விரும்புகின்றனர். துன்மார்க்க அரசியல்வாதிகள் தங்களுக்குள் நடத்தும் போட்டியில் அப்பாவி மக்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.  

ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் மட்டும் பிதாவின் ராஜ்யத்துக்குரிய பதவியை அனுபவிக்கவேண்டுமென்று எண்ணவில்லை. ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெறும் அனைவரும் அவரோடுகூட சிம்மாசனத்தில் அமர்ந்திடவேண்டுமென்று விரும்புகின்றார். இதனையே, "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்." என்கின்றார். 

அவரை விசுவாசிக்கும் அனைவரும் அவரோடுகூட இருக்கவேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்பினார். எனவே அவர்  உலகத்தில் இருந்த நாட்களில் எதிர்காலத்தில் அவரை விசுவாசிக்கப்போகும் நமக்காகவும் வேண்டுதல் செய்தார். அதாவது எல்லோரும் அவரோடுகூட பிதாவின் ராஜ்யத்தின்  ஆட்சியில் பங்கேற்கவேண்டுமென்று அவர் விரும்பினார். "நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்." ( யோவான் 17: 20) என்று  ஜெபித்தார். அதாவது அவரது சீடர்களும் அந்தச் சீடர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு அவரை விசுவாசிக்கப்போகும் எதிர்கால விசுவாசிகளான நமக்காகவும் அவர் ஜெபித்தார். 

"பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17: 24) என்று விருப்பமுடன் பிதாவிடம் வேண்டுதல் செய்தார். ஆம் அன்பானவர்களே, இதுதான் இயேசு கிறிஸ்துவின் மேலான அன்பின் ஆசை.

இத்தகைய அன்பான ஆண்டவரின் ஆவலை நாம் பூர்த்திச் செய்யவேண்டாமா? எனவே அதற்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். நாம் எத்தனை பாவிகளாக இருந்தாலும் தேவன் தனது குமாரனுடைய இரத்தத்தால் அதனைக் கழுவி நம்மைச் சுத்திகரிப்பார். கிறிஸ்துவின் உபதேசம் ஒப்புரவின் உபதேசம்தான்.  "அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்." (2 கொரிந்தியர் 5:19) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரோடு ஒப்புரவாவோம். தேவனுடைய ஆவியானவர் நம்மை நீதியின் பாதையில் நடத்திட நம்மை அவருக்கு ஒப்புக்கொடும்போம். அப்போதுதான் நாம் பாவங்கள்,  பாடுகள், துன்பங்கள் இவற்றை மேற்கொண்டு ஒரு வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியும்.  இப்படி நாம் ஜெயம்கொள்ள வேண்டுமென்பதே கிறிஸ்துவின் விருப்பம். 

இப்படி "ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்." என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. பாவங்களையும் பாடுகளையும் சகித்து ஆவியானவரின் பலத்தால் ஜெயம்கொள்வோம்.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,562
'ஆதவன்' 💚மே 18, 2025. 💚 ஞாயிற்றுக்கிழமை

"என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 30: 2)

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாட்டமாய்  இருக்கின்றது. இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைப்பட்டு இருந்தது, இன்று ஆவிக்குரிய வாழ்வில் நாம் பாவத்துக்கு அடிமைப்பட்டு இருப்பதற்கு ஒப்பானது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை மோசே மீட்டதைப்போல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தின் பிடியிலிருந்து மீட்டுள்ளார்.  

எகிப்துக்குத் திரும்பவேண்டாம் என்று தேவன் இஸ்ரவேலரை பலமுறை எச்சரிப்பதை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.  ஆனாலும் தேவனது வாக்கினை மீறி இஸ்ரவேலரில் பலர்  எகிப்துக்குத் திரும்புவதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். காரணம், கானானுக்குச் செல்லும் வழி பாலைவனப் பாதை.  இஸ்ரவேலர் கானானுக்குச் செல்லும் கடின பாதையைவிட  எகிப்தின் செழிப்பில் தங்களைப் பலப்படுத்திக்கொள்ளவும்  எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும்  எனும் எண்ணமுள்ளவர்களாக முரட்டாட்டமுள்ளவர்களாக இருந்தனர். 

எனவே, "நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள்." ( எண்ணாகமம் 14: 3) என்று அவர்கள் கூறுகின்றனர். 

மட்டுமல்ல, "பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திருப்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்." ( எண்ணாகமம் 14: 4) என்று வாசிக்கின்றோம்.

ஆம் அன்பானவர்களே, இன்றும் முரட்டாட்டமுள்ள இஸ்ரவேல் மக்களைப்போலவே ஆவிக்குரிய வாழ்வில் பலர் செயல்படுகின்றனர்.  ஆவிக்குரிய கிறிஸ்துவின் பாதை கடினமானது. பாடுகளைச்  சகித்துத்தான் நாம் அதில் பயணிக்கவேண்டும். ஆனால் அதனைச் சகித்து வாழ மனமில்லாமல் பாவமன்னிப்பு அனுபவத்தைப் பெற்றும், நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசித்தபின்னரும் பலர் அன்று இஸ்ரவேலர் எகிப்துக்குச் செல்ல ஆர்வமுள்ளவர்களாக இருந்ததுபோல தங்களது பழைய எகிப்து வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றனர்.  காரணம் துன்மார்க்க வாழ்வு அற்பமான செழிப்பைத் தருவதுதான்.

அப்படிக் கிறிஸ்துவை அறிந்த பின்பு ஆவிக்குரிய வாழ்வைவிட்டு வழிவிலகும் மக்களைப்பார்த்து அப்போஸ்தலரான பேதுரு, "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." (2 பேதுரு 2: 20) என்று எச்சரிக்கின்றார். மட்டுமல்ல, "அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்." (2 பேதுரு 2: 21) என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தில், "எகிப்தின் நிழலிலே ஒதுங்க வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்." என்று கூறப்பட்டுள்ளது. ஆம் அன்பானவர்களே, பழைய எகிப்து வாழ்க்கை நமக்கு வேண்டாம். அது சாபத்தின் வாழ்க்கை. "யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள்." ( எரேமியா 42: 15, 16)

"நானே வழி" என்று கிறிஸ்து கூறவில்லையா? பாலைவன வாழ்க்கைப் பாதையாக இருந்தாலும் கிறிஸ்து காட்டும் பாதை நமக்குப் போதும். காரணம், அதில் நித்திய மகிழ்ச்சி உண்டு.  "யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்." ( எரேமியா 42: 19)

வேதாகமத் தியானம் - எண்:- 1,563
'ஆதவன்' 💚மே 19, 2025. 💚 திங்கள்கிழமை

"கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." (1 கொரிந்தியர் 6: 20)

இன்றைய தியான வசனம் நாம் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் என்று கூறுகின்றது. ஒருவருக்கு ஒன்றை விலைக்குக் கொடுத்துவிட்டோமானால் அது வாங்கியவருக்கே உரிமையாகிவிடுகின்றது. அதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைத் தனது விலையேறப்பெற்ற இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கியுள்ளார். எனவே நாம் தேவனுக்கு உடைமையானவர்கள். "ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நாம் கிறிஸ்துவால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் ஆதலால் அவர் நமக்குள் வந்துவிட்டார். நாம் ஒரு வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறுவதுபோல அவர் நமக்குள் குடியேறியுள்ளனர். எனவே, "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1 கொரிந்தியர் 6: 19) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

மட்டுமல்ல, நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் அவருக்கேச் சொந்தம். எனவே அவற்றை நாம் பரிசுத்தமாக காக்கவேண்டியது அவசியம். "உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே." (1 கொரிந்தியர் 6: 15)

ஆம் அன்பானவர்களே, நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய நமது உடலைப் பரிசுத்தமாய்ப் பாதுகாப்பதிலும் ஆவியில் அனலுள்ளவர்களாக சிறப்பான நமது ஆவிக்குரிய வாழ்க்கையாலும்  தேவனை மகிமைப்படுத்தவேண்டும் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமாகிவிட்டதால் பாவத்துக்கு அடிமையாகாமலும், மனிதர்களுக்கு அடிமையாகாமலும்  நம்மைக் காத்துக்கொள்வோம். 

நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமாகிவிட்டதால் இனி எந்த மனிதருக்கும் நாம் அடிமைகள் ஆகக்கூடாது. இன்று பல கிறிஸ்தவர்கள் திரைப்பட நடிகர்களையும், நடிகைகளையும், பின்னணிப் பாடகர்களையும், நடனக் கலைஞர்களையும், விளையாட்டு வீரர்களையும்  தங்களது முன்னோடிகளாகக்கொண்டு அவர்களுக்குப்பின் அலைகின்றனர். பலர் தங்களுக்கேற்ற அரசியல் தலைவர்களைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குப்பின் ஓடிக்கொண்டிருக்கின்றனர். மேலும் பரிதபிக்கக்கூடிய நிலையில் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் பிரபல ஊழியர்களுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துச் சொல்கின்றார், "நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்." (1 கொரிந்தியர் 7: 23)

ஊழியர்களை மதிப்போம்; அவர்கள் சொல்வதைக் கேட்போம்; அதேநேரம் அவர்களுக்கு அடிமைகள் ஆகாதிருப்போம்.  நம்மைக் கிறிஸ்துவுக்கு முழுவதுமாக ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனே நம்மை எந்த போதகரும் ஊழியரும் நடத்துவத்தைக் காட்டிலும் மேலாகச் சிறப்பாக  நடத்துவார். 

ஆம்,  "கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்" (மத்தேயு 23:8)

கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். (மத்தேயு 23:10)

கிறிஸ்துவால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் நாம்; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும்  ஆவியினாலும் தேவனை மட்டுமே மகிமைப்படுத்தி வாழ்வோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,564
'ஆதவன்' 💚மே 20, 2025. 💚 செவ்வாய்க்கிழமை

"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." (1 யோவான்  1 : 3)

ஆவிக்குரிய வாழ்வில் ஐக்கியம் (Fellowship) என்பது மிக அவசியம்.  அதாவது ஒரு உறவு. இன்று கிறிஸ்தவர்களில் பலரும் சபை ஆராதனையில் கலந்துகொள்வதும் சபையில் சென்று ஆராதிப்பதும், சக விசுவாசிகளுடன் உறவுடன் வாழ்வதும் மட்டுமே ஐக்கியம் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், நாங்கள் பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியம் கொண்டிருக்கின்றோம்.   நீங்களும்  அதுபோல      பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம் என்கின்றார். அதாவது சபையில் சக விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ளுமுன் முதலில் நாம் தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். 

இரண்டு நாட்களுக்குமுன் ஒரு சிறிய டீ கடையில் டீ பருகிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஆவிக்குரிய சபைக்குச் செல்லும் சபை வைராக்கியம் கொண்ட ஒரு விசுவாசி, "சபை ஐக்கியம்தான் பிரதர் முக்கியம், நீங்க எந்த சபைக்கு ஆராதனைக்குப் போகிறீர்கள்?" என்று என்னிடம் கேட்டார்.  நான் அவரது கேள்விக்குப் பதில் சொல்லியபின் சிறிதுநேரம் பல காரியங்களைப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இன்னொரு சபைக்குச் செல்லும் நபர் ஒருவர் அங்கு வரவே அவரிடம், "பவுல் அப்போஸ்தலர் விக்கிரக ஆராதனைக்காரர்களோடு அமர்ந்து உண்ணவும் கூடாது என்று சொல்லியிருக்கிறார் உங்களுக்குத் தெரியுமா?" என்றார் சிறிது குத்தலாக. 

புதிதாய் வந்த நபருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் அந்த ஆவிக்குரிய நபரிடம், "உன் வறட்டு பெந்தேகோஸ்தே போதனையை எத்தனை நாட்களாகச்  சொல்லிக்கொண்டிருப்பாய்? விக்கிரக ஆராதனைக்காரர்களோடு அமர்ந்து உண்ணவும் கூடாது என்று கூறுகின்றாயே, நீ இப்போது நின்று டீ குடிக்கும் கடை யாருடையது என்று தெரியுமா? உனக்கு இந்த டீயைத் தயாரித்து தந்தது யார் என்று தெரியுமா?" என்று பலத்த சத்தமிட்டு கூறவே அந்த பெந்தகொஸ்தே நபர் நில்லாமல் ஓடிவிட்டார்.   ஆம் அது ஒரு இந்து சகோதரருடைய டீ கடை.

ஆம் அன்பானவர்களே, பிதாவோடும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவன் சக மனிதர்களோடும் ஐக்கியமாக வாழ்வான். எந்த மனித  ஐக்கியமுமில்லாமல் வாழ்ந்துகொண்டு வறட்டு வேதாந்தம் பேசுவது அறிவீனமல்லவா? இந்த உலகத்தில் நாம் பழகும் அல்லது நமக்கு உதவும் அனைவரும் மெய் தேவனை அறிந்தவர்களாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்களைப் பகைத்து நாம் தனியாக வாழமுடியாது. ஒவ்வொரு இடத்திலும் நாம் சந்திக்கும் மனிதர்கள் எந்த மதம் ஜாதி என்று பார்த்துக்கொண்டு நாம் வாழமுடியாது.  பிதாவோடும் குமாரனோடும் மெய்யான ஐக்கியமுள்ளவன் இப்படி வேறுபாடு பார்த்துக் கொண்டிருக்கமாட்டான்.  

"ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே." (1 கொரிந்தியர் 5: 10) என்று எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல்.

ஆம், தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லை. அவரை வழிபடும் நாமும் வேற்றுமை பாராட்டாமல் அனைவரையும் அன்புசெய்யவே அழைக்கப்பட்டுள்ளோம். "எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்." ( எபேசியர் 4: 6) ("One God and Father of all, who is above all, and through all, and in you all." (Ephesians 4: 6)

ஆம் அன்பானவர்களே, நமது ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது என்பது உண்மையானால் நாம் மற்றவர்களோடும் ஐக்கியமாக இருப்போம். அந்த ஐக்கியம் இல்லாதவன் பிதாவையும் குமாரனையும் அறியாதவன். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,565
'ஆதவன்' 💚மே 21, 2025. 💚 புதன்கிழமை

"உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது." ( சங்கீதம் 119: 136)

தேவனையும் அவரது அன்பையும் நாம் வாழ்வில் அனுபவித்து ருசித்தது மெய்யானால் துன்மார்க்கமாய் நடக்கும் மனிதர்களைப்பார்க்கும்போது மனதில் வேதனை ஏற்படவேண்டும். "ஐயோ, இந்த மனிதன் தேவனைப்பற்றிய அறிவோ கவலையோ இல்லாமல் வாழ்கின்றானே இவன் மரணமடைந்தால் நித்தியத்தில் அனுபவிக்கப்போகும் பாடுகள் எத்தனைக் கொடிதாக இருக்கும்!"  என்று கவலை  நமக்குள் ஏற்படவேண்டும். இதுதான் ஆத்துமபாரம்.

இன்றைய தியான வசனமாகிய சங்கீதத்தை எழுதிய பரிசுத்தவானுக்கு அந்தக் கவலை அதிகமாக ஏற்பட அவர் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிகின்றது என்கின்றார்.  இதுபோலவே, அப்போஸ்தலரான பவுல், "எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;" ( ரோமர் 9: 1) என்கின்றார்.

இத்தகைய ஆத்துமபாரம் ஊழியர்களுக்குக் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்படியானால் மட்டுமே ஊழியர்களால் ஆத்தும ஆதாயம் செய்ய முடியும்.  ஆத்துமபாரமுள்ள ஊழியன் வெறும் உலக ஆசீர்வாதத்தையே போதித்துக்கொண்டிருக்கமாட்டான்.  தன்னிடம் வரும் மனிதர்கள் தங்கள் உலக கவலைகளை மறந்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக "தேவன் கூறினார்" என பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்குக் கூறிக்கொண்டிருக்கமாட்டான். மாறாக, தன்னிடம் வரும் ஒவ்வொரு விசுவாசியின் ஆத்துமாவும் விலையேறப்பெற்றது என்பதால் அந்த ஆத்துமாக்கள் எப்படியாவது தேவனை அறியவேண்டும் எனும் கரிசனையுள்ளவனாக இருப்பான். அத்தகைய கரிசனையுள்ளவனே கிறிஸ்துவின் மெய்யான ஊழியன்.

இந்த அனுபவத்துடன் இருந்த அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு மாறாக நடந்த மக்களைக்குறித்து கண்ணீர்வடிக்கின்றார். அவர் இதனை, "ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்." ( பிலிப்பியர் 3: 18) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் எல்லோரும் அறியத்தக்க பெரிய அளவில்  ஊழியம் செய்யவேண்டுமென்று அவசியமில்லை. சாதாரண விசுவாசியாக இருந்தாலும் நமக்குள் ஆத்துமபாரம் இருக்குமானால் நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்து அவர்களை மீட்பின் பாதையில் நடத்திடமுடியும். 

அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர் நடிகைகள் பற்றியும் இவர்களது பெருமை பேச்சுக்களையும் நாம்  செய்தித் தாள்களில் வசிக்கும்போது இவர்களுக்காக ஜெபிக்கலாம். "ஆண்டவரே, இவர்களது மனக்கண்களை திறந்தருளும்" என விண்ணப்பம் செய்யலாம். நாம் இவர்களை நேரில் சந்தித்து சுவிசேஷம் சொல்ல முடியாது. ஆனால் இவர்களுக்காக நாம் மனதுருக்கத்துடன் ஜெபிக்க முடியும். அப்படி நாம் ஜெபிக்கும்போது ஏதாவது முறையில் தேவன் தன்னை இவர்கள் அறியும்படி கிருபை செய்வார். 

நாம் கிறிஸ்துவை அறிந்தது நமக்காக மட்டுமல்ல, நம்மூலம் அவர் அறிவிக்கப்படவேண்டும் என்பதற்காகவே. எனவே நமது அன்றாட ஜெபத்தில் தேவனை அறியாத மனிதர்களுக்காக மனதுருகி கண்ணீரோடு வேண்டுதல் செய்வோம். இன்று பிரபல ஊழியர்கள் தங்களது கூட்டத்துக்கு அதிகமான மக்கள் வருவதால் நாட்டில் எழுப்புதல் ஏற்பட்டுள்ளது என பொய்யான மாயையை உருவாக்கிவருகின்றார்கள். ஆனால் உண்மையில் நாட்டில் எந்த எழுப்புதலும் இன்னும் ஏற்படவில்லை.  உலக ஆசீர்வாதத்துக்காக மட்டுமே கூடி ஜெபித்துவிட்டு எழுப்புதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது அறிவீனமல்லவா?

தேவனது வேதத்தைக்  காத்துநடக்கும் மனிதர்கள் நாட்டில் பெருகுவதுதான் மெய்யான எழுப்புதல். அந்த எழுப்புதல் நாட்டில் ஏற்பட,  "வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது" என்று இன்றைய தியான வசன ஆசிரியர் கூறுவதுபோல நமது கண்களிலிருந்தும்  நீர்தாரைகள் ஓடவேண்டும்.  அத்தகைய மெய்யான மனபாரத்துடன் மனிதர்கள் மெய்த்தேவனை அறிந்திட அனுதினமும் ஜெபிப்போம். அதுவே மெய்யான எழுப்புதலை நாட்டில் கொண்டுவரும்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,566
'ஆதவன்' 💚மே 22, 2025. 💚 வியாழக்கிழமை

"கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்." ( எரேமியா 20: 11)

இன்று முக்கியத் தலைவர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும்  அரசாங்கம் பல்வேறு பாதுகாப்புகளை வழங்குகின்றது. இந்தப் பாதுகாப்பு பெற்ற நபர்கள் எங்கு சென்றாலும் அந்தப  பாதுகாப்பு வீரர்கள் அவர்களோடுகூடவே செல்வார்கள். பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அந்தப் பிரபலமானவரை தொடவோ துப்புறுத்தவோ முயன்றால் கைதுசெய்வார்கள் அல்லது தேவைப்பட்டால் சுட்டுக்கொல்லவும் செய்வார்கள்.

ஆம், அந்தப்பாதுகாப்பு வீரர்கள் பராக்கிரமசாலிகளாய் அவர்களோடு இருக்கின்றார்கள். இதனைவிட அதிகமாக  கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு அவருக்கேற்ற வாழ்க்கை வாழும் ஒவ்வொவருவரையும் தேவன் பாதுகாக்கின்றார். காரணம், நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு விலையேறப்பெற்றவர்கள்.  எனவேதான் நாம் வாசிக்கின்றோம்,  "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2: 8) என்று. நமது கண்களை யாராவது சேதப்படுத்த விடுவோமா? அதுபோல தேவனது கண்மணியைப்போல இருக்கும் நம்மை அவர் நிச்சயமாக  சேதமடைய விடமாட்டார். 

நமது முன்னாள் பாரத பிரதமர்  இந்திரா காந்தி அவர்களது  உயிருக்கு நாட்டினுள்ளும் வெளியிலும் எதிரிகள் பலர் இருந்தனர். எனவே மிகப்பெரிய பாதுகாப்பு வளையம் அவரைச்சுற்றிலும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவரது பாதுகாப்புக்கு அரணாக இருந்தனர். ஆனால் ஐயோ, யாரும் எதிர்பாராதவிதமாக அந்தப் பாதுகாப்பு வீரனில் ஒருவனே அவரைச் சுட்டுக்கொன்றான். ஆம் அன்பானவர்களே, கர்த்தரது பாதுகாப்பு இப்படிபட்டப் பாதுகாப்பல்ல; அது நிரந்தர பாதுகாப்பு. அவர் நம்மை ஏமாற்றமாட்டார். எனவே நாம் இந்த உலக எதிரிகளைக்கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. 

மட்டுமல்ல, "என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. நாம் கிறிஸ்துவுக்குள் வாழும்போது நமக்கு எதிரிடையாக வருபவர்களை அவரே பார்த்து ஏற்ற பலனை அவர்களுக்குக் கொடுப்பார்; நமக்கோ ஆறுதலைக் கொடுப்பார். இதனையே, அப்போஸ்தலராகிய பவுல், "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." (2 தெசலோனிக்கேயர் 1: 6) என்று கூறுகின்றார். 

மேலும், கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் நம்மோடு இருக்கிறார், எனவே நம்மால் அவரது கிருபையால் எதனையும் செய்யமுடியும். "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4: 13) என்று பவுல் அப்போஸ்தலர் கூறவில்லையா?

கர்த்தரது இந்தப் பாதுகாப்பு நமக்கு எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, பாவத்திலிருந்தும் விடுதலை அளிக்கின்றது. அதுதான் தேவனது கிருபை. ஆம், கர்த்தர் பராக்கிரமசாலியாக இருந்து பாவத்திலிருந்தும் நமக்கு முழு விடுதலையைத் தருவார். எனவேதான், "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது." ( ரோமர் 6: 14) என்று தேவ வசனம் கூறுகின்றது. 

எனவே நமது ஆவிக்குரிய வாழ்வைத் தைரியத்தோடு எதிர்கொள்வோம். உலக எதிரிகளோ பாவமோ நம்மை மேற்கொள்ள முடியாது. பராக்கிரமசாலியான கர்த்தர் நம்மோடு இருக்கின்றார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,567
'ஆதவன்' 💚மே 23, 2025. 💚 வெள்ளிக்கிழமை

"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." (1 தீமோத்தேயு 5: 24)

இந்த உலகத்தில் துன்மார்க்கமாய் வாழ்ந்து கொடூரமான பாவச் செயல்கள் செய்யும் பலர் இந்த உலகத்தின் நீதிமன்றங்களால் தண்டனைகள் பெறுவதைப் பார்க்கின்றோம். தூக்குதண்டனை ஆயுள்தண்டனை என அவர்கள் செய்த பாவத்துக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இப்படிச்  சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து தேவன் இறுதிநாளில் வழங்கவிருக்கும்  நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; மேலும் தேவனே அவர்களுக்கு இந்த உலகினில் ஏற்ற தண்டனையை வழங்குவார். 

ஆனால் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்" என்று. ஆம்  எல்லோரும் தங்கள் செய்த கொடூர பாவங்களுக்கான தண்டனையை இந்த உலகத்தில் அனுபவிப்பதில்லை. பலர் தங்களது பணத்தின் பலத்தால் உலக நீதிமன்றங்களின் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் நிரந்தரமாகத் தப்பித்துக்கொள்வதில்லை.  அவர்களது பாவங்கள் அவர்களது ஆத்துமாவைப் பின்தொடர்ந்து சென்று அவர்களை இருளான நரக அக்கினிக்குள் கொண்டுசெல்லும். 

மேலும், தேவ பக்தியுள்ளவர்களை சோதனைகளிலிருந்து இரட்சிக்கும் அதே தேவன் சிலவேளைகளில் துன்மார்க்கர்களுக்கு இந்த உலகத்தில்  உடனேயே தண்டனை வழங்குவதில்லை. இதனையே, "கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்." (2 பேதுரு 2: 9)  என வாசிக்கின்றோம். அதாவது அவர் அந்தத் துன்மார்க்கரை இறுதி நியாயத்தீர்ப்பு நாளுக்கென்று ஒதுக்கி வைத்திருக்கின்றார். அப்போது அவர்களுக்கான தண்டனையை வழங்குவார். 

இந்த உலகத்தில் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப தக்க பதில் தேவனால் சரிகட்டப்படுவது உறுதி. ஆனால் தேவனது நியாயத்தீர்ப்புகள் உலக நீதிபதிகள் வழங்குவதுபோன்ற தீர்ப்பல்ல. அவரது நியாயத்தீர்ப்புகள்  சத்தியமும் நீதியுமானவைகள்.  "பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16: 7) என்று அப்போஸ்தலரான யோவான் தான் கண்ட தரிசனத்தில் கேட்டதாகக்   கூறுகின்றார். 

தேவனது நியாயத்தீர்ப்புக்கள் இரக்கம் அன்பு இவைகளின் அடிப்படையில் மனிதர்களை நியாயம்தீர்ப்பவை. "ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்." ( யாக்கோபு 2: 13)

தவறாமல் ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்துகொண்டாலும், பல்வேறு பிரசங்கங்களைக் கேட்டாலும் பல கிறிஸ்தவர்களும் எந்தவித வாழ்க்கை மாற்றமுமின்றி  இருக்கின்றனர்.  வேதம் கூறும் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு இவைகளைக்குறித்து முழு நம்பிக்கை அவர்களுக்கு இருப்பதில்லை என்பதையே இது காட்டுகின்றது. பவுல் உருவாக்கிய எபேசு சபையில்கூட பலர் இப்படியே இருந்தனர். அவர்களை அவர் துஷ்ட மிருகங்கள் என்று கூறுகின்றார். அவர்களுக்குத் தான் போராடி சுவிசேஷத்தை அறிவித்தும் அவர்கள் அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.  

"நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?" (1 கொரிந்தியர் 15: 32) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, தேவன் வழங்கும் நியாயத்தீர்ப்பு பொய்யல்ல; அது உறுதியான உண்மை. எனவே,  நமது பாவங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழங்கப்போகும் இறுதி நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளுமுன்னும் அல்லது நாம் மரித்து அவை நம்மைத் தொடருமுன்னும் கிறிஸ்துவின் இரத்தத்தால் அவை கழுவப்படுமாறு வேண்டுதல் செய்வோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,568
'ஆதவன்' 💚மே 24, 2025. 💚 சனிக்கிழமை

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12: 48)

ஒருவரை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளிவிடுதல் என்பது மிகப்பெரிய அவமானமாகும். நாம் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்ச்சிக்குச் சிறப்பாக ஆடையணிந்து செல்லும்போது அங்கிருக்கும் காவலர்கள் நம்மை அவமதித்து உள்ளேசெல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டால் அது நமக்கு எத்தனை பெரிய அவமானமாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள்!!. அப்படியே பிதாவினால் அனுப்பப்பட்டு உலகிற்கு வந்த கிறிஸ்து உலகத்தால் ஏற்றுக்கொள்ளாமல் தள்ளப்பட்டார். 

தனது சொந்த யூத மக்கள் மத்தியில் அவர் வந்திருந்தும் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.  "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." ( யோவான் 1: 11) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான யோவான். ஆம், இயேசு கிறிஸ்துவை யூதர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவமானப்படுத்தினர். இயேசு கிறிஸ்து தனது வாழ்வின் இறுதியில் பாடுகள்பட்டபோது மட்டுமல்ல,  அவரது வாழ்வின் பல வேளைகளில் இப்படி அவமானப்பட்டார். 

இயேசு கூறிய சத்தியத்தை யூதர்கள் ஏற்றுகொள்ளத் தயங்கினார்கள். அவர் கூறிய சத்தியத்தை நம்புவதைவிட அவர் எங்கிருந்து வந்தவர் என்பதையே அவர்கள்   முக்கியமாகப் பார்த்தனர்.  "இவன்  தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?" (மத்தேயு 13:55) என்றனர். 

தான் கூறுவதை மக்கள் விசுவாசிக்கவேண்டும் என்று அவர் பல்வேறு அற்புதங்களை செய்தார். ஆனாலும்,  "அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை." (யோவான் 12:37)

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." என்று. நியாயத்தீர்ப்புநாளின் நாம் யாரும் அவரது வார்தையைப் புறக்கணித்ததைக் குறித்து சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. ஆம் அன்பானவர்களே, நமக்குக் கொடுக்கப்பட்ட இந்த உலக வாழ்வின் நாட்களில் அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

இயேசு கிறிஸ்து தனக்குப்பின் தனது சீடர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார். அப்போது அவர்களுக்குச் சொன்னார், "உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்." ( மத்தேயு 10: 40) இப்போது கிறிஸ்துவால் அழைக்கப்பட்ட ஊழியர்கள் அவர் அறிவித்த நற்செய்தியை அறிவித்துவருகின்றனர். 

எனவே, நாம் கிறிஸ்துவின் நற்செய்தி வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கும்போது அவருக்கு மட்டுமல்ல, அவரை உலகிற்கு அனுப்பிய பிதாவாகிய தேவனுக்குச் செவிகொடுக்கிறோம். அவற்றை புறக்கணிக்கும்போது கிறிஸ்துவையும் பிதாவையும் புறக்கணிக்கின்றோம். அப்படிப் புறக்கணிப்பவர்களை  அவர் சொன்ன வசனமே  கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

கிறிஸ்துவின்  வார்த்தைகளை ஏற்றுக்கொள்வது என்பது வெறுமனே அவரது வார்த்தைகளை கேட்பதையல்ல, மாறாக அவற்றை நமது வாழ்வில் செயல்படுத்துவதையேக்  குறிக்கின்றது. "அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதன்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்" (யாக்கோபு 1: 22, 23)

அன்பானவர்களே, உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாயும் இருங்கள் என்கிறார் யாக்கோபு. காரணம், தேவ வசனத்தைப் புறக்கணிப்பது அவரைப் புறக்கணிப்பது மட்டுமல்ல, நம்மை நாமே வஞ்சிப்பது போன்றது. அப்படி கிறிஸ்துவின் வசனத்தைப்  புறக்கணிப்பவனை அவரது அதே வசனமே  கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  எனவே எச்சரிக்கையாக இருப்போம்; தேவ வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,569
'ஆதவன்' 💚மே 25, 2025. 💚 ஞாயிற்றுக்கிழமை

"உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14: 17)

உலக அறிவோ, பொது அறிவோ இல்லாத அறிவிலி ஒருவன் இருந்தான். அவனுக்குத் தற்செயலாக சிறிது வெளிநாட்டு பணம் கிடைத்தது. அவனோ அதனை  அச்சிடப்பட்ட வெறும் காகிதம் என நினைத்துத்  தீயிலிட்டு எரித்துவிட்டான். ஆம், இதுபோல ஒரு பொருளின் மதிப்போ அதனை எப்படிப் பயன்படுத்துவது எனும் அறிவோ இல்லாத ஒருவனிடம் அந்தப்பொருளை நாம் கொடுப்போமானால் அவனுக்கு அதன் பயன் தெரியாது; அவன் அதனைப் பெரிதாக கருதவுமாட்டான்.  அத்தகையவனிடம் அந்தப்பொருளைக் கொடுப்பதே வீண். இதுபோலவே  தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைப்பற்றிய அறிவோ தேடுதலோ இல்லாதவனிடம் தேவன் ஆவியானவரை,  அவரது வரங்களைக்   கொடுப்பதில்லை. 

இதனையே இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,  "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது" என்று கூறுகின்றார். ஆனால் தேவன் அவருக்கேற்ற வாழ்க்கை வாழும் மக்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுகின்றார்.  அவர் அவர்களுக்குள்ளேயே இருக்கின்றார். எனவே, அத்தகைய ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள் தங்களுக்குள் இருக்கும் ஆவியானவரை அறிந்துகொள்வார்கள். இதனையே இன்றைய தியான வசனத்தில் தொடர்ந்து அவர், "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்று கூறுகின்றார். 

இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளேயே சில சபைகளில் ஆவியானவரைக்குறித்து அதிகம் பேசுவதில்லை. அது தேவையில்லாத போதனை என்று எண்ணுகின்றனர். ஆனால், என்றைக்காவது ஜெபக்கூட்டங்கள் நடத்தும்போது மட்டும் ஆவியானவரைப்பற்றி பேசுகின்றனர். அல்லது சிலவேளைகளில் கூட்டங்களோ, கட்டிட திறப்புவிழாக்களோ நடத்தும்போது முதலில் பெயரளவுக்கு ஆவியானவர் பற்றிய ஒருபாடலைப் பாடுகின்றனர். மற்றபடி அவர்கள் ஆவியானவருக்கு மதிப்போ முக்கியத்துவமோ கொடுப்பதில்லை.

இதுபோல நமது தேவைக்கும் கடமையாகவும்  ஆவியானவரை பயன்படுத்திட நாம் முயலுவோமானால் நம்மைவிட பரிதபிக்கத்தக்கவர்கள் இருக்கமுடியாது. தேவைக்குப் பயன்படுத்தி தூக்கியெறிந்துவிடக்கூடிய அற்பமானவரல்ல பரிசுத்த ஆவியானவர். நமக்குள் அவரை நமக்குள் வாழ வரவேற்கும் வாஞ்சை நமக்கு வேண்டும். அவரைக் கனம்பண்ண வேண்டும்; அவரது வார்த்தைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவரது வழிநடத்துதலின்படி ஆவிக்குரிய வாழ்வைத் தொடரவேண்டும். 

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16: 13) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம், ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழ்வதுதான் ஆவிக்குரிய வாழ்வு. 

இப்படி ஆவியானவரால் நடத்தப்படுபவர்களே கடவுளின் மக்கள். "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." ( ரோமர் 8: 14) என எழுதுகின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஆம் அன்பானவர்களே பரிசுத்த ஆவியானவரை நாம் வாஞ்சிக்கவேண்டும். நமது கிறிஸ்த வாழ்வின் அஸ்திபார பலமே ஆவியானவர் நமக்குள் வருவதுதான். நமது ஆவிக்குரிய வாழ்வு தேவனுக்கேற்றதாக அமைந்திட ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்குத் தேவையாக இருக்கின்றது. இந்த அறிவும் ஆர்வமும் உள்ளவர்கள்தான் ஆவிக்குரிய மக்கள். தேவன் இத்தகைய ஆர்வமுள்ளவர்களைத் தேடுகின்றார். அவர்களுக்குத் தனது ஆவியானவரை வழங்க ஆர்வமுள்ளவராக இருக்கின்றார். அவர் நமக்குள் வரும்போது இயேசு கூறியபடி, அவர் நமக்குள்ளே வாசம்பண்ணி நமக்குள்ளே இருப்பதால், நாம்  தேவனை மேலும் அறிந்துகொள்வோம். 

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறதுபோல நாம் இருக்கலாகாது. நமது ஜெபங்களில் நம்மை ஆவியானவர் நிரப்பி வழிநடத்திட அன்றாடம் ஜெபிப்போம். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்க ளாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."  (ரோமர் 8:9) என்று எச்சரித்துக் கூறுகின்றது வேதம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,570
'ஆதவன்' 💚மே 26, 2025. 💚 திங்கள்கிழமை

"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்." ( சங்கீதம் 126: 5)

விவசாயம் பற்றித் தெரிந்தவர்கள் விவசாயிகளின் தொழில் சிரமங்களைக்குறித்தும் அறிந்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் விவசாயம் பெரிய லாபகரமான தொழிலாக இல்லை. விதை விதைக்கும் காலத்துக்குமுன்பே விவசாயிகள் பல்வேறு செலவுகளை செய்யவேண்டியதிருக்கின்றது. நிலத்தை உழுதுச் சீர்படுத்தி, உரமிட்டு பக்குவப்படுத்தவேண்டியுள்ளது. மேலும் விதைகளை வாங்கவேண்டியது, கூலிகொடுக்கவேண்டியது என பல்வேறு செலவினங்கள் உள்ளன. செலவை ஈடுகட்டத் தனது மனைவி பிள்ளைகளின் நகைகளை அடகுவைத்து அல்லது தெரிந்தவர்களிடம் கடன்வாங்கி செலவுகளைச் சமாளிக்கின்றான் விவசாயி. 

ஆனால் அந்த விவசாயி இவை அனைத்தையும், தான் விதைக்கும் விதை முளைத்து தனக்கு ஏற்ற பலனைத் தரும் எனும்  எதிர்காலத்தைக்குறித்த ஒரு நம்பிக்கையோடு  செய்கின்றான். அப்போது அவன் மகிழ்ச்சியோடு அல்ல, பல்வேறு சிரமத்தோடு இருப்பதால் உள்ளத்தின் கண்ணீரோடு விதைக்கின்றான். 

ஆனால் அதே விவசாயி அறுவடைநாளில் மகிழ்ச்சியடைகின்றான். நமது நாட்டில் அறுவடைத் திருநாள் எனும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது அதனால்தான். தான் விதைத்தபோது இருந்த துன்பத்தை அவன் மறந்துவிடுகின்றான். இதனையே இன்றைய தியான வசனத்தின் தொடர்ச்சியாக நாம் வாசிக்கின்றோம், "அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்." ( சங்கீதம் 126: 6) என்று. 

ஆவிக்குரிய வாழ்வும் இத்தகையதுதான். நாம் இங்கு மேலே பார்த்த விவசாயியைப்போலவே இன்று நம்மில் பலரும்  கண்ணீரோடு விதைத்துக்கொண்டிருக்கலாம். பல்வேறு கண்ணீர்கள், கவலைகள் நம்மை வாட்டிக்கொண்டிருக்கலாம். தீராத கொடிய நோய்கள், கடன் தொல்லைகள், வேலையில்லாமை, அதன் தொடர்ச்சியான வறுமை, நமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நிச்சயமில்லாமை.... இப்படிப்பல பிரச்சனைகள் நம்மைக் கண்ணீரோடு விதைக்கிறவர்களாக இன்று மாற்றியிருக்கலாம். 

ஆனால் அன்பானவர்களே, அந்த விவசாயி எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையோடு இருந்ததுபோல நாம் நம்பிக்கைவைக்க நமக்கு ஒரு தேவன் உண்டு. எனவே, நாமும் நமது பிரச்சனைகளை தேவனுக்குமுன் விதைத்துக் காத்திருப்போம். விதைக்கும் காலம் உண்டென்றால் நிச்சயமாக அறுவடை மகிழ்சியும் நமக்கு உண்டு.  இயேசு கிறிஸ்து தனது வார்த்தைகளை விவசாயி விதை விதைப்பதற்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.  "சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது." ( மத்தேயு 13: 8) என்று கூறுகின்றார். ஆம், தேவ வார்த்தைகள் வல்லமையுள்ளவை, பலன் தருபவை. 

நாம் இன்று பல்வேறு உலகக் கவலைகளோடு கண்ணீரோடு விதைத்துக்கொண்டிருந்தாலும் தேவனது வார்த்தைகளை நமது உள்ளத்தில் விதைத்துப் பதியவைப்போம்.  விதைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு விதைப்பதைப்போல தேவன்மேல் நம்பிக்கையோடு நமது ஜெபங்களை விதைத்துக் காத்திருப்போம். நிச்சயமாக தேவன் நம்மைக் கெம்பீரத்தோடு அறுவடை செய்பவர்களாக மாற்றுவார். 

அந்த அறுவடையின் பலன் நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் இருக்கும். ஒருகாலத்தில் "நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்." ( ஏசாயா 60: 15) என்கிறார் தேவனாகிய கர்த்தர். ஆம், கண்ணீரோடு விதைக்கும் நமது விதைகள் பயனற்றதாய்ப் போகாது; கெம்பீரமான அறுவடை நமக்கு உண்டு. 

வேதாகமத் தியானம் - எண்:- 1,571
'ஆதவன்' 💚மே 27, 2025. 💚 செவ்வாய்க்கிழமை

"தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136: 16)

சங்கீத புத்தகத்திலுள்ள 136 வது சங்கீதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது துதியின் சங்கீதமாகும். தேவனது வல்லமை, மகத்துவம், கிருபை  இவற்றை எண்ணி ஒவ்வொரு காரியமாக கர்த்தரைத் துதித்துப் பாடுவதுதான் இந்தச் சங்கீதத்தின் சிறப்பு. 

கானானை நோக்கிய இஸ்ரவேலரின் விடுதலைப் பயணம் ஒரு வனாந்தர பயணமாகும். அந்தப் பயணத்தில் தேவன் பல்வேறு வல்லமையான செயல்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகச் செய்து தனது உடனிருப்பை அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் அவர்கள் அனைவரும் அவரை முழுமனதாக விசுவாசிக்கவில்லை. தேவன் அதனைப் பெரிதுபடுத்தாமல் தண்டனைகளைக் கொடுத்து இறுதியில் அவர்களைக் கானானுக்குள் கொண்டுசேர்த்தார். 

கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வாழ்வும் ஒரு வனாந்தர வாழ்வு போன்றதுதான். இதனை அப்போஸ்தலரான பவுலும் பர்னபாவும் தெளிவாக அறிந்திருந்தார்கள். எனவே தான் அந்தியோகியாவில் காலெறியுண்டு துரத்தப்பட்டபோதும் கலங்காமல், "சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்." (அப்போஸ்தலர் 14:22) என்று வாசிக்கின்றோம். 

இயேசு கிறிஸ்துவும், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் 16:33)  என்றுதான் கூறினார். ஆனால் நமது ஆவிக்குரிய வாழ்க்கை வனாந்தர பாதையாக இருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சியான கானான் உண்டு. காரணம் தேவனது கிருபை. இதனையே இன்றைய  தியான வசனத்தில், "தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." என்று வாசிக்கின்றோம். மேலும், இந்தச் சங்கீதத்தில் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136: 23)

ஆம் அன்பானவர்களே, நமது தேவன் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிப்பவராகவே இருக்கின்றார்.  "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." (யாக்கோபு 4:6)

எனவே, இந்தச் சங்கீதம் கூறுவதைப்போல இன்று நமது வாழ்க்கை தாழ்மையானதாக இருந்தாலும், வனாந்தரம்போன்ற பாடுகள் உள்ளதாக இருந்தாலும் நாம் அவரை முறுமுறுக்காமல் துதித்துக்கொண்டிருப்போம். தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்திய அவர், நம்மையும் இந்த வனாந்தர வாழ்வில் நடத்தி இனிமையான எதிர்காலத்தை நமக்குத் தருவார். 

மட்டுமல்ல அன்பானவர்களே, இந்த 136 வது சங்கீதத்தை உண்மையான மனத்துடன் ஆர்வமுடன் வாசித்துத் தியானிப்போம். அப்போது ஒவ்வொரு வசனமும் நமக்குத்  தேவனைப்பற்றிய அறிவையும் வல்லமையையும் உணர்த்துவதைக்  கண்டுகொள்ளலாம். அது நமது விசுவாசம் வலுப்பெற்றிட உதவுவதாகவும் இருக்கும். வனாந்தர வாழ்க்கைக்குறித்து முறுமுறுக்கவேண்டாம்; மாறாக வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

வேதாகமத் தியானம் - எண்:- 1,572
'ஆதவன்' 💚மே 28, 2025. 💚 புதன்கிழமை

"கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." ( ரோமர் 1: 16)

நாம் கிறிஸ்துவை அறியாத பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்த வாழ்க்கைக்கும் கிறிஸ்துவை அறிந்தபின்னர் நாம் வாழும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அது நம்முடன் வாழ்ந்த மக்களுக்கு விசித்திரமாகத் தெரியும்.  அவர்கள் நம்மைக் கேலிகூடச் செய்யலாம். "என்ன, இவன் / இவள் இத்தனைநாள் இல்லாதவகையில் திடீரென்று வித்தியாச காரியங்களைச் செய்கிறான்/ள்" என்று எண்ணுவார்கள். 

இதுபோலவே, பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்துவைப் போதித்த சீடர்களையும் கிறிஸ்துவை விசுவாசித்த விசுவாசிகளையும் துன்புறுத்தியவர். சபைகளைப் பாழாக்கிக்கொண்டிருந்தவர். "சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 3) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இப்போது அந்தப் பவுல் தலைகீழாக மாறிவிட்டார்.  பவுலோடு செயல்பட்ட அவரது பழைய நண்பர்களுக்கு பவுலின் இந்த மனமாற்றம் வேடிக்கையாக இருந்தது. அவர்கள் அவரைக் கேலி செய்திருக்கலாம். ஆனால் அவர் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பெலனைக் கண்டுகொண்டவர். எனவேதான் கூறுகின்றார், "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்;  விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." என்று. 

இதே அனுபவம் எனது வாழ்க்கையிலும் நடந்தது. இடதுசாரி கம்யூனிச  சித்தாந்தத்துக்கு அடிமையாகி இடதுசாரி மாதப் பத்திரிகையில் பணியாற்றியவன்  நான். அப்போது கிறிஸ்தவ ஊழியர்களை "நச்சு வியாபாரிகள்" என்று கிண்டல்செய்து கதையொன்று எழுதியிருந்தேன்.  அது பலரின் பாராட்டினைப் பெற்றிருந்தது. ஆனால் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் எனது பழைய நண்பர்கள், "ஜியோ,  நீயும் நஞ்சு விற்க ஆரம்பித்துவிட்டாயா?" என்று  கிண்டல் செய்தனர். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பலம் இதுதான். இன்று நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் மாறுதலடைந்த பல்வேறு சாட்சிகளைக் கேட்கமுடிகின்றது. கிறிஸ்துவின் ஊழியர்களைக் கொலைசெய்தவர்கள், கிறிஸ்தவ ஆலயங்களைச்  சேதப்படுத்தியவர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியாளர்களைத் தங்கள் கிராமத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து விரட்டியவர்கள் என்று பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ்கின்றனர். 

பெயரளவுக்கு கிறிஸ்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இன்றைய தியான வசனத்தை அப்போஸ்தலரான பவுல் எழுதிய மெய்யான பொருள் புரியாமலிருக்கலாம். "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து ஏன் வெட்கப்படவேண்டும்?" என்று அவர்கள் எண்ணலாம். ஆனால் அப்போஸ்தலரான பவுல் கூறுவது அவரது உள்ளத்தின் வேதனையின் குரல். கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்பட்டு பின்னர் அவரது அன்பால் ஈர்க்கப்பட்டு நற்செய்தியை அறிவிக்கும்போது கிறிஸ்துவின் முகத்தைப்பார்த்து ஜெபிக்கவே வெட்கமாக இருக்காதா? ஆனால் நான் கிறிஸ்துவின் பிள்ளை ஆகிவிட்டதால் இனி அப்படி வெட்கபடமாட்டேன் என்கின்றார் பவுல்.

நமது பாவங்கள் மெய்யாகவே மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவை நாம் அறிந்துகொண்டோமானால் நமது பழைய பாவ வாழ்க்கை நமக்கு வெட்கத்தை உண்டாக்கும். நண்பர்கள் கேலி செய்யலாம். ஆனால் கிறிஸ்து நமது தகப்பனும் தாயும், நண்பனுமாக மாறிவிடுவதால் அந்த வெட்கத்தை நாம் தொடரவிடமாட்டோம். அப்போது நாமும் "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்;  விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." என்று உணர்ந்து அவரது நற்செய்தியை மற்றவர்களுக்கும் அறிவிப்போம். அது மற்றவர்களும் கிறிஸ்துவை அறிந்திட தேவ பெலனுள்ளதாக இருக்கும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,573
'ஆதவன்' 💚மே 29, 2025. 💚 வியாழக்கிழமை

"நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்." ( மீகா 7: 15)

இன்று நமது வாழ்க்கைப்பாதை கடினமான ஒன்றாக, பல்வேறு துன்பங்கள், துயரங்கள், நோய்கள் நிறைந்ததாக இருக்கலாம். "கடவுளாய்ப்பார்த்து ஏதாவது அதிசயம் செய்தாலொழிய எனது வாழ்வில் எந்த மாறுதலும் ஏற்படப்போவதில்லை" என்று எண்ணி விரக்தியில் சோர்ந்து போயிருக்கலாம். அப்படிச் சோர்ந்துபோய் மனம்நொந்துபோய் இருக்கும் நம்மைப்பார்த்துத்  தேவன் கூறுகின்றார், "மகனே, மகளே நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்." 

எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கிப் பயணமானபோது அவர்களது வழிப்பயணம் வனாந்தர பயணமாகவே இருந்தது. ஆனால் தேவன் பல்வேறு அதிசயங்கள் மூலம் அவர்களை உற்சாகப்படுத்தி வழிநடத்தினார். அக்கினித்தூணினாலும் மேகத்தூணினாலும் இரவும் பகலும் வழிநடத்தியது (யாத்திராகமம் 13:21), செங்கடலைப் பிளந்து வழியுண்டாக்கி மக்களை பார்வோனது கைகளுக்குத்  தப்புவித்தது (யாத்திராகமம் 14: 21, 22), வனாந்தரத்தில் இறைச்சியை உண்ணக்கொடுத்தது (யாத்திராகமம் 16: 13), கற்பாறையிலிருந்து குடிநீரை மக்களுக்குக் கொடுத்தது (யாத்திராகமம் 17: 6), தூதர்களது உணவான மன்னாவை மக்கள் உண்ணக்கொடுத்தது (சங்கீதம் 78: 25) ......எனப் பல்வேறு அதிசயங்கள் செய்தார் தேவன். 

அன்பான மகனே, மகளே நீ வாழ்ந்துகொண்டிருக்கும் எகிப்து வாழ்க்கையைவிட்டு வெளியேற விரும்பி முயலுவாயானால் உனது துன்பங்களிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை தருவேன்; எகிப்து தேசத்திலிருந்து  இஸ்ரவேலர் புறப்பட்டபோது அவர்களுக்கு நடந்ததுபோலவே உனக்கும் அதிசயங்களைச் செய்வேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். ஆம் அன்பானவர்களே, மேலும் "கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்" (யோசுவா 5:9) நமது வாழ்வில் ஏற்படும் நிந்தைகளையும் அதுபோலவே புரட்டிப் போடுவார். 

புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நமக்கு எகிப்து என்பது பாவ அடிமைத்தனதிலிருந்து வெளியேறுவதைக் குறிக்கின்றது. அன்று மோசே இஸ்ரவேலரை எகிப்தியரின் பிடியிலிருந்து விடுவித்தார். இன்றோ, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவத்தின் பிடியிலிருந்து நம்மை விடுகின்றார். 

எனவே, எகிப்து வாழ்வைவிட்டு வெளியேறும்போது, தொடர்ந்த தோல்விகள், வாழ்க்கைப் போராட்டங்கள், வியாதிகள் இவற்றை தேவன் மாற்றிப்போடுவார்.  மட்டுமல்ல, நாம்  வெளியேறும்போது பாவம் அதன் தொடர்ச்சியான ஆத்தும மரணம் இவைகளுக்கும் நாம் விடுதலை பெறுகின்றோம். எப்படியெனில் அப்போது நாம் கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணத்துக்குள் வருகின்றோம். 

இதனையே "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

ஆம் அன்பானவர்களே, நாம் நமது பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மன்னிக்கப்படும்போது  நமது தனி வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதுடன் நமது பிரச்சனைகளிலிருந்தும் அதிசயமான விடுதலை ஏற்படும். நம்மால் நம்பமுடியாத காரியங்கள் நமது வாழ்வில் நடைபெறுவதை நாம் காண்போம். இதனையே, "நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்." என்று இன்றைய தியானவசனத்தின்மூலம் தேவன் நம்மோடு பேசுகின்றார். 

நாம் செய்த தேவனுக்கு எதிரான பாவ காரியங்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து அவற்றை அறிக்கையிட்டு அவை அனைத்தும் கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்படும்படி கண்ணீரோடு வேண்டுதல் செய்வோம். அப்போது அவர் அவற்றை மன்னித்து நம்மைப் பாவத்திலிருந்து  விடுவிப்பார். இப்படி நாம் எகிப்து எனும் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும்போது, இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே நம்மையும் அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் என்கிறார் கர்த்தர். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,574
'ஆதவன்' 💚மே 30, 2025. 💚 வெள்ளிக்கிழமை

"உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்." ( சங்கீதம் 119: 148)

ஆவிக்குரிய வாழ்வின் ஒரு அனுபவத்தை இன்றைய தியானத்தில் நாம் பார்க்கின்றோம். தேவன்மேல் மெய்யான அன்பு ஏற்படும்போது நம்மையறியாமல் நமது ஆத்துமா விழித்துக்கொள்ளும். அதிகாலை நேரங்களில் மட்டுமல்ல, நள்ளிரவு நேரங்களிலும் தேவனைநோக்கி நம்மால் வேண்டுதல்செய்ய ஆர்வமுண்டாகும். 

நாம் உலக ஆசீர்வாதங்களையே நாடி தேவனிடம் வருவோமானால் இந்த அனுபவம் நிச்சயமாக நமக்கு ஏற்படாது. அதாவது இது ஒரு மெய்யான காதல் அனுபவம் போன்றது. ஒரு காதலனோ காதலியோ தங்களது அன்புக்குரியவர்களை நினைப்பதற்கு எப்படி நேரமோ சூழ்நிலையோ தடையாக இருக்காதோ அதுபோலவே தேவன்மேல் நாம் மெய்யான அன்பு கொள்ளும்போது நாம் தேவ வார்த்தைகளைத் தியானிக்கவும் அவரிடம் விண்ணப்பிக்கவும் காலமும் சூழ்நிலையும் தடையாக இருக்காது. 

தேவனிடம் ஜெபிப்பதற்கு ஆவிக்குரிய மனிதனுக்கு கடிகாரத்தில் அலாரம் வைத்து ஜெபிக்கவேண்டியது அவசியமில்லை. நாம் மூச்சுவிடுவது எப்படி இயற்கையானதோ அதுபோலவே அது இயற்கையாக நிகழும் ஒரு அற்புத அனுபவமாக இருக்கும். 

யூதாவின் வனாந்தரங்களில் அலைந்து திரிந்தபோதும்கூட தாவீது இப்படித்  தேவனை இரவுநேரங்களிலும் தேடுபவராக இருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார்,  "என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63: 6)

ஏசாயா தீர்க்கத்தரசியும்  இதே அனுபவத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார். "என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்." ( ஏசாயா 26: 9)

நாம் தேவனிடம் அன்புகூருவது மெய்யானால் நாமும் இதுபோல இராச்சாமங்களில் அவரைத் தேடுபவர்களாகவும், தேவனைத் துதிப்பவர்களாகவும்,  வேண்டுதல் செய்பவர்களாகவும் இருப்போம். இதற்கு மாறாக உலக காரியங்களுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் தேடுவோமென்றால் நமக்கு வசதியான நேரங்களில் மட்டும் அவரைத் தேடுபவர்களாக இருப்போம். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இப்படியே பிதாவைநோக்கி ஜெபிப்பவராக இருந்தார். "அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்." ( மாற்கு 1: 35) என்று வாசிக்கின்றோம். இந்த வசனத்தில் அதிகாலை, இருட்டு, வனாந்தரம் என மூன்று காரியங்கள் கூறப்பட்டுள்ளன. ஆம், பிதாவின்மேலுள்ள பற்றுதலால் இயேசு இவைகளை மேற்கொண்டு பிதாவை நோக்கி ஜெபித்தார். 

ஆம் அன்பானவர்களே, இந்த தியானத்தில் நாம் ஏற்கெனவே பார்த்தபடி இது நாமாக கடினப்பட்டு முயலவேண்டிய ஒரு காரியமல்ல, தேவனிடம் நாம் மெய்யான அன்புகொள்ளும்போது இது இயற்கையாக நமது வாழ்வில் நடக்கும் காரியமாக இருக்கும். வேதத்தில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களது அனுபவம் இதுவே. தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வத்துடன் அவரைத் தேடும்போது நமது வாழ்வில் இது இயற்கையாக நடைபெறும். 

"என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்." ( நீதிமொழிகள் 8: 17) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,575
'ஆதவன்' 💚மே 31, 2025. 💚 சனிக்கிழமை

"ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர்வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது." (1 தெசலோனிக்கேயர் 2: 13)

இன்று மனிதர்களில் பலரும் விசித்திர எண்ணமுடையவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலான மனிதர்கள் வேதாகமத்திலுள்ள தேவ வசனங்களை யாராவது பிரசங்கிக்கவோ அல்லது தேவ வசனங்களைக் குறித்து எழுதவோ செய்தால் அந்த வசனம் கூறும் உண்மையினைப் பாராமல் யார் அதனைக் கூறுகின்றார்கள் என்றுதான் பார்க்கின்றனர்.  இதனைக் கூறும் இவர் எந்தச் சபைப்பிரிவைச் சார்ந்தவர் என்பதை அறிந்திட முயல்கின்றனர். மேலும், ஒரே வசனத்தை   அதனைக் கூறும் ஊழியர்களின் பிரபலத்தைவைத்தே முக்கியமாக அல்லது முக்கியமற்றதாகக்  கருதுகின்றனர். 

ஆனால் அப்போஸ்தலரான பவுல் பிரசங்கித்த தெசலோனிக்கேயே சபை விசுவாசிகள் அப்படியில்லாமல் தேவ வசனத்தை தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டனர். அப்போஸ்தலரான பவுல் கூறியதால் அல்ல; மாறாக, அது தேவனது வார்த்தை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர்.  அதனையே அவர், "நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர்வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்" என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, பல்வேறு ஊழியர்கள் தேவ வசனங்களைப் பிரசங்கிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் நாம் எடைபோட்டு அதன் அடிப்படையில் தேவ வசனங்களை நாம் ஏற்றுக்கொள்வோமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாக மாறிவிடுவோம். ஒருமுறை நான் நண்பர் ஒருவரிடம் பிரபலமான ஒரு ஊழியர் பிரசங்கித்தபோது அவர் கூறிய ஒரு தகவலைக் கூறத் துவங்கினேன்.  உடனே அவர் நான் சொல்வதைக் கேட்பதற்குமுன்னே, "அவன் கிடக்கிறான், இடியட் ...... அவன் சொன்னதைப் பற்றி என்னிடம் சொல்லவேண்டாம்" என்று என்னைத் தடுத்துவிட்டார். 

இதுபோலவே இன்று பலரும் இருக்கின்றனர். ஒருவர் கூறுவது சத்தியமா இல்லையா என்று பாராமல் கூறுவது எந்த சபைப் பிரிவைச் சார்ந்தவர் என்றே பார்க்கின்றனர். இன்று அப்போஸ்தலரான பவுல் கூறுவது தெசலோனிக்கேயே சபை விசுவாசிகள் தேவ வசனத்தை  மனுஷர்வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டார்கள்,   அப்படி ஏற்றுக்கொண்டதால், விசுவாசிக்கிற அந்த மக்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது என்கின்றார். 

சபை வைராக்கியம்கொண்டு பிரிவினை சபை என்று மற்ற சபைகளை அற்பமாகக் கூறிவந்த ஒரு பாரம்பரிய சபையைச்சார்ந்த சகோதரனும் சகோதரியும் தங்கள் மகனுக்குக் கொடிய நோய்வந்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலைவந்தபோது,  அவர்கள் பிரிவினை சபை என்று குறைகூறிய சபையின் போதகர்களை தங்கள் மகனுக்காக ஜெபம் செய்ய அழைத்தனர். அப்படி ஒரு போதகர் வந்து ஜெபித்தபோது அவர்களது மகன் குணமும் அடைந்தான். 

அன்பானவர்களே, தேவவசனத்தை யார் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனம் நமக்கு வேண்டும். காரணம் அது  மனிதர்களது வசனமல்ல, மாறாக தேவவசனமாகவே இருக்கின்றது. அதனை ஏற்றுக்கொள்ளும்போது  விசுவாசிக்கிற மக்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.

சபைவெறி, ஊழியர்கள்மேல் தனிப்பட்ட வெறுப்புணவு போன்ற குணங்களோடு தேவ வசனங்களை நாம் ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ளுவோமானால் நமக்குரிய ஆசீர்வாதங்களை இழந்தவர்களாக மாறிவிடுவோம். தேவ வசனங்களை தேவ வசனமாகவே ஏற்றுக்கொள்வோம். அப்போது விசுவாசிக்கிற நமக்குள்ளே அது பெலன் செய்யும்.