Sunday, January 29, 2023

வேதாகம முத்துக்கள் - ஜனவரி 2023

            

                            - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

ஆதவன் 🌞 704 🌻 ஜனவரி 01,  2023 ஞாயிற்றுக்கிழமை

"சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 )

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!! 

நம் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர் என்று வேதம் கூறுகின்றது. அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. அவர் மனிதர்களாகிய நமக்குள் செயல்படும் விதம் ஆச்சரியமானதாகும். நமக்கு  பிரச்சனையோ தேவையோ ஏற்படும்போது தேவனை நோக்கி வேண்டுகின்றோம். அப்படி வேண்டும் நாம் ஜெபத்துக்குப் பதிலளிக்க அவருக்குக் காத்திருக்கவேண்டும்.  அவர் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்கும் விதம் ஆச்சரியமானதாக  இருக்கும். அதனை ருசிக்கும் அனுபவம் நமக்கு வேண்டும்.

இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்த  ஜார்ஜ் முல்லர் (1805 - 18980) எனும் தேவ மனிதரைக்குறித்தும் அவரது விசுவாசம் குறித்தும்  பல செய்திகளை நாம் அறியலாம். விசுவாசமாக ஜெபிப்பது மட்டுமல்ல, ஜெபித்துவிட்டு எப்படியும் தேவன் இந்த ஜெபத்துக்குப் பதில் தருவார். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த அதிசய முறையில் தேவன் அதனைச் சந்திக்கபோகிறார் என்று ஆவலுடன் அதிசயத்துக்குக் காத்திருக்கும் அனுபவமும் அதனைப் பெற்றுக்கொள்ளும் அருளையும் பெற்றிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வெறும் விசுவாச ஜெபத்தால்  மட்டுமே தேவ உதவி பெற்று ஆதரித்து வந்தார் அவர்.

அவரது வாழ்வில் நடந்த பல  சம்பவங்களில் ஒன்று...

ஒரு முறை அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு காலை உணவுக்கு கொடுப்பதற்குப் பால் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. இங்கிலாந்து நாட்டில் பொதுவாக பாலும் ரொட்டியும்தான் முக்கிய உணவு. முல்லர் அதிகாலையிலேயே எழுந்து தேவனிடம் தனது தேவையினை முறையிட்டார். "ஆண்டவரே,உமது வார்த்தையின்படியே இந்தக் குழந்தைகளை ஆதரித்து வருகின்றேன். இன்று இக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பால் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணமில்லை. அன்பான ஆண்டவரே நீரே இந்தத் தேவையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இந்தக் குழந்தைகளை உமது  பாதத்தில் ஒப்படைக்கிறேன்; பசியில்லாமல் பாதுகாத்துக்கொள்ளும்"  என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அப்போது அவரது ஜெப அறையின் கதவு தட்டப்பட்டது. முல்லர் எழுந்து வந்து கதவைத் திறந்து அங்கே  நின்ற மனிதனிடம் என்ன என விசாரித்தார். அந்த மனிதன் கூறினான், "ஐயா, நான் பால் வண்டி (Milk Van)  ஓட்டக்கூடியவன்.  பக்கத்து நகருக்கு எனது பால் வண்டியில் தினசரி  பால் கொண்டு செல்கின்றேன்.  இன்று எனது வண்டியின் அச்சாணி சரியாக உங்களது இந்த ஆசிரமத்து கேட் எதிரே வரும்போது உடைந்துவிட்டது. வண்டியைச் சரிசெய்ய வேண்டுமானால் வண்டியின் எடையினைக் குறைக்கவேண்டும்; எல்லா பாலையும் இறக்கவேண்டும். உங்களது ஆசிரம பெயர் பலகையினைப்   பார்த்தேன். இந்த ஆசிரமம் அருகில் இருப்பதால் உங்களிடம் வந்தேன். பெரிய பாத்திரங்களைக் கொண்டுவந்து பாலைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்றான். முல்லர் முழங்கால் படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்.

அன்று அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு வழக்கத்துக்கு  அதிகமான பால் கிடைத்தது. இதுபோல முல்லரின் ஆசிரமத்துப் பலத் தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்தித்து நடத்தினார். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை" என்று இதனைத் தள்ளிவிட முடியாது. காரணம், ஒருமுறையல்ல பல முறை பல அதிசயங்கள் இதுபோல நடந்தன.  

அன்பானவர்களே, நமது தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், அவருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். இந்தப் புத்தாண்டில் இதனை நாம் நினைவில்கொண்டு அவர்மேல் விசுவாசம்கொண்டு உறுதியாக நிற்போம். அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரையே சார்ந்து வாழ்வோமானால் இந்த ஆண்டு மட்டுமல்ல, எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம். 

ஆதவன் 🌞 705 🌻 ஜனவரி 02,  2023 திங்கள்கிழமை

"தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." (எசேக்கியேல் 14 : 10, 11 )

புத்தாண்டு துவங்கிவிட்டதால் கிறிஸ்தவ ஊழியர்கள் பலரும் ஆசீர்வாத தீர்க்கதரிசனம் கூறத்துவங்கி விடுகின்றனர். இன்னும் ஒரு சில வாரங்கள் ஆசீர்வாதச் செய்திகளும், வாக்குத்தத்தங்களும் அனல் பறக்கும். ஆண்டுக்கு ஆண்டு நடக்கும் இந்தக் கூத்தைப் பல கிறிஸ்தவர்களும் தவறு என்று உணர்வதில்லை. ஊழியர்களும் பணம் சேர்க்கும் காலமாக இதனைப் பயன்படுத்தித் தீர்க்கதரிசனம் என்று ஏதேதோ கூறிக்கொண்டிருக்கின்றனர்.  

அன்பானவர்களே, மனிதர்கள் தன்னை நாடி, தனது சித்தம்செய்து தனக்காக வாழவேண்டுமென்றும் தன்னிடம் பேசி உறவாடி தன்னிடமே  அனைத்துக் காரியங்களையும் குறித்து விசாரிக்கவேண்டுமென்றும்  தேவன் விரும்புகின்றார்.  ஆனால் இன்று மனிதர்களுக்கு காத்திருந்து தேவனிடம் பேசி அவரது சித்தம் அறிய மனமும் பொறுமையும் இல்லை. எனவே, மனிதர்கள் குறுக்கு வழிகளாக ஊழியர்களை  நாடுகின்றார்கள். ஊழியர்களும் மக்களுக்கு தேவனிடம் பேசி உறவாடி அன்புறவில் வளரும் அனுபவத்தைச் சொல்லிக்கொடுப்பதும் இல்லை. காரணம், பெருவாரி ஊழியர்களுக்கும்கூட அந்த அனுபவம் இல்லை. 

இப்படி  தேவ உறவை விரும்பாமல் ஊழியர்களிடம் தீர்க்கதரிசனம் கேட்பதை தேவன் விரும்புவதில்லை. அதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." என்று. ஆம், இப்படி விசாரிப்பது தவறு என்பதால் தண்டனையும் உண்டு. 

இதனைத் தொடர்ந்து இந்த வசனம் கூறுகின்றது, "இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்." அதாவது, இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டு வழிதப்பித் போகாமலிருக்க தேவன் இந்தத் தண்டனையைக் கூறுகின்றார்.

இப்படித் தீர்க்கதரிசன ஊழியர்களை நாடாமல் தேவனையே நாடி, அவர் சித்தம்கொண்டு நமக்கு வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல்களைப் பெற்று, அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது, "அவர்கள்  என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." 

அன்பானவர்களே, தேவனிடம் நாம் அன்புறவில் வளரும்போது நமக்கு தேவனே போதும் என்ற நிறைவும், அவர் நமக்குத் தருவதை ஏற்றுக்கொள்ளும் மன நிறைவும் ஏற்படும். இந்த அனுபவம் இருந்ததால் தான் தாவீது கூறுகின்றார்,  "அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 3, 4 )

நமக்கு ஆறுதலும் தேறுதலும் உலக ஊழியர்களால் தர முடியாது. இன்று ஒரு சில உண்மையான தேவ ஊழியர்கள் உலகில் உண்டு. ஆனால் அவர்கள் வெறும் ஆசீர்வாதத்தை மட்டும் தீர்க்கதரிசனமாகக்  கூறுவதில்லை. அவர்கள் நாம் தேவ வழியில் நடந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வழி காட்டுவார்கள். 

இன்றைய வசனம் குறிசொல்வதுபோல தீர்க்கதரிசனம் கூறும் ஊழியர்களுக்கும் அவர்களை நாடி ஓடும் அப்பாவி விசுவாசிகளுக்கும் ஒரு எச்சரிக்கை. திருந்திக் கொள்வோம்.  "தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும்." என்கிறார் கர்த்தராகிய ஆண்டவர். கர்த்தரையே நாடுவோம்; தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வோம் 

ஆதவன் 🌞 706 🌻 ஜனவரி 03,  2023 செவ்வாய்க்கிழமை


"நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 )

உபத்திரவங்கள் தேர்வு போலானவைகள். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்துவார்கள். தேர்வுகள் ஒரு சோதனை. இந்த மாணவன் அல்லது மாணவி மேற்கொண்டு மேற்படிப்புக்குத் தகுதியானவர்தானா என சோதிக்கும் சோதனை. ஒரு சோதனையினை நாம் மேற்கொள்ளும்போது வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுகின்றோம். 

மேலும் இந்தத் தேர்வுகள் நம்மை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்போது நமது மகிழ்ச்சி அதிகமாகும். உதாரணமாக, நாம் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது நடக்கும் பல்வேறு தேர்வு நிலைகள், நேரடித் தேர்வுகள் ஒரு துன்பமாக நமக்குத் தெரியும். ஆனால் அந்தத் தேர்வுகளை நாம் வெற்றிகரமாக முடித்துவிட்டோமெனில் நல்ல வேலைக்குத் தகுயுள்ளவர்கள் ஆகின்றோம். 

இதனையே பக்தனான யோபுவும், "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் " (யோபு 23:1) என்று கூறுகின்றார்.  தங்கச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படும் தங்கம் முதலில் சாதாரண மண்போலவே இருக்கும். அதனையே நெருப்பிலிட்டு உருக்கி தங்கமாக மாற்றுகின்றனர்.  நகைக் கடைகளில் அழகுடன் மின்னும் தங்க நகைகள் கடந்துவந்த துன்பத்தின் பாதைகள் நமக்குத் தெரியாது. அக்கினியில் புடமிடப்பட்டு, அடித்து வளைத்து நகையாக உருவாக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவை அழகுடன் நகைக்கடைகளில் பார்வையாளர்களைக் கவரும்வண்ணம் மின்னுகின்றன. 

நமது ஆவிக்குரிய வாழ்விலும் நாம் தேவனுக்கு ஏற்புடையத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமானால் தேவன் தரும் சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.  இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 ) என்று கூறுகின்றார்.

இதனை உணர்ந்ததால் சங்கீத ஆசிரியர் "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." என்று கூறுகின்றார். தேவனது பிரமாணங்களை அதாவது கட்டளைகளைகளுக்குக்  கீழ்ப்படியும் முறைகளை  நாம் உபாத்திரங்களின்மூலம் கற்றுக்கொள்கின்றோம்.  எனவே அப்படி நான் உபாத்திரவப்பட்டது நல்லது என்கின்றார் இந்தச் சங்கீத ஆசிரியர். 

அன்பானவர்களே, நாம் துன்பங்கள், துயரங்களில் அகப்படுவது இயற்கை. ஆனால் நாம் மற்றவர்களைப்போல் துன்பங்களைக்  கண்டு சோர்ந்துபோகாமல் அந்தத் துன்பங்கள் மூலம் தேவன் நமக்கு அளிக்கும் செய்திகளை அறிந்துகொள்ள முயலவேண்டும். நமது வாழ்க்கைப் பாதைகளைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். ஆம், நாம் உபத்திரவப்படுவது நல்லது, அதனால் தேவனது பிரமாணங்களைக் கற்றுக்கொள்கின்றோம், நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். 

ஆதவன் 🌞 707 🌻 ஜனவரி 04,  2023 புதன்கிழமை

"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்". (1 யோவான் 5:18)

கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் மீட்பு அனுபவம் பற்றி இன்றைய வசனம் கூறுகின்றது.  இயேசு கிறிஸ்துவினால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரை அறியும்போது நாம் தேவனால் பிறந்தவர்கள் ஆகின்றோம். இப்படி தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை. "ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்."  (1 யோவான் 3:9) இப்படி தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கின்றான். பொல்லாங்கனாகிய பிசாசு அவனைத் தொடமாட்டான். 

பிற தெய்வங்களை வழிபடுவதற்கும், கர்த்தராகிய இயேசுவின் ஜீவ வழியில் நடப்பதற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். கிறிஸ்தவம் வெற்று வழிபாடுகளையும் ஒருசில சடங்குகளையும் கடைபிடிப்பதல்ல.  அது உள்ளான மனிதனில் கிறிஸ்துவினால் ஏற்படும் மாற்றத்தை ஏற்படுத்துவது.  அது உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல,  ஆவிக்குரிய ஆசீர்வாதமான பாவத்திலிருந்து விடுதலையையும் அதன் நிறைவான நித்திய ஜீவனையும் நமக்கு அளிக்கின்றது. 

அன்பானவர்களே, நாம் இந்த அனுபவத்தைப் பெறுவதற்கே அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபிப்பதல்ல, வழிபாடுகளை பக்தியுடன் செய்வதல்ல; கிறிஸ்து நமக்குள் இருபத்தையம் அவர் நம்மோடு பேசி வழிநடத்துவதையும் அறிவதே கிறிஸ்தவம். நாம் பாவங்களிலிருந்து முற்றிலும் ஜெயம்பெற அவர் நமக்கு உதவுகின்றார். அதற்கு நாமும் நமது நிலைமைக்கேற்ப ஒத்துழைக்கவேண்டும். எனவேதான் அப்போஸ்தலரான் பவுல்,  "நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்." (கொலோசெயர் 1:29) என்கின்றார். ஆம், அவர் நமக்குள்ளே வல்லமையாய்ச் செயற்படுகின்றார்.

மேலும்,  இப்படிக் கிறிஸ்துவுக்கேற்ப வாழும்போது நாம் சாத்தானின் வல்லமைகளுக்கு நீங்கி விடுதலை அடைகின்றோம்.  எனவே, நாம் இந்த அனுபவங்களைப்  பெறவேண்டியது அவசியமாயிருக்கின்றது. அதற்கு முதலில் நமக்கு இதுகுறித்த ஆர்வம் இருக்கவேண்டும். 

தேவன் நமது ஆழ்மன எண்ணங்கள் ஏக்கங்கள் இவற்றை நன்கு அறிவார். உண்மையாகவே நாம் அவரை அன்பு செய்வோமெனில் வெற்றுச் சடங்குகளை விட்டு அவரை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு அவரைத் தேடுவோம். 

"அன்பான ஆண்டவரே, நான் உம்மை அறிந்து உமக்கேற்ற வாழ்க்கை வாழவும் உம்மால் வழிநடத்தப்படும் உன்னத அனுபவங்களையும் பெற்று மகிழ விரும்புகின்றேன். இதற்குத் தடையாக இருக்கும் எனது பாவங்களை மன்னியும்.  மறுபடி பிறக்கும் அனுபவத்தை எனக்குத் தாரும். நான் வெற்று ஆராதனைக் கிறிஸ்தவனாக வாழ விரும்பவில்லை. உம்மை அறிந்து உம்மோடு நடக்கும் உயிருள்ள மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ விரும்புகின்றேன். அத்தகைய வாழ்வு வாழ என்னை முற்றிலும் ஒப்புக்கொடுக்கின்றேன். " என வேண்டுவோம்.

தேவனால் பிறந்த மேலான அனுபவத்தையும் பொல்லாங்கனுக்கு நீங்கலாகி முழு விடுதலையும் பெறுவோம்.

ஆதவன் 🌞 708 🌻 ஜனவரி 05,  2023 வியாழக்கிழமை


"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்." (ஏசாயா 51:7)

இன்றைய தியானத்துக்குரிய வசனம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களுக்கு கூறப்பட்டுள்ள ஆறுதல் வார்த்தைகள். நமது நம்பிக்கை வீண்போகாது, ஏற்றவேளையில் தேவன் நமக்குத்  தனது ஒத்தாசையினை அளிப்பார் எனும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.  

இந்த உலகத்தில் துன்பங்களும், துயரங்களும், பிரச்சனைகளும் எல்லோருக்கும் பொதுவானவை. ஒருவர் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும் துன்பங்கள் உண்டு. "எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்" (பிரசங்கி 9:2) இயேசு கிறிஸ்துவும், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" என்றுதான் கூறினார். ஆனாலும் அவர் துணிவுடன் நின்று உலகை ஜெயித்ததுபோல நாமும் ஜெயிக்கவேண்டும். 

சில வேளைகளில் பல்வேறு துன்பங்களோடு மனிதர்கள் நம்மைக்குறித்துப் பேசும் நிந்தையான பேச்சுக்களையும் நாம் எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்து நாம் துன்பப்படும்போது, "என்ன இவன் பெரிய பரிசுத்தவான்போல பேசினான், கர்த்தர் கர்த்தர் என்று கூறிக்கொண்டிருந்தான்....இவனைவிட நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்?"  என்று பிறர் கூறலாம், எண்ணலாம். ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது அந்த அனுபவம் இல்லாத நமது உறவினர்களே இப்படிப் பேசுவார்கள். இது நாம் அனுபவிக்கும் துன்பங்களை மேலும் அதிகரிக்கச்செய்யும். 

இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு தேவன் அளிக்கும் ஆறுதல் வார்த்தைகள், "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்."

அதாவது, மனிதர்கள் நம்மைக்குறித்துப் பேசும் நிந்தையான பேச்சுக்களை நினைத்து நாம் பயப்படக்கூடாது, கலக்கமடையக்கூடாது. 

திருவிழா காலங்களில் பலூன் விற்பவர்கள் சாதாரண காற்றடைத்த பலூனோடு சில வேளைகளில் ஹீலியம் வாயு அடைத்த பலூனையும் விற்பனைச் செய்வார்கள். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்றுபோலவே தெரியும். ஆனால் கட்டிவைக்கப்பட்ட நூலை நாம் அறுத்துவிடுவோமானால் சாதாரண காற்றடைத்த பலூன் தரையில் கிடக்கும். ஹீலியம் வாயு அடைத்த பலூனோ உயர உயர வானத்தில் எழும்பிச் சென்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும்.   

அன்பானவர்களே, நமக்குள்ளே இருக்கும் ஆவியானவரைப்பற்றி வெளிப்பார்வைக்கு மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஏற்றகாலத்தில் அந்த ஆவியின் வல்லமை வெளிப்படும்போது மற்றவர்களைவிட நாம் விசேஷித்தவர்கள் என்பது உலகுக்குப் புரியும். 

எனவே, நீதியை அறிந்து, வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களாகிய நாம் மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம். 

ஆதவன் 🌞 709 🌻 ஜனவரி 06,  2023 வெள்ளிக்கிழமை

"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக் கிறிஸ்துவுமாயிருக்கிறான்." ( 2 யோவான்  1 : 7 )

நாம் ஒருவரது கொள்கைகள் கோட்பாடுகள் இவற்றை ஏற்றுக்கொள்வோமானால் அவற்றைக் கடைபிடிப்போம். அவர்களது கொள்கைகளை மாற்றிப்  புரட்டாமல் பேசுவோம். இன்று நாட்டில் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், காந்தீயவாதிகள் என்று பல கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் உண்டு. அவர்கள் பெரும்பாலும் இந்தக் கொள்கைகளின்படி வாழ்வதில்லை. ஆனால், தாங்கள் போற்றி புகழும் இந்தத் தலைவர்கள் கூறிய கொள்கைகளை மாற்றி பேசுவது கிடையாது. அதாவது அவர்கள் தாங்கள் பேசும் கொள்கைகளின்படி வாழாவிட்டாலும் கொள்கையினை மாற்றிப்  பேசுவதுகிடையாது.  

ஆனால் இன்று கிறிஸ்தவத்தில் இதற்கு மாறுபாடான நிலை உள்ளது. பெரும்பாலான கிறிஸ்த ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் மைய போதனையினையும் அவர் உலகத்தில் வந்த நோக்கத்தையும் மாற்றி, திரித்து போதிக்கின்றனர். "எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியனின் மடியினிலே புதல்வனாகினார்" என தப்பும் தவறுமாக பாடுகின்றார்கள். அதிசயம் செய்யும் மந்திரவாதியாகத் தன்னைக் காட்டவா கிறிஸ்து உலகில் வந்தார்?திருச்சபைத் தலைவர்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை.  

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது"
( 1 தீமோத்தேயு 1 : 15 ) என்றல்லவா வேதம் கூறுகின்றது? இங்கு அதிசயம் அற்புதம் எப்படி நுழைந்தது?

மனிதனாக உலகினில் வந்த தேவகுமாரனான கிறிஸ்துவை மறுதலிப்பது என்பது இதுதான். கிறிஸ்துவின் பெயர் பிரசித்தமாகின்றதோ இல்லையோ  தங்களைக்குறித்தும் தங்களது வல்லமையினைக்குறித்தும் ஆளுயர போஸ்டர்களும் பேனர்களும் வைத்துத் தங்களைத்  தாங்களே புகழ்வதும் "விசுவாசிகள்" எனும் அப்பாவி மக்களைக்கொண்டு தங்களைப் புகழ்ந்து சாட்சிகூற வைப்பதும்தான் கிறிஸ்துவை மறுதலிப்பது. கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவமன்னிப்பையும் மீட்பு அனுபவத்தையும் எடுத்துக்கூறாமல் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் ஆசீர்வாதம் என உலக ஆசீர்வாதங்களையே கூறுவதுதான்  கிறிஸ்துவை மறுதலிப்பது. 

எனவேதான், இப்படி "மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்." ( 2 யோவான்  1 : 7 ) என்கின்றார் அப்போஸ்தலனாகிய யோவான். 

கிறிஸ்துவின் போதனையினை ஏற்றுக்கொள்ளாமல் திரித்துப்பேசும் இவர்களே வஞ்சகனும் அந்திகிறிஸ்துவும் (எதிர்க்கிறிஸ்து)  என வேதம் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும் இத்தகைய வஞ்சகர்களைக்கொண்டுதான் பெரும்பாலான நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." ( 2 யோவான்  1 : 10 ) என யோவான் கூறுகின்றார். 

அன்பானவர்களே, நற்செய்தி கூட்டங்களில் கலந்துகொள்வது நல்லதுதான். ஆனால் அங்கு யார் செய்தி அளிக்கிறார் என்று பார்த்து பிரபலங்களை நோக்கி ஓடி நமது ஆத்துமாவை இழந்துபோய்விடக்கூடாது.  

இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத வஞ்சக அந்திக்கிறிஸ்து ஊழியர்களுக்கும் போதனைகளுக்கும் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

ஆதவன் 🌞 710 🌻 ஜனவரி 07,  2023 சனிக்கிழமை

"நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24 : 29 )

இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து உயிர்த்தபின்பு எருசலேமிலிருந்து எம்மாவு எனும் கிராமத்துக்குச் சென்ற தனது இரண்டு சீடர்களோடு ஒரு வழிப்போக்கனைப்போல பேசிக்கொண்டு நடந்து சென்றார். அந்தச் சீடர்களுக்கு அவர் யார் என்று  தெரியவில்லை. கிறிஸ்து பாடுபட்டு மரிக்கவேண்டியது குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி விளக்கியபடி நடந்து சென்றார். அவர்கள் போய்ச் சேரவேண்டிய இடம் வந்ததும் அவர் மேலும் எங்கோ செல்லவேண்டியதுபோல காட்டிக்கொண்டார். 

அப்போது அந்தச் சீடர்கள் அவரிடம், "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24 : 29 )

அன்பானவர்களே, இன்று நமக்கு இது ஒரு செய்தியைக் கூறுகின்றது. வழியில் இயேசு கூறிய செய்திகளும் விளக்கங்களும் சீடர்களது மனதை அனல்கொள்ளச் செய்தன. எனவேதான் அவர்கள், "ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள். ( லுூக்கா 24 : 32 ).

இன்று நமது வாழ்வும் ஒருவேளை சீடர்கள் இயேசுவை அழைத்த அந்த மாலைநேரத்தைப்போல பொழுதுபோனதாக இருக்கலாம். ஒருவேளை நமது வயது இப்போது அறுபத்தைந்து, எழுபது, எழுபத்தைந்து என பொழுதுபோனதாக, நமது வாழ்வின் அந்திவேளையில் நாம் இருக்கலாம். ஆனால் நாம் சீடர்களைப்போல அவரை அழைக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று அந்தச் சீடர்களைப்போல அவரை நமது வாழ்வில் அழைப்போம். 

ஒரு பரிசுத்தவானுடைய  சாட்சியை நான் வாசித்துள்ளேன். அவர் தனது அறுபத்தைந்தாவது வயதுவரை குடியிலும் கேளிக்கைகளிலும் செலவழித்து துன்மார்க்க வாழ்வு வாழ்ந்தார். ஆனால் அவரது அந்தி வேளையில் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டபோது கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டார். அற்புதமாகக் குணமானார். அவரது வாழ்வு கிறிஸ்து நிறைந்த வாழ்வாக மாறியது. அதன்பின்னர் அவர் இருபது ஆண்டுகள் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஊழியம்செய்தார். 

ஆபிரகாமின் வாழ்க்கையில் அவர் ஏறக்குறைய நூறு வயதுள்ளவராகவும் அவரது மனைவி சாராள் வயது முதிர்ந்து கர்ப்பம்தரிக்க இயலாத நிலையில்  உள்ளவராகவும் இருந்தபோது தேவன் ஈசாக்கை மகனாகக் கொடுத்து ஆசீர்வதித்ததைப் பார்க்கின்றோம்.  

நமது வாழ்வில் வயது அதிகமாகிவிட்டது எனக் கலங்கவேண்டாம். இனி வாழ்க்கை அவ்வளவுதான் என எண்ணவேண்டாம். வேத வார்த்தைகளை ஆவலுடன் வாசித்துத் தியானிப்போம். சீடர்களது இருதயம் கொழுந்துவிட்டு எரிந்ததுபோல நமது இருதயமும் எரியட்டும்.  "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று உண்மையான மனதுடன் அழைப்போம். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்என்று கூறியுள்ளபடி நமது உள்ளத்திலும் வருவார். 

ஒருமுறை ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வேதத்தைக்குறித்த உண்மைகளை எடுத்துக்கூறி மீட்பு அனுபவம் பற்றி விளக்கும்போது அவர் கூறினார், "எனக்கு வயது எழுபதாகப்போகிறது. இவ்வளவுநாள் வாழ்ந்ததுபோலவே வாழ்ந்துவிட்டுப்போகிறேன்" என்றார். அன்பானவர்களே, இத்தகைய எண்ணம் நமக்கு இருந்தால் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே மரிக்க நேரிடும். தேவனுக்கு வயது பெரிதல்ல;  எந்த வயதினரையும் அவரால் உருமாற்றி உபயோகப்படுத்த முடியும். "நீர் எங்களுடனே தங்கியிரும், எனது வாழ்க்கை சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று" என்று உண்மையான மனதுடன் அழைப்போம்.

ஆதவன் 🌞 711 🌻 ஜனவரி 08,  2023 ஞாயிற்றுக்கிழமை
 
"இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 16 )

ஆவிக்குரிய வாழ்வின் மூன்று நிலைகளை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. ஒன்று ஆவியில் குளிர்ந்த நிலை. அதாவது, ஆவிக்குரிய வாழ்வு என்றால் என்ன என்று தெரியாமல் அல்லது அந்த நிலையினை அதிகம் உணராது உள்ள மக்களது நிலைமை.  இத்தகைய மக்கள் தங்களது சுய பக்தி முயற்சியில் தேவனைத் தேடுபவர்கள். தேவனிடம் உண்மையான ஆவிக்குரிய  அன்பு இல்லாவிட்டாலும் சிறந்த  பக்தியுள்ளவர்கள்.  இத்தகைய மனிதர்கள் ஒருவேளை தேவனை தங்களது வாழ்க்கையில் பிற்பாடு அறிந்துகொண்டு சிறந்த ஆவிக்குரிய மக்களாக மாறிட முடியும்.

இன்னொன்று ஆவியில் அனலாய் இருக்கும் நிலைமை. ஆவிக்குரிய வைராக்கியமாக, தேவனிடம் உண்மையான அன்புசெலுத்தி ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்கள். ஆம், நாம் ஆவிக்குரிய வாழ்வில் வைராக்கியமாக அனலுள்ளவர்களாய் இருக்கவேண்டியது அவசியம். இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்." ( ரோமர் 12 : 11 ) என்று கூறுகின்றார். அனலுள்ள ஆவிக்குரிய வாழ்கையினையே தேவன் விரும்புகின்றார். இவர்கள் ஆவிக்குரிய மக்கள்.

மூன்றாவது இன்றைய வசனம் கூறுவது ஆவிக்குரிய வாழ்வில் வெதுவெதுப்பான நிலைமை. இத்தகைய மக்கள் இரண்டும்கெட்டான் ரகத்தைச் சார்ந்தவர்கள். அதாவது ஆவிக்குரிய சத்திய வசனங்களை வெறுமனே வசனங்களாக மட்டுமே அறிந்துகொண்டு அதுபற்றிய எந்த ஆர்வமும் இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்பவர்கள். 

இவர்கள் மாய்மாலக்காரர்கள். இவர்களிடம் நாம் சுவிசேஷம் அறிவிக்க முடியாது. ஏனெனில் வசனங்களை கணித பார்மலாப்போல அறிந்துள்ளதால் நாம் இவர்களிடம் பேச முற்பட்டால் நாம் துவங்குமுன் வசனத்தை ஒப்புவிப்பார்கள். ஆனால் அந்த வசனத்தின் வல்லமை அல்லது அதன் உண்மையான அனுபவபூர்வமான தன்மை இவர்களுக்குத் தெரியாது  தெரிந்துகொள்ளவும் முயற்சிக்கவுமாட்டார்கள்.   சிறுவயதுமுதல் அறிந்துள்ள வசனத்தைக் கிளிப்பிள்ளைபோலச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய அனலுள்ள வாழ்வையே தேவன் விரும்புகின்றார். அதேநேரம் ஆவிக்குரிய குளிர்ந்த நிலையில் உள்ளவர்கள் சரியான சத்தியத்தை அறிந்து அனலுள்ளவர்களாக மாறிட வாய்ப்புமுண்டு.  ஆனால், வெதுவெதுப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் தேவனை அறிந்திட வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." என்று.

ஆவிக்குரிய அனலுள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் அந்த அனல் குறைந்திடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டியும் அதனை இன்னும் அதிகரிக்க வேண்டியதும் அவசியம்.  குளிர்ந்த நிலையில் நமது ஆவிக்குரிய வாழ்க்கை இருக்குமேயானால்  ஆண்டவரே, நான் உம்மை அறிந்து ஆவிக்குரிய அனலுள்ள வாழ்க்கை வாழ எனக்குக் கிருபையைத் தாரும் என வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். 

ஒருவேளை இதனை வாசிக்கும் மக்களது வாழ்க்கை நாம் மேலே பார்த்ததுபோல அனலுமின்றி குளிருமின்றி வெதுவெதுப்பாக இருக்குமேயானால், மாய்மால எண்ணங்களைவிட்டுவிட்டு தேவனிடம் திரும்பவேண்டியது அவசியம். "ஆண்டவரே, நான் படித்து அறிந்துள்ள வசனங்களின் உண்மையினை நான் ருசிக்கும்படி எனக்குக் கிருபைதாரும். மெய்தேவனாகிய வார்த்தையான தேவனை நான் அறிந்துகொள்ளக் கிருபைதாரும் என தங்கள் ஆவிக்குரிய அறியா நிலைமையை ஒத்துக்கொடு ஜெபிக்கவேண்டியது அவசியம்.  வசனங்கள் மட்டும் நம்மை இரட்சிக்காது; வசனங்கள் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போதுமட்டுமே நாம் அனலுள்ளவர்களாக மாறமுடியும்.  

குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருந்து வசனங்களை மட்டுமே வாயினால் கூறிக்கொண்டிருந்தால்  உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

ஆதவன் 🌞 712 🌻 ஜனவரி 09,  2023 திங்கள்கிழமை

"தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." ( சங்கீதம் 139 : 23, 24 )

தன்னை முற்றிலும் தேவ வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து தாவீது பாடிய இந்தச் சங்கீதம் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியான ஜெபத்தைக் கற்றுத் தருகின்றது. 

நாம் மனிதர்கள்;  பலவீனமானவர்கள். நம்மால் நமது குறைகளைக்கூட அறிந்திட முடியாது. எனவேதான் பலரும் தாங்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் நம்மில் தேவனது பரிசுத்த ஆவியானவர் வரும்போதுதான் நமக்கு நமது பாவங்கள் தெரியவரும். இதுவரை நாம் பாவம் என்று எண்ணிடாத பல காரியங்கள் தேவனுடைய பார்வையில் பாவமாக இருப்பதை  நாம் உணர்ந்துகொள்ள முடியும்.    

நமது இருதயச் சிந்தனைகளை தேவன் அறிவார். எனவே, வெளிப்படையாக நாம்  பாவம் செய்யாதவர்களாக இருந்தாலும் சிந்தனையில் பாவியாக இருக்கமுடியும். சமுதாயத்துக்குப் பயந்தும்,  வாய்ப்புக் கிடைக்காததாலும் சிலர் பெரிய பாவம் செய்யாமல் வாழ்கின்றனர். ஆனால் உள்ளான மனதில் பாவ அழுக்கு மனிதனுக்குள் இருந்தாலே தேவனது பார்வையில் அது பாவம்தான். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." ( மத்தேயு 5 : 28 ) என்று. 

இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுகின்றார், "வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்." என்று. நாமும் இப்படி ஜெபிக்கவேண்டியது அவசியம்.  இப்படி நம்மை தேவ வழியில் நடத்துவதற்குத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்களித்து அருளியுள்ளார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

அம்  சத்திய ஆவியான பரிசுத்த ஆவியானவர் ஒருவரை அலறி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அருளப்படவில்லை. அவர் நம்மைச் சகல சத்தியத்துக்குள்ளும் வழிநடத்தும்படி அருளப்பட்டுள்ளார்.  இன்று ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளேன் என்று கூறிக்கொள்வோர் எண்ணிப்பார்க்கவேண்டிய சத்தியம் இது. 

பாவத்தைக்குறித்த அருவெறுப்பு உங்கள் உள்ளத்தில் இருக்கின்றதா? 

பாவத்தை வெறுத்து ஒதுக்குகின்றிர்களா ?

இன்னும் நான் பரிசுத்தமாகவேண்டும் எனும் எண்ணம் உங்களுக்குள் இருக்கின்றதா? 

தேவ சமூகத்தில் அதிகநேரம் செலவிட உங்களுக்குள் ஆர்வமிருக்கின்றதா?

இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதில் இருக்குமேயானால் நம்மிடம் பரிசுத்த ஆவியானவர் இருந்து செயல்படுகின்றார் என்று பொருள்.  இல்லையானால் நாம் வெற்றுக்கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று பொருள். 

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். எனத் தினம்தோறும் வேண்டுதல் செய்வோம்.  அவரே நம்மை நீதியின் பாதையில் நடத்துவார். 

ஆதவன் 🌞 713 🌻 ஜனவரி 10,  2023 செவ்வாய்க்கிழமை

"பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்." ( மத்தேயு 9 : 6 )

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது நன்மைகள் செய்தவாறு சுற்றித் திரிந்தார் என்று வேதம் கூறுகின்றது. அவர் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தது இரண்டே காரணத்தினால்தான். ஒன்று அவரது மனதுருக்கம், இன்னொரு காரணம் பாவங்களை மன்னிக்கத் தனக்கு அதிகாரம் உண்டு என்பதை மக்களுக்கு உணர்த்தி தான் காட்டும் வழியில் மக்கள் அவரைப் பின் செல்லவேண்டும் என்பதற்காகத்தான்.  ஏனெனில் இந்த உலக வாழ்க்கைக்குப்பிறகு நாம் நித்திய வாழ்வைத் சுதந்தரிக்கவேண்டுமானால் நாம் பாவமற்றவர்களாக இருக்கவேண்டடியது அவசியமாயிருக்கிறது. 

ஆத்தும மரணமில்லாத வாழ்வு - அதுதான் நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு.   அதனை அடையும் வழியை இயேசு கிறிஸ்துக் காட்டினார். அதனை அடைந்திட முதல்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதுதான். ஆனால் மக்கள் அவருக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்பதை எப்படி உணர்ந்துகொள்வார்கள்? எனவே, மக்களது  பாவங்களை மன்னிக்கத் தனக்கு  அதிகாரம் உண்டு என்பதை உணர்த்தவே அவர் பல அற்புதங்களைச் செய்தார்.    

ஒருமுறை ஒரு திமிர்வாதக்காரனைக் குணப்படுத்துமுன் இயேசு கிறிஸ்து அவனிடம் "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன" என்று கூறியபோது யூதர்கள், "இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்." ( மாற்கு 2 : 7 )

இப்படி, பாவங்களை மன்னிக்க இவன் யார்? என்று எண்ணிய மக்களுக்குத் தான் தேவன்தான்; தனக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பதை உணர்த்தவே இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்தார். 

"நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்." ( 1 யோவான்  2 : 2 ) என எழுதுகின்றார் அவரது அன்புச்  சீடர் யோவான். 

அன்பானவர்களே, நமக்கு உடலில் பல்வேறு நோய்கள் இருக்கலாம், பல ஆண்டுகளாக அந்த நோயின் தாக்கத்தால் நாம் தவித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான பணத்தை மருத்துவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கலாம். எல்லா நோய்க்கும் மருத்துவரான பரம வைத்தியராகிய அவரைப் பற்றிக்கொண்டு ஜெபிப்போம்.

"அன்பு ஆண்டவரே, நான் உமக்குப் பிரியமில்லாத எந்தப் பாவம் செய்திருந்தாலும் அவற்றை மன்னியும். (ரகசியப் பாவங்கள் செய்திருந்தால் அந்தப் பாவத்தை அறிக்கையிட்டு ஜெபியுங்கள்) நான் இனிமேல் உமக்கு ஏற்புடையவனாக, உமக்கு மட்டுமே சொந்தகமானவனாக வாழ முடிவெடுக்கிறேன். எனது பாவங்களை மன்னியும்; எனது தீராத நோயைக் குணமாக்கும். இனிமேல் உமக்குச் சாட்சியுள்ள ஒரு  வாழ்க்கையை  வாழ்வேன்". என நாம் ஜெபிக்கும் ஜெபத்துக்கு அவர் நிச்சயம் பதில் தருவார்.  "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்."( சங்கீதம் 50 : 15 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

ஆதவன் 🌞 714 🌻 ஜனவரி 11,  2023 புதன்கிழமை

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

பிள்ளைகள் தவறு செய்யும்போது பெற்றோர்கள் அவர்களைத் தண்டிப்பதுண்டு. இது பிள்ளைகள் நல்லவர்களாக வளரவேண்டும் என்பதற்காகவேதானே தவிர குழந்தைகளைப் பழிவாங்குவதற்காக அல்ல.  சிலவேளைகளில் தாய்மார்கள் கோபத்தில் தங்கள் குழந்தைகளை அடித்துவிட்டு மனம் வருந்தி அவர்களே அழுவதுண்டு. ஆம், நமது தேவனும் இப்படிப்பட்டவர்தான். நம்மைக் கண்டிக்கும்போது அவரும் மனம் வருந்துகின்றார். 

நாம் நமது மீறுதல்களினால் தேவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும்போது நம்மைத் திருத்துவதற்காக தேவன் நம்மைத் தண்டிப்பதுண்டு. இது ஒரு தாய் தனது குழந்தைகளைத் திருத்துவதற்குத் தண்டிப்பதைப்போலதான்.   "அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது." ( யோபு 5 : 18 )

நமது தாய் தகப்பன்மார் அவர்கள் நல்ல வழி எனக் கருதும் வழிகளில் நாம் வளரவேண்டும் என்பதறகாகக் சிறிதுகாலம் நம்மைத் தண்டிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு  வளர்ந்தபின் அவர்கள் நம்மைத் தண்டிப்பது கிடையாது. இதனையே எபிரேய நிருபத்தில் நாம்,  "அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." ( எபிரெயர் 12 : 10 ) என்று வாசிக்கின்றோம்.

இன்றைய தியான வசனத்தில், "அவரே  நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." என வாசிக்கின்றோம். அன்பானவர்களே, எனவே நாம் துன்பங்களை, பாடுகளை அனுபவிக்கும்போது நம்மை நாமே நிதானித்துப் பார்க்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நம்மிடம் குற்றங்கள் இருக்குமேயானால் அவரிடம் மன்னிப்பு வேண்டுவது அவசியம். "அடிக்கிற கைதான் அணைக்கும்" என்பதற்கேற்ப நம்மை அடித்த அவரே நம்மை அணைத்துக்கொள்வார், அமைத்து காயங்களைக் கட்டுவார், நம்மைக் குணமாக்குவார்.  

"கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்" என்று இன்றைய வசனம் நமக்கு அழைப்புவிடுக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் இன்று அவரிடம் திரும்பவேண்டியது அவசியமாயிருக்கின்றது.  தினமும் பாவ அறிக்கை செய்யவேண்டியது அவசியமாயிருக்கின்றது. ஏனெனில் நாம் அனைவருமே பல விஷயங்களில் தவறுகின்றோம். (யாக்கோபு 3:2)

நாம் மனித அறிவால் பாவம் என்று உணர்ந்திராத பல விஷயங்கள் தேவ பார்வையில் பாவமாக இருக்கலாம். எனவே தினமும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவோம். தேவனது கண்டிப்புக்குத் தப்பி நமது உடலையும் ஆத்துமாவையும் வாழ்வையும் காத்துக்கொள்வோம்.

ஆதவன் 🌞 715 🌻 ஜனவரி 12,  2023 வியாழக்கிழமை

"என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்"( சங்கீதம் 44 : 6, 7 )

கர்த்தரை நம்பாமல் தங்களது சுய பலத்தையே நம்பி வாழ்கின்றனர் பலர்.  தங்களது வாழ்வின் செழிப்பெல்லாம் தங்களது சுய பலத்தினால்தான் என்று எண்ணுகின்றனர். எனக்கு நல்ல வேலை இருக்கின்றது, நான் சம்பாதிக்கிறேன் என்று கூறிக்கொள்கின்றனர்.  இந்த வேலையும் சம்பாதிக்கும் திறனும் தேவன் கொடுத்தது என்று அவரை மகிமைப்படுத்தத் தவறிவிடுகின்றனர். 

என்னதான் நல்ல வேலை இருந்தாலும் நல்ல உடல் நலம் தேவன் கொடுப்பதுதான். நல்ல உடல் சுகம் இருந்தால் மட்டுமே நமது வேலையாலும் சம்பாத்தியத்தாலும் பலன் உண்டு. 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவு அதிக அறிவும், நல்ல வேலையும் சம்பாதிக்கும் திறமையும் இருந்தாலும் நாம் அவற்றின்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டும். இன்றைய உலகினில் நாம் பல விஷயங்களை நேரடியாகப் பார்க்கின்றோம். நல்ல வேலையில் இருபவர்களது வேலை திடீரென்று இல்லாமல் போய்விடுகின்றது. உலகின் முன்னணி நிறுவனங்களில் பெருமையோடு உயர் பதவி வகித்தவர்களின் பதவிகள் ஒரு நொடியில் இல்லாமல்போய்விடுகின்றன.

"அவர் வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்." ( சங்கீதம் 46 : 9 ) என வசனம் கூறுகின்றது. அதாவது தனது ஈட்டியையும் இரத்தங்களையும் பெருமையாக எண்ணுபவர்களை தேவன் அழித்து ஒழியப்பண்ணுகின்றார். 

"ஆண்டவரே, என் வேலையை நான் நம்பேன், என் வேலையும் திறமையும் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் வாழ்க்கையினைச் செழிக்கச் செய்பவர்." என்று உண்மையான தாழ்மையுடன் அறிக்கையிடவேண்டும். ஆண்டவர் இதனையே விரும்புகின்றார்.   பலருக்கு இந்த எண்ணம் இல்லாததால் பெருமையும் மற்றவர்களை அற்பமாக எண்ணும் குணமும்  ஏற்படுகின்றது.

நமக்கு எவ்வளவு பெரிய பதவி இருந்தாலும் அதனைவிட மகா பெரிய தேவையே நாம் நம்பவேண்டும்.  "பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1 : 52, 53 ) எனும் வேத வசனங்கள் நமக்கு எப்போதும் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தாழ் நிலையிலுள்ளவர்களை ஒரே நொடியில் உயர்த்தவும், உயரத்தில் இருப்பவர்களை ஒரேநொடியில் தாழ்த்தவும் தேவனால் கூடும். எனவே, "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சிக்கிறவர் " என்று நமது வாயினால் அறிக்கையிடுவோம்.   


ஆதவன் 🌞 716 🌻 ஜனவரி 13,  2023 வெள்ளிக்கிழமை

"நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன்." ( 1 இராஜாக்கள் 17 : 9 )

இக்கட்டு இடர்களில்  தனது ஊழியர்களையும் தனக்கு ஏற்புடையவர்களாக வாழும் மக்களையும் தப்புவிக்க தேவன் உதவிசெய்கிறார்.  தேவனது அந்த உதவியைப் பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியதே அவசியம்.  இன்றைய வசனம் பஞ்சகாலத்தில் தனது ஊழியக்காரனாகிய எலியாவுக்கு தேவனால் அருளப்பட்டதாகும். 

ஐயோ பஞ்சம் வந்துவிட்டதே, பணமோ உணவோ இல்லையே எனக் கலங்கிடாதே, நான் உனக்காக, உனக்கு உணவளிக்க  ஒரு விதவையை ஏற்கெனவே ஏற்பாடுசெய்துவிட்டேன் என்று எலியாவைத் திடப்படுத்தி அனுப்புகின்றார் தேவன்.

தேவன் அனுப்பும்போது எந்தக் குறைவும் இன்றி அவர் வாக்களித்த உணவு  எலியாவுக்குக் கிடைத்ததுபோல நமக்கும்  கிடைக்கும். ஆனால் சரியான இடத்துக்கு நாம் செல்லவேண்டும். இந்தப் பஞ்சகாலத்தில் பணக்காரர்களே உணவில்லாமல் தவிக்கிறார்கள் ஏழை விதவை எப்படி நமக்கு உணவுத்தருவாள்? என்று எலியா எண்ணியிருந்தால் உணவு கிடைத்திராது. 

இன்று இதுபோல ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோயிருக்கலாம், அல்லது ஆவிக்குரிய உணவு நமக்குப் போதுமான அளவு கிடைக்காமல் இருக்கலாம். அல்லது இத்தனை வயதாகியும் நமக்கு ஆவிக்குரிய உணவைக்குறித்து அறிவில்லாமலிருக்கலாம். பல்வேறு தேவர்களையும் பல்வேறு ஊழியர்களையும் தேடி ஓடி சலிப்படைந்திருக்கலாம். ஆனால் நாம் தயங்கிடத் தேவையில்லை. 

"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே" ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நம்புவோம். அன்று யூதர்கள் இயேசுவின் வார்த்தையால் இடறலடைந்தார்கள். "நமக்கு இவன்  எப்படித் தனது உடலைத் தரமுடியும்? என்றனர். இது கடினமான உபதேசம் என்று பலர் அவரைவிட்டுப் பிரிந்தனர். 

தேவனுடைய வார்த்தையை நம்பி சாறிபாத் விதவையைநோக்கி எலியா சென்றதுபோல கல்வாரி நாதரை நோக்கி நாம் செல்லவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

விருந்துகளில் சற்று தாமதமாக நாம் சென்றால் சில உணவு வகைகள் நமக்குக் கிடைக்காமல்  போகும். சிலவேளைகளில் எதுவுமே கிடைக்காமல் போகலாம். ஆம், உலக விருந்துகளுக்கு  காலம், இடம், நேரம் முக்கியம். சரியான காலத்தில், சரியான வேளையில் சென்றால்  மட்டுமே உணவு கிடைக்கும். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவரையும் புறம்தள்ளுவதில்லை. நமது வயது நமக்குத் தடையல்ல. எனவே தைரியமாக அவரை நோக்கிச் செல்வோம்.

"நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான். " ( யோவான் 6 : 51 ) என்று வாக்களித்துள்ளார் அவர்.

"வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்." ( யோவான் 6 : 58 )

அவரைப் புசிப்பது என்பது, நமது பாவங்களுக்காக அவர் தனது இரத்தத்தைச் சிந்தி பலியானார் அவரது இரத்தம் நமது பாவங்களைக் கழுவி சுத்திகரிக்கும் என்பதை விசுவாசித்து ஏற்றுக்கொள்வதுதான். 

நீ எழுந்து, கல்வாரி நாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ. அவரோடே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அவரே உன்னோடு இருந்து நடத்துவார்.  


ஆதவன் 🌞 717 🌻 ஜனவரி 14,  2023 சனிக்கிழமை

"இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்." ( யோவான் 6 : 9 )

இயேசு கிறிஸ்து ஒருமுறை மக்களுக்கு வனாந்தரமான இடத்தில போதனை செய்துகொண்டிருந்தார். மிகுதியான மக்கள்கூட்டம் சேர்ந்துவிட்டது. பொழுதும் அதிகநேரம் ஆகிவிட்டது. அந்த மக்களை அப்படியே அனுப்பிவிட இயேசு கிறிஸ்து விரும்பவில்லை. அவர்களது பசியை ஆற்றவேண்டும் என்று விரும்பினார். எனவே தனது சீடர்களில் ஒருவராகிய பிலிப்புவிடம், " இவர்கள் சாப்பிட அப்பங்களை நாம் எங்கே வாங்கலாம்? என்று கேட்டார். அப்போது பிலிப்பு, "ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே?" என்று  கைவிரித்தார். 

அப்போது இன்னொரு சீடனான அந்திரேயா என்பவர் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார்.  இயேசு கிறிஸ்து அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வாங்கி ஆசீர்வதித்து அவைகளை வர்த்திக்கப்பண்ணி ஐயாயிரம்பேருக்கு உணவளித்தார். 

இன்று நம்மிடம் இருக்கும் திறமைகளும், பணமும் கொஞ்சமாக இருக்கலாம். இவற்றைக்கொண்டு நாம் தேவனுக்கென்று  என்னதான் பெரிதாகச் செய்துவிடமுடியும் என நாம் எண்ணலாம். ஆனால், தேவனது கரம் நம்மோடு இருக்கும்போது எந்தச் சிறியச் செயலாக இருந்தாலும் அது மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டுவரும். அந்தச் சிறியச் செயல் பல ஆயிரம் மக்களது ஆவிக்குரியப் பசியைத் தணிக்கமுடியும்.  

மேலும், இன்றைய வசனம் கூறப்பட்ட சூழ்நிலையையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். இயேசு கிறிஸ்து மக்களுக்குப் போதனைச் செய்தபின்பு அவர்களது பசியைத் தணித்தார். இன்று நாமும் வெறும் சுவிசேஷ அறிவிப்பு செய்துவிட்டு மக்களது உலகுசார்ந்த தேவைகளைக் கவனிக்காமல் இருந்தால் அதில் அர்த்தமிருக்காது. நம்மால் இயன்றவரை மக்களது உலகத் தேவைகளைச் சந்திக்க முயலவேண்டும்.  
  
"ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?" ( யாக்கோபு 2 : 15, 16 ) என்கிறார் அப்போஸ்தலரான  யாக்கோபு.

நாம் நமது வார்த்தையால் கிறிஸ்துவை அறிவிப்பதோடு வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும் கிறிஸ்துவை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். பெரிய அளவில் இவற்றைச் செய்ய இயலாவிட்டாலும் இரண்டு மீன்கள் ஐந்து அப்பங்களைப்போல சிறிய அளவில் செய்தாலும் தேவன் அதனை மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாற்றி பலருக்குப் பயனுள்ளதாக்குவார்.   இத்தனை ஜனங்களுக்கு நாம் செய்யும் உதவி எம்மாத்திரம் எனத் தயங்கிடாமல் நமது பணியைத் தொடர்ந்து செய்வோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.


ஆதவன் 🌞 718 🌻 ஜனவரி 15,  2023 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்." ( சங்கீதம் 31 : 24 )

கர்த்தருக்குக் காத்திருத்தல் என்பது உறுதியான விசுவாசத்தோடு கர்த்தரையே சார்ந்துகொல்வதைக்  குறிக்கின்றது. நாம் ஏதும் செய்யாமல் வெறுமனே ஒரு பேரூந்துக்காகக் காத்திருக்கும் பயணியைப்போல இருக்கவேண்டும் என்று பொருளல்ல, மாறாக கர்த்தரிடம் நாம் உறுதியாகத் தரித்திருப்பதையே குறிக்கின்றது. காத்திருத்தல் என்று கூறப்படும் இந்த வார்த்தைக்கு எபிரேய மூல மொழியில் கூறப்பட்ட வார்த்தை QUVAH  என்பது என்று எபிரேயம் தெரிந்த எனது நண்பர் ஒருவர் கூறினார். 

இதற்கு, பின்னுதல், ஒட்டுதல் (bind) என்ற பொருளும் உண்டு என்று கூறினார் அவர். அதாவது கர்த்தரோடு கர்த்தராகத் தங்களைப் பின்னிக்கொண்டவர்கள் அல்லது கர்த்தரோடு தங்களை ஒட்டிக்கொண்டவர்கள் என்று பொருள். 

இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

இன்றைய வசனம் கூறுகின்றது இப்படிக் "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று. அதாவது இப்படிக் கர்த்தரோடு ஒரு ஒட்டுதலான வாழ்க்கை வாழ்ந்தால் அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார். இந்த வசனம், நாம் கேட்பதையெல்லாம் அவர் தருவார் என்று கூறாமல் "உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்" என்று கூறுகின்றது. நமது இருதயம் உறுதிப்படும்போது நாம் கேட்பது கிடைக்காவிடினும் அவரது சித்தத்தை ஏற்றுக்கொள்ளும் பலத்தை நமக்குத் தரும்.

இதற்கொத்த வேத வசனங்கள் பல சங்கீத புத்தகத்தில் உண்டு. 

"கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு" ( சங்கீதம் 37 : 7 )

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்." ( சங்கீதம் 37 : 9 )

அன்பானவர்களே, கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம், கர்த்தரோடு கர்த்தராக நம்மைப் பின்னிக்கொள்ளும் அல்லது ஒட்டிக்கொள்ளும் அனுபவத்தில் நாம்  வளரவேண்டியது அவசியம். அப்படி வளரும்போது மட்டுமே நாம் உலகத் துன்பங்களையும் வேதனைகளையும் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவதைப் பெற முடியும். உலக ஆசீர்வாதங்களையல்ல, கர்த்தரையே முதன்மையாக வேண்டுவோம். அப்போது நமது இருதயம் கர்த்தரில் உறுதிப்படும்.


ஆதவன் 🌞 719 🌻 ஜனவரி 16,  2023 திங்கள்கிழமை

"நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது," ( தானியேல் 9 : 23 )

ஜெபத்தைக்குறித்தும் அதற்குத் தேவன் பதில் தருவது குறித்தும் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் வாசிக்கின்றோம்.  நமது ஜெபத்துக்குத் தேவன் பதில்கொடுக்க நாம் என்னச் செய்வது என்பதை இந்த வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது.  தேவனை நோக்கித் தானியேல் ஜெபித்தபோது அவரது ஜெபத்துக்குப் பதிலை உடனேயே காபிரியேல் தூதன் கொண்டு வருகின்றான். காபிரியேல் தூதன் தானியேலுக்கு அறிவித்த வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம்.

இந்த வசனத்தில் தானியேலை, "நீ மிகவும் பிரியமானவன்" என்று தூதன் கூறுகின்றான். அப்படிப் பிரியமானவனாக இருந்ததால் அவன் வேண்டிக்கொண்ட அதேசமயத்தில் தேவனது பதில் அவனுக்கு அனுப்பப்படுகின்றது.

தானியேலின் ஜெப வாழ்க்கை, தேவனுக்காக தானியேல் காட்டிய பக்தி வைராக்கியம், உயிரே போனாலும் போகட்டும் தேவனுக்கு எதிரான செயல்பாடுகளைச் செய்யமாட்டேன் எனும் உறுதி இவைகளை நாம் தானியேல் புத்தகத்தில் படித்தறியலாம். தானியேலின் அந்த விசுவாசத்தையும் பக்திவைராக்கியத்தையும் தேவன் கனம் பண்ணத் தவறவில்லை.   

அன்பானவர்களே, நமக்கு ஒரு பரலோக அரசாங்கம் உண்டு. நமது தேவைகள் அனைத்தையும் நாம் தெரிவிக்கவேண்டியது அந்த அரசாங்கத்திடம்தான். அங்கிருந்தே நமக்கு அனைத்தும் கிடைக்கின்றன. "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று எழுதுகின்றார் யாக்கோபு.

யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லாத தேவனிடம் நாமும் தானியேலைபோல உண்மையாய் உத்தமமுமாய் இருந்து வேண்டுதல் செய்வோமானால்,  நாமும் தானியேலைப் போல தேவனுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவோம். அப்போது நமது வேண்டுதலுக்கும் தேவன்  உடனடி பதில் தருவார். 

மட்டுமல்ல, தேவன் தானியேலுக்கு பல்வேறு வெளிப்பாடுகளையும் அருளினார். அந்தத் தீர்க்கதரிசனங்கள் இன்றளவும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. 

நாம் வாழும் சமூகத்தில் பல செயல்பாடுகள் தேவனுக்கு ஏற்புடையவை அல்லாதவையாக இருக்கின்றன. சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் எனும் போர்வையில் நம்மை அவைகளைப் பின்பற்றச் செய்திட  சாத்தான் முயற்சிப்பான். நாம் எனவே கவனமாக இருக்கவேண்டும். 

அனைவரையும் அன்பு செய்வது என்பது வேறு அனைவரது செயல்பாடுகளையும் பின்பற்றுவது என்பது வேறு. தேவனுக்குப் பிரியமில்லாத செயல்பாடுகளைத் தவிர்ப்போம்; அனைவரையும் அன்புசெய்வோம். தானியேலைபோல தேவனுக்கு ஏற்புடையவர்களாக  வாழ்ந்து அவருக்கு மிகவும் பிரியமானவன் என்று பெயர் எடுப்போம். 

ஆதவன் 🌞 720 🌻 ஜனவரி 17,  2023 செவ்வாய்க்கிழமை

"அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." ( நீதிமொழிகள் 26 : 2 )

சாபமிடுதல்  சிலருக்கு எப்போதுமே அவர்களை அறியாமலேயே வாயில் வரும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களைச் சபிப்பார்கள். இது ஒரு வியாதிபோல அவர்களுக்கு.

ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "பிரதர் எங்களது பக்கத்து வீட்டுகார பெண்மணி எதற்கெடுத்தாலும் சாபம்போடுகின்றார். காலை எழும்பியதுமுதல் கேட்கும் "விளங்கமாட்டான்", "நாசமாய்ப்போவான்" எனும் வார்த்தைகளே எங்களை மிகவும் மனம் நோகச்  செய்கின்றது.  எங்களுக்கு இது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினார். 

இதுபோல பலர் இந்த உலகத்தில் உண்டு. ஆனால் இந்தச் சாபத்தைக்கேட்டு பலரும் பயப்படுகின்றார்கள். இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் இப்படி காரணமில்லாத சாபங்களை எண்ணிக் கலங்கவேண்டியதில்லை என்று கூறுகின்றது. "அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே தேவ பிள்ளைகளான நாம் இத்தகைய சாபமிடுபவர்களைக்கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை. 

நாம் உண்மையாய்ப் பயப்படவேண்டியது கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்க நாம் தவறும்போது மட்டுமே. ஏனெனில் வேதம் கூறுகின்றது, "அப்படி அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்." ( உபாகமம் 28 : 15 ) என்று.  

மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் வெற்றிச்சிறந்து  நமது சாபங்களையெல்லாம் இல்லாமலாக்கிவிட்டார். நாம் இயேசு கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது அவருடைய பிள்ளைகள் ஆகின்றோம். எனவே,   எந்த சாபமும் நம்மை அணுகாது.

மற்றவர்கள் இடும் சாபத்தைப்பற்றி கூடும் வேதம் நமக்கும் பின்வருமாறு அறிவுறுத்துகின்றது:-  "உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்." ( ரோமர் 12 : 14 ). ஆம், தேவனுக்கு உகந்தவர்களாக வாழும்போது மற்றவர்கள் இடும் சாபம் நம்மேல் பலிக்காது. நாமும் பிறரை சபியாமல் இருக்கவேண்டும். 

அப்படி நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது காரணமில்லாமல் நமக்குக் கூறப்படும் சாபம் ஆசீர்வாதமாக மாறும். மட்டுமல்ல, நம்மைச் சபிப்பவர்கள் மேலேயே அந்த சாபங்கள் வந்து தங்கும்.  

ஆதவன் 🌞 721 🌻 ஜனவரி 18,  2023 புதன்கிழமை

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." ( யோவான் 12 : 49 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது பேசிய பேச்சுக்கள் செயல்கள் அனைத்துமே பிதா தனக்குக் கூறியபடியே இருந்தன. இப்படி அவர் இருந்ததால் பிதா அவரைத் தனியே இருக்கவிடவில்லை. நமக்கு இது ஒரு முன்னுதாரணம். நமது பேச்சுகளும் செயல்களும் இப்படி பிதாவாகிய தேவனுக்கு ஏற்புடையனவாக இருக்கவேண்டியது அவசியம். இப்படி இருப்போமானால் நாம் பேசும்போது நமது சுய பெருமைகள் நம்மைவிட்டு அகன்றிடும். 

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." ( யோவான் 7 : 18 ) என்று வசனம்  கூறுகின்றது. இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களின் பேச்சுக்களை நாம் ஆராய்ந்துபார்ப்போம். பல கிறிஸ்தவ ஊழியர்களது பேச்சுக்கள் பல வேளைகளில் தங்களது சுய பெருமைகளைப் பேசுவனவாகவே உள்ளன. 

தங்களால் செய்யப்பட்ட  அற்புதங்கள், அதிசயங்கள், இத்தனைபேர் தங்களால் குணமானார்கள், தான்  கூறிய தீர்க்கதரிசனங்கள் இதனை நிறைவேறின என்று தங்களைத் தாங்களே புகழ்வனவாக இருக்கும். இத்தகைய பேச்சுக்கள் இவர்கள்  பிதாவாகிய தேவன் அருளியபடி பேசவில்லை தங்கள் சுயமாகவே பேசுகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கின்றன. ஏனெனில் பிதாவாகிய தேவன் இப்படிப் பெருமை பேசுபவரல்ல; பேசுபவர்களை கனம் பண்ணுவதுமில்லை.

பெரும்பாலான ஊழியர்கள் இப்படி சுய புராணங்கள் பேசக்காரணம் பெருமை. தங்களை மற்றவர்களைவிட மேலானவர்கள் என்று மக்கள் கருதவேண்டும், அதன்மூலம் கூட்டமும் காணிக்கைகளும் தங்களுக்குச் சேரவேண்டும் என்பதற்காகவே. 

தேவனுக்கு நாம் முதலிடம் கொடுத்து வாழும்போது நாம் பேசவேண்டியதை பரிசுத்த ஆவியானவரே நமக்குப் போதித்து வழிநடத்துவார். "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரோடு தொடர்பில்லையானால் நாம் சுய புராணங்களையே பேசிக்கொண்டிருப்போம். நமது  பேச்சுகளும் செயல்களும் நம்மை உயர்த்துவதாக, நம்மைப் பெருமைப்படுத்துவனவாகவே இருக்கும். அத்தகைய சுய பெருமைக்காரன் சாதாரண அரசியல்வாதியைப்போலவே இருப்பான். 

"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்." என்று இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தையின்படி வாழ்வதே மெய்யான ஊழியன் செய்யவேண்டியது. ஊழியர்களுக்கு மட்டுமல்ல சாதாரண விசுவாசிகளுக்கும் இதுவே ஏற்புடையது. 

இன்று பிரபலமான கிறிஸ்தவ  ஊழியர்களுக்கு இந்த அனுபவம் இல்லாததால் அவர்களது பேச்சுக்கள் மற்றவர்களால் கேலிபேசக்கூடிய அளவுக்கு மாறிவிடுகின்றன. நமது பேச்சுக்களையும் எழுத்துக்களையும்  வெறும் ஐந்துபேர் கேட்டாலும் படித்தாலும் போதும், நாம் பிதாவாகிய தேவன் அருளிய சத்தியத்தின்படி பேசுவதே சிறப்பு. 

ஆதவன் 🌞 722 🌻 ஜனவரி 19,  2023 வியாழக்கிழமை

"மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7 )

"வினை விதைத்தவன்வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்" என்பது தமிழ் பழமொழி. கோதுமையை விதைத்துவிட்டு நெல்லை அறுவடைசெய்ய முடியாது. எதனை விதைக்கின்றோமோ அதனையே நாம் அறுவடை செய்ய முடியும். உலக காரியங்களில் மட்டுமல்ல; ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே உண்மை. 

இருபத்திநான்கு மணி நேரமும் உலகத்துக்காக உழைத்துவிட்டு அல்லது உலக காரியங்களையே தேடி ஓடிவிட்டு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் எதிர்பார்க்க முடியாது. 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

மாம்ச சிந்தை என்பது எப்போதுமே உலக காரியங்களை நினைத்துக்கொண்டிருப்பது, அவற்றை அடைந்திட என்று பணத்தையும் நேரத்தையும் உடல் உழைப்பையும் செலவழிப்பதைக் குறிக்கின்றது. நாம் உலகினில் வாழ்ந்திட பணம் தேவைதான். ஆனால் மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ்வதில்லை. தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர் வாழ்கின்றான் எனும் தேவனுடைய வார்த்தைகளை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நாம் அமைதியான வாழ்க்கை வாழ தேவனுடைய ஆசீர்வாதம் தேவை. 

"மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்." ( ரோமர் 8 : 6 )

"மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது." ( ரோமர் 8 : 7 )

"தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 8 )

தீமை செய்பவர்களுக்கான பதில் இந்த  உலகத்திலேயே சரிக்கட்டப்படுவதை நாம்  சிலவேளைகளில் நேரடியாகக் கண்டிருக்கலாம். இதனையே நம் முன்னோர்கள், "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" எனப் பழமொழியாகக் கூறியுள்ளனர். கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் இதனை இயற்கையின் நியதி என்பார்கள். நாம் அந்த இயற்கையினையே கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள தேவாதி தேவனை ஆராதிப்பவர்கள்; அவரை அறிந்தவர்கள். எனவே நாம் அதிக எச்சரிகையுடன் வாழவேண்டியது அவசியம்.

நாம் ஆவிக்குரிய சிந்தை  உடையவர்களாக   வாழும்போது மட்டுமே ஆவிக்குரிய   ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இருபத்திநான்கு மணிநேரமும் உலக  ஆசையில் அலைந்துவிட்டு பின்னர்    ஆவிக்குரிய கூட்டங்களில்   கலந்துகொண்டு ஆவியானவரே என்னை அபிஷேகத்தால் நிரப்பும் எனக் கத்திக் கூப்பாடுபோடுவதில் அர்த்தமில்லை.       

ஆம், ஆவிக்குரிய காரியங்களுக்கே முன்னிரிமைகொடுத்துச் செயல்படுவோம். அப்போது நாம் உலக காரியங்களிலும் மேலான ஆசீர்வாதங்களைப் பெற முடியும். 

ஆதவன் 🌞 723 🌻 ஜனவரி 20,  2023 வெள்ளிக்கிழமை

"இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்." ( சங்கீதம் 48 : 14 )

இன்றைய வசனம் நமக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் தரும் தேவ வார்த்தைகளாகும். இன்று நமக்கு உலகினில் வரும் பிரச்சனைகள், துன்பங்கள் இவைகளைக்கண்டு நாம் மனம் தளராமல் இருக்க இந்த வசனம் நமக்கு உதவுகின்றது.  இந்த தேவன் என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது தேவன் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உலகினில் உள்ள மனிதர்கள், நமக்கு உதவும் தாய், தகப்பன் மற்றும் உறவுகள் இவர்களெல்லாம் கொஞ்சகாலம் நமக்கு உதவ முடியும். சில குறிப்பிட்ட காரியங்களில் மட்டும் நமக்கு உதவிட முடியும். ஆனால் நமது தேவன் உயிருள்ளவராக நம்மோடே இருப்பதால்  நமது மரண காலம்வரை நம்மை நடத்துபவராக இருக்கின்றார். 

இதனையே ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே அறிந்தேன்;"  ( எரேமியா 1 : 5 ) என்று. 

"என் கருவை உம்முடைய கண்கள் கண்டன; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது." ( சங்கீதம் 139 : 16 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.  அதாவது நாம் உருவாகுமுன்பே நம்மைக் கண்டவர், நமது உறுப்புகளில் ஒன்றுகூட உருவாகுமுன்பே நம்மை அறிந்தவர் நம்மைக் கைவிடுவாரா?

அன்பானவர்களே, எனவே நாம் தைரியமாய் இருப்போம். நம்மைப் படைத்து நம்மைப் பல்வேறு உறுப்புகளால் அலங்கரித்தவர்  நம்மோடுகூட இருக்கின்றார். இறுதி மூச்சுவரை அவர் நம்மை நடத்திட வல்லவர். இந்த நம்பிக்கை நம்மிடம் இல்லாவிட்டால் நாம் இறுதிவரை வாழ்க்கையோடு போராடிக்கொண்டேதான் இருப்போம்.

இஸ்ரவேல் மக்களை வழிநடத்திய தேவன் அவர்களோடு தான் வருவதாக வாக்களித்து, தான் அவர்களோடு வருவதைப் பல்வேறு தெளிவான முறைமைகளில்  வெளிப்படுத்தியும் இஸ்ரவேல் மக்கள் அவிசுவாசம்கொண்டு, "இந்தப் பாலை நிலத்தில் நம்மை அழித்துப்போடவா எங்களை எகிப்திலிருந்து வரவழைத்தீர்" என முறுமுறுத்தனர். ஆனால் அவர்கள் கானானைக் காணும்முன்பே அழிந்துபோயினர். 

நாம் அப்படி அழிந்துபோகாமலிருக்க அவர்மேல் உறுதியான விசுவாசத்தோடு வாழ்வோம். இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் என்று அறிக்கையிடுவோம்.

ஆதவன் 🌞 724 🌻 ஜனவரி 21,  2023 சனிக்கிழமை

"அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்."  ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 10 )

"நான் கேட்டதையெல்லாம் தேவன் எனக்குத் தந்துள்ளார், என்னை பல  ஆசீர்வாதங்களால் நிறைத்துள்ளார்,  கார், வீடு, நல்ல வேலை எனக்கு இருக்கிறது. இது தேவன் எனக்குத் தந்த மிகப்பெரிய ஆசீர்வாதம்." என்று பலரும் சாட்சி கூறுகின்றனர்.

ஆனால் நாம் கவனிக்கவேண்டியது  என்னவென்றால்  இந்த ஆசீர்வாதங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும், எந்தவித மத நம்பிக்கையுமில்லாத நாத்திகர்களும் அனுபவிப்பதுதான். எனவே இப்படி உள்ள ஆசீர்வாதமே போதுமென்றால் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதுதெளிவு. ஏனெனில் கிறிஸ்து இல்லாமலேயே இவைகளைப் பெற முடியுமானால் நாம் கிறிஸ்துவை ஆராதித்த தேவையில்லைதானே?

கிறிஸ்தவத்தின் மேன்மையே ஆத்தும இரட்சிப்புத்தான். இந்த இரட்சிப்பு அனுபவத்தை பல ஊழியர்களும்கூட  அறியாமலும், இதுபற்றிய தெளிவும் இல்லாமலுமிருப்பதால்தான் இற்று கிறிஸ்தவ போதனைகளிலும் குழப்பங்கள் நிலவுகின்றன. "........... இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 ) என வாசிக்கின்றோம். அப்படியானால் இரட்சிப்பு எவ்வளவு மேன்மையானது; முக்கியமானது என்று விளங்கும். ஆம், உலக ஆசீர்வாதங்களல்ல, பாவமன்னிப்பும் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும் இரட்சிப்புமே கிறிஸ்தவத்தின் அச்சாணி. 

இன்றைய வசனத்தில் இப்படி இரட்சிப்பு அனுபவம் பெற்று மரித்த மக்கள் கூட்டத்தைத்தான் அபோஸ்தனாகிய யோவான் காண்கின்றார். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.

இந்த  மக்கள் அனைத்து ஜாதி, மதம், இனம், நாடுகளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இதனையே யோவான், "இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 9 ) என்று கூறுகின்றார். 

உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே தேவனைத் தேடுபவர்கள் இந்த அனுபவத்தைப் பெறமுடியாது. அன்பானவர்களே, "இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்"  என்ற வசனம் நம்மைக் கிறிஸ்துவின் இரட்சிப்பினை அடைந்திட முயற்சியெடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

ஆட்டுக்குட்டியானவரது இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட உறுதியுடன் வேண்டுவோம்.  நமது பாவங்களை மறைக்காமல் அவரிடம் ஒப்புவித்து மன்னிப்பை வேண்டுவோம்.  பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வோம். அப்போது நாமும் இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று மறுமையில்  ஆர்ப்பரிக்க முடியும். 

ஆதவன் 🌞 725 🌻 ஜனவரி 22,  2023 ஞாயிற்றுக்கிழமை

"இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 )

வேத அறிஞனான எஸ்றா  எனும் தேவ மனிதனைக் குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. தேவனுடைய ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்ட அவரது சிறப்புகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. 

முதலாவது, "எஸ்றா தேறின வேதபாரகனாயிருந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேறின வேத அறிஞராக அவர் இருந்தார். மட்டுமல்ல, அவர் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. மாறாக, "கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்." ( எஸ்றா 7 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

எஸ்றா அப்படி இருந்ததால், தேவனாகிய கர்த்தரின் கரம் அவர் மேல் இருந்தது. எனவே, "அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." 

வேத அறிஞரான எஸ்றா தனது சுய லாபத்துக்காக அரசாங்கத்திடம் உதவி கேட்கவில்லை; மாறாக தேவனுடைய பழுதுபட்ட ஆலயத்தைக் கட்டி எழுப்ப உதவிகோரினார். 

ஆனால் தங்களை வேத அறிஞர்கள் என்றும் கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொள்ளும் இன்றைய பிரபல ஊழியர்களை நினைத்துப்பாருங்கள். இவர்கள் தங்களது பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்குத் தேவையான உதவிகளுக்கு அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.  தாங்கள்  வருமானவரி மோசடியிலிருந்து விடுபடவும், தங்கள்மேலுள்ள கோர்ட்கேஸ் தள்ளுபடியாகவும் அரசாங்க உதவியை நாடித் திரிகிறார்கள். 

தேவனாகிய கர்த்தருடைய கரம் அவர்கள்மேல் இல்லாதபடியினால்,  அதிகாரத்திலுள்ளவர்கள்  கேட்டவைகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் சாதாரண மக்கள் இந்த அறிவு இல்லாமலிருப்பதால் இந்தப் பிரபலங்களை கடவுளின் பிரதிநிதிகளாக நம்பி இவர்கள்பினால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எஸ்றாவைப்போல உண்மையும் உத்தமுமான ஊழியர்கள் இன்றும் உண்டு. அவர்களை நாம்தான் தேடிக் கண்டுகொள்ளவேண்டும். ஆனால் அப்படித் தேடி அவர்களைகூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையானால் அத்தகைய  விசுவாசி எப்படி தேவனைக் கண்டுகொள்ளமுடியும்?  

பரிதாபத்துக்குரிய நிலையில் கிறிஸ்தவ விசுவாசிகள்! பரிசுத்த ஆவியானவர் நமது மனக்கண்களைத் திறந்திட வேண்டுதல்செய்வோம்; உண்மையின் வெளிச்சத்தில் தேவனைத் தேடுவோம். 

ஆதவன் 🌞 726 🌻 ஜனவரி 23,  2023 திங்கள்கிழமை

உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்?  (1 கொரிந்தியர் 1:11,12) 

கிறிஸ்துவைவிட்டு ஊழியர்களைத் தேடி  ஓடும் மக்கள் கூட்டம் இன்று பெருகிவிட்டது. சினிமா நடிகர்களுக்கு  ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுபோல இன்று கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இது இன்று நடப்பதல்ல; கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலேயே இருந்துள்ளது. இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் கண்டிக்கின்றார். 

தனிப்பட்ட ஊழியர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும்போது நாம் கிறிஸ்துவைவிட்டு விலகிவிடுகின்றோம். ஊழியரின் தவறான போதனைகளை அங்கீகரிக்கின்றோம் என்று பொருள்.  ஊழியர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட நட்சத்திர அந்தஸ்து கொடுப்பது தவறு. ஊழியர்களுக்கு மரியாதையும் கனமும் கொடுக்கவேண்டுமேத் தவிர அவர்களை அரசியல் தலைவனைப்போலோ, சினிமா நடிகனைப்போலோ பின்பற்றவேண்டிய அவசியமில்லை. 

கிறிஸ்துவின் ஒளியை உள்வாங்கி நற்செய்தி அறிவிப்பவர்களே ஊழியர்கள். ஆனால் தனிப்பட்ட ஊழியர்களை நாம் சார்ந்துகொள்ளும்போது கிறிஸ்துவின் நற்செய்தியை அவர்கள் தவறாகவோ திரித்தோ பிரசங்கித்தாலும் கைதட்டி ரசிக்கும் ரசிகர்கள் ஆகிவிடுகின்றோம். 

"நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்." என்கிறார் பவுல் அடிகள். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் ஊழியர்களாது பெயர்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உங்களது தற்போதைய அபிமான ஊழியரின் பெயரைப் போட்டு இந்த வசனத்தைச்சொல்லிப்பாருங்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் பவுல் கேட்கின்றார்:- "பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? " என்று. அன்பானவர்களே, நீங்கள் தேடி ஓடும் இந்த குறிப்பிட்ட ஊழியனா உகளுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே நோக்கிப்பார்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

எவ்வளவு பிரபல பிரசங்கியாக இருந்தாலும், எவ்வளவு ஆழமான இறையியல் கட்டுரைகளை ஒருவர் எழுதினாலும் நாம் அவரது கருத்தை நமக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர அவரை சினிமா நடிகர் போலக் கருதி அவர்  பின்னால் ஓடுபவர்களாக  இருப்போமானால் நாம் கிறிஸ்துவைவிட்டு விலகி விக்கிரக ஆராதனை செய்கின்றோம் என்று பொருள்.  

நமக்காகச்  சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?
  
ஆதவன் 🌞 727 🌻 ஜனவரி 24,  2023 செவ்வாய்க்கிழமை

"சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 )

ஜெபத்தைக்குறித்த ஒரு சத்தியத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. நாம் ஜெபிக்கும்போது தேவ சித்தமறிந்து ஜெபிக்கவேண்டியது அவசியம். மேலும், இன்றைய வசனம், ஜெபிக்கும்போது சந்தேகமில்லாமல் உறுதியாக ஜெபிக்கவேண்டும் என்று கூறுகின்றது.   

சிறு குழந்தைகளாய் இருந்தபோது நாம் நமது அம்மா அப்பாவிடம் ஏதாவது கேட்கும்போது நாம் கேட்பது தேவையானது அல்லது நல்லது என அவர்கள் கருதினால்,  "வாங்கித் தருகிறேன் என்று கூறுவார்கள்".  நாம் அப்போது அவர்கள்மீது சந்தேகப் படமாட்டோம். கையில் காசு வந்தவுடன் வாங்கித்தருவார்கள் என்று பொறுமையோடு காத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்னதுபோல நாம் கேட்டதை வாங்கித்தரும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியடையும். 

தேவனும் நமது தாயாகவும் தகப்பனாகவும் இருப்பதால் நாம் நமது மண்ணக தாய் தகப்பனை நம்புவதுபோல தேவனை விசுவாசிக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவும் ஜெபத்தைப்பற்றிக்  கூறும்போது, "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறினார். 

ஆனால் நாம் அனைவருமே இந்த விஷயத்தில் இந்த உறுதியைக் கைக்கொள்ளத் தவறிவிடுகின்றோம். விசுவாசத்தைப்பற்றி எவ்வளவுதான் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும், எழுதினாலும் சில வேளைகளில் நமக்கும் சந்தேகம் வந்துவிடுகின்றது.

இப்படி சந்தேகப்படும் நம்மை எச்சரிப்பதுபோல இன்றைய வசனம் நமக்குக் கூறுகின்றது, சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." என்று.

கடல் அலையானது நிம்மதியின்றி அலைந்து குமுறுவதுபோல சந்தேகப்படும் மனிதனின் உள்ளமும் குமுறும், குழம்பும். விசுவாசம் என்பதை ஆவியின் வரங்களில் ஒன்றாகவும் (1 கொரிந்தியர் 12:9) ஆவியின் கனிகளில் ஒன்றாகவும் (கலாத்தியர் 5:22) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது விசுவாச வரத்தை நாம் தேவனிடம் வேண்டிப் பெறும்போது அது நம் வாழ்க்கையில் கனியாக வெளிப்படும். எனவே நாம் அனைவருமே நமது ஜெபங்களில் இந்த வரத்தைப் பெறும்படி வேண்டுவோம்.   

ஏனெனில், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்கிறது தேவ வசனம். தேவனுக்குப் பிரியமாக இருக்க முயற்சிப்போம்; நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.

ஆதவன் 🌞 728 🌻 ஜனவரி 25,  2023 புதன்கிழமை 

"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

நாம் நமது பாவங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீட்கப்படும்போது பரிசுத்த ஆவியானவரை முத்திரையாகப் பெற்றுக்கொள்கின்றோம்.  இந்த ஆவியானவர் நமக்குள்ளேயே இருக்கின்றார். நமக்கு வழிகாட்டுகின்றார், நாம் எப்படி நடக்கவேண்டுமென்று போதிக்கின்றார். 

ஆனால் தேவன் வலுக்கட்டாயமாக தனது எண்ணத்தை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. அவர் மனிதர்களுக்கென்று தனிப்பட்ட உரிமையையும், முடிவெடுக்கும் திறனையும் கொடுத்துள்ளார். நமக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் ஆவியானவர் தருவாரேத்  தவிர நம்மை அவற்றைக் கடைபிடிக்க வலுக்கட்டாயப் படுத்தமாட்டார். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என்று கூறுகின்றார். நாம் தேவ வழிகளைவிட்டு விலகும்போது, தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச் செய்யும்போது, பேசும்போது அது ஆவியானவரைத் துக்கப்படுத்துகின்றது. 

நமது தாய், தகப்பன்களை உதாரணமாகக் கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். நமது பெற்றோர்கள் நம்முடனேயே இருந்தாலும் நமது சில  செயல்கள் அவர்களைத் துக்கத்துக்குள்ளாக்குகின்றது. காரணம் அவர்கள் அவற்றில் பிரியப்படுவதில்லை. நமது பார்வையில் நாம் செய்வதும் பேசுவதும் சரிபோலத் தெரிந்தாலும்  அது சில வேளைகளில் அவர்களைத் துக்கப்படச் செய்கின்றது. 

இதுபோலவே, நமது செயல்பாடுகள் தேவனைத் துக்கப்படுத்துகின்றன. ஆவியானவர் உடனேயே நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவதில்லை. அவர் வேதனையோடு அமைதியாக இருக்கின்றார். ஆனால் நாம் தொடர்ந்து தேவனுக்கு எதிரானச் செயல்பாடுக்கைச் செய்யும்போது ஆவியானவரின் தொடர்பினையும் ஆலோசனைகளையும் இழந்துவிடுகின்றோம்.  தேவனைவிட்டு விலகிவிடுகின்றோம். 

அன்பானவர்களே, ஆவியானவரின் குரலைக்கேட்கும் அனுபவத்தையும் அப்படிக் கேட்டபடியே நடக்கவும் நாம் முற்படவேண்டும். இல்லையெனில் சாதாரண உலக மனிதர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்." ( சங்கீதம் 32 : 8, 9 )

ஆதவன் 🌞 729 🌻 ஜனவரி 26,  2023 வியாழக்கிழமை 

"உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்." ( லுூக்கா 11 : 36 )

ஆவிக்குரிய வாழ்வின் மிக முக்கிய ஒரு சத்தியத்தை இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  பொதுவாக ஜெபிப்பது, உபவாசிப்பது, காணிக்கைகள் கொடுப்பது இவைகளையே கிறிஸ்தவத்தில் ஊழியர்களும் விசுவாசிகளும் முக்கியமானதாகக் கருதுகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து நமது சரீரம் தூய்மையானதாக இருக்கவேண்டுமென்று கூறுகின்றார். 

நமது உடலானது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயமாயிருக்கிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், இந்த ஆலயமாகிய உனது சரீரம் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால் ஒரு விளக்கு வெளிச்சம் கொடுப்பதுபோல நீ மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பவனாக இருப்பாய். வெளிச்சம் கொடுக்கும் வாழ்க்கையே இருளிலுள்ள மக்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க உதவிடும்.

அதாவது, நமது உடலால் நாம் பாவம் செய்யாமல் அதனைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போஸ்தலனாகியபவுல் அடிகளும் ,  "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என்று கூறுகின்றார். 

இன்று பலஆவிக்குரிய கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப்  பெற்று மக்களிடம் தங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட விரும்புகிறார்கள்.  சிறப்பான வரங்கள் தங்களுக்கு இருந்தால் அது மக்கள் மத்தியில் தங்களை மதிப்புமிக்கவர்களாக மாற்றுமென்று நினைத்து வரங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். ஆனால் தேவனுக்குமுன் நமது உடலால் நாம் எப்படி இருக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றனர். 

நமது ஒவ்வொரு உறுப்புக்களாலும்  நாம் பாவம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே வரங்களுக்காக அல்ல; நம்மைத் தூய்மையானவர்களாகக் காத்துக்கொள்ள ஜெபிக்கவேண்டியதே முக்கியம். 

"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என எச்சரிக்கிறார் பவுல் அடிகள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் "ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு." ( லுூக்கா 11 : 35 ) என எச்சரிக்கிறார். நமது உடலை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள நமது சுய முயற்சியால் கூடாது. எனவே அதற்கான பலத்தை முதலில் தேவனிடம் வேண்டுவோம். அப்போது தேவனது ஆவியானவர்தாமே நம்மை பரிசுத்த பாதையில் நடத்துவார். நமது எண்ணம்போலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கும்.

ஆதவன் 🌞 730 🌻 ஜனவரி 27,  2023 வெள்ளிக்கிழமை 

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுடாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 )

இந்த உலகத்திலுள்ள மக்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அற்பமாக எண்ணுவதும், கேலி பேசுவதும் உண்டு. 

ஆனால் இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிக பாவச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். நான் கம்யூனிச இயக்கத்தில் இருந்தபோது பல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பார்த்துள்ளேன். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட நல்ல நேர்மையான  வாழ்க்கையே வாழ்கின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே நல்லவர்களாய் இருந்திருந்தால்  இந்த உலகம் அமைதிப் பூங்காவாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெளிவுபடுத்துகின்றார். அதாவது நீ உன்னை கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று கூறிக்கொள்கிறாய், அது நல்லதுதான் ஆனால் பிசாசுகளும் கூட கடவுள் ஒருவர் உண்டு என நம்பி நடுங்குகின்றன. நீ உனது செயல்களை மாற்றிடாமல் இருந்தால் உனக்கும் பிசாசுக்கு வித்தியாசமில்லை என்பதே அவர் கூறுவது.

தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஆலயங்களுக்குச் செல்வதும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதும்,  காணிக்கைகள் கொடுப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் மட்டும் போதாது. நமது செயல்பாடுகள் தேவனுக்கேற்ற செயல்பாடுகளாக இருக்கவேண்டும். 

தேவனை விசுவாசிக்கும் நாம் நேர்மையாக வாழ்ந்து பிறருக்குச் சாட்சியாக விளங்கவேண்டும். தேவனையும் ஆராதித்துவிட்டு வாழ்க்கையில் துன்மார்க்கச் செயல்பாடுகள் இருக்குமானால் நாம் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசமும், நமது தேவ பக்தியும் வீண். நாம் ஒரு செத்த வாழ்க்கையே வாழ்கின்றவர்களாக இருப்போம். அதனையே இந்த வசனம், "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" என்று கூறுகின்றது.

கடவுள்மேலுள்ள நமது விசுவாசம் உண்மையானால் அவரை முற்றிலும் நம்புகிறவர்களாக இருப்போம். அவரால் எனது வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் தர முடியும் என்று நம்புகிறவர்களாக இருப்போம்.  

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு ஆபிரகாமின் விசுவாசத்தை எடுத்துக்கூறுகின்றார். ஆபிரகாம் தேவனை வெறுமனே விசுவாசிக்கமட்டும் செய்யவில்லை; விசுவாசத்தைச் செயலில் காட்டினார். ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கும் நாமும் நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்; அப்போதுதான் மற்றவர்களும்  தேவனை விசுவாசிக்கமுடியும்.

ஆதவன் 🌞 731 🌻 ஜனவரி 28,  2023 சனிக்கிழமை 

"நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." ( லுூக்கா 6 : 45 )

இயேசு கிறிஸ்து கூறிய இந்த வசனத்தின் பொருளில் ஒரு தமிழ் பழமொழியும்  உண்டு. அது, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது. நம்மிடம் இருப்பதுதான் நம்மிலிருந்துவெளிப்படும்; நம்மிடம் இருப்பதைத்தான் நாம் பிறருக்குக் கொடுக்க முடியும். 

இதனை நாம் நமது அனுபவங்களில் பார்க்கலாம். பலர் கூடியுள்ள வீட்டு நிகழ்ச்சிகளிலோ கடைவீதிகளில் சந்திக்கும்போதோ  சிலர் எப்போதும் சொத்துகளைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். "அங்கே ஒரு அரை ஏக்கர் கிடக்கிறது, இங்கே ஒரு பத்து சென்ட் நிலம் கிடக்கிறது..." என்பதாக இருக்கும் இவர்களது பேச்சு. 

பெண்கள் பெரும்பாலும் சேலைகள், நகைகள் பற்றியே பேசுவார்கள். சிலர் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றியே பேசுவார்கள். அவர்களது குறைகள், அல்லது அவர்கள் வீட்டில் அடக்கும் நிகழ்ச்சிகள் இவைகளையே பேசுவார்கள். மேலும் சிலர் தங்களைப்பற்றி, தங்கள் குடும்பம், பிள்ளைகள், தங்களது தொழில், பதவி இவைகளைப்பற்றியே பேசுவார்கள். மற்றவர்கள் இவர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்றுகூட இவர்கள் பார்ப்பதில்லை.  

ஆம், இவர்கள்  ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போமானால் அந்த எண்ணங்களே இவர்களது இருதயத்தில் நிறைந்துள்ளது என்று பொருள். அவையே வார்த்தைகளாக வெளிவருகின்றன. 

ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே நடைபெறுகின்றது. தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பண ஆசை உள்ளவர்கள், பேசும் பேச்சுக்கள் ஜெபங்கள் இவை அனைத்தும் இவர்களது இந்த ஆசையைத் தீர்ப்பதற்காகவே இருக்கும். 

உலக ஆசீர்வாதங்களை மட்டுமே  பிரசங்கிக்கும் ஊழியர்களின்  இருதயமும் உலக இச்சையால் நிரம்பியவையே. இத்தகைய ஊழியர்களால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சத்தியங்களைப் பிரசங்கிக்க முடியாது. தங்களது இருதயத்தின் ஆசையையே அவர்கள் மற்றவர்களுக்குப் போதனையாகக் கொடுப்பார்கள். அவர்களது போதனைகள் மற்றும் செயல்பாடுகள் இவை இன்னும் அதிகம் பணம் சேர்க்கும் எண்ணத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.

நமது இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டு உருவாக்கிய இரட்சிப்பு குறித்த ஆர்வமும், அவர்மேல் உண்மையான அன்பும்  இன்னும் நாம் ஆவிக்குரிய வளர்ச்சிநிலையினை அடையவேண்டும் எனும் எண்ணமும் இருக்குமானால் அவை குறித்தே பேசுவோம். அவைகள் குறித்தே சிந்திப்போம்.

அன்பானவர்களே, நமது இருதயத்தில் எத்தகைய சிந்தனைகள் இருக்கின்றன என்பதை நிதானித்துப்பார்ப்போம். இன்னமும் இருபத்திநான்கு மணி நேரமும் உலக காரியங்களையே சிந்தித்து, அவைகளையே பேசிக்கொண்டிருப்போமானால் நாம் நம்மை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்வது பொய்.   நமது உண்மை நிலையினை தேவன் அறிவார்.  "நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
( 1 யோவான்  3 : 20 )

ஆதவன் 🌞 732 🌻 ஜனவரி 29,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 26 )

நாம் இந்த பாரத நாட்டில், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட ஊரில் பிறந்துள்ளோம் என்றால் அது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் எங்கு, யாருக்குக் குழந்தையாக பிறக்கவேண்டுமென்பது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் நமது குடியிருப்பை மாற்றுகின்றோம் அல்லது திருமணமாகி வேறு ஒரு இடத்துக்குச் செல்கிறோம் என்றால் அதுவும் தேவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.  இதனையே, "முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தேனே நகரில் மார்ஸ் மேடையில் நின்று அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வசனத்தைக் கூறுகின்றார். இப்படி நம்மை குறிப்பிட்ட இடத்தில வாழச் செய்ய காரணம் என்ன என்பதையும் அவர் அடுத்த வசனத்தில் கூறுகின்றார்:-  "கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 27 ) 

இந்த மனிதர்கள் எப்படியாவது தன்னை அறியவேண்டும் என்பதற்காக தேவன் இப்படி மனிதர்களைக் குறிப்பிட்ட இடங்களில் வாழச் செய்துள்ளார் என்று கூறுகின்றார். நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர் நமக்குத் தூரமானவர் அல்ல.  நமது வேதாகமம் இப்படி பல்வேறு இடங்களில் வாழ்ந்த சுமார் 35 நபர்களால்தான் எழுதப்பட்டது. பல்வேறு சூழல்களில் வாழ்ந்து உண்மை தேவனைக் கண்டறிந்தவர்கள் இவர்கள். 

சிலர், "இந்த ஊரில் வாழவே எனக்குப் பிடிக்கவில்லை"  என்று  முறுமுறுப்பார்கள்.  சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து அந்த அனுபவத்தால் நமது நாட்டைக் குறைகூறிக்கொண்டிருப்பார்கள். எதெற்கெடுத்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் நமது நாட்டைஒப்பிட்டு குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.

இருப்பதைக்கொண்டு நிறைவடைவதையே தேவன் விரும்புகின்றார். மேலும் எப்போதும் குறைகளையே பார்க்காமல் நமது நாடு, நமது ஊர் இவற்றின் சிறப்புகளையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பொதுவாக நமது நாட்டிற்கு  பிற நாடுகளைவிட சிறப்புகள் பல உண்டு.  இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல நாம் இங்கு இருக்கும்வரை நமக்கு தேவன் இந்த நாட்டில் தந்துள்ள நன்மைகள் தெரியாது. வெளி நாடுகளில் சென்று தங்கியிருக்கும் பெரும்பாலான மக்கள் நமது சொந்த நாட்டில் உள்ள சூழ்நிலைகளையே விரும்புகின்றனர். 

எனவே தேவன் நமக்குத் தந்துள்ள நாட்டிற்காக; நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்காக நன்றி சொல்பவர்களாக வாழ்வோம்.  "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்கின்றது இன்றைய வசனம். ஆம், உலகின் கோடிக்கணக்கான மனிதர்களது இரத்தமும் வெறும் நான்கே நான்கு முக்கிய வகைகளுக்குள் அடக்கமாகியுள்ளது. இது தேவன் நாடு, மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்புரிபவர் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

தேவன் தந்துள்ள வாழ்க்கைச் சூழலுக்கு நன்றி கூறுவோம். நாடு, மொழி, கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டக்  கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடுவோம். "தேடுகிற எவனும் கண்டடைகிறான்."

ஆதவன் 🌞 733 🌻 ஜனவரி 30,  2023 திங்கள்கிழமை 

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை நாம் வாசிக்கும்போது அது, "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மையாய்  நடக்கிறது" என்று கூறாமல் "நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" என்று கூறுவதைக் கவனிக்கலாம். 

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கிறது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. நமது வாழ்க்கையில் நன்மையையும் தீமையும் நடக்கலாம். ஆனால் நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் நமக்கு நடக்கும் தீமையையும் அவர் நன்மைக்கேதுவாக மாற்றிடுவார். 

இதற்கு யோசேப்பின் வாழ்க்கை நமக்குச்  சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது. தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் யோசேப்பின் இளமைப்பருவம் துன்பத்திலேயே தொடர்ந்தது. தாயை இழந்து, சகோதரர்களால் பகைக்கப்பட்டு, சகோதரர்களே அவனை இஸ்மவேலருக்கு 20 வெள்ளிக்காசுக்கு விற்றுவிட்ட பின்பும் அவனது துன்பம் முடிவுக்கு வரவில்லை.  எகிப்தில் அநியாய குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவாழ்க்கை வாழக்கூடிய அவல நிலைமை. 

ஆனால் தேவன் அவனோடே இருந்தார். அவனது அனைத்துத் துன்பங்களையும் நன்மையாக மாற்றினார். ஆம், யோசேப்பின் துன்பம் அவனை எகிப்தின் பிரதம மந்திரியாக மாற்றிட தேவன் அனுமதித்தத்  துன்பம்; அதற்கானத திட்டம்.  "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்". ( ஆதியாகமம் 50 : 20 ) என யோசேப்பு மகிழ்ச்சியுடன் கூறுகின்றான். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போதும் நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றதென்றால் தேவன் நமக்கு வேறு திட்டம் வைத்திருக்கின்றார்; நமது துன்பங்களை நன்மைக்கேதுவாக மாற்றுவார் என்று பொருள். மேலும் நாம் மேலும் மேலும் அவரை அறிந்துகொள்ளவும் தேவன் நமது துன்பங்களை  நன்மையாக மாற்றி அவரை அறியச் செய்கின்றார்.  எனவேதான் சங்கீத ஆசிரியர், "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்கின்றார். 

எனவே, நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது ஏற்படும் துன்பங்களைக்கண்டு அஞ்சிடாமல், கலங்கிடாமல்  அதற்கு அப்பால் தேவன் நமக்கு வைத்திருக்கும் நன்மைகளை எண்ணி மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருப்போம். ஆம்,   தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று கூறப்பட்டுள்ள தேவ வார்த்தைகள் மெய்யானவைகள். மகிழ்ச்சியுடன் அடுத்து வருவதை எதிர்பார்த்திருப்போம். 

ஆதவன் 🌞 734 🌻 ஜனவரி 31,  2023 செவ்வாய்க்கிழமை 

"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 )

சிலுவையைப்பற்றிய உபதேசம் என்பது என்ன?  "கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காகவே பாடுபட்டு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு இரத்தம்சிந்தி அதன்மூலம் நித்திய இரட்சிப்பை ஏற்படுத்தினார் என்பதும், இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுவோம்" என்பதும்தான்.

இது சாதாரண மனித அறிவினால் புரிந்துகொள்ளமுடியாததும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். காரணம் மனித ஜென்ம சுபாவம் ஆவிக்குரிய சத்தியங்களுக்கு முரணாகவே எப்போதும் இருக்கின்றது. இதனால்தான் பவுல் அடிகள், "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 14 ) என்று கூறுகின்றார். ஆம், கெட்டுப்போகின்ற உலக மனிதர்களுக்கு இது பைத்தியக்கார உபதேசம்போலவே இருக்கும்.

1993 ஆம் ஆண்டுக்குமுன் கம்யூனிச சித்தாந்தத்துக்கு அடிமையாகியிருந்தபோது நானும் இப்படியே எண்ணிக்கொண்டிருந்தேன். இயேசு கிறிஸ்து எனும் ஒரு மனிதன் இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன்பின்பும் அதுபற்றியே முட்டாள்தனமாகப் பேசிப் பேசி கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். ஆனால் வெறுப்போடு அல்ல; புரியாமல் நான் அப்படி எண்ணியதால் இரக்கம் பெற்றேன். கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். 

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் மரணமடைந்த ஒருவரது இரத்தம் நமது பாவங்களை எப்படி மன்னிக்க முடியுமென்று மனித அறிவின் மூலம் ஆராய்ச்சி செய்தால் நாம் கெட்டுபோனவர்களும் பைத்தியமானவர்களுமாகவே இருப்போம். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட சிலுவையின் சத்தியங்களை வெறுமனே வாயினால் கிளிப்பிள்ளைபோலக் கூறிக்கொள்கிறார்களே தவிர அனுபவபூர்வமாக இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறுவதற்கு முயலுவதில்லை. ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் படித்தவற்றையும் பிரசங்கத்தில் கேட்பதைவைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பு உண்டு என்று கூறிக்கொள்கின்றனர். 

புரியாத சத்தியத்தைப் புரியாமல் "ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவது நாம் பொய்யர்கள் என்பதையே காட்டும். ஆண்டவரே எனக்கு உண்மையைப் புரியவைக்க கிருபைசெய்யும் என வேண்டும்போது மேலான சத்தியங்களை அறிந்துகொள்வோம். 

தேவனது வல்லமை மகத்தானது. ஆம், சுவிசேஷ சத்தியங்களை பைத்தியக்கார உபதேசம் எனக் கூறிக்கொண்டிருந்த பலர் அதிசயப்படத்தக்க விதத்தில் பிரசங்கங்களைக் கேட்டு இரட்சிப்பு அனுபவம் பெற்றுள்ளனர். பல சாட்சிகள் இதற்கு உண்டு. சுவிசேஷ கூட்டங்களைக் கேலி செய்தவர்கள்,  கூட்டங்கள் நடத்தவிடாமல் தடைசெய்தவர்கள், வேதாகமத்தை தீயிட்டு எரித்தவர்கள் பலர் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வதை நாம் இன்றும் காண்கின்றோம்.  

இதனையே, "தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 ) என்று பவுல் அடிகள் கூறுகின்றார். சுய லாபம் தேடும் கடின மனதுள்ள துன்மார்க்கருக்கு சிலுவையைப்பற்றிய உபதேசம் பைத்தியமாயிருக்கிறது, ஆனால் அதனை ஏற்றுக்கொண்டு வாழும் இரட்சிக்கப்பட்டிருக்கின்ற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

புரியாத சத்தியத்தைப் புரியாமல் "ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவது நாம் பொய்யர்கள் என்பதையே காட்டும்.

ஆதவன் 🌞 734 🌻 ஜனவரி 31,  2023 செவ்வாய்க்கிழமை 

"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 )

சிலுவையைப்பற்றிய உபதேசம் என்பது என்ன?  "கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காகவே பாடுபட்டு சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டு இரத்தம்சிந்தி அதன்மூலம் நித்திய இரட்சிப்பை ஏற்படுத்தினார் என்பதும், இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுவோம்" என்பதும்தான்.

இது சாதாரண மனித அறிவினால் புரிந்துகொள்ளமுடியாததும் ஏற்றுக்கொள்ளமுடியாததுமாகும். காரணம் மனித ஜென்ம சுபாவம் ஆவிக்குரிய சத்தியங்களுக்கு முரணாகவே எப்போதும் இருக்கின்றது. இதனால்தான் பவுல் அடிகள், "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்ற பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 14 ) என்று கூறுகின்றார். ஆம், கெட்டுப்போகின்ற உலக மனிதர்களுக்கு இது பைத்தியக்கார உபதேசம்போலவே இருக்கும்.

1993 ஆம் ஆண்டுக்குமுன் கம்யூனிச சித்தாந்தத்துக்கு அடிமையாகியிருந்தபோது நானும் இப்படியே எண்ணிக்கொண்டிருந்தேன். இயேசு கிறிஸ்து எனும் ஒரு மனிதன் இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன்பின்பும் அதுபற்றியே முட்டாள்தனமாகப் பேசிப் பேசி கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். ஆனால் வெறுப்போடு அல்ல; புரியாமல் நான் அப்படி எண்ணியதால் இரக்கம் பெற்றேன். கிறிஸ்துவை அறிந்துகொண்டேன். 

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் மரணமடைந்த ஒருவரது இரத்தம் நமது பாவங்களை எப்படி மன்னிக்க முடியுமென்று மனித அறிவின் மூலம் ஆராய்ச்சி செய்தால் நாம் கெட்டுபோனவர்களும் பைத்தியமானவர்களுமாகவே இருப்போம். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட சிலுவையின் சத்தியங்களை வெறுமனே வாயினால் கிளிப்பிள்ளைபோலக் கூறிக்கொள்கிறார்களே தவிர அனுபவபூர்வமாக இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறுவதற்கு முயலுவதில்லை. ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் படித்தவற்றையும் பிரசங்கத்தில் கேட்பதைவைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பு உண்டு என்று கூறிக்கொள்கின்றனர். 

புரியாத சத்தியத்தைப் புரியாமல் "ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுவது நாம் பொய்யர்கள் என்பதையே காட்டும். ஆண்டவரே எனக்கு உண்மையைப் புரியவைக்க கிருபைசெய்யும் என வேண்டும்போது மேலான சத்தியங்களை அறிந்துகொள்வோம். 

தேவனது வல்லமை மகத்தானது. ஆம், சுவிசேஷ சத்தியங்களை பைத்தியக்கார உபதேசம் எனக் கூறிக்கொண்டிருந்த பலர் அதிசயப்படத்தக்க விதத்தில் பிரசங்கங்களைக் கேட்டு இரட்சிப்பு அனுபவம் பெற்றுள்ளனர். பல சாட்சிகள் இதற்கு உண்டு. சுவிசேஷ கூட்டங்களைக் கேலி செய்தவர்கள்,  கூட்டங்கள் நடத்தவிடாமல் தடைசெய்தவர்கள், வேதாகமத்தை தீயிட்டு எரித்தவர்கள் பலர் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழ்வதை நாம் இன்றும் காண்கின்றோம்.  

இதனையே, "தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 ) என்று பவுல் அடிகள் கூறுகின்றார். சுய லாபம் தேடும் கடின மனதுள்ள துன்மார்க்கருக்கு சிலுவையைப்பற்றிய உபதேசம் பைத்தியமாயிருக்கிறது, ஆனால் அதனை ஏற்றுக்கொண்டு வாழும் இரட்சிக்கப்பட்டிருக்கின்ற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, January 27, 2023

மகிழ்ச்சியுடன் அடுத்து வருவதை எதிர்பார்த்திருப்போம்.

ஆதவன் 🌞 733 🌻 ஜனவரி 30,  2023 திங்கள்கிழமை 

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை நாம் வாசிக்கும்போது அது, "தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மையை நடக்கிறது" என்று கூறாமல் "நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" என்று கூறுவதைக் கவனிக்கலாம். 

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கிறது என்று நாம் எண்ணிவிடக் கூடாது. நமது வாழ்க்கையில் நன்மையையும் தீமையும் நடக்கலாம். ஆனால் நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருந்தால் நமக்கு நடக்கும் தீமையையும் அவர் நன்மைக்கேதுவாக மாற்றிடுவார். 

இதற்கு யோசேப்பின் வாழ்க்கை நமக்குச்  சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது. தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தாலும் யோசேப்பின் இளமைப்பருவம் துன்பத்திலேயே தொடர்ந்தது. தாயை இழந்து, சகோதரர்களால் பகைக்கப்பட்டு, சகோதரர்களே அவனை இஸ்மவேலருக்கு 20 வெள்ளிக்காசுக்கு விற்றுவிட்ட பின்பும் அவனது துன்பம் முடிவுக்கு வரவில்லை.  எகிப்தில் அநியாய குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவாழ்க்கை வாழக்கூடிய அவல நிலைமை. 

ஆனால் தேவன் அவனோடே இருந்தார். அவனது அனைத்துத் துன்பங்களையும் நன்மையாக மாற்றினார். ஆம், யோசேப்பின் துன்பம் அவனை எகிப்தின் பிரதம மந்திரியாக மாற்றிட தேவன் அனுமதித்தத்  துன்பம்; அதற்கானத திட்டம்.  "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்". ( ஆதியாகமம் 50 : 20 ) என யோசேப்பு மகிழ்ச்சியுடன் கூறுகின்றான். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போதும் நமக்குத் துன்பங்கள் ஏற்படுகின்றதென்றால் தேவன் நமக்கு வேறு திட்டம் வைத்திருக்கின்றார்; நமது துன்பங்களை நன்மைக்கேதுவாக மாற்றுவார் என்று பொருள். மேலும் நாம் மேலும் மேலும் அவரை அறிந்துகொள்ளவும் தேவன் நமது துன்பங்களை  நன்மையாக மாற்றி அவரை அறியச் செய்கின்றார்.  எனவேதான் சங்கீத ஆசிரியர், "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்கின்றார். 

எனவே, நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது ஏற்படும் துன்பங்களைக்கண்டு அஞ்சிடாமல், கலங்கிடாமல்  அதற்கு அப்பால் தேவன் நமக்கு வைத்திருக்கும் நன்மைகளை எண்ணி மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருப்போம். ஆம்,   தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று கூறப்பட்டுள்ள தேவ வார்த்தைகள் மெய்யானவைகள். மகிழ்ச்சியுடன் அடுத்து வருவதை எதிர்பார்த்திருப்போம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடுவோம்

ஆதவன் 🌞 732 🌻 ஜனவரி 29,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 26 )

நாம் இந்த பாரத நாட்டில், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட ஊரில் பிறந்துள்ளோம் என்றால் அது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் எங்கு, யாருக்குக் குழந்தையாக பிறக்கவேண்டுமென்பது தேவனால் முன் குறிக்கப்பட்டது. நாம் நமது குடியிருப்பை மாற்றுகின்றோம் அல்லது திருமணமாகி வேறு ஒரு இடத்துக்குச் செல்கிறோம் என்றால் அதுவும் தேவனால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.  இதனையே, "முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தேனே நகரில் மார்ஸ் மேடையில் நின்று அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வசனத்தைக் கூறுகின்றார். இப்படி நம்மை குறிப்பிட்ட இடத்தில வாழச் செய்ய காரணம் என்ன என்பதையும் அவர் அடுத்த வசனத்தில் கூறுகின்றார்:-  "கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 27 ) 

இந்த மனிதர்கள் எப்படியாவது தன்னை அறியவேண்டும் என்பதற்காக தேவன் இப்படி மனிதர்களைக் குறிப்பிட்ட இடங்களில் வாழச் செய்துள்ளார் என்று கூறுகின்றார். நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர் நமக்குத் தூரமானவர் அல்ல.  நமது வேதாகமம் இப்படி பல்வேறு இடங்களில் வாழ்ந்த சுமார் 35 நபர்களால்தான் எழுதப்பட்டது. பல்வேறு சூழல்களில் வாழ்ந்து உண்மை தேவனைக் கண்டறிந்தவர்கள் இவர்கள். 

சிலர், "இந்த ஊரில் வாழவே எனக்குப் பிடிக்கவில்லை"  என்று  முறுமுறுப்பார்கள்.  சிலர் வெளிநாடுகளில் வாழ்ந்து அந்த அனுபவத்தால் நமது நாட்டைக் குறைகூறிக்கொண்டிருப்பார்கள். எதெற்கெடுத்தாலும் பிற வளர்ந்த நாடுகளுடன் நமது நாட்டைஒப்பிட்டு குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.

இருப்பதைக்கொண்டு நிறைவடைவதையே தேவன் விரும்புகின்றார். மேலும் எப்போதும் குறைகளையே பார்க்காமல் நமது நாடு, நமது ஊர் இவற்றின் சிறப்புகளையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். பொதுவாக நமது நாட்டிற்கு  பிற நாடுகளைவிட சிறப்புகள் பல உண்டு.  இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல நாம் இங்கு இருக்கும்வரை நமக்கு தேவன் இந்த நாட்டில் தந்துள்ள நன்மைகள் தெரியாது. வெளி நாடுகளில் சென்று தங்கியிருக்கும் பெரும்பாலான மக்கள் நமது சொந்த நாட்டில் உள்ள சூழ்நிலைகளையே விரும்புகின்றனர். 

எனவே தேவன் நமக்குத் தந்துள்ள நாட்டிற்காக; நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்காக நன்றி சொல்பவர்களாக வாழ்வோம்.  "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்." என்கின்றது இன்றைய வசனம். ஆம், உலகின் கோடிக்கணக்கான மனிதர்களது இரத்தமும் வெறும் நான்கே நான்கு முக்கிய வகைகளுக்குள் அடக்கமாகியுள்ளது. இது தேவன் நாடு, மொழி, இனம் இவைகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்புரிபவர் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. 

தேவன் தந்துள்ள வாழ்க்கைச் சூழலுக்கு நன்றி கூறுவோம். நாடு, மொழி, கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டக்  கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடுவோம். "தேடுகிற எவனும் கண்டடைகிறான்."

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, January 26, 2023

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"

ஆதவன் 🌞 731 🌻 ஜனவரி 28,  2023 சனிக்கிழமை 

"நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." ( லுூக்கா 6 : 45 )

இயேசு கிறிஸ்து கூறிய இந்த வசனத்தின் பொருளில் ஒரு தமிழ் பழமொழியும்  உண்டு. அது, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது. நம்மிடம் இருப்பதுதான் நம்மிலிருந்துவெளிப்படும்; நம்மிடம் இருப்பதைத்தான் நாம் பிறருக்குக் கொடுக்க முடியும். 

இதனை நாம் நமது அனுபவங்களில் பார்க்கலாம். பலர் கூடியுள்ள வீட்டு நிகழ்ச்சிகளிலோ கடைவீதிகளில் சந்திக்கும்போதோ  சிலர் எப்போதும் சொத்துகளைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். "அங்கே ஒரு அரை ஏக்கர் கிடக்கிறது, இங்கே ஒரு பத்து சென்ட் நிலம் கிடக்கிறது..." என்பதாக இருக்கும் இவர்களது பேச்சு. 

பெண்கள் பெரும்பாலும் சேலைகள், நகைகள் பற்றியே பேசுவார்கள். சிலர் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றியே பேசுவார்கள். அவர்களது குறைகள், அல்லது அவர்கள் வீட்டில் அடக்கும் நிகழ்ச்சிகள் இவைகளையே பேசுவார்கள். மேலும் சிலர் தங்களைப்பற்றி, தங்கள் குடும்பம், பிள்ளைகள், தங்களது தொழில், பதவி இவைகளைப்பற்றியே பேசுவார்கள். மற்றவர்கள் இவர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்றுகூட இவர்கள் பார்ப்பதில்லை.  

ஆம், இவர்கள்  ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போமானால் அந்த எண்ணங்களே இவர்களது இருதயத்தில் நிறைந்துள்ளது என்று பொருள். அவையே வார்த்தைகளாக வெளிவருகின்றன. 

ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே நடைபெறுகின்றது. தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பண ஆசை உள்ளவர்கள், பேசும் பேச்சுக்கள் ஜெபங்கள் இவை அனைத்தும் இவர்களது இந்த ஆசையைத் தீர்ப்பதற்காகவே இருக்கும். 

உலக ஆசீர்வாதங்களை மட்டுமே  பிரசங்கிக்கும் ஊழியர்களின்  இருதயமும் உலக இச்சையால் நிரம்பியவையே. இத்தகைய ஊழியர்களால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சத்தியங்களைப் பிரசங்கிக்க முடியாது. தங்களது இருதயத்தின் ஆசையையே அவர்கள் மற்றவர்களுக்குப் போதனையாகக் கொடுப்பார்கள். அவர்களது போதனைகள் மற்றும் செயல்பாடுகள் இவை இன்னும் அதிகம் பணம் சேர்க்கும் எண்ணத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.

நமது இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டு உருவாக்கிய இரட்சிப்பு குறித்த ஆர்வமும், அவர்மேல் உண்மையான அன்பும்  இன்னும் நாம் ஆவிக்குரிய வளர்ச்சிநிலையினை அடையவேண்டும் எனும் எண்ணமும் இருக்குமானால் அவை குறித்தே பேசுவோம். அவைகள் குறித்தே சிந்திப்போம்.

அன்பானவர்களே, நமது இருதயத்தில் எத்தகைய சிந்தனைகள் இருக்கின்றன என்பதை நிதானித்துப்பார்ப்போம். இன்னமும் இருபத்திநான்கு மணி நேரமும் உலக காரியங்களையே சிந்தித்து, அவைகளையே பேசிக்கொண்டிருப்போமானால் நாம் நம்மை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்வது பொய்.   நமது உண்மை நிலையினை தேவன் அறிவார்.  "நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
( 1 யோவான்  3 : 20 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712