Wednesday, June 28, 2023

காணாமல்போன ஆடு

ஆதவன் 🔥 884🌻 ஜூன் 30, 2023 வெள்ளிக்கிழமை


"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." ( சங்கீதம் 25 : 8 )

நமது தேவன் பாவத்தை வெறுக்கிறாரேத் தவிர பாவிகளை நேசிக்கிறார். பாவிகள் அழிந்து நரக அக்கினிக்கு நேராகச் செல்வது தேவனது விருப்பமல்ல. அவர் நல்லவரும் உத்தமருமாய் இருக்கிறபடியால் பல்வேறு வழிகளில் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அவர்கள் தங்கள் பாவ வழியைவிட்டு மனம்திரும்பி வரவேண்டுமென்று காத்திருக்கின்றார். அப்படி பாவிகள் மனம் திரும்பும்போது மகிழ்ச்சியடைகின்றார். 

இதனையே இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். "உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 12, 13 )

மனிதர்கள் தங்கள் சுய செயல்பாடுகளால் தேவனைவிட்டுத் தடம் மாறிச் செல்லும்போது தேவன் பல்வேறு விதங்களில் அவர்களோடு இடைப்படுகின்றார். தோல்விகள், பிரச்சனைகள் இவைகள் மனிதர்கள் தங்களை நிதானித்துப் பார்க்கத்  தேவன் கொடுக்கும் சந்தர்ப்பங்கள். சில வேளைகளில் வழி விலகும்போது தனது ஊழியர்களைக்கொண்டு சரியான வழியினைக் காட்டுகின்றார். ஆனால் பல மனிதர்கள் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. 

ஆனால், கர்த்தரது குரலுக்குச் செவிகொடுக்கும்போது அதாவது கர்த்தரைக்குறித்த பயம் உள்ளத்தில் ஒருவனுக்கு ஏற்படும்போது அவனுக்குச் சரியான வழியைக் காட்டுகின்றார். இதனையே தாவீது, "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்." ( சங்கீதம் 25 : 12 ) என்று கூறுகின்றார். 

ஆணடவரது இரண்டாம் வருகை ஏன் தாமதிக்கின்றது என்பதைக் கூறவரும்போது அப்போஸ்தலரான பேதுரு, "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )

ஆம், கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறபடியால் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று நீடிய பொறுமையோடிருக்கின்றார். 

"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." எனும் வசனம் தாவீது தனது அனுபவத்தில் கண்டது.  பத்சேபாளிடம் விபச்சாரப் பாவத்தில் விழுந்து அதன் தொடர்ச்சியாக கொலை செய்தார். கர்த்தர் நல்லவரும் உத்தமருமாய் இருந்ததால் நாந்தான் தீர்க்கதரிசி மூலம் அவருக்கு வழியைத்  தெரிவித்தார். 

அன்பானவர்களே, சிலவேளைகளில் நமது வாழ்க்கையிலும் நாம் வழி தவறலாம். அப்படி வழி தவறும்போது கர்த்தர் பல்வேறு விதங்களில் நம்மை உணர்த்துவார். அந்தச் சத்தத்துக்கு நாம் செவிகொடுக்க வேண்டும். நமது வழிகள் தவறு என்றால் திருத்திக்கொள்ளவேண்டும். அப்போது கிறிஸ்து கூறியதுபோல  சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது (பாவமே செய்யாத) ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், நம்மைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, June 27, 2023

நமது சமாதானம் நதியைப்போல இருக்கும்.

ஆதவன் 🔥 883🌻 ஜூன் 29, 2023 வியாழக்கிழமை

"ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்." ( ஏசாயா 48 : 18 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் பழைய ஏற்பாட்டு அடிப்படையில் சொல்லப்பட்ட வசனமாக இருந்தாலும் நாம் புதிய ஏற்பாட்டுக்கால மக்கள் ஆனதால் கிறிஸ்துவின் கிருபையின் உபதேசத்துக்கு உட்பட்டவர்கள். எனவே கிறிஸ்துவின் அன்புக் கட்டளைகளைக் கைக்கொள்ளும்போது இந்த வசனம் நமது வாழ்வில் உறுதிப்படும். 

பழைய ஏற்பாட்டில் மோசே மூலம் தேவன் பல கட்டளைகளை இஸ்ரவேல் மக்களுக்கு அளித்திருந்தார். பத்துக்கட்டளைகளைத்தவிர சிறியதும் பெரியதுமான கட்டளைகளை நாம் மோசேயின் கட்டளைகளில் பார்க்கின்றோம். வேத அறிஞர்கள் அவற்றைக் கணக்கிட்டு 613 கட்டளைகள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் இவ்வளவு கட்டளைகள் இருந்தும் அவை மனிதர்களை நல்வழிப்படுத்தக் கூடாதவைகளாகவே இருந்தன. 

இந்த 613 கட்டளைகளையும் இயேசு கிறிஸ்து இரண்டே கட்டளைகளுக்குள் அடக்கிவிட்டார். "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்." ( கலாத்தியர் 5 : 14 ) நியாயப்பிரமாணம் முழுவதும் இந்த இரண்டு கட்டளைகளுக்குள் அடங்கிவிடுகின்றது. 

கட்டளைகளால் கூடாததை தனது கிருபையால் செய்துமுடிக்கவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார்.  "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். 

பழைய ஏற்பாட்டுப் பரிசேயர்கள், கட்டளைகளுக்கு முன்னுரிமை கொடுத்தனரேத்  தவிர அன்பையும், நீதியையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர். இயேசு கிறிஸ்து கூறினார்,  "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்" ( மத்தேயு 23 : 23 )

ஆம், நீதியானது கட்டளைகளைக் கடைபிடிப்பதால் வருவதில்லை. அப்படி கட்டளைகளால் நீதி வருமானால் மோசேயின் கட்டளைகளே போதுமாக இருந்திருக்கும். கிறிஸ்து உலகினில் வந்து பாடுபடத் தேவையே இருந்திருக்காது. மோசேயின் கட்டளைகள் போதுமானவையாக இல்லாததால்தான்  கிறிஸ்து வந்தார். இதனையே, "நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

எனவே நாம் கிறிஸ்து கூறிய "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக"  என்கிற ஒரே  வார்த்தையான கட்டளைக்குக் கீழ்படியும்போது நியாயப் பிராமண கட்டளைகள் அனைத்தையும் நம்மையறியாமலே நிறைவேற்றி விடுகின்றோம். இப்படி நிறைவேற்றும்போது இன்றைய வசனம் கூறுவதுபோல, நமது சமாதானம் நதியைப்போலும், நமது நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். அதாவது நமது சமாதானம்  நதியைப்போல அகன்று நீண்ட ஒன்றாகவும் கடல் அலையானது எப்படி முடிவின்றி, ஓய்வின்றி இருக்கின்றதோ அதுபோல முடிவற்ற நீதியாக  இருக்கும்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, June 26, 2023

பண ஆசை அல்லது பொருளாசை

ஆதவன் 🔥 882🌻 ஜூன் 28, 2023 புதன்கிழமை

"என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்." ( சங்கீதம் 119 : 36 )

பணம் சம்பாதித்தல் என்பது வேறு, பொருளாசை என்பது வேறு. நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு பணம், உலகப் பொருட்கள் தேவையாக இருக்கின்றன. எனவே இவற்றை சம்பாதிக்க நாம் உழைக்கவேண்டியது அவசியம். "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே." ( 2 தெசலோனிக்கேயர் 3 : 10 ) என்கிறார் பவுல் அடிகள். எனவே நாம் உழைத்து சம்பாதித்து உண்ணவேண்டியது அவசியம். 

ஆனால், பொருளாசை என்பது வேறு. மேலும் மேலும் பொருள் சேர்க்கும் ஆசையில் சிலர் குடும்பம், சக உறவுகள், இவற்றைவிட பணத்தையும் பொருட்களையும் இச்சித்து மனிதர்களுக்குத் துரோகம் செய்து, அல்லது ஏமாற்றி இரவும் பகலும் பணத்தையும் சொத்து சுகங்களையும் எண்ணி வெறிகொண்டு அலைவதைக் குறிக்கின்றது. 

இத்தகைய மனிதர்கள் நல்லவர்களாக இருக்கமுடியாது. பணம் சம்பாதிக்கவேண்டி என்னென்ன தீய வழிகள் உண்டோ  அந்த வழிகளிலெல்லாம் முயலத் தயங்கமாட்டார்கள். நாம் பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கும்போது இது புரியும். பல அநியாய காரியங்களான  திருட்டு, கொலை, விபச்சாரம், வேசித்தனம், போன்ற செயல்களின் பின்னணியில் இருப்பது பண ஆசை அல்லது பொருளாசை.  எனவேதான் வேதம் கூறுகின்றது, "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்."  ( 1 தீமோத்தேயு 6 : 10 )

ஆம், மேற்படி வசனம் கூறுகின்றது, சாதாரண மக்கள் மட்டுமல்ல விசுவாச வாழ்க்கை வாழும் பலர் கூட பொருளாசை அல்லது பண ஆசையால் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுகின்றார்கள். அப்படி விசுவாசத்தை விட்டு விலகும் மக்கள் பின்பு அதனால் வரும் வேதனைகளால் காலம் முழுவதும் அவஸ்தைப்படுகின்றனர். 

பொருளாசைபற்றி இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல ." ( லுூக்கா 12 : 15 ) ஆம், எவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தாலும் அவை ஒரு மனிதனை நரகத்துக்குத் தப்புவிக்காது. அது அவனுக்கு ஜீவனல்ல; அது ஆத்தும மரணமே. நித்திய நரக அக்கினிக்குநேராக அது நம்மைக் கொண்டு சென்றுவிடும்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." ( 1 கொரிந்தியர் 6 : 10 ) என்று கூறுகின்றார். இதனாலேயே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் சங்கீத ஆசிரியர் தேவனே,   "என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்." ( சங்கீதம் 119 : 36 ) என்று ஜெபிக்கின்றார். 

இந்த ஜெபத்தையே நாமும் ஜெபிக்கவேண்டியது அவசியம். நாம் பணத்தையல்ல, தேவனுடைய பரிசுத்த சாட்சிகளின் - புனிதர்களின் வாழ்க்கை வழிகளைச் சார்ந்துகொள்ளும்படி வேண்டுதல் செய்யவேண்டும். அப்போது தேவனுடைய ஆவியானவர் அப்படி ஒரு வாழ்க்கை வாழ  நமக்கு உதவிடுவார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

தேவனே விருப்பத்தையும் செய்கையையும் நம்மில் உண்டாக்குகிறார்.

ஆதவன் 🔥 881🌻 ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமை

"மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." ( நீதிமொழிகள் 19 : 21 )

பொதுவாக மனிதர்களாகிய நாம் அனைவருமே நமது எதிர்காலம், நமது குழந்தைகளது எதிர்காலம், நமது  தொழில், வேலைவாய்ப்புகள் இவைகுறித்து பல்வேறு எண்ணங்களைக் கொண்டுள்ளோம். நாம் சிந்திப்பது எல்லாமே நமது நன்மைக்காகவே. எனவே நாம் எப்போதும் நமக்கு நல்லதே நடக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். யாரும் தங்களது வாழ்வு அல்லது தங்கள் குழந்தைகளின் வாழ்வு மோசமானதாகப் போகவேண்டுமென்று எண்ணுவதில்லை.  

நாம் நமக்குரிய வருமானத்தில் என்னவெல்லாம் செய்யலாமென்று திட்டமிடுகின்றோம். ஆனால் அவை பொதுவாக நாம் எண்ணியபடி எப்போதுமே நிறைவேறுவதில்லை. எதிர்பாராத செலவினங்கள் நமது திட்டத்தை மாற்றியமைக்க வைத்துவிடுகின்றன. இதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்." என்று. நாம் எண்ணுவதும் திட்டமிடுவதுமல்ல, கர்த்தரது எண்ணமே நமது வாழ்வில் நிறைவேறும்.

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." ( யாக்கோபு 4 : 13, 14 ) என்கின்றார். 

அதற்காக நாம் திட்டமிடுவதோ, எதிர்காலத்தைக்குறித்து சிந்திப்பதோ கூடாது என்று பொருளல்ல. யாக்கோபு அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4 : 15 ) சில ஆவிக்குரிய மனிதர்கள் இப்படிக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். " பிரதர், கார்தருக்குச் சித்தமானால் நாம் அடுத்த வாரத்தில் ஒருநாள் கூடி இதுகுறித்து பேசுவோம்" என்பார்கள். 

மேலும் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையும்போது, தேவனோடுள்ள நமது தொடர்பு அதிகரிக்கும்போது அவரே நமது உள்ளத்தில் சில விருப்பங்களைத் தோன்றச்செய்வார். அல்லது நம்மை ஒரு செயலைச் செய்யும்படித் தூண்டுவார். அத்தகையைச் செயல்களை நாம் செய்யும்போது அவை வெற்றியாக முடிவடையும். அதாவது பல்வேறு விதங்களில் மனித அறிவால் சிந்தித்துத் திட்டமிடுவதுபோலல்ல இது. திடீரென்று நமக்குள் தோன்றும் ஒரு விருப்பம்.  அதை செய்வதற்கான பெலன். இதுவே தேவன் நடத்துவது.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்." ( பிலிப்பியர் 2 : 13 ) என்று கூறுகின்றார். தேவனே நம்மில் இந்த விருப்பத்தையும் செயலையும் செய்வதால் நாம் எளிதாக அந்தச் செயலைச் செய்துமுடித்துவிடுவோம். 

எனவே அன்பானவர்களே, நமது சிந்தனை செயல்கள் அனைத்தையும் தேவனே ஆளும்படி அவரிடம் ஒப்படைத்திடுவோம். நமது இருதயத்தின் எண்ணங்கள் பலவாக இருந்தாலும் அது தேவனுக்கு உகந்ததாக அவரது யோசனையாகவும் இருக்குமானால் அது நமது வாழ்வில் நிச்சயம் நிறைவேறும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, June 25, 2023

யார் என்னை விடுதலையாக்குவார்?

ஆதவன் 🔥 880🌻 ஜூன் 26, 2023 திங்கள்கிழமை

"ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்." ( ரோமர் 7 : 21 )

நல்லவர்களாக வாழவேண்டும் எனும் எண்ணம் பொதுவாக எல்லோருக்குமே இருக்கின்றது. அதனால்தான் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் அல்லது பிறந்தநாட்களிலும் பலரும் ஏதாவது தீய செயலை விட்டுவிடவேண்டுமென்று எண்ணி முடிவெடுக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்த நண்பரொருவர் கடந்த பத்து ஆண்டுகளாக, "இந்தப் புத்தாண்டுமுதல் குடியை விட்டுவிடப்போகிறேன் என்று முடிவெடுத்துள்ளேன்" என்று கூறிக்கொண்டிருகிறார். அவரது அந்த முடிவின்படி ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள் மட்டுமே குடிக்காமல் இருக்கிறார். 

சென்றமுறை இரண்டு மாதங்கள் குடிக்காமல் இருந்தார்.  பிறகு திடீரென்று குடித்துவிட்டு வந்துவிட்டார். அவரிடம் கேட்டால், "எனது மச்சினன் மகன் திருமணம் போன வாரம் நடந்தது. அப்போது ஒரு சந்தோஷத்துக்காகக்  குடித்தேன். இப்போ பழையபடி கதை தொடருகிறது" என்கிறார்.  அன்பானவர்களே, இதுபோல பல கெட்டச்  செயல்களைப் பலரும் விட்டுவிட நினைக்கின்றனர். ஆனால் அவர்களால் அது முடிவதில்லை. காரணம் நன்மைசெய்ய விரும்புகிற அவர்களிடம் தீமையென்ற ஒரு பிரமாணம் இருக்கின்றது

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது." ( ரோமர் 7 : 23 ) பவுல் அடிகள் குடியைக்குறித்து இப்படிச் சொல்லவில்லை. மாறாக, தேவனுக்கேற்ற பரிசுத்தமாக வாழவேண்டும் என எண்ணும் அவரிடம் அப்படி வாழ ஏதோ தடையாக இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.  

எனவே அவர் கூறுகின்றார், "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?" ( ரோமர் 7 : 24 )

அன்பானவர்களே, பவுல் அடிகள் ஏங்குவதைப்போல ஒரு ஏக்கம் நமக்கு வேண்டும். இந்தப் பாவப் பழக்கவழக்கத்திலிருந்து என்னை யார் விடுவிப்பார்? கட்டளைகள் நம்மை விடுதலையாக்காது. கட்டளைகள் எது பாவம் எது பாவமல்ல என்பதைகூறுமே தவிர அவை நம்மை விடுதலை ஆக்க மாட்டாது. மாறாக, கர்த்தரது ஆவியானவரின் பிரமாணத்துக்குள் நாம் வரும்போது மட்டுமே நமக்கு விடுதலைக் கிடைக்கும். ஆம், எனவேதான் "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார் பவுல் அடிகள். 

அன்பானவர்களே, பாவத்திலிருந்து விடுதலை பெற நமது சுய பலத்தால் முடியாது. பாவத்திலிருந்து விடுபடவேண்டும் எனும் ஆசையோடு நம்மை தேவனுடைய ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்படி தேவ ஆவியானவர் நம்மை நடத்தும்போதுதான் நாம் நமது உடல் பலயீனங்களை மேற்கொள்ள முடியும்.

"தேவனுடைய ஆவி உங்களில்  வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட் பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) ஆம்,  நாம் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்த ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்படி தேவனுடைய ஆவி நம்மில் வாசமாயிருந்தால், நாம்  மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குரியவர்களாக இருப்போம். அப்போதுதான் நம்மால் பாவத்தை மேற்கொண்டு ஆவிக்குரிய மேலான வாழ்க்கை வாழ முடியும்.
 
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, June 24, 2023

தேவ நீதியில் வாழ ஒப்புக்கொடுப்போம்!!

ஆதவன் 🔥 879🌻 ஜூன் 25, 2023 ஞாயிற்றுக்கிழமை


"நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்." ( நீதிமொழிகள் 4 : 18, 19 )

காலையில் கிழக்கில் உதிக்கும் சூரியன் நடுப்பகல்வரை வெளிச்சம் அதிகரித்து அதிகரித்து வரும். மதியத்துக்குப்பின்போ ஒளிமங்கி மங்கி கடைசியில் இருள் சூழ்ந்துகொள்ளும். எனவேதான் இன்றைய வசனம் நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கும் சூரியன் ஒளிபோல இருக்கின்றது என்று கூறுகின்றது. பாதை என்று இங்குக் குறிப்பிடப்படுவது அவர்களது வாழ்க்கை.   

மட்டுமல்ல, உலகமே இருளில் மூழ்கினாலும்,  அல்லது நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களது வாழ்க்கை இருள் சூழ்ந்ததாக இருந்தாலும் நம்மை அவர் வித்தியாப்படுத்திக் காட்டுவார்.  நீதியின் சூரியனான கிறிஸ்துவை ஒளி நம்மேல் ஒளிரும். இதனை, "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்." ( ஏசாயா 60 : 2, 3 ) என்று வேதத்தில் வாசிக்கலாம். 

ஆம், வெளிச்சத்தைச் சார்ந்த மக்களாக வாழும்போது நம்மை நாம் பிறருக்கு வெளிச்சம்போட்டுக் காட்டத் தேவையில்லை. தானாகவே மக்கள் நமது ஒளியை உணர்ந்துகொள்வார்கள். நம்மைத் தேடி வருவார்கள்.  இதனைத்தான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) என்று.
 
இப்படி நாம் வெளிச்சத்தின் மக்களாக வாழ்வது நமக்கு மட்டுமல்ல, அது பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்துவதாகவும் இருக்கும். "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." ( மத்தேயு 5 : 16 ) அதாவது, நமது ஒளியுள்ள வாழ்கையினைக்  கண்டு மற்றவர்கள் பிதாவாகிய தேவனை அறிந்துகொண்டு அவரை மகிமைப்படுத்துவார்கள். 

இன்றைய வசனத்தின் பிற்பகுதி துன்மார்க்கர்களது வாழ்கையினைக் குறித்துக் கூறுகின்றது. அவர்கள் நல்ல செழிப்பான வாழ்க்கை வாழ்வதுபோல உலகுக்குத் தெரிவார்கள். ஆனால் அவர்களது பாதை (வாழ்க்கை) தேவனுக்குமுன் காரிருளைப்போலிருப்பதால் தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள். இருளான பகுதிகளில் கிடக்கும் கற்கள், முள், பள்ளங்கள் இவை கண்ணுக்குத் தெரிவதில்லை. எனவே அவர்கள் இடறுகின்றனர். 

அன்பானவர்களே, ஒரு நீதியுள்ள வாழ்க்கை வாழ நம்மைத் தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். வெறும் உலக நீதியல்ல; பரிசுத்த ஆவியின் நீதி பாதையில் நடக்க நம்மை ஒப்புக்கொடுப்போம். ஏனெனில் உலகத்தின் நீதியெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64 : 6 )

தேவ நீதியில் வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது நமது பாதை (வாழ்க்கை) நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, June 22, 2023

பொறுமை வேண்டியதாயிருக்கிறது!

ஆதவன் 🔥 878🌻 ஜூன் 24, 2023 சனிக்கிழமை

"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 )

நான் சந்திக்கும் சிலர் என்னிடம் சிலவேளைகளில் கூறுவது, "என்ன பிரதர், எத்தனை வருஷமாய் ஜெபிக்கிறேன், ஒண்ணும் நடக்கமாட்டேன்கிறது. உண்மையிலேயே ஆண்டவர் நான் ஜெபிப்பதைக் கேட்கிறாரா என்றே சந்தேகமாயிருக்கிறது ...."  

பொதுவாக நாம் அனைவருமே நமது ஜெபத்துக்குத் தேவன் உடனடியாகப் பதிலளிக்கவேண்டுமென்று எண்ணுகின்றோம். ஆனால், தேவனது சித்தத்துக்கு நாம் பொறுமையோடு காத்திருப்பதில்லை. அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது உடலிலிருந்த ஒரு நோய்க்காக (உடலில் இருந்த முள் என்று அதனைக் கூறுகின்றார்) மூன்று முறை ஜெபித்தார். அதனை, "அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்." ( 2 கொரிந்தியர் 12 : 8 ) என்று கூறுகின்றார். 

அதாவது முதலில் அதற்காக ஜெபித்திருப்பார், தேவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மீண்டும் இரண்டாம் முறையாக ஜெபித்தார். அப்போதும் எந்த பதிலையும் தேவன் கொடுக்கவில்லை. மீண்டும் மூன்றாம் முறையாக ஜெபித்தார். ஆனால் தேவன் அவரது நோயினை குணமாக்காமல், "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று பதில் கூறிவிட்டார். இப்படி தேவன் தரும் எதிர்மறையான பதிலையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். 

அன்பானவர்களே, பவுல் அடிகளுக்கு தேவன் அவரது ஊழியத்தைக்குறித்து வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருந்தார். அதுபோல நமக்கும் தேவன் ஒருவேளை சில வாக்குறுதிகளைத் தனிப்பட்ட முறையில் தந்திருக்கலாம். அல்லது வேதாகமத்திலுள்ள வாக்குறுதிகளை நாம் விசுவாசித்து ஜெபிக்கலாம். ஆனால் தேவனது பதிலைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டியது அவசியம். இதனையே, "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வசனத்தில் முதற்பகுதியில் "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து" என்ற வார்த்தைகள் வருவதை நாம் கவனிக்கவேண்டும். வெறுமனே ஜெபிப்பதல்ல, அவருடைய சித்தத்தின்படி நமது செயல்கள் இருக்கவேண்டியது அவசியம். அப்படி தேவ சித்தத்தின்படி செய்து பொறுமையோடு காத்திருக்கவேண்டும் என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.

நாம் சோர்ந்துபோகாமல் எப்போதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதற்காக இயேசு கிறிஸ்து,   தேவனுக்குப் பணியாதவனும் மனிதரை மதிக்காதவனுமான அநீதியுள்ள ஒரு நீதிபதியைக் குறித்த உவமையைக் கூறினார். அந்த உவமையின் இறுதியில்  அவன் தன்னிடம் முறையிட்ட பெண்ணுக்கு நீதிவழங்குகின்றான். இந்த உவமையைக் கூறிய இயேசு கிறிஸ்து இறுதியில் கூறுகின்றார், "அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

அன்பானவர்களே, சோர்ந்துபோகவேண்டாம்.  நிச்சயமாக நமது ஜெபத்துக்குத் தேவன் பதிலளிப்பார். ஆனால், தேவ பதிலையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு பொறுமை நமக்கு வேண்டியதாயிருக்கிறது.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Wednesday, June 21, 2023

அவரோடேகூட மரிக்கும்படி போவோம்

ஆதவன் 🔥 877🌻 ஜூன் 23, 2023 வெள்ளிக்கிழமை

"அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றார்."( யோவான் 11 : 16 )


கிறிஸ்துவோடுகூட சாகவும் துணிந்த அப்போஸ்தலரான தோமாவின் விசுவாச அறிக்கைதான் இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

யூதேயாவிலுள்ள பெத்தானியா ஊர் மார்த்தா, மரியா, லாசர் குடும்பத்தின்மேல் இயேசு தனி அன்பு கொண்டிருந்தார். லாசர் பெரிய வியாதியுற்று மரணத்திற்கு ஏதுவான நிலையிலிருந்தான். இயேசு கிறிஸ்து தனது சீடர்களோடு யோர்தானுக்கு மறுகரையில் இருந்தார். அப்போது லாசரின் சகோதரிகள் இயேசுவுக்கு ஆளனுப்பி விபரத்தைக் கூறி தங்களிடம் வருமாறு அழைத்தனர். ஆனால் இயேசு கிறிஸ்து உடனேயே புறப்படாமல் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தினார். அதற்குள் லாசர் இறந்துவிட்டான். 

எனவே இயேசு கிறிஸ்து யூதேயாவுக்குச் செல்ல முடிவெடுத்தார். ஆனால் அதற்குமுன்புதான்   யூதேயாவிலிருந்த யூதர்கள்  அவர்மேல் கல்லெறிய முயன்றிருந்தனர். இயேசு கிறிஸ்து லாசர் இறந்ததை நேரடியாக சீடர்களிடம் கூறாமல் முதலில், அவன் நித்திரையடைந்திருக்கிறான் நான் எழுப்பப் போகின்றேன் என்று கூறினார். பின்னர் அவன் இறந்துவிட்டான் எனும்  உண்மையைக்கூறினார்.

சீடர்களெல்லாம் யூதேயாவுக்குச் செல்லப் பயந்தனர்.ஏனெனில் அங்கு சென்றால் யூதர்கள் அவர்மேல் கல்லெறிவார்கள், நாமும் கல்லடிபடவேண்டமென்று நினைத்தனர். ஆனால் அப்போஸ்தலரான தோமா இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து சாகவும் துணிந்து,  "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்"  என்று சகசீடர்களை அழைக்கின்றார். அதாவது தோமா, இயேசு கிறிஸ்து யூதர்களால்  கல்லடிபட்டுச் சாகப்போவது நிச்சயம் என்று நம்பினார். அனால் அப்படிச் செத்தால் நாமும் அவரோடுகூடச் சாவோம் வாருங்கள் என்று மற்றச் சீடர்களையும் அழைக்கின்றார்.  

அன்பானவர்களே, அங்கு இயேசு கிறிஸ்துவுடன் தலைமை அப்போஸ்தலர் பேதுரு, இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடரான யோவான், யாக்கோபு எல்லோரும் இருந்தனர். எவரும் கூறத்துணியாத வார்த்தைகளை அப்போஸ்தலரான தோமா கூறினார். அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவை அன்பு செய்தார். கிறிஸ்து இல்லாமல் வாழ்வதைவிட அவரோடுகூட சாவதுமேல் என்று உறுதிகொண்டார் என்பதையே இது காண்பிக்கின்றது. 

நாம் இன்று கிறிஸ்துவுக்காக சாகவும் தயாராக இருக்கவேண்டுமென்று நான் கூறவரவில்லை. ஆனால் அது மேலான இரத்தசாட்சிகளின் விருப்பமாக இருந்தது. இன்று குறைந்தபட்சம்,  கிறிஸ்து இல்லாத வாழ்க்கை நமக்கு வேண்டாம் எனும் முடிவாவது நாம் எடுக்கலாமல்லவா? கிறிஸ்து விரும்பாத  காரியங்களை நாம் செய்யும்போது கிறிஸ்துவைவிட்டு நாம் அந்நியமாகின்றோம். அதாவது அவர் நம்மோடு கூட வருவதையோ நாம் அவரோடு இருக்க வேண்டுமென்பதையோ நாம் விரும்பவில்லை என்பதே அதன் பொருள். 

இந்த வசனம் பாவத்துக்கு மரிக்கும் வாழ்க்கையையே இன்று குறிக்கின்றது. கிறிஸ்துவோடு பாவத்துக்கு மரித்த ஒரு வாழ்வோம். ஆம், அவரோடுகூட பாவத்துக்குச் சாவோம். கிறிஸ்துவுக்காக நாம் பாவத்துக்கு மரிக்கும்போது அவர் வரும்போது நம்மை அவருடனேகூட எழுப்புவார். தோமாவைப்போல நாமும் சொல்லுவோம், "அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்!!!"

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சி

ஆதவன் 🔥 876🌻 ஜூன் 22, 2023 வியாழக்கிழமை

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருஅவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்உன்  வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் - 37:4 & 5) 

பலரும் கர்த்தரிடம் விசுவாசமும் நம்பிக்கையுமாய் இருப்பது பெரும்பாலும் வாழ்வில் நல்லதே தொடர்ந்து நடக்கும்போதுதான்எதிர்மறையான வாழ்க்கை சூழல் ஏற்படும்போது பெரும்பாலும் பலரும் நிலை குலைந்து விடுகின்றனர்நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன்,    தேவனுக்கு ஏற்றபடிதான் வாழ்கின்றேன்எனக்கு ஏன் இந்தத் துன்பம்ஏன்    எனக்கு   மட்டும் பிரச்சனைமேல்   பிரச்னை வருகின்றது?   என தேவனையே கேள்விகேட்கத் துணிந்துவிடுகின்றனர்.

ஆனால்வேதாகம பக்தர்கள் பலரும் உயர்வோ தாழ்வோ வறுமையோ இல்லாமையே எதுவாக இருந்தாலும் கர்த்தரே போதும் என்று வாழ்ந்தனர்.  

ஆபகூக் தீர்க்கதரிசி "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும்திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும்ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும்வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும்கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும்தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்." (  ஆபகூக் 3 : 17, 18) என மகிழ்ச்சியுடன் கூறுகின்றார்.

கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிருத்தல் என்பது என்ன வந்தாலும் அவர்மேலுள்ள விசுவாசத்தில் குறைவுபடாமல் அவரையே நம்பி வாழ்வதுபக்தனான யோபு கூறுவதுபோல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய்   இருப்பேன்என்று துணிந்து நிற்பது.

அடுத்து இங்குக் கூறப்பட்டுள்ள இன்னொரு விஷயம்வெறும்  விசுவாசம் மட்டுமல்ல, 'உன்   வழியைக்   கர்த்தருக்கு   ஒப்புவித்துஎன்று கூறப்பட்டுள்ளபடி நமது வழிகள் கர்த்தரது  வழியாக இருக்கவேண்டியது அவசியம்.  நமது வாழ்வை அவரது வழியில் நடத்த ஒப்புவித்துவிடவேண்டும். மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது,  அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார் என்று  கூறப்பட்டுள்ளதுநமது இருதயத்தின் வேண்டுதல்கள் தேவனுக்கேற்றவேண்டுதல்களாக இருக்கவேண்டும்அப்போது அவர் அவற்றை      நிறைவேற்றுவார்அதற்குமேலும் நிறைவேற்றுவார்.

அன்பானவர்களேநான் இப்படிக் கூறுவது பலருக்கும் வெற்று  உபதேசம்போல இருக்கலாம்ஆனால் எனது அனுபவத்திலிருந்து கூறப்பட்டுள்ள  வார்த்தைகளே இவைஎனது ஆவிக்குரிய 30 வருட வாழ்வின்  அனுபவத்தில் கண்டு உணர்ந்தவை.  துன்பங்கள் வரும்போது மனது சோர்ந்துபோவது தவிர்க்கமுடியாததுநானும் மனம் சோர்ந்து  போயிருக்கிறேன். ஆனால் அவிசுவாசம் ஏற்பட்டதில்லை. ஒரு துன்பம் அல்லது பிரச்சனை ஏற்படும்போது விசுவாசமாய் இருக்கும்போது ஏதாவது ஒரு அற்புதமான காரியம் செய்து நாம் நமது விசுவாசத்தை விட்டுவிடாமலிருக்க அவர் உதவுவார். 

ஆம்,"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருஅவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்". தேவ வசனம் பொய்யாய் இராது. அவரது வார்த்தைகளெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) எனவே எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்போம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, June 20, 2023

மரணம் ஜெயமாக விழுங்கப்படும்.

ஆதவன் 🔥 875🌻 ஜூன் 21, 2023 புதன்கிழமை

"முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்." ( 1 கொரிந்தியர் 15 : 47 )

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய வசனத்தில் முதல் மனிதனாகிய ஆதாமையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பிட்டுச் சில விளக்கங்களைக் கூறுகின்றார். 

முந்தின மனிதனாகிய ஆதாம் தேவனால் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். அவனுக்கு மண்ணிற்குரிய ஆசையும் எண்ணங்களுமே  இருந்தன. எனவே அவன் அந்த மண்ணிற்குரிய ஆசை இச்சையினால் தேவனால் விலக்கப்பட்டக் கனியைச் சாப்பிட்டான். அதாவது நாம் ஆவிக்குரிய நிலையினை விடுத்து உலக ஆசைகளில் மூழ்கி இருப்பது ஆதாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒப்புமையாக இருக்கின்றது.  ஆனால், மேலான ஆவிக்குரிய எண்ணமுடையவர்களாய் வாழ்வது வானத்துக்குரிய கிறிஸ்து வாழ்ந்த வாழ்க்கை போன்றது.  

இதனையே, "மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." ( 1 கொரிந்தியர் 15 : 48 ) என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

நாம் இந்த உலக ஆசைகொண்டு நமது உடலுக்குரியவைகளையே தேடிக்கொண்டிருப்போமானால் நாம் தேவனுடைய அரசில் சேரமுடியாது. ஏனெனில் அழிவுள்ளவை அழிவில்லாத தேவனுடைய ராஜ்யத்தில் சேர்வதில்லை. "சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை." ( 1 கொரிந்தியர் 15 : 50 ) அழிவுள்ள உலக ஆசைகளையே நிறைவேற்றவேண்டுமென்று வாழ்பவர்கள் அழியாமையுள்ள தேவனுடைய அரசில் சேர்வதில்லை. 

எனவே நாம் இந்த உலகத்தில் அழிவில்லாத செல்வத்தைச் சேர்க்க முயலவேண்டும்.  "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். " ( 1 கொரிந்தியர் 15 : 53)

அன்பானவர்களே, நமது இலக்கு நித்தியஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு. ஆவிக்குரிய வாழ்வில் நாம் வெற்றிபெற்று நித்தியஜீவனைப் பெறுகின்றோம். அல்லது தோல்வியுற்று நித்திய நரகத்தினுள் செல்கின்றோம். மரணத்துக்குப்பின் நாம் அழிவுறாத நித்திய ஜீவனைப் பெறுவோமானால் மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று பொருள். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்." ( 1 கொரிந்தியர் 15 : 54 ) என்று கூறுகின்றார்.

நாம் பூமியிலிருந்துண்டான முந்தின மண்ணான ஆதாமைப்போல இல்லாமல் வானத்திலிருந்து வந்த  இரண்டாம் மனிதனாகிய  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்போல வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். எனவே முந்தின மனிதனது உலக இச்சையைப்போல அல்லாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்குமிடத்திலுள்ள மேலானவைகளையே தேடுவோம். அப்போது அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்;  நமது மரணம் ஜெயமாக விழுங்கப்படும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, June 19, 2023

அப்போஸ்தலரான யூதா கூறும் அறிவுரை

ஆதவன் 🔥 874🌻 ஜூன் 20, 2023 செவ்வாய்க்கிழமை



"நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 20, 21 )

அப்போஸ்தலரான யூதா தனது நிரூபத்தை பிதாவாகிய தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்துவினால் காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கும் எழுதுவதாக ஆரம்பிக்கின்றார்.  அதாவது கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு என்று பொருள். 

நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வினைச் சுதந்தரித்துக்கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறவேண்டும்; அதற்கு நாம் காத்திருக்கவேண்டும் என்கின்றார். எப்படி காத்திருப்பது என்பதற்கு மூன்று காரியங்களைக் கூறுகின்றார். 

1. விசுவாசத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் 
2. பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும்.
3. தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.

இங்கு, விசுவாசம் என்று வெறுமனே கூறாமல், மகா பரிசுத்தமான விசுவாசம் என்று கூறுகின்றார். அதாவது அசைக்கமுடியாத, கொஞ்சமும் குறைவில்லாத விசுவாசமுள்ளவர்களாய் நாம் இருக்கவேண்டும். உதாரணமாக, ஆபிரகாமைப் போன்ற விசுவாசம்  என்று கூறலாம். 

இரண்டாவது பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணவேண்டும். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். நாம் பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணும்போது உலக ஆசைத் தேவைகளை மட்டுமே வேண்டி நாம் ஜெபிக்கமாட்டோம். தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளிருந்து ஜெபங்களைத் தூண்டுவார். அப்படி ஆவிக்குரிய ஜெபம் செய்பவர்களாக நாம் இருக்கவேண்டும். 

மூன்றாவதாக, தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். தேவனுக்குச் சித்தமில்லாத காரியங்களை நம்மைவிட்டு அகற்றி அவரது மனம் மகிழும்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்; அப்படி வாழவேண்டும். இப்படி நாம் வாழும்போது நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தால் அவர்  வாக்களித்த நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வுக்குத் தகுதியாகின்றோம். அவரது அந்த இரக்கத்தைப் பெறுவதற்கு நாம் காத்திருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.

அன்பானவர்களே, இந்த மூன்று காரியங்களிலும் நாம் எப்படி இருக்கின்றோம்? நமது விசுவாசம், நமது ஜெபம், நமது ஆவிக்குரிய அன்றாட வாழ்க்கை இவை எப்படி இருக்கின்றன? வெறும் உலக காரியங்களையே நமது ஜெபங்களில் கேட்டு அவை கிடைக்குமென்று விசுவாசித்து வாழ்வதல்ல ஆவிக்குரிய வாழ்க்கை. 

அப்போஸ்தலரான யூதா கூறும் அறிவுரையின்படி நாம் வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். விசுவாசம், ஜெபம், தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொண்டு வாழும் ஆவிக்குரிய வாழ்க்கை இவைகளை நாம் கடைபிடித்துக் காத்திருக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாக்களித்த நித்தியஜீவனை அவர் நமக்குத் தந்தருள்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, June 18, 2023

தேவ சத்தத்தைக் கேட்க முடியும்.

 ஆதவன் 🔥 873🌻 ஜூன் 19, 2023 திங்கள்கிழமை

"சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 )


தான் இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்க ஒரு காரணத்தை இன்றைய வசனத்தில்  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது, உண்மைக்குச் சான்றுபகரவே நான் வந்தேன் என்கின்றார். 

வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று கூறியவர் தான் கூறியபடி சத்தியத்துக்குச் சான்று கூற இந்த உலகினில் வந்தார்.  சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்". ( யோவான் 18 : 37 ) என்று இயேசு கிறிஸ்து கூறியபோது, பிலாத்து அவரிடம் ," சத்தியம் என்றால் என்ன?" என்று கேட்டான். அவனுக்கு இயேசு கிறிஸ்து பதில் கூறவில்லை. 

சில காரியங்களை  வளர்ந்த மனிதர்களுக்கு ஒன்றுமறியாத சிறு பிள்ளைகளுக்கு விளக்குவதுபோல விளக்கம் கூறிக்கொண்டிருக்கமுடியாது. உதாரணமாக, ஒரு அறுபது வயது மனிதன் "பசும்பால் என்றால் என்ன?" என்றோ "எண்ணெய் எப்படி இருக்கும்?"  என்றோ கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம், அவனுக்கு விளக்கம்கூற முடியுமா?  அவன் பொய்யன் அல்லது அறிவிலி என்று அவனுக்குப் பதில் பேசாமல் இருப்பதே மேல். எனவேதான் உண்மை என்றால் என்ன என்பதை பொய்யிலேயே பிறந்து வளர்ந்த பிலாத்துவுக்கு இயேசு விளக்கவில்லை.  

ஆனால், தனது சீடர்களோடு அமர்ந்திருந்து ஜெபிக்கும்போது "உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) அதாவது, தேவனுடைய வார்த்தையே சத்தியம் என்று கூறி ஜெபித்தார். ஆம், உண்மையான அந்த தேவ வார்த்தைகளுக்குச் சான்றுகூற நான் வந்தேன் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

மேலும் இன்றைய வசனம் கூறுகின்றது, "சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்" என்று. அதாவது, நாம் உண்மையுள்ளவர்களாக வாழ்வோமானால் தேவ சத்தத்தைக் கேட்க முடியும். ஆம், உண்மையுள்ள எவனும் கேட்கமுடியும் என்கின்றார் இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே, நமது தேவன் ஊமையான ஒரு விக்கிரகமல்ல. இன்றும் பல்வேறு விதங்களில் தேவன் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மனிதர்களிடம் பேசுகின்றார். கனவுமூலமும் தரிசனங்கள் மூலமும், சிலவேளைகளில் மனிதர்கள் பேசுவதுபோல குரல்மூலமாகவும்  பேசுகின்றார். பலவேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது வசனங்களின்மூலம் பேசுகின்றார்.  ஆனால், அதனைக் கேட்கும் அறிவு நமக்கு வேண்டியது அவசியம். 

தேவன் நம்மோடு பேசி நம்மை நடத்தும் விதம் அதிசயமானது. ஆவிக்குரிய அனுபவமில்லாதவர்கள் இதனை நம்புவது அரிது. காரணம் ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவர்களால்தான் புரிந்துகொள்ளமுடியும்.    

"ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்."( 1 கொரிந்தியர் 2 : 14 ) ஆம், அன்று அப்போஸ்தலரான பவுல் அடிகளிடம் கிறிஸ்து பேசினார் என்பதை யூதர்கள் மட்டுமல்ல கொரிந்து சபை மக்களே நம்பவில்லை. எனவேதான் அவர் கூறுகின்றார், "கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்." ( 2 கொரிந்தியர் 13 : 3 )

அன்பானவர்களே, பிலாத்துவைப்போல இல்லாமல் இன்றைய வசனம் கூறுவதன்படி சத்தியத்தைக்குறித்து சாட்சிகொடுக்க உலகினில் வந்த கிறிஸ்துவை அறிய முயலுவோம். சத்தியத்தின்படி வாழ்வோம்; சத்தியவான்களாக வாழ்வோம். அப்போது கிறிஸ்து கூறியதுபோல அவரது சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப் பெறமுடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, June 17, 2023

தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்

ஆதவன் 🔥 872🌻 ஜூன் 18, 2023 ஞாயிற்றுக்கிழமை


"தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்." ( யோவான் 4 : 24 )

இன்றைய வசனம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் பேசும்போது குறிப்பிட்ட வசனமாகும்.  தேவனை ஆராதிக்க சடங்காச்சாரங்கள் தேவையில்லை.  வெறுமனே கூச்சலும் கூப்பாடும் தேவையில்லை.

வேதாகம அடிப்படையில் ஆவிக்குரிய ஆராதனை என்பது என்ன என்று முதலில் புரிந்துகொள்ளவேண்டும்; ஆவிக்குரிய ஆராதனை செய்யும் சபைகளுக்குச் செல்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்கள் பிற சபைகளைக் குறைகூறுவதற்குமுன் தாங்கள் உண்மையிலேயே ஆவிக்குரிய  ஆராதனை செய்கின்றோமா என்று எண்ணிப்பார்த்திடவேண்டும்.

ஆவியான தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். இதில் ஆவியோடு என்பதற்கு நாம் இரண்டு பொருள்கள் கொள்ளலாம். ஒன்று, நமது முழு ஆவியோடு தேவனை ஆராதிக்கவேண்டும் என்று பொருள்.  "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக" ( மத்தேயு 22 : 37 ) என்று நியாதிபதி ஒருவனுக்கு இயேசு பதில் கூறினார். இப்படி அன்புகூர்ந்து தேவனை ஆராதிக்கவேண்டும். 

ஆவியோடும் என்பதற்கு  பரிசுத்த ஆவியோடு என்றும்  பொருள் உண்டு. அதாவது நாம் தேவனை பரிசுத்த ஆவியோடு தொழுது கொள்ளவேண்டும். இங்குதான் பலரும் தவறுகின்றனர்.  துள்ளிக்குதித்து ஆராதிப்பதுதான் பரிசுத்த ஆவியோடு ஆராதிப்பது எனப் பலரும் புரிந்துகொண்டுள்ளனர்.  ஒருவரிடம் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதற்கு அலறுவது அடையாளமல்ல மாறாக, ஆவியின் கனிகள் அவரிடம் இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியின் கனிகள் உள்ளவனே பரிசுத்த ஆவியை உடையவன். அத்தகைய கனிகளுடன் தேவனை ஆராதிக்கவேண்டும். 

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கனிகளை உடையவனே பரிசுத்த ஆவியை உடையவன்.  

ஆண்டவர் இயேசு மேலும்  கூறினார், உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும்.  அதாவது, நமது வாழ்க்கையில் உண்மையாக நடந்து நாம் தேவனை ஆராதிக்கவேண்டும்.   உண்மை,  நேர்மையற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆராதிப்பது ஆவிக்குரிய ஆராதனையல்ல. மேலும், உண்மை என்பது தேவனது வார்த்தைகளைக் குறிக்கின்றது. "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17 : 17 ) என்றார் இயேசு கிறிஸ்து. எனவே தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்ந்து அவரை ஆராதிக்கவேண்டும். 

அன்பானவர்களே, தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க குறிப்பிட்ட சபைகளில் சென்றால்தான் முடியுமென்று எண்ணிவிடவேண்டாம். ஆவிக்குரிய ஆராதனைக்கு இதுவரைத் தவறான பொருள்கொண்டு தவறான வழிகளில் நடந்திருப்போமென்றால் நம்மைத் திருத்திக்கொள்வோம். ஆவியோடும் உண்மையோடும் தேவனை எங்கும் ஆராதிக்கலாம்.  

"நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 ) என்று கர்த்தராகிய இயேசு கூறவில்லையா? தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதித்து ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

சங்கீதம் 44: 6 / Psalm 44:6

  வேதாகமத் தியானம் - எண்:- 1,434 'ஆதவன்' 💚ஜனவரி 11 , 2025. 💚சனிக்கிழமை "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பத...