தேவ செய்தி - சகோ. எம். ஜியோ பிரகாஷ்
வேதாகமத் தியானம் - எண்:- 1,393
'ஆதவன்' 💚டிசம்பர் 01, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை
"மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." ( கலாத்தியர் 4: 6)
பழைய ஏற்பாட்டு பக்தர்கள் கடவுளை பல்வேறு விதமாக அழைத்து வழிபட்டனர். அரண், கன்மலை, சர்வ வல்லவர், ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று பல்வேறு முறையில் தேவனை அழைத்தனர். அதுமட்டுமல்ல, தேவனை அவர்கள் பயப்படத்தக்கவராகவே பார்த்தனர். கடவுளிடம் ஒரு பயத்துடனே நெருங்கினர். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு புதிய முறையில் தேவனை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
தேவன் பயப்படத்தக்கவரல்ல, மாறாக அவர் ஒரு தகப்பனைப் போன்றவர். எனவே அவரை அப்பா என்று அழைக்க நமக்குக் கற்பித்தார். "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே" என்று கூறும்போது பிதாவோடு நமக்கு ஒரு நெருக்கம் உண்டாகின்றது. வேறு எந்த அடைமொழியையும்விட அப்பா என்று தேவனை நாம் அழைக்கும்போது அவரது பிள்ளைகளைப்போலாகின்றோம்.
நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாகும்போது அவரது பிள்ளைகளாகின்றோம். அப்படி "புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." என்று கூறப்பட்டுள்ளது. குமாரனுடைய ஆவி என்பது இயேசு கிறிஸ்துவின் ஆவியைக்குறிக்கின்றது. இயேசு கிறிஸ்துவுக்கு அவர் பிதா என்றால் நமக்கும் பிதாதான் என்பதுதான் இந்த வசனம் கூறுவது.
"ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்." ( கலாத்தியர் 4: 7) அடிமைகள்தான் எஜமானனுக்குப் பயப்படுவார்கள். நாம் அடிமைகளல்ல; மாறாக கிறிஸ்துமூலமாய் தேவனுடைய உரிமைக்குரியவர்கள் ஆகின்றோம்.
இன்றைய தியான வசனம் மூலம் நாம் அறிவது, நமக்குள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவி செயல்பட நாம் அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் அவர் பிதாவுக்கு உரிமையானவரும் பிதாவிடம் உரிமையோடு நெருங்கக்கூடியவருமாக இருந்ததுபோல நாமும் பிதாவை நெருங்கமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "..........கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9) என்று.
முன்பு நாம் நியாயப்பிரமாணக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தேவனுக்குத் தூரமானவர்களாக வாழ்ந்தோம். "நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலாத்தியர் - 4: 4,5) என்று கூறப்பட்டுள்ளது. எனவே அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நாமும் அவரது குமாரர்களும் குமாரத்திகளுமாகின்றோம்.
ஆம் அன்பானவர்களே, நாம் நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பு பெறும்போது அவரோடுகூட பிதாவை அப்பா என்று கூப்பிடும் உரிமையினைப் பெறுகின்றோம். அப்பா பிதாவே என்று நாம் ஜெபிப்பதில் அர்த்தம் இருக்கவேண்டுமானால்; அப்படிக் கூப்பிடுவதை அவர் அங்கீகரிக்கவேண்டுமானால் நாம் பாவ மன்னிப்பு பெறவேண்டியதுதான் முதல் தேவையாக இருக்கின்றது.
வேதாகமத் தியானம் - எண்:- 1,394
'ஆதவன்' 💚டிசம்பர் 02, 2024. 💚திங்கள்கிழமை
"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்" ( பிலிப்பியர் 4: 11, 12)
அப்போஸ்தலரான பவுல் எல்லா விதத்திலும் கிறிஸ்துவைப்போல வாழ்ந்தவர். பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருந்தும் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் குப்பையாக விட்டவர் அவர். "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்." ( பிலிப்பியர் 3: 11) என்று பிலிப்பியருக்கு எழுதுகின்றார். மேலும், "....எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்." ( பிலிப்பியர் 4: 12) என்கின்றார்.
இந்த அனுபவத்தில்தான் இன்றைய தியான வசனத்தில் நமக்கு, "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்" என்று எழுதுகின்றார். கிறிஸ்து இப்படித்தான் வாழ்ந்தார்.
இந்த உலகத்திலே வாழும் நம்மால்கூட முழுவதும் குடிகாரர்களும் கெட்டவார்த்தைகள் பேசும் துன்மார்க்க மக்களோடும் சேர்ந்து வாழமுடிவதில்லையே அப்படி இருக்கும்போது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தமான பரலோக மகிமையை விட்டுப் பாவிகளான மனிதர்களோடு மனிதராக வாழ்ந்தாரென்றால் அது அவருக்கு எவ்வளவு கஷ்டமான காரியமாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ஆனால் அவர் உலகினில் மனமகிழ்ச்சியோடு இருந்தார்.
கிறிஸ்து பரலோக மகிமையைவிட்டு உலகினில் வந்து துன்பங்களை அனுபவித்ததுபோல அப்போஸ்தலரான பவுல் தனது செல்வத்தையும் இன்பமான வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்காக விட்டுவிட்டு பாடுகள் அனுபவித்தார். மட்டுமல்ல, "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." (1 கொரிந்தியர் 11: 1) என்று நமக்கு ஆலோசனையும் கூறுகின்றார்.
இந்த உலகத்தில் நம்மால் நமது சுய முயற்சியால் இப்படி வாழ முடியாதுதான். ஆனால் கிறிஸ்து நமக்குள் வரும்போது இப்படி வாழமுடியும் என்று நமக்குத் தனது அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறுகின்றார். ஆம், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4: 13) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அவர் கூறுகின்றார்.
அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல நாம் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். நமது தாழ்விலும் வாழ்விலும் மனமகிழ்ச்சியாக நாம் இருக்கவேண்டுமானால் கிறிஸ்து நமக்குப் பெலன் அளிக்கவேண்டியது அவசியம். அத்தகைய பெலனை அவரிடம் வேண்டுவோம். அப்போது உலகத்தில் நமக்கு எந்தவித ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் மனமகிழ்ச்சியாக இருக்க முடியும்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,395
'ஆதவன்' 💚டிசம்பர் 03, 2024. 💚செவ்வாய்க்கிழமை
"அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?...................... வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்." ( யோவான் 7: 47 மற்றும் 49)
வேதாகமத்தைக் கற்று அறிவது என்பது வேறு, தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிவது என்பது வேறு. வேதாகமத்தை ஒருவர் அறிந்திருப்பதால் மட்டும் நாம் அவரைத் தேவனை அறிந்தவர் என்று சொல்ல முடியாது. பலர் வேதாகமத்தை ஆய்வுசெய்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் பலரும் தேவனைப்பற்றிய தனிப்பட்ட அறிவோ தேவனோடுள்ள உடனிருப்பையோ அறிந்தவர்களல்ல.
பரிசேயரும் பிரதான ஆசாரியரும் இயேசு கிறிஸ்துவைப் பிடித்துக்கொண்டு வருமாறு சேவகர்களை அனுப்பிவைத்தனர். அந்தச் சேவகர்கள் கைதுசெய்ய சென்று இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்டு அவரைக் கைதுசெய்யாமல் தங்களை அனுப்பிய பரிசேயரிடம் திரும்பிவந்து, "அந்த மனிதன் பேசுவதுபோல இதுவரை ஒருவனும் பேசியதில்லை" என்கின்றனர். அதாவது அவர்கள் இயேசுவின் போதனையால் மனதுக்குள் மாற்றமடைந்தனர். அப்போது பரிசேயர்கள் கோபத்துடன் அந்தச் சேவகர்களைப்பார்த்து, "நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?..................வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்."
பிரதான ஆசாரியரும் பரிசேயர்களும் வேதத்தை நன்றாகக் கற்றவர்கள். அவர்களுக்குத் தங்களது வேத அறிவைக் குறித்தப் பெருமை இருந்தது. ஆனால் அந்த வேத அறிவால் அவர்களால் கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் பாமரமக்கள் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டனர். எனவே, வேதத்தைப் படிக்காத மக்கள்தான் இயேசுவையும் அவரது போதனைகளையும் விசுவாசிப்பார்கள் என்று அவர்கள் கோபத்தில் கூறுகின்றனர். வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று சபிக்கின்றனர்.
ஆம் அன்பானவர்களே, பரிசேயர்களைப்போல நாம் வேதாகமத்தை வெறுமனே வாசிப்பது மட்டும் போதாது. அவரை அறிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வத்தில் ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தை நாம் வாசிக்கவேண்டும். சாதாரண புத்தகத்தை வாசிப்பதுபோல வாசிப்போமானால் சுவிசேஷத்தின் ஒளி நமக்குள் பிரகாசிக்கமுடியாது. காரணம் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கமுடியாதபடி நமது மனக் கண்களைக் குருடாக்கிவிடுவான்.
இதனையே "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2 கொரிந்தியர் 4: 4) என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்.
வேதாகமக் கல்வியறிவு பெற்றவர்கள் எல்லாம் தேவனை அறிந்தவர்களுமல்ல; வேத அறிவு அதிகம் இல்லாதவர்கள் தேவனை அறியாதவர்களுமல்ல. மூளை அறிவினால் தேவனை அறியமுடியாது; தாழ்மையான மனமும் தேவனை அறியும் ஆர்வமுமே ஒருவரை தேவனை அறியச்செய்யும். தாழ்மையான உள்ளத்துடன் கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோம்; தேவனை அறியும் அறிவில் வளருவோம்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,396
'ஆதவன்' 💚டிசம்பர் 04, 2024. 💚புதன்கிழமை
"உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6: 10)
தேவன் நமது பாவங்கள், துன்பங்கள், கண்ணீர்கள் அனைத்தையும் பார்க்கின்றார். நமது ஜெபங்களைக் கேட்கின்றார். ஆனால் அவற்றைமட்டுமல்ல, இன்றைய தியான வசனம் சொல்கின்றது, நாம் அவரது பரிசுத்த ஊழியர்களுக்குச் செய்யும் உதவிகள், தேவனது பெயரை உயர்த்துவதற்காக நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் அவர் பார்க்கின்றார்; அவற்றை மறந்துவிட அவர் அநீதியுள்ளவரல்ல.
இந்த உலகத்தில் சிலருக்கு நாம் உதவிகள் செய்யும்போது அவர்கள் சிலவேளைகளில் அவற்றை மறந்துவிடுவதுண்டு. சிலர் தங்களது வாழ்க்கைத் தகுதிநிலை உயர்வடையும்போது தங்களுக்கு உதவியவர்களை மறந்துவிடுவதுண்டு. அப்படி உதவி பெற்றதை வெளியில் சொன்னால் தங்களுக்கு அது அவமானம் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் நமது உதவி தேவனுக்குத் தேவை இல்லையெனினும் நாம் அவருக்காக அன்புடன் செய்யும் செயல்களை அவர் மறந்துவிடுவதில்லை.
தாங்கள் தேவனுக்கேற்ற செயல்கள் செய்ததை தங்கள் ஜெபத்தில் சொல்லி சிலர் ஜெபிப்பதை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். நான் தேவனுக்காக செய்த வேலைகளில் எந்த அநியாய வருமானத்தையும் ஈட்டவில்லை என்று நெகேமியா ஜெபிப்பதைப் பார்க்கின்றோம். எனவே அவர் "என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்." ( நெகேமியா 5: 19) என ஜெபிக்கின்றார்.
எசேக்கியா ராஜாவும் இப்படி விண்ணப்பம் செய்வதை நாம் பார்க்கின்றோம். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான்." (2 இராஜாக்கள் 20: 3) என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் அன்பானவர்களே, நமது செயல்கள் தேவனுக்கு ஏற்புடையவையாக இருக்குமானால் இந்தப் பரிசுத்தவான்களைப்போல நாமும் தைரியமாகத் தேவனிடம் அது குறித்துத் தனிப்பட்ட விதத்தில் நமது ஜெபங்களில் பேசலாம். தமது நாமத்திற்காக நாம் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல.
நமது தேவன் நினைவுகூருகின்ற தேவன். ஆபிரகாமை நினைவுகூர்ந்த தேவன் அவர் நிமித்தம் லோத்துவைக் காப்பாற்றினார் என்று கூறப்பட்டுள்ளது. நோவாவை நினைவுகூர்ந்து தண்ணீரை வற்றச்செய்தார். அன்னாளை நினைவுகூர்ந்து சாமுவேலை மகனாகக் கொடுத்தார்.
ஆனால் நாம் தேவனுக்காகச் செய்த செயல்களை எல்லா மக்களிடமும் சொல்லவேண்டியதில்லை. அப்படிச் சொல்வது நமது மனதின் பெருமையினையே காட்டும். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதம் கூறவில்லையா? நமது செயல்கள் அனைத்தையும் தேவன் ஏற்கெனவே அறிந்திருக்கின்றார். அவற்றை மற்றவர்கள் அறிந்து நம்மைப் புகழ வேண்டிய அவசியமில்லை.
தேவனுக்காக நாம் செய்த நமது நல்ல செயல்களை நாம் எடுத்துக் கூறினாலும் கூறாவிட்டாலும் தேவன் அவற்றை மறந்துவிட அநீதியுள்ளவரல்ல. நமது செயல்களுக்கேற்ற பலனை நிச்சயம் தருவார். தேவனை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோம்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,397
'ஆதவன்' 💚டிசம்பர் 05, 2024. 💚வியாழக்கிழமை
"சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு." ( செப்பனியா 3: 14)
இன்றைய தியான வசனம் "சீயோன் குமாரத்தி", "இஸ்ரவேலர்" என்று கூறுவதால் பலரும் இது வேறு யாருக்கோ கூறப்பட்ட வார்த்தைகள் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாமே சீயோன் குமாரத்திகளும் இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம். சீயோன் என்பது தேவனது பரலோக சந்நிதானத்தைக் குறிக்கின்றது. நாம் அதன் பிள்ளைகளாகின்றோம். ஆம் அன்பானவர்களே, "ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3: 7) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம் கொண்டு வாழும் நாமே சீயோன் குமாரத்திகளும் ஆவிக்குரிய இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம்.
இன்றைய தியான வசனம் நமக்கு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ அறைகூவல்விடுக்கின்றது. பாடி ஆர்ப்பரித்து மகிழ்ந்து களிகூரும்படி இந்த வசனம் சொல்கின்றது. ஏன் கெம்பீரித்துப் பாடவேண்டும்? ஏன் ஆர்ப்பரிக்கவேண்டும்? மகிழ்ந்து களிகூரவேண்டும்? இதற்கான விடையினை அடுத்த வசனம் கூறுகின்றது, "கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." ( செப்பனியா 3: 15)
ஆவிக்குரியவர்களாக நாம் வாழும்போது கர்த்தர் நமது ஆக்கினைகளை அகற்றி, நமது சத்துருக்களை நம்மைவிட்டு விலக்குவார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் நமது நடுவிலே இருப்பார்; நாம் இனித்தீங்கைக் காணாதிருப்போம். சத்துருக்கள் என்று கூறுவதால் நமக்கு எதிராக இருக்கும் மனிதர்களை மட்டுமல்ல, நம்மை சாத்தானுக்கு அடிமைகளாக்கும் பாவங்களையும் குறிக்கின்றது. சீயோன் குமாரத்திகளாக நாம் வாழும்போது பாவத்துக்கு நீங்கலாகிவிடுகின்றோம். எனவே மகிழ்ந்து களிகூரவேண்டும்.
ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்கப்படும்போது நாம் அவரது ஆவியின் பிரமாணத்துக்குள் வந்துவிடுகின்றோம். அந்த ஆவியின் பிரமாணம் நம்மைப் பாவத்துக்கும் அதன் விளைவான நித்திய மரணத்துக்கும் நம்மை விடுதலையாக்குகின்றது. "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" ( ரோமர் 8: 2) என்று வாசிக்கின்றோம்.
இப்படி நாம் விசுவாச மார்கத்துக்குள் வரும்போது நாமே சீயோன் குமாரத்திகளும் இஸ்ரவேலருமாகின்றோம். கர்த்தர் நமது ஆக்கினைகளை அகற்றி, நமது சத்துருக்களை நம்மைவிட்டு விலக்குவார் நாம் இனித்தீங்கைக் காணாதிருப்போம். எனவே கெம்பீரித்துப்பாடி ஆர்ப்பரியுங்கள் என்றும் சீயோன் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு என்றும் இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
நாம் விசுவாசமார்க்கத்தார்கள் ஆகும்போது நமது இந்த மகிழ்ச்சி உன்னத சீயோனாகிய பரலோகத்திலும் எதிரொலிக்கும் என்று இயேசு கிறிஸ்து கூறினார். "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15: 7) சீயோன் குமாரத்திகளாக, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக மாறுவோம் நம்மிலும் நமதுமூலம் பரலோகத்திலும் மகிழ்ச்சி உண்டாகட்டும்.
வேதாகமத் தியானம் - எண்:- 1,398
'ஆதவன்' 💚டிசம்பர் 06, 2024. 💚வெள்ளிக்கிழமை
"பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்." ( யோவான் 3: 27)
இந்த உலக அரசாங்கங்கள் தங்களது நாட்டின் குடிமக்கள் குடியுரிமை, அரசாங்க உதவிகள், சலுகைகள், வேலைவாய்ப்புக்கள் இவைகளைப்பெற பல்வேறு நிபந்தனைகளை வைத்துள்ளன. மேலும் குறிப்பிட்ட நபர் தங்கள் நாட்டின் குடிமகன் / குடிமகள் தான் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை ஏற்பாடு செய்துள்ளன. நமது நாட்டில் முக்கியமாக ஆதார் அடையாள அட்டை இத்தகையதே. மேலும் சில அரசாங்க உதவிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகள் மேலும் பாஸ்போர்ட் இவை தேவையாக இருக்கின்றன.
இதுபோலவே தேவனும் தனது பிள்ளைகளாக நம்மைக் கருதிடச் சில அடையாளங்களை எதிர்பார்க்கின்றார். அந்தத் தகுதி இருக்குமானால் நாம் அவரிடம் சிறப்பு கவனிப்பைப் பெறுவோம். உலக அரசாங்க அடையாள அட்டைகளைப்போல இந்த அடையாளங்கள் வெளியரங்கமாகத் தெரியாவிட்டாலும் குறிப்பிட்ட நபர்களுக்கும் தேவனுக்கும் அது தெரியும்.
ஆனால் தேவன் இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜாதி மத, இன மக்களையும் தனது பிள்ளைகளாக நேசிக்கின்றார். எல்லோருக்கும் அவர் உதவுகின்றார். அவர் பேதுருவிடம் இதனை வெளிப்படுத்தினார் "எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 ) என்று கூறுகின்றார் பேதுரு.
மேலும், "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 34, 35) என்கின்றார் பேதுரு. அதாவது நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதை தேவன் மனிதர்களிடம் எதிர்பார்க்கின்றார். இப்படித் தேவன் பட்சபாதகம் இல்லாதவராக இருந்தாலும் சிலருக்குச் சில ஆசீர்வாதங்களை அவர் கிருபையாய் அளிக்கின்றார்.
நாம் நமது சுய முயற்சியால் பல காரியங்களை செய்யலாம். ஆனால் அவை வெற்றிகரமாக முடியவேண்டுமானால் தேவனது கிருபை தேவையாக இருக்கின்றது. எதுவும் பரலோகத்திலிருந்து நமக்குக் கொடுக்கப்படவேண்டியுள்ளது. ஆனால் மனிதர்கள் பெரும்பாலும் தங்களது சுய முயற்சிதான் தங்களது வெற்றிக்குக் காரணம் என்று எண்ணிக்கொள்கின்றனர். அன்பானவர்களே, முயற்சி செயலாகவேண்டுமானால் நமக்கு நல்ல உடல் நலமும் மனநலமும் இருக்கவேண்டும். அதனைத் தருபவர் தேவனே.
எனவே நாம் பரலோக தேவனுக்கு அஞ்சி அவரது கிருபையை இறைஞ்சி வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. உலகினில் நமக்கு நல்லத் திறமை, வேலை, பதவி உயர்வு, உடல்நலம், உறைவிடம், ஆடைகள், உணவு போன்ற எல்லாமே பரலோகத்திலிருந்து கிடைக்கும் உத்தரவுப்படியே நமக்குக் கிடைக்கின்றது. ஆம் பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, ஒருவனும் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். எனவே அவருக்கு பயந்து, அவர் கிருபையினைச் சார்ந்து அவருக்கு நன்றி செலுத்தி வாழ்வோம்.
"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1: 17)
வேதாகமத் தியானம் - எண்:- 1,399
'ஆதவன்' 💚டிசம்பர் 07, 2024. 💚சனிக்கிழமை
"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 6)
இந்த உலகத்தில் பலர் ஏழைகளுக்கு அதிகம் பொருளுதவி செய்கின்றனர். ஆனால் பலருக்கு அப்படி உதவிசெய்யவேண்டுமென்று ஆசை இருந்தாலும் உதவி செய்ய அவர்களது பொருளாதாரம் இடம்தருவதில்லை. அத்தகைய மக்களில் சிலர் தாங்கள் மற்றவர்களைப்போல் அதிகம் கொடுக்காததால் தேவ ஆசீர்வாதத்தை இழந்து விடுவோம் என்று பயப்படுகின்றனர். ஆனால் தேவன் இப்படிக் கொடுப்பதைமட்டும் கணக்கில் கொள்வதில்லை. கொடுப்பவர்களது மனநிலைமையையும் அவர் பார்க்கின்றார்.
தேவன் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஏதாவது ஒரு திறமையையோ மற்றவர்களுக்கு இல்லாத தனித்துவதையோ கொடுத்திருப்பார். பணத்தை மட்டுமல்ல, நமக்கு இருக்கும் தனித்த திறமைகளை நாம் தேவனுக்கு ஏற்புடைய விதத்தில் பயன்படுத்துவதை தேவன் விரும்புகின்றார். அப்போஸ்தலரான பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குச் செல்லும்போது அந்த முடவன் அவர்களிடம் பிச்சைகேட்டான். ஆனால் பேதுருவிடம் பணம் இல்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருக்குள் இருந்தார். எனவே அவர், "வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்." என்று கூறி தன்னிடமிருந்த இயேசு கிறிஸ்துவின்மூலம் அந்த முடவனைக் குணமாக்கினார்.
"ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்." (2 கொரிந்தியர் 8: 12) என அப்போஸ்தலரான பவுல் எழுதுகின்றார். ஆம் அன்பானவர்களே, மற்றவர்களுக்கு உதவி செய்திட நம்மிடம் பணமில்லாமல் இருந்தாலும் நம்மிடம் இருப்பதை பேதுரு கொடுத்ததுபோல நாம் கொடுக்கலாம். உதாரணமாக, நம்மிடம் கணிதத் திறமையோ ஆங்கிலப் புலமையோ இருக்குமானால் நாம் அதனை அருகிலிருக்கும் ஏழை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து உதவலாம். இதுபோன்ற செயல்களும் தேவனுக்கு ஏற்புடையவையே.
இப்படிப்பட்ட நன்மைகள் செய்யவும் நமக்கு இருக்கும் அளவுக்குத்தக்கதாக தான தர்மம் செய்வதும் தேவனுக்கு ஏற்ற பலிகளாக இருக்கின்றன. "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்." ( எபிரெயர் 13: 16)
வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன் என்று பேதுரு கொடுத்ததுபோல நாமும் நம்மிடமுள்ளதை கொடுக்கப் பழகுவோம் "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்." ( லுூக்கா 6: 38) என்றார் இயேசு கிறிஸ்து.
வேதாகமத் தியானம் - எண்:- 1,400
'ஆதவன்' 💚டிசம்பர் 08, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை
"நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64: 6)
எல்லா மதங்களும் நீதியுள்ள வாழ்க்கையைத்தான் போதிக்கின்றன. அதுபோல பல்வேறு அறிஞர்கள் நீதிகளை போதித்துள்ளார். தமிழில் மற்ற மொழிகளைவிட நீதிநூல்கள் அதிகம் உள்ளன. ஆனால் இவையெல்லாம் மனித நீதிகள் அல்லது மனிதர்கள் போதித்த நீதிகள். இவை சிறப்பானவைகளாக இருந்தாலும் தேவனது பார்வையில் இவை அழுக்கான கந்தையைப்போல இருக்கின்றது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
மேலும், இந்த மனித நீதிகளைப் பின்பற்றி வாழ்வதால் நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது இந்த மனித நீதிகளால் நம்மை அக்கிரமங்களுக்கு முற்றிலும் நீங்கலாக்க முடியவில்லை. இவை நியாயப்பிரமாண கட்டளைகளைப்போல இருக்கின்றன.
ஆனால் வேதாகமம் நமக்கு கிறிஸ்து இயேசுவின்மேல் கொள்ளும் விசுவாசத்தையே மேலானதாகக் கூறுகின்றது. அப்படி அவர்மேல்கொள்ளும் விசுவாசம் அவரை விசுவாசிப்பவர்கள் அனைவர்மேலும் பலிக்கும். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3: 22)
மனிதர்கள் தங்கள் மனதும் அறிஞர்களும் கூறியுள்ள நீதிகளைப் பற்றிக்கொண்டு தேவ நீதியை புறம்பே தள்ளிவிடுகின்றனர். எனவே அவர்கள் தேவ நீதிக்குக் கீழ்படியாமலிருக்கிறார்கள். "எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10: 3)
இன்று பெரும்பாலான நீதிமன்றங்கள் இத்தகைய சுய நீதியின் அடிப்படையிலேயே மக்களுக்குத் தீர்ப்பளிக்கின்றன. எனவேதான் ஒரு நீதிபதி கொடுக்கும் தண்டனையை மேல் நீதிமன்றத்தில் முறையிடும்போது அடுத்த நீதிபதி மாற்றித் தீர்ப்பு எழுதுகின்றார். ஆம், மனித நீதி மனிதன், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மனிதர்களது முகத்தையும் பணத்தையும் பார்த்து மாறுபடுகின்றது.
இப்படி இருப்பதால், "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ஆனால் தேவனது நீதி எதார்த்தமானது அவர் கண் கண்டபடியும் காது கேட்டபடியும் தீர்ப்பிடமாட்டார்.
".................அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11: 3, 4)
கந்தையான மனித நீதிகளைவிட்டு கிறிஸ்துவின் மேல் கொள்ளும் விசுவாசத்துடன் ஏற்படும் தேவ நீதிக்கு நேராக நாம் திரும்பவேண்டியது அவசியம். தேவ நீதி எதார்த்தமானது. தேவ நீதிக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நமது அக்கிரமங்கள் நம்மைக் காற்றைப்போல் அடித்துக்கொண்டு போகாது.
வேதாகமத் தியானம் - எண்:- 1,401
'ஆதவன்' 💚டிசம்பர் 09, 2024. 💚திங்கள்கிழமை
"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4: 30)
நாம் பாவத்திலிருந்து கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவி மீட்கப்படும்போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகின்றார். நாம் தேவனுக்குச் சொந்தமான மக்கள் எனும் முத்திரை நமக்குக் கிடைக்கின்றது. இந்த அனுபவத்தில் நாம் நாளும் வளரவேண்டியது அவசியம். ஆனால் இந்த ஆவியானவரின் முத்திரை நமது முதல் அடையாளம் மட்டுமே. ஆவிக்குரிய மேலான அபிஷேகமும் வரங்களும் உண்டு. அவைகளைப் பெறுவதில் நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.
இன்றைய தியான வசனம், இப்படி நாம் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தக்கூடாது என்று நமக்குக் கூறுகின்றது. மீட்பு அனுபவம் பெற்றபின்னரும் பழைய பாவத்தில் தொடர்ந்து வாழ்வது, தேவ ஐக்கியமில்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவது, வாழ்க்கையில் சாட்சியற்று, நம்மால் தேவனது பெயர் அவதூறு அடையும்படியான செயல்களைச் செய்வது போன்ற செயல்கள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும் செயல்பாடுகளே.
மேலும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் நடக்கும்போது ஆவியானவர் நமக்குப் பல வழிநடத்துதல்களைத் தருவார். உதாரணமாக, எதனைச் செய்யவேண்டும், ஒரு இடத்துக்குப் போகலாமா கூடாதா, ஒரு பொருளை வாங்கவேண்டுமா வேண்டாமா போன்று நமக்குக் கூறுவார். இந்த வழி நடத்துதல் கனவுகள்மூலமோ, தரிசனங்கள் மூலமோ, வேதாகமத்தை வாசிக்கும்போதோ அல்லது மற்றவர்களது வாய்மொழியாகவோ இருக்கும். ஆனால் இது தேவனது வழிநடத்துதல்தான் என்று நமக்கு இருதயத்தில் உணர்த்தப்படும். அப்போது நாம் அவற்றுக்குக் கீழ்படியாவிட்டால் ஆவியானவர் துக்கமடைவார். இப்படித் தொடர்ந்து அவரது குரலைப் புறக்கணிக்கும்போது இந்த அனுபவத்தை நாம் இழந்துவிடுவோம்.
No comments:
Post a Comment