Thursday, April 04, 2024

ஜோதிடம், ஜாதகம், ராசி பார்த்தல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,152      💚 ஏப்ரல் 05, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களேஎன்று சொல்லிநீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்." ( எரேமியா 10 : 2 ) 

இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்  கூறிக்கொள்ளும் பலரும்கூட பிற மதத்தவர்களைப்போல  பல்வேறு நியமங்களைப் பார்க்கின்றனர். ஒரு குறிப்பிட்ட ஊருக்கு நான் சென்றிருந்தபோது அங்கு இருந்த பிரபல ஜோதிட நிலையத்திலிருந்து எனக்குத் தெரிந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவர் வெளிவந்தார். அவரிடம், "என்ன, நீங்க இங்கிருந்து வருகிறீர்கள்?"  என்றேன் ஆச்சரியத்துடன். அவர், "இதுல தப்பு என்னங்க இருக்கு?.....இங்கு வரும் மக்களில் பாதிபேர் கிறிஸ்தவர்கள்தான்" என்றார்.   

தங்களை ஆவிக்குரிய சபை மக்கள் என்று கூறிக்கொள்ளும் பலர்கூட தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் போன்ற  காரியங்களை நடத்தும்போது ராகுகாலம்நல்லநாள்அமாவாசைவளர்பிறை போன்ற காரியங்களைக்  கணக்குப்பார்த்து செயல்களை செய்கின்றனர். "பிள்ளைகளுடைய வாழ்க்கை பார்த்தீர்களா, அதனாலதான்" என்கின்றனர். அதாவது பிற மதத்தினர் செய்யும் இத்தகைய  செயல்கள் மனதளவில் தங்களைப் பாதித்துள்ளது என்பதனை  இவர்கள் இதன்மூலம் அறிக்கையிடுகின்றனர்.

வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களேஎன்று சொல்லிநீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள் என்று சொல்லப்படக் காரணம்நமது தேவன் வல்லமையில் பெரியவர்அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியுமே தவிர அவர்  உண்டாக்கின இந்த கிரகங்கள் தனது பிள்ளைகளின்மேல்  ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிக்கமாட்டார். "அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கிபூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்துவானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்." ( எரேமியா 10 : 12 )

எனக்கும் ஜாதகம் கணித்து எழுதி வைத்திருந்தனர். ஆனால் நான் கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கைக் கொண்டவனாக இருந்ததால் அதனை பெரிதுபடுத்தவில்லை; அதனைப் படித்துப் பார்த்ததுமில்லை. 1993 ஆம் ஆண்டு நான் கிறிஸ்துவை அறிந்துகொண்டபின்னர் வீட்டிலிருந்த அந்த ஜாதக புத்தகத்தை எடுத்து வெளியில் எறிந்துவிட கையில் எடுத்தேன். அப்போது ஒரு சின்ன ஆசை, 'நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம், நமது ராசி என்ன என்பதை ஒருமுறைப் பார்த்துவிட்டு இதனை வெளியில் எறியலாம்' என்று எனினேன். ஆனால், தேவனை எனக்குள் உணர்த்தினார், "எதனையும் பார்க்காதே, அதனை வெளியில் எறிந்துவிடு" என்று.

ஒருவேளை அன்று நான் அதனைப் பார்த்திருப்பேனானால் பத்திரிகைகளில் வரும் ராசிபலன்களைப்  பார்க்கும்போது என்னை அறியாமல் எனது ராசிக்கு என்ன பலன் போட்டிருக்கின்றது என்று பார்க்க முயலுவேன். இப்போது அந்தத் தொல்லை இல்லை. 

ஆம் அன்பானவர்களே, தேவன்   தனது  பிள்ளைகள்  தன்னை  நோக்கிப் பார்க்கவேண்டுமென  விரும்புவாரேத்   தவிர தான்  உண்டாக்கின பொருட்களை நோக்கிப்பார்க்கவேண்டுமென           விரும்புவதில்லைவானங்களும் அவற்றிலுள்ள அனைத்துமே  தேவனால் படைக்கப்பட்டவைநாம் அவைகளை நோக்கிப் பார்த்து பயப்படத் தேவையில்லை.

இந்தியாவின்மிகப்பெரிய ஜோசியர்களை நம்பிஜாதகம் கணித்து, அவர்கள்  கணித்துக் கூறியதைக் கேட்டுப்  பயந்து பல்வேறு  பரிகாரங்களைச் செய்து இறுதியில் அவலமாய் மரித்துப்போன பிரபல தமிழக அரசியல் தலைவரது வாழ்க்கை  நமக்குத் தெரியும்அதே நேரம் இத்தகைய எந்தச் செயல்பாட்டையும் செய்யாமல் தேவனையே நம்பி வாழ்ந்து அமைதியாக மரித்து உலகைவிட்டுக் கடந்து சென்ற பரிசுத்தவான்களையும் நாம் கண்டுள்ளோம்.

"கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லைநீரே பெரியவர்உமது நாமமே வல்லமையில் பெரியது." ( எரேமியா 10 : 6 ) ஆம்நமது தேவனுக்கு ஒப்பானவர் எவருமில்லைஅவரது நாமமே வல்லமையில் பெரியதுஅவரையே நம்புவோம்கர்த்தர் நம்மோடு இருந்து நம்மை எந்த  இக்கட்டிலிருந்தும் விடுவிப்பார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Wednesday, April 03, 2024

கொஞ்சம் பெலன் போதும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,151       💚 ஏப்ரல் 04, 2024 💚 வியாழக்கிழமை 💚

 

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 8 )

தேவன் நமது பலம் பலவீனம் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார். மனிதர்கள் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழவேண்டும் என எடுக்கும் முயற்சிகளையும் அவர் பார்க்கின்றார். ஆனால் பலவேளைகளில் அவர்களால் அது முடிவதில்லை. தங்களை அறியாமல் தேவனுக்கு எதிரான காரியங்களைச்  செய்துவிடுகின்றனர். ஆனால், எந்த பலவீனம் இருந்தாலும் அவரை மறுதலியாமல் வாழும் வாழ்க்கையினை அவர் விரும்புகின்றார். அதுவே அவருக்குப் போதும். 

இதனையே இன்றைய தியான வசனம், "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே"   என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, நமது தேவன் நம்மால் சுமக்க முடியாத சுமையினை நம் தோள்மீது ஏற்றிவைப்பவரல்ல. அவர் அன்பான தகப்பன். நமது குழந்தைகளிடம் நாம் ஒரு வேலையினை ஒப்படைக்கும்போது நாம் எதிர்பார்க்கும் அளவுக்குச் சிறப்பாக அவர்கள் அதனைச் செய்து முடிக்காவிட்டாலும் அவர்கள் அதனைச் செய்து முடிக்க எடுத்த முயற்சியை நாம் எண்ணிப் பாராட்டுவோம் அல்லவா?. 

அதுபோலவே தேவனும், நாம் பூரண பரிசுத்தராக வாழவேண்டுமென்று விரும்பினாலும்  நாம் அப்படி வாழ எடுக்கும் முயற்சிகளை பார்க்கின்றார். நமது கொஞ்ச பலத்தால் நாம் அவர் விரும்பிய பூரணத்தை அடைய முடியாவிட்டாலும் "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." என்று நமது முயற்சியினைப் பாராட்டி நம்மை ஆசீர்வதிக்கின்றார். 

இதனை நாம் நியாயாதிபதிகள் புத்தகத்திலும் பார்க்கலாம். மீதியானியரை எதிர்த்துப் போரிட தனக்குப் பலமில்லை என்று கிதியோன் கூறியபோது தேவன் அவனிடம், "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14) என்று வாசிக்கின்றோம். ஆம், நமக்கு இருக்கக்கூடிய பலத்தோடு நாம் எடுக்கும் முயற்சிகளை தேவன் வாய்க்கப்பண்ணுகின்றார். 

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு என்று கூறப்பட்டுள்ள இன்றைய வசனம் ஏதோ ஒரு சபைக்குக் கூறப்பட்டுள்ள வசனமல்ல. கொஞ்சம் ஆவிக்குரிய பலம் இருந்தாலும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்தான் பிலதெல்பியா சபையினர் என்று குறிப்பிடப்படுகின்றனர். 

இப்படி வாழ்பவர்களைக் குறித்துத் தேவன் தொடர்ந்து கூறுகின்றார்,  "என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 10 )

அதாவது, இப்படி தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ விரும்பிச் செயல்படுபவர்களுக்கு இரண்டு முக்கிய ஆசீர்வாதங்களைத் தேவன் வாக்களித்துள்ளனர். முதலாவது, அத்தகையவர்களுக்கு  முன்பாக  திறந்தவாசலை (ஆசீர்வாதத்தினை) வைப்பேன்,  அதனை  அதை ஒருவனும் தடுக்க முடியாது என்கின்றார். இரண்டாவது, பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி அவர்களைக்  காப்பேன் என்று வாக்களிக்கின்றார். 

எனவே அன்பானவர்களே, நமக்கு இருக்கின்ற ஆவிக்குரிய பலத்தோடு தேவனை மறுதலியாமல் பரிசுத்த வாழ்வு வாழ முயற்சியெடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Tuesday, April 02, 2024

தேவன் உண்டென்று பிசாசுகளும் விசுவாசிக்கின்றன

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,150     💚 ஏப்ரல் 03, 2024 💚 புதன்கிழமை 💚


"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." ( யாக்கோபு 2 : 19 )

நாம் அனைவரும் கடவுள்மேல் விசுவாசம் இருப்பதால்தான் ஆலயங்களுக்கு வருகின்றோம், ஜெபிக்கின்றோம், பல்வேறு பக்தி முயற்சிகளை எடுக்கின்றோம். ஆனால் அப்போஸ்தலனாகிய யாக்கோபு, இதுபோல "பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." என்று கூறுகின்றார். இதிலிருந்து பிசாசுகளின் கடவுள் நம்பிக்கையைவிட நமது நம்பிக்கையென்பது மேலான ஒன்றாக இருக்கவேண்டும் என அவர் தெளிவுபடுத்த விரும்புகின்றார் என்பது தெளிவு. 

எபிரேய நிருபத்தில் நாம் வாசிக்கின்றோம், "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று. இதனைத் தொடர்ந்து அங்கு பல விசுவாச வீரர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே இப்படி தங்கள் நம்பியவைகளில் உறுதியுடனும் நிச்சயத்துடனும் வாழ்ந்தார்கள். அதனால் தேவனுக்கேற்றவர்கள் என்று நற்சாட்சி பெற்றவர்கள்.

ஆனால் பிசாசுகள் அப்படியல்ல. கடவுள் ஒருவர் உண்டு என்பதை அவைகள் நம்பினாலும் அவருக்கு எதிரான செயல்களைச் செய்ய மனிதர்களைத் தூண்டுகின்றன. இதனை நாம் ஆதியாகமத்திலேயே பார்க்கலாம். ஆதாமையும் ஏவாளையும் தேவ கட்டளைக்கு எதிராகச் செயல்படத் தூண்டியது பிசாசுதான். 

"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்றும் கூறப்பட்டுள்ளது. பிசாசுக்கு இந்தநம்பிக்கையும் கிடையாது. மாறாக, பிசாசு பெருமை ஆணவம் எனும் குணங்கள் கொண்டு செயல்படுவதுகின்றது. இது கிறிஸ்துவின் தாழ்ச்சி குணத்துக்கு எதிரான குணம். 

அதாவது, கடவுள் ஒருவர் உண்டு என பிசாசுகள் விசுவாசித்து நடுங்கினாலும் அவைகளுக்கு கடவுளின் குணங்கள் இல்லை. மாறாக மனிதர்களையும் கடவுளுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுகின்றன. எனவே அன்பானவர்களே, நாமும் ஆலயங்களுக்கு வந்து ஆராதித்து கலைந்துசென்று பிசாசுகளின் குணங்களோடு வாழ்ந்தால் அதில் அர்த்தமில்லை.

கிறிஸ்துவின் பாடுகளையும் அவர் அடையப்போகும் மகிமையையும் தரிசனமாக கிறிஸ்துவுக்கு ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்கு முன்னமேயே கண்ட ஏசாயா தீர்க்கத்தரிசி பிசாசு அடைந்த வீழ்ச்சியையும் கண்டு விவரித்துள்ளார். 

"........நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." ( ஏசாயா 14 : 13 - 15 ) என்று பிசாசின் வீழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது.

ஆம் அன்பானவர்களே, கடவுள்மேல் நாம் விசுவாசம் கொண்டால் மட்டும் போதாது,  அந்த விசுவாசம் பிசாசுகளின் விசுவாசம்போல ஆகிவிடக்கூடாது. வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுத்தவான்களின் விசுவாசம்போல உறுதியான விசுவாசமாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது மட்டுமே நமது உள்ளான குணங்கள் மாறி நாம் தெய்வீக குணங்களுள்ளவர்களாக மாறி ஆவிக்குரிய நிலையில் முன்னோக்கிச் செல்ல முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Monday, April 01, 2024

ஒத்தாசை வரும் பர்வதம்

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,149      💚 ஏப்ரல் 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்." ( சங்கீதம் 121 : 1&2 )

உலகில் நமக்குச் சில காரியங்கள் நடைபெற மற்றவர்களது உதவி பல வேளைகளில் தேவைப்படுவதுண்டுபொருளாதார உதவியாக இருக்கலாம்பள்ளி அல்லது கல்லூரிகளில் நமது குழந்தைகளைச் சேர்ப்பதற்காக இருக்கலாம் அல்லது வேலைவாய்ப்புகளில் நமக்கு உதவிட இருக்கலாம்அப்படி ஒருவர் நமக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டால் நாம் என்ன சொல்வோம்? "சார்நீங்கள் சொன்னதைநம்பி உங்களையே மலையாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்என்போமல்லவாஅதுபோலத்தான் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.

'எனக்கு உதவி சாதாரண மனிதரிடமிருந்து அல்லவானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்துஎன அவர் துணிவுடன் கூறிகின்றார்மனிதர்கள் வாக்குத் தவறலாம்ஆனால் கர்த்தர் தன்னை நம்பியவர்களை கைவிடுபவரல்லமட்டுமல்ல அந்த நம்பிக்கையை சங்கீத ஆசிரியர் கூறிவிட்டு, "என் கண்களை அவரை நோக்கி ஏறெடுக்கின்றேன் என்கின்றார்".

மலைகளைப் பற்றி பார்ப்போமானால் மலைகளால் பல நன்மைகள் உள்ளனமுதலில் அவை இயற்கையான பாதுகாப்பு அரண் போன்றவைஇந்தியாவின் வட எல்கையிலுள்ள இமயமலை நமது நாட்டிற்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரண்மட்டுமல்ல மலைகள் ஆறுகளின் பிறப்பிடம்மூலிகைகளின் உறைவிடம்ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மலையைநம்பி உயிர் வாழ்கின்றன. சூழலியலின் முக்கிய காரணி. நமது தேவனும் இது போன்றவரே 

அன்பானவர்களேஇன்று நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் இதுதான்நமக்கு மனிதர்களது ஒத்தாசை எப்போதும் கிடைக்காது. சிலவேளைகளில்  காலம், மற்றும் சமூக பொருளாதார காரணங்கள் மனிதர்களது உதவி நமக்குக் கிடைத்திடாமல் தடுக்கச்செய்திடும்.  எனவேதான் நாம் மனிதர்களை நம்புவதைவிட கர்த்தர்மேல் பற்றுதலாய் இருப்பதே நல்லது என்று வேதத்தின் மத்திய வசனம் கூறுகின்றது: "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும்கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்". ( சங்கீதம் 118 : 8 ). 

எந்தப் பிரச்சனைகள் வாழ்வினில் வந்தாலும் நமது விசுவாசக்கண்களால் நாம் கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும்அவரை நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று வேதம் கூறுகின்றது.

புதிய ஏற்பாட்டில் ஒத்தாசை வரும் பர்வதமான இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து சுகம் பெற்றவர்கள் பலர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்அதில் குறிப்பாக நாம் ஒருவரைப் பார்க்கின்றோம்அவர்தான் சகேயுஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு. அவர் குள்ளனானபடியால்ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியாமல் இயேசு வரக்கூடிய பாதை ஓரத்திலிருந்த காட்டு அத்தி மரத்தில் ஏறி அவரை நோக்கிப் பார்த்தான்மிக உயர்ந்த ஆசீர்வாதமான ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான்.  அவரை நோக்கிப் பார்க்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது.   

நாமும் நமது கன்மலையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம்மலைகளைப்போல அவர் நமக்கு பாதுகாப்பு அரண்மலையிலிருந்து ஆறுகள் புறப்படுவதுபோல கிறிஸ்துவிடம் என்றும் வற்றாத ஜீவ நீரூற்றுகள் சுரந்து நம்மை வாழவைக்கும்மலைகள் மூலிகைகளின் பிறப்பிடம் அதுபோல எந்த நோய்களையும்  குணமாக்கும் மாமருந்து கிறிஸ்து,   ஆம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்தால் நமக்கு ஒத்தாசை வரும்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்