ஆதவன் 🖋️ 640 ⛪ அக்டோபர் 29, 2022 சனிக்கிழமை
"உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக." ( சங்கீதம் 43 : 3 )
பழைய ஏற்பாட்டுக்காலத்திலும் மக்கள் தேவனை வெளிச்சமாகவும் சத்தியமாகவும் (உண்மை) எண்ணி வேண்டுதல் செய்தனர். அதனையே, "உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்' என்று இன்றைய வசனத்தில் நாம் பார்க்கின்றோம். பரிசுத்த பர்வதமாகிய பரலோகத்தில் மனிதனைக் கொண்டு சேர்க்க இவைதான் தேவையாக இருக்கின்றன.
பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் கர்த்தரை வேண்டினாலும், புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நம்மைப்போல அவர்களுக்கு கர்த்தரைப் பற்றி ஒரு தெளிவு இல்லை. கர்த்தர் என்பவர் நன்மை செய்பவர்களை அரவணைக்கவும் தீமை செய்பவர்களைத் தண்டிக்கவும்கூடிய ஒரு வல்லமையான சக்தி என்று எண்ணிக்கொண்டனர். ஒருவித அச்சத்துடனேயே கர்த்தரைப் பார்த்தனர். அதாவது தேவனைப்பற்றிய தெளிவான புரிதல் அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் தேவனை அன்பு செய்தனர், வேண்டுதல் செய்தனர்.
இயேசு கிறிஸ்துதான் கர்த்தரை அப்பா என்று அழைக்கக் கற்றுக்கொடுத்தார். அதாவது, கர்த்தர் என்பவர் எங்கோ இருக்கும் அந்நியர் அல்ல; அவர் நமது தகப்பன் எனும் புரிதலைக் கொடுத்தவர் இயேசு கிறிஸ்துதான்.
அதனால்தான் இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் கூறினார், "நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்." ( யோவான் 4 : 22 ) என்று கூறினார். இன்றும் இதுபோல அறியாமல் ஒளியை வணங்கக்கூடிய மக்கள் இருக்கின்றனர். விளக்குகளையும், சூரியனையும் அவர்கள் வணங்குகின்றனர். காரணம் கடவுள் ஒளியாக இருப்பதாக எண்ணுவதால் ஒளியை வணங்குகின்றனர். ஆனால், தேவன் ஒளியாய் இருந்தாலும் எல்லா ஒளியும் தேவனல்ல என்பதே உண்மை.
ஆம், அன்று பழைய ஏற்பாட்டுக்கால யூதர்கள் அறியாமலேயே வேண்டுதல்செய்த ஒளி, வழி, சத்தியம் எல்லாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். இதனை அவர் உலகத்தில் இருக்கையில் அவர்களுக்குத் திட்டமும் தெளிவுமாகக் கூறினார்.
"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." ( யோவான் 8 : 12 )
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்றார்.
உமது ஒளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக. என்று பழைய ஏற்பாட்டுக்கால பக்தன் வேண்டியதற்கு பதிலளிப்பதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் அனுப்பியுள்ளார். அவரே நம்மை பரிசுத்த பர்வதத்துக்கு நேராக வழிநடத்திட முடியும்.
இக்கால மக்களாகிய நம்மை வழிநடத்திட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை வாக்களித்து நமக்கு அருளியுள்ளார். இருளான நமது இருந்ததில் ஒளியேற்றவும், சத்தியமான வசனத்தின்மூலம் நம்மை வழிநடத்திடவும் ஆவியானவரால் மட்டுமே முடியும். ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அவர் நம்மை பரிசுத்த பர்வதத்துக்கு நேராக வழி நடத்துவார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712